எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, December 29, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா!


திருக்கைலை மலை. ஐயனும் அன்னையும் தனிமையில். ஐயன் அன்னைக்குப் பிரணவப்பொருள் உரைக்க அன்னையோ விளையாட்டாக இறைவன் கண்களைப் பொத்த, அகில உலகமும் நிலை தடுமாறுகிறது. சூரிய, சந்திரர்களாக இருகண்களும், நெற்றிக்கண் அக்னியாகவும் விளங்கியவற்றைப்பொத்தவும் எங்கும் இருள் சூழ்ந்தது. அஞ்சிய அம்பிகை தன் கைகளை எடுக்க உலகில் மீண்டும் ஒளி பிறந்தது. ஜோதி வடிவான ஈசனைத் தான் மறைத்ததுதான் காரணம் எனப் புரிந்துகொண்டாள் அன்னை. அந்த ஒரு கணம் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் காரணம் தெரியாமல் துன்பத்தில் ஆழ்ந்தன. ஆகையால் அன்னையைப் பாவம் சூழ்ந்துகொள்ள ஈசனை வேண்டினாள்.

பூவுலகம் சென்று அங்கே தம்மை மணலால் லிங்கமாய்ப் பிடித்து வைத்து வழிபடச் சொன்னார் ஐயன். அன்னையும் காஞ்சீபுரம் வந்து மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டுத் தவமும் புரிந்தாள். அன்னையின் தவத்தைக் கலைக்கச் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போக அன்னைக்கு அருள் வழங்கினார் ஈசன். மேலும் திருவண்ணாமலைக்கும் வந்து தவம் இயற்றினால் தம் இடப்பாகத்தைப் பெறலாம் எனவும் கூறினார். ஆகையால் அன்னை அங்கே வந்து ஈசனின் திருவுருவமாகிய லிங்கத்தை அங்கிருந்த நதிக்கரையில் எழுந்தருளச் செய்து வழிபட்டாள். கார்த்திகை மாதம் பரணி நக்ஷத்திரம் கூடிய தினத்தில் ஐயனை ஜோதிவடிவாய்க் கண்டாள். மலையின் மேலும் ஜோதியாய்த் தெரிய ஐயனை வேண்டித் துதித்து அவரின் இடப்பாகத்தைப் பெற்றாள். முதலில் மலைமேல் தீபம் ஏற்றியது அன்னைதான் என்று ஒரு ஐதீகம். மேலும் இடப்பாகம் அடையவேண்டி இறைவன் மலையாக அமர்ந்திருக்கையில் அதைச் சுற்றித் தலைமேல் கைகூப்பியவண்ணம் அன்னை வலம் வந்ததாயும், அதனாலேயே இன்றும் கிரிவலம் வந்தால் கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும் என்பதும் ஒரு கூற்று..

இந்த அர்த்த நாரீசுவரர் தோற்றம் இன்னொரு வகையாகவும் கூறப்படுகிறது. திருக்கைலை மலையில் ஐயனும் அன்னையும் அமர்ந்திருக்கையில் சிவனடியார்கள் அனைவரும் வந்து வணங்கிச் சென்றனர். ரிஷிகள் முனிவர்கள், தேவாதிதேவர்கள் வந்து வணங்குகின்றனர். அவர்களில் ஒருவர் பிருங்கி முனிவர். அந்த பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். ஐயனை மட்டுமே வணங்குவார். அன்னையை வணங்க மாட்டார். ஐயனும், அன்னையும் அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒரு ஈயின் உருவெடுத்துக்கொண்டு சென்று ஐயனை மட்டுமே வலம் வருவார். அன்னைக்கு இது கொஞ்சம் உறுத்தலாய் இருந்த்து. அவரிடம் தன்னையும் வணங்கச் சொல்ல, அவரோ மறுத்தார். உடனேயே அவர் உடலின் சக்தியையெல்லாம் நீக்கினாள் அன்னை. நிற்கக் கூட முடியாமல் உடலின் சக்தி அனைத்தும் போய் எலும்புக்கூடாக ஆனார் பிருங்கி முனிவர். அவருக்கு நிற்க ஒரு ஊன்றுகோலைக் கொடுத்தார் ஐயன். அப்படியும் பிடிவாதமாய் அவர் இருக்கவே அன்னை ஐயனை வேண்டிப் பிரார்த்திக்க உடலின் இடப்பாகத்தைப் பெற்றாள் என்பதும் ஒரு ஐதீகம்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலையில் சிறப்பாய்க் கொண்டாடப் படும். பதினேழு நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் கொடியேற்றத்தோடு முதல் திருவிழா ஆரம்பம் ஆகிறது. முதல் மூன்று நாட்கள் விநாயகர், ஸ்ரீபிடாரி, ஸ்ரீதுர்கை ஆகியோருக்காகக் கொண்டாடப் படுகின்றன. காலை, மாலை இரு வேளைகளிலும் பஞ்சமூர்த்திகளும் வீதி உலா வருகின்றனர். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வாகனத்தில் ஈசன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பத்தாம் நாள் அதிகாலை நான்கு மணி அளவில் மலைமேல் மலை தீபம் ஏற்றும் முன்னர் பரணி தீபம் போடப் படும். உலகத்து மக்கள் அனைவரும் நன்கு சீரோடும், சிறப்போடும் வாழப் பிரார்த்தித்துக்கொண்டு ஏற்றப் படும். அன்று மாலையே மஹா தீபம் ஏற்றப்படும். தீப தரிசன மண்டபத்தில் மக்கள் கூட்டம் குவிந்திருக்கப் பஞ்சமூர்த்திகளும் காத்திருக்க ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வரும் அர்த்தநாரீசுவரர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு வெளியே வந்து ஆடலோடு பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் காட்சி தர அந்தக் கணம் பஞ்சமூர்த்திகளுக்கு தீப ஆராதனை எடுக்கப் பட்டு மலை உச்சியில் மஹாதீபமும் ஏற்றப்படும். அனைவரும் அண்ணாமலைக்கு அரோஹரா என்னும் முழக்கம் விண்ணைத் தொடும்.

தொடரும்

Thursday, December 16, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா ! 5


சோணகிரி வலம் வருதல் பிறவி எனும்
பெருங்கடற்குத் தோணி ஆகும்
ஏழ்நரகக் குழி புகுதாது அரிய முத்தி
வழிக்கு ஏற ஏணி ஆகும்
காண் அரிய தவத்தினுக்கும் அறத்தினுக்கும்
அரும்பொருட்கும் காணி ஆகும்
வாள் நுதல் மின் இடத்திருக்கும் கண்ணுதலை
மனம் உருக்கும் மகிழ்ச்சியாகும்.”

என்னும் தலப் புராணப்பாடல் ஒன்று கிரிவல மகிமையைக் கூறுகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் கோயில்களையும் அஷ்டலிங்கங்களையும் பார்ப்போமா?? தேயு எனப்படும் அக்னியே இங்கே ஜ்யோதிர்லிங்க வடிவாகி ஸ்ரீசக்ர வடிவில் உள்ள இந்தப் பூவுலகின் உன்னதமான ஒப்பற்ற மேருவாக அருணாசலேஸ்வரர் என்ற பெயரில் விளங்குகிறார். இம்மலையை ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தால் சிவபதம் கிடைக்கும் எனவும், திங்கள்கிழமை வலம் வந்தால் இந்திரனைப் போன்ற சிறப்பான வாழ்க்கையும், செவ்வாய்க்கிழமை வலம் வந்தால் பிறவிப் பிணி நீங்கிவிடும் எனவும், புதன்கிழமை வலம் வந்தால் தேவர்களாகும் தகுதி கிடைக்கும் எனவும், வியாழனன்று வலம் வந்தால் மேலான பதவி சுகம் கிடைக்குமெனவும், வெள்ளியன்று வலம் வந்தால் விஷ்ணு பதவி கிடைக்குமெனவும், சனிக்கிழமை வலம் வந்தால் நவக்ரஹ தோஷங்களும் நிவர்த்தி அடையும் எனவும் புராணங்கள் கூறுகின்றன. இனி கிழக்குத் திசையில் உள்ள ஸ்ரீ இந்திர லிங்கத்தைப் பார்ப்போமா?


கிரிவலம் வரும்போது எந்த இடத்தில் ஆரம்பிக்கிறோம் என்பது நம் வசதியைப் பொறுத்தது என்றாலும் இப்போது எழுதும் வசதிக்காகக் கிழக்கே இருக்கும் இந்திரலிங்கத்தில் ஆரம்பிக்கிறேன். அறியாமை நீங்கவும், இருள் நீங்கவும், ஏன் அறியாமையே இருள் தானே? ஆகவே அவற்றை ஒழிக்க வஜ்ராயுதம் தாங்கிக் காட்சி அளிக்கிறார் இங்கே ஈசன். நாம் அறவழியில் செல்ல வேண்டி நம் வாழ்க்கைக்கே த்த்துவமான அறநெறியை அள்ளித்தருகிறார். இந்திரன் ஈசனை வணங்கி வழிபட்ட லிங்கம் என்று சொல்லப் படுகிறது.

அடுத்துத் தென் கிழக்குத் திசை. நீங்கள் கிழக்கே பார்த்து நின்றால் உங்கள் வலப்பக்கம் மூலையில் வரும். இது அக்னி மூலை எனப்படும். அக்னி அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான ஒன்று. வேள்வியில் மூட்டப்படும் அக்னிதேவன் ஏழுவகைப்படுவான் எனவும் ஏழு நாக்குகள் உண்டெனவும் கூறுவார்கள். நம் சார்பில் இறைவனிடம் வேண்டுதலை வைப்பவன் அக்னி பகவான். அக்னி ஒவ்வொரு யுகங்களிலும் மாறாமல் தொடர்ந்து வந்து இணைப்புச் சங்கிலியாய் இருக்கிறது. இங்கே அக்னி வழிபட்டதாய்க் கூறப்படுகிறது.

அடுத்துத் தென் திசை. ம்ருத்யு எனப்படும் மரணத் தெய்வம் ஆன யமனின் திசை. நம் மனதைப் பரிசுத்தப் படுத்தினால் மீண்டும் பிறவி ஏற்படாது. மாயையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் பிறவியும், மறுபிறவியும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். அத்தகையதொரு துன்பத்திலிருந்து காப்பவர் யமலிங்கம். ஆன்மாவைக் கண்டருள உதவி செய்வதோடு ஈசனோடு ஆன்மா இரண்டறக் கலக்கவும் உதவுவார்.

அடுத்துத் தென்மேற்குத் திசை. நாம் செய்யும் அனைத்துக் கெட்ட செயல்களிலிருந்தும் விடுதலை பெற இவரை வழிபட வேண்டும். ஸ்ரீநிருதிலிங்கமான இவரை வழிபட்டால் நம் பாவங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆத்மார்த்தமாக அமர்ந்து ஒரே முனைப்போடு இவரை வழிபட்டால் உள்ளத்தினுள்ளே ஜோதிமயமான தரிசனம் ஏற்படும் என ஞாநிகள் கூற்று. தென் திசையிலிருந்து மேற்கு நோக்கித் திரும்பும் மலைப்பாதையில் அமைந்துள்ளது ஸ்ரீநிருதி லிங்கம்.

ஸ்ரீவருணலிங்கம் இங்கே மேற்குத் திசையில் காட்சி அளிக்கிறார். நீரின்றி அமையாது உலகு என்பதற்கொப்ப இந்தப் பரந்த உலகில் மட்டுமல்லாது மூவுலகிலும் உள்ள நீருக்கெல்லாம் அதிபதியாக விளங்கும் இவர் வழிபட்ட இந்த ஸ்ரீ வருணலிங்கத்தை வழிபட்டால் நாடு செழிக்கும். நீர்நிலைகள் நிரம்பும், அனைவரையும் மகிழ்வோடு வாழ வைக்கும் ஸ்ரீவருணலிங்கத்தை வருணன் ஸ்தாபித்ததாய்க் கூறப்படுகிறது.

வடமேற்குத் திசையில் உள்ள ஸ்ரீவாயுலிங்கம் நம் ஜீவன் என்றே கூறலாம். காற்றில்லாமல் யாருக்கும் மூச்சு விடமுடியாது. காற்றுத் தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவனாய் விளங்குகிறது. காற்றில்லை எனில் இவ்வுலகம் இயங்குவது எவ்வாறு? காற்று கண்ணுக்குத் தெரியவில்லை எனினும் எங்கும் வியாபித்து இருக்கிறது. நிலைத்தும் இருக்கிறது. இயக்குவதும், இயங்குவதும் இவரே. நமக்கெல்லாம் சுவாசத்தை அளிக்கும் வாயுலிங்கத்தை ஸ்தாபித்தவர் வாயு என்று கூறுகின்றனர்.

அடுத்துக் குபேரதிசையான வடகிழக்கு மூலை. இங்கே ஈசான்ய லிங்கமும் குடி கொண்டிருக்கிறார். ஈசான்ய மூலை என்றும் கூறுவார்கள். குபேரன் ஈசனுக்கு நெருக்கமானவன். குபேரன் ஸ்தாபித்த இந்த லிங்கத்தை வழிபட்டால் செல்வத்துக்குக் குறைவிருக்காது என்று கூறுகின்றனர். ஈசான்யலிங்கமோ எனில் உடல் முழுதும் திருநீறணிந்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார். பூதகணங்கள் சூழ்ந்திருக்க முக்கண்ணோடும் ஜடாமுடியோடும், புலித்தோலில் அமர்ந்த வண்ணம் ஏழு ருத்ரர்களில் ஒருவராய்க் காட்சி தருகிறார் இவர். மலையே இங்கு ஈசன். ஈசனின் ஜோதி ஸ்வரூபமே மலை என்று முன்னரே பார்த்தோம். அத்தகைய மலையைச் சுற்றி அமைந்துள்ள இந்த அஷ்ட லிங்கங்களின் அமைப்பும் அந்த அந்த தேவர்கள் ஈசனை வழிபட்டதைக் குறிக்கிறது. ஸ்ரீவருண லிங்கத்தை அடுத்து உள்ள ஆதி அண்ணாமலையார் ஆலயத்தை மஹாவிஷ்ணு ஸ்தாபித்ததாய்க் கூறுகின்றனர். கார்த்திகை தீபத் திருநாளின் மூன்றாம் நாள் அருணாசலேஸ்வரர் இந்தக் கோயிலுக்கு வருவார் என்றும் மலையை அம்பிகையோடு சேர்ந்து அவரும் வலம் வருவார் என்றும் தெரிய வருகிறாது. அடுத்து நாம் காணப்போவது கார்த்திகை தீபச் சிறப்பும், ஈசனின் அர்த்த நாரீசுவரக் கோலத்தின் சிறப்பும்.

Saturday, December 11, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா! 4

உருவமும் உயிரு மாகி
ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான்
மற்றொரு மாடி லேனே.
4.63.3
612

பைம்பொனே பவளக் குன்றே
பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால்
யாதும்நான் நினைவி லேனே.

நாவுக்கரசர் தேவாரம்.


அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் கலங்கித் துன்பம் அடையும்போது ஆறுதலை அளிக்கும் ஆத்மாவாய்ச் சொல்லப் படுகிறது. புத்தியும், அகங்காரமும் பிரம்மனாயும், விஷ்ணுவாயும் செயல்பட்டு நம் உள்ளே ஒளிரும் உள்ளொளியைக் காண முடியாமல் அல்லல் படுகின்றனர். புத்தியிலே ஆணவம் அதிகம் ஆவதால் பிரம்மனால் காண முடியவில்லை. ஆனால் விஷ்ணுவோ சரணாகதி எனத் திருவடிகளைச் சரணடைவதால் அவருக்குக் காண முடியாவிட்டாலும் ஈசனின் அருள் கிடைக்கிறது.

நம் உள்ளத்தினுள்ளே இதயம் என்று நாம் சொல்வது, லப் டப் லப் டப் னு துடிச்சுக்குதே அது இல்லை ,நம் மார்பில் நட்ட நடுவில் ஒரு சின்னப் பொறியாக நம் கண்ணுக்கே தெரியாமல் சின்னத் துவாரமாக இருக்கிறது. மிக மிக சூக்ஷ்மமாகச் சின்ன துவாரத்தில் பொறியாக இருக்கும் அந்த அக்னி தான் நாம் நம்மை உணரும்போது ஆத்மதரிசனமாய்த் தெரிகிறது. இந்த உடலே நான் என்று நினைப்பதை அகற்றி உள்முக திருஷ்டியில் மனதைத் திருப்பி உள் ஒளியைக்காணுவதெ அருணாசல மலையின் சிகரத்தில் ஏற்றப்படும் ஜோதியின் தத்துவம் ஆகும். அதுவே ஜோதி தரிசனமும் ஆகும். பழங்காலத்தில் இறைவனை ஜோதி வடிவிலேயே வணங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் நாளா வட்டத்தில் ஞானமும், யோகமும் மங்கிப்போக இறைவன் என்ற ஒரு வடிவத்தை உண்டாக்கிக் கொண்டனர்.

இந்த அற்புதமான அருணாசல மலையே ஜோதி சொரூபம் என்கிறார்கள். இது தோன்றிய நாளாக மார்கழித் திருவாதிரை நன்னாளைச் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். இங்கே ஜோதி உருவில் தோன்றிய ஈசனை தேவாதி தேவர்களும், பிரம்மா, விஷ்ணுவும் வழிபட்டு வணங்கிய நாள் மாசி மகா சிவராத்திரி என்றும் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். அன்று தான் லிங்கோத்பவர் உற்பத்தி என்றும் கூறுவார்கள். இந்த மலையில் ஈசன் அருணகிரி யோகியாக ஒரு சித்தர் வடிவில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாயும் சகல ஐஸ்வரியங்களையும் கொண்டுள்ள அதிசய குகை இருப்பதாயும் அருணாசல மஹாத்மியம் கூறுகிறது.

இந்த மலையக்காணக் கூடிய எல்லையிலிருந்து தரிசித்தாலும், மனத்தினால் நினைத்தாலும் கூட முக்தியைக்கொடுக்கும் என்றும் அருணாசல மஹாத்மியம் கூறுகிறது. அழலுருவில் ஈசன் நிரந்தர வாசம் செய்வதால் இங்கே ஞாநிகளும், சித்தர்களும் வசிக்கிறார்கள். அதோடு பிறருக்குத் தீங்கு செய்வதை நினைக்கவும் முடியாது எவராலும். ஏனெனில் ஈசனின் கோபாக்னி அவர்களைத்தண்டிக்கும்.

தொடரும்.

படங்கள் உதவி: கூகிளார் நன்றி.

Monday, December 06, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா! 3

உருவமும் உயிரு மாகி
ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான்
மற்றொரு மாடி லேனே.
4.63.3
612

பைம்பொனே பவளக் குன்றே
பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால்
யாதும்நான் நினைவி லேனே.
4.63.4
613

பிறையணி முடியி னானே
பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார்
கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமர ரேத்தும்
அணியணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லா
லியாதுநான் நினைவி லேனே.

திருநாவுக்கரசர் தேவாரம்.இங்கே தான் அம்பிகை ஈசனிடம் சரிபாதி பெற்றதாயும் ஐதீகம். அது நடந்த குன்று என்று பவளக்குன்றைச் சொல்லுவார்கள். கிரிவலப் பாதையில் வரும் பவளக்குன்றைத் தவிர அங்கே வண்ணாத்தி குகை, அருட்பால் குகை, மாமரத்து குகை போன்ற பத்துக்கும் மேற்பட்ட குகைகளும் முலைப்பால் தீர்த்தம், பீம தீர்த்தம், பாத தீர்த்தம், அருட்பால் தீர்த்தம் போன்ற தீர்த்தங்களும், மயிலாடும்பாறை, ஆமைப் பாறை போன்றவைகளும் அல்லிச் சுனை, குமார சுனை, இடுக்குச் சுனை, புகுந்து குடிச்சான் சுனை போன்றவைகளும் உள்ளன. இவற்றில் இடுக்குச் சுனையில் நுழைய முடியாது என்றும் வலக்கையால் பாறை ஒன்றைப் பிடித்துக்கொண்டு இடக்கையால் நீரை அருந்தவேண்டும் என்றும் கூறுகின்றனர். இது தவிரவும் ஊமைச்சி குட்டை, அழகுக்குட்டை, கசபக்குட்டை, பண்டாரக் குட்டை, இலுப்பக் குட்டை ஆகிய குட்டைகளும் கிரிவலப் பாதையின் உண்டு.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரைத் தரிசனம் செய்த பின்னர் கிரிவலம் வந்தால் தான் வழிபாடு பூர்த்தி அடையும். ஒரு முறை கிரிவலம் செய்து பார்த்தாலே அதன் பலனைக் காண்போம் என ஸ்ரீரமண மஹரிஷி கூறுகிறார். கிரிவலத்தில் முதல் அடியில் உலகை வலம் வந்த பலன் கிடைக்கும் எனவும், இரண்டாம் அடியில் புண்ய தீர்த்தங்களில் நீராடிய பலனும், மூன்றாம் அடியில் அஸ்வமேத யாகப் பலனும், நான்காம் அடியில் அஷ்டாங்க யோகப் பலனும் கிடைக்கும். கிரிவல நியதிகள் குறித்து ஜனக மஹரிஷிக்கு பிரம்மா உபதேசித்துள்ளதாய்ப் புராணங்கள் மூலம் அறிகிறோம். கிரிவலப் பாதையில் எத்தனையோ ரிஷிகளும், முனிவர்களும், ஞாநிகளும் சூக்ஷ்ம சரீரத்துடன் வலம் வருவதால் கிரிவலப் பாதையில் மட்டுமின்றி ஊரிலேயே அநேகர் செருப்புப்போட்டுக்கொள்ளாமலே நடக்கின்றனர்.

முக்கியமாய் கிரிவலம் வரும்போது வேகமாய் நடக்காமல் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக் காலில் செருப்பின்றி, ஆண்கள் மேலாடை இல்லாமல், குடை போன்றவை பிடிக்காமல் சிவ சிந்தனை ஒன்றுடனேயே வேறு பேச்சு எதுவும்பேசாமல் நடக்கவேண்டும். கைகளை வீசிக்கொண்டோ முன்னால் செல்பவர்களை அவசரமாய்த் தாண்டிக்கொண்டோ செல்லாமல், இடப்பக்கமாகவே செல்லவேண்டும். வலப்பக்கம் தேவர்களும், சித்தர்களும் பல உருவங்களிலும் வருவார்கள். அங்கே கிரிவலம் வரும்போது கூடவே வரும் பசு, கோழி, நாய், பூனை போன்றவை கூட சித்தர்களாகவோ, முனிவர்களாகவோ, ரிஷிகளாகவோ இருக்கக் கூடும். ஆகவே அவர்களை விரட்டவோ, இடைஞ்சலோ செய்யாமல் அமைதி காத்துக்கொண்டு வரவேண்டும். வாகனங்கள் எதிலும் கிரிவலம் செய்யக் கூடாது. எங்கே ஆரம்பிக்கின்றோமோ அங்கேயே கிரிவலத்தை முடிக்கவேண்டும்.
பெளர்ணமி தினத்தின் பூரண சந்திரனின் கிரணங்கள் மலை மீது வளர்ந்திருக்கும் மூலிகைகளின் மேல் பட்டுப் பிரதிபலிக்கும்போது அவற்றிலிருந்து கிளம்பும் அபூர்வ சக்தியால் பக்தர்களின் உடல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். ஐப்பசி, கார்த்திகை இரு மாதங்களிலும் கிரிவலம் வருவதும் சிறப்பாகும். கிரிவலப் பாதையில் 360 தீர்த்தங்கள் இருப்பதாகவும், விநாயகருக்கு என 16 தனிக்கோயில்களும் ஆறுமுகனுக்கு என 7 சந்நிதிகளும் இருப்பதாய்ச் சொல்கின்றனர். கிரிவலப் பாதையிலேயே இடுக்குப் பிள்ளையார் கோயில் உள்ளது. அதற்கு மூன்று வாசல்கள் காணப்படுகிறது. முதலில் பின்வாசல் வழியாக நுழையவேண்டும், பின்னர் இரண்டாம் வாசலைக் கடந்து, முதல் வாசல் வழியே குனிந்து ஒருக்களித்தவாறு வெளியே வரவேண்டும்.

நாங்க முயற்சி செய்ய வில்லை. அவருக்குக் கழுத்து பிரச்னை. எனக்கு மொத்தமுமே பிரச்னை தான். அதனால் மத்தவங்களுக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம்னு இருந்துட்டோம். கூட வந்தவர்களில் ஒருத்தர் போயிட்டு வெளியே வர முடியாமல் தவிச்சு, எல்லாரும் தவிச்சோம். அப்புறமா விநாயகர் அருளால் எப்படியோ வந்துட்டார். கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலையார் கோயில் இருக்கிறது. இந்த லிங்கத்தைத் திருமால் ஸ்தாபிதம் செய்த்தாய்க் கூறுகின்றனர். கார்த்திகை தீபத்தின் போது இரண்டாம் நாள் விழா மற்றும் மூன்றாம் நாள் விழாவில் அருணாசலேசுவரர் இங்கு வருவாராம். அடி அண்ணாமலையாரைத் தவிர, காளியம்மன், துர்கை, அருட்பெருஞ்சோதி, மாரியம்மன், ஆஞ்சநேயர், பூதநாராயணர், இரட்டைப் பிள்ளையார், இடுக்குப் பிள்ளையார், வீரபத்திரர் கோயில், தக்ஷிணாமூர்த்தி கோயில்கள், துர்கையம்மன் கோயில், வடவீதி சுப்ரமணியர் கோயில், முனீஸ்வரர் கோயில், நவகிரஹக் கோயில் என ஏராளமான கோயில்கள் உள்ளன. எல்லாவற்றையும் தரிசித்துக் கிரிவலம் வருவதற்குச் சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேல் பிடிக்கும்.

இவற்றைத் தவிர, சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம், ஸ்ரீரமாணாஸ்ரமம், அண்ணாமலை சுவாமிகள் ஆஸ்ரமம், காட்டு சிவா ஆசிரமம், ஆலமரத்து ஆஸ்ரமம், ஜடைசாமி ஆஸ்ரமம், கயிறுசாமி என்ற பட்டினத்து சாமி சமாதி, யோகி ஸ்ரீ ராம்சூரத்குமார் ஆஸ்ரமம், பஞ்சமுகம் அருகில் இசக்கி சாமி, பிரும்மானந்ந்த சாமி சமாதிகள் போன்றவையும் உள்ளன. நாங்க நேரக் குறைவினால் ஸ்ரீரமணாஸ்ரமம் மட்டுமே போனோம்.

Monday, November 29, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா! 2


உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
1.10.1
98

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.அருணாசலேஸ்வரர் கோயில் ஐந்து பிராகாரங்களோடு இருந்தாலும் மாடவீதியும் கிரிவலப் பாதையும் இரண்டு பிரஹாரமாய்க் கணக்கெடுத்துக்கொள்ளப் படுகிறது. கிரிவலப் பாதையில் யாரும் கால்களுக்குச் செருப்புப்போட்டுக்கொண்டு நடப்பதில்லை. கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மிகப் பழமையான கோயில் என்பது பார்த்தாலே தெரியும். கருவறை பல்லவர் காலத்திலேயே அமைக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. கோபுரங்கள் ஒன்பது உள்ளன. அருணகிரிநாதர் கிளி உருவில் காட்சி அளித்த கோபுரம் கிளி கோபுரம் என்றே அழைக்கப் படுகிறது. இதைத் தவிர மற்ற கோபுரங்கள் பெரிய கோபுரம், கிட்டி கோபுரம், அம்மணி அம்மாள் என்பவர் கட்டிய அம்மணி அம்மாள் கோபுரம், வடக்குக் கட்டை கோபுரம், மேலக்கோபுரம் (இதைப் பேய்க் கோபுரம் என்கின்றனர்) மேற்குக் கட்டை கோபுரம், திருமஞ்சன கோபுரம்(தெற்கு கோபுரம் இப்படி வழங்கப் படுகிறது) வல்லாள ராஜா கோபுரம்(போசள மன்னன் மூன்றாம் வீர வல்லாளன் கட்டியது) இந்த வாசலே வல்லாளன் திருவாசல் என அழைக்கப் படுகிறது. கிழக்குக் கோபுரம் 216 அடி உயரத்துடனும் 11 நிலைகளுடனும் காட்சி அளிக்கிறது.

இதைத் தவிரவும் கோயிலில் அநேக மண்டபங்களும் இருக்கின்றன. அவை தீர்த்தவாரி நடக்கும் தீர்த்தவாரி மண்டபம், ஞானப்பால் மண்டபம், திருவருள் விலாச மண்டபம், மாதப்பிறப்பு மண்டபம், உருத்ராக்ஷ மண்டபம், அமாவாசை மண்டபம், பன்னீர் மண்டபம், காட்சி மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை. திருக்கல்யாண மண்டபத்தின் மர விதானம் செப்பால் ஓடு வேயப்பட்டுக் காட்சி அளிக்கிறது. தூண்கள் அழகிய வேலைப்பாடுகளோடும், ஓவியங்களும் நிறைந்த மண்டபம். பார்க்க ஒரு நாளாவது வேண்டும். :( பிராகாரங்களின் மதில்கள் உயரமாய்க் குறைந்தது முப்பது அடி உயரத்துடன் காட்சி அளிக்கின்றன. அகலமே நிறைய இருக்கும்போல் தெரிகிறது. இந்த மதில்கள் மூலவரின் திருச்சுற்றுப் பாதையில் அமைந்துள்ளன. இவற்றில் மேற்கு மதில் ஆதித்திய சோழனாலும், பின்னர் அவன் மைந்தன் முதலாம் பராந்தக சோழனாலும், கிழக்குச் சுவர் உத்தம சோழனாலும் கட்டப்பட்டவை எனத் தெரிய வருகிறது. கருவறைக்குள் நுழையும் வாசலே உத்தம சோழன் பெயரால் அழைக்கப் படுகிறது. கருவறைக்குள் உத்தமசோழனின் சிற்பமும் இருக்கிறதாய்த் தெரிய வருகிறது. இந்தத் தகவல் முன் கூட்டியே தெரியாது என்பதால் நாங்க தேடிப் பார்க்கலை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். கிழக்கு வாயிலின் வலப்பக்கம் இருக்கும் ஆயிரங்கால் மண்டபம் மற்றக் கோயில் மண்டபங்கள் போல் இல்லாமல் சரியாக ஆயிரம் தூண்கள் உள்ளதாயும் தெரிவிக்கின்றனர்.

வல்லாள கோபுரத்தில் வல்லாளனின் சிலை இருப்பதாயும் கூறினார்கள். அண்ணாந்து பார்த்துக் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த வல்லாளனுக்காக ஈசனே குழந்தையாக வந்து ஈமக்கடன்களைச் செய்வதாயும் ஐதீகம். அந்த வரலாறு வருமாறு:

குழந்தைச் செல்வம் இல்லாத வல்லாள மகாராஜா, இறைவனை வேண்டினார். ஒரு நாள் அண்ணாமலையாரே சிவனடியார் உருவில் அரண்மனைக்கு வந்தார். தன்னுடன் தினம் ஒரு பெண் தங்க வேண்டும் என்றும், அன்றிரவு தங்கப் பெண்ணே கிடைக்கவில்லை என்றும் கூறி மன்னனைக் கேட்கிறார். கோயிலில் தேவதாசியர்கள் இல்லாமையாலும், மற்றப் பெண்களை அனுப்ப மனமில்லாமையாலும் தன் மனைவியான சல்லாமா தேவியையே அந்தச் சிவனடியாரிடம் அனுப்பி வைக்கிறான் வல்லாள ராஜன். சல்லாமா தேவி உள்ளே சென்றதுமே சிவனடியார் மறைந்து ஒரு பச்சிளம் குழந்தை இருக்கிறது. திகைத்த தேவி தன் கணவனிடம் சொல்ல, அண்ணாமலையார் ரிஷபாரூடராய்க் காட்சி அளிக்கிறார். மன்னனுக்குத் தாமே குழந்தையாக வந்து இறுதிக்கடன்களை நிறைவேற்றுவதாய் வாக்கும் கொடுத்து மறைகிறார்.

இதனால் ஒவ்வொரு வருஷமும் மாசி மாதம் மக நக்ஷத்திரத்தில் அண்ணாமலையார் அருகிலுள்ள, "கொண்டப்பட்டு" என்னும் கிராமத்துக்கு எழுந்தருளி, வல்லாள ராஜாவுக்கு உத்தரகிரியைநடத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் நடராஜப் பெருமானின் செப்பு விக்ரஹம் காணப்படுகிறது. அதை ஒட்டி இருக்கும் அறைகள் ஈசனின் அணிகலன்கள், ஆடைகள், பொக்கிஷ அறை போன்றவை ஆகும். இங்குள்ள கல்லால் ஆன சங்கிலித் தூண் அருகே இருந்து சுரங்கப்பாதை ஒன்று மலையை ஊடுருவிச் செல்வதாய் ஒரு கருத்து உண்டு. கிளி கோபுரத்தின் தெற்கே இருக்கும் விநாயகர் யானையாக வந்து கொடுங்கோல் அரசன் ஒருவனை மிரட்டியதாயும் செவிவழிச் செய்திகள் உண்டு. கிளி கோபுரத்துக்கு அடுத்துக் காணப்படும் மண்டபம், மங்கையர்க்கரசி என்பவரால் கட்டப்பட்டது. இங்கு மலைமீது தீபம் ஏற்றும்போது உற்சவ மூர்த்திகள் எழுந்தருளுவது வழக்கம்.

கிளி கோபுரத்திற்கு எதிரே நந்தி மண்டபம். மண்டபம் வல்லாள ராஜாவால் கட்டப்பட்டிருக்கிறது. மூன்றாம் பிராகாரத்தில் உள்ள சின்ன மண்ட்டபத்தில் அண்ணாமலையார் யோகி உருவில் சூக்ஷ்ம வடிவில் உறைவதாகவும், இங்கு அமர்ந்து ஆழ்நிலைத் தியானம் செய்தால் மன அமைதி கிட்டும் என்பதும் ஐதீகம். சிவகங்கைக்குளத்துக்கு அருகே கம்பத்து இளையனார் சந்நிதியில் முருகன் வில்லேந்திய கோலத்தில் காட்சி கொடுக்கிறான். அருணகிரிநாதருக்காக பிரெளட தேவராயன் என்பவனுக்கு முருகன் காட்சி கொடுத்த இடம் இது என்கின்றார்கள். ஆயிரங்கால் மண்டபத்தின் தென்மேற்குப் பக்கம் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி உள்ளது. பகவான் ஸ்ரீ ரமணர் பலகாலம் இங்கே தங்கி தவம் இருந்ததைக் கூறும் இந்தச் சந்நிதி "பரோசா தலையார் காண்" என்ற வெளி நாட்டுப் பெண்மணியால் அவர் தலைமையில் புநர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. 1949-ம் வருஷம் அப்போதை கவர்னர்ஜெனரல் ஸ்ரீராஜாஜி அவர்களால் திறந்து வைக்கப் பட்டிருக்கிறது. 108-க்கும் மேல் கல்வெட்டுக்கள் உள்ள இந்தக் கோயிலில் பரத சாஸ்திரத்தின் தாண்டவ லக்ஷணத்தை விளக்கும் நாட்டிய நிலைகள் 108-ஐயும் விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

Wednesday, November 17, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா!

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம், கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் ஞாநிகளின் பார்வையில் மரகத மலையாகவும், நம் போன்ற சாமானியர்களுக்குக் கல்மலையாகவும் காட்சி கொடுக்கும் மலை திரு அண்ணாமலை. அண்ணுதல் என்பதன் எதிர்ப்பதம் அண்ணா என்பது அல்லவா? நெருங்க முடியாத மலை திரு அண்ணா மலை. ஈசன் ஒளிப்பிழம்பாய்ச் சுடர் விட்டுப் பிரகாசிக்க பிரம்மாவாலும் திருமாலாலும் அவனை நெருங்கவே முடியவில்லை அன்றோ? இதைத் தவிர இந்தத் தலத்திற்கு அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணன் என்பது சூர்யோதயத்துக்கு முன்னர் கீழ்வானம் காட்டும் செக்கச் சிவந்த நிறத்தைக் குறிக்கும். அப்படி சிவந்த நிறத்தாலான நெருப்பைக் குறிக்கும் அசலம் அருணாசலம். அருணாசலம் தவிர இந்தத் தலம் முக்திபுரி, அருணகிரி, திருவருணை, அருணை, சுத்த நகரம், சோணாசலம், அனல்கிரி, தென் கைலை, ஞாந நகரம், அண்ணாநாடு, சிவலோகம், அண்ணாத்தூர், கெளரி நகரம், தேக நகரம், முக்தி நகரம், ஞாந நகரம், சோணாத்ரி, அருணாத்ரி, தலேச்சுரம், சோணகிரி ஆகிய பெயர்களாலும் அழைக்கப் படுகின்றது. இந்த மலையானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,700 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது.
அருணாசல புராணம், உரோமசர், குத்சர், குமுதர், சகடாயர், அகத்தியர், குமுதாட்சர், வத்சர், வைசம்பாயனர், கணாசி, வியாக்ரபாதர், வாமதேவர், சனகர், சனத்குமாரர், வியாசர், மதங்கர், பதஞ்சலி ஆகியோருக்கு நந்தி தேவராலும், மார்க்கண்டேய ரிஷியாலும் கூறப்பட்டது எனத் தெரிந்து கொள்கிறோம். இந்த மலை உருவான கதை அனைவரும் அறிந்ததே என்றாலும் சுருக்கமாய்க் கீழே தருகிறேன்.பிரம்மாவும் விஷ்ணுவும் ஒரு முறை தங்களில் பெரியவர் யார் என்பது குறித்துச் சண்டை போட்டுக்கொண்டனர். தங்களுக்குள் எவர் பெரியவர் என்பதைச் சொல்லச் சரியான நபர் ஈசனே என்பதை அறிந்து கொண்டு அவரிடம் சென்று தங்களில் யார் பெரியவர் எனக் கேட்க, ஈசனும் தன்னை அடிமுதல் முடிவரை எவர் கண்டறிந்து வந்து சொல்கின்றனரோ அவரே பெரியவர் எனச் சொல்லிவிட்டுத் தான் ஜோதி ஸ்வரூபமாய் நின்றார். வராஹ உருவில் பூமியைக் குடைந்து கொண்டு விஷ்ணு அடியைக் காணச் செல்ல, அன்னமாக மாறி பிரம்மா முடியைக் காணப் பறந்தார். வராஹ மூர்த்தியால் அடியைக் காண இயலவில்லை. மேலே மேலே பறந்து சென்று கொண்டிருந்த அன்னப் பறவையான பிரம்மாவுக்கு ஈசன் தலையில் சூடிய தாழம்பூ ஒன்று கீழே இறங்குவது கண்களில் பட, அந்தத் தாழம்பூவைச் சாட்சியாக வைத்துக்கொண்டு ஈசனிடம் தான் முடியைக் கண்டதாய்க் கூறுகிறார். வராஹ மூர்த்தியோ தன்னால் அடியைக் காண இயலவில்லை என்னும் உண்மையை ஒப்புக் கொள்கிறார். தாழம்பூவும் பிரம்மா முடியைக் கண்டதாய்ப் பொய்ச்சாட்சி சொல்ல கோபம் கொண்ட ஈசன், பிரம்மாவின் வழிபாடுகள் இனி பூவுலகில் நடக்காது என்றும், ஈசனின் வழிபாட்டில் இனித் தாழம்பூவைச் சேர்த்தல் கூடாது என்றும் கூற பிரம்மா தவறுக்கு மனம் வருந்தினார். அன்று முதல் ஈசனின் வழிபாட்டில் தாழம்பூவுக்கு இடம் இல்லை.

தேவாதிதேவர்கள் வந்து ஈசனை வணங்கி அவர் அந்தத் திருக்கோலத்திலேயே பூவுல மக்களுக்கும் காட்சி கொடுக்கவேண்டும் எனக் கேட்க ஈசனும் அவ்வாறே ஆகட்டும் என்று கூற ஈசனின் வெப்பம் தாங்காமல் அனைத்து மக்களும், தேவர்களும் தவிக்க, ஈசனும் தன் பெருங்கருணையால் அக்னி மலையாக மாறி நின்றான் என்பது தல புராணம். திருஞாநசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பதிகங்கள் பாடப்பட்டது. பழைய லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதி எனச் சரித்திர ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. இதை பகவான் ஸ்ரீரமணரின் முக்கிய சீடர் ஆன பால் பிரண்டன் என்பவர் ஆதாரங்களோடு, தனது Message from Arunachala என்ற புத்தகத்தில் எழுதி இருப்பதாய்த் தெரிய வருகிறது. மேலும் இந்த மலையானது இறுகிய எரிமலைக்குழம்பே என்பது விஞ்ஞான ஆய்வாளர்களால் நிரூபிக்கப் பட்டு இமயத்தை விடவும் பழமையானது என்பது கூறப்பட்டுள்ளது. அருணாசலத்தைப் பற்றிய நூல்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவை இருப்பதாயும் தெரிய வருகிறது. சாசனங்கள் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் காணப்படுகின்றன. பல்லவர் காலங்களிலேயே இந்தக் கோயில் கருவறை எழுப்பப் பட்டிருக்கவேண்டும். மதில் சுவர்கள் பிற்காலச் சோழர்காலங்களில் கட்டப் பட்டிருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். இதைத் தவிர, நாட்டுக்கோட்டை நகரத்தார் 1903-ம் வருஷம் திருப்பணிகள் செய்து திருக்குடமுழுக்கும் செய்வித்திருக்கின்றனர்.

கார்த்திகை தீபம் நெருங்கிவிட்டதால் திருவண்ணாமலை தொடரை முதலில் போட்டுவிட்டுப் பின்னர் சிவ வடிவங்களில் மற்றவர்கள் தொடருவார்கள். பொறுத்துக்கொள்ளவும். நன்றி.

Tuesday, November 16, 2010

நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! தக்ஷிணாமூர்த்தி!


தக்ஷிணாமூர்த்தி தென்முகம் காட்டி அமர்ந்திருப்பதன் காரணம் கேட்டிருந்தார் ப்ரியா. பொதுவாய் வடக்கு வாழ வைக்கும் என்று சொல்வது உண்டு அல்லவா?? எந்த ஒரு நல்ல காரியத்தையும் தென்பக்கம் பார்த்துச் செய்யக் கூடாது என்றும் கூறுவார்கள். தென் திசை அழிவைக்குறிக்கும். ஆகவே அழிவைக்குறிக்கும் திசையை நோக்கி அமர்ந்திருக்கும் ஈசனின் திருவுருவை நாம் வாழ வைக்கும் வடதிசை நோக்கி அமர்வோம் அன்றோ?? நம் ஆன்மாக்கள் உய்வுறவேண்டி ஈசனே அங்ஙனம் அமர்ந்திருக்கிறார். இது தவிர த+க்ஷி+ணா என்பது நமது மும்மலங்களான ஆணவம்,கன்மம், மாயை ஆகியவற்றையும் குறிக்கும் என்றும் திரு நடராஜ தீக்ஷிதர் அவர்கள் தெரிவிக்கிறார். ஆணவன், கன்மம், மாயை அகல மோனத்தின் மூலம் ஞாநத்தை உணர்த்தியஞாநகுருவான தக்ஷிணாமூர்த்தியை வழிபடுதல் சிறப்பு என்றும் கூறுகிறார்.

ஒரு சமயம் பிரம்மாவிற்குப் படைப்பில் ஆர்வம் இல்லாமல் போக, நான்கு குமாரர்களைப் படைத்து அவர்களிடம் தன்பொறுப்பை ஒப்படைக்க எண்ணுகிறார் பிரம்மகுமாரர்களாகிய சநகர், சநந்தனர், சநத்குமாரர், சநாத்சுஜாதர் ஆகிய நால்வரும் பிறவி ஞாநம் பெற்றுத் திகழ்ந்தார்கள். பிரம்மா தன் மக்களிடம்பொறுப்பை ஒப்படைக்க எண்ணியபோது, நாரதருக்கு அதுகுறித்துத்தெரிய வந்தது. தன் சகோதரர்கள் பிரம்ம ஞாநத்தை அறிந்தவர்கள் என்பதும், தாங்கள் யார் என்ற ஞாநம் பெற்றவர்கள் என்பதும் தெரிந்ததால் நாரதர் சகோதரர்களை எச்சரிக்கிறார். அவர்களும் இம்மாதிரியான சிருஷ்டிப்பொறுப்பை ஏற்க மனமின்றித் தங்களுக்கேற்ற குருவை நாடி ஒவ்வொரு இடமாய்த் தேடிச்செல்கின்றனர். தங்கள் தந்தை சிருஷ்டியில் மூழ்கி இருப்பதும் அது குறித்த பிரச்னைகளையும் அறிந்த அவர்கள் தங்களால் அது இயலாது என்று வைகுண்டத்தில் மஹாவிஷ்ணுவை நாடிச் செல்கின்றனர். அவரோ அங்கு ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி உடனிருக்கப் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கக் காண்கின்றனர். ஆஹா, இவரும் குடும்பஸ்தராகவே இருக்கிறாரே என எண்ணிக்கொண்டு, கைலை நோக்கிச் செல்கின்றனர்.

சநத்குமாரர்கள் தன்னை நாடி வருவதைத் தெரிந்து கொண்ட ஈசன் இங்கேயும் தான் தன் மனைவியோடு இருப்பதை அறிந்துகொண்டால் சநத்குமாரர்கள் ஏமாந்து போய்விடுவார்கள் என்பதோடு அவர்களுக்கு முக்திக்கு வழியும் காட்ட முடியாது என்பதையும் புரிந்து கொண்டு, தான் ஒரு பதினாறு வயதுப்பால யோகியாக மாறி, மானசரோவர் ஏரியின் வடகரையில் ஒரு வடவிருட்சத்தின் கீழ் தென் முகம் நோக்கி அமர்கின்றார்.

கைலை வரும் வழியில் வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்த தவம் செய்யும் யோகியைக் கண்ட சநத்குமாரர்கள் இவரே தங்களுக்கு ஏற்ற குரு எனத் தெளிந்து அவரிடம் வந்து அமர்கின்றனர். பாலயோகியும் சீடர்களை வரவேற்கிறார். சநத்குமாரர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்க யோகியும் அதற்கேற்ற பதில்களைக் கொடுக்கிறார். இவர்கள் சந்தேகங்கள் மேன்மேலும் எழும்புகின்றன. யோகியும் அசராமல் பதில் கொடுக்கிறார். கடைசியில் இந்த சந்தேகங்களும், அவற்றுக்குப் பதில் கொடுப்பதும் ஒரு வருஷம் தொடர்ந்து நடைபெற்று வர, ஈசன் இனி இது ஒன்றே அனைத்திற்கும் ஒரே பதில் எனக் கூறுவது போல் சின்முத்திரை காட்டி நீடித்த மெளனத்தில் சமாதி நிலையில் அமர்கிறார். ஈசன் சமாதி நிலையில் அமர்ந்ததுமே சநத்குமாரர்கள் மனதிலும் இனம் காணா அமைதி, ஆநந்தம். ஈசனுடைய சமாதிநிலையின் சர்வத்துவம் அவர்களிடமும் வந்து அடைய அவர்களும் சச்சிதாநந்தப் பெரு வெள்ளத்தில் மூழ்கி அமைதி அடைகின்றனர். இதுவே சத்தியம், இதுவே நித்தியம், இதுவே அநந்தம் என்று தெளிவும் அடைகின்றனர்

Monday, November 08, 2010

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! தக்ஷிணாமூர்த்தி!


வீணாதர தக்ஷிணாமூர்த்தி: கைகளில் வீணை ஏந்தியவண்ணம் காட்சி அளிப்பார். ஈசன் சங்கீத ஸ்வரூபம். அவன் மீட்டுவது சாதாரண வீணை அல்ல. ஞாநவீணை. அதிலிருந்து எழும் கீதமும் ஞாநத்தை அளிக்கவல்லது. நமக்கு ஆத்ம ஞாநத்தை அளிக்கும் வல்லமை பெற்ற இனிய கீதத்தை ஈசன் இசைக்கிறான். முன் கரங்களிரண்டாலும் வீணையை மீட்டிக்கொண்டிருக்கும், ஈசனின் பின்னிரு கரங்அள் அக்ஷமாலையையும் நெருப்பையும் ஏந்திக் காட்சி அளிக்கின்றன. அமர்ந்த கோலத்திலேயும் காட்சி அளிப்பார், நின்ற வண்ணமும் காட்சி கொடுப்பார். முனிவர்கள் புடைசூழக் காட்சி தரும் இவரை வேதாரண்யம், திருப்புந்துருத்தி ஆகிய ஊர்களிலே காணலாம் என்று தெரியவருகிறது. இரண்டு ஊரும் பார்க்கலை இன்னமும். அதனால் நிச்சயமாய்த் தெரியவில்லை.

அடுத்தவர் சக்தி தக்ஷிணாமூர்த்தி: இவரை நாம் ஏற்கெனவே சுருட்டப்பள்ளியில் பார்த்திருக்கோம். அம்பிகையை அணைத்தவண்ணம் வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி அளிப்பார் இவர். திருமணப் பேறு வேண்டி இவருக்குச் சிறப்பு வழிபாடுகள் அங்கே செய்யப் படுகின்றன. மான், மழுவோடு, சின் முத்திரை திகழ, அன்னை ஈசனைத் தழுவிய வண்ணம் காட்சி கொடுக்கிறார்கள்.

மேதா தக்ஷிணாமூர்த்தி: ரிஷப வாஹனராய்க் காணப்படும் தக்ஷிணாமூர்த்தியை மேதா தக்ஷிணாமூர்த்தி எனத் தெரிந்து கொள்கிறோம். ரிஷபத்தின் மீது அமர்ந்த வண்ணம் ஞாந உபதேசம் செய்கிறார். ரிஷபம் தர்மத்தின் வடிவம். ஆகவே நமக்கு தர்மத்தையும், ஞாநத்தையும் உபதேசிக்கும் தக்ஷிணாமூர்த்தியோடு ரிஷபத்தையும் சேர்த்து வழிபடுவது நலம் பயக்கும்.

இவற்றைத் தவிர பசுபத சைவர்கள் வழிபடும் லகுளீசர் கூட தக்ஷிணாமூர்த்தி வடிவமே எனத் தெரிய வருகிறது. மதுரைக்கு அருகே அரிக்கம்பட்டு என்னும் ஊரில் லகுளீசர் சந்நிதி உள்ளது. திருவொற்றியூரிலும், திருவையாறிலும் சடையை எடுத்துக்கட்டியவண்ணக் காட்சி அளிப்பார். கரங்களில் சூலம், கபாலம், வலக்கரம் சின் முத்திரையோடும், இடக்கரம், தியான முத்திரையோடும் காட்சி அளிக்கும். திருவையாறுக் கோயிலில் பிராஹாரம் சுற்றும்போது ஈசன் சடை பரந்து விரிந்து இருப்பதால் அதைத் தாண்டிச் செல்லக் கூடாது என்பதால் பிராஹாரவலம் முதல் சுற்று ஆரம்பித்துப் பின்னர் திரும்பி வந்த வழியே வந்து அப்பிரதக்ஷிணமாய்ச் சென்று தக்ஷிணாமூர்த்தியைத் தரிசிக்கவேண்டும்.

Saturday, November 06, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா!

எதிர்பாராமல் சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை தரிசனம் கிட்டியது. தென்னாங்கூர் பாண்டுரங்கன் தரிசனம், மேல் மலையனூர் அம்மன் தரிசனம் ஆகியவை கிட்டியது. அது குறித்து எழுதிக்கொண்டிருக்கிறேன். சிவ வடிவங்களில் பைரவர் முடிந்ததும், அது குறித்த தொடர் ஆரம்பிக்கும். தாமதமான இடுகைகளுக்கு மிகவும் மன்னிக்கவும். பல்வேறு பிரச்னைகள்! எழுதியவற்றைக் கூட அப்லோட் செய்ய முடியவில்லை. :(

Saturday, October 02, 2010

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! தக்ஷிணாமூர்த்தி!


தக்ஷிணாமூர்த்தி வடிவங்களில் பல்வேறு விதங்கள் உண்டு. அவை ஞான தக்ஷிணாமூர்த்தி, யோக தக்ஷிணாமூர்த்தி, வியாக்யான தக்ஷிணாமூர்த்தி, மேதா தக்ஷிணாமூர்த்தி, வீர தக்ஷிணாமூர்த்தி, வீணாதர தக்ஷிணாமூர்த்தி, சுத்த தக்ஷிணாமூர்த்தி, திவ்ய தக்ஷிணாமூர்த்தி, கீர்த்தி தக்ஷிணாமூர்த்தி சக்தி தக்ஷிணாமூர்த்தி என்று பல்வேறு விதமான வடிவங்கள் உண்டு. சிலவற்றைப் பார்ப்போமா??

ஞான தக்ஷிணாமூர்த்தி: நான்கு கரங்கள் கொண்ட இவரது பின் வலக்கையில் அட்ச மாலையும், பின் இடக்கரத்தில் தாமரை மலரும் விளங்கும். முன் வலக்கரம் சின் முத்திரை காட்ட இடக்கை அபயம் காட்டும். சில இடங்களில் தண்ட ஹஸ்தமாகவும் காணப்படும். மாயவரம் என்னும் மயிலாடுதுறைக் கோயிலிலும், சுநீந்திரம் கோயிலிலும் ஞான தக்ஷிணாமூர்த்தி வடிவத்தைக் காணலாம் என்று சொல்கின்றனர்.

யோக தக்ஷிணாமூர்த்தி: யோகக் கலையின் மூலமாகவே இறைவனை அடைதல், அந்தக் குறிக்கோளில் உறுதியாக நிற்பது போன்ற ஆற்றல் கிடைக்கிறது. அத்தகையதொரு ஆற்றலை யோக மார்க்கமே நமக்கு வழங்கும். யோகம் என்பது இங்கே வெறும் ஆசனங்களில் செய்யும் பயிற்சியைக் குறிப்பது அல்ல. உண்மையான யோகத்தை குரு மூலமாகவே செய்ய முடியும். அதற்கேற்ற மன ஆற்றலையும், உறுதியையும் நமக்குக் கிடைக்கச் செய்வதே இந்த தக்ஷிணாமூர்த்தியின் வடிவம் எனலாம். இந்த வடிவத்தில் யோகத்தின் ஆற்றலை விளக்கும் வடிவில் யோகப் பட்டையுடன் கூடிய ஸ்வஸ்திகாசனத்தில் தக்ஷிணாமூர்த்தி காட்சி கொடுப்பார். அட்சமாலையும், கமண்டலமும் பின்னிரு கரங்களில் காணப்படும். காஞ்சிபுரம், திருவொற்றியூர் போன்ற தலங்களில் யோக தக்ஷிணாமூர்த்தியின் வடிவைக் காணலாம். இவரே பிரம்மாவுக்கு அருளிச் செய்தார். ஆகவே பிரம்ம தக்ஷிணாமூர்த்தியும் இவரே என்றும் சொல்லப் படுகிறது.

வியாக்யான தக்ஷிணாமூர்த்தி: பெயரிலேயே அவரின் செயல் புரிந்துவிடுகிறது. சாத்திரங்களை விளக்குபவராக, ஆசானாக இமயமலையில் ஆலமரத்தின் கீழ் புலித்தோலாசனத்தில் அமர்ந்து இருப்பார் இவர். வலக்கால் கீழே தொங்கும். இடக்காலை மடித்து வலக்கால் தொடையின் அடியில் மடித்து வைத்திருப்பார். தொங்கும் வலக்காலின் கீழ் முயலகனைக் காணலாம். ஆலங்குடி என்னும் குரு பரிஹார க்ஷேத்திரத்தில் வியாக்யான தக்ஷிணாமூர்த்தியைத் தரிசனம் செய்யும் பேறு கிடைத்தது.

சித்ரம் வடதாரோர் மூலே வ்ருத்தா சிஷ்யா குரூர்யுவா!
குரோஸ்து மெளநம் வ்யாக்யாநம் சிஷ்யாஸ்து சிந்ந ஸம்சயா!!

Sunday, September 05, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! தக்ஷிணாமூர்த்தி! 2

பொதுவாய் மனிதராய்ப் பிறந்த நாம் அனைவருமே நம் சக்தியை எவ்விதமேனும் வெளிக்காட்டிக் கொண்டு தான் இருக்கிறோம். இது அத்தகையதொரு சக்தி அன்று. நம்மை எல்லாம் இயக்கும் அற்புத, ஆநந்த சக்தி. சத்+சித்+ஆநந்தம் அடங்கிய சச்சிதாநந்த வடிவம் இது. வெளியே சலனமே இல்லாமல் அமைதியாகத் தெரியும் இந்தச் சிவ வடிவில் உள்ளே ஞானமாகிய அருள் நிரம்பி விளங்குவது நமக்குப் பார்த்தால் தெரியாது. அநுபவத்தாலேயே புரிந்து கொள்ளவேண்டும். பேராநந்தத்தை உள்ளடக்கிய இந்தச்சக்தியைப் புரிந்து கொள்ள எவ்விதம் நமக்குத் திறமை போதாதோ அவ்விதமே இதை அடக்கிக் கொள்ளும் ஈசனின் தனித் திறமையை வர்ணிக்கவும் வார்த்தைகள் இல்லை. மகிமை மிகுந்த இந்த ஆதிகுருவின் திருவுருவம் இல்லாத சிவன் கோயிலக் காண்பது அரிது. முன் காலங்களில் தக்ஷிணாமூர்த்திக்கான தனிக் கோயில்கள் இருந்ததாயும், பிற்காலங்களிலேயே சிவன் கோயில் கருவறையின் தென்பகுதிச் சுவரில் எழுந்தருளச் செய்து வழிபட்டதாகவும் சொல்கின்றனர். சும்மா இருப்பது போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் யோகநிலையில் இருக்கும் ஒரு சொரூபமே தக்ஷிணாமூர்த்தி சொரூபம். வெளியே சும்மா அமர்ந்த வண்ணம் அவன் உள்ளுக்குள் இருக்கும் யோகசக்தியால் நம்மை எல்லாம் ஆட்டி வைக்கிறான். சூத்திரதாரியே இந்த தக்ஷிணாமூர்த்திதான். அம்மையும், அப்பனும் ஐக்கியமாய் இருக்கும் சிவசக்தி ரூபமே தக்ஷிணாமூர்த்தி சொரூபம். லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமாவளி அன்னையை ஸ்வதந்த்ரா, ஸர்வதந்த்ரேசீ தக்ஷிணாமூர்த்தி ரூபிணி! என்று சொல்லுகின்றது. அடுத்த நாமாவளி ஸநகாதி ஸமாராத்யா சிவஜ்ஞாந - ப்ரதாயினிநீ என்று வரும்

தம்முள் பொங்கி வழியும் சிவஞானத்தைத் தம் மெளனத்தாலேயே நமக்குப் புரிய வைத்து வாரி வாரி வழங்கும் சிவஞான சொரூபமான தக்ஷிணாமூர்த்தி வடிவமே தத்துவ விளக்கமாகும். தக்ஷிணாமூர்த்தி வெண்ணிறமானவர். இப்போது அவர் வடிவின் ஒவ்வொரு ரூபத்தையும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தையும் பார்க்கலாமா?
நடராஜத் திருமேனியின் ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு அர்த்தம் கொண்டாற்போலவே இந்த தக்ஷிணாமூர்த்தியும் ஒவ்வொரு அர்த்தம் கொண்டு விளங்குகிறார்.

திருமேனி பளிங்கு போன்ற வெண்ணிறம் கொண்டு தூய்மையை உணர்த்துகிறது.
தக்ஷிணாமூர்த்தியின் அமர்ந்த திருக்கோலத்தில் வலக்காலின் கீழே முயலகன் என்னும் அசுரனை மிதித்த வண்ணம் அமர்ந்திருப்பார். இந்த முயலகன் ஆணவத்தின் வடிவம். அறியாமையின் வடிவம். இந்த ஆணவத்தையும் அறியாமையையுமே தம் திருப்பாதத்தால் மிதித்து நீக்கி ஞானத்தை அருளுகிறார். இடக்கையில் ஒன்றில் சுவடிகள் தென்படும். சிவஞானபோதத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் தக்ஷிணாமூர்த்தியானவர் தம் கையிலுள்ள இந்தச் சுவடிகளின் மூலம் நமக்குப் போதிக்கிறார். சிவஞானபோதத்தை நூல் வடிவாக்கித் தம் கைகளில் ஏந்திக் கொண்டு நமக்குக் கற்பிக்கிறார்.

வலமேல்கரத்தில் உள்ள ருத்திராக்ஷமாலை தொண்ணூற்றாறு தத்துவங்களை உணர்த்துவதாய்ச் சொல்கின்றனர். பஞ்சாக்ஷரத்தை இந்த மாலையின் உதவியால் எண்ணி மேன்மேலும் உருவேற்றித் தியானிக்கவேண்டும். ஞானம் பெறுவதற்கான வழி அதுவே எனச் சொல்கின்றது. வலக்கீழ்க்கரம் சின் முத்திரை காட்டுகிறது. மிகவும் பிரபலமான சின் முத்திரை ஞானத்தின் அடையாளம். பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொட்டுக் கொண்டு இருக்கும். மற்ற மூன்று விரல்கள் விலகித் தனியாய் இருக்கும். ஆணவம், கன்மம், மாயை என்னும் இந்த மூன்றையும் அகற்றிவிட்டுத் தன்னைச் சரணடைந்தால் ஒன்றாகலாம் என்பதைக் குறிக்கும் இந்தச் சின் முத்திரை என்பது சிலர் கருத்து.

இடக்கரத்தில் உள்ள அமிர்த கலசத்தால் அனைத்து உயிர்களையும் காத்துப் பேரின்பம் அளிப்பதையும், தீச்சுடர் உயிர்களது பிறவித் தளைகளை நீக்கி உய்யும்பொருட்டுச் செய்யும் சம்ஹாரத்தையும் குறிக்கும். கழுத்திலுள்ள பாம்பு குண்டலினியைக் குறிக்கும். குண்டலினி யோகத்தின் சின்னம் பாம்பு. பாம்பானது சுருண்டு இருப்பது போல் நம்முள்ளே குண்டலினி சக்தியும் சுருண்டு இருக்கிறது. மூலாதாரம் என்னும் சக்கரத்தில் சுருண்டு இருக்கும் அந்தக் குண்டலினியை விழிப்புறச் செய்து பின்னர் அதைச் செயல்படச் செய்து பேரின்பப் பெருவாழ்வு பெறவேண்டும் என்பதே தக்ஷிணாமூர்த்தியின் யோக நிலை குறிப்பதாகும்.

சில தக்ஷிணாமூர்த்தித் திருமேனி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்திலும், சில தக்ஷிணாமூர்த்தித் திருமேனி ஆலமரத்தின் கீழ் இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்க விட்டு அமர்ந்த கோலத்திலும் காணமுடியும். பத்மாசனத்தில் இவ்விதம் அமர்ந்த கோலத்தில் இருப்பது யோகியர், ஞாநியர் இதயத்தாமரையில் ஈசன் வீற்றிருப்பதைக் குறிக்கும் என்று சொல்வதுண்டு.

நெற்றிக்கண் காமனை எரித்த கண். நாம் அதை நினைவில் கொண்டு வீடுபேறு அடையவேண்டுமெனில் நம் உள்ளத்தே புலன்களை அடக்கி ஐம்பொறிகளைக் கட்டுப் படுத்திப்பஞ்சாட்சரத்தை ஓதிக் கொண்டே இருத்தல் வேண்டும். ஆலமரத்தின் கீழ் இருப்பதும், அதன் நிழலும் இவ்வுலக வாழ்வு மாயை என்பதை குறிப்பவை. வடக்கு முகமாய்ச் சிவனை வழிபடுவதே சிறப்பு. தருமத்தைக் குறிக்கும் விடைவாகனனை, அனைத்து உயிர்களுக்கும் அவனே தலைவன் என்பதை உணர்த்தவே இந்த தக்ஷிணாமூர்த்தி வடிவம்.

Thursday, September 02, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! தக்ஷிணாமூர்த்தி!


இது வரையிலும் வீரமான சிவத் திருமேனிகளைத் தரிசித்தோம். இப்போ யோக வடிவிலான தக்ஷிணாமூர்த்தியைத் தரிசித்துவிட்டுப்பின்னர் பைரவரைக் காணலாம். தென்முகக் கடவுள். திருக்கைலை மலையின் தென்முக தரிசனத்திற்கும் தக்ஷிணாமூர்த்தித் திருக்கோலம் என்றே அழைப்பார்கள். பொதுவாகத் தென் திசையை அவ்வளவு நல்லதாக யாரும் நினைப்பதில்லை. தெற்கு என்றாலே ஆகாதது, அழிவைக்குறிக்கும். மரணத்தைத் தரும் யமனுடைய திசை என்றே அனைவரும் விரும்புவதில்லை. அத்தகைய தென் திசையை நோக்கியே இந்த தக்ஷிணாமூர்த்தி எப்போதும் அமர்ந்திருப்பார். மரணத்தை நோக்கி இருக்கும் ஆன்மாக்களின் ஞானத்தைத் தருவதற்கும், அழியாத அமுத வாழ்வைத் தருவதற்கும் வழிபடவேண்டி, தென் திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஞான தக்ஷிணாமூர்த்தி. எப்போதும் ஆடிக் கொண்டிருக்கும் ஆநந்த நடராஜன் ஆன ஆடல்வல்லான் தென் திசையையே நோக்கி ஆடுகிறான். அதுபோல் அமைதியைப் போதிக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும் தென் திசையே.

அஞ்ஞானம் நிறைந்த நம்முள் ஞானம் பெருக நாம் வழிபடவேண்டியவருக்குக் குருவாகக் காட்சி அளிப்பது தக்ஷிணாமூர்த்தியே. ஆதிகுரு என அழைக்கப் படுகிறார். நம் அறியாமையை அகற்றி ஞானத்தைப் போதிக்கும் வடிவில் ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ளார் தக்ஷிணாமூர்த்தி. இவர் வாய் திறந்து எதுவும் பேசுவதில்லை. மெளனம் தான். மெளனமாய் இவர் போதிப்பதையே புரிந்து கொள்கின்றனர் சீடர்கள். சீடர்கள் நான்கு பேர். வயது முதிர்ந்தவர்கள். குருவோ பதினாறு வயது நிரம்பிய இளைஞன். அவனோ வாய் திறந்து பேசுவதில்லை. ஆனாலும் சீடர்கள் புரிந்து கொள்கின்றனர். ஆசிரியர்களுக்கெல்லாம் மேம்பட்ட எல்லாம் வல்ல பரம ஆச்சாரியன் போதிக்கவேண்டிய பொருளுக்கு ஏற்ப தன் போதனையை மாற்றிக் கொண்டு இவ்விதம் மெளனத்தின் மூலமே போதிக்கின்றான். சொல்லுக்கும், செயலுக்கும், மனதுக்கும், வாக்குக்கும் எட்டாத பரம்பொருளை எவ்விதம் சொல்லுவது? எந்தச் செயலில் புரிய வைப்பது? எப்படிக் காட்ட முடியும்? ஆகவே மெளனத்தையே தன் பாடமாகப் போதிக்கின்றான் இறைவன். இந்த மெளனத்தின் வாயிலாக சத் சித் ஆநந்தத்தை அநுபூதியாகத் தம் உணர்வினால் வெளிப்படுத்திக் காட்டச் சீடர்களும் அதைப் புரிந்து கொள்கின்றனர். இத்தகைய தெய்வீக அநுபவத்தைப் பெற்ற சீடர்களும் தம் உள்ளங்களில் அதைப் பரிபூரணமாக அநுபவித்து முழுமையாகப் பரவச் செய்து பேரின்ப நிலையை எய்துகின்றனர். மேலும் தக்ஷிணாமூர்த்தி வடிவம் பார்ப்பதற்கு எதுவும் செய்யாது சும்மா இருத்தல் போலத் தெரிந்தாலும் சிவசக்தி அடங்கிய ஐக்கிய வடிவம் அது. இது பற்றி இன்னும் விரிவாய்ப் பார்ப்போமா?

Wednesday, August 25, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காள மூர்த்தி!

அந்தகாசுரனுடன் தொடர்பு உள்ள மற்றொரு சிவ வடிவமே கங்காளர் எனப்படும். அந்த நாட்களில் வீடுகளில் கங்காளம் என்ற பெரியதொரு பாத்திரம் இருக்கும். நிறையத் தண்ணீரோ அல்லது அதிக அளவு உணவு சமைக்கவோ பயன்படுத்தப் படும் இந்தப் பாத்திரம் போன்றதொரு பாத்திரம் சைவர்கள் காவடி போல் எடுத்துச் செல்லவும் பயன்படும். பாத்திரத்தின் இருபக்கமும் தொங்கும் வளையம் போன்ற காதுகளில் கம்பைச் செருகி எடுத்துச் செல்லுவார்கள். இவற்றில் சிவலிங்கம், நந்தி போன்றவை அமைத்திருப்பார்கள். பார்த்ததுமே வீர சைவர்கள் எனச் சொல்லும்படியாக இருக்கும். இப்போல்லாம் காணோம். பாசுபத வீர சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கங்காள மூர்த்தியை வழிபடுகின்றனர். பாசுபத விரதத்தை ஸ்ரீகங்காள மூர்த்தி மேற்கொண்டதாகவும் சிவபுராணம் சொல்லுகிறது. உடலெங்கும் விபூதி பூசிய வண்ணம் காட்சி அளிப்பார்கள்.

கங்காள மூர்த்திக்குரிய பாடல் தேவாரத்திலே தேட வேண்டி இருக்கு. சரியாத் தேடத் தெரியலை. ஆனால் கீழே உள்ள ஞானசம்பந்தர் பாடல் கிட்டத் தட்ட அதோடு ஒத்துப் போகிறது. ஆனால் இது திருவேட்களம் என்னும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் பாசுபதேஸ்வரர் பற்றிய பாடல். இந்த ஊரில் தான் அர்ஜுனனுக்கு ஈசன் பாசுபதாஸ்திரம் கொடுத்ததாகத் தலபுராணம் கூறுகிறது.

சடைதனைத்தாழ்தலு மேறமுடித்துச் சங்கவெண்டோடு சரிந்திலங்கப்
புடைதனிற் பாரிடஞ்சூழப் போதருமா றிவர்போல்வார்
உடைதனினால்விரற் கோவணவாடை யுண்பதுமூரிடு பிச்சைவெள்ளை
விடைதனை யூர்திநயந்தார் வேட்கள நன்னகராரே.

அந்தகாசுரனைச் சூலத்தில் குத்தித் தூக்கி ஏந்தியவண்ணம் உலகை வலம் வந்த கோலமே கங்காள மூர்த்தி எனப்படுகின்றது. வலக்காலை முன்னே வைத்து புலியாடை தரித்து ஜடாமுடியோடு காக்ஷி அளிக்கும் கங்காளருக்குச் சில இடங்களில் போர்வாளும் காணப்படும். சூலாயுதத்தை கங்காள தண்டம் என அழைப்பார்கள். பாம்பை ஆபரணமாய்த் தரித்துக் கொண்டிருக்கும் இவர் வலத் திருக்கரத்தில் ஒன்று மான்குட்டிக்கு அன்போடு புல்லை உணவாய்க் கொடுத்துக் கொண்டிருக்கும். அந்தகன் சூலத்தில் தொங்கியவாறு காக்ஷி அளிப்பான். அவன் ரத்தத்தைக் குடித்த வண்ணம் ஒரு பூதமும் உணவுத்தட்டோடு மற்றொரு பூதமும் கூடவே வரும். மற்ற பூதகணங்கள் மூர்த்தியைச் சூழ்ந்து ஆடிப் பாடியவண்ணம் காக்ஷி அளிப்பார்கள். கங்காளர் வலம் வரும் சமயம் வாயுபகவான் தன் காற்றால் வீதியைச் சுத்தம் செய்வானாம். வருணன் நீர் தெளிப்பானாம். வேதங்கள் ஓதிட, சூரிய, சந்திரர்கள் தங்கள் ஒளியான குடையைப் பிடிக்க, நாரதர் இசைக்க வலம் வருகின்றார் கங்காளர். திருவாரூர் மாவட்டம் திருவிற்குடிக்கு அருகே கங்களாஞ்சேரி என்னும் ஊர் கங்காள வழிபாடு இருந்தற்கான ஒரு அடையாளம் எனச் சொல்லப் படுகிறது. மேலும் விரிஞ்சிபுரம்,சுசீந்திரம், திருசெங்காட்டாங்குடி, தென்காசி, தாராசுரம், திருநெல்வேலி போன்ற ஊர்களிலும் கங்காள மூர்த்தியின் சிற்பங்களைக் காணமுடியும்.

Tuesday, August 17, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அந்தகாசுர வதம்!


இரண்யாட்சன், இரண்யகசிபு ஆகிய இரு அசுரர்களும் பல தவங்கள் செய்து வரங்களைப் பெற்றனர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதில் இரண்யகசிபுவுக்கு பிரஹலாதன் உட்பட மூன்று பிள்ளைகள் பிறந்திருந்தனர். ஆனால் இரண்யாட்சனுக்குக் குழந்தைச் செல்வமே ஏற்படவில்லை. ஆகையால் அவன் சிவனைக் குறித்து எவராலும் வெல்ல முடியாத தாயினால் மட்டும் மரணம் நிகழக் கூடிய ஒரு மகன் வேண்டும் எனத் தவம் இருந்து வந்தான். அப்போது ஒருநாள் உமையவள் இறைவனார் கண்களை விளையாட்டாய் மூட உலகமே இருளில் ஆழ்ந்தது. சூரிய, சந்திரர்களின் ஒளியும் இல்லாமல் போய் இருந்த அந்த நேரத்தில் அம்பிகையின் சக்தி மூலமும், ஈசனின் நெற்றிக்கண்ணின் வெப்பத்தில் இருந்தும் கரிய நிறமுள்ள ஓர் குழந்தை பிறந்தது. பிறக்கும்போதே ஜடாமுடி, தாடி, மீசை எனப் பயங்கரத் தோற்றத்துடன் பிறந்த அந்தக் குழந்தையின் அழுகையோ நாராசமாக இருந்தது. சிரித்தால் அகிலாண்டமும் நடுங்கியது. ஆனால் என்ன இது? இந்தக் குழந்தைக்குக் கண்களே இல்லையே? ஆம்! அந்தக் குழந்தை ஈசனின் கண்களை அன்னை மூடிய தருணத்தில் பிறந்ததால் பார்வை அற்று அந்தகனாய் இருந்தது. அந்தகன் எனவே பெயரிட்டார்கள் அந்தக் குழந்தைக்கு.

பிள்ளைவரம் வேண்டிய இரண்யாட்சனிடன் ஈசன், “உனக்குப் பிள்ளை பெறும் பேறு கிடையாது. ஆனால் எவராலும் வெல்லமுடியாத வலிமை உள்ள இந்தக் குழந்தையை உன் பெற்ற மகனைப் போல் வளர்த்துவா. “ என்று சொல்லி அந்தகாசுரனைக் கொடுத்தார். அந்தகனும் இரண்யாட்சனிடம் செல்வாக்கோடு வளர்ந்து வந்தான். இரண்யாட்சனோ தனக்கு அனைத்துச் செல்வங்களும் கிடைத்துவிட்டது என்ற மமதை தலை மேல் ஏற, அனைத்து மக்களையும், தேவர்களையும் துன்புறுத்தி வந்தான். இந்தப் பூமியையே ஒரு பாய்போல் சுருட்டிக் கடலுக்கு அடியில் கொண்டு போய் மறைத்துவிட்டான். அனைவரும் பிரம்மாவிடமும், விஷ்ணுவிடமும் முறையிட, விஷ்ணுவும் வராஹ அவதாரம் எடுத்துக் கடலுக்கடியில் இருந்த பூமியை மீட்டுக் கொண்டுவந்து சேர்த்தார். இரண்யாட்சனும் அழிக்கப் பட்டான். இரண்யாட்சனின் மகனாக அந்தகன் அங்கீகரிக்கப் பட்டிருந்தாலும், அவனுக்குப் பார்வை இல்லாமையால் அவனால் இரண்யாட்சனுக்குப் பின் அரசாளமுடியவில்லை. இரண்யகசிபு முடிசூட்டப் பட்டான். அவனோ அண்ணனுக்கு நான் சளைத்தவனோ, இளைத்தவனோ அல்ல என்னும் நோக்கோடு செயல்பட்டான். அனைவரையும் தன்னைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது எனப் பணித்தான். மீறினவர்களைத் தண்டித்தான்.

ஆனால் இரண்யகசிபுவின் சொந்த மகனான பிரஹலாதனோ விஷ்ணுவைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று சொல்லிவந்தான். மகனுக்குப் பலவிதங்களிலும் தண்டனை கொடுத்த இரண்யகசிபு, கோபத்துடன்,” எங்கே இருக்கிறார் உன் விஷ்ணு? காட்டு, பார்க்கலாம்!’ என்று கோபத்துடன் அருகே இருந்த தூணை உதைக்க, மஹாவிஷ்ணு, நரசிம்மமாக அவதாரம் செய்து அவனை அழித்து பிரஹலாதனுக்கு முடிசூட்டினார். இவ்விதம் பார்வை இல்லாத காரணத்தால் அரசாட்சி கிடைக்கவில்லை என்பதால் மனம் நொந்த அந்தகன் பிரம்மாவை தியானித்துக் கடுந்தவம் மேற்கொண்டான். பிரம்மவால் பல வரங்கள் கிடைத்தன. முக்கியமாய் அவனுக்குப் பார்வையும், அழகான மேனியும் பிரம்மா கொடுத்தார். ஆனால் அந்தகாசுரன் சாகாவரமும் கேட்க அதை மறுத்தார் பிரம்மா. பின்னர் அந்தகன் தந்திரம் செய்வதாய் நினைத்துக் கொண்டு, “ எனக்குத் தாயாக இருக்கக் கூடிய பெண் ஒருத்தியால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும். அதுவும் காரணமின்றி நிகழக்கூடாது. அந்தத் தாய் மேல் நான் மோகம் கொள்ளும் சந்தர்ப்பத்தில் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும்.” என்று கேட்டுக் கொண்டான். தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்ட பிரம்மா, அப்படியே வரம் தந்தார்.

தாய் மேல் எவனாவது மோகம் கொள்ளுவானா? அல்லது தாய் தான் தன் குழந்தையை அழிப்பாளா? ஆகவே, நம்மை எவராலும் வெல்லமுடியாது என்றே அந்தகாசுரன் திடமாக எண்ணினான். பார்வையும் கிடைத்தது. அழகான உருவும் பெற்றான். பூலோக அரசர்கள் அனைவரையும் வென்றான். மந்தரமலை அடிவாரத்தில் தனக்கெனத் தனியாக ஒரு நகரை உருவாக்கிக் கொண்டான். தன் விருப்பம் போல் வாழத் தொடங்கினான். அவன் மந்திரிகள் அவனுக்கு துர்போதனைகளே அதிகம் சொல்லிக் கொடுத்து அவன் மீள முடியாமல் செய்தும் வந்தனர். மதுவும், மாதுவுமே அந்தகனுக்கு முக்கியமான சுகபோகம் எனச் செய்தனர். அவன் மோகத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. மந்திரிகள் ஒரு நாள் காட்டில் ஒரு குகையில் முனிவர் ஒருவர் தன் மனைவியோடு இருப்பதைக் கண்டனர். முனி பத்தினியின் தெய்வீக அழகு அவர்கள் கண்களைக் கவர, தங்கள் மன்னனுக்கு ஏற்ற பெண் இவள் என எண்ணி அந்தகனிடம் போய் அவள் அழகை வர்ணித்தனர். ஆனால் அந்தப் பெண்ணோ அழகில் மட்டும் தெய்வீகம் இல்லை, உண்மையாகவே தெய்வப் பெண்ணாம் அன்னையவள் அங்கே ஈசனோடு வந்திருந்தாள். அதை அறியாமல் அந்தகனுக்கு அந்தப் பெண்பால் மோகத்தை மூட்டிவிட அந்தகனும் மோகம் தலைக்கேறியவனாய் குகைக்கு வந்து அந்தப் பெண்ணைக் கவர்ந்து செல்ல நினைத்தான். முனிவரை எதிர்த்து அவனால் முடியவில்லை.

தனி ஒருவனால் முடியாமல், தன் சேனைகளைத் திரட்டிக் கொண்டு வந்தான். முனிவருடன் போரிட்டான். ஆனால் சர்வேசனோ அவனது படைகளைச் சின்னாபின்னமாக்கியதோடு அந்தகனையும் தாக்கினார். ஓட்டம் பிடித்தான் அந்தகன். அந்தகனுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார் ஈசன். தேவியாலேயே அது முடியவேண்டும் என்பதும் உணர்ந்து தேவியைக் குகையிலேயே தனித்திருக்க வைத்துவிட்டுத் தாம் மட்டும் நந்தியெம்பெருமானோடு கிளம்பிச் சென்றார். இங்கே அன்னைக்குத் துணையாக சப்தகன்னியரும் இருந்தனர். அந்தகனுக்கு தேவி தனித்திருக்கும் செய்தி கிடைத்து மீண்டும் ஒரு பெரிய சேனையோடு வந்தான். போர் நடந்தது. அந்தகனின் சேநாதிபதியான “விசுஸன்” என்பவன் பெரிய பாம்பாக மாறி வந்து தேவிக்குத் துணையாகப் போரிட்ட அனைவரையும் விழுங்க, யோக சக்தியால் அறிந்த ஈசன், அம்பினால் விசுஸனை அழித்தார். எனினும் அசுர சக்தி வளர்ந்தது. சுக்ராசாரியார் தனது “ம்ருத்யுஞ்ச மந்திர”த்தின் மஹிமையால் அசுரர்களைப் பிழைக்க வைத்துக் கொண்டிருந்தார். தேவர்கள் சுக்ராசாரியாரைத் தந்திரமாய்ப் பிடித்து ஒரு பழமாக மாற்றி ஈசனிடம் கொடுக்க அவரும் பழத்தை விழுங்கிவிட்டார். அசுர சேனையும் பாதிப்படைந்தது. ஆனாலும் அந்தகன் தன் மாயையால் மும்மூர்த்திகளைப் போன்ற தோற்றம் எடுத்து வந்து அனைவரையும் குழப்பினான். முடிவு நெருங்குவதை நினைத்த ஈசன் தன் வலத்தோளில் இருந்து தன் சக்தியைத் தோற்றுவித்தார். பல முகங்கள், பல நாக்குகளோடு தோன்றிய அந்தச் சக்தியானது மேலும் பல சக்திகளை உண்டாக்கி, அசுரர்களின் ரத்தம் தரையில் விழுமுன் உறிஞ்சிக் குடித்தனர். இதனால் அசுர ரத்தத்தில் இருந்து மேலும் அசுரர்கள் உருவாகாமல் அசுர சேனை அழிய ஆரம்பித்தது. விரைவில் சிவனுடன் தனித்துப் போரிட வேண்டி வந்தது அந்தகனுக்கு.

அந்தகனை வீழ்த்தித் தன் சூலத்தால் அவன் உடலில் குத்தித் தூக்கினார் ஈசன். பின் சூலத்தைத் தன் அம்சம் ஆன ருத்ரனிடம் அளிக்க, அவரும் அதை ஏந்திய வண்ணம் உலகை வலம் வந்தார். அந்தகனின் ரத்தம் பூமியில் விழுந்தால் மீண்டும் அசுர குலம் தலை எடுக்கும் என்பதால் அவரோடு கூடவே ஒரு பூதம் அந்த ரத்தத்தைக் குடித்துக் கொண்டே வந்தது. சூலத்தில் தொங்கிய அந்தகன் இறக்கவில்லை. ரத்தம் உறிஞ்சப் பட்டது. ம்ருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தான். மேலும் சிறந்த சிவ பக்தன் ஆனதால் சிவநாமத்தையும் பஞ்சாக்ஷரத்தையும் உச்சரித்தான். ஆயிரம் வருடங்கள் இவ்வாறு சிவனாருக்குக் குடை போல் வலம் வந்த அந்தகன் அதன் காரணமாகவே முக்தியும் பெற்றான். அவனை “ப்ரிங்கிரீடன்” என்ற பெயரில் தன் சிவகணங்களில் ஒருவராக திருக்கைலையில் இருக்குமாறு அருளுகின்றார். இந்த அந்தகாசுர வதம் புரிந்த மூர்த்தியை அந்தகாசுர சம்ஹாரர் என்ற பெயரில் அழைக்கின்றனர். இந்த மூர்த்தியின் வடிவம் திருக்கோயிலூரில் காணக்கிடைக்கும் என்று சொல்லப் படுகிறது.

அறையார்கழ லந்தன்றனை அயின்மூவிலை யழகார்
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
முறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
முறையான்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. திருஞாநசம்பந்தர் தேவாரம்


ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை
நான்முகனும் அறியாத நெறியார் கையிற்
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்
தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக்
காலத்தா லுதைசெய்து காதல் செய்த
அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்
பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. ஆறாம் திருமுறை, நாவுக்கரசர் தேவாரம்


காஞ்சிக்கருகே திருப்புட்குழி என்னு ஊர் பெயர் மாறி மணிகண்டீஸ்வரர் கோயில் என்னும் பெயரால் வழங்கப் படுகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் போன்ற ஊர்களில் அந்தகாசுர வதம் பற்றியும் அவனை அழித்த பைரவர் பற்றியும் காணலாம். அருணகிரிநாதரின் திருவேற்காடு திருப்புகழிலும் அந்தகாசுர வதம் பற்றிய குறிப்பைக் காணலாம்.

பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர
பாசந்தா திருமாலின் ...... மருகோனே

பதம் பிரித்துப் பொருளோடு:


பாடு அம்பு ஆர் திரி சூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே ... பெருமை வாய்ந்த அம்பு போல கூர்மை வாய்ந்த முத்தலைச் சூலத்தால், மேம்பட்டு நின்ற அந்தகாசுரனை* வருத்தின வீரனாகிய சிவன் மீது அன்பைப் பொழியும் திருமாலின் மருகனே,//

ஈசனின் வீரட்டானத் திருத்தலங்களில் திருக்கோயிலூர் இரண்டாவதாய்ச் சொல்லப் படுகிறது. அந்தகாசுரனைச் சூலத்தால் ஈசன் குத்தியபோது சிந்திய ரத்தத்தில் இருந்து அசுரர்கள் மேன்மேலும் உற்பத்தி ஆகவே காளி கபாலத்தால் அதை ஏந்துகிறாள். சிந்திய ரத்தக்கோடுகள் குறுக்கும், நெடுக்குமாய் எட்டுத் திசைகளிலும் விழுந்து 64 பதங்களாய் விழ, ஈசன் ஒவ்வொரு பதத்திலும் தன் விஸ்வரூப அம்சமான பைரவரைப் பிரதிஷ்டை செய்கிறார். 64 பைரவர்களாலும் அந்தகாசுரன் அழிக்கப் படுவதாய் ஐதீகம். வீடுகட்ட வாஸ்து புருஷன் நித்திரை விடும் நாளில் ஆரம்பிப்பது வழக்கம். இந்த 64 பைரவர்களுக்கும் செய்யப்படும் வழிபாடே வாஸ்து சாந்தி நிவர்த்தி எனப்படும். இவர்களுக்குச் செய்யப் படும் வழிபாடே வாஸ்து பூஜை என்றும் சொல்லப் படும். அடுத்த பதில் பைரவர் அஷ்டகமும், பஞ்சரத்னமும் ஒரு பார்வை. பைரவர் பற்றித் தனியாகப் பதிவு வரும்.

Sunday, August 15, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! வீரபத்திரர்!

வீரபத்திரர்:-
சிவபெருமானின் வடிவங்களில் மிகவும் முக்கியமானது வீரபத்திரவடிவம். தக்ஷனின் யாககுண்டத்தில் விழுந்து இறந்த அன்னையின் முடிவுக்கு தக்ஷனைத் தண்டிக்க எண்ணிய ஈசன் தன்னில் இருந்து உருவாக்கிய வடிவே வீரபத்திர வடிவம். தக்ஷன் கதை நமக்கெல்லாம் நன்கு தெரியும். அருமையும் பெருமையுமாக வளர்த்த தன் மகள் தாக்ஷாயணியை ஈசனுக்கு மணம் புரிவித்ததில் தக்ஷனுக்கு இஷ்டமே இல்லை. பித்தன் ஆன ஈசனுக்குப் போய் என் மகளைக் கொடுக்கும்படி நேர்ந்துவிட்டதே எனப் புலம்பினான். மேலும் முதல்முறை மணம் செய்விக்க ஏற்பாடுகள் செய்தபோது ஈசன் மறைந்து போக, மறுமுறை மீண்டும் தவம் செய்து தாக்ஷாயணி ஈசனை அடைந்திருந்தாள். ஆனால் தக்ஷனுக்குத் தெரியாமலேயே இது நடக்க நேரிட்டது. அதிலும் தக்ஷனுக்குக்கோபம். ஆனாலும் தேவர்களால் சமாதான மொழிகள் கூறப் பட்டு ஈசனையும், அன்னையையும் பார்க்க கைலை வந்த தக்ஷன் பூதகணங்களால் தடுக்கப் படவே. தக்ஷப் பிரஜாபதியான என்னை இகழ்ந்த உங்கள் ஈசனை நான் இனி வணங்க மாட்டேன். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் என்னை வணங்குகின்றனர். சுடுகாட்டில் சாம்பலைப் பூசிக் கொண்டு திரியும் உங்கள் சிவன் ஒரு பித்தன். நான் மட்டுமில்லாமல் இனி உலகில் எவரும் ஈசனை வணங்கக் கூடாது.” என்று கூறி விட்டுத் திரும்பித் தன் நாட்டு மக்களுக்குக் கட்டளையும் போட்டான்.

அதன் பின்னர் தந்தையான பிரம்மா செய்த யாகத்துக்கு ஈசன் சார்பில் வந்திருந்த நந்தி தேவரையும், ஈசனையும் இழிவு செய்தும் பேசினான் தக்ஷன். அதோடு நில்லாமல் இனி எந்த வேள்விக்கும் ஈசனை அழைக்கக் கூடாது. வேத மந்திரங்களையே மாற்றவேண்டும் எனவும் தந்தையிடம் சொன்னான். நந்திதேவர் கோபத்துடன் வந்த இடத்தில் அவனுடன் தகராறு செய்யவேண்டாம் என்ற எண்ணத்தில் செல்வதாய்க் கூறிவிட்டு தக்ஷனுக்கு விரைவில் அழிவு ஏற்படும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அடுத்து தக்ஷன் யாகம் செய்ய முற்பட்டு அதற்கு ஈசனைத் தவிர அனைவரையும் அழைத்தான். ததீசி முனிவர் ஈசனை விலக்கிச் செய்யும் யாகத்தால் பலன் இல்லை எனக் கூறிவிட்டு அந்த யாகசாலையில் இருந்து சென்றுவிட்டார். மேலும் பல துர்சகுனங்கள் ஏற்பட்டாலும் விடாமல் தக்ஷன் யாகத்தைத் தொடர்ந்தான். நாரதரால் விஷயம் கேள்விப் பட்டு தாக்ஷாயணி யாகத்துக்குச் சென்று தந்தையை உண்மையை உணர்ந்து கொள்ளும்படி வேண்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அங்கே வந்து சேர்ந்தாள். தாக்ஷாயணியையும் பெற்ற மகள் எனக் கூடப் பார்க்காமல் இகழ்ந்த தக்ஷன், ஈசனையும் அவ்வாறே இகழ்ந்து பேசினான். கோபம் கொண்ட அன்னை கைலையை அடைந்து நடந்த விஷயங்களைக் கூற ஈசனின் கழுத்தின் விஷத்தின் ஒரு கூறு அவரின் நெற்றிக்கண் வழியே ஆயிரம் முகங்களுடனும், இரண்டாயிரம் கரங்களோடும் தோன்றிய வீர புருஷனே வீரபத்திரன்.அம்மையின் கோபத்தில் இருந்து தோன்றியவளே பத்ரகாளி. இருவரும் தக்ஷனின் யாகசாலையை அடைய தக்ஷன் வீரபத்திரரை யார் எனக் கேட்க, தாம் சிவகுமாரன் எனவும் யாகத்தின் அவிர்பாகத்துக்காக வந்திருப்பதாயும் கூற தக்ஷன் தர மறுக்கிறான். கோபம் கொண்ட வீரபத்திரர் யாகசாலைக்குள் புகுந்து தாக்குகின்றார்.

தேவர்கள் மேலேயும் தாக்குதல் நடத்தி குபேரன், அக்னி, யமன், இந்திரன், நிருதி போன்றவர்களுக்கு மேனியின் ஒரு உறுப்பு இழக்க நேரிடுகிறது. அப்படியும் கோபம் தணியாது இருந்த வீரபத்திரர் தக்ஷனின் தலையை அறுத்துக் கீழே விழுமுன் தடுத்து அக்னியிடம் கொடுத்து உண்ணச் செய்தார். அப்போது அங்கே ஈசன் விடையேறு வாகனனாகத் தோன்றி அனைவரையும் உயிர்ப்பித்தார். வீரபத்திரரை நோக்க அவரும் யாகப் பசுவாக வந்திருந்த ஒரு செம்மறி ஆட்டின் தலையை வெட்டி தக்ஷன் உடலில் பொருத்த அன்றிலிருந்து தக்ஷனுக்கு ஆட்டுத் தலை கிடைக்கிறது. மனிதத் தலையோடு ஆணவம் பிடித்துத் திரிந்த தக்ஷன் ஆட்டுத் தலை பொருத்தப் பட்டதில் மனம் மாறி ஈசனைத் துதிக்கிறான். வீரபத்திரரும், காளியும் கைலை செல்கின்றனர். இந்த வடிவே ஈசனின் வீரபத்திர வடிவு. சிவனின் அட்ட வீரட்டானங்களில் இந்த தக்ஷனின் வதமும் ஒன்று என்றாலும் இதை ஈசன் நேரடியாகத் தான் நிகழ்த்தாமல் வீரபத்திரரைத் தோற்றுவித்து அவர் மூலமே நடத்திக் கொண்டார்.

வட மாநிலத்தில் ஹரித்வாரில் தான் தக்ஷன் யாகம் செய்ததும், தாக்ஷாயணி யாக குண்டத்தில் விழுந்ததும் நடந்ததாய்க் கூறுகின்றனர். கங்கால் என்ற பெயரில் உள்ள இடத்தில் தக்ஷேஸ்வர மஹாதேவர் என்ற பெயரில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார். இங்கே தான் வீரபத்திரரும், காளியும் தக்ஷனையும் அவன் கூட்டத்தாரையும் அழித்ததாயும் கூறுகின்றனர். தக்ஷன் சாகாவரம் பெற்றிருந்ததால் அவன் தலையை வெட்டி அதற்குப் பதிலாக ஆட்டுத் தலையை வைத்ததாகவும் கூறுவார்கள். மேலும் இங்கே சதிகுண்டம் என்ற பெயரிலேயே குண்டம் ஒன்றும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் திருப்பறியலூர் தான் அட்ட வீரட்டானத் தலங்களில் தக்ஷனின் தலையைக் கொய்த இடமாகக் கருதப் படுகிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் ஒன்றும் இந்த ஊரைக் குறித்துக் காணக் கிடைக்கிறது.

1437.
கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.
1.134.1
1438

மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.மாணிக்க வாசகரோ தம் திருவுந்தியாரில் தக்ஷன் தலையைக் கொய்தது பற்றிக் கூறியதாவது:

"சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வபாடி உந்தீ பற
உருத்திர நாதனுக்கு உந்தீபற.

Friday, August 13, 2010

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! திரிபுராந்தகர்!

அப்பா சம்ஹாரத்திற்குப் பயணப்படும்போது பிள்ளையை வணங்கிச் சொல்லவில்லையாம். அதனால் தேர் அச்சு முறிந்துவிட்ட்தாய்க் கூறுவார்கள். விநாயரை வணங்காமல் அவரிடம் உத்தரவு ஈசன் சம்ஹாரத்திற்குக் கிளம்பித் தேரில் காலை வைத்ததுமே அச்சு முறிந்த்தாம். அந்த இடம் சென்னைக்கு அருகே திண்டிவனம் செல்லும் வழியில் உள்ள அச்சிறுபாக்கம் என்னும் ஊர் எனச் சொல்வார்கள். அங்கே உள்ள தலபுராணமும் அவ்வாறே கூறுகிறது. அங்கே உள்ள விநாயகருக்கும் அச்சிறுத்த விநாயகர் என்ற பெயர் எனவும், ஈசன் அங்கே உள்ள மலைமீது லிங்கமாய் எழுந்தருளியிருப்பதாயும் கூறுகின்றனர். இங்கே திரிநேத்ரதாரி என்ற பெயரிலேயே ஒரு முனிவர் வந்து தவம் செய்து ஈசனின் திரிபுர சம்ஹாரக் கோலத்தைக் கண்டு களித்ததாயும் வரலாறு சொல்கின்றது. இந்த்த் தலம் மிகப் பழைய தலம் என்பதற்குத் திருஞானசம்பந்தரின் பாடல் ஒன்றே போதும். பின்னர் விநாயகரை வணங்கிவிட்டு ஈசன் கிளம்பிச் சென்று திரிபுர சம்ஹாரத்தை முடித்ததாய்ச் சொல்வார்கள்.

திரிபுர சம்ஹாரம் நிகழ்ந்ததாய்ச் சொல்லப் படும் இடங்கள் வாரணாசி மற்றும் திரியம்பகேஸ்வரர் குடி கொண்டிருக்கும் ஊரான திரியம்பகம் எனப் பரவலாகக் கருதப் படுகின்றது. ஆனால் “தென்னாடுடையான்” என நாம் போற்றும் ஈசன் இங்கே தமிழகத்தில் திருவதிகை வீரட்டானத்தில் நிகழ்த்தினார் எனத் திருவதிகைத் தலபுராணம் கூறுகின்றது. அட்ட வீரட்டானங்களில் ஒன்று திருவதிகை வீரட்டானம். இங்கே வைகாசி மாதத்தில் திரிபுரசம்ஹார வைபவம் நடைபெறுவதாயும் கேள்விப் படுகிறோம்.

ஈசனுக்குச் சரமாய் இருந்த மஹாவிஷ்ணு இங்கே வீரட்டானேஸ்வரர் கோயிலுக்கு அருகே அதிஉக்ர நரசிம்மராக சரநாராயணப்பெருமாள் என்ற பெயரிலே காட்சி கொடுப்பதாயும் சொல்கின்றனர். திரிபுரம் எரிக்க ஈசன் கை அம்பின் சரமாய்ச் செயல்பட்ட களைப்பு தீர அங்கே அதி உக்ர நரசிம்மர் சயன கோலத்தில் காட்சி கொடுப்பதாயும், வேறு எங்கேயும் நரசிம்மரை சயன கோலத்தில் பார்க்க முடியாது என்றும் கூறுகின்றனர். திரிபுர சம்ஹாரத்திற்குப் பின்னர் ஈசன் ஆடிய ஆட்டத்திற்குப் பாண்டரங்கம் எனவும் கொடுகொட்டி எனவும் கூறப்படுகின்றது. திரிபுர சம்ஹாரக் கோலம் தஞ்சைப் பெரிய கோயிலில் ஓவியமாய்க் காணமுடியும்.

Wednesday, July 28, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! திரிபுராந்தகர்!

இறைவனை வழிபட்டுத் தவங்கள் பல புரிந்து பெற்ற வரங்களை உலக நன்மைக்காக அன்றித் தன் தனிப்பட்ட நலத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது. ஆனால் திரிபுராசுரர்களோ தங்கள் மிதமிஞ்சிய ஆணவத்தினால், தங்களை மிஞ்சி எவரும் இல்லை என நினைத்தனர். அதற்கு எதிராக வந்த அனைவரையும் அழித்தனர். தங்களுக்குள்ளே இருந்த அன்பு, அறிவு, ஆற்றல் மூன்றையும் நல்வழியில் பயன்படுத்தாது ஆணவம், கன்மம், மாயை போன்றவற்றின் துணையோடு தீயவழியில் சென்றனர். அவர்களின் அந்த ஆணவம்,கன்மம், மாயை போன்றவற்றை அழிப்பதே திரிபுர சம்ஹாரத்தின் தத்துவம். இன்னும் விளக்கமாய்க் கூறுவதென்றால் நம்முடைய அறிவையும், ஆற்றலையும், அதனால் விளையும் அன்பென்னும் அரிய இன்பத்தையும் ஆணவமும், கன்மமும், மாயையும் முப்பெரும் கோட்டைகளாகச் சூழ்ந்து கொண்டு மறைக்கிறது. இந்த ஆணவத்தினால் நம்முள்ளே ஊறும் அன்பு ஊற்றை, அதன் பக்திப்பெருக்கை உணர முடிவதில்லை நம்மால். அப்படி உணர்ந்த உயிர்கள் பெறும் தன்னிலையை உணர்ந்த அக்கணமே ஈசன் அவர்களின் முப்பெரும் மலங்களையும் சுட்டெரிக்கிறான். அவர்களை அன்பு மயமாக்கித் தன் வயப் படுத்திக்கொள்கிறான். இந்த அரும்பெரும் தத்துவமே திரிபுர சம்ஹாரத்தின் மூலம் சொல்லப் படுகிறது.

முப்புரங்களையும் ஈசன் எரித்து மூன்று சகோதரர்களையும் அழித்த பின்னும் மூவரின் ஆன்மாக்களும் விடாமல் ஈசனைக் குறித்துக் கடுந்தவம் செய்தன என்றும், அவர்களின் இந்த இடைவிடாத சிவ வழிபாட்டின் காரணமாயும், அவர்களுக்கு முக்தி கொடுக்கும் நேரம் வந்துவிட்டதைக் கருதியும் ஈசன் தாரகனையும், வித்யுன்மாலியையும் துவாரபாலகர்கள் ஆக்கியதாயும், கமலாட்சனை, ஈசனின் வாத்தியம் ஆன “குடமுழா” எனப்படும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கும் பேறு கொடுத்துக் கடைத்தேற்றியதாயும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தனது திருப்புன்கூர் தேவாரத்தில் கூறி இருப்பதாயும் தெரிய வருகிறது.

மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே பாடல் எண் 8

காவலுக்கு அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்திக்கொண்டு, அன்பைத் தனது ஆந்ந்த தாண்டவத்திற்கு இசைக்கும் பேற்றையும் அருளிச் செய்தார் என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் கூறுகிறார். இரண்டாம் தந்திரம் பாடல் எண் 5, பதிவலியில் வீரட்டம் எட்டு என்னும் தலைப்பின் கீழ் வரும் பாடல் கீழே.

அப்பணி செஞ்சடை ஆகி புராதனன்
முப்புரம் செற்றன்ன என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவன மும்மல காரியம்
அப்புரம் எய்தமை ஆர் அறிவாரே!


மாணிக்கவாசகப் பெருமான் தனது ஞாந வெற்றித் தொகுப்பில் திருவுந்தியாரின் முதல் பாடலில்,
“வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீ பற
ஒருங்குடன் வெந்தவா(று) உந்தீ பற.”
என்கிறார்.

மேலும் அம்பு இரண்டு, மூன்றெல்லாம் இல்லை. ஒரே ஒரு அம்புதான். சாமானிய அம்பா அது? சாட்சாத் மஹாவிஷ்ணுவாச்சே? அதிஉக்ர நரசிம்மக் கோலத்தில் அன்றோ உள்ளார்? அந்த ஒரு அம்பிலேயே முப்புரங்களும் அழிந்தன.

“ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை உந்தீபற.”

அது மட்டுமா? தேவர்கள் அமைத்துத் தந்த தேரில் ஈசன் திருவடியை வைத்ததுமே தேரின் அச்சு முறிந்ததாமே? இது என்ன புதுக்கதை? நாளை பார்ப்போமா? அதற்கான பாடல் இதோ!
“தச்சு விடுத்தலும் தாம் அடி இட்டலும்
அச்சு முறிந்ததென்(று) உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீ பற.”

Tuesday, July 27, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! திர்புராந்தகர்!


அனைவரும் ஈசனிடம் சென்று சிறந்த சிவபக்தர்கள் ஆன தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகியோர் தாங்கள் வாங்கிய வரங்களால் அனைவரையும் பயமுறுத்துவதையும், கொடுமைகள் செய்வதையும் எடுத்துரைத்தனர். அவர்களின் சிவபக்தியே அவர்களைக் காத்தும் வருவதாயும், ஈசனால் மட்டுமே இதற்கு ஒரு வழி காணமுடியும் என்றும் வேண்டிக் கேட்டனர். புன்னகை புரிந்த ஈசன் அவர்களுக்குத் தேர் ஒன்று விசித்திரமான முறையில் தயாரிக்கக் கட்டளையிட்டார். மேலும் தேவர்களின் சக்தியில் சரிபாதியைத் தனக்குத் தருமாறும் கேட்டார். அவ்விதமே விசித்திரமான தேர் தயாராயிற்று. பூமியானது தேரின் தட்டாகவும், பாதாளலோகங்கள் ஏழு, கீழேயும், வானுலகங்கள் ஏழு மேலேயும் அமைந்தன. விந்தியமலையானது தேரின் குடையாக வந்து நின்றது. தேருக்குச் சக்கரங்கள் தேவையே? சூரிய, சந்திரர் முன் வந்தனர். இருவரும் சக்கரங்கள் ஆக, தேரின் அச்சாக உதயமலையும், அஸ்தமன மலையும் அமைந்தன. நான்கு வேதங்களும் தேரின் நான்கு குதிரைகளாக மாற, தேரின் கால்களாக நான்கு பருவங்கள் அமைந்தன. பிரமன் தானே சாரதிப் பொறுப்பை ஏற்றார். பிரணவமே சாட்டையாக அமைந்தது. சப்த நதிகளும் சாமரம் வீசினர். எட்டு வகை நாகங்களும் தேரைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து கொண்டன. திருக்கைலையில் இந்த்த் தேர் நிறுத்தப் பட்டது. தேவர்கள் அனைவரும் தங்கள் சக்தியில் சரிபாதியை ஈசனுக்கு அளித்தனர்.

எல்லாம் ஆயிற்று! ஆயுதம்?? ஈசன் என்ன சொல்லப் போகிறாரோ என அனைவரும் காத்திருக்க, மேருமலை வில்லாக வளைக்கப் பட்டது. பாம்பரசன் வாசுகியை அதில் நாணாகப்பிணைத்தார். திருமால் அம்பின் தண்டாக மாறச் சம்மதிக்க, அம்பின் கூர் நுனியில் அக்னி குடி கொண்டான். அம்பின் வால்பக்கம் சிறகாக வாயு அமர, (அப்போத் தானே அம்பு வேகமாய்ப் பறக்கும்?) ஆயுதமும் தயார் செய்யப் பட்டது. உமையொருபாகன் உமையையும் கூட அழைத்துக்கொண்டே அந்தத் தேரில் அமர்ந்தார். தேரும் கிளம்பிற்று. முப்புரங்களும் கூடும் காலத்தை எதிர்நோக்கிச் சென்றது தேர். சிவனடியார்களும், சித்தர்களும், ரிஷி முனிவர்களும் வாழ்த்திப் பாட , அனைவரும் வில்லில் இருந்து அம்பு கிளம்பி முப்புரத்தையும் தாக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் நல்ல மழைக்காலத்தில் அபிஜித் முஹூர்த்தம் என்று சொல்லப் படும் நேரத்தில் முப்புரங்களும் கூடி நிற்க, ஈசன் அந்த முப்புரங்களையும் பார்த்துத் தனது “அட்டஹாசம்” என்னும் சிரிப்பொன்றை உதிர்த்தார். முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. அனைவரும் திகைத்தனர். என்றாலும் அசுரர்கள் இறக்கவில்லையே எனக் கவலையுற ஈசன் வில்லில் இருந்து அம்பை எய்தார். அது திரிபுரத்தை ஒட்ட அழித்ததோடு மட்டுமின்றி அசுரர் மூவரையும் அழித்தது.

படம் அனுப்பி வைத்த நடராஜ தீக்ஷிதருக்கு நன்றி.

Sunday, July 25, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! திரிபுராந்தகர்!


திரிபுர சம்ஹாரர்: அடுத்து நாம் பார்க்கப் போகிறவர் அநேகமா அனைவரும் அறிந்த ஒருவரே. இந்தத் திரிபுர சம்ஹாரத்தைப் பற்றிப் பேசாத புராணங்களோ, இலக்கியங்களோ இல்லை. சங்க இலக்கியமான பரிபாடலில், புறநானூற்றில், கலித்தொகை, திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம் போன்றவற்றைத் தவிரத் தேவாரப் பாடல்களிலும் திரிபுர சம்ஹாரம் பற்றிய குறிப்புகளைக் காணலாம். ஜாலந்தர வதத்தில் விஷ்ணுவுக்கே உரிய சக்கரத்தைத் தாங்கிக் கொண்டு காட்சி அளித்த ஈசன் இங்கேயும் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீராமாவதாரத்தின் முக்கிய ஆயுதமான வில்லைத் தாங்கிக் காட்சி அளிக்கிறார். முதலில் திரிபுரர்களான மூன்று அசுரர்களையும் பற்றிப் பார்ப்போமா?

தாரகன் என்னும் அசுரனின் மகன் தாரகாசுரன். தாரகாசுரன் கடுமையாகத் தவம் செய்து பெற்ற வரங்களைச் சரியான முறையில் பிரயோகிக்காமல் தேவர்களைத் துன்புறுத்துவதிலேயே இன்பம் கண்டு தன் வரங்களைப் பிரயோகிக்க, ஆறுமுகனால் அழிக்கப் பட்டான். அவனுக்கு மூன்று புதல்வர்கள். வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகியோர் மூவரும் தங்கள் தகப்பனைப் போலவே கடும் தவம் செய்தனர். அதன் மூலம் பிரம்மனிடம் பல வரங்களை வேண்டினார்கள். தவம் செய்தால் வரங்கள் கேட்கும்போது கொடுத்தே ஆகவேண்டும். தவத்தின் பலன் அது. மறுக்க முடியாது. ஆகவே பிரம்மனும் வரங்களைக் கொடுத்தான். ஈசன் ஒருவனைத் தவிர மற்ற எவராலும் தங்களை அழிக்க முடியாது எனவும் பெருமை கொண்டனர். மேலும் மேலும் வரங்களைப் பெறும் ஆசையில் கொஞ்சம் வித்தியாசமான ஒரு வரத்தையும் கேட்டனர். அதுதான் எவராலும் அழிக்க முடியாத மூன்று நகரங்களைத் தங்களுக்குத் தர வேண்டும் என்பது. அந்த நகரம் பூமியில் இருக்கக் கூடாது என்றும், தாங்கள் விரும்பும்போது பறந்து வேறு இடத்திற்குச் சென்றுவிடவேண்டும் என்றும் வேண்டினார்கள்.

அவ்வாறே மூன்று கோட்டைகள் கிடைத்தன அவர்களுக்கு. மூன்றும் பறக்கும் வல்லமை கொண்டது. இந்த மூன்று கோட்டைகளின் அதிசயம் என்னவெனில் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே மூன்றும் ஒரே இடத்தில் வந்து சேர்ந்து கொள்ளும். அது வரையிலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் இருக்கும், அல்லது பறந்து கொண்டிருக்கும். ஒரே இடத்தில் சேரும்போது தான் அந்தக் கோட்டைகளை அழிக்க முடியும். அதுவும் சாமானியர் எவராலும் முடியாது. அனைத்துத் தேவர்களின் பலத்திலும், அனைத்து மூர்த்திகளின் பலத்திலும் சரிபாதியைத் தன்னில் கொண்டவர் எவரோ அவரே அழிக்க முடியும். அதுவும் ஒரே அம்பினால். மற்றொரு அம்பைப் போட முடியாது. முதல் அம்பிலேயே அழித்துவிடவேண்டும். இத்தனையும் கேட்டுப் பெற்றுக் கொண்டனர் மூவரும். இதில் பொன்னாலான கோட்டை தாரகாட்சனுக்கும், வெள்ளிக்கோட்டை கமலாட்சனுக்கும், இரும்புக் கோட்டை வித்யுன்மாலியும் பெற்றதாய்ச் சொல்வார்கள். இந்தக் கோட்டைகள் சகல வசதிகளும் நிரம்பி இருந்தது. அவர்களுக்குத் தேவையான வீடுகள், மாளிகைகள், கோயில்கள் என அனைத்தும் இருக்க, மூவரும் மகிழ்வோடு வாழ்ந்து வந்தனர். மூவரும் சிறந்த சிவபக்தர்களாகவும் இருந்தனர். தேவைப்பட்ட போது கோட்டையோடு பறந்து வேறிடத்திற்குச் சென்றனர்.

பறக்கும் கோட்டைகள் மூன்றும் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்தன. அவை பறக்கும்போது விண்ணிலும் மண்ணிலும் பலருக்கும் அவதி. பூமியில் இறங்கினாலோ மானிடருக்குக் கஷ்டம். மூவராலும் அழிக்கப் படுவார்கள். விண்ணில் இறங்கினாலோ தேவர்கள் அனைவரும் படாத பாடு படுவார்கள். எவராலும் எதுவும் செய்யமுடியவில்லை. பிரம்மனையே தஞ்சமடைந்தனர் அனைவரும். பிரம்மாவோ மஹாவிஷ்ணுவைக் கேட்க, இருவரும் ஈசனைத் தவிர வேறு எவராலும் இது இயலாத ஒன்று என்று கூறினார்கள்.


படங்கள் நன்றி கூகிளார்: திரு நடராஜ தீக்ஷிதரும் ஜாலந்தரர் படமும் மற்றப் படங்களும் அனுப்பி இருக்கார். அவருக்கும் எனது நன்றி.

திரிபுர சம்ஹாரம் தொடரும்!

Wednesday, July 21, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! ஜாலந்தரர்!

திரிபுர சம்ஹாரத்தின் போது ஈசனின் நெற்றிக்கண்ணின் நெருப்புப்பொறியில் தோன்றியவன் ஜாலந்திரன். அந்த நெருப்புப் பொறியின் உக்கிரம் தாங்காமல் கடலில் விட, அந்த அக்கினியில் தோன்றிய குமாரனை சமுத்திர ராஜன் தன் அருமை மகனாய் வளர்த்து வந்தான். இன்னும் சில புராணங்களில் வேறு விதமாய்ச் சொல்லப் படுகிறது. தேவேந்திரன் ஈசனைக்கண்டு வணங்கிச் செல்ல திருக்கயிலைக்கு வர, தேவேந்திரனைச் சோதிக்கும் எண்ணத்தோடு ஈசன் வேறு உருவில் நின்றார். அவர் யாரோ என எண்ணிய இந்திரன் அவரைப் பார்த்து அலட்சியமாகத் தன் வஜ்ராயுதத்தை வீசினான். உடனே ஈசனின் ருத்திர சொரூபம் வெளிப்பட நடுங்கிப்போனான் இந்திரன். அவர் உடலில் இருந்து அப்போது தோன்றினான் ஒரு பாலகன். அவனுக்கு ஜாலந்தரன் என்று பெயரிட்டு சமுத்திர ராஜனிடம் அளித்து அவனை வளர்த்துவரச் சொன்னார் ஈசன். அவனும் சீரோடும், சிறப்போடும் தனக்கென அளிக்கப் பட்ட செல்வ மகனை வளர்த்து சகல கலைகளும் கற்பித்து, காலநேமி என்னும் அசுரனின் மகள் பிருந்தையை மணம் முடித்து வைத்தா ன். பிருந்தை கற்புக்கரசி என்பதோடு சிவ பூஜையும்செய்து வந்தாள். ஜாலந்தரன் மஹா வீரனாகத் திகழ்ந்த்தோடு எவராலும் வெல்லமுடியாதவனாகவும் இருந்தான். மேலும் பிருந்தையின் கற்பின் கனலும் அவன் போர் செய்யும் போதெல்லாம் அவனுக்கு வெற்றியை அளித்து வந்தது. சமுத்திர ராஜனால் வளர்க்கப் பட்டாலும் காலப்போக்கில் அசுரர்களோடு சேர்ந்த ஜாலந்திரன் தேவர்களோடு சண்டையிட்டு வந்தான்.

ஜாலந்திரனை வெல்லமுடியாத தேவேந்திரன் மஹாவிஷ்ணுவின் துணையை நாட அவரும் பல்லாண்டுகள் அவனோடு போரிடுகிறார். ஆனால் பிருந்தையின் கற்பின் கனல் அவனைக் காத்து வருகிறது. ஈசன் ஒருவரால் மட்டுமே வெல்லமுடியும் என்பதைப் புரிந்து கொள்கின்றார் மஹாவிஷ்ணு. மேலும் அவனைக் காப்பது பிருந்தையின் கற்பு. ஜாலந்தரனை அழிப்பதென்றால் பிருந்தையிடம் இருந்து அவனைப் பிரிக்க வேண்டும். மஹா விஷ்ணுவானவர் ஜாலந்தரனின் உருவில் பிருந்தையிடம் செல்ல, இங்கே ஜாலந்தரனோ ஈசனையும் தோற்கடிக்கவேண்டும் என்னும் எண்ணத்துடன் கைலை மலையை ஜாலந்தரன் அடைந்தான் இந்திரனைப்பிடிக்க. அங்கே சிவன் ஒரு வயோதிகர் உருவில் அவனுக்குக் காட்சி கொடுது நீ யார் என வினவ, தான் ஜலந்தரன், சமுத்திரராஜனின் மகன் எனவும், ஈசனுடன் போரிட வந்ததாயும் கூறுகின்றான் ஜாலந்தரன். அதற்குள் அங்கே விஷ்ணு, பிருந்தையிடம் தான் ஜாலந்தரனே என நம்ப வைக்க, அவளும் வந்திருப்பது தன் கணவனே என எண்ணுகின்றாள். ஈசனோ ஜாலந்தரனிடம் ஈசனோடு போரிட்டு வெல்வது கடினம் என்றும் திரும்பிப் போகும் வண்ணமும் கூறுகின்றார். ஜாலந்தரன் பிடிவாதமாய் அங்கேயே நின்று, தன் ஆற்றலைக் காணும்படிச் சவால் விடுகின்றான். உடனே முனிவராக வந்த ஈசன் தன் காலால் தரையில் கீறி ஒரு சக்கரத்தை வரைகின்றார். பிறகு அந்தச் சக்கரத்தைப் பெயர்த்தெடுக்கின்றார். இதை உன் தலைமேல் தூக்கி எறியப் போகின்றேன். தாங்குகின்றாயா பார்க்கலாம் என்று சொல்லி அதை ஏவுகின்றார். ஜாலந்தரன் நகைத்தவண்ணம் அதை எடுத்துத் தன் மார்பிலும், புஜத்திலும் தாங்கிக் கொண்டு பின்னர் தன் தலையிலும் தாங்கிக் கொள்ளுமாறு வைக்கின்றான்.
சக்கரம் அவனை இரண்டாய்ப் பிளக்கின்றது. பின்னர் திரும்ப ஈசனிடமே சென்று விடுகின்றது. பின்னர் ஈசன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து ஜாலந்தரனின் சேனையையும் சாம்பலாக்குகின்றார். கணவன் இறந்த்துமே கற்பின் கனலான பிருந்தையால் வந்திருப்பது கணவன் அல்ல என்று புரிகிறது. வந்திருப்பது தன் கணவன் அல்லவென்றும் புரிகின்றது அவளுக்கு. மஹாவிஷ்ணுவிடம் தன்னை ஏமாற்றியதைப் பற்றிக் கேட்டு கோபம் கொள்கிறாள். மஹாவிஷ்ணுவோ அவள் என்றென்றும் கற்புக்கரசியாக மதிக்கப் படுவாள் என்றும், அவளைத் தான் மாலையாகச் சூடிக்கொள்வதாயும் வாக்களிக்கிறார். ஆனால் பிருந்தையோ தன் கணவன் உயிரை விட்ட இடம் தேடி வந்து அவன் உடலோடு அவளும் சேர்ந்து தீக்குளிக்கின்றாள். அவள் சாம்பலில் இருந்து பிறந்ததே துளசிச் செடி என்று சொல்லுவார்கள்.

அன்றிலிருந்து மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் பிரீதியானதாக துளசி மாறியது. ஈசனுக்கும் சோமவாரத்தில் துளசியால் அர்ச்சனை செய்வது நன்மை பயக்கும் எனவும் அன்று சந்திரனின் அமுதம் கலந்திருக்கும் என்றும் கூறுவார்கள். அட்டவீரட்டான்ங்களில் ஒன்றான திருவிற்குடியில் ஜாலந்தரனை வதம் செய்த கோலத்தில் ஈசனைக் காண முடியும். இங்கே மட்டும் ஈசனின் கைகளில் வலக்கரத்தில் சக்கரம் தாங்கி இருப்பதாயும் சொல்லப் படுகிறது. இந்தச் சக்கரமே பின்னர் ஈசனால் மஹாவிஷ்ணுவுக்கு அளிக்கப் பட்டதாயும் சொல்லுவார்கள். ஈசனின் சக்கரத்தைத் தாங்கியதால் ஜாலந்தரனின் ஆன்மா ஒளி வடிவம் பெற்றுத் திகழ்ந்தது என்று சொல்கின்றனர். காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு மேற்கே ஜலந்தரேசம் என்னும் பெயரில் ஜாலந்தரன் பூஜித்த சிவலிங்கம் உள்ளதாயும் கேள்விப் படுகிறோம். (அடுத்த முறை காஞ்சி போறச்சே பார்த்துட்டு வரணும்.)


வெற்றி யுற்றகதிர் பத்தி ரத்தையரு
ளிச்சு ரர்க்கதிப திப்ப தத்தையுறு
வித்த ளித்தமதி பெற்ற தத்தைமண ...... முண்டவேலா

வெட்கி டப்பிரம னைப்பி டித்துமுடி
யைக்கு லைத்துசிறை வைத்து முத்தர்புகழ்
விற்கு டிப்பதியி லிச்சை யுற்றுமகிழ் ...... தம்பிரானே. //

நாவுக்கரசர் தேவாரம் ஒன்றே ஒன்று திருவிற்குடிக்கு இருப்பதாய்த் தெரிய வருகிறது. ஆனால் அது தேடலில் கிடைக்கவில்லை. அருணகிரிநாதரின் திருப்புகழில் இருந்து சில வரிகள் மேலே. அதேபோல் ஜாலந்தரனை வதம் செய்யும் கோலத்தில் சக்கரத்தோடு உள்ள படமும் கிடைக்கவில்லை. ஜாலந்தரன் ஈசன் ஏவிய சக்கரத்தைத் தன் மார்பில் தாங்கியவண்ணம் ஈசனை இரு கை கூப்பி வணங்கிக் கொண்டு இருக்கும் கோலத்தில் சிற்பம் இருப்பதாய்த் தெரிய வருகிறது. அதுவும் எங்கேன்னு தெரியலை.

Thursday, July 15, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! ம்ருத்யுஞ்சயர்!

அடுத்து வருபவர் நாம் அனைவரும் அறிந்த ஒருவரே. ம்ருத்யுஞ்சயர் என்றும் காலகண்டர், காலகாலர், காலாந்தகர் எனவும் பல்வேறு பெயர்களால் அழைக்கப் படும் காலசம்ஹார மூர்த்தி. மாயவரத்துக்கு அருகே உள்ள திருக்கடையூரில் இந்த மூர்த்தத் திருமேனி, காலனை அழிக்கும் கோலத்தில் காண முடியும். ஒரு நிமிஷத்துக்கு மட்டுமே திரையைத் திறந்து தீப ஆராதனையைக் காட்டிவிட்டுப் பின்னர் மூடிவிடுவார்கள். மிக உக்கிரமாய்க் கோபத்துடன் இருப்பதால் இம்மாதிரிச் செய்கின்றனர். என்றாலும் இவர் ஒரு பக்தனுக்காக வேண்டியே இவ்விதம் கோபம் கொண்டு காலனைக் காலால் உதைத்தார். இந்தக் கதையும் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. கெளசிகரின் புதல்வர் ஆன மிருகண்டு, தன் மனைவியான மருத்துவதியுடன் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்குப் புத்திரப்பேறு இல்லை. புத்திரப் பேறு வேண்டி தவம் இயற்றிய அவருக்கு பிரம்மாவின் அருளால் ஒரு புத்திரன் பிறந்தான். மிக மிக புத்திசாலியும், சிறந்த சிவ பக்தனும் ஆன அந்தப் பையனுக்கு ஆயுள் 16 மட்டுமே என்பது பிரம்மன் விதித்திருந்த ஓர் கணக்கு. இந்த விஷயம் தாய், தந்தையருக்கும் தெரிந்தே இருந்தது. செய்வதறியாமல் துக்கத்தில் ஆழ்ந்து இருந்தனர் தாய், தந்தையர். மார்க்கண்டேயனோ, நிஷ்கவலையாகத் தானுண்டு, தன் சிவ பூஜையுண்டு என்று இருந்து வந்தான். ஆயிற்று. பதினாறு வயதும் பூர்த்தி ஆகும் நாளும் வந்தது. என்றும் போல் அன்றும் மார்க்கண்டேயன் சிவ பூஜையில் வழக்கமான உற்சாகத்துடனேயே ஈடுபட, அவன் முன்னே தோன்றியவர்களோ யமதூதர்கள். மார்க்கண்டேயனை அழைத்துச் செல்லவே அங்கு வந்திருப்பதாய் அவர்கள் தெரிவிக்க, அந்த இளம்பிள்ளையோ, தான் வழிபட்டுக் கொண்டிருந்த சிவலிங்கத்தைத் தன்னிரு கைகளால் இறுகக் கட்டிக் கொண்டான். எமதூதர்கள் திகைக்க, எமனே நேரில் வந்தான். நிலைமையைப் பார்த்துவிட்டு, மார்க்கண்டேயன் கட்டிக் கொண்டிருக்கும் சிவலிங்கத்தோடு சேர்த்து பாசக்கயிற்றை வீசி அவனை இழுக்க, லிங்கம் அசைந்து கொடுத்தது. மார்க்கண்டேயன் வந்துவிடுவான் என நினைத்தக் காலதேவன் முன் தோன்றினார் காலாந்தகர். காலனைத் தம் காலால் உதைக்க, அவனும் கீழே வீழ்ந்தான். மார்க்கண்டேயனும் சிரஞ்சீவியாக என்றும் பதினாறு என்ற வரமும் பெற்றான். இறைவனும் அந்த லிங்கத்திலேயே மறைந்தார்.

விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை தூயதொ ரானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
கடுத்த வானைகண் டீர்கட வூரரே. திருக்கடவூர் வீரட்டம் தேவாரம்


சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்
கால காலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமா னடிகளே. திருக்கடவூர் மயானம் தேவாரம்

பின்னர் உலகில் எவரும் மரணம் அடையாமல் பூமி பாரம் தாங்காது பூமா தேவி வருந்த, திருமாலை வேண்டினாள் அவள். திருமாலும், பிரம்மாவும் ஈசனிடம் முறையிட்டனர். சிவனும் அவர்கள் வேண்டுகோளில் உண்மை இருப்பதைப் புரிந்து கொண்டு, எமனுக்கு மீண்டும் உயிரை எடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்து அருளினார். இந்த இடம் திருப்பைஞ்ஞீலி என்ற தலத்தில் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. காலகாலர் என்ற பெயர் ஏன் வந்தது என்றால் காற்றுக்குக் கால் என்ற ஒரு பொருள் வரும். காற்று ஓரிடத்தில் நில்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கும் தன்மை படைத்தது. காற்று இல்லாமல் இவ்வுலகில் எந்த உயிரும் இல்லை. அந்தக் காற்றில் உள்ள பிராண சக்தியே ஈசன் ஆவார். அவர் அந்தக் காற்றுக்கே காற்றாகவும், கூற்றாகவும் விளங்குவதால் அவருக்குக் காலகாலன், காலாந்தகர் என்றெல்லாம் பெயர்கள் வந்தன. நம் உடலுக்குள் மூச்சுக் காற்றாக ஓடுவதும் அவனே. நொடிக்கு நொடி இறந்து கொண்டே இருக்கும் நம்மை உயிர்ப்பித்துக் கொண்டிருப்பதும் அவனே. மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டு யாருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே இருக்கும் காலத்தைக் கணக்கிட்டு உயிர்களை மரணம் என்ற பிடிக்குள் அடங்கச் செய்ய ஈசனால் நியமிக்கப் பட்டவன் காலன் என்று நாம் அழைக்கும் யமன். அந்தக் காலனையே காலால் உதைத்தமையாலும் அவர் காலாந்தகர் எனப் பட்டார்.


விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருள் காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே. திருப்பைஞ்ஞீலித் தேவாரம்.

மேற்கண்ட தேவாரப் பாடல்களை அருளிச் செய்தவர் திருநாவுக்கரசப் பெருமான்.

Tuesday, July 13, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள்வாழ்க! காமதகனர்!


தாருகாவனத்து ரிஷிகள் அபிசார ஹோமம் செய்து யானையை ஏவி விட்டது பற்றிப் படித்தோம் அல்லவா?? அந்த யானை ஏவி விடப் பட்டதும் பிட்சாடனக் கோலத்தில் இருந்த ஈசனை நெருங்க, ஈசனும் சற்றும் தயங்காமல் அந்த யானையின் பெரிய வாய்க்குள் புகுந்து மறைந்தார். அருகே இருந்த அம்பிகையானவள் திகைத்து, அஞ்சி ஓட, பிரபஞ்சமே ஸ்தம்பித்து நின்றது. சூரிய, சந்திரர்களின் இயக்கம் நிற்க, காலங்கள் தடுமாற, உலக இயக்கமே நின்றுவிட்டது. ஆனால் உள்ளே போன மகேசன் சும்மாவா இருந்தார்?? யானைக்குப் பெரும் தொந்திரவு ஏற்பட்டது மகேசனை விழுங்கியதால். அருகே இருந்த ஒரு குளத்திற்குப் போய் அங்கே விழுந்து, புரண்டு எழுந்தும் அதற்குத் தாங்க முடியவில்லை. ஓலமிட்டது யானை. அப்போது அதன் உடலைக் கிழித்துக்கொண்டு, மத்தகத்தைப் பிளந்துகொண்டு வெளிப்பட்டார் கஜசம்ஹார மூர்த்தி. யானையின் உடலைக் கிழிக்கும் இவர் கோலத்தில் உள்ள மூர்த்தம் மாயூரத்திற்கு அருகே உள்ள வழுவூரில் காணப் படுகின்றதாய்க் கேள்விப் படுகின்றோம். இந்த மூர்த்தத்தின் தரிசனம் இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும் அது பற்றிய மேலதிகத் தகவல்கள் கொடுக்கப் படும்.

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உரித்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்


காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்
கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை
மேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம்

திருநாவுக்கரசரின் வழுவூர் வீரட்டானம் பற்றிய தேவாரப் பாடல்களில் சில வரிகளைக் காணலாம்.


அடுத்து நாம் காணப் போவது யோகத்தில் இருக்கும் காம தகனர். காமனை எரித்ததால் காமதகனர் என்று சொல்லுகின்றோம். உண்மையில் தட்சிணாமூர்த்தி சொரூபத்தின் இன்னொரு வடிவமே இவர். தட்சிணா மூர்த்தியாக இவர் ஒரு க்ஷண நேரம் நீடிக்க அது பெரும் ஊழிக்காலமாக மாற, தேவாதி தேவர்கள் உலகின் சிருஷ்டியும், இயக்கமும் நின்றுவிடுமோ என அஞ்சி, இறைவனிடம் காமனை ஏவுகின்றார்கள். காமன் ஏன் ஏவப் படுகின்றான்? அவனுக்கு என்ன ஆகின்றது என்று சற்று விபரமாய்ப் பார்க்கலாமா?? அனைவருக்கும் பலமுறை சொன்ன, நன்கு தெரிந்த கதை தான் இது. ஆகவே சுருக்கமாய்ச் சொல்லுகின்றேன்.

தட்சப் பிரஜாபதியின் யாகத்துக்குத் தன் மருமகன் ஆன ஈசனை அழைக்கவும் இல்லை. அவருக்கு உரிய அவிர்பாகத்தை அவன் கொடுக்கவும் இல்லை. ஈசனை மணந்த தட்சன் மகள் தாட்சாயணி ஆகிய அம்பிகை மனம் கேட்காமல் யாகத்துக்குச் சென்று தந்தையைக் காரணம் வினவ, அவனோ மகள் என்றும் பாராமல் தாட்சாயணியை அவமானம் செய்கின்றான். அவமானம் தாங்க முடியாத தாட்சாயணி தட்சனால் கிடைக்கப் பெற்ற உடலை நீக்க எண்ணி யாக குண்டத்துக்குள் புகுந்து, உயிர்த் தியாகம் செய்ய, இறைவன் தட்சனை அடக்க வீரபத்திரரை ஏவுகின்றார். வீரபத்திரர் வந்து தட்சனை அடக்கியபின்னர், அம்பிகையின் திருவுளப் படியே அவள் இன்னொரு பிறவி எடுத்துத் தம்மை வந்தடைய அருள் புரிகின்றார் ஈசன். அந்தச் சமயம் இமவான் குழந்தை வரம் வேண்டித் தவம் இருக்க அவன் காணுமாறு அம்பிகையை அவன் மகளாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்ட அம்பிகையானவள் அவ்வாறே ஒரு தாமரைத் தடாகத்தில் பூத்த பெரியதொரு தாமரை மலரில் ஒரு குழந்தையாகத் தோன்றுகின்றாள். அழகான குழந்தையைக் கண்ட இமவான் அந்தக் குழந்தையைப் போற்றிப் பாசம் காட்டித் தன் உயிரினும் இனிய மகளாய் வளர்த்து வருகின்றான். அம்பிகையோ தன் உள்ளத்தால் ஏற்கெனவே தன் பதியாக இருந்த ஈசனைத் தவிர வேறொருவரைத் தன் கணவனாய் ஏற்க முடியாது என்று எந்நேரமும் ஈசன் நினைவிலேயே இருந்து வந்தாள். அவள் நிலையைக் கண்ட இமவான், அவள் தவம் இயற்ற வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தருகின்றான். அம்பிகை தவம் மேற்கொள்ள, இங்கே ஈசனோ அம்பிகையைப் பிரிந்த நிலையில் மோனத் தவம் செய்து யோகியாக வீற்றிருக்கின்றார்.

ஞானம் பெற வேண்டி ஈசனை வந்தடைந்த சனகாதி முனிவர்களுக்கு அவர் ஞானம் என்பது சொல்லில் அடங்குவதன்று என்பதைப் புரியவைக்கும் சின்முத்திரையைக் காட்டி யோக தட்சிணா மூர்த்தியாக அமருகின்றார். அவரின் இந்த மெளனத்திலேயே அனைத்தும் புரிந்த மாணாக்கர்களாய் சனகாதி முனிவர்களும் அவர் காலடியிலேயே அமருகின்றனர் சீடர்களாய். ஒரு க்ஷண நேரமே நீடித்ததாம் இந்தச் சின்முத்திரைக் கோலத்தில் தட்சிணா மூர்த்தி சொரூபமாய் ஈசன் அமர்ந்த கோலம். அந்த ஒரு க்ஷண நேரமானது இங்கே மாபெரும் ஊழிக்காலமாய் நீண்டது. உலக இயக்கம் ஸ்தம்பித்தது. அம்பிகையை ஈசன் பிரிந்து இவ்வாறு யோகத்தில் ஆழ்ந்து யோக தட்சிணாமூர்த்தியாக இருந்தவண்ணமே இருந்தால், உலகின் இயக்கத்துக்கு அர்த்தமே இல்லை என்றுணர்ந்த தேவாதிதேவர்கள் அவரின் யோகத்தைக் கலைக்க மன்மதனை ஏவுகின்றனர்.

அம்பிகையை மணந்து ஈசன் யோகத்தில் இருந்து போகத்துக்கு மீண்டாலே உலக இயக்கமும் சரிவர நடக்கும், அரக்கர்களின் துன்பமும் தொலையும். காமனைக் கூப்பிட்டு செய்யவேண்டியதைச் சொல்ல காமனோ மனம் கலக்கமுறத் தன்னால் இயலாத ஒன்று என்றுணர்ந்து மறுத்தான். ஆனால் பிரம்மாவோ கோபம் மிகக் கொண்டு காமனைச் சபிக்கக் கிளம்ப, பிரம்மாவின் கோபத்துக்குச் சிவனின் கோபத்தால் உயிர் நீப்பதே பெரியது என நினைத்த மன்மதன், தன் வாகனம் ஆகிய கிளியின் மீது ஏறிக் கொண்டு, தென்றல் காற்றைத் தேராய்க் கொண்டு, கரும்பினால் ஆன வில்லை ஏந்திக் கொண்டு, குயில் கூவி அழைக்க, கடல் ஆர்ப்பரித்து முழங்க, மலர்க்கணைகளைத் தயார் செய்து கொண்டு, தன் இனிய மனனயாள் ஆன ரதிதேவியுடன் திருக்கைலை வந்தடைந்தான் காமதேவன். ஈசன் ஆழ்ந்த மோனத்தில் தவம் இருக்கின்றார். ஒரு அசைவில்லை. கலக்கத்துடனும், தயக்கத்துடனும், தன் மலர்க்கணையை எடுத்து அவர் மீது ஏவினான் மன்மதன். மலர்க்கணைகளின் தொடுகை தெரிந்ததுமே தன் கண்களைத் திறந்தார் ஈசன். கூடவே நெற்றிக் கண்ணும் திறக்கவே அதிலிருந்து கிளம்பிய கோபாக்கினியில் எரிந்து சாம்பல் ஆனான் மன்மதன். ரதிதேவி கலங்கி, புலம்பி அழ, அவள் நிலை கண்டு வருந்திய ஈசன் சாம்பல் ஆனவனை உருவம் கொள்ளச் செய்ய முடியாது என்பதால் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படியான அருவ நிலையில் அவன் இருப்பான் என்று அருள் புரிகின்றார். பின்னாட்களின் மன்மதனை அநங்கன் என்று சொல்ல ஆரம்பித்ததின் காரணமும் இது தான்.

இவ்வாறு காமனை எரித்த நிலையில் ஈசன் இருக்கும் கோலமே காமதகனர் என்று சொல்லப் படுகின்றது. மன்மத பாணத்துக்கும் மயங்காத ஈசனை அன்னையின் தவமே கலைத்தது என்பது ஸ்காந்த புராணம் நமக்குச் சொல்லும் செய்தி. இவரை யோக தட்சிணா மூர்த்தி எனவும் சொல்லுவார்கள். இந்த அரிய கோலம் மாயவரத்துக்கு அருகில் உள்ள திருக்குறுக்கை என்னும் ஓர் ஊரில் காணப் படுவதாய்த் தெரிகின்றது. இது அட்டவீரட்டானத் தலங்களிலும் ஒன்று எனவும் அறிகின்றோம். காமத்தையே எரித்ததால் இறைவனுக்குக் காமதகனர் என்று பெயர் வந்தது. காமனின் திருமணமும், அதை ஒட்டிய காமதகனமும் இன்றும் கிராமப் புறங்களில் அறுவடைக்குப் பின்னர் வரும் மாசி, பங்குனி மாதங்களில் பெளர்ணமி தினத்தில் நடைபெறுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.


படங்கள் நன்றி: கூகிளார்