எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, April 16, 2019

வாசந்திகாவின் கடிதம்!

அது வாசந்திகாவின் மடல். குலசேகரன் அந்த ஓலைச் சுருளை ஹேமலேகாவிடமிருந்து வாங்கியதுமே புரிந்து கொண்டு விட்டான்.
குலசேகரன் இத்தனை வருடங்களில் அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்களில் கிட்டத்தட்ட அவளை மறந்தே போயிருந்தான். இப்போது அவளிடம் இருந்து கடிதம் அதுவும் ஹேமலேகாவிடம் கொடுத்திருப்பதை அறிந்ததும் அவனுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. அந்த ஓலைச் சுருளை ஹேமலேகாவிடமிருந்து வாங்கினவன் அதைப் படிக்க ஆரம்பித்தான். வாசந்திகாவே தன் கைப்பட எழுதி இருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டான். ஒரு கணம் நிமிர்ந்து ஹேமலேகாவைப் பார்த்தவன் மீண்டும் தலை குனிந்து ஓலையில் ஆழ்ந்தான்.

வாசந்திகா தன் முத்துப் போன்ற எழுத்துக்களால் நீண்ட மடல் ஒன்றை எழுதி இருந்தாள். அதில் குலசேகரனுக்கு அவள் அனந்தகோடி நமஸ்காரங்கள் செய்து எழுதியதாகச் சொல்லி இருந்தாள். மேலும் இந்தக் கடிதம் குலசேகரன் கைகளில் கிடைக்குமா? அப்படிக் கிடைத்தால் அப்போது தான் எந்த நிலைமையில் இருப்பேன் எனச் சொல்ல முடியாது என்றும் எப்படியேனும் யார் மூலமாவது இதைக் குலசேகரனிடம் சேர்ப்பிக்கச் சொல்ல வேண்டும் எனத் தான் முடிவெடுத்ததையும் கூறி இருந்தாள்.  அதில் திருவரங்கன் கோயில் திருச்சுற்றில் அவனை முதல் முதலாகக் கண்ட அனுபவத்தை விவரித்திருந்தாள். அவன் அப்போது மிகவும் இளைஞனாக இருந்ததையும் துடிதுடிப்பும், படபடப்பும் மிகுந்தவனாக எவ்வித வேலையையும் உடனே செய்து முடிக்கும்படி ஆக்ரோஷமாகவும் ஆவேசத்துடனும் காணப்பட்டதையும் நினைவு கூர்ந்திருந்தாள். அரங்கன் கோயிலைக் காப்பாற்றும் முயற்சியில் பஞ்சு கொண்டானோடு அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளை நினைவு கூர்ந்ததோடு அல்லாமல் தன் தாய் இறந்த துக்கத்தைக்கூடக் கைவிட்டு விட்டு அரங்கனையும் அரங்கத்தையும் காப்பாற்றுவது ஒன்றே தன் லட்சியம் என அவன் பாடுபட்டதையும் அதற்காக அரங்கன் பின்னே காவலாகக் கானகம் நோக்கி நடந்து அரங்கனைக் காப்பாற்றிக் கொண்டு சென்றதையும் அவன் வீர சாகசங்களையும் தியாகங்களையும் நினைவு கூர்ந்தாள்.

அவள் மனம் அத்தகைய வீராதி வீரனான அவனை மறக்க இயலாமல் தவிப்பதையும் உணர்த்தி இருந்தாள். அவனை மறப்பது தன்னால் இயலாத ஒன்று என்றும் எந்நேரமும் அவன் நினைவன்றி வேறு நினைவில் தான் இல்லாமல் இருப்பதையும் சொல்லி இருந்தாள்.  தான் துரதிர்ஷ்டவசமாக சுல்தானியர்கள் பிடியில் அகப்பட்டுக் கொண்டு மதுரை அரண்மனையில் சுல்தானின் மனைவிக்கு அடிமையாக வாழ்க்கை நடத்துவதையும் தன் புனிதம் கெட்டு விட்டதையும் எனினும் என்றேனும் ஓர் நாள் குலசேகரனைப் பார்க்கலாம் என்பதாலும் அவன் தன்னைப் புரிந்து கொள்வான் என்பதாலுமே தான் இன்னமும் உயிர் வாழ்வதாகவும் தெரிவித்திருந்தாள்.  தான் இத்தகைய மோசமான வாழ்க்கையை நடத்துவது குறித்து அவள் மனசாட்சி அவளைக் குத்திக் காட்டி வந்தாலும் இத்தகையதொரு வாழ்வின் காரணமாகவே சுல்தானின் மனைவியோடு கண்ணனூர் அரண்மனைக்கு வந்த சமயம் அங்கே வழியில் குலசேகரன் சிறைப்பட்டுக் கிடந்ததையும் தான் அவனைக் காப்பாற்றிக் கூடையில் வைத்து அவனை அனுப்பியதையும் நினைவு கூர்ந்தாள்.

இன்னமும் இத்தனைக்கு அப்புறமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அவளுக்கு வர வர நாட்கள் ஆக, ஆகப் பற்பல சந்தேகங்கள், பயங்கள், இனம்புரியாததொரு தவிப்பு என ஏற்பட்டிருப்பதாகச் சொல்லி இருந்தாள். அவள் வாழ்நாள் முழுவதுமே இந்த அரண்மனையில் அடிமையாக இருந்தே கழிந்து விடுமோ எனக் கலக்கம் வந்து விட்டதாகவும்  அந்நியரிடம் அகப்பட்டுக் கொண்டதுமே தான் உயிரை விடாதது குற்றமாகி விட்டது என்று உணர்ந்து வருவதாகவும் கூறினாள். இப்படி ஓர் தவிப்பான நிலையில் தான் தான் இந்தக் கடிதத்தைக் குலசேகரனுக்கு எழுதி இருப்பதாகவும், இது அவன் கைகளுக்குப் போய்ச் சேருமா என்னும் நிச்சயம் தன்னிடம் இல்லை எனவும் கூறி இருந்தாள் வாசந்திகா. இனி தன்னால் உயிர் தரிக்க இயலாது எனவும் குலசேகரன் எப்பாடு பட்டாவது ஏதேனும் சூழ்ச்சி செய்தோ அல்லது போரிட்டோ அல்லது தந்திரமான ஏதேனும் உபாயத்தாலோ மதுரை அரண்மனைக்கு வந்து தன்னை மீட்டுச் செல்லும்படி கெஞ்சிக் கேட்டிருந்தாள் வாசந்திகா.

அப்படி அவன் வராவிடில் தன்னால் தன் உயிரை மாய்த்துக்கொள்வது தவிர்த்து வேறு வழி ஒன்றும் தெரியவில்லை என்றும் கூறி இருந்தாள். மேலும் அவள் கூறி இருந்ததாவது:- எங்கோ ஓர் மூலையிலிருந்து நான் அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறேன் ஐயா. அது தங்கள் காதுகளில் விழுமா? தாங்கள் வந்து என்னை மீட்பீர்களா? அதற்குத் தங்கள் மனம் சம்மதிக்குமா? மேலும் அதற்கான அவகாசம் தங்களிடம் உள்ளதா? எனக்கு எதுவுமே தெரியவில்லை;புரியவில்லை ஐயா! நான் தங்களையே நம்பி இருக்கும் ஓர் அபலைப் பெண்.

தங்கள் அடியாள்,
வாசந்திகா.

இவ்விதம் கடிதத்தை முடித்திருந்தாள் வாசந்திகா.

3 comments:

Mrinalini said...

Thanks
It is so touching. Eager to know what happened further.
I love this pair vasantika and Kulasekaran

Mrinalini said...

Waiting for next update
..

Mrinalini said...

Please update soon