எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, June 27, 2018

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! தொடர்ச்சி!

ராணி கிருஷ்ணாயி சாமர்த்தியம் உள்ளவள். எடுத்த எடுப்பில் மன்னரிடம் அவர் மனதுக்கு உகந்த பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினாள். கடைசியில் தான் அரங்கனைப் பற்றிப் பேச்சு எடுத்தாள். வீரர்களைக் குலசேகரனுக்கு அளிக்காதது பற்றிக் கேட்டதுக்கு மன்னர் அது இயலாத காரியம் என்றார். பெரும்பாலான படை வீரர்கள் வடக்கே இருப்பதால் இங்கே இருக்கும் கொஞ்சம் படையிலும் இருநூறு வீரர்களைக் கொடுப்பது சாத்தியமே அல்ல எனத் தெளிவு செய்தார். கிருஷ்ணாயி அப்போது முகத்தில் ஓர் செல்லச் சிணுங்கலைக் கொண்டு வந்தாள். அரசன் கைகளைப் பிடித்துக் கொண்டே ஒவ்வொரு விரலாக மெல்ல நீவி விட்டாள். தன் ஸ்பரிசத்தில் மன்னர் மனம் மகிழ்கிறது என்பதைப் புரிந்து கொண்டு பின்னர் இது உங்களுக்கு அசாத்தியமான காரியம் அல்லவே என்று பெருமை அடித்துக் கொள்வது போல் மன்னர் மனம் மகிழச் சொன்னாள். மன்னருக்குத் தன் திறமையை ராணி பாராட்டுகிறாள் என்று உள்ளூர உற்சாகம். ஆனால் அதற்காக இருக்கும் சொற்ப வீரர்களைப் பங்கிட்டுக் கொள்ள முடியுமா? அதோடு அவர் தன்னிடம்  இருக்கும் ஐயாயிரம் வீரர்கள் இந்தத் திருவண்ணாமலையைக் காப்பதற்கே போதாது என்பதால் சாமானிய மக்களிடம் கூட வாட் பயிற்சி எடுத்துக் கொண்டு கையில் வாளும் வேலும் வைத்திருக்கும்படி கட்டளை இட்டிருந்தார். அதை இப்போது ராணிக்கு நினைவூட்டினார்.

அந்த விஷயம் பெரும்பாலோருக்குத் தெரியாது. ரகசியமானது. எல்லோரும் நிறைய வீரர்கள் வீர வல்லாளரிடம் இருப்பதாகவே நினைத்துக் கொள்வார்கள். இப்போது அதை மன்னர் சுட்டிக் காட்டவும் கிருஷ்ணாயிக்கு எங்கிருந்தோ கண்ணீர் பெருகியது. மன்னருடன் வாக்குவாதம் செய்தாள். கடைசியில் வாதம் முற்றிப் போகவே ராணி கிருஷ்ணாயி அழுது கொண்டே படுக்கையை விட்டு எழுந்திருந்து உப்பரிகையில் போய் நின்று கொண்டாள். அவள் பின்னாலேயே சென்ற மன்னர் அவளைச் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் ராணி மசியவே இல்லை. தான் துளுவ நாட்டு அரசகுமாரியாக இருந்தும் அவரை மணந்து கொண்டு திருவண்ணாமலைக்கு வந்ததையும் தன் நாட்டையும் அவர் நாட்டுடன் இணைத்து விட்டதையும் சுட்டிக் காட்டினாள். தன்னால் தான் இந்த ஹொய்சள ராஜ்ஜியம் மேற்குக்கடற்கரை வரை விரிந்து பரந்து கிடப்பதாகவும் சொன்னாள். இத்தனை செய்தும் மன்னர் அவளுக்காக எதையுமே செய்யவில்லை என்றும் சின்ன ஆசையான இதைக் கூட நிறைவேற்ற மறுப்பதையும் சுட்டிக் காட்டி விட்டு மீண்டும் விம்மினாள்.

மன்னர் அவளை எப்படி எல்லாமோ சமாதானம் செய்தும் அவள் மனம் மாறவில்லை. தான் நினைத்த காரியத்தை மன்னர் நிறைவேற்றிக் கொடுக்காதவரை அவருக்குத் தான் மசியப் போவதில்லை என உள்ளூர உறுதி பூண்டிருந்தாள் அவள். ஆகவே மேலும் சொன்னாள். வீர வல்லாளரைத் துளுவ நாட்டு அரசகுமாரி மணந்ததன் மூலம் துளுவ நாட்டுக்கு என ஒரு வாரிசு பிறப்பான் என மக்கள் அனைவரும் எதிர்பார்த்ததாகவும் இன்று வரை அது நடக்கவே இல்லை என்றும் சொன்னாள். ஒரு ஆண் குழந்தையை, நாட்டின் வாரிசை வேண்டித் தான்  தீர்த்த யாத்திரைகளும் விரதங்களும் மேற்கொண்டு  படும் கஷ்டத்தைத் தெரிவித்தாள். அவள் மனம் இதனால் படும் பாட்டையும், குழந்தை இல்லையே என்ற அவள் ஏக்கத்தையும் மன்னரிடம் விவரித்தாள். அதோடு இப்போது அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றுவதாகவும் அது அவளுக்குக் குழந்தையே பிறக்காததின் காரணம் ஏதோ தெய்வக் குற்றம் தான் என்றும் சொல்லிவிட்டு விம்மி விம்மி அழுதாள்.

மன்னர் திகைத்துப் போனார். எந்த தெய்வத்தின் குற்றம் எனக் கேட்க, அரங்கனின் குற்றம் தான் என்றாள் கிருஷ்ணாயி. மேலும் சொன்னாள். "பதினோரு வருடங்களுக்கு முன்னர் படை எடுத்து வந்த மாலிக் காபூருக்குத் தமிழகம்  செல்ல வழி காட்டியது ஹொய்சள ராஜாவான வீர வல்லாளர் தானே என்றும் குற்றம் சுமத்தினாள். மன்னர் தான் தான் அந்தக் குற்றத்தைச் செய்ததாக ஒத்துக் கொண்டார். அவர்கள் அப்போது அரங்க நகருக்குள் நுழைந்ததும் அல்லாமல் அரங்கனைத் தூக்கிக் கொண்டு தில்லிக்கே சென்றதையும் சுட்டிக் காட்டினாள் ராணி. அரங்க நகர்வாசிகள் ஆடல், பாடல்களில் தேர்ந்தவர்களாகத் தேர்ந்தெடுத்து தில்லிக்கே சென்று அரங்கனைத் தந்திரமாகத் திரும்பிக் கொண்டு வந்தனர். அப்போதும் வல்லாளர் ஏதும் உதவவில்லை.  இப்போது இரண்டாம் முறையாக தில்லி வீரர்கள் தாக்கியதில் அரங்கன் இருப்பதற்கு இடமே இல்லாமல் ஊர் ஊராக அலைந்து திரிந்து இப்போது அழகர் மலையில் ஒளிந்து  இருப்பதாகச் சொல்கின்றனர். அரங்கத்தில் இருந்தவரையும்  அவருக்கு ஆறு கால பூஜைகள் நடந்திருக்கின்றன. இப்போது ஒரு காலம் செய்வதற்கே  அரங்கனின் விசுவாசிகள் கஷ்டப்படுகின்றனர்.  ஒரு நாளைக்கு ஒரு தரம் கூட அமுது படியும் செய்ய முடியவில்லை. காட்டுக் கனிகளை அரங்கனுக்குப் படைத்து வருகின்றனர்.   இதற்காகத் தானே அரங்க நகர் வாசிகள் உங்களை உதவி கேட்டிருக்கின்றனர்."

"நீங்கள் அதை எப்படி நிராகரிக்க முடியும்? முதல் முறை அரங்கனைத் தூக்கிச் செல்ல வழிகாட்டிய நீங்கள் இப்போது அரங்கனை ஊர் ஊராகச் சுற்ற வைத்ததோடல்லாமல் அவனைப் பட்டினியும் போட்டு விட்டீர்கள். அரங்கனை இரு முறை அலட்சியம் செய்து விட்டீர்கள். இந்தக் காரணத்தால் தான் நான் இன்னும் மலடியாகவே இருக்கிறேனோ? அரங்கா! இது என்ன சோதனை!" என்றவள் மன்னனைக் கம்பீரமாகப்பார்த்து, "அரசே! எனக்கு விரைவில் மகப்பேறு கிட்டவில்லை எனில் விரைவில் துளுவ நாடு ஹொய்சளத்திடம் இருந்து பிரிந்து தனி நாடாகும்!" என எச்சரிக்கும் குரலில் சொல்லிவிட்டு உள்ளே சென்று மன்னர் அழைப்பதையும் லட்சியம் செய்யாமல் அறைக் கதவைச் சார்த்தித் தாளிட்டுக் கொண்டாள்.

மன்னர் திகைத்துப் போனார். யோசனையில் ஆழ்ந்தார். இரவு முழுவதும் தூங்காமல் யோசனையில் ஆழ்ந்தவர் விடிவதற்குள்ளாக ஓர் முடிவு எடுத்து அதை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்றும் தீர்மானித்தார். காலை எழுந்ததும் தன் பிரதானிகளை அழைத்து "மன்னர் துவாரசமுத்திரம்  போகிறார்!" என்று ஊர் முழுதும் முரசு கொட்டி அறிவிக்கச் செய்தார். பின்னர் குலசேகரனையும் அவனோடு வந்த அழகிய நம்பி, குறளன் ஆகியோரையும் அரண்மனைக்கு வரவழைத்துத் தான் உடனடியாக உதவி செய்ய முடியவில்லை என்பதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். நாட்டின் தொல்லைகளால் மனம் குழம்பி இருப்பதாகவும் அவற்றைத் தீர்க்க வேண்டி அரங்கனிடம் முறையிடப் போவதாயும் தன்னை அழகர் மலைக்கு அரங்கனைக் காண அழைத்துச் செல்லுமாறும் கேட்டுக் கொண்டார். அதன்படியே அன்றிரவு யாத்திரிகர்களைப் போல் வேஷம் தரித்து அவர்கள் நால்வரும் அழகர் மலை நோக்கிச் சென்றார்கள். 

2 comments:

நெல்லைத் தமிழன் said...

நல்ல எழுத்து. ரொம்ப பின்னணி வேலை பண்ணி எழுதறீங்க. முடியும்போது அருமையான தொடரா இருக்கும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அடுத்து நடப்பது என்பதை அறிய ஆவலாக உள்ளது.