எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, September 29, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நம்மாழ்வார் பிரிவும், அரங்கன் தங்கலும்!

அந்த குகையைப் பார்த்து பிரமித்துப் போய் நின்றிருந்தார்கள் அனைவரும். அப்போது அவர்களில் ஒருவர் ஆழ்வாரையும் அவருடைய ஆபரணப் பெட்டகத்தையும் சங்கிலியில் பிணைத்து மேலே இருந்து இந்தக் குகைக்குள் இறக்கி விட்டு விடலாம் என யோசனை கூறினார். இதனால் ஆழ்வார் எவ்விதமான பயமும் இன்றிப் பாதுகாப்பாக இருப்பார். கள்வர்கள் அவ்வளவு எளிதில் இந்த குகைக்குச் செல்ல முடியாது. இப்படி ஒரு குகை இருப்பதே கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தால் தான் தெரியும்.ஆகவே பின்னால் நல்ல காலம் பிறந்ததும் ஆழ்வாரை எப்படியேனும் குகையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். இதுவே அவர் சொன்னதன் சாராம்சம். மீண்டும் அவர்களுக்குள் வாதப் பிரதிவாதங்கள். பலருக்கும் அவ்வளவு ஆழத்தில் உள்ள குகையில் ஆழ்வாரை இறக்கி விடுவது சம்மதம் இல்லை.  எனினும் இப்போது கள்வர் தொடர்ந்து வரும்போது வேறு வழியில்லை.

ஆகவே ஒரு நீண்ட சங்கிலித் தொடரை அங்கிருந்த காட்டுக்கயிறுகளால் பிணைத்துக் கட்டினார்கள். அது அந்தக் குகையைப் போய் எட்டும் அளவுக்கு நீளமானதா என்பதைச் சோதித்தும் பார்த்துக் கொண்டார்கள். கயிற்றுத் தொடர் உறுதியாக ஆழ்வாரையும் ஆபரணப் பெட்டியையும் தாங்கும் அளவுக்கு வலுவாக இருக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டார்கள். பின்னர் ஆபரணப் பெட்டகத்தைத் திறந்து ஆபரணங்களை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி விட்டு ஆழ்வாரை அந்தப் பெட்டிக்குள் அமர வைத்தார்கள். அவருக்குப் பின்னால் எளிதில் தெரியாதபடிக்கு ஆபரணங்கள் அடங்கிய முடிச்சை மறைத்து வைத்தார்கள். பெட்டகத்தை நன்கு மூடி பத்திரமாய் உள்ளதா எனச் சோதித்துக் கொண்டு  சங்கிலியில் இறுகக் கட்டிச் செங்குத்தான அந்தச் சரிவு வழியே கிணற்றில் கயிறு கட்டி நீர் இழுப்பதற்கு இறக்குவது  போல் மெல்ல மெல்ல இறக்கி விட்டார்கள்.

ஆழ்வாரது பெட்டகம் கீழே போகப் போக ஆட்டம் ஆடத் தொடங்கியது. அனைவருக்கும் அது குகைக்குள் போகாமல் அந்தப் பாதாளத்திலேயே விழுந்து விடுமோ என்னும் கவலை! அதோடு இல்லாமல் சரிவுகளில் ஆங்காங்கே பாறைகள் வேறே சிறிதும், பெரிதுமாய் நீட்டிக் கொண்டிருந்தது. பெட்டகம் அவற்றில் இடித்ததும் ஒரே ஆட்டமாக ஆடியது. எப்படியோ சமாளித்து ஒரு வழியாகக் குகை வாய்க்குக் கொண்டு சென்று விட்டார்கள். மெல்ல மெல்ல அதன் வாய்க்குள் இருட்டில் அந்தப் பெட்டகத்தை உள்ளே விட்டார்கள். குகைப் பகுதியின் தரையைப் பெட்டகம் அடைந்து விட்டதற்கான அடையாளமாகப் பெட்டகம் தரை தட்டியது. உடனே கையில் பிடித்திருந்த நீளமான சங்கிலியையும் நழுவ விட்டனர். அந்தச் சங்கிலியும் பெரிய சப்தம் போட்டுக் கொண்டு குகையில் போய் விழுந்து விட்டது. பின்னர் அனைவரும் மிகுந்த துக்கத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே அங்கே இருந்து கீழே இறங்கினார்கள். இவ்வளவும் செய்து முடிப்பதற்குள்ளாகக் கள்வர் கூட்டத்தார் மலை அடிவாரத்தை நெருங்கி இருந்தார்கள்.

இவர்களைக் கண்டதும் கள்வர் கூட்டத்தார் சுற்றிக் கொண்டனர். ஆழ்வாரின் பரிவாரங்கள் ஆழ்வாருக்கு அரங்கன் கூட்டத்தார் அளித்த வட்டமனையை ஆழ்வாருடன் சேர்த்து உள்ளே வைக்காமல் கையில் வைத்திருந்தனர். தங்கத்தால் ஆன அதைப் பார்த்த கள்வர் உடனே அதைக் கைப்பற்றிக் கொண்டதோடு அல்லாமல் "சித்தை" என அழைக்கப்படும் எண்ணெய்த் துருத்தியையும் பிடுங்கிக் கொண்டனர். அவர்களில் சிலரது உடைகளையும் கவர்ந்து கொண்டார்கள். நல்லவேளையாக ஆழ்வாரை மறைத்து வைத்தோமே என ஊர்வலத்தார் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள். கள்வர் கூட்டத்தார் அங்கிருந்து அகன்றதும் திசைக்குச் சிலராகப் பிரிந்து சென்று ஆங்காங்கே இருக்கும் ஊர்களுக்குச் சென்று வாழ்க்கையைத் தொடங்கியவர் சிலர். சொந்த ஊருக்கே சென்றவரும் சிலர். ஆழ்வாரோ நிம்மதியாக மலைக்குகையில் தன் அஞ்ஞாத வாசத்தைத் தொடர்ந்தார்.
*******************************************************************************

அரங்கன் கூட்டத்தாரின் ஊர்வலம் புங்கனூரை விட்டுக் கிளம்பித் திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டையைப் போய்ச் சேர்ந்தது. ஹொய்சள ராஜ்யத்தின் கீழ் வந்த இந்த ஊர் ஓர் வைணவத் தலம். இந்தச் சம்பவம் நிகழ்வதற்குச் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஶ்ரீராமாநுஜர் சோழ அரசனின் தொந்திரவைத் தாங்க முடியாமல் திருவரங்கத்தில் இருந்து கிளம்பித் திருநாராயணபுரம் சென்று அங்கே வசித்து வந்தார். ராமானுஜரின் வருகையினால் அந்தத் திருத்தலம் மேலும் புகழும் பெருமையும், புனிதமும் அடைந்திருந்தது.  இத்தகையதோர் ஊரிலே தான் திருவரங்கன் சரண் அடைந்தான். ஊர் வைணவர்கள் அனைவருக்கும் இது குறித்து மிக்க மகிழ்ச்சி. அரங்கனே அவர்களைத் தேடி வந்திருப்பது தாங்கள் செய்த புண்ணியமே என நம்பிய அவர்கள் அனைவரும் மிகவும் ஆதரவுடனும், மேள, தாளத்துடனும் அரங்கன் ஊர்வலத்தாரை எதிர்கொண்டு அழைத்தனர்.

வரவேற்பு முடிந்ததும் செலுவப் பிள்ளையின் கோயிலில் அரங்கனின் அர்ச்சாவதாரத்தை எழுந்தருளச் செய்தார்கள்  அரங்கத்தை விட்டுப் பிரிந்து வேறொரு நாட்டில் அவர்கள் தயவில் இருக்கிறோமே என்னும் சோகத்தையே அனைவரும் சில நாட்களில் மறந்து போனார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்குத் திருநாராயணபுரத்தில் உபசாரங்கள் நடந்தன. அரங்கனுக்கும் தினப்படி, வாராந்தரி, மாதாந்தரி, வருட உற்சவங்களைக் குறைவின்றி நிகழ்த்தினார்கள். நீண்ட நாட்கள் கழித்து அரங்கத்தை விட்டு வந்த அரங்கன் இங்கே கொஞ்சம் நிம்மதியுடன் நீண்ட காலம் தங்க ஆரம்பித்தார்.

4 comments:

நெல்லைத்தமிழன் said...

அந்த ஆழ்வார் விக்ரஹம் என்ன ஆனது?

நெல்லைத்தமிழன் said...

தொடர்கதை படிப்பதில் இதுதான் ப்ரச்சனை. மனசு அடுத்தது என்ன ஆச்சுன்னு நினைக்கும், ஆனா அது வரும்போதுதான் வரும்....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வியப்பான அருமையான செய்திகளைக் கொண்ட பதிவு. தொடர்ந்து வாசிக்கிறேன்.

Geetha Sambasivam said...

ஒவ்வொன்றாகத் தான் வரும் நெல்லைத் தமிழரே! அதோடு இது கதை அல்ல! உண்மை! நடந்த சம்பவங்கள்! பெயர்கள் கூட ஓரளவுக்கு உண்மையான பெயர்களே!