எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, April 29, 2008

கூடல் குமரனுக்காக ஒரு பதிவு!


அடிகள் காலம்:


மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலவேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் தாங்கள் கருதிய கருத்துக்களை நிலைநாட்டுவதற்கு, பலவேறு ஆதாரங்களைக் காட்டுகின்றனர். எல்லோருடைய ஆராய்ச்சியும் அடிகளார் கடைச் சங்க காலத்திற்குப்பின் தொடங்கி 11-ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலங்களில் ஏதேனும் ஒருகாலம் மணிவாசகர் வாழ்ந்த காலம் என முடிவு செய்கின்றது. இக்கால ஆராய்ச்சிகளைத் தொகுத்து ஆராய்ந்து மணிவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என முடிவு செய்து தருமை ஆதீனத் திருவாசக நூல் வெளியீட்டில் மகாவித்துவான், திரு. ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர் களுடைய கால ஆராய்ச்சித் தொகுப்புரையின் ஒரு பகுதியைச் சுருக்கித் தருகின்றோம்.

``திருமலைக் கொழுந்துப் பிள்ளை அவர்கள் முதல் நூற்றாண் டாகவும், பொன்னம்பலப் பிள்ளை அவர்கள் இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகவும், மறைமலையடிகளார் அவர்கள் மூன்றாம் நூற்றாண்டாகவும், வில்ஸன்வுட் என்பவர் ஏழாம் நூற்றாண்டு என்றும், G.U.. போப் ஏழு, எட்டு அல்லது 9 - ஆம் நூற்றாண்டு என் றும், சூலின் வின்ஸன் 9 அல்லது 10 - நூற்றாண்டு என்றும், Mr. கௌடி 8 லிருந்து 10 - ஆம் நூற்றாண்டுக்குள் என்றும், Dr. ரோஸ்ட்டு 13 அல்லது 14 - ஆம் நூற்றாண்டு என்றும், நெல்ஸன் 9 - ஆம் நூற்றாண்டு என்றும், K.G. சேஷய்யர் 3 அல்லது 4 - ஆம் நூற்றாண்டு என்றும், சீனிவாசப் பிள்ளை 9 - ஆம் நூற்றாண்டு என்றும், C.K.சுப்பிரமணிய முதலியார் மூவர்க்கும் முந்தியவர் என்றும் கூறுகின்றனர்``.

மூவர்க்கு முந்தியவர் மணிவாசகர் என்ற கருத்து பொருத்த முடையதாகத் தோன்றுகிறது. மணிவாசகர் காலத்தில் நம் நாட்டில் தலையெடுத்திருந்த புறச்சமயம், பௌத்தம் ஒன்றே எனத் தெரிகிறது. மூவர் காலத்தில் பௌத்தம் ஓரளவிலும் சமணம் சிறப்புற்றும் இருந்தன. மணிவாசகர் வாக்கில் சமண் சமயக் குறிப்பேதும் காணப் பெறவில்லை. திருவாசகத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப் பெறவில்லை. இன்ன பல காரணங்களால் மணிவாசகர் மூவர்க்கும் முந்தியவர் என்று கொள்ளலாம்.

தேவாரம்

மற்றபடி நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டவைகள் பற்றிய மேல் அதிகத் தகவல்கள் தேடுகின்றேன். நன்றி.

சிதம்பர ரகசியம் - கோவிந்தராஜப் பெருமாள்!


அடுத்ததாய் நாம் காணப் போவது, சிதம்பரம் கோயிலுக்குள்ளேயே அமைந்திருக்கும், கோவிந்தராஜப் பெருமாள் பற்றிய சில தகவல்கள். ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தை மனதுக்குள்ளேயே கண்டு களித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, பின்னர் தான் தினமும் நேரில் கண்டு ஆனந்திக்க வேண்டியே இங்கே கோயில் கொண்டாரோ எனச் சொல்லும்படிக்கே, ஈசனின் தாண்டவக் கோலத்தைப் பார்த்தபடிக்கு கோவிந்தராஜப் பெருமாளின் சன்னதி அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒரு கொடிமரம், கருடனுக்கு ஒரு சன்னதி, பலிபீடம் முதலியன உள்ளன. சிறிய ஒரு பிரகாரமும் உள்ளது. நிருத்த சபைக்கு அடுத்து, மகாலட்சுமிக்கு எனத் தனியாக ஒரு சன்னதி உள்ளது. இந்தக் கோயிலை ஸ்ரீவைஷ்ணவர்கள், புண்டரீகபுரம் என அழைப்பதால், அன்னையின் திருநாமம் இங்கே புண்டரீகவல்லித் தாயார் ஆகும். விஷ்ணுவின் சன்னதியையும், இந்த விஷ்ணுவின் கோயிலையும் திருச்சித்திரகூடம் என வைஷ்ணவர்கள் அழைக்கின்றனர். முதன் முதலில் இந்தக் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் 8-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப் பட்டிருக்கலாம் எனச் சரித்திரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. காஞ்சியின் வைகுந்தபெருமாள் கோயிலைக் கட்டிய இவனே இந்தக் கோயிலையும் எழுப்பியதாயும் ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பர், சுந்தரர், சம்மந்தர் காலத்தில் இங்கே விஷ்ணுவுக்கெனக் கோயில் இல்லை எனவும் சொல்லும் இந்தத் தகவல், மாணிக்கவாசகர் காலத்திலேயே இந்தக் கோயில் எழுப்பப் பட்டிருக்கவேண்டுமென்றும் சொல்கின்றது.

"பைம்பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த
செம்பொன்மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச்சித்திர கூடஞ்சென்று சேர்மின்களே!" என திருமங்கை ஆழ்வாரும்,

"செந்தளிர் வாய் மலர் நகைசேர் செழுந்தண்சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள
அந்தணர்களோடு மூவாயிரவரேத்த
வணிமணியாசனத்தமர்ந்த வம்மான்றானே!" எனக் குலசேகர ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்வித்திருக்கின்றார்கள் இந்தத் தில்லை கோவிந்த ராஜருக்கு.

ஆனால் தீவிர சைவர்கள் ஆன சோழமன்னர்கள் காலத்தில், 12-ம் நூற்றாண்டில் ஆண்ட 2-ம் குலோத்துங்கன் காலத்தில் விஷ்ணு கோயிலில் இருந்து விஷ்ணு விக்ரஹம் எடுக்கப் பட்டுக் கடலில் வீசி எறியப் பட்டதாயும் தெரியவருகின்றது. பின்னர் அந்த விக்ரஹம், வைஷ்ணவ பக்தர்களால் எடுக்கப் பட்டு, திருமலையின் கீழே திருப்பதிக்குக் கொண்டு வரப் பட்டு, அங்கே ராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப் பட்டுக் கோயிலும் கட்டப் பட்டதாய்ச் சரித்திரம் கூறுகின்றது. அதன் பின்னர் வந்த கிருஷ்ணதேவராயரின் குலத்தைச் சேர்ந்த அச்சுதராயன் என்பவன், மகாவிஷ்ணுவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டியதோடல்லாமல், விஷ்ணுவின் விக்ரஹத்தையும் அங்கே பிரதிஷ்டை செய்ய ஆவன செய்தான். இது தவிரவும் வைகானச முறைப்படி கோயிலில் தினசரி வழிபாடுகள் நடத்தவும், அதற்கான நிதி உதவியும் அச்சுதராயனால் செய்யப் பட்டது. பின்னர் வந்த வேலூரை ஆண்ட ரங்கராயன் என்பவனால் கோயில் மேலும் புதுப்பிக்கப் பட்டு, புண்டரீகவல்லித் தாயாருக்கு விமானமும் எழுப்பப்பட்டு, கோவிந்தராஜரின் சன்னதிக்கு முன்னால் இருக்கும் மண்டபமும் புதுப்பிக்கப் பட்டது. 5 கிராமங்களுக்கு வரிவிலக்கு அளித்து, அவற்றின் வருமானத்தை விஷ்ணு கோயிலின் வழிபாடுகளுக்கும் கொடுத்தான்.

தற்காலத்தில் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கும், விஷ்ணு கோயில் அறங்காவலர்களுக்கும் உள்ள பிரச்னை செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் சுமுகமாய்த் தீர்த்து வைக்கப் பட்டு ராஜா சர் செட்டியார் அவர்கள் விஷ்ணு கோயிலின் திருப்பணிகளையும் செய்து கொடுத்தபின்னர், 1934-க்குப் பின்னர் விஷ்ணு கோயிலின் அறங்காவலர்களுக்கும், நடராஜர் கோயிலின் தீட்சிதர்களுக்கு சுமுகமான உறவே இருந்து வருகின்றது. விஷ்ணு கோயிலின் வழிபாட்டு விஷயங்களில் தீட்சிதர்கள் தலை இடுவதில்லை. வைகானஸ முறைப்படியே வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

Monday, April 21, 2008

சிதம்பர ரகசியம் - சம காலத் திருப்பணிகள்!



விஜயநகர சாம்ராஜ்யத்தில் கிருஷ்ணதேவராயருக்குப் பின்னர் வந்த அச்சுத தேவ ராயர், ஸ்ரீரங்க ராயர், வெங்கட ராயர் போன்றவர்களுக்குப் பின்னர், நாயக்க வம்சத்தைச் சேர்ந்த திருமலை ராயன், வீரப்ப நாயகன் போன்றவர்களும் பெருமளவில் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள். சேர நாட்டை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் நாயனாரும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர். ஆனால் இவர் காலத்தில் சற்றே குழப்பம் ஏற்படுகின்றது. சேர நாட்டின் கொல்லம் ஆண்டை ஒட்டி இவர் 9-ம் நூற்றாண்டு என்று சொல்லப் படுகின்றது. ஆனால் இவரும், சுந்தரரும் சமகாலத்தவர். இவர் காலத்தைப் பற்றி www.thevaaram.org என்ன சொல்கின்றது என்று பார்த்தால்:


//சுந்தரரும் சேரமான் பெருமாளும் சமகாலத்தவர். சேரமான் பெருமாள், சுந்தரர் இருவரும் பாண்டிய நாடடைந்தபோது பாண்டிய மன்னனும், சோழனும் வரவேற்றனர்.

கொல்லம் ஆண்டின் தொடக்கத்தோடு, சேரமான் பெரு மாளின் ஆட்சிக் காலத்தை இணைத்து கி.பி. 825-க்கு முன்னும் பின்னும் எனக் கூறுதல் பொருந்தாதெனப் பலரும் மறுத்துள்ளனர். சுந்தரரை வரவேற்ற பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் (கி.பி. 670-710).// ஆகவே இவர் காலம் 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியும், 8-ம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்கலாம். இவர் எழுதிய "திருக்கைலாய ஞான உலா" திருக்கைலையிலேயே ஈசன் முன்னால் அரங்கேற்றப் பட்டுப் பின்னர் மாசாத்துவான் என்பவரால் திருப்பிடவூரில் அரங்கேற்றப் பட்டது என்று சொல்வதுண்டு. பாடல் பக்கம் திறக்க முடியவில்லை. :( பின்னர் கேரளத்தின் கொச்சியில் ஆண்டு வந்த மகாராஜா ராமவர்மனாலும் கட்டளை மேற்கொள்ளப் பட்டு "கொண்டமநாயகன் கட்டளை" என்ற பெயரால் நிறைவேற்றப் பட்டது எனவும் அறிகின்றோம்.

இப்போது பதினெட்டாம் நூற்றாண்டின் காலங்களில் செய்யப் பட்ட திருப்பணிகள்:
காஞ்சியைச் சேர்ந்த பச்சையப்ப முதலியாரால், கோயிலின் திருவிழாக்களில் முக்கியமான பிரம்மோற்சவம் முறைப்படுத்தப் பட்டதோடு அல்லாமல், திருவாதிரைத் திருநாளைப் போன்ற முக்கியத்துவம், ஆனித் திருமஞ்சனத்துக்கும் அளிக்கப் பட்டுப் பெரிய அளவில் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டது. நடராஜரின் ரதம் இருக்கும் பீடம் உள்பட, ரதங்களையும் மராமத்து செய்து, கிழக்குக் கோபுரத்தின் திருப்பணியையும் ஏற்றுச் செய்ய ஆரம்பித்தார் பச்சையப்ப முதலியார். அது பூர்த்தி அடைவதற்குள் இறந்து போகவே, அவரின் மனைவியும், சகோதரியும் சேர்ந்து அவர் ஆவலைப் பூர்த்தி செய்தனர். இவரின் தூண்டுதலின் பேரில் மணலியில் வாழ்ந்து வந்த சின்னையா முதலியாரும் சிதம்பரம் கோயிலுக்கு நந்தவனங்களைச் செப்பனிடுதல், மற்றும் கோயிலின் பல திருப்பணிகள், எல்லாவற்றுக்கும் மேல் சித்சபையின் படிக்கட்டுகளை வெள்ளியால் அமைத்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்தார்.

நாட்டுக் கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்களாலும் சிதம்பரம் கோயிலின் பல திருப்பணிகள் செய்யப் பட்டிருக்கின்றன. செட்டி நாட்டு ராஜாவான சர் அண்ணாமலைச் செட்டியார், அவரின் சகோதரர் திவான் ராமசாமிச் செட்டியார் போன்றவர்களும், நாலு கோபுரங்களின் திருப்பணிகள், கனகசபையின் கூரையை மறு செப்பனிடுதல், சுற்றுச் சுவர்களைச் செப்பனிடுதல், பிரகாரங்களில் கல்லால் ஆன பாதை அமைத்தல், சிவகங்கைக் குளத்துப் படிக்கட்டுகளைக் கல்லால் செப்பனிடுதல், திரு வீதி உலாவுக்கான வாகனங்களைச் செய்து அளித்தல், விளக்குகள், பாத்திரங்கள் போன்ற முக்கியமான தேவைகளை அளித்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்து மிகப் பெரிய அளவில் கும்பாபிஷேகமும் செய்து வைத்ததாயும் தெரிய வருகின்றது. 1891-ல் இவை நடந்ததற்குப் பின்னர் கிட்டத் தட்ட 64 வருடங்கள் சென்ற பின்னரே 1955-ல் திரு ரத்னசபாபதிப் பிள்ளையும், திரு ரத்னசாமிச் செட்டியாரின் முயற்சியாலும் கும்பாபிஷேகம் செய்யப் பட்டதாயும் தெரிய வருகின்றது.

Friday, April 11, 2008

சிதம்பர ரகசியம் - மேலும் தகவல்கள் கொடுக்கின்றார் வெங்கட்ராம் திவாகர்!

சிம்மவர்மன், மகேந்திர பல்லவனின் தாத்தா அதாவது, சிம்மவிஷ்ணுவின் தந்தை. சிம்மவர்மனுக்கு தோல்நோய் கண்டவர். இந்நோய் தீர தில்லையில் உள்ள சிவகங்கை குளத்தில் மூழ்கி பெரும் பலன் பெற்றதாக பழைய தகவல்கள் உள்ளன. இவர் ஆண்ட காலம் ஏறத்தாழ கி.பி.550 ஆகும்.

சைவத் திருமரபில் புகழ்பெற்ற ஐய்யடிகள் காடவர்கோன் சிம்மவர்மன் காலத்தவர். இவர்தான் சிம்மவர்மனை சிதம்பரத்திற்கு இழுத்ததாக சரித்திர ஆசிரியர் (என்.சுப்பிரமணியன்-Social and Cultural History of Tamilnadu) எழுதியுள்ளார். ஐய்யடிகள் காடவர்கோனும் ஒரு பல்லவ மன்னர்தாம் என்றாலும் இவர் சிம்மவர்மனுக்கு கீழாகவோ, அல்லது உறவாகவோ இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இவர் எழுதிய 24 பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. க்ஷேத்திர திருவெண்பா எனும் பெயர் கொண்ட இப்பாடல்கள்தான் தமிழின் முதல் கோயில் பயண நூல். 24 கோயிலகளில் குடிகொண்ட சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்களை இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் என எழுதியுள்ளார்.
11 ஆவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் பாடல்களைப் படித்தாலே தமிழும் தேனும் ஏன் ஒரே வகையில் சேர்க்கப்பட்டது என்பது புரியும். சுந்தரப் பெருமானும், நம்பியாண்டார் நம்பியும், மற்றும் சேக்கிழார் பெருமானும் இப்பெருமானைப் பற்றி எழுதியுள்ளார்கள்.

அடுத்து கோப்பெருஞ்சிங்கன் (பதிமூன்றாம் நூற்றாண்டு): பிற்காலப் பல்லவ அரசன். மீண்டும் பல்லவ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க ஆசைகொண்டு தோற்றுப் போனவன்) இவன் முதலில் சேந்தநல்லூரை தலை இடமாகக் கொண்டு ஆண்டுவந்த சிற்றரசன்தான். ஆனால் காலம் செல்ல செல்ல இவன் சோழப் பேரரசனாக இருந்த மூன்றாம் குலோத்துங்கனையும் மீறி பலம் பெற்றவன். ஏறத்தாழ ஒரு சக்கரவர்த்தி போல ஆட்சி செய்தவன். தில்லை அம்பலத்து கீழவாசல் கோபுரம் இவனால் கட்டப்பட்டது என்பார்கள் சரித்திர ஆசிரியர்கள். இந்த அரசனைப் பற்றிக் காவியமே எழுதப்பட்டது.(காத்யகர்ணாம்ருதம்-சமுஸ்கிருத நூல்)

சிதம்பரம் கோயிலைப் பற்றி ஆய்வாளர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், (ஏறத்தாழ 2000 பக்கங்கள் கொண்டது) மற்றும் குடவாயில் பாலசுப்ரமணியம் ஆய்வுப் புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.

திவாகர்

திரு திவாகர் கொடுத்த மேல் அதிகத் தகவல்களை அவர் அனுமதியுடன் போட்டுள்ளேன். இன்னும் தகவல்கள் யாரானும் கொடுத்தாலும் நல்லது.

24 பாடல்கள் ஆன சேத்திரத் திருவெண்பா குறிப்பிடும் சிவதலங்கள். தில்லைச் சிற்றம்பலம், குடந்தைக் கீழ்க்கோட்டம், திருவையாறு, திருவாரூர், திருத்துருத்தி, திருக்கோடிகா, திருஇடைவாய் திருநெடுங்களம், திருத்தண்டலைநீணெறி, திருஆனைக்கா, திருமயிலை, திருஉஞ்சேனைமாகாளம், திருவளைகுளம், திருச்சாய்க்காடு, திருப்பாச்சிலாச்சிராமம், திருச்சிராப்பள்ளி திருமழபாடி, திருஆப்பாடி, திருக்கச்சியேகம்பம், திருக்கடவூர், திருப்பனந்தாள், திருவொற்றியூர், திருமயானம் (கச்சி, கடவூர், நாலூர்).

சிதம்பர ரகசியம் - சரித்திரக் குறிப்புகள் தொடர்ச்சி!




உமாபதி சிவாச்சாரியாரின் கோயில் புராணத்தின் படி சிம்மவர்மன் காஞ்சிபுரத்தை ஆண்டுவந்ததாயும் பல்லவர்களின் முன்னோர்கள் எனவும் சொல்கின்றனர். கோயில் புராணத்துக்கு இவ்வளவு நாள் காத்திருந்தேன், கிடைக்கக் கொஞ்சம் தாமதம் ஆகின்றது. இந்தச் சிதம்பரம் கோயிலின் கட்டுமானங்கள் எப்போது ஆரம்பித்தது எனச் சொல்ல முடியாதபடிக்குக் காலத்தால் பழமை வாய்ந்ததாகவே சொல்லப் படுகின்றது. பதஞ்சலி முனிவர் எவ்வளவு பழமையானவரோ அவ்வளவு பழமை வாய்ந்ததாய்க் கூறப்படும் இந்தக் கோயிலின் கட்டமைப்பை வைத்துச் சரித்திர ஆய்வாளர்கள் இது பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப் பட்டிருக்கலாம் என்றும், சிவகாமி அம்மையின் கோயில் பதினான்காம் நூற்றாண்டுக்குச் சமீபத்தில் கட்டப் பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றனர். நூற்றுக் கால் மண்டபம் சோழத் தளபதியான நரலோகவீரனால் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப் பட்டதாயும் சொல்கின்றனர். இது தவிர, சோழ மன்னன் முதலாம் பராந்தகன் இந்தக் கோயிலின் கூரைக்குப் பொன் வேய்ந்ததாகவும் கேள்விப் படுகின்றோம்.


தற்சமயம் சிதம்பரம் கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுக்கள் அனைத்துமே மன்னன் கோபெருஞ்சிங்கன் என்பவனைக் குறித்தே சொல்லப் படுவதாயும், அவன் பல்லவர்களின் பிற்கால அரசன் எனவும், பிற்காலச் சோழர்களுக்கு முன்னால் ஆண்டவன் எனவும் தெரிய வருகின்றது. தெற்கு கோபுரத்தை ஏழு மாடங்களுடன் அவன் கட்டியதாகவும், அது தவிர பல்வேறு பொருட்களையும் தினசரி வழிபாட்டுக்கு அளித்ததாகவும், புஷ்ப கைங்கரியம் செய்ய ஏற்பாடு செய்ததாகவும் அறிகின்றோம்.
பொதுவாகவேச் சோழமன்னர்கள் அனைவருமே சிவபக்தியில் ஊறித் திளைத்தவர்கள் மட்டுமின்றித் தில்லைக் கோயிலில் பெரும் ஈடுபாடும் கொண்டவர்களாகவே இருந்து வந்தனர். சோழ அரசருக்கு முடி சூட்டும் உரிமையும் தில்லை வாழ் அந்தணர்களுக்குச் சொந்தமாக இருந்து வந்தது. மன்னன் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் தில்லைப் பதியில் மறைந்திருந்த திருமறைகளை மன்னன் கண்டெடுத்து, நம்பியாண்டார் நம்பி மூலம் அவற்றைத் தமிழ் நாடெங்கும் ஓதுமாறு பணித்தான்.


இவனைத் தவிர, வீர ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன் என முறையே சோழ அரசர்கள் பலரும் இந்தக் கோயில் திருப்பணியில் பங்கு பெற்றிருக்கின்ரனர். முதலாம் பிரகாரத்தை ஏற்படுத்தியவன் குலோத்துங்க சோழன் என்பதால் அவன் பெயரால் அது "குலோத்துங்க சோழன் திருமாளிகை" எனவும், பின்னர் இரண்டாம் பிரகாரம் அவன் மகன் ஆன விக்கிரம சோழன் பெயரால், "விக்கிரம சோழன் திருமாளிகை" எனவும் அழைக்கப் பட்டு வந்தது. விக்கிர சோழன் இது தவிர, மேற்குக் கோபுர வாசல், கோயிலுக்கு எனத் தேர் எனஏற்படுத்தினான். ஒரு தெருவே அவன் பெயரில் விளங்கியது. அவனின் தளபதியான நரலோக வீரன் நூற்றுக் கால் மண்டபம், சிவகங்கைக் குளத்தின் படிக்கட்டுகள் ஒரு பிரகாரம், மண்டபம் ஒன்றும் மற்றும் சிவகாமி அம்மையின் வெளி மதில் சுவர் போன்றவற்றை எழுப்பினான்.
பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன்சபாபதிக்கு முக மண்டபம், கோபுரம், சிவகாமி அம்மையின் கோயிலின் மதில் சுவரின் எஞ்சிய பாகம் போன்றவற்றை எழுப்பினான். பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் தான் முதன் முதலாக நடராஜருக்கு அன்னப் பாவாடை சாத்தும் வழக்கம் ஏற்பட்டதாய்த் தெரிய வருகிறது. சோழர்களுக்குச் சற்றும் குறைவில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் பிற்காலப் பாண்டியர்களும் சிதம்பரம் கோயிலின் பல கட்டுமானங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.


13-ம் நூற்றாண்டில் சோழ, பாண்டிய நாட்டை ஆண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் 1, மற்றும் 2 இருவருமே கோயிலுக்கு எனப் பல நந்தவனங்கள், நிலங்கள் போன்றவற்றைத் தானமாய் அளித்தனர். அடுத்து வந்த ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், தில்லைக் காளி கோயிலுக்கும் திருப்பணி செய்தான். கனகசபையைப் பொன்னால் அபிஷேகம் செய்த அவன் "பொன் வேந்த பெருமான்" என்னும் பட்டப் பெயரையும் பெற்றான். மேற்குக் கோபுரத் திருப்பணியும் செய்த அவன் காலத்தில் துலாபாரம் என்னும் வழிபாடும் ஏற்பட்டது. வீரபாண்டியன், விக்கிரம பாண்டியன் இருவருமே பல திருப்பணிகளைச் செய்தனர் என்றும் தெரிய வருகின்றது. சோழ அரசர்களைப் போலவே இந்தப் பாண்டிய அரசர்களும் தில்லைப் பதியிலேயே தங்கள் மகுடாபிஷேகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.


இப்போது சோழ, பாண்டியர் காலம் முடிந்து விஜயநகர மன்னர்களின் ஆதிக்கம் நடைபெறுகின்றது, என்றாலும் அவர்களும் எதற்கும் சளைக்கவில்லை. கிருஷ்ண தேவராயர் காலம் தொட்டே சிதம்பரம் கோயிலுக்குத் திருப்பணி செய்கின்றார்கள். பல நாடுகளையும் வென்ற கிருஷ்ணதேவராயர் அதைப் போற்றும் வகையில் தில்லை நடராஜருக்கு மூன்று கிராமங்களைப் பரிசளிக்கின்றார். கோயிலுக்கும் விஜயம் செய்து வழிபடுகின்றார். வடக்கு கோபுரத்தைப் பதினாறாம் நூற்றாண்டில் கட்டிய அவர், அந்தக் கோபுரத்தில் தன் உருவத்தையும் பதிக்கச் செய்திருக்கின்றார். அவருக்கு அடுத்து வந்த அச்சுத தேவராயன், 82 கிராமங்களைப் பரிசளிப்பதோடு அல்லாமல் வழிபாட்டு முறையையும், திருவிழாக்களையும் மேம்படுத்தும் வண்ணம் பல பரிசுகளையும் அளிக்கின்றான்.