எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, April 02, 2019

சம்புவராயருக்கு தூது!

ஹொய்சளப்படைகள் கூடிய மட்டும் விரைவாகவே நகர்ந்து கொண்டிருந்தன. தெற்கு நோக்கிச் சென்ற அதன் குதிரைப்படையின் முன்பகுதியில் குலசேகரன் ஓர் குதிரை மீது ஆரோகணித்துக் கொண்டு அடுத்து நடக்க வேண்டியவற்றைப் பற்றி யோசித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான். அப்போது அந்தப் படைகள் ராஜகம்பீரம் என அந்நாட்களில் அழைக்கப்பட்ட சம்புவராயரின் எல்லைப்பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த ராஜகம்பீரம் என்னும் சிறு ராஜ்யமானது அந்தக் காலத்தில் சம்புவராயர்கள் என்பவர்களின் ஆட்சிக்குக் கீழ் இருந்து வந்தது. இப்போதைய வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைக் கொண்டு சிறுபகுதியாக உருவெடுத்து சம்புவராயர்களால் ராஜகம்பீரம் என்னும் நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஆளப்பட்டு வந்தது. இவர்கள் அவ்வப்போது ஏற்படும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்பத் தனிநாடாகவும், குறுநில மன்னர்களாகவும் செயல் பட்டு வந்தனர்.  இப்போதைய நிலவரப்படி மதுரை சுல்தானை அவர்கள் ஏற்றுக் கொண்டு கப்பம் செலுத்தி வந்தார்கள். இவர்களைத் தன் பக்கம் இழுக்க வீர வல்லாளதேவர் பல ஆண்டுகளாக முயற்சித்தும் முடியாமலே இருந்து வந்தது.

இப்போது அந்த நாட்டின் எல்லைக்கருகே வந்ததும் வீர வல்லாளருக்கு மீண்டும் ஓர் முறை சம்புவராயரின் உதவியைக் கேட்டு யாரையாவது அனுப்பலாம் எனத் தோன்றியது. அதற்குக் குலசேகரனே ஏற்றவன் என நினைத்தார். ஏனெனில் இது வரையிலும் தென்னாட்டு மன்னர்களில் சம்புவராயர் ஒருவரே வல்லாளருடன் சேரவில்லை. நாட்டின் நன்மையை மனதில் கொண்டு அவரும் சேர்ந்தால் சுல்தானை அடியோடு ஒழிக்க வசதியாக இருக்குமே! இவ்வாறு மன்னர் நினைத்தது போலவே குதிரைப்படையின் தலைமையில் சென்று கொண்டிருந்த குலசேகரனும் நினைத்தான். அப்போது எல்லைக்கருகே வரவே படைத்தலைவர்கள் படைகளை நிற்க வேண்டிக் கொடிகளை வீசி அந்தப் பெரும்படையை அங்கேயே தண்டு இறக்கினார்கள். சுமார் இரண்டு மணி நேரம் முயன்று அந்தப் பெரும்படை அங்கே நிறுத்தப்பட்டது.

அப்போது இரு வீரர்கள் குலசேகரன் அருகில் வந்து மன்னர் அழைப்பதாகக் கூறினார்கள். இதற்குள்ளாகப் படையின் நடுவே இருந்து படைகள் தண்டு இறங்குவதைக் கவனித்துக் கொண்டிருந்த குலசேகரன் இதைக் கேட்டதும் படையின் முன் பகுதிக்கு விரைந்தான். அதற்கே அவனுக்கு வெகு நேரம் ஆனது. அதோடு அல்லாமல் படை வீரர்களும் உற்சாகத்துடன் காணப்பட்டார்கள். இதைக் கண்ட குலசேகரனும் மனம்மகிழ்ந்து சுல்தான் தொலைந்தான் என எண்ணிக் கொண்டே மன்னர் இருக்குமிடம் தேடிக் கண்டு பிடித்தான்.  அவனைப் பார்த்த மன்னர், "குலசேகரா! ராஜகம்பீரத்துக்குள் நுழையப் போகிறோம்! உன் கருத்து என்ன?" என்று கேட்டார். அதற்குக் குலசேகரன், மன்னரிடம் ஏற்கெனவே அவன் தென்னாடுகளுக்கு தூது சென்ற போதும் திரும்பி வரும்போதும் சம்புவராயரை இரு முறை கண்டு பேசியதாகவும் அவர் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை என்றும் இப்போது போய் மீண்டும் கேட்பதில் பலன் இருக்காது என்று தான் நினைப்பதாகவும் கூறினான்.

ஆனாலும் மன்னருக்கு சம்புவராயரை விட மனசில்லை. குலசேகரனிடம் கடைசி முறையாக ஓர் சந்தர்ப்பம் அவருக்கு அளித்துப் பார்க்கலாம். நாம் இங்கே தண்டு இருப்பதை அவரிடம் போய்ச் சொல்லி நம்முடன் சேருமாறு கடைசியாக ஒரு முறை வேண்டுகோள் விடுத்துவிட்டு அவரை எப்படியாவது நம் பக்கம் கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.  குலசேகரனும் அதன் பேரில் தன்னுடன் பத்து வீரர்களை அழைத்துக் கொண்டு தான் தூது வந்திருப்பதைத் தெரிவிக்கும் வண்ணம் வெள்ளைக் கொடிகளைப் பறக்கவிட்டுக் கொண்டு ராஜகம்பீரத்துக்குள் நுழைந்தான்.  அங்கே அவன் அரண்மனையில் சம்புவராயரைச் சந்தித்துப் பேசினான். ஹொய்சள மன்னர் கூறியதை எல்லாம் விரிவாக எடுத்து உரைத்தான்.

ஆனால் சம்புவராயர் அதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை. குலசேகரனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார். "வீரனே! உன் மன்னரின் தந்திரம் எனக்குப் புரிகிறது. மதுரை சுல்தானை ஒழிப்பது போல் ஒழித்துவிட்டுப் பின்னர் ராஜகம்பீரம் மேலும் பாய்ந்து என்னையும் அழித்து ஒழிப்பீர்கள். பின்னர் தென்னாடு முழுவதும் வீர வல்லாளரின் ஆட்சிக்குக் கீழ் வந்து விடும். அதற்குத் தானே உங்கள் மன்னர் கனவு காண்கிறார். இது ஒருக்காலும் நடக்காது. நான் ஹொய்சள மன்னர் பக்கம் சேரப் போவதில்லை. இது நிச்சயம். உன் மன்னரிடம் போய்ச் சொல்!" என்று திட்டவட்டமாகக் கூறினார். குலசேகரன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சம்புவராயர் அசைந்து கொடுக்கவில்லை.

ஆனால் ராஜகம்பீரத்துக்குள் நுழையாமல் மேலே செல்ல முடியாது. ஆகவே குலசேகரன் சம்புவராயரிடம் விடைபெற்றுக்கொண்டு வல்லாளரிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தான். ராஜகம்பீரத்தை மிதிக்காமல் செல்ல முடியாது என்பதையும் எடுத்துச் சொன்னான். எல்லோரும் கூடி ஆலோசனை செய்து சம்புவராயர் ஒருவரைத் தவிர்த்து மற்றவர் எல்லோரும் நம் பக்கம் தானே இருக்கின்றனர். நாம் ராஜகம்பீரத்தை மிதித்துக் கொண்டே செல்வோம். என்னதான் நடக்கும் என்பதையும் பார்த்துவிடலாம். நம் படைவீரர்களோ ஒரு லட்சத்துக்கும் மேல் இருப்பதால் நாம் சுற்றிக்கொண்டெல்லாம் செல்லவேண்டாம், ராஜகம்பீர்த்துக்குள் நுழைந்தே செல்லலாம் என முடிவெடுத்தனர். அவ்வளவில் தண்டு இறங்கி இருந்த படை மறுநாள் ராஜகம்பீரத்துக்குள் நுழைந்து மெல்ல மெல்ல மேலே முன்னேறியது. 

No comments: