எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, April 16, 2021

கோபமும் தாபமும்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 பண்டிதரும் கங்காதேவியும் கோபண்ணாவைப் புனித யாத்திரை மேற்கொண்டு அதன் மூலம் அவர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம் என ஆலோசனை சொல்ல கோபண்ணாவும் தாற்காலிகமாக இது ஒரு தீர்வு எனில் ஏற்றுக்கொள்ளலாமே என யோசித்தார். அவ்வளவில் எழுந்து இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார் கோபண்ணா. பின்னர் திரும்பி இருவரையும் பார்த்துத் தான் நாளைக்கே பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் சொன்னார். இருவருமே அதை ஏற்றுக் கொண்டனர்.  அதற்குள்ளாக இங்கே மருத்துவமனையில் இருந்த தத்தனுக்குள் பல யோசனைகள்!

இருட்டாக இருந்த ஓர் குச்சில் தத்தனைப் படுக்க வைத்திருந்தார்கள், அதன் மூலம் தன்னைப் பாதுகாக்கவே இப்படி ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையும் தத்தன் அறிந்து கொண்டான். ஆங்காங்கே எலிகள் வேறே அங்குமிங்குமாக ஸ்வாதீனத்துடன் ஓடிக் கொண்டிருந்தன.  வெளிச்சம் வர வழியே இல்லை போலிருக்கே என தத்தன் நினைக்க மேலே உச்சி முகட்டில் ஒரு கண்ணாடித் துண்டு ஒட்டி இருந்தது. அதன் மூலம் கொஞ்சம் வெளிச்சமும் வந்தது. என்றாலும் இவ்வளவு மோசமான இடத்தில் தன்னைக் கொண்டு விட்டுவிட்டு வல்லபன் எங்கே போனான்? தான் ஏன் இங்கே வந்து கிடக்கிறோம்! எழுந்து தான் பார்ப்போமே! என நினைத்தவாறு தத்தன் மெல்ல எழுந்தான். அடுத்த கணம் அவன் கட்டிலில் அப்படியே விழுந்து விட்டான். இத்தனை பலஹீனம் தனக்குள் எப்படி ஏற்பட்டது? இதை நினைத்து தத்தன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். என்னதான் காய்ச்சல் அடித்தாலும் 2,3 நாட்கள் காய்ச்சலில் தனக்கு இத்தனை பலஹீனமா என தத்தன் நினைத்த வண்ணம் இன்னொரு முறை எழுந்து பார்க்க உத்தேசித்தான். 

மெல்ல மெல்ல எழுந்து சுவரைப் பிடித்துக் கொண்டு சற்று நேரம் நின்றுவிட்டுப் பின்னர் சுவரைப் பிடித்த வண்ணமே மெல்ல மெல்ல நடந்து அந்தக் குச்சிலின் வாயிலுக்கு வந்தான். அந்தக் குச்சிலில் இரு வாயில்கள் இருந்ததையும் ஒன்று புழக்கடைப்பக்கம் போவதையும் இன்னொன்று அந்த வீட்டின் உட்புறம் செல்வதையும் கண்ட தத்தன் புழக்கடைப் பக்கத்து வாயிலைத் திறந்தான். பளீரென்ற வெளிச்சம் அவன் கண்களைக் கூசியது. பசுமையானதொரு சோலையும் அங்கே தெரிந்தது. மெல்ல அப்படியே வெளியே செல்லலாம் என நினைத்தவன் போல ஓர் அடி எடுத்து வைத்தான். உடனேயே உள்ளே இருந்து மஞ்சரியின் குரல் கூவும் சப்தம் கேட்டது! "அடடா! பார்த்தீர்களா! இது என்ன வேலை!" என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மஞ்சரி ஓடோடி வந்தாள். இப்படிப் போவது ஆபத்தல்லவோ என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்து தத்தன் கையைப் பிடிக்க அவன் கோபத்துடன் அவள் கைகளை உதறினான். இம்முறை மஞ்சரிக்கும் கோபம் வந்து அவனை முறைத்துப் பார்த்தாள்.

"ஐயா, மஹானுபாவனே! போங்க! போங்க! தாராளமாய்ப் போங்க! எனக்கு என்ன வந்தது? உங்கள் நண்பர் தான் உங்களுக்கு ஆபத்து இருப்பதைச் சொல்லி எனக்கு எச்சரிக்கையும் செய்துவிட்டுப் போனார். அவர் சொன்னதின் மேல் தான் நான் உங்களைக் கண்ணும், கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டதோடு உங்களைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன். என் தாத்தா சொல்லிக் கொண்டே இருப்பது போல் மற்றவங்க வேலைகளில் நான் தலையிட்டிருக்கக் கூடாது தான். அதுதான் அவமானப்பட்டு நிற்கிறேன். எனக்கு நன்றாய் வேண்டும். இது போதாது!" என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். பிறகு தத்தன் கைகளை அவளும் உதறிவிட்டுப் புழக்கடைக் கதவை உள்ளிருந்து சார்த்திக் கொண்டு அங்கிருந்து போய்விட்டாள். தத்தனுக்கு மனசு எப்படியோ ஆகிவிட்டது. அவனும் உள்ளே வந்தான். கட்டிலில் அமர்ந்த வண்ணம், அவளை, "இந்தா!" என அழைக்க அவளோ, "என் பெயர் மஞ்சரி!" என்று கோபத்துடன் சொன்னாள். 

"பேசுவதற்கு உன் பெயர் தேவையா என்ன?" என்றான் தத்தன். மேலும் தொடர்ந்து, "இது என்ன இடம்? எந்த ஊர்? என் நண்பன் வல்லபன் எங்கே? நான் ஏன் இங்கே இருக்கிறேன்? எத்தனை நாட்களாக இருக்கிறேன். எல்லாவற்றையும் விபரமாகச் சொல்!" என்றான் அவளைப் பார்த்து. அவளோ ஹூம் என்ற வண்ணம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பின்னர் கையிலிருந்த பால் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, தான் முன்னர் சொன்னபோது சரியாகக் கேட்டுக் கொள்ளாத தத்தனுக்கு இப்போச் சொல்லத் தன்னால் முடியாது என்ற வண்ணம் எழுந்து உள்ளே போக ஆரம்பித்தாள்.

தத்தனோ அவளை மீண்டும் அழைத்து முழு விபரத்தையும் சொல்லிவிட்டுப் போகும்படி கேட்டான். அவளும் ஓரளவுக்கு சமாதானம் ஆகித் திரும்பி வந்தாள். அங்கே இருந்த ஓர் பானை மேல் அமர்ந்த வண்ணம் தத்தனிடம் நடந்தவை அனைத்தையும் தெரிவித்தாள். தத்தனுக்கு அந்த வீரர்களிடமிருந்து இன்னமும் ஆபத்து விலகவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினாள். தத்தன் எப்படியானும் தப்பித்துச் சென்று விடலாமா என யோசித்தான். ஆனால் அந்தப் பெண்ணோ அதற்கான வலு இப்போது தத்தனிடம் இல்லை. இந்த நிலையில் வெளியில் சென்றால் மீண்டும் ஜூரமும், ஜன்னியும் வரலாம் என்றும் குறைந்த பட்சமாக இன்னும் பத்து நாட்கள் வெளியே செல்ல முடியாது என்றும் தெரிவித்தாள்.  தத்தனுக்கு ஒரு வாரம் அதிகப்படியாகத் தோன்றியது. தான் உடனே வல்லபனைப் பார்த்தாக வேண்டும் என்றான். அவள் கூடாது என்று சொல்ல தத்தன் இரவில் தான் எவரும் அறியா வண்ணம் சத்திரத்தில் போய்ப் பார்க்கப் போவதாய்ச் சொன்னான். 

அந்தப் பெண்ணோ தத்தன் தலை வெளியே தெரிந்தாலே அவனுக்கு ஆபத்து என்றாள். அந்த வீரர்கள் அங்கேயே இருப்பதாகவும் அடிக்கடி அந்த மருத்துவமனைக்கு வந்து சோதனைகள் போடுவதாகவும் சொன்னாள். அதற்கு மட்டும் அவர்கள் வரவில்லை. அவர்களில் ஒருவனுக்குக் காலில் அடிபட்டுப் படுத்திருப்பதும் ஒரு காரணம் என்றாள். அதைக் கேட்ட தத்தன் அந்தப் பெண்ணிடம் அவள் ஓர் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டான். அவளும் என்ன உதவி எனக் கேட்க வல்லபனைப் போய்ப் பார்த்துவிட்டு விபரங்களைத் தெரிந்து கொண்டு வரும்படியும், அவன் சத்திரத்தில் தான் இருப்பான் என்றும் கூறினான். அவளும் சம்மதித்துக் கொண்டு தெருவில் வந்து சத்திரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் பின்னாலேயே யாரோ வருவது போன்ற உணர்வு அவளுக்குள் ஏற்பட்டது.