எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, April 27, 2019

சிங்கப்பிரானின் முடிவும், ஹொய்சளர்களின் தாக்குதலும்!

கோட்டை முற்றுகை தொடர்ந்து கொண்டிருக்கையிலேயே ராஜகம்பீர நாட்டிலிருந்து குலசேகரனுக்குச் செய்தி வந்தது. அதில் சிங்கப்பிரான் மிகவும் உடல் நலம் மெலிந்து நலிந்திருப்பதாகவும் அவர் அவனைக் காண விரும்புவதாகவும் செய்தி வரவே குலசேகரன் உடனே அங்கே கிளம்பிச் சென்றான் . நோயினால் மெலிந்திருந்த சிங்கப்பிரானின் கைகளைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டான்.அரங்கனின் அடியார்கள் அனைவருமே இப்படி நோயினாலும் வேறு விதமான காரணங்களினாலும் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.இப்படியே சென்றால் அரங்கனைப் பாதுகாக்கக் கூட ஆட்கள் இருப்பது சந்தேகமே! இதை எண்ணிக் குலசேகரன் கலக்கம் அடைந்தான். சிங்கப்பிரானோ கண்ணீருடன் தான் இனி அதிக நாட்கள் உயிருடன் இருக்கப் போவதில்லை எனவும் அதற்குள் அரங்கனை ஒரு முறை கண்ணாரக் காண வேண்டும் எனவும் கூறினார். அதன் பேரில் குலசேகரன் ஓர் சிவிகையை ஏற்பாடு செய்து அதன் உள்ளே படுக்கை போன்ற இருக்கையை அமைத்து அதில் சிங்கப்பிரானைக் கிடத்தித் திருவரங்கத்துக்குத் தக்க துணையுடன் அழைத்துச் சென்றான்.

சந்நிதியை அடைந்த சிங்கப்பிரான் மூடிக் கிடக்கும் சந்நிதியையும் அதன் முன் எழுப்பப்பட்டிருந்த கற்சுவரையும் பார்த்துக் கண்ணீர் சிந்தினார். அரங்கா! அரங்கா! இதுவும் உன் லீலையோ? இன்னும் எத்தனை நாட்கள் அப்பா உன் கோயில் திறக்காமல் உனக்கு வழிபாடு நடத்தாமல் செல்லப் போகிறதோ! தெரியவில்லையே! உன் திருச்சந்நிதி மூடிக்கிடந்தே நான் பார்த்ததில்லை. அப்படி இருக்கையில் இப்படிப் பதினெட்டு ஆண்டுகளாக மூடிக் கிடப்பதையும் அதைத் திறக்கும் வழி தெரியாமலும் தவித்துக்கொண்டு இருக்கிறேனே! இப்படி ஓர் அநியாயமும் நடந்து விட்டதே! இனி இவ்வுலகில் நான் இருந்து என்ன பயன்? எனப் பலவாறெல்லாம் புலம்பிக் கொண்டு கீழே இறங்கி அரங்கன் சந்நிதியில் நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்தார். அவரைத்தேற்றி மறுபடியும் சிவிகையில் கிடத்தி அழைத்துச் செல்வதற்குள் குலசேகரனுக்கு என் பாடு உன் பாடு என்றாகி விட்டது. அரங்கன் கோயில் திறக்காமல் மூடியே கிடந்ததைப் பார்த்ததாலோ என்னவோ அடுத்த ஒரு வாரத்திலேயே சிங்கப்பிரான் திருநாடு எழுந்தருளி விட்டார்.

அடுத்தடுத்து அரங்கன் அடியார்கள் திருநாடு எழுந்தருளுவதையும் அவர்களைப் பிரிந்த சோகம் தன்னை மேலே மேலே வந்து தாக்குவதையும் பார்த்த குலசேகரன் இம்முறை செய்வதறியாது தவித்தான். முதலில் பஞ்சு கொண்டான். பின்னர் பிள்ளை உலகாரியர்! இப்போது சிங்கப்பிரான். இப்படித் தனக்கு வழிகாட்டித் தன்னை நடத்தி வந்தவர்கள் ஒவ்வொருவராக மறைவது கண்டு அவன் மனம் வேதனையில் ஆழ்ந்தது. அதிலும் இப்போது கோட்டை முற்றுகை நீடித்திருப்பதால் விரைவில் வெற்றி கிட்டும் என்னும் நிலை. இந்தச் சமயம் பார்த்து இப்படி எல்லாம் நேருகிறதே என எண்ணினான். அடுத்த ஒரு மாதமும் முற்றுகை நீடித்து ஆறு மாதங்களும் முடிந்தன. குலசேகரன் உடனே கோட்டையின் மேல் தாக்குதலை ஆரம்பிப்போம் என மன்னரிடம் வற்புறுத்தினான். கோட்டைக்குள் இருப்பவர்களுக்கு உணவு இருக்காது! ஆகவே இப்போது நாம் தாக்கினால் கோட்டை நம் வசம் என்றான். ஆனால் மன்னர் அதற்குச் சம்மதிக்கவில்லை.

கோட்டைக்குள் படை வீரர்களை அனுப்பி அவர்களை இழக்க விரும்பாத மன்னர் முதலில் அம்புச்சுருள்களை அனுப்பிப் பார்க்கலாம் என்று கூறி அதன்படியே கோட்டையின் வெளிப்பக்கச் சுவர்களில் காணப்பட்ட மாடங்களில், உடனே சரணடையும்படியான செய்தியை எழுதிய ஓலைகளை அம்புகளில் கட்டி அங்கே எறிந்தார்கள். அதற்கு மறுமொழியாக அன்று மாலையே அந்திப் பொழுதில் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த நர்த்தகிகள் ஆடல், பாடலுடன் ஆட ஆரம்பித்தனர். இதன் பொருள் தாங்கள் அனைவரும் கோட்டைக்குள் ஆரோக்கியமாகவும் எவ்விதமான கஷ்டமும் இல்லாமல் ஆடல், பாடல்களை ரசித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் என்பதைப் புரிந்து கொண்டனர் ஹொய்சள வீரர்கள். இதை அடுத்துச் சில நாட்கள் தினம் தினம் மாலை வேளைகளில் நாட்டிய நங்கைகள் கோட்டையின் மதில் சுவரில் நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் இன்னும் சில நாட்கள் கழிந்தன. நடன மங்கைகள் ஒவ்வொருவராகக் குறைந்து போய்க் கடைசியில் எவரும் வரவே இல்லை.

சில வாரங்களில் கோட்டை மதில் சுவருக்கு மேலே இருந்து இரு மனித சடலங்கள் உள்ளிருந்து தூக்கி எறியப்பட்டு வெளியே கீழே விழுந்தன. அதைக் கண்ட வெளியில் இருந்த வீரர்கள் கோட்டைக்குள் பட்டினிச்சாவு ஆரம்பித்து விட்டதை அறிந்து கொண்டனர். அதன் பின்னர் தினமும் சடலங்கள் கோட்டைக்கு வெளியே வந்து விழ ஆரம்பித்தன.சிறிது நாட்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனக் கோட்டைக்குள் குடி இருந்த மக்களின் சடலங்கள் வெளியே வந்து விழ ஆரம்பித்தன.எங்கும் முடை நாற்றம் நாற ஆரம்பிக்கவே கோட்டைக்குள் நிலைமை மோசமாகிக் கொண்டு வருவதை உணர்ந்தனர் ஹொய்சள வீரர்கள்.  கோட்டைக்கதவு திறந்து கொண்டு எந்த நிமிஷமும் சுல்தானிய வீரர்கள் தாக்குதலுக்கு வரலாம் என்னும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

அதே போல் கோட்டைக் கதவைத் திறந்து கொண்டு சுல்தானிய வீரர்கள் ஹொய்சள வீரர்களை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தார்கள். வீரர்கள் பட்டினி, அதுவும் வெகு நாளாகப் பட்டினி என்பது பார்த்ததுமே தெரிந்தது. ஊட்டம் இல்லாமல் பட்டினி கிடக்கிறோமே என்னும் ஆத்திரம் மேலோங்க வெறியோடு பாய்ந்தனர். காலையில் முதல் முஹூர்த்தத்தில் ஆரம்பித்தது சண்டை. சுல்தானியரின் முரட்டுத் தனத்துக்கு ஈடு கொடுத்து ஹொய்சள வீரர்கள் சளைக்காமல் போர் புரிந்தனர். அரை நாழிகைச் சண்டையிலேயே சுல்தானிய வீரர்கள் களைத்துப் போய்விட்டனர். பின்வாங்கிக் கோட்டைக்குள் போய்ப் பதுங்கலாம் என நினைப்பதற்குள்ளாகக் குலசேகரன் மறைத்து வைத்திருந்த தன் படையைக் கோட்டை வாசலுக்குக் கொண்டு சேர்த்திருந்தான். இதை சுல்தானியர்கள் எதிர்பார்க்கவே இல்லை.  கோட்டைக்குள் இப்போது முதலில் நுழையப் போவது ஹொய்சளர்களா, சுல்தானியர்களா என்னும் சண்டை ஆரம்பித்தது.

இந்தச் சண்டையில் சுல்தானியர் பலர் இறந்து நடுப்பகலுக்குள் கிழக்கு வாசல் எல்லாம் ஓய்ந்து போய்க் காணப்பட்டது. குலசேகரன் கோட்டையைத் தாக்க இது தான் சமயம் என நினைக்க மன்னரோ அவசரப்பட வேண்டாம் என்றார்.ஆட்களைப் பலி கொடுக்காமல் காத்திருந்தால் சில நாட்களில் கோட்டையில் இருப்பவர்கள் தாங்களாகவே சரணடைவார்கள் என்றார் மன்னர்.

4 comments:

Mrinalini said...

Nice Mam

Mrinalini said...

When will next update come mam?

Geetha Sambasivam said...

மிருணாளினி, தப்பாய் எடுத்துக்காதீங்க!எனக்குப் பல வேலைகள் முன்னிலையில் இருக்கின்றன.ஆகவே கிடைக்கும் நேரத்தில் எழுதுகிறேன். பொறுத்துக் கொள்வதற்கு நன்றி.

Mrinalini said...

Its ok. I understand.