உக்ரஸ்தம்பத்தின் உச்சிக்குப் போய்வருவது என்பது பிரம்மப் பிரயத்தனம் எனவும், நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து இன்னும் மூன்று மணி நேரம் நடைப்பயணம் இருக்கின்றது எனவும் வழிகாட்டி சொன்னார். மேலும் இப்போதே மணி மதியம் பனிரண்டு ஆகி விட்டதால் ஜ்வாலா நரசிம்மரைப் பார்த்துவிட்டு மேலே ஏறிக் கீழே இறங்க குறைந்தது ஆறு மணி நேரத்தில் இருந்து ஆகும் எனவும் கூறினார். மேலும் பாதை மிகவும் செங்குத்தாக அமைந்திருப்பதோடல்லாமல் , காட்டு மிருகங்களும் நடமாடும் என்றும் சொல்லவே பெரும்பாலோருக்கு அங்கே செல்லத் தயக்கமாகவே இருந்தது. கிட்டத் தட்ட 5 கிமீ தூரம் இருந்தது. என்பதால் உக்ரஸ்தம்பம் ஓரளவுக்கு நன்றாகவே கண்ணுக்குத் தெரிந்தாலும் அங்கே ஆடி அசைந்த காவிக் கொடியைப் பார்த்தால் நம்மை வா, வா, என அழைப்பது போலவே இருக்கின்றது. ஆனால் ஒரு சிலரை மட்டும் அழைத்துச் செல்லமுடியாது எனத் திட்டவட்டமாய்க் கூறவே. அங்கிருந்தே பகுதி, பகுதியாக உக்ரஸ்தம்பம் தரிசனம் செய்தோம். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான். இத்தனைக்கும் அவ்வளவு பேரும் எனக்கு முன்னாலேயே சென்று கொண்டிருந்தனர். எங்கள் குழுவிலேயே மிகவும் மெதுவாய்ச் சென்றது நான் மட்டுமே. அதனாலேயே எனக்குக் களைப்பும் ஏற்படவில்லை என நினைத்தேன். ஆனால் என் கணவரோ என்னைப் பார்த்துக் கொஞ்சம் பயந்து கொண்டே வந்தார். இமயமலையில் கயிலை யாத்திரையில் திணறிய அவர் இப்போது வேகமாய் நடக்க, அங்கே சமாளித்த நான் இங்கே திணறினேன் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.
சுயபுராணம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நம் பிரயாணம் தொடர்கின்றது. மலைப்பாறை இரண்டாய்ப் பிளந்து இரு வேறு பகுதிகளாய்க் காட்சி அளிக்கின்றது நன்றாய்க் கண்ணுக்குத் தெரிகிறது. பாறையில் நடுவில் பிளவும் தெரிகின்றது. உற்றுப் பார்த்தால் பிளவின் அமைப்பு சிங்க முகமாயும் தெரிய வருகின்றது. இந்தத் தூணைத் தான் இரண்டாய்ப் பிளந்து நரசிம்மர் வெளியே வந்தார் எனவும், அந்தச் சமயம் இந்தப் பிரதேசமே பூகம்பம் ஏற்பட்டாற்போல் குலுங்கி, நடுங்கி இருக்கும் எனவும் தோன்றுகின்றது. எங்களில் சிலரின் ஏமாற்றத்தைக் கவனித்த வழிகாட்டி, மிகச் சிலரால் மட்டுமே உக்ரஸ்தம்பம் வரை போக முடிந்திருக்கின்றது எனவும், காலை சீக்கிரமாய் மலை ஏற ஆரம்பித்தால் ஒழிய அங்கே சென்று திரும்ப முடியாது எனவும் எங்களைச் சமாதானப் படுத்தினார்.
எப்படியோ எங்கே போனாலும் நமக்கு ஒரு குறை மனதில் இருக்கணும் போல என நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் பெரும்பாலும் எல்லாருமே உக்ரஸ்தம்பம் பார்க்க ஏறாமல் ஜ்வாலா நரசிம்மரைப் பார்த்துவிட்டுத் திரும்பி கொண்டே இருந்தனர். அதையும் காண முடிந்தது. மனதை வேறு வழியில்லாமல் சமாதானம் செய்து கொள்ளவும் வேண்டி இருந்தது. அடுத்து இப்போது நாம் போய்க் கொண்டிருப்பது ஜ்வாலா நரசிம்மரின் சந்நிதி. தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்மர் எங்கே வைத்து இரண்யனை சம்ஹாரம் செய்தாரோ அந்தக் குகைக்கு இப்போது நாம் போகின்றோம். பயணம் கடினமானதே. இந்தப் பாதையிலே தொடர்கின்றோம். நாம் நம்முடைய பயணத்தை. கருடாத்திரி, வேங்கடாத்திரி இரு மலைகளுக்கும் இடையில் அமைந்திருக்கும் அசல சாயா மேரு என அழைக்கப் படும் மலைக்குன்றத்தில் அமைந்துள்ளது ஜ்வாலா நரசிம்மர் சந்நிதி. பாறைகளைத் தாண்டிக் கொண்டும், மலையின் மீதிருந்து பொழியும் நீர்வீழ்ச்சியான பவநாசினி ஆற்றின் நீரிலும் நனைந்து கொண்டே செல்லவேண்டும். இப்போது மழைக்காலம் இல்லை என்பதால் நீரின் வேகம் குறைந்தே உள்ளது. மழைக்காலத்தில் அருவி மேலிருந்து பொழியும் பவநாசினி ஆறு வேகம் தாங்காமல் செல்லுவது கஷ்டம் என்பதால் பாறையில் ஆங்காங்கே பெரிய பெரிய சங்கிலிகள் பதிக்கப் பட்டிருக்கின்றன. இப்போதும் அவற்றைப் பிடித்துக் கொண்டே செல்வதே பாதுகாப்பு. பவநாசினி ஆறு மேலிருந்து கீழே விழ, அனைவரும் கொண்டு வந்த தண்ணீர்க் குடுவைகளில் அவற்றைப் பிடித்துக் கொள்கின்றோம். சீக்கிரமாய் தரிசனம் செய்து கொண்டு வரும்படி வழிகாட்டி அவசரப் படுத்துகின்றார். அடுத்து இன்னும் இரு கோயில்களுக்கு நாங்கள் செல்லவேண்டும் என்பதோடு இவ்வளவு உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் பட்டாசாரியாரும் சீக்கிரமாய் வீடு திரும்பவேண்டும் என்பதாலும். தண்ணீரின் சுவை திரும்பத் திரும்பக் குடிக்கச் சொல்லுகின்றது. அரை மனதோடு நீரை விட்டுப் பிரிந்தோம் நரசிம்மரைத் தரிசிக்க. கீழே கிடு கிடு பள்ளம். அதில் விழாமல் செல்லவேண்டும் அவற்றில் முன்னால் தள்ளி அமைந்திருக்கும் ஒரு பாறையில் இயற்கையாய் ஏற்பட்டிருக்கும் ஒரு குகையில் கோயில். சந்நிதியில் முக்கியமாய் மூன்று விக்கிரஹங்கள். நடுவில் உக்ர நரசிம்மர். மஹா கோபத்துடன் இரண்ய கசிபுவை மடியில் கிடத்தித் தன் இரு கை நகங்களாலே கிழித்துக் கொண்டு இருக்கும் கோலம். இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்க விட்டுக் கொண்டு மடியில் இரண்ய கசிபு. இடக்கைகளில் ஒரு கை இரண்ய கசிபுவை அசைய விடாமல் பிடித்துக் கொண்டிருக்க, மற்ற இரு கரங்கள் குடலை வெளியே எடுக்கின்றன. குடல் மாலையாகச் சூட்டப் பட்டிருக்கின்றது. மற்ற இரு கரங்களில் சங்கு, சக்கரம்.
இரு கை கூப்பித் தொழுதவண்ணம் அருகே சற்றும் பயமின்றி பிரஹலாதன் காட்சி அளிக்கின்றான். குகை அந்த ஜனவரி மாசமும் நரசிம்மரின் உக்கிரத்தாலேயோ என்னமோ சூடாய் இருப்பதாய்த் தோன்றியது. உண்மையில் இந்த உக்கிரம் தாங்காமல் குகை வெகுகாலம் நெருப்பாய்க் கனன்று கொண்டிருந்ததாயும் பச்சைப் புல்லே பற்றிக் கொள்ளும் என்பதாகவும் சொல்கின்றனர். இந்தச் சிற்பங்களின் வலப்பக்கம் நரசிம்மர் தூணைப் பிளந்து கொண்டு வெளியே வரும் அவதாரத் தருணம் மிக அருமையாய்ச் செதுக்கப் பட்டிருக்கின்றது. ஒரே இருட்டு. கவனித்துப் பார்க்கவேண்டும். இடப்பக்கம் இருவரும் சண்டைஇடும் கோலம்.
திரும்பும்போது படிகள் இருந்தாலும் அவற்றின் கீழேயும் கிடுகிடு பள்ளம் இருப்பதால் படிகளில் கவனமாய்க் கால்வைத்து இறங்கவேண்டும். குகைக் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி நாம் வந்த வழியிலேயே நதி அருவியாய்ப் பொழியும் இடத்துக்கு அருகே ரக்த குண்டம் என்ற இடம் உள்ளது. இங்கே நரசிம்மர் ஹிரண்யனைக் கிழித்தபோது பெருகிய ரத்தம் ஆறாய் ஓடி அங்கே தேங்கியதாம். அங்கே தண்ணீர் இப்போது சிவந்த நிறத்திலேயே குண்டத்தில் காணப் படுகின்றது. கையில் எடுத்தால் தெளிவாய் உள்ளது. நரசிம்மர் குருதி தோய்ந்த தம் கரங்களை இங்கேதான் கழுவிக் கொண்டதாயும் ஐதீகம்.
மேல் அஹோபிலம் ஸ்வயம்பு நரசிம்மர் சுக்கிரதோஷத்தைப் போக்கும் வல்லமை கொண்டவர் என்கின்றனர். ஜ்வாலா நரசிம்மர் சனியினால் வரும் தோஷங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர் என்கின்றார்கள். ஸ்ரீமாதா ம்ருத்யுஞ்சயர் எனவும் இவரை அழைக்கின்றனர். தீராத கடன்கள், தீராத நோய்கள், பகைவர்களின் தொல்லைகளில் இருந்து காத்தருளும் இவர் தொழிலதிபர்களையும் உருவாக்குவதாய்ச் சொல்கின்றனர்.
9 comments:
ஜ்வாலா நிருசிம்ஹ சரணம்.
உக்ர ஸ்தம்பத்துக்கு இப்போதுதான் நிறையப் பேர்கள் போக முயலுகிறார்கள். எப்பவுமே சிரமம் என்றுதான் சொல்வார்கள். அட்கனால் தாஅன் கைகால் நேர இருக்கும் இளமையிலேயே பத்ரி இந்த மாதிரி இடத்துக்குப் போய் வரவேண்டும் என்று எங்கள் ஸ்லோக மாஸ்டர் சொல்வார். ஹ்ம்ம்.. நன்றி கீதா.
நாங்களும் உக்ர ஸ்தம்பம் போகவில்லை.
ம்ம்ம். ரொம்ப சிரமப்பட்டே போய் வந்து எழுதி இருக்கீங்க.
படங்கள் என்ன இவ்வளோ சின்னதா? திருப்தியே இல்லை. உக்ர ஸ்தம்பம் படம் பிடிச்சீங்களா இல்லையா?
உக்ர ஸ்தம்பத்துக்கு கூட்டிட்டு போகாம விட்டுட்டீங்களே...
ஒரே ஒரு எழுத்துப் பிழை இருக்கு...சரிபண்ணிடுங்க :-)
[அப்பாடா, எனக்கும் ஒரு சான்ஸ்]
ஜ்வாலா நரசிம்மர் தரிசனம் அற்புதம் கீதாம்மா.. எனது ந்ண்பன் சென்ற போது மேலே உக்ரஸ்தம்பம் அருகில் வரை சென்றும், உக்ரஸ்தம்பத்தை 20 அடி முன்னால் தான் தரிசிக்க முடிந்ததாம், ரொம்ப சிரமம் தான்.
வாங்க வல்லி, உக்ரஸ்தம்பத்துக்கு இப்போவும் போகக் கஷ்டம் தான். நீங்க எப்போ அஹோபிலம் போனீங்க? அனுபவத்தைச் சொல்லக் கூடாதோ?
வாங்க திவா, ப்ரிண்டருக்கு இங்க் மாத்தணும், அப்புறம் தான் படங்கள், இதில் எல்லாம் கொஞ்சம் மெதுவாய்த் தான் வேலை நடக்கும், வேறொருத்தரை எதிர்பார்க்கவேண்டி இருக்கே! :((((((
மெளலி, எ.பி. எங்கே? ம்ம்ம்ம்ம்?? சரி பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.
வாங்க ராகவ், உக்ர ஸ்தம்பம் போய்ப் பார்க்க முடியலைனு இன்னும் வருத்தம் தான். ஆனால் பாதை சரியில்லை என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தினாங்க. வேறே வழியில்லை. காட்டில் நாமளாப் போக முடியாதே! :((((((
ப்ரின்டரா? இங்கா? ஒண்ணும் புரியலை!
Post a Comment