எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, March 10, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் -7

அஹோபிலம் மடம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய மடங்களிலே மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இது கிட்டத் தட்ட 600 வருடங்கள் முன்பு அஹோபிலத்தில் ஸ்ரீமத் ஆதிவண் சடகோபன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளால் ஆரம்பிக்கப் பட்டது. இவருடைய பூர்வாசிரமப் பெயர் கிடாம்பி ஸ்ரீநிவாஸாச்சார் என்பதாகும். காஞ்சியில் உள்ள கடிகாசதம் அம்மாளின் மாணாக்கர் ஆவார். ஒரு நாள் ஸ்ரீநிவாஸாச்சார் அவர்கள் கனவில், லக்ஷ்மி நரசிம்மர் தோன்றினார். அஹோபிலம் இருக்குமிடம் சொல்லி, அங்கே இருக்கும் திருமேனி வடிவிலேயே தோன்றி, ஸ்ரீநிவாஸாச்சாரை அங்கே வரச் சொல்கின்றார். தன்னுடைய ஆசாரியரைக் கேட்டுக் கொண்டு அவர் சம்மதத்துடன் ஸ்ரீநிவாஸாச்சார் அஹோபிலம் சென்றார்.

அஹோபிலத்தில் நரசிம்மரே ஸ்ரீநிவாஸாச்சாருக்கு சந்நியாசம் கொடுத்து, அவருக்கு "சடகோப ஜீயர்" என்ற பட்டப் பெயரும் சூட்டினார். ஆழ்வார் திருநகரி ஆதிபிரானால் வண் என்ற அடைமொழியும், நம்மாழ்வாரால் ஆதி என்ற அடைமொழியும் பின்னாட்களில் சேர்க்கப் பட்டது. அதற்குப் பின்னர் ஜீயர் அவர்கள் ஆதி வண் சடகோபஜீயர் என அழைக்கப் பட்டு வந்தார்.

ஒரு முறை நவநரசிம்மர்களில் ஒருவரான மாலோல நரசிம்மர் ஆதிவண் சடகோபர் கைகளில் வந்து குதித்தார். தன்னை எடுத்துக் கொண்டு நாடு பூராவும் பயணம் புரிந்து பிரசாரம் செய்யச் சொல்கின்றார். இதன் பின்னரே அஹோபிலம் மடம் உருவானது. மாலோல நரசிம்மர் சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்துக்கும் சென்றார், ஆதிவண் சடகோபருடன். செல்லும் இடங்களில் எல்லாம் பக்தர்களுக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து பாரா ந்யாசமும் நிறைவேற்றினார்.

அறுநூறு வருடங்கள் முன்னால் ஆரம்பித்த இந்தப் பயணம் இன்று வரையில் அடுத்தடுத்து வரும் ஜீயர்களால் தொடரப் படுகின்றது. அஹோபிலம் வந்த ஸ்ரீநிவாஸாச்சாரை மலைக்குகையில் ஒரு வயதான யோகி சந்தித்து அவருக்கு வேதாந்தங்களைக் கற்பித்து, நரசிம்ம மந்திரத்தைக் கற்பித்து, த்ரிதண்டத்தை வழங்கி, சங்கு சக்கரங்களையும் வழங்கியதாகவும் சொல்கின்றனர். அந்த யோகி நரசிம்மரே அன்றி வேறு யாரும் இல்லை எனச் சொல்லப் படுகின்றது.

தமிழில் அழகிய சிங்கர் என அழைக்கப் படும் இந்த முதல் ஜீயரால் நம்மாழ்வாரின் மறைக்கப் பட்ட கோயில் ஆழ்வார் திருநகரியில் மறு ஸ்தாபிதம் செய்யப் பட்டது. இன்றைக்கும் மடத்தில் முதல் பொறுப்பேற்றுக் கொள்ளும் புதிய ஜீயர்கள் முதலில் ஆழ்வார் திருநகரி சென்று நம்மாழ்வாரைத் தரிசனம் செய்து வருவது வழக்கமாய் இருந்து வருகின்றது. ஏழாவது ஜீயரின் காலத்தில் கீழ் அஹோபிலம் கோயில் மாற்று மதத்தினரால் முற்றுகைக்கு உட்பட, விஜயநகர அரசன் ஆன ரங்க தேவ ராயர் போரிட்டு ஆலயத்தை மீட்டுக் கொடுத்தார். அதன் வெற்றிச் சின்னமாய் ஜயஸ்தம்பம் கீழ் அஹோபிலம் கோயில் முகப்பில் இன்றும் விளங்கி வருகின்றது.

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நான்கு நூற்றாண்டுகளாய்க் முழுமையடையாமல் இருந்த ராஜ கோபுரம் 1979-ல் அப்போதைய 44-வது ஜீயர் அவர்களால் கட்டி முடிக்கப் பட்டது. மாலோல நரசிம்மரின் விக்ரஹத்தைத் தினசரி வழிபாடு செய்வதுண்டு. தாங்கள் மேற்கொள்ளும் ஆன்மீகப் பயணங்களிலும் மாலோல நரசிம்மரின் விக்கிரஹத்தை எடுத்துச் சென்று பூஜைகள் செய்கின்றனர்.

3 comments:

மதுரையம்பதி said...

அஹோபில மடம் பற்றிக் கூறியமைக்கு நன்றி

கீதா சாம்பசிவம் said...

வாங்க மெளலி, நீங்க கேட்டதாலே, படிச்சதும் நீங்க மட்டும் போல! :))))))))

Raghav said...

ஆதிவண் சடகோப ஜீயர் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். இன்று அதிகமாக தெரிந்து கொண்டேன். நன்றி கீதாம்மா.

ஸ்ரீவைஷ்ணவ மடங்களிலே அழகிய சிங்கருக்கு சிஷ்யர்கள் அதிகம்.