எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, September 23, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நம்மாழ்வார் கிடைப்பாரா?

நம்மாழ்வார் விக்ரஹம் மெல்ல மெல்ல நீருக்குள் மூழ்குவது தெரிந்து அங்கிருந்தோர் அலறினார்கள். செய்வதறியாது துடித்தார்கள்.  "இனி என்ன செய்வோம்!" எனப் பதறினார்கள். அவர்கள் கூக்குரலைக் கேட்டுவிட்டு அங்கே நீந்தி வந்த குலசேகரன் விஷயத்தைத் தெரிந்து கொண்டு நீருக்குள் ஓடம் மூழ்கிய இடத்தைக் கேட்டறிந்து கொண்டு அங்கே போய் அவனும் நீருக்குள் மூச்சைப் பிடித்துக் கொண்டு மூழ்கிப் போய் நம்மாழ்வாரைத் தேடினான். பலரும் அவனைத் தடுத்தனர். ஏனெனில் புயலின் வேகம் அதிகரித்திருந்தது. அலைகள் இரைச்சல், காற்றின் ஊளைச் சப்தம் ஆகியவை சுற்றிலும் இருப்பவர்களைத் தெரியாமல் அடித்ததோடு அவர்கள் இருக்குமிடத்தையும் காண முடியாமல் செய்தது. ஆனாலும் பலரும் குலசேகரனை நீரில் மூழ்கித் தேட வேண்டாம் என்றே கூக்குரல் இட்டார்கள் என்பதைக் குலசேகரன் புரிந்து கொண்டான். அலைகள் அவனை மேலும், கீழுமாகப் புரட்டித் தள்ளியது. அதைக் கூடப் பொருட்படுத்தாமல் உள்ளே அமிழ்ந்து போய் விக்ரஹத்தைத் தேட நினைத்த குலசேகரனை யாரோ பிடித்து இழுப்பது போல் இருந்தது.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த குலசேகரனுக்கு அங்கே ஒரு பெரிய சுழி இருப்பதையும் அதன் வேகம் அவனை உள்ளே இழுப்பதையும் புரிந்து கொண்டான். அதை எதிர்த்துப் போராடி அதில் இருந்து வெளியேற முயன்றான். சுழி அவனை உள்ளே இழுக்க அவன் மேலே வரப் போராட இருவருக்கும் ஒரு துவந்த யுத்தமே அங்கே நடந்தது.  ஒரு கணத்தில் அந்த சுழியால் அவன் உள்ளே இழுக்கப்பட இருந்த சமயம் சட்டென்று கைகளைத் துடுப்புப் போல் மாற்றிப் போட்டு நீந்த முயன்றான் குலசேகரன். என்றாலும் அந்தச் சுழலுக்குள் அவன் மாட்டிக் கொண்டுவிடுவானோ என அஞ்சும்படியே இருந்தது.  அந்தச் சுழலுக்கும் அவனுக்கும் இடையே ஒரு பெரிய போராட்டமே நடந்தது. கடைசியில் குலசேகரன் வென்றான். என்றாலும் சுழலுடன் போராடியதில் மிகவும் களைத்துச் சோர்ந்து விட்டான். அவனால் அதிகம் நீந்த முடியவில்லை. நம்மாழ்வார் விக்ரஹத்தைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் ஓடங்களில் இருந்து கீழே விழுந்து தத்தளிக்கும் மற்றவர்களையாவது காப்பாற்றலாம் என முயன்றான். கவிழ்ந்த ஓர் ஓடத்தின் மரப்பலகைகள் நீரின் வேகத்தில் அடித்துக் கொண்டு வந்தன. அவற்றில் ஒரு பெரிய பலகையைப் பிடித்துக்கொண்டு அதன் மேல் ஏறி அதைத் தெப்பம் போல் பயன்படுத்திய குலசேகரன் இன்னொரு சிறிய பலகையைத் துடுப்புப் போல் பயன்படுத்தி அதைச் செலுத்திக் கொண்டு நீரில் தத்தளித்தவர்களைத் தேடிச் சென்றான்.

யார் எங்கே தத்தளிக்கின்றனர் என்பதே தெரியவில்லை. என்றாலும் குரல்கள் கேட்ட திக்கை வைத்து யூகத்தின் பேரில் தெப்பத்தை ஓட்டிச் சென்று முடிந்தவர்களைக் காப்பாற்றித் தன் தெப்பத்தில் ஏற்றிக் கொண்டான் குலசேகரன். குரல் கேட்டுச் சென்றால் அங்கே யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் நீரில் அமிழ்ந்து போயிருப்பார்களோ என்பதை நினைத்துக் குலசேகரன் மனம் திடுக்கிட்டுப் போய் விடும். குலசேகரனுக்குச் சோர்வு ஏற்பட்டு விடும். என்றாலும் சமாளித்துக் கொண்டு இயன்றவரை மற்றவர்களுக்கு உதவி செய்தான்.  இரு நாழிகை இப்படி அனைவரையும் கலங்க அடித்த புயல் காற்று மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியது. சிறிது நேரத்தில் பெரிய மழை குறைந்து சிறு தூற்றல் மட்டும் போட்டுக் கொண்டிருந்தது. புயல் அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து சென்றது. ஆனால் அங்கே இருநாழிகை நேரம் வீசிய புயலால் அந்த நீர்ப்பரப்பே அல்லோலகல்லோலமாகி விட்டது. மெல்ல மெல்ல வெளிச்சமும் வர ஆரம்பித்தது.

வெளிச்சம் சரிவர வரவில்லை. எனினும் அது தண்ணீரில் பட்டுப் பிரதிபலித்தபோது சுற்றிலும் நடந்திருக்கும் கோரங்கள் கண்களில் பட்டன. அனைத்து ஓடங்களும் ஓர் சீரான வரிசையில் ஒன்றாகச் சென்று கொண்டிருந்தன. ஆனால் இப்போது திக்குக்கு ஒன்றாகப் பிரிந்து சென்றுவிட்டன. சில ஓடங்கள் கவிழ்ந்து கிடக்கச் சில ஓடங்கள் பாதை மாறி எங்கேயோ போய் விட்டன. சில வெகுதூரம் காற்றில் தள்ளிக் கொண்டு போய் விட்டன. குலசேகரனுக்கு அருகில் இருந்த ஓடம் ஓட்டி ஓடத்தை நிறுத்திக் குலசேகரனையும் அவனுடன் தெப்பத்தில் இருந்தவர்களையும் ஏற்றிக் கொண்டான். ஓடங்கள் கரையை நோக்கிச் சென்றன. மெதுவாகக் கரையையும் அடைந்தன. இறந்தவர்களை நினைத்து அவர்களின் உறவினர்கள் எழுப்பிய கூக்குரல் மனதைப் பிசைந்தது. என்ன செய்ய முடியும்! தங்கள் பரிதாபமான நிலையை நினைத்துப் புலம்பிக் கொண்டே தங்களைத் தாங்களே சமாதானம் கொள்ளவும் ஆரம்பித்தனர்.  என்றாலும் அனைவர் மனதிலும் இத்தனை துக்கத்திலும் நம்மாழ்வார் விக்ரஹத்தைக் காப்பாற்ற முடியாமல் போனது உறுத்திக் கொண்டே இருந்தது.

ஆழ்வார் திருநகரியில் இருந்து இத்தனை மாசங்கள் அவர்களால் பராமரிக்கப்பட்டு வந்த விக்ரஹம் இன்று ஒரு சில நிமிடங்களில் நீருக்குள் அமிழ்ந்து போனதை எண்ணி எண்ணிப் புலம்பினார்கள். திரும்ப ஊருக்குச் சென்றால் ஊர் மக்களிடமும் கோயில் அதிகாரிகளிடமும் என்ன சொல்வது?ஒரு ஆண்டா, இரண்டு ஆண்டா? பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த தெய்வாம்சம் பொருந்திய விக்ரஹம் அல்லவோ! நீரில் விட்டு விட்டோமே எனப் புலம்பினார்கள். இனி என்ன செய்வது என்றெல்லாம் யோசித்துக் கலங்கினார்கள். நம்மாழ்வார் விக்ரஹத்தை மீட்டுக் கொண்டு பயணத்தைத்தொடரலாமா, இல்லை எனில் அப்படியே செல்லலாமா என அவர்களுக்குள் ஓர் விவாதம் நடந்தது.

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

விவாதத்தின் முடிவிற்காகக் காத்திருக்கிறோம்.

Geetha Sambasivam said...

நன்றி முனைவர் ஐயா!