படங்களுக்கு நன்றி விக்கிபீடியா
சுதைச் சிற்பங்கள் பல நூற்றாண்டுகளுக்கு மேலாகவே தமிழகக் கோயில்களில் பயன்படுத்தப்பட்டன. மகேந்திர பல்லவன் காலம் வரையும் கருவறையில் சுதைச் சிற்பங்களே காணப்பட்டன. கி.பி. ஆறாம் நூற்றாண்டான பல்லவன் காலத்திலே கட்டப்பட்ட குடவரைக் கோயில்களிலும் சுதைச் சிற்பங்களே இடம்பெற்றிருந்ததாகத் தெரிய வருகிறது. இது சுண்ணாம்பு, மரக்குச்சிகளை வைத்துச் செய்யப்பட்டது. காலம் மாற மாற சிமென்டின் பயன்பாடு அதிகரிக்கவும் சிமென்ட் மற்றும் இரும்புக் கம்பிகளைக் கொண்டு செய்யப்படுகிறது. மதுரைக்கோயில் கோபுரங்களில் சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் நீண்ட காலமாகக் கருவ
றை மூர்த்தங்களில் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் பெரிய பெருமாள் சுதையால் ஆனவர். ஒரு சிலர் கல்லால் வடிக்கப்பட்டு மேற்புறம் மட்டும் சுதையைப் போன்று தோற்றமளிக்கும் நிலையிலே ஒரு வகைக்கலவைப் பொருளால் பூசப்பட்டது என்கின்றனர். ஆனால் இதற்கான ஆதாரம் எவரும் காட்டவில்லை. ரங்கநாதருக்கு அபிஷேஹம் கிடையாது. தைலக்காப்பே சார்த்துவார்கள். இதைத் தவிரவும் சமயபுரம் மாரியம்மன், அழகர் கோயில் பெருமாள், சீர்காழிக் கோயில் மற்றும் மதுரைக் கூடலழகர் கோயில் பெருமாள் ஆகியோர் சுதையினால் ஆன மூலவர்களே. விமானங்கள், கோபுரங்கள் ஆகியவற்றில் இடம் பெறும் சுதைச் சிற்பங்களுக்கு வண்ணம் பூசப்பட்டுக் காட்சி அளிக்கும்.
காஞ்சிபுரத்தில் சங்கரமடத்துக்கு அருகிலுள்ள பாண்டவ தூதரான பெருமாள் கோயிலில் உள்ள மூலவர் விஸ்வரூபக் காட்சி தரும் கோலத்தில் 24 அடி உயரம், 14 அடி அகலத்தில் காட்சி தருகிறார். இவரும் சுதையால் ஆனவரே! தன்னை அவமானம் செய்த கௌரவத் தலைவன் ஆன துரியோதனனுக்குக் கண்ணன் காட்சி கொடுத்த விஸ்வரூபக் கோலம் இது எனச்சொல்லுகின்றனர். அமர்ந்த திருக்கோலம். சுதைச் சிற்பம் செய்ய கெட்டியான மூங்கில் குச்சிகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்துச் செய்ய வேண்டிய உருவத்தின் உள் கட்டமைப்பை முதலில் உருவாக்கிவிட்டு அரைத்த சுண்ணாம்பு, தேன், மூலிகைச்சாறுகள், சேர்த்துப் பிசைந்து கூழாக்கிக்கொண்டு மூங்கில் குச்சிகள் மேல் கெட்டியாகப் பூசி இதை உருவாக்கி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அந்தச் சிற்பத்திலேயே இறைவன் உடுத்தி இருக்கும் உடையான பஞ்சகச்சத்தின் ஒவ்வொரு மடிப்பும் மிகுந்த கலை நயத்துடன் இம்மாதிரி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர். இது எப்போது உருவானது என்ற காலத்தைக்கணக்கிடுவது இயலாததாக இருக்கிறது. மன்னர்கள் யாரும் இந்தக் கோயிலுக்கு அவ்வளவு ஆதரவு கொடுத்ததாகத் தெரியவில்லை எனினும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இது புதுப்பிக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரம் கல்வெட்டாகக் காண முடிகிறது. இந்தப் பெருமாளுக்குத் தைலக்காப்பிற்கான சாம்பிராணித் தைலம் ஒரு முறைக்கு சுமார் 20 இல் இருந்து 25 கிலோ வரை தேவைப்படுகிறது. காஞ்சிபுரத்தின் மற்றக் கோயில்களின் வருமானத்தில் கால் பங்கு கூட இந்தக் கோயிலுக்கு இல்லாத நிலையில் மிகவும் சிரமத்தின் பேரிலேயே கோயில் பட்டாசாரியார்கள் செய்து வருகின்றனர்.
ஶ்ரீரங்கம், காஞ்சிபுரம் ஆகிய பெருமாள்களைப் போலவே மதுரை அழகர் கோயிலின் சுந்தரராஜப் பெருமாளும் சுதையால் ஆன மூலவரே! பரிபாடல், சிலப்பதிகாரம் போன்றவற்றில் சிறப்பாகக் கூறப்பட்டிருக்கும் அழகர் கோயில் பெருமாள் இரு தேவியருடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். கட்டுடலுடன் காண்போரைக் கவரும் வண்ணம் அழகாகக் காட்சி அளிக்கும் இவருக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையே தைலக்காப்புச் சார்த்தப்படுகிறது. கீழே நின்ற திருக்கோலத்தில் மூலவராய்க் காணப்படும் பெருமாளைப் போலவே அடுத்தடுத்த அடுக்குகளில் இருந்த, கிடந்த நிலையில் காணப்படும் பெருமாள் திருவுருவங்களும் சுதையால் ஆனவையே. மேலே உள்ள அடுக்குகளில் காணப்படும் பெருமாளுக்கு வண்ணம் தீட்டப்பட்டிருக்கும். கீழே மூலவருக்கு மட்டுமே மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு!
இதே போல சமயபுரத்தின் மாரியம்மனும் சுதையினால் திருவுருவமே! தமிழ்நாட்டின் பெரும்பாலான குலதெய்வ அம்மன் திருவுருவங்கள் சுதையினாலேயே அமைக்கப்பட்டுள்ளன. சீர்காழி சிவன் கோயிலில் கீழே கருவறையில் நாம் பார்க்கும் பிரம்மபுரீஸ்வரர் லிங்க அமைப்புக்கொண்டவர். ஆனால் முதல் தளத்தில் உள்ள தோணியப்பர் குரு அமைப்பில் உள்ளவர். மேலே உள்ள தளத்தின் சட்டைநாதர் சங்கம அமைப்புக் கொண்டது. இவர் சுதையுருவத்தில் காணப்படுகிறார். சட்டைநாதரை மூங்கில் பட்டைகளாலும் சுண்ணாம்புக்கலவைகளாலுமே அமைக்கப்பட்டிருக்கிறார். இவருக்கும் அபிஷேஹம்கிடையாது. புனுகு சார்த்துவதே வழக்கம். இவர் இருக்கும் தளத்துக்குச் செல்லும்போது வாசனைப் பொருட்களைப் பூசிக் கொண்டோ பெண்கள் பூ வைத்துக் கொண்டோ செல்லுவதில்லை.
இன்னிக்கு அரங்கன் அருள் இம்மாதிரிச் சுதைச் சிற்பங்கள் பற்றிப் பார்ப்பதில் கழிந்து விட்டது. நாளை குலசேகரனையும், வீர வல்லாளரையும் கிருஷ்ணாயி எவ்விதமெல்லாம் ஆட்டி வைக்கப் போகிறாள் என்பதைக் காண்போம்.
7 comments:
திருவலஞ்சுழி விநாயகரைப் (சிற்பம்) பற்றிக் கூட அங்கு அர்ச்சகர்கள் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். சரியாகக் காதில் விழவில்லை. கடல் நுரையோ, சிப்பியாலோ ஆனது.
Sathiya Balan, Thank You
Sriram, திருவலஞ்சுழியில் கடல் நுரையால் ஆன விநாயகர்.
அருமையான பதிவு. ஆனால், தவறான தலைப்பு. பின்பு யாராவது தேடினாலும் இந்த இடுகை சுலபத்தில் கிடைக்காது.
ஸ்ரீரங்கம் கோவிலில் இராமானுசர் சிலையும் (பள்ளிப்படுத்தப்பட்ட இடத்தில்) சுதைச் சிற்பம் என்றே நினைக்கிறேன். அதையும் சமீபகாலங்களில் (80 வருடங்களாக) கோபுரத்தில் இருக்கும் சிமெண்ட் சிற்பங்களையும் ஒன்றா சுதைச் சிற்பங்கள் என்று சொல்கிறிர்களே.
எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கிறது. திவ்யப்ப்ரபந்தத்தில், 'குடதிசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி' என்று வருகிறது. ஆனால் பெரிய பெருமாள் தென் திசையைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் என் மனதில் படவில்லை. இது ஒருவேளை பெருமாளை அசைக்கமுடிவதால் (சுதைச் சிற்பம்) இருக்குமோ? இல்லை ஆழ்வார் பாடிய காலத்துக்குப் பிற்பாடு வேறு ஒரு சிற்பம் வடித்திருப்பார்களோ?
நெல்லைத் தமிழன், தற்போது சிமென்டையும் இரும்புக் கம்பிகளையும் வைத்துச் செய்யும் சிற்பங்களையும் சுதைச் சிற்பங்கள் என்றே சொல்கின்றனர். ச்ரீரங்கத்தில் ரங்கராஜனும், சிதம்பரத்தில் நடராஜனும் தெற்கேயே பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இதிலே உங்களுக்கு என்ன சந்தேகம்னு தெரியலை! ரங்கநாதர் கோயில் பல திருப்பணிகள், மாற்றங்களுக்கு ஆளானது. அப்போது முன்னர் இருந்த சிற்பம் சிதைந்து போய் அல்லது காலப் போக்கில் மக்கிப் போய்ப் புதுசாகப் பண்ணி வைத்திருக்கலாம்.என்னோட குறிப்புக்களில் தேடிப் பார்த்து இப்போதுள்ளவர் எந்தக்காலம் என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டு சொல்கிறேன். ஏற்கெனவே எழுதி இருப்பேன். தேடிப் பார்க்கணும்.
தலைப்பில் மாற்றம் செய்கிறேன். :)
சில விஷயங்களை மறுபதிவு செய்து கொண்டேன்.. நன்றி..
ஹரி ஓம் நமோ நாராயணாய..
Post a Comment