எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, April 20, 2019

வீர வல்லாளரின் வீரமும், குலசேகரன் கவலையும்!

வீர வல்லாளர் மொத்தப் படையும் கண்ணனூர்க் கோட்டைக்கு அருகே வந்து சேர்ந்ததும் முற்றுகையை ஆரம்பித்தார். பெரும்பாலான முக்கியப் படைகளைக் கோட்டையைச் சுற்றிலும் நிற்க வைத்தார். நான்கு திசைகளிலும் முக்கிய வீரர்களை நிறுத்தினார். தண்டநாயகர்களை அழைத்து முற்றுகையின் போது கோட்டைக்குள் இருப்பவர்களோடு வெளியே உள்ள வியாபாரிகள் தொடர்பு கொள்ளாமல் பார்த்துக்கொள்ளும்படி கட்டளை இட்டார். தம் முன்னோர்கள் கட்டிய இந்தக் கோட்டை, ஹொய்சளர் வசம் இருந்த இந்தக் கோட்டை இப்போது சுல்தானியர் வசம் போய்விட்டதே என மனம் வருந்தினார். அந்தக் கண்ணனூர்க்கோட்டையின் ஒவ்வொரு மூலை முடுக்கும் வீர வல்லாளர் நன்கு அறிவார். ஆனால் அவற்றை எல்லாம் நினைத்து வருந்த இது நேரம் அல்ல.

படையின் ஒரு பகுதியைப் பிரித்துத் தெற்கே அனுப்பி வடகாவிரிக்கரையில் தண்டு இறங்கிக்கொண்டு மதுரையிலிருந்து உதவிப் படைகள் வந்தால் அவற்றைத் தடுத்து நிறுத்தும்படி ஏற்பாடு செய்தார்.  தானே நேரில் சென்று பல்லக்கில் இருந்த வண்ணம் எல்லா ஏற்பாடுகளையும் சரி பார்த்துக் கொண்டும் மேற்கொண்டு ஆலோசனைகள் கூறிக் கொண்டும் வயதைப் பாராட்டாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தார் மன்னர். முற்றுகை ஆரம்பித்து ஒரு வாரம் ஆனபின்னரும் கோட்டைக்குள்ளிருந்து எவ்விதமான மாறுபாடுகளும் தெரியவில்லை. கோட்டை மூடப்பட்டு எவ்விதமான இயக்கமும் இல்லாமல் இருந்தது. இது மன்னர் மனதை மிகவும் உறுத்தியது. நம் எல்லோரையும் பயமுறுத்தி வந்த சுல்தானியர்களா இப்போது பயந்து நடுங்கி ஒடுங்கிக் கோட்டைக்குள் இருக்கின்றனர் என ஆச்சரியம் அடைந்தார்.  அந்தி சாயும் நேரம் வழக்கம் போல் மாலை உலா வந்து கொண்டிருந்த  வல்லாளருக்கு அங்கிருந்த ஓர் பாறையின் மேல் அமர்ந்திருந்த குலசேகரன் கண்களில் பட்டான்.

அவனைக் கண்டதும் அவனை அருகில் அழைத்தார் மன்னர். ஏதேதோ யோசனைகளில் ஆழ்ந்திருந்த குலசேகரன் மன்னர் தன்னை அழைப்பதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்து வந்தான்.  அவனிடம் என்ன விஷயம் எனக்கேட்கத் தான் அரங்கனைப் பற்றியே யோசிப்பதாகவும், அரங்கனை மீண்டும் திருவரங்கத்தில் பிரதிஷ்டை செய்து திருவரங்கத்தைப் பழையபடி பொலிவுறச் செய்வதே தன் லட்சியம் எனவும் அதற்கான யோசனைகளையே தான் செய்து வருவதாகவும் தெரிவித்தான்.ஆனால் அதற்கு ஏற்பட்டிருக்கும் தடங்கல்களையும் இன்னமும் தங்களால் கண்ணனூரைப் பிடிக்கமுடியவில்லையே என வருந்துவதாகவும் கூறினான். கண்ணனூரையும் மதுரையையும் பிடித்தால் தான் தான் நினைக்கும் காரியம் நடக்கும் என்பதால் அதற்காக ஏற்பட்டு வரும் தாமதங்களையும் தடங்கல்களையும் பற்றித்தான் கவலைப்படுவதாகத் தெரிவித்தான்.

சிரித்த மன்னர் நம்பிக்கையை முழுதாக வைக்க வேண்டும் எனவும் எந்நேரமும் மனதைத் தளர விடக் கூடாது எனவும் கூறினார். எண்பது பிராயத்தைக் கடந்த தான் இன்னமும் இந்தக் கிழ வயதில் கண்ணனூர் மேல் படை எடுத்து வந்திருப்பதன் காரணமே நம்பிக்கை தானே என்று கேட்டார்.  முப்பத்தோரு ஆண்டுகளுக்கு முன்னர் மாலிக்காபூர் படை எடுத்து வந்தபோதில் இருந்தே தான் இனிமேல் தென்னாட்டில் சுல்தானியர்களைத் தலை எடுக்க விடக்கூடாது என சபதம் செய்திருப்பதாகவும், அதற்கெனவே இந்த வயோதிகத்திலும் அதை நிறைவேற்ற வேண்டி இந்த முற்றுகையை ஆரம்பித்திருப்பதாகவும் கூறினார். இதில் கிடைக்கப்போவது வெற்றியா தோல்வியா என்பதே தெரியாத நிலையில் தான் இருப்பதையும் வெற்றிக்கு அந்த அரங்கன் துணையையே நம்பி இருப்பதையும் தெரிவித்தார்.

இந்தக் கோட்டையைக் கட்டி முடித்த தம் மூதாதையர்கள் இப்படி ஒரு காலம் வரும் எனஎதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள் என்றும், இப்போது சுல்தானியர் வசம் இருக்கும் இந்தக் கோட்டையைத் தான் எப்படியேனும் மீட்க எண்ணுவதாகவும் கூறினார். துருக்கியர் கைகளில் மாட்டிக் கொண்ட இந்தக் கோட்டையை மீட்டு மீண்டும் ஹொய்சளர் வசம்கொண்டு வந்து அரங்கனையும் திருவரங்கத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே தன் லட்சியமும் என்றார் மன்னர். எதிரிகள் உள்ளே நுழைய முடியாவண்ணம் வலுவாகக் கட்டப்பட்ட இந்தக் கோட்டையின் வலுவே இன்று தமக்கு எதிராக இருப்பதாகவும் தம் முன்னோர்கள் நன்மையை நினைத்துக் கட்டிய இந்தக் கோட்டையே இன்று தனக்கே எதிராக இருப்பதையும் எடுத்துக் கூறினார்.

இது தான் விதி என்பது என்றார் மன்னர். இதற்கெல்லாம் மனம் தளராமால் மேற்கொண்டு ஆகவேண்டியவற்றைக் கவனிக்க வேண்டியது ஒன்றே இப்போதிருக்கும் ஒரே வழி என்றார். குலசேகரன் தொடர்ந்து மௌனம் சாதிக்க மன்னர் தொடர்ந்தார். உத்தௌஜியைக் கொன்று ஹொய்சளத்திற்கும் தமிழ் பேசும் நல்லுலகுக்கும் பெரும் புகழை ஈட்டித் தந்த குலசேகரன் இப்போது சோர்வுற்று இருப்பது சரியல்ல என்றார். உத்தௌஜியின் மருமகன் குதுப்புதீன் பட்டத்திற்கு வந்ததும் நாற்பது நாட்களிலேயே உள்நாட்டுச் சதியால் கொல்லப்பட்டதையும் இப்போது கியாசுதீன் பட்டத்திற்கு வந்திருப்பதையும் குலசேகரனிடம் கூறினார். இன்னும் எத்தனை நாட்களுக்கு கியாசுதீனை விட்டு வைப்பார்கள் எனத் தெரியாத நிலையில் பட்டத்திற்கான போட்டி, பூசல்களில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கும் சுல்தானியர்களை எளிதில் வெற்றி கொள்ள ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டும் என்றார் மன்னர்.அவர்களிடம் இப்போது முன்னிருந்த பலம் இல்லை என்றும் நாம் இனி யாருக்கும் பயப்படாமல் தொடர்ந்து போரிட்டு இவர்களை வெல்ல வேண்டும் என்றும் கூறினார். அப்போது கோட்டையின் கிழக்குப் பகுதியிலிருந்து பெருத்த சப்தம் எழுந்தது.

No comments: