எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, May 31, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

பெரியவர் தன்னுடைய முக்கியமான ரகசியத்தைப் பகிர்ந்ததால் அழகிய நம்பியும் தைரியம் கொண்டு தான் அரங்கன் சேவையில் வந்திருப்பதையும் அரங்கன் இருக்குமிடத்தையும் அவரிடம் தெரிவித்தான். மேலே என்ன செய்யலாம் என்று பார்க்கவே தான் மதுரை வந்ததாகவும் தெரிவித்தான். அதைக் கேட்ட பட்சிவாகனன் என்னும் பெயர் கொண்ட அந்தப் பெரியவர் அரங்கனைத் தேடியே தில்லி துருக்கர்கள் அலைவதையும் எப்படியேனும் அரங்கனைத் தூக்கிச் செல்லும் வெறியோடு இருப்பதாகவும் கூறினார். நம்பி யோசனையில் ஆழ்ந்தான். அவரைப் பார்த்து அரங்கனைத் தூக்கிக் கொண்டு இன்னும் தெற்கே செல்ல முடியுமா எனக் கேட்டான். அவர் அது இயலாத காரியம் என்றும் எங்கும் தில்லிப் படை வீரர்கள் அலைந்து கொண்டிருப்பதாகவும் ஒற்றர்கள் வேறே கண்குத்திப் பாம்பாகப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ரகசியப் பாதை ஏதேனும் உண்டா என அழகிய நம்பி விசாரித்தான்.

அவர் அப்படி இருக்கும் பாதைகள் மட்டுமில்லாமல் காட்டுப் பாதைகளிலும் தில்லிப் படை வீரர்களும் ஒற்றர்களும் நிறைந்திருப்பதைச் சொன்னார். அழகிய நம்பி அதற்கு அரங்கனை ஏன் இப்படிக் கண்ணி வைத்துப் பிடித்துப் போக நினைக்கிறார்கள் என்று கேட்டுவிட்டு மனம் வருந்தினான். அதற்கு அவர் அரங்கனின் சொத்தின் மேலேயே தில்லி வீரர்களுக்குக் கண் என்றும் தென்னகம் முழுவதும் கொள்ளை அடிப்பதை விட அரங்கனின் சொத்து அதிகம் இருக்கும் என்பதால் அது தான் அவர்களின் முக்கியத் தேவை என்றும் சொன்னார். அழகிய நம்பி கவலையில் ஆழ்ந்தான். அழகர் மலையில் சிக்கிக் கொண்டு மறைந்திருக்கும் அரங்கனுக்கு அன்றாட நிவேதனத்துக்கே பிரச்னையாக இருந்து வருகிறது. எப்படியேனும் அவரைக் கண் மறைவாகத் தெற்கே அழைத்துச் சென்று விட்டால் பின்னர் அரஙன் பாடு இத்தனை கஷ்டம் இல்லை என நினைத்தவன் அதை அந்தப் பெரியவரிடம் சொல்லவும் சொன்னான். அரங்கனுக்கு ஏன் இந்தச் சோதனை என்றும் வருந்தினான்.

இந்த மண் மீது தோன்றியதால் அவருக்கும் இப்படி விதி இருக்கும் போலும் என்ற அந்தப் பெரியவர் தான் யோசித்ததில் ஒரு வழி புலப்படுவதாய்க் கூறினார். அது என்ன எனக் கேட்ட அழகிய நம்பியிடம் ஒவ்வொரு இடத்திலும் சுமார் 100 தில்லி வீரகள் இருப்பதாகவும் அவர்களோடு போரிட்டு வெற்றி கொண்டால் சுலபமாகப் போய் விடலாம் என்றும் சொன்னார். போரா என அதிர்ச்சி அடைந்தான் அழகிய நம்பி. படைகளுக்கு எங்கே போவது? எனக் கேட்ட அவனிடம் யாரிடமாவது நிலைமையைச் சொல்லிக் கேட்டுப் பார்க்க வேண்டும் என்றார் பெரியவர். அழகிய நம்பி என்ன செய்யலாம் என யோசித்தபோது சிறிய படை இருந்தால் கூடப் போதும் என்றார் பெரியவர்.


"படைக்கு எங்கே போவது? நம்மை நம்பி யார் தருவார்கள்?" என்றான் அழகிய நம்பி. பின்னர் கிளம்பும்போது அவரிடம் யோசித்து முடிவு எடுக்கலாம் எனக் கூறியவன் மேலும் அவரிடம் தன்னை முதல் முதல் சந்தித்த போது அவர் "கொற்றவைக்கு வெற்றி!" என்று சொன்னதன் பொருள் என்ன என்று கேட்டான். அவர் அதற்கு தன்னைப் போல் மதுரையில் தங்கியவர்களால் ஓர் ரகசியப் படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் துணை கொண்டு இங்கே அகப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் முக்கியமான பொருட்களை எப்படியேனும் வெளியே கொண்டு செல்ல முயற்சித்து வருவதாகவும் சொன்னார். அவர்களின் அடையாள மொழியே அந்தக் "கொற்றவைக்கு வெற்றி!" என்னும் சொல் என்றும் கூறினார். அழகிய நம்பி ஆச்சரியம் அடைந்தான். அந்தப் படை என்னவெல்லாம் செய்திருக்கிறது எனவும் விசாரித்தான்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் விக்ரகங்களை நாஞ்சில் நாட்டுக்குக் கடத்தினதும் அங்கே பாதுகாப்பாக வைத்திருப்பதும் இந்தப் படை தான் என்றவர் இதுவரை இங்கே தங்கிய பெண்களில் ஐம்பது, அறுபது பேரை வெளியே கொண்டு போயிருப்பதாகவும் மிக்குதி இருப்பவர்களையும் கொண்டு போக முயற்சி செய்து வருவதாகவும் கூறினார். சட்டெனத் திரும்பியவன் கண்களில் அங்கிருந்த சாளரம் ஒன்றின் வழியே அந்தப் பெண் பரிமளம் அவனையே ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் பார்ப்பதைக் கண்டான். பட்சி வாகனன் அவனிடம் படை கிடைத்தால் அவர்கள் அனைவரையும் நினைவு வைத்துக் கோண்டு இங்கே வந்து விடுவித்துச் செல்லும்படியும் கூறினார். அதை அந்தப் பெண்ணும் ஆமோதித்தாள்.

Tuesday, May 29, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

அழகிய நம்பி கிளம்புவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டான். ஒரு ஆண்டியைப் போலத் தன்னைஉருமாற்றிக் கொண்டான். பின்னர் அனைவரிடமும் விடை பெற்று அழகர் மலையிலிருந்து இறங்கி மதுரை நகர் நோக்கி நடக்கலானான். கோடை காலம். வெயில் சுட்டெரித்தது. எனினும் நடந்து நடந்து அன்று மதிய நேரத்து மதுரைக் கோட்டை வாசலை அடைந்தான். காவல் என்னமோ பலமாக இருந்தது. ஆனாலும் உள்ளே போகிறவர்களோ அல்லது வெளியே செல்பவர்களோ சோதனைக்கு உள்ளாகவில்லை. அப்போது பார்த்து ஒரு பார வண்டி வர அழகிய நம்பி அதைத் தள்ளிக் கொண்டே மெல்லக் கோட்டைக்கு உள்ளே நுழைந்து விட்டான்.  உள்ளே வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. எப்போதும் கலகலவென்றிருக்கும் மதுரை நகரை வெறிச்சோடிய கோலத்தில் பார்த்த அழகிய நம்பி மனதில் வருத்தம் அடைந்தான். அங்கே யாரும் தெரிந்த மனிதர்களோ அல்லது பார்த்தால் நம்பக் கூடியவாறு உள்ள மனிதர்களோ தெரிகின்றனரா எனக் கூர்ந்து கவனித்த வண்ணம் சென்றான்.

ஆனால் மதுரை மக்களில் மதுரை நகரில் தங்கியவர்கள் பலரும் வேறு வழி இல்லாமல் தங்கியவர்களாகவே இருந்ததால் அவர்கள் நகரின் சோபை குன்றியதும், துருக்க ஆட்சிக்கு உட்பட்டதையும் நினைத்துக் கொண்டு மனதில் வருத்தத்துடன் நடைப்பிணம் போல் தங்கள் வேலைகளை இயந்திர ரீதியாகச் செய்து கொண்டிருந்தனர். ஏதேனும் கேட்டால் கூட பதில் சொன்னால் இவன் துருக்கர்களின் ஒற்றனோ, போய் உளவு சொல்லி விடுவானோ எனப் பயந்தனர். அழகிய நம்பியும் அவர்களைக் கேட்பதை விட்டு விட்டுக் கோயிலை நோக்கிச் சென்றான். கோயிலும் நெருங்கியது.  மெல்லக் கோயிலை நிமிர்ந்து பார்த்தவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அங்கு செய்யப்பட்டிருந்த சிற்ப வேலைப்பாடுகள் அனைத்தும் உடைத்துப் போடப் பட்டிருந்தது. சிலைகள் அனைத்தும் கைகள் உடைக்கப்பட்டும், கால்கள் சேதப்படுத்தப்பட்டும் தலை உடைக்கப்பட்டும் அடையாளம் காண முடியாதவாறு இருந்தன. கோபமும், ஆத்திரமும் கலந்த வருத்தம் அழகிய நம்பிக்கு மேலிட அவன் திரும்பினான். அப்போது அவன் அருகே ஒருவர் வந்து, "கொற்றவைக்கு வெற்றி!" என்றார்.

அழகிய நம்பி திரும்பிப் பார்த்தான். ஐம்பது வயது மதிக்கக் கூடிய ஒருத்தர் கண்களில் பட்டார். அவருடன் பேசுவதா வேண்டாமா என நம்பி யோசித்தான். பெரியவருக்கும் அழகிய நம்பியுடன் பேசுவதில் சந்தேகம் தோன்றி இருக்குமோ என்னும் வண்ணம் அவரும் அதன் பின்னர் தயங்கினார். ஆனால் மெல்ல மெல்ல இருவரும் பேசிக் கொள்ளப் பின்னர் துருக்கப்படைகளைச் சேர்ந்தவர்களோ அல்லது உளவாளிகளோ அல்லவென நிச்சயப்படுத்திக் கொண்டனர்.  அதன் பின்னர் அந்தப்பெரியவர் தன் பெயர் பட்சி வாகனன் என்றும் தான் இந்த ஊரில் தங்க  நேர்ந்து விட்டது என்றும் அதற்கான காரணங்கள் உண்டு எனவும் கூறிவிட்டுத் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். வீட்டிற்குள் இருவரும் சென்றனர். வீடு வெறிச்சோடிக் கிடந்தது. யாரும் வாழ்ந்தார்களா என்பதே தெரியாத வண்ணம் காலியாகக் கிடந்தது.

அப்போது தான் தங்க நேர்ந்த காரணங்களை அவர் தெரிவித்தார். முதல்முறை மாலிக்காபூர் வந்தபோது பாண்டிய மன்னன் வெற்றி பெற்று விட்டதால் சேதங்கள் இல்லை எனவும் ஆனால் இம்முறை உலுக்கான் வந்த போது மன்னர் தோல்வி அடைந்து விட்டார் எனவும் தோல்வி அடைந்த மன்னர் ஊரை விட்டு ஓடும்படி ஆகி விட்டது என்றும் சொன்னவர், மன்னர் வெற்றி பெற்றுவிடுவார் என நம்பித் தாங்கள் அங்கேயே தங்கியதையும் ஆனால் மன்னனுக்கு வெற்றி கிட்டாமல் போனதால் தாங்கள் பலரும் அங்கேயே மாட்டிக் கொண்டு வெளியேற வழி தெரியாமல் தவிப்பதாகவும் சொன்னார். அழகிய நம்பியோ, "அதனால் என்ன? இப்போது தப்பிச் செல்லுங்கள்!" என்று கூறினான். அவர் பதிலே சொல்லாமல் அவனை அடுக்களைக்கு அழைத்துச் சென்றார். அங்கே தரை மீது விரிக்கப்பட்டிருந்த விரிப்பை எடுத்து விட்டு ஒரு கரண்டியை எடுத்துத் தரையில் ஓர் இடத்தில் நெம்பினார். உடனே அந்த இடத்துக் கல் பெயர்ந்து ஒரு ரகசியக் கதவு  தெரிந்தது. கதவைத் திறந்தார்.

"பரிமளம்! பரிமளம்!" என அழைத்தார். "இதோ வருகிறேன்!" என ஓர் இளங்குரல் சொல்லச் சற்று நேரத்தில் அங்கிருந்த ஓர் இருட்டறையிலிருந்து சுமார் பதினைந்து வயது மதிக்கக் கூடிய ஓர் இளம்பெண் மெல்ல மேலே ஏறி வந்தாள். பல நாட்கள் உணவு கிடைக்காததால் மெலிந்து  போயிருந்த அந்தப் பெண் சூரிய ஒளியையும் பல நாட்கள் காணாததால் வெளுத்துச் சோகை பிடித்துப் போயிருந்தாள். இருவரையும் பார்த்துப் புன்னகை புரிந்தாள். அவளைக் காட்டிய அந்தப் பெரியவர், "இவள் என் பெண்! இவளுக்காகவே நான் இங்கே இருக்க வேண்டியதாக ஆகி விட்டது. இந்தத் துருக்கர்களின் கண்களில் படாமல் இவளை நான் நிலவறையில் பாதுகாத்து வருகிறேன். " என்றார். என்ன சொல்வது எனத் தெரியாமல் திகைத்த நம்பி கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும் என அவளை ஆசிர்வதித்து விட்டு வெளியே வந்தான்.

Sunday, May 27, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஆஹா! ராணி வாசம்! அதுவும் ஹேமலேகா போன்ற இளம்பெண்ணிற்கு! இந்தக் கிருஷ்ணாயிக்கு மிகக் கொடூரமான மனமாக இருக்க வேண்டும். ராணி வாசம் என்றால் சும்மாவா! ராணி வாசத்துக்கு அழைக்கப்படும் பெண் ராணியின் நெருங்கிய தோழியாக ராணிக்கு அருகிலேயே எப்போதும் அந்தப்புரத்திலேயே வசிக்க வேண்டும். வெளியே வர முடியாது. அதோடு இல்லாமல் பெற்றோர், உற்றாரையும் மறக்க வேண்டும். எல்லாவற்றையும் விடக் கொடுமை அவள் திருமணமே செய்து கொள்ள முடியாது; செய்து கொள்ளக் கூடாது! கன்னியாகவே இருக்கவேண்டும். ஆனால் இவளுடைய இந்தத் தியாகத்திற்காகப் பெற்றோருக்கு நிறையப் பணம், நிலம், வெகுமதிகள் எல்லாம் கிடைக்கும். கிட்டத்தட்ட ஓர் துறவியைப் போன்ற வாழ்க்கை. ஹேமலேகாவிற்குப் போய் இப்படி ஒரு கடினமான வாழ்க்கையா? குலசேகரன் மனம் துடித்தது. கொந்தளித்தது. ஆனால் அவனால் என்னசெய்ய முடியும்?

அபிலாஷாவுக்கும் அவன் மனதின் துக்கம் புரிந்தது போல் சிறிது மௌனமாக இருந்தாள். பின்னர் மெதுவாக, "ஐயா!" என அவனை அழைத்தாள். மெல்லக் குலசேகரன் அவளைப் பார்த்தபோது அவன் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர்! "வருந்துகிறீர்களா?" என்ற அபிலாஷா அவன் ஆமோதிப்பாகத் தலை அசைப்பதைக் கண்டு முகம் வாடினாள். பின்னர் மெல்லிய குரலில், தான் கிளம்புவதாய்த் தெரிவித்தாள். அபிலா கிளம்பும்போது அவளை அழைத்த குலசேகரன் அவள் தலையைத் தொட்டுத் தான் இனி மது அருந்தப் போவதில்லை எனவும், அதுவும் அரண்மனையில் எது கொடுத்தாலும் ஏற்கப் போவதில்லை எனவும் கடுமையான சபதம் செய்தான். பின்னர் விண்ணை நோக்கி வணங்கிய குலசேகரனிடம் தான் சென்று வருவதாய்க் கூறிவிட்டுக் கிளம்பினாள் அபிலாஷிணி.  அதற்குள்ளாக அங்கே அழகர் மலையில் நாம் விட்டு விட்டு வந்த கொடவர்களும் பின்னால் வந்து சேர்ந்து கொண்ட அழகிய நம்பியும் என்ன ஆனார்கள் என்று பார்ப்போம்.

அழகிய நம்பிக்கு முதலில் எதுவும் புரியாவிட்டாலும் பின்னர் மெல்ல மெல்ல அங்குள்ள சூழ்நிலையைப் புரிந்து கொண்டான். டில்லித் துருக்கத் தளபதி வாழ்ந்து கொண்டிருக்கும் மதுரைக்கு மிக அருகே உள்ள அழகர்மலைக்கு அரங்கனை எடுத்து வந்ததே சரியானது அல்ல. அரங்கன் இப்போது மிக ஆபத்தான ஓர் நிலையில் இருக்கிறான். ஆனால் இப்போது இந்த தில்லிப் படைகள் அறியாமல் வேறிடம் மாற்றுவதும் முடியாத காரியம். வேறே என்னதான் செய்வது? யோசித்து யோசித்து அவன் மிகக் குழப்பம் அடைந்தான். மூத்த கொடவர் வேறே பொன் ஆபரணங்களை விற்கப் போனார். மூன்று நாட்கள் ஆகியும் வரவில்லை என நினைத்தபோது ஒரு வழியாக அவர் வந்து சேர்ந்தார். ஆபரணங்களை விற்கவே முடியவில்லை என்றும் யாருமே வாங்க முன்வரவில்லை என்றும் சொன்னார். ஊர்களில், கிராமங்களில் உள்ள மக்கள் தில்லித் துருக்கப்படையினரின் துன்புறுத்தல் தாங்காமல் எங்கெல்லாமோ ஓடிவிட்டார்கள். ஆட்களையே பார்க்க முடியவில்லை. சரினு பொன்னைக் கொடுத்து தானியங்களையாவது வாங்கலாம்னு பார்த்தால் அதுவும் முடியவில்லை. எல்லாத் தானியங்களும் தில்லிப் படையினருக்கும் அவர்கள் பரிவாரங்களுக்குமே போதவில்லையாம். ஏதோ கொஞ்சம் போல் அரிசி கிடைத்தது. வாங்கி வந்தேன். என்று அவர் சொன்னார்.

"ஆஹா, இனி என்ன செய்வோம்! அரங்கனுக்குத் தினமும் காட்டில் விளையும் பழங்களையே கொடுத்து வருகிறோமே, அது அவனுக்கு ஒத்துக்கொள்ளாமல் போய்விட்டால்? என்ன செய்கிறது? அரிசிக்கு எங்கே போவோம்?"என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்தார்கள் அனைவரும். என்ன செய்வது என்றே தெரியவில்லையே என மூத்த கொடவரும் கவலைப்பட்டார். அரங்கனை எப்படியாவது இங்கிருந்து வெளியேற்றிக் கொண்டு போக முடியுமா எனப் பார்ப்போம் என்று ஒருவர் சொல்ல அதை மற்றவர்கள் ஆமோதித்தனர். ஆனால் அழகிய நம்பி வழியெல்லாம் தடங்கல் இல்லாமல் இருக்கிறதா எனத் தான் பார்த்துச் சொல்வதாகச் சொன்னான். எப்படிப் போய்ப் பார்ப்பது என யோசித்தவர்களிடம் தான் மாறு வேடத்தில் சென்று அப்படியே மதுரை நகருக்குள்ளும் போய் நிலைமையைத் தெரிந்து கொண்டு வருவதாகச் சொன்னான் அழகிய நம்பி.  இது மிகவும் ஆபத்தான காரியமே எனக் கலங்கியவர்களிடம் எது வந்தாலும் எதிர்கொள்ள வேண்டியது தான், என்றும் தான் போய்ப் பார்த்து வருவதாகவும் அழகிய தீர்மானமாய்க் கூறினான். 

Tuesday, May 22, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

அரசியின் கண்களையே பார்த்த குலசேகரனுக்குத் தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் புரியவில்லை. அரசியோ பேரழகியாகத் தெரிந்தாள். அவள் கண்கள் ஏதோ செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தன. அது என்னவென்றே அவன் அறியவில்லை. அரசியைப் பார்த்ததும் அவன் உடல் ஏதோ தீயில் முழுகிக் கொண்டிருப்பது போல் தகிக்க ஆரம்பித்தது. அவன் மெல்லக் கூடம் முழுவதும் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். அங்கே அமர்ந்திருந்த பெண்கள் அனைவருமே அவன் கண்களுக்கு அழகாகத் தெரிந்தார்கள். அப்போது தான் அவன் அந்தப் பாடலைக் கேட்டான். பாடியது ஹேமலேகா என்பதையும் அறிந்து கொண்டான். ஆனால் அவன் தேடித் தேடிப் பார்த்தும் அவன் கண்களுக்கு அவள் எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. திருமங்கை ஆழ்வாரின் இந்தப் பாடலால் அவனுக்குள் கொஞ்சம் சுய உணர்வு வந்தாற்போல் தோன்றியது. அவனுக்கு மீண்டும் அரங்கன் நினைவு வந்தது. அரங்கன் இருக்கும் நிலையை எண்ணினான். பஞ்சு கொண்டானுக்குத் தான் அளித்த வாக்குறுதிகள் நினைவில் வந்தன. அரங்கன் அவனைப் பார்த்து, "என்னை மறந்து விட்டாய் அல்லவா?" என்று கேட்பது போல் இருந்தது.

உடனே எழுந்து விட்டான் குலசேகரன். கிருஷ்ணாயிக்குத் தூக்கிவாரிப் போட்டது. "ஏன்? ஏன்? என்ன நடந்தது? என் சுவாமி? ஏன் எழுந்து விட்டீர்கள்? ஓ, அந்தப் பாடல் தான் காரணமோ? யார் அங்கே இந்தப் பாடலைப் பாடியது? இத்தனை சோகமான பாடலை ஏன் பாடினீர்கள்? அறிவில்லையா உங்களுக்கு? சந்தர்ப்பத்துக்கு ஏற்ற பாடலைப் பாட வேண்டாமா? சிருங்கார ரசத்தில் தமிழில் பாடல் ஏதும் இல்லையா?" என்று கத்தினாள். அவளுக்குத் தமிழ் அவ்வளவு பரிச்சயம் இல்லாததால் அவளால் பாடலை முழுதும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் இந்தப் பாடல் சரியில்லை என்றவரை அறிந்து கொண்டாள். ஆனால் குலசேகரனோ, "ராணி, நான் வந்து வெகு நேரம் ஆகி விட்டது! விடுதிக்குத் திரும்புகிறேன்!" என்று விடை பெறும் தோரணையில் கூறினான். ஆனால் கிருஷ்ணாயி இன்னும் சடங்குகள் இருப்பதாகவும் அவன் இப்போது போக முடியாது என்றும் சொல்லி அங்கிருந்த சேடியரைச் சீக்கிரம் செய்யும்படி விரைவு படுத்தினாள்.

உடனே ஒரு பெரிய தட்டு நிறைய மலர்களோடு இரு அழகான பொன் கங்கணங்களை எடுத்துக் கொண்டு ஒரு சேடிப் பெண் வந்தாள். கிருஷ்ணாயி அதை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டு வீர, தீர சாகசத்துடன் தங்கள் யாத்திரையை நடத்திக் கொடுத்ததற்காகவும், தங்களை நன்கு பாதுகாத்ததிற்காகவும் என்று சொல்லி அந்தக் கங்கணங்களை வீரக்கங்கணங்கள் என அவன் கைகளில் அணிவித்தாள். வீரர்களை ராணி மாளிகைக்குள் அழைத்து இப்படி எல்லாம் மரியாதை செய்து அனுப்புவது துளுவ நாட்டு வழக்கம் என்றும் கூறினாள்.
குலசேகரன் கைகளில் அந்தக் கங்கணங்களை ராணி கிருஷ்ணாயி தன் கைகளால் போட்டு விட்டாள். அதற்குள் பொறுமையை இழந்த குலசேகரன் அதை அணிவித்ததுமே அவளிடம் விடை பெற்று வெளியே வந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான். சத்திரத்துக்குச் சென்ற குலசேகரன் கங்கணங்களைக் கழற்றித் தூர எறிந்துவிட்டான். அதைக் கண்ட குறளன் அவனிடம், என்ன இருந்தாலும் இவை பொன் கங்கணங்கள் அல்லவா தூர எறியலாமா என்று கேட்டான். அதற்குக் குலசேகரன் இவை வெறும் பொன்னாலான கங்கணங்கள் இல்லை. இவை நெருப்பால் ஆனவை. என் கைகளை எரிக்கின்றன. என் உடலே எரிகிறது!"எனக் கூறிவிட்டு உடனே படுத்துக் கொண்டு விட்டான். குறளன் அழைக்க அழைக்கத் திரும்பிக் கூடப்பார்க்காமல் தூங்கவும் ஆரம்பித்தான்.

ஆனால் அடுத்த நாளே அரண்மனைச் சேடி ஒருத்தி வந்து குலசேகரனிடம், "ராணி அழைக்கிறார்!" என அழைக்கக் குலசேகரன் வரமுடியாது என மறுத்துவிட்டான். குறளனுக்குப் பயமும் சந்தேகமும் வர, அவனைப் பார்த்துக், "குறளா! அவள் என் மனதை மாற்றப் பார்க்கிறாள். ஏதேனும் மருந்து வைத்து விடுவாளோ என பயமாக இருக்கிறது. என்ன காரணம் என்றே தெரியாமல் என் மனம் அவளிடமிருந்து விலகி இருக்கச் சொல்கிறது. எதற்காக அவள் இப்படி எல்லாம் செய்கிறாள் என்றே புரியவில்லை. ஒரு வேளை துருக்கர்களின் உளவாளியாக இருப்பாளோ என அஞ்சுகிறேன்!" என்றான். மீண்டும் அடுத்தடுத்த இரு நாட்களும் சேடிப் பெண் வந்து அழைக்கக் குலசேகரன் செல்ல மறுத்தான்.

மூன்றாம் நாளும் ஒரு பெண் வரக் குலசேகரன் கோபத்துடன் என்னால் யாரையும் பார்க்க முடியாது எனக் கத்த வந்திருந்த அந்தப் பெண் கைகொட்டிச் சிரித்தாள். "பெரிய வீரரா இவர்? ஒரு பெண்ணைப் பார்க்க இவ்வளவு பயமா? அவரிடம் சொல்லுங்கள் ஐயா, நான் ஓர் ஓலை கொண்டு வந்திருப்பதாகச் சொல்லுங்கள்." என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தாள். அப்போது தான் வந்திருப்பது அபிலாஷினி என்பதைக் குலசேகரன் அவள் குரலில் இருந்து அறிந்து கொண்டான். உடனே வெளியே ஓடி வந்தான்.


"அபி, என்ன ஓலை? எனக்கா? எங்கே இப்படிக் கொடு!" எனப் பரபரப்புடன் குலசேகரன் கேட்டான். அபி அவனைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுக் கலகலவெனச் சிரித்துக் கொண்டே ஓர் ஓலைச்சுருளை எடுத்து அவன் கையில் கொடுத்தாள். "யார் எழுதி இருக்கிறார்கள் என்பதை அறிவீர்களா? படிதும் மே தேஹி!" எனச் சொல்லிவிட்டுச் சிரித்தாள். அதை அவள் கைகளில் இருந்து கிட்டத்தட்டப் பிடுங்கிக் கொண்ட குலசேகரன் அதை அவசரம் அவசரமாகப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். அதில்:

"அரங்கனை மறக்கவேண்டாம். கொண்ட லட்சியம் முக்கியம்!அரண்மனையில் உங்களுக்கு ராணியால் மது அளிக்கப்பட்டது! அதைத் தொடர்ந்து உங்களை அருந்தச் செய்து உங்கள் லட்சியத்திலிருந்து உங்களை விலக்கி விடுவார்கள். வாழ்க்கையும் கெட்டு விடும். மதுவைத் தொடவே மாட்டேன் என சபதம் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நன்றாக வாழ்ந்தால் தான் உங்கள் லட்சியங்களும் வாழ முடியும்! ஜாக்கிரதை!"

இவ்வளவே அதில் கண்டது. சிந்தனையில் ஆழ்ந்த குலசேகரன் கிருஷ்ணாயி தன்னை மதுவுக்கு அடிமையாக ஆக்க நினைத்ததைக் கண்டு திடுக்கிட்டான். அபிலாஷிணி பக்கம் திரும்பி இதை ஹேமலேகாவே நேரில் கொடுத்தாளா எனக் கேட்டான். அவளும் ஆமென்க, குலசேகரன் தான் அவளைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தான். அவள் எங்கே தங்கி இருக்கிறாள் என்றும் கேட்டான். அதற்குய் அபிலாஷினி அவள் வீடா எனப் புருவத்தைச் சுருக்கிக் கொண்டு, "அவள் அரண்மனையில் தானே எப்போதும் இருக்கிறாள். அது தான் அவள் வீடு." என்று சொன்னாள். குலசேகரன் அவள் ஏன் அரண்மனையிலேயே தங்கி இருக்கிறாள் எனக் கேட்டதற்கு அபிலாஷிணி ஹேமலேகாவை ராணி வாசத்திற்கு வரும்படி அரசி கட்டளை இட்டுவிட்டதாகச் சொன்னாள். குலசேகரன் அப்படியே உறைந்து போனான்.

Saturday, May 12, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் என்ன பழி போடுவாளோ! எதற்கும் தயாராக இருப்பாள் போல் தெரிகிறதே! கலங்கினான் குலசேகரன். ராணியோ அவனை மலர்ந்த முகத்துடன் உள்ளே வரும்படி வரவேற்றாள். எதற்கு இத்தனை மரியாதையும் உபசாரங்களும் செய்கிறாள் எனக் குலசேகரன் மறுபடி திகைத்தான். அவள் மறுபடி அவனை உள்ளே அழைக்கத் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தான் குலசேகரன். அவன் உள்ளே நுழையவும் அந்த அறையின் எந்த மூலையில் இருந்தோ இனிமையான கீதம் எழும்பியது. சுற்றும் முற்றும் பார்த்தக் குலசேகரன் மேலும் திகைக்கும்படி அந்த அறையில் ஓர் மூலையில் பல அழகான பெண்கள் வாத்தியங்களை இசைத்துக் கொண்டு பாடிய வண்ணம் இருக்க இன்னும் சிலச் சேடிப் பெண்கள் பூக்களை வழி நெடுகத் தூவிக் கொண்டே செல்ல தூப, தீபங்களின் வாசனை மனதைக் கிறுகிறுக்கச் செய்ய ஆரம்பித்தது. கூடத்து நடுவே போடப்பட்டிருந்த ஓர் பொன்னால் ஆன சிஙாதனத்தில் குலசேகரன் அமர்த்தப்பட்டான்.

அந்த அறையிலே மனதை மயக்கும் ஓர் அதிசய வாசனை கலந்த மணம் வீசுவதைக் குலசேகரனால் உணர முடிந்தது. அது அவன் அறிவை அழித்துவிடுமோ என அஞ்சினான். அவனையும் அறியாமல் அந்தப் பெண்களையும் அங்கிருந்த இனிமையான சுகந்த மணத்தையும் ரசிக்க ஆரம்பித்த வேளையில் ஓர் தங்கக் குடுவையில் பழ ரசத்தை நிரப்பி ராணி கிருஷ்ணாயி அவனிடம் நீட்டினாள். கிட்டத்தட்ட அவன் வாயில் புகட்டும் அளவுக்கு அவள் கொண்டு போகக் குலசேகரன் அதைக் கையில் வாங்கிக் குடித்தான். இத்தனை அற்புதமான பழ ரசத்தை இதுவரை தான் அருந்தியதே இல்லை என்பதையும் உணர்ந்தான்.  ராணியைப் பார்த்து ஏழையும் அநாதையும் ஆன அவனுக்கு இத்தகைய உபசாரங்கள் செய்வது எதற்காக என்றும் கேட்டான். ஆனால் கிருஷ்ணாயியைப் பார்த்ததும் அந்தப் பழ ரசம் அளித்த போதையினாலோ என்னவோ அவனையும் அறியாமல் புன்னகை பூத்தான். அதைக் கண்டு கொண்டு கிருஷ்ணாயி அருகிலிருந்த சேடியிடம் இன்னும் கொஞ்சம் பழரசம் கொண்டு வரும்படி பணித்தாள்.

என்ன இருந்தாலும் குலசேகரன் இளைஞன். வாழ்க்கையின் ருசிகளை உணராதவன். படிப்பிலும் போர்ப்பயிற்சிகளிலுமே நாட்களைக் கழித்தவன். அவன் அம்மாவும் உயிருடன் இருந்து அரங்கத்திலும் பிரச்னைகள் ஏற்படவில்லை எனில் அவனுக்கும் ஓர் மனைவி வாய்த்திருப்பாள். வாழ்க்கையின் இன்ப, துன்பங்கள் அவனுக்கும் புரிய ஆரம்பித்திருக்கும். ஆகவே இப்போது இந்தப் பழரசத்தின் ருசி அவனை மயங்கச் செய்ததில் ஆச்சரியம் இல்லை அல்லவா? ராணியால் வரவழைக்கப்பட்ட இன்னொரு குடுவைப் பழ ரசத்தையும் அனுபவித்துக் குடித்தான் குலசேகரன். கிருஷ்ணாயி அந்தக் குடுவையை அவன் கையிலிருந்து வாங்குகையில் தன் விரல்கள் அவன் விரல்கள் மேல் படுமாறு வைத்துக் கொண்டு வாங்கவே குலசேகரன் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் ஓர் சிலிர்ப்பு ஏற்பட்டது.

அவன் கண்கள் பழரசம் கொடுத்த போதையினால் மின்னின. கிருஷ்ணாயியைப் பார்க்கையில் அவள் சௌந்தரியமே அவன் மனதில் நின்றது. அவள் ஓர் ராணி, தான் சாதாரண வீரன், அரங்கனுக்குப் பணிகள் செய்யவே லட்சியம் கொண்டவன் என்பதெல்லாம் மறந்து விட்டது. தன் உடையை முக்கியமாக மேலாடையை அவள் தரித்திருந்த பாணியில் அவளின் அழகான ஒட்டிய வயிறும் நாபிச் சுழிப்பும் கண்களில் படக் குலசேகரன் கைகள் துறுதுருத்தன. தன்னுள் எழுந்த இத்தகைய உணர்வுகளுக்குக் காரணம் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் ராணியோ அவனைத் தன் தாபம் மிகுந்த கண்களால் ஏறெடுத்துப் பார்க்கக் குலசேகரன் உடலில் பழரசம் மூட்டி விட்ட போதை தீ எனப் பற்றி எரியத் தொடங்கியது. அங்கே இருந்த எல்லாப் பெண்களுமே அவனுக்குள் தான் அனுபவிக்கப் பிறந்தவர்களாகத் தோன்றினார்கள். இத்தகைய மாற்றாம் தனக்குள் எப்படி ஏற்பட்டது என அவனே வியக்கும் வேளையில் ராணி கிருஷ்ணாயி அங்கிருந்த பெண்களைப் பாடல் பாடும்படி உத்தரவிட ஓர் பெண் குரல் பாட ஆரம்பித்தது.

அந்தப் பாடல் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமந்திரம். பாடியது ஹேமலேகா! அவள் குரலே தான் அது!

Thursday, May 10, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

அரண்மனை வைபவங்கள் முடிந்த அந்த வெள்ளிக்கிழமை  மஹாராஜா அரசவையைக் கூட்டி இருந்தார். அப்போது தான் குறளனும், குலசேகரனும் கூட அரசரைச் சந்திக்கச் சென்றார்கள். உள்ளே,அரசரை மகிழ்விக்க ஆடல், பாடல்கள் நடந்து கொண்டிருந்தன. இருவரையும் கண்ட காவலாளிகள் அடையாளம் புரிந்து கொண்டதால் தாமதிக்காமல் உள்ளே அனுப்பி வைத்தார்கள். இருவரும் உள்ளே சென்று அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த சபையைக் கண்டு வியந்தார்கள். எங்கும் பணச் செழிப்பு. ஶ்ரீரங்கம் கோயிலின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கல்லால் ஆன சுவரால் அரங்கநாதரை மூடி வைத்திருப்பதும், இங்கே அழகிய மணவாளர் அர்ச்சாவதாரத்தில் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருப்பதும் ஒரு வேளை உணவுக்குக் கூட அவரைக் கவனித்துக் கொள்ளும் கொடவர்கள் தவிப்பதும் நினைவில் வந்து முட்டியது! பட்டுத் திரைச்சீலைகள். தங்க வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், விக்ரகங்கள், சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஆபரணங்கள்! பூக்களால் செய்யப்பட்டிருந்த பூக்கூடாரம் போன்ற அமைப்பு. பூக்களின் சுகந்தமான வாசத்தோடு அங்கிருந்தவர்கள் தரித்துக் கொண்டிருந்த வாசனைத் திரவியங்களும் சேர்ந்து ஓர் சொர்க்கத்தையே சிருஷ்டித்துக் கொண்டிருந்தது.

அரசருடன் ராணி கிருஷ்ணாயி ஒன்றாக அமர்ந்து கொண்டிருந்தவள் குலசேகரனைக் கண்டதும் அவன் பார்வை சென்ற திக்கெல்லாம் தன் பார்வையையும் செலுத்தினாள். அப்போது ஒரு கணம் அவன் பார்வை அவள் பக்கம் திரும்பவும் தடுமாறினாள். தன் பார்வையை அகற்றிக் கொண்டாள். பாடல்களை வாசிக்கும் பெண்களையும் அவர்களுக்கு வாத்தியங்கள் மூலம் உதவிய பெண்களையும் பார்த்து வியப்படைந்தான் குலசேகரன்.  அங்கே ஹேமலேகா எல்லாப் பெண்களுடனும் அமர்ந்து யாழ் வாசித்துக் கொண்டிருந்தாள். அவளை அங்கே கண்டதும் குலசேகரன் மீண்டும் திகைத்தான். பண்டிதையான ஹேமலேகா இம்மாதிரி வாத்தியம் வாசிக்கும் பெண்களுடனா அமர்ந்து யாழ் வாசிப்பது! அவள் தகுதி எங்கே! இவர்கள் தகுதி எங்கே! குலசேகரன் மனம் நொந்து போனான். ஆனால் அவளோ குலசேகரன் இருப்பதைத் தெரிந்து கொண்டது போல் தலையையே நிமிர்த்தாமல் யாழ் வாசித்தாள். திடீரென மக்களின் கரகோஷம் பெரிதாகக் கேட்கவே ஹேமலேகா தலையை நிமிர்த்தினாள். குலசேகரன் தன்னையே பரிதாபமாக ப்பார்ப்பதை அறிந்து தன் கண்களை உடனே தாழ்த்திக் கொண்டாள் ஹேமலேகா.

 ஆனாலும் அந்தக் கணநேரப் பார்வைப் பரிமாற்றத்தைக் குலசேகரனை உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டிருந்த கிருஷ்ணாயி பார்த்து விட்டாள். அங்கே ஹேமலேகாவைப் பார்த்த குலசேகரன் மனம் தவித்தது. பல்வேறு நினைவுகள் அவனுள் முட்டி மோதித் தவித்துக் கொண்டிருந்தான். ஹேமலேகா கண்களில் தெரிந்த சோகம் அவனுள் ஒரு பரபரப்பை உண்டாக்கியது. வழக்கமாக அவள் இப்படி இருக்க மாட்டாள். சோகமாகக் காணப்படுகிறாள். என்ன காரணம்? அவள் முகத்தில் இருந்த சிரிப்பு எங்கே போயிற்று? குலசேகரன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

ஆடல், பாடல்கள் ஒருவழியாக நிறைவடைந்தன. அரசர் எல்லோருக்கும் பரிசில்களை வழங்கிக் கௌரவப் படுத்தினார். குலசேகரனுக்கும், குறளனுக்கும் கூட முத்தாரங்கள் கிடைத்தன. பின்னர் சபை கலைய ஆரம்பித்தது. குலசேகரனும், குறளனும் வெளியேறாமல் அங்கேயே தயங்கி நின்றனர். அரசரின் பிரதானிகள் அவர்களை என்ன விஷயம் எனக் கேட்டுத் தெரிந்து கொண்டு பின்னர் அரசர் முன்னால் கொண்டு நிறுத்தினார்கள். குலசேகரன் மன்னனை வணங்கினான். "மன்னா! நீங்களும் உங்கள் குலமும் நீடூழி வாழ்க! தீர்த்த யாத்திரையை நல்லபடியாக நிறைவேற்றி வைத்தோம்.இனியாவது தாங்கள் அரங்கனுக்காக எங்களுக்கு உதவி செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்." என்றான்.

அதற்கு மன்னர் இன்னும் சிலநாட்களில் தான் ஓர் முடிவு எடுக்கப் போவதாகவும் அதுவரை குலசேகரனும், குறளனும் திருவண்ணாமலையிலேயே தங்க வேண்டும் என்றும் சொல்லவே அவ்வளவில் இருவரும் தாங்கள் தங்கி இருந்த இடத்துக்குத் திரும்பினார்கள். மன்னர் இன்னும் நாட்களைத் தான் கடத்துகிறார். உதவுகிறேன் எனச் சொல்லவே இல்லை என மனக்குழப்பத்துடன் குலசேகரன் அரண்மனைத் தாழ்வாரங்களில் யோசித்துக் கொண்டே நடந்தான். அப்போது ஓர் நிலைவாயில் அருகே நின்றிருந்த சேடி அவனை "ஐயா" எனக் கூப்பிட்டாள். குலசேகரன் அவளைப் பார்க்கவும் மஹாராணி அழைப்பதாகச் சொன்னாள். குலசேகரன் சற்று யோசித்துவிட்டுக் குறளனையும் தன்னுடன் வரும்படி அழைத்தான். ஆனால் சேடியோ அவனை மட்டுமே ராணி அழைத்திருப்பதாய்க் கூறினாள்.


குலசேக்ரனுக்குத் தனியாய்ப் போய் ராணியிடம் மாட்டிக் கொள்ள இஷ்டம் இல்லை. ஆனால் சேடியோ வற்புறுத்துகிறாள். ஆகவே நடப்பது நடக்கட்டும் எனக் குறளனைச் சத்திரத்துக்குப் போகச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் ராணியைச் சந்திக்கச் சென்றான். பற்பல தாழ்வாரங்கள், கூடங்கள், முற்றங்கள் அறைகளைக் கடந்த பின்னர் தங்கத்தினால் ஆன ஒரு பெரிய கதவைப் போய்ச் சேடி தட்டவே உள்ளே சலங்கைகளின் ஒலி கிணுகிணுவென ஒலிக்கக் கதவு திறந்தது, உள்ளே ராணி கிருஷ்ணாயி உயர்ந்த ரக நீலப்பட்டு ஆடை தரித்து அதிரூப சௌந்தரியாகக் காட்சி அளித்தாள். அவள் முகம் புன்னகையால் மலர்ந்தது. மூக்கிலும் காதிலும், கழுத்திலும் அணிந்திருந்த வைர ஆபரணங்கள் ஒளி வீசிப் பிரகாசிக்க ராணியின் சந்தோஷம் அவள் கண்களிலேயே தெரிய அவனைப் பார்த்த ராணி  குழைவான இனிமையான குரலில்   வாருங்கள் வீரரே! என வரவேற்கவே தனக்குக் கிடைத்த திடீர் மரியாதையால் குலசேகரன் திகைப்படைந்தான். அன்றைய நாளே அவனுக்குத் திகைப்பதில் கழிந்தாற்போல் இருந்தது.

Sunday, May 06, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

குலசேகரன் அவளிடமிருந்து விலகித் தன் வேலையைப் பார்க்கச் செல்கையில் அவள் மீண்டும் அவனை அழைத்தாள். என்ன, அபிலாஷிணி எனக் குலசேகரன் கேட்டதற்கு அவன் வில்லில் இருந்து அம்பை விடுவதை அவள் பார்க்க வேண்டும் என ஆசையாக இருப்பதாகக் கூறக் குலசேகரன் குழந்தைத் தனமான அவள் ஆசைக்குச் சிரித்துவிட்டு வில்லை எடுத்து அம்பைப் பொருத்தி விட்டுக் காட்டினான். அவளும் சிறு குழந்தையைப் போலவே கை தட்டி ஆர்ப்பரித்தாள். குலசேகரன் மீண்டும் கிளம்புகையில் அவள் மீண்டும் குறுக்கிட்டு, "ஐயா, ஹேமலேகா சொன்னதைச் சொல்லவேண்டாமா? அதைக் கேட்காமலே கிளம்புகிறீர்களே?" என்று கேட்கக் குலசேகரனுக்குள் ஆவல் மேலோங்கியது! "என்ன சொன்னாள்?" என ஆவலுடன் கேட்டான். அவனையே பார்த்த அபிலாஷிணி, "இன்று உங்கள் தாயின் திதியாம்! நினைவூட்டியதாகச் சொன்னார்!" என்று சொன்னாள். குலசேகரன் ஒரு கணம் அவளையே பார்த்துவிட்டுப் பின்னர் கொஞ்ச நேரம் யோசித்தான். "சரி அபிலா!" என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

அன்று மாலை கையில் சில காசுகளுடன் அந்த ஊர்ச் சத்திரத்துக்குச் சென்று யாரேனும் வயோதிகர்கள் வந்துள்ளனரா என விசாரித்தான். போர்க்காலமாக இருப்பதாலும் அந்நியப் படையெடுப்புத் தொடர்வதாலும் யாத்திரிகர்கள் யாரும் வருவதில்லை என்றனர் அங்குள்ளோர். சத்திரத்துக்கு  விருந்தினர்கள் என்பதே இல்லாமல் போய்விட்டதாகவும் சொன்னார்கள். குலசேகரன் திரும்பி வந்து பல்லக்குத் தூக்கிகளை அழைத்தான். அவர்களுக்கு அந்தக் காசுகளை தானமாக வழங்கினான். பின்னர் கிழக்கே உள்ள வெட்டவெளியில் தன் தாயை நினைத்துப் பிரார்த்தனைகள் செய்தான். அவன் கண்களில் தாயை நினைத்துக் கண்ணீரும் பெருகியது.

பின்னர் அங்கிருந்து எழுந்து வரிசையாக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களின் முன் வாசல் வழியாகவே நடந்தான். அப்போது ஒரு கூடாரத்தின் புறத்தே ஏதோ அசைவு விசித்திரமாகத் தென்பட்டது. திரும்பிப் பார்த்த குலசேகரனுக்கு அங்கே சாளரத்திரையை விலக்கிக் கொண்டு தன்னையே பார்க்கும் ஹேமலேகாவின் முகம் தெரிந்தது. குலசேகரன் உடலில் ஓர் பதட்டம் ஏற்பட்டது. எனினும் சமாளித்துக் கொண்டான். பின்னர் சற்றே குழப்பத்துடன் அவளிடம், "நீங்கள் கொடுத்த நாடகப் பிரதி ஓலைச்சுவடிகளை ராணி கிருஷ்ணாயி எரித்துவிட்டார். மிகவும் வருந்துகிறேன்!" என்று குழறிக் குழறிக் கூறினான். அவள் பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள். குலசேகரனுக்கும் மேலே என்ன பேசுவதெனத் தெரியவில்லை. அங்கிருந்து அகன்றான். தன் கூடாரத்துக்குப் போனான். நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்கு ஹேமலேகா தன்னிடம் பேசவே இல்லை என்பது கொஞ்சம் ஒருமாதிரியாகத் தோன்றியது. ஏன் பேசவில்லை? பயமோ என நினைத்தவன் அங்குள்ள சூழ்நிலையும் காரணமாக இருக்கலாம் என நினைத்தான். அப்போது தான் அவனுக்குத் தன் தாயின் திதியை அவள் நினைவூட்டியது அவன் நினைவில் வந்தது. அவளுக்கு ஓர் நன்றி கூடச் சொல்லவில்லையே என நினைத்து வருந்தினான்.

இரு தினங்களில் தீர்த்த யாத்திரைக் குழுவினர் திருவண்ணாமலையை அடைந்தனர். ஹொய்சள அரசர் தன் மனைவியைக் கண்டதும் மனம் மகிழ்ந்து அணைத்துக் கொண்டார். வழியில் பிரச்னை ஒன்றும் இல்லையே எனக் கேட்டார். அதற்கு ராணி கிருஷ்ணாயி அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாண்டிய நாட்டு வீரர்கள் நன்றாகக் கவனித்துக் கொண்டதாகக் கூறினாள்.யாத்திரையிலிருந்து திரும்பியதும் நன்றி தெரிவிக்கும் விதமாக அரண்மனையில் பற்பல யாகங்கள், ஹோமங்கள் வளர்த்து தானங்களைச் செய்தார்கள். இவை எதிலும் குலசேகரனும் குறளனும் கலந்து கொள்ளவில்லை. சத்திரத்திலேயே தங்கி ஓய்வு எடுத்தார்கள். எல்லா விசேஷங்களும் முடிந்ததும் ஹொய்சள மன்னரைக் கண்டு பேச வேண்டும் என நினைத்தார்கள்.

Friday, May 04, 2018

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

நல்லவேளையாக அந்த நால்வரும் துருக்க வீரர்கள் இல்லை. அவர்கள் மூத்த கொடவரைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்து கொண்டு ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள். கொடவர் முதலில் புரியாமல் விழித்தார். பின்னர் உற்றுப் பார்த்து இன்னார் என இனம் கண்டார். ஆகா, அழகிய நம்பியா? நாச்சியாரை நீங்கள் தானே தூக்கிச் சென்றீர்கள்? நாச்சியாரின் கதி என்ன? சௌக்கியமாய் இருக்கிறாரா? அவருக்கு வேண்டிய நிவேதனங்கள் வழிபாடுகள் எல்லாம் செய்து வருகிறீர்களா? அரங்கம் எப்படி இருக்கிறது? அங்கே இருந்தா வருகிறீர்கள்? அந்நியர்கள் அங்கிருந்து போய் விட்டனரா?" எனச் சரமாரியாகக் கேள்விகள் கேட்டார்.

மன வேதனையில் ஆழ்ந்த அழகிய நம்பி நாச்சியார் ஊர்வலத்துக்கு நேர்ந்த கதியைச் சொன்னார். நகைப் பெட்டகங்களைப் பூமிக்கு அடியில் புதைத்து விட்டு வந்ததைச் சொன்னார். பஞ்சு கொண்டானுக்குக் கொடுத்த வாக்குறுதியைத் தான் நிறைவேற்றவில்லை என வருந்தினார். கொடவர் அவரைத் தேற்றினார். அரங்கனுக்கு நேர்ந்த இன்னல்களைச் சொல்லி எல்லாவிதமான இன்னல்களிலிருந்தும் அரங்கனை எப்படியோ காப்பாற்றி விட்டோம். அதுவும் அவன் செயல். அவன் தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டு விட்டான். இனி என்னவோ!" என்றவர் அரங்கன் இருக்கும் இடத்தைச் சொல்லிப் போகும் வழியையும் விவரித்தார். பின்னர் அரங்கனுக்கு தினப்படி அமுது படைக்கவில்லை என்னும் வருத்தத்தைக் கூறித் தான் திடீரெனக் கிடைத்த இந்த நகையை விற்றுக் கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொண்டு அரிசி, தானியங்கள் வாங்கி வரப் போவதாய்ச் சொல்லிக் கீழே இறங்க ஆரம்பித்தார். அழகிய நம்பி மேலே ஏறினார். தழைகளால் அமைக்கப்பட்ட பந்தலில் மிக எளிமையான கோலத்தில் பக்கத்தில் உபய நாச்சியார்கள் இல்லாமல் தனித்திருந்த அரங்கனைக் கண்டு அவர் கண்கள் கண்ணீரால் நனைந்தன.

அரச வாழ்வு வாழ்ந்த அரங்கனுக்கும் இந்தக் கதியா என எண்ணி எண்ணி உருகினார். சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து வணங்கினார். அரசபோக வாழ்க்கை நடத்தி வந்த அரங்கன் இப்போது ஓர் துறவி போல் அனைத்தும் துறந்து வாழ்கிறானே என எண்ணி மருகினார்.


அங்கே தீர்த்த யாத்திரைக் குழுவில் அரை மனதாகத் தங்கி இருக்கும் குலசேகரன் இப்போது புழுவைப் போல் துடித்தான். அவன் மனம் அரங்கனிடமே இருந்தது. இரண்டு நாட்களில் காய்ச்சல் குணமாகிவிடவே மீண்டும் தன் காவல் வேலையையும் தொடங்கினான். அவன் மனதில் என்னென்னவோ எண்ணங்கள்! அரங்கனுக்காக உதவி கேட்கச் சென்ற இடத்தில் இப்படி மாட்டிக் கொண்டு விட்டோமே! குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்டவன் கதையாக அல்லவா ஆகி விட்டது!இந்த ராணி ஒருசமயம் நன்றாகப் பேசினாலும் பெரும்பாலும் கடுகடுவென இருக்கிறாள். இவளை எத்தகையவள் எனப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே! இனி இம்மாதிரி யாத்திரைகளை யோசிக்காமல் ஏற்கக் கூடாது! போதும், போதும் என்னும் அளவுக்கு இங்கே பிரச்னைகள்!இவர்களைத் திருவண்ணாமலைக்குக் கொண்டு மகாராஜாவிடம் ஒப்படைத்து விட்டு அரங்கன் இருக்கும் அழகர் மலை நோக்கிச் செல்ல வேண்டியது தான். அரங்கனை நாமே பார்த்துக் கொள்ளலாம். இவர்கள் உதவி எல்லாம் தேவை இல்லை!" என்று நினைத்தான்.

ஒரு நாள் அவன் காவலுக்குச் செல்லும் வேளையில் முன்னர் அவன் கூடாரத்துக்கு வந்த அபிலாஷிணி என்னும் அந்தச் சிறு பெண்ணைச் சந்தித்தான். அவளை அழைத்து நிறுத்தினான். அவளோ அவள் பெயரை அவனால் சொல்ல முடியவில்லை எனக் கேலி செய்தாள். குலசேகரன் சிரித்து விட்டு அவள் பெயரை முழுதுமாக ஒரு முறை சொல்லிக் காட்டிவிட்டு, "அபிலாஷிணி, நீ கோள் மூட்டி விடுவதில் தேர்ந்தவள் போல் தெரிகிறதே!" என்றான். ஆனால் அவளோ தனக்கு ஏதும் தெரியாதே என மறுக்கவே குலசேகரன் மேலும் தொடர்ந்தான்.

அபிலாஷிணி, நான் ஹேமலேகாவுக்குச் சொல் என ஒரு வடமொழி ஸ்லோகத்தை உன்னிடம் சொன்னால் நீ அதை ராணியிடம் போய்ச் சொல்லி இருக்கிறாயே! உன்னை யார் ராணியிடம் சொல்லச் சொன்னது? " என்று கேட்க அவளோ அவனிடம் அந்த ஸ்லோகத்தின் அர்த்தம் கேட்டதாகவும் அவன் சொல்லவில்லை என்றும் சொன்னாள். அதனால் தான் மகாராணியிடம் போய்க் கேட்டதாகவும் அவர்கள் பொருளைச் சொன்னதாகவும் கூறினாள். நீங்கள் என்ன சொன்னீர்கள் எனப் புரிந்து விட்டது! படிப்பதற்கு எனக்கு ஒரு காவியத்தைக் கொடு எனக் கேட்டிருக்கிறீர்கள்! அல்லவா? அதைத் தமிழிலேயே சொல்லி இருக்கலாமே! இதை நான் புரிந்து கொண்டால் என்ன ரகசியம் வெளிப்பட்டு விடும்?" என்று கேட்டாள் அபிலாஷிணி!

Wednesday, May 02, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஆத்திரத்தில் இருந்தாலும் குலசேகரன் அதை வெளிக்காட்ட்டாமல் அமர்ந்திருக்க ராணி கிருஷ்ணாயி அவனிடம் கோபமா எனக் கேட்டாள். தன் கோபம் அவளை என்ன செய்யும் எனக் கேட்டான் குலசேகரன். அப்போது கிருஷ்ணாயி காவியத்தை ஏன் ஏட்டில் படிக்க வேண்டும்? கண்கள் வழியாகப் படிக்கலாமே எனக் கேட்டாள். குலசேகரனுக்கு அவள் எதை நோக்கிப் பேசுகிறாள் என்பது புரியவில்லை. ஆகவே மௌனம் காத்தான். அதைக் கண்ட ராணி மற்றவர்கல் அனுபவங்களைப் படித்துக் தெரிந்து கொள்வதை விடச் சொந்தமாக அனுபவித்துத் தெரிந்து கொள்வதே நல்லது என்றாள். குலசேகரனுக்கு ஒரு மாதிரியாகப் புரிந்தாலும் பதில் சொல்லவில்லை. ராணி அவனிடம் புரிந்து கொண்டாயா இல்லையா எனக் கேட்கத் தான் புரிந்து கொண்டாலும் அப்படி எல்லாம் இருக்கும் அளவுக்குத் தான் பெரிய மனிதன் இல்லை என்று குலசேகரன் பதில் சொன்னான். தனக்கு அத்தகைய வாழ்க்கை பழக்கம் இல்லை என்றும் கூறினான்.

கிருஷ்ணாயி அதற்கும் சிரித்தாள். ஏன் பழக்கம் இல்லை என்கிறாய்? எளிதில் பழகலாம்! தெரிந்து கொள்ளலாம். என்ன கஷ்டம் இதில் என்றாள். குலசேகரனோ தனக்கு அதில் இஷ்டம் இல்லை என்றும் தான் கொண்டிருக்கும் லட்சியத்திற்கு அது ஊறு விளைவிக்கும் என்றும் மறுமொழி சொன்னான். மேலும் லட்சியம் ஈடேறும்வரை தனக்கு வேறு எவ்விதமான சுகபோக வாழ்க்கையிலும் விருப்பம் இல்லை என்றும் கூறினான். ராணி அதற்கு ஏளனமாக என்ன லட்சியம் பெரிய லட்சியம் உனக்கு? போயும் போயும் ஒரு உலோக விக்ரகத்திற்காக உயிரையே கொடுக்கிறேன் என்கிறாயே! என்றாள். குலசேகரனுக்கு மீண்டும் கோபம் வந்தது. ராணியை நிமிர்ந்து பார்த்தான். அவன் பார்வையின் தீவிரம் அவன் கண்கள் வழி தெரிந்தது.

"ராணி! அது வெறும் உலோக விக்ரகம் மட்டுமல்ல. இந்தத் தமிழ்மொழியைப் பேசும் மக்களின் நம்பிக்கையால் செய்யப்பட்ட விக்ரகம் அது. மக்களின் நம்பிக்கையே அந்த விக்ரகத்தில் தான் அடங்கி உள்ளது. நமக்கு முன்னே எத்தனையோ மகான்களும் ஆழ்வார்களும் தீந்தமிழ்ப் பாசுரங்கள் பாடிப் பாடி தெய்வீகத்தை அந்த விக்ரகத்தின் மேல் சமர்ப்பித்திருக்கிறார்கள். எட்டுத் திசைகளிலும் அந்த விக்ரகத்தின் புகழ் பரவியுள்ளது. அது உயிருள்ளது. வெறும் உலோகம் அல்ல. தத்துவம் அது. ஒரு சமுதாயத்தின் ஆன்மாவே அந்த விக்ரகம் தான். ஆகவே அதைப் பாதுகாப்பதே என் கடமை என நான் நினைப்பதில் என்ன தவறு? அதுவே என் முக்கியக் கடமை! என் லட்சியம்!" என்று ஆவேசமாகப் பேசினான்.

இப்படியும் அப்படியும் திரும்பிக் கொண்டு ராணி சிரித்த சிரிப்பில் அவள் ஆபரணங்கள் ஒளியைச் சிந்தின. அவனைப் பார்த்து, " ஏ, வீரனே! உன்னை விட லட்சியவாதிகளை எல்லாம் பார்த்துவிட்டேன். அவர்கள் என்னகதி ஆனார்கள் என்பதும் எனக்கு மட்டுமே தெரியும். ஆனாலும் உன் லட்சியம் அரங்கனைக் காப்பது என்றாலும் நீ காவியமும் படித்துத் தான் ஆக வேண்டும்! அதை நினைவில் வைத்துக் கொள்! புரிந்து கொள்!" என்று ஆணையிடும் தோரணையில் கூறிவிட்டுச் சென்றாள்.

அங்கே அழகர் மலையில்!
மாலை நேஎரம் வரை அங்கே பொழுதைக் கழித்தார்கள் மதுரை அரண்மனையில் இருந்து வந்திருந்த பெண்களும் துணைக்கு வந்த அலிகளும். வாசந்திகாவும் அவர்களுடன் பொழுதைக் கழித்தாள். அவர்கள் அனைவரும் சென்ற பின்னரே புதர்களுக்கு இடையே மறைந்திருந்த கொடவர்கள் வெளியே வந்தனர். ஆவலுடன் வந்து வாசந்திகா மூடி மறைத்து வைத்திருந்த அரங்கன் விக்ரகத்தைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அரங்கன் எவ்விதக் குறையுமின்றி அங்கே இருந்தான். அவன் கழுத்தில் வாசந்திகா அணிவித்திருந்த பொன் ஆரம் கிடக்கவே  கொடவர்கள் அதை ஆச்சரியத்துடன் எடுத்துப் பார்த்தார்கள். நல்ல பொன்னால் செய்யப்பட்டது என்பதை அறிந்ததும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கையில் பொருள் இல்லாமல் அரங்கன் சேவைக்கு என்ன செய்யலாம் எனக் கவலைப்பட்ட சமயத்தில் இது கை கொடுக்க வந்திருப்பதை அறிந்து சந்தோஷம் அடைந்தனர். காலையிலிருந்து அரங்கனுக்குஎதுவும் படைக்க முடியாமல் போனதை நினைத்து மனம் வருந்திய வண்ணம் காட்டில் கிடைக்கும் கனிகளைப் பறித்து வரலாம் என்று சென்றார்கள். சில கொய்யாக்கனிகளைப் பறித்து வந்து அரங்கனுக்குப் படைத்துத் தாங்களும் உண்டனர்.

இனி இங்கிருந்தால் ஆபத்து எனக் கருதி மறுநாள் காலை அரங்கனை எழுந்தருளப்பண்ணிக் கொண்டு மலையின் காடுகள் வழியாக மற்றொரு பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே கொஞ்சம் ஆசுவாசம் செய்து கொண்டு இன்ரைய பொழுதை எப்படிக் கழிப்போம் என்று எண்ணும் வேளையில் அவர்களில் மூத்தவர் பெருமாளுக்கு இன்னும் எத்தனை நாட்கள் அன்னம் படைக்காமல் இருப்பது? கனிவகைகளையே படைத்து வருவதால் அவர் உடலுக்குக் கேடு வராதா என வருத்தத்துடன் வினவினார். பின்னர் தங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆபரணத்தை விற்று வேண்டிய பொருட்களை வாங்கி வருவதாகச் சொன்னார்.  மற்ற இருவரும் சம்மதிக்கவே அவர் மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தார். அப்போது நான்கு நபர்கள் தாடி வைத்துக் கொண்டிருந்தவர்கள் மலையின் மேல் ஏறத் தொடங்கி இருந்தனர். அவர்களைப் பார்த்த மூத்த கொடவர் திகைத்து நிற்க அவர்களோ "ஹோ" என்று கத்தினார்கள்.