எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, December 07, 2013

காமதேனுவின் சரித்திரம் --பகுதி ஐந்து முடிவு

குலாவாம்பசுவே, நீ கன்றுடன் சேர்ந்து கலந்து கொஞ்ச நாள் இருந்துவிட்டு, நம்முடைய பதவியை அடைவாய் நற்பசுவே! எனப் பரமன் உரைக்கலுமே பக்தியுள்ள நற்பசுவும் அப்படியே ஆகும் என்று அரசனைத்தான் வணங்கி, பக்கியம், பாக்கியம் என்று பரமனைத் தான் வனங்கி, சிவனை வணங்கிச் சென்றது நற்பசுவும்.  கன்றை ஆதரித்துக் கருணையுடன் பால் கொடுத்து இன்பமுடனே பசுவும் இருக்கின்ற நாளையிலே, சிவனுடைய அருளாலே சிவலோகம் சென்றதப்பா!  பரமன் அருளாலே பரமபதம் சென்றதப்பா! மோக்ஷப் பதவியும்  முக்தியும் அடைந்ததப்பா. இப்பசுவின் சரித்திரத்தைப் பக்தியாய்க் கேட்டவர்கள் காமதேனுவின் சரித்திரத்தை பக்தியாய்க் கேட்டவர்கள், கோவின் சரித்திரத்தைக் கொண்டாடக் கேட்டவர்கள், எழுதிப் படித்தவர்கள் இன்னும் சொல் என்றவர்கள், மனம் உருகிக் கேட்டவர்கள் மங்கையர்கள் எல்லோரும் புத்திரரைப் பெற்றுப் பெருமையாய் வாழ்ந்திருப்பார்.

கோதானம் செய்த பலன் பெறுவார்.  கன்னிகாதானம் செய்த பலன் பெறுவார். பூமிதானம் செய்த பலன் பெறுவார்.  அன்னதானம் பண்ணின பலன் பெறுவார். பசுவின் சரித்திரத்தை அப்போது பிரஹலாதரும் மஹாபலிக்குச் சொல்லி மன மகிழ்ந்து தானிருந்தார்.  இப்புண்ணிய சரித்திரத்தைக் கேட்டு இருந்தவர்கள் உத்தமமான உன் குலத்தில் உதித்ததொரு எந்தனுக்குக் குறைகள் உண்டோ, குலக்கொழுந்தே! என்று சொல்லி பக்தி உள்ள புலியும் பாட்டனைத் தான் வணங்கி கேட்ட கதையினாலே, நான் கிருதார்த்தனாகிவிட்டேன்.  என் பந்தங்கள் விலகிப் பரமபதம் தான் பெறுவேன்.  என்று சொல்லி இருந்து அரசாண்டு வந்தான்.

பசுவின் சரித்திரம் முற்றும்

Friday, December 06, 2013

காமதேனுவின் சரித்திரம் --- பகுதி நான்கு

பசுவின் வாக்கியத்தைக் கேட்டும் அந்தப் புலியும் அப்போ பக்திகள் உண்டாகி, இப்பசுவின் உயிரை விட என்னுயிர் தான் பெரிதோ.  உத்தம குணமுள்ள உன்னை நான் புஜித்து உலகில் இருந்து உயிர் வாழ்வதை விட செத்து மடிந்திடுவேன். சிவலோகம் சேர்ந்திடுவேன்.  மாண்டு மடிந்திடுவேன்.  வைகுண்டம் சேர்ந்திடுவேன்.  பசுவின் சங்கத்தால் பரமபதம் நான் அடைவேன் என்று புலியும் தான் இறைவனைத் தான் தொழுது கொடிய புலியும் கோவிந்தனுடைய சங்கத்தால் பரம பதம் சேர்ந்தப்போ, புலியின் காக்ஷியைப் பார்த்து அந்த நற்பசுவும்,


இப்பாவியின் உடல் புலி பசிக்குத் தராமல் இந்த சரீரம் இருந்தென்ன, போய் என்ன! என்னத்தை எண்ணிப் புலி இறந்ததோ நான் அறியேன்.  நான் கொடிய பாவம் செய்ததினால் இக்கொலை பாதகத்தை நான் பார்த்தேன்.  நானும் மடிவேன். நாதனே அருள் புரிவாய் என்று பசுவும் அடர்ந்ததொரு காடு வந்து பாலைவனம் நடந்து பரமனைத் தான் பார்த்து பக்திப் பெருக்கத்தால் சுற்றி வலம் வந்து ஸ்தோத்திரங்கள் தான் செய்து, முக்தி அளிக்க வேண்டும் முகுந்தனே, சரணமையா, மாறி மாறி வருகின்ற மகிமையுள்ள பிறப்புக்களில் நான் எத்தனை கோடி ஜென்மம் எடுத்தாலும் எனக்கு உன் பக்தி மறவாமல் இருக்க பாக்கியங்கள் செய்ய வேண்டும் என்று பசுவும் ஈசனைத் தான் வணங்கி திரும்பி வரும்போது சிவலிங்கத்தைக் கண்டு லிங்கத்தின் வயிற்றிலே ரத்தம் பெருகியதைக் கண்டது பசுவும்.

அப்போ, கண்ணாலே ஜலம் விட்டு, இது என்ன அதிசயமோ ஈசனே நான் அறியேன். பரமனே, நான் அறியேன்.  எந்தப் பாவியால் நேர்ந்ததோ என்று பசுவும் திடீரென்று கீழே விழுந்து மண்ணிலே புரண்டு மஹாதேவா என்று அலறியது.  பசுவின் பக்தியைப் பரமனும் தான் பார்த்து ஆகாயத்தில் வந்து அசரீரி வாக்காக அறிவுள்ள நற்பசுவே, அந்தணராய் நான் வந்து வழியை மறைத்து வாக்குவாதமும் செய்யும்போது குறுக்காய் நின்றவனைக் கொம்பாலே தள்ளிவிட்டுச் சென்றாய், கொம்பு பட்ட புண் இது கோவே எழுந்திராய்.  உன் பக்தியை உகந்து கொண்டேன்.


 பசுவே, எழுந்திராய்.  பரமன் உரைத்ததைக் கேட்டு பக்தியுள்ள நற்பசுவும் ஈசனைக் குத்தி விட்டு இருப்பாளோ  பூமியிலே!  பரமனக் குத்திவிட்டுப் பாரில் இருப்பாளோ!.  நான் பக்தியாய் பூஜை செய்து பரமனுக்கு துரோகம் செய்தேன்.  முக்தி அளிக்கும் முகுந்தனுக்கு துரோகம் செய்தேன்.  இந்தப்பாவங்களைச் செய்து இப்பாரில் இருப்பாளோ. தற்கொலை செய்து கொண்டு தானாய் மடிந்திடுவேன்.  பசுவின் பக்திக்குப் பரமனும் தான் மகிழ்ந்து கைலாச நாதரும் பசுவிற்குக் காட்சி கொடுத்தார்.  ரிஷப வாகனத்தில் பசுவின் முன் வந்து நின்று காமதேனுவைக்  கடாக்ஷித்து எது சொல்வார்.  பக்தியில் சிறந்த நற்பசுவே எழுந்திராய்.  உன்னுடைய பக்தியைப் போல் ஒருவரையும் பார்த்ததில்லை.  முக்திஉண்டு.  மோக்ஷப் பதவியும் உண்டு.  நீ குத்தியதாலே எனக்குக் கொடுமைகள் ஒன்றுமில்லை.  குத்தல்கள் எண்ணவில்லை.


Wednesday, December 04, 2013

காமதேனுவின் சரித்திரம் -- பகுதி மூன்று

பசு உரைத்த வாக்கியத்தைக் கேட்டும் அந்த வியாகரமும், மூடத்தனமுள்ள ஹிருதயமும் குலை செய்ய நினைத்த கொடும்புலியும் மனமிரங்கி அதன் இருளடைந்த ஹிருதயமும் இரக்கம் கொண்டு ஏது சொல்லும்.

நான் தோஷத்தை எண்ணாமல் தும்சங்கள் செய்திடுவேன்.  நீ எந்த இடம் போனாலும் இழுத்து வந்து கொன்றிடுவேன்.  கானகத்தில் சென்றாலும் கண்டு வந்து சம்ஹரிப்பேன்.  சத்தியத்தை எண்ணித் தானாக வந்துவிடு.  புலி உரைத்திடவே, புத்தியுள்ள நற்பசுவும் பாக்கியம், பாக்கியம் என்று பசுவும் நடந்ததுவாம்.

நான் பரமனை பூஜிக்க பாக்கியங்கள் செய்தேனோ, லிங்கத்தை பூஜிக்க நான் என்ன தவம் செய்தேனோ! ஈசன் அருளாலே என் இடர்கள் தீர்த்து வைத்தான் என்று ஆனந்தத்தாலே, அங்கமெல்லாம் பூரித்து கானகத்தில் சென்று லிங்கத்தைத் தான் பார்த்து, சுற்றி வலம் வந்து ஸ்தோத்திரங்கள் தான் செய்து பக்கம் வலம் வந்து, பகவானை தியானித்து, புலியின் பசி தீரப் புண்ணியரே, நான் போறேன்.  உம்முடைய  பக்தி எனக்கு ஒரு நாளும் மறவாதே. சொல்லிய பசுவும் இருண்ட வனம் தான் தாண்டி, காடு கடந்து கரிமலை கடந்து, ஆறு கடந்து அடர்விகளைத் தாண்டி, தெரு கடந்து, தேர் ஓடும் வீதி வந்து கன்று இருக்கின்ற கட்டிடத்தே தான் புகுந்து கண்டதும்  அந்தக்கன்றும் காராம்பசு தன்னை அம்மா நீ இந்நேரம் வராமல் இருந்ததற்குக் காரணமேன்?  பாதகர்கள் கூடி உன்னைப் பட்டியில் அடித்தாளோ, துஷ்டர்கள் கூடி உன்னைத் துரத்தி அடித்தாளோ, மாட்டுடன் கலந்து மந்தையுடன் சேர்ந்தாயோ?  என்னைத் தனியாக விட்டு இருந்ததென்ன சொல்லம்மா!


கன்று சொல்லப் பசுவும் கண்ணாலே ஜலம் விட்டு, என் குஞ்சலமே, கண்மணியே, என் குறைகள் என்ன சொல்வேன், நான் கொடிய புலியால் கொலை நடுங்கி ஓடி வந்தேன்.  சத்தியங்கள் பண்ணி வந்தேன்.  தப்பாமல் போக வேண்டும்.  நான் உன்னை நினைத்து உறுதியாக இங்கே வந்தேன்.  நான் உனக்குப் பாலை ஊட்டி பாலகனே போக வேணும். இச்சொல்லைக் கேட்டு இளங்கன்னு ஏது உரைக்கும்.  அம்மா நீ ஆண்ட புலிக்கு நான் ஆண்டால் ஆகாதோ.  என் மாதாவே, நீ இருந்தால் வம்சங்கள் விருத்தி உண்டாகும்.  தாயாரே நீ இருந்தால் சந்ததிகள்  உண்டாகும்.  நான் இருந்து நீ போனால் இந்நாடு சகிக்குமோ?  பெற்றோர்கள் கஷ்டத்தை புத்திரனும் நீக்க வேண்டும்.  தாயைப் பறி கொடுத்துத் தரை மேல் இருப்பாரோ?  புலிக்கு இரையாக உன்னைப் போகவிட்டு நான் இருந்தால் பூமி சகிக்குமோ?  புதுமை வந்து நேராதோ?  கன்று சொல்லப் பசுவும் கன வருத்தம் தானாகிக் கண்ணாலே கண்ணீர் விட்டுக் கதறியே, ஏது சொல்லும்.  என் அழகுள்ள கண்ணே, அப்படிச் சொல்லாதே.  என் குஞ்சரத்தின் கண்ணே, அப்படிச் சொல்லாதே.  என் பரிதாபம் நீக்க வந்த பாக்கியமே அப்படிச் சொல்லாதே. என் குறை நீக்க வந்த குஞ்சலமே சொல்லாதே..

பேச்சுத் தவறின பேர் பூமியில் இருப்பாரோ!  சத்தியம் தப்பி தரணியில் இருப்பாரோ?  பொய் சொன்னவருக்குப் புண்ணிய லோகங்கள் உண்டோ?  நான் சொன்ன புத்தியை நலமுடனே நீ கேளு..  பாயிலிருந்து நெல்லை பதறிப் போய் தின்னாதே.  திறந்ததொரு வீடு தன்னில் தடதடவென்று போகாதே. பாவியர்கள் கூடி உன்னைப் பதற அடிப்பார்கள்.  நட்டிருக்கும் பயிரை நஷ்டப்படுத்தாதே.  துஷ்டர்கள் கூடி உன்னை தொந்திரவு செய்வார்கள்.  கொல்லையில் பூந்து கொடுமைகளைச் செய்யாதே.  பத்தினியால் இட்ட பயிரை அழிக்காதே.  இனத்துடன் சேர்ந்து இங்கும், அங்கும் திரியாதே.  பாழும் கிணத்துப் புல்லைப் பதறிப்போய்த் தின்னாதே.  பரமனைத் தான் நினைத்தால் பரமபதம் சேர்ந்திடலாம்.  சிவாயம் என்றவருக்கு ஒருநாளும் அபாயம் இல்லை.

இப்படிக்குச் சொல்லி ஏற்றமுள்ள நற்பசுவும் போகுது பார்.  பசுவும், புலியிருக்கும் இடம் தேடி வருகிற வழி தன்னில் மறையவர் போல் ஒருவர், சிவசிவா என்று சொல்லித் திருநீறைத் தான் அணிந்து அறிவுள்ள பசுவே, அவசரமாய்ச் செல்லுவதேன்!  காரியங்கள் ரொம்ப உண்டோ!  காராம்பசுவே என்றார்.  அந்தணர் உரைக்க அறிவுள்ள நற்பசுவும் வந்தனங்கள் செய்து மறையவரைத் தான் பார்த்து வேதம் கரைகண்ட விப்ரரே சொல்லுகிறேன்.  நான் ஈசனை பூஜிக்க நாடியே செல்லுகையில் கொடும்பசியால் புலியும், என்னைக் கொல்ல வந்தப்போ, சத்தியம் செய்து வந்தேன்.  தப்பாமல் போக வேணும்.  வியாகரமும் பசியோடு வழி பார்த்துத் தான் இருக்கும்.  வழியது விலகி நில்லும்.  மறையவரே!  சரணம் ஐயா.


பசுவின் வாக்கியத்தைப் பரமனும் தான் கேட்டு, பசுவினுடைய உறுதியைப் பரமசிவன் தான் அறிந்து, சித்தம் குளிர்ந்து தேகமெல்லாம் பூரித்து, பசுவின் பக்தியைப் பரமனும் தான் உகந்து இன்னும் பார்ப்போம்.  இதனுடைய உறுதிகளை என்று பரமனும் வந்து நின்று பசுவைத்தான் மறைத்துப் போக விட மாட்டேன்.  புத்தி கெட்ட பசுவே, திரும்பிப் போய்விடு சீக்கிரத்தில்.  நில்லாதே போ.  பரமனும் உரைக்கலுமே விவேகமுள்ள நற்பசுவும் என்ன பாவத்தினால் இப்பாப்பான் மறைத்தாரோ.  பரமன் உரைத்ததைப் பசுவும் தான் கேட்டு, வாக்குத் தவறி நடப்பானோ வையகத்தில்.  ஒரு புறாவுக்காக உயிரைக் கொடுத்த  கதை கேட்டும் இருக்கையிலே கிருபையுள்ள அந்தணரே பேய், கழுகுகள் கூடிப் பிச்சுண்ணும் தேகத்தைப் புலியின் பசியைத் தீர்த்தால் புண்யலோகமுண்டாம்.  சத்தியத்தை எண்ணாமல் தானிருக்க நியாயமுண்டோ என்று கோபத்துடனே குலாவாம் பசுவமப்போ குறுக்காய் நின்றவரைக் கொம்பாலே தள்ளிவிட்டு ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து உத்தமமான பசுவும் புலி இருக்கும் அக் கானகத்தை புத்தியுள்ள நற்பசுவும் காடுகளெல்லாம் திரிந்து கண்டது வியாகரத்தை. வழியில் நடந்த வைபோகத்தைச் சொல்லிப் பசியாற்றிக் கொள்ளுமையா, வியாகர ராஜாவே!



(தொடரும்)


குலை செய்ய நினைத்த=  கொலை செய்ய நினைத்த

தும்சங்கள் = துவம்சங்கள்

கொலை நடுங்க=  குலை நடுங்க

Monday, December 02, 2013

காமதேனுவின் சரித்திரம் --பகுதி இரண்டு.

பசுவின் முதுகிலே முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பார்.  வாலிலே வருணர் இருப்பார்.  கிடையிலே லக்ஷ்மிதேவி இருப்பாள்.  பசுவின் வயிற்றிலே சனத்குமாரர் இருப்பார்.  கோமூத்திரத்திலே கங்காதேவி இருப்பாள்.  கோமியத்திலே சரஸ்வதி இருப்பாள்.  பிடரியிலே அக்னி தேவன் இருப்பான்.  பசுவின் நெற்றிச் சுழியும், நிறைந்த வடிவழகும், பசுவின் கொம்பிலே க்ஷத்திரியன் இருப்பான்.  நெற்றியிலே நீலகண்டன் இருப்பார்.  காதிலே கருணர் இருப்பார்.  கண்ணிலே சந்திர, சூரியர் இருப்பார். உதட்டிலே உத்தமி தேவி இருப்பார்.  பல்லிலே பார்வதி தேவி இருப்பாள்.  பசுவின் நாலு காலிலேயும் பூமாதேவி இருப்பாள்.  முகத்திலே மூதேவி இருப்பாள். பசுவின் பிறப்பு பிறந்தது தான் இச்சொல்லு நீ சொன்னால் இனிய பக்தி உண்டாகும். 


இனிய பக்தி உண்டானால் இனிய பாவம் தான் துலையும். இப்படிப்பட்ட குணம் உள்ள பசுவைக் கொம்புக்குப் பொன் கட்டி, குவலைக்கு வெள்ளி கட்டி, ஊட்டி வரும் கன்னுக்கு உடம்பெல்லாம் பொன் பூட்டி, நடந்து வரும் கால்களுக்கு வெண்டயங்கள் தான் பூட்டி, வீசி வரும் வால்களுக்கு வெண் சாமரங்கள் கட்டி, பட்டு வஸ்திரத்தினால் பசுவை அலங்கரித்து, மல்லிகை புஷ்பத்தால் மாலையது தான் போட்டு, பசுவை வலமாகப்பிரதக்ஷணங்கள் தான் வந்து, கோவை பூஜித்து கோவிந்தனை நினைத்து, வேதப் பொருளாலே, வேதாந்தம் வந்தவனாய், காமதேனுவை கருத்திலே தான் நினைத்து, அந்தணர்களை அழைத்து அக்ஷதையால் அர்ச்சித்து, அக்ஷய த்ருதியையிலே அழகான நாளையிலே ஆசாரியரை நினைத்து அந்தணர்க்கு தானம் செய்தால் இறப்பு, பிறப்பு உண்டோ!  இந்திர சத்துருவே, திரும்பிப் பிறப்பில்லை, வைகுண்டம் சேர்ந்திடுவார்.  ஜனன, மரணத்தை சோதித்து எரித்துவிடும்.  நித்யாசிரியரோட நிலை பெற்று தானிருப்பார்.  பஞ்சமா பாதகங்கள் பஞ்சாய்ப் பறந்துவிடும்.  

கொலை, களவு, சூது கொடியவர்கள் செய்தாலும்  இந்தப் பசுதானத்திலே பரமபதம் பெறுவார்.  கோதான பலனை கொத்தவனே சொல்ல வந்தேன். பசுவின் சரித்திரத்தைப் பாங்குடனே சொல்லுகிறேன்.  உத்தம குலத்தில் உதித்தவொரு நற்பசுவாம்.  அது தன் இனத்துடன் சேராமல், அங்கும், இங்கும் ஓடாமல் கட்டிடத்தில் நில்லாமல், காடு தனில் திரிந்து, பக்தியுடனே, அதுவும் பரமனை பூஜை செய்யும். சுந்தரமான அடர்ந்த ஒரு காடு தன்னில் சிவலிங்கத்தைக் கண்டு, சிந்தை மிகக் குளிர்ந்து கெங்கையிலே நீராடி, கிலேசத்தினை ஒழித்து, சிவலிங்கம் பூஜை செய்ய சிந்தையிலே தான் நினைத்து அது வாய் கொண்ட நீரை மகிழ்ச்சியுடன் தான் கொணர்ந்து வில்வமரத்தை வேருடனே தான் பிடுங்கி, வருகிற வழிதன்னில் வியாகரத்தைத் தான் கண்டு திடுக்கிட்டு நின்றதாம். தேஷ்டமுள்ள நற்பசுவும், வியாகரமும் அப்போது வழி தன்னைத் தான் மறித்து என் கொடிய பசியை அறிந்து உன்னைப் பரமன் அனுப்பி வைத்தார்.

என் கொடிய பசியை கோவிந்தன் கண் பார்த்தார்.  ஐந்தாறு நாளாக ஆகாரம் இல்லாமல் காட்டிலே அலைந்து, களைத்தும் இருக்கையிலே நல்ல தருணத்திலே நீ வந்து உதவி செய்தாய்.  நற்பசுவே! கோவ குணமுள்ள கொடிய புலியும் அப்போது ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து வர பக்தியுள்ள நற்பசுவும் மேல் பயந்து, நடுநடுங்கி, பரமனைத் தான் நினைத்து சித்தம் கலங்கி, சிவனை மனதிலே எண்ணி, புலிராஜனே, கேளும், உமக்குப் புண்ணியங்கள் ரொம்ப உண்டு. .பரமனை பூஜிக்க பக்தியாய் நான் போறேன்.  சிவலிங்கம் பூஜை செய்து திரும்பியே வந்திடுவேன்.  விக்கினங்கள் செய்யாதே. வியாகரமே சத்தியமாய் உனக்குத் தப்பாமல் வந்திடுவேன்.  கன்னுக்குப் பால்கொடுத்து கட்டாயம் வந்திடுவேன்.  வியாகர ராஜாவே, மனமிரங்க வேணுமய்யா! 


பசுவின் வாக்கியத்தைக் கேட்டும் அந்த வியாகரமும் கிடுகிடுவென்று சிரித்துவிட்டு ஏது சொல்லும்! கைப்பொருளை விட்டுக் காத்திருக்கக் காரணம் ஏன்?  உன் சாமர்த்தியத்தாலே தப்ப வழி பார்த்தாய்.  உன்னைப் புஜிக்காமல் விடுவேனா?  புத்தி கெட்ட நற்பசுவே, அறிவில்லாத ஜந்துவிற்கு ஆணை, சத்தியம் எல்லாம் உண்டோ?  தெய்வ பக்தி உண்டோ?  ஜன்ம விருதம் ஆகையாலே உன்னை அரை க்ஷணத்தில் கொன்றுவிட்டு என் பசியைத் தீர்த்து விட்டால் பரலோகம் தான் அடைவார்.  


புலி சொல்லைக் கேட்டு புதுமையுள்ள நற்பசுவும் என் வார்த்தை தன்னைக் கேளும். வியாகர ராஜாவே!  நான் சொன்ன சொல்லைத் தவறி நடந்தேனேயாகில் சூரியன் உதித்த பிறகு சாணி தெளித்தவளும், புருஷனுக்கு துரோகம் செய்து பூமியில் இருந்தவளும், பெரியோர் சொல்லைக் கேளாது இருந்தவரும், ஆகிய அந்தப் பாவியர்கள் அடையும் கெதியை நான் அடைவேன்.  கூலி குறைத்தவரும், குறை மரக்கால் போட்டவரும் அங்காடிக் கூடையிலே அதிக விலை இட்டவரும், பட்டாடை நெல்லிலே பதரைக் கலந்தவரும், அக்கொடியவன் போகும் வழி அதிநரகம் நான் போறேன்.  பசுவை அடித்தவரும், பர்த்தாவை வைதவளும் கன்னுக்குப் பால் விடாமல் கறந்தவரும் வந்த விருந்துக்கு வழங்காதிருந்தவரும், அக்கொடியவர் போகும் வழி அதி நரகம் நான் போறேன்.

பெத்த தாய் சொல்லைக் கேளாது இருந்தவனும், பெண்டாட்டி, பிள்ளைக்குச் சோறு போட்டாமல் புஜித்தவனும், தெய்வத்தை ஒரு நாளும் நினையாது இருந்தவனும் பிச்சைக்கு வந்தவரைப் பின்னே வா என்றவனும், ஆண்டி பரதேசிகளை அடித்துத் துரத்தினவரும், தர்மத்தை ஒருநாளும் செய்யாது இருந்தவரும், அக்கொடியவன் போகும் வழி அதி நரகம் நான் போறேன்.  ஏகாதசி என்னும் விரதத்தைக் கெடுத்தவரும், பஞ்சமாபாதகங்கள் பண்ணிய பாவியரும், அப்பாவியர்கள் போகும் வழி அதி நரகம் நான் போறேன். 

அடைக்கலம் என்று வாய்த்த சொத்தை அபகரித்தவரும், வீட்டில் நெருப்பிட்டு வேடிக்கை பார்த்தவனும், குருவை நிந்தித்துக் கொடும்பாவம் செய்தவனும், கூடப் பிறந்தவரைக் கொடும் தோஷம் சொன்னவனும், ஏழைகளை எதிரிட்டுக்கொன்னவனும் ஆற்றிலே இறங்கி அம்மணத்தோடு நின்றவனும், மாமி, மாமனுக்கு மரியாதை செய்யாதவனும் கர்ப்பத்தில் இருக்கும் கருவை அழித்தவனும் இக்கொடியவன் போகும் வழி அதிநரகம் நான் போறேன். குடியைக் கெடுத்தவன், குல துரோகம் செய்தவன், குல தர்மத்தை விட்டவன் கொடும்பாவம் செய்தவன், ஊரார் உடைமைக்கு உலை வைத்திருப்பவன், உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பவன், இக்கொடியவன் போகும் வழி நான் போறேன்.

(தொடரும்)


புஜித்தல்=புசித்தல்

கெங்கை=கங்கை

விருதம்= விரதம்

துலையும்=தொலையும்

குவலைக்கு வெள்ளி கட்டி= குளம்பைக் குவலைனு சொல்லி இருப்பதாக நினைக்கிறேன்.

வெண்டயங்கள் = தோளில் அணியும் ஒரு ஆபரணம்.

தெரிந்தவரை பொருள் சொல்லி இருக்கேன்.  தெரியாத இடத்தைச் சுட்டிக் காட்டவும். எனக்குத் தெரியலைனாலும் கேட்டுச் சொல்றேன்.

காமதேனுவின் சரித்திரம்! பகுதி ஒன்று

அரங்கனை வெகுநாட்களாகக் கவனிக்கலை. :( அரங்கன் கதையைத் தொடரணும்.  அவன் ஊர் சுற்றியது குறித்துக் கொஞ்சம் போல் எழுதியதை மீண்டும் தொடரணும்.  நேரம் வாய்க்கலை. அதிலே உட்கார்ந்தால் விஷயங்கள் தேடுவதிலும், குறிப்புகள் எடுப்பதிலும் நேரம் போயிடும்.  ஆகவே தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கேன்.  நடுவிலே கிடைத்ததைப் போடுகிறேன்.  நேத்தெல்லாம் போஸ்டே போடலை.  ஆனால் வந்தவங்க நிறையப் பேர்.   ஹிட் லிஸ்ட் எகிறி இருக்கு. புதுசா ஏதும் இருக்கானு பார்த்திருப்பாங்க போல! :)

நம்ம மாதங்கிக்கும், அவங்க அப்பா மாலி என்ற மஹாலிங்கம் அவர்களுக்கும் பக்தி, ஆன்மிகம் சம்பந்தமா எந்தச் செய்தி கிடைச்சாலும் அதை உடனே என்னுடன் பகிர்ந்து கொண்டுவிடுவாங்க.  அப்படிப் பகிர்ந்தது தான் பிரணய கலஹம்.  பதிவுகள் வந்தன. அதைத் தபாலில் அனுப்பி இருந்தாங்க.  தபாலை வாங்கி எங்கேயோ வைச்சுட்டு அதைக்காணாமல் மாதங்கிக்குத் தொலைபேசி அப்புறமாக் கண்டு பிடிச்சு எழுதினேன். :)))  இம்முறை மாதங்கி அப்பா நேரிலேயே எடுத்து வந்துட்டார்.  இம்முறை அவர் கொடுத்திருப்பது காமதேனுவின் சரித்திரம். இதை ஒரு தோத்திரமாக, இசைப்பாடலாக வேலை செய்து கொண்டே அவங்க வீட்டுப் பெரியவங்க பாடுவாங்களாம்.  தற்செயலாகக் கிடைத்ததை ஸ்கான் செய்து எடுத்து வந்துட்டார்.  என்னிடம் கொடுத்துட்டுப் போய்ப் பத்து நாட்கள் ஆயிடுச்சு. கொஞ்சம் கொஞ்சமாக அதைத் தட்டச்சிட்டு இருக்கேன்.  தட்டச்சியவரை இங்கே பகிர்கிறேன்.



காமதேனுவின் சரித்திரம்

1தெப்பக் கணபதியே, தொந்தி வயத்தானே, கருத்தரிக்கு முன் பிறந்த கணபதியே, முன்னிடுவாய், பேழை வயத்தோனே, பெருச்சாளி வாகனனே, பசுவின் சரித்திரத்தை பக்தியாய் நான் எழுத விக்கினங்கள் வராமல் வினாயகரே, முன்னிடவும்.  முப்பழமும், தேங்காயும், மோதகமும் நான் படைப்பேன். 

சரித்திரத்தின் வரலாறு

மஹாபலியின் வேள்வியிலே மாதவனும், வாமனனும் மூன்றடி மண் அளந்து முக்திபதம் தான் அளித்தார்.  அந்த சமயத்தில் அசுரர் குலத்துதித்த, இந்திர சத்துருவும் பயம் கொண்டு தானிருக்க தானே அசுரன் தளர்ந்த மனதுடனே சிந்தை கலங்கி செய்வதொன்றும் தோன்றாமல், கண்ணனுடைய கபடத்தைத் தான் நினைத்து மாதவன் செய்த வஞ்சனையைத் தான் நினைத்து மாயவனார் செய்த வஞ்சனையால் வாழ்வைப் பறித்துவிட்டார்.

ஶ்ரீமதியின் கபடத்தால் செல்வம் இழந்துவிட்டேன் என்று கலங்கிய மனதுடனே கருத்திழந்தே தான் இருந்தார்.

பரம பாகவதரான பிரஹலாத ஆழ்வாரும், தைத்திய ராஜனுக்கு தருமத்தை எடுத்துரைத்தார்.  பக்தியில் சிறந்த பலி சக்கரவர்த்தியும் பாட்டனைத் தான் வணங்கி பக்தி பரவசத்தால் என் குலதெய்வமே என்னுடைய தாத்தாவே, 

ஐந்து வயதில் ஹரியை அறிந்து கொண்டீர்.
குஷியில் இருக்கும்போது குரு உபதேசம் பெற்றீர்
கர்ப்பத்தில் இருக்கும்போது கேசவனைத் தான் அறிந்தீர்
வயிற்றில் இருந்து வாசுதேவனை அறிந்தீர்.
கேசவப்ரியே கிருபையுள்ள உத்தமரே
பணத்தின் பெருமையால் பரமனை நான் மறவேன்
ஐஸ்வர்யத்தினால் அகங்கொண்டு தான் இருந்தேன்.
தானவகை அறியேன்
தருமத்தின் பெயர் அறியேன்
முக்திவழி அளிக்கும் முகுந்தனைத் தானறியேன்


பேரன் உரைக்கலுமே, பிரஹலாதன் தான் மகிழ்ந்து, தான மகிமையை தானவேந்திரர் சொல்லுகிறேன்.  
பக்தியினாலே பரமபதம் தான் அடைவாய்.  நாமங்களாலே நல்ல கெதி பெறலாம். 
கிருஷ்ணா என்று சொன்னால் கேட்ட செவி திறக்கும். அச்சுதா என்று சொன்னால் அங்கம் மிகக் குளிரும்.
கேசவா என்று சொன்னால் க்லேசம் பறந்தோடும். நாராயணா என்று சொன்னால் நல்ல கெதி பெறலாம்.
ஹரி என்னும் பக்தி அமிர்தகல சிந்தையிலே எப்போதும் சிந்தை எங்கும், அங்கும் தோன்றாமல் பல சிந்தை ஓடாதே, பாவம் வந்து தீண்டாதே.

பரமபத நாதனை பக்தியால் பூஜை செய்து, ஜனன, மரணமெனும் ஜென்மம் எடுக்காமல் சம்சார சாகரத்தில் தலையிட்டுக் கொள்ளாமல், காலமே எழுந்திருந்து கடவுளைத் தான் நினைத்து, காலனை நினைத்து, கணவனைத் தான் நினைத்து, நீலனை எண்ணி நிலையான பாதத்தை எண்ணி, குஞ்சலத்தை எண்ணி, குலாவாம் பசுவை எண்ணி, பஞ்ச கன்னிகைகளை, பக்தியாய்த் தான் நினைத்து, பசுவின் புராணத்தை பக்தியுள்ள நற்கதையை, கோவின் சரித்திரத்தை கொத்தவனே சொல்லுகின்றேன். 

காமதேனு என்னும் காக்ஷியுள்ள சரித்திரத்தைக் அசடர்கள் கேளாதே, கருமிகள் கேளாதே. எச்சில் கலக்கும் இரண்யாத்மா கேளாதே. 
தூரம் கலக்கும் துர் ஆத்மா கேளாதே. 
கூலி நிறைக்கும்கொடும்பாவி கேளாதே. 
தாய் சொல் கேளாத சண்டாளி கேளாதே.  
ஒத்த கணவன் சொல் ஊர் சொல் கேளாத, பக்தி இல்லாத பாவியர்கள் கேளாதே. 
அன்னம் இடாத அரும்பாவி கேளாதே.  
மாமி சொல் கேளாத மஹாபாவி கேளாதே. 
கற்பை அழித்த ஆரும்பாவி கேளாதே. 
சிசு ஹத்தி செய்த தீயர்கள் கேளாதே. 
பசுவை அடித்த பாவியர்கள் கேளாதே.

பூமாதேவி கேட்டால் பொன்னாலே நெல் விளையும்.  
வருண பகவான் கேட்டால் வருஷம் மழைபொழியும்.  
மலடிகள் கேட்டால் மைந்தர்களைப் பெத்திடுவாள். 
கன்னியாப் பெண்கள் கேட்டால் நல்ல கணவனைத் தேடி அடைவாள். அந்தப்பரிசுத்தமான பசுவின் நற்கதையை பாக்கியவானே உனக்கு நீதியாய் நான் உரைப்பேன்.

(தொடரும்)

Sunday, October 27, 2013

அரங்கனின் பாண்டியன் கொண்டை வந்த வரலாறு.



இப்படிப் பல கோயில்களுக்கும் திருப்பணி செய்து வந்தவரைத் தன் கோயிலுக்கு வரவழைக்க அரங்கன் முடிவு செய்தான்.  ஒரு நாள் அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகளின் கனவில் அரங்கன் நம்பெருமாளாகிய உற்சவக் கோலத்தில் தோன்றித் தனக்குப் பாண்டிய மன்னனால் சமர்ப்பிக்கப்பட்ட பாண்டியன் கொண்டை பழசாகிப் பழுதடைந்து விட்டதாகவும், புதியது தேவை என்றும் கேட்டார்.  வேங்கடாத்ரி சுவாமி இருந்ததோ காஞ்சியிலே.  அங்கே குடி கொண்டிருந்த வரதராஜரைப் பிரார்த்தித்துக் கொண்டு எந்தவிதமான அளவுகளும் இல்லாமல் அரங்கனின் பாண்டியன் கொண்டைக்கு மாதிரியாக ஒன்றைச் செய்தார் வேங்கடாத்ரி சுவாமிகள்.  அதை எடுத்துக் கொண்டு திருவரங்கம் அடைந்தார்.  வடகாவேரி என அப்போது அழைக்கப்பட்ட கொள்ளிடத்தில் நீராடிவிட்டு அநுஷ்டானங்களையும் முடித்துக் கொண்டு கோயிலை நோக்கிப் புறப்பட்டார்.  அவர் வருவதை அறிந்த கோயிலண்ணன், பட்டாசாரியார் சுவாமி, உத்தம நம்பி மற்றும் கோயிலின் மற்ற ஊழியர்கள் அனைவரும் அவரை வரவேற்றனர்.  உள்ளே அரங்கனைக் கண்ட வேங்கடாத்ரி சுவாமிகள் தன்னை மறந்து அரங்கன் மேலும், நம்பெருமாள் மேலும் பற்பல கீர்த்தனைகளைப் பாடினார்.

"நின்னுகோரியுன்னா ராரே!" அவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.  சுவாமிகள் கொண்டு சென்ற மாதிரிக் கிரீடம் நம்பெருமாளுக்கு வைத்துப் பார்த்தால் என்ன ஆச்சரியம்!  மிக அழகாகப் பொருந்திவிட்டது.  கோயிலின் ஊழியர்களும் மற்றப் பெரியோர்களும் சுவாமிகளின் இந்தத் திறமையையும், அபூர்வமான ஞானத்தையும் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.  ஶ்ரீரங்கம் முழுதும் சுவாமிகளின் புகழ் பரவியது.  ஆயிற்று! மாதிரிக் கொண்டை போல இப்போது அசலில் செய்ய வேண்டும்.  அதற்குப் பணம் வேண்டும்.  வேங்கடாத்ரி சுவாமி ஒரு சபதம் எடுத்துக் கொண்டார். பாண்டியன் கொண்டையைச் செய்ய அன்றாடம் குறைந்த பட்சமாகப் பத்து ரூபாய் தேவை.  ஆகவே தினம் தினம் பத்து ரூபாய் கிடைக்கும் வரை தான் பட்டினியாக இருப்பது எனத் தீர்மானித்தார். சில நாட்கள் கிடைத்தது.  பல நாட்கள் எதுவும் கிடைக்கவில்லை.  அப்போது அவரின் முக்கியச் சீடர்கள் ஆன "தரே வீடு" வெங்கடசாமி நாயுடு, புதுச்சேரி அப்பாசாமி நாயுடு ஆகியோர் மனமுவந்து பத்து ரூபாய்களைக் கொடுத்து உதவினார்கள். பணம் கிடைக்கக் கிடைக்க அரங்கனின் பாண்டியன் கொண்டைத் தயாரிப்பும் மெல்ல மெல்ல நடந்து வந்தது.

கொண்டையில் பதிக்க ஒரு அங்குல அளவில் சதுர வடிவிலான மரகதக் கல் ஒன்று தேவைப் பட்டது. வேங்கடாத்ரி சுவாமி மரகதப் பச்சைக்கல்லைப் பெறப் பல வழிகளிலும் முயன்றார்.  அப்போது அரங்கன் அவர் கனவில் மீண்டும் தோன்றி, கல்கத்தாவில் உள்ள வைர வியாபாரி ஒருவரின் வீட்டில் வடக்கு மூலையில் உள்ள இரும்புப் பெட்டியில் கொண்டையில் பதிக்கத் தேவையான மரகதப் பச்சைக்கல் இருப்பதாகவும், அதை வேண்டிப் பெறுமாறும், அந்த வைர வியாபாரியின் பெயர் மாதவ சேட் என்றும் தெரிவித்தார். சுவாமியின் பக்தர்களின் ஒருவரான காசிதாஸ் செளகார் என்பவர் மாதவ சேட்டின் கல்கத்தா விலாசத்தைப் பெற்று மரகதப் பச்சையை அரங்கனுக்காகக் கேட்டுக் கடிதம் எழுதினார்.  ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக  மாதவ சேட் இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ந்தார்.  அரங்கனே தன் கொண்டையில் வைக்க மரகதக் கல்லைக் கேட்டிருக்கிறான்.  அதுவும் நம்மிடம்.  இது என்ன விந்தை? இரும்புப் பெட்டியைத் தலைகீழாகப் புரட்டிப் பார்த்த மாதவ சேட் தன் தந்தையால் வைக்கப்பட்ட மரகதக் கல்லைக் கண்டெடுத்துவிட்டார்.  அவருக்கோ, அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கோ அந்தக் கல் இருந்த விபரம் அன்று வரை தெரியவில்லை.  இதை அரங்கன் அறிந்து சொன்னது கல் அவனுக்குச் சொந்தம் என்பதால் அன்றோ!  கல்லை உடனடியாக அனுப்பி வைத்த மாதவ சேட், கூடவே தன்னுடைய பங்காக ஆயிரம் ரூபாய் பணமும் அனுப்பி வைத்தார்.


கொண்டை தயாராகி வந்தது.  ஆனால் திடீரென கொண்டையைச் செய்து வந்த பொற்கொல்லனுக்குப் பேராசை பிடித்து விட்டது.  ஆகவே மாதவ சேட் அனுப்பிய விலை உயர்ந்த மரகதக் கல்லை ஒளித்துவிட்டு அதற்கு பதிலாகச் சாதாரணப் பச்சைக்கல் ஒன்றை வைத்து விட்டான்.  இப்போதும் அரங்கன் விடவில்லை.  வேங்கடாத்ரி சுவாமியின் கனவில் தோன்றி பொற்கொல்லன் கல்லை ஒளித்த விபரத்தைத் தெரிவித்து விட்டார்.  தன் சீடர்களோடு பொற்கொல்லனைச் சந்திக்கச் சென்ற வேங்கடாத்ரி சுவாமியைக் கண்ட கொல்லன் முதலில் தனக்கு எதுவுமே தெரியாது என சாதித்து விட்டான்.  ஆனால் அப்பாசாமி நாயுடுவும் மற்றும் சிலரும் அவனை மிரட்டி விசாரிக்கவே, கல்லை மாற்றியதை ஒப்புக் கொண்டு அதைத் திரும்பக் கொடுத்தான். உண்மையான மரகதக் கல் பதிக்கப்பட்டுப் பாண்டியன் கொண்டை தயாராகி அரங்கனுக்குச் சமர்ப்பிக்க எடுத்துச் செல்லப்பட்டது.  தன் சீடர்களுடன் கொண்டையை ஊர்வலமாக எடுத்துச் சென்றார் வேங்கடாத்ரி சுவாமிகள்.  திருவரங்கத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அல்லது பரமபத ஏகாதசி என அழைக்கப்படும் நாளில் ருத்ரோகாரி ஆண்டில் 1863 ஆம் ஆண்டில் அந்தப் பாண்டியன் கொண்டை அரங்கனுக்குச் சமர்ப்பிக்கப் பட்டது.  இன்றளவும் அந்தப் பாண்டியன் கொண்டை முக்கிய தினங்களில் மட்டுமின்றி வைகுண்ட ஏகாதசி அன்றும் நம்பெருமாளை அலங்கரித்து வருகிறது.

Tuesday, August 20, 2013

அரங்கனின் பாண்டியன் கொண்டை வந்த வரலாறு




அரங்கனின் ஆபரணங்களில் முக்கியமானது பாண்டியன் கொண்டை.  முக்கியத் திருவிழாக்களில் அரங்கன் பாண்டியன் கொண்டை அணிந்தே வெளிவருவார்.  இந்தப் பாண்டியன் கொண்டை என்பது சுந்தரபாண்டியனால் அளிக்கப் பட்டது என்பார்கள்.  ஆனால் அது பழுதாகி விட்டதாம்.  அப்போது அரங்கனே தன் பக்தர்களில் ஒருவரைக் கொண்டு இந்தப் பாண்டியன் கொண்டை என்னும் ரத்தினக் கிரீடத்தைச் செய்யச் சொன்னாராம். அவரோ பரம ஏழை.  உஞ்சவ்ருத்தி எடுத்துப் பணம் சேர்த்து இந்தப்பாண்டியன் கொண்டையைச் செய்து கொடுத்தாராம். அவர் யாருனு பார்ப்போமா?

நம்ம தமிழ் நாட்டில் சங்கீத மும்மூர்த்திகளாக தியாகராஜ சுவாமிகளையும், முத்துசாமி தீக்ஷிதர், ச்யாமா சாஸ்திரிகள் ஆகியோரைச் சொல்கிறோம்.  தமிழிசையில் மூவராக அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத் தாண்டவர் ஆகியோரையும் சொல்கிறோம்.  இவர்கள் மூவரும் தியாகராஜர், ச்யாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீக்ஷிதர் ஆகியோரை விடவும் காலத்தால் மூத்தவர்கள்.  அப்படித் தெலுங்கிலும் மும்மூர்த்திகள் உண்டு. ஆந்திர நாட்டில் இப்படிச் சொல்லப்படுபவர்கள் தலப்பாக்கம் அன்னமாசார்யா, பத்ராசலம் ராமதாசர், அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி ஆகியோர்.  

கிருஷ்ணா நதி பாயும் மாவட்டத்தில் அல்லூரு என்னும் ஊரில் வசித்து வந்த ஶ்ரீவெங்கையாவுக்கும், ஶ்ரீமதி வெங்கம்மாவுக்கும் மகனாகப் பிறந்தார் வேங்கடாத்ரி. 1806- ஆம் வருடம் தமிழ் அக்ஷய வருடத்தில் பங்குனி மாசம் பெளர்ணமி திதியில் பாரத்வாஜ கோத்திரத்தில் உத்தர பால்குனி நக்ஷத்திரத்தில் அவதரித்தார் வேங்கடாத்ரி சுவாமிகள்.  அவர் தாயின் கர்பத்தில் இருக்கையிலேயே இறை அருளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்.  மிகச் சிறு வயதிலேயே சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் முறையான கல்வி பெறும் முன்னரே கற்றார்.  பெற்றோருக்கு மகனின் சிறப்பும், தனித்தன்மையும் நன்கு புரிந்து மனம் சந்தோஷம் அடைந்தனர்.  ஆனால் அவர் பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்ய முயல அவரோ பார்த்த பெண்ணையே சீதாப் பிராட்டியாக எண்ணிக் காலில் விழுந்து வணங்கித் துதிக்கப் பெற்றோர் பின்னர் வற்புறுத்தவில்லை. அந்த ஊரின் நரசிம்ம சுவாமியை வணங்கி சேவை செய்து வந்த வேங்கடாத்ரிக்கு மனதுக்குள்ளே தேடல் மிகுந்தது.  தன் தேடலுக்கு ஒரு குரு தேவை என்பதைப் புரிந்து கொண்ட அவர் தக்க குருவுக்குக் காத்திருந்தார். அப்போது அவருக்குக் கிடைத்தவர் தான் துமு நரசிம்ம தாசா என்பவர்.  இந்த நரசிம்ம தாசர் ஶ்ரீபத்ராசலம் ராமதாசரின் சீடர் என்று சொல்கின்றனர்.  

வேங்கடாத்ரிக்குத் தாரக மந்திர உபதேசம் செய்த நரசிம்ம தாசர் அவருக்குத் தம் சலங்கைகளைக் கொடுத்து, தம்புரா, தாளம் போன்றவையும் கொடுத்து, தம் ஆசிகள் என்றென்றும் தொடரும் என ஆசீர்வதித்தார். வேங்கடாத்ரி சுவாமியும் ஒரு கோடி ராமநாமம் எழுதிச் சமர்ப்பித்து ராமன் திருவுருவையே நினைந்து நினைந்து மனம் உருகித் துதித்துக் கொண்டிருந்தார். விரைவில் அவருக்கு ஶ்ரீராமன், சீதாபிராட்டியின் தரிசனமும் கிடைக்கப் பெற்றது. பின்னர் அவர் அங்கிருந்து திருமலை சென்று திருமலையப்பன் சேவையிலே ஈடுபட்டுப் பாமாலைகளாலும் பூமாலைகளாலும் துதித்து வந்தார். பின்னர் அவர் காஞ்சிக்கு வரதராஜப் பெருமாளிடம் ஈடுபாடு கொண்டு அங்கேயே நித்ய வாசம் செய்ய எண்ணினார்.  தினமும் உஞ்சவ்ருத்தி மேற்கொண்டு அதில் கிடைக்கும் பொருட்களை, தான்யங்களைப் பணமாக மாற்றி அதன் மூலம் வரதராஜப்பெருமாளின் சந்நிதிக்குக்ப் பல கைங்கரியங்களைச் செய்து வந்தார். காஞ்சி வரதனுக்கு மாலை கட்டிக் கொடுத்து, சந்தனம் அரைத்துக் கொடுத்து, அமுது சமர்ப்பித்து எனப் பல்வேறு கைங்கரியங்களையும் செய்து வந்தார். இதைத் தவிரவும் பல வேத பாடசாலைகளையும் திறந்து வைத்தார். காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் செய்தார். தன்னால் இயன்ற பொருளைச் சேர்த்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் மாமண்டூரில் நிலம் வாங்கி வைத்தார்.  நந்தவனத்தில் கைங்கரியம் செய்து வந்த வேங்கடாத்ரி சுவாமியைப் பாம்பு தீண்டியது.. அவர் சற்றும் அஞ்சாமல் பெருந்தேவித் தாயார் சந்நிதிக்குச் சென்று பல கீர்த்தனைகளைப் பாடி அங்கேயே மயங்கி விழுந்தார்.  பின்னர் தூங்கி எழுந்திருப்பவர் போல் எழுந்து பெருமாள் சந்நிதிக்கும் சென்று பிரசாதங்கள் வாங்கிக் கொண்டார். கொடிய பாம்பின் விஷமும் அவரை ஒன்றும் செய்யவில்லை என்பதை அனைவரும் கண்டு வியந்தனர்.


படம் உதவி: ஶ்ரீரங்க பங்கஜம்.

தகவல்கள் உதவி:  விக்கி பீடியா


Saturday, August 10, 2013

அரங்கனின் தேரோட்டம்!

அரங்கனை ஊர் சுத்த விட்டுட்டு அப்புறமாத் தொடர முடியாதபடிக்கு வைகுண்ட ஏகாதசித் திருநாள், அடுத்து தெப்பம், மட்டையடித்திருவிழா, சித்திரைத் திருவிழா என முக்கியமான நாட்களைக் குறித்து எழுதும்படி ஆகிவிட்டது.  இதுவே சித்திரைத் திருவிழாவுக்கு ரொம்ப தாமதமாகப் பதிவு போடறேன். இதுக்கப்புறமா ஆனி கேட்டையில் ஜேஷ்டாபிஷேஹம், பவித்ராபிஷேஹம் எல்லாம் ஆகி, பெருமாளுக்குக் காப்பு நீக்கித் திருவடி தரிசனம் ஆரம்பிச்சு ஆடிப்பெருக்கும் கொண்டாடிட்டார்.  அரங்கனைக் கூடிய சீக்கிரம் தொடர்ந்து செல்வோம். அதான் துளசி தளங்களை வழி கண்டுபிடிக்கப்போட்டுட்டுப் போறாங்க இல்ல, அதனால் ஒண்ணும் பிரச்னை இல்லை. இப்போ சித்திரைத் திருவிழாவை ஒரு அவசரப் பார்வை பார்த்துடுவோம்.


மட்டையடித் திருவிழாவுக்குப் பின்னர் பெரிய திருவிழா என்பது ஶ்ரீரங்கத்தில் சித்திரைத் திருவிழா.  பனிரண்டு மாசங்களும் அரங்கன் திருவிழாக் கண்டாலும் இந்த முக்கியமான திருவிழாக்களில் தேரோட்டமும் உண்டு. இதை விருப்பன் திருநாள் என்றும் அழைக்கின்றனர். நம்ம ஊர் சுத்தி நம்பெருமாள் ஊரெல்லாம் சுத்திட்டுத் திரும்ப அரங்கம் வந்தப்போ கோயில் பாழடைந்து கிடந்தது.  கர்பகிரஹமும் மற்ற மண்டபங்களும் பாழாகக் கிடந்ததைக் கண்ட விஜயநகரப் பேரரசின் சங்கமகுல மன்னன் இரண்டாம் ஹரிஹரனின் புதல்வன் விருப்பன்ன உடையார் துலாபாரம் ஏறினார்.  இது நடந்தது கிட்டத்தட்ட கி.பி. 1377 ஆம் ஆண்டில் என்கின்றனர். துலாபாரம் ஏறிக் கிடைத்த பதினேழாயிரம் பொற்காசுகளைக் கொண்டு கோயில் மண்டபங்கள் சீரமைக்கப்பட்டன.  பின்னர் அறுபது ஆண்டுகள் வெளியே  இருந்த அரங்கனுக்கு உற்சவம் கண்டருள வேண்டும் எனவிருப்பன்ன உடையார் நினைத்தார்.  ஆகவே 1383 ஆம் ஆண்டில் உற்சவம் கண்டருளினார் நம்பெருமாள். இது பல்லாண்டுகளுக்குப் பின்னர் ஶ்ரீரங்கத்தில் நடந்தது என்பதால் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் மிகவும் விருப்பத்தோடு இந்த விழாவில் கலந்து கொண்டனர்.  இதைச் சித்திரை பிரம்மோத்சவம் என்றே சொல்கின்றனர்.

இந்தத் திருவிழாவில் அரங்கன் தேரில் வீதிவலம் வருவது முக்கிய நிகழ்ச்சியாகும். இந்தத் திருவிழாவை எடுப்பித்த விருப்பன்ன உடையார் அரங்கனுக்கு அருகில் உள்ள அழகிய மணவாளம் என்னும் ஊரைத் தானமாகச் சாசனம் செய்து கொடுத்தார்.  அரங்கன் ஊர் திரும்பும் முன்னர் சில நாட்கள் அந்த கிராமத்தில் தங்கி இருந்தார் என்பதாலும் ஊர் மக்கள் மிக மகிழ்வோடு கிராமத்தை நம்பெருமாளுக்கு சாசனமாக எழுதிக் கொடுக்கச் சம்மதித்தனர். தினந்தோறும் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் வீதிவலம் வந்தருளுவார்.  ஶ்ரீரங்கம் ரங்கராஜன் அனைத்துக் கோயில்களின் அரசர் என்பதால் குதிரை வாகனம் ஏறிபவனி வருவதைப் பல்வேறு புலவர்கள் வாழ்த்திப் பாடியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.  கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் அரங்கன் மக்களை நலம் விசாரித்துச் செல்கிறாராம்.  அதோடு தேரையும் பார்வை இடுவாராம்.  இவை யாவுமே ஒரு மாபெரும் அரசன் அரச வீதி உலாவருவது போலவே இருக்கும் என்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நம்பெருமாள் பின்னர் நான்முகன் கோபுர வாயிலில் வந்து அமுது படைக்கப்படுவார்.  பின்னர் விஜயநகர அரசனான சொக்கநாத நாயக்கனால் நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் நம்பெருமாளுக்கு திருஷ்டி கழிக்கப்படும்  பின்னர் வாகன மண்டபத்தில் படி களைந்து நம்பெருமாள் முன்னர் கார்த்திகை கோபுர வாசலில் திவ்யப்ரபந்தங்கள் சாற்றுமுறை ஆகும்.  நம்மாழ்வார் சந்நிதியிலும் இயற்பா சாற்றுமுறை ஆகும்.  பின்னர் நம்பெருமாள் ரக்ஷாபந்தனம் செய்து கொள்வார்.  அதன் பின்னர் இந்தச் சித்திரைத் திருவிழா முடிந்து தீர்த்தவாரி நடைபெறும் வரையிலும் நம்பெருமாள் கண்ணாடி அறையில் எழுந்தருளுவார்.  அவர்  திருமேனியில் வெயில்படாவண்ணம் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள்.  அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.  விருப்பன் திருநாள் ஏழாம் திருநாளன்று அரங்கன் நெல் அளவை கண்டருளுவார்.  அன்று கோயில் முறைகாரர் நெல் அளப்பார்.  தங்க மரக்காலால் திருவரங்கம் ஒன்று, பெரிய கோயில் இரண்டு எனக் கணக்குப் பண்ணி நெல் அளக்கப்படும்.  நெல் அளவையைச் சரிபார்த்துக் கொள்வார் நம்பெருமாள்.

தேர் அன்றோ அக்கம்பக்கத்துப் பாமர மக்கள் தங்கள் தங்கள் வயல்களில் விளைந்தவற்றையும் பசுமாடுகள், கன்றுகள் என நம்பெருமாளுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிப்பார்கள்.  வெளி ஊர்களில் இருந்தெல்லாம் வண்டி கட்டிக் கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்தத் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் திருவிழா ஶ்ரீரங்கத்தில் நடந்து வருகிறது.  இந்தச் சமயம் அரங்கனுக்காகச் சிறப்பானதொரு பாத ரக்ஷை தைக்கப்படும் என்றும் அதன் வலக்கால் அளவிற்கு ஒரு குடும்பமும், இடக்கால் அளவிற்கு இன்னொரு குடும்பமும் தைத்துத் தனித்தனியாக எடுத்து வருவார்கள் எனவும், அரங்கனின் எந்தவிதமான அளவுமே இல்லாமல் அவர்கள் தைப்பது சரியாகப்பொருந்தும் எனவும், எந்தக் குடும்பம் எந்தக் காலுக்குத் தயார் செய்கிறது என்ற விபரம் எவருக்குமே தெரியாது என்றும் சொல்கின்றனர்.  இது குறித்து மேலும் விபரங்கள் திரட்டுகிறேன்.

முதல் இரண்டு படங்கள் எங்கிருந்து சுட்டேன் எனச் சொல்ல வேண்டாம் என எண்ணுகிறேன். :))) தெரியாதவங்களுக்கு வெங்கட் நாகராஜின் வலைப்பக்கத்தில் இருந்து சுட்டேன்.

கடைசிப்படம் தினமலர்.காம்.

Monday, May 20, 2013

ஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! மட்டையடித் திருவிழா--ப்ரணய கலஹம், முடிவுப்பகுதி!


மட்டையடித் திருவிழாவில் நம்மாழ்வாரின் எந்தப் பாசுரத்தைப் பாடுவாங்கனு தெரியலை.  யாரையானும் கேட்கணும்.  இன்னும் யாரும் வசமா மாட்டிக்கலை. :))) இரண்டு நாட்கள் முன்னர் கோயிலுக்குப் போனப்போ நம்பெருமாளைப் பார்த்தேன்.  ஊர்சுத்தப் போகாமல் மூல'ஸ்தானத்திலேயே உபய நாச்சியார்களுடன் வீற்றிருந்ததோடு நின்று முழுசாய் ஒரு நிமிடம் பார்க்கவும் முடிந்தது.  போங்க, போங்கனு விரட்டலை. பட்டாசாரியார் யாரோ ஷிஃப்ட் மாறும் வேளை போல!  அதில் கவனமாய் இருந்தாங்க.


கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்
தாமரைக் கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்
இருநிலம் கைதுழாவிருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்
இவள்திறத்து என் செய்கின்றாயே


என் செய்கின்றாய் என் தாமரைக்கண்ணா
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என்செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்
என்னும் வெவ்வுயிர்த்துயிர்த்து உருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா தகுவதோ என்னும்
முன்செய்திவ்வுலகம் உண்டுமிழ்ந்தளந்தாய்
என்கொலோ முடிகின்றது இவட்கே

நாச்சியார் காது கொடுத்துக் கேட்டுவிட்டு மனம் மகிழ்கிறாள்.  உடன் பெருமாளைப் பார்த்துச் சொல்கிறாள்.

"தாம் வருஷாவருஷம் அடமாயெழுந்தருளி தமக்குச் சரிப்போனபடி நடந்து போட்டுப் பின்னும் இங்கே வந்து நாமொன்றும் அறியோமென்றும், ப்ரமாணம் பண்ணித் தருகிறோமென்றும் பரிஹாசங்களைப் பண்ணி, இப்படிப்பட்டிருக்கிற அக்ருத்யங்களைப் பண்ணிக் கொண்டு வருகிறீர்.  நாமானால் பொறுக்கிறதில்லை.  நம்முடைய ஐயா நம்மாழ்வார் வந்து மங்களமாகச் சொன்ன வாய்மொழியாலே பொறுத்தோம். உள்ளே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

"ஐயா, நீர் ஒவ்வொரு வருடமும் இவ்வாறே அடம் பண்ணிக் கொண்டு வருகிறீர்.  உமக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ அதைத் தான் செய்து வருகிறீர்.  இப்படி எல்லாம் நடந்த பின்னர் இங்கே வந்து எனக்கு எதுவுமே தெரியாது என அப்பாவி போல் வேஷம் போடுகிறீர்.  அதற்காகப் பொய்யாய்ப் பல சத்தியங்களைப் பண்ணுகிறோமென்று சொல்கிறீர்/  என்னைப் பரிஹாசம் பண்ணுகிறீர்.  நீர் செய்வது அனைத்தும் அக்கிரமங்கள்.  எனக்குப் பொறுக்கவே இல்லையே!  ஆனாலும் அதோ, நம் நம்மாழ்வான் இப்போது இங்கே வந்து மங்களமாய்ச் சில வார்த்தைகளைச் சொல்லுகிறான்.  அவனெதிரில் நம் சண்டையைப் போட்டுக் கொள்ள வேண்டாம்.  அவனுக்காக நாம் உம்மைப் பொறுத்தோம்.  உள்ளே எழுந்தருளிக்கொள்ளும்!"

ப்ரணய கலஹம் முடிந்து நம்பெருமாள் ரங்கநாயகியோடு ஒரே சிம்ஹாசனத்தில் எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிக்கிறார்.




வாழித்திருநாமங்கள்

திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடத் தாய்மகனார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில் வீற்றிருக்கு மீமையவர் கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலையெய்தினான் வாழியே
அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே
அந்தரியா மித்துவமு மாயினான் வாழியே
பெருகி வரும் பொன்னி நடுப்பின் துயின்றான் வாழியே
பெரியபெருமாளெங்கள் பிரானடிகள் வாழியே


பெரிய பிராட்டியார்

பங்கயப்பூ விற்பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தரநாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழிற்சேனை மன்னர்க்கிதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ் சுட்பொருள் மாலியம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே!

Tuesday, May 14, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! மட்டையடித் திருவிழா, ப்ரணய கலஹம், தொடர்ச்சி!


உறையூரா?? அது எங்கே இருக்கு?  பெருமாள் கேட்கிறார். :)))

பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்

நாம் உத்ஸ்வார்த்தமாகப் புறப்பட்டருளி, திருவீதிகள் எல்லாம் வலம் வந்து, தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷிக்க, ப்ராஹ்மணர்கள் எல்லோரும் ஸ்தோத்ரம் பண்ண, இப்படிப் பெரிய மநோரதத்தோடே தங்களிடத்தில் வந்தால் தாங்கள் எப்போதும் போல ஆதரியாமற்படிக்கு அபராதங்களைப் பண்ணினோமென்கிறீர்கள்; நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதுமில்லை;  காதாலே கேட்டதும் இல்லை என்று சொன்னோம்.  அத்தை அப்ரமாணமாக நினைத்தீர்கள்.  ஆனால் ப்ரமாணம் பண்ணித் தருகிறோமென்று சொன்னோம்.  அத்தைப் பரிஹாசப் ப்ரமாணமென்று சொன்னீர்கள்.  இப்படி நாம் எத்தனை சொன்னபோதிலும் அத்தனையும் அந்யதாவாகக் கொண்டு, சற்றும் திருவுள்ளத்தில் இரக்கம் வராமல் கோபத்தாலே திருவுள்ளங் கலங்கித் திருமுக மண்டலங் கறுத்துத் திருக்கண்கள் சிவந்து இப்படி எழுந்தருளி இருந்தால் நமக்கென்ன கதி இருக்கிறது?  அழகிய மணவாளப் பெருமாள் ஸ்ரீ ரங்க நாச்சியார் சந்நிதி வாசலிலே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறாரென்கிற அவமானம் உங்களுக்கேயொழிய நமக்குத் தேவையில்லை.  ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளேயழைக்கச் சொல்லிப் பெருமாளருளிச் செய்த ப்ராகாரம்.

"அடி ரங்கா, இது என்ன? இவ்வளவு கோபமாக இருக்கின்றாயே?  நான் உற்சவத்திற்காகவன்றோ கிளம்பிப் போனேன்.  இங்கே திருவீதிகளில் வலம் வந்தேன்.  தேவதைகள் புஷ்பங்களை வர்ஷித்தனர்.  என்னைக் கண்டதும் ப்ராஹ்மணர்கள் எல்லோரும் ஸ்தோத்ரம் பண்ண ஆரம்பித்துவிட்டனர்.  அவற்றை எல்லாம் கண்டு மகிழ்ந்து போய் உன்னை நேரில் கண்டு இவை எல்லாவற்றையும் குறித்துச் சொல்ல வேண்டும் என்ற பெரிய மனோரதத்துடனே உன்னைக் காண வந்தேன்.  எவ்வளவு ஆவலுடன் வந்தேன் தெரியுமா?  ஆனால் நீயோ என்னை உள்ளே அழைக்காமல், எப்போதும் போல் என்னை அழைத்து உன் சேவார்த்திகளைச் செய்து மகிழாமல், நான் ஏதோ தவறுகள் செய்துவிட்டேன் என்கின்றாயே!  இது நியாயமா?  அடி, ரங்கா, உறையூரா?  அது எங்கே இருக்கிறது?  நான் அந்த ஊரைக் கண்ணாலே கண்டதுமில்லை. அந்தப் பெயரைக் காதாலே கேட்டதுமில்லை."

ஆனால் நான் சொன்னதை நீ எங்கே நம்பினாய்?? சத்தியம் இல்லை என நினைக்கிறாய். நினைத்தாய்! சரி, சத்தியம் செய்து தருகிறேன் என்று சொன்னால் அதைப் பரிஹாசம் என்கிறாயடி. இப்படி நான் எத்தனை சமாதானம் சொன்னாலும் காதில் கேட்டுக் கொள்ளாமல் உன் மனமும் இரங்காமல், இத்தனை கோபம் ஏதுக்கடி ரங்கா?  கோபத்தாலே உன் திருவுள்ளம் மட்டுமா கலங்கி உள்ளது? உன் அழகான திருமுகம் எவ்வளவு கறுத்துவிட்டது தெரியுமா?  அழகிய நீலோத்பலத்தை ஒத்த உன் திருக்கண்கள் செவ்வரியோடு சிவந்து காணப்படுகின்றதே. இப்படி நீயும் கோவித்துக் கொண்டாயானால் நான் யாரிடம் போவேன்?  அடி ரங்கா?  எனக்கு வேறு கதியும் உண்டோ? சரி, சரி, நீ இருக்கிறபடி இருந்து கொள்ளடி ரங்கா! அழகிய மணவாளன் என்ற பெயர் பெற்ற நான் இங்கே ஶ்ரீரங்க நாச்சியார் சந்நிதி வாசலிலே உள்ளே அழைக்கப்படாமல், வெளியே தள்ளப்பட்டுக்கொண்டிருந்தால் அதனால் எனக்கு ஒன்றுமில்லை.  அந்த அவமானம் உனக்குத் தான். எனக்கு என்ன வந்தது? அடி ரங்கா ஆனாலும் என் மனம் கேட்கவில்லையே! இதோ, இந்தப் புஷ்பங்களை வாங்கிக் கொள், சற்றே நகர்ந்து கொள், என்னை உள்ளே அழைப்பாய்!"

இப்போது யாரோ போற்றிப் பாடும் குரல் கேட்கிறது.  ரங்கநாயகி உற்றுக் கேட்கிறாள்/  யாரது பாடுவது?  ஓ, சடகோபன் என்னும் நம்மாழ்வானா? என்ன பாடுகிறான்??

Saturday, May 11, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! மட்டையடித் திருவிழா! ப்ரணய கலஹம்!


நாச்சியார் அருளிச் செய்த ப்ராகாரம்:


ஒருவருக்கொருவர் ஸம்சயப்பட்டால் அந்த ஸம்சயம் ஒரு ப்ரகாரத்தாலும் தீராமற்போனால் ப்ரமாணத்தாலே தீர்த்துக்கொள்ளுவார்கள்.  லோகத்திலே ப்ராஹ்மணனுக்கும் ப்ராஹ்மணனுக்கும் வாக்குவாதம் வந்தால் ப்ராஹ்மணன் ப்ராஹ்மணனைத் தாண்டிக் கொடுப்பான்.  தாம் தேவாதி தேவனானபடியினாலே தேவதைகளைத் தாண்டிக் கொடுக்கிறோமென்று சொல்ல வந்தாரே!  அந்த தேவதைகள் தம்முடைய திருவடிகளை எப்போ காணப்போகிறோம்! எப்போ காணப்போகிறோம்! என்று சதா பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறவர்களை வலுவிலே தாண்டித் தருகிறோமென்றால் வேண்டாமென்பார்களா?  ஸமுத்ரத்திலே மூழ்குகிறோமென்று சொல்ல வந்தாரே! ப்ரளய காலத்திலே ஸகல லோகங்களையும் திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்து ஒரு ஆலிலைத் தளிரிலே கண் வளர்ந்த தமக்கு ஸமுத்ரத்திலே முழுகுகிறது அருமையா!  அக்னி ப்ரவேசம் பண்ணுகிறோம் என்று சொல்ல வந்தாரே! ப்ரஹ்மாவுக்காக உத்தரவேதியில் ஆவிர்ப்பவித்த தமக்கு அக்னியில் மூழ்குகிறோம் என்றால் அக்னி சுடுமா?  பாம்புக் குடத்திலே கை இட்டுத்தருகிறோமென்று சொல்ல வந்தாரே!  "சென்றாற்குடையாம், இருந்தாற் சிங்காசனமாம்" என்று ஸதாஸர்வ காலமும் திருவனந்தாழ்வான் மேலே திருக்கண் வளர்ந்திருக்கிற தமக்குப்பாம்புக் குடத்திலே கைவிட்டால் பாம்பு கடிக்குமா?  மழுவேந்துகிறோம் என்று சொல்ல வந்தாரே!  கோடி ஸூர்யப்ரகாசமான திருவாழியாழ்வானை ஸதா திருக்கையிலே தரித்துக் கொண்டிருக்கிற தமக்கு அப்ரயோஜகமான இரும்பு மழுவேந்துகிறது அருமையா?  நெய்க்குடத்திலே கையிடுகிறோமென்று சொல்ல வந்தாரே! க்ருஷ்ணாவதாரத்திலே பஞ்ச லக்ஷம் குடியிலுள்ள நெய்யுண்ட தமக்கு நெய்க்குடத்தில் கையிடுவது அருமையா?  இப்படிப் பட்டிருக்கிற பரிஹாஸ ப்ரமாணங்களையெல்லாம் தமக்குச் சரிப்போன இடத்திலே தானே பண்ணிக் கொண்டு இன்றைக்கும் அங்கேதானே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.


நாச்சியார் சொல்கிறாள்:

ஒருத்தர் மேல் ஒருத்தர் சந்தேகப்பட்டால் அந்த சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ப்ரமாணங்கள், சத்தியங்கள் ஆகியவற்றால் தீர்த்துக் கொள்ளத் தான்செய்வார்கள்.  மேலும் ஏமாற்றாமல் இருக்க வேண்டும் அல்லவா?  ஒரு பிராம்மணன் இன்னொரு பிராம்மணன் மேலே சந்தேகப்பட்டால் ப்ராம்மணனைத் தாண்டிச் சத்தியம் செய்து கொடுப்பான். ஆனால் தாமோ தேவாதி தேவனல்லவா? ஆகவே தேவதைகளைத் தாண்டிக் கொடுக்கிறதாய்ச் சொன்னீரோ!  அந்த தேவதைகளோ எப்போது உம்முடைய திருவடி தரிசனம் கிடைக்கும் எனக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  அவர்கள்  நோக்கமே உமது திருவடி தரிசனத்தைக் காண்பது தான். அவர்களிடத்திலே நீர் போய் வலுவிலே உங்களை எல்லாம் தாண்டிக் கொடுக்கிறேன் என்று சொன்னால் வேண்டாமென்பார்களா?  ஆஹா,அப்படியானும் நமக்குத் திருவடி தரிசனம் கிடைக்கலாச்சு என ஆனந்தம் தான் அடைவார்கள்.

ஐயா, உம்முடைய கள்ளத் தனம் எனக்குத் தெரியாததா?  சமுத்திரத்திலா மூழ்குகிறீர்?  சமுத்திரத்தில்?? ஆஹா, நன்றாக மூழ்குமேன்!  ஏன் ஐயா,இந்த ஸமுத்திரத்திலே தானே தாங்கள் ப்ரளய காலத்திலே சகல லோகங்களையும் தம்முடைய திருவயிற்றிலே வைத்து ரக்ஷிக்கின்றீர்?  அதுவும் ஒரு ஆலிலைத் தளிரிலே கண் வளர்ந்த வண்ணம் சகல லோகங்களையும் தாங்கிக் கொண்டு  சமுத்திரத்திலே மிதக்கும் தமக்கு சமுத்திரம் ஒரு அருமையா?  அதில் மூழ்குவது தான் அருமையா!  நல்ல வேடிக்கைதான் ஐயா! அடுத்து என்ன சொன்னீர்?? அக்னி ப்ரவேசமா?  ஆஹா, தங்களால் இயலாததா அதுவும்! யாரிடம் ஐயா சொல்கிறீர்?  உத்தரவேதியில் பிரம்மன் யாகம் செய்கையில் அவனிடம் கோபம் கொண்ட சரஸ்வதி இவ்வுலகையே இருட்டாக்கினாளே.  அப்போது விளக்காக ஒளிர்ந்தது யார்?  நீரன்றோ!  உமக்கு அக்னியில் ப்ரவேசம் பண்ணுவது கஷ்டமானதா? அக்னி உமக்குச் சுடுமா?  அடுத்து என்ன சொல்கிறீர்? பாம்புக் குடத்திலே கைவிட்டுத் தருகிறீரா? இதை விட நகைச்சுவையான விஷயம் வேறில்லை ஐயா!  நீர் சென்றால் குடை பிடிப்பது அனந்தாழ்வான்!  படுத்தால் படுக்கையாவது அனந்தாழ்வான்!  இருந்தால் சிம்மாசனம் ஆவதும் அனந்தாழ்வான்!  நீர் பாம்புக் குடத்தில் கை விடுகிறீரா?  உம்மை எந்தப் பாம்பு என்ன செய்ய முடியும்?

அடுத்து மழுவேந்துகிறீரா?  ஆஹா, நன்றாக ஏந்துங்கள்.  ஆனால் உம் கைகளில் எப்போதும் நீர் ஏந்தி இருக்கும் திரு ஆழி ஆழ்வான் என்னும் சக்கரத்தாழ்வானின் கோடி சூர்யப் ப்ரகாசத்திற்கு முன்னால் அந்த மழுவால் நிற்க முடியுமா என யோசியும்!  திருவாழியாழ்வானையே ஏந்தியுள்ள தமக்கு மழுவேந்துகிறது பெரிய விஷயமா?  நெய்க்குடத்திலே கை விடுகிறீரா?  ஐயா, நீர் கிருஷ்ணாவதாரம் செய்த போது கோகுலத்தில் பஞ்ச லக்ஷம் குடியிலுள்ள அனைவரின் வீட்டிலிருந்தும் நெய்யுண்ட தமக்கு நெய்க்குடத்தில் கைவிடுவது ஒன்றும் புதிதல்லவே!  இப்படி எல்லாம் என்னைப் பார்த்துக் கேலி செய்யும்படியான ப்ரமாணங்களைச் செய்யாதீர்.  உமக்கு எந்த இடத்தில் இருந்தால் சரியாக இருக்குமோ அங்கேயே போய் இரும்!  இன்றைக்கும் நேற்றைக்கு எழுந்தருளினவிடத்திலே தானே போய் எழுந்தருளிக்கொள்ளும். இங்கே வர வேண்டாம்."

நாச்சியார் மீண்டும் கதவடைக்கிறாள்.  மலர்மாலைகள், பூச்செண்டுகள், பழங்கள் வீசி எறியப்பட்டு பெருமாளின் பல்லக்கு வேகமாகப்பின் வாங்குகிறது.  பெருமாள் நிஜம்ம்மாவே பயந்துட்டார் போல! :)


ஆச்சு இன்னும் ஓரிரு பதிவிலே மட்டையடி முடிஞ்சுடும், அடுத்து சித்திரைத் தேர் குறித்த ஒரு சின்ன குறிப்புக்கு அப்புறம் மீண்டும் வரலாற்றைத் தொடரலாம்.  அதுக்குள்ளே அடுத்த திருநாள் வந்துடும். :))))

Tuesday, May 07, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ப்ரணய கலஹம், மட்டையடித் திருவிழா தொடர்ச்சி!


போன பதிவில் நாச்சியார் சொன்ன பதில்களின் ப்ரகாரம் கீழே

நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்

முந்தாநாள் அழகிய மணவாளப் பெருமாள் வேட்டையாடி, வேர்த்து, விடாய்த்து எழுந்தருளினார் என்று அடியோங்கள் அதிப்ரீதியுடனே எதிரே விடைகொண்டு திருக்கை கொடுத்து உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டுபஓய் திவ்ய சிம்ஹாசனத்தில் ஏறியருளப்பண்ணி, திருவடி விளக்கி, திருவொத்துவாடை சாத்தி, திருவாலவட்டம் பரிமாறினோம்.  அப்போது அதிக ச்ரமத்தோடேயே எழுந்தருளியிருந்தார்.  ஆனால் இளைப்போ என்ரு வெந்நீர்த் திருமஞ்சனம் சேர்த்து ஸமர்ப்பித்தோம்.  அதை நீராடினது பாதியும், நீராடாதது பாதியுமாக எழுந்தருளியிருந்தார்.  ஆனால் இளைப்போ என்று திருவரைக்குத் தகுதியான திவ்ய பீதாம்பரம் கொண்டு வந்து ஸமர்ப்பித்தோம்.  அதையும் எப்போதும்போல சாத்திக் கொள்ளாமல் ஏதோ ஒருவிதமாகச் சாத்தியருளினார்.  ஆனால் இளைப்போ என்று கஸ்தூரித்திருமண்காப்பு சேர்த்து ஸமர்ப்பித்தோம். அதையும் எப்போதும்போ சாத்திக்கொள்ளாமல் திருவேங்கடமுடையான் திருமண்காப்புப் போல கோணாமாணாவென்று சாத்தியருளினார்.  ஆனால் இளைப்போ என்று தங்கப் பள்ளயத்தில் அப்பங்கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து வர்க்க வகைகளை முதலானதுகளைச் சேர்த்து ஸமர்ப்பித்தோம்.  அதையும் அமுது செய்தது பாதியும், அமுது செய்யாதது பாதியுமாக எழுந்தருளியிருந்தார்.  ஆனால் இளைப்போ என்று சுருளமுது திருத்தி ஸமர்ப்பித்தோம்.  அதையும் அமுது செய்யாதபடிதானே எழுந்தருளியிருந்தார்.  ஆனால் இளைப்போ என்று திருவனந்தவாழ்வானைத் திருப்படுக்கையாக விரித்து அதன் மேலே திருக்கண் வளரப் பண்ணி அடியோங்கள் திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தோம்.  தாம் வஞ்சகக் கள்வரானபடியினாலே எங்களுக்கு ஒரு மாயா நித்ரையை உண்டாக்கி, எங்கள் கருவூலம் திறந்து எங்கள் ஸ்த்ரீதனங்களான அம்மானக் பந்து கழஞ்சு பீதாம்பரங்களையும்  கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்தருளினார்.  அந்த உத்தர க்ஷணமே அடியோங்கள் அச்சமுடன் திடுக்கிட்டு எழுந்திருந்து திருப்படுக்கையைப் பார்க்குமிடத்தில் பெருமாளைக் காணாமையாலே கை நெரித்து வாயடித்து அணுகவிடும் வாசற்காப்பாளரை அழைத்துக் கேட்கும் அளவில் அவர்கள் வந்து அம்மானை பத்து கழஞ்சு பீதாம்பரமான ஸ்த்ரீ தனத்தையும் கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்தருளினார் என்று சொல்ல வந்தார்கள்.  அந்த உத்தர க்ஷணமே அந்தரங்க பரிஜனங்களாய் இருக்கிற திருச்சேவடிமார்களை அழைப்பு விடுத்தோம்.  அவர்கள் வந்து அடிபிடித்து அடிமிதித்துக் கொண்டு போனவிடத்தில் உறையூரிலே கொண்டு போய் விட்டது.  அங்கே மச்சினி என்றொருத்திக்கு முறைமை சொல்லி மற்றொருத்தியை மடியைப் பிடித்ததும், கச்சணி பொன்முலை கண்ணால் அழைத்ததும், கனிவாய் கொடுத்ததும், கையில் நகக்குறி மெய்யாக ஆனதும், கார்மேனியெங்கும் பசு மஞ்சல் பூத்ததும், கரும்புத் தோட்டத்திலே யானை ஸஞ்சரிக்கிறாப்போலே தேவரீர் ஸஞ்சரிக்கிறீரென்று நாங்கள் உசிதமாகப் போகவிட்ட தூதியோடி வந்து அங்க அடையாளம் உள்ளபடி வந்து சொன்னாள்.  உம்மாலே எமது மனது உலை மெழுகாய் இருக்கிறது.  ஒன்றும் சொல்லாதே போம்போமென்று நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

இதற்குப் பெருமாளின் பதில் கீழ்க்கண்டவாறு.

ஒருவருக்கொருவர் ஸ்ம்சயப்பட்டால் அந்த ஸாம்சயம் ஒரு ப்ரகாரத்தாலும் தீராமற்போனால் ப்ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள்.  அந்தப்படி ப்ரமாணம் பண்ணித் தருகிறோம்!  நாம் தேவாதிதேவனானபடியினாலே தேவதைகளைத் தாண்டித் தருகிறோம்.! ஸமுத்ரத்திலே முழுகுகிறோம்!. அக்னி ப்ரவேசம் பண்ணுகிறோம்!. பாம்புக்குடத்திலே கை விடுகிறோம்!  மழுவேந்துகிறோம்!  நெய்க்குடத்திலே கையிடுகிறோம்!  இப்படிப்பட்ட ப்ரமாணங்களையானாலும் வாங்கிக் கொண்டு நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிச் சூட்டிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லிப் பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்.

பெருமாள் சொல்கிறார்!

அடி ரங்கா! என் ரங்கா!  நீ என் மேல் சந்தேகப் படலாமா?  பதிலுக்கு நானும் உன் மேல் சந்தேகப்படுவேனா!  இப்படி ஒருவருக்கொருவர் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தால் என்ன சொன்னாலும் மனம் திருப்தி அடையாது. ஆகவே நான் ஆணையிட்டுச் சொல்கிறேன்.  நீ எதன்மேல் ஆணையிடச் சொன்னாலும் அந்தப்படி ஆணையிடுகிறேனடி ரங்கா!  தேவாதி தேவனான நான் இதற்காக தேவதைகளைத் தாண்டி ஆணையிடுவது உனக்குச் சம்மதம் எனில் அவ்வாறு ஆணையிடுகிறேன்.  அல்லது  என்னை சமுத்திரத்திலே முழுகு என்கிறாயா?  சரி அம்மா, அப்படியே முழுகுகிறேன்.  அது வேண்டாம், அக்னி ப்ரவேசம் பண்ணணுமா?  அதுவும் செய்கிறேன். கொடிய விஷப் பாம்புகளைக் குடத்தில் இட்டு அந்தக் குடத்திலே கையை விடச் சொன்னாலும் பயமில்லாமல் விடுகிறேனடி.  மழுவைக் கையில் ஏந்த வேண்டுமா?  இதோ வெறும் கைகளாலேயே ஏந்துகிறேன்.  கொதிக்கும் நெய்க்குடத்தில் கைவிட வேண்டுமா? சொல், செய்கிறேன்.  என்னுடைய இத்தகைய ப்ரமாணங்களை வாங்கிக் கொள் ரங்கா. வாங்கிக் கொண்டு நான் உனக்காகக் கொண்டு வந்திருக்கும் புஷ்பங்களையும் வாங்கிக் கொண்டு என்னையும் உள்ளே அழைப்பாயாக!

Saturday, April 27, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ப்ரணய கலஹம், இன்னும் முடியவில்லை!


ரங்கநாயகி அவ்வளவு எளிதில் உள்ளே விடுவாளா?  இன்னும் கேட்க வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது. இந்த மனிதன் ஒவ்வொரு முறையும் நம்மை ஏமாற்றி விடுகிறானே.  இம்முறை விடக் கூடாது.  ரங்கநாயகி தொடர்ந்தாள்.

"அழகிய மணவாளரே! முந்தாநாள் நடந்ததைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.  தாங்கள் வேட்டைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றிருந்தீர்கள். உண்மையாகவே வேட்டையாடி, வியர்த்து விடாய்த்து வந்தீர்கள்.  என் மனம் நெகிழ்ந்தது.  தங்களைக் கண்டதுமே உள்ள நிலைமை புரிந்தபடியால் தங்களை எதிர்கொண்டழைத்துக் கைலாகு கொடுத்து உள்ளே அழைத்துச் சென்றோம்.  தங்களை திவ்ய சிம்ஹாசனத்தில் எழுந்தருளப் பண்ணினோம்.  தங்கள் திருவடிகளைப் பாதபூஜை செய்து கழுவித் துடைத்து ஆசுவாசம் போக்கி தங்கள் திருவடிகளை ஒத்தியெடுக்கும் திருவொத்துவாடையால் ஒத்தி எடுத்து, திருவாலவட்டம் காட்டி அருளினோம்.  ஆனாலும் தாங்கள் அதிக ச்ரமத்தோடேயே காணப்பட்டீர்கள்.  ஆகவே தங்கள் உடலுக்குக் களைப்பினால் ஏற்பட்ட இளைப்போ என எண்ணிக் கொண்டு வெந்நீரால் தங்களுக்குத் திருமஞ்சனம் செய்விக்கச் செய்து சமர்ப்பித்தோம்.  ஆனாலும் தாங்கள் சரிவர நீராடவில்லை.  நீராடியது பாதியும், நீராடாதது பாதியுமாகவே இருந்தது.  நமக்கு அதன் காரணம் புரியவில்லை."

"தங்களுக்கு மேலும் சிரமத்தால் ஏற்பட்ட இளைப்போ எனக் கருதி, தங்கள் திருமேனிக்கு ஏற்ற திவ்ய பீதாம்பரத்தைத் தேடி எடுத்துச் சமர்பித்தோம்.  அதையும் சரிவர சாத்திக்கொள்ளவில்லை தாங்கள்.  ஏனோதானோ எனச் சாத்தியருளி இருந்தீர்கள்.  பின்னும் விடாமல் கஸ்தூரித் திருமண்காப்பு சேர்த்துச் சமர்ப்பித்துப் பார்த்தால், ஆஹா, என்னவாச்சு தங்களுக்கு.  தாங்கள் எப்போதும்போல் சார்த்திக்கொள்ளும் திருமண்காப்பைப் போல் அல்லாமல் திருவேங்கடமுடையான் காப்புப் போல் அல்லவோ சார்த்திக் கொண்டீர்?  கோணாமாணாவென இருந்தது.  பின்னரும் விடாமல் தங்கள் பசியாற வேண்டி, தங்கப் பள்ளயத்தில் அப்பம் கலந்த சிற்றுண்டு, அக்காரம் முதலானவற்றைப் பாலில் கலந்து, வர்க்க வகைகளையும் சமர்பித்தோம். ஆனாலும் தாங்கள் அவற்றை சரிவர அமுது செய்யவில்லை. அமுது செய்தது பாதியும், அமுது செய்யாதது பாதியுமாக வைத்துவிட்டீர்கள்.  எனினும் விடாமல் சுருளமுது திருத்தி சமர்ப்பித்தோம்.  அதையும் அமுது செய்யாதபடிதானே எழுந்தருளி இருந்தீர்?"

"தூக்கம் சரிவர இல்லை என நினைத்து அனந்தாழ்வானைக் கூப்பிட்டுத் தங்களுக்கேற்ற திருப்படுக்கையாக விரித்துக் கொள்ளச் சொல்லி அதன்மேலே தங்களைத் திருக்கண் வளரப் பண்ணி நாமே தங்கள் திருவடிகளை மிருதுவாகவும், தங்கள் உடல் நோவு தீரும் வண்ணமும் பிடித்துக் கொண்டிருந்தோம்.  ஆனால் ஐயா, தாங்கள் எத்தனை வஞ்சகர்!  தங்கள் வஞ்சகத்தால் எங்களுக்கெல்லாம் ஒரு மாயா நித்திரையை உருவாக்கி விட்டீர்கள்.  எங்கள் கருவூலம் திறந்தீர்கள்.  எங்கள் ஸ்த்ரீதனங்கள் ஆன அம்மானை, பந்து கழஞ்சு, பீதாம்பரங்கள் அனைத்தையும் கைக்கொண்டு விட்டீர்கள்.  எந்த இடத்துக்குச் செல்கிறோம் என எவரிடமும் கூறவே இல்லை. தாங்கள் சென்ற அடுத்த கணமே எங்கள் மாயா நித்திரை கலைந்தது.  திடுக்கிட்டு விழித்தோம்.  அனந்தாழ்வான் விரித்திருந்த படுக்கையில் பார்த்தால் தாங்கள் அங்கே இல்லை. என்ன செய்வது எனப் புரியவில்லை."



சரியென்று வாயில்காப்போனை அழைத்துக் கேட்டால் அவர்கள் வந்து அம்மானை, பத்து கழஞ்சு, பீதாம்பரமான ஸ்த்ரீதனங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு தாங்கள் இன்ன இடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்தருளிவிட்டார் என்று சொல்கின்றனர்.  அந்த பதில் கிடைத்ததுமே எங்கள் அந்தரங்கத் திருச்சேவடிமார்களை அழைத்தோம்.  அவர்கள் வந்து தங்கள் அடி பிடித்து, தங்கள் திருவடித் தடம் கண்டு அந்த அடியில் மிதித்துக் கொண்டு சென்றால் அது உறையூரிலே கொண்டு போய்விட்டது. அங்கே மச்சினி என்ற ஒருத்திக்கு முறைமை சொல்லி அழைத்ததும், மற்றொருத்தியை மடியைப் பிடித்ததும், கச்சணிந்த முலைகளோடு கூடிய பெண்ணைக் கண்ணால் அழைத்ததும், கனிவாய் கொடுத்ததும், தங்கள் உடலெங்கும் அதனால் ஏற்பட்ட நகக்குறிகளும், தங்கள் கார்மேனியில் அதனால் ஏற்பட்ட  பசுமஞ்சள் நிறமும், தெரிய வந்தது,"

"ஐயா, தாங்கள் கரும்புத்தோட்டத்தில் சஞ்சரிக்கும் யானையைப் போல இந்தப் பெண்கள் கூட்டத்தின் நடுவே சஞ்சரிக்கிறீர்கள் என நாங்கள் உங்களைத் தேடும்படி அனுப்பி வைத்த தூதி ஓடோடியும் வந்து தங்கள் அங்க அடையாளங்களைச் சொல்லி உள்ளது உள்ளபடி அடையாளம் காட்டிவிட்டாள். உம்மாலே எம் மனது அனலில் இட்ட மெழுகாய், இல்லை இல்லை, கொல்லன் உலையில் இட்ட மெழுகாய்க் கொதிக்கிறது.  நீர் எதுவும் பேசவேண்டாம், போம், போம்.  இங்கிருந்து செல்லும்."

என்றாள் நாச்சியார்.

இது குறித்த ப்ரகாரம் நாளைக்கு வரும்.  கூடவே பெருமாளின் பதிலும்.


Wednesday, April 24, 2013

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ப்ரணய கலஹம்-மட்டையடித் திருவிழா


அவ்வளவில் ரங்கநாயகி நாச்சியாருக்குக் கோபம் அதிகமாகிவிட்டது. இவர் பொய் சொல்லிவிட்டு, உறையூருக்குச் சென்று ஊர் சுத்திவிட்டு இங்கே வந்து என்னமாக் கதை அளக்கிறார்!

இந்த நம்பெருமாளை உற்சவ அலங்காரத்தில் அது என்ன அலங்காரமாகவே இருக்கட்டுமே, சற்றே உற்றுக்கவனியுங்கள்.  அவன் உதடுகளில் ஒரு கள்ளச் சிரிப்பும், குறும்பும் இழையோடும்.  அதுவும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் தன்னால் நாச்சியாரை மட்டுமல்ல இந்த ஜனங்களையும் எப்படியோ ஏமாத்திடலாம் என்ற நிச்சயம் தெரிவதையும் அவன் கண்களில் உணரமுடியும்.  நம்மை எப்படியும் உள்ளே விட்டுடுவாங்க.  நாம் சொல்வதை நம்பிடுவாங்க என்று நிச்சயமாகக் கொஞ்சம் ஆசுவாசமாகவே இருப்பான்.  கொஞ்சமும் கவலைப் பட்டுக்க மாட்டான். இப்படிப் பட்டவனை என்ன செய்யறது?  நாச்சியார் புலம்பறாப்போல் புலம்ப வேண்டியது தான்.  அதைக் கேட்டுக்கொண்டு மனதுக்குள்ளாகவே அவன் சிரித்துக் கொள்வது அந்த முகத்தில் அப்பட்டமாய்த் தெரியும். மேலும் மேலும் அடுத்தடுத்துக் கதை அளப்பான் பாருங்கள்.  அதென்னமோ இவன் என்ன சொன்னாலும் ஒரு பக்கம் மனம் அதை நம்பத் துடிக்கும்;  இன்னொருபக்கம் பொய் சொல்கிறான் என்றே தெரியும்.  ஆனாலும் அவன் லீலைகளை எல்லாம் ரசித்து மன்னித்து விடுவோம்.  இப்போ ரங்கநாயகி நாச்சியார் கேட்கப் போகிற கேள்விகளையும் அதுக்கு நம்பெருமாள் சொல்லப் போகிற பதிலையும் படியுங்கள்.

நாச்சியார் பண்டாரிகள் சொல்வது:

கணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால், விடியப்பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி உறையூரில் போய், மின்னிடை மடவார் சேரியெலாம் புகுந்து யதாமனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்தாலே உண்டாயிருக்கிற அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்தேயும் அவ்வடையாளங்களையும் அந்யதாவாகக் கொண்டு நாங்கள் ஏழைகளானபடியினால் இப்படிப்பட்டிருக்கிற வஞ்சநோக்திகளையெல்லாம் நேற்றைக்கு எழுந்தருளினவிடத்திலே தானே சொல்லிக் கொண்டு இன்றைக்கும் அங்கே தானே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

"ஓஹோ, ஐயா, அப்படியா?  கணையாழி மோதிரம் நிஜம்மாகவே காணாமல் போனதா?  அது உண்மையா?  அப்படியெனில் விடிய பத்து நாழிகை இருக்கையிலேயே தாங்கள் எங்கே கிளம்பினீர்கள்?  உறையூருக்குச் சென்றதாகவல்லவோ கேள்வி!  அங்கே மின்னலைப் பழிக்கும் மெல்லிய இடையுடைய ஒரு பெண்ணின் நந்தவனத்திற்கு அருகே தாங்கள் உலாவியதாகவும் கேள்வி.  தங்களைக் கண்டு அந்தப் பெண் மயங்கினாள் என்றும் கேள்வி.  தாங்களும் அவளைக் கண்டு மோஹித்தீர்கள் எனக் கேள்விப் பட்டேன்.  இப்படியெல்லாம் செய்து தங்கள் இஷ்டம் போல், மனம்போல் அந்தப் பெண்ணுடன் கூடி இருந்து இன்பம் அனுபவித்துவிட்டு அந்த அனுபவத்தாலே உண்டாகி இருக்கும் இத்தகைய அடையாளங்களை அவற்றால் இல்லை என்கிறீரே! அந்த அடையாளங்களெல்லாம் சாட்சிப் பிரமாணமாக உள்ளனவே.  ஏன் இப்படி?  நானொரு ஏழைப் பெண் என்பதாலா? இப்படிப்பட்டதொரு வஞ்சகத்தை எனக்கு நீர் செய்யலாமா?  நேற்றைக்குத் தாம் எழுந்தருளி இருந்த இடத்திலே இத்தகைய சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு திரும்பிப் போய் அங்கேயே இன்றும் எழுந்தருளூவீராக!

அரையர்கள் மூலம் பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்

நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதும் இல்லை;  காதாலே கேட்டதுமில்லை.  துஷ்டர்களாயிருக்கிறவர்களும் மனதுக்குச் சரிப்போனபடி சொன்னால் நீரும் அந்த வார்த்தைகளைத் தானே கேட்டுக்கொண்டு நம்மையும் ஒரு நாளும் பண்ணாத அவமானங்களெல்லாம் பண்ணலாமா?  நீங்கள் ஸ்த்ரீகளானபடியினாலே முன்பின் விசாரியாமல் பண்ணினீர்காளாமென்கிற அவமானம் உங்களுக்கே யொழிய நமக்குத் தேவையில்லை. ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்.

"ஆஹா, ரங்கநாயகி, அந்தோ!  உறையூரா?  அது எங்கே இருக்கிறதடி?  நான் அப்படி ஊரை இன்றுவரை காணவில்லையே!  அந்த ஊர்ப் பெயரையும் காதாலே கேட்டதும் இல்லையடி.  யாரோ, வழியோடு போகிற துஷ்டர்கள் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிக் கொடுத்து உன் மனதைக் கெடுத்துக் குட்டிச் சுவர் பண்ணி இருக்கிறார்கள். அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டுக் கொண்டு நீ இப்படி என்னை ஒருநாளும் இல்லாத திருநாளாக அவமானம் செய்யலாமா?  இதோ பார், ரங்கா, புத்தம்புதிய புஷ்பங்கள், உனக்காகவே வாங்கி வந்துள்ளேன்.  நீ ஒரு அழகிய பெண்மணி.  முன்பின் சரிவர விசாரிக்க வேண்டாமா?  விசாரிக்காமல் இவ்விதமெல்லாம் நீ சொன்னால் அதனால் விளையும் அவமானம் உனக்குத் தான் ரங்கா!  எனக்கில்லை.  மனதை சமாதானம் செய்து கொள்வாய்.  இதோ இந்த அழகிய புஷ்பங்களை ஏற்றுக் கொள்.  என்னை உள்ளே வரவிடு. என் அருமை ரங்கா, நான் உள்ளே வரலாமா?"

Monday, April 22, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம், ப்ரணய கலஹம், மட்டையடி உற்சவம்


"ஆனால் நான் ஏன் இவ்வளவு தாமதமாய் வந்தேன் என நினைக்கிறாயா?  அதற்குக் காரணம் உள்ளது!"


 என்ற நம்பெருமாள் மேலும் தொடர்ந்தார்.  "வேர்க்க விறுவிறுக்க வேட்டையாடிவிட்டு நான் திரும்பி வரும் வேளையில், "நீலன்" என்றொருவன்.  யாரோ திருமங்கையாழ்வானாம், சொல்கின்றனர். அவன் பெரிய திருடனாய் இருக்கிறான் ரங்கா, என் திருவாபரணங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போயே விட்டான் என்றால்!  பார்த்துக்கொள்! மெதுவாக அவனைப்பிடித்துக் காலைப் பிடிக்கச் சொல்லி, நல்ல வார்த்தைகளைச் சொல்லி சமாதானம் செய்வித்து, திருவாபரணங்களை மெல்ல வாங்கி கொண்டு போய்க் கருவூலத்தில் சேர்க்கும்போது கணக்குப் பார்த்தேனா!  கணையாழியைக் காணவே இல்லை.  ஆஹா, அது நம் ரங்கநாயகி கொடுத்த கணையாழியாச்சே எனக் கவலையோடு விடிய விடியப்பத்து நாழிகைக்கு மேல் புறப்பட்டுத் திருவீதிகளெல்லாம் தேடித் தேடிப் பார்த்துக் கடைசியில் ஒருவழியாகக் கண்டு பிடித்துவிட்டேன்.  அங்கிருந்து உன்னைக் காண வேண்டி நேரே கிளம்பும்போது இந்த தேவதைகள் ஒரு கூடை புஷ்பத்தை எடுத்துக் கொண்டு வர்ஷிக்க வந்துவிட்டார்கள்.  விடுவேனா!  என் ரங்கநாயகி அருகில் இல்லாமல் புஷ்பங்களை நான் ஏற்பதில்லை என மறுத்துவிட்டேன்.  ரங்கநாயகிக்கும் சேர்த்துத் தான் என்றார்களா, அவர்களை முன்னே போகச் செய்து நாம் பின்னே வந்தோம்.  ஆகையினாலே இந்தப் புஷ்பங்களை ஏற்றுக் கொண்டு நம்மையும் உள்ளே அழைத்து ஆசுவாசம் செய்விப்பாய்.

மேலே குறிப்பிட்டவை நான் எழுதியவை:

நம்பெருமாளுக்காக அரையர்கள் சொல்லும் ப்ரகாரம்:

திருக்கண் சிவந்திருப்பானேன் என்றால் நாம் செங்கோலுடைய திருவரங்கச் செல்வரானபடியினாலே கவுரி முடித்ஹ்டு, கலிக்கச்சைக் கட்டி, வல்லயமேந்தி, குதிரை நம்பிரான் மேலே ராத்ரி முழுதும் நித்ரையின்றி ஜகரக்ஷணார்த்தமாக ஜாகரூகனாய் இருந்தபடியினாலே திருக்கண் சிவந்து போச்சுது.  திருக்குழல் கற்றைகளெல்லாம் கலைந்திருப்பானேன் என்றால் காற்றடித்துக் கலைந்து போச்சுது.  கஸ்தூரித் திருமண் காப்புக் கரைந்திருப்பானேனென்றால் அதிகடோரமான ஸூர்ய கிரணத்தால் கரைந்து போச்சுது.  திருவதரம் வெளுத்திருப்பானேனென்றால் அஸுர நிரஸனார்த்தமாய் தேவதைகளுக்காக சங்கத்வானம் பண்ணினபடியினாலே வெளுத்துப் போச்சுது.  திருக்கழுத்தெல்லாம் நகச்சின்னமாயிருப்பானேனென்றால் அதிப்ரயாஸமான காடுகளிலே போகிறபோது பூமுள்ளு கிழித்தது.  திருமேனியெல்லாம் குங்குமப் பொடிகளாய் இருப்பானேனென்றால் தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷித்தபடியினாலே புஷ்ப ரேணு படிந்தது.  திருப்பரிவட்டங்களெல்லாம் மஞ்சள் வர்ணமாயிருப்பானேனென்றால் ஸந்த்யா ராகம் போலேயிருக்கிற திவ்ய பீதாம்பரமானபடியினாலே உங்கள் கண்ணுக்கு மஞ்சள் வர்ணமாய்த் தோன்றுகிறது.  திருவடிகளெல்லாம் செம்பஞ்சுக் குழம்பாயிருப்பானேனென்றால், குதிரை நம்பிரான் மேலேறி அங்கவடிமேல் திருவடிகளை வைத்துக்கொண்டு போனபடியினாலே திருவடிகள் சிவந்து போயின.  இப்படிப்பட்ட அடையாளமேயொழிய வேறில்லை.  ஆனால், போது கழிந்து வருவானேன் என்றால் வேட்டையாடி வேர்த்து விடாய்த்து வருகிற ஸமயத்திலே, திருமங்கையாழ்வானென்பவன் ஒருவன் வந்து ஸர்வஸ்வாபஹாரத்தையும் பண்ணிக் கொண்டு போனான்.  அவனைச் சில நல்ல வார்த்தைகள் சொல்லித் திருவாபரணங்களை மெள்ள வாங்கிக் கொண்டு போய், கருவூலத்தில் எண்ணிப் பார்க்குமிடத்தில் கணையாழி மோதிரம் காணாமல் போச்சுது.  அதற்காக விடியப் பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி, திருவீதிகளெல்லாம் வலம் வந்து கணையாழி மோதிரத்தைக் கண்டெ;டுத்துக் கொண்டு மீள வாரா நிற்கச் செய்தே அப்பொழுது தேவதைகள் பாரிஜாத புஷ்பங்கள் கொண்டு ஸேவிக்க வந்தார்கள்.  நாம் நம்முடைய பெண்டுகள் அன்றியிலே சூடுகிறதில்லையென்று தமக்கு முன்னமே வரக்காட்டி நாமும் பின்னே எழுந்தருளினோம்.  ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பங்களையும் வாங்கிக்கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்


அடுத்து நாச்சியார் ப்ரகாரம் தொடரும்.

Friday, April 19, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம், ப்ரணய கலஹம், மட்டையடி உற்சவம்


நாச்சியாருக்காக இப்போது பண்டாரிகள் பேசுவார்கள். முதல்லே என்னோட தமிழில்.  அப்புறமா நாச்சியாரின் ப்ரகாரம்.

"என்ன< எப்போதும் போல் தாம் எழுந்தருளியுள்ளீர்களா?  யார் சொன்னது? அது உண்மையெனில் தங்கள் திருக்கண்கள் ஏன் இப்படி சிவந்து காணப்படுகின்றன? இரவு முழுவதும் தூங்காதவர் போல் அல்லவோ காணப்படுகிறீர்கள்?  மேலும் தங்கள் குழல் கற்றைகள்?  அவை காற்றில் பிரிந்தனவாய்த் தெரியவில்லையே? ஏன் இப்படி கலைந்து பிரிந்து தொங்குகின்றன?  நெற்றியைப் பாருங்கள்!  கஸ்தூரித் திலகம், திருமண் காப்பு கரைந்து வழிந்திருப்பதைப் பார்க்க முடிகிறதே!  அதோடு மட்டுமா?  தங்கள் உதடுகள் ஏன் இப்படி வெளுத்துக் காண்கின்றன!  ஸ்வாமி, இதோ இங்கே தங்கள் கழுத்தில் நகச் சின்னங்களாய்க் காண்கின்றேனே! இவை பொய்யா?  உங்கள் திருமேனியில் எல்லாம் குங்குமமாய்க் காண முடிகிறது எங்கனம்? பரிவட்டங்கள் எப்போது மஞ்சள் வர்ணத்தைப் பெற்றன?"

"ஆஹா, இதென்ன ஆச்சரியம்?  பெண்கள் போட்டுக்கொள்ளும் செம்பஞ்சுக் குழம்பின் சுவடுகள் தங்கள் திருப்பாதங்களில்! ஐயா என் உள்ளம் மிகவும் கலங்கி நான் குழம்பிப் போயிருக்கிறேன். யாரங்கே?  திருச்சேவடிமார்களே, உள்ளே இருக்கிறவர்களை வெளியே விடவும் வேண்டாம்.  வெளியே இருந்து வருகின்றவர்களை உள்ளே விடவும் வேண்டாம்.  கட்டுப்பாடு செய்யுங்கள்.  விண்ணப்பம் செய்கிறவர்களை அநுமதிக்க வேண்டாம்.  வந்திருப்பது யாராய் இருந்தாலும் நம் பெருமாளாகவே இருந்தாலும், அழகிய மணவாளனாகவே இருந்தாலும் அவரை நேற்றைக்கு எழுந்தருளி இருந்த இடத்திலேயே இன்றைக்கும் எழுந்தருளச் சொல்லுங்கள்.  இது என் ஆணை!"

மேற்கண்டவாறு நாச்சியார் கூறியவுடனே மீண்டும் மலர்ப்பந்துகள், மாலைகள், வாழைப்பழங்கள் என நாச்சியார் சந்நதியிலிருந்து தூக்கி எறியப்பட நம்பெருமாளாகிய அழகிய மணவாளர் பயந்து பின் வாங்குவது போல் நடிப்பார்.  சற்றுத் தூரம் பல்லக்குப் பின்னோக்கிச் செல்லும்.  பின்னர் மீண்டும் முன் வந்து, தன் பதிலைச் சொல்லுவார்.  இப்போது நாச்சியாரின் ப்ரகாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு நம்பெருமாளின் பதிலைப் பார்ப்போம்.

நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம் பண்டாரிகள் வாய்மொழியாக:

தாம் எப்போதும்போல் எழுந்தருளியது மெய்யானால் திருக்கண்களெல்லாம் சிவந்து இருப்பானேன்?  திருக்குழல் கற்றைகளெல்லாம் கலைந்திருப்பானேன்?  கஸ்தூரி திருமண்காப்பு கரைந்திருப்பானேன்? திருவதரம் வெளுத்திருப்பானேன்? திருக்கழுத்தெல்லாம் நகச்சின்னங்களாக இருப்பானேன்?  திருமேனியெல்லாம் குங்குமப் பொடியாக இருப்பானேன்? திருப்பரிவட்டங்களெல்லாம் மஞ்சள் வர்ணமாய் இருப்பானேன்?  திருவடிகளெல்லாம் செம்பஞ்சுக் குழம்பாயிருப்பானேன்?  இப்படிப்பட்ட அடையாளங்களைப் பார்த்து நாச்சியாரின் திருவுள்ளம் மிகவும் கலங்கி இருக்கிறது.  ஆகையினாலே உள்ளே இருக்கிறவர்களை வெளியே விடவேண்டாமென்றும், வெளியிலே இருக்கிறவர்களை உள்ளே விடவேண்டாமென்றும் இப்படிக் கட்டுப்பாடு பண்ணிக் கொண்டிருக்கிற சமயத்திலே உள்ளே விண்ணப்பஞ்ச்செய்யச் சமயமில்லை.  ஆனபடியினாலே நேற்றைக்கு எழுந்தருளினவிடத்திலே இன்றைக்கும் எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

இதற்கு பதில் கொடுக்கும் நம்பெருமாள் சாதாரணமானவரா!  மஹா கள்ளனாயிற்றே. ஒவ்வொன்றுக்கும் எப்படிப் பதில் கொடுக்கிறார் பாருங்கள்.

"ஆஹா, ரங்க நாயகி, நம்மை யாரென நினைத்தாய்?  நாம் செங்கோலுடைய  திருவரங்கச் செல்வர் அன்றோ!  கவரி முடிந்தோம்;  கலிக்கச்சை கட்டினோம்;  வல்லயம் ஏந்தினோம்.  நம் குதிரை நம்பிரான் மேலே இரவு முழுதும் உறக்கமின்றி இவ்வுலகைக் காக்கும் நிமித்தமாக விழித்திருந்தபடியாலே நம் கண்கள் சிவந்து போயின.  அங்கும் இங்கும் அலைந்து திரிந்த சமயத்திலே அடித்த காற்றிலே திருக்குழல் கற்றைகள் கலைந்து பிரிந்து போயிற்று.  கஸ்தூரித் திருமண் காப்புக் கலைவது ஒன்றும் புதிதல்லவே.  இந்த சூரியனின் அதி கொடூரமான கிரணங்கள் எனக்கு ஒத்துக்கொள்ளாது என்பதை நீ அறியாதவள் அல்லவே! அந்தக் கொடூரமான சூரிய கிரணங்களினால் என் திருமண் காப்புக் கரைந்துவிட்டது. "

"தேவதைகளின் வேண்டுகோளுக்காக வேண்டி சங்க வாத்தியத்தை எடுத்து ஊதிய காரணத்தால் அதரங்கள் வெளுத்தன. இந்த ஜகத்தை ரக்ஷகம் செய்யும் வேலை சாமானியமானதா ரங்கநாயகி?  காடு மேடுகளெல்லாம் சென்று பார்க்க வேண்டாமா?  அவ்விதம் காடுகளெல்லாம் சுற்றி அலைந்த காரணத்தால் ஆங்காங்கே இருந்த முட்செடிகள் கீறிவிட்டதால் கழுத்தெல்லாம் கீறல்களாய்த் தெரிகிறது.  தேவதைகள் மிகவும் சந்தோஷம் கொண்டு என்னைப் புஷ்பங்களால் வர்ஷித்தன.  அப்படி வர்ஷிக்கையிலே அந்தப் புஷ்பங்களின் மகரந்த வர்ணச் சேர்க்கையெல்லாம் என் மேல் விழுந்ததால் குங்குமப் பொடியாக உனக்குத் தெரிகிறது.  ஆஹா, என் பரிவட்டம் உன் கண்ணுக்குப் பீதாம்பரமாய்த் தெரிகிறது போலும்.  என் பீதாம்பரம் தானே மஞ்சள் வர்ணம்.  அதைப் பரிவட்டம் என நினைத்துவிட்டாயோ?  குதிரை மேல் ஏறி இரவு முழுதும் அலைந்த சமயம் குதிரையின் அங்கவடியின் மேலே கால்களை வைத்துக் கொண்டே செல்ல வேண்டுமே!  அப்போது திருவடிகள் சிவக்காதிருக்குமா?  இவைதான் ரங்கா, வேறெதுவுமே இல்லை."

"ஆனால் நான் ஏன் இவ்வளவு தாமதமாய் வந்தேன் என நினைக்கிறாயா?  அதற்குக் காரணம் உள்ளது!"

Thursday, April 11, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ப்ரணய கலஹம், நம்பெருமாள்-நாச்சியார் மட்டையடி!


ப்ரணய கலஹத்தில் ரங்கநாயகி, நம்பெருமாள் இருவருக்கும் வாக்குவாதம் உண்டாகிறது.  ரங்கநாயகியும், அரங்கனும் வாக்குவாதம் பண்ணிக் கொள்வதைப் புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள் அந்தப் புத்தகத்தை  அளிப்பது கே.பி.எஸ்.நாராயணன் செட்டியார், சேர்மன், போர்ட் ஆஃப் ட்ரஸ்டீஸ், ஸ்ரீரங்கநாத ஸ்வாமி தேவஸ்தானம், ஸ்ரீரங்கம். மேலும் உறுப்பினர், டி.ஆர்.யு.சி.சி. திருச்சி, 55, சின்ன செட்டி தெரு, திருச்சி.  இந்தப் புத்தகத்தை  ஸ்கான் செய்து அனுப்பியது பதிவர் மாதங்கி மாலி, அவர் தந்தை திரு மாலி.  இருவருக்கும் என் நன்றி.

முதல்லே பங்குனி மாதம் நடக்கும் இந்த பிரம்மோத்ஸவம் ஆதி பிரம்மோத்ஸவம் எனப்படும். இந்த ஆதி பிரம்மோத்ஸவம் விபீஷணனால் ஏற்படுத்தப் பட்டது.  பங்குனி மாதம் உத்திர நக்ஷத்திரத்தன்று கமலவல்லியைத் திருமணம் செய்து கொண்டு உறையூரிலிருந்து திரும்பி வந்த அரங்கன், ரங்கநாயகியைத் தரிசிக்க மிகுந்த பிரேமையுடன் சென்றபோது கோபத்துடன் கதவை அடைத்தாள் ரங்கநாயகி.  எல்லாம் தெரிந்த ஸ்ரீதேவிக்கே கோபமா? எனில் ஆம், கோபம் தான்.  நாம் இதைச் சாதாரணமான மானிடக் கண்களோடும், மானுட மனதோடும் பார்த்தால் தவறாகவே தெரியும். ஆனால் இவ்வுலகில் பரமபுருஷன் ஆன எம்பெருமான் ஒருவனே ஆண்மகன்.  மிகுதி உள்ள அனைவரும் ஸ்வரூபத்தால் எப்படித் தோன்றினாலும் அவர்களும் பெண்மக்களே.  இதைத் தான் மீராபாய் உணர்ந்து கூறினாள்.  கண்ணன் ஒருவனே ஆண்மகன்;  அவனுக்கு முன்னர் அனைவரும் பெண்களே என்று.  ஆகவே இதைப் பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் ஏற்படும் ஒரு விவாதமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.  இவ்வுலகிலுள்ள நம்மைப் போன்ற சாமானிய தம்பதிகளின் சண்டையைப் போல நினைக்க வேண்டாம்.  ஸ்ரீரங்கத்தைப் போலப் பல திவ்ய தேசங்களிலும் ப்ரணய கலஹம் என்னும் நிகழ்ச்ச்சி நடத்தப் படுகிறதெனினும் ஸ்ரீரங்கத்திலே தான் மிகவும் பிரசித்தமானது.

பெருமாளுக்கும், ரங்கநாயகிக்கும் ஏற்படும் இந்தப் ப்ரணய கலஹமானது கடைசியில் நம்மாழ்வாரால் தீர்த்து வைக்கப் படுவதாக ஐதீகம்.  பரமாத்மாவோடு ஜீவாத்மா சேர ஆசாரியனின் உதவி தேவை என்பதை இது சுட்டிக் காட்டுவதாய்ச் சொல்லுவார்கள்.  இனி ப்ரணய கலஹம் என்னும் மட்டையடி ஆரம்பம்.  பெருமாளுக்காக அரையர்களும் நாச்சியாருக்காக நாச்சியார் பண்டாரிகளும் வாதிடுவார்கள்.  அப்போது பூமாலைகள், பழங்கள், பூப்பந்துகள் போன்றவை நாச்சியாரால் பெருமாள் மீது தூக்கி எறியப் படும்.  பெருமாளோ மிகப் பயந்தவர் போலக் காட்டிக் கொண்டு பின்னே, பின்னே ஓட்டமாக ஓடுவார்.  அவர் பின்னே சென்றுவிட்டார் எனத் தெரிந்ததும் மீண்டும் கதவு திறக்கப் பெருமாள் உள்ளே நுழைய முயற்சிக்க மீண்டும் வாக்குவாதம் நடக்க, மட்டையடி நடக்கப் பெருமாள் மீண்டும் பின்னடைவார். இப்போது சம்வாதத்தைச் சற்றுப் பார்ப்போமா?

 அரங்கன் சொல்கிறார்:  "அடியே ரங்கநாயகி, நான் தான் போகும்போதே சொல்லிவிட்டுச் சென்றேன் அல்லவோ?  உற்சவங்கள் முடிந்து தானே நான் வர முடியும்?  நீயோ இந்தப் படியை விட்டுத் தாண்டமாட்டேன் என சபதம் போட்டிருக்கிறாய்!  உற்சவத்தில் எத்தனை கோலாஹலம், எத்தனை கொண்டாட்டம்  என்கிறாய்!  அடி அம்மா, பிராமணர்களெல்லாம் சூழ்ந்து கொண்டு ஸ்தோத்திரம் பண்ணுகின்றனர்.  புஷ்பங்களால் மக்கள் அனைவரும் வர்ஷிக்கின்றனர்.  அலங்காரப் பிரியனான எனக்கு உற்சாகத்துக்குக் கேட்க வேண்டுமா?  இப்படி எல்லாம் சந்தோஷத்தோடு உன்னைக் கண்டு சொல்ல வேண்டி ஓடோடியும் வந்தேனே!"

"நீயோ எப்போதும் என்னை எதிர்கொண்டு அழைப்பவள் இன்று வரவே இல்லை;  அதோடு விட்டதா!  கைலாகு கொடுத்து என்னை உள்ளே அழைத்துக் கொள்வாய்.  அருமையான சிம்மாசனத்தில் அமர்த்துவாய். என் திருவடியை விளக்குவாய்.  திருவொத்துவாடை சாற்றுவாய்,  திருவாலவட்டம் பரிமாறுவாய்; மங்கள ஆலத்தி எடுப்பாய்.  சுருளமுது திருத்தி சமர்ப்பிப்பாய்.  இத்தனை உபசாரங்களும் செய்வாயே, என் கண்ணே!  இன்றைக்கு என்ன திருக்காப்புச் சேர்த்துக் கொண்டாயோ?  என்னைக் கண்டதுமே உன் திருமுகமண்டலம் திரும்பியது திரும்பியபடி இருக்கிறதே,  உன் திருச்சேவடிமார்களாலே பந்துகள், பழங்களைக் கொண்டு என்னை அடிக்கிறாயே.  இப்படி எல்லாம் இன்று ஏன் என்னை அவமானம் செய்கிறாய் என் ரங்கநாயகியே!  இதற்கான காரணம் என்ன சொல்வாய்?"

இது நான் எழுதியவை ஆனால் புத்தகத்தில் பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம் எப்படி எனில்,


"நாம் உத்ஸ்வார்த்தமாகப் புறப்பட்டருளித் திருவீதிகளெல்லாம் வலம் வந்து தேவதைகள் புஷ்பம் வர்ஷிக்க, ப்ராம்மணர்களெல்லோரும் ஸ்தோத்ரம் பண்ண, இப்படி பெரிய மனோரதத்தோடே தங்களிடத்தில் வந்தால், தாங்கள் எப்போதும் எதிரே விடை கொண்டு, திருக்கை கொடுத்து உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போய் திவ்ய ஸிம்ஹாசனத்தில் ஏறியருளப் பண்ணி, திருவடி விளக்கி, திருவொத்துவாடை சாத்தி, திருவாலவட்டம் பரிமாரி, மங்காளலத்தி கண்டருளப்பண்ணி, சுருளமுது திருத்தி சமர்ப்பித்து--இப்படி அநேக உபசாரங்களெல்லாம் நடக்குமே. இன்றைக்கு நாமெழுந்தருளினவிடத்திலே திருக்காப்புச் சேர்த்துக் கொண்டு, திருமுக மண்டலத்தைத்திருப்பிக் கொண்டு, திருச்சேவடிமார்கள் கைகளாலே பந்துகளாலும் பழங்களாலும் விட்டெறிவித்து, இப்படி ஒருநாளும் பண்ணாத அவமானங்களையெல்லாம் இன்றைக்குப் பண்ண வந்த காரியம் ஏதென்று கேட்டுவரச் சொல்லிப் பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்

தொடரும்

Wednesday, April 10, 2013

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கநாயகியின் ஊடல்! அடுத்து மட்டையால் அடிதான்!


உறையூர் வந்துவிட்டார் அழகிய மணவாளன் என்னும் நம்பெருமாள்.  இது 108 திவ்ய தேசங்களில் இரண்டாமிடத்தைப் பெற்ற சிறப்பான க்ஷேத்திரம்.  பின்னே?  ஸ்ரீரங்கம் உற்சவரே இங்கும் உற்சவர் ஆயிற்றே.  இங்கு கமலவல்லி நாச்சியாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டி வந்திருக்கிறார்.  வந்தாச்சு;  வந்த வேலை முடிந்தது.  கமலவல்லியுடன் திருமணம் முடித்துக் கொண்டு சேர்த்தி சேவையும் முடிந்தது.  இனி திரும்பணுமே ஸ்ரீரங்கத்துக்கு. கமலவல்லியோ கண்ணும் கண்ணீருமாக நிற்கிறாள்.  அவளை சமாதானம் செய்த நம்பெருமாள் அவளுக்குப் பரிசாகத் தன் கணையாழியையே கொடுக்கிறார்.  ஆஹா, அதைக் கொடுக்கும் முன்னர் அது யாருடையது என்பது தெரியாதா அரங்கனாரே?  வம்பு வளர்க்கத் தானே கொடுக்கிறீர்கள்?  கொடுங்கள், கொடுங்கள்.  அதை வாங்கிக் கொண்டு கமலவல்லியும் அமைதி அடைகிறாள்.  பின்னர் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் கிளம்புகிறார்.  கிளம்பியவர் நேரே ரங்கநாயகியைப் பார்க்கப்போகவேண்டாமோ?

ஏதோ வேலை நெட்டி முறிக்கிறாப்போல் அறுவடை ஆகி வந்திருக்கும் நெல் அளவையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.  அதுக்கப்புறமாத் தான் தாயார் சந்நிதிக்கே போகிறார்.  அங்கே போனதும் இவ்வளவு நாழி வேலை செய்துவிட்டுக் களைத்துச் சோர்ந்து போன வந்த நம்பெருமாளுக்குத் திருமஞ்சனம் என்னும் அபிஷேஹம் நடைபெறுகிறது.  ரங்கநாயகி சந்தோஷமாய்ப் பார்க்கிறாள்.  அவள் கண்களிலே பட்டது அந்த விபரீதம்.

"எங்கே? கையைக் காட்டுங்கள்!"

"என்ன கையிலே ஒன்றுமில்லையே?"

"அதான் கேட்கிறேன்.  நான் உங்களுக்குக் கொடுத்த அந்த மோதிரம் எங்கே?"

"ம்ம்ம்ம்??? என்ன மோதிரம், எங்கே மோதிரம்?"

"சரிதான்!"

"ஓ அதுவா?  வரும்போது காவிரியைக் கடந்து நீரில் இறங்கி வந்தேனா?  ஆற்றில் விழுந்துவிட்டது போலிருக்கே!  இப்போ என்ன செய்வது?"

"ரங்கநாயகி, இரு, நீ இங்கேயே இரு.  நான் போய் ஆற்றில் நன்றாய்த் தேடிப் பார்த்துவிட்டு வருகிறேன்."

ரங்கநாயகிக்கு நம்பிக்கையே இல்லை.  என்றாலும் என்ன செய்யலாம்?  இந்த மனுஷன் தேடிவிட்டு வரட்டும். அதுக்கப்புறம் என்னனு விசாரிக்கலாம்.




கொள்ளிட ஆற்றங்கரைக்குத் தங்கக் குதிரையில் எழுந்தருளுவார் நம்பெருமாள்.  ஆற்றில் அங்கும் இங்கும் கணையாழியைத் தேடுவார்.  கீழே, மேலே, மணலில், ஆற்றங்கரையின் நட்டநடுத் தீவுகளிலே, மரங்களிலே, இண்டு இடுக்கு விடாமல் தேடுகிறாராம்.  பின்னர் சத்தம் போடாமல் திரும்புகிறார்.  சித்திரை வீதியில் வையாளி சேவை நடக்கும்.  வையாளி சேவைன்னா அது சேவை.  குதிரை நிஜமாகவே ஓடும். ஓடி ஓடித் தேடுகிறாராம்.  இங்கே இருந்தால் தானே கிடைக்க! எங்கே கொடுத்தோம்னு அவருக்கு நன்றாகவே தெரியும். இப்போ  வெறுங்கையோடு தான் திரும்பியாகணும்.  வேறே வழியே இல்லை.  ரங்கநாயகிக்கு ஏதோ விஷமம் என்று புரிந்து விட்டது.  கோபம் கொண்டாள்.  முகத்தைத் திருப்பிக் கொண்டதோடு கதவையும் அடைத்தாள்.  ஆயிற்று. ப்ரணய கலஹம் ஆரம்பமாயிற்று.  மேள, தாள அமர்க்களத்தோடு வருகிறாரா?  வரட்டும், வரட்டும்.  யார் உள்ளே விடப் போறாங்க?  கதவு படீரென்று சார்த்தப் பட்டது.

படம் உதவி: கூகிளார்

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கநாயகி பட்ட பாடு! மட்டையடித் திருவிழா!





ரங்க நாயகியின் சந்நிதி.  உள்ளே அவளுக்குள் ஒரே கவலை.  அரங்கனை இரண்டு நாட்களாய்க் காணோமே?  அவள்  படிதாண்டாப்பத்தினி தான். வில்வமரத்தடியில் குடி கொண்டிருக்கும் அந்த சந்நிதியைத் தாண்டி அவள் வரவே மாட்டாள்.  அதுக்காக அரங்கனைப் பத்தித் தெரியாமல் இருக்குமா?  அவள் மனம் அலை பாய்ந்தது.  பழைய நினைவுகள் அனைத்தும் குமுறிக் கொண்டு வந்தன.  ம்ம்ம்ம்ம்ம்

"எங்கேயோ ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள்னு ஒருத்தி வந்தாள்.  என்னவெல்லாமோ பாடல்களைப் பாடி அரங்கனை மயக்கிக் கடைசியில் திருமணமும் செய்து கொண்டாள்.  அப்புறமாத் துலுக்க நாச்சியாராம்.  யாரோ ஓர் சுல்தானுக்குப் பெண்ணாம்.  இளவரசியாம்.  அவளை இங்கே வரவைத்து அவளையும் தன்னோடு ஐக்கியப் படுத்திக் கொண்டதோடு அல்லாமல், அவங்க தேசத்து ராஜாக்கள் கொடுத்தாங்கனு தினம் தினம் லுங்கி கட்டல், சப்பாத்தி சாப்பிடல்னு ஆயிண்டிருக்கு.  இது போதாதா இந்த மனுஷனுக்கு! பெயரும் வைச்சாங்க பார்!  அழகிய மணவாளனாம்!  யாருக்கு?  எனக்குத் தான் மணவாளன்.  எவளோ ஒரு கிழவி கண்களுக்கு இவர் அழகிய மணவாளனாத் தெரிஞ்சிருக்கார்.  உடனே எல்லாருக்குமா அழகிய மணவாளர்?? "

"போறாததுக்கு இந்தப் பரதக் கண்டம் முழுசும் சுத்தினேன்னு பெருமை வேறே.  அங்கேருந்து இவர் திரும்பி வர வரைக்கும் என் பக்தன் வேதாந்த தேசிகன் புதைத்து வைத்திருந்த வில்வ மரத்தடியிலிருந்து நான் வெளியே தலையைக் காட்டி இருப்பேனா?  அரங்கனையே நினைத்துக்கொண்டு இப்போது எங்கே இருக்கிறாரோ, எப்போது இங்கே வருவாரோ அன்னிக்குத் தான் வெளியே தலையைக் காட்டணும், நாம் இருக்கும் இடத்தைக் காட்டித் தரணும் என அப்படி ஒரு ஒருமித்த சிந்தனையோடு அரங்கன் வந்தால் தான் வெளியே வரது;  நாம இருக்குமிடத்தைச் சொல்லுவது என்றிருந்தேன்.  இந்த மனிதனும் பலருடைய பிரயத்தனங்களின் பேரில் தான் ஒளிஞ்சிருந்த இடத்திலிருந்து ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.  அப்போவே எனக்குப் புரிஞ்சு போச்சு இவர் தான் அழகிய மணவாளர்;  என் அருமை மணவாளர்னு.  ஆனால் அறுபது வருடத்துக்கும் மேலே ஆனபடியாலே இந்த ஜனங்களுக்குப் புரியலை.  இவரோட இடத்திலே இருக்கிறவர் புது ஆள்னு சொல்லியும் தெரியலை.  அதுக்கப்புறமா இவரோட பரிமள கஸ்தூரி வாசனையைத் தெரிஞ்சவங்க இருக்காங்களானு கேட்டு, கடைசியிலே அரங்கனின் அபிஷேஹத் துணிகளைத் துவைத்து வந்த பரம்பரையில் இப்போது உயிரோடு இருக்கும் வயதான  ஒரே ஒரு “ஈரம் கொல்லி”யைக் கண்டு பிடிச்சு, அவனும் வந்து இவருக்கும் திருமஞ்சனம் செய்யச் சொல்லி, புதுசா ஊர்க்காரங்க பிரதிஷ்டை பண்ணி வைச்சாங்களே அரங்கன்னு அவருக்கும் திருமஞ்சனம் செய்யச் சொல்லி அந்த ஆடையைத் தன்னிடம் கொடுத்தால் கண்டுபிடித்துச் சொல்வதாய்ச் சொன்னான்.  அப்படியே செய்து இரண்டு ஈர ஆடைகளையும் அந்த ஈரம் கொல்லியிடம் கொடுத்தாங்க.

அந்த ஈரம் கொல்லியும் இரண்டு ஆடையையும் வாங்கிக் கொண்டு   முதலில் புது ஆளோட ஆடையின் அபிஷேஹ தீர்த்தம்.  பிழிந்து குடித்துப் பார்த்து முகத்தைச் சுளிச்சான்.  அடுத்துத் தான் நம்ம ஆளோட ஆடையின் அபிஷேஹ தீர்த்தம்.  அதை எடுத்துப்  பிழிஞ்சு குடிச்சான்.  குதிக்க ஆரம்பிச்சுட்டான்.  இவர் தான் நம் பெருமாள்;  நம்பெருமாள்னு சொல்லிக் கூத்தாடி ஆடிப் பாடினான்.  அன்னைக்கு வைச்ச பெயர் இவருக்கு நம்பெருமாள்னு. அந்தப் பெயர் நிலைச்சது.  சரி இனியாவது நம்மளோடயே இருப்பார்னு நினைச்சேன்.  ஆனால் ஒவ்வொரு உற்சவத்திலும் இந்த மனுஷன் ஆண்டாளை வெளியே சந்நிதி வைச்சுக் குடியேற்றி அங்கே மாலை மாற்றிக்கொண்டு வந்துடறார்.  சரி போனாப் போறதுனு அனுமதிச்சா இப்போ இரண்டு நாட்களா ஆளையே காணோமே!  எங்கேனு விசாரிச்சதிலே உறையூருக்குப் போயிருக்காராம்.  வரட்டும்;  வரட்டும் ஒரு கை பார்த்துடறேன்.  யாரோ கமலவல்லியாம்;  ராஜாவின் பெண்ணாம்.  அவள் என்னோட அம்சமாமே?  இருக்கட்டுமே!  அதுக்கு அவளைக் கல்யாணம் செய்துக்கறதா?  ம்ஹூம், இதை நான் அநுமதிக்க மாட்டேன்.  அந்த மநுஷன் வரட்டும்.  உள்ளேயே விடப்போறதில்லை.

திருட்டுத்தனமாக் கல்யாணம் செய்துட்டு அதை என்னிடமிருந்து மறைக்கப் பார்ப்பார்.  எப்படியாவது கண்டு பிடிச்சுடணும்.


படம் உதவி கூகிளார்.

Tuesday, April 09, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம், மட்டையடித் திருவிழா!




ஸ்ரீரங்கத்து அரங்கன் நம்பெருமாளாயிற்றே.  ஆனால் இவன் அழகிய மணவாளன் என்றே அழைக்கப் பட்டிருக்கிறான்.  நம்பெருமாள் என அழைக்கப்படும் காரணத்தை வரும் நாட்களில் தெரிந்து கொள்வோம்.  இப்போ இந்த அழகிய மணவாளன் செய்த ஒரு காரியத்தைச் சொல்லியே ஆகணும்.  இவனோ ஊர்சுத்தி.  ஆங்காங்கே இருக்கும் பெண்கள், ஆண்கள் அனைவரும் தன் பரிமள கஸ்தூரி வாசனையினாலேயே வசீகரிப்பவன்.  இப்படி இருந்த அரங்கன் ஒரு நாள் உலாப் போகையில் இளவரசி ஒருத்தி அவனைக் கண்டாள்.  கண்டது முதல் அவன் நினைவாகவே இருந்தாள்.  மணந்தால் அரங்கன்;  இல்லையேல் திருமணமே வேண்டாம் என்றிருந்தாள்.  அரங்கனுக்குத் தான் வியவஸ்தையே இல்லையே!  அவன் பாட்டுக்குத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தான்.  என்ன இது?  ஏற்கெனவே ரங்கநாயகி நாச்சியார் இருக்கையில் இன்னொரு திருமணமா?  ஆஹா!  ஆம், ஆம், இன்னொரு திருமணம் தான்,  அதுவும் ரங்கநாயகிக்குத் தெரியாமல்.  இது என்ன புதுக்கதை?

சோழர்களுக்கு உறையூர் தலைநகரமாக இருந்த காலம் அது.  நந்த சோழன் என்னும் மன்னன் நாட்டை ஆண்டு வந்தான்.  அவனுக்கு மக்கட்பேறே இல்லாமல் இருக்க ஸ்ரீரங்கத்து அரங்கனை வேண்டினான்.  அரங்கனோ இப்பிறவியில் அவனுக்கு மக்கட்பேறுக்கு வாய்ப்பில்லை;  எனினும் நம் பக்தன் அவன், ஆகையால் அவனுக்கு அருள் செய்ய வேண்டும் என எண்ணினான்.  திருமகளைக் கடைக்கண்ணால் நோக்க அவளும் புரிந்து கொண்டாள்.  தன் அம்சத்தை அவனுக்கு மகவாய்த் தரத் திருவுளம் கொண்டாள்.  ஓர் நாள் உத்தியானவனத்தில் சுற்றி வந்த மன்னன் கண்களில் தாமரை ஓடையில் ஒரு பெரிய அதிசயத் தாமரைப் பூவும், அதில் இருந்த ஒரு குழந்தையும் கண்களில் பட்டது.  மன்னனுக்கு ஆச்சரியம்.  குழந்தையைத் தன்னிரு கைகளிலும் தூக்கி எடுத்து மார்போடு சேர்த்து அணைத்தான்.  குழந்தை, “களுக்”எனச் சிரித்தது.  கமலப் பூவில் கண்டெடுத்த குழந்தைக்குக் கமலவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.  மன்னன் மனம் மகிழ்ந்தது.

விரைவில் மணப்பருவம் எய்திய கமலவல்லி தான் அரங்கனின் உலாவைக் கண்டாள்;  அவன் பால் அவள் மனம் சென்றது இயற்கை தானே!  திருமகளின் அம்சமான அவள் சேர வேண்டிய இடத்திற்கு அவள் மனம் சென்றது அதிசயம் அல்லவே.  ஆனால் இது எதுவும் அறியா மன்னன் மகளின் வருத்தம் கண்டு தானும் வருந்திக் காரணம் கேட்டறிந்தான்.  இது நடக்கக் கூடியதா என எண்ணி வியந்தான்.  கவலையில் ஆழ்ந்த மன்னன் கனவில் அரங்கன் தோன்றி, “உன் மகள் வேறு யாருமல்ல.  திருமகளே உனக்கு மகளாய் அவதரித்துள்ளாள்.  அவளை மணப்பெண்ணாக அலங்கரித்து ஸ்ரீரங்கம் அழைத்து வருவாய்.  நான் அவளை ஏற்றுக்கொள்வேன்.” என்றான்.  அரங்கன் சொல்படியே மன்னன் தன் மகளை அழகிய மணமகளாய் அலங்கரித்து திருவரங்கம் அழைத்து வர, அரங்கன் சந்நிதிக்கருகே மணமகள் மறைந்தாள்.  இதைத் தன் கண்களால் கண்ட மன்னன் வியந்தான்.  திருமகளையே தன் மகளாகத்  தான் வளர்த்து வந்ததையும், அரங்கனே தனக்கு மருமகனாக வாய்த்த பேறையும் எண்ணி மனம் சிலிர்த்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் பற்பல திருப்பணிகள் செய்தான்.  என்றாலும் அவன் மனம் அமைதியுறவில்லை.

பாசத்துடன் தான் வளர்த்த தன் மகளுக்கென ஒரு அழகிய கோயிலை உறையூரில் எடுப்பித்தான்.  பெருமாளை வேண்டிக்கொள்ள அவரும் அழகிய மணவாளராக அங்கே எழுந்தருளியதாகக் கோயில் வரலாறு.  இதன் பின்னர் உறையூர் மண்மாரியால் மூடிய பின்னர் மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப் பட்டபோது எழுப்பிய கோயிலே இப்போது நாச்சியார் கோயில் என்னும் பெயரில் உறையூரில் வழங்குவதாய்ச் சொல்கின்றனர்.  அரங்கன் அங்கே அழகிய மணவாளனாக எழுந்தருளி இருக்கின்றான்.  இந்த நாச்சியாரின் திருநக்ஷத்திரமான ஆயில்யத்தன்று பங்குனி மாதம் இவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி ஸ்ரீரங்கத்திலிருந்து நம்பெருமாள் என்னும் அழகிய மணவாளர் ஒவ்வொரு வருடமும் உறையூருக்குச் செல்கிறார்.  பங்குனி மாதம் ஆயில்ய நக்ஷத்திரத்தன்று அங்கே கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை நடைபெறும்.  இதை முடித்துக் கொண்டு அரங்கன் ஸ்ரீரங்கம் திரும்புகிறார்.  இதெல்லாம் ரங்கநாயகிக்குத் தெரியாது.  தெரிஞ்சதுனா அவ்வளவு தான். இனிமேத் தான் இருக்கு அவருக்கு!

படம் உதவி: கூகிளார்.

Tuesday, March 26, 2013

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம், வைகுண்ட ஏகாதசி முடிவு!


இராப்பத்தின் முடிவு நாளன்று நம்மாழ்வார் மோட்சம் தான்.  பத்து நாட்களாக பரமபதமாகிய வைகுந்த வாசலுக்கு ஒவ்வொரு படியாக வந்து கொண்டிருந்த நம்மாழ்வாருக்கு அன்று இறைவன் பரமபதத்தை அருளுகின்றான்.

“கெடுமிடராய வெல்லாம் கேசவாவென்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும்குறுககில்லார்” 

நம்மாழ்வார் ஆழ்ந்து அநுபவித்துத் தம் திருவாய்மொழியில், “கேசவன்” என்னும் பெயரைச் சொன்னாலே போதும்;  துன்பங்கள் அனைத்தும் கெட்டு ஓடிவிடும்;  நமக்கு இந்த ஞானம் பிறக்கும் முன்னர் நாம் செய்த பாவங்களும், பிறந்த பின்னர் மறந்து போய்ச் செய்யும் அனைத்துப் பாவங்களும்,  அனைத்தும் அழிந்து போகும்.  நாள்தோறும் எவருடைய உயிரையேனும் எடுக்க வேண்டி கொடிய செயலைச் செய்து கொண்டிருக்கும் யமனும் நெருங்க மாட்டான்.” என்கிறார்.  இதைத் தான் ஆண்டாள்,”தீயினில் தூசாகும்!” என்றாள்.

தினம் போலவே இன்றும் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளுவார்.   இராஜ நடை, சிம்ம நடை போன்ற நடைகளில் நடந்து ஆஸ்தானம் எனப்படும் மணிமண்டபத்துக்கு வந்து சேருவார்.  சாற்றுமுறை துவங்குகிறது. 

“தாள் தாமரைத் தடமணிவயல்திருமோகூர்
நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும்
தோளும்நான்குடைச் சுரிகுழல்கமலக்கண்கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றின்றிலம் கதியே”  

என்னும் பாசுரத்துடன் தொடங்கும் சாற்றுமுறை எட்டாம் திருவாய்மொழியுடன் நிறுத்தப்படுகிறது.  நம்மாழ்வாருக்கு மோட்சத்தை அளிக்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார் என்பதை உறுதி செய்யும் வகையில் பரமபத வாசல்கள் திறக்கப்படுகின்றன.  பட்டர்கள் மிக மிக அருமையாக ஒரு குழந்தையைக் கையாளுவதைப் போல திருக்கைத்தல சேவையின் மூலம் நம்மாழ்வாரை எம்பெருமான் திருவடியில் சரணாகதி செய்விக்கின்றனர்.  அப்போது அவர்கள்


சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின
பூரணபொற்குடம் பூரித்தது 
உயர் விண்ணில் கீதங்கள் பாடினர் 
கின்னரர்கெருடர்கள் கணங்கள்
வலம்புரி கலந்தெங்கிமிசைத்தனர்

வைகுந்தம் புகுதலும் வாசலில்வானவர்
வைகுந்தன்தமர்எமர் எமதிடம்புகுதென்று
வைகுந்த்தமரரும் முனிவரும்வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்னவர் விதியே

விதிவகைபுகுந்தனரென்று நல்வேதியர்
பதியினில்பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும்நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும்
மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே.

என்ற பாசுரங்களைப் பாடுகின்றனர்.  பின்னர் பத்தாம் திருவாய்மொழி துவங்குகிறது.

முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா!
தனியேனாரியிரே! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேலென்னையே!”


என்றெல்லாம் பாடி நம்மாழ்வார் எம்பெருமானை என்னை எங்கேயும் அனுப்பிவிடாதே!  உன் பக்கமிருந்து உன் திருவடி சேவை தவிர வேறெதுவும் வேண்டாம் என வேண்டுகிறார்.   நம்மாழ்வார் எம்பெருமானின் திருவடி தொழுதல் என்னும் இந்நிகழ்வுக்காக பட்டர்கள் நம்மாழ்வாரைத் தங்கள் கரங்களில் தாங்கிய வண்ணம் எம்பெருமானை மூன்றுமுறை சுற்றி வந்து நம்மாழ்வாரைப் பெருமாளின் திருவடிகளில் தொழ வைக்கின்றனர்.  நம்மாழ்வாரை நம்பெருமாளின் திருவடிகளில் சேர்ப்பித்ததும், துளசியால் அபிஷேஹம் செய்து அவரை மூடுகின்றனர்.  பின்னர் சாம்பிராணிப் புகை போடவும் சிறிது நேரம் அந்தப் புகையில் நம்மாழ்வாரும், நம்பெருமாளும் தனித்துப் பேசிப்பாங்க போல!



எம்பெருமானிடம் சரணாகதி செய்து வைணவப் பரிபாஷையில் திருநாட்டுக்கு எழுந்தருளிய நம்மாழ்வாரை, பட்டர்கள் இவ்வுலகத்து மாந்தர்கள் உய்ய வேண்டி திரும்பத் தரும்படி வேண்டுகின்றனர்.  நம்பெருமாளும் அதை ஏற்று,  “தாம், தோம், தீம், தந்தோம், தந்தோம், தந்தோம்!” எனத் திரும்பத் தருகின்றார்.  நம்மாழ்வாரின் மேலுள்ள துளசிதளங்கள் அகற்றப்பட்டு நம்மாழ்வார் திரும்ப  ஆஸ்தானம் எழுந்தருளுகிறார்.  பின்னர் அனைவருக்கும் தீபாராதனை காட்டிய பின்னர் நம்மாழ்வார் மோட்சம் நிறைவு பெறுகிறது.

இந்த மோட்சத்தன்று நேரில் பார்க்கும் பக்தர்களில் கண்ணீர் விடாதவர்கள் இருக்க மாட்டார்கள்.