எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, February 25, 2011

ஜெய ஜெய விட்டல, ஹர ஹர விட்டல!

அம்பத்தூரை விட்டுக் கிளம்பியதும், காஞ்சீபுரத்தில் காலை உணவு சாப்பிட்டு விட்டு நாங்கள் முதலில் சென்றது தென்னாங்கூர் தான். வழியிலே பல சமணக் கோயில்கள் கண்களில் பட்டன. ஆனால் இறங்கிப் பார்க்கும்படியாகத் தனியாகச் செல்லவில்லை. சுற்றுலாக் குழுவோடு சென்றோம். திருவண்ணாமலை குறித்து இன்னமும் நிறையவே எழுத இருக்கிறது. ஆனாலும் நாங்கள் உண்ணாமுலை அம்மனைத் தரிசித்த போதே மாலை ஆறே முக்கால் ஆகிவிட்டபடியால் எங்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சாப்பிட்டுவிட்டு ஏழரை மணிக்குள்ளாகக் கிளம்பினால் தான் அம்பத்தூருக்கு இரவு பனிரண்டு மணிக்குப் போய்ச் சேருவோம் என்று கூறிவிட்டார். ஆகவே பார்த்த வரையிலும் போதும் என்று கிளம்பவேண்டியவர்களாகிவிட்டோம். அந்தப் பயணத்தில்தான் மேற்கண்ட படி நாங்கள் தென்னாங்கூருக்கு முதலில் போனோம். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பாண்டுரங்கன் கோயில் உள்ளது என்றும் விட்டலாபுரம் என்ற பெயரிலேயே இருப்பதாயும் கேள்விப் பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. ஆனால் இந்தக் கோயில் சமீப காலங்களில் எழுப்ப பட்டுள்ளது. காஞ்சீபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் உள்ளது.

ஞாநாநந்தரின் பிரதம சீடரான ஸ்ரீஹரிதாஸ்கிரி அவர்களால் கட்டப் பட்டது இந்தக் கோயில். நுழைவாயில் நம் தென்னிந்தியக் கட்டடக் கலையைப் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால் சின்ன கோபுரம் தான். விட்டலன் இருக்கும் மூலஸ்தானத்தின் மேல் எழுப்பப் பட்டிருக்கும் கருவறை விமானமோ நல்ல உயரமாய்க் காட்சி அளிக்கிறது. அசைப்பில் பூரி ஜெகந்நாதர் கோயில் கோபுரம் போன்ற அமைப்பு. பூரியை இன்னும் பார்க்கவில்லை. என்றாலும் கோபுரத்தைப் படங்களில் கண்டது. ஸ்ரீஞானாநந்தர்ஜ்யோதிர்மடத்தில் இருந்து காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்ததாயும் பண்டரிபுரம் வந்த சமயம் ஞான சித்தி கிடைத்தது எனவும் கேள்விப் படுகிறோம். அவருடன் கதிர்காம ஸ்வாமிகளும் சென்றதாயும் இலங்கை கதிர்காமத்துக்கே இருவரும் சென்று தரிசித்து சீர்காழியில் கதிர்காம ஸ்வாமிகளும், திருக்கோயிலூரில் ஞானாநந்தரும் ஆசிரமம் அமைத்துக்கொண்டதாயும் கூறுகின்றன. ஞானாநந்தருடைய முக்கிய சீடர் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள். ஞானாநந்தரிடம் தீக்ஷை பெற்றுக்கொண்டு ஊர் ஊராய்ச் சென்று நாம சங்கீர்த்தனத்தின் பெருமையைப் பரப்பிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு சமயம் அவர் மஹாராஷ்டிரத்தில் பயணம் செய்தபோது மங்கள்வாடி என்னும் கிராமத்தில் இரவு தங்கி இருக்கையில் கனவில் குரு ஞானாநந்தர் தோன்றிப் பண்டரிபுரம் செல்லப் பணிக்கிறார். அப்படியே பண்டரிபுரம் சென்ற ஹரிதாஸ்கிரியிடம் அங்கிருந்த அர்ச்சகர், முதல்நாள் கனவில் பாண்டுரங்கன் தோன்றி, இந்தச் சின்னப் பாண்டுரங்க விக்ரஹத்தை ஒப்படைக்கும்படி கூறியதாய்ச் சொல்லி ஹரிதாஸ்கிரியிடம் ஒரு பாண்டுரங்க விக்ரஹத்தைக் கொடுக்கிறார். அந்த விக்ரஹம் பண்டரிநாதனிடம் குழந்தைப்பேறு வேண்டி நிறைவேறிய ஒரு தம்பதிகள் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுத்திருந்தார்கள். தினமும் அந்த விக்ரஹத்திற்கும் வழிபாடுகள் செய்யப் பட்டு வந்தது. அந்த விக்ரஹத்தை ஹரிதாஸ்கிரியிடம் ஒப்படைத்த அர்ச்சகர் தம் கனவையும் இறைவன் கட்டளையையும் அவருக்குத் தெரிவிக்க அதை எடுத்துக்கொண்டு வந்த ஹரிதாஸ்கிரி விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்யவும், கோயில் கட்டவும் தேர்ந்தெடுத்த இடமே தென்னாங்கூர். தென்னாங்கூர்க் கோயிலை நாளை சுற்றிப் பார்க்கலாம்.

Wednesday, February 16, 2011

அண்ணாமலைக்கு அரோஹரா!

பிரம்மதீர்த்தக்கரையிலிருந்து மேற்கே திரும்பி வந்தால் அதன் இருபக்கங்களிலும் காணப்படும் சந்நிதிகளில் தெற்கே யானை திறை கொண்ட விநாயகரும், வடக்கே சுப்பிரமணியரும் காணப்படுகின்றனர். இந்த விநாயகர் கனவில் வந்து மிரட்டி யானையைக் கப்பமாய்க் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம். இதெல்லாம் நின்று பார்க்க நேரமில்லாமல் அவசரமாய்த் தான் பார்க்கவேண்டி வந்தது. வேறு வழியில்லை. குழுவிலிருந்து பிரிந்தால் அவங்களுக்கும் கஷ்டமே. குழுவோடு வராமல் தனியாக வந்து நான்கு நாட்களாவது தங்கி இருந்து பார்க்கவேண்டும். எப்போ முடியுமோ தெரியலை! இந்தப் பகுதியில் ஆட்சி புரிந்த கொடுங்கோல் மன்னன் ஒருவனின் கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் துன்பப் பட்டுக்கொண்டிருந்தனர். இந்தக் கோயில் விநாயகரிடம் முறையிட்டு அழ, விநாயகர் மன்னன் கனவில் வந்து அவனை மிரட்டினாராம். பயந்து போன மன்னன் மறுநாளே இந்தச் சந்நிதிக்கு வந்து தன் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு யானைகளை வாங்கிக் காணிக்கை செலுத்தினானாம். யானைகளைக் கப்பமாய்ப் பெற்றுக்கொண்ட்தால் யானை திறையாகக் கொண்ட விநாயகர் என்ற பெயர் இவருக்கு. இங்கே தான் சுப்பிரமணியர் கம்பத்து இளையனார் என்ற பெயரோடு விளங்குகிறார். இந்தக் கோயிலில் பெரியவர் அண்ணாமலையாரே. அவர் பெரு நெருப்பு. அந்தப் பெரு நெருப்பிலிருந்து தோன்றிய சின்னஞ்சிறு நெருப்பான முருகனை இங்கே அவர் குழந்தை என்பதாலும், அப்பாவை விடச் சின்னவர் என்பதாலும் இளையனார் என்றே அழைக்கின்றனர்.


ஐந்து நிலைகளோடு கூடிய கிளி கோபுரத்தின் திருப்பணிகளைச் செய்தது திரிபுவனச் சக்கரவர்த்தி ராஜேந்திரசோழன் என்று கல்வெட்டு குறிப்ப்பிட்டிருப்பதாய்த் தெரிய வருகிறது. கிளிகோபுரத்தின் கதை தான் ஏற்கெனவே சொல்லியாச்சு. அருணகிரியார் இங்கே கிளி வடிவில் ஞானம் பெற்று அந்த வடிவிலேயே இன்னமும் அந்தக் கோபுரத்தின் மீது வீற்றிருந்து அருள் புரிவதாய் ஊர் மக்களின் ஐதீகம். மேலும் அம்பிகையில் தோள்களில் காணப்படும் கிளியும் இவரே எனவும் கூறப்படுகிறது. ஞானக்கிளியான அருணகிரியைத் தம்மிடமிருந்து அன்னைக்கு முருகன் கொடுத்ததாயும் ஐதீகம். கிளி கோபுரத்தின் நேரே காணப்படுவது நாம் தொலைக்காட்சிகளில் காணும் தீபதரிசன மண்டபம். பதினாறு கால் மண்டபம் ஆன இது எவரால் கட்டப்பட்டது என்று கேட்க ஆச்சரியம் மிகுந்தது. பாண்டிமாதேவி என அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் சிறப்பித்துச் சொல்லப்படும் மங்கையர்க்கரசியாரால் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு தான் திருக்கார்த்திகை தீபத்திருநாளில் பஞ்சமூர்த்திகளோடு அர்த்தநாரீசுவரரும் ஆடிக்கொண்டு வந்து பொது மக்களுக்குக் காட்சி கொடுக்கிறார்கள். இதைக் காட்சி மண்டபம் எனவும் அழைப்பதாய்த் தெரிய வருகிறது.

கிளி கோபுரத்தைத் தாண்டியதும் வரும் பிரகாரத்திலிருந்து பார்த்தால் அம்மன் சந்நிதி காணப்படுகிறது. உண்ணாமுலை அம்மனை தரிசிக்கச் சென்றோம். உண்ணாமுலை அம்மனை என்னவோ பெரியவளாக, எங்க புக்ககத்து ஊரான கருவிலியின் சர்வாங்கசுந்தரியைப் போல் உயரமும், பருமனுமாக ஒரு ஆகிருதியோடு இருப்பாள் என நினைத்துப் போனால் என்ன ஆச்சரியம்? சின்னஞ்சிறு பெண் போல சித்தாடை இடை உடுத்திக் காணப்பட்டாள் உண்ணாமுலை அம்மன். பார்க்கப் பார்க்க்க் கண்கொள்ளாக் காட்சி அம்மனின் அலங்காரம். கையில் அள்ளிக்கொள்ளலாம் போல சிறு உடல். கண்ணெதிரே ஒரு வாலைக்குமரி தான் நின்றாள்.
ஆனால் நின்று பார்க்கத்தான் விடவில்லை. இத்தனைக்கும் கூட்டம் என்னமோ குறைவு தான். நாங்க ஒரு பதினைந்து பேர் இருந்தோம். அதைத் தவிர சில சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களுமே காணப்பட்டாலும் அர்ச்சகர் விரட்டினார். எனக்குக் கோபம் வந்து வருஷக் கணக்காய்க் காத்திருந்து சிறப்பு தரிசனச் சீட்டும் வாங்கிக்கொண்டு வந்திருக்கோம். அதுவும் தூரத்திலே இருந்து. பார்க்க விடமாட்டேங்கறீங்களேனு கேட்க, அங்கே வாக்குவாதம் வேண்டாம்னு ரங்க்ஸ் என்னைப் பிடிச்சு இழுக்க, நான் அடம் பிடிக்க அர்ச்சகர் என்னை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருப்பார்? நீங்க அங்கே வெளியே போய் அந்த மேடையிலே நின்றுகொண்டு எத்தனை மணி நேரம் வேணாலும் பாருங்கனு விரட்டிட்டார். அந்த மேடை கர்ப்பகிரஹத்திலிருந்து தள்ளி வெளிவாசலுக்கு அருகே இருந்தது. ஏற்கெனவே பத்துப்பேர் நின்னுட்டு இருந்தாங்க. அவங்க எல்லாம் தர்ம தரிசனம் போலிருக்கு. உள்ளே வரமுடியாமல் அங்கே நின்னு பார்த்தாங்க. நாம தான் சீட்டு வாங்கி இருக்கோமேனு கோபம் வந்தாலும் ஒண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணும் பண்ணமுடியலை. இதுக்குப் பழநி மலையில் பரவாயில்லை போலிருக்கு. சிறப்பு தரிசனச் சீட்டுனு காட்டியதுமே சந்நிதிக்கு எதிரே பத்து நிமிஷம் உட்காருங்க. நின்று கொண்டு பார்த்தால் பின்னால் பார்க்கிறவங்களுக்கு மறைக்கும். நாங்க எழுப்பற வைக்கும் உட்கார்ந்து பார்க்கலாம்னு சொல்லிட்டு நாங்க கொண்டு போன பால், போன்றவற்றை அபிஷேஹமும் செய்து வைத்து அர்ச்சனையும் பண்ணிக் கொடுத்தாங்க. அதுக்கே குறைப்பட்டேன் இல்ல?? நல்லா வேணும்னு தோன்றியது இப்போ!

Tuesday, February 08, 2011

அண்ணாமலைக்கு அரோஹரா!

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
1.10.1
98

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.


அண்ணாமலைக் கோயிலில் மலை மேல் தீபம் ஏற்றும் உரிமை பர்வதராஜ குலம் எனப்படும் மீனவ குலத்தவருக்கே உரிமை உண்டு. ஈசன் மீனவனாய்ப் பிறந்து செய்த திருவிளையாடலை நினைவு கூரும் வண்ணமாயோ? தெரியலை. கொடி ஏற்றுவது தேவாங்கர் இனத்தவர். அவங்க நெய்து கொடுக்கும் துணியில் தான் கொடி ஏற்றப்பட்டு விளக்கு ஏற்றத் திரிக்குத் துணியும் பெறுகின்றனர். கார்த்திகை தீபத் திருவிழா வெகு கோலாகலமாய் நடைபெறும். தேரோட்டம் அப்போது தான் நடக்கும். அண்ணாலையார், விநாயகர், சுப்ரமணியர், உண்ணாமுலை அம்மன், சண்டேஸ்வரர் ஆகியோர் தேரில் வீதி வலம் வருவார்கள். நாட்டுக்கோட்டை நகரத்தார் எனப்படும் செட்டியார்களால் அதிகமாய்த் திருப்பணி செய்யப்பட்ட கோயிலும் இதுவாகும். இந்த ஊரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பிரதோஷ அபிஷேஹம் நடைபெறும். என்றாலும் அண்ணாமலையார் ஆலய மஹாநந்திக்கு நடக்கும் பிரதோஷ அபிஷேஹமே சிறப்பு வாய்ந்தது. இங்கே உலக நன்மைக்காகப் பிரார்த்தித்துக்கொண்டு ஒவ்வொரு பிரதோஷத்திலும் வேத கோஷங்களோடு திருமுறைகளும் ஓதப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி வழிபாடுகள் செய்வார்கள். காணக்கிடைக்காத காட்சி என்கின்றனர். கூட்டத்தை நினைச்சால் தான் பயமா இருக்கிறது. 


மேலும் தமிழ்நாட்டின் அனைத்து சிவன் கோயில்களிலும் காமதகனம் நடைபெறுவதில்லை. ஆனால் இந்தக் கோயிலில் காமதகனம் நடைபெறும். இந்தக் கோயில் கிரிவலம் அண்ணாமலையாரே செய்து வந்ததாய் ஐதீகம். அதை ஒட்டி இப்போதும் ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், தைமாதம் மாட்டுப்பொங்கலன்றும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள். உண்ணாமுலை அம்மனின் ஊடலைத் தீர்க்கும் திருவூடல் உற்சவம் அப்போது நடைபெறும். மலையைச் சுற்றுவதால் ஈசனுக்கு மலையைச் சுற்றும் மஹாதேவன் என்ற பெயரும் உண்டு. இங்கே கிரிவலப்பாதையில் உள்ள அநேக கோயில்களைத் தவிர பல பெரியோர்கள், சித்தர்கள், சுவாமிகள் போன்றோரின் ஆசிரமங்கள் உண்டு. இங்கே இருந்து உலகோருக்கு ஆன்மீகத்தைப் போதித்த பலரில் பகவான் ஸ்ரீரமண ரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், இசக்கி சுவாமிகள், ஆலமரத்து சாமிகள், காட்டு சிவா சுவாமிகள், கயிறு சாமி, பிரும்மானநந்த சுவாமி, ஜடை சாமி போன்றோர் ஆசிரமங்களும் சமீப காலத்தில் வாழ்ந்த யோகியான ராம்சூரத்குமார் அவர்களின் ஆசிரமமும் இருக்கின்றன. இது பகவான் ஸ்ரீ ரமணரின் ஆசிரமத்தில் எடுத்த படம். இங்கே உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தோமானால் நம்முள்ளே பல அரிய மாற்றங்கள் ஏற்படும் என்று கூறுகின்றனர். நாங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்தோம். தியானம் செய்ய நேரமெல்லாம் கொடுக்கவில்லை. சீக்கிரமாய்க் கிளம்ப வேண்டி இருந்த்து.  மற்ற ஆசிரமங்களையும் பார்க்க நேரமில்லை.

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் பெயரும், புகழும் பெற்றது இந்தத் திருவண்ணாமலையில் தான். அருணகிரியார் சம்பந்தாண்டான் என்பவன் தூண்டுதலின் பேரில் அரசனால் பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி கட்டளை இடப்பட்டார். கூடுவிட்டுக் கூடு பாயும் சித்தி கைவரப் பெற்ற அருணகிரியார் தன் உயிரைத் தன் உடலில் இருந்து நீக்கிச் செத்த ஒரு கிளியின் உடலில் செலுத்திக்கொண்டு பாரிஜாதத்தைக் கொண்டு வருகிறார். ஆனால் அதற்குள் அருணகிரியாரின் உடலை எரித்துவிடுகிறான் சம்பந்தாண்டான். ஆஸ்தான புலவன் ஆன சம்பந்தாண்டானின் பொறாமையைப் புரிந்து கொள்ளாத மன்னனும் முதலில் அருணகிரி இறந்துவிட்டார் என்றே நம்புகிறான். பின்னர் கிளி வடிவில் அங்கு வந்து சேர்ந்த அருணகிரியார், கிளி கோபுரத்தில் அமர்ந்த வண்ணமே கந்தரநுபூதியைப் பாடினார். கிளி வடிவிலேயே இருந்த அவரை அவ்வடிவிலேயே முருகன் ஆட்கொண்டான். அந்தக் கோபுரம் கிளி கோபுரம் என்று அது முதல் அழைக்கப் படுகிறது.

இதே போல் குகை நமசிவாயரின் சீடரான குரு நமசிவாயர் குருவின் ஆலோசனைப்படி திருவண்ணாமலையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் தியானத்துக்கு அமர்ந்தார். தியானம் முடிந்ததும் பசி எடுக்க உண்ணாமுலை அம்மனை நினைந்து “அண்ணாமலையார் அகத்துக்கு இனியாளே, உண்ணாமுலையே, உமையாளே, உண்ணச் சோறு கொண்டுவா!” என்று பாட அப்போது தான் கோயிலில் தங்கத் தாம்பாளத்தில் சர்க்கரைப் பொங்கலை அர்ச்சகர்கள் நிவேதனம் செய்து கொண்டிருக்க, தாம்பாளத்தோடு பொங்கல் குரு நமசிவாயரை வந்தடைகிறது. தங்கத் தாம்பாளத்தைக் காணாமல் திகைத்த அர்ச்சகர்கள் மனம் கலங்கி நிற்க, அங்கிருந்த ஒரு குழந்தையின் உடலில் புகுந்து கொண்ட அம்பிகை தங்கத் தாம்பாளத்தைப் பொங்கலோடு தான் குரு நமசிவாயருக்குக் கொடுத்த்தையும், தாம்பாளம் இப்போது ஒரு குறிப்பிட்ட மரத்தடியில் இருப்பதையும் சொல்லி அங்கிருந்து தாம்பாளத்தை எடுத்து வரச் சொல்ல, அவ்விதமே சென்று பார்த்தவர்களுக்குத் தாம்பாளம் கிடைத்த்து.