எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, September 25, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நம்மாழ்வாரைத் தேடி!

அவரவர் வழியில் அவரவர் செல்ல வேண்டியது தான் எனப் பரிவாரங்களில் ஒருவர் கூறியதை ஏற்காத குலசேகரன் நம்மாழ்வார் கிடைக்கும் வரை அங்கிருந்து தான் நகரப் போவதில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தான். அதற்கு ஒருத்தர் அவர் திரும்பவெல்லாம் வரப்போவதில்லை! உள்ளே அமிழ்ந்து விட்டார் எனக் கூற அங்கிருந்தே தான் மீட்டு வரப்போவதாகக் குலசேகரனும் உறுதியாகக் கூறினான். அனைவரும் அவனைக் கேலியாகப் பார்த்தனர். அந்த இடத்திலிருந்து நம்மாழ்வாரை மீட்டு வருவது எளிதான வேலையா என்றும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு குலசேகரனையும் ஏளனமாகப் பார்த்தனர். குலசேகரன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. முயன்றே பார்க்காமல் எவ்விதத் தீர்மானத்துக்கும் வரக் கூடாது எனவும் அப்படி நம்மால் முடியவில்லை எனில் நம் பக்திக்கு அர்த்தமே இல்லை என்றும் தெளிவாகக் கூறினான். உடனே ஒருத்தர் அவனையே நம்மாழ்வாரைக் கண்டுபிடிக்கும்படி கிண்டலாய்க் கூற குலசேகரனோ தன் முடிவும் அதுதான் எனக் கூறி அங்கிருப்பவர்களில் யாரை அழைக்கலாம் எனப் பார்க்கலானான்.

அந்தக் கூட்டத்திலிருந்து பிரிந்து தனியே அமர்ந்திருந்த ஒருவர் விம்மி விம்மி அழுது கொண்டிருக்கவே குலசேகரன் அவரைப் பார்த்து என்ன ஆயிற்று என்று கேட்டான். தண்ணீரில் தத்தளித்தவரை முழுகும் தருணம் தான் காப்பாற்றி ஏற்றிக் கொண்டதும் அவன் நினைவில் வந்தது. அவர் திருவரங்கத்துக்காரர். அரங்கன் ஊர்வலத்தோடு தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் குடும்பம் எங்கே எனவும் எப்படி இருக்கின்றது என்பதையும் அறியாமல் தினம் தினம் கலங்கிக் கொண்டிருந்தார். எனினும் விரைவில் தானும் அரங்கனோடு திருவரங்கம் சென்று விடலாம் என்றும் குடும்பத்தாரையும் கண்டு பிடிக்கலாம் எனவும் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் இப்போது நடந்த நிகழ்வுகள் அவரைப் பித்துப் பிடிக்க வைத்து விட்டன. குலசேகரனைக் கண்டு," உன்னால் கண்டுபிடிக்க முடியுமா? ஆண்டனைக் கண்டு பிடிப்பாயா? கண்டு பிடி, கண்டு பிடி. ஆனால் அவர் உனக்குக்கிடைக்க மாட்டார்! ஏனெனில் அப்படி ஒருத்தர் இல்லவே இல்லை. இருந்திருந்தால் இப்படி எல்லாம் ஆகுமா? நாமெல்லாம் இத்தனை துன்பங்களை அனுபவிப்போமா? இல்லாத ஒருவரைத் தேடிச் செல்லப் போகிறாயா? போ! போ! எல்லாம் பொய், பொய்!", என்று கத்திவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார். அங்கிருந்தவர்கள் அவரைத் தொடர்ந்து தடுத்து நிறுத்தி அழைத்து வர முயன்றதை வேண்டாம் எனத் தடுத்து விட்டான்.

பின்னர் மிகவும் யோசனையுடன் பக்கத்து கிராமத்துக்குச் சென்று முக்குளவர்கள் சிலரை நீரில் மூழ்கித் தேடுவதற்கான சாமக்கிரியைகளுடன் அழைத்து வந்தான். உப்பங்கழியின் கரைக்கு வந்தான். அங்கிருந்த ஓடங்களில் ஒன்றை அமர்த்திக் கொண்டு முக்குளவர்களோடு தானும் ஏறிக் கொண்டு நம்மாழ்வார் மூழ்கி இருப்பார் என நினைக்கும் இடத்தை உத்தேசமாகத் தேடிக் கொண்டு சென்றான்.புயல் ஓய்ந்து அமைதியாக இருந்த நீர்ப்பரப்பில் சிறு சிறு அலைகள் மேலெழுந்து கொண்டிருந்தன. அது ஓடத்தைத் தாலாட்டுவது போல் இருந்தது. அந்தக் காயலின் நடுப்பகுதியில் நம்மாழ்வார் விழுந்திருக்கக் கூடும் என நினைத்த இடத்தை நோக்கிச் சென்றவர்கள் அங்கே ஓடத்தை நிறுத்தி யோசனையில் ஆழ்ந்தனர். எந்த இடத்தில் ஓடம் கவிழ்ந்திருக்கலாம் என்பதை அவர்களால் சரியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. வெகு நேரம் அங்குமிங்குமாக அலைந்து சில இடங்களைத் தேர்ந்தெடுத்து முக்குளவர்களை நீரில் மூழ்கித் தேடச் சொன்னான்.

பத்து இடங்களில் தேடியும் எதுவும் கிடைக்கவே இல்லை. குலசேகரன் கண்களில் நீர் பெருகியது. அனைவரிடமும் தான் உறுதியாக நம்மாழ்வாருடன் தான் திரும்புவதாகக் கங்கணம் கட்டிக் கொண்டு வந்திருக்கும்போது வெறும் கையோடு எப்படித் திரும்புவது எனக் கலங்கினான். ஏற்கெனவே தேடுவதையே கேலி பேசியவர்கள் இப்போது வெறும் கையோடு போனால் மேலும் கேலி பேசுவார்கள் என வருந்தினான்.. அரங்கனையும் நம்மாழ்வாரையும் மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டான். சுவாமியே தான் இருக்கும் இடத்தைத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான். பின்னர் முக்குளவர்களை மேலும் மூன்று இடங்களைக் குறிப்பிட்டுத் தேடிப் பார்க்கச் சொன்னான். அவர்களும் அரைமனதாகத் தேடினார்கள். இன்னும் ஒரு இடம் பாக்கி.

அப்போது திடீரென அந்த இடத்துக்கு நேர்மேலாக ஓர் கருடன் வலம் வந்து கொண்டிருந்ததைக் கண்டான் குலசேகரன். குறிப்பாக இங்கே மட்டும் கருடன் வலம் வருவானேன் என சந்தேகம் எழுந்தது அவனுக்குள். அப்போது அந்த கருட பக்ஷி வேகமாய்க்கீழிறங்கி நீரில் ஓர் குறிப்பிட்ட இடத்தைக் கொத்தியது. பின் மேலே விர்ரெனப் பறந்தது. அது கொத்திய இடத்தை நெருங்கிப் போய்ப் பார்க்கலாம் என ஓடத்தை அந்த இடம் நோக்கிச் செலுத்தச் சொன்னான் குலசேகரன். கிட்டே நெருங்க நெருங்க அவன் மனம் படபடத்தது. அங்கே மேலே ஏதோ மிதக்கவும் மனதில் கலக்கத்துடன் நெருங்கிப் பார்த்தவனுக்கு ஓர் பெரிய ஜவ்வந்திப் பூமாலை நீரில் மிதப்பது தெரிந்தது. அது நம்மாழ்வார் விக்ரஹத்தில் அணிவிக்கப்பட்ட மாலையே என்பது குலசேகரனுக்கு உறுதியாகத் தெரியும். கடைசியாக வழிபாடுகள் செய்தபோது அந்த மாலை தான் அவருக்கு அணிவிக்கப்பட்டது. 

3 comments:

நெல்லைத்தமிழன் said...

சென்ற பதிவில் நான் போட்ட பின்னூட்டத்தை வெளியிடவே இல்லையே நீங்க. ஆமாம் ஏன் 'அப்ரூவ் பண்ணி' வெளியிடறீங்க. எழுதும்போதே ஆட்டமேட்டிக்கா வெளியிட வேண்டியதுதானே. அதனால் கருத்து வெளிவந்துவிட்டதா, பின்னூட்டம் போட்டுட்டோமா என்பது உடனே தெரிந்துகொள்ளலாம் இல்லையா?

நெல்லைத்தமிழன் said...

சென்ற இடுகையே ஆர்வத்தை வரவழைத்திருந்தது. இந்த இடுகையிலும் இன்னும் சம்பவம் முழுமையாக முடியலை. அடுத்து எப்போ வருமோன்னு இருக்கு. ஆனால் நான் இந்த நம்மாழ்வார் சம்பவம் பற்றி படித்த ஞாபகம் இல்லை.

Geetha Sambasivam said...

என்னிடம் இருந்த உங்களோட கருத்தை எல்லாம் வெளியிட்டு விட்டேன், நெல்லைத் தமிழரே, சென்ற பதிவில் உங்களோட கருத்து வரலை. அதுக்கு முந்தைய பதிவில் இருந்தது. அதை வெளியிட்டு பதிலும் சொல்லி இருக்கேன். நம்மாழ்வார் சம்பவம் குறித்துப் பலரும் அறிந்திருக்கவில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை.