எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, May 23, 2007

சிதம்பர ரகசியம் - 18- .சித்சபையின் உள்ளே!

சிதம்பர ரகசியம் - 18- சித் சபையின் உள்ளே!

சித்சபையின் உள்ளே இருக்கும் நடராஜத் திருமேனியையும், சிதம்பர ரகசியம்னு சொல்றது என்னன்னும் பார்த்தாகி விட்டது. இந்தச் சிதம்பர ரகசியம் இருக்கும் பகுதி ஒரு திரையால் மூடப்பட்டிருக்கும். திரையை விலக்கித் தீப ஆராதனை காட்டுவார்கள்.பொன்னாலாகிய ஒரு வில்வமாலை தொங்கிக் கொண்டிருக்கும். மற்றபடி வேறு உருவம் ஒன்றும் தெரியாது. பரம்பொருளின் உருவமற்ற தன்மையைப் பிரகடனப் படுத்திக் கொண்டிருக்கும். நடராஜரின் ஆன்மா அங்கே உறைந்துள்ளதாயும் கருதப் படுகிறது. ஆத்மஸ்வரூபமாக இறைவன் அங்கே இருக்கிறார் என்றும் இறைவனின் ஆன்மஒளி உறைந்திருக்கும் இதயம் அது என்றும் சொல்லப் படுகிறது.
நம்முள்ளேயும் அந்த ஒளி ஊடுருவி நம்முள்ளேயும் இறைவன் உறைகிறார் என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும். அருவமாக நடராஜரும், சிவகாமசுந்தரியும் உறைந்திருக்கும் இடமாய்க் கருதப் படுகிறது. நடராஜர் "சொரூபம்" என்றால் சிதம்பர ரகசியம் "அரூபம்" ஆகும். இதைத் தவிர அங்கே ஸ்தாபிக்கப் பட்டிருக்கும் ஸ்படிகலிங்கமோ "ரூபரூபம்" அதாவது, அருவுருவம், உருவமானதும், உருவம் அற்றதும் ஆகும். இப்போ சித்சபையின் உள்ளே இருக்கும் மற்றக் கடவுளரைப் பார்ப்போம்.

நடராஜரையும் சிவகாம சுந்தரியையும் தவிர அங்கே "சந்திர மெளீஸ்வரர்" என்னும் ஸ்படிக லிங்கமும் உள்ளது. இந்த லிங்க ஸ்வரூபமும் தீட்சிதர்களால் தினப்படி பூஜிக்கப் படுகிறது. எப்போதில் இருந்து என்று வரையறுக்கப் படமுடியாத காலத்தில் இருந்தே பூஜிக்கப் பட்டு வருகிறது. இந்த லிங்க ஸ்வரூபத்தின் காலமும் வரையறுக்கப் படவில்லை. இது நடராஜராலேயே உருவாக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. தன் தலையில் தான் சூடிக் கொண்டிருக்கும் இளம்பிறையின் குளிர்ந்த மதுரமான கிரணங்களால் நடராஜர் இதைச் செய்தார் எனச் சொல்லப் படுகிறது. தன்னுடைய பிரதிநிதிகளாக தீட்சிதர்களை நியமித்துத் தினசரி பூஜை செய்யும்படி பணித்தார் எனச் சொல்கிறார்கள்.

சிதம்பரம் கோவிலில் வைதீக முறைப்படி வழிபாடு செய்யப் படுகிறது. மற்றக் கோவில்களின் வழிபாட்டு முறைகளோடு ஒப்பிட்டால் , மற்றச் சிவன் கோவில்களில் சைவ ஆகம வழிபாடு தான் செய்யப் படுகிறது. ஆனால் இங்கோ வைதீக முறைப்படி வழிபாடு. இதுபற்றி முன்னொருமுறை ஒரு நண்பர் சந்தேகம் எழுப்பி இருந்தார். ஆனால் இன்று வரை எனக்கு அதற்கான ஆதாரம் கிட்ட வில்லை. இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தினசரி 6 முறைகள் அபிஷேஹம், ஆராதனை செய்யப் படுகிறது, தீட்சிதர்களால். வெள்ளை வெளேரென இருக்கும் ஸ்படிக லிங்கத்தைத் தவிர இன்னொரு நடராஜரின் பிரதியும் இங்கே உள்ளது. அது தான் "ரத்ன சபாபதி"!

கிட்டத் தட்ட நடராஜரின் பிரதியான இந்த நடராஜர் மரகதக் கல்லால் ஆனவர். இவரை தினமும் செய்யும் 6 கால வைதீக வழிபாட்டில் 2-ம் கால வழிபாட்டின்போது பூஜிக்கிறார்கள். சாதாரணமாய்ப் பார்க்கையில் கறுப்பாய்த் தான் இருப்பார் இவர். அபிஷேஹ ஆராதனைகள் முடிந்து கற்பூர தீப ஆராதனை இவரின் எதிரே காட்டப் படும்போது உதயக் கால சூரியனைப் போல் செக்கச் சிவந்த நிறத்துடன் ஒளிவிட்டுப் பிரகாசிப்பார். இவரைத் தரிசிக்காமல் சிதம்பரம் நடராஜரையும், சிதம்பர ரகசிய தரிசனத்தையும் பார்த்த பேறு கிட்டாது எனவும் சொல்லப் படுகிறது. இவர் வந்த வரலாறு? சிதம்பர புராணம் என்ன சொல்கிறது? நாளை பார்ப்போம்.

Friday, May 18, 2007

சிதம்பர ரகசியம் - 17 - ரகசியமாவே இருக்கட்டும்!

நானும் யோகா கத்துக்கிட்டு தினமும் பயிற்சியும் செய்யறேன். ஆனால் என்னோட யோககுரு என்னுடைய உடல்நிலைக்குத் தகுந்த யோக ஆசனங்களைத் தவிர்த்து மற்றதைச் சொல்லிக் கொடுக்கவில்லை. குண்டலினி யோகம் பற்றிப் பேசி இருக்கிறோம் என்றாலும் அவர் அதை எனக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. நான் கற்றுக் கொண்டது வெறும் மூச்சுப் பயிற்சி தான். சிலர் அதையே குண்டலினி யோகப் பயிற்சி எனவும் நினைத்துக் கொள்ளலாம். ஏனெனில் "சவாசனம்" என்னும் அசையா நிலை யோகத்தில் நம் உடலின் உள்ளங்கால் முதல் ஆரம்பித்து உச்சந்தலை வரை உடலில் அமைதிப் படுத்த முயற்சி செய்வோம். அந்த நிலையில் கூட ரொம்பவே ஆழமான அப்பியாசம் வேண்டாம் என என்னோட யோக குரு சொல்லி இருக்கிறார். திரும்பி வரத் தாமதம் ஆவதோடு இல்லாமல் உலக இயல்புக்கு மாறுபட்டு விடுகிறார்கள் என்றும் சொல்லுவார். யோக ஆசனங்கள் செய்யும்போது நம் மனது அதில் ஒருமைப் பட்டால் போதுமானாது என்பது அவர் எனக்குச் சொன்ன முக்கியமான ஆலோசனை. இதை நினைவில் வைத்துக் கொண்டு படிக்கவும். திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன் எனத் தவறாக நினைக்க வேண்டாம்.
*************************************************************************************

அனஹதா: மனித உடலின் இருதய பாகம் இது. 12 இதழ் கொண்ட தாமரைப்பூவடிவில் உள்ளது. பச்சை நிறமான இதுக்குக் காற்றின் சக்தி உள்ளது. இந்தக் காற்று இல்லாவிட்டால் நாம் என்ன ஆவோம்? தவிர, நாம் உள்ளிழுப்பதும் காற்றுத் தான். வெளி விடுவதும் காற்றுத் தான். (இ.கொ. இப்போப் புரியுதா? சித்தர்களின் கண்டுபிடிப்பின் அற்புதம்?) விஞ்ஞானம் எல்லாம் நிரூபிக்கும் முன்னேயே மெய்ஞானம் பெற்ற நம் சித்தர்கள் ஒரு நாளும் தவறாய்ச் சொல்லவில்லை இல்லையா?

உணர்வுகள்; ஏமாற்றுதல், ஏமாறல், குழப்பமான மனநிலை, வருந்துதல், நம்பிக்கை, ஆசை, எதிர்பார்ப்பு, பாரபட்சம் இன்மை, திமிராய் இருத்தல், மட்டம் தட்டுதல், பொஸஸிவாக இருத்தல்(தமிழிலே என்னங்க?)

ஜீவாத்மா இங்கே தான் இருக்கிறது. என் மனசே சரியில்லை, நெஞ்சு வலிக்கிறது அவன் செய்த தப்பைப் பார்த்தால் என்றெல்லாம் சொல்கிறோமே, அப்படிப் பட்ட மனித மனத்தின் இன்ப, துன்ப நிலக்குக் காரணமான மனோதத்துவத்தைச் செயல் ஆற்றுவது இங்கே தான்.

அதி தேவதைகள்: வாயு, இஷா, காகினி.

உடலில் இது இருக்கும் இடம்: இருதயம், தோல், உடல்நிலையைச் சமமாக வைத்திருக்கும் இது சரியாகச் செயல்பட்டால்.

விஷுத்தா: கழுத்துப் பாகம். 16 இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்பு. இது எல்லை இல்லாத அகன்ற பரந்த ஆகாயத்தைக் குறிக்கிறது. ஆகையால் ஆகாயம் எவ்வாறு நிறமற்றதோ அவ்வாறே இதுவும் நிறமற்றது. நாம் செய்யும் வேலைகளில் எது சரி, எது தப்புன்னு முடிவு எடுக்கப் படும் இடம் இங்கே தான். நம்முடைய கற்பனா சக்தி பெருகுவதற்கும், நம்முடைய சுயம் வெளிப்படுவதும் இங்கே இருந்து தான். இது "பிந்து"சக்கரத்திற்கு மிக மிக அருகில் உள்ளது. இங்கே விஷமும் தயார் நிலையில் உள்ளது. அமிர்தமும் தயார் நிலையில் உள்ளது. நாம் எதை எடுத்துக்கறோம்னு சொல்றது நம்மோட எண்ணங்களைப் பொறுத்து. சிலபேர் சுடுசொல் சொல்லும் போது விஷம் போல் பேசுகிறான் என்கிறோம். அவன் வார்த்தையை விழுங்க முடியவில்லை. அவ்வளவு விஷம் என்கிறோம். எல்லாம் வருவது இங்கே இருந்து தான். நம் உள்ளம் பால் போல் இருந்தால் அமிர்த மயமான வாக்குப் பிறக்கும். நம்முடைய "விதி"யின் ரகசியம் இங்கே தான் உள்ளது. நம்முடைய பேச்சிலும், செயலிலும் விதி நிர்ணயிக்கப் படுகிறது. இது மூடிக் கொண்டால் மரணம் சம்பவிக்கும். திறந்து கொண்டால் நேர் எதிமாறாக நடக்கும். நாம் முக்தி நிலையைத் தன்னால் அடைகிறோம். எப்படி எனில் நம்முடைய எதிர்மறையான எண்ணங்கள் எல்லாம் மாறி ஞான மார்க்கத்தில் மனமும், உடலும் திரும்பும். ஞான மார்க்கத்தை விரும்பிக் கற்பர்.

அதி தேவதைகள்: அம்பாரா, சதாசிவம், ஷாகினி.

உடல் பாகம்: தைராயிடு சுரப்பிகளும், காதுகளும்.
இவை இல்லாவிட்டால் உடல் வளர்ச்சியும் இல்லை, மன முதிர்ச்சியும் இல்லை.

அஜ்னா: நம்முடைய இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் பெண்கள் நெற்றிப் பொட்டு வைக்கும் இடத்தில் உள்ளது. நெற்றிப் பொட்டைப் "பிந்து" என்று சொல்லும் வழக்கமும் உண்டு. இந்தப் பிந்து இதற்குப் பின்னால் தான் இருக்கிறது. அடுத்து அதைத் தான் பார்க்கப் போறோம். இந்த அஜ்னா இருக்கும் இங்கே தான் இட நாடி, பிங்கள நாடியுடன் சேர்ந்து வரும் சூஷ்மன நாடியும் சேரும். இந்த மூன்று நாடிகளும் நம் நெற்றிபோட்டில் தான் ஒன்று சேர்கின்றன. இங்கே வரும் குண்டலினி சக்தியானது இங்கிருந்து மேலே உள்ள ஸஹஸ்ராரத்துக்கு மேல் எழும்பும்.

உணர்வுகள்: தூக்கத்தில் நாம் காணும் கனவு இதனால் உணரப் படுகிறது. நம்முடைய கற்பனைக் கனவுகளும் இதனால் உணரப் படுகிறது. நாம் படுத்துக் கொண்டு காணும் கனவு மட்டுமில்லாது, பகல் கனவும் கூட இதனால் உணரப் படுகிறது.

அதி தேவதைகள்: அர்த்த நாரீஸ்வரர், ஹாகினி சக்தி

பிந்து: இது சக்கர வடிவில் ஆனது. நம்முடைய தலைக்குப் பின்னால் நாம் சாதாரணமாய்த் தலையை முடிந்து கொள்ளும் இடத்தில் உள்ளது. இது ஒரு சின்னப் புள்ளியைப் போல் தோன்றும். இங்கே அடி பட்டால் என்ன வேணாலும் நடக்கலாம். நம் முன்னோர்கள் பின்னந்தலையில் மட்டும் அடி படவே கூடாது என்பதோடு அந்தக் காலங்களில் ஆண்களும் முடி வளர்த்துக் குடுமி வைத்திருப்பார்கள். அதன் காரணமே இந்தப் "பிந்து"வைப் பாதுகாக்கத் தான். இப்போதும் ஆங்கில மருத்துவத்தில் தலையில் குறிப்பாய்ப் பின்னந்தலையில் அடிபடுவது கூடாது எனச் சொல்லப் படுகிறது. இங்கே அமிர்தமும் உற்பத்தி ஆகும், விஷமும் உற்பத்தி ஆகும். நம்முடைய உடலும், மனமும் இயங்குவது இதன் மூலம் தான். தேக்கி வைக்கப் பட்ட வெள்ள நீர் போல் இங்கே நம்முடைய செயல்களைப் பொறுத்து "ஆனந்தப் பெருவெள்ளமும்" ஏற்படலாம். மாறாகவும் ஏற்படலாம். ஒண்ணுமே இல்லாமலும் இருக்கலாம். ஒரு நீர்த்தேக்கம் போன்றது. இங்கிருந்து தான் "ஓங்காரம்" பிறக்கிறது. தோன்றி மறைகிறது. அல்லது புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேருகிறது. புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேருவது தான் உத்தமம். இது நம் உடலின் விஷுத்த சக்கரத்தோடு சேர்ந்து வேலை செய்யும். இது சரியாக இயங்காவிட்டால் அசைவுகளே இல்லை. சிலருக்கு ஏற்படும் புத்தி மாறாட்டத்துக்கும் இதுவே காரணம்.

ஸஹஸ்ராரம்: கடைசியில் முடிவுக்கு வந்துட்டோம். இது தான் நாம் கிடைக்குமா, கிடைக்குமா என ஏங்கும் இடம். ஆயிரம் இதழ் தாமரைப் பூவின் உருவம் கொண்ட இது தான் எல்லாவற்றுக்கும் மூலப் பொருள். 20 மடிப்புக்கள் கொண்ட இந்தத் தாமரைப் பூவின் ஒவ்வொரு மடிப்பிலும் 50 இதழ்கள் கொண்டது.

நம்மைப் பற்றில் இருந்து விடுபடச் செய்யும் இது. இறை சக்தியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. ஒன்றே தேவன், தேவனே ஒன்று" என அனைத்தையும் இறைவனாய்ப் பார்க்கும் பெருந்தன்மையான எண்ணம் இங்கே தான் தோன்றும். அனைத்துக்கும் ஆதாரம். இறைவனின் இருப்பிடம். நம்ம மதுரையம்பதி அம்பாளின் இருப்பிடம்னு சொல்லுவார். அப்படியும் சொல்லலாம். "ஸ்ரீசக்ர ராஜ சிம்ஹானேஸ்வரி"யான "ஸ்ரீலலிதை" உறைவிடம்னும் சொல்லலாம். இதைக் கண்டு உணர்ந்தவர் வெகு சிலரே ஆவார். பாரதியார் அவர்களில் ஒருவர். இதைத் தான் அவர் தன்னுடைய "அக்கினிக் குஞ்சு" பாட்டின் மூலம் சொல்லுவதாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன்.

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!"

என்று தன்னுடைய மனதில் ஒரு சிறு பொறி போல் இருந்த இறை உணர்வு, மனதின் சகல ஆசா பாசங்களையும் பொசுக்கி விட்டு மனத்தை நிர்மலமாய் வைத்தது என்கிறார். பெறற்கரிய பேறு பெற்றதாய்ப் பெருமையுடம் ஆடியும் பாடுகிறார். இறைவனைக் காணாமல் இவ்வாறு கவலை இல்லாமல் குதிக்க முடியுமா? பொறி என்னமோ சின்னது தான். இருந்தாலும் ஒரு பொறி போதுமே என்கிறார் மனதைச் சுட்டுப் பொசுக்க.

இதில் இருந்து தான் "சக்தி" மற்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும். பிரதான சக்தி என்றும் சொல்லலாம். நீரில் இருந்து எவ்வாறு மின்சாரம் எடுக்கப் பட்டு நம் அனைவரையும் வந்து அடைகிறதோ அது போல் இங்கிருந்து தான் நமக்குத் தேவையான மூலசக்தி கிடைக்கிறது.

ஆனால் நாம் அதைச் சரியாகப் பிரயோகம் செய்வது இல்லை. மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும், அல்லது உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே எழுப்பிப் படிப் படியாக மேலே கொண்டு வந்து அது பிந்து வெள்ளத்துடன் ஒன்று சேர்ந்து ஸஹஸ்ராரத்தை அடையும்போது மனிதன் "சச்சிதானந்தப் பெருவெள்ளத்தில்" மூழ்குகிறான். யோக சித்தி கிடைக்கிறது. தான் யார் என்பதை உணருகிறான்.

இந்த யோகத்தை பின் பற்றித் தான் "சிதம்பரம்" கோயில் கட்டப் பட்டுள்ளது. அநேகமாய்த் தென்னாட்டில் குறிப்பாய்த் தமிழ்நாட்டுக் கோயில் அமைப்புக்களும் சரி, கோயில் கோபுரங்களும் சரி, இம்மாதிரியான யோகக் கலையைப் பின்பற்றித் தான் கட்டப் பட்டது. கட்டியவர்களும் இதன் அர்த்தத்தை முழுதும் உள்வாங்கிக் கொண்டு தான் கட்டினார்கள். காலத்தைக் கடந்து நம் கோயில்கள் நிலைத்து இருப்பதே இதனால்தான். அதுவும் மூலஸ்தானக் கோபுரங்கள் அநேகமாய் ஸஹஸ்ரார முறையில் தான் கட்டப் பட்டது. இனி சிதம்பரம் மறுபடியும் போவோம்.

Thursday, May 17, 2007

சிதம்பர ரகசியம் - 16 குண்டலினி யோகம்னா என்ன?

மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன். யாரும் தனியாக முயல வேண்டாம்.

மூலாதாரம்: 4 இதழ் கொண்ட தாமரைப்பூவின் வடிவில் இருக்கும் இங்கே தான் குண்டலினி சக்தியானது ஒரு பாம்பைப் போல் உறங்குகிறது. மலத்துவாரத்திற்கு மேல் இருக்கும் இது பூமியின் சக்தியைக் கொண்டது. மஞ்சள் நிறமானது. எலக்ட்ரிகல் சர்க்யூட்டில் உள்ள நெகட்டிவ் போலைப் போல் வேலை செய்யும் இது குண்டலினி சக்தி எழும்புவதற்குக் காத்திருக்கிறது. இட, பிங்கள, சூஷ்மன நாடிகள் மூன்றும் இங்கே தான் ஒன்று சேர்ந்து உள்ளது. அதற்கு இது தான் ஆதாரமாயும் உள்ளது.

இதன் அதி தேவதை: விநாயகர், இந்திரன், பிரம்மா, தாகினி.

இது நம் உடலில் மலத்துவாரம், மூக்குத் துவாரம், பாதங்கள், ஆடுசதை, தொடையின் மறுபக்கம் காலை நம் இஷ்டத்துக்கு வளையவும், நடக்கவும் வைக்கும் நரம்பு மண்டலம்.

உணர்வுகள்; மலத்தை வெளியேற்றுதல், பலவிதமான அனாவசிய பயங்கள், குற்ற உணர்ச்சி.

ஸ்வாதிஷ்டானம்: மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலே ப்யூபிக் போனில் அமைந்துள்ளது. 6 இதழ் கொண்ட இது நீரின் சக்தியைக் கொண்டது. வெள்ளியை உருக்கி வார்த்தாற்போல் இருக்கும்.

உணர்வுகள்: மயக்கநிலை, தன்னை மறந்த நிலை என்றும் சொல்லலாம். பாலுணர்வுத் தூண்டுதல் ஏற்படும். இங்கே இருந்து குண்டலினையை மேலே எழுப்ப மிகப் பிரயத்தனப் பட வேண்டும். பாலுணர்வை முற்றிலும் வெல்ல வேண்டும்.

இதன் அதி தேவதை: வருணன், விஷ்ணு, ராகினி

நம் உடலில் உள்ள சிருஷ்டிக்குக் காரணமான டெஸ்டெஸ் மற்றும் ஓவரிஸ் இதனோடு சம்மந்தப் பட்டது. செக்ஸுவல் ஹார்மோன் உற்பத்தி ஆகும் இடம்.

மணிப்பூரம்: தொப்புள் இதன் இருப்பிடம். 10 இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்புக் கொண்ட இது நெருப்பின் சக்தியுடன் சம்மந்தப் பட்டது. சிவந்த நிறம் கொண்டது.

உணர்வுகள்: தாகம், பசி, பொறாமை, ஏமாற்றுதல், வெட்கம், பயம், அசட்டுத் தனம், துக்கம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். மன உறுதியுடன் சம்மந்தப் பட்ட இது நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும் உறுப்புக்களையும் தூண்டும்.

அதி தேவதை: வாஹினி, ருத்ரன், லாகினி

உடல் பாகங்கள்: ஜீரண உறுப்புக்கள், கண்கள், பாதங்கள், கணையத்துடன் சம்மந்தப் பட்டு ஜீரண நீர் உற்பத்தி அடையச் செய்கிறது.

Wednesday, May 16, 2007

சிதம்பர ரகசியம் - 15 - தெரியாமல் செய்யாதீங்க!

யோகப் பயிற்சியில் "பிராணாயாமம்" என்ற ஒரு பயிற்சி சொல்லிக் கொடுப்பார்கள். அது சாதாரணமான மூச்சுப் பயிற்சி. ஆஸ்த்மா வியாதியஸ்தர்களுக்கும், இன்னும் சிலருக்கு மூச்சு ஒழுங்கு செய்யவும் பயன்படும் இது. இதற்கும் குண்டலினி யோகம்" என்பதற்கும் ரொம்பவே வேறுபாடு உண்டு. மூச்சுப் பயிற்சியே ஆசான் இல்லாமலோ, சரியாகச் செய்யாவிட்டாலோ விளைவுகள் ஏற்படும். மூச்சைச் சரியாக உள்ளடக்காவிட்டாலோ, வெளிவிடும்போது தவறாய் விட்டாலோ வயிற்றில் அல்சர் உள்ளவர்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. மற்றவருக்கும் ஏற்படும். இது அனுபவபூர்வமான உண்மை. ஆகையால் குண்டலினி யோகம் என்பது நம் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது கண் என்று சொல்லப் படும் ஞானக் கண்ணைத் திறந்து அதன் மூலம் இறைவனும், அவன் சக்தியும் நம்முள்ளேயே உறைவதைக் காண்பது. இதைத் தான் சமாதி நிலை என்றும் சொல்லுகிறார்கள். இனி குண்டலினி யோகத்தைப் பற்றி. இதைப் பற்றி இங்கே எழுதுவது தேவையா எனவும் நினைத்தேன். சிதம்பர ரகசியத்தின் உள் அர்த்தம் புரியத் தேவை எனத் தோன்றியது.

நம் உடலில் முதுகெலும்பின் கீழ்ப்பாகத்தில் மூன்று நாடிகள் ஒன்று சேர்கின்றன. தலை உச்சியில் இருந்து கீழ் இறங்கி இருக்கும் சூஷ்மன நாடியானது, இட, பிங்கள நாடியுடன் அங்கே தான் ஒன்று சேர்கிறது. அது ஒரு பாம்பு போல் சுருட்டிக் கொண்டிருக்கும் எனச் சொல்கிறார்கள். இங்கே இருக்கும் உள்சக்தியை எழுப்பிக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வந்து தலை உச்சிக் கொண்டு வந்து சேர்ப்பது தான் குண்டலினி யோகம். இந்தப் பிரபஞ்சமானது எவ்வாறு பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனதோ அவ்வாறே மனித சரீரமும் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது. ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு சக்தி, அதாவது ஒவ்வொரு பஞ்சபூதங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன. நம் நாட்டுக் கோயில்களும், முக்கியமாய்த் தமிழ் நாட்டுக் கோயில்களும் நம் மனித உடல் அமைப்பைக் கொண்டது. இதை மனதில் இருத்திக் கொண்டு சிதம்பரம் கோயிலின் ரகசியத்தைப் பார்க்கவேண்டும்.

மூன்று நாடிகள் ஒன்று சேரும் இடம் "மூலாதாரம்" எனப்படுகிறது.இது நம் உடலில் முதுகெலும்பின் கீழ் மலத்துவாரத்துக்குச் சற்று மேலே அமைந்துள்ளது. 4 இதழ் கொண்ட அமைப்புடன் கூடிய இதைப் பூமிக்குச் சமமாகச் சொல்கிறார்கள். மஞ்சள் நிறம் கொண்ட 4 இதழ் தாமரைப் பூவுக்குச் சொந்தமானது. இதற்கெனத் தனியான குணங்களும் உண்டு. அவை பின்னால்.

மூலாதாரத்துக்கு 2 விரல் கடை மேலே அமைந்துள்ளது "ஸ்வாதிஷ்டானம்" 6 இதழ் கொண்ட தாமரைப்பூவின் அமைப்புக் கொண்ட இது நீருடன் சம்மந்தம் கொண்டது. உருக்கி வார்த்த சுத்த வெள்ளியின் நிறம் கொண்டது.

Tuesday, May 15, 2007

சிதம்பர ரகசியம் - 14 - மூச்சை இழுத்து விடுங்க!

யோகம் அறிந்தவர்களும், அதன் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்த முயன்றவர்களுமே அறிந்த உண்மை இது. நாம் இப்போ தினமும் செய்யற ஆசனங்கள் எல்லாம் யோகம் ஆகி விடாது. உண்மையாக யோகக் கலையைக் கற்றவர் இன்று மிகச் சிலரே இருக்கின்றனர். இந்த யோகக் கலையின் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்தி வேண்டியபோது விடுவதற்கும், இழுப்பதற்கும் தெரிந்தவரே யோகி ஆவார். இது சித்தர்களால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன். பதஞ்சலி முனிவரும், வியாகரம பாதரும் சித்தர்களில் சேர்ந்தவர்கள். அவர்களால் முடிந்தது. இவர்கள் இருவரும் முக்தி அடைந்ததும் ராமேஸ்வரத்தில் என்று சொல்லுவார்கள். தென்னாட்டைச் சேர்ந்த இவ்விரு சித்தர்களும் சேர்ந்து இறைவனுக்கு எழுப்பிய கோயில் தான் இந்கச் சிதம்பரம் கோயில். நம் உடலின் அமைப்புத் தான் பொதுவாகக் கோயில் அமைப்பும். இதில் சிதம்பரம் கோயில் ஞான ஆகாசம் எனப்படும். "சித்" என்றால் "ஞானம்" என்றும் "அம்பரம்" என்றால் "ஆகாசத்தையும்" முறிக்கும்.

சித்தர்கள் மூச்சுக்கலையை விஞ்ஞானத்தின் உதவியின்றியே பயின்றவர்கள். மூச்சைக் கட்டுப் படுத்தத் தெரிந்தவர்கள். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை தரம் மூச்சு விடுகிறான் என்பதைக் கண்டறிந்து அதைக் கட்டுப் படுத்தி ஞானம் அடைந்து சகல சித்தியும் கைவரப் பெற்றவர்கள். ஒரு சாதாரண மனிதன் 4 வினாடிகளுக்கு ஒருமுறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடுகிறான். ஒரு நிமிஷத்திற்குப் பதினைந்து முறையும், ஒரு மணி நேரத்திற்கு, 900 முறையும், ஒரு நாளுக்கு 21,600 முறையும் மூச்சு விட்டு இழுக்கிறான். இதைக் குறைக்கத் தான் யோகக் கலை பயன்படுகிறது. அதன் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்தி 21/2(இரண்டரை) மணி நேரத்துக்கு ஒரு முறை மூச்சை இழுத்து வெளியிட்டால், பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலரைப் போலவும், மார்க்கண்டேயரைப் போலவும் இருக்க முடியும், வாழ முடியும்.

ஒரு பிறந்த குழந்தையைப் பாருங்கள். அது மூச்சு விடுவதை! முதலி பிறந்து கொஞ்ச நாட்களுக்கு மிகச் சரியாக முச்சை விட்டு இழுக்கும். குழந்தையின் மூக்கு நுனியில் இருந்து அதன் உச்சிக் குழி இருக்கும் உச்சந்தலைக்கு 12 அங்குலம் நீளம் இருக்கும். குழந்தையின் உச்சந்தலை "படபட"வென அடித்துக் கொண்டே இருப்பதைக் கண்டிருக்கலாம்.குழந்தையின் உள்நாக்குக்கும், இந்த உச்சந்தலைக்கும் ரகசிய வழி இருப்பதாயும், அதுதான் இறைவன் இருப்பிடம் எனவும் சொல்லப் படுகிறது. அதனால் தான் குழந்தை பிறந்ததும் தானே சிரிப்பதற்கும், அழுவதற்கும் இறைவன் விளையாட்டுக் காட்டுகிறார் என்று சொல்கிறோம்.
6 மாதத்துக்கு மேல் ஆகிக் குழந்தையின் உச்சிக் குழி மூடியதும் இதில் 4 அங்குலம் குறைகிறது. குழந்தையும் நம்மைப் போல் மூச்சு விட ஆரம்பிக்கிறது. 21,600 ஒரு நாளைக்கு என்ற கணக்குப்படி நம் வாழ்நாள் பூராவுக்கும் வேண்டிய மூச்சை நாம் அதிகமாய்ச் செல்வழிக்கிறோம். நடக்கும்போது, நிற்கும்போதும், ஓடும்போதும், விளையாடும்போதும், தூங்கும்போதும் என்று செலவு செய்வதால் குறைந்து வருகிறது. இந்த ரகசிய வழியானது முறையான யோகப் பயிற்சியில் மீண்டும் திறந்து கொள்ளும். நம் உள்மனதில் உள்ள மூன்றாவது கண் எனச் சொல்லப் படும் ஞானக் கண் திறந்து கொள்ளும். உள்ளொளி பிறக்கும். ஞானம் சித்தியடையும்.

டிஸ்கி: அடுத்து இந்த ஞானக் கண் திறக்கும் முறையான "குண்டலினி யோகம்" பற்றி விவரம் கொடுக்கப் போகிறேன். யாரும் தவறிக் கூட முயற்சி செய்து பார்க்கவேண்டாம். விளைவுகள் மோசமாக இருக்கும். முறையான குருவிடம் முறையான பயிற்சி இல்லாவிட்டால் ஏற்படும் விளைவுகளில் மரணம் கூட சம்பவிக்கலாம். திரு ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய "பாபா" திரைப்படத்தில் காட்டிய யோக முத்திரை தவறு எனவும் அதனால் தான் படம் தோல்வி அடைந்ததோடு அல்லாமல் வேறு மோசமான விளைவுகளைச் சந்தித்தார் எனவும் சொல்லப் பட்டது. ஆகவே படிக்கிறதோடு நிறுத்திக் கொள்வோம்.

Friday, May 11, 2007

சிதம்பர ரகசியம் -`13 - ரகசியம், பரம ரகசியம்!

பிரபஞ்சமாகிய இந்த ஆடலரங்கத்தில் இடை விடாது ஆடும் இந்த ஆடலரசன் ஆடவில்லை எனில் நாம் வாழ்வது எங்கே? இந்த ஆடலின் மகத்துவத்தைச் சொல்லி முடியாது. அவன் ஆடுவது ஆனந்த தாண்டவம். இந்தத் தாண்டவம் பலவகைப் படுகிறது. அது பற்றிப் பின்னால் பார்ப்போம். இப்போது சிதம்பரம் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள நடராஜர் சிலை பக்கம் சிற்பத்தின் வலது பக்கமாய் பார்த்தோமானால் ஒரு திரை தொங்க விடப் பட்டிருக்கும்.அந்தத் திரையை எல்லா நேரமும் திறந்து வைத்துத் தரிசனம் செய்து வைக்க மாட்டார்கள். ஏனெனில் அதற்குள்ளே தான் "சிதம்பர ரகசியம்" உள்ளது. இது தான் இந்த்க் கோயிலின் முக்கியத்துவமும் புனிதமும் கூட. இறைவனின் உருவ தத்துவமான சிவலிங்க தத்துவத்தை மட்டுமல்லாது உருவமற்ற அந்தப் பரம்பொருளின் அரூப தத்துவத்தையும் உணர்த்துவது. எல்லையற்றப் பரம்பொருள் எங்கும் விரிந்து பரந்து இருப்பதைக் குறிக்கும்.

ஆகாயம் எவ்வாறு உருவமில்லாமல் உருவம் இருப்பதைப் போல் இருக்கிறதோ அது போல் இந்தப் பரம்பொருளும் உருவமற்றது. உருவம் இருப்பது போல் உள்ளது. எல்லையற்று விரிந்து பரந்து காணப்படுவது. ஆதியில் இறைவனை உருவ வழிபாடு செய்து வழிபட்டதில்லை. ஆனால் சாதாரண மனிதனுக்கு இறைவன் என்ற ஒரு உருவம் தேவைப் பட அவனுடைய செள்கரியத்துக்காக ஏற்பட்டது தான் உருவ வழிபாடு. காலப் போக்கில் வழிபாட்டில் இரு முறைகள் ஏற்பட்டன. ஒன்று உருவ வழிபாடு. மற்றது அருவ வழிபாடு. அருவ வழிபாடு நிர்குண உபாசனை எனப்படும். இது எல்லாராலும் முடியாதது. சாதாரண மனிதனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று.

கடவுளைத் தன் மனத்தினுள்ளே நிறுத்தி அவனின் பரிபூரணப் பேரானந்தத்தைப் பெற எல்லாராலும் முடியாது. யோகிகளும், ஞானிகளும் அதற்கெனப் பயிற்சிகள் பல செய்து, தங்கள் தவத்தாலும், தியான வழிபாடுகளாலும் அடைந்த ஒன்றைச் சாதாரண மனிதன் அடைய முடியுமா? வழிப்பாடுகளிலேயே மிகச் சிறந்த ஒன்றான இறைவனைத் தன்னுள்ளே காணுதல் எல்லாராலும் முடியாத ஒன்று அல்லவா?

ஆனால் நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றைப் புரிந்து கொள்ளும் ஒரு வழிமுறை தான் இந்தச் சிதம்பர ரகசியத்தில் உள்ளது. அதை நமக்குக் காட்டி சொல்லாமல் சொல்வது தான் சிதம்பர ரகசியம். யோகிகளும் ஞானிகளும், தங்கள் மனதையே இந்த ஆகாயமாக நினைத்துக் கொண்டு அங்கே உள்ள தாமரைப் பூவில் இறைவனை ஆவிர்ப்பவித்து வழிபட்டு தன்னுள்ளே உள்ள பரிபூர்ண இறை சக்தியைக் கொண்டு பேரானந்த நிலை எட்டுவது தான். இதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். இது யோக சாஸ்திரமும் சம்மந்தப் பட்டது. நம்முடைய உடலின் மூலநாடிகளைக் கிளப்பி, மனமாகிய தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் இறை சக்தியைத் தலை உச்சிக்குக் கொண்டு போய்ப் பேரானந்த நிலையை எட்டுவதே ஆகும்.

(விளக்கம் தொடரும்.) முடிந்தவரை இன்னும் எளிமையாகத் தர முயற்சி செய்கிறேன்.

Tuesday, May 01, 2007

சிதம்பர ரகசியம் -12 - "நம சிவாயா" வாழ்க!

படைத்துக் ,காத்து, அழித்து, மறைத்து, அருளும் நடராஜரின் திரு உருவில் உள்ள அர்த்தங்கள் தான் எத்தனை? இப்போது இந்தக் கட்டுரைய எழுதும்படி என்னைத் தூண்டியதும் அவர்தான், அதைப் படிக்கும்படியான உணர்வை உங்களுக்குத் தூண்டுவதும் அவர்தான். இப்படி எல்லாமாக நிறைந்திருக்கும் நடராஜரின்ு உருவமே "ஓம்" என்னும் எழுத்தைப் போல் இருக்கிறது என்று ஏற்கெனவே சொன்னேன். உலக மக்களைத் துன்பத்தில் இருந்து விடுவித்து முக்தி கொடுக்கவும் தான் அவர் ஆடுகிறார். அவர் கையில் இருக்கும் "டமரூ"வின் சப்ததில் மக்களை அழைக்கிறார் எனக் கொள்ளலாம். இதைத் தவிர டமரூவின் சப்தத்தில் தான் சிரு்ஷ்டியே நடக்கிறது. தன் கைகளால் பாதுகாப்பும் அளிக்கிறார் உலக மக்களுக்கு அபய ஹஸ்தத்தின் மூலம். இந்த அபய ஹஸ்தம் தான் ஸ்திதியையும் காட்டுகிறது. நெருப்பை ஏந்தி இருக்கும் கையானது அவர் நமக்கு அளிக்கும் சத்தியப் பிரமாணத்தைக் காட்டுகிறது. "என் காலடியில் நீ வந்தாய் உனக்கு என்னுடைய பாதுகாப்பு உண்டு" என்று காட்டுகிறார். அதைத் தான் தன்னுடைய நடனமாடும் இடது காலை இடக்கையால் சுட்டியும் காட்டுகிறார். முயலகனை அழுத்தும் வலக்கால் நாம் இவ்வாறு நம் மனத்தைக் கட்டுப் படுத்த வேண்டும் எனக் காட்டுகிறது. தூக்கி நிற்கும் இடக்காலோ சொல்லாத வி்ஷயங்களே இல்லை. அதைத் தான் "குஞ்சிதபாதம்" எனச் சொல்கிறார்கள். இந்தக் குஞ்சித பாதத்தைப் பணிந்தால் நமக்கு இவ்வுலக பந்தங்களில் இருந்து விடுபட்டுப் பேரானந்த நிலையை அடையலாம் என்று சொல்கிறார். இது மட்டுமா?

"மருவுந்துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் "சிவாய நம" என ஓதே." (உண்மை விளக்கம்-மாணிக்க வாசகர்)

"நமசிவாயா" என்னும் ஐந்தெழுத்துப் பஞ்சாட்சரம் தான் அவரின் உடலின் அங்கங்களும் கூட. அக்னியை ஏந்தும் கையானது "ந" என்னும் எழுத்தையும், கால்கள் "ம" என்னும் எழுத்தையும், கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கை "சி" என்னும் எழுத்தையும், டமரூ வைத்திருக்கும் கை "வ" என்னும் எழுத்தையும், அபய ஹஸ்தம் "யா" என்னும் எழுத்தையும் குறிக்கிறது.

"மாயை தனை உதறி வல்வினையைச் சுட்டு மலம்
சாயவமுக்கு அருள் தானெடுத்து - நேயத்தால்
ஆனந்த வாரிதியிலான் மாயைத் தானழுத்தால்
தானெந்தையார் பாதம் தான்" (உண்மை விளக்கம்,மாணிக்க வாசகர்)

"அரன் துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம்
அரனுற்றணைப்பில் அமருந்திரோதயா
அரனடி யென்னும் அனுக்கிரகம் என்னே" (திருமந்திரம், திருமூலர்)

டமரூவின் ஓங்கார நாதத்தில் இருந்து தான் மொழி பிறந்தது என்று சொல்கிறார்கள். சிிருஷ்டி ஆரம்பித்தது இந்த ஓங்கார நாதத்தில் இருந்து தான். அபய ஹஸ்த முத்திரை காத்தல் தொழிலைச் செய்கிறது. நெருப்பு ஏந்தி இருக்கும் கை அழித்தலைக் குறிக்கிறது. முயலகனை அழுத்தும் வலக்கால் மாயையை அழுத்துவதையும் மறைத்தல் தொழிலையும், தூக்கிநிற்கும் இடக்கால் அருளுவதையும், அந்த இடக்காலைச் சுட்டும் கை என்னிடம் வந்து சேர் என்றும் தெரிவிக்கிறது. இதில் இருந்து இந்த ஐந்தொழில்களைச் செய்பவர்கள் ஆன பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து பேரும் நடராஜருக்குள் அடங்குபவர்கள் என்றும் இவ்வுலகு அவரில்லாமல் இல்லை எனவும் தெரிய வருகிறது. தத்துவங்களும், உரைகளும், பாக்களும் அவனருளன்றி இல்லை என்பதோடு அல்லாமல் அவன் கோவில்களில் மட்டும் அடியார்கள் காணவேண்டி ஆடவில்லை. இந்த ஆட்டத்தால் தான் அவன் இவ்வுலகை மட்டுமல்லாது ஈரேழு பதினாலு உலகங்களையும் ஆட்டுவிக்கிறான் என்று சொல்கிறது.

எல்லைகளைக் கடந்த இந்த நாட்டியம் ஆனது முடிவற்றது. இடைவிடாது ஆடப்படுவது. இந்த ஓங்கார ஸ்வரூபம் இல்லையென்றால் எதுவும் இல்லை. இதற்குக் காலமோ, நேரமோ, இடமோ குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடிக்குக் கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்தது. இந்தப் பிரபஞ்சமே அவன் ஆடலரங்கம். அவன் ஆடலரசன். ஆடுவதும் அவனே! ஆட்டுவிப்பதும் அவனே!

"வேதங்களாட மிகு ஆகமமாடக்
கீதங்களாடக் கிளர் அண்டம் ஏழாடப்
பூதங்கள் ஆலப் புவனம் முழுதாட
நாதங்்கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே!" திருமந்திரம்-திருமூலர்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் "சிதம்பர ரகசியம்" ஆணிகளைப் பொறுத்து நாளை வரலாம்.