எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, April 01, 2019

அரங்கன் பயணம் மீண்டும் ஆரம்பம்!

இத்தனை வருடங்கள் சத்திய மங்கலம் என்னும் அமைதியான ஊரில் நாட்களைக் கழித்திருந்த வேதாந்த தேசிகர் ஞானத்தில் கனிந்து வந்திருந்தார். அவர் முகமே தோத்திரங்கள் மூலமும் தத்துவ விளக்கங்கள் மூலமும் கனிந்து வந்த அவர் முகம் மேலும் மேலும் ஞான ஒளி வீசிப் பிரகாசிக்க ஆரம்பித்ததைக் காட்டியது!  அவர் உள்ளூர இறையோடு ஒன்றிப் போயிருந்தார். விவரிக்க ஒண்ணா அந்தப் பேரானந்த உணர்வு அவர் ஒவ்வொரு செய்கையிலும் பிரதிபலித்தது.  இறையோடு ஒன்றாய்க் கலந்த அவர் வாக்கு, செயல், எண்ணம் எல்லாம் சேர்ந்து யாதவாப் யுதயம் என்னும் அருமையான காவியம் உருவாக ஆரம்பித்திருந்த நேரம். புற உலகில் இருந்து முற்றிலும் விடுபட்டுத்தம்முள் அடங்கியவராய் இருந்த அவர் இப்போது மேல்கோட்டை நோக்கி வருகிறார் என்றதுமே மக்கள் கூட்டம் அவரைக் காணக் கூடியது.

அரங்கன் இருக்குமிடம் தேடிச் சென்ற வேதாந்த தேசிகர் அவனுக்கு நித்தியப்படி வழிபாடுகள் அனைத்தும் சிறப்பாக நடை பெற்று வருகிறதா என விசாரித்துத் தெரிந்து கொண்டார். அப்படியே அரங்கன் முன்னிலையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். கண்களில் இருந்து  கண்ணீர் ஆறாகப் பெருகியது! இவன் யார்? ரங்கராஜன்! எவ்வளவு பெரிய மாளிகை இவனுடையது! இவனுக்குள்ள சொத்துக்கள் தாம் எத்தனை எத்தனை! அடியார் தம் கூட்டம் தான் எவ்வளவு! இத்தனை இருந்தும் சொந்த ஊரை விட்டு அநாதை போல் வேறோர் ஊரில் வந்து அடைக்கலம் நாடி வந்திருக்கின்றானே!  இதை நினைத்து நினைத்து அவர் மனம் கசிந்தது. பின்னர் அங்கிருந்த அனைவரிடமும்  அழகிய மணவாளனுக்கு நித்திய சேவைகள் எல்லாம் சரிவர நடக்கின்றனவா என விசாரித்து அறிந்து கொண்டார். பின்னர் அனைவரையும் கண்டு அப்போது நாடெங்கும் பேசப்பட்ட ஹொய்சள வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்டார்.

"பெரியீர், மக்களே! நாட்டில் நற்செய்தி பரவி வருகிறது. இனி நமக்கு நற்காலம் உதயமாகப் போகிறது. அதோடு இல்லாமல் ஹொய்சள மன்னர் மேலும் மதுரையின் மீது படை எடுத்துப் புறப்பட்டு விட்டார் என்னும் நற்செய்தியும் கிடைத்துள்ளது. அதன் பின்னரே அடியேன் சத்தியமங்கலத்தில் இருந்து கிளம்பி இங்கே வந்தேன். இனி அரங்கன் இந்த தூர தேசத்தில் இருக்க வேண்டாம். அரங்கனை மெதுவாக நாம் கொங்கு நாட்டுக்கு அழைத்துச் சென்று விடுவோம். மதுரைப் போர் முடிந்து ஹொய்சள மன்னரின் வெற்றி உறுதி ஆனதும் அரங்கனை ஶ்ரீரங்கம் அழைத்துச் செல்ல வசதியாக இருக்கும். நற்காலம் பிறந்ததும் உடனே நாம் அனைவரும் திருவரங்கம் செல்ல வேண்டியது தான். இதை விண்ணப்பிக்கவே நான் இங்கே வந்தேன்!" என்று கூறினார். இதைக் கேட்ட பரிவாரங்கள் மனதினுள் மகிழ்ந்தாலும் உள்ளூரக் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது. என்றாலும் அந்த ஊர்ப் பெரியோர்களோடும் யோசனைகள் பல செய்து அரங்கனைக் கன்னட நாட்டிலிருந்து தமிழ் பேசும் கொங்கு நாட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்கள்.  ஓர் நல்ல நாளாக விரைவில் பார்த்து இளங்காலை நேரத்தில் திருவரங்கன் மீண்டும் தன் யாத்திரையைத் தொடங்கினான். மலைப்பிரதேசங்களின் ஊடே அவரை எழுந்தருள வைத்த வண்ணம் வேதாந்த தேசிகர் தன் அடியார்களோடு கொங்கு மண்டலம் நோக்கிச் செல்லலானார்.

இங்கே ஒரு லட்சத்து இருபதினாயிரம் வீரர்களுடன் கூடிய ஓர் மாபெரும் படை பெரும் ஆரவாரத்துடன் புழுதியைக் கிளப்பி கொண்டு திருவண்ணாமலைக்குத் தெற்கே இரு காத தூரத்தில் விரைந்து கொண்டிருந்தது. யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என முவ்வகைப் படைகளும் அதில் இருந்தன. ஓரு நீண்ட வால் போல் அணிவகுத்து அந்தப் பிரதேசத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரமாய்த் தெரிந்தது. குதிரைப்படை, காலாட்படை எனத் தனித்தனிக்கூட்டமாய்ப் போகாமல் அணி வகுத்துச் செல்வது அந்த நாட்களில் வழக்கம் இல்லை. அந்நியப் படை எடுப்பின் மூலம் இத்தகைய வழக்கம் நம்மிடையேயும் வந்ததாய்த் தெரிகிறது.

இந்த அணிவகுப்பின் நடுவில் ஓர் பல்லக்கில் வீர வல்லாளர் உற்சாகத்துடன் வீற்றிருந்தார். அவர் வயது எண்பது எனச் சொன்னால் தான் தெரியும். அத்தகைய உடல்வாகுடனும், உறுதி படைத்த மனதுடனும் போருக்குக் கிளம்பி இருந்தார். அவருடன் ராணி கிருஷ்ணாயியும் அந்தப்புர ஜனங்களுடன் பிரயாணம் செய்தாள். வழிச்செலவுக்காக மன்னரின்பொக்கிஷங்கள் யானைகள் மீது வந்து கொண்டிருந்தன. போகும் வழியெல்லாம் மக்கள் கூட்டமாகத் திரண்டு வரவேற்பும் பிரியா விடையும் கொடுத்தனர். யுத்த தளவாடங்கள் அடங்கிய பொருட்கள் எல்லாம் மாட்டு வண்டிகள், மற்ற கைவண்டிகள் ஆகியவற்றில் வந்து கொண்டிருந்தன. இவை அனைத்தும் மெல்ல மெல்லவே நகர முடிந்தது என்பதால் ஒரு நாளைக்குக் குறைந்தது பத்து மைல் சென்றாலே அதிகம் என்னும்படி இருந்தது. ஆகவே வண்டிகள் எல்லாம் மெதுவாக வர விட்டு விட்டு மந்திரி, பிரதானிகள், படைத்தளபதிகள் ஆகியோர் முன்னே விரைவாகச் சென்று நல்லதோரு இடம் பார்த்து தண்டு இறங்கி ஓய்வெடுத்து விடுவார்கள்.

பின்னர் வண்டிகள் வந்து சேர்ந்ததும் அனைவரும் மறுபடி சேர்ந்து கிளம்பிச் செல்வார்கள். இப்படியே அந்த நீண்ட படை மெல்ல மெல்ல மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  இவர்களுடன் குலசேகரனும் பயணம் செய்து கொண்டிருந்தான். 

No comments: