எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, March 18, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்! - அஹோபிலம் 10

நடந்து போகிறவங்க பெரும்பாலும் ஜ்வாலா நரசிம்மரிடம் இருந்தே ஆரம்பிக்கிறாங்க. அது தான் முதலில் தரிசனம் செய்யவேண்டியது என்றும் சொல்கின்றனர். ஆனால் நாம செளகரியத்துக்காக முதல்நாள்ஜீப்பில்/ ஜீப்பா அது? சும்ம்ம்ம்மா! போக வேண்டியவற்றுக்குப் போயிட்டு வந்துட்டோம். அங்கேயும் நடந்தே தான் போகிறவங்க இருக்காங்க என்றாலும் தூரம் அதிகம். நம்மளை மாதிரி சொகுசாப் பழகினவங்களுக்குக் கஷ்டம். இப்போ ஜ்வாலா நரசிம்மரைப் பார்ப்போம். கையில் கைத்தடியோடு அனைவருக்கும் பயணம் ஆரம்பிக்கிறது. கொஞ்ச தூரம் போகும் முன்னரே கூட வந்தவர்களில் ஒரு பெண்மணியின் கணவருக்கு மூச்சுத் தொந்தரவு அதிகம் ஆக அவங்க கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு வரோம்னு சொல்ல, மற்றவர்கள் நடக்க ஆரம்பித்தோம். வழிகாட்டியான சுப்பராயுடு முன்னேயும்,பின்னேயும் கவனித்து ஆட்களை ஒழுங்காய் வரச் செய்யப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தார். துருத்திக் கொண்டிருக்கும் பாறைகள். செங்குத்தான மேடுகள். வழுக்கும் இடங்கள். எனப் பல்வேறு கடினமான இடங்களையும் கடந்து முழுக்க முழுக்க மலை ஏற்றம். செருப்பு வழுக்குகின்றது. நடு, நடுவே பவநாசினி நதி மலை மேலிருந்து கீழே இறங்கும் இடங்கள்.

மழைக்காலம் என்றால் நீரில் இறங்கியே செல்லவேண்டும். இப்போது நீரின் ஓட்டம் கணுக்காலுக்கும் கீழே இருக்கிறது. ஆகையால் செல்லலாம், என்றாலும் வழுக்கும் பாறைகள். நதியைக் கடந்து மேலே ஏற வேண்டுமே! நதி பள்ள்ள்ள்ள்ளம், மேஏஏஏஏஏஏலே ஏறணும். ஒரு பக்கம் சுப்பராயுடு, இன்னொரு பக்கம் சுரேஷ், வேறொரு இடத்தில் கூட வந்தவர்களில் ஒரு இளைஞர் நின்று கொண்டு ஏற முடியாதவங்களை ஏற வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஓம் நமோ நாராயணாய! என்ற நாம ஜபத்தை இடைவிடாமல் அனைவரும் உரத்து ஒலித்து, ஜபிக்க ஒவ்வொருவராய் ஒரு வழியாய் மேலே ஏறுகின்றோம். சுப்பராயுடு, "யாரும் அவரவர் வலப்பக்கம் திரும்பவேண்டாம். நேரே பாதையைப் பாருங்க!" என எச்சரிக்கைக் குரல் கொடுக்கின்றார். ஆவல் மீதூற வலப்பக்கம் பார்த்தேன் நான். கடவுளே! கிடு கிடு பாதாளம். நல்லவேளையாய்த் தலை சுற்றவில்லை. மலைகள் ஏறி, ஏறி ஒரு மாதிரியாய்ப் பழக்கம் ஆகி விட்டிருக்கு போல! என்றாலும் சுப்பராயுடுவும், என் கணவரும் கொஞ்சம் பயப்பட, நான் சமாளித்துக் கொண்டு அடுத்த பாறையின் மேலே ஏறிக் கொஞ்சம் ஒத்தையடிப் பாதை எனப்படும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அப்போது தான் கைத்தடியின் உதவியும் புரிய வருகின்றது. என்றாலும் செங்குத்துப் பாறைகளில் ஏறும்போதெல்லாம் கைத்தடி உதவவில்லைதான். மேலே ஒருத்தர் நின்று கொண்டு நம்மை ஏற்றியே விடவேண்டி இருந்தது. பாறைகளின் உயரமும் அதிகம் இருப்பதால் கொஞ்சம் கஷ்டமாவே இருக்கு. ஆனால் "பொதிகை" தொலைக்காட்சியின் வேளுக்குடி கடந்த ஒரு வாரமாய் தினமும் இப்போ ரொம்ப செளகரியம் பண்ணி இருப்பதாய்ச் சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போ நம் முன்னோர்கள் போகும்போது எவ்வளவு கஷ்டமாய் இருந்திருக்கும்? நினைத்துப் பார்க்கவே முடியலை. மேலும் "நவ அஹோபிலம்" என்னும் ஊரும் ஒன்று புதியதாய் நிர்மாணிக்கப் படுவதாயும், ஸ்ரீமந்நாராயணனின் பனிரண்டு திருநாமங்களின் பெயரால் குடி இருப்புகள் கட்டப் படுவதாயும், குறைந்த பட்சமாய் 2,000/- நபர்களுக்குக் குறையாமல் அதில் தங்க முடியும் எனவும் தெரிவிக்கின்றார். அது முடிய அடுத்த வருஷம் ஆகலாம் என்றும் சொல்கின்றார். இது அவர் சொல்லியே ஒரு வருஷம் ஆயாச்சு. நிகழ்ச்சி மறு ஒளிப்பதிவு. ஆகையால் இன்னமும் நிறைவேறவில்லை என்றே நினைக்கின்றேன்.
இந்த ஜ்வாலா நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே பாதி தூரத்தில் தென்படுகின்றது உக்ர ஸ்தம்பம். நாங்கள் நின்று பார்த்த இடத்தில் இருந்து குறைந்தது ஐந்து கிமீட்டராவது மேலே ஏறவேண்டும். மிக மிகச் செங்குத்தான பாறைகள். ஒரு அடி எடுத்து வைப்பதே கஷ்டம். முட்புதர்கள். பாதம் படும்போதே பாறைக் கற்கள் உருளுகின்றன. கவனமாய் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கவேண்டும். கொஞ்சம் தப்பினாலும் அதோ கதிதான். வந்தவர்களில் பலரும் அங்கே போவதின் கஷ்டத்தை அறிந்து கொண்டு வேண்டாம், இங்கே இருந்தே பார்க்கின்றோம் என முடிவெடுக்க, மிகச் சிலருக்காகக் கூட்டிச் செல்ல பயண ஏற்பாட்டாளரும் யோசிக்கக் கொஞ்சம் கிட்டே போய் உக்ர ஸ்தம்பம் தரிசிக்கலாம் எனப் பயணம் மேலே தொடர்ந்தது.

9 comments:

மதுரையம்பதி said...

கயிலைப் பயணம் மேற்கொண்ட உங்களுக்கே கடினமாக இருந்தது என்றால்?, என்னைப் போல ஆட்கள் என்ன செய்வது?...

சரி, மேற்கொண்டு போனீங்களா, இல்லையா?...அடுத்த பதிவுக்கு வெயிட்டிங். :)

Raghav said...

கீதாம்மா பயணக் கட்டுரை பிரமாதம்.. இவ்வளவு கஷ்டப்பட்டு நவ நரசிம்மர்களை தரிசித்து வந்த உங்க பாதங்களுக்கு நமஸ்காரம் பண்ணினாலே அது அஹோபிலம் சென்ற புண்ணியம் கிடைக்கும்.

Raghav said...

எனக்கும் சீக்கிரம் அஹோபிலம் போகனும்னு தோணுது.. ஆசி அளியுங்கள்..

திவா said...

கைலாஷ் போக உடல் பயிற்சி தயாரிப்பு மாதிரி இதுக்கும் வேணும் போல இருக்கு!

கீதா சாம்பசிவம் said...

மெளலி, அதான் போட்டுட்டேனே, பார்த்தாச்சு இல்லையா? நமக்கு எங்கே போனாலும் ஒரு குறை இருக்கணுமே!

கீதா சாம்பசிவம் said...

ராகவ், நன்றிப்பா. ஒரு நமஸ்காரம் எல்லாம் பத்தாது. நாலு நமஸ்காரங்கள் பண்ணணும்! :))))))

கீதா சாம்பசிவம் said...

சீக்கிரமாப் போய்ட்டு வருவீங்க, நரசிம்மரே அழைப்பார் ராகவ்,.

கீதா சாம்பசிவம் said...

திவா, அதெல்லாம் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் தான் கயிலைக்குப் போனோம். யோகா மட்டும் உண்டு, அதுக்கு முன்னாலேயே, அந்த தைரியம்னும் சொல்லலாம் திவா.

கீதா சாம்பசிவம் said...

தாமதமான பதில்களுக்கு மிகவும் மன்னிக்கவும்.