எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, April 26, 2019

நீடித்த முற்றுகையும், அரங்கம் சென்றதும்!

முற்றுகையைத் திடமாக நடத்தினார்கள் ஹொய்சளர்கள். நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. என்றாலும் மனம் தளரவில்லை. நான்காம் மாதம் கியாசுதீன் ஓர் படையுடன் கண்ணனூர் நோக்கி வருவதாக மதுரையிலிருந்து வந்த ஒற்றர்கள் மூலம் தகவல்கள் கசிந்தன.  வடகாவேரிக்கரையில் ஹொய்சளர்கள் அவர்களை எதிர்கொண்டனர். கியாசுதீனின் வலுவற்ற படையால் ஹொய்சளர்களின் அதிரடித் தாக்குதலைத் தாங்க முடியவில்லை. ஒரே நாள் சண்டையில் கியாசுதீன் தப்பித்தோம், பிழைத்தோம் என மதுரைக்கு ஓடி ஒளிந்து விட்டார். இந்த வெற்றி ஹொய்சளர்களிடையே புதியதொரு தெம்பைக் கொடுத்தது. விரைவில் மதுரையிலிருந்தும் சுல்தானியர்களைத் துரத்திவிடலாம் என மகிழ்ந்தார்கள். அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இப்போது கண்ணனூர்க் கோட்டை முற்றுகையை முடிக்கும் முன்னே மதுரைக்குச் செல்லக் கூடாது என்பதிலும் திண்ணமாக இருந்தார்கள்.

அப்போது குலசேகரனுக்கு ஓர் யோசனை தோன்றிற்று. உடனே வீர வல்லாளரிடம் சென்று, அரங்கன் கிருபையால் வெற்றி கிட்டும்  எனத் தோன்றுவதால் விரைவில் அரங்கன் கோயிலைத் திறக்கும் நாட்கள் வந்துவிடும். அதற்குள் போய்த் தான் அரங்கன் கோயிலைச் சற்று சீரமைக்க எண்ணுவதாகத் தெரிவித்தான். கோயில் பாழ்பட்டிருக்கும் என்றும் அதைச் சீராக அமைத்து வைத்தால் அரங்கன் கோயிலுக்குள் வந்த உடனே வழிபாடுகளைத் தொடங்கி விடலாம் என எண்ணுவதாகவும் சொன்னான். அதற்கு வல்லாளர் தானும் கூட வருவதாகச் சொல்லிவிட்டு ஓர் வெள்ளிக்கிழமை நல்ல நாளாகப் பார்த்து, நல்லவேளையும் பார்த்து, நிழலை அளந்து நாழிகைக் கணக்குப் பார்த்து சுப முஹூர்த்தத்தைக் கண்டு பிடித்துக் கொண்டு குலசேகரனுடன் வல்லாளரும் தக்க பாதுகாப்புப் படைகளுடன் திருவரங்கம் நோக்கிப் பயணப்பட்டார்கள். திருவரங்கத்து மண்ணை மிதித்ததுமே குலசேகரன் உடல் சிலிர்த்தது. குதிரையிலிருந்து கீழே விழுந்து மண்ணை வணங்கினான். வீர வல்லாளரும் அரங்கன் கோயில் இருக்கும் திசை நோக்கித் தானும் கீழே விழுந்து வணங்கினார்.

பதினெட்டு ஆண்டுகளாக ஊரில் யாருமே குடி இருக்கவில்லை என்பதைக் குலசேகரன் போகும் வழியெங்கும் மண்டிக்கிடந்த செடி, கொடிகளில் இருந்தும் தூர்ந்து போயிருந்த சாலைகளில் இருந்தும் புரிந்து கொண்டான். அவன் கண்களில் நீர் ததும்பியது.  கண்ணீர் பெருக நகருக்குள் நுழைந்தான். தெருத்தெருவாகச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே மெல்ல நடந்தான்.  எங்கெங்கு பார்த்தாலும் எரிந்த அல்லது இடிந்த, அல்லது இடிக்கப்பட்ட வீடுகளின் மிச்சங்கள். ஆங்காங்கே கிடந்த சில எலும்புக்கூடுகள், கபாலங்கள்! ஊரே பாழ்பட்டது போல் தன் அழகு இழந்து காட்சி அளித்தது. தேர் ஓடும் வீதிகளுக்குள் நுழைந்தவன் மனம் பரபரக்கத் தன் வீட்டு வாசலைத் தேடிப் போனான். அங்கிருந்த யாளி முகப்பைத் தடவித் தடவிப் பார்த்தான். வீடு கூரை இல்லாமல் சிதிலமாகக் கிடந்ததையும் ஒரு காலத்தின் தானும், தன் தாயாரும் இங்கே வாழ்ந்ததையும் நினைவு கூர்ந்தான்.  துக்கம் பொங்கி வந்தது. வீட்டின் வாசற்படியில் அமர்ந்து, "அம்மா! அம்மா!" எனத் தன் மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டு தன் தாயை நினைவு கூர்ந்தான்.

இந்த வீட்டை விட்டுச் செல்லும்போது திரும்பியே வரமாட்டோம் என்றா நினைத்தோம். திரும்பி மறுபடி வரப் போகிறோம் என்று தானே பத்திரமாகப் பூட்டிச் சென்றோம். எத்தனை வருடங்கள். ஆயிற்று. பத்தொன்பது வருடங்கள் முடியப் போகிறது. இத்தனை காலம் இங்கே வரவே போவதில்லை என நினைத்தோமா? வீடு தான் அதுவரை இருக்கிறதா? சிதிலமாகி விட்டதே! அப்போது இதெல்லாம் தெரியவே இல்லையே! குலசேகரன் விம்மத் தொடங்கினான். முன்னே சற்று தூரம் சென்றுவிட்ட வீர வல்லாளர் குலசேகரனைக் காணோம் எனத் திரும்பிப் பார்த்தவர் அவன் அங்கே வீட்டு வாசலில் நிலை குலைந்து அமர்ந்திருப்பதைக் கண்டு ஓரளவு விஷயம் புரிந்தவராய்த்திரும்பி வந்தார். மெல்ல அவனைத் தொட்டு எழுப்பி ஆசுவாசப்படுத்தி மேலே அழைத்துச் சென்றார்.

ஆயிற்று! இதோ கோயில்! இதோ கோபுரங்கள்! ஆஹா! இதோ ஆரியபடாள் வாயில்!  குலசேகரன் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. இங்கே தானே பஞ்சு கொண்டானோடு சேர்ந்து எதிரிகளைத் துவம்சம் செய்யச் சண்டை போட்டோம். பஞ்சு கொண்டான் நமக்கு எத்தனை எத்தனை யுக்திகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.  அவரை மனதில் நினைத்தவாறு உள்ளே சென்ற குலசேகரனுக்கு உள்ளே உள்ள எல்லாப் பகுதிகளும் இடிந்தும், பொடிந்தும் கிடந்ததைப் பார்த்தான்.  தன்னுடன் வந்த வீரர்களிடம் சொல்லிச் செடி, கொடிகளை அகற்றச் செய்தான். வீரவல்லாளரும், குலசேகரனும் நாழிகை வாசலைக் கடந்து சந்நிதிக்குள் சென்றனர். சந்நிதி மண்டபத்தில் ஏறியதும் அங்கே புழுதியும், கல்லும் குவிந்திருப்பதைக்கண்ட குலசேகரன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் கீழே விழுந்து நமஸ்கரித்தான். மன்னரும் மண்டி இட்டு வணங்கினார். அவர் கண்களும் கண்ணீரைப் பொழிந்தன.

உள்ளே மூலவரை மறைத்து மூடி இருந்த கற்சுவர் அப்படியே இருந்தது. அதன் மீது அரங்கனைச் சித்திரமாக எழுதப்பட்டிருந்தது ஆங்காங்கே சிதிலமாகிக் கிடந்தது. ஆனாலும் அரங்கன் குலசேகரன் கண்களுக்கு விஸ்வரூபமாகத் தெரிந்து கொண்டிருந்தான்.  குலசேகரன் மனம் உருக அரங்கனைப் பிரார்த்தித்தான். வல்லாளரும் கண்கள் கண்ணீரை மழையாகப் பொழிய வணங்கிக் கொண்டிருந்தார்.  குலசேகரன் அப்போதே அந்தக் கற்சுவரைப் பெயர்க்க வேண்டும் என ஆசைப்பட வீர வல்லாளரோ எக்காரணத்தினாலோ அவசரப்பட வேண்டாம் என்று சொல்லி விட்டார். பின்னர் யோசனையுடன் தாம் இன்னமும் இந்த பூமிக்குச் சொந்தக்காரனாக ஆகவில்லை என்பதோடு முழு வெற்றியும் இன்னமும் கிடைக்கவில்லை. மேலும் இந்தக் கற்சுவரை எழுப்பியவர் வேதாந்த தேசிகர் எனச் சொல்லி இருக்கிறபடியால் அவரே வந்து இந்தக் கற்சுவரைத் திறப்பதே பொருத்தமாக இருக்கும் என்றார் மன்னர். அவ்வளவில் இருவரும் வீரர்களைக் கொண்டு சந்நிதியை மட்டும் சுத்தமாக்கும் வேலையைச் செய்தார்கள். சித்திர உருவத்தில் காணப்பட்ட அரங்கனுக்கு வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்பதற்கான உத்தரவை வீர வல்லாளர் வழங்கினார்.

அதன் பின்னரும் கண்ணனூர் முற்றுகை ஐந்தாவது மாதமாக நீடித்தது.

1 comment:

Mrinalini said...

Mam nice.
Please update daily mam.