எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, August 29, 2008

நடராஜரும், தியாகராஜரும் - சில விளக்கங்கள்!

தில்லை நடராஜர் ஆடியது ஆனந்தக் கூத்து என்றால் திருவாரூர் தியாகராஜர் ஆடியதோ, தாளத்தை மறைத்துச் சொல்லப் பட்ட அஜபா நடனம். ஆனால் இருவருக்குமே ஆதிரைத் திருநாளே விசேஷ நாளாகச் சொல்லப் படுகின்றது. திருவாதிரைத் திருநாளில் இருவரின் தேர் உலா மிக மிகப் பிரசித்தி பெற்றது. நடராஜரும், தியாகராஜரும் தேரில் மட்டுமே உலா வருவார்கள். அதன் பின்னர் பெரிய அளவிலான அபிஷேகங்கள் இருவருக்கும் நடைபெறும். ஆண்டுக்கு ஆறு முறைகள் மட்டுமே இருவருக்கும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. தில்லையில் ரகசியம் என்று சொல்லப் படும் சிதம்பர ரகசியம் காண 96 கண்கள் உள்ள சாளரம் மூலமே பார்க்க வேண்டும். ஆனால் திருவாரூரிலோ, அப்பனின் திருமேனியே ரகசியம். இது சோமகுல ரகசியம் என்று சொல்லப் படும்.தில்லை அம்பலத்தைப் பொன்னம்பலம் என்று சொன்னால், திருவாரூரை பூவம்பலம் என்று சொல்லுவார்கள். தில்லையில் நம சிவாய ஓதப் பட்டால் திருவாரூரில் தியாகேசா, ஆரூரா என்றே சொல்லுவார்கள். இருவருக்குமே செங்கழுநீர் மாலை விசேஷமாய்ச் சொல்லப் படுகின்றது. இரு கோயில்களும் ஆயிரங்கால் மண்டபம் கொண்டது. தில்லைக் கோயிலை ஆகாச ரூபமாய்ப் பார்த்தால், திருவாரூரோ, பூமி வடிவாய்ப் பார்க்கப் படுகின்றது. ஈசன் இரு இடங்களிலுமே விண்ணாகி, மண்ணாகி, எல்லாமாய்த் தான் இருப்பதைத் தெரிவிக்கின்றான். இந்த இரு கோயில்களிலும் இருந்த பழைய மூலஸ்தான லிங்கத் திருமேனி, மூலட்டானேஸ்வரர் என்றே அழைக்கப் படுகின்றது. தில்லைக் கூத்தனின் பாத தரிசனமும் விசேஷம், அதே போல் திருவாரூர் தியாகராஜாவின் பாத தரிசனமும் விசேஷம். பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருமே இந்த இரு இடங்களிலுமே பாத தரிசனம் கண்டதாய்ச் சொல்லப் படுகின்றது. தில்லையிலே அதிர வீசி ஆடிய இடப் பாதத்தைக் கண்டால், திருவாரூரில் இருந்து ஆடிய கூத்தைக் கண்டனர். இன்று நாமும் காண முடிகின்றது. திருவாரூரில் கமலாம்பிகையும், நீலோற்பலாம்பிகையும் தேவியர். தில்லையிலே சிவகாமி அம்மையும், மூலட்டான நாயகியும் தேவியர்.

நடராஜர் சேக்கிழாருக்கு "உலகெலாம்" என்று துவங்கும் அடியை எடுத்துக் கொடுத்துப் பெரிய புராணத்தைப் பாடச் சொல்லும் முன்னரே திருவாரூரில் சுந்தரருக்கு, "தில்லை" என்று அடி எடுத்துக் கொடுத்திருக்கின்றார். இப்படி விண் தத்துவத்தையும், மண் தத்துவத்தையும் அடியார்கள் மூலம் இருவருமே பாமர மக்களுக்கு உணர்த்துகின்றனர்.

Tuesday, August 26, 2008

சிதம்பர ரகசியம் - திருக்குறிப்புத் தொண்டர் தொடர்ச்சி!

குளிர் தாங்காமல் நடுங்கிக் கொண்டிருந்த அடியார், திருக்குறிப்புத் தொண்டர் தன் துணியைத் துவைத்துத் தருவதாய்ச் சொல்லக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் போல் பாவனை செய்துவிட்டு, மேலும் சொல்லுவார்" ஆஹா, இந்த ஒரு கந்தல் தான் என்னிடம் மீதி உள்ளது. இதையும் தங்களிடம் கொடுத்துவிட்டு நான் செய்வது என்னவோ??? ஏற்கெனவே குளிர் தாங்க மாட்டாமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றேனே!" என்று சொல்கின்றார். மன வேதனை திருக்குறிப்புத் தொண்டர் முகத்தில் தெரிய, தன் பக்தன் மனம் வாடுவது பொறுக்காத அந்த கைலைவாசன், சற்று நேரம் சிந்திப்பது போல் பாவனை செய்துவிட்டுப் பின்னர், மாலைக்குள் துணியைத் துவைத்துச் சுத்தமாய் உலர்த்தித் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் துணியைக் கொடுக்கின்றார். அப்படியே ஒத்துக் கொண்டு திருக்குறிப்புத் தொண்டர் துணியைப் பெற்றுக் கொள்கின்றார்.

குளிர் தன்னால் பொறுக்க முடியாது என்று அந்தக் கூத்தன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், நீர்த்துறைக்கு வந்து துணியைத் துவைக்கத் தொடங்கினார். ஆரம்பம் ஆயிற்று ஈசனின் திருவிளையாடல். வருணனுக்குக் கட்டளை இட, திடீரென சூரிய ஒளியால் பிரகாசமாய் இருந்த வானம் கார்மேகங்களால் மூடிக் கொண்டது. கும்மிருட்டு சூழ்ந்தது அந்தப் பகல் வேளையிலேயே. தொண்டரின் மனமும் இருள் சூழ்ந்து கலங்கியது. எவ்வாறு துவைப்பது? எங்கே காய வைப்பது??? கலங்கும் வேளையிலேயே திடீரெனக் காற்று, இடி, மின்னல், பெருமழை! பேய்க் காற்று என்பது இதுதானோ??? ஊழிப் பெரும் மழையோ?? அண்டசராசரமும் குலுங்கும் வண்ணம் இடி இடிக்க, மின்னல் கண்ணைப் பறித்தது. மழையோ நிற்கக் காணோமே?? என்ன செய்வது? கலங்கினார் தொண்டர்.

ஆஹா, தவறு செய்துவிட்டோமே?? ஏற்கெனவே உடல் இளைத்து, மெலிந்து இருந்தாரே சிவனடியார்? இருந்த ஒரே மேல் துணியையும் வாங்கிக் கொண்டு துவைத்துக் காய வைக்க முடியாமல் இப்படி மழை பெய்கின்றதே? மழை ஆரம்பிக்கும்போதே வீட்டுக்குச் சென்றிருந்தால் ஒருவேளை இந்தக் காற்றிலே ஓரளவாவது உலர்ந்திருக்குமோ?? தவறு செய்துவிட்டோமோ? அடியாருக்கு, சிவனடியாருக்குத் துரோகம் புரிந்த நம் உயிர் உடலில் தங்கலாமா? இதோ உயிரைப் போக்கிக் கொள்ளலாம். என்று எண்ணிய வண்ணம் துவைக்கும் கல்லிலே தன் தலையைத் தானே மோதிக் கொள்ளத் துவங்கினார்.
125. கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச்
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசைத்
தந்தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு
வந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை 1202-4

126. வான் நிறைந்த புனல் மழை போய் மலர் மழையாய் இட மருங்கு
தேன் நிறைந்த மலர் இதழித் திருமுடியார் பொருவிடையின்
மேல் நிறைந்த துணைவி யொடும் வெளி நின்றார் மெய்த் தொண்டர்
தான் நிறைந்த அன்பு உருகக் கை தொழுது தனி நின்றார் 1203-4

127. முன் அவரை நேர் நோக்கி முக் கண்ணர் மூவுலகும்
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்
மன்னுலகு பிரியாது வைகுவாய் என அருளி
அந் நிலையே எழுந்து அருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் 1204-4
அப்போது ஈசன் தன் பக்தனைச் சோதிக்க விரும்பாமல், அந்தப் பாறையினின்றும் தன் மலர்க்கையை நீட்டி அவரது சிரத்தைத் தாங்கிக் காக்க, நிமிர்ந்த திருக்குறிப்புத் தொண்டரின் கண்களிலே ரிஷபவாகனன் காட்சி கொடுக்கின்றான்.

மேலும் இந்த வண்ணார் மடம் பற்றிய தகவல்களை மீண்டும் சிதம்பரம் செல்லும்போது அறிந்து வரவேண்டும்.

Friday, August 15, 2008

சிதம்பர ரகசியம்- புதிய செய்திகள்

நேற்று தினமலர் பத்திரிகையில் திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செய்த சிதம்பரம் கோயிலின் ஆய்வு பற்றிய ஒரு கட்டுரை வெளியாகியது. அநேகமாய் அனைவரும் படித்திருக்கலாம். எனக்கு அந்த விஷயம் புதியது. ஆகவே பகிர்ந்து கொள்கின்றேன்.
*************************************************************************************
சிதம்பரம் கோயில் பற்றியும், அதைச் சுற்றி நகரில் உள்ள கோயிலைச் சார்ந்த பல்வேறு மடங்கள் பற்றியும் பல்வேறு விதமான சாசனங்கள் இன்னமும் தேடிக் கண்டு பிடிக்கப் பட்டு வருகின்றன. அதில் சிலவற்றின் அடிப்படையில் எழுதப் பட்ட ஒரு கட்டுரையை வைத்தே போன மூன்று பதிவுகள் வந்தன. இப்போது கிடைத்திருப்பது சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற "வண்ணார் மடம்" பற்றிய செப்பேடுகள். இவை இரண்டு செப்பேடுகளாய்க் கிடைத்திருக்கின்றது. மேலும் விஜயநகர அரசர் கால்த்தில் ஏற்படுத்தப் பட்டதாயும் தெரியவருகின்றது. மூன்று ஏடுகளைக் கொண்ட முதல் செப்பேடும், ஒரே ஏட்டுடன் கூடிய இரண்டாவது செப்பேடும் ஒரே காலத்தைச் சேர்ந்தது என்றும் தெரிய வருகின்றது. இவற்றில் சிவலிங்கம், நந்தி, சூலம், சூரிய, சந்திரர், வீரமணவாளர் தேவியருடன், எல்லாவற்றுக்கும் மேல் துணி வெளுக்கும் கல் போன்றவை சிற்பங்களாய்ச் செதுக்கப் பட்டிருப்பதாய்த் தெரியவருகின்றது.

விஜயநகர அரசர் மெய்க்கீர்த்தியும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அச்சுதராயர் காலத்தில் வண்ணார் மடம் புதுப்பிக்கப் பட்ட செய்தியும் இவற்றில் கிடைத்திருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. வண்ணார் தோன்றிய விதமும், அதாவது அதற்கான புராண வரலாறும் இதில் சொல்லப் பட்டிருக்கின்றது. அது பின்வருமாறு:
*************************************************************************************

ஈசனின் மாமனார் ஆன தட்சன் ஈசனை அழைக்காமல் யாகம் செய்ய, அவனையும், அவனுக்கு உதவியாக யாகத்தில் தொண்டாற்றிய தேவர்கள் மற்றும் தேவிகளை அழிக்கவும் ஈசனால் தோற்றுவிக்கப் பட்டவர் ஈசனின் அம்சம் ஆன வீரபத்திரர்.
தேவியரை அழிக்கவேண்டி அன்னையால் தோற்றுவிக்கப் பட்டவளே காளி ஆவாள்.
இருவரும் அவ்வாறே தேவ, தேவிகளை அழித்தனர். இருவரும் அழித்த தேவ, தேவியர் பின்னர் இறைவனாலும், இறைவியாலும் உலக க்ஷேமத்தைக் கருதி மீண்டும் உயிர்ப்பிக்க, வீரபத்திரராலும், காளியாலும் ஏற்பட்ட காயங்களின் குருதி அவர்கள் மீது அழியாமல் இருந்தது. அந்தக் குருதி நீங்க வேண்டி ஈசன் வருணனை மழை பொழியும்படி ஆணை இட வருணனும் அவ்வாறே மழையாகப் பொழிகின்றான். எனினும் குருதிக் கறை ஆடைகளில் தங்கிவிட்டது. ஆகவே அந்தக் கறை நீங்கவேண்டி வீரபத்திரருக்கு ஈசன் ஆணை இட, அவர் மரபில் ஒருவர் தோற்றுவிக்கப் பட்டார். அவருக்கு வீரன் என்னும் பெயர் சூட்டப் பட்டு தேவ, தேவியரின் ஆடைகளை வெளுக்க அவர் அனுப்பி வைக்கப் படுகின்றார். அந்த வீரபத்திரர் வழியிலும், வீரன் வழியிலும் வந்தவர்களே வண்ணார் எனப் பட்டனர். அவர்கள் பூமியில் வந்து அதே தொழிலைச் செய்தனர். இந்த மரபில் வந்த ஒருவரே திருக்குறிப்புத் தொண்டர் ஆவார்.

திருக்குறிப்புத் தொண்டர் பற்றிய கதை அநேகமாய் அனைவரும் அறிந்திருக்கலாம். சிவனடியார் ஒருவரின் துணி ஏதாவது ஒன்றையாவது அன்றாடம் துவைத்துக் கொடுத்து, அவருக்குப் பணிவிடைகள் செய்து, உணவு ஊட்டியுமே தன் உணவை உண்ணும் வழக்கம் திருக்குறிப்புத் தொண்டருக்கு. சிவனடியார்களின் துணியின் மாசு நீங்கினால் தன் பிறவிப் பிணியின் மாசு நீங்கும் என்ற எண்ணம் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர் முன் ஒரு குளிர் காலத்தில் நடுங்கிக் கொண்டே ஒரு சிவனடியார் தோன்றினார். நல்ல குளிர் காலத்தில் நடுக்கும் குளிரில் மெலிந்த உடலும், அழுக்கான, கந்தலான வஸ்திரமும் கொண்டு, தூய வெண்ணீறணிந்து தன் முன் தோன்றிய சிவனடியாரைப் பணிந்து வணங்கினார் திருக்குறிப்புத் தொண்டர்.

அடியாரிடம் திருக்குறிப்புத் தொண்டர் வினவுகின்றார். "ஐயா, தங்கள் திருமேனி இவ்வளவு இளைத்திருப்பதன் காரணம் என்னவோ?" என. ஆனால் வந்தவர் குறுநகை புரிய எதுவும் புரியாத திருக்குறிப்புத் தொண்டர், "ஐயா, தாங்கள் வந்தது என் பாக்கியமே. அடியாரின் ஆடையைத் தோய்த்துச் சுத்தம் செய்து தருவதை நாம் அடியாருக்குச் செய்யும் தொண்டாகக் கருதிச் செய்து வருகின்றோம். ஈசன் எனக்கிட்ட கட்டளை அதுவே எனவும் அறிந்தேன். தாங்கள் தங்கள் ஆடையை என்னிடம் தந்தால், தங்கள் வெண்ணீறு போல் தூய்மையாகத் துவைத்துத் தருவேன்." என்று சொல்லுகின்றார். அடியார் பெரும் அதிர்ச்சி அடைந்தார். வந்தவர் யார்?? சாமானியம் ஆனவரா?? இல்லை அல்லவா? சாட்சாத் அந்தக் கைலை வாசனே அல்லவா வந்திருக்கின்றான். அவன் ஆடாத ஆட்டமா?? போடாத வேஷமா?? நடிக்காத நாடகமா?? ஆடல்கலையில் வல்லவன் அல்லவா?? ஆட்டுவிப்பவனும் அவனே, ஆடுபவனும் அவனே அல்லவா??

Saturday, August 02, 2008

சிதம்பர ரகசியம் - தொடர்ச்சி- சரித்திரத் தகவல்கள்

நந்திவர்ம பல்லவன் வழிபட்ட இடத்திலேயே அவனுக்குப் பின்னர் பல நூறு ஆண்டுகள் கழித்து அச்சுதராயன் பிரதிஷ்டை செய்தான் எனவும், அதன் பின்னரே 1597-ல் கொண்டம நாயக்கனால் விரிவு செய்யப் பட்டது என்பதையும் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் திரு C.S.ஸ்ரீநிவாசாச்சாரியார் என்பவர் எழுதி இருப்பதாயும் தெரிய வருகின்றது. இதற்கும் பின்னர் கி.பி.1643-ல் 3-ம் ஸ்ரீரங்கராயன், என்பவனால் பெருமாள் கோயிலை மேலும் விரிவு படுத்த எண்ணி, அவனாலேயே புண்டரீகவல்லித் தாயார் சந்நிதியும் அமைக்கப் பட்டது. அப்போது சில சிவ சந்நிதிகள் இடிக்கப் பட்டதாயும், அதனால் தீட்சிதர்களுக்கும், விஷ்ணு கோயிலின் பட்டாச்சாரியார்களுக்கும், ஏற்பட்ட பகைமை முற்றிப் போய், அது வெகு காலம் நீடிக்கக் கூடாது என இரு தரப்புமே ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாயும் தெரிய வருகின்றது. அதன்படி, இனி பெருமாள் கோயிலை விரிவு படுத்தும் பணியை வைணவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும், பெருமாளுக்கு எனத் தனியாக பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் தனித்துச் செய்யப் படமாட்டாது எனவும் இருதரப்பிலும் நடந்த பேச்சு, வார்த்தைகளில் உறுதி செய்யப் பட்டிருக்கின்றதாயும் சொல்லப் படுகின்றது.

ஆனாலும் இதற்கான ஆதாரம் என்று சொல்ல முடிவதோ கி.பி.1862-ல் வைணவர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் ஏற்பட்ட வழக்கின் ஆதாரமே கிடைக்கின்றது என்றும் நம்பப் படுகின்றது. இதற்கான நீதிமன்றத் தீர்ப்பும் கி.பி.1867-ல் கிடைத்துள்ளது எனவும் சொல்கின்றார்கள்.

டிஸ்கி: இந்தத் தகவல்கள் கலைமாமணி பேராசிரியர் திரு.க.வெள்ளைவாரணனார் எழுதிய "தில்லைப் பெருங்கோயில் வரலாறு" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய இந்தப் புத்தகத்தைப் படிக்கவும். நன்றி.
*************************************************************************************


மேற்கண்ட தகவல்கள், அதாவது நந்திவர்மபல்லவனால்தான் முதலில் பெருமாள் கோயில் கட்டப் பட்டது என்று எழுத ஆரம்பித்த
சிதம்பர ரகசியம் பதிவுகள் அனைத்தும் நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே எழுதப் பட்டது. என்றாலும் இவை மிகுந்த விவாதத்துக்கு உள்ளானது. முதலில் சொன்ன விஷ்ணு தான் சிவனின் நாட்டியத்தைக் காண சிதம்பரம் வந்தார் என்ற என்னுடைய கூற்றையே நான் மறந்துவிட்டே எழுதியதாய்ப் பலரும் நினைக்க நேரிட்டது. திவாகர் சொன்னமாதிரி சிவன் கோயில்களில் விஷ்ணு கட்டாயமாய் இடம் பெறுவார் என்பதையும் நன்கு அறிவேன். புராணக் கதையையும் மறக்கவில்லை. மற்றும் நான் எழுதிய எதையும் மறக்கவில்லை, அதே சமயம் நான் சிதம்பரம் சென்றிருந்தபோது, கோயிலில் விஷ்ணு, சுற்றுப் பரிகார தேவதையாக இருந்தவர், தனி இடம் பெற்றது நந்திவர்மபல்லவனாலேயே என்று தீட்சிதர் உறுதி செய்ததையுமே எழுதி உள்ளேன். சிதம்பரம் கோயிலில் விஷ்ணு முதலிலேயே இல்லை எனச் சொல்லவில்லை. மற்றபடி இதன் மூலம் யார் மனமாவது புண்பட்டிருக்குமானால் என்னுடைய மன்னிப்பையும் கோருகின்றேன்.

பொதுவாகக் கோயில் வரலாறு என எழுதும்போது, சிதம்பரம் கோயிலுக்குக் கட்டுமானப் பணிகளில் உதவிகள் செய்த அரசர்கள் பற்றியும் இதற்கு முன்னர் எழுதினேன். அந்தமாதிரியே இப்போது விஷ்ணுகோயிலின் திருப்பணிகள் செய்த அரசர்களைப் பட்டியலிட வேண்டி அம்மாதிரிச் செய்தேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு இதில் எந்தவிதமான வித்தியாசமோ, அல்லது தவறாகவோ தெரியவில்லை. அம்மாதிரி நான் எழுதியதாய் ஒரு கருத்து யாருக்கானும் இருந்தால், அது அவர்கள் சொந்தக் கருத்து. என்னை எவ்விதத்திலும் பாதிக்காது. எனக்குக் கிடைத்த தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். அவ்வளவே! இன்னும் சில தகவல்கள் கிடைத்ததும் இதை முடித்துவிடுவேன்.