எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, March 24, 2009

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்! தொடர்ச்சி!

திவா பேட் துவாரகானா என்னனு கேட்டிருக்கார். அதோட கண்ணனின் விக்கிரஹம் பத்தியும் கேட்டிருக்கார். தேவகியிடமிருந்து குழந்தை பிரிக்கப் பட்டதும், அந்தக் குழந்தை மாதிரியே ஒரு விக்கிரஹத்தை தேவகி வழிபட்டு வந்ததாய்ச் சிலரும், தேவகியே கண்ணன் திரும்பக் கிடைச்சதும், தன் மகனிடம், "உன் குழந்தைப் பருவத்தை நான் கண்ணால் கண்டு ஆனந்திக்கும் பேறு பெறவில்லை. எப்படி இருந்திருப்பாய் என மனம் எண்ணி, எண்ணித் துடிக்கின்றது." என்று வருந்தியதாகவும், அப்போது ஸ்ரீகிருஷ்ணரே விஸ்வகர்மாவிடம் சொல்லித் தன் குழந்தை வடிவத்தைச் சிற்பமாய் வடித்துத் தரச் சொன்னதாகவும் இருவேறு கூற்றுகள் நிலவுகின்றன. அந்தச் சிற்பத்தைத் தான் தன் தாய் இறந்ததும் ஸ்ரீகிருஷ்ணர் தானும் வழிபட்டு வந்ததாய்ச் சொல்கின்றனர். அந்த விக்கிரஹத்தையே தனக்கும், துவாரகைக்கும் முடிவு ஏற்படப் போகின்றது என்பதை அறிந்ததும், குரு பகவானையும், வாயு பகவானையும் அழைத்து, இந்தச் சிற்பம் சிதையாமல் ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்யுங்கள் என்று சொன்னதாயும், அவர்கள் பிரதிஷ்டை செய்த அந்தச் சிற்பமே இன்றளவும் குருவாயூரில் வழிபட்டுக் கொண்டிருப்பதாயும் சொல்கின்றனர். தேவகியின் சிற்பத்தையும், வழிபாட்டையும் பார்த்த ருக்மிணி கண்ணனிடம் தனக்கும் அம்மாதிரி ஒரு சிலை வேண்டுமெனக் கேட்க, இரண்டாம் முறையாகச் செய்யப் பட்ட சிற்பத்திற்கு ருக்மிணியால் வழிபாடுகள் நடந்து கொண்டிருக்க, அந்தச் சிலைதான் துவாரகையைக் கடல் கொண்டபோது பூமியில் புதைந்து போகின்றது. அது புதைந்த இடம் தான் கோபி தாலாப் என அழைக்கப் படுகின்றது.

இந்த கோபி தாலாப் என்னும் பெயர் எப்படி வந்ததென்றால் பிருந்தாவனத்தில் கண்ணன் விட்டு விட்டு வந்த கோபியர்கள் கண்ணனைக் காணும் ஆசையில் துவாரகை வந்ததாயும், அவர்கள் நீராடிய குளம் அது எனவும் சொல்கின்றனர். இந்த இடத்தில் இருந்து எடுக்கப் படும் மண்ணே கோபி சந்தனம் என்று ஸ்ரீவைணவர்களால் நெற்றியில் தரித்துக் கொள்ளப் படுகின்றது. சந்தன நிறத்திலேயே கிடைக்கின்றது. இந்த கோபி தாலாபில் புதைந்த கண்ணன் சிலை காலப் போக்கில் கடலில் முழுக, அந்தச் சிலை கோபிசந்தனங்களால் மூடியபடியே போர்ச்சுகீசியர்கள் கையில் கிடைக்க, அவர்கள் கப்பலில் உள்ள பொருட்களோடு சிலையையும் போட்டுவிட்டுக் கப்பலில் வரும்போது மேலைக்கடலில் திடீரென வந்த புயற்காற்றில் துன்பப் படும் வேளையில் ஸ்ரீமாத்வரால் கரைக்கு அழைக்கப் பட்டு புயலில் இருந்து காப்பாற்றப் படுகின்றனர். ஸ்ரீமாத்வர் கோபிசந்தனத்தோடு ஸ்ரீகிருஷ்ணர் வந்திருப்பதைத் தன் யோக சக்தியால் அறிந்து அந்தச் சிலையைக் கேட்டுப் பெறுகின்றார். அந்தச் சிலைதான் உடுப்பியில் வைத்திருக்கின்றனர். அப்பாடி, இப்போ சரியாப் போச்சா சிலைகளின் கதைகள்?? :)))))

கிருஷ்ணனுக்கு ஒரு நாளைக்குப் பதினேழு முறையாவது நிவேதனங்கள் செய்யப் படுகின்றன. எல்லாம் இனிப்பு, இனிப்புத் தான். இதைத் தவிர வித விதமான பழங்கள், தயிர், பால், வெண்ணெய் போன்றவை. துவாரகையில் பாலும், தயிரும் ஆறாய் ஓடுகின்றது நிஜமாவே. ஒரு பாவு தயிர் ( ஒரு பாவு என்பது கிட்டத் தட்ட 250 கிராம் இருக்கும்)5 ரூக்குக் கூவிக் கூவிக் கொடுக்கின்றனர். வழியெல்லாம் தயிர் விற்பவர்கள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். காலையில் முதன்முதல் செய்யப் படும் நிவேதனத்துக்கு முன்னால் தங்கத்தால் ஆன பிரஷ்?? பிரஷ் போன்ற ஒன்றால் கிருஷ்ணர் தினமும் பல் துலக்குகின்றாராம். ஆகவே இனிமே பல் தேய்க்காமல் இருக்கிறவங்க எல்லாம் தேய்க்க ஆரம்பிங்கப்பா! அதுக்கப்புறம் செய்யப்படும் நிவேதனம் முதலில் கண்ணனின் பட்ட மகிஷிகள், பலராமர், ரோகிணி, தேவகி, வசுதேவர், மற்ற ரிஷிகள், பரிவாரங்களுக்குக் கொடுத்தப்புறமே கண்ணனுக்கு. அதுவரைக்கும் கண்ணன் பொறுமையா இருக்கார். ஆகவே கவிநயா, கொஞ்சம் பொறுமையா இருங்க, நீங்களும்னு கண்ணன் சொல்றானே!

நாளைக்கு பேட் துவாரகா. எழுதியாச்சு, அப்லோட் பண்ணணும்.

1 comment:

KABEER ANBAN said...

//நிவேதனத்துக்கு முன்னால் தங்கத்தால் ஆன பிரஷ்?? பிரஷ் போன்ற ஒன்றால் கிருஷ்ணர் தினமும் பல் துலக்குகின்றாராம். ஆகவே இனிமே பல் தேய்க்காமல் இருக்கிறவங்க எல்லாம் தேய்க்க ஆரம்பிங்கப்பா! //

தங்கத்தாலான ஆலங்குச்சியோ வேப்பங்குச்சியோ ஆகியிருந்தால் இந்திய கலாசாரத்திற்கு பொருத்தமா இருந்திருக்குமோ :)))

கோபி சந்தனம் என்கிற திருமண் வரலாறு சொன்னதற்கு நன்றி