நான்காவதாய்த் தரிசித்த யோக நரசிம்மர் புதனால் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் வல்லமை கொண்டவராய் வேதாத்திரி மலையின் மேற்குப் பக்கத்தில் எழுந்தருளி இருக்கின்றார். அடுத்துத் தரிசித்த ஐந்தாவது நரசிம்மர் வாராஹ நரசிம்மர். இரு அவதாரங்களையும் ஒருசேரக் கண்டோம். வாராஹ அவதார மூர்த்தம் அருகேயே நரசிம்ஹரையும் காணமுடியும். படங்கள் என்ன காரணத்தாலோ அப்லோடே ஆக மாட்டேனென்கிறது. கூகிளாண்டவர் கொடுத்தால் அவர் தயவில் இன்னிக்குப் போட முயல்கின்றேன். வாராஹ நரசிம்மர் குருவால் ஏற்படும் சகல தோஷங்களையும் போக்குபவர். இயல், இசை, நாடகம் போன்ற சகல கலைகளையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும் வல்லமை பெற்றவர். நீதித்துறை, வேதங்கள் ஆகியவற்றில் உயர்ந்திருக்கும் நிலையை அருளுவார். அடுத்தவர் கீழ் அஹோபிலம் பிரஹலாத வரதர்.கோயில் வளாகத்தினுள் நுழையும் முன்னேயே முன் குறிப்பிட்ட ஜயஸ்தம்பத்தைக் காண முடிகின்றது. ஆலயத்தின் தென்பகுதியில் புஷ்கரணி சதுரவடிவில் அமைந்துள்ளது. பாறைப் படிகள். திருக்குளம் ஆழம் அதிகம் என்பதால் இறங்க வேண்டாம் எனவும், நீராட வேண்டாம் எனவும் யாத்ரீகர்கள் எச்சரிக்கப் படுகின்றனர். பிடிவாதம் பிடிக்கிறவங்க தக்க துணையுடன் நீராடுவதே பாதுகாப்பானது எனவும் எச்சரிக்கப் படுகின்றனர். உயரமான ராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே போனால் மூன்று பிரஹாரங்களோடு அமைந்த கோயில். முகப்பில் உள்ள மண்டபம் ரங்க மண்டபம் என அழைக்கப் படுகின்றது. கோயிலின் சிற்ப அமைப்புகள் மிகச் சமீப காலத்தியதாய்த் தென் படவே அங்கே உள்ளவர்களை விசாரித்தோம். சரியாய்ச் சொல்லத் தெரியலை. மொழிப் பிரச்னை அவ்வளவு இல்லை. தமிழ் நன்றாகவே புரிந்து கொள்கின்றனர். என்றாலும் விடாமல் தேடி விசாரித்ததில் ஒருவேளை 15, 16-ம் நூற்றாண்டாய் இருக்கலாம் எனத் தெரிய வந்தது.
ட்ராவல்ஸ் காரர் கொடுத்த கையேடும் அப்படியே குறிப்பிடுகின்றது. தூண்களில் சிற்ப, அற்புதங்களே நிறைந்துள்ளன. நரசிம்மரின் பல்வேறு விதத் தோற்றங்களோடு இசைக்கலைஞர்களும், நாட்டிய மங்கைகளும் வெவ்வேறுவிதமான நாட்டியக் கோலங்களில் காட்சி அளிக்கின்றனர். உடல் அசதியாலும், நேரக் குறைவாலும் சரிவரக் கவனிக்க முடியலை. உள்ளே நுழைந்ததும் இருக்கும் சிறு மண்டபத்தைத் தாண்டினால் உள்ளே மூலவர் சந்நிதி. மஹா சாந்தம். பக்கத்தில் மஹாலட்சுமித் தாயார். இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்க விட்டு சுகாசனத்தில் வீற்றிருக்கின்றார். சங்கு, சக்ரதாரியாய், வலக் கீழ்க்கரம் எப்போவும் போல் அபயம், நானிருக்கின்றேன், அஞ்சாதே, எனச் சொல்லுகின்றது. இடக் கீழ்க்கரம், அன்போடும், ஆசையோடும் தாயாரை அணைத்துக் கொண்டிருக்கின்றது.
திருப்பதியில் இருந்து வெங்கடாஜலபதி இங்கே வந்து நரசிம்மரைத் தரிசித்துத் தன் கல்யாணத்துக்கு ஆசிகள் பெற்றுச் சென்றாராம். வெங்கடாஜலபதிக்குத் தனி சந்நிதி இருக்கின்றது. மூலவர் சந்நிதியில் உற்சவர்கள் பிரஹலாத வரதர். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய்க் காட்சி அளிக்கின்றார். வெங்கடாசலபதிக்கு அருகே இருக்கும் மண்டபம் கல்யாண மண்டபம் எனவும், திருக்கல்யாண கோலத்தில் இறைவன் அங்கே எழுந்தருளுவார் எனவும் சொன்னார்கள். தனியாத் தாயார் சந்நிதியும் உள்ளது. ஆழ்வார்களுக்கும் சந்நிதிகள் உள்ளன. ஆண்டாளும் தனியே சந்நிதியில் குடி கொண்டிருக்கின்றாள். சந்நிதிக்கு நேர் வெளியே துவஜஸ்தம்பம். கீழ் அஹோபிலரைத் தரிசித்துக் கொண்டு ஓய்வெடுக்கச் செல்கின்றோம். இனி நாளைக்கு மேல் அஹோபிலம், ஜ்வாலா நரசிம்மர்,உக்ர ஸ்தம்பம், பார்கவ நரசிம்மர், கராஞ்ச நரசிம்மர், மேல் அஹோபிலம் தவிர மற்றவை நடைப்பயணமே. ஆகவே ஓய்வு தேவை.
6 comments:
நல்லா ரெஸ்ட் எடுங்க...நாங்களும் ரெஸ்ட் எடுத்து வரோம், நாளைய போஸ்ட்-ல பார்க்கலாம் :-)
என்னதிது நாள் கணக்கில் ரெஸ்ட் எடுக்கறீங்க...அடுத்த இடுகை எங்கே?
நல்ல கதையா இருக்கே, 2 போஸ்ட் கண்ணன் பத்திப் போட்டிருக்கேன், இன்னிக்கு அவ்வளவு தான், வேணும்னா மொக்கை போஸ்ட் போட்டிருக்கேன் போய்ப்படிங்க, அங்கே போய்!
நாளைக்கும் முடியாது, நாளன்னிக்கும் முடியாத்! முடியவே முடியாத்! :P
மொக்கையா எங்கே?, எங்கே...அதைச் சொல்லுங்க :-)
இங்கே
போய்ப் பாருங்க, நானும் கரடியாக் கத்திட்டு இருக்கேன், யாரும் போகிறதில்லை, ஒருவேளை தமிழில் கத்தி இருக்கணுமோ?? :P:P:P:P
Post a Comment