எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, February 04, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம்! 5 திருப்புறம்பயம்!

பொன்னியின் செல்வனில் திருப்புறம்பயம் பள்ளிப்படைக்கோயிலில் தான் ஆழ்வார்க்கடியான் முதன் முதல் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் சதியைப் பற்றித் தெரிந்துகொள்வான். அது படிச்சதில் இருந்தே திருப்புறம்பயம் என்றாலே ஏதோ ஒரு சதிக்கூடம் என்ற நினைவே வரும். அடர்ந்த காடு, காட்டுக்கு நடுவிலே கோயில் என்றெல்லாம் கற்பனைக் குதிரை இஷ்டத்துக்குப் போகும். ஆனால் இங்கே இப்போ உண்மையில் அடர்ந்த காடுகள் எதுவும் இல்லை. ஆனால் நெல் வயல்கள். சுற்றிலும் சூழக் கோயில், பெரிய கோயில் என்றே சொல்லலாம். கோயிலுக்குள் நுழையக் கொஞ்சம் பயமாய்த் தான் இருந்தது. கோயிலின் நிலைமை மிகப் பரிதாபகரமாய் இருந்தது. ஆனாலும் வழிபாடுகள் ஏதோ நடந்து வருகிறது என்றுதான் சொல்லவேண்டும். மதுரை ஆதீனத்தின் கீழ் வருகிறது இந்தக் கோயில். மதுரை ஆதீனத்தைச் சார்ந்த கோயில்கள் இது தவிரவும், தஞ்சை மாவட்டத்தில் இன்னும் மூன்று இருக்கிறதாயும் சொன்னார்கள்.

மதுரை ஆதீனம் மிக மிகப் பழமையான ஆதீனமாச்சே?? அதன் கோயிலுக்குச் சொத்து இருக்கணுமே?? குருக்களைக் கேட்டதில் இருக்கிறது என்றார். நாற்பது வேலி நிலம் இருக்கிறதாம் கோயிலுக்கு. நிலத்திலிருந்து வருமானமும் வருகிறது. ஆனால் கோயிலுக்குக் கொடுப்பது என்னமோ ரேஷன் முறையில் தான். குருக்கள் சம்பளம் முன்னர் இன்னாம்பூரில் சொன்ன அதே ஐந்நூறு ரூபாய்களே. மிகக் கஷ்டத்தோடே இருப்பதாகவும், பரம்பரை குருக்கள் என்றும் ஈசனின் தொண்டை விட மனம் வரவில்லை என்றும் வருந்தினார். இப்படிப் போகுமிடமெல்லாம் மனம் வருந்தும் செய்திகளே அதிகம் காண முடிந்தது. எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிட்டது திருவாரூர்க் கோயிலின் நிலைமை. என் கணவர் அழுதே விட்டார் கோயிலைப்பார்த்துவிட்டு. ஆயிரம் வேலி நிலத்துக்குச் சொந்தக்காரர் திருவாரூர் தியாகேசர். எங்கே போச்சு எல்லாம்???

புறம்பயம் என்றால் பக்கத்திலே தண்ணீரை உடையது என்ற பொருளில் வருமெனச் சொல்கின்றனர். அதற்கேற்பக் கோயிலின் மேற்கே மதிலை ஒட்டி நீர்நிலை இன்றும் இருப்பதாயும் காட்டினார்கள். இந்த ஊரின் விநாயகருக்குப் பிரளயம் காத்த விநாயகர் என்ற பெயர் உண்டு. பிரளயம் ஏற்பட்டு அனைத்து ஊர்களும் அழிந்த காலத்தில் இந்த ஊர் மட்டும் அழியவில்லை என்றும் சுற்றிலும் உள்ள நீரை ஊருக்குள்ளே புக விடாமல் விநாயகர் தடுத்துப் புறத்தே நிறுத்தியமையால் இவ்வூரின் பெயர் திருப்புறம்பயம் என்றும் விநாயகருக்குப் பிரளயம்காத்த விநாயகர் என்றும் பெயர் ஏற்பட்டதாய்ச் சொன்னார்கள். விநாயகரின் திருமேனி கடல்பொருட்களான சிப்பி, சங்கு இவற்றால் ஆனது என்கின்றனர். ஒவ்வொரு பிள்ளையார் சதுர்த்தி அன்றும் விமரிசையாக விநாயகருக்கு அபிஷேஹ ஆராதனைகள் செய்கின்றனர். தேன் அபிஷேஹம் செய்யும்போது விநாயகருக்குச் செய்யப் படும் தேன் அபிஷேஹம் எல்லாம் அப்படியே உறிஞ்சப் படுவதாய்க் கூறுகின்றனர். அன்று கூட்டமும் அதிகம் காணப்படும் என்கின்றனர்.

கும்பகோணத்திற்கு வடமேற்கே மண்ணியாற்றின் கரையில் உள்ள இந்த ஊருக்கு இன்னாம்பூர் வழியாகவே வரவேண்டும். திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும், பின்னர் சுந்தரரும் முறையே ஓர் பதிகம் இந்த ஊர் ஈசன் மேல் பாடி இருக்கின்றனர். தல விருக்ஷம் புன்னை என்றாலும் இங்கே உள்ள வன்னிமரம் சாட்சி சொல்ல மதுரைக்குப் போயிருக்கு. அது தனியா எழுதறேன். திருவிளையாடல் புராணத்தில் வரும் அந்தக் கதை. இந்தச் சாட்சி சொல்லுவதில் திருஞானசம்பந்தரும் சம்பந்தப் பட்டிருப்பார். காவிரியின் வடகரைத் தலங்களில் இதுவும் ஒன்று.

ஈசன் பெயர் சாட்சி நாதர் என்பதாகும். சாட்சி சொல்ல மதுரை சென்றதால் சாட்சி நாதர் ஆனார். அம்பாள் பெயர் கரும்பொடு படு சொல்லம்மை அல்லது சாட்சி நாதேஸ்வரர், இலட்சுவாணி என்பதாகும். இரு தீர்த்தங்கள் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். இந்தத் தீர்த்தங்களில் பிரளயத்தின் ஏழு கடல்களும் வந்து அடங்கியதாகவும் ஐதீகம். குளக்கரையில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி சந்நிதிக்கு மேலே இங்கேயும் சட்டைநாதர் காணப்படுகிறார். சுவாமி கிழக்கே பார்த்துக் காட்சி கொடுக்கிறார். அகஸ்தியர், புலஸ்தியர், சனகர், சநந்தனர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்றதாயும் சொல்கின்றனர்.

சாட்சி சொன்ன கதை:
காவிரிப்பட்டினத்து வணிகன் ஒருவன் மதுரையைச் சேர்ந்த பெண்ணொருத்தியைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே வாழ்ந்து வந்தான். அப்போது காவிரிப்பூம்பட்டினத்தில் அவன் தங்கை இறந்துவிட்டதாய்ச் செய்தி வர, காவிரிப்பூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட வணிகன் திரும்பி வருகையில் தன் தங்கையின் மகளையும் உடன் அழைத்து வர நேருகிறது. வரும் வழியில் இந்தத் தலத்தில் சற்றுத் தங்கினான். அப்போது பாம்பு கடித்து இறந்து போக, அவ்வழியே சென்ற திருஞான சம்பந்தரால் உயிர்ப்பிக்கப் பெற்று, அவர் அந்தப் பெண்ணை அவனுக்கே திருமணம் செய்விக்கிறார். திருமணத்தின் போது அங்கே ஒரு வன்னிமரமும், கிணறும் மட்டுமே சிவலிங்கத்தோடு இருந்தன. இவற்றைச் சாட்சியாகக் கொண்டே திருமணம் நடக்கிறது.

பின்னர் மதுரை சென்ற அந்தப் பெண்ணையும் அவள் கணவனையும் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி, நிஜமாகவே திருமணம் நடந்ததா என சந்தேகம் கொண்டு வழக்குத் தொடுக்க வழக்கும் மன்னன் சபைக்கு வந்தது. மன்னனோ திருமணம் நடந்ததற்கு சாட்சி கேட்கிறான். சாட்சியாக மனிதர்கள் யாருமே இல்லையே என மனம் வருந்திய அந்தப் பெண், அங்கே இருந்த சிவலிங்கமும், வன்னி மரமும், கிணறும் தான் சாட்சி என்று வருந்தினாள். அவை வந்து சாட்சி சொல்லுமா என மூத்தவள் இளையவளைக் கேலி செய்ய, நம்பிக்கையோடு ஈசனைத் தொழுதாள் இளையவள். என்ன ஆச்சரியம் மூன்றும் வந்து சாட்சி சொல்லிச் சென்றன. இன்றும் மதுரையில் ஸ்வாமி சந்நிதி வெளிப்பிரஹாரத்தில் வன்னி,கிணறு, லிங்கம் காணலாம். இவ்வாறு சாட்சி சொன்ன காரணத்தால் சாட்சிநாதர் என்ற பெயரை ஈசன் பெற்றார்.

துரோணர் இங்கே வந்து ஈசனை வழிபட்டே அஸ்வத்தாமாவைப் பெற்றெடுத்ததாகவும் சொல்கின்றனர். இந்தத் தலத்திற்கு எனத் தலபுராணம் இருக்கிறது என்றும் இன்றளவும் அச்சேறவில்லை என்றும் சொல்கின்றார்கள். இந்தத் திருக்கோயிலைப் பற்றிய உலாவில் சில கண்ணிகளே கிடைத்திருப்பதாகவும், புறம்பயமாலை என்னும் நூலில் பத்துப்பாடல்களே கிடைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். கிடைத்தவற்றைத் திருவையாறு வை.சுந்தரேச வாண்டையார் என்பவர் அச்சிட்டுள்ளதாய்த் தெரியவருகிறது. ஆனால் கோயிலில் எங்கும் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்பது வருந்தத் தக்கது. கோயிலில் கிட்டத்தட்ட பதினோரு கல்வெட்டுகள் இருப்பதாகவும் சொல்கின்றனர்.


ராஜகேசரி வர்மன் முதல் குலோத்துங்கன் வரையிலும் கோயிலுக்குக் கொடுத்த நிலதானங்கள், விளக்குகளுக்குக் கொடுத்த நிவந்தங்கள், பசுதானம், ஆடுதானம் போன்றவைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. ஆலய விளக்குகளுக்குச் செய்த பொன் தானம், வெள்ளி தானம் போன்றவையும் சொல்லப் படுவதோடு ஒரு கல்வெட்டில் ஈசன் பெயர் ஆதித்தேசுவரர் என்று இருப்பதால் கோயில் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப் பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றார்கள்.

பொன்னியின் செல்வனால் பிரசித்தி பெற்ற கங்க மன்னன் ப்ருதிவீபதி இங்கே நடந்த மண்ணியாற்றுச் சண்டையில் உயிர் நீத்த செய்தியும் குறிக்கப் பட்ட கல்வெட்டும் உண்டு. முதலாம் பராந்தகன் காலம் முதல் மூன்றாம் ராஜேந்திரன் வரை உள்ள அரசர்கள் காலங்களில் செய்யப் பட்ட திருப்பணிகளைக்குறிக்கும் கல்வெட்டுகளும் கிடைத்திருக்கின்றன. திருவிசைப்பாப் பாடிய கண்டராதித்த சோழரின் மனைவியான செம்பியன் மாதேவியார் புறம்பயத்து ஈசனுக்கு நீராட்டத்துக்குக் கொடுத்த வெள்ளிக் கலசம் பற்றியும் குறிப்புகள் சொல்கின்றன. இது தவிர, விஜயநகர வேந்தர்கள் காலத்திலும் மக விழா பற்றிய கல்வெட்டு ஒன்று எடுத்திருக்கின்றனர். பெருமாள் கோயிலை தாமோதர விண்ணகரம் என்ற பெயரில் அழைத்திருப்பதாயும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பெருமாள் கோயிலுக்குப் போகமுடியவில்லை.

9 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பயன் உள்ள தகவல்...

எல் கே said...

ithai padikum poluthe manathu sangadapadugirathu

http://lksthoughts.blogspot.com/2010/02/blog-post.html

Jayashree said...

"" கரும்பொடு படு சொல்லம்மை ""
அப்படி என்றால் கரும்பினும் இனிய சொல் உடையவள் என்று அர்த்தமோ? அம்மன், தாயார் தமிழ் பெயர்கள் நம் பக்கத்தில் எத்தனை அழகு. இனிமை !!
நீங்க வருத்தப்படறமாதிரி எங்களுக்கும் ரொம்ப சங்கடமா வந்தது. ஒவ்வொரு கதையையும் கேக்க, கோவில்களைப் பார்க்க.தனி மனிதரா செய்தும் மாளாது. இதுல official ஆ செய்யப்போனோம் என்றால் அரசாங்க ஊழல் மன்னர்களினால் உள்ளதும் போச்சு லொள்ளை கண்ணா தான்.உதவலாம்னு விவரம் சில கேக்கப்போனதுக்கே, சாதாரண சிப்பந்தி தான் , பேச்சுல எத்தனை அகம்பாவம், எத்தனை கெடுபடி!! இந்தமாதிரி கோவிலில் ஒரு குருக்கள் சொன்னார் , உண்டியலில் என்னமோ பணம் வசூல் ஆகிறது ஆனா வருஷா வருஷம் அரசாங்க அதிகாரிகள் வந்து எடுத்துண்டு போகிறார்களே தவிர கோவிலுக்குன்னு ஒண்ணும் பெருசா பண்ணறதும் இல்லை பண்ண விடுவதும் இல்லை என்கிறார்கள். இந்த பரிகாரம் பண்ணு அர்ச்சனை பண்ணுனு பணம் பிடுங்குகிற பருத்த அர்ச்சகர்களிடம் அனுபவப்பட்டவர்களின் அனுபவம் தந்த காட்டத்தை சிலசமயம் பாவம் இந்த ஏழ்மையில் வாடிக்கொனண்டிருக்கும் அர்ச்சகர்கள் சந்திக்க வேண்டி வரது என்கிறார்கள். உண்மையை நாம் பக்கத்தில் இருந்து பார்க்கவில்லை கேட்டதுதான். ஆனா நம்பாமலும் இருக்கமுடியவில்லை.திருப்புண்குழிதானோ இல்லை பக்கத்துல ஒரு சிவன் கோவிலோனு சரியாக ஞ்யாபகம் இல்லை . ஸ்வாமி புறப்பாடு, ஆருத்ரா தரிசனத்துக்கு சேவைக்கு குடுங்கோ சாமிக்கு இந்த வருஷம் செய்ய நிதி இல்லை, அரசாங்க உதவியும் தரவில்லைனு என்று அந்த கோவில் குருக்களும் அதை எடுத்து செய்யற ஒரு மனிதரும் சொன்னார்கள். அவல நிலமையை கேட்கவும் முடியவில்லை. நம்பி கணிசமான தொகையை ஒரு அத்தாட்சி யும் இல்லாம கொடுக்கவும் தயக்கமா இருந்தது. சரி பார்ப்போம் தெய்வத்துக்கு முன்னால தானே தரோம்னு அவன் பார்த்துக்கொள்வானு( (ஆத்மார்த்தமா ஏமாத்தாம நல்லது செய்யணும்னு வேண்டிண்டேன்,) தந்துட்டு அதை மறந்தும் விட்டோம். ஆனா அவா மறக்கலை வீடு தேடி ப்ரசாதம் ,நன்றி, அன்னதான ஆசிர்வாதம் வந்தது. சாதாரணர்கள் ஆச்சர்யப் படுத்திவிடுகிறார்கள். நம்பினால் தெய்வம் என்கிறமாதிரி நம்பிக்கை தான் எல்லாம் போல இருக்கு.!!

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, உண்மை நிலை பல கோயில்களிலும் இதுதான் இன்று. மிஞ்சிப் போனால் கல் தளங்களை எடுத்துட்டு கிரானைட் பதிப்பதும், பழைய ஓவியங்களை அழித்துவிட்டுப் புதிதாக எழுதச் சொல்லுவதும் நடக்கும். வேறே ஆக்கபூர்வமான பணிகள் நடைபெறுவதில்லை. பல கோயில்களிலும் தட்டில் போடும் பணத்தை வைத்தே கோயிலின் அன்றாடச் செலவுகளைச் சரிக்கட்டுகிறார்கள்.

ஸ்ரீராம். said...

இது பதிவு. நான் எழுதியது அவசரக் கோலம்! அதுவும் நீங்கள் நினைவுபடுத்தியதால்!

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, ஶ்ரீராம், சாரி, காலம்பர அவசரத்திலே திருவாரூர்ப் பதிவுக்கு ஆன சுட்டிக்கு பதிலா திருப்புறம்பயம் பதிவுக்குக் கொடுத்திருக்கேன் போல! அ.வ.சி. இருங்க திருவாரூர்ப் பதிவுக்கான சுட்டியையும் இங்கே பார்த்தீங்களா? படிச்சீங்களா? இல்லைனா தரேன். விடமாட்டோமுல்ல! :)))

Geetha Sambasivam said...

http://aanmiga-payanam.blogspot.in/2010/02/blog-post_15.html

திருவாரூர்ப் பதிவுக்கான சுட்டி மேலே. :)

நெல்லைத்தமிழன் said...

கோவில்களில் அர்ச்சகர்கள் பலர், கோவில் நடப்பதற்கு பணம் கொடுங்கோ என்று சொல்லும்போது இந்தப் பாழும் மனம் நம்புவதில்லை, அல்லது எல்லாக் கோவில்களிலும் கேட்கிறார்களே என்று தோன்றிவிடுகிறது, ஒருத்தருக்கு என்று கொடுத்து முடிவதில்லை...

இதைப்பற்றி மேலும் பொதுவெளியில் எழுதத் தயக்கமா இருக்கு.

Geetha Sambasivam said...

கோயில் உண்டியல் பணமெல்லாம் போகுமிடம் எங்கேனு இப்போத் தான் பலவழிகளிலும் அலசப்பட்டு வருகிறதே! என்ன சொல்ல முடியும். ரொம்பவே வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியலை தான்! (