எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, December 29, 2008

சிதம்பர ரகசியம்- இது தான் சிதம்பர ரகசியம்!

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள் பாடி அப்பொருளாமாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

இங்கு மாணிக்கவாசகர் ஆண்கள் தங்கள் காதுகளில் அணிந்திருக்கும் குழைகளும், பெண்களின் கூந்தலும், அந்தக் கூந்தலின் மணத்துக்காக நுகர வந்த வண்டினங்களும் அனைத்துமே இந்த மார்கழிச் சில்லென்ற மெல்லிய குளிரில் நீராடி, திருச்சிற்றம்பல நாதனின் புகழைப் பாடவேண்டும் என்று சொல்லுகின்றார். அதுவும் எவ்வாறு சிற்றம்பல நாதனே வேதங்களுக்கெல்லாம் பொருளானவன் என்றும் அப்பொருளைப் பற்றிப் பாடவேண்டும் என்றும், அடிமுடி காணா சோதி வடிவாய் ஈசனின் பெருமைத் திறத்தைப் பாட வேண்டும், எனவும் அவன் சூடிக் கொள்ளும் கொன்றை மலரின் சிறப்பைப் பாடவேண்டும் எனவும் சொல்லுகின்றார். ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான இறைவனின் புகழைப் பாடுவதின் மூலம், நம்மைப் பந்த பாசங்களில் இருந்து பிரித்துத் தாய் போல் விளங்கும் ஈசனின் கங்கணங்கள் அணிந்த அந்த அபய ஹஸ்தங்களையும், எந்நேரமும் நடனமாடிக் கொண்டிருக்கும் நடனத் திறன் பற்றியுமே பேசவேண்டும் என்கின்றார் மாணிக்கவாசகர்.

ஈசனே முத்தமிழ். முத்தமிழே ஈசன். இன்று காலை பொதிகைத் தொலைக்காட்சியில் இந்த மேற்கண்ட பாடலுக்கு உரை கூறிய பெண்மணி ஒரு முக்கியமான அதே சமயம் அதிசயமான விஷயத்தைக் கூறினார். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் இந்தப் பிரபஞ்சம் பற்றிய ஆய்வின் போது இதன் மையப் புள்ளி எங்கே இருக்கின்றது எனத் தேடிக் கொண்டே வந்தாராம். கடைசியில் இந்தியாவில் தான் அந்த மையப் புள்ளி இருக்கின்றது என்பதைக் கண்டறிந்து, இந்தியாவுக்கு வந்தாராம். இந்தியாவிலும் தமிழ்நாட்டில் இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தவர், அது சிதம்பரத்தில் இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தாராம். சிதம்பரம் கோயிலுக்குள் ஈசன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் கோலத்தில் நின்று கொண்டிருக்கின்றார் அல்லவா?? அந்த ஊன்றிய காலின் கீழே தான் அந்த மையப் புள்ளி இருக்கின்றது என்றும், அது தான் உண்மையான சிதம்பர ரகசியம் எனவும் கூறினார் அந்தப் பெண்மணி.

சிதம்பரத்தில் மூலவரும் ஒருவரே, உற்சவரும் ஒருவரே. மூலஸ்தானத்தில் சதா ஓயாமல் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் ஈசனே உற்சவ காலங்களில் வெளியே வருகின்றார். அதற்குக் காரணமாய் அவர் கூறியதும் இந்த மையப் புள்ளி விஷயமே. மையப் புள்ளியில் நடனம் ஆடிக் கொண்டு ஒரு ஈசனும், உற்சவத்துக்கு எனத் தனியாக ஒரு திருமேனியும் இருக்க முடியாது என்பதாலேயே , ஈசன் தன் ஜீவசக்தியோடு அங்கே உறைந்திருப்பதாயும் கூறினார். மேலும் தற்காலத்தில் இயல், இசை, நடனம் என்று நாம் சொல்லுவது போல் முன்காலத்தில் அமையவில்லை என்றும் சொன்னார். நமக்கு இசையும், நாடகம் என்னும் நடனமும் கஷ்டமாய் இருப்பதால் பின்னுக்குத் தள்ளிவிட்டதாயும், ஆதியில் முதல் முதல் மனிதன் சைகைகள் மூலமும், உடல் மொழி மூலமுமே பேசிக் கொண்டிருந்தான், பின்னரே ஒவ்வொரு வார்த்தைகளும் வந்தன. அதை நீட்டி, முழக்கி இசை உருவில் கொண்டு வந்தான், பின்னரே பேச்சு வந்தது. என்றும் கூறினார். ஆனால் இப்போது பெரும்பாலும் பேச்சு மட்டுமே முதன்மை நிலையில் இருப்பதால் பேச்சுத் தமிழான இயல் முதலிடத்தில் வந்துள்ளது எனவும், கஷ்டப்பட்டு கற்கவேண்டிய இசை இரண்டாமிடத்திலும், அதைவிடக் கஷ்டமான நாடகமும், நடனமும் கடைசியாகவும் போய்விட்டது என்றும் கூறினார். இதையே சுருக்கமாய் மாணிக்க வாசகர் இந்தப் பாடலில் “ஆதித் திறம்பாடி, அந்தமா மாபாடி” என்று சொல்லி இருப்பதாயும் கூறினார்.

Friday, December 19, 2008

சிதம்பர ரகசியத்தில் அறிவியல் விஞ்ஞானம்!

அக்னி ஏந்திய மேல் இடக்கை சற்றே வளைந்து பிறை வடிவில் காணப்படும் இது அழித்தலைக்குறிக்கின்றது. பிரபஞ்சம் தோன்றியபோதே பல நுண் துகள்களும் தோன்றி நிர்மூலமாகுதலை இது உணர்த்துவதாய்க் கூறுகின்றனர். வலது கரங்களில் ஒன்று அபய ஹஸ்தம் காட்டுகின்றதல்லவா? இது நான் உன்னைக் காக்கின்றேன் என்னும் காத்தல் தொழிலைக் குரிப்பிடுவதோடல்லாமல், பெரு வெடிப்பு மூலம் தோன்றிய நுண்துகள்கள் உடனே அழிந்து விடாமல் காக்கப் பட்டுப் பின்னர் அவை ஒன்றோடொன்ரு சேர்ந்து பெரும் துகள்களாய் மாறி, பின்னர் அவையே கோள்களாயும் உருமாறியதாய்க் கூறுகின்றனர். இப்படித் துகள்கள் அழிந்திடாமல் காப்பதையும் இந்தக் காக்கும் கரம் கூறுவதாய்ச் சொல்லுகின்றனர்.

இடக்கை யானையின் தும்பிக்கையைப் போல் காணப்படும் இது கஜஹஸ்த முத்திரை காட்டுகின்றது. இறைவனின் இந்த நான்கு திருக்கைகளும் நான்கு திசைகளையும் சுட்டுகின்றன. தீ ஜுவாலைக்கு நடுவே நின்று ஆடுகின்றாரல்லவா நடராஜர்? அந்தப் பேரொளியைத் தானே திருவாசியாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. இந்தத் திருவாசி பிரகிருதியைக் குறிக்கின்றது. தீ ஜுவாலை நம்மைச் சுற்றிச் சுற்றி வரும் இறப்பையும், பிறப்பையும் அதிலேயே நாம் உழலும் சம்சார சாகரம் என்னும் பெரும் சக்கரத்தையும் குறிக்கின்றது. நமது சராசரம் சுழன்று கொண்டே இருக்கும் ஒரு சக்கரம் என்ற இயற்பியல் தத்துவம் இதைக் குறிப்பதாய்ச் சொல்லுகின்றனர்.

நடராஜத் திருமேனியின் ஆனந்தத் தாண்டவத்தின் வேகம் மிக அதிகம் என்றாலும், அந்த அசைவின் வேகம் காட்டாமாலேயே, திருமுகம் மிக மிக அமைதியாக புன்முறுவலோடு காணப் படுகின்றது. இறைவனின் பல்வேறுவிதமான கோட்பாடுகளையும் இது காட்டுவதாய்ச் சொல்லப் படுகின்றது. வலச் செவியில் ஆண் அணியும் தோடும், இடச் செவியில் பெண்கள் அணியும் தோடும் காணப்படுவதால் உலகியல் தத்துவத்தில் உள்ள ஆண், பெண் கோட்பாடுகளை வலியுறுத்துவதாய்ச் சொல்லப் படுகின்றது. மூன்றாவது நெற்றிக் கண்ணானது ஞானத்தையும், வளர்பிறை, மற்றும் தேய்பிறையைக் குறிக்கும் சந்திரன் மூலம் காலச் சக்கரத்தையும், நடராஜர் ஆடி, ஆடிச் சுழன்று வருவது ஆக்கலையும், அழித்தலையும் குறிக்கின்றது. சிரசில் உள்ள மண்டையோடு உயிர்கள் மரணத்தை வென்று மரணமிலாப் பெருவாழ்வைப் பெறவேண்டும் என்பதையும் காட்டுகின்றது.

இந்து சாஸ்திரங்களின்படி இந்த அண்ட சராசரமும் பஞ்சபூதங்களால் ஆனது. நீர், நிலம், காற்று, அக்னி, மற்றும் ஆகாசம் ஆகியவற்றின் வடிவமாகவே நடராஜத் திருமேனியின் அங்கங்கள் குறிக்கப் படுகின்றன. ஊன்றிய வலப்பாதம் பூமியையும், மேலிருக்கும் இடக்கை அக்னியையும், மெய்ம்மறந்த ஆனந்த நடனத்தால் பரந்து விரிந்த ஜடாமுடியின் மூலம் காற்றையும், சிரத்தில் உள்ள கங்கை நீரையும், கையிலுள்ள டமரு, ஆகாயத்தையும் குறிக்கின்றது. பஞ்சபூதங்களும் நடராஜத் திருமேனிக்குள் அடக்கம். இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகின்றது என்ற ஆழ்ந்த கருத்தை உள்ளடக்கியதே சிவ தாண்டவம் ஆகும். இத்தாண்டவ நிலையில் மிகச் சிறிய அணுத்துகள்கள் முதல் மிகப் பெரிய கோள்கள் வரை அனைத்துப் பொருட்களின் இயக்கங்களும் அடங்கியுள்ளன.

கல வரலாற்று அறிஞர் ஆன ஆனந்த குமாரசாமி எந்த ஒரு கலையும் மதமும் பெருமைப்படும் வகையில் அமைந்த இறைவனின் செயலை உணர்த்தும் தத்துவமே நடராஜத் திருமேனி என்கின்றார். "Tao of Physics"என்னும் நில்லாசிரியர் ஆன இயற்பியல் வல்லுனர் ஆன பிரிட்ஜாப் காப்ரா என்பவர் நவீன இயற்பியலுக்கும், கிழக்கத்திய ஆன்மீகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாய்க் கூறுகின்றார். 1975-ம் ஆண்டு வெளியான இந்த நூல் 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பதிப்பிக்கப் பட்டு விற்பனையாவதோடு அல்லாமல் 25 மொழிகளில் மொழி பெயர்க்கவும் பட்டுள்ளது.

காப்ரா அவர்கள்" நவீன இயற்பியலின்படி ஆக்கல், அழித்தலின் தாளம், -Rhythm என்பது காலங்களில் ஏற்படும் மாற்றம், பிறப்பு, இறப்பு ஆகிய மாற்றங்கள் மற்றும் எல்லாவிதமான உயிர்பொருள் சார்பில்லாத மூலக் கூறுகளின் உட்பொருளாகும். ஒவ்வொரு நுண் அணுவும் சக்தித் தாண்டவத்தின் ஆக்கல் மற்றும் அழித்தலில் முடிவில்லா ஒரு பயணமாகச் செயல்படுகிறது. நவீன இயற்பியல் அறிஞர்கலுக்கு சிவ தாண்டவன் என்பது ஒரு நுண் அணுவின் தாண்டவமே. இந்து புராணங்களிலோ, இந்தத் தாண்டவமானது அண்டசராசரமே அடங்கும் ஒரு பகுதியாகக் கருதப் படும் ஆக்கல் மற்றும் அழித்தலின் ஓர் அங்கமாகும். இதுவே எல்லாவித உயிரினங்கலுக்கும் அடிப்படையான ஓர் இயற்கையான சம்பவம். பண்டைய இந்தியக் கலைஞர்கள் இந்தத் தாண்டவத்தை வெண்கலச்சிலைகளாய் உருவாக்கினர். இக்கால விஞ்ஞானிகளோ, அதி நவீன சாதனங்களைக் கொண்டு இந்தத் தாண்டவத்தை நடத்துகின்றனர். இவ்வாறு நடராஜ வடிவம் பண்டைய புராணம், மதம் போற்றும் கலையையும் மற்றும் நவீன கால இயற்பியலையும் ஒன்றிணைக்கிறது."

அமெரிக்க விண்வெளி ஆராய்சியாளர் காரல் சேகன் "பண்டைய கால இந்துக்கள் இந்த ஆக்கல், காத்தல், அழித்தல் அடங்கிய தாண்டவத்தை ஓர் இறைவடிவாகவே கண்டு அதையே அவர்கள் சிலையாக வடித்தனர்" என்கின்றார். quantum physics and the Dance of Nataraja என்ற கட்டுரையில் ஜார்ஜ் காலமரஸ் என்பவர் இந்தத் தத்துவத்தைப் பாராட்டி எழுதி இருக்கின்றார். சுவாமி விவேகானந்தர் "எண்ணற்ற பெருமைகளையும், வானம் போல் தெளிவையும், அனைத்திற்கும் தலைவனான, தன்னையே கடந்தவனான சிவபெருமானிடம் மாறாத பக்தி ஏற்படட்டும்" என்று பிரார்த்திக்கின்றார்.

பிரம்மா படைப்பார், விஷ்ணுவோ காத்தலோடு படைக்கவும் செய்வார். ருத்ரரோ அழித்தலுக்கான கடவுளாய் இருந்தாலும் படைத்தலும், காத்தலும் செய்வார். மகேஸ்வரரோ மாயையை விலக்குகின்றார் ஆனலும், அவரும் படைத்தல், காத்தல் அழித்தலையும் மேற்கொள்கின்றார். சதாசிவர் மட்டுமே உலக பந்தங்களிலிருந்து நம்மை விடுவிப்பவர். சதாசிவர் நடராஜ வடிவத்தில் பஞ்சகிருதி எனப்படும் ஐந்தொழில்களையும் செய்கின்றார். இந்த ஐந்தொழில்களுமே நடராஜர் வடிவில் அமைக்கப் பட்டிருக்கின்றது நாம் உணருகின்றோம் என ஸ்வாமி விபுலானந்தர் "நடராஜ வடிவம்" என்ற நூலில் எழுதி இருக்கின்றார்.

நடராஜப் பெருமான் நமக்கும் அப்படியே அருள் புரிய அனைவரும் பிரார்த்திப்போம். நடராஜ தத்துவதை விட மர்மமாக இன்று நடராஜர் படம் போட முடியாமல் ரொம்பவே சிரமமாகப் போய்விட்டது. பல நடராஜ வடிவங்களையும் ப்ளாகர் ஏத்துக்காமல் இந்த வடிவத்தையும் அரை மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளது.

நடராஜர் திருவடிகளே போற்றி!

Thursday, December 18, 2008

சிதம்பர ர்கசியமும், நவீன விஞ்ஞானமும்

தற்செயலாக ராமகிருஷ்ண விஜயம் புத்தகம் நவம்பர் மாதத்திய இதழ் கிடைத்தது. சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த கடவுள் அணுவிற்கான ஆய்வு என்னும் பிரபஞ்சத் தத்துவத்திற்கான அறிவியல் தத்துவத்திற்கான சோதனை நடத்தப் பட்ட ஆராய்ச்சிக் கூடத்தின் வாயிலில் வைக்கப் பட்டிருக்கும் நடராஜர் சிலை பற்றிச் சொல்லி ஆகவேண்டும். இன்னும் சொல்லப் போனால் நடராஜரின் தலைமையிலேயே இந்த ஆய்வு நடக்கிறது என்றும் சொல்லலாம். ஜெனிவாவில் உள்ள European Center for Particle Physics Research-CERN, தலைமையகத்தின் முகப்பில் கிட்டத் தட்ட ஆறு அடி உயரம் ஆன நடராஜர் சிலை உள்ளது எனவும். அந்தச் சிலையின் கீழே உள்ள செவ்வகப் பீடத்தின் முகப்பில் சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் கீழ்க்கண்டவாறு பொறிக்கப் பட்டுள்ளதாயும் கூறுகின்றனர்.

"எங்கும் நிறைந்தவனே! நற்குணங்களின் உருவே! இந்த அண்டசராசரத்தைப் படைத்தவனே! ஆடலரசே! அந்தி நேரத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடியவனே! உமக்கு நமஸ்காரம்! (மூலம் சிவானந்த லஹர், சுலோகம் 56, ஆதி சங்கரர் இயற்றியது. நன்றி, இந்திய அணுசக்தித் துறை, இந்திய அரசாங்கம்). இப்போது இந்திய அணுசக்தித் துறை எதுக்கு சர்வதேசப் புகழ் பெற்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கூடத்திற்கு அன்பளிப்பாய்த் தரவேண்டும்? நடராஜத் திருமேனிக்கும் இயற்பியலுக்கும் என்ன சம்பந்தம்??

கிட்டத் தட்ட 1,300 கோடி வருடங்கள் முன் பேரொலியுடன் கூடிய மிகப் பெரு வெடிப்பு எனப்படும் big bang உண்டாயிற்று. அதற்கு முன்னர் அடர்த்தியான அதிக வெப்பத்துடனும், அழுத்தத்துடனும் இருந்த ஒரு சக்தித் தொகுப்பானது அதிவிரைவாக விரியவும், சுருங்கவும் செய்தது. மாறி மாறி சூடும், குளிர்ச்சியும் ஏற்பட்டது. இப்படி ஒரு பெரு வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் விரிவடைய அதிக வெப்பம் காரணமாய் சக்தித் தொகுப்பு சிறு துகள்களாய் பிரியத் தொடங்கியது.

பன்மடங்கான துகள்களின் எண்ணிக்கை உருவாக்கப் பட்ட சில நிமிடங்களிலேயே பல துகள்கள் அழிந்தும், மேலும் பல துகள்கள் உருவாகவும் செய்தன. வெப்பம் குறையத் தொடங்கியதும் இச்சிறு துகள்கள் இணைந்து பெரிய துகள்கள் உருவாகிப் பிரபஞ்சமும் விரிவடைகின்றது. இவ்வாறு பல சிறு துகள்கள் சேர்ந்து இந்தப் பிரபஞ்சம் உருவானது. இன்றும் கூட இப்பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் சிறு அணுத்துகள்கள் சேர்ந்து பெரிய பகுதிகளாய் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் பல துகள்கள் அழிந்து கொண்டும் இருக்கின்றன. இந்த நிகழ்வுகள் விண்வெளியில் மட்டுமின்றி சூரியனிலும் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வுகளால் உருவாகும் காஸ்மிக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. இந்தத் துகள்கள் நமது மூலக்கூறு பகுதியும் பிரபஞ்சத்தின் கட்டுமான கற்களும் ஆகும். தோன்றுவதும், இயங்குவதும், பின்னர் ஒடுங்குவதும் பிரபஞ்சத்தின் அடிப்படைத் தத்துவம் ஆகும். இதையே நம் முன்னோர் ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தின் தத்துவமாய்க் கருதினார்கள்.

நடராஜ வடிவின் உட்பொருள்: ஆகம சாஸ்திரம் புரியாமல் நடராஜரின் உடல் கூறு தத்துவம் புரியாது என்று சுவாமி விபுலானந்தர் கூறுகின்றார். எனினும் நமக்குப் புரிந்த அளவில் பார்ப்போம். ரிஷிகளின் தியானத்தில் தோன்றிய இந்த நடராஜ தாண்டவ வடிவம் மிக மிக நுட்பமானது.

நடராஜரின் வைத்த திருவடியான வலப்பாதம் முயலகன் என்ற அசுரனின் மீதிருக்கும். அறியாமையைக் குறிக்கின்றது இது. தூக்கிய இடது திருவடியானது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான காலச்சக்கரத்திலிருந்து விடுபடும் ஆன்மாவைக் குறிக்கின்றது. உடுக்கை ஏந்திய திருக்கையானது ஆக்கலைக் குறிக்கும். உடுக்கை எழுப்பும் சப்தம் ஆனது பிரபஞ்சம் தோன்றும்போது முதன் முதல் எழுந்த சப்தத்தைக் குறிப்பதோடு அல்லாமல்,அறிவியலாளர்களும் பிரபஞ்சம் தோன்றும்போது பெரும் சப்தம் ஏற்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றார்கள். விஞ்ஞானிகள் இந்த ஒலியைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆன்மீக அறிவாளர்கள் இந்த ஒலியைத் தான் பிரணவம் எனப்படும் , ஓம் என்னும் ஒலியாகவும் குறிப்பிடுகின்றனர். வேதங்களிலும் பிரணவம் என்னும் ஒலியில் இருந்தே பிரபஞ்சம் பிறந்ததாய்க் குறிப்பிடுகின்றது.


(இன்னும் தொடரும்)

Wednesday, December 03, 2008

சிதம்பர ர்கசியம். கோயிலின் கட்டடக் கலைகள்.

இந்தக் கோயில் அவ்வப்போது பல்வேறு கட்டடக் கலைகளுக்கு உட்பட்டு வந்திருக்கின்றது. இந்தியாவின் கலாசாரத்துக்கும் வரலாற்றுக்கும் இந்தியக் கோயில்களே பெருமளவும் உதவி வந்திருக்கின்றன. முக்கியமாய்த் தென்னிந்தியாவில் உள்ள சிவ, விஷ்ணு ஆலயங்களின் கட்டுமானங்கள் வரலாற்றுச் சான்றுகளாகவும் விளங்குகின்றன. அவ்வகையில் சிதம்பரம் கோயிலும் பல்வேறு அரசியல் காலத்திலும் அந்த அந்த அரசியல் சூழ்நிலைக்கேற்றக் கட்டிடக் கலையைக் கொண்டு விளங்குகின்றது என்றும் சொல்லலாம்.

முதலில் சரித்திரபூர்வமாய்ப் பார்த்தால் சிதம்பரம் கோயில் பல்லவர்கள் காலத்தில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலும், பின்னர் வந்த பிற்காலச் சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பனிரண்டாம் நூற்றாண்டு வரையிலும், பாண்டியர்கள் பனிரண்டில் இருந்து பதினான்காம் நூற்றாண்டு வரையிலும் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து வந்திருப்பதாய்ச் சரித்திரப் பூர்வத் தகவல்கள் இருக்கின்றன. அதன் பின்னர் வந்த விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களும், அவர்களுக்குப் பின்னர் வந்த நாயக்கர்களும் சிதம்பரம் கோயிலுக்குப் பல்வேறு திருப்பணிகள் செய்து வந்திருக்கின்றனர் என்பதையும் பார்த்தோம்.
கோயிலின் அளவு கிழக்கு, மேற்காய் அளந்தால் குறைவாயும், வடக்கு, தெற்காய் அதிகமாயும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். மற்றக் கோயில்களுக்கும் இதற்கும் உள்ள இந்த வேறுபாட்டினால் இந்தக் கோயில் செவ்வக வடிவில் அமைந்திருப்பதாயும் சொல்லப் படுகின்றது. பொதுவாய்ப் புராணங்களின்படி இந்தக்கோயில் விஸ்வகர்மாவால் கட்டப் பட்டது எனவும், ஈசன் தானே கோயிலின் அமைப்பையும், கோபுரங்களின் அமைப்பையும் வடிவமைத்தான் எனவும் சொல்லப் படுகின்றது. மேலும் பதஞ்சலி, வியாக்கிரபாதர் போன்ற முனிவர்களும் விஸ்வகர்மாவாலேயே இந்தக் கோயில் கட்டப் பட்டது எனச் சொல்லி இருக்கின்றனர். என்றாலும் தற்காலத்தில் நாம் பார்க்கும் கட்டிட அமைப்பு பிற்காலச் சோழர்காலத்தைச் சேர்ந்தவையே என வரலாற்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். கோவிந்தராஜரின் கோயில் விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் கட்டப் பட்டிருக்கலாம் என்று அந்த ஆய்வு சொல்லுகின்றது.

இரு பெரும் நதிகளுக்கு இடையில் உள்ள வண்டல் மண்ணால் நிறைந்த பூமியில் கட்டப் பட்டிருக்கும் இந்தக் கோயிலுக்குக் கற்கள் எங்கிருந்து கொண்டுவரப் பட்டன என்பதை நினைத்து ஆய்வாளர்கள் வியக்கின்றனர். சுற்று வட்டாரம் 40 மைலுக்கு எங்கேயும் மலைகளோ அல்லது கற்கள் கிடைக்கக் கூடிய எந்த விதத் தடயமோ இல்லாத சூழ்நிலையில், சுற்றுச் சுவர்களில் ஆங்காங்கே சிற்பங்கள் செதுக்கப் பட்டும், உள்ளே தளங்கள் கற்கள் பதிக்கப் பட்டும் விளங்குவதோடு, ஒரே கல்லினால் செய்யப் பட்ட ஆயிரம் தூண்களைக் கொண்ட பெரிய ஆயிரக்கால் மண்டபத்தையும் கொண்டிருக்கின்றது. கோயிலின் குளமோ 150 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்டு மிகுந்த ஆழத்தோடு பெரிய கற்களால் ஆன நீளப் படிகளையும் கொண்டு விளங்குகின்றது.