எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, April 21, 2019

திடீர்த் தாக்குதல்! குலைந்த ஹொய்சளர்கள்!

இரவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. படை வீரர்கள் யாவரும் அன்றாட வேலைகளின் முடிவில் ஓய்வாக அமர்ந்து கொண்டு இரவு உணவுக்காகக் காத்திருக்கும் நேரம். இரவு உணவு ஆங்காங்கே தயாராகிக் கொண்டிருந்தது. பொதுவாக இம்மாதிரியான நேரங்களில் எதிரிகள் தாக்குதல் எல்லாம் இருக்காது. தொடங்கவே மாட்டார்கள். நீட்டிக்கவும் மாட்டார்கள். ஆனால் இப்போதோ? கிழக்கு வாசல் அருகே தீவர்த்திகளின் ஒளி பிரகாசமாய்த் தெரிய அவை ஓர் இடத்தில் நில்லாமல் மெல்ல மெல்ல முன்னேறி வருவதும் தெரிந்தது. ஆகவே அதைக் கண்ட குலசேகரனுக்கும், மன்னருக்கும் ஏதோ ஆபத்து நெருங்குகிறது என்பது புலப்படவே உடனே தங்கள் குதிரைகளில் பாய்ந்து ஏறிக் கிழக்கு வாசலை நோக்கிக் குதிரைகளை விரட்டினார்கள். அவர்கள் அங்கே வந்து சேரவும் உள்ளிருந்து திடீரென வெளியே வந்த துருக்கியப் படைகள் கிழக்கு வாசலில் சற்றும் தயாராக இல்லாத வீரர்களைத் தாக்க ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.

குதிரைகள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து வந்து வீரர்களுக்கென அமைத்திருந்த கூடாரங்களுக்கு இடையில் புகுந்து வேகமாகச் சென்று கையில் வைத்திருந்த தீப்பந்தங்களால் கூடாரங்களுக்குத் தீ வைத்த வண்ணம் முன்னேறினார்கள். இந்தத் தாக்குதல் போதாது எனப் பின்னால் வந்த வீரர்கள் கைகளில் விற்களை வைத்துக் கொண்டு அம்பு மழை பொழிந்த வண்ணம் வந்தனர். ஹொய்சள வீரர்களோ அப்போது தாக்குதலைச் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ஆகவே எதிர்த்துப் போரிட வேண்டும் என்பதைக் கூட நினையாமல் ஆங்காங்கே சிதறி ஓடத்தொடங்கினார்கள். ஆனால் என்ன பரிதாபம்! அவர்கள் ஓட முடியாமல் கூடாரங்களும் அவற்றில் வைத்த தீயும் அவர்களைத் தடுக்க எங்கும் கூக்குரல்கள், ஓலங்கள் எழுந்தன. எங்கெங்கும் அபயக்குரல்கள். வீரர்கள் நிலை தடுமாறிப் போய்விட்டனர் என்பதையும் எப்படி இது ஆரம்பித்திருக்கும் என்பதையும் ஓரளவுக்கு ஊகித்து விட்ட குலசேகரன் அடுத்துச் செய்ய வேண்டியதை யோசித்தான். உடனே மன்னரைப் பார்த்துப் பாசறைக்குச் செல்லுமாறு வற்புறுத்தி அவரை அனுப்பி விட்டுக் கிழக்குக் கோட்டை வாசலுக்குக் குதிரையை விரட்டிக் கொண்டு சென்றான்.

செல்லும் வழியெங்கும் ஹொய்சள வீரர்கள் சிதறிக்கொண்டு பின் வாங்கி ஓடி வந்து கொண்டிருந்தனர். அவர்களைச் சமாதானம் செய்து கொண்டு அவன் போட்ட கூப்பாடுகளை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவர்கள் இல்லை.  குதிரையுடன் வேகமாக வந்து கொண்டிருந்த அவனைக் கவனிக்காமலேயே அவனைத் தாண்டிக்கொண்டு ஓட ஆரம்பித்தனர். நிலைமை மிகவும் மோசமாகி விட்டதை உணர்ந்த குலசேகரன் தன்னால் இப்போது செய்ய முடிந்தது மன்னரையும் ராணி கிருஷ்ணாயியையும் காப்பாற்ற வேண்டியது ஒன்றே என்பதை உணர்ந்தான். விருட்டெனக் குதிரையைத் திருப்பிக் கொண்டு சிதறி ஓடிக் கொண்டிருந்தவர்கள் இடையே பாய்ந்து மன்னரின் பாசறை நோக்கிக் குதிரையை ஓட்டினான். ஆனால் அந்தோ! பரிதாபம். துருக்கியர்கள் முந்தி விட்டனர். வழியெங்கும் கூடாரங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன.  பாதை முழுவதும் தீயால் மூடப்பட்டிருந்தது. செல்லவே முடியவில்லை.

அவற்றில் மன்னரின் பாசறையும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததைக் குலசேகரன் கண்டு பதறினான். ஆனால் என்ன செய்ய முடியும்? சுற்றும் முற்றும் பார்த்தவனுக்குப் பாசறையிலோ அல்லது சுற்றுவட்டாரங்களிலோ யாரும் கண்களில் படவில்லை என்பதால் கொஞ்சம் ஆறுதல் அடைந்தான். தீப்பற்றுவதற்குள் மன்னரும், ராணியும் தப்பி இருக்க வேண்டும். ஆனால் எல்லோரும் எங்கே போயிருப்பார்கள்? இல்லை எனில் நடக்கக் கூடாதது நடந்து விட்டதோ? அனைவரும் தீயில் மாட்டிக் கொண்டு இறந்துவிட்டார்களோ? யோசனை செய்த குலசேகரனுக்கு உள்ளுக்குள் துருக்கியர் மேல் இனம் காணா வெறி மூண்டது. இப்படி திடீர்த் தாக்குதல் நடத்தி அனைவரையும் சிதறச் செய்த துருக்கியர்களுக்கு என்றென்றும் நினைவில் நிற்கும்படியான பாடம் கற்பிக்க வேண்டும் என நினைத்தான்.

குதிரையைத் தட்டிவிட்டுத் தெற்குக் கோட்டை வாசல் பக்கம் சென்றான். அவன் நினைத்தது சரியாக இருந்தது. இரவுக் காவல் படையினர் இரவுக்காவலில் சுற்றி வருவதற்காக ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். விரைவாக அவர்களிடம் சென்று கிழக்குக் கோட்டை வாசல் பற்றிக் கூறி ஆபத்து என்பதைச் சுட்டிக் காட்டி அவர்களையும் அழைத்துக் கொண்டு கிழக்குக் கோட்டை வாசலுக்கு வந்து சேர்ந்தான்.கோட்டையை விட்டு வெளியே வந்து தாக்குதல் நடத்திய சுல்தானிய வீரர்கள் இன்னமும் அங்கே இருந்ததைக் கண்டு தங்களை மறைத்துக் கொண்டு அனைவரும் அந்த இருட்டில் காத்திருந்தார்கள்.

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இருட்டில் அவர்கள் மட்டுமல்ல, நாங்களும் காத்திருப்பதுபோன்ற உணர்வு. தொடர்கிறேன்.

Mrinalini said...

Please update mam