எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, June 28, 2019

சாளரத்திலிருந்து கேட்ட கீதம்!

தத்தனுக்கு வல்லபனின் யோசனை பிடிக்கவே இல்லை. இதனால் சாதகங்களை விட பாதகங்களே அதிகம். அதோடு அவர்கள் போகவேண்டிய காரியம் தடைப்படும். அதல்லவோ முக்கியம். இது தான் தத்தனின் கருத்து. ஆனால் வல்லபனோஅந்தப் பெண்ணிற்காகப் போராட வேண்டும் என்றான். அவளை எப்படியேனும் மீட்டு விட வேண்டும் என்றும் துடிதுடித்தான். இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கையில் மேற்கே இருந்து பல குதிரைகள் வரும் சப்தம் கேட்டது. உடனே தத்தன் வல்லபனிடம், "வல்லபா! எது எப்படியோ அந்த வீரர் தலைவன் சொல்லிச் சென்றது சரியான செய்தி என நினைக்கிறேன். தன்னைத் தொடர்ந்து பெரும்படை வந்து கொண்டிருப்பதாகச் சொன்னான் அல்லவா? இதோ பார்! உற்றுக் கேள்! ஓர் குதிரைப்படையே வரும் சப்தம் கேட்கிறது!" என்றான். பின்னர் மேலே செல்வதை விடுத்து அங்கேயே தங்கிப் பார்க்கலாம் என இருவரும் சுற்றுலா செல்லும் யாத்திரிகர்கள் போல அங்கும் இங்குமாகப் பார்த்த வண்ணம் வழியோரமாக நின்றனர். சற்று நேரத்தில் சுமார் 20,30 பேர்கள் அடங்கிய ஓர் குதிரைப்படை அங்கே வந்தது. அவர்களைக் கண்டதும் அது நின்றது. கூட்டத்தலைவன் இளைஞர்களை உற்றுப் பார்த்தான்.

சற்று யோசித்துவிட்டுப் பின்னர், அவர்களிடம் அந்த  வழியாகக் கூண்டு வண்டி ஒன்றும் அதைக் காவல் காத்துக் கொண்டு நான்கைந்து வீரர்களும் போனதைக் கண்டது உண்டா என விசாரித்தான். வல்லபன் வாய் திறப்பதற்குள்ளாக தத்தன் அவனிடம் கூண்டு வண்டியையும் வீரர்களையும் கண்டதாகவும் அவர்கள்  அங்கிருந்து வடகிழக்கே ஒரு காத தூரத்தில் இருக்கும் அம்பலப்புரம் என்னும் ஊரில் உள்ள சத்திரத்தில் தங்கப் போவதாகப் பேசிக் கொண்டனர் என்றும் சொன்னான். மேலும் அந்த வீரர் தலைவன் அவர்களிடம் உங்களைப் பார்த்தால் அங்கே அனுப்பி வைக்கச் சொன்னதாகவும் சொன்னான். இதைக் கேட்ட குதிரைப்படைத் தலைவன் அம்பலப்புரம் செல்லும் வழியைக் கேட்க முதலில் கிழக்கே கொஞ்ச தூரம் போனபின்னர் வடக்கே செல்ல வேண்டும் என்று தத்தன்  சொன்னான். இவ்வாறு அந்தக் குதிரை வீரர்களை மாற்று வழியில் திருப்பி விட்டான் தத்தன். அவர்கள் சென்ற பின்னர் இதைக் குறித்து வல்லபனிடமும் சுட்டிக் காட்டினான்.

பின்னர் இருவரும் அங்கிருந்து ஓடுமானூர் நோக்கிப் பயணப்பட்டார்கள். இரவு முதல் ஜாமத்தின் போது அவர்கள் ஓடுமானூரை அடைந்தனர். அதற்குள்ளாக ஊரே அடங்கி ஓசை இன்றிக் காணப்பட்டது. தெருவிளக்குகள் கூட எரியவே இல்லை. தெருவின் ஓர் மூலையில் பழைய கோயில் ஒன்று இடிபாடுகளோடு காட்சி அளித்தது. அதைப் பார்த்த வல்லபன் உணர்ச்சி வசப்பட்டான். அவனை மெல்ல அடக்கிய தத்தன் தெருவிலோ அல்லது ஊரிலோ எந்தவிதமான சப்தங்களும் இன்றி நிசப்தமாக இருந்ததில் பெரும் சந்தேகம் கொண்டான். இருவரும் மௌனமாகச் சத்திரத்தை அடைந்தனர். சத்திரமும் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. 

சத்திரத்தின் கதவைத் தட்டிப் பார்த்தனர். முன் கதவு தானே திறந்து கொண்டது. அங்கே  காணப்பட்ட பெரிய கூடத்தின் நடுவே குத்துவிளக்கு எரிந்து கொண்டிருக்க அதன் ஒளி கூடம் பூராவும் பொன்னிறத்தில் பரவிக்காணப்பட்டது.  சத்திரம் பெரிய சத்திரம் என்பதால் கூடமும் அதற்கேற்பப் பெரிய கூடம்! இருவரும் சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம் சத்திரத்துக் காவலரை "ஐயா!" என அழைத்தனர். யாரும் வரவில்லை. அங்கும் இங்குமாகச் சுற்றிப் பார்த்தபோது வல்லபனின் கண்கள் அந்தக் கூடத்தின் ஓர் சாளரத்தருகே அந்தப் பெண் நிற்பதைக் கண்டன. அவளும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் என்பது அவள் பார்வையில் இருந்து புலனாகியது.

வல்லபன் கொஞ்சம் திகைப்புடன் சாளரத்தருகே போக யத்தனித்தபோது முன்னர் பார்த்த மூதாட்டியின் கையைப் போன்றதொரு வயதான பெண்ணின் கை அந்தச் சாளரத்தின் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டன. வல்லபன் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தான். மூடிய சாளரத்திற்குள் இருந்து தீஞ்சுவைக்குரலில் ஓர் அழகிய தமிழ்ப்பாடல் இன்னிசையுடன் கேட்க ஆரம்பித்தது. அந்தக் குரல் அந்த இளம்பெண்ணின் குரலாகத் தான் இருக்க வேண்டும் என வல்லபன் யூகித்தான். பாடலை உற்றுக் கேட்டவனுக்கு அது நம்மாழ்வாரின் பாசுரம் என்பது புரிந்தது.

Wednesday, June 26, 2019

வல்லபனின் தீர்மானம்! தத்தனின் அனுமானம்!

சற்று நிறுத்திய வல்லபன், ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். பின்னர் தொடர்ந்து, "தத்தா! அதோடு மட்டுமா? வருடம் தோறும் பற்பல உற்சவங்கள், திருவிழாக்கள், பண்டிகைகள் என்றெல்லாம் நடக்குமாமே! அவற்றில் கலந்து கொண்டு மக்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியோடு ஆடிப் பாடிக் கொண்டாடுவார்களாம்.  திருவிழாக்காலங்களில் அரங்கனின் அர்ச்சாவதாரம் , தத்தா, நாம் இன்னமும் அதைப் பார்த்ததே இல்லை அல்லவா? அந்த அர்ச்சாவதாரத்தை வீதிகளில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போவார்களாம். மக்கள் அந்த ஊர்வலத்தைத் தொடர்ந்து ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் செல்வார்களாம். வேதங்களாமே! நீ கேட்டிருக்கிறாயா தத்தா? வேதங்களை பிராமணர்கள் ஓதுவார்களாம். அவர்கள் எல்லோரும் இந்த ஊர்வலங்களில் வேதங்களை ஓதிக்கொண்டு செல்வார்களாமே! அதைத் தவிர்த்தும் பற்பல பிரபந்தங்களையும் பாடிக்கொண்டு போவார்களாம்! ஆழ்வார்களையும் எழுந்தருளப் பண்ணுவார்களாம். தத்தா! நானெல்லாம் ஆழ்வார்கள் எனப்  பெயர்களைக் கேட்டதோடு சரி! இதை எல்லாம் பார்க்க நமக்குக் கொடுத்து வைக்கவில்லையே!"

"தத்தா! என் தாய் சொல்லுவார்! சித்திரை மாதம் பிறப்பதையே பெரிய விழாவாகக் கொண்டாடுவார்களாம். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு திருவிழாவாம், பண்டிகையாம்! பெண்களுக்கு எனத் தனிப் பண்டிகையாக ஒன்பது நாட்கள் உண்டாம்! அந்த நாட்களில் மூன்று தேவியரையும் வழிபட்டுப் பூஜைகள் செய்து, பொம்மைகள் அடுக்கி மக்கள் விமரிசையாகக் கொண்டாடி வந்தனராம். இப்போது அவை எல்லாம் எங்கே போயின? அவ்வளவு ஏன்? எந்தக் கோயிலை இப்போதெல்லாம் தைரியமாகத் திறந்து வழிபாடுகள் செய்கின்றனர்! மிகக் குறைவே! கோயில்கள் எல்லாம் அழிந்து வருகின்றன தத்தா! திறப்பதே இல்லை! பாழடைந்து போய் சந்நிதிகளில் காணப்பட்ட விக்ரஹங்கள் போன இடம் தெரியாமல் கோபுரங்களிலும், கோயில் விமானங்களிலும் அரசும், ஆலும் முளைத்துக்கிடக்கின்றன. மதில்கள் அனைத்தும் உடைந்து விட்டன. அவற்றைக் கோர்த்த கல்வெட்டுக்கள் அனைத்தும் விழ ஆரம்பித்து விட்டன. திருக்குளங்களில் தண்ணீர் இல்லை. இருந்தால் இலைகளும், தூசியும் தும்புமாகக் கிடக்கின்றன. கோயிலில் வைத்திருந்த விக்ரஹங்கள் அனைத்தும் பூமியில் புதைக்கப்பட்டு விட்டன என்று ஒரு சாராரும், வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்று விட்டதாக இன்னொரு சாராரும் கூறுகின்றனரே!"

"தத்தா! நம் அரங்கன் அப்படித் தான் எங்கோ போய் விட்டானாம். அவனைக் கண்டு பிடித்து மீண்டும் திருவரங்கத்தில் பிரதிஷ்டை செய்யவே என் தந்தை தன் வாழ்நாளைக் கழித்து வந்தாராம். ஆனால் அவரால் இயலவில்லை. என் அன்னை அதற்குத் தான் என் தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றத் தான் என்னை அனுப்பி உள்ளார். தத்தா! நீ பார்த்திருக்கிறாயா? எந்தக் கோயிலிலாவது விக்ரஹங்களைப் பார்த்திருக்கிறாயா? கர்பகிரஹம் என்று சொல்லும் கருவறையில் திறந்து வைத்து மூலவர்கள் யாரையேனும் பார்த்திருக்கிறாயா?  நமக்கெனக் கோயில்கள் இருந்தும் இல்லாதவையாக இருக்கின்றனவே! எத்தனையோ பண்டிகைகளையும் கோயில் திருவிழாக்களையும் நம் முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்தியும் நாம் எவற்றையும் கொண்டாட முடியவில்லையே! இப்படிப்பட்ட ஓர் ஆட்சியில் நாம் மாட்டிக்கொண்டிருக்கிறோமே! வீட்டுக்குள்ளேயே ஒடுங்கி விட்டோம் நாம். நான்கு பேர் சேர்ந்து பேசக் கூட அஞ்சி அடங்கி ஒடுங்கி வாழ்ந்து வருகிறோமே!கல்வி பயிலவும் தடை, வேதங்கள் ஓதவும் தடை! பற்பல கலைகளைத் தெரிந்து வைத்திருந்தும் அவற்றைக் கற்பதற்கும் தடை! நாற்பது வருடங்களாக இப்படி இருந்து வருகிறதே! நல்லதொரு தலைவன் இருந்திருந்தால் நம்மை இப்படி விட்டு வைத்திருக்க மாட்டான்! தத்தா! என் மனம் பதைக்கிறது!" என்றான் வல்லபன்.

வல்லபனின் நீண்ட சொற்பொழிவைக் கேட்ட தத்தன் சாவகாசமாக, "வல்லபா, ஏதோ புது விஷயத்தைச் சொல்லி விட்டாற்போல் அல்லவா நினைத்துக்கொள்கிறாய்! இவை எல்லாம் எனக்குத் தெரியாதா? அனைவருமே அறிந்த ஒன்று தானே! உனக்கு ஏன் இத்தனை படபடப்பு?" என்றான் கேலியாக.  வல்லபன் துயரம் மேலோங்க, "நம்மிடையே இன்னமும் ஓர் நாயகன் தோன்றவில்லையே தத்தா!" என்றான் அழும் குரலில். அதற்கு தத்தன், " ஏன் பிறக்கவில்லை? தோன்றி இருக்கிறார்கள். இனியும் தோன்றுவார்கள். நம் காலத்துக்கு முன்னே வீர வல்லாளர் என்னும் ஹொய்சள மன்னர் இவர்களை எதிர்த்து நிற்கவில்லையா? அவரைத் தான் சதியால் கொன்றுவிட்டனர்! என்ன செய்ய முடியும்! அவரைப் போல் யாரேனும் தோன்றுவார்கள்! யார் கண்டனர்! இத்தனை வருடங்களில் தோன்றி இருக்கலாம்! தக்க சமயத்துக்குக் காத்திருக்கலாம்!" என்றான் தத்தன். ஆனால் வல்லபனோ இதனாலெல்லாம் தன் நெஞ்சு ஆறப்போவதில்லை என்றும் அவன் மனம் இன்னமும் இதை எல்லாம் நினைத்துப் பதைப்பதாகவும் தானே ஏதேனும் செய்தாக வேண்டும் என்னும் முடிவில் இருப்பதாகவும் கூறினான்.

"வல்லபா! நீயா? நீ மட்டும் தனித்தா? நானும் உனக்கு உதவுவேன்! ஆனால் எப்படி? நம்மால் என்ன செய்ய முடியும்?" என்று தத்தன் கேட்டான். "தீமைகளை நாம் தட்டிக் கேட்க வேண்டாமா?" என்று வல்லபன் கேட்க, அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைப் புரிந்து கொண்ட தத்தன், "அப்படியா! மேலே சொல்!" என்றான் புன்னகையுடன். வல்லபன் அதற்கு, "இதோ பார் தத்தா! நம் கண்ணெதிரே ஓர் இளம்பெண்ணை, அதுவும் அரசகுலப் பெண் என நீ சொல்கிறாய்! அந்தப் பெண்ணைப் பலர் கடத்தியோ கைது செய்தோ அழைத்துச் செல்கின்றனர். இதைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருக்கலாமா? அவர்களோடு போரிட்டு அந்தப் பெண்ணை விடுவிக்க வேண்டாமா?" என்றான்.

"வல்லபா! உனக்கு என்ன பைத்தியமா? நாம் செல்லப் போவது மிக முக்கியமான காரியத்தை முன்னிட்டு! சற்று முன்னர் நீயே உன் வாயால் சொன்னாய்! உன் தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை! ஆகவே நாம் அரங்கன் இருக்குமிடத்தைத் தான் தேடிச் செல்லவேண்டும். ஒரு பெண்ணின் பின்னால் அல்ல!" என்று தீர்மானமாக தத்தன் கூறினான்.  மேலும் தொடர்ந்து, "நீ செல்ல வேண்டிய வழி என்னவென்று தெரிந்திருந்தும் உன் வழியில் பிறழாதே!" என வல்லபனுக்கு நினைவூட்டினான். அதற்கு வல்லபன், "ஆம்! நீ சொல்வது சரியே! என் வழியில் நான் பிறழவில்லை. ஆனால் அரங்கனை நான் கண்டு பிடித்தால் மட்டும் போதுமா? மீண்டும் திருவரங்கத்தில் கொண்டு சேர்ப்பித்து மறுபடி எல்லா ஆராதனைகளும் திருவிழாக்களும் அரங்கனுக்கு முறைப்படி நடக்கச் செய்ய வேண்டாமா?" என்றான். பின்னர் தொடர்ந்து, "அதற்கு நாம் இருவர் மட்டும் போதாது! தத்தா! இந்த நாடே நம் பின்னால் நிற்க வேண்டும். அரங்கனைத் திருவரங்கத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்னும் ஆவலில் நாட்டில் உள்ள நல்லோர் அனைவரும் ஒன்று சேரத் திரள வேண்டும் தத்தா! இல்லை எனில் நமக்கு ஆன்மிக பலமும் இருக்காது. மக்கள் பலமும் இருக்காது!" என்றான்.

"அதற்கு?" என தத்தன் கேட்க, "அதற்குத் தான் சொல்கிறேன். கண்ணில் பட்ட இந்தத் தீமையை நாம் தட்டிக் கேட்டே ஆகவேண்டும். இப்படியான தீமைகள் அழிக்கப்படுகிறது. அதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என மக்களுக்குத் தெரிந்தால் நம்பக்கம் அனைவரும் ஒன்று சேர்வார்கள்!"என்றான் வல்லபன். தத்தன் யோசனையுடன், "உன் எண்ணம் என்ன, வல்லபா! அந்தப் பெண்ணை எப்படியானும் காப்பாற்றியே ஆக வேண்டும்! அது தானே!" என்று கேட்க வல்லபன், "ஆம்!" என ஒற்றை வரியில் சொன்னான்! தத்தன் அதற்கு, "ஏற்கெனவே வழியில் பிறழாதே! என்று எச்சரித்து விட்டேன். இப்போது சொல்கிறேன் கேள்! விழியில் பிறழாதே!" என மறுபடி எச்சரித்தான் தத்தன். வல்லபன் வெறுப்புடன் அவனைப் பார்த்தான். " நான் அவள் விழியில் எல்லாம் பிறழவில்லை. அந்தப் பெண்ணின் அழகோ, அவள் விழிகளின் அழகோ என்னைப் பிறழ வைக்கவில்லை!" என்று ஆவேசத்துடன் சொல்ல, தத்தன், "எப்படியாயினும் அந்தப் பெண்ணின் விஷயத்தில் நாம் குறுக்கிடுவது ஆபத்து!" என்று மீண்டும் எச்சரித்தான். வலுவில் சென்று ஆபத்தை வரவழைத்துக்கொள்வது நல்லதல்ல என்றும் சொன்னான். தீமையான ஒரு விஷயத்தைத் தடுப்பது வலுவில் சென்று ஆபத்தை வரவழைத்துக் கொள்வது ஆகாது என வல்லபன் தீர்மானமாகக் கூறினான். தத்தன் யோசனையில் ஆழ்ந்தான்.

Tuesday, June 25, 2019

வல்லபனின் வருத்தம்!

"அதெல்லாம் சரி காலதத்தா! பாறை மேல் நாம் ஏறிக்கொண்டதால் என்ன பலன்?" என்று வல்லபன் கேட்டான். வருகிறவன் நம்மைக் கண்காணிக்கும் எதிரியாக வருகிறானா? அல்லது சிநேகித பாவத்தில் வருகிறானா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதனால் தான் ஏறிக்கொள்ளலாம் என்றேன். திடீரென அவன் நம்மேல் வாளை வீசி விட்டால்? இருவரையும் ஒரே வீச்சில் மேல் உலகுக்கு அனுப்பி விட்டால்? இந்தப் பாறையைப் பார்த்தாய் அல்லவா? நாம் இருவரும் ஒடுங்கிக் கொண்டு அல்லவோ இருந்தோம்? மூன்றாம் நபர் இதன் மேல் ஏறி வந்து நம்மைத் தக்க முடியாது. அவர்கள் ஏறுவதற்குள் நாம் எச்சரிக்கை அடைந்து விடுவோம் அல்லவா!" என்றான் காலதத்தன். "அவன் ஏன் நம்மைக் கொல்ல வேண்டும்?" என்று கேட்டான் வல்லபன். "வல்லபா! நீ அந்தக் கூண்டு வண்டியைப் பார்த்தாய் அல்லவா? அதன் உள்ளே இருந்த இளம்பெண்ணையும் பார்த்தாயா?" என்று கேட்டான் தத்தன். "பார்த்தேன், அதற்கு என்ன?" என்றான் வல்லபன். காலதத்தன் அதற்குக் கொஞ்சம் குரலைத் தாழ்த்திய வண்ணம் மெதுவாக, "அந்தப் பெண் அரசகுலத்துப் பெண். அநேகமாக ஓர் இளவரசியாக இருக்க வேண்டும்." என்றான்.

"எப்படிச் சொல்கிறாய்?" என்று காலதத்தனைப் பார்த்து வல்லபன் கேட்க, காலதத்தன், "அவள் முகத்தைப் பார்த்தாயா? வட்டவடிவான சந்திரனை ஒத்து இருந்தது. செவ்வரி ஓடிய நீண்ட கண்கள். புருவங்கள் ஒன்றோடு ஒன்று சேராமல் வில்லைப் போல் வளைந்து ஓர் கீற்றாகக் காணப்பட்டது. உதடுகள் பவளம் போல் சிவந்திருந்தன. நெற்றியைப் பார்த்தாயா? மூன்று விரல் அளவுக்கே நெற்றி இருக்கும்போல! கரிய நீண்ட கூந்தல். பருத்த புஜங்களோடு சிறுத்த இடை! அவற்றில் அநேஎகமாக மடிப்புக்கள் இருக்க வேண்டும். இந்த சாமுத்ரிகா லக்ஷணப்படி அவள் அரச குலத்துப் பெண்ணாகவே இருக்க வேண்டும். " என்று முடித்தான் கால தத்தன்.

"நீ அனுமானிப்பது தானே காலதத்தா!" என்று வல்லபன் கேட்க, காலதத்தன், "இல்லை, வல்லபா! இது அரசகுலப் பெண்டிருக்கான லக்ஷணங்கள். இந்தப் பெண்ணைக் கைது செய்து பிடித்துக் கொண்டு போவது நமக்குத் தெரிந்து விட்டது. நமக்குத் தெரிந்து விட்டதே என அந்த வீரர் தலைவனின் மனதில் குடைச்சல் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். இதனால் ஏதேனும் விபரீதம் நிகழலாம், அல்லது நாம் சும்மா இருக்க மாட்டோம் என்றெல்லாம் அவர்கள் எண்ணி இருக்கலாம். அதனால் நம்மைக் கொல்வதற்கெனக் கூட இங்கே அந்த வீரர் தலைவன் வந்திருக்கலாம். உண்மையில் அந்தப் பெண் யார், ஏன் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள் என்பதெல்லாம் நமக்கு ஏதும் தெரியாது! ஆனால் அதை அவர்கள் அறிய மாட்டார்கள் அல்லவா? அதான் முன் ஜாக்கிரதையாக நம்மை வந்து உளவு பார்த்துச் செல்கின்றனர்." என்றான் காலதத்தன்.

வல்லபன் யோசனையோடு தத்தனிடம் அந்தப் பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவளாக இருப்பாள் எனவும் ஏன் அவளைக் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்கின்றனர் என்றும் யூகம் செய்ய முடிகிறதா எனக் கேட்டான். தத்தனோ தென்னாடு முழுவதுமே சரியான தலைவன் இல்லாமல் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறதே! நாற்பது வருடங்கள் ஆகிவிட்டன, தென்னாடு தலைவனின்றித் தவிக்கிறது.  இதில் யார் இந்தப் பெண் என்பதையும் அவளை ஏன் கடத்திக் கொண்டு போகிறார்கள் என்பதையும் நாம் என்ன கண்டோம்! அல்லது அவளைச் சிறைப்படுத்திக் கொண்டு போனாலும் நமக்கு என்ன புரியும்? எப்படியோ போகட்டும் வல்லபா! நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு மேற்கொண்டு பயணத்தைத் தொடரலாம்!" என்று சொல்லிக் கொண்டே தத்தன் பாறையிலிருந்து கீழே குதிக்க முயன்று அது முடியாமல் மௌனமாக இறங்கத் தொடங்கினான். அவனைப் பின் தொடர்ந்து இறங்கிய வல்லபன் கீழே இறங்கியதும் அப்படியே யோசித்த வண்ணம் நின்றான்.

காலதத்தன் அவனை மேலே நடக்கச் சொல்லி வற்புறுத்தினான். இருள் முழுவதும் கவிந்து விட்டது.  காற்றோ குறையவே இல்லை. விண்ணில் மேகக்கூட்டங்கள் மாபெரும் மலைகள் போல் காட்சி அளித்த வண்ணம் வேகமாகப் போய்க் கொண்டிருந்தன. அவற்றின் கருமையால் ஏற்கெனவே கவிந்து கொண்டிருக்கும் இருள் இன்னமும் கருமையைப் பூசிக் கொண்டது.  இந்த மழைக்காலத்தில் மையிருட்டில் வழி கண்டுபிடித்துப் போகவேண்டுமே என்னும் கவலை தத்தனுக்கு ஏற்பட்டது. வல்லபனை துரிதப்படுத்தினான். ஆனால் வல்லபனோ, தற்சமயம் தென்னாடு தலைவனின்றித் தவிப்பதாக தத்தன் கூறிய வார்த்தைகளை மனதில் போட்டு அவற்றையே நினைத்துக் கொண்டிருந்தான். அதை தத்தனிடமும் கூறினான். நாற்பது வருடங்கள் என்பது எத்தனை நீண்ட காலம்! ஒரு பரம்பரையே முற்றிலும் அழிந்து பட்டிருக்கிறது. இப்போது முற்றிலும் புதிய பரம்பரை! இதற்கு முந்தைய பரம்பரை குறித்த எந்தத் தகவல்களும் சரியாகத் தெரியாது. இத்தகைய புதிய பரம்பரையிலே நாம் தோன்றி இருக்கிறோமே! நம் காலத்திலும் அமைதி என்பதை நாம் இதுவரை பார்க்கவே இல்லையே என்றெல்லாம் வல்லபன் கேட்டான்.

ஒரு காலத்தில் இந்தத் தென்னாடு முழுவதும் சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப்பட்டதாம் நீதி நேர்மை, அமைதி போன்றவை இருந்ததாம். அரசர்கள் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனராம். கடைசியாகப் பாண்டியர்கள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பெரிய சாம்ராஜ்யத்தையே ஆண்டனராம். பின்னர் அவர்களுக்குள் வந்த வாரிசுச் சண்டையில் சாம்ராஜ்யமே அழிந்து விட்டதாமே! என்ன கொடுமை இது! இருந்த வரைக்கும் அவர்கள் எல்லா சமயங்களையும் ஆதரித்துப் போற்றிப் பாதுகாத்து மக்களையும் நல்வழியில் ஆண்டு வந்தனராம். பற்பல கோயில்களையும் எழுப்பினார்களாம். இவைகளைப் பற்றி எல்லாம் செவிவழியாக நாம் கேள்விப் படுகிறோம். ஆனால் இப்போதே அப்படியான ஓர் அரசனைக் கூட நம்மால் பார்க்க முடியவில்லையே! கோயில்களில் ஆறு கால வழிபாடுகள், திருவிழாக்கள் நடக்குமாம். இப்போதோ! பெரும்பாலான கோயில்கள் மூடியே கிடக்கின்றனவே. திருவிழா என்றால் என்ன? நம்மால் பார்க்கவே முடிவதில்லயே!

Sunday, June 23, 2019

வீரர் தலைவனுக்கு வந்த சந்தேகம்!

இளைஞர்கள் இருவருமே கையில் விலங்கிடப்பட்ட பெண்ணைப் பார்த்துவிட்டார்கள். யாராக இருக்கும்? துணைக்குச் செல்லும் பெண்மணி யார்? எங்கே செல்கின்றனர்? என்னும் கேள்விகள் இருவர் மனதையும் துளைத்து எடுத்தது. ஆனாலும் அந்த வீரர்கள் எதிரே இருவரும் எதையும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளவில்லை.  வண்டியின் மீதே அவர்கள் பார்வை இருந்தது.  கண்ணுக்கு வண்டி மறையும்வரை பார்த்துவிட்டு வல்லபன் கீழே குனிந்து தான் தூக்கி வந்த மூட்டையை எடுத்துத் தோளில் சாய்த்துக் கொண்டான். வல்லபனைப் பார்த்துக் காலதத்தனும் தன் மூட்டையை எடுத்துக் கொண்டான். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மௌனமாகவே பயணம் செய்தார்கள். காலதத்தனின் தாழங்குடை மறுபடியும் காற்றில் பறக்க முயற்சிப்பதும் காலதத்தன் பெரு முயற்சி செய்து அதை அடக்குவதுமாக இருந்தது. இருவர் மனதிலும் இனம் தெரியாத கலக்கம். மௌனமாக நடந்தவர்கள் சாலையின் ஓர் மேட்டில் ஏறியதும் காலதத்தன் நின்று வல்லபனைப் பார்த்தான்.

"வல்லபா! அந்தப் பாறை மேலே சீக்கிரம் ஏறு! அவசரம்!" என்று கூறிக்கொண்டே தான் அவசரமாக அந்தப் பாறையில் ஏற முனைந்தான். வல்லபனும் விரைந்து வந்தான். அங்கே ஓர் பெரிய மருதமரம். அதன் அடியில் சின்ன யானைக்குட்டி போல் காணப்பட்டது ஓர் கரிய பாறை. அதன் மேல் காலதத்தன் ஏறி நிற்க வல்லபனும் ஏறினான். மழைக்காலம் ஆதலால் மழையின் காரணமாகப் பாசி படிந்திருந்த அந்தப் பாறை ஏறுவதற்குள் வல்லபனுக்கு வழுக்கியது. என்றாலும் சமாளித்துக் கொண்டு ஏறி மேலே நிற்கும் காலதத்தன் அருகில் வந்தான். இருவரும் நெருங்கி அமர்ந்து கொண்டனர். காலதத்தன் வல்லபனைப் பார்த்து, "அதோ  பார்!" என ஓர் திக்கைச் சுட்டிக் காட்டினான். வல்லபன் அங்கே பார்த்து, "என்ன அது!" என்று வினவினான். தூரத்தில் காற்று விர்ரென்று சுழன்று அடித்துக் கொண்டிருக்க அது கிளப்பி விட்டிருந்த தூசுப் படலத்தில் சற்று முன் சென்ற கூண்டு வண்டியின் பாதுகாப்புக்குச் சென்ற வீரர்களின் தலைவன் திரும்ப நம் இளைஞர்களைச் சந்தித்த இடத்துக்கு வந்து கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த இளைஞர்கள் எதற்கும் தயாராகத் தங்கள் வாள், கத்தி போன்றவற்றைச் சரிபார்த்துக் கொண்டு எந்நேரமும் எடுத்துப் பயன்படுத்தத் தயாராக இருந்தார்கள். தங்கள் மூட்டைகளுக்குள் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்துக் கொண்டு அதன் கைப்பிடியில் தங்கள் கைகளை வைத்த வண்ணம் எந்த நேரமானாலும் வாளை உருவிக்கொண்டு போரிடத் தயாராக ஆனார்கள்.  வீரர் தலைவன் வரும்போது முதலில் வேகமாக வந்தவன் இளைஞர்கள் இருக்கலாமோ என்னும் இடம் வந்ததும் நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு சுற்றும், முற்றும் பார்த்த வண்ணம் மெதுவாக வந்தான். அவன் சுற்றிச் சுற்றித் தேடியதைப் பார்த்தால் அவர்களைத் தான் தேடுகிறானோ என இருவருக்கும் தோன்றியது. மிக மிக உன்னிப்புடன் கவனித்துக் கொண்டு வந்தவன் இளைஞர்கள் அமர்ந்திருந்த பெரும்பாறையின் அடிக்கு வந்து விட்டான். அந்தப் பாறையைச் சுற்றிச் சுற்றி அவர்களைத் தேடினான் போலும்! இளைஞர்களும் அவனையே கவனித்த வண்ணம் இருந்தார்கள்.

சற்று நேரம் இப்படி அந்த வீரனை அலைய வைத்தபின்னர் காலதத்தன் மேலே அமர்ந்த வண்ணமே தன் கைகளைத் தட்டி அந்த வீரர் தலைவனை அழைத்தான்.திடுக்கிட்ட வீரர் தலைவன் அங்குமிங்கும் சுற்றிலும் பார்த்து யாரையும் காணாமல் திகைத்தவன் ஒரு வழியாகப் பாறையின் மேல் அமர்ந்திருந்த இரு இளைஞர்களையும் பார்த்துவிட்டான். அங்கே இருந்த வண்ணம் அவர்கள் தன்னை அழைத்தது அவனுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. ஆகவே முதலில் கோபத்தைக் காட்டி அவர்களைப் பார்த்தவன் திடீரென ஏதோ நினைத்தவன் போல் முகத்தில் மந்தகாசம் காட்டினான். "என்னடா தம்பிகளா? நீங்கள் இருவரும் மனித குலம் தானா? அல்லது கிஷ்கிந்தை வாசிகளா?" என நகைச்சுவையாகக் குறிப்பிடுவது போல் சொல்லி வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சிரித்தான்.

அவனை மிக நுட்பமாகக் கவனித்த காலதத்தனும் அவன் சொல்வதை ஆமோதிப்பவன் போல் தலையை ஆட்டினான். "ஐயா, தெற்கே தானே இலங்கை இருக்கிறது! ஆகவே கிஷ்கிந்தை இங்கே தான் இருந்திருக்கும்! இங்கே இருந்தே கிஷ்கிந்தாவாசிகள் இலங்கைக்குப் போயிருக்கலாம்!" என்று வாசாலகமாகப் பேசினான். சேவகர்களின் தலைவன் தான் அந்தப் பேச்சைக் கேட்டுப் பாராட்டிச் சிரிப்பதைப் போல் பாவனை செய்தான். பின்னர் குதிரையைத் தடவிக் கொடுத்துக் கொண்டான். மீண்டும் அவர்களைப் பார்த்து, "ஏனடா தம்பிகளா? இந்தப் பாறை மேல் ஏறி அமர்ந்து விட்டீர்கள்? நீங்கள் இருவரும் ஓடுமானூர் சத்திரம் வந்து தங்கப் போவதில்லையா?" என்றும் கேட்டான். காலதத்தன் இன்னும் இருட்டிய பின்னர் வருவதாகச் சொன்னான். தற்போது இங்கே இருக்கும் காற்றும் பூந்தூற்றலாகப் பொழியும் மழையும் அவர்கள் மனதைக் கவர்ந்து விட்டதால் அதை அனுபவித்துக்கொண்டு அங்கே உட்கார்ந்திருப்பதாய்ச் சொன்னான். இரவுக்குள் ஓடுமானூர் வந்துவிடுவோம் என்றான்.

உடனே வீரர் தலைவன் அவர்களைப் பார்த்து அப்படியானால் என்னுடைய வீரர்கள் பலரும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்த இடத்துக்கு வந்ததும் ஓடுமானூருக்குச் செல்லும் வழியை அவர்களுக்குக் காட்டி அனுப்பி வையுங்கள் என்றும் கேட்டுக் கொண்டான். காலதத்தன் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொள்ள வீரர் தலைவன் அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் அங்கிருந்து கிளம்பி ஓடுமானூர் நோக்கிச் சென்றான். வல்லபன் இதெல்லாம் என்ன, தனக்கு ஒன்றும் புரியவில்லையே என்று கேட்டவன் ஏதோ மூடுமந்திரமாகவும் இருப்பதாகச் சொன்னான். அதைக் கேட்ட காலதத்தன்.வல்லபனிடம் தாங்கள் இருவரும் அப்போது பேராபத்திலிருந்து தப்பி இருப்பதாகச் சொன்னான். வல்லபன் திடுக்கிட்டான். என்ன விஷயம், என்ன ஆயிற்று, ஏன் காலதத்தன் இவ்வாறு சொல்கிறான் என்றெல்லாம் வல்லபன் கேட்க அதற்குக் காலதத்தன் வல்லபனிடம் சொன்னான்.

"வல்லபா! இந்த வீரர் தலைவன் திரும்பி வந்தது நம்மை யார் என்றும் என்னவென்றும் பார்த்து அறிவதற்காகவே! நாம் எப்படியோ அவனிடமிருந்து தப்பி விட்டோம்!" என்று சொன்னான் காலதத்தன். அதைக் கேட்ட வல்லபன் திகைத்து நிற்க, " ஆம், வல்லபா!கூண்டு வண்டி கிளம்பிச் செல்லும்போதே அவன் நம்மைப் பார்த்த பார்வையில் சந்தேகம் தெரிந்தது. ஆகவே அவன் நாம் பின் தொடருகிறோமா எனப் பார்த்துக் காத்துக் கொண்டிருந்துவிட்டு நாம் வரவில்லை எனில் நம்மைத் தேடி வருவான் என யூகித்தேன். அப்படியே நடந்தது!" என்றான் காலதத்தன்.

Friday, June 21, 2019

வண்டிக்குள் இளம்பெண்!

அதற்குள்ளாகக் காலதத்தன் அரைக்காத தூரத்தில் ஓடுமானூரில் சத்திரம் ஒன்று இருப்பதாகவும் அங்கே தான் தாங்களும் செல்வதாகவும் சொன்னான். அரைக்காதமா என யோசித்தான் அந்த வீரர் தலைவன். பின்னர் வண்டிக்காரன் வண்டியைக் கிளப்பவும் மற்ற வீரர்கள் கிளம்ப அவர்களுடன் அவனும் கிளம்பினான். வண்டிக்குள்ளிருந்து மகிழம்பூவின் வாசனை அங்கே பரவி நிறைந்தது. அந்தச் சமயம் பார்த்து வாயு பகவான் தன் வேலையைக் காட்டினார். பெருங்காற்று மிக வேகமாகப் புறப்பட்டு அந்தச் சாலையையும் மரங்களையும் மறைத்த வண்ணம் புழுதியைக் கிளப்பிக் கொண்டு போக சேவகர்கள் தலையில் கட்டி இருந்த தலைப்பாகைகள் காற்றின் வேகத்தில் அடித்துக் கொண்டு போய் விட்டன. தலைப்பாகையைப் பிடிக்க வேண்டி வீரர்கள் குதிரையில் இருந்து குதித்தனர்.

அந்தச் சமயம் பார்த்து நாற்புறமும் நெருக்கமாக அடைத்திருந்த வண்டியின் திரைச்சீலைகள் காற்றின் வேகத்தைத்ஹ் தாங்க முடியாமல் பொத்துக் கொண்டு திறந்து கொண்டு விட்டன. திரும்பிப் பார்த்த ராஜவல்லபனின் கண்களில் கூண்டு வண்டிக்குள் அமர்ந்திருந்த ஓர் இளம்பெண் தெரிந்தாள்.  மிக அழகிய அந்தப் பெண்ணின் பரந்து விரிந்திருந்த கண்கள் மட்டும் சோகம் ததும்பியதாய்க் காணப்பட்டன. காரணம் புரியாத அந்த சோகம், அதன் தாக்கம் ராஜவல்லபனிடமும் ஏற்பட்டது. திரைச்சீலைகள் திறந்து கொண்ட வேகத்தில் தலை நிமிர்ந்த அந்தப் பெண் அரைக்கண நேரம் வல்லபனைப் பார்த்திருப்பாள். அதற்குள்ளாக வீரர்கள் தலைவன் பதறிக்கொண்டு ஓடி வந்து திரைச்சீலைகளை மூடுவதற்கு ஆணையிட்டுக் கொண்டே ஒரு பக்கத் திரைச்சீலைகளை இழுத்துப் பிடித்துத் தானே நெருக்கமாக மூடவும் செய்தான்.

அப்போது அந்தப் பெண்ணானவள் தன் முகத்தில் காற்றினால் வந்து பரவிய தூசியைத் துடைப்பவள் போல் தன் கைகளைத் தூக்கி முகத்தைத் துடைக்க முற்பட அவள் கைகளில் பூட்டப்பட்டிருந்த கைவிலங்குகளை வல்லபன் கண்டு அதிர்ச்சி அடைந்தான். இத்தனை அழகிய இளம்பெண்ணின் கைகள் விலங்கால் ஏன் பூட்டப்பட்டிருக்க வேண்டும்? யார் இந்தப் பெண்! எங்கே செல்கிறாள்? இவளுக்கு விலங்கு பூட்டியவர் யார்? என்ன காரணத்தால் விலங்கு பூட்டப்பட்டிருக்கிறாள்? இவற்றை எல்லாம் வல்லபன் யோசிக்கும்போதே வீரர் தலைவன் திரைச்சீலைகளை இழுத்துக் கட்டிக் கொண்டிருந்தான். அப்போது தான் அந்தப் பெண் வண்டிக்குள் தனியாக இருக்கவில்லை என்பதும் நடுத்தர வயதுள்ள ஓர் பெண்மணி வீரர் தலைவனுக்கு உதவியாக திரைச்சீலைகளை இழுத்துக் கட்ட உதவியதையும் வல்லபன் கண்டான்.

அந்தப் பெண்ணிற்கு நாற்பது வயது இருக்கலாம். அவளும் வீரர் தலைவனுடன் சேர்ந்து திரைச்சீலைகளை இழுத்துக் கட்டி உதவி செய்தாள். ஆனாலும் காற்று அப்போதும் நிற்கவில்லை. "உய்"யென்ற சப்தத்துடன் ஓங்கி வீச ஆரம்பித்தது. ஆங்காங்கிருந்த மரங்கள் காற்றின் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டு பெரும் சப்தங்களை எழுப்பின. அரசமரம் ஒன்று "விர், விர்" என சப்தித்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாகத் திரைச்சீலைகளை இழுத்துக் கட்டின வீரர் தலைவன் ஒரு பெருமூச்சுடன் தன் அங்கிகளையும் நன்கு சுருக்கிக் கட்டியவண்ணம் அங்கே நின்றிருந்த காலதத்தனையும் வல்லபனையும் பார்த்து முறைத்தான்.  பின்னர் அதே கோபத்தோடு வண்டியை மேலே ஆக்ஞை இட்டான். வண்டியும் புறப்பட்டது.  வண்டி மேட்டிலும் பள்ளத்திலும் இறங்கிச் சென்றதால் பல்லக்குக் குலுங்குவது போல் வண்டியும் குலுங்கியது.  வண்டியின் மணி ஓசை வெகு தூரத்துக்குக் கேட்டுக் கொண்டிருந்தது.

Thursday, June 20, 2019

வண்டிக்குள் யார்?

மக்கள் பயத்தின் காரணமாகப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்திருப்பார்கள் எனப் பேசிக் கொண்டனர் இருவரும். ஆனாலும் வயதின் காரணமாகவும் புதிய இடங்களைப் பார்க்கும் ஆவலினாலும் இருவரும் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் பயணம் மேற்கொண்டனர். சிறிது தூரம் சென்றதும் தாகம் எடுக்கவே இருவரும் அங்கே காணப்பட்ட ஓர் ஓடை அருகே அமர்ந்து கொண்டு நிதானமாகத் தாகம் தணித்துக் கொண்டனர். வல்லபன் அப்போது நண்பனிடம் தன் தாய் ஊரை விட்டு ஒரு காத தூரம் சென்றதும் பார்க்கும்படி சொல்லி ஓர் ஓலைச்சுருளைக் கொடுத்திருப்பதாய்க் கூறினான். அந்த ஓலைச் சுருளை நண்பனிடம் காட்டவும் செய்தான். ஒரு காதத்துக்கும் மேல் தாங்கள் வந்து விட்டதால் ஓலைச்சுருளைப் பிரித்துப் படிக்கலாம் என இருவரும் முடிவு செய்தனர். அதன்மேல் ஓலைச்சுருளைப் பிரித்தனர். அதில் மஞ்சள் தடவி இருந்தது. அதில் கீழ்க்கண்டவாறு எழுதி இருந்தது.

"வல்லபனுக்கு ஆசிகள். மங்களம் உண்டாகட்டும். உன் தயார் உன்னை ஆசீர்வதித்துச் சொல்லுவது என்னவெனில் "வல்லபா! மொழியில் பிறழாதே! வழியில் பிறழாதே! விழியில் பிறழாதே!" என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு கணம் இருவருக்கும் எதுவும் புரியவில்லை.

பின்னர் வல்லபனுக்குச் சிரிப்பு வர, அவன் நண்பன் காலதத்தன் அதை வாங்கிக் கொண்டு மீண்டும் படித்தான். வல்லபனைப் பார்த்து, "வல்லபா, இதில் சிரிக்க ஏதும் இல்லை. அறிவில் சிறந்த உன் தாய் ஆழப் பொதிந்திருக்கும் கருத்துக்களைக் கொண்டு இதைச் சுருக்கமாக எழுதி இருக்கிறார். இதன் மூலம் உன் வருங்காலத்துக்குப் பல உதவிகள் ஏற்படலாம். நீ எதற்கும் கவனமாக இருக்க வேண்டும். இந்த அறிவுரைகளை நீ கவனத்துடன் பின்பற்ற வேண்டும்."


என்றான்.

அப்போது வல்லபன், தானும் தன் தாயை மதிப்பதாகவும், அவள் அறிவுரைகளை ஏற்பதாகவும் கூறினான். மேலும் அவன் கூறியதாவது அவன் தாய் இன்னமும் அவனைச் சின்னஞ்சிறு சிறுவனாகவே எண்ணி வருகிறார் என்று கூறினான். அவர் ஏற்கெனவே தக்க பாதுகாப்பு இல்லாமல் என்னை வெளியே அனுப்ப யோசனை செய்வார். இப்போது மட்டும் நீ இல்லை எனில் நான் இந்தப் பயணமே மேற்கொண்டிருக்க முடியாது!" என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தான். இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர்.

இரண்டாம் நாளும் பயணத்திலேயே சென்றது. அன்றைய தினம் இருவரும் பல காத தூரங்களை வெகு வேகமாகக் கடந்திருந்தனர். அதனால் காலதத்தனுக்குச் சோர்வு ஏற்பட்டிருந்ததோடு காலில் நோவும் கண்டிருந்தது. ஆகவே அவன் சற்று இளைப்பாறிவிட்டுச் செல்வோம் என வல்லபனிடம் சொன்னான். அதன் மேல் இருவரும் சாலையோரத்தில் இருந்த பெரியதொரு மர நிழலில் அமர்ந்து கொண்டு தங்கள் மூட்டைகளைப் பிரித்து அதில் இருந்து சத்துமாவு போன்றதொரு உணவை எடுத்து உண்டனர். பின்னர் இரவு எங்கே தஙுவது என்பது குறித்துப் பேசிக் கொண்டு அருகில் உள்ள  ஓடுமானூர் என்னும் ஊரில் உள்ள சத்திரத்தில் தங்கிச் செல்லலாம் என முடிவு செய்து கொண்டனர். வல்லபன் ஆச்சரியத்தோடு இதை எல்லாம் காலதத்தன் நினைவு வைத்திருப்பதைப் பற்றிக் கேட்க, கால தத்தன் தான் தன் தந்தையோடு இவ்வழியில் பலமுறை பயணம் செய்திருப்பதாய்க் கூறினான். காஞ்சிக்கும் திருப்பதி-திருமலைக்கும் கூடச் சென்று வந்திருப்பதாய்ச் சொன்னான்.

அப்போது அடித்த காற்றில் பறந்த தாழங்குடையைப் பிடிக்க வேண்டி எழுந்த காலதத்தன் கொஞ்ச தூரம் ஓடிப் போய்த் தான் அதைப் பிடிக்க வேண்டி இருந்தது. அது பாட்டுக்குக் காற்றோடு அதன் திசையில் போக காலதத்தன் ஓடோடிப் போய்ப் பிடித்தான். அப்போது சாலையில் ஏதேதோ அரவங்கள் கேட்க தன்னெதிரே விரிந்த சாலையைத் தலையைத் தூக்கிப் பார்த்தான் காலதத்தன். உடனே அவன் கண்கள் விரிந்தன. முகத்தில் கலவரம் பதிவாயிற்று. வல்லபன் பக்கம் ஓடி வந்து சேவகர்கள் சிலர் வருவதாகவும் யாருடைய சேவகர்கள் என்றே சொல்லமுடியவில்லை எனவும் கூறிக்கொண்டு சாலையை விட்டு அகன்று ஓரம் நோக்கி ஓடினான். வல்லபனையும் வரச் சொன்னான். அவன் காட்டிய திசையில் பார்த்த வல்லபன், யாராக இருக்கும் என வாய்விட்டுக் கேட்டுக் கொண்டே யோசித்தான்.

காலதத்தன் அதற்கு," நாட்டில் இப்போது நிரந்தரமாக எந்த அரசனும் ஆட்சி செய்ய முடியாமல் இருக்கையில் யாருடைய சேவகர்கள் என நாம் எப்படிக் கூற முடியும். இவர்கள் நம் நண்பர்களா, எதிரிகளா என்பதை எல்லாமும் நாம் அறிய மாட்டோம். ஆகவே நாம் இவர்களை நேருக்கு நேர் சந்திக்காமல் தவிர்ப்பதே நல்லது! சீக்கிரம் வா! எங்கானும் ஒளிந்து கொள்ளலாம்!" என வல்லபனை அழைத்தான். உடனே கீழே கிடந்த தங்கள் மூட்டைகளையும் எடுத்துக் கொண்டே ஒளிந்து கொள்ளலாம் என அவற்றை எடுக்கப் போன வல்லபன் மீண்டும் சாலையை நோக்கினான். அவன் கண்களுக்குப் பின்னால் ஓர் கூண்டு வண்டியும் வருவது தெரிந்தது. உடனே காலதத்தனிடம் சேவர்கள் புடைசூழக் கூண்டு வண்டி ஒன்று வருவதைச் சொன்னான். காலதத்தனுக்கும் இப்போது வல்லபனின் ஆவல் தொற்றிக்கொண்டது போலும்! ஒளிய வேண்டும் என்னும் பரபரப்புக் குறைந்து விட்டது அவனிடம். யாரெனப் பார்க்கலாம் என நினைத்தாற்போல் இரு இளைஞர்களும் அங்கேயே நின்று விட்டனர்.

வண்டி அவர்களை நோக்கி வந்தது. முன்னால் சேவகர்களும் பாதுகாப்புக் கொடுத்த வண்ணம் வந்தார்கள். வண்டியின் "டிங்க்! டிங்க்" என்னும் மணி ஓசை அந்த நிசப்தமான நேரத்தில் பேரோசையாகக் கேட்டது. கம்பீரமான இரு காளைகள் நீண்ட கொம்புகளுடன் காணப்பட்டவை அந்த வண்டியை இழுத்துக் கொண்டு சற்றே பெரு நடையில் வந்தன. அவற்றின் நெற்றியில் வெண் சங்கால் அலங்கரிக்கப்பட்டுக் காட்சி அளித்தது. கழுத்தில் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் பட்டு நூலால் ஆன மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது.  வண்டிக்கூட்டின் மேலேயோ பெரிய தாமரைப்பூ வரையப் பட்டிருந்த துணியால் போர்த்தப்பட்டிருந்தது. வண்டியின் கைப்பிடிகள் அனைத்தும் நன்றாகத் துடைக்கப்பட்டுப் பளபளவெனக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. வண்டியின் முன்னே ஓட்டுபவருக்குப் பின்னால் வண்டியின் உள்ளே அமர்ந்திருப்பவர்  தெரியா வண்ணம் பட்டுத் திரைச்சீலை இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. வண்டியில் இருந்து இறங்கும் இடத்தில் பார்க்கலாம் எனில் அங்கேயும் ஓர் பட்டுத் திரைச்சீலை இழுத்துக் கட்டப்பட்டு உள்ளே இருப்பவர் யாராக இருக்கும் என யூகங்களைக் கிளப்பி விட்டிருந்தது.

சேவகர்கள் வண்டியின் முன்னும், பின்னும் மட்டும் இல்லாமல் இரு பக்கவாட்டுக்களிலும் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டு வந்தனர். எல்லோர் கைகளிலும் வேல்கள் நுனி தீட்டப்பட்டு பளபளத்துக் கொண்டிருந்தன.  இளைஞர்களைப் பார்த்ததும் வண்டி அங்கேயே நின்று விட்டது. சேவகர்களில் ஒருவன் வல்லபனைப் பார்த்து அருகே ஏதேனும் பெரிய ஊரோ அல்லது சத்திரமோ இரவு தங்கிச் செல்லும்படி இருக்கிறதா எனக் கேட்டான். வல்லபன் அவனை நிமிர்ந்து பார்த்தான்!

Monday, June 17, 2019

வல்லபன் கிளம்பினான்!

வாசந்திகா மகனைப் பார்த்துக் கண்ணீர் பெருக்கினாள். அவனிடம், "மகனே! எந்தத் தாயும் கேட்கக் கூடாத ஒன்றை உன்னிடம் கேட்கப் போகிறேன். ஆனால் அது இந்த நாட்டின் உன்னதமானதொரு லட்சியத்தை நிறைவேற்றத் தான் கேட்கப் போகிறேன். இவ்வலவு வருடங்களாக என்னுடைய கண்காணிப்பில் வளர்ந்த நீ இப்போது தன்னந்தனியாக நாட்டுக்குள் சென்று பல்வேறு விதமான அனுபவங்களையும் பெறப் போகிறாய்! அனைத்தும் புதுமையாக இருக்கும் உனக்கு! அந்த அனுபவங்களில் சில உனக்கு சோதனைகளைத் தரலாம். சங்கடங்கள் ஏற்படலாம். நீ என்னென்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் நான் சொல்லி அனுப்பினாலும் அதையும் மீறிச் சில நிகழ்வுகள் ஏற்படலாம். நீ அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்."

"மகனே! உன் தந்தை மேற்கொண்டிருந்த மாபெரும் லட்சியம் குறித்து உன்னிடம் பலமுறை பேசி விட்டேன். அதை நிறைவேற்றுவது ஒன்றே உன் முதல் கடமை! அதை நினைவில் வைத்துக்கொள்! அதற்கு இடையூறாக ஏதேனும் நிகழ்ந்தால் நீ அதில் சம்பந்தப்படக் கூடாது! மகனே! தெளிவாகவே சொல்கிறேன். நீ செல்லும் வழியில் பல்வேறு இளம்பெண்களைப் பார்க்கலாம். அவர்களின் உன் மனதைக் கவரும்படியான பெண் இருக்கலாம். அவளைத் திருமணம் செய்து கொண்டால் என்ன என்னும் எண்ணம் உன்னிடம் உதிக்கலாம். மகனே! உன் தந்தை கொண்ட லட்சியம் நிறைவேறும் வரையிலும் நீ அத்தகையதொரு எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதே! பெண்ணாசை உன்னைப் பெரும் குழியில் தள்ளிவிடும். உன் லட்சியத்திலிருந்து நீ பிறழ்ந்து நடக்க வழி செய்து விடும். உன் தந்தையோடு நானும் கொண்ட இந்தக் கனவு! அரங்கனை மீண்டும் திருவரங்கம் கொண்டு சேர்க்கும் மாபெரும் லட்சியம்! இது நிறைவேறும்வரை நீ வேறு ஏதும் ஆசாபாசங்களுக்கு இடம் கொடுக்காமல் உன் மனதை உறுதியாகக் கல்லைப் போல் திடமாக வைத்துக்கொள்! இந்த உறுதிமொழியை நீ எனக்குக் கொடு!" என்று சொல்லிய வண்ணம் தன் வலக்கையை வல்லபனுக்கு எதிரே நீட்டினாள் வாசந்திகா.

வல்லபன் நிமிர்ந்து தாயைப் பார்த்தான். அவன் கண்களில் வீரமும் அதனால் விளைந்த பெருமிதமும் தலை தூக்கி நின்றன. தன் தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டு," இவ்வளவு தானா அம்மா! இத்தகையதொரு காரியத்தைச் செய்ய நான் மறுப்பேனா? உங்கள் கனவு, லட்சியம் நிறைவேறும்வரை நான் திருமணம் பற்றி நினைக்கக் கூட மாட்டேன்! இது சத்தியம்!" என்று கூறினான். பின்னர் கீழே விழுந்து அவளை நமஸ்கரித்து எழுந்தான். மகனைக் கட்டி அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தாள் வாசந்திகா. பின்னர் வெற்றி உண்டாகட்டும் என்று அவனை வாழ்த்தினாள். அப்போது அங்கு வாசலில் வந்து நின்றான் கையில் தாழங்குடையுடன் ஓர் வாலிபன். எப்போதும்  முறுவல் பூத்த முகத்தோடு காணப்பட்ட அவன் வல்லபனின் பிராயத்துக்கு ஒத்தவனாக இருந்தான். அவனைப் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதி அடைந்த வாசந்திகா, அவனிடம், "காலதத்தா! எல்லா விபரங்களையும் வல்லபனிடமும் சொல்லி இருக்கிறேன். இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல் வெகு ஜாக்கிரதையாகச் செல்லுங்கள்! உங்களுக்குக் கொடுத்த வேலையை நல்லபடியாக முடித்துக் கொண்டு திரும்ப வேண்டும்." என்றாள்.

காலதத்தன் அவள் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டதற்கு அறிகுறியாக அவளைப் பார்த்து அதே முறுவலைச் சிந்தினான். பின்னர் வாயிலில் நன் நிமித்தங்கள் தென்படுகிறதா எனப் பார்த்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள். வாசந்திகாவின் கண்களில் இருபது வருடங்கள் முன்னர் குலசேகரன் அரங்கனைக் காப்பாற்ற வேண்டிக் கிளம்பிச் சென்ற காட்சி கண் முன்னே விரிய இப்போது தன் மகனாவது அரங்கனைத் திரும்பக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமே என்னும் கவலையில் மூழ்கிய வண்ணம் அந்த வீட்டின் வாசற்படியில் இருந்த தூண்களில் ஒன்றில் சாய்ந்த வண்ணம் தூணோடு தூணாகக் கண்ணீர் பெருக்கிய வண்ணம் சிலையாகச் சமைந்தாள்.

இங்கே இளைஞர்கள் இருவரும் பேச்சும் சிரிப்புமாகப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஊரைக் கடந்து ஊரின் கோயில் விமானத்தைத் தரிசித்துக் கொண்டு மரங்களுக்கு இடையே அமைந்திருந்த பாட்டையில் நடக்கத்துவங்கினார்கள். கிழக்கே செல்லும் ராஜபாட்டை அது. அந்தச் சமயத்தில் அந்த ராஜபாட்டையில் ஜன நடமாட்டமோ, வாகனங்களோ செல்லவில்லை. ஓரளவுக்கு அமைதியாகவே இருந்தது. இதைக் கண்டு இருவருக்கும் கொஞ்சம் ஆச்சரியம் ஏற்பட்டது.  எப்போதும் ஜனநடமாட்டம் அதிகமாகக் காணப்படும் அந்தச் சாலையில் இப்போது நடமாட்டமே இல்லாமல் வெறிச்சென்று காணப்பட்டது இருவருக்கும் மனதை உறுத்தியது. காரணம் என்னவாக இருக்கும் என்று பேசிக் கொண்டார்கள். 

Wednesday, June 12, 2019

சத்திய மங்கலத்தில் வாசந்திகா தன் மகனுடன்!

இப்போது சொல்லப்படப் போகும் நிகழ்வுகளில் சரித்திர பூர்வமான ஆதாரமான நிகழ்வுகள் அனைத்தையும் கம்பணன் மனைவி தானே நேரில் பார்த்து எழுதியவை ஆகும்! மதுரா விஜயம் புத்தகம் முன்னர் இணையத்தில் காணக் கிடைத்தது. இப்போது கிடைக்கவில்லை. ஆகவே கொஞ்சம் கொஞ்சம் தெரிந்தவற்றை வைத்து மட்டுமே எழுத வேண்டும். கோயிலொழுகுவின் ஆடியோக்களும் இப்போது தடை செய்திருக்கின்றனர் போலும்.புத்தகம் மட்டும் விற்பனைக்கு என வருகிறது. ஶ்ரீரங்கம் பற்றி எழுதியவர்கள் கொடுக்கும் தகவல்கள், ஶ்ரீவேணுகோபாலன் எழுதியவை ஆகியவற்றின் அடிப்படையிலேயே மேற்கொண்டு இந்தச் சரித்திரத்தை நகர்த்தியாக வேண்டும்.

கடைசியாக அரங்கனை மேல்கோட்டைக்கு அனுப்பி விட்டு அங்கேயே அவனை விட்டு விட்டு வந்தோம். அதன் பின்னர் அரங்கன் என்ன ஆனான், அவன் மீண்டும் அரங்கமாநகருக்கு வந்தது எவ்வாறு என்பதையே இனி பார்க்கப் போகிறோம். கடைசியாகப் பார்த்த வரலாற்றிலும் வாசந்திகா என்னும் நாட்டியப் பெண் குலசேகரனைக் காப்பாற்றிப் பிழைக்க வைக்கச் செய்த முயற்சிகளையும், அவனுக்காக மேல்கோட்டையில் இருந்து அரங்க விக்ரஹத்தைத் தூக்கி வந்ததையும் பார்த்தோம். அந்த அரங்கன் சாட்சியாக வாசந்திகாவுடைய விருப்பத்தின் பேரில் குலசேகரன் அவளைக் காந்தர்வ விவாஹம் செய்து கொண்டதாகவும் பார்த்திருந்தோம். அந்த விவாஹம் முடிந்ததும் ஒரு வாரமே இருந்த குலசேகரன் அரங்கன் திருவடிகளைச் சரணம் அடைந்ததையும் பார்த்தோம். அந்த ஒருவாரத்தில் வாசந்திகாவின் இடைவிடாத விருப்பத்தின் பேரில் குலசேகரன் அவளுக்குள் தன்னுடைய அடையாளமாக ஓர் கருவைக் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தான். அந்தக் கரு ஓர் ஆண் மகன்.

ஆம், வாசந்திகா தன்னுடைய காந்தர்வ விவாஹத்தின் மூலம் குலசேகரன் வழியாக ஓர் பிள்ளையைப் பெற்று எடுத்து விட்டாள். அதன் பின்னர் வருடங்கல் 20 கடந்து விட்டன. விஜயநகர சாம்ராஜ்யம் தலை தூக்க ஆரம்பித்திருந்தது. குலசேகரன் வாசந்திகாவுக்குக் கொடுத்த பிள்ளைக்குப் பிராயம் 19 ஆகி இருந்தது. நல்ல வளர்ந்த வாட்டசாட்டமான வாலிபன் ஆன அவன் பார்க்கவும் குலசேகரன் போலவே இருந்தான். குலசேகரனைப் பறி கொடுத்த அதே சத்தியமங்கலத்திலேயே தொடர்ந்து தன் வாழ்க்கையை நடத்தி வந்திருந்தாள் வாசந்திகா! ஐம்பதுக்கும் மேல் இப்போது பிராயம் உள்ளவளாக இருந்த போதிலும் நடனப் பயிற்சி காரணமாக இன்னமும் கட்டான உடலுடன் 40 பிராயம் ஆனவளைப் போலவே காட்சி அளித்தாள். குலசேகரன் உயிர் பிரிந்ததில் இருந்து அவனைத் தவிர வேறு எவர் நினைவும் இல்லாமல் வாழ்ந்து வந்த வாசந்திகா தன் மகனையும் குலசேகரனின் கனவை நிறைவேற்றும்படியாகச் சொல்லிக்கொடுத்து வளர்த்து வந்திருந்தாள். மகனும் தாயின் உணர்வையும் தந்தை விட்டுச் சென்ற பெரியதொரு லட்சியத்தை முடிக்கும் ஆவலுடனும் இருந்தான்.

அப்போது 1360 ஆம் ஆண்டு நடந்து கொண்டிருந்தது. அது ஓர் ஐப்பசி மாதத்து மழைக்காலத்தின் இளங்காலை நேரம். காலையிலிருந்து விடாமல் தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. விடிந்தும் விடியாமலும் இருந்த பொழுது. கொங்கு நாட்டுச் சத்தியமங்கலத்தில் ஓர் வீட்டில் இந்த அதிகாலையிலேயே ஓர் இளைஞன் இருபது வயதுக்குள் இருக்கும். பயணத்துக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தான். அவன் தாயைப் போல் காணப்படும் ஓர் அம்மாள் அவனைப் பயணம் செய்யத் தயாராக வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டிருந்தார். அந்த இளைஞன் தான் குலசேகரன் மகன். வல்லபன் என்னும் பெயரிட்டு அவனை வளர்த்து வந்திருந்தாள் வாசந்திகா. அந்தப் பெண்மணி வாசந்திகாவேதான். அவள் இயல்பான நடையாக இருந்தாலும் கூட அவள் நடனக்கலையில் பெற்றிருந்த தேர்ச்சி காரணமாக அவள் ஒவ்வொரு அசைவுகளிலும் ஓர் நளினம் காணப்பட்டது.

தன் கைகளில் ஓர் வெள்ளி ரட்சையை வைத்திருந்த அவள் அதை இறைவன் பாதத்தில் வைத்துவிட்டுக் கொண்டு வந்தாள். தன் மகனை அழைத்து அதைக் கட்டிக் கொள்ளச் செய்தாள். அவன் புஜத்தில் அந்த ரட்சையைக் கட்டிவிட்டுப் பின்னர் கண்ணீர் பெருக்கினாள் வாசந்திகா. மகனைப் பார்த்து, "வல்லபா! என் ஆசைகளைப் புரிந்து கொண்டாய் அல்லவா? அவற்றை நிறைவேற்றித் தருவாயா?" என்று கேட்க அவளைப் பார்த்து முறுவலித்த வல்லபன் அவ்வாறே செய்வதாக உறுதி கூறினான். அவனுடைய சிரிக்கும் கண்களிலும் உதடுகளின் சுழிப்பிலும் குலசேகரனையே கண்டாள் வாசந்திகா/  மனதுக்குள் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் குலசேகரன் மறைவு தந்த துக்கம் அவளை விட்டு இன்னமும் அகலவில்லை. மகனை உச்சி முகர்ந்துக் குங்குமம் இட்டு திருஷ்டியும் கழித்தாள்.

பிறகு மகனைப் பார்த்துக் கொண்டே அவன் கைகளைத் தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டாள். "வல்லபா! உனக்குப் பல முறை சொல்லிவிட்டேன். உன் தந்தையின் முடிவுறாக் கனவுகளை உன் மூலம் நிறைவேற்ற வேண்டும்! உன்னை அதற்காகவே நான் பெற்றெடுத்திருக்கிறேன். உன் தந்தை மரணப் படுக்கையில் தான் என்னை மணந்து கொண்டார் என உன்னிடம் பல முறை சொல்லி இருக்கிறேன். தன்னால் செய்ய முடியாத தன் லட்சியக் காரியத்தைத் தன் மகன் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்னும் தாளா ஆவல் காரணமாகவே உன் தந்தை என்னை மணந்து கொண்டார். உன்னை எனக்கும் அளித்தார். "

"மகனே! உன் தந்தையை நான் என் இளமை வாய்ந்த நாட்களிலேயே திருவரங்க மாநகரில் ஓர் சுறுசுறுப்பான கடமை தவறாத போர் வீரராகப் பார்த்திருக்கிறேன். அரங்கமாநகரின் பாதுகாப்பும், அரங்கனின் பாதுகாப்புமே அவர் லட்சியமாக இருந்தது. அதற்கு பங்கம் ஏற்பட்டு அரங்கன் திருவரங்கத்திலிருந்து கிளம்பி அங்கே, இங்கே சுற்றிவிட்டு இப்போது மேல்கோட்டையில் வந்து அங்கிருந்தும் கிளம்பி விட்டான் எனத் தெரிய வருகிறது. அரங்கனைத் திரும்பி அரங்கமாநகருக்குள் கொண்டு சேர்க்க வேண்டும். மறுபடி அவனுக்கு எல்லாவிதமான வழிபாடுகளும் முறை தவறாமல் நடைபெற வேண்டும். இதுவே உன் தந்தையின் லட்சியம். இதற்காகவே அவர் வாழ்ந்தார்! வல்லபா! நானும் உன்னை இந்த லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியே வளர்த்து வந்திருக்கிறேன். உன் தந்தையின் கனவு தான் என் கனவும் கூட! இதில் நான் உன்னைத் தான் நம்பி இருக்கிறேன். இந்தக் கனவு நிறைவேற வேண்டும் எனில் நீ எனக்கு ஓர் சத்தியம் செய்து தர வேண்டும்!" என்று சொல்லி நிறுத்தினாள் வாசந்திகா!