எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, October 05, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! கிருஷ்ணாயியின் மகன்!

மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எனவும் ஒற்றுமையாய் அன்னியனை எதிர்க்க வேண்டும் எனவும் கூறியவர் மேலும் அப்படிப் போரிடத் தொடங்கும் முன்னர் கண்ணனூர்க் கோட்டையில் இருக்கும் சுல்தானியர்ப் படையைத் தாக்கித் தான் ஶ்ரீரங்கத்தை மீட்க முடியும் என்பதால் அந்தச்சமயம் மதுரை சுல்தான் அவர்களுக்கு உதவ முடியாமல் தடுக்க வேண்டும் எனவும் அந்தப் பொறுப்பைக் குலசேகரன் தான் ஏற்க வேண்டும் எனவும் சொன்னார்.  அதற்குத் தான் செய்ய வேண்டியது என்னவென்று குலசேகரன் கேட்டான். மன்னர் மேலும் தொடர்ந்து மதுரைக்கும் கண்ணனூருக்கும் செல்லும் ராஜபாட்டையில் ஒவ்வொரு காத தூரத்துக்கும் ஒவ்வொரு வீரனை நிறுத்தி வைத்திருப்பதாகவும்   இவர்கள் மூலம் மதுரைக்கும் கண்ணனூருக்கும் இடையே செய்திப் பரிமாற்றம் நடைபெறுகிறது  என்றும் கூறியவர் இந்தத் தொடர் மனிதச் சங்கிலியை முதலில் அறுக்க வேண்டியது குலசேகரன் கடமை என்றார். கண்ணனூரில் இருந்து எந்தச் செய்தியும் மதுரைக்கோ அல்லது மதுரையிலிருந்து கண்ணனூருக்கு எந்தச் செய்தியுமோ போகாமல் தடுக்க வேண்டும் என்றார்.

தன்னால் நிச்சயமாய் அதைச் செய்ய முடியும் என்ற குலசேகரனிடம் அவனுக்கு உதவியாக மாறுவேடத்தில் 20 குதிரை வீரர்கள் வருவார்கள் எனவும் அவர்கள் உதவியுடன் அந்தச் செய்தி எடுத்துச் செல்லும் மனிதச் சங்கிலியில் அனைவரையும் அழித்து ஒழிக்க வேண்டியது குலசேகரன் பொறுப்பு எனவும் கூறினார் மன்னர். குலசேகரனிடமிருந்து இந்த வேலை முடிந்தது எனத் தகவல் வந்ததும் அவர்கள் தங்கள் படையெடுப்பை உடனே ஆரம்பிக்க வசதியாக இருக்கும் என்றார். இதைத் தவிர்த்தும் மேலும் பல ஆலோசனைகளை மன்னர் குலசேகரனுக்குச் சொன்னார். அவன் ராஜசபையில் இருந்து கிளம்பி அரண்மனை முற்றத்தை அடைந்தான். அப்போது ஓர் இளங்குரல் அவனை "நில்!" என அதிகாரமாக ஆணையிட்டுச் சொன்னது. திரும்பிப் பார்த்த குலசேகரன் சுமார் பத்து வயது நிரம்பிய ஓர் சிறுவன் முகமூடி அணிந்த வண்ணம் வாளைச் சுழற்றிக் கொண்டு தன்னை நோக்கி வருவதைக் கண்டான். அந்தச் சிறுவனின் துணிச்சல் குலசேகரனுக்கு மிகவும் பிடித்தது. எனினும் அவன் வாள் குலசேகரனைத் தாக்க முயன்றதால் தன் வாளால் பாதுகாப்புக்காகத் தடுப்பு முறைகளைப் பிரயோகம் செய்து தன்னைக் காத்துக் கொண்டான் குலசேகரன்.

அப்போது அங்கே ஓர் சேடிப் பெண், "இளவரசே! இளவரசே!" எனக் கூவிக் கொண்டே ஓடி வந்தாள். அவளைத் தொடர்ந்து ராணி கிருஷ்ணாயியும் ஓடி வந்து கொண்டிருந்தாள். கிருஷ்ணாயியைப் பார்த்த குலசேகரன் மீண்டும் திடுக்கிட்டு அவளைச் சந்திக்க விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். குலசேகரனை அங்கே ராணியும் எதிர்பார்க்கவில்லை ஆதலால் செய்வதறியாது அவள் திகைத்து நிற்கச் சிறுவன் தன் முகமூடியை அகற்றி விட்டு, "அம்மா! யார் இது?" என்று வினவிய வண்ணம் வாளைச் சுழற்றினான். கிருஷ்ணாயியின் முகத்தில் நாணம் பூத்தது. குலசேகரனைப் பார்த்து அவள் "சுவாமி! இது, இந்தச் சிறுவன்...... தங்கள்....." என இழுத்தவள் மேலே தொடராமல் நிறுத்தினாள். அப்போது தான் திரும்பி அந்தச் சிறுவன் முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்ட குலசேகரனுக்கு ராணியின் வார்த்தைகள் புரிந்தன. சிறுவனை உற்று நோக்கினான். சிறுவனின் கண்களும் உடல் தோற்றமும் தன்னை ஒத்திருந்ததைக் கண்டு கொண்டான் குலசேகரன். இவன் தன் மகன் என்பதை அவன் புரிந்து கொண்டு விட்டான்.

அவன் உடல் ஓர் கணம் சிலிர்த்தது. தன்னில் ஒரு பாதி தன் எதிரே நிற்பதைப் புரிந்து கொண்டான். ஆனால் அவன் அறிவோ விழித்துக் கொண்டிருந்தது. ஆகையால் அந்தச் சிறுவனைத் தான் எவ்விதத்திலும் எந்த உறவும் கொண்டாட முடியாது என்பதையும் உணர்ந்தவனாக இருந்தான். ஆகவே ஆர்ப்பரித்து எழுந்த தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு இறுகிப் போன முகத்தோடு அங்கே நின்றான். கிருஷ்ணாயி அவனைப் பார்த்து, "சுவாமி! இவன் என் மகன் தான். இவன் பெயர் ராஜவர்த்தன குலசேகரன்!" என்றாள்.  அவள் சொன்னதைக் கேட்ட குலசேகரன் கண்களில் நீர் பெருகியது. மீண்டும் மீண்டும் அந்தச்  சிறுவன் பக்கமே அவன் கண்கள் சென்றன. அவன் நிற்கும் தோரணை குலசேகரனுக்குத் தன்னைத் தானே பார்த்துக் கொள்வது போல் இருந்தது. தன் வாழ்க்கையில் முதல்முதலாகத் தானே தன்னில் இருந்து பிரிந்து வந்து ஓர் சிறுவனாக எதிரே நிற்பதைக் கண்டதும் அவனுள் தன்னையும் அறியாமல் தந்தை என்னும் உணர்வும் அதற்கான பாசமும் ஏற்பட்டுக்கண்களில் நீர் பெருகச் செய்தது.

அந்தச் சிறுவனைக் கட்டி அணைக்கலாமா என யோசித்து முன்னே ஓர் அடி எடுத்து வைத்தவனுக்கு மீண்டும் அந்தச் சிறுவன், "அம்மா, யார் இவர்?"  எனக்கேட்ட குரல் காதில் விழுந்தது. தன்னிலை உணர்ந்த குலசேகரன் மௌனமாக அங்கேயே நின்றான். தன்னை முழுதும் அடக்கிக் கொண்டான். அவன் மனதில் பாசமும், கிருஷ்ணாயி மேல் வெறுப்பும் சிறுவன் மேல் உள்ள பிள்ளைப் பாசமும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டன. தன் உணர்வுகளை அடக்க முடியாத குலசேகரன் அங்கிருந்து வெளியேறுவது ஒன்றே வழி என நினைத்து அங்கிருந்து வெளியேறித் தான் தங்கி இருந்த சத்திரத்தை நோக்கிச் சென்றான். சத்திரத்திலும் அவனுக்குத் திரும்பத் திரும்பச் சிறுவனின் முகமே நினைவில் வந்தது. எவ்வளவு துடிப்பான முகம்!பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் தன்மை வாய்ந்தவன் அந்தச் சிறுவன். இவன் என் மகன் தான்! ஆனால்! எப்படி! எவ்வாறு! நினைக்க நினைக்கக் குலசேகரன் மனம் துடித்தது.

Tuesday, October 02, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருவண்ணாமலையில்!

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் குலசேகரனைக் கண்டதும் ஓடோடி வந்து விசாரித்த கிருஷ்ணாயியைக் கண்டு குலசேகரன் பிரமித்தான். அவள் மனம் முதிர்ச்சி அடைந்திருப்பதை அவள் கண்கள் காட்டின. பெண்மைக்கே உரித்தான நிதானமும், கனிவும் அவள் கண்களில் வழிந்து கொண்டிருந்தது.  என்றாலும் குலசேகரனால் அவளைத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. ஒரு கணம் அவளை வெறித்தவன் மறுபடி தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான். அவன் முகம் கல் போல் இறுகியது. கிருஷ்ணாயியோ அவன் தன்னைப் பார்க்கவே விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டவளாக, "ஏன் என்னைப் பார்க்க மறுக்கிறீர்கள் ஸ்வாமி? எப்போது வந்தீர்கள்? என்னை ஏன் வந்து பார்க்கவில்லை! என் மேல் என்ன கோபம்?" என்றெல்லாம் விசாரித்தாள். குலசேகரனோ வேறு பக்கம் திருப்பிய பார்வையுடனேயே அவளைப் பார்த்து, "மஹாராணி, என்னை எதுவும் கேட்க வேண்டாம். நான் பழைய விஷயங்களை எல்லாம் மறக்க விரும்புகிறேன்." என்றான். அவன் கண்களிலே கண்ணீர் ததும்பி நின்றது.

கிருஷ்ணாயியோ அவனைப் பார்த்து,"ஸ்வாமி! எனக்குக் காரணம் புரிகிறது! ஆனால் இனி நான் உங்கள் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்யவே மாட்டேன்! இனியும் உங்களுக்குத் தொல்லை கொடுக்க விரும்பவும் இல்லை. பழைய விஷயங்களுக்காகவும், நான் நடந்து கொண்ட முறைக்காகவும் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னியுங்கள்! நான் வருகிறேன்!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள். பிறகு அவனைப் பார்த்துத் தயங்கியவண்ணம் அவன் திருவண்ணாமலைக்கு வந்திருக்கும் காரணம் தனக்குப் புரியவில்லை என்றும் எனினும் அவனுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் தான் செய்யத் தயாராய் இருப்பதாகவும் தெரிவித்தாள். மேலும் அவனை ஒரு முறையாவது அந்தப்புரம் வந்து தன்னைப் பார்த்துச் செல்லும்படியும் அவன் வந்தால் அது தனக்கு என்றென்றும் மறக்க இயலா ஓர் நிகழ்ச்சியாக இருக்கும் என்றும் என்றென்றும் தான் அதை நினைவில் வைத்துப் போற்றி வருவாள் எனவும் தெரிவித்தாள். குலசேகரன் மறுமொழி சொல்லாமல் அவளைத் திரும்பியும் பார்க்காமல் மௌனம் சாதித்தான். பின்னர் அவள் கிளம்பிச் சென்றபின்னர் அவனும் அங்கிருந்து வெளியேறி முன்னர் தான் தங்கும் சத்திரம் திரும்பினான்.  யாரைப்பார்க்க வேண்டாம் என நினைத்தானோ அவளைப் பார்க்க நேர்ந்தது தன் துர்ப்பாக்கியம் தான் எனக் கருதினான்.

இரவுப் பொழுதைச் சத்திரத்தில் கழித்த குலசேகரன் மறுநாள் காலை தன்னை அரச சந்திப்புக்கு ஏற்றவாறு அலங்கரித்துக் கொண்டு அரண்மனை நோக்கிச் சென்றான். அங்கே அரசர் வல்லாளர் சிங்காதனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார். சுமார் எழுபது வயதுக்கு மேல் ஆனாலும் அவருடைய கம்பீரமும் கட்டுக்குலையாத உடம்பும் குலசேகரனைக் கவர்ந்தது. குலசேகரனை அவர் அடையாளமும் கண்டு கொண்டார். அவனைப்பார்த்து சிங்கப்பிரான் அனுப்பினாரா எனக் கேட்டவர் மேலும் தொடர்ந்து, "வீரனே! நீ திருவண்ணாமலை வர இஷ்டப்படவில்லை என சிங்கப்பிரான் சொன்னாரே!" என்றும் வினவினார்.  குலசேகரன் சற்று நேரம் மௌனமாக இருந்தவன் பின் மன்னரைப் பார்த்து, "அரசே! இந்தத் தென்னாட்டு அதிலும் தமிழகத்து அரசர்களிடம் எனக்கு நம்பிக்கையே இல்லை! சிறிதும் இல்லை!" என்றான். வல்லாளர் கலகலவெனச் சிரித்தார்.

குலசேகரனைப் பார்த்துப் பத்து வருடங்கள் முன்னர் இளமைத் துடிப்பில் இருந்தபோது பேசிய அதே மாதிரி அவன் இப்போதும் படபடப்புடன் பேசுவதைச் சுட்டிக் காட்டினார். மேலும் ராஜரிக காரியங்களில் அவசரமோ, படபடப்போ கூடாது என்றும் அறிவுறுத்தினார்.  எத்தனையோ சோதனைகளுக்குப் பின்னர் ஹொய்சளம் இப்போது தான் இரண்டு, மூன்று ஆண்டுகளாக வலுப்பெற்று வருவதாயும் சொன்னார். வடக்கே உள்ள பகைவர்களை இப்போது தான் அழித்து ஒழித்ததாகவும் இனிமேல் தெற்கே தங்கள் கவனத்தைத் திருப்பப் போவதாயும் சொன்னார்.  மேலும் இதைத் தான் ஏற்கெனவே சிங்கப்பிரானுக்குத் தெரிவித்துவிட்டதாயும் கூறியவர் இப்போது ஹொய்சளம் தமிழ்நாட்டின் மதுரை சுல்தான் மேல் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாயும் கூறினார்.  குலசேகரன் முகம் பிரகாசம் அடைந்தது.

இந்தச் செய்தியைக் கேட்கவே தான் காத்திருந்ததாய்ச் சொன்ன அவன் இந்த முடிவு குறித்து அவனுக்கு ஏதும் தெரியாது என்பதால் தான் வந்த உடன் மன்னரிடம் குற்றம் கூறியதாகவும் இது முன்னரே தெரிந்திருந்தால் மகிழ்ச்சியோடு மன்னரை வந்து கண்டிருப்பேன் எனவும் தெரிவித்தான்.  மன்னர் அவனிடம் பொறுமையுடன் காத்திருந்து தான் எதையும் செய்யவேண்டும் என்றும் இப்போது நேரம் வந்து விட்டதாயும் சொன்னார். மேலும் குலசேகரன் தன் மேல் கொண்டிருக்கும் கோபம், வருத்தம் ஆகியவை அவருக்குத் தெரியும் என்பதால் தான் நேரிடையாக அவனைத் திருவண்ணாமலை வரும்படி சொல்லி அனுப்பவில்லை என்றும் சிங்கப்பிரானிடம் சொல்லி அவனை அனுப்பச்சொன்னதாகவும் தெரிவித்தார்.  அவனுக்கு இங்கே நிறைய வேலைகள் காத்திருப்பதாயும் சொன்னார். குலசேகரன் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொள்ள மன்னர், திருவரங்கத்தையும், திருச்சியையும் மதுரை சுல்தான்களிடமிருந்து மீட்பதற்காகப் போர் செய்யவும் தயங்கப்போவதில்லை என்பதைத் தெரிவித்தார்.