எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, January 30, 2009

சிதம்பர ரகசியம் - பதஞ்சலி ஸ்தோத்திரம்ஸ்ரீ சரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம்

(ஸ்ரீ பதஞ்சலி க்ருதம்)


1. ஸதஞ்சித முதஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலம்சலித மஞ்ஜுகடகம்

பதஞ்சலி த்ருகஞ்சன மனஞ்சன மசஞ்சல பதம் ஜனன பஞ்சனகரம்|

கதம்பருசி மம்பர வஸம் பரமமம்புத கதம்பக விடம்பககலம்

சிதம்புதிமணிம் புதஹ்ருதம்புஜரவிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||2. ஹரம் த்ரிபுர பஞ்சன மனந்தக்ருத கங்கண மகண்டதய மந்த்ரஹிதம்

விரிஞ்சிஸ¤ர ஸம்ஹதி புரந்தர விசிந்தித பதம் தருணசந்த்ர மகுடம்|

பரம் பதவிகண்டி தயமம் பஸிதமண்டித தனும் மதனவஞ்சனபரம்

சிரந்தன மமும் ப்ரணவஸஞ்சித நிதிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||3. அவந்த மகிலம் ஜகதபங்க குண துங்க மமதம் த்ருதவிதும் ஸ¤ரஸரித்

தரங்க நிகுரும்ப த்ருதிலம்படஜடம் சமன டம்பஸ¤ஹரம் பவஹரம்|

சிவம் தசதிகந்தர விஜ்ரும்பிதகரம் கரலஸன் ம்ருகசிசும் பசுபதிம்|

ஹரம் சசி தனஞ்ஜய பதங்கநயனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||


4. அனந்த நவரத்னவிலஸத் கடக கிங்கிணி ஜலம்ஜலரவம்

முகுந்த விதி ஹஸ்தகத மத்தள லயத்வனி திமித்திமித நர்தன பதம்|

சகுந்தரத பர்ஹிரத நந்திமுக ப்ருங்கி ருஷி ஸங்க நிகடம்

ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||


5. அனந்தமஹஸம் த்ரிதசவந்த்யசரணம் முனிஹ்ருதந்தர வஸந்த மமலம்

கபந்த வியதிந்துவஹனி கந்தவஹ வஹ்னி மக பந்து ரவிமஞ்ஜு வபுஷம்|

அனந்தவிபவம் த்ரிஜகதந்தரமணிம் த்ரிநயனம் த்ரிபுர கண்டனபரம்

ஸனந்தமுனி வந்திதபதம் ஸகருணம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||


6. அசிந்த்ய மளிப்ருந்த ருசிபந்துரகளம் குரிதகுந்த நிகுரும்ப தவளம்

முகுந்த ஸ¤ரப்ருந்த பலஹந்த்ரு க்ருத வந்தன லஸந்த மஹிகுண்டல தரம்|

அகம்ப மனுகம்பிதரதிம் ஸ¤ஜனமங்கள நிதிம் கஜஹரம் பசுபதிம்

தனஞ்ஜயநுதம் ப்ரணதரஞ்ஜனபரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||


7. பரம்ஸ¤ரவரம் புரஹரம் பசுபதிம் ஜனித தந்திமுக ஷண்முக மமும்

ம்ருடம் கனக பிங்கலஜடம் ஸனகபங்கஜ ரவிம் ஸ¤மனஸம் ஹிமருசிம்|

அஸங்கமனஸம் ஜலதிஜன்ம கரலம் கபலயந்த மதுலம் குணநிதிம்

ஸநந்தவரதம் சமித மிந்துவதனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||


8. அஜம் க்ஷ¢தி ரதம் புஜங்கபுங்கவகுணம் கனகச்ருங்கிதனுஷம் கரலஸத்

குரங்கப்ருது டங்க பரசும் ருசிரகுங்கும் ருசிம் டமருகஞ் ச தததம்|

முகுந்த விசிகம் நமதவந்த்யபலதம் நிகமப்ருந்த துரகம் நிருபமம்

ஸசண்டிகமமும் ஜடிதி ஸம்ஹ்ருதபுரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||9. அனங்க பரிபந்தின மஜம் க்ஷ¢தி துரந்தர மலம் கருணயந்த மகிலம்

ஜ்வலந்த மனலம் ததத மந்தகரிபுரம் ஸததம் இந்த்ரஸ¤ர வந்திதபதம்|

உதஞ்ச தரவிந்தகுல பந்துசத பிம்பருசி ஸம்ஹதி ஸ¤கந்தி வபுஷம்

பத்ஞ்ஜலி நுதம் ப்ரணவபஞ்ஜரசுகம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||


10. இதி ஸ்தவ மமும் புஜகபுங்கவக்ருதம் ப்ரதிதினம் படதி ய: க்ருதமுக:

ஸத:ப்ரபு பதத்விதய தர்சனபதம் ஸ¤லலிதம் சரணச்ருங்க ரஹிதம்|

ஸர:ப்ரபவ ஸம்பவ ஹரித்பதி ஹரிப்ரமுக திவ்யநுத சங்கர பதம்

ஸ கச்சதி பரம் ந து ஜனுர்ஜலநிதிம் பரம துக்கஜனகம் துரிததம்||


|| இதி ஸ்ரீபதஞ்சலிமஹர்ஷிக்ருத ஸ்ரீசரணச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம். ||

இந்த ஸ்லோகத்தின் முழுவடிவத்தையும் எனக்கு அனுப்பித் தந்த திரு சிவசிவா அவர்களுக்கும், திரு நடராஜஸ்வாமி தீட்சிதர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Friday, January 16, 2009

சிதம்பர ரகசியம்- பதஞ்சலி பாடிய பதம்! கூத்தனின் நடனம்!


பதஞ்சலிக்கு முகம் வாட்டம் அடைந்தது. தான் ஆத்மார்த்த அனுபவத்தில் திளைத்து ஈசனின் ஆட்டத்தில் ஒன்றிப் போகவில்லையோ? இவர்கள் சொல்வது தான் சரியோ? ஒரு வேளை புலிக்கால்களும், நந்தியெம்பருமானைப் போல் கொம்புகளும் இருந்தால்தான் நாட்டியத்தை ரசிக்கும் பக்குவம் வருமோ? அப்போது அங்கே ஓங்கார சப்தம் ஒலிக்க ஈசன் வந்தார். கூடி இருக்கும் ரிஷி, முனிவர்களிடையே ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்த பதஞ்சலியைக் கிட்டே அழைத்தார் கருணைக் கடலாம் எம்பெருமான். பதஞ்சலி முனிவரைப் பார்த்து, "பதஞ்சலி, இன்று யாம் பாதம் தூக்கி ஆடப் போகும் நடனத்திற்குப் பதம் பாடப் போவது நீயே தான்! உன்னுடைய பதத்துக்குத் தான் நான் ஆடப் போகின்றேன்." என்று சொல்லவும் பதஞ்சலிக்குக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

மேலும் கூறுகின்றார் ஈசன், "பதஞ்சலி, இன்றைய பாடலில் கொம்பும், காலும் வரக் கூடாது!"என்று சொல்லவும் சுற்றி நின்றவர்கள் அனைவரும் திகைத்துப் போகப் பதஞ்சலி முனிவரோ "அப்படியே ஆகட்டும் ஈசனே!" என வணங்கி நின்றார். வியாக்ரபாதரின் முகத்திலும், நந்தி எம்பெருமானின் முகத்திலும் ஈ ஆடவில்லை. பதஞ்சலி பதம் பாட ஆரம்பித்தார். எப்படித் தெரியுமா? கொம்பெழுத்துகளும், துணைக்காலோடு கூடிய எழுத்துகளும் வராதபடிக்கு துதி ஒன்றைப் பாடினார். கெ, பெ, போ, ஆகிய எழுத்துகளில் போடும் ஒற்றைக் கொம்பும், இரட்டைக் கொம்பும், கா, பா, சா, லா, ளா போன்ற எழுத்துகளில் வரும் துணைக்காலும் இல்லாமல் பாடிய அந்த நடராஜர் துதி முழுமையாகக் கிடைப்பதற்காகக் காத்திருந்தேன், கிடைக்கவில்லை. கிடைத்த வரையிலும் கீழே போடுகின்றேன். வேறு யாரிடமாவது இருந்தால் போடலாம்.

"அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி சலஞ்சல சலஞ்சல அரவம்!
முந்த விதி ஹஸ்தக தமத்தல லய த்வநி திமித்திமி நர்த்தந பதம்!
சகுந்தரத பர்ஹிரத நந்திமுக தந்திமுக ப்ருங்கிரிடிஸங்க நிகடம்!
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜே!"

இம்மாதிரிக் கொம்பெழுத்தோ, காலெழுத்தோ இல்லாமல் பதஞ்சலி பதம் பாட, பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் தாளம் போட, நந்தி, தந்திமுகன், ப்ருங்கிமுனிவர், சனகாதிமுனிவர்கள், தேவாதிதேவர்கள் என அனைவரும் கூடி நின்று பார்க்க, சலங்கை "ஜல் ஜல்" என ஒலிக்க ஆனந்த நடனம் ஆடினார் நடராஜன்.

இந்தப் பாடலைச் சாதாரணமாய்ச் சொல்லிப் பார்த்தாலே நடனம் ஆடுவது கண் முன்னே தெரியும்.


டிஸ்கி: இந்தப் பாடலில் கடைசியாக நான் "பஜே" என்று முடித்திருப்பதை யாரும் கவனிக்கவில்லை. நாங்க எங்கே படிச்சோம்னு சொல்லறது புரியுது, என்றாலும் படிச்ச கபீரன்பனும் கண்டு பிடிக்கலை. அங்கே "பஜ" என்றே வரவேண்டும். கொம்பெழுத்து அல்லது காலெழுத்து அங்கே வரக் கூடாது. தீட்சிதர் ஒருத்தருடன் பேசி அதை உறுதி செய்துகொண்டேன். விரைவில் ஸ்லோகம் முழுமையும் இங்கே இடுகின்றேன். தில்லை பற்றி இன்னும் அதிகத் தகவல்கள் கிடைத்தன. முடிந்தவரையில் அவற்றை ஒழுங்கு செய்துவிட்டு எழுதுகின்றேன்.

Saturday, January 10, 2009

சிதம்பர ரகசியம் - பதஞ்சலி பாடிய பதம்! கூத்தனின் நடனம்!

அம்பலவாணனின் நாட்டியத்தை முதலில் கண்டு களித்தவர்களில் பதஞ்சலியும், வியாக்ரபாத முனிவரும் என முன்பே பார்த்தோம் அல்லவா? ஆனால் நந்தி தேவருக்கோ தான் தான் முதலில் கண்டு களித்தவர் என்றதொரு பெருமை இருந்ததாம். இடைவிடாமல் தான் அருகே இருந்து பார்ப்பதாயும் நந்தி தேவருக்குப் பெருமை அதிகமாய் இருந்தது. அதன் காரணமாய்க் கொஞ்சம் கர்வமும் உண்டாயிற்றாம் நந்திதேவருக்கு. வியாக்ரபாதருக்கோ, தான் பூக்களை பறிக்க என இறைவனைக் கேட்டுப் புலிக் கால் வாங்கியதால், புலித் தோலை அரைக்கசைத்த அந்தப் பொன்னார் மேனியனுக்குத் தாமே அருகில் உள்ளோம், மேலும் நமக்கும் இடுப்புக்குக் கீழே புலித்தோலால் ஆன உடலும், கால்களும் இருப்பதால், ஈசனுக்கு இணையாக நர்த்தனம் ஆடலாம் என்றும் நினைத்தாராம். இருவருக்கும் தங்கள், தங்கள் பலம் அதிகம் என்ற நினைப்போடு, பதஞ்சலியிடம் இளக்காரமும் அதிகம் இருந்ததாம்.

அதிலும் பிரதோஷ வேளையில் நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கு இடையே ஈசன் ஆடிய ஆட்டத்தை நினைத்து, நினைத்து நந்தி எப்போதும் தன் தலையை ஆட்டிக் கொண்டே வேறே இருந்தாராம். (மாடுங்களெல்லாம் அதான் தலையை ஆட்டுதோ??) இப்படி நந்தி தன் கொம்பை நினைத்துப் பெருமையிலேயும், வியாக்ரபாதர் தன் புலிக் கால்களை நினைத்துப் பெருமையிலேயும் ஆழ்ந்திருந்தனர். ஒருநாள், ஈசன் புதியதொரு நடனமுறையை அறிமுகப் படுத்தப் போவதாய்ச் சொல்லி இருந்தார். அதைக் கண்டு களிக்க தேவாதி தேவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். கூடவே பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதருடன் வந்திருந்தார். நந்தியோ தன் மத்தளத்துடன் தயாராக இருந்தார். இவர்களைப் பார்த்தார் நந்தி.

இருவருடனும் ஈசன் சிதம்பரத்தில் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அப்போது வியாக்ரபாதர் தன்னுடைய புலிக்காலின் மகிமையைப் பற்றிச் சொல்லி, ஈசனைப் போல் தானும் தாளம் தப்பாமல் ஆட வசதியாக இந்தப் புலிக்கால்கள் இருக்கும் என்றும், அந்தக் காரணத்தினால் தானே ஈசனின் நடனத்தை முழுமையாய் ரசித்ததாயும், ஈசனும் அதைப் புரிந்து கொண்டே அவ்வளவு ஆனந்த நடனம் ஆடியதாயும் சொல்ல, நந்தி சிரிக்கின்றார். "புலி, இது என்ன பெரியவிஷயம்?? பிரதோஷ காலத்தில் என்னோட கொம்புகளுக்கு இடையே ஆடறாரே அதைவிடவா? அவர் ஆடி முடிச்சப்புறம் கூட எனக்குக் கண்ணு முன்னாலே அந்த நடனமே தெரியும். சலங்கை ஒலி கேட்டுட்டே இருக்கும். எனக்காகத் தானே அவர் அப்படி ஆடினார்? அதை நினைவு வச்சுட்டுத் தான் அந்த ஜதிக்கேற்றமாதிரி என் தலையைக் கூட ஆட்டிக்கிறேனாக்கும்?" என்று சொன்னார்.
இருவரும் பதஞ்சலியைப் பார்த்து, "உனக்குக் கொம்பும் இல்லை, கால்களும் புலிக் கால்கள் இல்லை, ஆகவே ஈசனின் ஆட்டத்தையும் உன்னால் எங்கே ரசிக்க முடியும்?" என்று கேலியாய்ப் பேசினார்கள். பதஞ்சலியின் முகம் வாட்டம் அடைந்தது.

Friday, January 09, 2009

சிதம்பர ரகசியம்- திருவாதிரைச் சிறப்பு பகுதி 3

ராம பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசன் ஆன வீரபாண்டியன் செப்பறையில் புதியதோர் விக்கிரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதை அறிகின்றான். தரிசனத்துக்கு வந்த அவன் கண்களிலே நடராஜர் சிலையின் அழகு கவர்கின்றது. மீண்டும், மீண்டும் எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத தித்திக்கும் பேரழகுச் சிற்பம். ஆஹா, இதை வடிவமைத்தவர் யாரோ? கேட்ட வீரபாண்டியனுக்குச் சிற்பியின் அறிமுகம் கிடைத்தது. தன்னுடைய சிற்றரசுக்கு உட்பட்ட
கட்டாரி மங்கலம்" என்னும் ஊரிலும், "கரிசூழ்ந்த மங்கலம்" ஊரிலும் உள்ள கோயிலில் இது போன்ற அதி அற்புத ஆடும் கூத்தனைப் பிரதிஷ்டை செய்ய எண்ணினான் வீரபாண்டியன். சிற்பியை அவ்வாறே இரு சிலைகள் செய்யுமாறு ஆணை இட்டான் வீரபாண்டியன். சிற்பியும் அதே போல் இரு அழகிய நடராஜர் சிலைகளை வடிவமைத்தார். அவற்றின் அழகில் மெய்ம்மறந்த வீரபாண்டியன், இனி மற்ற எந்தக் கோயில்களிலும் இது போன்ற சிலைகள் பிரதிஷ்டை செய்யக் கூடாது என எண்ணினான். இந்தச் சிற்பி செதுக்கினால் தானே சிலை? சிற்பியின் கைகளைத் துண்டிக்க ஆணை இட்டான் வீரபாண்டியன். பின்னர் சிற்பியையே கொன்றுவிடும்படியும் ஆணை இட்டான். ஆனால் காவலர்களோ இரக்கம் மீதூறச் சிற்பியின் ஒரு கையை மட்டுமே துண்டித்துவிட்டு உயிரோடு விட்டு விட்டார்கள்.

ராமபாண்டியனுக்கு விஷயம் தெரியவர, வீரபாண்டியன் மேல் கோபம் கொண்ட அவன், வீரபாண்டியனின் இரு கைகளையும் வெட்டி விடுகின்றான். பின்னர் அந்த இரு சிலைகளையும் முறையே கட்டாரிமங்கலத்திலேயும், கரிசூழ்ந்த மங்கலத்திலேயும் பிரதிஷ்டை செய்கின்றான். சிற்பிக்கு மரக்கையையும் பொருத்தித் தர ஆணை இடுகின்றான். மரக்கை பொருத்தப் பட்ட சிற்பி, அந்தக் கைகளோடேயே முன்பை விட அழகான நடராஜர் சிலை ஒன்றைச் செய்கின்றார். இந்த அதி அற்புதச் சிலையின் அழகில் தன்னையே மறந்த அவர், அது சிலை என்பதையும் மறந்து, சிலையின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ள, என்ன ஆச்சரியம்?? அவர் கிள்ளிய வடு கன்னத்தில் பதிந்தே விட்டது. கிள்ளிய அந்த வடுவுடனேயே அந்தச் சிலை தூத்துக்குடி அருகே உள்ள கருவேலங்குளம் என்னும் ஊரில் பிரதிஷ்டை செய்யப் பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்த செப்பறை, கட்டாரி மங்கலம், கரிசூழ்ந்த மங்கலம், கருவேலங்குளம் ஆகிய நான்கு ஊர்களிலுமே திரு ஆதிரைத் திருநாள் மிகச் சிறப்பாய்க் கொண்டாடப் பட்டு வருகின்றது. இந்தக் கோயில்கள் அனைத்துமே சிவாகம முறைப்படி அனைத்து அம்சங்களும் பொருந்தியவையும் கூட. திருவாதிரைத் திருநாள் அன்று இந்த நான்கு கோயில்களும் விடிய விடியத் திறந்தே இருக்கும். அன்று நான்கு நடராஜர்களையும் சேர்த்து வழிபடுவதை மிகச் சிறப்பாகவும் நினக்கின்றனர். முதலில் செப்பறை, அங்கிருந்து கரிசூழ்ந்த மங்கலம், அங்கிருந்து கருவேலங்குளம், கடைசியாகக் கட்டாரிமங்கலம் என்ற முறையில் தரிசித்தால் பயண நேரமும் சரியாக இருக்கும் என்றும் சொல்கின்றனர்.

Wednesday, January 07, 2009

சிதம்பர ரகசியம் - திருவாதிரைச் சிறப்பு! 2

கிட்டத் தட்ட முடியும் தருணம் வந்துவிட்டது இந்தச் சிதம்பர ரகசியம் தொடருக்கு. ஆனாலும் என்னோட மனம் என்னமோ நடராஜர் பற்றியும், அந்தத் திருமேனியைப் பற்றிய புதுப் புது விஷயங்களைச் சேகரிப்பதிலுமே சென்று கொண்டிருக்கின்றது. என்றாலும் எதற்கும் ஒரு முடிவு வேண்டுமே? அது போல் இன்னும் மிஞ்சினால் இரண்டு அல்லது மூன்று பதிவுகளுக்குள் முடிந்துவிடும். இப்போது நாம் நடராஜத் திருமேனி சிதம்பரம் வந்த கதையைத் தொடர்வோமா??
*************************************************************************************

சிற்பிகளைச் சிறையில் அடைக்கச் சொன்ன மன்னன் மீண்டும் ஒருமுறை சிலையைப் பார்த்தான். சுத்தச் சொக்கத் தங்கத்திலே செய்யச் சொன்ன சிலை இப்போது செம்பின் சிவந்த நிறத்திலேயே காட்சி அளித்தது. அன்றிரவு தூக்கம் இன்றித் தவித்த மன்னன் ஒருவழியாய்க் கண்ணயரும் தருணத்திலே அவன் முன்னே தோன்றியது ஓர் பேரொளி. கண்ணைக் கூசும் ஒளியைக் காணமுடியாமல் கண்ணை மூடித் திறந்த மன்னனின் கண்ணெதிரே நடராஜத் திருமேனி காட்சி அளிக்க, மன்னனுக்கு ஓர் அசரீரி போன்றதொரு ஒலி கேட்டது. "மன்னா! இது எம் விருப்பம். நாம் இங்கே செப்புத் திருமேனியாகவே காட்சி அளிக்க எண்ணம் கொண்டோம். உன் கண்களுக்கு மட்டுமே நாம் பொன்மேனியாகக் காட்சி அளிப்போம். இந்தச் சிலையை இங்கேயே பிரதிஷ்டை செய்வாய். முன்னால் செய்த செப்புத் திருமேனியை இந்தச் செந்தமிழ் நாட்டின் தென் பாகத்துக்குக் கொண்டு போகச் சொல்! எந்த இடத்திற்கு அருகே வந்ததும், சிலையின் கனம் அதிகம் ஆகித் தூக்க முடியாமல் போகின்றதோ, அந்த இடத்தில் சிலையை இறக்கி வைக்கச் சொல்! மற்றவை எம் பொறுப்பு!" என்று ஆணை இடுகின்றார் கூத்தபிரான்.

அது போலவே மறுநாள் காலையில் சிற்பிகளை விடுதலை செய்த மன்னன், முதலில் செய்த செப்புத் திருமேனியை ஒரு அழகிய பல்லக்கில் வைத்துக் கூடவே சிற்பிகளையும் அனுப்பித் தெற்கே பயணம் ஆகச் செய்கின்றான். தெற்கே போகப் போக எதுவும் அடையாளம் தெரியவில்லையே எனக் கலங்கிய வீரர்களுக்கு தாமிரபரணியின் வடகரைக்கு வரவும் சிலையின் கனம் அதிகரித்து வந்தது தெரிய வருகின்றது. சிலையைக் கீழே வைக்கின்றனர். அசதி மிகுந்து போய்த் தூங்கிப் போகின்றனர் வீரர்களும், சிற்பிகளும். விழித்து எழுந்து பார்த்தால் சிலை அங்கே இல்லை. பதறிப் போனார்கள் அனைவரும்.

அந்தப் பகுதியின் அரசன் யார் என விசாரித்தார்கள். ராமபாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்து வந்ததாய்த் தெரிய வந்தது. சிவபக்தியில் சிறந்தவன் என்றும், தினமும் நெல்வேலி நெல்லையப்பரைத் தரிசனம் செய்யாமல், வழிபடாமல் உணவு உட்கொள்ள மாட்டான் எனவும் தெரிந்து கொண்டனர். இந்நிலையில் இச்சிலை தாமிரபரணிக் கரைக்கு வருவதற்கு முன்னர் ஓர் நாள், மன்னன் கனவில் நெல்லையப்பர் தோன்றினார். ஏற்கெனவே பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் நெல்லையப்பரைத் தரிசிக்கச் செல்ல முடியாமல் மன்னன் மனம் நொந்து வேதனையில் ஆழ்ந்திருந்த சமயம் அது. அப்போது தோன்றிய மன்னன் கனவில், நெல்லையப்பர் வந்து, "மன்னா வனத்துக்குப் போ. சிலம்பொலி கேட்கும். அந்தச் சிலம்பொலி கேட்கும் இடத்துக்கு எறும்புகள் சாரை, சாரையாய் ஊர்ந்து போவதும் தெரிய வரும். அந்த எறும்புகளைப் பின் தொடர்ந்து செல்வாயாக! அங்கே காணும் என் வடிவைப் பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் எழுப்பு!" என்று சொல்கின்றார்.

விழித்தெழுந்த மன்னனுக்குக் கனவில் கண்டது பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. யோசனையில் ஆழ்ந்திருந்த சமயம் வடக்கே இருந்து வந்த சிற்பிகளும், வீரர்களும் வந்து தாங்கள் கொண்டு வந்த அதி அற்புத நடனச் சிலையைக் காணோம் எனவும், ஈசனின் ஆனந்த நடன வடிவம் அது எனவும், சொல்லவே, மன்னன் மேலும் திகைத்தான். அவர்களையும் அழைத்துக் கொண்டு வனத்திற்குச் சென்றான். வனத்தினுள்ளே, உள்ளே, உள்ளே, சென்
றான். திடீரென ஓர் இடத்தில் மத்தளம், கொட்டியது. பேரிகை முழங்கியது. தேவதுந்துபி முழங்கும் சப்தம் கேட்டது. தாளம் போடும் ஒலி, அத்தோடு யாரோ ஆடும் சிலம்பொலியும் கேட்டது. மன்னனுக்கு நினைவு வந்து கீழே பார்த்தால் எறும்புகள் சாரை, சாரையாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. எறும்புகளைப் பின் தொடர்ந்தான் மன்னன். குறிப்பிட்ட ஓர் இடத்தில் நடராஜரின் திருமேனி வைக்கப் பட்டிருந்ததைக் கண்டான். மன்னன் ஆனந்தக் கூத்தாடினான்.
ஆனந்தக் கூத்தாடும் இறைவனுக்கு அங்கேயே கோயில் எழுப்பவேண்டும் என்பதை அவர் குறிப்பால் அறிவுறுத்தியதையும் நினைவு கூர்ந்தான். அந்த இடத்திலேயே தில்லைக் கூத்தனுக்கு ஓர் அற்புதக் கோயில் எழுப்பினான். அதுவே செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். திருநெல்வேலிக்கு வடகிழக்கே, 9 கி.மீ தூரத்தில் உள்ள ராஜவல்லிபுரத்துக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தச் செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். முழுக்க முழுக்கச் சிதம்பரம் கோயில் பாணியிலேயே கட்டப் பட்ட கருவறையோடு, கோயிலின் முகப்பில் காளிக்காகவும் ஒரு கோயில் இருக்கின்றது. சிதம்பரத்தின் எல்லையில் இருப்பது போல இங்கேயும் காளி குடி கொண்டிருப்பதாய்ச் சொல்கின்றனர். இது மட்டுமா?? இதே போல் இன்னும் இரண்டு நடராஜர்கள் அதே சிற்பியால் செய்யப் பட்டு, இதே திருநெல்வேலி மாவட்டத்தில் வைக்கப் பட்டுள்ளது. அதைப் பற்றி நாளை காண்போமா??

Tuesday, January 06, 2009

சிதம்பர ரகசியம் -திருவாதிரைச் சிறப்பு!

நட்சத்திரங்களிலே திருவோணத்துக்கும், திரு ஆதிரைக்கும் மட்டுமே திரு என்ற அடைமொழி. இரண்டுமே முறையே மகாவிஷ்ணுவுக்கும், சிவனுக்கும் உரிய நட்சத்திரங்கள். உடனே அவங்க அந்த நட்சத்திரத்திலே தான் பிறந்தாங்களா என்ற கேள்வி எழும். அப்படி எல்லாம் இல்லை. இந்த மார்கழி மாதப் பெளர்ணமி தினத்தன்று ஈசன் ஆனந்தத் திருநடனம் புரிந்ததாகவும், சிரவண மாதத்துத் திருவோணத்தன்று பெருமாள் தன் விஸ்வரூபத்தை மஹாபலிக்குக் காட்டியதாயும் ஐதீகம். அதனாலேயே இருவருக்கும் இந்த இரு நட்சத்திரங்கள் விசேஷமாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது. பரிபாடல் என்னும் சங்ககால இலக்கிய நூலிலேயே இந்த ஆதிரைத் திருநாள் சிறப்பு பற்றியும், விழா பற்றியும் குறிப்பிட்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது. பொதுவாக ஆதிரைத் திருநாள் அன்று சிவனைடியாரான சேந்தனாருக்கு அருள் புரிய ஈசனே அடியாராக வந்து சேந்தனாரிடம் களியும், குழம்பும் வாங்கிச் சாப்பிட்டதாயும், அந்தக் களி ஈசன் மேல் சிந்திக் கிடக்க, கோபம் கொண்ட தீட்சிதர்களுக்குச் சேந்தனாரின் பக்தியை வெளிப்படுத்த வேண்டி ஈசன் தன் தேரை ஓடாமல் தடைப்படுமாறு செய்கின்றார். அப்போது சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி ஓடாது கிடந்த தேரை நிலைக்குக் கொண்டு வருகின்றார் என்று சொல்லுவார்கள். இந்தப் பல்லாண்டு திருவிசைப்பா என்ற பெயரில் ஒன்பதாம் திருமுறையில் கடைசி 29-வது சேர்க்கையில் கோயில் என்ற தலைப்பில் காணக் கிடைக்கின்றன.


"மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1

மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 2

நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்கள்
சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3

சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிறை யும்சில தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண் டகன கத்திரன் மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4

புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்
இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்டகோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்
கரந்துங் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5

இந்தக் கதை எல்லாரும் அறிந்த ஒன்று. ஆகையால் நாம் காணப் போவது இந்த ஆதிரைத் திருநாளுக்கு உரிய நடராஜரின் திருமேனி சிதம்பரத்துக்கு வந்த கதை. அதைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம். தன் தோல் நோயை சிதம்பரம் சிவகங்கைக் குளத்தில் என்று ஒரு சாராரும், பிரம்மானந்த கூபம் என்னும் தீர்த்தம் என்று இன்னொரு சாராரும் கூறுகின்றனர். இந்த பிரம்மானந்த கூபம் இப்போது கிணறு வடிவில் உள்ளது. எது எப்படியோ கெளட தேசத்தில் இருந்து வந்த மன்னன் ஹிரண்ய வர்மன், சிம்ம வர்மன் என்றும் பெயர் உண்டு. இவன் தான் பல்லவ வம்சத்தை இங்கே நிறுவினான் என்றொரு கூற்றும் உண்டு. இந்த மன்னன் நடராஜர் பால் பக்தி மிகக் கொண்டு, நடராஜரைச் சிலை வடிவில் வடிக்க எண்ணம் கொண்டான். சிற்பிகளிடம் பத்தரை மாற்றுப் பசும்பொன்னிலே, துளிக்கூடச் செம்பு கலக்காமல் சிலை வடிக்கச் சொல்கின்றான். சிற்பிகளும் எவ்வளவோ முயன்றும் அவர்களால் முடியவில்லை. சிறிதாவது செம்பு கலவாமல் சிலை வடிக்க முடியவில்லை.அப்போது நமசிவாய முத்து ஸ்தபதி என்றொருவரை விட்டு வடிக்கச் செய்த செப்புச் சிலையின் வடிவழகு மன்னனின் கண்ணையும் கருத்தையும் மிகக் கவர்ந்தது. எனினும் அது செப்பு என்பதால் சிதம்பரத்தில் அதைப் பிரதிஷ்டை செய்யவேண்டாம் என எண்ணிய மன்னன் தூய பொன்னால் நடராஜத் திருமேனியை வடிக்கச் சொன்னான். இந்த முதல் சிலையை என்ன செய்யலாம் என யோசித்த மன்னனுக்கு இரண்டாவதாய் வடித்துக் கொண்டிருக்கும் சிலையைக் காட்டுவதற்காகச் சிற்பிகள் வந்து அழைத்தனர். சிற்பிகள் முகமோ குதூகலமாய் இல்லை. ஒரே கலவரம் கூத்தாடியது அவர்கள் முகங்களில். என்றாலும் தங்கள் குருநாதர் ஆணை! மன்னனை அழைத்துவர! ஆகவே மன்னனை சிலையைக் காண வருமாறு அழைத்தனர்.

சிற்பசாலையில் சிற்பியோ குழம்பிப் போயிருந்தார். நல்ல சுத்தமான பசும்பொன்னை உருக்கி எடுத்துச் சிலை வார்க்கும்போது எங்கிருந்தோ வந்தார் ஒரு முதியவர். பேசிக் கொண்டே இருந்தார். அவர் பேச்சில் கவனமாய் இருக்கையிலே தன் கையிலிருந்த செப்புக் காசுகளை பொன்னைக் குழம்பாய் உருக்கிக் கொண்டிருந்தவற்றில் போட்டுவிட்டு, இவற்றைச் சேர்த்துச் சிலை வடியுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார். செப்பு உருகித் தங்கக் குழம்போடு கலந்து, அதை சிலையாகவும் வார்த்தாயிற்று. ஆனால் மன்னனுக்குத் தெரிந்தால்?? மன்னனிடம் சொல்லுவதா வேண்டாமா?? சிற்பி குழம்பிப் போய் இருந்தார். மன்னனும் வந்தான். சிலையைக் கண்டான். தூக்கிய திருவடியையும், ஊன்றிய திருவடியையும் கண்டான். கண் முன்னே அந்தக் கூத்தனே நடனம் ஆடுவதையும் உணர்ந்தான். சிலையைக் கைகளால் தொட்டுத் தடவிப் பார்த்தான். விரிந்த செஞ்சடை, அபய ஹஸ்தங்கள் என அனைத்துமே அவன் மனதில் பதிந்தன. என்றாலும் முழுக்க, முழுக்கப் பொன்னால் ஆனதா? சந்தேகம் கொப்பளிக்கச் சிற்பியை நோக்கினான்.

சிற்பி செய்வதறியாது மன்னனிடம் நடந்ததைச் சொன்னார். மன்னனுக்குக் கோபம் மூண்டது. தலைமைச் சிற்பியையும், உடனிருந்து உதவிய சிற்பிகளையும் சிறையில் இட்டான்.

Sunday, January 04, 2009

சிதம்பர ரகசியம் - கோபுர தரிசனம், பாப விமோசனம்!


அடுத்து ஆயிரக்கால் மண்டபம். இது தான் ராஜ சபை என்று அழைக்கப் படும். தேவாஸ்ரய மண்டபம் எனவும் அழைக்கப் படும். இந்த ஆயிரக்கால் மண்டபம் மூடியே இருப்பதால் நான் இன்னும் பார்க்கவில்லை. நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும் நாட்களில் மட்டுமே திறக்கப் படுகின்றது. உள்ளே 984 தூண்கள் போல் இருப்பதாயும், வெளியே உள்ள தூண்களும் சேர்ந்தே ஆயிரம் என்றும் சொல்லுகின்றனர். தூண்களில் பரத நாட்டிய சாஸ்திரத்தை விளக்கிக் கூறும் சிற்பங்கள் இருக்கின்றன என்றும் சொல்லுகின்றனர்.

இது தவிர இந்தக் கோயிலின் கோபுரங்களின் அமைப்பும் வியக்க வைக்கின்றது. இவை பிற்காலச் சோழ மரபின் படி கட்டப் பட்டதாய் அறிய வருகின்றது.. கிழக்கு கோபுரம் மற்றவற்றை எல்லாம் பழமை வாய்ந்தது எனவும், அதுதான் மற்றவற்றை விடப் பெரியது எனவும் சொல்கின்றனர். 118 அடிகள் உள்ள அந்தக் கோபுரத்திலும் அருமையான, அழகான சிற்பங்களால் அமைந்துள்ளது. தெற்கு கோபுரம் பாண்டியனால் எழுப்பப் பட்டிருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். ஏனெனில் கோபுரத்தில் மீன் சின்னம் உள்ளது என்றும் தெரிய வருகின்றது. கோபுரத்தின் நுழைவாயிலின் மேலே உள்ள மத்திய பாகத்தில் மீன் சின்னம் இருப்பதோடு அல்லாமல், கட்டிட அமைப்பும் பாண்டிய நாட்டுக் கோயிலான மதுரையின் சுந்தரேஸ்வரர் கோயில் கோபுர அமைப்பில் இருப்பதாகவும் சிலர் கருத்து என்றும் தெரிய வருகின்றது. நாட்டிய சாஸ்திரத்தை எடுத்துச் சொல்லும் சிற்பங்கள் அநேகமாய் அனைத்து கோபுரங்களிலும் காணப் பட்டாலும், கிழக்கு கோபுரத்தில் காணப்படும் 108 அபிநய முத்திரைகளுடனும், கிரந்த லிபியுடனும் கூடிய சிற்பங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக உள்ளன மேற்கு கோபுரத்தில் சூரியன், சுப்ரமணியர், நர்த்தன விநாயகர் உருவங்கள் காணக் கிடைக்கின்றன. மேற்கு கோபுரத்தின் கீழ் பகுதியில் சுப்ரமணியர் தாரகனை மயில் மீது வந்து வதம் செய்யும் காட்சியைக் காண முடிவதாய்ச் சொல்லுகின்றனர். வடக்கு கோபுரத்தில் துர்கை, விஷ்ணு, கருடன் போன்றவர்களின் சிற்பத் திருமேனிகள் கிடைக்கின்றன. வடக்கு கோபுரத்தில் சிவ-பார்வதி திருமணக் காட்சி, பிரம்மா புரோகிதராய் இருந்து திருமணம் செய்து வைப்பதும், அனைத்து தேவாதி தேவர்களும் திருமணத்தைக் கண்டு களிப்பதும் காண முடிகின்றது. இது தவிரவும், நிருத்தசபையின் சிற்பங்களும் சிவகாமசுந்தரி ஆலயத்தின் சிற்பங்களும், பாண்டிய நாயகரின் கோயிலின் சிற்பங்களும், குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்குக் கண்ணையும், கருத்தையும் கவரக் கூடியவை.

கோபுரம் படங்கள் உபயம்:கூகிளாண்டவர் தயவில். ஆகவே தவறுகள் இருப்பதற்கு நானே காரணம்.

Friday, January 02, 2009

சிதம்பர ரகசியம் - கோயிலின் கட்டிடக் கலை!


இப்போது மீண்டும் கட்டிடக் கலை பற்றிப் பார்க்கலாம். கோயிலின் முக்கிய பாகமும், மத்திய பாகமும் ஆன சித்சபை முழுக்க முழுக்க மரத்தால் ஆனது. அதன் அஸ்திவாரம் கல்லில் போடப் பட்டது. கூரையை முழுக்க தங்கத்தால் மூடி இருக்கின்றனர். விமானம் ருத்ரகோடி விமானம் என்ற பெயரில் வழங்கப் படுகின்றது. சித் சபையின் எதிரே நாம் பார்த்த கனக சபையும் கல்லால் ஆன அஸ்திவாரத்தின் மேலேயே நிற்கின்றது. மரக்கதவுகள், வெள்ளியால் மூடப் பட்டுள்ளன. இந்தக் கூடத்தின் கூரையைச் செப்புத் தகடுகளால் மூடி இருக்கின்றனர்.

அடுத்த முக்கிய இடமான நிருத்த சபையில் (இங்கே தான் சரபரும் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கின்றார் என ஏற்கெனவே பார்த்தோம்) 8 அடி உயரத்தில் உள்ள 56 தூண்கள் சித்திர விசித்திரமான வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப் பட்டு தாங்குகின்றன. தென்னிந்தியாவிலேயே மிக அழகான அபிநய பாவங்களுடன் கூடிய சிற்பங்கள் இங்கே காணப் படுகின்றன.

சிவகாமசுந்தரியின் கோயில் தனியாகக் காணப்ப் படுகின்றது. தனி வாயிலும் உள்ளது . கற்களால் ஆன சங்கிலி இங்கே காணப் படுவதாயும் சொல்கின்றனர். அதை இன்னும் பார்க்கலை. பார்த்துட்டு நிச்சயம் செய்யறேன். என்றாலும் இவை எல்லாம் பிற்காலங்களில் விரிவு படுத்தப்பட்டவை என்றே சொல்லப் படுகின்றது. அது போலவே பாண்டியநாயகன் கோயிலும். சுப்ரமணியர் சந்நிதியோடு இருக்கும் இந்தக் கோயில் மிகவும் விரிவாக அலங்கரிக்கப் பட்டுள்ளது. கோயில்களின் கட்டிடக் கலையானது நிருத்த சபைக்கு அடுத்தபடியாக இங்கே அதன் உச்சத்தைக் காணலாம். இந்தக் கோயிலின் மத்திய மண்டபம் ஆனது விண்ணூர்தி போன்றதொரு அமைப்பில் சக்கரங்கள், யானைகள், குதிரைகள் துள்ளி விளையாடும் கோலத்தில் காணப் படுகின்றது. இது தவிர அநேக மண்டபங்கள் சிதம்பரம் கோயில் வளாகத்தினுள் காணப் படுகின்றன. அவற்றில் ஒற்றைத் தூண் மண்டபம் ஒன்று நூற்றுக் கால் மண்டபத்துக்கும் சிவகங்கைக் குளத்துக்கும் நடுவில் காணப் படுகின்றது. விநாயகருக்காக ஏற்படுத்தப் பட்டதாய்ச் சொல்லப் படும் இதை திருமூல விநாயக மண்டபம் என்று சொல்கின்றனர்.கோயிலின் வெளியே மூன்று பக்க மூலைகளில் நான்கு தூண்கள் கொண்ட மண்டபங்கள் இருக்கின்றன. இவை கோயில் திருவிழாக் காலங்களில் பலி பீடங்களாய்ப்பயன் படுத்தப் படுகின்றது. கோயிலின் ஈசான திசையில் 16 தூண் மண்டபம் இருக்கின்றது. நூற்றுக் கால் மண்டபம் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு அடுத்துக் காணப் படுகின்றது. இதன் எதிரே கோயிலின் வெளிப் பிரகாரத்தில் இருக்கும் சிவகங்கைக் குளம் இருக்கின்றது. சோழப் படைத் தலைவன் ஆன நரலோகவீரனால் இது கட்டப் பட்டதாய்த் தெரிய வருகின்றது. கிழக்கு மேற்காக 160 அடி நீளமும் வடக்கு தெற்காக 100 அடி அகலமும் கொண்டு உள்ளது. அஸ்திவாரம்41/2 அடி உயரத்தில் யாளி முகப்புடனும் அமைந்துள்ளது. இது பிற்காலச் சோழர்காலத்தைச் சேர்ந்ததாய்ச் சொல்லப் படுகின்றது.