துவாரகையில் நாம் ஸ்ரீகிருஷ்ணனை மட்டுமல்லவா பார்த்தோம்?? இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உள்ளனவே? ஆகையால் பயணத்திலேயே அவற்றைப் பார்க்கலாம். அங்கே எண்ணங்களைத் தானே சொல்ல முடியும்? ஆகவே இனி நம் பயணங்கள் இங்கே தொடரும்! :)))))))))
***************************************************************************************
ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் வெண்ணைய் சாப்பிட்டுவிட்டு, திரும்பத் திரும்பக் கிருஷ்ணனைப் பார்த்ததோடு நம் பயணம் முடியவில்லை. அங்கே கோபி தாலாப் என்னும் இடம், ருக்மிணிக்கெனத் தனிக் கோயில், அது தவிர, துவாரகையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள ஓகா என்னும் துறைமுகத்தில் இருந்து நாம் நீராவிப் படகு, மோட்டார் படகு, அல்லது படகு எது கிடைக்குமோ அதில் ஏறி அங்கிருந்து அரை மணிப் பயணத்தில் உள்ள ஒரு சிறு தீவான பேட் துவாரகா செல்ல வேண்டும். அது கிட்டத் தட்ட நம் கண்ணனின் வசந்த மாளிகை ஆகும். அங்கே தான் சத்யபாமா, ஜாம்பவதி போன்றோர் இருந்ததாய்ச் சொல்கின்றனர்.
துவாரகை நகரும் சரி, அதன் கடைத் தெருக்களும் சரி சற்றும் மாறவே இல்லை. கோயிலில் இருந்து தங்குமிடம் வந்துவிட்டுச் சற்று நேரம் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் கிளம்புகின்றோம். தங்குமிடத்திலேயே தற்சமயம் ஓகாவுக்கு எப்படிப் போவது? எந்த எந்த மாதிரிப் போக்குவரத்து சாதனத்துக்கு எவ்வளவு கொடுக்கலாம் என்பதெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம். இதற்கு முன்னர் பதினைந்து வருஷம் முன்பு வந்தப்போ எல்லாம் அலுவலகத்தில் வண்டி ஏற்பாடு செய்து கொண்டு சென்றதால், இப்போதைய நிலவரம் எப்படினு தெரிஞ்சு கொண்டோம். போகவர, ஆட்டோவுக்கு 300 ரூயில் இருந்து 350 வரை கேட்பார்கள் எனவும், இண்டிகா என்றால் 400 ரூ என்றும் சொன்னார்கள். நாங்க இரண்டு பேர்தானே, ஆட்டோவே போதும் என முடிவெடுத்துக் கொண்டோம்.
வழியிலேயே ருக்மிணி கோயிலையும் பார்த்துக்கொண்டு செல்லவேண்டும் என ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிக் கொண்டதில் ருக்மிணி கோயிலுக்குச் செல்லுவதும் சேர்த்து ரூ. 350/- கேட்டார். போகும் வழிதான் என்றாலும் நம் சென்னையை நினைத்துப் பார்க்கும்போது இது ரொம்பவே கம்மி எனத் தோன்றியது. மேலும் ஓகாவில் குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆட்டோ காத்திருக்கவேண்டும், நாம் திரும்பி வருவதற்காக. ஓட்டுநரின் செல் நம்பர், பெயர் எல்லாம் கேட்டு வச்சாச்சு. ஆட்டோவில் ஏறி இப்போ ருக்மிணி கோயிலை நோக்கிப் பயணம்
தொடர்கின்றோம். இந்தக் கோயில் 12 அல்லது 13-ம் நூற்றாண்டுகளிலேயே கட்டப் பட்டதாய் அறிய வருகின்றோம். கோயிலும் புதியதாகவே இருக்கின்றது. துவாரகை மூலநாதர் கோயிலின் தொன்மை இதில் தெரியவில்லை. என்றாலும் மூலநாதரும் இப்போது மாறி விட்டார். அந்தக் கதை தனியாய் வரும். ஸ்ரீகிருஷ்ணரே இங்கு துவாரகையில் இருந்தபோது வழிபட்ட ஒரு விக்கிரஹம் தான் இன்றும் கேரளாவில் குருவாயூரில் குருவாயூரப்பன் எனக் காட்சி கொடுப்பதாய்ச் சொல்லுவார்கள். அந்த விக்கிரஹமே தேவகியால் வழிபட்டு வந்தது என்றும் சொல்கின்றனர். பின்னர் துவாரகையைக் கடல் கொண்டு போகப் போகின்றது எனத் தெரிந்ததும், தன் தாய் வழிபட்டு வந்த தன்னுடைய சிலையை குரு பகவானையும், வாயு பகவானையும் எடுத்துக் கொண்டு போய் வேறு இடத்தில் வைக்குமாறு ஸ்ரீகிருஷ்ணரே கேட்டுக் கொண்டதாயும் சொல்கின்றனர். தேவகி வழிபட்டு வந்த விக்கிரஹத்தைப் பார்த்து ருக்மிணியும் அதே போல் தனக்கும் வேண்டுமென்று கேட்க, ஸ்ரீகிருஷ்ணர் மீண்டும் விஸ்வகர்மாவைச் செய்யச் சொன்ன விக்கிரஹமே அங்கேயே கோபி தாலாபில் புதைந்து போய்ப் பின்னர் கடலில் வந்து சேர்ந்து, மிதந்து, போர்ச்சுகீசியர்கள் (??) கையில் கிடைத்து, அவர்கள் புயலில் மாட்டிக் கொண்டபோது கோபிசந்தனத்தோடு அந்த விக்கிரஹத்தையும் ஸ்ரீ மாத்வர் பெற்றுக் கொண்டு, உடுப்பியில் பிரதிஷ்டை செய்ததை ஏற்கெனவே உடுப்பி பற்றிய பதிவில் பார்த்தோம்.இந்த ருக்மிணி கோயில் இருக்குமிடத்தில் தான் ருக்மிணியை ஸ்ரீகிருஷ்ணர் திருமணம் செய்து கொண்டதாய்ச் சொல்கின்றனர். ருக்மிணியை ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மிணியின் வேண்டுகோளின்படி ரதத்தில் தூக்கிக் கொண்டு வருகின்றார். ருக்மிணியும் கிருஷ்ணரோடு வரச் சம்மதித்தே வருகின்றாள். பின்னர் துவாரகை வந்து கிருஷ்ணரின் பெற்றோர் சம்மதத்துடன் கிருஷ்ணர் ருக்மிணியை மணந்து கொள்கின்றார். மேலும் இந்த துவாரகையில் இருந்தே பாண்டவர்களுக்காக தூது செல்கின்றார். "நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே" என்னும் வகையில் நீள் நெடுமால் நீள நடந்து தூது சென்றதும், இங்கிருந்தே. சத்யபாமைக்காக தேவலோகத்துப் பாரிஜாதம் வந்ததும் இங்கே தான். ஆனால் இந்த ருக்மிணி தேவி செய்த ஒரு சிறு தவறாலேயே இன்று துவாரகையில் குடிநீர் கிடைக்கவில்லை என்றும் சொல்கின்றனர். இது எவ்வளவு தூரம் உண்மை எனத் தெரியாது. ஏனெனில் உள்ளூர் மக்கள் தான் வருடக் கணக்காய் இந்தக் கதைகளைச் சொல்லி வருவதாய்க் கேள்விப் பட்டோம். கதை வருமாறு:
"ஒரு முறை துர்வாசரைப் பல்லக்கில் வைத்து அழைத்து வந்த ஸ்ரீகிருஷ்ணர், ருக்மிணியோடு சென்று அழைத்து வருகின்றார். அப்போது ருக்மிணிக்குத் தாகம் எடுக்க, கிருஷ்ணர் தன் சக்தியால் நீர் வரவழைத்துப் பருகக் கொடுக்க, துர்வாசருக்குக் கோபம் வருகின்றது. ருக்மிணியைச் சபிப்பதாயும், அவள் ஆறு மாதம் தனியாய் இருக்கவேண்டும் எனவும், துவாரகையில் நீரே கிடைக்காமல் போகக்கடவது எனச் சாபம் கொடுததாயும் சொல்கின்றனர். ஆனால் ருக்மிணி நீர் தானம் செய்ததால் சாபத்தில் இருந்து விடுபட்டாள் எனவும் சொல்கின்றனர். அதே போல் இந்த ருக்மிணி கோயில் வளாகத்தில் மட்டுமே நல்ல குடிநீர் கிடைக்கும். மற்றபடி துவாரகை நகர் முழுதும் நீர் உப்பாய்த் தான் இருக்கும். கையில் கொண்டு போனால் பிழைத்தோம். இல்லாட்டிக் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் இப்போ அரசு குடிநீருக்காகப் பல ஏற்பாடுகள் செய்து வருகின்றது.
2 comments:
நல்ல பயணத்தொகுப்பு.
நன்றி உழவரே!
Post a Comment