எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, March 29, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! லிங்கோத்பவர்!


லிங்கோத்பவர் நாம் நன்கறிந்தவர். லிங்கம் என்பது உருவம். அந்த லிங்கம் வெளிப்பட்டதையே லிங்கோத்பவம் என்று கூறுகின்றனர். உருவே அற்ற பரம்பொருள் ஒரு உருவைத் தாங்கி நம்மையெல்லாம் உய்விக்க வந்ததையே லிங்கோத்பவம் என அழைக்கின்றனர். பிரளய காலத்தின் முடிவில் உலக உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கையில் ஈசன் தம்மிலிருந்து பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, ஞாந சக்தி, க்ரியா சக்தி ஆகியோரைத் தோற்றுவிக்கிறார். ஐந்து சக்திகளில் இருந்தும் தோன்றும் தத்துவங்களை சதாசிவ தத்துவம் என்றழைக்கப் படும். இந்த சதாசிவ தத்துவத்தில் முதலில் சூன்யமாக ஒன்றுமில்லா நிலையில் உருவற்று இருந்த பரம்பொருளானது பின்னர் மின்னலைப் பழிக்கும் ஒளியாக மாறி, அந்த ஒளி அனைத்தும் சேர்ந்ததொரு ஒளித்தூணாக ஆகி, அந்தத் தூணிலிருந்து வெடித்துக்கிளம்பும் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்ட ஈசனாக வந்து பின்னர் நான்கு முகங்களோடும், எட்டுக்கரங்களோடும் காட்சி அளித்துப் பின்னர் ஐந்து முகம் கொண்ட சதாசிவராக காட்சி அளிப்பார். இப்படித் தான் ஒன்றுமற்ற சூன்யத்தில் இருந்து நமக்குக் காட்சி தரும் ஈசனின் வடிவம் உற்பத்தி ஆனது என்பதை லிங்கோத்பவம் என்று அழைக்கின்றனர். ஒளித்தூணாகக் காட்சி தருவதே ஜ்யோதிர்லிங்கம் என்பார்கள். லிங்கமே ஜோதிவடிவாகும். இந்த லிங்கோத்பவம் நிகழ்வு சிவராத்திரியின் போது நிகழ்ந்ததாய்ச் சொல்லப் படுகிறது. ஆகவே சிவராத்திரியின் மூன்றாவது காலம் லிங்கோத்பவ காலம் என வழிபாடுகள் நடக்கும்.

ஒளித்தூணாக நின்ற ஈசனின் அடி, முடியைத் தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் சென்று அவற்றை அவர்களால் காணமுடியவில்லை என்ற கதையை நாம் நன்கறிவோம். அந்த நிகழ்வு நடந்த இடம் திருவண்ணாமலை ஆகும். ஈசனின் இந்த ஜோதிவடிவே ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் திருக் கார்த்திகை தீபமாக வழிபடப் படுகிறது. அதை நினைவூட்டவே அன்று மலைமேல் தீபமும் ஏற்றப் படுகிறது. திருவண்ணாமலைக் கோயிலின் இரண்டாம் பிரஹாரத்தில் இதை நினைவூட்டும் வண்ணம் ஒரு சந்நிதி கோயிலாக விளங்குகிறது. ஐயனும், அம்பிகையும் ரிஷபவாகனத்தில் அமர்ந்திருக்க பின்னால் தீபச்சுடர் ஒளிவீச, உச்சியைக் காண முயலும் அன்னமான பிரம்மாவும், அடியைத் தேடும் வராஹமான விஷ்ணுவும் காணமுடியும்.


திருஞானசம்பந்தரின் திருவண்ணாமலைத் தேவாரத்தின் கீழ்க்கண்ட பதிகம் பிரம்மாவும், விஷ்ணுவும் அடி முடி தேடிச் சென்றதையும் அம்மை இடப்பாகம் கொண்டதையும் சொல்கிறது.

பாடல் எண் : 9
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே.

பொழிப்புரை :
விளமரத்தின் கனியை உகுப்பது போல அம் மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும் குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு.

லிங்கோத்பவர் தொடருவார்.

Monday, March 28, 2011

நமச்சிவாய வாழ்க,நாதன் தாள் வாழ்க ஏக பாதர்!

ஏகபாத மூர்த்தியை அடுத்துக் காணலாம். ஈசனின் வடிவங்களில் முக்கிய ஐந்து மூர்த்திகளான ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரில் ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியோரை சிவபெருமானாகவே வணங்கி வருகிறோம். ருத்ர வழிபாடுகள் அனைத்தும் சிவனுக்குச் செய்யப்படுவதே ஆகும். ஏனெனில் ருத்ரன் ஈசனின் நெஞ்சிலேயே ஒடுங்கி இருப்பதாய்க் கூறுவார்கள். ஈசனின் உருவே ருத்ரனின் திருவுருவமாக வழிபடப் படும். ருத்ரவழிபாடுகள் அனைத்துமே ஈசனைச் சென்றடையும். ஆனால் இவர்கள் அனைவருமே பிரளய காலத்தில் ஈசனிடமே ஒடுங்குவார்கள். ஊழிக்காலம் எனப்படும் பிரளயங்கள் ஏற்படும்போது உலகமே நீரில் மூழ்கி அழியும் என்று சொல்லப் படுகிறது. பிரம்மனின் பகல் முடிந்து இரவு ஏற்படும்போது ஊழிக்காலம் ஏற்படும் என்று கூறுவார்கள். அதன் கணக்கு வருமாறு:

நமது ஒருவருடத்தை தேவர்களின் ஒரு நாளாகக் கணக்கிடப்படுகிறது. தேவர்களின் ஒரு ஆண்டு என்பது நமக்கு 365 வருடங்கள் ஆகும். இது மாதிரிக் கிட்டத்தட்ட பனிரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தால் தேவர்களின் ஓர் ஊழிக்காலம் ஆகும். இப்படி 4,000 ஊழிக்காலம் முடிந்தால் பிரம்மாவின் ஒரு பகல் பூர்த்தி அடையும் என்கின்றனர். ஆகவே பிரம்மாவின் இரவின் போது மஹா பிரளயம் ஏற்படும்போது மஹாவிஷ்ணு, பிரம்மா முதற்கொண்டு அனைவருமே ஈசனிடம் ஒடுங்கிவிடுவார்கள். ஈசனின் வலபாகத்தில் பிரம்மாவும் இடபாகத்தில் விஷ்ணுவும், நெஞ்சில் ருத்ரனும் ஒடுங்குவார்கள். அப்போது ஈசன் ஒற்றைக்காலோடு ஏகபாதராய்க் காட்சி தருவார் என்று கூறுகின்றனர். இவரே ஏகபாதமூர்த்தி. அதாவது இந்த உலகமாகிய இகம் முடிந்து அனைத்துமே பரமாகிய தத்துவத்தில் கலந்து பரமாக நிலைத்து நிற்பதைக் குறிக்கும் என்று ஆன்மீகப் பெரியோர்கள் கூற்று. அனைத்து உயிர்களும் ஈசனின் திருவடியில் ஒடுங்கி இருக்கையில் வலக்கரத்தில் சூலத்தை ஏந்தியவண்ணம், இடக்கரத்தில் மழுவோடும், முன் வலக்கரத்தில் அபய ஹஸ்த முத்திரை காட்டியவண்ணம் முன் இடக்கரம் வரத முத்திரைக் காட்ட புலித்தோல் உடுத்தியவண்ணம் மணிமாலைகளை அணிந்துகொண்டு ஜடாபாரத்தில் சந்திரன் விளங்க கங்கையோடு தோற்றமளிக்கிறார் ஏகபாத மூர்த்தி.

இந்த ஏகபாத மூர்த்தியின் சிறப்பைக் குறித்து திருஞானசம்பந்தர் தம் திருமறைக்காடு தேவாரத்தில் கீழ்க்கண்ட வண்ணம் பாடி உள்ளார்.

பாடல் எண் : 7
இருநில னதுபுன லிடைமடி தரவெரி புகவெரி யதுமிகு
பெருவெளி யினிலவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவ னினமலர்
மருவிய வறுபத மிசைமுரன் மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :

பேரூழிக்காலத்தில் பெரிய இந்நிலமாகிய மண் புனலில் ஒடுங்க, நீர் எரியில் ஒடுங்க, எரி வளியில் ஒடுங்க, வளி ஆகாயத்தில் ஒடுங்க, பரந்துபட்ட இவ்வுலகமும் உலகப் பொருள்களும் ஆகிய அனைத்தும் அழிய, அதுபோது பிரம விட்டுணுக்களது முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன், வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசை முரலும் மறைவனம் அமரும் பரமன் ஆவான்.

இவ்வுலகை மீண்டும் படைக்கும் திருவுள்ளம் கொண்டு ஈசன், ஏகபாதராய்த் திருவடிவம் ஏற்றபின்னர், நெஞ்சில் இருந்து தம்மில் ஒரு கூறாய் ருத்ரரைத் தோற்றுவிக்கிறார். பின்னர் வலப்பாகத்திலிருந்து பிரம்மாவையும், இடப்பாகத்தில் இருந்து விஷ்ணுவையும் தோற்றுவிக்கிறார். இவ்விதம் மூர்த்திகள் தோன்றும் வண்ணம் வடிக்கப்பட்ட அரிய சிற்ப அற்புதம் திரிபாத மூர்த்தி எனப்படுகிறது. மஹாபாரதத்தில் இவ்வடிவத்தைப் பற்றிய விவரங்கள் கிடைப்பதாய்க் கூறுகின்றனர். பார்க்கணும், எந்த பருவத்திலேனு தெரியலை!

திருவண்ணாமலையில் இந்த திரிபாதமூர்த்தியாக ஈசன் தோன்றும் காட்சியை விழாவாக நடத்துவதாகவும், அவ்விழாவில் அம்பிகைக்கு ஈசன் முதலில் ஏகபாதராகவும், பின்னர் திரிபாதமூர்த்தியாகவும், பின்னர் திரிமூர்த்தியாகவும் காட்சிதருவதாய் ஐதீகம். ஈசன் மூன்று முறை வீதிகளில் திருவுலா வரும்போதும் பிரம்மா விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவராக மூன்று முறை வலம் வருவதாயும் கூறுகின்றனர். நாசிக் அருகே உள்ள ஜ்யோதிர்லிங்க க்ஷேத்திரமான த்ரியம்பகேஸ்வர்ரில் மும்மூர்த்திகளும் ஜ்யோதிர்லிங்கத்தின் ஆவுடையாரில் அடக்கம் என்றும் தெரியவருகிறது. அடுத்து நாம் அனைவரும் நன்கறிந்த லிங்கோத்பவர் வருகிறார்.

Wednesday, March 23, 2011

அங்காளம்மனின் மயானக் கொள்ளை

அங்காளம்மனை ஆதி பராசக்தி என்றே கூறுகின்றனர். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரத்தை அம்பிகை எடுத்ததாகவும் சக்தி உபாசகர்கள் கருத்து. இதைத் தான் முதல் சக்தி பீடம் எனவும் கூறுகின்றனர். சிருஷ்டியை அம்பிகை இங்கிருந்தே ஆரம்பித்ததாயும் ஐதீகம். கோயிலில் இருந்து சற்றுத் தூரத்தில் கர்ப்பிணிக் கோலத்தில் அம்பிகையைத் தரிசிக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஆனால் அங்கெல்லாம் போய்ப் பார்க்க முடியவில்லை. கோயிலின் நுழைவாயிலில் ஒரே கூட்டம். அங்கிருந்து நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப் பட்டோம். ஆனால் கோயிலின் சில ஊழியர்கள் தனியாகப் பணம் வாங்கிக்கொண்டு நேரே அழைத்துச் செல்கிறோம் என வற்புறுத்துவதையும் காண முடிந்தது. யாராயிருந்தாலும் உள்ளே போய்ப் புற்றுக்கருகே கூட்ட நெரிசலில் மாட்டிக்கொண்டே ஆகவேண்டும்.

இங்கே நாங்கள் நுழைவுச் சீட்டே வாங்கிக்கொண்டு, குழுவினர் அனைவரும் வரிசையில் நின்றோம். சிறிது தூரம் சம தரையில் சென்றதும் பின்னர் படிகள். மரப்படிகள். அதன் பின்னர் மேலே ஒரு பால்கனி போன்ற அமைப்பு, பின்னர் கூண்டு மாதிரியான இடத்தைக் கடந்து சென்றால் மேலேஏஏஏஏஏ உயரமான பாலம். அதைக் கடக்கையில் கோயிலின் கீழே நடப்பதை நன்கு காண முடிந்தது. அவ்வாறு கண்டபோது முன் மண்டபத்தில் ஒரு அம்மன் சிலையை வைத்து அலங்கார, அபிஷேஹங்கள் செய்து வழிபாடுகள் நடத்தப் பட்டுக்கொண்டிருந்தன. இது கோயிலைச் சேர்ந்ததே இல்லை என்றனர். கோயில் பரம்பரையாகப் பூசாரிகள் வசம் இருப்பதாயும், அவர்களில் சிலர் இம்மாதிரித் தனியாக வழிபாடுகள், பிரார்த்தனைகளை நடத்தித் தருவதாயும் கூறினார்கள். இன்னும் சற்று முன் மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் ஒரு பெரிய ஸ்ரீசக்கரம் போன்ற அமைப்புக் கல்லினால் செதுக்கப் பட்டிருந்தது. அதற்கு முன்னால் அங்கேயும் ஒரு அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டு ஒரு பெண்மணி அதற்கு வழிபாடுகள் நடத்திக்கொண்டு கோயிலுக்கு வரும் பெண்களை எல்லாம் அங்கேயும் வந்து வழிபட்டாலேயே வழிபாடு பூர்த்தி அடையும் எனச் சொல்லிப் பணம் பிடுங்கிக்கொண்டிருந்தார். ஸ்ரீசக்கர அமைப்பில் படுக்கத் தனியாகச் சீட்டுப் பணம் செலுத்தி வாங்க வேண்டும். அதை வாங்கிக்கொண்டு சிலர் ஒவ்வொரு இடத்தில் தங்கள் தலையை வைத்துப் படுத்துக்கொண்டு இருந்தனர். அதைச் சுற்றி ஒரு கூண்டு.

அதற்குள் நாங்கள் கீழே இறங்கிச் சந்நிதியின் பின் பக்கம் இருந்த பெரிய புற்றினருகே வந்துவிட்டோம். இங்கே சில கோயில் ஊழியர்கள், (இந்தக் கோயிலில் கவனிக்கத் தக்கவை அனைத்து ஊழியர்களும், பெண்களே, அவர்களுக்கு உதவிக்கு மட்டும் ஆண்கள், கூட்டத்தைச் சமாளிக்க, எதையாவது எடுத்து வர என) புற்றின் மேல் போடப் பட்டிருந்த மஞ்சள் பொடிக்கும், மஞ்சள் கயிற்றுக்கும் பணம் வாங்கிக்கொண்டு பக்தர்களுக்குக் கொடுக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மக்களின் பக்தி அங்கே வியாபாரமாகிக்கொண்டிருந்தது. அதையும் வாங்கப் போட்டாபோட்டி. கயிற்றின் தரத்துக்கு ஏற்பப் பத்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரை வசூலிக்கப் பட்டது. அங்கே நுழைவிடம் வேறே குறுகல். ஆகவே நெரிசலில் மாட்டிக்கொள்ள நேரிடுமே எனக் கவலை வந்தது. நல்லவேளையாக முன்னாலிருந்தவர்களில் சிலர் எங்கள் குழுவினர் என்பதால் கொஞ்சம் ஆறுதலாயும் இருந்தது. ஒரு மாதிரியாக உள்ளே போய் அம்பாளைத் தரிசித்தால், ஒரே தள்ளு! போங்கம்மா, போங்கப்பா, பார்த்தது போதும், போங்க, போங்க, அடுத்தவங்க பார்க்க வேண்டாமா?

அடக் கடவுளே, ஒரு விநாடி கூடப் பார்க்க முடியலையே? ஏமாற்றம் மனதில் சூழ்ந்தது. என்றாலும் அவசரம் அவசரமாய்க் கன்னத்தில் போட்டுக்கொண்டு அம்பிகை நீயாவது என்னைப் பார்த்துக்கோ அம்மானு சொல்லிட்டு அங்கிருந்து திருவண்ணாமலைக்குக் கிளம்பினோம்.

கோயில் பற்றி விசாரித்ததில் கிடைத்த மேலதிகத் தகவல்கள். மாசி மாதம் சிவராத்திரி அன்று லிங்கோத்பவம் எனக்கொண்டாடினாலும் இந்தக் கோயிலில் மட்டும் அன்றிரவு ஈசன் அம்மனின் சூரையை எதிர்நோக்கி வருகிறார். மறு நாள் அமாவாசையன்று இரவே அம்மன் மயானத்தில் உள்ள பூதங்கள், ஆவிகள், பேய், பிசாசுகள் அனைத்துக்கும் உணவளிப்பதாயும், அவ்வாறு அளிக்கும் உணவை வாரி இறைப்பதையே சூரை எனவும் கூறுகின்றனர். இதைப் பத்து நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். அம்மன் வரலாற்றைக் கூறும் விழாவாக இங்கே மட்டுமே கொண்டாடப் படுவதாயும் கூறுகின்றனர்.

Thursday, March 10, 2011

அங்காளம்மனின் மயானக் கொள்ளை!

தென்னாங்கூரிலிருந்து நாங்கள் சென்றது மேல் மலையனூர் அங்காளம்மன் ஆலயம். வழியில் சில சமண ஆலயங்கள் வயல்களுக்கு நடுவே கண்களில் பட்டன. ஆனால் இறங்கிச் சென்று தான் பார்க்கவேண்டும். அதற்குக் குழுவினர் அனைவரும் ஒத்துழைக்கவேண்டுமே. எல்லாமே பழைய ஆலயங்கள் எனப் பார்த்த மாத்திரத்தில் புரிந்தது. இன்னொரு சமயம் வாய்க்கவேண்டும். சமண ஆலயங்கள் பற்றிக்குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு செல்லவேண்டும். ராஜஸ்தான், குஜராத்தில் பார்த்தாலும் தமிழ்நாட்டில் பார்த்ததில்லை. இனி அங்காளம்மனின் வரலாறு. சக்திபீடம் என்றும், உலகின் சிருஷ்டி முதன்முதல் இங்கே தான் ஆரம்பித்தது என்றும் இவள் ஆதிபராசக்தி என்றும் கூறுகின்றனர்.

அம்மன் ஆதிபராசக்தி ஆவாள். சதுர்யுகங்களுக்கும் முன்னால் இருந்த சிருஷ்டியின் ஆரம்பமான மணியுகத்திற்கும் முன்னரே சுயம்புவாய்த் தோன்றிய அன்னை, அந்த யுகத்தின் முதல் மூர்த்தியான சிவனின் பிரமஹத்தி தோஷத்தை நீக்கினாள் என்று சொல்லப் படுகிறது. அருள் மிகு அங்காளம்மன் முப்பெரும் சக்திகளான இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளையும் தன்னிடம் கொண்டவளாக முப்பெருந்தேவியரின் அம்சமும் கொண்டவளாக, மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளைத் தோற்றுவித்த மாபெரும் ஆதி பராசக்தியாக முப்பெரும் அண்டங்களிலும் நிறைந்தவளாகவும், காணப்படுகிறாள்.

முதல் ஐந்து உற்பவங்களிலும் தனித்த சக்தியாகவே விளங்கிய இவள் தக்ஷனின் யாகத்தில் விழுந்து உயிரை விட்ட தாக்ஷாயணியாக அவதரித்தபோது ஈசனாகிய சிவனின் சக்தியான சிவசக்தியின் பஞ்சமுகதத்துவமாகிய கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் மிகக் கொண்டு சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம், தத்புருஷம், அகோரம் என்ற ஐந்து முகங்களாகவும் ஒன்று திரண்டு உருவமற்றுச் சுயம்புவாக உருவானவள் அங்காளம்மன் ஆவாள். இவளே உருவமாக பருவதராஜன் என்ற ஹிமவானுக்கும், மேனைக்கும் புத்திரியாகப் பார்வதி என்ற பெயரில் அவதரித்தாள்.

தாக்ஷாயணி அவதாரத்தில் தக்ஷனின் யாக குண்டத்தில் விழுந்து உயிரை விடத் துணிந்த சக்தியின் உயிரற்ற உடலைத் தூக்கிக்கொண்டு விண்ணுக்கும், மண்ணுக்கும் அலைந்து திரிந்த ஈசனின் துயரத்தைக் கண்டு சகிக்கமாட்டாமல் மஹாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அவள் உடலைத் துண்டு துண்டுகளாக அறுந்து விழும்படிச் செய்தார். அப்படி அம்மனின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் அனைத்துமே மகிமை பொருந்தியதோடு அல்லாமல் அம்பிகையில் உடலே பீஜாக்ஷரங்களால் ஆனது என்பதால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சக்தி பீடமும் உருவானது. அங்காளியே இப்படிக் கோயில் கொண்டாள் என்றும் இந்த மேல் மலையனூரே ஆதி சக்தி பீடம் என்றும் கூறுகின்றனர். இவள் சண்டி, முண்டி, வீரி, வேதாளி, சாமுண்டி, பைரவி, பத்ரகாளி, எண்டோளி, தாரகாரி, அமைச்சி, அமைச்சாரி, பெரியாயி, ஆயி, மகாமாயி, அங்காயி, மாகாளி, திரிசூலி, காமாட்சி, மீனாக்ஷி, அருளாட்சி, அம்பிகை, விசாலாக்ஷி, அகிலாண்டேசுவரி என்ற பெயரில் எண்ணற்ற சக்திபீட தேவதையாக விளங்குகின்றாள்.

அம்பிகையின் உடலைத் தூக்கிக்கொண்டு சிவன் தாண்டவம் ஆடியபோது அறுந்து துண்டாக விழுந்த அம்பிகையின் வலக்கையின் புஜம் விழுந்த இடம் மேல் மலையனூர் என்று கூறப்படுகிறது. இதையே தண்டகாரண்யம் என்றும் சொல்கின்றனர். ஈசனைப் போலவே தனக்கும் ஐந்து முகங்கள் இருக்கிறதால் தானும் பெரியவன் என்று வீண் கர்வம் கொண்ட பிரம்மாவின் ஐந்தாவது சிரசை ஈசன் கிள்ளி எறிய, சிவனுக்கே பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. கிள்ளி எறிந்த சிரசின் மண்டை ஓடு ஈசன் கையை விட்டு அகலாமல் கையிலேயே ஒட்டிக்கொண்டது. ஒட்டிக்கொண்ட மண்டை ஓட்டில் அம்பிகையானவள் பிக்ஷை போட்டு அந்த பிக்ஷையை ஏற்கும்போது எந்த ஊரில் மண்டை ஓடு அகலுமோ அங்கே பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும் என்று புரிந்த ஈசன் ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு சுடுகாட்டுக்கும் சென்று கபாலத்தில் பிக்ஷை வாங்கிச் சுற்றி அலைந்து திரிந்து கடைசியாக இந்த தண்டகாரண்யம் என்னும் மேல் மலையனூருக்கு வருகிறான்.

மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை. அங்காளியானவள் அன்று தன் பூரண வலுவோடும், பலத்தோடும் இருப்பாள். அனைத்துக்கும் மூலாதார சக்தியான அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் போன்ற அனைவருக்கும் சூரை இடும் நாள் ஆகும். அதுவே மயானக்கொள்ளை என்றும் கூறப்படுகிறது. சூரை என்பது உணவு அளிப்பதையே இங்கே குறிக்கும். அப்போது உலகெங்கும் சுற்றி வந்த சிவன் அங்கே வந்து சேரும் தினம் மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசையாக இருக்கவே அன்று அங்காளியம்மன் சூரையின் முதல் கவளத்தை பிரம்ம கபாலத்தில் இட, பிரம்மஹத்திக்கு உணவு கிடைக்க அது சாப்பிடுகிறது. இரண்டாவது கவளமும் கபாலத்திலேயே அன்னை இடுகின்றாள். உணவின் ருசியில் தன்னை மறந்த பிரம்மஹத்தி அதையும் உண்ண, மூன்றாவது கவளத்தைச் சூரையாகச் சுடுகாட்டில் இறைக்கும்போது ஈசனைப் பற்றி இருந்த பிரம்ம ஹத்தி அந்தச் சூரையைச் சாப்பிட வேண்டி ஈசன் உடலில் இருந்து இறங்க, கையில் இருந்த கபாலத்தில் புகுந்து கொண்டு கீழே இறங்கியது. கீழே இறங்கிய கபாலம் சூரையைச் சாப்பிடும்போது சிவன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடி, தாண்டவேஸ்வரர் ஆக அந்த ஊரிலேயே அமர்ந்தார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக அமர்ந்தார, என அங்காளம்மன் கோயில் வரலாறு கூறுகிறது.

பிரம்ம கபாலத்தினுள் புகுந்த பிரம்மாவின் பிரம்மஹத்தியானது சாப்பிட்டு முடிந்ததும் ஈசனைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு விண்ணில் பறக்க ஆயத்தமானது. அங்காளி இதைக் கண்டு கோபம் கொண்டு அதற்கும் மேல் தானும் விஸ்வரூபம் எடுத்து பிரம்மாவின் கபாலத்தை பிரம்மஹத்தியோடு சேர்த்து அழுத்தித் தன் கால்களால் மிதித்தாள். அவள் கோபத்தைக் கண்டு மஹாவிஷ்ணு தலையை மிதித்த அங்காளியை அவ்வண்ணமே பூமிக்குள் தள்ளி மூடி மறைத்துவிட்டார். சற்று நேரத்தில் பூமிக்கு மேல் சுயம்புவாகப் புற்று உருவாகி அதில் ஒரு நாகமும் குடிகொண்டதாய்த் தலவரலாறு கூறுகிறது. இந்த நாகத்தின் படம் சுருங்காமலே பல யுகங்கள் இருந்ததாயும் கலி யுகத்திலே தேவர்கள் அனைவரும் தேர் உருவில் வந்து வணங்கவும் நாகத்தின் படம் சுருங்கி உள்ளே சென்று அங்காளம்மனாக அமர்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

Sunday, March 06, 2011

ஜெய ஜெய விட்டல, ஹர ஹர விட்டல!


தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயிலில் ஸ்ரீசக்கரத்தின் அதி தேவதைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கின்றனர். இந்த அதிதேவதைகள் அனைவரும் ஒரே வடிவில், "மஹா ஷோடசி"யாகக் காட்சி தருகின்றனர். கோயிலின் பின்புறம் ஞானானந்த சுவாமிகளின் மடம் உள்ளது. அங்கேயும் போய் பார்த்தோம். அங்கே ஸ்ரீ ஹரிதாஸ்கிரி அவர்களுக்கு என ஒரு பிருந்தாவனம் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் கோயிலில் ஸ்ரீ சக்ரத்தின் பிரிவுகளின் தெய்வங்களூக்கு விக்ரஹங்களும் உள்ளன. கோயிலினுள் நுழையும்போது காணப்படும் பதினாறு கால் மண்டபத்தில் கருடாழ்வார் காணப்படுகிறார். மஹாமண்டபம் சொர்க்கலோகமோ என்னும்படி அதி செளந்தரியத்துடன் காணப்படுகிறது. வட இந்தியப் பாணியில் அலங்கரிக்கப் பட்டு இருக்கிறது. இங்கு பெருமாளுக்கு சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இந்த திருக்கல்யாண உற்சவம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் கலந்து நடத்தப் படுகிறது.

பாண்டுரங்கன் ஞாயிற்றுக் கிழமைகளில், மதுராபுரியை ஆளும் அரசனாக ராஜாங்க சேவையிலும், வியாழக்கிழமையில் அவன் பாத தரிசனம் கிட்ட வேண்டி எளிமையாகப் பாண்டுரங்க விட்டலனாகத் தன் திருவடிகளை அடியார்க்குக் காட்டிக்கொண்டும், வெள்ளிக்கிழமைகளில் முழுதும் வெள்ளியால் ஆன கவசத்தால் மூடிக்கொண்டு வெள்ளிக் கவச அலங்காரத்திலும், சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்திலும் அருள் பாலிக்கிறார். ஒவ்வொரு தமிழ் வருஷப் பிறப்பிலும் சித்திரை விஷுக்கனி உற்சவம் நடக்கிறது. அப்போது முழுதும் பழங்களாலேயே அலங்கரிக்கப் படுகிறார். கோகுலாஷ்டமி தினத்தன்று முத்தங்கி சேவையும் காணலாம். இதைத் தவிரவும் மக்கள் மனம் கவர்ந்த கோபாலன் ராஜகோபாலனாகவும், கோவரத்தனகிரியைத் தூக்கிப்பிடித்த வண்ணம் கிரிதாரியாக, கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்த வண்ணம் பார்த்த சாரதியாகவும் காணப்படுகிறார் என்றும் சொன்னார்கள். இது எல்லாம் பத்தாது என்னும்படி தன் நெஞ்சம் கலந்த ராதையோடு ராதா கிருஷ்ணனாகவும் அருள் பாலிக்கிறார். இக்கோயிலின் தல விருக்ஷம் தமால மரம் என்று சொல்லப் படுகிறது.

மரத்தைப் பற்றி விசேஷமாய்ச் சொல்ல அனைவரும் சென்று பார்த்தோம். மதுராவிலேயே அதிகம் காணக்கிடைக்கும் என்றும் கிருஷ்ணன் இம்மரத்தின் கீழ் நின்று புல்லாங்குழல் வாசிப்பான் எனவும், கோபிகைகள் மட்டுமின்றி ராதையும் அதைக் கேட்டு மயங்கியதாகவும் புராணங்கள் கூறுவதாய்த் தெரிய வருகிறது. வட மாநிலங்களிலேயே காணப்படும் இந்த விருக்ஷம் அதிசயமாக தென்னாட்டில் இந்தத் தலத்தில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர். இங்குள்ள துவாரபாலகர்கள் பஞ்சலோகத்தில் ஆனவர்கள்.

பாண்டுரங்கன் மிகவும் எளிமையானவன். என் அப்பா, அம்மாவுக்குப் பணிவிடை செய்துவிட்டு நான் வரும் வரைக்கும் காத்திரு என பக்தன் தூக்கிப் போட்ட அரைச் செங்கல்லில் கால் கடுக்க நின்று பக்தனுக்குக் காட்சி கொடுத்தவன். இன்றும் அதே அரைச்செங்கல்லில் நின்ற வண்ணமே பண்டரிபுரத்தில் காட்சி கொடுக்கிறான். அங்கே பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனைத் தொட்டுத் தடவிப் பார்க்க முடியும். இங்கே தள்ளி நின்று தான் பார்த்தோம். ஆனாலும் இங்கு ஆகிருதியோடு காட்சி அளிக்கிறான் என்பதால் தள்ளி நின்று பார்க்கச் சொல்கின்றார்களோ? தன் பக்தர்களுக்காகக் கால் நோக நடந்து தூது மட்டுமா போனான்?? எந்தவிதமான அஹங்காரமும் இல்லாமல்,"பாண்டுரங்கன் வந்திருக்கேன்." என்று தான் சொன்ன பிறகும், யாரானால் என்ன? நான் வர வரைக்கும் இதிலே நில் என்ற வண்ணம் அரைச் செங்கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தன் கடமைகளை முடித்துவிட்டு பக்தன் வரும்வரையில் காத்திருந்து தரிசனமும் கொடுத்தான் அல்லவா? இந்த எளிமை அவனை வழிபடுவதிலும் காட்டினாலே போதுமானது. பலரும் பலவிதங்களில் வழிபட்டாலும், தன் நாமத்தை ஒருவன் மனப்பூர்வமாய் உணர்ந்து ஓதினாலே வேண்டியதை அள்ளித்தரக் காத்திருக்கிறான் பாண்டுரங்கன்.

நம்மை மறந்து, நம் இருப்பை மறந்து, அவன் நாமம் ஒன்றே நினைந்து, ஜெய ஜெய விட்டல, பாண்டுரங்க விட்டல, பண்டரிபுர விட்டல, ஹர ஹர விட்டல என்று பாடித் துதித்தால் இதோ இருக்கேன் என்று ஓடி வருவான்.

Friday, March 04, 2011

ஜெய ஜெய விட்டல, ஹர ஹர விட்டல!


சத்குரு ஞாநாநந்தகிரியின் பூர்வீகத்தை ஆராய்ந்ததில் அவர் கர்நாடகத்தை சேர்ந்த மங்களகிரி என்னும் ஊரைச் சேர்ந்தவர் எனவும், அவர் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதும் தெரிய வருகிறது. பள்ளிச் சிறுவனாக இருந்த போதில் இருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட அவர் ஊரை விட்டுக் கிளம்பிக் கால்நடையாகவே பண்டரிபுரம் வந்து சேர்ந்து சந்திரபாகா நதியில் நீராடி விட்டலனைத் தரிசித்துக்கொண்டிருந்திருக்கிறார். ஒரு நாள் தூங்கும்போது முன்பின் தெரியாத அந்தணர் ஒருவர் அவரை எழுப்பி, குருநாதர் தேடுவதாய்ச் சொல்லி மறைய திகைத்த சிறுவனான ஞானாநந்தர் சந்திரபாகா நதிக்குச் சென்று நீராடிவிட்டு விட்டலனையே சரணடைய, அப்போது தான் அவ்வூருக்கு ஜ்யோதிர்மடத்தில் இருந்து வந்திருக்கும் பீடாதிபதிகள் ஆன ஸ்ரீஸ்ரீ சிவரத்னகிரி ஸ்வாமிகள் அவ்வூரில் எழுந்தருளி இருப்பதை நினைவு கூர்ந்தார்.

அவரே தான் தேடும் குரு என உள்ளுணர்வு உறுத்த, உடனே சென்று அவரைச் சந்திக்க, ஞான ஆநந்த கிரி என்ற தீக்ஷை நாமத்தோடு அவருக்குத் துறவு அளித்தார் சிவரத்னகிரி ஸ்வாமிகள். அதன் பின்னரே குரு சேவையுடன் கூடவே புண்ய தல யாத்திரையும், ஜ்யோதிர்மடத்தில் வேதாந்த விசாரங்களும் மேற்கொண்டார் ஞான ஆநந்த கிரிஸ்வாமிகள். பின்னர் குருவின் மறைவுக்குப் பின்னர் இமயமலைப்பகுதியில் யோக தவங்கள் செய்வதிலும் அங்குள்ள சித்தர்கள், மகாபுருஷர்களைத் தரிசித்து வணங்குவதிலும் நாட்களைக் கழித்தவர் அங்கிருந்து தான் கதிர்காம ஸ்வாமிகளோடு ஸ்ரீலங்கா சென்றிருக்கவேண்டும்.

திரும்பி சீர்காழிக்கு வந்த இருவரில் கதிர்காம ஸ்வாமிகள் அங்கேயே தங்க, ஞான ஆநந்தரை ஈர்த்தது சித்தலிங்க பீடம். அங்கே உள்ள வ்யாக்ரபாதேஸ்வரர் என்னும் திருநாமம் பூண்ட ஈசனை இங்கே வணங்க முடியும். வ்யாக்ரபாதர் தவமிருந்தது இந்த சித்தலிங்க பீடத்தில் தான் என்று சொல்கின்றனர். இங்கே இவர் நடத்திய அருளாட்சியும், இவரின் சீடரான ஹரிதாஸ்கிரியால் நாம சங்கீர்த்தன மகிமை பரவியதையும் நன்கறிவோம். இனி தென்னாங்கூர்.

காஞ்சீபுரத்திலிருந்து நேரே முதலில் தென்னாங்கூர் தான் சென்றோம். காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் தென்னாங்கூர் இருக்கிறது. ஞானாநந்தரின் சீடரான ஹரிதாஸ்கிரி அவர்கள் பண்டரிபுரத்தில் தமக்களிக்கப் பட்ட சிலைகளைப் பிரதிஷ்டை செய்யத் தேர்ந்தெடுத்த இடம் இது. கோயிலுக்குள் நுழையும்போது பார்க்கும் ராஜகோபுரம் தென்னிந்திய பாணியில் காணப்படுகிறது. கருவறைக்கு மேல் காணப்படும் விமானத்துடன் கூடிய கோபுரம் பூரி ஜெகந்நாதர் கோயிலின் அமைப்பை ஒட்டியது என்கின்றனர். பண்டரிபுரத்தில் கிடைத்த சிலைகளை உற்சவ மூர்த்திகளாக வைத்திருக்கின்றனர். மூலஸ்தானத்தில் குடிகொண்டிருக்கும் பாண்டுரங்கன் பனிரண்டு அடிக்கு உயரமாய்க் காணப்படுகிறார். ரகுமாயி இங்கே தனி சந்நிதி கொள்ளாமல் அருகேயே காட்சி அளிக்கிறாள். பண்டரிபுரத்தில் தனியாக சந்நிதி உண்டு. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு அலங்காரம் என்று செய்கின்றனர். நாங்கள் சென்றது ஞாயிறன்று என்பதால் முதல்நாள் செய்த திருப்பதி வேங்கடாசலபதி அலங்காரம் கலைக்கப் படவில்லை. சற்று நேரத்தில் ராஜாங்க கோலத்தில் தரிசனம் தருவார் என்றனர். அதற்கு ஒரு கதையும் சொல்கின்றனர்.

தென்னாங்கூர் ஷடாரண்யம் என அழைக்கப்பட்ட ஆற்காடு க்ஷேத்திரங்களுள் முக்கியமான ஒன்று எனச் சொல்கின்றனர். அதிலும் பாண்டிய அரசனோடு சம்பந்தம் கொண்ட முக்கிய வரலாறு. ஆம், மதுரையை ஆண்ட மலயத்வஜ பாண்டியன் தனக்குக் குழந்தை பிறக்கவில்லை என்று யாகம் செய்தபோது தேர்ந்தெடுத்த இடம் இந்தத் தென்னாங்கூர் தான். இங்கே தான் யாகம் செய்கையில் யாக குண்டத்திலிருந்து மீனாக்ஷி தோன்றியதாகவும், அவளை அழைத்துக்கொண்டு மன்னன் மதுரை சென்றதாகவும் புராணங்கள் கூறுவதாய்த் தெரிய வருகிறது. சப்தரிஷிகளின் மூலம் மீனாக்ஷி அவதரித்த இந்த இடத்தைக் காஞ்சி மகாமுனிவர் "மீனாக்ஷி தோன்றிய இடம்" என்று சிறப்பித்துச் சொல்லி இருக்கிறார்.