எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, October 08, 2019

சாம்ராஜ்யத்தின் நிலைமை!

மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழுகு புத்தகங்களில் பதிவாகியும் உள்ளது. அதைத் தவிரவும் முக்கியமான ஆதாரம் கங்கா தேவி எழுதிய முதல் பயணம் குறித்த பதிவும் காரணம். இவற்றை கங்கா தேவி சம்ஸ்கிருதத்தில் பாடல்களாக எழுதி வைத்திருந்தாள். அவள் பார்த்த, கேட்ட, நேரில் கண்ட சம்பவங்களின் தொகுப்பு அது. அந்தக் காலகட்டத்தில் உள்ள நிகழ்வுகளைத் தான் எழுதி வைத்திருந்தாள். அதை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் அவர்கள் திருவரங்கன் உலாவை எழுதி இருக்கிறார். கிட்டத்தட்ட அவருடைய எழுத்தை ஆதாரமாகக் கொண்டே இங்கே நானும் எழுதி வருகிறேன்.

தென்னாட்டில் எப்போதுமே வெளியே இருந்து வரும் அரசர்களாலோ, கொள்ளையர்களாலோ எவ்விதமான தொந்திரவுகளும் ஏற்பட்டதில்லை. பல சிறு நாடுகளாகப் பிரிந்திருந்த தென்னகத்தில் அந்த நாட்டு அரசர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள். பூசல்கள் ஏற்பட்டன. சின்னஞ்சிறு போர்கள் முதல் கொஞ்சம் பெரிய போர் வரை நடந்தாலும் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை. போர் நடைபெறுகையில் மக்கள் அந்த இடங்களை விட்டு விலகிக் கொஞ்ச தூரம் சென்று வாழ்வார்கள். போர்கள் முடிந்து சகஜ நிலை திரும்பியதும் தங்கள் இடங்களுக்குத் திரும்புவார்கள். அவர்களின் தொழில்களிலோ, நடைமுறைப்பழக்கங்களோ, பேசும் மொழியோ மாறவில்லை. சமய நெறிகளையும் அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள்.

இப்படிக் கிட்டத்தட்ட அமைதிப் பூங்காவாகவே திகழ்ந்து வந்த தென்னகத்தில் பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதல் முதலாக தில்லி சுல்தான்கள் படை எடுத்து வந்தனர். அப்போது தமிழகம் பல்லவர்களாலேயோ, சேர, சோழ, பாண்டிய நாடுகள் எனவோ பிரிந்திருக்கவில்லை. பிற்காலச் சோழ சாம்ராஜ்யத்துக்குப் பின்னர் ஏற்பட்ட பாண்டிய சாம்ராஜ்யத்தின் மிச்சங்கள் அப்போது எஞ்சி இருந்தன. மதுரையில் இருந்த பாண்டிய அரச வம்சத்தினரிடையே வாரிசுச் சண்டைகள், சகோதரப் பூசல்கள். வடக்கே இருந்து வலுவுடன் வந்த தில்லி சுல்தானியரை எதிர்க்கும் அளவுக்கு வலுவுள்ள நாடாகப்பாண்டிய நாடு இல்லை. அவர்களில் ஒருவரே தில்லி சுல்தானின் உதவியுடன் மதுரைச் சிம்மாசனத்தைப் பிடிக்கும் ஆவலுடன் இருந்து வந்தார். அதற்கான உதவி நாடியும் சென்றார். எஞ்சியவர்கள் இன்னும் தெற்கே தென்காசி, நாஞ்சில் நாடு, கேரளப் பகுதிகளுக்குப் போய் மறைந்திருந்து வாழ ஆரம்பித்தனர். மக்களைக் காத்துத் தலைமை தாங்கி நிற்கக் கூடிய வலுவான தலைமை இங்கே அமையவில்லை. மக்கள் நிராதரவாக அவர்களே தில்லிப் படையை எதிர்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர்.


இத்தகைய மோசமான சூழ்நிலையில் தமிழகம் வந்த சுல்தானியர் மக்களைக் கிட்டத்தட்டக் கொன்று பலரையும் போர் என நடந்த கூத்தில் வென்று மதுரையில் கி.பி .1323 ஆம் ஆண்டில் சுல்தானிய ஆட்சியை நிறுவினார்கள். பெரும்பாலான தமிழகம் அவர்களுக்குப் பணிந்தே இருக்க நேரிட்டது. இதனால் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறிப் போனது. மக்கள் தங்கள் சமய நெறிகளைக் கடைப்பிடிக்க முடியவில்லை. உணவுப் பழக்கங்கள் முதற்கொண்டு அனைத்தும் மாற ஆரம்பித்தது. தமிழகமே பெரிய கொந்தளிப்பில் ஆழ்ந்து போனது. இவற்றைச் சகிக்க முடியாமல் எதிர்த்த ஹொய்சளர்கள் தான் தோற்றுப் போனார்கள். சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டார்கள்.

இந்தச் சமயம் தான் வித்யாரண்யர் உதவியுடனும் கிரியா சக்திப் பண்டிதர் என்பவர் உதவியுடனும் ஹரிஹரன், புக்கன் என்னும் இரு சகோதரர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தனர். இவர்கள் வாரங்கலைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பிரதாப ருத்திரனின் பொக்கிஷ அதிகாரிகள் எனச் சிலரும் படையில் இருந்தவர்கள் எனச் சிலரும் கூறுகின்றனர். எது எப்படியானாலும் வீரம் மிகுந்தவர்கள். தங்கள் அரசர் பிரதாப ருத்திரர் சிறைப்பிடிக்கப்பட்ட  பின்னர் மனம் நொந்து போய் துங்கபத்திரா நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே வித்யாரண்யரைச் சந்திக்க நேர்ந்து விஜயநகர சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது எல்லாம் ஏற்கெனவே பார்த்தோம்.


இந்தக் கதை ஆரம்பித்த காலத்தில் ஹரிஹரன் காலம் முடிந்து போய் அவர் சகோதரர் புக்கராயர் தான் ஆட்சி செய்து வந்தார். நிர்வாக வசதிக்காக சாம்ராஜ்யம் பல பகுதிகளாகப்பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றையும் ஆட்சி செய்யத் தக்க அரசகுமாரர்கள் அல்லது அரச வம்சத்தினர் நியமிக்கப்பட்டு அவர்கள் அரசர் என்றே அழைக்கப்பட்டனர் அப்படி ஒரு ராஜ்யம் தான் முள்வாய் ராஜ்யம்.இந்த ராஜ்யத்தை புக்கராயரின் மகன்களில் ஒருவரான கம்பணன் என்பவர் நிர்வகித்து வந்தார். இவர் மனைவியர் தான் நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்த குந்தளா தேவியும், கங்கா தேவியும். இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் உள்ளே வந்த சேடி ஒருத்தி கிரியா சக்திப் பண்டிதர் அவர்களைக் காண வந்திருப்பதைத் தெரிவித்தனர்.

Saturday, October 05, 2019

விஜயநகர சாம்ராஜ்யம்!

அடுத்து வரும் நிகழ்வுகளைக் காணும் முன்னர் நாம் இப்போது தென்னகத்தில் நிலவி வந்த அரசியல் சூழ்நிலையைக் கொஞ்சம் பார்த்துக் கொள்வோம். கண்ணனூர்ப் போரையும் அதில் ஹொய்சள மன்னர் வீர வல்லாளர் சூழ்ச்சியால் கொல்லப்பட்டதும் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம். அதன் பின்னர் அரங்கன் பரிவாரங்கள் இனி திருவரங்கம் திரும்ப முடியாது என்னும் எண்ணத்துடன் திரும்ப மேல்கோட்டையே சென்றுவிட்டனர். தமிழகம் எங்கும் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்த கண்ணனூர்ப் போர் இம்மாதிரி முடிந்ததில் எங்கும் ஓர் பரிதவிப்பான சூழ்நிலையே இருந்து வந்தது. சரியான தலைமை இல்லாமல், தங்களை வழிநடத்திச் செல்லும் தலைவர் இல்லாமல் மக்கள் யாரிடம் போவது எனத் தெரியாமல் நம்மைக் காப்பவர்கள் யார் எனத் தெரியாமல் வாழ்ந்து வந்தனர். கோயில்களில் வழிபாடுகள் நின்று போய்த் திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடுவதையே மக்கள் மறந்து போயிருந்தனர். இனி இந்தச் சூழ்நிலையில் இருந்து தமிழகம் மீளுமா என அனைவரும் தங்கள் நம்பிக்கையைக் கை விட்டிருந்தனர்.

ஆனால் தமிழகத்துக்குக் கொஞ்சம் வடக்கே துங்கபத்ரா நதிக்கரையில் ஓர் சந்நியாசி தமிழகத்தையும் மற்ற நாடுகளையும்  புனர் உத்தாரணம் செய்யப் பிறந்தவர் போல ஹரிஹரன், புக்கன் என்னும் இருவரை ஓர் மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வைத்தார். தேவி உபாசகரான அவருக்கு இந்த சாம்ராஜ்யம் தான் பல கோயில்களையும் மீட்டுக் கொடுத்து சநாதன தர்மத்திற்குப் பெரும் சேவை செய்யப் போகிறது என்பதை அறிந்திருந்தார். இந்நிகழ்வு கண்ணனூர்ப் போர் நடைபெறுவதற்கு சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து முடிந்தது. மெல்ல மெல்ல அந்த ராஜ்யம் விஜயநகரம் என்னும் ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு எழுச்சி பெற்று வந்தது. அதற்குப் பின்னர் இந்தக் கதை நடைபெறும் சமயம் சாம்ராஜ்யம் ஏற்பட்டு 25 ஆண்டுகளாகி விட்டன. துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள அந்த சாம்ராஜ்யத்தை இந்தக் கதை நடைபெறும் சமயம் புக்கராயர் என்பவர் ஆண்டு வந்தார்.


இந்த சாம்ராஜ்யத்தின் தென் திசையில் தற்போது முல்பாகல் என அழைக்கப்பட்டு வரும் முள்வாய்ப்பட்டினம் என்னும் மண்டலத்தில் ஓர் அழகிய அரசமாளிகை. அதன் அந்தப்புரத்தினுள் நாம் இப்போது நுழையப் போகிறோம். அனுமதியா? நமக்கெல்லாம் அனுமதி தேவை இல்லையே! கற்பனா தேவியின் துணை கொண்டு நாம் தற்போது அந்தப்புரத்தின் உள்ளே சென்று அதன் அழகிய உத்தியானவனத்துக்குச் செல்லப் போகிறோம். மயில்கள் நடனம் ஆட, குயில்கள் தேவ கானம் இசைக்க அங்கே ஓர் அழகிய கண்களையும், மனதையும் கவரும் வண்ணம் சோலையாகக் காட்சி அளித்த உத்தியானவனத்தில் ஓர் மரத்தின் கீழே அழகியதொரு மேடை. அதிலே அமர்ந்திருந்தாள் ஓர் மங்கை. அவள் தன் கைகளில் ஏடுகளை வைத்துக்கொண்டு எழுத்தாணியால் ஏதோ எழுதிக் கொண்டு இருந்தாள். கொஞ்சம் யோசிப்பதும் கொஞ்சம் எழுதுவதுமாக இருந்தாள். இவள் தான் பிற்காலத்தில் தன் "மதுரா விஜயம்" என்னும் நூலால் வடமொழியில் முதல் முதலாகப் பயணங்கள் குறித்த காவியம் எழுதிப் பிரபலம் ஆனவள். இப்போதும் ஏதோ எழுதிக் கொண்டு தான் இருக்கிறாள்.

இவள் பெயர் கங்காதேவி. இவள் எழுதிக்கொண்டிருக்கையில் உள்ளே அந்தப்புரத்திலிருந்து வந்த ஓர் பெண் இவளைச் சற்று நேரம் நின்று பார்த்தாள். பின்னர் புன்னகையுடன் இவளை நோக்கி நடந்து வந்தாள். இவள் வரும் சப்தம் மெல்லியதாக இருந்தாலும் கங்கா தேவிக்குக் கேட்டு விடுகிறது. நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தாள். கங்கா தேவியிடம் அவள் எழுத்துக்கும், கற்பனைக்கும் தான் குறுக்கே வந்துவிட்டோமோ என்னும் சந்தேகத்தை அவள் எழுப்ப கங்கா தேவி இல்லை என்கிறாள். அவள் அழைப்பதிலிருந்து வந்தவள் பெயர் குந்தளா எனத் தெரிகிறது.

Wednesday, October 02, 2019

அரங்கன் எங்கே இருக்கிறான்?

அப்போது வல்லபன் அந்தப் பெரியவரிடம், போருக்குப் பின்னால் சத்தியமங்கலத்திலிருந்து மேல்கோட்டைக்குப் போன அரங்கன் அங்கேயே இல்லாமல் பின்னர் எங்கே போனான்? அவனுக்கு அங்கே என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகச் சொன்னான். அதற்கு அந்தப் பெரியவர்க் கண்ணனூர்ப் போரில் பெற்ற வெற்றிக்கும் பின்னர் மதுரை சுல்தானியர்கள் தமிழ் பேசும் நாடுகள் எங்கும் புகுந்து வழிபாட்டுத் தலங்களைச் சூறையாடியதாகவும் அவர்கள் மேல்கோட்டை வரை வந்து விட்டால் பின்னர் அரங்கனுக்கு ஆபத்து என எண்ணிக் கொண்டு அரங்கனின் பரிவாரத்தாரில் சிலருக்கு அவரைத் திருப்பதிக்குக் கொண்டு செல்லும் எண்ணம் வந்ததாகவும் ஆனால் அவர்கள் கொண்டு போனார்களா இல்லையா என்பது தனக்குச் சரியாகத் தெரியாது என்றார். அரங்கன் அங்கே தான் போனானோ அல்லது வேறே எங்கே போனானோ தனக்குத் தெரியாது என்றும் கண்ணனூர்ப் போர் முடிந்து பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டதால் அரங்கன் இருப்பிடம் தனக்குத் தெரியாது என்றவர் அவர்களை நோக்கி அரங்கனைத் தேடி வந்திருக்கிறீர்களா என விசாரிக்கவும் செய்தார்.

வல்லபன் அதற்குத் தாங்கள் அரங்கனைத் தேடிக் கண்டு பிடித்துத் திரும்பவும் திருவரங்கத்தில் சேர்ப்பிக்கும் எண்ணத்துடன் தாங்கள் வருவதாகவும், மேல்கோட்டையிலிருந்து அவர் திருப்பதிக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தாங்கள் அறிவோம் எனவும் சொன்னான். ஆனால் தற்சமயம் அவர் திருப்பதியிலேயே இருக்கிறாரா அல்லது அங்கிருந்து வேறெங்கும் கொண்டு செல்லப்பட்டாரா என்பது தங்களுக்குத் தெரியவில்லை என்றான். அவர் திருப்பதி மலைக்குப் போய்ச் சேர்ந்ததாக உத்திரவாதமான தகவல் ஏதும் இல்லை என்பதால் இடையில் அவருக்கு ஏதேனும் நேர்ந்திருக்குமோ எனத் தாங்கள் அஞ்சுவதாகவும் அவரை எங்கே எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்னும் கவலையில் தாங்கள் இருவரும் ஆழ்ந்திருப்பதாகவும் கூறினான்.

பெரியவர் முகமலர்ச்சியுடன் இருவரையும் ஆசீர்வதித்தார். அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் இந்தக் காரியம் வெற்றி பெறவேண்டும் என்றவர் தான் அசக்தனாகப் போய் விட்டபடியால் அவர்களுக்கு உதவ முடியாத நிலையில் இருப்பதற்கு வருந்தினார். தகப்பனார் இறந்ததுமே அந்தக் காலத்திலேயே தான் இந்தச் சிற்றூருக்கு வந்துவிட்டதாகவும் தான் மட்டும் உடல்நிலையில் வலுவானவனாக இருந்திருந்தால் அரங்கனை எடுத்துச் செல்ல அனுமதித்திருக்க மாட்டேன் எனவும் கூறினார். அவ்வளவில் அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டனர் இளைஞர்கள் இருவரும். அடுத்தடுத்து நான்கு நாட்களுக்கு அவர்கள் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று அரங்கன் இருக்குமிடம் பற்றி விசாரித்த வண்ணம் இருந்தார்கள். எங்கும் அரங்கனைப் பற்றி எவ்விதச் செய்தியும் கிட்டவில்லை. பலருக்கும் இந்தத் தகவல் புதியதாகவே இருந்தது. அப்படி இருக்கையில் இந்தப் பெரியவர் இத்தனை தகவல்களை அளித்தது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்றிரவை அவர்கள் அந்தக் கிராமத்துச் சத்திரத்திலேயே கழிக்க நினைத்தனர். சத்திரத்தில் உணவருந்திவிட்டுப் படுத்த இருவருக்கும் படுக்க இடம் கொடுத்து விரிப்புக்களையும் கொடுத்தார் சத்திரத்துப் பரிசாரகர். ஆனால் தத்தன் படுத்ததுமே தூங்கிவிட வல்லபனுக்கு மட்டும் தூக்கமே வரவில்லை.

அவன் மனதில் வழியில் பார்த்த அந்த இளம்பெண்ணின் நினைவே மாறி மாறி வந்து கொண்டிருந்தது. அடிக்கடி அவள் கண்களை நினைத்தவனுக்கு அது மீனைப் போல் இருப்பதாகத் தெரிந்தது. அந்த மீன் சிறிது நேரத்தில் ஓர் மகர கண்டிகையாக மாறிப் பின்னர் அந்த இளம்பெண்ணாக மாறி அவன் முன்னே வந்து நிற்பது போலவும், "சத்திரத்தில் பார்த்த இளைஞரே!" என அவனை அழைப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது. அந்தப் பெண்ணின் இனிமையான குரல் காதுகளில் கேட்பது போல் இருந்தது. அவன் மனமும் முகமும் அதை நினைத்து மலர்ந்து விகசித்தது.

Monday, September 30, 2019

வழியில் சந்தித்த பெரியவரின் நினைவலைகள்!

சற்று தூரம் மௌனமாகப் பயணித்தவர்களுக்கு ஒரு கிராமத்தில் பெரியவர் ஒருவரைப் பற்றிய குறிப்புக் கிடைத்தது.  அவருக்கு அரங்கன் தற்போது இருக்கும் விபரம் தெரியலாம் எனச் சிலர் மூலம் அறிந்தார்கள். அவரைத் தேடிக் கொண்டு இருவரும் சென்று அவரை நமஸ்கரித்தனர். வல்லபன் அவரைப் பார்த்து, "ஐயா, சுமார் 37,38 ஆண்டுகளுக்கு முன்னால் ஶ்ரீரங்கம் என்னும் திருவரங்க க்ஷேத்திரத்தை தில்லியிலிருந்து வந்த சுல்தானியர் ஆக்கிரமித்துக் கொண்டனர். அப்போது அரங்கமாநகர வாசிகள் பயத்தின் காரணமாகவும், அரங்க விக்ரஹத்தைக் காப்பாற்ற வேண்டியும் அவரை எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கிச் சென்றார்கள்.  அங்கிருந்து கேரள/மலையாள தேசம் வழியாகப் பயணம் செய்து கொங்கு நாட்டைக் கடந்து கர்நாடக தேசத்தின் மேல்கோட்டை என்னும் க்ஷேத்திரத்தை அடைந்தார்கள். அரங்கன் அங்கே சில காலம் தங்கியதாகக் கேள்விப் பட்டோம். ஆனால் தற்சமயம் இல்லை என்கின்றனர். அரங்கன் இருக்குமிடம் தேடிக் கொண்டு நாங்கள் வருகிறோம். உங்களுக்கு அவர் மேல்கோட்டையிலிருந்து எங்கே எடுத்துச் செல்லப்பட்டார் என்பது குறித்த விபரங்கள் தெரியுமா?" என்று கேட்டான்.

எழுபது வயதிருக்கும் அந்த மனிதருக்குத் தலை சுத்தமாக நரைத்திருந்தது.  கண்கள் இடுங்கிக் காணப்பட்டன. அணிந்திருந்த பூணூலின் பிரம்ம முடிச்சைத் தொட்டுக் கொண்டு அவர் ஏதோ ஜபம் செய்த வண்ணம் இருந்தார். அவர் இந்த உலகில் சஞ்சரிக்கவில்லை என்றும் அக உலகில் சஞ்சரிக்கிறார் என்பதும் அவரைப் பார்த்ததுமே புரிந்தது. வல்லபன் சொல்லுவதைக் கேட்ட அவர் கண்ணீர் பெருக்கினார். நாற்பது வருடங்கள் முன்னர் நடந்த துர்ப்பாக்கியமான சம்பவங்களைப் பற்றியே வல்லபன் கேட்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. தனக்கு அந்தச் சம்பவங்கள் எல்லாமே நன்றாகத் தெரியும் என்று சொன்னார். அவருக்கும் ஸ்ரீரங்கம் தான் சொந்த ஊர் எனவும். ஸ்ரீரங்கம் முற்றுகை ஆவதற்கு முன்னர் ஊரை விட்டு வெளியேறிய குடும்பங்களில் அவர் குடும்பமும் ஒன்று எனவும் கூறியவர் காவிரிக்கரையின் மேற்குக் கரையோரமாகப் பயணித்து அவர்கள் ஒரு வாரத்தில் சத்தியமங்கலத்தை அடைந்ததாகவும் கூறினார். அவர் வரும்போது வழியில் தாயாரின் மரணம் நிகழ்ந்ததாகவும் கூறிவிட்டுப் பின்னர் கர்நாடகம் நோக்கிச் சென்று மேல்கோட்டையில் தங்கி நாட்களைக் கழித்ததாகவும் கூறினார்.

அவர் மேல்கோட்டையில் தங்கி இருக்கையில் தான் அரங்க விக்ரஹம் மேல்கோட்டைக்கு வந்ததாகவும் அரங்கனைக் கண்ட அவர் தந்தையார் அரங்கன் நிலைமையையும் முறையான வழிபாடுகள் இல்லாமல் அரங்கன் இருப்பதையும் பார்த்து அழுது புலம்பியதாகவும் சொன்னவர் மேலே சொன்னது வல்லபனுக்கும் கண்ணீரை வரவழைத்தது. கானகத்தில் சுற்றித் திரிந்த ஸ்ரீராமனைப் போன்ற கதி அரங்கனுக்கும் நேரிட்டு விட்டதே எனப் புலம்பினாராம். இதைக் கேட்ட வல்லபனும் கண்ணீர் பெருக்கினான். கண்ணனூர்ப் போரில் தாங்கள் ஜெயிப்போம் என ந்மபியதாகவும் ஆனால் அந்தப் போர் இப்படி முடிந்ததாகவும் கூறியவர் ,"தம்பிகளா! கண்ணனூர்ப் போர் எந்த வருஷம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பெரியோர்கள் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். எந்த வருஷம் என்பது தெரியுமா?" என்று கேட்க அதற்கு தத்தனும் வல்லபனும் பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டதாய்த் தெரிவித்தனர்.

கண்ணனூர்ப்போர் ஓரளவுக்குத் தனக்கு நினைவிருப்பதாகச் சொன்னவர் தன் தந்தையார் அந்தப் போரில் நாம் ஜெயிப்போம் என்னும் செய்தி கேட்டுவிட்டு உயிரைத் துறக்க வேண்டும் எனக் காத்திருந்ததாகவும் ஆனால் போரின் முடிவு அவருக்கு துக்கத்தைக் கொடுத்ததாகவும் அந்த முடிவைக் கேட்டதுமே அவர் இறந்ததாகவும் கூறினார். வெற்றி வல்லாளருக்கே என இருந்த கடைசித் தருணத்தில் சூழ்ச்சி செய்து வல்லாளரைக் கொன்று விட்ட சுல்தானியரைப் பற்றிக் கூறினார். வல்லாளர் இறந்த செய்தி கேட்ட நம் படை வீரர்கள் அடைந்த மனத் தளர்ச்சியும் படைகள் சின்னாபின்னப்பட்டுக் கலைந்து சென்றதையும் துக்கத்தோடு விவரித்தார். போரின் முடிவு தெரிந்ததுமே அரங்கனைப் பார்த்து அவர் தந்தையார், "அரங்கா உனக்கா இந்தக் கதி? இன்னமும் உன்னால் உன் ஊருக்குப் போக முடியவில்லையே!" என்று சொல்லியவண்ணம் அரங்க விக்ரஹத்தின் முன்னால் விழுந்தவர் பின்னர் எழுந்திருக்கவே இல்லை என்றார்.

தம் தந்தையாருக்குப் போரில் வெற்றி அடைய முடியாமல் போனது மாபெரும் அதிர்ச்சியைக் கொடுத்ததாகச் சொன்னவர் அனைவருக்குமே அந்தப் போரின் முடிவு கொடுத்த அதிர்ச்சியை எடுத்துரைத்தார். போரில் கிட்டத்தட்ட வெற்றி கிட்டிவிட்ட செய்தி கிடைத்ததும் இனி அரங்கன் திருவரங்கம் சென்று விடலாம் என நினைத்தவர்கள் அனைவரும் அரங்கனை மேல்கோட்டையிலிருந்து சத்தியமங்கலத்துக்குக் கொண்டு வந்துவிட்டதாகவும், பின்னர் கிடைத்த அதிர்ச்சித் தோல்வியைப் பற்றிக் கேட்டதும் அரங்கன் பரிவாரத்தார் மீண்டும் மேல்கோட்டைக்கே திரும்பி விட்டதாகவும் சொன்னார். இதை எல்லாம் பார்த்தும் கேட்டும் மனம் நொந்து போய்த் தான் என் தந்தையார் பரமபதம் அடைந்து விட்டார்." என்றார் அந்தப் பெரியவர்.

Sunday, September 29, 2019

இனி தொடரும்!

சாதாரணமாக எழுதிக் கொண்டே இருக்கையில் ஒரு சில செய்திகளைக் கேள்விப் படவும் மனதில் ஏற்பட்ட வருத்தத்தாலும் கவலையாலும் மேலே தொடராமல் இதை  நிறுத்தினேன். இனி தொடருவேன். பொறுத்துக் கொண்டமைக்கு நன்றி.

Friday, August 16, 2019

தத்தனின் தீர்மானம்!

இருவரும் தங்கள் உடல் சோர்வு நீங்கவும் புழுதியான உடம்பு சுத்தமாகவும் வேண்டி மீண்டும் குளித்தார்கள். குளித்துவிட்டு வந்த தத்தன் அந்த மகரகண்டியைக் கையில் எடுத்துக் கொண்டு வல்லபனிடம் அது தங்களிடமே பத்திரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும், அதற்காக அந்தப் பெண்ணின் ஓலையை நம்பி வழியில் பிறழ்ந்து செல்லவேண்டிய அவசியம் இல்லை எனவும் சொன்னான். ஆனால் வல்லபனோ வேறு ஏதோ யோசனையில் இருந்தான். தத்தன் அவனிடம் வற்புறுத்தலாகக் கடந்த இரு நாட்களில் நடந்ததை எல்லாம் மறந்துவிட வேண்டும் என்றான். ஆனால் வல்லபனோ எதற்கும் மறுமொழி சொல்லாமல் அவனையே பார்த்த வண்ணம் நின்றான்.

தத்தன் மேலும் அவனிடம் தாங்கள் வந்த காரியம் வேறு எனவும் அந்தக் காரியத்தை முடிக்கவேண்டும் என்னும் லட்சியத்தில் இருந்து தாங்கள் பின்வாங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினான். இந்தச் சம்பவங்கள் இடையில் வந்தவை! நாமாக உட்புகுந்து விட்டோம். ஆகவே இவற்றை அடியோடு மறந்து விடலாம். நாட்டில் எங்கெங்கோ, யார் யாருக்கோ என்னவெல்லாமோ நேரிடுகிறது. அதற்கெல்லாம் நாம் பொறுப்பாகவும் முடியாது! அனைவரையும் நம்மால் காப்பாற்றிக் கொண்டிருக்கவும் முடியாது. வல்லபனின் தாயார் வல்லபனை இவ்வளவு தைரியமாக வெளியே அனுப்பி இருப்பதன் நோக்கத்தை நினைத்துப் பார்க்கச் சொன்னான் தத்தன். அவன் தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றுவதிலேயே அவன் ஈடுபட வேண்டும் என்றும் கண்டித்துக் கூறினான். வல்லபனும் ஆமோதித்தான். "ஆம்! என் தாய்க்கு என் தந்தை கண்ட கனவு பலிக்க வேண்டும்." என்றான்.

"வல்லபா! உன் தாய்க்கு வாழ்க்கையின் குறிக்கோளே அது தான்! அதற்காகவே உன்னைப் பெற்றெடுத்தார்கள். உன்னைக் கல்வி பயின்று வர அனுப்பினார்கள். கொங்கு நாட்டின் வீராதி வீரர்களிடம் உன்னை மல்யுத்தம், வாள் வீச்சு, வில் வித்தை எல்லாவற்றிலும் பழக்கி இருக்கின்றார்கள். இத்தனையும் தனியொரு பெண்ணாக நின்று அவர் செய்திருக்கிறார் வல்லபா! அனைத்தும் எதற்காக? அந்த நீண்ட நெடுங்காலத்துக் கனவு! அரங்கனை எப்பாடுபட்டாவது கண்டு பிடிக்க வேண்டும். மீண்டும் அவனைத் திருவரங்கத்தில் சேர்க்க வேண்டும். இது தானே அவர்களின் நீண்ட நெடுங்காலக் கனவு!அதையும் அவர் வாழ்நாளுக்குள்ளே நடந்து அவர் கண்களால் அதைக் காண வேண்டும்.அவர் உயிர் வாழ்வதே இதற்காகத் தானே வல்லபா! அதை நினைத்துப் பார்! இதை முடிக்க வேண்டியே வெளி உலகுக்கு உன்னையும் துணைக்கு என்னையும் அனுப்பி இருக்கிறார். இதோ பார் வல்லபா! நாடு எவ்வளவு சீர் குலைந்திருக்கிறது என்பதை நீ அறிவாய் அல்லவா? நாட்டின் இத்தகைய சீர்கேட்டிலும் உன் தாய் உன்னை தைரியமாக வெளியே அனுப்பி அரங்கனைத் தேடும் பணியில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள் என்றால் அது எப்பேர்ப்பட்ட லட்சியமாக இருக்கும் என்பதை அறிவாய் அல்லவா?"

நீளமாகப் பேசிவிட்டுப் பெருமூச்சு விட்டான் தத்தன். வல்லபன் எதற்கும் பதில் சொல்லவில்லை.தத்தன் கூறுவதெல்லாம் சரி என்றே அவன் உள்மனம் சொன்னது. தத்தன் சொன்னது மாதிரியே நடந்து கொண்டு இடையில் நடந்தவற்றை எல்லாம் மறந்து விடலாம் என ஓர் எண்ணம் வேகமாக அவன் நெஞ்சில் எழுந்தது. ஆகவே தத்தனோடு சேர்ந்து அவனும் நடக்க ஆரம்பித்தான். இருவரும் மௌனமாகவே சற்று நேரம் நடந்தார்கள். போகும்போதே வல்லபன் அவனிடம் அரங்கன் பற்றிய விசாரம் ஒன்றே இனி என் குறிக்கோள் என உறுதியாகச் சொன்னான். தத்தனும் அதை மகிழ்வோடு ஆமோதித்தான். 

Monday, August 12, 2019

குதிரை பறந்தது!

அந்த யாத்ரிகன் அதற்கு மீண்டும் மீண்டும் சிரித்தான். வல்லபன் அவனை, "நீர் யார்? எங்கிருந்து வருகிறீர்?" எனக் கேட்டதற்கும் சிரித்தான். பின்னர் வல்லபனைப் பார்த்து, "அதோ உன் நண்பன்! அவனிடம் நான் ஏற்கெனவே சொல்லி  விட்டேன். அவன் உனக்குச் சொல்லவில்லையா? நான் ஓர் கற்பூர வியாபாரி!" என்றான் அழுத்தம் திருத்தமாக! அவனைப் பார்த்தால் வியாபாரியாகத் தெரியவில்லை வல்லபனுக்கு. மீண்டும் சந்தேகத்துடன் அவனைப் பார்க்க அவனோ தான் ஒரு வியாபாரி தான் என வலியுறுத்திப் பேசினான். மேலும் தான் வியாபாரப் பயணத்தில் தான் தன் ஆட்களுடன் செல்லுவதாகவும் சொன்னான். மேலும் கற்பூரம் தவிர்த்துத் தான் மிளகு, கிராம்பு, இலவங்கம், இலவங்கப்பட்டை, சீனாவிலிருந்து வரும் பட்டு,  ஜாதி பத்திரி தவிர்த்து அரசர்களும் பெருங்குடி மக்களும் பயன்படுத்தும் வாசனைத் திரவியங்கள் என விற்பதாகவும் கூறினான். ஒவ்வொரு ஊரிலும் உள்ள பெருங்குடி மக்கள், தனவந்தர்கள், அங்குள்ள படைத்தலைவர்கள், குறுநில மன்னர்கள், சிற்றரசர்கள் எனத் தேடித் தேடிப் பார்த்துத் தன் வியாபாரத்தை நடத்திக் கொண்டு வருவதாகவும் சொன்னான். பின்னர் வல்லபனைப் பார்த்து, "தம்பி, நான் வந்த அன்று அதாவது முந்தாநாள் நான் தான் உன் உயிரைக் காப்பாற்றினேன். அதை மறந்துவிடாதே!" என்றும் சொன்னான்.

ஆனாலும் வல்லபனுக்குச் சந்தேகம் தீரவில்லை. தான் அந்த வியாபாரியான யாத்ரிகனுக்குக் கடமைப்பட்டிருப்பதையும் நன்றியுடன் இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டான். ஆனால் இந்த ஓலை நறுக்கும் மகரகண்டிகையும் தன் சந்தேகத்தை மீண்டும் மீண்டும் கிளறி விடுவதாகவும் சொன்னான்.  அதற்கு அந்த வியாபாரி, "தம்பி!இதைக் கூடவா நீ நம்பவில்லை? நான் ஏதோ சூழ்ச்சியும் தந்திரமும் செய்து உன்னை ஏமாற்றுவதாக நினைக்கிறாய் போலும்!  இந்த மகர கண்டிகை பத்தரை மாற்றுத் தங்கம் தம்பி! நன்கு கவனித்துப் பார். இவ்வளவு விலை உயர்ந்த ஒரு ஆபரணத்தை முன்பின் தெரியாத உன்னிடம் நான் ஏன் கொடுக்க வேண்டும் தம்பி? அதனால் எனக்கு என்ன லாபம்? எனக்கு என்ன இதன் மதிப்புத் தெரியாமல் உன்னிடம் கொடுத்ததாக நினைக்கிறாயோ? அவ்வளவு மதிகெட்டவனா நான்?"

"இதோ பார் தம்பி! உண்மையாகவே அந்தப் பெண் தங்கி இருந்த அறையில் தான் இதைக் கண்டு எடுத்தேன்.  அதில் நுனியில் கட்டியிருந்த ஓலை நறுக்கையும் கண்டேன். அதனால் தான் உங்களிடம் எடுத்து வந்தேன். எனக்கென்ன தம்பி!  நான் சொல்வதை நீ நம்பினால் நம்பு! நம்பாவிட்டால் அது உன்னிஷ்டம்! சரி, எனக்கும் நேரம் ஆகிவிட்டது தம்பி! நான் சென்று வருகிறேன். என் ஆட்களைக் கண்டு பிடித்துப் பயணத்தைத் தொடர வேண்டும்." என்று சொல்லிய வண்ணம் குதிரை மேல் ஏறிப் பயணத்தைத் தொடர ஆயத்தமானான். அவனால் குதிரை மேல் சர்வ சகஜமாக ஏற முடியவில்லை என்பதை வல்லபன் கண்டான். தத்தனைப் பார்த்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என நினைத்துக் கொண்டார்கள். என்ன நடக்கிறது என்பதும் அதன் முழு தாத்பரியமும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நல்ல நாள், நல்ல சகுனம் பார்த்தே ஊரில் இருந்து கிளம்பி இருந்தோம். அப்படியும் இப்படி எல்லாமும் நடக்கிறதே எனக் கவலையில் ஆழ்ந்தார்கள். யாத்ரிகன் போகிற போக்கில் கீழே வீசி விட்டுப் போயிருந்த மகர கண்டிகை வெளிச்சத்தில் பளபளத்தது.

அதைக் கைகளில் எடுத்து உற்று நோக்கினான் வல்லபன். நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிகம் காணப்பட்ட அந்த ஆபரணத்தில் கொடிகள், மலர்களோடு, தெய்வ உருவங்களும் மீன் வடிவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.  இது உண்மையாகவே அந்தப் பெண்ணின் ஆபரணமாய் இருக்குமா? நாம் உண்மையில் ஏமாந்து விட்டொமோ? என்ன செய்யலாம்?" எனக் குழப்பத்துடன் வல்லபன் அதைப் பார்த்த வண்ணமே நின்றான். அந்த ஆபரணத்தைக் கைகளில் ஏந்தியவன் அதை முகர்ந்து பார்த்தான். ஆஹா! அந்தப் பெண்ணிடமிருந்து வந்த மகிழம்பூ வாசனை! இந்த ஆபரணத்திலும் வருகிறதே! வல்லபன் முகம் மலர்ந்தது! சந்தேகமே இல்லை. இது அந்தப் பெண்ணின் ஆபரணம் தான்! வல்லபன் முகம் பளிச்சிட்டது. தத்தனிடம் அதைக் காட்டினான். அவனையும் முகர்ந்து பார்க்கச் சொன்னான். இது அந்தப் பெண் அணிந்திருந்ததால் அதுவும் நீண்ட நாட்கள் அணிந்திருந்ததால் மட்டுமே ஏற்பட்டிருக்கும் வாசனை. ஆகவே அது அந்தப் பெண்ணுடையது தான் என வல்லபன் தத்தனிடம் தீர்மானமாகச் சொன்னான். உடனே திரும்பி அந்த வணிகனை அவசரமாக அழைத்தான். ஆனால் அவனோ சிறிது தூரம் குதிரையில் சென்று விட்டான்.

வல்லபன் விடாமல் மீண்டும் அவனை அழைத்தான். வணிகன் திரும்பிப் பார்த்தான். ஆனால் வல்லபனிடம் வரவில்லை. அங்கிருந்த வண்ணமே தான் கிழக்கே தான்போய்க் கொண்டிருப்பதாகவும் வல்லபனுக்கும் தத்தனுக்கும் விருப்பம் இருந்தால் தன்னுடன் வந்து கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துவிட்டுக் குதிரையை மீண்டும் விரட்ட அதுவும் வேகம் எடுத்தது. சிறிது நேரத்தில் காடுகளைத் தாண்டிச் சமவெளிக்கு வந்ததும் குதிரை பறக்கவே ஆரம்பித்தது.

இங்கே தத்தனுக்கும் வல்லபனுக்கும் என்ன பேசுவது என்றே புரியவில்லை.  வல்லபன் கைகளில் ஓலை நறுக்கையும் மகர கண்டிகையையும் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க தத்தன் தன் தாழங்குடையைச் சுழற்றிக் கொண்டிருந்தான். இருவரும் அவரவர் யோசனையில் சிறிது நேரம் ஆழ்ந்திருந்தார்கள். பின்னர் தத்தன் வல்லபனிடம் மீண்டும் சிற்றாற்றுக்குப் போய்க் குளித்துவிட்டு வரலாம் என அழைக்க இருவரும் சிற்றாற்றங்கரையை நோக்கிச் சென்றனர். வல்லபன் நடந்து கொண்டிருந்தானே தவிர அவன் மனதில் அந்தப் பெண்ணின் முகமே தோன்றிக் கொண்டிருந்தது. அதிலும் கண்டிகையில் நீளமானமீன் வடிவில் அந்தப் பெண்ணின் நீண்ட நெடுங்கண் அவன் எதிரே தோன்றி இம்சை செய்தது. ஓலையில் முடிக்காத அந்த வாசகங்களை நினைத்தவன் அதிலே "இளைஞர்களுக்கு" எனச் சொல்லி இருப்பது எனக்கும் சேர்த்துத் தானே என நினைத்துக் கொண்டான்.

Sunday, August 11, 2019

கன்னியின் மகரகண்டிகை சொன்ன செய்தி!

அந்தப் பெண் தங்களுக்கு "முறி" எழுதி இருப்பதாக அந்தப் புதியவன் சொன்னதை தத்தன் சிறிதும் நம்பவில்லை. (முறி-கடிதம், பனை ஓலையில் எழுத்தாணியால் எழுதுவார்கள்.) நமக்கு ஏன் அவள் முறி எழுத வேண்டும் என தத்தன் நினைத்ஹ்டான். ஆனால் வல்லபனுக்கோ பரபரப்பு உண்டாயிற்று! அந்தப் பெண்ணா முறி எழுதி இருக்கிறாள்? அதுவும் நமக்கு என நினைத்துப் பரபரத்தான். தத்தனோ வல்லபனிடம் அந்த ஆள் சொல்லுவதை நம்பவேண்டாம். அவன் தங்களை ஏமாற்றுகிறான் என எச்சரித்தான். ஆனால் அந்த யாத்ரிகன் தன் இடுப்பிலிருந்து ஓர் ஓலை நறுக்கை எடுத்து வெளியில் போட்டான். தத்தனைப் பார்த்து, "தம்பி! இப்போதாவது நம்புகிறாயா?" என வினவினான்.  அதை எடுத்துப் படிக்குமாறும் கூறினான். ஆனால் அந்த ஓலை நறுக்கு சாதாரணமாக அனைவரும் எழுதும் பனை ஓலை போல் இல்லை. சரியாக நறுக்கப்படவும் இல்லை. ஒழுங்கற்று காணப்பட்டது.  அதை அந்த யாத்ரிகன் கீழே போட்டதும் சற்றே உருண்டு போய்ச் சிறிது தூரத்தில் நின்றவண்ணம் காற்றில் ஆடியது.

வல்லபன் அதை எடுக்கக் குனிந்தான். ஆனால் தன் தாழங்குடையைச் சுற்றிக் கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந்த தத்தன் அதை எடுக்க வேண்டாம் என எச்சரித்தான். தான் சொல்லுவதை அவர்கள் நம்பவில்லை என்பதைக் கண்ட யாத்ரிகன் தத்தனிடம் இன்னொரு அடையாளமும் இருப்பதாகச் சொல்லிவிட்டுத் தன் இடுப்பின் இன்னொரு பகுதியிலிருந்து ஓர் மகர கண்டிகையை எடுத்தான்.  அந்த மகர கண்டிகையை உயரே தூக்கிக் காட்டினான். மிகவும் விலை உயர்ந்தது அது. அந்தக் காலகட்டத்தில் அது பல நூறு கழஞ்சுகளுக்கும் மேல் மதிப்புள்ளது. பெரும்பணக்காரர்களும் அரச குலத்தினருமே அணிய முடியும். இருவரும் அந்த யாத்ரிகன் இதை அந்தப் பெண்ணிடமிருந்து திருடி வந்திருப்பானோ என யோசனையுடனும் அதிர்ச்சியுடனும் அவனைப் பார்த்தார்கள். இருவருமே ஏதும் பேசவில்லை.

அவர்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டது போல் அந்த யாத்ரிகன் தான் எப்படி அந்த மகர கண்டிகையைக் கண்டெடுத்தோம் எனச் சொல்ல ஆரம்பித்தான். அவர்களைப் பார்த்து தத்தனும், வல்லபனும் சத்திரத்தில் இருந்து சென்றபிறகும் கூடத் தங்கி இருந்ததாகவும் அவர்கள்  இருவரும் ஏதும் அறிந்து கொள்ளாமல் சென்று விட்டதாகவும் கூறினான். மேலும் தான் அவர்களைப் போல் கருக்கிருட்டில் கிளம்பாமல் நன்றாக விடிந்து ஒரு ஜாமம் ஆன பின்னர் கிளம்பியதாகவும் அதனால் சத்திரத்தை ஒவ்வோர் அறையாக நன்கு சோதித்துப் பார்க்க முடிந்ததாகவும் கூறினான். முக்கியமாய் அந்தப் பெண் சிறையிருந்த அறையை நன்கு சோதனை இட்டதாய்க் கூறினான். அப்போது தான் கட்டிலுக்குக் கீழே இந்த மகரகண்டிகையைக் கண்டெடுத்ததாயும் கூறினான். அந்த மகர கண்டிகையில் ஓர் நுனியில் நூலால் சுற்றப்பட்டு இந்த ஓலை நறுக்கு இருந்ததாகவும் கூறினான். அதைப் பிரித்துப் பார்த்தால் இந்த இளைஞர்களுக்கு என அது எழுதப் பட்டிருந்ததாகவும் ஆகவே அவர்களை எப்படியேனும் சந்தித்து இதைக் கொடுக்க வேண்டும் என்றே தான் வந்ததாயும் கூறினான். ஆனால் அவர்கள் இருவரும் சிறிதும் அவனை நம்பவில்லை என்பது தனக்கு வருத்தத்தைத் தருவதையும் கூறிவிட்டு இனியும் இங்கே நின்று கொண்டு நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்பதால் தான் விடைபெற்றுச் செல்வதாய்க் கூறிக் கை கூப்பினான்.

வல்லபன் அந்த ஓலை நறுக்கையே பார்த்தான். மெல்ல எழுந்து நறுக்கின் அருகே போய் அதை எடுத்தான். அது எல்லோரும் எழுதும் பனை ஓலை அல்ல. சாதாரணமாகக் கூடை முடையும் ஓர் ஓலை! அதில் எழுத்தாணி கொண்டு எழுத முடியாது. சந்தேகத்துடன் அதைப் பிரித்துப் பார்த்தான். அவன் கண்களுக்கு முதலில் எதுவுமே தெரியவில்லை. பின்னர் கூர்ந்து கவனித்தான். தெளிவில்லாத எழுத்துக்கள் அதில் காணப்பட்டன. எழுத்தாணியால் எழுதப் பட்டதாகத் தெரியவில்லை. ஏதேனும் கூர்மை இல்லாப் பொருள் அல்லது மலர்க்காம்புகளால் எழுதி இருக்கலாமோ? மிகவும் சிரமப் பட்டு வல்லபன் அதை வாசித்தான்.  அதில் சத்திரத்தில் தங்கிய அந்த இளைஞர்களுக்கு மகரகண்டிகையை அடையாளம் வைத்துத் தான் எழுதுவதாகவும், தான் தெற்கே!" இது வரை எழுதப் பட்டிருந்தது. தெற்கே எங்கே போகிறார்கள்? ஒன்றும் புரியவில்லை. பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் அந்தப் பெண் அதை அங்கேயே விட்டுச் சென்றிருக்கிறாள்.

அதை தத்தனிடம் கொடுக்க அவனும் படித்துவிட்டுத் தலையை ஆட்டினான். அவனுக்கும் ஏதும் புரியவில்லை. என்றாலும் அவனால் இன்னமும் அந்த யாத்ரிகனை நம்ப முடியவில்லை. ஆகவே வல்லபனிடம் இவன் சொல்வதை எல்லாம் நம்பவேண்டாம் எனவும் அவன் பசப்புக்காரனாகத் தெரிகிறான் எனவும் கூறினான். அதற்கு வல்லபன் மகர கண்டிகை பல நூறு கழஞ்சுகள் பெறும் எனவும் கடிதமும் அந்தப் பெண்ணால் தான் எழுதப் பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினான். பிறகு அந்த யாத்ரிகனைப் பார்த்து அவன் யார் எனவும் எங்கிருந்து வருகிறான் எனவும் கேட்டான். மேலும் அந்த யாத்ரிகன் செய்யும் காரியங்கள் எல்லாம் சந்தேகாஸ்பதமாக இருப்பதால் தங்களால் அவனை நம்ப முடியவில்லை என்பதையும் கூறினான்.

Friday, August 09, 2019

தேடி வந்த வம்பு!

தத்தன் பயத்தைக் கண்டு வல்லபனும் திகைத்து நிற்கக் குதிரையில் ஏறியவண்ணம் வேகமாக அங்கே வந்து கொண்டிருந்தது சத்திரத்துக்கு வந்த புது விருந்தாளியான யாத்திரிகன்.  இளைஞர்கள் இருவருக்கும் கவலையும், பயமுமாக இருக்கத் தங்கள் வாட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டனர். யாத்திரிகன் வந்த வேகத்தில் தங்களை வெட்டி விடுவானோ என்னும் எண்ணத்தில் தத்தனும், வல்லபனும் இடைவெளி விட்டு நிற்க அந்த யாத்திரிகனோ அந்த இடைவெளியில் புகுந்து வேகமாகக் குதிரையை ஓட்டிக் கொண்டு சென்றான். செல்லும்போதே தன் வாளால் ஓர் வீசு வீசி இளைஞர்களின் வாட்களைக் கீழே கொஞ்ச தூரத்தில் போய் விழும்படி செய்து விட்டான்.  இருவரின் திகைப்பு மேலும் அதிகம் ஆனது. ஓடிப் போய்த் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டனர். அந்தச் சொற்ப நேரத்திற்குள்ளாக அந்த யாத்திரிகன் மீண்டும் திரும்பி அவர்களை நோக்கிக் குதிரையைச் செலுத்திக் கொண்டு வந்தான். அவர்கள் அருகில் வந்ததும் வேகமாக அவர்களை நோக்கிப் பாய்ந்தான். இருவரும் அவனைத் தடுக்க முயன்று தோல்வி அடைந்து தங்கள் வாட்களால் அவனைத் தடுக்க முயன்று முடியாமல் திணறினார்கள். ஆனால் வந்தவனோ வேகமாகத் தன் வாளைச் சுழற்ற இப்போது தத்தன் வாள் அவன் கைகளிலிருந்து நழுவி தூரமாகப் போய் விழுந்தது.

அதைக் கண்ட வல்லபன் தன் வாளைச் சுழற்றிப் போரிட ஆரம்பிக்கச் சுற்றிச் சுற்றி வந்து அவனுடனும் போரிட்டான் வந்தவன். வல்லபன் வளைந்து நெளிந்து புதுப் புதுக்கோணங்களில் போரிட வந்தவனும் அதற்கு ஈடு கொடுத்துத் தானும் அங்கே இங்கே எனத் துள்ளிக் குதித்து வல்லபனை எதிர்த்துப் போரிட்டான். தன்னை வல்லபன் வாளால் சாய்க்க முடியாதபடி தடுத்தும் வந்தான். அப்போது வந்தவன் வீசிய வாள் வீச்சை எதிர்கொள்ள முடியாத வல்லபன் தடார் எனக் கீழே விழுந்துவிட்டான். வந்தவனும் தன் வாளை ஓங்கிக்கொண்டு வல்லபன் மார்பின் மீது ஒரு காலை வைத்து மிதித்துக் கொண்டு நின்றான்.தன் வாளை எடுக்கப் போயிருந்த தத்தன் அங்கிருந்தே இந்தக் காட்சியைப் பார்த்து நெஞ்சம் பதறி நின்றான். வல்லபனோ அவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என மனம் பதைக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அப்படியே வாளை ஓங்கிய நிலையில் வல்லபன் மார்பில் ஒரு காலை வைத்தபடி நின்றவன் பின்னர் தன் வாளைத் தூர எறிந்தான். இளைஞர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்தான். கடகடவெனச் சிரித்த அவனால் இளைஞர்கள் இருவரின் பயமும் தெளிந்து அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலையில் மாற்றமும் ஏற்பட்டது. தத்தன் ஏதும் புரியாமல் வாளை எடுத்துக் கொண்டு அங்கே வந்தான். வல்லபன் எழுந்து நின்று கொண்டான்.

அப்போது அவர்களைப் பார்த்த புதியவன், "ஏன், தம்பிகளா? இருவருக்கும் வாள் வித்தையில் இத்தனை தேர்ச்சி இருக்கிறதே? அப்புறமும் ஏன் சத்திரத்தில் அந்த வீரர் தலைவனை எதிர்க்காமல் சும்மா இருந்தீர்கள்?" என்று கேட்டான். பின்னர் வல்லபனைப் பார்த்து, "தம்பி! எத்தனை திறமையாக வாள் வீசுகிறாய்? ஆனால் இதை எல்லாம் காட்ட வேண்டிய சமயத்தில் சத்திரத்தில் காட்டாமல் இங்கே என்னிடம் அல்லவோ காட்டினாய்! போகட்டும்! இனியும் அப்படி எல்லாம் இருக்காதே! உன்னைப் பார்த்து உறுமினால் வாளை உருவி, அதட்டினால் ரத்தக்காயம் வரும்படி வாளால் அடித்துவிடு!" என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.  ஆனால் அவன் பேச்சு இருவருக்கும் பிடிக்கவில்லை. தங்கள் இருவரையும் அவன் ஒருவன் இத்தனை எளிதாக வென்றுவிட்டானே என்னும் அவமானம் இருவர் நெஞ்சிலும் இருந்தது. அவனைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. வந்தவனுடைய சண்டை முறையில் உள்ள சில நுணுக்கங்களை நாமும் கற்க வேண்டும்; அவற்றை எல்லாம் கற்கவே இல்லை! அதனால் தான் தோல்வி அடைந்துவிட்டோம்! என இருவரும் நினைத்துக் கொண்டனர்.

வந்தவன் ஆசையுடனும் உரிமையுடனும் தத்தன் முதுகில் ஓர் தட்டு தட்டிக் கொடுத்தான். ஆனால் தத்தனுக்கு அது பிடிக்கவில்லை. ஒதுங்கிக் கொண்டான். கூசியது அவனுக்கு. அந்த யாத்திரிகனுக்கு இதைப் பார்த்து மேலும் சிரிப்பு வந்தது! தத்தனைப் பார்த்து, "தம்பி! ஏன் இவ்வளவு வெறுப்பும் கோபமும்?  நீங்கள் இருவரும் சுத்த வீரர்களா இல்லையா எனச் சோதிக்கவே நான் இங்கே வந்தேன்! நீங்கள் வீரர்கள் தான்!" என்றான். அதற்கு தத்தன் இம்மாதிரி திடீரெனப் போரிட்டதால் இருவரின் உடைகளும் அழுக்காகிக் கிழிந்தும் போய்விட்டதாகக் குற்றம் சாட்டினான். வந்தவனோ தத்தனிடம் இப்படி எல்லாம் சகஜமாக நடக்கும். எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும். இதை எல்லாம் பொருட்படுத்திக் கொண்டு இருக்கக் கூடாது என்று அவனுக்கு புத்திமதி சொன்னான். தத்தன் மீண்டும் போய்த் தன் தாழங்குடையை எடுத்துக் கொண்டு வந்தான். வந்தவனைப் பார்த்து," எங்களை எதற்காகச் சோதித்தீர்? என்ன அவசியம் நேரிட்டது சோதிக்க?" என்று கோபமாக வினவினான். வல்லபனும் அதை ஆமோதிக்க அதற்கு வந்தவன், "தம்பிகளா! அந்தப் பெண்ணிற்கும் உங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தோன்றியது! அதனால் தான் அதை உறுதிப்படுத்திக் கொள்ள நான் திரும்பி வந்தேன்!" என்றான். அதற்கு வல்லபன் கேலியாக தங்கள் இருவருக்கும் அந்தப் பெண்ணிற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகப் புதியவன் நினைத்துக் கொண்டது அவனுடைய அதீத புத்திசாலித்தனத்தால் தான் என்று கிண்டலாகச் சொன்னான். வந்தவனோ தான் அதி புத்திசாலி இல்லை எனவும் நுட்பமான விஷயங்களெல்லாம் அவனுக்குப் புரியாது எனவும் சொல்லிவிட்டு அந்தப் பெண் இவர்கள் இருவருக்கும் ஓர் "முறி" எழுதி இருந்ததால் அதைப் பார்த்துவிட்டுத் தான் சந்தேகப்பட்டதாகச் சொன்னான்.

Friday, August 02, 2019

வல்லபனின் துக்கம்!

அந்தப் பெண்ணின் வண்டி சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வல்லபன். அதைக் கண்ட தத்தன் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, "என்ன விஷயம்?" என வினவினான். ஆனால் வல்லபனால் பேச முடியவில்லை. அந்தப் பெண் சென்ற திசையை விட்டு அவன் கண்கள் நகரவில்லை. வாய் மட்டும் , "ஒன்றுமில்லை!" எனப் பிதற்றியது. அவன் நிலையைப் புரிந்து கொண்ட தத்தன், "அப்பா, வல்லபா! இதைக் கேள்! பொதுவாகவே இளம் பெண்கள் தங்கள் கைகளால் எதைத் தொட்டாலும், "பட்ட மரம் தளிர்க்கும்." என்பார்கள்.  அவர்கள் காலால் உதை படும் அசோக மரம் பூக்கும். பகுல மரம் என்ற ஒன்று உள்ளது. அது இளம் கன்னிப் பெண்கள் வாயில் மதுவை வைத்து மரத்தின் மேல் உமிழ்ந்தால் பூக்கும் இயல்பு உள்ளது என்பார்கள். அவர்களின் காதல் மொழியிலேயே பூக்கும் பல மலர்கள் உண்டு. சிரித்தால் சில மலர்கள் மலரும். அவர்கள் சுவாசத்தால் பழ மரங்கள் இனிமையான கனிகளைக் கொடுக்கும்  சாதாரணப் பெண்களுக்கே இப்படி எனில், இப்போது வண்டியில் போனாளே, அவள் சிறந்த பத்மினி ஜாதிப் பெண்! அவள் பார்வை பட்ட மாத்திரத்திலேயே அனைத்தும் நடந்து விடும். அத்தனை உயிரோட்டமுள்ள பார்வை. அந்தத் தலைவன் நெஞ்சில் தான் ஈரம் இல்லை!" என்று முடித்தான்.

வல்லபன் அனைத்தையும் கேட்டுக் கொண்டு மௌனமாகவே இருந்தான். பின்னர் பொழுது நன்கு புலர்ந்து வெயிலும் ஏற ஆரம்பிக்க இளைஞர்கள் இருவரும் மீண்டும் பயணப்பட ஆரம்பித்தார்கள். காலை உணவு ஏதும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆதலால் அவர்களால் விரைவாக நடக்க முடியவில்லை. மெதுவாகவே சென்று கொண்டிருந்தனர். கிழக்கு நோக்கிச் சென்ற ராஜபாட்டையில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர் இருவரும்.  வல்லபன் மனதில் அந்தப் பெண்ணும் அந்தக் கூண்டு வண்டியும் அந்தப்பெண்  கைகளும், கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலைமையுமே மாறி மாறி வந்து கொண்டிருந்தது. ம்ம்ம்ம், இதே சாலையில் தான் அவளும் சற்று நேரத்திற்கு முன்னால் சென்றிருப்பாள். அவள் செல்கையில் பொழுது நன்றாகப் புலரவில்லையோ? இதே மரங்களையும், செடி, கொடிகளையும் அவளும் பார்த்திருப்பாள் அல்லவா? இந்தப் பட்சிகள்  அப்போதும் இதே போல் இனிய கானம் இசைத்துக் கொண்டிருந்திருக்கும் அல்லவா? அவள் என்ன நினைத்துக் கொண்டு போயிருப்பாள்? என் நினைவு அவளுக்குள் வந்திருக்குமா? இந்தச் சாலையில் எவ்வளவு தூரம் அவள் முன்னால் போயிருப்பாள்? அல்லது எங்கானும் தங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறார்களோ? தத்தனும்  மௌனமாகவே வல்லபனின் நிலையைக் கண்டு வந்தான்.

சற்று நேரம் பொறுத்து, "வல்லபா! என்ன உன் கவலை? எதைக் குறித்து மனக்கிலேசம் கொண்டிருக்கிறாய்?" என்று வினவினான். வல்லபன் திடுக்கிட்டான். எதுவும் இல்லை என மறுத்தான். ஆனால் தத்தன் அதை நம்பவில்லை. வல்லபன் மௌனமாகவே வருவதைச் சுட்டிக்காட்டி, மனக்கிலேசத்தினால் தான் அவன் அவ்வாறு வருவதாய்க் கூறினான். அதற்கு வல்லபன் கொஞ்சம் தயங்கி விட்டுப் பின்னர் தன் மனம் துக்கம் அடைந்திருப்பதாய்க் கூறினான். எதனால் துக்கம் என்று தத்தன் கேட்டான். அதற்கு வல்லபன், மெல்லத் தயங்கிக் கொண்டே, "அது தான்! அந்த இளம்பெண். அவள் விருப்பத்திற்கு மாறாக அல்லவோ அவளைச் சங்கிலியால் பிணைத்து அழைத்துச் செல்கின்றனர். இது எனக்குத் துக்கத்தை உண்டாக்கி விட்டது!" என்றான். தத்தன் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, "வல்லபா! இது என்ன புதுமையா? இப்போதெல்லாம் இப்படி நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டதே! இந்தப் பெண்ணுக்காக நீ ஏன் கவலைப்படவேண்டும்?" என்றான்.

வல்லபனோ தான் இப்போது தான் முதல் முறையாக இதைப் பார்ப்பதால் மனம் அதிகம் அதிர்ச்சி அடைந்திருப்பதாய்ச் சொன்னான். பின்னரும் சற்று நேரம் இருவரும் மௌனமாகவே பயணத்தைத் தொடர்ந்தார்கள். பல காத தூரங்களை அன்று ஒரே நாளில் எளிதில் கடந்தார்கள். பின்னர் ஓர் காட்டாற்றின் கரையிலிருந்த ஓர் மண்டபத்தில் இரவு தங்கி நன்கு உறங்கினார்கள். இரவெல்லாம் எவ்விதத் தொல்லையும் இல்லாமல் உறங்கினார்கள். காலை எழுந்து காட்டாற்றில் குளித்து முடித்து உடைகளை அணிந்து கிளம்ப வேண்டி ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். அப்போது சட்டெனத் தனக்கு எதிரே ஏதோ பார்த்த தத்தன் கலவரம் நிறைந்த முகத்தோடு வல்லபனை அழைத்து, "அதோ பார்!" எனச் சுட்டிக்காட்டினான். ஓர் வீரன் குதிரையில் ஏறிக்கொண்டு வாளை ஓங்கிய வண்ணம் தலை தெறிக்கும் வேகத்தில் வந்து கொண்டிருந்தான். காலதத்தன் முன்னால் சென்ற வீரர் தலைவன் தான் அந்த ஆளை அனுப்பி இருக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு மோசம் போய்விட்டோமே எனப் புலம்பிய வண்ணம் செய்வதறியாது திகைத்தான்.

Tuesday, July 16, 2019

வண்டி புறப்பட்டது!

தத்தன் என்னவெல்லாமோ பேசினான். திடீரெனத் துள்ளி எழுந்து, ஆஹா, என் குடையை விட்டுவிட்டேனே! என்று குதித்தபடிக் கூடத்தின் ஓரத்திலே ஒதுங்கிக்கிடந்த அவன் தாழங்குடையை எடுத்து வந்தான். வல்லபனுக்கு எதுவும் சரியாகப் புரியாவிட்டாலும் தத்தன் எதையோ மறைக்க இப்படி வளவளவெனப் பேசுகிறான் என்றவரை புரிந்து கொண்டான். சற்று நேரம் அந்தக் கூடத்திலே ஒரே பேச்சு சப்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. வந்திருந்தவர்கள் அனைவரும் ஒருங்கே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர்.  சேவகர்கள் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றிருக்க அவர்கள் தலைவன் கோபமாகக் கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். தத்தன் அவனைப் பார்த்துச் சிரித்த வண்ணம் வல்லபன் அருகே வந்தான். பின்னர் அனைவருமே அமைதியைக் கடைப்பிடித்துக் கொண்டு அவரவர் நண்பர்களுடன் சேர்ந்து மெல்லப் பேசிக் கொண்டும் படுக்க ஆயத்தங்கள் செய்து கொண்டும் இருந்தனர்.

இதை எல்லாம் பார்த்த வல்லபன் தானும் படுக்கலாமா என எண்ணியபோது தத்தன் அவனைத் தனியாகக் கண் ஜாடை செய்து அழைத்தான். இருவரும் சற்றே மறைவாகத் தனியாகப் போய் அமர்ந்தனர். அப்போது காலதத்தன் தான் அந்தச் சத்திரத்துக் குளியல் அறையில் இருந்த புகை போக்கி மூலம் வெளியே தப்பியதாகச் சொன்னான்.பின்னர் ஓட்டமாக ஓடியதில் எதிரே வந்த யாத்ரிகர்கள் கண்களில் பட்டதாகவும் அவர்களிடம் இந்த வீரர்களையும் அவர்கள் பிடித்து வைத்திருக்கும் பெண்ணையும் பற்றிச் சொன்னதோடு அல்லாமல் தங்களுக்கும் ஆபத்து நேர்ந்திருப்பதாகவும் வல்லபன் அங்கே தனியாக மாட்டிக்கொண்டதாகவும் தான் மட்டும் தப்பி வந்து உதவி கேட்க வந்ததாகவும் தெரிவித்ததாய்ச் சொன்னான். அதைக் கேட்டே அந்த யாத்ரிகர்கள் சத்திரத்துக்குள் நுழைந்ததாகவும் சொன்னான். இதை எல்லாம் கேட்ட வல்லபனுக்கு நன்றியால் கண்களும் மனமும் நிறைந்தது. ஆனால் தத்தனோ அவனைப் பார்த்து எச்சரிக்கும் குரலில், "வல்லபா! இனியாவது இப்படி முன்பின் யோசியாமல் இது போன்ற சங்கடங்களுக்குள் மாட்டிக் கொள்ளாதே!அதோடு இல்லை தம்பி! என்னையும் என் துணையையும் நம்பித்தான் உன் தாயார் உன்னை என்னோடு அனுப்பி இருக்கிறார். ஆகவே நீ நான் சொல்லுவதைக் கேட்டு அதன்படி நடந்து கொள்! நீயாக எந்த முடிவும் எடுக்காதே! நூறு எண்ணுவதற்குள்ளாகத் திரும்பி வா என உன்னிடம் சொல்லி இருந்தேன். ஆனால் நீயோ! வராமலே இருந்ததோடு அல்லாமல் என்ன செய்து உன்னைக் காப்பாற்றுவது என்று என்னைக் கவலையில் ஆழ்த்திவிட்டாய்!" என்று குற்றம் சாட்டும் தொனியில் கூறினான்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. காலதத்தனும், வல்லபனும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துப் பிரயாணத்துக்குத் தயார் ஆனார்கள். பின்னர் வெளியே வந்தார்கள். வெளியே நேற்றுப் பார்த்தக் கூண்டு வண்டிகள் பிரயாணத்துக்குச் சித்தமாகத் தயார் செய்யப்பட்டிருப்பதையும், காவல் வீரர்கள் அனைவரும் வந்து விட்டதையும், இன்னமும் அந்த இளம்பெண்ணும், அவள் காவலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முதிய பெண்ணும் தான் வரவில்லை என்பதை இருவரும் அறிந்தார்கள். இவை எதிலும் பார்த்துத் தன் கண்களையும் மனதையும் பறி கொடுத்து வந்த காரியத்தை வல்லபன் மறந்து விடப் போகிறானே என தத்தன் கவலைப்பட்டான். அப்போது சத்திரத்துக்குள்ளிருந்து அந்தப் பெண்ணும் அவளுக்குத் துணைக்கு இருக்கும் பெண்ணும் வருவதை இருவரும் கண்டனர். அந்தப் பெண் நடந்து வருவதே ஓர் அழகான அபிநயம் போல் இருந்தது வல்லபனுக்கு. மிக அழகாக ஒசிந்து ஒசிந்து அவள் வருவதையே தன்னை மறந்து பார்த்த வல்லபனுக்குச் சட்டெனத் தூக்கிவாரிப் போட நேற்று தத்தன் சொன்னதை எல்லாம் நினைவு கூர்ந்தவனாகச் சட்டென முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டு திரும்பியவாறு நின்று கொண்டான்.

அப்போது அந்தப் பெண் வல்லபனைத் திரும்பிப் பார்த்து ஏதோ சொல்ல நினைத்தவள் போல் நின்றாள். பின்னர் வல்லபன் முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டவள் போல் காணப்பட்டாள். அவள் விழிகளின் காந்தியும் நீண்ட அந்த விழிகளில் தெரிந்த தன் உருவமும் பார்த்துப் பித்துப் பிடித்தவன் போல் ஆனான் வல்லபன். ஆனால் அந்தப் பெண் சட்டெனத் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டு வண்டிக்குப் போய் அதிலே ஏறிக்கொண்டாள். வண்டியில் அமர்ந்தவள் சற்று நேரம் பார்வையைக் கீழேயே தாழ்த்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ தன் இடக்கை விரல்களால் அபிநயம் பிடித்த வண்ணம் தன் ஒரு கண்ணைச் சுற்றி இரு கோடுகள் வரும்படி செய்து காட்டினாள். பின்னர் ஐந்து விரல்களாலும் கழுத்தையும் சுற்றி நீவி விட்டுக்கொண்டாள். கையை மடித்து நெற்றியிலே வைத்து அழுத்தியவண்ணம் முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள். அப்போது வீரர்களில் ஒருவன் வந்து திரைச்சீலையை எடுத்துக் கட்ட ஆரம்பித்தான், அதை முழுதும் மூடுவதற்குள்ளாக அந்தப் பெண் வல்லபனை ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். சற்று நேரத்தில் திரைச்சீலை முற்றிலுமாக அந்தப் பெண்ணின் முகத்தை மறைத்துவிட வீரர் தலைவனும் அவர்களை அலட்சியமாகப் பார்த்த வண்ணம் குதிரையை விரட்டினான். வண்டி புறப்பட்டது!

Saturday, July 13, 2019

காலதத்தன் திரும்பி வந்தான்!

அந்தப் பெண் படுத்திருந்த கோலத்தைப் பார்த்தாலே பரிதாபமாக இருந்தது. அனைவரும் உள்ளே சென்ற சப்தத்தில் கூட அவள் கண் விழிக்கவோ எழுந்து பார்க்கவோ இல்லை. கூட வந்த சேவகன் அந்தப் பெண்ணின் அருகே சென்று மெள்ளக் குரல் கொடுத்தான். "அம்மா! அம்மா!" என இரு முறை அவன் விளித்தும் அந்தப் பெண்ணின் காதுகளில் அது விழுந்ததாகத் தெரியவில்லை. இன்னமும் அருகே சென்று கொஞ்சம் குரலை உயர்த்திக் கூப்பிட்டான். ம்ஹூம்! அப்போதும் அவள் கண் விழிக்கவில்லை. இளம்பெண்ணை எப்படித் தொட்டு உலுக்கி எழுப்புவது? அதுவும் உயர்குலத்துப் பெண்ணாக வேறே தெரிகிறாளே! அனைவரும் யோசிக்கையிலேயே அந்த வீரன் மேலும் குரலை உயர்த்திப் பல முறை அவளை எழுப்பினான். ஒரு வழியாக அந்தப் பெண் மெல்லத் தன் கண்களைத் திறந்தாள். என்றாலும் அவளால் முழுதும் திறக்க முடியவில்லை. கண்களை மெல்ல மெல்ல உயர்த்தி அவர்களைப் பார்த்தாள்.  அப்போது அந்த வீரர் தலைவன் அவளிடம், "அம்மணி! நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்ள இவர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். தாங்கள் யார் என்பதைத் தயவு செய்து இவர்களீடம் சொல்லுங்கள்." என வீரர் தலைவன் அவளிடம் சொன்னான்.  அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் அந்தப் பெண்ணோ பேசவே இஷ்டமில்லாதவள் போல் முகத்தைச் சுளித்துக் கொண்டாள். கண்களை வேறே மூடி மூடித் திறந்தாள். பின்னர் ஒருவாறு வாயைக் கூட்டிக்கொண்டு, "நா" என்றாள். பின்னர் "ஹாகு" "தேமு" என்றெல்லாம் ஏதேதோ புரியாத மொழியில் சொன்னாள். சேவகத் தலைவன் அவளிடம் அவள் சொல்லுவது அவர்களுக்குப் புரியவில்லை என்பதால் விளக்கமாகச் சொல்லும்படி மீண்டும் கேட்டான். அப்போதும் அந்தப் பெண் ஏதும் விபரமாகப் பேசாமல் துண்டு துண்டாக வார்த்தை, வார்த்தைகளாகவே ஏதேதோ புரியாத மொழியில் சொன்னாள். வீரர் தலைவன் முகத்தில் நிம்மதி தெரிந்தாற்போலிருந்தது வல்லபனுக்கு. அனைவரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் கூடத்திற்கு வந்தான் வீரர் தலைவன். "நான் சொன்னேனே! கேட்டீர்களா? அந்தப் பெண்ணிற்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது! கண்டபடி உளறுகிறாள் பாருங்கள்!" என்று சொன்னான் வீரர் தலைவன். வல்லபன் எதுவுமே புரியாமல் விழித்தான். வந்திருந்த புது யாத்ரிகனோ, "ஆம், ஆம், பைத்தியம் தான் பிடித்திருக்கிறது! உன்மத்தம்!" என்று திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு ராஜவல்லபனை நோக்கிச் சிரித்தான்.

"தம்பி, இப்படியாத் தவறாக நினைப்பது? ஒரு நிமிடத்தில் எங்கள் எல்லோரையுமே குழப்பி விட்டாயே! ஓர் பைத்தியக்காரப் பெண்ணை இவர்கள் விலங்கு பூட்டி ஜாக்கிரதையாக எவருக்கும் தீங்கு நேராமல் சிவிகையினுள்ளே அமர்த்திக் காவலுக்கு ஒரு பெண்மணியையும் போட்டு அழைத்துச் செல்கின்றனர். இதில் என்ன தவறு கண்டாய், இளைஞனே! அநியாயமாகச் சந்தேகப்பட்டு விட்டாய்!" என்று சொன்னான் அந்தப் புதியவன். பின்னர் வீரர் தலைவனிடம், "ஐயா! உம்மையும் உமது காரியத்தையும் குறித்து இவன் கொண்ட சந்தேகம் தவறானதே! அதனால் தான் இத்தனை விபரீதங்கள் நேர்ந்திருக்கின்றன. ஆனாலும் இவனை நீங்கள் நியாயப்படி பார்த்தால் தண்டிக்கக் கூடாது! சந்தேகத்தின் பேரில் செய்த தவறு அல்லவா? அதற்கு மன்னிப்பும் உண்டே!" என்றான். ஆனால் வீரர் தலைவன் அதை ஒத்துக்கொள்ளவில்லை. ஆவேசமாக மறுக்க புதியவனும் வீரர் தலைவனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடைசியில் அலுத்துப் போன புதிய யாத்ரிகன் வீரர் தலைவனைப் பார்த்து, "நீர் எந்த நாட்டவர் ஐயா?" என வினவ, தான் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவன் என வீரர் தலைவன் கூறினான். அதற்குப் புதியவன், "சரிதான்! சம்புவராயரின் நாட்டிலிருந்து வருகிறீர்கள் போலும்! ஆனால் இது கொங்கு நாடு! தெரியுமா? இதை ஆள்வது யாரென்று அறிவீர்களா? " என்று புதியவன் வீரர் தலைவனிடம் கேட்டான். அதற்கு வீரர் தலைவன், "ஏன், மதுரை சுல்தானின் ஆட்சி தான் இங்கு வரை நீண்டு விட்டதே!" என மறுமொழி கொடுத்தான். உடனே புதியவன், "ஆஹா! வீரரே! அதை நீர் நினைவில் வைத்துக் கொள்ளும்! உம் தொண்டைமண்டலத்தின் சட்டதிட்டங்கள், நியாய அநியாங்கள் இங்கே செல்லாது. நீர் நிற்பது உம் தொண்டை நாடல்ல. மதுரை சுல்தானுக்கு உட்பட்ட ராஜ்ஜியம்! இங்கே நீங்களாக ஏதேதோ முடிவு செய்து நியாயம் என நினைத்துச் சொல்லும் தீர்ப்புக்கள் செல்லாது. அதன்படி நீங்கள் இந்த இளைஞனுக்கு தண்டனை கொடுக்க முடியாது. அது முற்றிலும் தவறு!" என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தான்.

உடனேயே அந்தப் புதியவனுடன் வந்தவர்களும் சேர்ந்து, "ஆம், அது முற்றிலும் தவறு, தவறு, தவறு!" என்று கோஷமிட்டார்கள். அதைக் கேட்ட வீரர் தலைவன் இத்தனை பேர் எதிர்க்கையில் தான் என்ன செய்யலாம் என  யோசித்த வண்ணம் மௌனமாகச் சிறிது நேரம் இருந்தான். பின்னர் அந்தப் புதியவனிடம் அவன் சொல்லுவதைத் தான் ஏற்றுக்கொள்வதாகச் சொல்லிவிட்டு உத்திரத்தின் மேல் கட்டிய சுருக்குக் கயிறைத் தன் வாளாலேயே அறுத்துத் தள்ளினான். பின்னர் அந்தப் பெண் இருக்கும் அறைக்குச் சமீபமாகக் கூடத்தின் ஓர் ஓரமாகப் போய் நின்று விட்டான்.  அப்போது வாசலில் யாரோ கைகளைத் தட்டும் சப்தம் கேட்கவே அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். வந்தவன் காலதத்தன். வல்லபனுக்கு மகிழ்ச்சி பொங்கி வர உடனே எழுந்து சென்று காலதத்தனைக் கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டான். இங்கே நடந்ததை எல்லாம் அவனிடம் சொல்லித் தான் மிகக் கடுமையானதொரு தண்டனையிலிருந்து தப்பி இருப்பதையும் சொல்லிக் காலதத்தன் எங்கே போனான், என்னவானான் என்று கேட்டான்.

Friday, July 12, 2019

அந்த இளம்பெண் யார்?

"ஆஹா,தம்பி, நீ விளக்கை அணைத்தாயா? அப்படி எனில் உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தூக்குத் தண்டனை நியாயமானது தான்!" என்றான் வந்தவன். அவன் முகத்தில் வல்லபன் மேல் சிறிது கூடப் பரிதாபம் தோன்றவில்லை. தூக்குத் தண்டனை வெகு சகஜம் என்பது போல் அவன் சாதாரணமாகக் கூற அதைக் கேட்டு வெகுண்டான் வல்லபன். புதிதாக வந்தவனைப் பார்த்து, "ஐயா, நீங்கள் உண்மை என்னவென்று அறியாமல் பேசுகிறீர்கள். இதோ இருக்கிறானே இவனும் இவன் ஆட்களுமாகச் சேர்ந்து என்ன காரியம் பண்ணி இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஓர் இளம்பெண்ணைக் கையில்,காலில் சங்கிலி போட்டுக் கட்டிப் பிணைத்து எங்கேயோ கடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். அதை நானும் என் நண்பனும் பார்த்துவிட்டோம் என்பதால் இப்போது என்னைக் கொல்ல நினைக்கிறான் இவன். என் நண்பன் எங்கே போனான் என்றே தெரியவில்லை." என்று கூறினான்.

ஆனால் வந்தவன் இதைக் கேட்டுப் பதறினதாகத் தெரியவில்லை. மாறாக அவன் முகத்தில் மகிழ்ச்சியே தாண்டவம் ஆடியது. பெண் என்றதும் எல்லோருக்கும் தோன்றும் எண்ணம் அவனுக்குள்ளும் தோன்றியது போல் கொஞ்சம் அசட்டுக்களையும் ஏற்பட்டது. முகத்தில் இருந்த மகிழ்ச்சி நன்றாகவே தெரிய அந்தப் புதியவன் வீரர் தலைவனிடம், "பெண்ணா? அதுவும் இளம்பெண்ணா? நல்லது! நல்லது! யாருடைய பெண்? எதற்குக் கடத்தினீர்கள்? நீங்களே சொந்தமாக வைத்துக்கொள்ளும் உத்தேசம் உண்டா? அல்லது வேறு யாருக்கானும் இந்தப் பெண் போகிறாளா?" என்றெல்லாம் ஆவலுடன் கேட்டான்.  இப்போது வீரர் தலைவனுக்கு வந்தவனிடம் ஏற்பட்டிருந்த மரியாதை சுத்தமாகப் போய்விட்டது.  ஏளனமாக அவனைப் பார்த்தான்.  அதற்குள்ளாக அந்த ஆடவனுடன் வந்த இதர ஏழு நபர்கள் தங்கள் கைகளில் மூட்டைகளை ஏந்திக்கொண்டு உள்ளே நுழைந்தனர். வீரர் தலைவன் அவர்களைப் பார்த்தான். அனைவரும் நெடுந்தூரப் பயணத்தில் களைத்திருப்பது புரிந்தது அவனுக்கு. ஆனாலும் அவர்கள் அனைவருமே கட்டுமஸ்தான தேகத்துடன் காணப்பட்டனர்.

உடனேயே தன் முகத்தில் வலிய ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டான் அந்த வீரர் தலைவன். "ஹாஹாஹாஹா! இந்தப் பையன் விபரம் தெரியாமல் பேசுகிறான்! தம்பி! இதோ பார்! நீ நினைப்பது போல் எல்லாம் அல்ல! அந்தப் பெண்ணை யாரென்று நீ நினைத்தாய்? எங்கள் தலைவர் காளிங்க மர்த்தனரின் பெண் தான் அவள். அவளுக்குச் சித்தப்பிரமை! ஒரு வருடமாக இப்படித் தான் இருக்கிறாள். கொங்கு நாட்டுக்குச் சென்று அங்கே ஓர் சாமியாரிடம் இவளுக்கு வைத்தியம் பண்ணிக் கொண்டு நாங்கள் திரும்புகிறோம். சங்கிலியைக் கழட்டி விட்டால் எங்கானும் ஓடி விட்டால்? எங்கள் தலைவருக்கு யார் பதில் சொல்வது? அதனால் தான் நாங்கள் அவளைச் சங்கிலியால் பிணைத்து இருக்கிறோம்! இது வழக்கமாக எல்லோரும் செய்வது தானே அப்பா!" என்று குரலைக் குழைத்துக் கொண்டு பேசினான் வீரர் தலைவன்.

வல்லபன் திகைத்து நிற்க, அந்தப் புதியவனோ வல்லபனைப் பார்த்து, "சரிதான்! நீ இதை எல்லாம் கவனிக்கவில்லை போலும்! என்ன பையனப்பா நீ!" என்ற வண்ணம் மறுபடி கொஞ்சம் அசட்டுச் சிரிப்பாகச் சிரித்தான்.  வல்லபன் தடுமாறிவிட்டான். ஆனாலும் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு யோசித்துப் பார்த்தவனுக்கு உண்மை புலப்பட்டது. உடனே புதியவன் பக்கம் திரும்பி, "ஐயா! இவர் சொல்லுவதெல்லாம் பொய்! நிச்சயமாய் அந்தப் பெண் பைத்தியமே அல்ல. ஏதோ ஓர் நாட்டின் அரசகுமாரி அவள். அவளைப் பார்த்தால் ராஜ லட்சணங்கள் தெரிகின்றன.  ஐயா, புதியவரே! நீங்களே அந்தப் பெண்ணை நேரில் கண்டு அவளிடம் விசாரியுங்கள்!" என வேண்டுகோளையும் விடுத்தான் வல்லபன்.  உடனேயே வந்தவனும் வல்லபன் சொன்னதை ஆதரித்து வீரர் தலைவனிடம், அந்தப் பெண்ணையே தான் நேரில் பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொள்வதாகச் சொன்னான். வீரர் தலைவனுக்கு முகம் கறுத்தது. உள்ளூரக் கோபமும் கொந்தளித்தது. வல்லபனைக் கடுமையாகப் பார்த்தான்,

புதியவரைப் பார்த்து, "ஐயா! பெரிய மனிதரே! நீர் உண்மையிலேயே ஓர் பெரிய மனிதர் என எண்ணியே நான் இத்தனை நேரமாய் உங்களுக்கு பதில் கூறி வருகிறேன். இப்போது இப்படிச் சொல்கிறீரா? நான் கூறுவது உண்மையா, பொய்யா என உமக்குத் தெரியவேண்டும்! அது தானே! வாரும் ஐயா!  அந்தப் பெண்ணிடம் அழைத்துச் செல்கிறேன். நீரே அந்தப் பெண்ணிடம் எல்லா விபரங்களையும் விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்." என்று சொல்லிய வண்ணம் அங்கிருந்து ஒரு சேவகனுக்குக் கண் ஜாடை காட்ட, அவனும் தீவர்த்தியைத் தூக்கிக் கொண்டு முன்னே சென்றான். அனைவரும் அந்தப் பெண் இருந்த அறைக்குள் சென்றனர். அங்கே அந்தப் பெண் மஞ்சத்தில் சோர்ந்து போய்ப் படுத்திருக்க அவளைப் பிணைத்திருந்த சங்கிலிகள் அவள் உடல் மீது தாறுமாறாய்க் கிடந்தது.

Monday, July 08, 2019

சத்திரத்தில் புது வரவு! நண்பனா? துரோகியா?

விசித்திரமான குரல் ஒலியைக் கேட்டுத்திகைத்திருந்த வீரர் தலைவனும் சேவகர்களும் வெளியே சாலையை நோக்கிப் பார்வையைத் திருப்பினார்கள். வெகு தூரத்தில் கருங்கும்மென்றிருந்த இருட்டில் ஏதோ பிரகாசமாக ஜொலிப்பது தெரிந்தது. வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சற்று நேரத்தில் அது ஐந்தாறு தீவர்த்திகள் ஒளி காட்டிக்கொண்டு வரும் வெளிச்சம் என்பதைப் புரிந்து கொண்டனர். எனவே வீரர்களில் ஒருவன் சற்றே குதூகலத்தோடு தலைவனைப் பார்த்துத் தங்கள் படையாட்கள் தான் வருகின்றனர் எனத் தான் நினைப்பதாய்க் கூறினான். வீரர் தலைவனும் அப்படியே நினைத்துத் தலையை ஆட்டிக் கொண்டு, "வரட்டும், வரட்டும்! வந்து அவர்களும் இந்த இளைஞனின் இறுதி நேரத்தைப் பார்க்கட்டும்!" என்று கூறிக் கொண்டே தன் தலையையும் ஆட்டிக் கொண்டான். உன்னிப்பாகப் பார்த்தவண்ணம் அங்கேயே நின்று கொண்டிருந்த வீரர் தலைவனுக்கு ஏதோ சந்தேகம் மனதில் ஜனித்தது. தீவர்த்திகள் நெருங்கி வந்து கொண்டிருந்தன. குதிரைகளும் வந்து கொண்டிருந்தன. ஆனால் ஓர் படைவீரர்களின் குதிரைகள் போல் நடக்கவில்லை எவையும். ஒரே தாளகதியில் வரவேண்டிய குதிரைகள் சோர்ந்து போய் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேகத்தில் வந்து கொண்டிருந்தது. இது வீரர் படையே இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டான் வீரர் தலைவன்.

வல்லபனுக்கு இவ்வளவு தூரம் யோசித்துப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை. ஆனாலும் வருபவர்கள் மூலம் தனக்கு விமோசனம் கிட்டுமோ என எதிர்பார்த்துக் காத்திருந்தான்.  வீரர் தலைவனுக்குச் சற்று நேரத்திலேயே வருவது தன் ஆட்கள் இல்லை என்பது புரிந்து விட்டது. உடனேயே தன் வீரர்களுக்கு எச்சரிக்கை செய்தான். அவர்களுக்கும் இதற்குள்ளாக சந்தேகம் வந்துவிடவே எச்சரிக்கையுடனேயே காத்திருந்தனர். அதற்குள்ளாக எட்டு ஆட்கள் பரிவாரமாக வர அங்கே வந்து சேர்ந்த அந்தக்கூட்டம் சத்திரத்து வாசலில் வந்ததும் நின்றது. குதிரைகள் சோர்வுடன் நின்றன. மனிதர்கள் அவற்றின் மீதிருந்து குதித்துக் குதிரைகள் மேல் இருந்த பெரிய பெரிய மூட்டைகளையும் கீழே இறக்கினார்கள். தலையில் பாகையை வரிந்து கட்டி இருந்தான் ஆஹானுபாகுவான ஒருவன். அவன் நீளமானதொரு அங்கியைப் பட்டினால் தயாரிக்கப்பட்டுக் கட்டி இருந்தான். கையிலும் ஒரு பட்டுப் பையை வைத்துக் கொண்டிருந்தான். அவன் பாதரட்சைகள் வளைந்து காணப்பட்டன.  சுற்றும் முற்றும் பார்த்தவண்ணம் வந்த அவன், பொதுவாக யாரையும் கேட்காமல், "ஹே, ஹே! யாரது அங்கே! சத்திரம் இது தானா? நாம் தங்க வேண்டிய இடம் இது தானா?" என்று கேட்டவண்ணம் உரத்துச் சிரித்தபடி சத்திரத்துக்குள் நுழைந்தான்.

கூடத்திற்கு வந்தவன் மேலிருந்து தொங்கும் தூக்குக்கயிறையும் அதில் வல்லபனை ஏற்றிவிடத் தயாராக இருந்த கணபதி என்னும் வீரனையும், அதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த வீரர் தலைவனையும் பார்த்துவிட்டுத் திடுக்கிட்டவன் போல் பாசாங்கு செய்து கொண்டு, "இதென்ன, இந்தச் சிறுவனைத் தூக்கில் போடப் போகிறீர்களா? இப்படி ஒரு காரியத்தை நீங்கள் செய்யலாமா?" என்று வீரர் தலைவனை ஏற்கெனவே அறிந்தவன் போல் மிக உரிமை எடுத்துக் கொண்டு கேட்டான். வீரர் தலைவனுக்கு அவன் வந்ததே பிடிக்கவில்லை. அதோடு இல்லாமல் சத்திரத்துக்குள்ளும் தங்க வந்தது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. இப்போது இந்தக் கேள்வியை எல்லாம் கேட்க இவன் யார் என நினைத்தவண்ணம், முகத்தில் வெற்றுச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு வல்லபனும் அவன் நண்பன் காலதத்தன் என்பவனும் அவர்களுடைய உடைமைகள், விலைபெற்ற பொருட்களை எல்லாம் திருடிவிட்டதாகச் சொன்னான். உடனேயே அந்த ஆஜானுபாகுவான மனிதன் வீரர் தலைவன் பக்கம் சேர்ந்து கொண்டான். "ஆம், ஆம்! இப்படியான திருடர்களுக்கெல்லாம் இதுதான் தண்டனை. தக்க தண்டனை கொடுத்தீர்கள்!" என்று வீரர் தலைவன் பக்கம் பேசினான்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த வல்லபனுக்குக் கோபம் கொந்தளித்தது. "இல்லை, இல்லை! நாங்கள் எதையும் திருடவே இல்லை. இந்த வீரர் தலைவர் பொய் சொல்கிறார். உங்களை எல்லாம் போல் நாங்களும் இங்கே சத்திரத்தில் இரவைக் கழிக்கத் தான் வந்தோம். ஆனால் இவர் எங்கள் மேல் அநியாயமாய்ப் பழி போடுவதோடு இல்லாமல் என்னைக் கொலை செய்யவும் துணிந்து விட்டார். என் நண்பன் போன இடமும் தெரியவில்லை!" என்று ஆவேசமாகக் கூறினான். உடனே புதிதாக வந்த அந்த ஆள் வல்லபன் பக்கம் சேர்ந்து விட்டான். "ஆஹா! இவன் திருடவே இல்லையா? அநியாயம்! அநியாயம்! நீங்கள் எப்படி இவனைத் தூக்கில் போடலாம்? இவன் தான் திருடவே இல்லையே!" என வீரர் தலைவன் மேல் பாய்ந்தான். வீரர் தலைவனுக்கு ஆத்திரம் மேலிட்டது. முதலில் தன் பக்கம் பேசியவன் இப்போது வல்லபன் பக்கம் பேசுகிறானே என நினைத்தவண்ணம், "ஐயா, நீதிமானே! இந்த இளைஞன் சொல்வதைக் கேட்டதும் அவன் பக்கம் சாய்ந்து விட்டீரே! இவன் எதையும் திருடவில்லை எனில் ஏன் கூடத்தில் இருந்த விளக்கை அணைக்கவேண்டும்? அதைக் கேளுங்கள் இவனிடம்!" என்று கோபமாகக் கூறினான்.

Saturday, July 06, 2019

இருளில் ஓர் சப்தம்!

வல்லபனுக்குக் கண்ணீர் ததும்பியது. இந்த நேரம் பார்த்து தத்தன் போன இடம் தெரியவில்லையே! நாம் ஒன்றுமே சொல்லாதபோது, எதுவுமே செய்யாத போது தூக்குத் தண்டனை வழங்குகிறானே இந்த வீரர் தலைவன். இதை எதிர்ப்பவர்கள் யாரும் இல்லையா? என்றெல்லாம் யோசித்து மனதைக் குழப்பிக் கொண்டான். கணபதி என்னும் அந்த வீரனோ உத்திரத்தில் இருந்து கயிற்றைக் கட்டித் தொங்கவிடும் பணியில் மும்முரமாக இருந்தான். அதைப் பார்த்த வல்லபனின் நெஞ்சம் மேலும் கலங்கியது. தத்தனை மீண்டும் காணாமலேயே தான் இறக்கப் போகிறோம் என்பதை நினைத்து அவன் மனம் விம்மியது. இனி என்ன செய்வோம் என்று குழப்பத்தில் ஆழ்ந்தான். அவன் மனக்கண்ணில் வாசந்திகாவின் சோகமான முகம் நினைவில் வந்தது. ஆஹா! தன் தாய் தான் தன்னிடம் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாள்? தகப்பன் விட்டுச் சென்ற பணியை முடிக்கத் தானே என்னை அனுப்பி வைத்தாள். ஆனால் நானோ பாதி தூரம் கூடச் செல்லவில்லை. அதற்குள்ளாக உயிரை இழக்கப் போகிறேன். அம்மா, அம்மா! என் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தீர்கள்? உங்கள் நம்பிக்கையை எல்லாம் நான் மோசம் செய்துவிட்டேனே! நீங்கள் எனக்குக் கொடுத்திருந்த எச்சரிக்கைகளையும் மீறி விட்டேனே! உங்கள் புத்திமதியைப் பின்பற்றி இருந்தேனானால் இத்தகைய நிலைமை எனக்கு ஏற்பட்டிருக்காதே! என்றெல்லாம் மனதுக்குள்ளேயே புலம்பினான் வல்லபன்.

அதற்குள்ளாக எங்கிருந்தோ ஓர் ஏணியைக் கொண்டு வந்த அந்த வீரன் உத்திரத்தில் கெட்டியான ஒரு கயிற்றைக் கட்டி அதில் கீழே தொங்கும் இடத்தில் நல்ல கனமான சுருக்கையும் போட்டு முடித்தான். வல்லபன் அருகே வந்து அவனைப் பார்த்து, "ம், நட முன்னால்!" என்று சொல்லியவண்ணம் அவனை நடத்தினான். அவனைப் பிணைத்திருந்த கயிற்றையும் அவிழ்த்துவிட்டான். வல்லபன் தன் நிலையை நினைத்துக் கண்ணீர் சொரிந்தான். தலையை நிமிர்த்தி எங்கானும் தத்தன் தென்படுகிறானா என அங்குமிங்கும் பார்த்தபோது முன்னர் பார்த்த சாளரத்தின் வழியாக அந்த இளம்பெண்ணின் முகம் பயத்தில் வெளிறிக் காணப்பட்டது. ஆஹா! இத்தகையதொரு பெண்ணின் முன்னால் அல்லவோ எனக்கு இந்த துர்க்கதி ஏற்பட்டு விட்டது வீரமில்லாதவன் என்றல்லவோ அந்தப் பெண் என்னை நினைத்திருப்பாள்? இதிலிருந்து தப்ப வழி தெரியாமல் மரணத்தை அல்லவோ நாம் இப்போது ஏற்கப் போகிறோம். இவ்வாறெல்லாம் எண்ணிய வல்லபன் கொஞ்சம் யோசித்துவிட்டுப் பின்னர் ஏதோ தோன்றியவனாக வீரர் தலைவனைப் பார்த்தான்.

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனிடம், தான் எந்தத் தவறும் செய்யாதிருக்கையில் தனக்கு இத்தகைய மரண தண்டனை விதிப்பது அபாண்டம் என்றும் தன்னை விடுவிக்குமாறும் கேட்டான். அதற்கு அந்த வீரர் தலைவன் அவன் ஒரு குற்றம் மட்டும் செய்யவில்லை. பல குற்றங்கள் செய்திருப்பதாகச் சொன்னான். சத்திரத்துக்குள் வந்ததே தப்பு என்றும் அப்படி வந்ததும் அல்லாமல் விளக்கையும் அணைத்துவிட்டு அவர்களுடன் போரிட முயன்றது இன்னொரு குற்றம் என வரிசையாக அவன் குற்றங்களை அடுக்கினான். இதற்காகத் தனக்கு மரண தண்டனையா கொடுக்க வேண்டும் என வல்லபன் மீண்டும் கேட்டான். அவனை வெறுப்புடன் பார்த்தான் வீரர் தலைவன். இங்கே நீதி, நியாயம், நேர்மைக்கு எல்லாம் இடமும் இல்லை. அது பேசும் சமயமும் இதுவல்ல என்ற வீரர் தலைவன் கணபதி என்னும் அந்த வீரனுக்கு மீண்டும் ஜாடை காட்டி வல்லபனை இழுத்துப் போகச் சொன்னான். வல்லபன் என்ன நினைத்தானோ தான் தன் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து கொள்ளப் போவதாகச் சொல்லிவிட்டுக் கீழே அமர்ந்து கொண்டு கூரத்தாழ்வார் அருளிச் செய்த சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்றை ராகம் போட்டுப் பாட ஆரம்பித்தான்.

வீரர் தலைவனுக்கு ஆத்திரம் பொங்கியது. இதெல்லாம் என்ன நாடகம் எனக் கூறிக்கொண்டு அவன் வல்லபன் மேல் பாய்ந்தான். அவன் தலைமுடியைப் பிடித்து உலுக்கி அவனை எழுப்பப் பார்த்தான். அப்போது வாயிலுக்குச் சற்றுத் தொலைவில் இருந்து ஏதோ விசித்திரமான சப்தம் எழுந்தது. "கூவேகூ" என்று ஏதோ கூவிய மாதிரிக் கேட்டது. ஆனால் குரல் மனிதக் குரல் மாதிரி இல்லாமல் அமானுஷ்யமாகத் தொனித்தது. வீரர் தலைவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அதுவும் அந்தக் குரல், அந்தச் சப்தம் அந்தப் பிரதேசம் முழுதும் பரவி எதிரொலிக்கவும் செய்தது. என்ன விபரீதமோ எனக் கலங்கிவிட்டான் வீரர் தலைவன். மற்ற வீரர்களும் அந்த சப்தத்தைக் கேட்டுவிட்டு அங்கே வர அனைவரும் வெளி வாயிலையே பார்த்தார்கள்.

Friday, July 05, 2019

வல்லபனுக்குத் தூக்கு!

திடீரென ஏற்பட்ட வெளிச்சத்தில் அரண்டு போன வல்லபன் தான் இருந்த அறையின் சாளரத்தின் வழியாக வந்த வெளிச்சமே அது என்பதையும் அவர்கள் கூடத்திலே தான் வெளிச்சத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதையும் சற்றுத் தாமதமாகவே புரிந்து கொண்டான். கூடத்தில் வீரர் தலைவன் அவர்கள் இருவரையும் பிடிக்கவேண்டும் என்று கூவிக்கொண்டு அந்தச் சுளுந்துகளின் வெளிச்சத்தில் தங்களைத் தேடியதையும் வீரர் தலைவனின் கூவலில் இருந்து வல்லபனுக்குப் புரிந்தது. தத்தன் எந்தப் பக்கம் போனானோ தெரியவில்லை. தனக்குத் தெரிந்த அரைகுறை வெளிச்சத்தில் அறைக்குள் நோட்டம் விட்ட வல்லபன் தான் இரும்புச் சங்கிலி ஒன்று நீளமாகப் பிணைத்திருப்பதைத் தொடர்ந்து வந்திருப்பதை உணர்ந்தான். அது பிணைத்திருந்தது ஓர் அழகான பாதத்தில் என்பதை உணர்ந்து கொண்டு தரையில் மண்டியிட்ட வண்ணம் அமர்ந்திருந்த வல்லபன் நிமிர்ந்து பார்த்தான். அவன் முன்னே மஞ்சத்தில் அபலையாக ஓர் இளம்பெண் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவளது பாதத்தைப் பிணைத்திருந்த இரும்புச் சங்கிலியைத் தான் தொட்டுக் கொண்டு அமர்ந்திருப்பதையும் உணர்ந்து கொண்டான்.

அவன் பார்வை அந்தப் பெண்ணின் முகத்தையே ஆராயும் நோக்கத்தில் பார்த்தது. ஆனால் அவள் அழகில் வல்லபன் நிலை குலைந்து போய்விட்டான். நீண்ட அவள் விழிகளில் அவனை எதிர்பாராமல் அங்கே கண்டதனால் ஏற்பட்ட திகைப்பு, பிரமிப்பு ஆகியவற்றோடு தலைவன் கண்களில் பட்டுவிட்டால் அவன் கதி என்னவோ என்னும் இரக்கமும் ததும்பிக் கொண்டிருந்தது. வல்லபன் அப்படியே மெய்ம்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண்ணும் ஏதும் பேசவில்லை. அவனைப் பார்த்ததுமே அவள் முகத்தில் ஏற்பட்ட மந்தகாசம் சற்றும் மறையவில்லை. அதற்குள்ளாக அந்த அறைக்குள்ளும் ஓர் சேவகன்  சுளுந்தை எடுத்துக் கொண்டு நுழைந்துவிட்டான். அவனுடனேயே வீரர் தலைவனும் நுழைந்து விட்டான். வல்லபனை அங்கே கண்டதும், "அற்பப் பதரே! எழுந்திரு!" என்று கூவிக் கொண்டே வீரர் தலைவன் வாளை உருவி ஓங்கினான். வல்லபன் கழுத்தைக் குறி பார்த்தது அந்த வாள்.

அந்தப் பெண்ணின் வதனமோ சற்றும் எந்தவிதமான மாறுபாட்டையும் காட்டாமல் இருந்தது. அவள் தன் நீண்ட கண்களினால் வீரர் தலைவனைப் பார்த்துவிட்டுப் பின்னர் வல்லபனையும் பார்த்தாள். எல்லையற்ற கருணையும் இரக்கமும் அவள் கண்களில் தெரிந்தன. வல்லபன் தன்னை இழந்தான். அவன் மனதில் ஏனோ இனம் தெரியாததொரு குதூகலம் தோன்றியது. இவளிடம் பேசி என்னவெல்லாமோ தெரிந்து கொள்ள வேண்டும்; இவளை இந்த வீரர் தலைவன் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என என்னவெல்லாமோ யோசித்த வல்லபன் திடுக்கிடும்படியாக வீரர் தலைவன் மீண்டும் கூவினான்.  "அற்பப் பதரே! தப்பவா பார்த்தாய்? என்னிடமிருந்து தப்ப முடியுமா?" என்றுகூவிக் கொண்டே வல்லபனைத் தன் வாள் நுனியால் தொட்டுத் தள்ளிக் கொண்டே கூடத்துக்கு இழுத்துச் சென்று அங்கே ஒரு தூணில் வல்லபனைப் பிணைத்துக் கட்டினான்.

"எங்கேயடா அந்த இன்னொருவன்? வாசாலகமாகப் பேசுவானே! இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டான்? தேடுங்கள் அவனையும்! பிடித்து இழுத்து வாருங்கள்!"என்று வீரர் தலைவன் தன்னுடன் இருந்த வீரர்களிடம் ஆணையிட இரு சேவகர்கள் தத்தனைத் தேடிச் சென்றனர். சத்திரம் முழுமையும் தேடினார்கள். சமையலறை, மச்சில்,கூடம், பாவுள் (உள்பக்கம் உள்ள அறை), உக்கிராண அறை (மளிகை சாமான்கள், காய்கறிகள், பால் போன்றவை வைத்திருக்கும் அறை), மேலே உள்ள பரண்கள், நெல் குதிர்கள் என ஒன்றையும் விடவில்லை. தத்தன் போன இடம் தெரியவில்லை.  தலைவனுக்குக் கோபம் அதிகம் ஆனது. வல்லபனிடம், "எங்கே சென்றான் உன் நண்பன்?" எனக்கோபமாகக் கேட்க வல்லபன் தனக்குத் தெரியாது என்று சொன்னான். ஆனால் வீரர் தலைவன் அதை நம்பவில்லை. வல்லபனை ஏசினான். பின்னர் மீண்டும் அந்த கணபதி என்பவனைக் கூப்பிட்டான். வல்லபனைத் துண்டாக வெட்டிப் போடச் சொன்னான். "இந்த இளைஞனைச் சிரச்சேதம் செய்து விடு!" என்று கோபமாக ஆணையிட்டான். 

அதைச் சத்திரத்து அறையினுள் இரும்புச் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த பெண் கேட்டிருக்க வேண்டும். சற்றே அசைந்து கொடுத்தாள் போலும். அந்த இரும்புச் சங்கிலிகள் அசைந்து சப்தம் கொடுத்தன. அதே சமயம் மழைக்காலத்தின் ஊதல் காற்றும் சத்திரத்துக் கூடத்துக்குள் புகுந்தது. வீரர் தலைவன் கணபதியைப் பார்த்து, "சீக்கிரம்!" என்றவன் என்ன நினைத்தானோ, "இரு! கணபதி! இவனை இப்படியே இரண்டு துண்டாக வெட்டி விட்டால் சரியாக வராது! அதோ அவனை அங்கே தூக்கில் போடு! தூக்கில் தொங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக இவன் இறக்கட்டும். அவன் நண்பன் எங்கிருந்தாவது வந்து இதைப் பார்த்துக் கொஞ்சமானும் விவேகமும், புத்தியும் அடைவான்! இது தான் இவனுக்குச் சரி!" என்று சொல்லிவிட்டு உத்திரத்தை ஆராய்ந்து ஓர் இடத்தைக் காட்டி அங்கே கயிற்றைக் கட்டுமாறு ஆணையிட்டான்.

Thursday, July 04, 2019

வல்லபன் நிலை என்ன?

ஒன்றும் புரியாமல் விழித்த வல்லபனை ஜாடை காட்டிக் கீழே அமர்த்திய காலதத்தன் தன் கால் விரல்களால் வல்லபன் பாதத்தைத் தொடும்படி அமர்ந்து கொண்டு வல்லபனை எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினான். பின்னர் தன்னுடைய மூட்டையிலிருந்து ஏட்டுக்கட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு விளக்கடியில் வைத்துக் கொண்டு அதைப் படிக்க ஆரம்பித்தான். வீரர் தலைவன் நக்கலாகச் சிரித்தான். "என்ன மந்திரம் அது தம்பி?" என்று கேட்டுக்கொண்டு வீரர் தலைவன் காலதத்தன் அருகே வந்தான். அதற்குக் காலதத்தன் வீரர் தலைவனைப் பார்த்துத் தாங்கள் இருவரும் ஜோசியர்கள் எனவும் ஆரூடம் பார்த்துச் சொல்லுவார்கள் எனவும் இன்றிரவு அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று சாத்திர ரீதியாகத் தெரிந்து கொள்ளப் பார்ப்பதாகவும் சொன்னான். ஆனால் வீரர் தலைவன் மிகவும் கெட்டிக்காரனாகவும் தந்திரக்காரனாகவும் இருந்தான்.அதைப் புரிந்து கொண்ட காலதத்தன் அருகே இருந்த குத்துவிளக்கைத் தன் காலால் இடறுவது போல் போக்குக் காட்டி விளக்கைக் கீழே தள்ளி அணைத்து அறையை முற்றிலும் இருட்டாக்கி விட்டான்.

எங்கும் இருள் படர்ந்தது. அவ்வளவு பெரிய சத்திரத்தில் ஒளி கொடுத்துக் கொண்டிருந்த ஒரே விளக்கு அணைந்ததும் தடுமாறிய வீரர் தலைவனைப் பிடித்துத் தள்ளினான் காலதத்தன். வல்லபனின் கைகளைப் பற்றி இழுத்த வண்ணம் சத்திரத்து வாயிலை நோக்கி ஓடினான். கீழே விழுந்த வீரர் தலைவன் செய்வதறியாது திகைத்தாலும் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு கதவருகில் காவலாக நின்றிருந்த கணபதி என்னும் வீரனைக் கதவைத் திறக்க விடாமல் பார்த்துக்கொள்ளும்படியும் இருவரையும் பிடிக்கும்படியும் ஆணையிட்டான். கணபதி என்ற அந்த வீரன் தன் வாளை வெகு வேகமாகச் சுழற்றினான். அதற்குள்ளாகத் தலைவன் எழுந்து கொண்டு தன் வாளை அங்கும் இங்குமாகச் சுழற்றிக்கொண்டு கூடத்தில் அங்குமிங்கும் ஓடி இளைஞர்களைத் தேடினான். எவரும் கிடைக்காமல் சோர்ந்து போனவன் வெளியே வெளிச்சத்தில் இருக்கும் காவலனை அழைத்துச் சுளுந்து கொளுத்திக் கொண்டு வரும்படி ஆணை இட்டான். 

வெளியே இருந்தவன் தன் கைகளில் வன்னிக்கட்டையை எடுத்துக் கொண்டு கடைந்து நெருப்பை உண்டாக்க ஆரம்பித்தான். ஐப்பசி மாத மழை நாள் என்பதால் அந்தக் கட்டை எளிதில் தீப்பொறியை உண்டாக்கவில்லை. ஆகவே ஊருக்குள் சென்று யார் வீட்டிலானும் நெருப்பை வாங்கி வரலாம்னு அந்தக் காவலன் ஓடினான். இதற்குள்ளாகத் தடுமாறித் தடுமாறி வெளியே வந்திருந்த வீரர் தலைவன் அந்த இளைஞர்களை உடனே இங்கே வந்துவிடுங்கள். கொன்றுவிடுகிறேன் உங்களை என்றெல்லாம் கத்த ஆரம்பித்தான். இங்கே வல்லபனும் தத்தனும் கூடியவரை மூச்சுக்காற்றுக் கூட வெளிவராமல் நடந்தனர். வாயில் கதவருகே ஒருவருக்கு இருவர் இப்போது நிற்பதால் அந்த வழியே வெளியேறுவது ஆபத்து என்பது புரிந்து விட்டது. ஆகவே புழக்கடைப்பக்கம் சென்றால் அங்கே வெளியேறும் கதவு ஏதேனும் இருக்கும் என்னும் எண்ணத்துடன் பின்புறம் செல்லும் வழியைக் குறி வைத்து நடந்தார்கள். ஆனால் அவர்கள் நடக்க நடக்க வழி நீண்டுகொண்டே போனது. எங்கே போனாலும் கும்மிருட்டுத் தான்! வெளிச்சக்கீற்றே காண முடியவில்லை.எந்தத் திசையில் செல்கிறார்கள் என்பதையும் அவர்களால் அனுமானிக்க முடியவில்லை. 

சீக்கிரம் ஏதேனும் செய்தால் தான் அந்த வீரர் தலைவன் பிடியிலிருந்து தப்பிக்கலாம். ஆகவே மெல்ல மெல்ல நகர்ந்து சுவரைக் கண்டு பிடித்து அதைத் துழாவிக் கொண்டு சென்றனர். சுவர் நடுவே ஓர் இடைவெளி காணப்படவே அதன் வழியே இருவரும் வெளியேறினார்கள். ஆனால் அது போகும் இடம் புரியவில்லை.  இது என்ன தாழ்வாரமா? அருகே எங்கானும் அறைகள் இருக்குமா? ஒன்றுமே புரியவில்லை.  கொஞ்ச தூரத்தில் சுவர் இரண்டாகப் பிரிந்தது. இருவரும் தயங்கி நின்றார்கள்.  இருவரும் அவசரமாக ஆலோசனை செய்து விட்டு நூறு எண்ணிக் கொண்டே ஆளுக்கு ஒரு திசையில் செல்ல வேண்டும் எனவும், மறுபடி நூறு எண்ணும்போது திரும்பி இதே இடத்துக்கு இருவரும் வர வேண்டும் எனவும் பேசிக் கொண்டார்கள்.  நூறு எண்ணிக் கொண்டே இருவரும் தத்தம் திசைகளில் சென்றனர்.  வல்லபன் சென்ற திசையில் அவன் தொண்ணூற்று எட்டு எண்ணும்போது அவன் நாசியில் மகிழம்பூ மணத்தது. அவன் மனம் சிலிர்த்தது. கூண்டு வண்டியில் இருந்த இளம்பெண்ணிடம் கூட இந்த வாசனை தானே வந்தது என நினைத்தான். அதற்குள்ளாக அவனுக்கு எண்ணிக்கை விட்டுப் போய் விட்டது.

குனிந்து கீழே தடவிப் பார்த்தால் கைகளில் இரும்புச் சங்கிலி நெருடியது. அதைத் தடவிய வண்ணம் போனான். சங்கிலியின் கண்ணிகள் மேலே மேலே போய்க் கொண்டிருந்தன. அதைத் தடவிய வண்ணம் அவன் கீழே ஊர்ந்தான். முடிவில் அவன் கைகளில் மிக மிக மிருதுவான தாமரைப் பூவின் ஸ்பரிசம் பட்டது. ஆனால் என்ன ஆச்சரியம்! அந்தத் தாமரை வாய் திறந்து பேசியது! "யாரது?" என மெல்லிய சீறலாகக் கேட்டது அந்தக் குரல். வல்லபன் மறுமொழி சொல்ல ஆரம்பிக்கையில் கூடத்தில் ஏதேதோ சப்தங்கள்! கதவு திறக்கும் சப்தங்கள், காலடி ஓசைகள்! திடீரென சத்திரம் பிரகாசமாக ஒளிர்ந்தது.அறைகள் அனைத்திலும் பளீரென வெளிச்சம் பரவிப் பாய்ந்தன. ஓர் வீரன் கையில் ஓர் சுளுந்தைத் தூக்கிக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்து விட்டான்.

Tuesday, July 02, 2019

காரிகை பாடலும் காலதத்தன் புரிதலும்!

அடுத்தடுத்து இரு பாடல்களைப் பாடினாள் அந்தப் பெண். அந்த இரண்டுமே நம்மாழ்வாரின் பாசுரங்கள்.  "குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்!" என அவள் பாடி முடித்ததும் நீண்ட பெருமூச்சு விட்டான் வல்லபன். சற்று நேரம் வரை அவள் குரல் அங்கேயே ரீங்காரம் இட்ட வண்ணம் இருந்தாற்போல் தோன்றியது அவனுக்கு.  தன்னை மறந்து நின்ற அவனைத் தோளில் கைவைத்து உலுக்கி நினைவுக்குக் கொண்டு வந்தான் காலதத்தன். வல்லபன் பரவசத்தில் ஆழ்ந்திருந்தான். ஆகவே தத்தனிடம், "தத்தா, அந்தப் பெண்ணின் குரல் இனிமையைக் கேட்டாயா? எத்தனை அழகாய்ப் பண்ணமைத்துப் பாடினாள்! பார்த்தாய் அல்லவா? பாடலைக் கேட்டாய் அல்லவா?" என்று மிகவும் மகிழ்ச்சியுடன் வினவினான். தத்தனோ அவனைப் பார்த்துக் கடும் பார்வையால் விழித்தான். அவன் காதோடு நெருங்கி, "வல்லபா! பாசுரங்களின் பொருளை உணர்ந்தாயா? பாடலின் இனிமையை மட்டும் ரசித்தாயா? முதலில் பாசுரங்களின் உட்பொருளை என்னவென்று உணர்ந்து கொள்!" என்றான்.

வல்லபனுக்கு ஏதும் புரியவில்லை. "தூதுரைத்தல் செப்புமின்கள்! தூமொழிவாய் வண்டினங்காள்!" என்னும் அடியை அவள் எத்தனை முறை பாடினாள் என்பதைக் கவனித்தாயா?" என்றான் காலதத்தன். "ஆஹா! கவனித்தேன்! அதனால் என்ன! எத்தனை அழகாய்ப் பாடினாள்! என்ன இனிமை! என்ன அழகு!" என்று ரசித்தான் வல்லபன். தத்தன் அவனைப் பார்த்து மீண்டும் விழித்தான். "வல்லபா! வல்லபா! அந்தப் பெண் மீண்டும் மீண்டும் அதே அடிகளைப் பாடியதன் காரணம் இன்னமுமா உனக்குப் புரியவில்லை! அந்தக் குரலில் அழுகை கலந்த விண்ணப்பம் உனக்குத் தெரியவில்லையா?" என்று கேட்டான். "அழுகையா?" என்று வியப்புடன் தத்தனைப் பார்த்தான் வல்லபன். "ஆம்! வல்லபா! அந்தப் பெண் இந்தக் குறிப்பிட்ட பாசுரத்தை அதிலும் இந்தக் குறிப்பிட்ட அடிகளை மீண்டும், மீண்டும் பாடியதன் மூலம் நம்மிருவருக்கும் விண்ணப்பம் வைத்திருக்கிறாள்!" என்றான்.

வல்லபன் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தான். "விண்ணப்பமா? என்ன விண்ணப்பம்?" என்று கேட்டான். "தூதுரைத்தல் செப்புமின்! என்றாள் அல்லவா? நம்மை அவளுக்காக தூது போகச் சொல்லுகிறாள்!" என்றான் தத்தன். வல்லபன் ஆச்சரியம் எல்லை மீறியது!"தூது போக வேண்டுமா? நாமா? எங்கு? யாரிடம்?" எனக் கேட்க, தத்தன், "என்னாலும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இரண்டாவது பாசுரத்தில் அதற்கான விடை இருக்கிறது. நுட்பமாக யோசித்துப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது அதற்கு நேரம் இல்லை. ஏனெனில் நாம் இங்கிருந்து உடனே புறப்பட்டு விடவேண்டும். ஏதோ மர்மமாக நடக்கிறது இங்கு. நாம் அதில் மாட்டிக்கொள்ள வேண்டாம். வல்லபா, கிளம்பு சீக்கிரமாய்!" என்றான் தத்தன்.

வல்லபன் மேலே பேச இடம் கொடுக்காமல் தத்தன் அவன் கையைப் பிடித்துக் கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு நடந்தான். இருவரும் வாயிலை நோக்கிச் செல்லுகையில், யாரோ, "தம்பிகளே!" என இருவரையும் கூப்பிடும் குரல் கேட்டது. இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கச் சத்திரத்துக்கு உள்ளே இருந்த குச்சு ஒன்றில் இருந்த அவர்கள் முன்னர் பார்த்த வீரர் தலைவன், அந்தக் கதவைத் திறந்து கொண்டு இருவரையும் பார்த்துச் சிரித்த வண்ணம் நின்றான். இளைஞர்கள் செய்வதறியாது திகைத்து நிற்க, "தம்பிகளே! நீங்கள் இருவரும் விருந்தினர்கள் அல்லவோ? உணவு அருந்தாமல் சற்று நேரமாவது களைப்பாறாமல் நீங்கள் இங்கிருந்து செல்ல முடியுமா?" என்று கேட்டுக் கொண்டு அவர்களை நெருங்க எங்கிருந்தோ வந்த இன்னொரு வீரன் அவர்களுக்குப் பின்னால் தெரிந்த வாயில் கதவை இழுத்து மூடித் தாளிட்டு விட்டுக் காவலாக நின்றும் கொண்டான்.

உள்ளூரக் கலக்கம் அடைந்தாலும் காலதத்தன் முகத்தில் அதைக் காட்டவில்லை. சிரிப்புடன் வீரர் தலைவனைப் பார்த்தான். "அடடா! நீங்கள் இங்கே தான் இன்னமும் இருக்கிறீர்களா? மிக நல்லதாய்ப் போயிற்று! இங்கே யாரையுமே காணோமே! ஏதேனும் பேய் வீடோ எனப் பயந்து விட்டோம்! ஒருத்தரையுமே இங்கே காணோமே! சத்திரத்தில் மடப்பள்ளி இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லையே! என்றெல்லாம் குழம்பி விட்டோம். சத்திரத்து மணியக்காரர் இருக்கிறாரா இங்கே? இங்கே கட்டளை போஜனம் கிடைக்குமா? அல்லது பணம் கொடுத்துத் தான் வாங்க வேண்டுமா? எதுவுமே தெரியவில்லையே?" என்று அடுக்கடுக்காய்க் கேள்விகளைக் கேட்டு வீரர் தலைவனைத் திணற அடித்தான் காலதத்தன். பிறகு வல்லபனையும் பார்த்து, "நான் சொன்னேன் அல்லவா? இங்கே எப்படியேனும் உணவு கிடைக்கும் என்று. சற்று இப்படி உட்கார்! சற்று நேரத்தில் பசியாறலாம்." என்று சொல்லியவண்ணம் வல்லபனை வலுக்கட்டாயமாகக் கீழே உட்கார்த்தினான். 

Friday, June 28, 2019

சாளரத்திலிருந்து கேட்ட கீதம்!

தத்தனுக்கு வல்லபனின் யோசனை பிடிக்கவே இல்லை. இதனால் சாதகங்களை விட பாதகங்களே அதிகம். அதோடு அவர்கள் போகவேண்டிய காரியம் தடைப்படும். அதல்லவோ முக்கியம். இது தான் தத்தனின் கருத்து. ஆனால் வல்லபனோஅந்தப் பெண்ணிற்காகப் போராட வேண்டும் என்றான். அவளை எப்படியேனும் மீட்டு விட வேண்டும் என்றும் துடிதுடித்தான். இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கையில் மேற்கே இருந்து பல குதிரைகள் வரும் சப்தம் கேட்டது. உடனே தத்தன் வல்லபனிடம், "வல்லபா! எது எப்படியோ அந்த வீரர் தலைவன் சொல்லிச் சென்றது சரியான செய்தி என நினைக்கிறேன். தன்னைத் தொடர்ந்து பெரும்படை வந்து கொண்டிருப்பதாகச் சொன்னான் அல்லவா? இதோ பார்! உற்றுக் கேள்! ஓர் குதிரைப்படையே வரும் சப்தம் கேட்கிறது!" என்றான். பின்னர் மேலே செல்வதை விடுத்து அங்கேயே தங்கிப் பார்க்கலாம் என இருவரும் சுற்றுலா செல்லும் யாத்திரிகர்கள் போல அங்கும் இங்குமாகப் பார்த்த வண்ணம் வழியோரமாக நின்றனர். சற்று நேரத்தில் சுமார் 20,30 பேர்கள் அடங்கிய ஓர் குதிரைப்படை அங்கே வந்தது. அவர்களைக் கண்டதும் அது நின்றது. கூட்டத்தலைவன் இளைஞர்களை உற்றுப் பார்த்தான்.

சற்று யோசித்துவிட்டுப் பின்னர், அவர்களிடம் அந்த  வழியாகக் கூண்டு வண்டி ஒன்றும் அதைக் காவல் காத்துக் கொண்டு நான்கைந்து வீரர்களும் போனதைக் கண்டது உண்டா என விசாரித்தான். வல்லபன் வாய் திறப்பதற்குள்ளாக தத்தன் அவனிடம் கூண்டு வண்டியையும் வீரர்களையும் கண்டதாகவும் அவர்கள்  அங்கிருந்து வடகிழக்கே ஒரு காத தூரத்தில் இருக்கும் அம்பலப்புரம் என்னும் ஊரில் உள்ள சத்திரத்தில் தங்கப் போவதாகப் பேசிக் கொண்டனர் என்றும் சொன்னான். மேலும் அந்த வீரர் தலைவன் அவர்களிடம் உங்களைப் பார்த்தால் அங்கே அனுப்பி வைக்கச் சொன்னதாகவும் சொன்னான். இதைக் கேட்ட குதிரைப்படைத் தலைவன் அம்பலப்புரம் செல்லும் வழியைக் கேட்க முதலில் கிழக்கே கொஞ்ச தூரம் போனபின்னர் வடக்கே செல்ல வேண்டும் என்று தத்தன்  சொன்னான். இவ்வாறு அந்தக் குதிரை வீரர்களை மாற்று வழியில் திருப்பி விட்டான் தத்தன். அவர்கள் சென்ற பின்னர் இதைக் குறித்து வல்லபனிடமும் சுட்டிக் காட்டினான்.

பின்னர் இருவரும் அங்கிருந்து ஓடுமானூர் நோக்கிப் பயணப்பட்டார்கள். இரவு முதல் ஜாமத்தின் போது அவர்கள் ஓடுமானூரை அடைந்தனர். அதற்குள்ளாக ஊரே அடங்கி ஓசை இன்றிக் காணப்பட்டது. தெருவிளக்குகள் கூட எரியவே இல்லை. தெருவின் ஓர் மூலையில் பழைய கோயில் ஒன்று இடிபாடுகளோடு காட்சி அளித்தது. அதைப் பார்த்த வல்லபன் உணர்ச்சி வசப்பட்டான். அவனை மெல்ல அடக்கிய தத்தன் தெருவிலோ அல்லது ஊரிலோ எந்தவிதமான சப்தங்களும் இன்றி நிசப்தமாக இருந்ததில் பெரும் சந்தேகம் கொண்டான். இருவரும் மௌனமாகச் சத்திரத்தை அடைந்தனர். சத்திரமும் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. 

சத்திரத்தின் கதவைத் தட்டிப் பார்த்தனர். முன் கதவு தானே திறந்து கொண்டது. அங்கே  காணப்பட்ட பெரிய கூடத்தின் நடுவே குத்துவிளக்கு எரிந்து கொண்டிருக்க அதன் ஒளி கூடம் பூராவும் பொன்னிறத்தில் பரவிக்காணப்பட்டது.  சத்திரம் பெரிய சத்திரம் என்பதால் கூடமும் அதற்கேற்பப் பெரிய கூடம்! இருவரும் சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம் சத்திரத்துக் காவலரை "ஐயா!" என அழைத்தனர். யாரும் வரவில்லை. அங்கும் இங்குமாகச் சுற்றிப் பார்த்தபோது வல்லபனின் கண்கள் அந்தக் கூடத்தின் ஓர் சாளரத்தருகே அந்தப் பெண் நிற்பதைக் கண்டன. அவளும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் என்பது அவள் பார்வையில் இருந்து புலனாகியது.

வல்லபன் கொஞ்சம் திகைப்புடன் சாளரத்தருகே போக யத்தனித்தபோது முன்னர் பார்த்த மூதாட்டியின் கையைப் போன்றதொரு வயதான பெண்ணின் கை அந்தச் சாளரத்தின் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டன. வல்லபன் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தான். மூடிய சாளரத்திற்குள் இருந்து தீஞ்சுவைக்குரலில் ஓர் அழகிய தமிழ்ப்பாடல் இன்னிசையுடன் கேட்க ஆரம்பித்தது. அந்தக் குரல் அந்த இளம்பெண்ணின் குரலாகத் தான் இருக்க வேண்டும் என வல்லபன் யூகித்தான். பாடலை உற்றுக் கேட்டவனுக்கு அது நம்மாழ்வாரின் பாசுரம் என்பது புரிந்தது.

Wednesday, June 26, 2019

வல்லபனின் தீர்மானம்! தத்தனின் அனுமானம்!

சற்று நிறுத்திய வல்லபன், ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். பின்னர் தொடர்ந்து, "தத்தா! அதோடு மட்டுமா? வருடம் தோறும் பற்பல உற்சவங்கள், திருவிழாக்கள், பண்டிகைகள் என்றெல்லாம் நடக்குமாமே! அவற்றில் கலந்து கொண்டு மக்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியோடு ஆடிப் பாடிக் கொண்டாடுவார்களாம்.  திருவிழாக்காலங்களில் அரங்கனின் அர்ச்சாவதாரம் , தத்தா, நாம் இன்னமும் அதைப் பார்த்ததே இல்லை அல்லவா? அந்த அர்ச்சாவதாரத்தை வீதிகளில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போவார்களாம். மக்கள் அந்த ஊர்வலத்தைத் தொடர்ந்து ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் செல்வார்களாம். வேதங்களாமே! நீ கேட்டிருக்கிறாயா தத்தா? வேதங்களை பிராமணர்கள் ஓதுவார்களாம். அவர்கள் எல்லோரும் இந்த ஊர்வலங்களில் வேதங்களை ஓதிக்கொண்டு செல்வார்களாமே! அதைத் தவிர்த்தும் பற்பல பிரபந்தங்களையும் பாடிக்கொண்டு போவார்களாம்! ஆழ்வார்களையும் எழுந்தருளப் பண்ணுவார்களாம். தத்தா! நானெல்லாம் ஆழ்வார்கள் எனப்  பெயர்களைக் கேட்டதோடு சரி! இதை எல்லாம் பார்க்க நமக்குக் கொடுத்து வைக்கவில்லையே!"

"தத்தா! என் தாய் சொல்லுவார்! சித்திரை மாதம் பிறப்பதையே பெரிய விழாவாகக் கொண்டாடுவார்களாம். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு திருவிழாவாம், பண்டிகையாம்! பெண்களுக்கு எனத் தனிப் பண்டிகையாக ஒன்பது நாட்கள் உண்டாம்! அந்த நாட்களில் மூன்று தேவியரையும் வழிபட்டுப் பூஜைகள் செய்து, பொம்மைகள் அடுக்கி மக்கள் விமரிசையாகக் கொண்டாடி வந்தனராம். இப்போது அவை எல்லாம் எங்கே போயின? அவ்வளவு ஏன்? எந்தக் கோயிலை இப்போதெல்லாம் தைரியமாகத் திறந்து வழிபாடுகள் செய்கின்றனர்! மிகக் குறைவே! கோயில்கள் எல்லாம் அழிந்து வருகின்றன தத்தா! திறப்பதே இல்லை! பாழடைந்து போய் சந்நிதிகளில் காணப்பட்ட விக்ரஹங்கள் போன இடம் தெரியாமல் கோபுரங்களிலும், கோயில் விமானங்களிலும் அரசும், ஆலும் முளைத்துக்கிடக்கின்றன. மதில்கள் அனைத்தும் உடைந்து விட்டன. அவற்றைக் கோர்த்த கல்வெட்டுக்கள் அனைத்தும் விழ ஆரம்பித்து விட்டன. திருக்குளங்களில் தண்ணீர் இல்லை. இருந்தால் இலைகளும், தூசியும் தும்புமாகக் கிடக்கின்றன. கோயிலில் வைத்திருந்த விக்ரஹங்கள் அனைத்தும் பூமியில் புதைக்கப்பட்டு விட்டன என்று ஒரு சாராரும், வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்று விட்டதாக இன்னொரு சாராரும் கூறுகின்றனரே!"

"தத்தா! நம் அரங்கன் அப்படித் தான் எங்கோ போய் விட்டானாம். அவனைக் கண்டு பிடித்து மீண்டும் திருவரங்கத்தில் பிரதிஷ்டை செய்யவே என் தந்தை தன் வாழ்நாளைக் கழித்து வந்தாராம். ஆனால் அவரால் இயலவில்லை. என் அன்னை அதற்குத் தான் என் தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றத் தான் என்னை அனுப்பி உள்ளார். தத்தா! நீ பார்த்திருக்கிறாயா? எந்தக் கோயிலிலாவது விக்ரஹங்களைப் பார்த்திருக்கிறாயா? கர்பகிரஹம் என்று சொல்லும் கருவறையில் திறந்து வைத்து மூலவர்கள் யாரையேனும் பார்த்திருக்கிறாயா?  நமக்கெனக் கோயில்கள் இருந்தும் இல்லாதவையாக இருக்கின்றனவே! எத்தனையோ பண்டிகைகளையும் கோயில் திருவிழாக்களையும் நம் முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்தியும் நாம் எவற்றையும் கொண்டாட முடியவில்லையே! இப்படிப்பட்ட ஓர் ஆட்சியில் நாம் மாட்டிக்கொண்டிருக்கிறோமே! வீட்டுக்குள்ளேயே ஒடுங்கி விட்டோம் நாம். நான்கு பேர் சேர்ந்து பேசக் கூட அஞ்சி அடங்கி ஒடுங்கி வாழ்ந்து வருகிறோமே!கல்வி பயிலவும் தடை, வேதங்கள் ஓதவும் தடை! பற்பல கலைகளைத் தெரிந்து வைத்திருந்தும் அவற்றைக் கற்பதற்கும் தடை! நாற்பது வருடங்களாக இப்படி இருந்து வருகிறதே! நல்லதொரு தலைவன் இருந்திருந்தால் நம்மை இப்படி விட்டு வைத்திருக்க மாட்டான்! தத்தா! என் மனம் பதைக்கிறது!" என்றான் வல்லபன்.

வல்லபனின் நீண்ட சொற்பொழிவைக் கேட்ட தத்தன் சாவகாசமாக, "வல்லபா, ஏதோ புது விஷயத்தைச் சொல்லி விட்டாற்போல் அல்லவா நினைத்துக்கொள்கிறாய்! இவை எல்லாம் எனக்குத் தெரியாதா? அனைவருமே அறிந்த ஒன்று தானே! உனக்கு ஏன் இத்தனை படபடப்பு?" என்றான் கேலியாக.  வல்லபன் துயரம் மேலோங்க, "நம்மிடையே இன்னமும் ஓர் நாயகன் தோன்றவில்லையே தத்தா!" என்றான் அழும் குரலில். அதற்கு தத்தன், " ஏன் பிறக்கவில்லை? தோன்றி இருக்கிறார்கள். இனியும் தோன்றுவார்கள். நம் காலத்துக்கு முன்னே வீர வல்லாளர் என்னும் ஹொய்சள மன்னர் இவர்களை எதிர்த்து நிற்கவில்லையா? அவரைத் தான் சதியால் கொன்றுவிட்டனர்! என்ன செய்ய முடியும்! அவரைப் போல் யாரேனும் தோன்றுவார்கள்! யார் கண்டனர்! இத்தனை வருடங்களில் தோன்றி இருக்கலாம்! தக்க சமயத்துக்குக் காத்திருக்கலாம்!" என்றான் தத்தன். ஆனால் வல்லபனோ இதனாலெல்லாம் தன் நெஞ்சு ஆறப்போவதில்லை என்றும் அவன் மனம் இன்னமும் இதை எல்லாம் நினைத்துப் பதைப்பதாகவும் தானே ஏதேனும் செய்தாக வேண்டும் என்னும் முடிவில் இருப்பதாகவும் கூறினான்.

"வல்லபா! நீயா? நீ மட்டும் தனித்தா? நானும் உனக்கு உதவுவேன்! ஆனால் எப்படி? நம்மால் என்ன செய்ய முடியும்?" என்று தத்தன் கேட்டான். "தீமைகளை நாம் தட்டிக் கேட்க வேண்டாமா?" என்று வல்லபன் கேட்க, அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைப் புரிந்து கொண்ட தத்தன், "அப்படியா! மேலே சொல்!" என்றான் புன்னகையுடன். வல்லபன் அதற்கு, "இதோ பார் தத்தா! நம் கண்ணெதிரே ஓர் இளம்பெண்ணை, அதுவும் அரசகுலப் பெண் என நீ சொல்கிறாய்! அந்தப் பெண்ணைப் பலர் கடத்தியோ கைது செய்தோ அழைத்துச் செல்கின்றனர். இதைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருக்கலாமா? அவர்களோடு போரிட்டு அந்தப் பெண்ணை விடுவிக்க வேண்டாமா?" என்றான்.

"வல்லபா! உனக்கு என்ன பைத்தியமா? நாம் செல்லப் போவது மிக முக்கியமான காரியத்தை முன்னிட்டு! சற்று முன்னர் நீயே உன் வாயால் சொன்னாய்! உன் தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை! ஆகவே நாம் அரங்கன் இருக்குமிடத்தைத் தான் தேடிச் செல்லவேண்டும். ஒரு பெண்ணின் பின்னால் அல்ல!" என்று தீர்மானமாக தத்தன் கூறினான்.  மேலும் தொடர்ந்து, "நீ செல்ல வேண்டிய வழி என்னவென்று தெரிந்திருந்தும் உன் வழியில் பிறழாதே!" என வல்லபனுக்கு நினைவூட்டினான். அதற்கு வல்லபன், "ஆம்! நீ சொல்வது சரியே! என் வழியில் நான் பிறழவில்லை. ஆனால் அரங்கனை நான் கண்டு பிடித்தால் மட்டும் போதுமா? மீண்டும் திருவரங்கத்தில் கொண்டு சேர்ப்பித்து மறுபடி எல்லா ஆராதனைகளும் திருவிழாக்களும் அரங்கனுக்கு முறைப்படி நடக்கச் செய்ய வேண்டாமா?" என்றான். பின்னர் தொடர்ந்து, "அதற்கு நாம் இருவர் மட்டும் போதாது! தத்தா! இந்த நாடே நம் பின்னால் நிற்க வேண்டும். அரங்கனைத் திருவரங்கத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்னும் ஆவலில் நாட்டில் உள்ள நல்லோர் அனைவரும் ஒன்று சேரத் திரள வேண்டும் தத்தா! இல்லை எனில் நமக்கு ஆன்மிக பலமும் இருக்காது. மக்கள் பலமும் இருக்காது!" என்றான்.

"அதற்கு?" என தத்தன் கேட்க, "அதற்குத் தான் சொல்கிறேன். கண்ணில் பட்ட இந்தத் தீமையை நாம் தட்டிக் கேட்டே ஆகவேண்டும். இப்படியான தீமைகள் அழிக்கப்படுகிறது. அதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என மக்களுக்குத் தெரிந்தால் நம்பக்கம் அனைவரும் ஒன்று சேர்வார்கள்!"என்றான் வல்லபன். தத்தன் யோசனையுடன், "உன் எண்ணம் என்ன, வல்லபா! அந்தப் பெண்ணை எப்படியானும் காப்பாற்றியே ஆக வேண்டும்! அது தானே!" என்று கேட்க வல்லபன், "ஆம்!" என ஒற்றை வரியில் சொன்னான்! தத்தன் அதற்கு, "ஏற்கெனவே வழியில் பிறழாதே! என்று எச்சரித்து விட்டேன். இப்போது சொல்கிறேன் கேள்! விழியில் பிறழாதே!" என மறுபடி எச்சரித்தான் தத்தன். வல்லபன் வெறுப்புடன் அவனைப் பார்த்தான். " நான் அவள் விழியில் எல்லாம் பிறழவில்லை. அந்தப் பெண்ணின் அழகோ, அவள் விழிகளின் அழகோ என்னைப் பிறழ வைக்கவில்லை!" என்று ஆவேசத்துடன் சொல்ல, தத்தன், "எப்படியாயினும் அந்தப் பெண்ணின் விஷயத்தில் நாம் குறுக்கிடுவது ஆபத்து!" என்று மீண்டும் எச்சரித்தான். வலுவில் சென்று ஆபத்தை வரவழைத்துக்கொள்வது நல்லதல்ல என்றும் சொன்னான். தீமையான ஒரு விஷயத்தைத் தடுப்பது வலுவில் சென்று ஆபத்தை வரவழைத்துக் கொள்வது ஆகாது என வல்லபன் தீர்மானமாகக் கூறினான். தத்தன் யோசனையில் ஆழ்ந்தான்.

Tuesday, June 25, 2019

வல்லபனின் வருத்தம்!

"அதெல்லாம் சரி காலதத்தா! பாறை மேல் நாம் ஏறிக்கொண்டதால் என்ன பலன்?" என்று வல்லபன் கேட்டான். வருகிறவன் நம்மைக் கண்காணிக்கும் எதிரியாக வருகிறானா? அல்லது சிநேகித பாவத்தில் வருகிறானா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதனால் தான் ஏறிக்கொள்ளலாம் என்றேன். திடீரென அவன் நம்மேல் வாளை வீசி விட்டால்? இருவரையும் ஒரே வீச்சில் மேல் உலகுக்கு அனுப்பி விட்டால்? இந்தப் பாறையைப் பார்த்தாய் அல்லவா? நாம் இருவரும் ஒடுங்கிக் கொண்டு அல்லவோ இருந்தோம்? மூன்றாம் நபர் இதன் மேல் ஏறி வந்து நம்மைத் தக்க முடியாது. அவர்கள் ஏறுவதற்குள் நாம் எச்சரிக்கை அடைந்து விடுவோம் அல்லவா!" என்றான் காலதத்தன். "அவன் ஏன் நம்மைக் கொல்ல வேண்டும்?" என்று கேட்டான் வல்லபன். "வல்லபா! நீ அந்தக் கூண்டு வண்டியைப் பார்த்தாய் அல்லவா? அதன் உள்ளே இருந்த இளம்பெண்ணையும் பார்த்தாயா?" என்று கேட்டான் தத்தன். "பார்த்தேன், அதற்கு என்ன?" என்றான் வல்லபன். காலதத்தன் அதற்குக் கொஞ்சம் குரலைத் தாழ்த்திய வண்ணம் மெதுவாக, "அந்தப் பெண் அரசகுலத்துப் பெண். அநேகமாக ஓர் இளவரசியாக இருக்க வேண்டும்." என்றான்.

"எப்படிச் சொல்கிறாய்?" என்று காலதத்தனைப் பார்த்து வல்லபன் கேட்க, காலதத்தன், "அவள் முகத்தைப் பார்த்தாயா? வட்டவடிவான சந்திரனை ஒத்து இருந்தது. செவ்வரி ஓடிய நீண்ட கண்கள். புருவங்கள் ஒன்றோடு ஒன்று சேராமல் வில்லைப் போல் வளைந்து ஓர் கீற்றாகக் காணப்பட்டது. உதடுகள் பவளம் போல் சிவந்திருந்தன. நெற்றியைப் பார்த்தாயா? மூன்று விரல் அளவுக்கே நெற்றி இருக்கும்போல! கரிய நீண்ட கூந்தல். பருத்த புஜங்களோடு சிறுத்த இடை! அவற்றில் அநேஎகமாக மடிப்புக்கள் இருக்க வேண்டும். இந்த சாமுத்ரிகா லக்ஷணப்படி அவள் அரச குலத்துப் பெண்ணாகவே இருக்க வேண்டும். " என்று முடித்தான் கால தத்தன்.

"நீ அனுமானிப்பது தானே காலதத்தா!" என்று வல்லபன் கேட்க, காலதத்தன், "இல்லை, வல்லபா! இது அரசகுலப் பெண்டிருக்கான லக்ஷணங்கள். இந்தப் பெண்ணைக் கைது செய்து பிடித்துக் கொண்டு போவது நமக்குத் தெரிந்து விட்டது. நமக்குத் தெரிந்து விட்டதே என அந்த வீரர் தலைவனின் மனதில் குடைச்சல் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். இதனால் ஏதேனும் விபரீதம் நிகழலாம், அல்லது நாம் சும்மா இருக்க மாட்டோம் என்றெல்லாம் அவர்கள் எண்ணி இருக்கலாம். அதனால் நம்மைக் கொல்வதற்கெனக் கூட இங்கே அந்த வீரர் தலைவன் வந்திருக்கலாம். உண்மையில் அந்தப் பெண் யார், ஏன் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள் என்பதெல்லாம் நமக்கு ஏதும் தெரியாது! ஆனால் அதை அவர்கள் அறிய மாட்டார்கள் அல்லவா? அதான் முன் ஜாக்கிரதையாக நம்மை வந்து உளவு பார்த்துச் செல்கின்றனர்." என்றான் காலதத்தன்.

வல்லபன் யோசனையோடு தத்தனிடம் அந்தப் பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவளாக இருப்பாள் எனவும் ஏன் அவளைக் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்கின்றனர் என்றும் யூகம் செய்ய முடிகிறதா எனக் கேட்டான். தத்தனோ தென்னாடு முழுவதுமே சரியான தலைவன் இல்லாமல் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறதே! நாற்பது வருடங்கள் ஆகிவிட்டன, தென்னாடு தலைவனின்றித் தவிக்கிறது.  இதில் யார் இந்தப் பெண் என்பதையும் அவளை ஏன் கடத்திக் கொண்டு போகிறார்கள் என்பதையும் நாம் என்ன கண்டோம்! அல்லது அவளைச் சிறைப்படுத்திக் கொண்டு போனாலும் நமக்கு என்ன புரியும்? எப்படியோ போகட்டும் வல்லபா! நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு மேற்கொண்டு பயணத்தைத் தொடரலாம்!" என்று சொல்லிக் கொண்டே தத்தன் பாறையிலிருந்து கீழே குதிக்க முயன்று அது முடியாமல் மௌனமாக இறங்கத் தொடங்கினான். அவனைப் பின் தொடர்ந்து இறங்கிய வல்லபன் கீழே இறங்கியதும் அப்படியே யோசித்த வண்ணம் நின்றான்.

காலதத்தன் அவனை மேலே நடக்கச் சொல்லி வற்புறுத்தினான். இருள் முழுவதும் கவிந்து விட்டது.  காற்றோ குறையவே இல்லை. விண்ணில் மேகக்கூட்டங்கள் மாபெரும் மலைகள் போல் காட்சி அளித்த வண்ணம் வேகமாகப் போய்க் கொண்டிருந்தன. அவற்றின் கருமையால் ஏற்கெனவே கவிந்து கொண்டிருக்கும் இருள் இன்னமும் கருமையைப் பூசிக் கொண்டது.  இந்த மழைக்காலத்தில் மையிருட்டில் வழி கண்டுபிடித்துப் போகவேண்டுமே என்னும் கவலை தத்தனுக்கு ஏற்பட்டது. வல்லபனை துரிதப்படுத்தினான். ஆனால் வல்லபனோ, தற்சமயம் தென்னாடு தலைவனின்றித் தவிப்பதாக தத்தன் கூறிய வார்த்தைகளை மனதில் போட்டு அவற்றையே நினைத்துக் கொண்டிருந்தான். அதை தத்தனிடமும் கூறினான். நாற்பது வருடங்கள் என்பது எத்தனை நீண்ட காலம்! ஒரு பரம்பரையே முற்றிலும் அழிந்து பட்டிருக்கிறது. இப்போது முற்றிலும் புதிய பரம்பரை! இதற்கு முந்தைய பரம்பரை குறித்த எந்தத் தகவல்களும் சரியாகத் தெரியாது. இத்தகைய புதிய பரம்பரையிலே நாம் தோன்றி இருக்கிறோமே! நம் காலத்திலும் அமைதி என்பதை நாம் இதுவரை பார்க்கவே இல்லையே என்றெல்லாம் வல்லபன் கேட்டான்.

ஒரு காலத்தில் இந்தத் தென்னாடு முழுவதும் சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப்பட்டதாம் நீதி நேர்மை, அமைதி போன்றவை இருந்ததாம். அரசர்கள் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனராம். கடைசியாகப் பாண்டியர்கள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பெரிய சாம்ராஜ்யத்தையே ஆண்டனராம். பின்னர் அவர்களுக்குள் வந்த வாரிசுச் சண்டையில் சாம்ராஜ்யமே அழிந்து விட்டதாமே! என்ன கொடுமை இது! இருந்த வரைக்கும் அவர்கள் எல்லா சமயங்களையும் ஆதரித்துப் போற்றிப் பாதுகாத்து மக்களையும் நல்வழியில் ஆண்டு வந்தனராம். பற்பல கோயில்களையும் எழுப்பினார்களாம். இவைகளைப் பற்றி எல்லாம் செவிவழியாக நாம் கேள்விப் படுகிறோம். ஆனால் இப்போதே அப்படியான ஓர் அரசனைக் கூட நம்மால் பார்க்க முடியவில்லையே! கோயில்களில் ஆறு கால வழிபாடுகள், திருவிழாக்கள் நடக்குமாம். இப்போதோ! பெரும்பாலான கோயில்கள் மூடியே கிடக்கின்றனவே. திருவிழா என்றால் என்ன? நம்மால் பார்க்கவே முடிவதில்லயே!

Sunday, June 23, 2019

வீரர் தலைவனுக்கு வந்த சந்தேகம்!

இளைஞர்கள் இருவருமே கையில் விலங்கிடப்பட்ட பெண்ணைப் பார்த்துவிட்டார்கள். யாராக இருக்கும்? துணைக்குச் செல்லும் பெண்மணி யார்? எங்கே செல்கின்றனர்? என்னும் கேள்விகள் இருவர் மனதையும் துளைத்து எடுத்தது. ஆனாலும் அந்த வீரர்கள் எதிரே இருவரும் எதையும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளவில்லை.  வண்டியின் மீதே அவர்கள் பார்வை இருந்தது.  கண்ணுக்கு வண்டி மறையும்வரை பார்த்துவிட்டு வல்லபன் கீழே குனிந்து தான் தூக்கி வந்த மூட்டையை எடுத்துத் தோளில் சாய்த்துக் கொண்டான். வல்லபனைப் பார்த்துக் காலதத்தனும் தன் மூட்டையை எடுத்துக் கொண்டான். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மௌனமாகவே பயணம் செய்தார்கள். காலதத்தனின் தாழங்குடை மறுபடியும் காற்றில் பறக்க முயற்சிப்பதும் காலதத்தன் பெரு முயற்சி செய்து அதை அடக்குவதுமாக இருந்தது. இருவர் மனதிலும் இனம் தெரியாத கலக்கம். மௌனமாக நடந்தவர்கள் சாலையின் ஓர் மேட்டில் ஏறியதும் காலதத்தன் நின்று வல்லபனைப் பார்த்தான்.

"வல்லபா! அந்தப் பாறை மேலே சீக்கிரம் ஏறு! அவசரம்!" என்று கூறிக்கொண்டே தான் அவசரமாக அந்தப் பாறையில் ஏற முனைந்தான். வல்லபனும் விரைந்து வந்தான். அங்கே ஓர் பெரிய மருதமரம். அதன் அடியில் சின்ன யானைக்குட்டி போல் காணப்பட்டது ஓர் கரிய பாறை. அதன் மேல் காலதத்தன் ஏறி நிற்க வல்லபனும் ஏறினான். மழைக்காலம் ஆதலால் மழையின் காரணமாகப் பாசி படிந்திருந்த அந்தப் பாறை ஏறுவதற்குள் வல்லபனுக்கு வழுக்கியது. என்றாலும் சமாளித்துக் கொண்டு ஏறி மேலே நிற்கும் காலதத்தன் அருகில் வந்தான். இருவரும் நெருங்கி அமர்ந்து கொண்டனர். காலதத்தன் வல்லபனைப் பார்த்து, "அதோ  பார்!" என ஓர் திக்கைச் சுட்டிக் காட்டினான். வல்லபன் அங்கே பார்த்து, "என்ன அது!" என்று வினவினான். தூரத்தில் காற்று விர்ரென்று சுழன்று அடித்துக் கொண்டிருக்க அது கிளப்பி விட்டிருந்த தூசுப் படலத்தில் சற்று முன் சென்ற கூண்டு வண்டியின் பாதுகாப்புக்குச் சென்ற வீரர்களின் தலைவன் திரும்ப நம் இளைஞர்களைச் சந்தித்த இடத்துக்கு வந்து கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த இளைஞர்கள் எதற்கும் தயாராகத் தங்கள் வாள், கத்தி போன்றவற்றைச் சரிபார்த்துக் கொண்டு எந்நேரமும் எடுத்துப் பயன்படுத்தத் தயாராக இருந்தார்கள். தங்கள் மூட்டைகளுக்குள் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்துக் கொண்டு அதன் கைப்பிடியில் தங்கள் கைகளை வைத்த வண்ணம் எந்த நேரமானாலும் வாளை உருவிக்கொண்டு போரிடத் தயாராக ஆனார்கள்.  வீரர் தலைவன் வரும்போது முதலில் வேகமாக வந்தவன் இளைஞர்கள் இருக்கலாமோ என்னும் இடம் வந்ததும் நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு சுற்றும், முற்றும் பார்த்த வண்ணம் மெதுவாக வந்தான். அவன் சுற்றிச் சுற்றித் தேடியதைப் பார்த்தால் அவர்களைத் தான் தேடுகிறானோ என இருவருக்கும் தோன்றியது. மிக மிக உன்னிப்புடன் கவனித்துக் கொண்டு வந்தவன் இளைஞர்கள் அமர்ந்திருந்த பெரும்பாறையின் அடிக்கு வந்து விட்டான். அந்தப் பாறையைச் சுற்றிச் சுற்றி அவர்களைத் தேடினான் போலும்! இளைஞர்களும் அவனையே கவனித்த வண்ணம் இருந்தார்கள்.

சற்று நேரம் இப்படி அந்த வீரனை அலைய வைத்தபின்னர் காலதத்தன் மேலே அமர்ந்த வண்ணமே தன் கைகளைத் தட்டி அந்த வீரர் தலைவனை அழைத்தான்.திடுக்கிட்ட வீரர் தலைவன் அங்குமிங்கும் சுற்றிலும் பார்த்து யாரையும் காணாமல் திகைத்தவன் ஒரு வழியாகப் பாறையின் மேல் அமர்ந்திருந்த இரு இளைஞர்களையும் பார்த்துவிட்டான். அங்கே இருந்த வண்ணம் அவர்கள் தன்னை அழைத்தது அவனுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. ஆகவே முதலில் கோபத்தைக் காட்டி அவர்களைப் பார்த்தவன் திடீரென ஏதோ நினைத்தவன் போல் முகத்தில் மந்தகாசம் காட்டினான். "என்னடா தம்பிகளா? நீங்கள் இருவரும் மனித குலம் தானா? அல்லது கிஷ்கிந்தை வாசிகளா?" என நகைச்சுவையாகக் குறிப்பிடுவது போல் சொல்லி வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சிரித்தான்.

அவனை மிக நுட்பமாகக் கவனித்த காலதத்தனும் அவன் சொல்வதை ஆமோதிப்பவன் போல் தலையை ஆட்டினான். "ஐயா, தெற்கே தானே இலங்கை இருக்கிறது! ஆகவே கிஷ்கிந்தை இங்கே தான் இருந்திருக்கும்! இங்கே இருந்தே கிஷ்கிந்தாவாசிகள் இலங்கைக்குப் போயிருக்கலாம்!" என்று வாசாலகமாகப் பேசினான். சேவகர்களின் தலைவன் தான் அந்தப் பேச்சைக் கேட்டுப் பாராட்டிச் சிரிப்பதைப் போல் பாவனை செய்தான். பின்னர் குதிரையைத் தடவிக் கொடுத்துக் கொண்டான். மீண்டும் அவர்களைப் பார்த்து, "ஏனடா தம்பிகளா? இந்தப் பாறை மேல் ஏறி அமர்ந்து விட்டீர்கள்? நீங்கள் இருவரும் ஓடுமானூர் சத்திரம் வந்து தங்கப் போவதில்லையா?" என்றும் கேட்டான். காலதத்தன் இன்னும் இருட்டிய பின்னர் வருவதாகச் சொன்னான். தற்போது இங்கே இருக்கும் காற்றும் பூந்தூற்றலாகப் பொழியும் மழையும் அவர்கள் மனதைக் கவர்ந்து விட்டதால் அதை அனுபவித்துக்கொண்டு அங்கே உட்கார்ந்திருப்பதாய்ச் சொன்னான். இரவுக்குள் ஓடுமானூர் வந்துவிடுவோம் என்றான்.

உடனே வீரர் தலைவன் அவர்களைப் பார்த்து அப்படியானால் என்னுடைய வீரர்கள் பலரும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்த இடத்துக்கு வந்ததும் ஓடுமானூருக்குச் செல்லும் வழியை அவர்களுக்குக் காட்டி அனுப்பி வையுங்கள் என்றும் கேட்டுக் கொண்டான். காலதத்தன் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொள்ள வீரர் தலைவன் அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் அங்கிருந்து கிளம்பி ஓடுமானூர் நோக்கிச் சென்றான். வல்லபன் இதெல்லாம் என்ன, தனக்கு ஒன்றும் புரியவில்லையே என்று கேட்டவன் ஏதோ மூடுமந்திரமாகவும் இருப்பதாகச் சொன்னான். அதைக் கேட்ட காலதத்தன்.வல்லபனிடம் தாங்கள் இருவரும் அப்போது பேராபத்திலிருந்து தப்பி இருப்பதாகச் சொன்னான். வல்லபன் திடுக்கிட்டான். என்ன விஷயம், என்ன ஆயிற்று, ஏன் காலதத்தன் இவ்வாறு சொல்கிறான் என்றெல்லாம் வல்லபன் கேட்க அதற்குக் காலதத்தன் வல்லபனிடம் சொன்னான்.

"வல்லபா! இந்த வீரர் தலைவன் திரும்பி வந்தது நம்மை யார் என்றும் என்னவென்றும் பார்த்து அறிவதற்காகவே! நாம் எப்படியோ அவனிடமிருந்து தப்பி விட்டோம்!" என்று சொன்னான் காலதத்தன். அதைக் கேட்ட வல்லபன் திகைத்து நிற்க, " ஆம், வல்லபா!கூண்டு வண்டி கிளம்பிச் செல்லும்போதே அவன் நம்மைப் பார்த்த பார்வையில் சந்தேகம் தெரிந்தது. ஆகவே அவன் நாம் பின் தொடருகிறோமா எனப் பார்த்துக் காத்துக் கொண்டிருந்துவிட்டு நாம் வரவில்லை எனில் நம்மைத் தேடி வருவான் என யூகித்தேன். அப்படியே நடந்தது!" என்றான் காலதத்தன்.

Friday, June 21, 2019

வண்டிக்குள் இளம்பெண்!

அதற்குள்ளாகக் காலதத்தன் அரைக்காத தூரத்தில் ஓடுமானூரில் சத்திரம் ஒன்று இருப்பதாகவும் அங்கே தான் தாங்களும் செல்வதாகவும் சொன்னான். அரைக்காதமா என யோசித்தான் அந்த வீரர் தலைவன். பின்னர் வண்டிக்காரன் வண்டியைக் கிளப்பவும் மற்ற வீரர்கள் கிளம்ப அவர்களுடன் அவனும் கிளம்பினான். வண்டிக்குள்ளிருந்து மகிழம்பூவின் வாசனை அங்கே பரவி நிறைந்தது. அந்தச் சமயம் பார்த்து வாயு பகவான் தன் வேலையைக் காட்டினார். பெருங்காற்று மிக வேகமாகப் புறப்பட்டு அந்தச் சாலையையும் மரங்களையும் மறைத்த வண்ணம் புழுதியைக் கிளப்பிக் கொண்டு போக சேவகர்கள் தலையில் கட்டி இருந்த தலைப்பாகைகள் காற்றின் வேகத்தில் அடித்துக் கொண்டு போய் விட்டன. தலைப்பாகையைப் பிடிக்க வேண்டி வீரர்கள் குதிரையில் இருந்து குதித்தனர்.

அந்தச் சமயம் பார்த்து நாற்புறமும் நெருக்கமாக அடைத்திருந்த வண்டியின் திரைச்சீலைகள் காற்றின் வேகத்தைத்ஹ் தாங்க முடியாமல் பொத்துக் கொண்டு திறந்து கொண்டு விட்டன. திரும்பிப் பார்த்த ராஜவல்லபனின் கண்களில் கூண்டு வண்டிக்குள் அமர்ந்திருந்த ஓர் இளம்பெண் தெரிந்தாள்.  மிக அழகிய அந்தப் பெண்ணின் பரந்து விரிந்திருந்த கண்கள் மட்டும் சோகம் ததும்பியதாய்க் காணப்பட்டன. காரணம் புரியாத அந்த சோகம், அதன் தாக்கம் ராஜவல்லபனிடமும் ஏற்பட்டது. திரைச்சீலைகள் திறந்து கொண்ட வேகத்தில் தலை நிமிர்ந்த அந்தப் பெண் அரைக்கண நேரம் வல்லபனைப் பார்த்திருப்பாள். அதற்குள்ளாக வீரர்கள் தலைவன் பதறிக்கொண்டு ஓடி வந்து திரைச்சீலைகளை மூடுவதற்கு ஆணையிட்டுக் கொண்டே ஒரு பக்கத் திரைச்சீலைகளை இழுத்துப் பிடித்துத் தானே நெருக்கமாக மூடவும் செய்தான்.

அப்போது அந்தப் பெண்ணானவள் தன் முகத்தில் காற்றினால் வந்து பரவிய தூசியைத் துடைப்பவள் போல் தன் கைகளைத் தூக்கி முகத்தைத் துடைக்க முற்பட அவள் கைகளில் பூட்டப்பட்டிருந்த கைவிலங்குகளை வல்லபன் கண்டு அதிர்ச்சி அடைந்தான். இத்தனை அழகிய இளம்பெண்ணின் கைகள் விலங்கால் ஏன் பூட்டப்பட்டிருக்க வேண்டும்? யார் இந்தப் பெண்! எங்கே செல்கிறாள்? இவளுக்கு விலங்கு பூட்டியவர் யார்? என்ன காரணத்தால் விலங்கு பூட்டப்பட்டிருக்கிறாள்? இவற்றை எல்லாம் வல்லபன் யோசிக்கும்போதே வீரர் தலைவன் திரைச்சீலைகளை இழுத்துக் கட்டிக் கொண்டிருந்தான். அப்போது தான் அந்தப் பெண் வண்டிக்குள் தனியாக இருக்கவில்லை என்பதும் நடுத்தர வயதுள்ள ஓர் பெண்மணி வீரர் தலைவனுக்கு உதவியாக திரைச்சீலைகளை இழுத்துக் கட்ட உதவியதையும் வல்லபன் கண்டான்.

அந்தப் பெண்ணிற்கு நாற்பது வயது இருக்கலாம். அவளும் வீரர் தலைவனுடன் சேர்ந்து திரைச்சீலைகளை இழுத்துக் கட்டி உதவி செய்தாள். ஆனாலும் காற்று அப்போதும் நிற்கவில்லை. "உய்"யென்ற சப்தத்துடன் ஓங்கி வீச ஆரம்பித்தது. ஆங்காங்கிருந்த மரங்கள் காற்றின் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டு பெரும் சப்தங்களை எழுப்பின. அரசமரம் ஒன்று "விர், விர்" என சப்தித்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாகத் திரைச்சீலைகளை இழுத்துக் கட்டின வீரர் தலைவன் ஒரு பெருமூச்சுடன் தன் அங்கிகளையும் நன்கு சுருக்கிக் கட்டியவண்ணம் அங்கே நின்றிருந்த காலதத்தனையும் வல்லபனையும் பார்த்து முறைத்தான்.  பின்னர் அதே கோபத்தோடு வண்டியை மேலே ஆக்ஞை இட்டான். வண்டியும் புறப்பட்டது.  வண்டி மேட்டிலும் பள்ளத்திலும் இறங்கிச் சென்றதால் பல்லக்குக் குலுங்குவது போல் வண்டியும் குலுங்கியது.  வண்டியின் மணி ஓசை வெகு தூரத்துக்குக் கேட்டுக் கொண்டிருந்தது.

Thursday, June 20, 2019

வண்டிக்குள் யார்?

மக்கள் பயத்தின் காரணமாகப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்திருப்பார்கள் எனப் பேசிக் கொண்டனர் இருவரும். ஆனாலும் வயதின் காரணமாகவும் புதிய இடங்களைப் பார்க்கும் ஆவலினாலும் இருவரும் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் பயணம் மேற்கொண்டனர். சிறிது தூரம் சென்றதும் தாகம் எடுக்கவே இருவரும் அங்கே காணப்பட்ட ஓர் ஓடை அருகே அமர்ந்து கொண்டு நிதானமாகத் தாகம் தணித்துக் கொண்டனர். வல்லபன் அப்போது நண்பனிடம் தன் தாய் ஊரை விட்டு ஒரு காத தூரம் சென்றதும் பார்க்கும்படி சொல்லி ஓர் ஓலைச்சுருளைக் கொடுத்திருப்பதாய்க் கூறினான். அந்த ஓலைச் சுருளை நண்பனிடம் காட்டவும் செய்தான். ஒரு காதத்துக்கும் மேல் தாங்கள் வந்து விட்டதால் ஓலைச்சுருளைப் பிரித்துப் படிக்கலாம் என இருவரும் முடிவு செய்தனர். அதன்மேல் ஓலைச்சுருளைப் பிரித்தனர். அதில் மஞ்சள் தடவி இருந்தது. அதில் கீழ்க்கண்டவாறு எழுதி இருந்தது.

"வல்லபனுக்கு ஆசிகள். மங்களம் உண்டாகட்டும். உன் தயார் உன்னை ஆசீர்வதித்துச் சொல்லுவது என்னவெனில் "வல்லபா! மொழியில் பிறழாதே! வழியில் பிறழாதே! விழியில் பிறழாதே!" என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு கணம் இருவருக்கும் எதுவும் புரியவில்லை.

பின்னர் வல்லபனுக்குச் சிரிப்பு வர, அவன் நண்பன் காலதத்தன் அதை வாங்கிக் கொண்டு மீண்டும் படித்தான். வல்லபனைப் பார்த்து, "வல்லபா, இதில் சிரிக்க ஏதும் இல்லை. அறிவில் சிறந்த உன் தாய் ஆழப் பொதிந்திருக்கும் கருத்துக்களைக் கொண்டு இதைச் சுருக்கமாக எழுதி இருக்கிறார். இதன் மூலம் உன் வருங்காலத்துக்குப் பல உதவிகள் ஏற்படலாம். நீ எதற்கும் கவனமாக இருக்க வேண்டும். இந்த அறிவுரைகளை நீ கவனத்துடன் பின்பற்ற வேண்டும்."


என்றான்.

அப்போது வல்லபன், தானும் தன் தாயை மதிப்பதாகவும், அவள் அறிவுரைகளை ஏற்பதாகவும் கூறினான். மேலும் அவன் கூறியதாவது அவன் தாய் இன்னமும் அவனைச் சின்னஞ்சிறு சிறுவனாகவே எண்ணி வருகிறார் என்று கூறினான். அவர் ஏற்கெனவே தக்க பாதுகாப்பு இல்லாமல் என்னை வெளியே அனுப்ப யோசனை செய்வார். இப்போது மட்டும் நீ இல்லை எனில் நான் இந்தப் பயணமே மேற்கொண்டிருக்க முடியாது!" என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தான். இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர்.

இரண்டாம் நாளும் பயணத்திலேயே சென்றது. அன்றைய தினம் இருவரும் பல காத தூரங்களை வெகு வேகமாகக் கடந்திருந்தனர். அதனால் காலதத்தனுக்குச் சோர்வு ஏற்பட்டிருந்ததோடு காலில் நோவும் கண்டிருந்தது. ஆகவே அவன் சற்று இளைப்பாறிவிட்டுச் செல்வோம் என வல்லபனிடம் சொன்னான். அதன் மேல் இருவரும் சாலையோரத்தில் இருந்த பெரியதொரு மர நிழலில் அமர்ந்து கொண்டு தங்கள் மூட்டைகளைப் பிரித்து அதில் இருந்து சத்துமாவு போன்றதொரு உணவை எடுத்து உண்டனர். பின்னர் இரவு எங்கே தஙுவது என்பது குறித்துப் பேசிக் கொண்டு அருகில் உள்ள  ஓடுமானூர் என்னும் ஊரில் உள்ள சத்திரத்தில் தங்கிச் செல்லலாம் என முடிவு செய்து கொண்டனர். வல்லபன் ஆச்சரியத்தோடு இதை எல்லாம் காலதத்தன் நினைவு வைத்திருப்பதைப் பற்றிக் கேட்க, கால தத்தன் தான் தன் தந்தையோடு இவ்வழியில் பலமுறை பயணம் செய்திருப்பதாய்க் கூறினான். காஞ்சிக்கும் திருப்பதி-திருமலைக்கும் கூடச் சென்று வந்திருப்பதாய்ச் சொன்னான்.

அப்போது அடித்த காற்றில் பறந்த தாழங்குடையைப் பிடிக்க வேண்டி எழுந்த காலதத்தன் கொஞ்ச தூரம் ஓடிப் போய்த் தான் அதைப் பிடிக்க வேண்டி இருந்தது. அது பாட்டுக்குக் காற்றோடு அதன் திசையில் போக காலதத்தன் ஓடோடிப் போய்ப் பிடித்தான். அப்போது சாலையில் ஏதேதோ அரவங்கள் கேட்க தன்னெதிரே விரிந்த சாலையைத் தலையைத் தூக்கிப் பார்த்தான் காலதத்தன். உடனே அவன் கண்கள் விரிந்தன. முகத்தில் கலவரம் பதிவாயிற்று. வல்லபன் பக்கம் ஓடி வந்து சேவகர்கள் சிலர் வருவதாகவும் யாருடைய சேவகர்கள் என்றே சொல்லமுடியவில்லை எனவும் கூறிக்கொண்டு சாலையை விட்டு அகன்று ஓரம் நோக்கி ஓடினான். வல்லபனையும் வரச் சொன்னான். அவன் காட்டிய திசையில் பார்த்த வல்லபன், யாராக இருக்கும் என வாய்விட்டுக் கேட்டுக் கொண்டே யோசித்தான்.

காலதத்தன் அதற்கு," நாட்டில் இப்போது நிரந்தரமாக எந்த அரசனும் ஆட்சி செய்ய முடியாமல் இருக்கையில் யாருடைய சேவகர்கள் என நாம் எப்படிக் கூற முடியும். இவர்கள் நம் நண்பர்களா, எதிரிகளா என்பதை எல்லாமும் நாம் அறிய மாட்டோம். ஆகவே நாம் இவர்களை நேருக்கு நேர் சந்திக்காமல் தவிர்ப்பதே நல்லது! சீக்கிரம் வா! எங்கானும் ஒளிந்து கொள்ளலாம்!" என வல்லபனை அழைத்தான். உடனே கீழே கிடந்த தங்கள் மூட்டைகளையும் எடுத்துக் கொண்டே ஒளிந்து கொள்ளலாம் என அவற்றை எடுக்கப் போன வல்லபன் மீண்டும் சாலையை நோக்கினான். அவன் கண்களுக்குப் பின்னால் ஓர் கூண்டு வண்டியும் வருவது தெரிந்தது. உடனே காலதத்தனிடம் சேவர்கள் புடைசூழக் கூண்டு வண்டி ஒன்று வருவதைச் சொன்னான். காலதத்தனுக்கும் இப்போது வல்லபனின் ஆவல் தொற்றிக்கொண்டது போலும்! ஒளிய வேண்டும் என்னும் பரபரப்புக் குறைந்து விட்டது அவனிடம். யாரெனப் பார்க்கலாம் என நினைத்தாற்போல் இரு இளைஞர்களும் அங்கேயே நின்று விட்டனர்.

வண்டி அவர்களை நோக்கி வந்தது. முன்னால் சேவகர்களும் பாதுகாப்புக் கொடுத்த வண்ணம் வந்தார்கள். வண்டியின் "டிங்க்! டிங்க்" என்னும் மணி ஓசை அந்த நிசப்தமான நேரத்தில் பேரோசையாகக் கேட்டது. கம்பீரமான இரு காளைகள் நீண்ட கொம்புகளுடன் காணப்பட்டவை அந்த வண்டியை இழுத்துக் கொண்டு சற்றே பெரு நடையில் வந்தன. அவற்றின் நெற்றியில் வெண் சங்கால் அலங்கரிக்கப்பட்டுக் காட்சி அளித்தது. கழுத்தில் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் பட்டு நூலால் ஆன மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது.  வண்டிக்கூட்டின் மேலேயோ பெரிய தாமரைப்பூ வரையப் பட்டிருந்த துணியால் போர்த்தப்பட்டிருந்தது. வண்டியின் கைப்பிடிகள் அனைத்தும் நன்றாகத் துடைக்கப்பட்டுப் பளபளவெனக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. வண்டியின் முன்னே ஓட்டுபவருக்குப் பின்னால் வண்டியின் உள்ளே அமர்ந்திருப்பவர்  தெரியா வண்ணம் பட்டுத் திரைச்சீலை இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. வண்டியில் இருந்து இறங்கும் இடத்தில் பார்க்கலாம் எனில் அங்கேயும் ஓர் பட்டுத் திரைச்சீலை இழுத்துக் கட்டப்பட்டு உள்ளே இருப்பவர் யாராக இருக்கும் என யூகங்களைக் கிளப்பி விட்டிருந்தது.

சேவகர்கள் வண்டியின் முன்னும், பின்னும் மட்டும் இல்லாமல் இரு பக்கவாட்டுக்களிலும் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டு வந்தனர். எல்லோர் கைகளிலும் வேல்கள் நுனி தீட்டப்பட்டு பளபளத்துக் கொண்டிருந்தன.  இளைஞர்களைப் பார்த்ததும் வண்டி அங்கேயே நின்று விட்டது. சேவகர்களில் ஒருவன் வல்லபனைப் பார்த்து அருகே ஏதேனும் பெரிய ஊரோ அல்லது சத்திரமோ இரவு தங்கிச் செல்லும்படி இருக்கிறதா எனக் கேட்டான். வல்லபன் அவனை நிமிர்ந்து பார்த்தான்!

Monday, June 17, 2019

வல்லபன் கிளம்பினான்!

வாசந்திகா மகனைப் பார்த்துக் கண்ணீர் பெருக்கினாள். அவனிடம், "மகனே! எந்தத் தாயும் கேட்கக் கூடாத ஒன்றை உன்னிடம் கேட்கப் போகிறேன். ஆனால் அது இந்த நாட்டின் உன்னதமானதொரு லட்சியத்தை நிறைவேற்றத் தான் கேட்கப் போகிறேன். இவ்வலவு வருடங்களாக என்னுடைய கண்காணிப்பில் வளர்ந்த நீ இப்போது தன்னந்தனியாக நாட்டுக்குள் சென்று பல்வேறு விதமான அனுபவங்களையும் பெறப் போகிறாய்! அனைத்தும் புதுமையாக இருக்கும் உனக்கு! அந்த அனுபவங்களில் சில உனக்கு சோதனைகளைத் தரலாம். சங்கடங்கள் ஏற்படலாம். நீ என்னென்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் நான் சொல்லி அனுப்பினாலும் அதையும் மீறிச் சில நிகழ்வுகள் ஏற்படலாம். நீ அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்."

"மகனே! உன் தந்தை மேற்கொண்டிருந்த மாபெரும் லட்சியம் குறித்து உன்னிடம் பலமுறை பேசி விட்டேன். அதை நிறைவேற்றுவது ஒன்றே உன் முதல் கடமை! அதை நினைவில் வைத்துக்கொள்! அதற்கு இடையூறாக ஏதேனும் நிகழ்ந்தால் நீ அதில் சம்பந்தப்படக் கூடாது! மகனே! தெளிவாகவே சொல்கிறேன். நீ செல்லும் வழியில் பல்வேறு இளம்பெண்களைப் பார்க்கலாம். அவர்களின் உன் மனதைக் கவரும்படியான பெண் இருக்கலாம். அவளைத் திருமணம் செய்து கொண்டால் என்ன என்னும் எண்ணம் உன்னிடம் உதிக்கலாம். மகனே! உன் தந்தை கொண்ட லட்சியம் நிறைவேறும் வரையிலும் நீ அத்தகையதொரு எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதே! பெண்ணாசை உன்னைப் பெரும் குழியில் தள்ளிவிடும். உன் லட்சியத்திலிருந்து நீ பிறழ்ந்து நடக்க வழி செய்து விடும். உன் தந்தையோடு நானும் கொண்ட இந்தக் கனவு! அரங்கனை மீண்டும் திருவரங்கம் கொண்டு சேர்க்கும் மாபெரும் லட்சியம்! இது நிறைவேறும்வரை நீ வேறு ஏதும் ஆசாபாசங்களுக்கு இடம் கொடுக்காமல் உன் மனதை உறுதியாகக் கல்லைப் போல் திடமாக வைத்துக்கொள்! இந்த உறுதிமொழியை நீ எனக்குக் கொடு!" என்று சொல்லிய வண்ணம் தன் வலக்கையை வல்லபனுக்கு எதிரே நீட்டினாள் வாசந்திகா.

வல்லபன் நிமிர்ந்து தாயைப் பார்த்தான். அவன் கண்களில் வீரமும் அதனால் விளைந்த பெருமிதமும் தலை தூக்கி நின்றன. தன் தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டு," இவ்வளவு தானா அம்மா! இத்தகையதொரு காரியத்தைச் செய்ய நான் மறுப்பேனா? உங்கள் கனவு, லட்சியம் நிறைவேறும்வரை நான் திருமணம் பற்றி நினைக்கக் கூட மாட்டேன்! இது சத்தியம்!" என்று கூறினான். பின்னர் கீழே விழுந்து அவளை நமஸ்கரித்து எழுந்தான். மகனைக் கட்டி அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தாள் வாசந்திகா. பின்னர் வெற்றி உண்டாகட்டும் என்று அவனை வாழ்த்தினாள். அப்போது அங்கு வாசலில் வந்து நின்றான் கையில் தாழங்குடையுடன் ஓர் வாலிபன். எப்போதும்  முறுவல் பூத்த முகத்தோடு காணப்பட்ட அவன் வல்லபனின் பிராயத்துக்கு ஒத்தவனாக இருந்தான். அவனைப் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதி அடைந்த வாசந்திகா, அவனிடம், "காலதத்தா! எல்லா விபரங்களையும் வல்லபனிடமும் சொல்லி இருக்கிறேன். இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல் வெகு ஜாக்கிரதையாகச் செல்லுங்கள்! உங்களுக்குக் கொடுத்த வேலையை நல்லபடியாக முடித்துக் கொண்டு திரும்ப வேண்டும்." என்றாள்.

காலதத்தன் அவள் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டதற்கு அறிகுறியாக அவளைப் பார்த்து அதே முறுவலைச் சிந்தினான். பின்னர் வாயிலில் நன் நிமித்தங்கள் தென்படுகிறதா எனப் பார்த்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள். வாசந்திகாவின் கண்களில் இருபது வருடங்கள் முன்னர் குலசேகரன் அரங்கனைக் காப்பாற்ற வேண்டிக் கிளம்பிச் சென்ற காட்சி கண் முன்னே விரிய இப்போது தன் மகனாவது அரங்கனைத் திரும்பக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமே என்னும் கவலையில் மூழ்கிய வண்ணம் அந்த வீட்டின் வாசற்படியில் இருந்த தூண்களில் ஒன்றில் சாய்ந்த வண்ணம் தூணோடு தூணாகக் கண்ணீர் பெருக்கிய வண்ணம் சிலையாகச் சமைந்தாள்.

இங்கே இளைஞர்கள் இருவரும் பேச்சும் சிரிப்புமாகப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஊரைக் கடந்து ஊரின் கோயில் விமானத்தைத் தரிசித்துக் கொண்டு மரங்களுக்கு இடையே அமைந்திருந்த பாட்டையில் நடக்கத்துவங்கினார்கள். கிழக்கே செல்லும் ராஜபாட்டை அது. அந்தச் சமயத்தில் அந்த ராஜபாட்டையில் ஜன நடமாட்டமோ, வாகனங்களோ செல்லவில்லை. ஓரளவுக்கு அமைதியாகவே இருந்தது. இதைக் கண்டு இருவருக்கும் கொஞ்சம் ஆச்சரியம் ஏற்பட்டது.  எப்போதும் ஜனநடமாட்டம் அதிகமாகக் காணப்படும் அந்தச் சாலையில் இப்போது நடமாட்டமே இல்லாமல் வெறிச்சென்று காணப்பட்டது இருவருக்கும் மனதை உறுத்தியது. காரணம் என்னவாக இருக்கும் என்று பேசிக் கொண்டார்கள்.