எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, March 08, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 6


அஹோபிலம் மடம் பற்றியும், ஜீயர் பற்றியும் மெளலி எழுதச் சொல்லி இருக்கின்றார். இது பற்றி இன்னும் தகவல்கள் திரட்டணும். இன்றைய தினசரி நாள் காட்டியில் அஹோபிலம் மடத்தின் 37வது பட்டம் அழகிய சிங்கரின் திரு நட்சத்திரம் எனச் சொல்லி இருக்கின்றது. அஹோபிலம் மடம் ஜீயர்களை வணங்கிவிட்டு, இப்போது நாம் யோக நரசிம்மரைக் காணப் போகலாம்.

எத்தனையோ யுகங்கள் மாறியும் பிரஹலாதன் இங்கே இருந்ததற்கான சான்றுகள் இருப்பதாயும், அவை மாறவில்லை எனவும் கூறுகின்றனர். வேதாத்திரி மலைத் தொடரின் மேற்கே தொலைவாய் மரங்கள் அடர்ந்த பகுதியில் அமைந்துள்ளது யோக நரசிம்மரின் ஆலயம். ஹிரண்ய வதம் முடிந்ததும், நரசிம்மரால் பிரஹலாதனுக்குச் சில யோக முத்திரைகள் கற்பிக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. அதன் ஒரு நிலையே இங்கு எழுந்தருளி இருக்கும் கோலம். தென் திசை நோக்கி நரசிம்மர் வீற்றிருக்கின்றார். மேற்கரங்கள் இரண்டும் சங்கு, சக்கரங்களோடும், கீழ்க்கரங்கள் இரண்டிலும், இரு கால்களிலும் யோக முத்திரைகள் காட்டியும் அமர்ந்திருக்கும் திருக்கோலம்.

புதன் கிரஹத்தால் ஏற்படும் சகல பாவங்களையும் தோஷங்களையும் போக்கும் வல்லமை கொண்டவர். பக்தப்பிரஹலாதனுக்கு யோக குரு. இங்கே காசி ரெட்டி என்பவர் இவ்வாலயத்தின் அருகேயே இன்னொரு யோக நரசிம்மரை நிர்மாணித்திருக்கின்றார் எனச் சொல்கின்றனர். அவ்வாலயத்துக்கு நாங்கள் செல்லவில்லை. பசித்தவர்களுக்கு உணவு வழங்கி வரும் மாபெரும் அன்னதானத்தை இன்றளவும் இவரின் சந்ததிகள் தொடர்ந்து நடத்தி வருவதாயும் சொன்னார்கள். அஹோபிலத்துக்குப் பசியுடன் வரும் யாத்ரீகர்கள் இரவு, பகல் எந்நேரமாயினும் நள்ளிரவானாலும் முகம் சுளிக்காமல் இங்கே அன்னதானம் வழங்கப் படுகின்றது என்பது மிக மிக வியப்பான ஒரு செய்தி. அனைவருமாய்ச் சேர்ந்து பணம் திரட்டி ஒரு குறிப்பிட்ட அளவுத் தொகையை நாங்கள் நாற்பத்தி ஐந்து பேர் சார்பிலும் அளித்தோம். அடுத்து வராஹ நரசிம்மர்.

அஹோபிலம் பற்றிய தொலைக்காட்சித் தொகுப்பு பொதிகைத் தொலைக்காட்சியில் போன வாரம் முதல் மாலை 6-30 மணி அளவில் காட்டப் படுகின்றது. வாராஹ நரசிம்மர் அடுத்து நாம் காணப் போவது. வைகுந்தத்தின் துவாரபாலகர்கள் ஆன ஜயன், விஜயன் இருவருக்கும் கிடைத்த சாபத்தால் இருவரும் ஹிரண்யாட்சன், ஹிரண்யகசிபுவாய்ப் பிறப்பதும் ஹிரண்யாட்சன் பூமி தேவியைத் தூக்கிச் சென்று பாதாளத்தில் கொண்டு வைக்கின்றான். மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்துச் சென்று தன் கொம்புகளால் பூமியைத் துளைத்துக் கீழே போய் பாதாளத்தில் இருந்து பூமா தேவியைத் தன் கூரிய மூக்கின் முனையில் வைத்துத் தூக்கி வருகின்றார். அதற்குப் பின்னரே ஹிரண்யாட்சனின் தம்பியான ஹிரண்ய கசிபுவைக் கொல்ல எடுத்த இந்த நரசிம்ம அவதாரம். இங்கே இரு அவதாரங்களும் பக்கத்தில் பக்கத்தில் காணக் கிடைக்காத தரிசனமாய் உள்ளது. சற்றே பெரிய வராஹ உருவத்தின் மேல் அமர்ந்திருக்கும் பூமாதேவியையும், அருகே நரசிம்மர் அவதாரத்தையும் ஒரு சேரக் காண முடியும்.

பிரஹலாதனின் குருகுலம் இங்கே தான் அமைந்திருந்ததாய்ச் சொல்கின்றனர். வேதாத்திரி மலையின் வழுக்கும் செங்குத்துப் பாறைகளில் கவனமாய் மெள்ள ஏறி, இறங்கினோமானால், திடீரென ஒரு பெரிய பாறை காணப்படுகின்றது. இதை பிரஹலாத மெட்டு அல்லது பிரஹலாத மேடு என்கின்றனர். பாறைகள் ஒன்றோடொன்று புரட்டிப் போடப் பட்டாற்போல் காட்சி அளிக்கின்றது. இயற்கையாகவே ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி வைத்தாற்போல் காட்சி அளிக்கின்றது. அவற்றில் காணப்படும் சிறு சிறு வட்டங்கள், கோடுகள், கோட்டுடன் கூடிய அமைப்புகள் ஒருவேளை பிரஹலாதன் எழுதிப் பார்த்த லிபியாய் இருக்கலாம் என ஊகிக்கின்றனர்.

படங்கள் அப்லோட் ஆகவில்லை, மன்னிக்கவும். நாளை மீண்டும் முயல்கின்றேன்.

5 comments:

ஞாபகம் வருதே... said...

//அஹோபிலத்துக்குப் பசியுடன் வரும் யாத்ரீகர்கள் இரவு, பகல் எந்நேரமாயினும் நள்ளிரவானாலும் முகம் சுளிக்காமல் இங்கே அன்னதானம் வழங்கப் படுகின்றது //

ஹி....ஹிஹி....

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அஹோபிலம் மடத்தின் 37வது பட்டம் அழகிய சிங்கரின் திரு நட்சத்திரம் எனச் சொல்லி இருக்கின்றது//

திருநட்சத்திரப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

//பிரஹலாதனுக்குச் சில யோக முத்திரைகள் கற்பிக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது//

நரசிம்ம அவதாரம் சில நாழிகைகளே என்பதால், இது போன்று யோக முத்திரைப் பாடங்கள் கற்பித்தாரா என்பது பற்றி எந்த அளவுக்கு மூல நூற்களில் சொல்லப்பட்டிருக்கு என்று தெரியவில்லை கீதாம்மா!

//பகல் எந்நேரமாயினும் நள்ளிரவானாலும் முகம் சுளிக்காமல் இங்கே அன்னதானம் வழங்கப் படுகின்றது என்பது மிக மிக வியப்பான ஒரு செய்தி. அனைவருமாய்ச் சேர்ந்து பணம் திரட்டி ஒரு குறிப்பிட்ட அளவுத் தொகையை நாங்கள் நாற்பத்தி ஐந்து பேர் சார்பிலும் அளித்தோம்.//

அருமை! நல்லது செய்தீர்கள்!

//இரு அவதாரங்களும் பக்கத்தில் பக்கத்தில் காணக் கிடைக்காத தரிசனமாய் உள்ளது//

அருமை! படம் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!
மனத் திரையில் சேவித்துக் கொண்டேன்!

//கோட்டுடன் கூடிய அமைப்புகள் ஒருவேளை பிரஹலாதன் எழுதிப் பார்த்த லிபியாய் இருக்கலாம் என ஊகிக்கின்றனர்//

:)))
பிரஹலாதன் இப்போதிருக்கும் ஆந்திர தேசத்திலா இருந்தான்?
இது பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன கீதாம்மா?

உக்கிர ஸ்தம்பம் என்ற தூண் (பாறை) அஹோபலத்தில் உண்டு என்று தெரியும்! ஆனால் புராணக் குறிப்புகள் என்ன சொல்கிறது என்று தெரியவில்லை!

மேலும் சரபேஸ்வரர் பற்றிய ஆலயங்களும் ஆந்திர தேசத்தில், அதுவும் அஹோபில ஏரியாவில் அவ்வளவாக இல்லை! அவதார நிகழ்வின் போது நடந்த சரபேஸ்வர வைபவம் இங்கு ஆலயமாக இல்லாதது ஏனோ?

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம்??? என்ன ஞாபகம் வந்துச்சுனு புரியலை. ம.ம. நான், கு.வி. வேறே, சொல்லிட்டுச் சிரிச்சிருக்கலாமோ??? இரவு, பகல் எந்நேரம் ஆயினும் னு எழுதிட்டு, நள்ளிரவு னு எழுதினதுக்கோ??? ஹிஹிஹி, நானும் சிரிச்சுக்கிறேன். :P

கீதா சாம்பசிவம் said...

வாங்க கேஆரெஸ், வரவுக்கும், கருத்து மழைக்கும் நன்னிங்கோ!

மதுரையம்பதி said...

யதி சிரேஷ்டர் அழகிய சிங்கருக்கு நமஸ்காரங்களை உங்கள் பதிவின் மூலமாகவே சொல்லிடறேன்.

அழகிய சிங்கர் பற்றி நினைவில் இருத்திக் கொண்டதற்கு நன்றி கீதாம்மா. நேரம், குறிப்புக்கள் கிடைத்தபின் எழுதுங்கள்.