அடுத்து நாம் காணப் போவது பார்கவ நரசிம்மர். படிகள் ஏறவேண்டும். படிகள் என்றாலும் சாமானியமாய் இல்லை. மலை ஏற்றம் கூடப் பரவாயில்லை எனும்படிக்குப் படிகள். படிகள் என்னமோ 150க்குள் தான் சொல்கின்றனர். ஆனாலும் நமக்கு அவை 15,000 போல் தெரிகின்றன. வேதாத்திரி பர்வதத்திலே அமைந்துள்ளது இந்தக் கோயில். கீழ் அஹோபிலம் கோயிலில் இருந்து சுமார் இரண்டு கிமீட்டர் தொலைவில் உள்ளது. அடர்ந்த காடுகளில் நுழைந்தே செல்லவேண்டும். நடு நடுவில் சீர் செய்யப் படாத காட்டுப் பாதைகளும் குறுக்கிடும். ஏற்ற, இறக்கங்கள் நிறைந்தது. பல்வேறு விதமான பட்சிகளின் குரல்களில் இருந்து எழும்பும் இனிய இன்னிசைக் கீதங்கள். சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க ரம்மியமான இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது கோயில். இன்னும் சிலபடிகள் மேலே ஏறினால் கோயில் சொல்லிக் கொண்டே நம்மை அழைத்துச் செல்கின்றனர். கடைசியில் வரும் எனக்காகச் சற்று நின்று கவனித்துக் கூட்டி வரும் அமைப்பாளர் சுரேஷ். நான் நிற்கும்போதெல்லாம் அவரும் எனக்குப் பின்னாலேயே நின்று விடுகின்றார். ஆசுவாசம் செய்து கொண்டு கிளம்பினால் பின்னாலேயே பாதுகாப்பாய் வருகின்றார். மற்ற அனைவரும் முன்னால் சென்றிருக்க, நாங்கள் இருவர் மட்டும் மெல்ல மெல்ல மேலே ஏறுகின்றோம். இந்தப் படிகளுக்கு இவ்வளவு கஷ்டப் பட்டு வந்து யார் காவிப்பட்டையும், வெண்மைச் சுண்ணமும் அடிச்சாங்களோ தெரியலை. மனதில் ஈசன் குடி கொண்டால் எல்லாத்துக்கும் வேகம் வரும்போல.
அப்பாடி, இதோ நிஜமாவே வந்துட்டோமே! ஆனால் இது என்ன இங்கே ஒரு குளம் போல இருக்கே? ஆம், நிஜமாவே குளம் தான் இது. பார்கவ தீர்த்தம் எனப் பெயர் இதுக்கு. நீர் எந்தக் காலத்திலும் வற்றுவதே இல்லையாம். அக்ஷய தீர்த்தம் எனவும் சொல்லப் படுகின்றது. பார்கவர் இங்கே எங்கே வந்தார்? வந்திருக்கார். பார்கவ ராமர் ஆன பரசுராமர் இங்கே தீர்த்த யாத்திரை வந்திருக்கின்றார். நரசிம்மரைத் தரிசித்திருக்கின்றார். அவர் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீமந்நாராயணன் தசாவதாரத் திருக்கோலம் காட்டி மகிழ்வித்திருக்கின்றான். என்ன? அவதாரத்துக்கே அவதாரம் பூஜித்ததா? எனத் தோன்றுகின்றதா? என்றால் ஆம். என்ன இருந்தாலும் பரசுராமர் ஒரு மானிடனாய்த் தானே தோன்றினார். விஷ்ணுவின் அவதாரம் என எந்த இடத்திலும் சொல்லிக் கொள்ளவே இல்லை அல்லவா? ஆகவே அவர் இறை சக்தியாகவே தோன்றிய நரசிம்ம அவதார மூர்த்தியை வழிபட்டு இருக்கின்றார். இப்போ பார்கவ நரசிம்மரைப் பார்ப்போமா??
நரசிம்மர் இங்கே ஹிரண்யனை வதைக்கும் தோற்றத்தில்ல் தான் காட்சி அளிக்கின்றார். மடியில் ஹிரண்யன். இரு கரங்களால் அவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டிருக்கின்றார். சங்கு, சக்ர தாரியாய்க் காட்சி அளிக்கின்றார். ஆஹா, இது என்ன? ஹிரண்யன் வாளை உயர்த்திய வண்ணம் காட்சி அளிக்கின்றானே? ஆம், ஹிரண்யன் நரசிங்கத்தை வெட்டுவதற்கென உயர்த்திய வாள் உயர்த்திய வண்ணமே காட்சி அளிக்கின்றது. வியப்பில் உறைந்து போன முகத்தோடு ஹிரண்யன்! நரசிங்கம் தன்னை மடியில் கிடத்திக் குடலைக் கிழித்து எடுப்பதை உணர்ந்து, தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்பதையும் உணர்ந்ததால் மட்டும் அல்ல. வந்திருப்பது யார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்ட வியப்பு, சாட்சாத் பகவான் கையாலேயே தனக்கு மரணம் சம்பவிக்கிறதை எண்ணி வியப்பு! இந்த அசுரனுக்காக பகவானே தூணில் இருந்து கீழே இறங்கி வந்துவிட்டானே என்ற வியப்பு! இதை அறியாத நிர்மூடனாய் இருந்து விட்டோமே என்ற வியப்பு! அனைத்தும் ஒருசேரக் காட்சி அளிக்கின்றது ஹிரண்யன் முகத்தில். அருகே பக்த பிரஹலாதன் நடப்பது அனைத்தும் தனக்காவே என்ற எண்ணம் சிறிதுமின்றி அடியாரிலும் அடியாராகக் கை கூப்பித் தொழுத வண்ணம் நிற்கின்றான். இந்த அழகை மட்டும் கண்டு களித்தால் போதுமா? சிற்பத்தின் தோரணத்தில் சுற்றிலும் தசாவதாரங்களும் செதுக்கப் பட்டிருப்பதை பட்டாசாரியார் ஹாரத்தி காட்டி விளக்குகின்றார்.
இந்தக் காட்டில் தரிசனம் செய்யவே இவ்வளவு கஷ்டம் என நாம் நினைத்துக் கொண்டு அதையே ஒரு பெருமையாகவும் எண்ணிக்கிறோமே? இந்தச் சிற்பிகள் எவ்வளவு கஷ்டப் பட்டு இந்தக் குகைகளுக்குள்ளே வந்து சாப்பாடு, தண்ணீர் எது இருக்கோ அதை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு இத்தகைய தெய்வீகச் சிற்பங்களைச் செதுக்கி இருக்கின்றார்களே. அந்தக் காலத்தில் என்ன வசதி இருந்தது? சிற்பிகள் சிற்பங்களைச் செதுக்கும்போது ஒவ்வொரு காட்சிகளையும் கண்ணார, மனமாரக் கண்டு, கேட்டு, பேசி, அனுபவித்தே செய்திருக்க முடியும். அத்தனை அழகு ஒவ்வொன்றும். பரிபூரணமாய் உணராமல் இத்தகைய தெய்வீகம் வராது. சந்நிதிக்கு வெளியே மஹாவிஷ்ணுவின் விக்கிரஹம் ஒன்றையும் செதுக்கி இருக்கின்றனர்.
பார்கவ நரசிம்மரைத் தரிசித்தால் சந்திரனால் ஏற்படும் சகல தோஷங்களும் விலகும் என்று சொல்கின்றார்கள். பாவங்கள் தொலைந்து மனதில் நிம்மதி உண்டாகும். கற்பனைத் திறன், கதைகள் எழுதும் ஆற்றல், கவிதை எழுதும் ஆற்றல், குடும்பத்தில் மனமகிழ்ச்சி, கவலை இல்லா மனம், நோயற்ற வாழ்க்கை, வெளிநாடு செல்லும் சந்தர்ப்பம் போன்றவை கிட்டும் எனச் சொல்கின்றனர். அடுத்து நாம் காணப் போவது கடைசியான கராஞ்ச நரசிம்மர்.
6 comments:
பார்கவ நரசிம்மருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்.
ஆமாம், அவர்கள் 150 படிகள் அப்படின்னாங்க சரி, நீங்க எண்ணியிருப்பீங்களே, மொத்தம் எத்தனைன்னு சொல்லாம விட்டுட்டீங்களே?. :-)
வியப்பில் உறைந்து போன முகத்தோடு ஹிரண்யன்! நரசிங்கம் தன்னை மடியில் கிடத்திக் குடலைக் கிழித்து எடுப்பதை உணர்ந்து, தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்பதையும் உணர்ந்ததால் மட்டும் அல்ல. வந்திருப்பது யார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்ட வியப்பு, சாட்சாத் பகவான் கையாலேயே தனக்கு மரணம் சம்பவிக்கிறதை எண்ணி வியப்பு! இந்த அசுரனுக்காக பகவானே தூணில் இருந்து கீழே இறங்கி வந்துவிட்டானே என்ற வியப்பு! இதை அறியாத நிர்மூடனாய் இருந்து விட்டோமே என்ற வியப்பு! அனைத்தும் ஒருசேரக் காட்சி அளிக்கின்றது ஹிரண்யன் முகத்தில். அருகே
new attempt. so far we have seen Narasimha only from the point of Prahalatha but you have wonderfully from the Hiranyakasipu's angle
அட, மெளலி, இரண்டு வரி பின்னூட்டம் கூடப் போட ஆரம்பிச்சாச்சு??? வாழ்த்துகள். :P:P:P
ஆஹா, வராதவங்களை எல்லாம் வர வச்ச நரசிம்மத்தின் அருளை என்னவென்று சொல்லுவது. வந்ததுக்கும், கருத்துக்கும் நன்றி திராச, சார்.
உண்மையிலே கையிலே தூக்கின வாளோடு உறைந்திருக்கும் சிற்பத்தைப் பார்த்து இம்மாதிரி எனக்கு எண்ணத் தோன்றியது என்றால் அது அந்தச் சிற்பியின் வெற்றியே ஆகும்னு நினைக்கிறேன். அவ்வளவு பாவங்கள்!
உங்களோடு சேர்ந்து ஜ்வாலா நரசிம்மரையும் உக்ர ஸ்தம்பத்தையும் பார்கவ நரசிம்மரையும் தரிசித்தேன் அம்மா. மிக்க நன்றி.
Post a Comment