எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, September 26, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நம்மாழ்வார் மீட்பு!

கருடன் வட்டமிட்ட இடத்திலும் அது கொத்திச் சென்ற இடத்திலும் காணப்பட்ட ஜவந்திப்பூமாலை நம்மாழ்வாரின் திருமேனியில் சார்த்தப்பட்டது தான் என்பது குலசேகரனுக்கு நிச்சயமாயிற்று. ஆகவே இந்த இடத்தில் தான் நம்மாழ்வார் விக்ரகம் மூழ்கி இருக்க வேண்டும் என நினைத்தான். மாலை நீரில் ஊறிப் போய்க் கழுத்தில் இருந்து அகன்று மேலே வந்து மிதந்திருக்க வேண்டும். உடனே முக்குளவர்களை அழைத்து அங்கே 3 இடங்களைக் காட்டி அங்கே மூழ்கிப் பார்க்கச் சொன்னான்.  குலசேகரன் வெளியே தவிப்புடன் காத்திருந்தான். கணங்கள் சென்றன. ஆனால் ஒவ்வொரு கணமும் குலசேகரனுக்கு ஒரு யுகமாகத் தோற்றியது. முதலில் வந்தவன் எதுவும் கிட்டவில்லை எனக் கை விரித்தான். மேலே ஓடத்துக்கு வந்து மூச்சு வாங்கிக் கொண்டு இளைப்பாறினான். அடுத்து வந்தவனும் கை விரிக்க மூன்றாமவன் மேலே வந்து, "ஸ்வாமி, இங்கே ஏதோ தட்டுப்படுகிறது!" என்று சொன்னான். குலசேகரன் ஆர்வத்துடன் துள்ளிக் குதித்து அது நம்மாழ்வாராகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தான். அந்த முக்குளவனை நோக்கி ஓடம் சென்றது. உள்ளே இருக்கும் பொருள், அதன் அளவு, பரிமாணம் எதுவும் தெரியாததால் குலசேகரன் அவன் கையில் சுருக்குப் போட்ட ஓர் நீளக் கயிறைக் கொடுத்து மறுபடி உள்ளே முக்குளிக்கச் சொன்னான்.

சிறிது வெளியே வருவதும் மறுபடி நீரில் மூழ்குவதுமாக இருந்த அவன் கடைசியில் மேலே வந்து சுருக்கை நன்றாகக் கட்டி விட்டதாகத் தெரிவித்தான். இனி வெளியில் இழுக்கலாம் என்பதைப் புரிந்து கொண்ட குலசேகரன் மெல்ல மெல்ல இழுக்க ஆரம்பித்தான். நல்ல கனமான ஒரு பொருள் சுருக்குப் போட்டுக் கட்டப்பட்டிருந்தது என்பது புரிந்தது. குலசேகரனால் தனியாய் இழுக்க முடியாமல் போகவே அனைவரும் சேர்ந்து மெல்ல மெல்ல அங்குலம் அங்குலமாக மேலே இழுத்தார்கள். குலசேகரன் இதயம் படபடக்கக் காத்திருந்தான். நீர்ப்பரப்பின் மேலே ஒரு பெரிய பொருள் மேலே எழுந்து வெளிப்பட்டது.  மேலே வந்த பொருளை மனம் படபடக்கக் குலசேகரன் கவனித்தான். அவன் பார்வையில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அது நம்மாழ்வாரைப் பிரதிஷ்டை செய்திருந்த வாகனம் தான். ஆனால் வாகனம் உடைந்து இருந்தது. மேலும் அது தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கவனமுடன் பார்த்த குலசேகரன் நம்மாழ்வார் அந்த வாகனத்துடன் பிணைக்கப்பட்டிருந்த கயிறுகள் அறுபடாமல் இருந்ததையும் விக்ரகம் பாதிப்பில்லாமல் இருந்ததையும் கண்டு கொண்டான். போகிறது. வாகனம் தானே! போனால் போகட்டும். நம்மாழ்வாருக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே! குலசேகரன் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது.

நம்மாழ்வார் ஆழ்வார் க்கான பட முடிவு

முக்குளவர்களும் உதவி செய்ய அனைவரும் சேர்ந்து பாதி உடைந்திருந்த வாகனத்தோடு பிணைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாரை ஓடத்தில் ஏற்றினார்கள். குலசேகரனுக்கு அருகில் சென்று பார்க்கத் தயக்கம். ஆனால் எப்படி வைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் உத்தரவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தான். வாகனத்திலிருந்து நம்மாழ்வாரைப் பிணைத்திருந்த கயிறுகளை விலக்கி அவிழ்த்து விட்டு அவரை மட்டும் தனியாகத் தூக்கி ஓடத்தில் அமர்த்தினார்கள். கூப்பிய கரங்களுடன் ஒரு யோகி போல் நிற்கும் நம்மாழ்வார் விக்ரகத்தைக் கண்ட குலசேகரன் அவரை நேரிலேயே பார்த்தாற்போல் மனம் மகிழ்ந்தான். கண்களில் கண்ணீர் சுரக்க நம்மாழ்வாரை வணங்கினான். பின்னர் கரையை நோக்கி ஓட்டச் சொல்ல ஓடமும் கரைக்குச் சென்றது.

நம்மாழ்வார் ஆழ்வார் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

ஓடம் கரையை நெருங்க நெருங்க அங்கே ஏராளமான உள்ளூர் ஜனங்களும் கூடி இருந்தது தெரிய வந்தது. அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க ஓடம் கரையை அடைந்தது. கரையில் குதித்த குலசேகரன் அவர்களைப் பார்த்து, " பரிசனங்களே! நம்மாழ்வார் கிடைத்து விட்டார். போய் அவரை அழைத்துக் கொண்டு சென்று ஆராதியுங்கள்!" என வேண்டுகோள் விடுக்க அவர்களில் ஒருவர் அவனைப் பார்த்து, "ஐயன்மீர், தாங்களே நம்மாழ்வாரை அழைத்து வரலாமே!" எனச் சொல்ல, "ஐயா, எனக்கு அதற்குத் தகுதி இல்லை. நான் பதிதன்!" என்று கண்கள் நீரைப் பெருக்கிய வண்ணம் கூறினான் குலசேகரன்.

4 comments:

நெல்லைத்தமிழன் said...

ஶ்ரீரங்கத்துக்கும் ஆழ்வார் திருநகரிக்கும் தொடர்பு உண்டே. அங்கிருந்து நம்மாழ்வார் விக்ரஹம் வருடாவருடம் ஏறும் என்பதாக. ரசித்துப் படிக்கிறேன்.

Geetha Sambasivam said...

சுமார் நூறு ஆண்டுகளாக (அப்படினு நினைக்கிறேன்.) நம்மாழ்வார் விக்ரஹம் ஆழ்வார் திருநகரியில் இருந்து வருவதில்லை. இங்கேயே பிரதிஷ்டை செய்து விட்டார்கள். இது பற்றி விரிவான தகவலுக்குக் குறிப்புகளைச் சரி பார்த்துக்கணும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உடன் பயணிக்கிறேன், மன நிறைவோடு.

Geetha Sambasivam said...

நன்றி முனைவர் ஐயா!