எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, July 28, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! திரிபுராந்தகர்!

இறைவனை வழிபட்டுத் தவங்கள் பல புரிந்து பெற்ற வரங்களை உலக நன்மைக்காக அன்றித் தன் தனிப்பட்ட நலத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது. ஆனால் திரிபுராசுரர்களோ தங்கள் மிதமிஞ்சிய ஆணவத்தினால், தங்களை மிஞ்சி எவரும் இல்லை என நினைத்தனர். அதற்கு எதிராக வந்த அனைவரையும் அழித்தனர். தங்களுக்குள்ளே இருந்த அன்பு, அறிவு, ஆற்றல் மூன்றையும் நல்வழியில் பயன்படுத்தாது ஆணவம், கன்மம், மாயை போன்றவற்றின் துணையோடு தீயவழியில் சென்றனர். அவர்களின் அந்த ஆணவம்,கன்மம், மாயை போன்றவற்றை அழிப்பதே திரிபுர சம்ஹாரத்தின் தத்துவம். இன்னும் விளக்கமாய்க் கூறுவதென்றால் நம்முடைய அறிவையும், ஆற்றலையும், அதனால் விளையும் அன்பென்னும் அரிய இன்பத்தையும் ஆணவமும், கன்மமும், மாயையும் முப்பெரும் கோட்டைகளாகச் சூழ்ந்து கொண்டு மறைக்கிறது. இந்த ஆணவத்தினால் நம்முள்ளே ஊறும் அன்பு ஊற்றை, அதன் பக்திப்பெருக்கை உணர முடிவதில்லை நம்மால். அப்படி உணர்ந்த உயிர்கள் பெறும் தன்னிலையை உணர்ந்த அக்கணமே ஈசன் அவர்களின் முப்பெரும் மலங்களையும் சுட்டெரிக்கிறான். அவர்களை அன்பு மயமாக்கித் தன் வயப் படுத்திக்கொள்கிறான். இந்த அரும்பெரும் தத்துவமே திரிபுர சம்ஹாரத்தின் மூலம் சொல்லப் படுகிறது.

முப்புரங்களையும் ஈசன் எரித்து மூன்று சகோதரர்களையும் அழித்த பின்னும் மூவரின் ஆன்மாக்களும் விடாமல் ஈசனைக் குறித்துக் கடுந்தவம் செய்தன என்றும், அவர்களின் இந்த இடைவிடாத சிவ வழிபாட்டின் காரணமாயும், அவர்களுக்கு முக்தி கொடுக்கும் நேரம் வந்துவிட்டதைக் கருதியும் ஈசன் தாரகனையும், வித்யுன்மாலியையும் துவாரபாலகர்கள் ஆக்கியதாயும், கமலாட்சனை, ஈசனின் வாத்தியம் ஆன “குடமுழா” எனப்படும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கும் பேறு கொடுத்துக் கடைத்தேற்றியதாயும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தனது திருப்புன்கூர் தேவாரத்தில் கூறி இருப்பதாயும் தெரிய வருகிறது.

மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே பாடல் எண் 8

காவலுக்கு அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்திக்கொண்டு, அன்பைத் தனது ஆந்ந்த தாண்டவத்திற்கு இசைக்கும் பேற்றையும் அருளிச் செய்தார் என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் கூறுகிறார். இரண்டாம் தந்திரம் பாடல் எண் 5, பதிவலியில் வீரட்டம் எட்டு என்னும் தலைப்பின் கீழ் வரும் பாடல் கீழே.

அப்பணி செஞ்சடை ஆகி புராதனன்
முப்புரம் செற்றன்ன என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவன மும்மல காரியம்
அப்புரம் எய்தமை ஆர் அறிவாரே!


மாணிக்கவாசகப் பெருமான் தனது ஞாந வெற்றித் தொகுப்பில் திருவுந்தியாரின் முதல் பாடலில்,
“வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீ பற
ஒருங்குடன் வெந்தவா(று) உந்தீ பற.”
என்கிறார்.

மேலும் அம்பு இரண்டு, மூன்றெல்லாம் இல்லை. ஒரே ஒரு அம்புதான். சாமானிய அம்பா அது? சாட்சாத் மஹாவிஷ்ணுவாச்சே? அதிஉக்ர நரசிம்மக் கோலத்தில் அன்றோ உள்ளார்? அந்த ஒரு அம்பிலேயே முப்புரங்களும் அழிந்தன.

“ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை உந்தீபற.”

அது மட்டுமா? தேவர்கள் அமைத்துத் தந்த தேரில் ஈசன் திருவடியை வைத்ததுமே தேரின் அச்சு முறிந்ததாமே? இது என்ன புதுக்கதை? நாளை பார்ப்போமா? அதற்கான பாடல் இதோ!
“தச்சு விடுத்தலும் தாம் அடி இட்டலும்
அச்சு முறிந்ததென்(று) உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீ பற.”

Tuesday, July 27, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! திர்புராந்தகர்!


அனைவரும் ஈசனிடம் சென்று சிறந்த சிவபக்தர்கள் ஆன தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகியோர் தாங்கள் வாங்கிய வரங்களால் அனைவரையும் பயமுறுத்துவதையும், கொடுமைகள் செய்வதையும் எடுத்துரைத்தனர். அவர்களின் சிவபக்தியே அவர்களைக் காத்தும் வருவதாயும், ஈசனால் மட்டுமே இதற்கு ஒரு வழி காணமுடியும் என்றும் வேண்டிக் கேட்டனர். புன்னகை புரிந்த ஈசன் அவர்களுக்குத் தேர் ஒன்று விசித்திரமான முறையில் தயாரிக்கக் கட்டளையிட்டார். மேலும் தேவர்களின் சக்தியில் சரிபாதியைத் தனக்குத் தருமாறும் கேட்டார். அவ்விதமே விசித்திரமான தேர் தயாராயிற்று. பூமியானது தேரின் தட்டாகவும், பாதாளலோகங்கள் ஏழு, கீழேயும், வானுலகங்கள் ஏழு மேலேயும் அமைந்தன. விந்தியமலையானது தேரின் குடையாக வந்து நின்றது. தேருக்குச் சக்கரங்கள் தேவையே? சூரிய, சந்திரர் முன் வந்தனர். இருவரும் சக்கரங்கள் ஆக, தேரின் அச்சாக உதயமலையும், அஸ்தமன மலையும் அமைந்தன. நான்கு வேதங்களும் தேரின் நான்கு குதிரைகளாக மாற, தேரின் கால்களாக நான்கு பருவங்கள் அமைந்தன. பிரமன் தானே சாரதிப் பொறுப்பை ஏற்றார். பிரணவமே சாட்டையாக அமைந்தது. சப்த நதிகளும் சாமரம் வீசினர். எட்டு வகை நாகங்களும் தேரைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து கொண்டன. திருக்கைலையில் இந்த்த் தேர் நிறுத்தப் பட்டது. தேவர்கள் அனைவரும் தங்கள் சக்தியில் சரிபாதியை ஈசனுக்கு அளித்தனர்.

எல்லாம் ஆயிற்று! ஆயுதம்?? ஈசன் என்ன சொல்லப் போகிறாரோ என அனைவரும் காத்திருக்க, மேருமலை வில்லாக வளைக்கப் பட்டது. பாம்பரசன் வாசுகியை அதில் நாணாகப்பிணைத்தார். திருமால் அம்பின் தண்டாக மாறச் சம்மதிக்க, அம்பின் கூர் நுனியில் அக்னி குடி கொண்டான். அம்பின் வால்பக்கம் சிறகாக வாயு அமர, (அப்போத் தானே அம்பு வேகமாய்ப் பறக்கும்?) ஆயுதமும் தயார் செய்யப் பட்டது. உமையொருபாகன் உமையையும் கூட அழைத்துக்கொண்டே அந்தத் தேரில் அமர்ந்தார். தேரும் கிளம்பிற்று. முப்புரங்களும் கூடும் காலத்தை எதிர்நோக்கிச் சென்றது தேர். சிவனடியார்களும், சித்தர்களும், ரிஷி முனிவர்களும் வாழ்த்திப் பாட , அனைவரும் வில்லில் இருந்து அம்பு கிளம்பி முப்புரத்தையும் தாக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் நல்ல மழைக்காலத்தில் அபிஜித் முஹூர்த்தம் என்று சொல்லப் படும் நேரத்தில் முப்புரங்களும் கூடி நிற்க, ஈசன் அந்த முப்புரங்களையும் பார்த்துத் தனது “அட்டஹாசம்” என்னும் சிரிப்பொன்றை உதிர்த்தார். முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. அனைவரும் திகைத்தனர். என்றாலும் அசுரர்கள் இறக்கவில்லையே எனக் கவலையுற ஈசன் வில்லில் இருந்து அம்பை எய்தார். அது திரிபுரத்தை ஒட்ட அழித்ததோடு மட்டுமின்றி அசுரர் மூவரையும் அழித்தது.

படம் அனுப்பி வைத்த நடராஜ தீக்ஷிதருக்கு நன்றி.

Sunday, July 25, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! திரிபுராந்தகர்!


திரிபுர சம்ஹாரர்: அடுத்து நாம் பார்க்கப் போகிறவர் அநேகமா அனைவரும் அறிந்த ஒருவரே. இந்தத் திரிபுர சம்ஹாரத்தைப் பற்றிப் பேசாத புராணங்களோ, இலக்கியங்களோ இல்லை. சங்க இலக்கியமான பரிபாடலில், புறநானூற்றில், கலித்தொகை, திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம் போன்றவற்றைத் தவிரத் தேவாரப் பாடல்களிலும் திரிபுர சம்ஹாரம் பற்றிய குறிப்புகளைக் காணலாம். ஜாலந்தர வதத்தில் விஷ்ணுவுக்கே உரிய சக்கரத்தைத் தாங்கிக் கொண்டு காட்சி அளித்த ஈசன் இங்கேயும் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீராமாவதாரத்தின் முக்கிய ஆயுதமான வில்லைத் தாங்கிக் காட்சி அளிக்கிறார். முதலில் திரிபுரர்களான மூன்று அசுரர்களையும் பற்றிப் பார்ப்போமா?

தாரகன் என்னும் அசுரனின் மகன் தாரகாசுரன். தாரகாசுரன் கடுமையாகத் தவம் செய்து பெற்ற வரங்களைச் சரியான முறையில் பிரயோகிக்காமல் தேவர்களைத் துன்புறுத்துவதிலேயே இன்பம் கண்டு தன் வரங்களைப் பிரயோகிக்க, ஆறுமுகனால் அழிக்கப் பட்டான். அவனுக்கு மூன்று புதல்வர்கள். வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகியோர் மூவரும் தங்கள் தகப்பனைப் போலவே கடும் தவம் செய்தனர். அதன் மூலம் பிரம்மனிடம் பல வரங்களை வேண்டினார்கள். தவம் செய்தால் வரங்கள் கேட்கும்போது கொடுத்தே ஆகவேண்டும். தவத்தின் பலன் அது. மறுக்க முடியாது. ஆகவே பிரம்மனும் வரங்களைக் கொடுத்தான். ஈசன் ஒருவனைத் தவிர மற்ற எவராலும் தங்களை அழிக்க முடியாது எனவும் பெருமை கொண்டனர். மேலும் மேலும் வரங்களைப் பெறும் ஆசையில் கொஞ்சம் வித்தியாசமான ஒரு வரத்தையும் கேட்டனர். அதுதான் எவராலும் அழிக்க முடியாத மூன்று நகரங்களைத் தங்களுக்குத் தர வேண்டும் என்பது. அந்த நகரம் பூமியில் இருக்கக் கூடாது என்றும், தாங்கள் விரும்பும்போது பறந்து வேறு இடத்திற்குச் சென்றுவிடவேண்டும் என்றும் வேண்டினார்கள்.

அவ்வாறே மூன்று கோட்டைகள் கிடைத்தன அவர்களுக்கு. மூன்றும் பறக்கும் வல்லமை கொண்டது. இந்த மூன்று கோட்டைகளின் அதிசயம் என்னவெனில் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே மூன்றும் ஒரே இடத்தில் வந்து சேர்ந்து கொள்ளும். அது வரையிலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் இருக்கும், அல்லது பறந்து கொண்டிருக்கும். ஒரே இடத்தில் சேரும்போது தான் அந்தக் கோட்டைகளை அழிக்க முடியும். அதுவும் சாமானியர் எவராலும் முடியாது. அனைத்துத் தேவர்களின் பலத்திலும், அனைத்து மூர்த்திகளின் பலத்திலும் சரிபாதியைத் தன்னில் கொண்டவர் எவரோ அவரே அழிக்க முடியும். அதுவும் ஒரே அம்பினால். மற்றொரு அம்பைப் போட முடியாது. முதல் அம்பிலேயே அழித்துவிடவேண்டும். இத்தனையும் கேட்டுப் பெற்றுக் கொண்டனர் மூவரும். இதில் பொன்னாலான கோட்டை தாரகாட்சனுக்கும், வெள்ளிக்கோட்டை கமலாட்சனுக்கும், இரும்புக் கோட்டை வித்யுன்மாலியும் பெற்றதாய்ச் சொல்வார்கள். இந்தக் கோட்டைகள் சகல வசதிகளும் நிரம்பி இருந்தது. அவர்களுக்குத் தேவையான வீடுகள், மாளிகைகள், கோயில்கள் என அனைத்தும் இருக்க, மூவரும் மகிழ்வோடு வாழ்ந்து வந்தனர். மூவரும் சிறந்த சிவபக்தர்களாகவும் இருந்தனர். தேவைப்பட்ட போது கோட்டையோடு பறந்து வேறிடத்திற்குச் சென்றனர்.

பறக்கும் கோட்டைகள் மூன்றும் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்தன. அவை பறக்கும்போது விண்ணிலும் மண்ணிலும் பலருக்கும் அவதி. பூமியில் இறங்கினாலோ மானிடருக்குக் கஷ்டம். மூவராலும் அழிக்கப் படுவார்கள். விண்ணில் இறங்கினாலோ தேவர்கள் அனைவரும் படாத பாடு படுவார்கள். எவராலும் எதுவும் செய்யமுடியவில்லை. பிரம்மனையே தஞ்சமடைந்தனர் அனைவரும். பிரம்மாவோ மஹாவிஷ்ணுவைக் கேட்க, இருவரும் ஈசனைத் தவிர வேறு எவராலும் இது இயலாத ஒன்று என்று கூறினார்கள்.


படங்கள் நன்றி கூகிளார்: திரு நடராஜ தீக்ஷிதரும் ஜாலந்தரர் படமும் மற்றப் படங்களும் அனுப்பி இருக்கார். அவருக்கும் எனது நன்றி.

திரிபுர சம்ஹாரம் தொடரும்!

Wednesday, July 21, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! ஜாலந்தரர்!

திரிபுர சம்ஹாரத்தின் போது ஈசனின் நெற்றிக்கண்ணின் நெருப்புப்பொறியில் தோன்றியவன் ஜாலந்திரன். அந்த நெருப்புப் பொறியின் உக்கிரம் தாங்காமல் கடலில் விட, அந்த அக்கினியில் தோன்றிய குமாரனை சமுத்திர ராஜன் தன் அருமை மகனாய் வளர்த்து வந்தான். இன்னும் சில புராணங்களில் வேறு விதமாய்ச் சொல்லப் படுகிறது. தேவேந்திரன் ஈசனைக்கண்டு வணங்கிச் செல்ல திருக்கயிலைக்கு வர, தேவேந்திரனைச் சோதிக்கும் எண்ணத்தோடு ஈசன் வேறு உருவில் நின்றார். அவர் யாரோ என எண்ணிய இந்திரன் அவரைப் பார்த்து அலட்சியமாகத் தன் வஜ்ராயுதத்தை வீசினான். உடனே ஈசனின் ருத்திர சொரூபம் வெளிப்பட நடுங்கிப்போனான் இந்திரன். அவர் உடலில் இருந்து அப்போது தோன்றினான் ஒரு பாலகன். அவனுக்கு ஜாலந்தரன் என்று பெயரிட்டு சமுத்திர ராஜனிடம் அளித்து அவனை வளர்த்துவரச் சொன்னார் ஈசன். அவனும் சீரோடும், சிறப்போடும் தனக்கென அளிக்கப் பட்ட செல்வ மகனை வளர்த்து சகல கலைகளும் கற்பித்து, காலநேமி என்னும் அசுரனின் மகள் பிருந்தையை மணம் முடித்து வைத்தா ன். பிருந்தை கற்புக்கரசி என்பதோடு சிவ பூஜையும்செய்து வந்தாள். ஜாலந்தரன் மஹா வீரனாகத் திகழ்ந்த்தோடு எவராலும் வெல்லமுடியாதவனாகவும் இருந்தான். மேலும் பிருந்தையின் கற்பின் கனலும் அவன் போர் செய்யும் போதெல்லாம் அவனுக்கு வெற்றியை அளித்து வந்தது. சமுத்திர ராஜனால் வளர்க்கப் பட்டாலும் காலப்போக்கில் அசுரர்களோடு சேர்ந்த ஜாலந்திரன் தேவர்களோடு சண்டையிட்டு வந்தான்.

ஜாலந்திரனை வெல்லமுடியாத தேவேந்திரன் மஹாவிஷ்ணுவின் துணையை நாட அவரும் பல்லாண்டுகள் அவனோடு போரிடுகிறார். ஆனால் பிருந்தையின் கற்பின் கனல் அவனைக் காத்து வருகிறது. ஈசன் ஒருவரால் மட்டுமே வெல்லமுடியும் என்பதைப் புரிந்து கொள்கின்றார் மஹாவிஷ்ணு. மேலும் அவனைக் காப்பது பிருந்தையின் கற்பு. ஜாலந்தரனை அழிப்பதென்றால் பிருந்தையிடம் இருந்து அவனைப் பிரிக்க வேண்டும். மஹா விஷ்ணுவானவர் ஜாலந்தரனின் உருவில் பிருந்தையிடம் செல்ல, இங்கே ஜாலந்தரனோ ஈசனையும் தோற்கடிக்கவேண்டும் என்னும் எண்ணத்துடன் கைலை மலையை ஜாலந்தரன் அடைந்தான் இந்திரனைப்பிடிக்க. அங்கே சிவன் ஒரு வயோதிகர் உருவில் அவனுக்குக் காட்சி கொடுது நீ யார் என வினவ, தான் ஜலந்தரன், சமுத்திரராஜனின் மகன் எனவும், ஈசனுடன் போரிட வந்ததாயும் கூறுகின்றான் ஜாலந்தரன். அதற்குள் அங்கே விஷ்ணு, பிருந்தையிடம் தான் ஜாலந்தரனே என நம்ப வைக்க, அவளும் வந்திருப்பது தன் கணவனே என எண்ணுகின்றாள். ஈசனோ ஜாலந்தரனிடம் ஈசனோடு போரிட்டு வெல்வது கடினம் என்றும் திரும்பிப் போகும் வண்ணமும் கூறுகின்றார். ஜாலந்தரன் பிடிவாதமாய் அங்கேயே நின்று, தன் ஆற்றலைக் காணும்படிச் சவால் விடுகின்றான். உடனே முனிவராக வந்த ஈசன் தன் காலால் தரையில் கீறி ஒரு சக்கரத்தை வரைகின்றார். பிறகு அந்தச் சக்கரத்தைப் பெயர்த்தெடுக்கின்றார். இதை உன் தலைமேல் தூக்கி எறியப் போகின்றேன். தாங்குகின்றாயா பார்க்கலாம் என்று சொல்லி அதை ஏவுகின்றார். ஜாலந்தரன் நகைத்தவண்ணம் அதை எடுத்துத் தன் மார்பிலும், புஜத்திலும் தாங்கிக் கொண்டு பின்னர் தன் தலையிலும் தாங்கிக் கொள்ளுமாறு வைக்கின்றான்.
சக்கரம் அவனை இரண்டாய்ப் பிளக்கின்றது. பின்னர் திரும்ப ஈசனிடமே சென்று விடுகின்றது. பின்னர் ஈசன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து ஜாலந்தரனின் சேனையையும் சாம்பலாக்குகின்றார். கணவன் இறந்த்துமே கற்பின் கனலான பிருந்தையால் வந்திருப்பது கணவன் அல்ல என்று புரிகிறது. வந்திருப்பது தன் கணவன் அல்லவென்றும் புரிகின்றது அவளுக்கு. மஹாவிஷ்ணுவிடம் தன்னை ஏமாற்றியதைப் பற்றிக் கேட்டு கோபம் கொள்கிறாள். மஹாவிஷ்ணுவோ அவள் என்றென்றும் கற்புக்கரசியாக மதிக்கப் படுவாள் என்றும், அவளைத் தான் மாலையாகச் சூடிக்கொள்வதாயும் வாக்களிக்கிறார். ஆனால் பிருந்தையோ தன் கணவன் உயிரை விட்ட இடம் தேடி வந்து அவன் உடலோடு அவளும் சேர்ந்து தீக்குளிக்கின்றாள். அவள் சாம்பலில் இருந்து பிறந்ததே துளசிச் செடி என்று சொல்லுவார்கள்.

அன்றிலிருந்து மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் பிரீதியானதாக துளசி மாறியது. ஈசனுக்கும் சோமவாரத்தில் துளசியால் அர்ச்சனை செய்வது நன்மை பயக்கும் எனவும் அன்று சந்திரனின் அமுதம் கலந்திருக்கும் என்றும் கூறுவார்கள். அட்டவீரட்டான்ங்களில் ஒன்றான திருவிற்குடியில் ஜாலந்தரனை வதம் செய்த கோலத்தில் ஈசனைக் காண முடியும். இங்கே மட்டும் ஈசனின் கைகளில் வலக்கரத்தில் சக்கரம் தாங்கி இருப்பதாயும் சொல்லப் படுகிறது. இந்தச் சக்கரமே பின்னர் ஈசனால் மஹாவிஷ்ணுவுக்கு அளிக்கப் பட்டதாயும் சொல்லுவார்கள். ஈசனின் சக்கரத்தைத் தாங்கியதால் ஜாலந்தரனின் ஆன்மா ஒளி வடிவம் பெற்றுத் திகழ்ந்தது என்று சொல்கின்றனர். காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு மேற்கே ஜலந்தரேசம் என்னும் பெயரில் ஜாலந்தரன் பூஜித்த சிவலிங்கம் உள்ளதாயும் கேள்விப் படுகிறோம். (அடுத்த முறை காஞ்சி போறச்சே பார்த்துட்டு வரணும்.)


வெற்றி யுற்றகதிர் பத்தி ரத்தையரு
ளிச்சு ரர்க்கதிப திப்ப தத்தையுறு
வித்த ளித்தமதி பெற்ற தத்தைமண ...... முண்டவேலா

வெட்கி டப்பிரம னைப்பி டித்துமுடி
யைக்கு லைத்துசிறை வைத்து முத்தர்புகழ்
விற்கு டிப்பதியி லிச்சை யுற்றுமகிழ் ...... தம்பிரானே. //

நாவுக்கரசர் தேவாரம் ஒன்றே ஒன்று திருவிற்குடிக்கு இருப்பதாய்த் தெரிய வருகிறது. ஆனால் அது தேடலில் கிடைக்கவில்லை. அருணகிரிநாதரின் திருப்புகழில் இருந்து சில வரிகள் மேலே. அதேபோல் ஜாலந்தரனை வதம் செய்யும் கோலத்தில் சக்கரத்தோடு உள்ள படமும் கிடைக்கவில்லை. ஜாலந்தரன் ஈசன் ஏவிய சக்கரத்தைத் தன் மார்பில் தாங்கியவண்ணம் ஈசனை இரு கை கூப்பி வணங்கிக் கொண்டு இருக்கும் கோலத்தில் சிற்பம் இருப்பதாய்த் தெரிய வருகிறது. அதுவும் எங்கேன்னு தெரியலை.

Thursday, July 15, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! ம்ருத்யுஞ்சயர்!

அடுத்து வருபவர் நாம் அனைவரும் அறிந்த ஒருவரே. ம்ருத்யுஞ்சயர் என்றும் காலகண்டர், காலகாலர், காலாந்தகர் எனவும் பல்வேறு பெயர்களால் அழைக்கப் படும் காலசம்ஹார மூர்த்தி. மாயவரத்துக்கு அருகே உள்ள திருக்கடையூரில் இந்த மூர்த்தத் திருமேனி, காலனை அழிக்கும் கோலத்தில் காண முடியும். ஒரு நிமிஷத்துக்கு மட்டுமே திரையைத் திறந்து தீப ஆராதனையைக் காட்டிவிட்டுப் பின்னர் மூடிவிடுவார்கள். மிக உக்கிரமாய்க் கோபத்துடன் இருப்பதால் இம்மாதிரிச் செய்கின்றனர். என்றாலும் இவர் ஒரு பக்தனுக்காக வேண்டியே இவ்விதம் கோபம் கொண்டு காலனைக் காலால் உதைத்தார். இந்தக் கதையும் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. கெளசிகரின் புதல்வர் ஆன மிருகண்டு, தன் மனைவியான மருத்துவதியுடன் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்குப் புத்திரப்பேறு இல்லை. புத்திரப் பேறு வேண்டி தவம் இயற்றிய அவருக்கு பிரம்மாவின் அருளால் ஒரு புத்திரன் பிறந்தான். மிக மிக புத்திசாலியும், சிறந்த சிவ பக்தனும் ஆன அந்தப் பையனுக்கு ஆயுள் 16 மட்டுமே என்பது பிரம்மன் விதித்திருந்த ஓர் கணக்கு. இந்த விஷயம் தாய், தந்தையருக்கும் தெரிந்தே இருந்தது. செய்வதறியாமல் துக்கத்தில் ஆழ்ந்து இருந்தனர் தாய், தந்தையர். மார்க்கண்டேயனோ, நிஷ்கவலையாகத் தானுண்டு, தன் சிவ பூஜையுண்டு என்று இருந்து வந்தான். ஆயிற்று. பதினாறு வயதும் பூர்த்தி ஆகும் நாளும் வந்தது. என்றும் போல் அன்றும் மார்க்கண்டேயன் சிவ பூஜையில் வழக்கமான உற்சாகத்துடனேயே ஈடுபட, அவன் முன்னே தோன்றியவர்களோ யமதூதர்கள். மார்க்கண்டேயனை அழைத்துச் செல்லவே அங்கு வந்திருப்பதாய் அவர்கள் தெரிவிக்க, அந்த இளம்பிள்ளையோ, தான் வழிபட்டுக் கொண்டிருந்த சிவலிங்கத்தைத் தன்னிரு கைகளால் இறுகக் கட்டிக் கொண்டான். எமதூதர்கள் திகைக்க, எமனே நேரில் வந்தான். நிலைமையைப் பார்த்துவிட்டு, மார்க்கண்டேயன் கட்டிக் கொண்டிருக்கும் சிவலிங்கத்தோடு சேர்த்து பாசக்கயிற்றை வீசி அவனை இழுக்க, லிங்கம் அசைந்து கொடுத்தது. மார்க்கண்டேயன் வந்துவிடுவான் என நினைத்தக் காலதேவன் முன் தோன்றினார் காலாந்தகர். காலனைத் தம் காலால் உதைக்க, அவனும் கீழே வீழ்ந்தான். மார்க்கண்டேயனும் சிரஞ்சீவியாக என்றும் பதினாறு என்ற வரமும் பெற்றான். இறைவனும் அந்த லிங்கத்திலேயே மறைந்தார்.

விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை தூயதொ ரானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
கடுத்த வானைகண் டீர்கட வூரரே. திருக்கடவூர் வீரட்டம் தேவாரம்


சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்
கால காலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமா னடிகளே. திருக்கடவூர் மயானம் தேவாரம்

பின்னர் உலகில் எவரும் மரணம் அடையாமல் பூமி பாரம் தாங்காது பூமா தேவி வருந்த, திருமாலை வேண்டினாள் அவள். திருமாலும், பிரம்மாவும் ஈசனிடம் முறையிட்டனர். சிவனும் அவர்கள் வேண்டுகோளில் உண்மை இருப்பதைப் புரிந்து கொண்டு, எமனுக்கு மீண்டும் உயிரை எடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்து அருளினார். இந்த இடம் திருப்பைஞ்ஞீலி என்ற தலத்தில் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. காலகாலர் என்ற பெயர் ஏன் வந்தது என்றால் காற்றுக்குக் கால் என்ற ஒரு பொருள் வரும். காற்று ஓரிடத்தில் நில்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கும் தன்மை படைத்தது. காற்று இல்லாமல் இவ்வுலகில் எந்த உயிரும் இல்லை. அந்தக் காற்றில் உள்ள பிராண சக்தியே ஈசன் ஆவார். அவர் அந்தக் காற்றுக்கே காற்றாகவும், கூற்றாகவும் விளங்குவதால் அவருக்குக் காலகாலன், காலாந்தகர் என்றெல்லாம் பெயர்கள் வந்தன. நம் உடலுக்குள் மூச்சுக் காற்றாக ஓடுவதும் அவனே. நொடிக்கு நொடி இறந்து கொண்டே இருக்கும் நம்மை உயிர்ப்பித்துக் கொண்டிருப்பதும் அவனே. மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டு யாருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே இருக்கும் காலத்தைக் கணக்கிட்டு உயிர்களை மரணம் என்ற பிடிக்குள் அடங்கச் செய்ய ஈசனால் நியமிக்கப் பட்டவன் காலன் என்று நாம் அழைக்கும் யமன். அந்தக் காலனையே காலால் உதைத்தமையாலும் அவர் காலாந்தகர் எனப் பட்டார்.


விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருள் காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே. திருப்பைஞ்ஞீலித் தேவாரம்.

மேற்கண்ட தேவாரப் பாடல்களை அருளிச் செய்தவர் திருநாவுக்கரசப் பெருமான்.

Tuesday, July 13, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள்வாழ்க! காமதகனர்!


தாருகாவனத்து ரிஷிகள் அபிசார ஹோமம் செய்து யானையை ஏவி விட்டது பற்றிப் படித்தோம் அல்லவா?? அந்த யானை ஏவி விடப் பட்டதும் பிட்சாடனக் கோலத்தில் இருந்த ஈசனை நெருங்க, ஈசனும் சற்றும் தயங்காமல் அந்த யானையின் பெரிய வாய்க்குள் புகுந்து மறைந்தார். அருகே இருந்த அம்பிகையானவள் திகைத்து, அஞ்சி ஓட, பிரபஞ்சமே ஸ்தம்பித்து நின்றது. சூரிய, சந்திரர்களின் இயக்கம் நிற்க, காலங்கள் தடுமாற, உலக இயக்கமே நின்றுவிட்டது. ஆனால் உள்ளே போன மகேசன் சும்மாவா இருந்தார்?? யானைக்குப் பெரும் தொந்திரவு ஏற்பட்டது மகேசனை விழுங்கியதால். அருகே இருந்த ஒரு குளத்திற்குப் போய் அங்கே விழுந்து, புரண்டு எழுந்தும் அதற்குத் தாங்க முடியவில்லை. ஓலமிட்டது யானை. அப்போது அதன் உடலைக் கிழித்துக்கொண்டு, மத்தகத்தைப் பிளந்துகொண்டு வெளிப்பட்டார் கஜசம்ஹார மூர்த்தி. யானையின் உடலைக் கிழிக்கும் இவர் கோலத்தில் உள்ள மூர்த்தம் மாயூரத்திற்கு அருகே உள்ள வழுவூரில் காணப் படுகின்றதாய்க் கேள்விப் படுகின்றோம். இந்த மூர்த்தத்தின் தரிசனம் இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும் அது பற்றிய மேலதிகத் தகவல்கள் கொடுக்கப் படும்.

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உரித்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்


காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்
கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை
மேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம்

திருநாவுக்கரசரின் வழுவூர் வீரட்டானம் பற்றிய தேவாரப் பாடல்களில் சில வரிகளைக் காணலாம்.






அடுத்து நாம் காணப் போவது யோகத்தில் இருக்கும் காம தகனர். காமனை எரித்ததால் காமதகனர் என்று சொல்லுகின்றோம். உண்மையில் தட்சிணாமூர்த்தி சொரூபத்தின் இன்னொரு வடிவமே இவர். தட்சிணா மூர்த்தியாக இவர் ஒரு க்ஷண நேரம் நீடிக்க அது பெரும் ஊழிக்காலமாக மாற, தேவாதி தேவர்கள் உலகின் சிருஷ்டியும், இயக்கமும் நின்றுவிடுமோ என அஞ்சி, இறைவனிடம் காமனை ஏவுகின்றார்கள். காமன் ஏன் ஏவப் படுகின்றான்? அவனுக்கு என்ன ஆகின்றது என்று சற்று விபரமாய்ப் பார்க்கலாமா?? அனைவருக்கும் பலமுறை சொன்ன, நன்கு தெரிந்த கதை தான் இது. ஆகவே சுருக்கமாய்ச் சொல்லுகின்றேன்.

தட்சப் பிரஜாபதியின் யாகத்துக்குத் தன் மருமகன் ஆன ஈசனை அழைக்கவும் இல்லை. அவருக்கு உரிய அவிர்பாகத்தை அவன் கொடுக்கவும் இல்லை. ஈசனை மணந்த தட்சன் மகள் தாட்சாயணி ஆகிய அம்பிகை மனம் கேட்காமல் யாகத்துக்குச் சென்று தந்தையைக் காரணம் வினவ, அவனோ மகள் என்றும் பாராமல் தாட்சாயணியை அவமானம் செய்கின்றான். அவமானம் தாங்க முடியாத தாட்சாயணி தட்சனால் கிடைக்கப் பெற்ற உடலை நீக்க எண்ணி யாக குண்டத்துக்குள் புகுந்து, உயிர்த் தியாகம் செய்ய, இறைவன் தட்சனை அடக்க வீரபத்திரரை ஏவுகின்றார். வீரபத்திரர் வந்து தட்சனை அடக்கியபின்னர், அம்பிகையின் திருவுளப் படியே அவள் இன்னொரு பிறவி எடுத்துத் தம்மை வந்தடைய அருள் புரிகின்றார் ஈசன். அந்தச் சமயம் இமவான் குழந்தை வரம் வேண்டித் தவம் இருக்க அவன் காணுமாறு அம்பிகையை அவன் மகளாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்ட அம்பிகையானவள் அவ்வாறே ஒரு தாமரைத் தடாகத்தில் பூத்த பெரியதொரு தாமரை மலரில் ஒரு குழந்தையாகத் தோன்றுகின்றாள். அழகான குழந்தையைக் கண்ட இமவான் அந்தக் குழந்தையைப் போற்றிப் பாசம் காட்டித் தன் உயிரினும் இனிய மகளாய் வளர்த்து வருகின்றான். அம்பிகையோ தன் உள்ளத்தால் ஏற்கெனவே தன் பதியாக இருந்த ஈசனைத் தவிர வேறொருவரைத் தன் கணவனாய் ஏற்க முடியாது என்று எந்நேரமும் ஈசன் நினைவிலேயே இருந்து வந்தாள். அவள் நிலையைக் கண்ட இமவான், அவள் தவம் இயற்ற வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தருகின்றான். அம்பிகை தவம் மேற்கொள்ள, இங்கே ஈசனோ அம்பிகையைப் பிரிந்த நிலையில் மோனத் தவம் செய்து யோகியாக வீற்றிருக்கின்றார்.

ஞானம் பெற வேண்டி ஈசனை வந்தடைந்த சனகாதி முனிவர்களுக்கு அவர் ஞானம் என்பது சொல்லில் அடங்குவதன்று என்பதைப் புரியவைக்கும் சின்முத்திரையைக் காட்டி யோக தட்சிணா மூர்த்தியாக அமருகின்றார். அவரின் இந்த மெளனத்திலேயே அனைத்தும் புரிந்த மாணாக்கர்களாய் சனகாதி முனிவர்களும் அவர் காலடியிலேயே அமருகின்றனர் சீடர்களாய். ஒரு க்ஷண நேரமே நீடித்ததாம் இந்தச் சின்முத்திரைக் கோலத்தில் தட்சிணா மூர்த்தி சொரூபமாய் ஈசன் அமர்ந்த கோலம். அந்த ஒரு க்ஷண நேரமானது இங்கே மாபெரும் ஊழிக்காலமாய் நீண்டது. உலக இயக்கம் ஸ்தம்பித்தது. அம்பிகையை ஈசன் பிரிந்து இவ்வாறு யோகத்தில் ஆழ்ந்து யோக தட்சிணாமூர்த்தியாக இருந்தவண்ணமே இருந்தால், உலகின் இயக்கத்துக்கு அர்த்தமே இல்லை என்றுணர்ந்த தேவாதிதேவர்கள் அவரின் யோகத்தைக் கலைக்க மன்மதனை ஏவுகின்றனர்.

அம்பிகையை மணந்து ஈசன் யோகத்தில் இருந்து போகத்துக்கு மீண்டாலே உலக இயக்கமும் சரிவர நடக்கும், அரக்கர்களின் துன்பமும் தொலையும். காமனைக் கூப்பிட்டு செய்யவேண்டியதைச் சொல்ல காமனோ மனம் கலக்கமுறத் தன்னால் இயலாத ஒன்று என்றுணர்ந்து மறுத்தான். ஆனால் பிரம்மாவோ கோபம் மிகக் கொண்டு காமனைச் சபிக்கக் கிளம்ப, பிரம்மாவின் கோபத்துக்குச் சிவனின் கோபத்தால் உயிர் நீப்பதே பெரியது என நினைத்த மன்மதன், தன் வாகனம் ஆகிய கிளியின் மீது ஏறிக் கொண்டு, தென்றல் காற்றைத் தேராய்க் கொண்டு, கரும்பினால் ஆன வில்லை ஏந்திக் கொண்டு, குயில் கூவி அழைக்க, கடல் ஆர்ப்பரித்து முழங்க, மலர்க்கணைகளைத் தயார் செய்து கொண்டு, தன் இனிய மனனயாள் ஆன ரதிதேவியுடன் திருக்கைலை வந்தடைந்தான் காமதேவன். ஈசன் ஆழ்ந்த மோனத்தில் தவம் இருக்கின்றார். ஒரு அசைவில்லை. கலக்கத்துடனும், தயக்கத்துடனும், தன் மலர்க்கணையை எடுத்து அவர் மீது ஏவினான் மன்மதன். மலர்க்கணைகளின் தொடுகை தெரிந்ததுமே தன் கண்களைத் திறந்தார் ஈசன். கூடவே நெற்றிக் கண்ணும் திறக்கவே அதிலிருந்து கிளம்பிய கோபாக்கினியில் எரிந்து சாம்பல் ஆனான் மன்மதன். ரதிதேவி கலங்கி, புலம்பி அழ, அவள் நிலை கண்டு வருந்திய ஈசன் சாம்பல் ஆனவனை உருவம் கொள்ளச் செய்ய முடியாது என்பதால் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படியான அருவ நிலையில் அவன் இருப்பான் என்று அருள் புரிகின்றார். பின்னாட்களின் மன்மதனை அநங்கன் என்று சொல்ல ஆரம்பித்ததின் காரணமும் இது தான்.

இவ்வாறு காமனை எரித்த நிலையில் ஈசன் இருக்கும் கோலமே காமதகனர் என்று சொல்லப் படுகின்றது. மன்மத பாணத்துக்கும் மயங்காத ஈசனை அன்னையின் தவமே கலைத்தது என்பது ஸ்காந்த புராணம் நமக்குச் சொல்லும் செய்தி. இவரை யோக தட்சிணா மூர்த்தி எனவும் சொல்லுவார்கள். இந்த அரிய கோலம் மாயவரத்துக்கு அருகில் உள்ள திருக்குறுக்கை என்னும் ஓர் ஊரில் காணப் படுவதாய்த் தெரிகின்றது. இது அட்டவீரட்டானத் தலங்களிலும் ஒன்று எனவும் அறிகின்றோம். காமத்தையே எரித்ததால் இறைவனுக்குக் காமதகனர் என்று பெயர் வந்தது. காமனின் திருமணமும், அதை ஒட்டிய காமதகனமும் இன்றும் கிராமப் புறங்களில் அறுவடைக்குப் பின்னர் வரும் மாசி, பங்குனி மாதங்களில் பெளர்ணமி தினத்தில் நடைபெறுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.


படங்கள் நன்றி: கூகிளார்

Sunday, July 11, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பிட்சாடனர்!

பிட்சாடனர் திருச்சிக்கு அருகே உள்ள திருப்பராய்த்துறையிலும், உத்தமர் கோயிலிலும் விசேஷமாகச் சிறப்பு தரிசனம் தருகிறார். திருப்பராய்த் துறையைத் தான் தாருகாவனமாக இருந்த்தாகச் சொல்கின்றனர். அங்கே பிட்சாடனரை உற்சவராக வழிபடுகின்றனர் என்று தெரிய வருகிறது. மேலும் கோயிலின் முன் மண்டபத்து மேல் விதானத்தில் உள்ள ராசிச் சக்கரத்தையும், பிட்சாடனரையும், மூலவர் பராய்த்துறை நாதரையும் ஒரே நேரத்தில் வழிபடுதல் விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. கோயிலின் பெயரே தாருகவனேஸ்வர்ர் கோயில் என்றும் சொல்கின்றனர். சம்பந்தர் பதிகத்திலிருந்து இரு பாடல்கள்:


நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே.
1.135.1 1449
கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல அடிகளே.
அருணகிரிநாதரின் திருப்பராய்த் துறைத் திருப்புகழின் கடைசிச் செய்யுட்களில் இருந்து,
மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம
லாசனன் வந்துல காக்கி வைத்திடு
வேதன கந்தையை மாற்றி முக்கண ...... ரறிவாக

மூதறி வுந்திய தீக்ஷை செப்பிய
ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத
மூவரி லங்குப ராய்த்து றைப்பதி ...... பெருமாளே.
நாவுக்கரசரின் தேவாரத்தில் இருந்து இந்தப் பழமையான பதியைப் பற்றி அறிய முடிகிறது.

கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.

அடுத்து உத்தமர் கோயிலையும் பிச்சாண்டார் கோயில், பிட்சாண்டார் கோயில் என்று சொல்வது உண்டு.இதுவும் திருச்சிக்கு அருகே உள்ளது. ஆனால் இந்தக் கோயிலில் மும்மூர்த்திகளையும் அவரவர் பத்தினிமாரோடு தரிசனம் செய்யலாம் என்று சொல்கின்றனர். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட கோயில் என்றும், இங்கே உள்ள மஹாலக்ஷ்மியிடம் வாங்கிய பிட்சைக்குப் பின்னரே பிரம்மனின் கபாலம் ஈசன் கையிலிருந்து அகன்றது என்றும் சொல்கின்றனர். வடநாட்டில் வேறு விதமாய்ச் சொல்லுவார்கள். தாருகாவனத்து ரிஷிகள் வேதங்களையும், அது சம்பந்தமான சாஸ்திர, சம்பிரதாயங்களை மட்டுமே கடைப்பிடித்துக் கடவுளையும், அவர் இருப்பையும் அலட்சியம் செய்ததோடு, தங்கள் யாகங்களாலும், தவங்களாலும் செருக்குடனும் இருந்துவந்தனர். ஆகவே அவர்களுக்குப் புத்தி புகட்டவே ஈசன் பிக்ஷாடனர் கோலத்தில் வந்தார். இதுவே நாம் தெரிந்து கொண்டது.

ஆனால் வடநாட்டில் சிலர் பிரம்மனின் தலையைக் கிள்ளியதும், அவர் கபாலமும், பிரம்மஹத்தி தோஷமும் ஈசனைப் பீடிக்கிறது. பிரம்மனும் ஈசன் என்று கூடப் பாராமல் நீ பிக்ஷை எடுத்து உண்டு வாழவேண்டும். எவ்வளவு போட்டாலும் இந்தக் கபாலம் அத்தனை பிக்ஷையையும் சாப்பிட்டு விடும். என்று இந்தக் கபாலம் நிறைகிறதோ அன்றே உங்கள் கையிலிருந்து இது அகன்று போகும்.” என்று சாபம் கொடுத்த்தாயும், அதிலிருந்து பிக்ஷாடனராக பிக்ஷை எடுத்து வந்த ஈசன், காசி மாநகருக்கு வந்து அங்கே அன்னபூரணியாக உணவு சமைத்து அனைவருக்கும் அளித்துத் தவம் செய்து கொண்டிருந்த அன்னையிடம் பிக்ஷை வாங்கியதாகவும், அன்னை ஒரு கரண்டி அன்னம் இட்டதுமே கபாலம் நிறைந்ததாயும் கூறுகின்றனர். அதன் பின்னர் பிரம்ம கபாலம் ஈசன் கையை விட்டு நீங்கியதாயும் கூறுகின்றனர். அந்த பிரம்ம கபாலத்தை மஹாவிஷ்ணு பத்ரிநாத்தில் இட்ட்தாயும் கூறுகின்றனர். பத்ரிநாத் செல்லும் அன்பர்கள் தப்த குண்டத்தில் குளித்துவிட்டு பிரம்மகபாலத்தில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன் கொடுப்பது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

Friday, July 09, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பிட்சாடனர்!


அடுத்து நாம் காணப் போவது இந்த உலகையே தன் ஆட்டத்தால் ஆட்டி வைக்கும் ஈசனின் பிச்சை எடுக்கும் கோலம்.


பரந்துல கேழும் படைத்த பிரானை
`இரந்துணி` என்பர் எற்றுக் கிரக்கும்
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.

பிச்சையதேற்றான் பிரமன் தலையினில்
பிச்சைய தேற்றான் பிரியாதறஞ் செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரான்பர மாகவே”//

என்று திருமூலர் தம் திருமந்திரத்தின் ஏழாம் தந்திரத்தில் இறைவனின் பிட்சாடனத் திருக்கோலத்தைப் பற்றிப் பாடியுள்ளார்.

தாருகாவனத்து முனிவர்கள் தத்தம் மனைவியரோடு கூடி கடுந்தவம் செய்து வந்தனர். தவங்களால் பல சித்திகளையும் பெற்றனர். அளப்பரிய ஆற்றலையும் பெற்றனர். தாம் தவங்கள் செய்து பெற்ற ஆற்றலால் ஆணவம் அதிகம் ஆகியது முனிவர்களுக்கு. ஈசன் அருளாலேயே இவை கிடைத்தன என்பதையும் மறந்து, ஈசனையும் மறந்து, தம் தவமே சிறந்தது, தம் ஆற்றலே சிறந்தது, தாமே அனைத்திலும் வல்லவர்கள் என்னும் எண்ணம் மேலோங்கியது. செருக்கு அடைந்த அவர்களுக்குப் புத்தி புகட்ட ஈசன் நினைத்தார். உடனே போடப் பட்டது ஒரு கலந்து உரையாடல் கைலையில். கலந்து உரையாடியது ஈசனும், சாட்சாத் மகாவிஷ்ணுவும்தான். என்ன உரையாடினார்கள்?? தாருகாவனத்து முனிவர்களின் கொட்டத்தை எப்படி அடக்கவேண்டும் என்பது பற்றியேக் கலந்து பேசிக் கொண்டனர். அந்தப் படிக்கு ஈசன் ஒரு அழகான இளம் வாலிபனாக மாறினார். அரையிலே பாவம், அந்தப் பித்தனான பிச்சைக்காரனுக்கு ஆடை இல்லை. நிர்வாணக் கோலம். பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் வந்த கபாலம் கையில் திருவோடாக மாறிக் காட்சி அளிக்கின்றது. பக்கத்தில்?? உமை அம்மை எங்கே?? இந்தப் பிச்சைக்காரக் கோலத்தைக் கண்டு பயந்து ஓடிவிட்டாளா என்ன?? இல்லை, இல்லை எங்கேயும் போகவில்லை, தன் பதியும், சோதரனும் ஆடும் ஆட்டத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றாள். தொப்புழ் வரையில் நீண்டிருந்த இடக்கையில் பிச்சைப் பாத்திரமாய்க் கபாலமும், வலக்கரத்தில் புல்லும் ஏந்திக் கொண்டு பிச்சை எடுக்கக் கிளம்புகின்றார், அனைவருக்கும் படியளக்கும் அண்ணல். இடக்காலை ஊன்றிக் கொண்டு, இது என்ன ஆச்சரியம்?? வலக்காலை வளைத்து, வளைத்து அசல் பிச்சைக்காரன் தோற்றான்! அப்படியே பிச்சைக் காரனைப் போல் நடந்து தாருகாவனத்தினுள் நுழைகின்றார் இந்தப் பிச்சைக்காரர். முனிவர்களின் பத்தினிகள் இருக்குமிடம் நோக்கிச் செல்லுகின்றார் பிச்சை எடுக்க.

பர்த்தாக்களுக்கு ஏற்ற பத்தினிமாராகச் செருக்குடன் தான் இருந்தனர் முனிவர்களின் பத்தினியரும். இந்த அழகர் அங்கே போய்ப் பிச்சைக்கு நின்றாரோ இல்லையோ, இவர் யார்? எங்கிருந்து வந்தார்?? பிச்சை ஏன் எடுக்கின்றார் என்பதெல்லாம் மறந்துவிட்டது ரிஷிபத்தினிகளுக்கு. வந்தவர் அழகில் அனைவரும் மயங்கினர். தங்கள் வீட்டு வேலைகளை மறந்தனர். தாம் யார் என்பதையும் மறந்தனர். அனைத்தும் மறந்து அந்தப் பிச்சைக்காரரைச் சென்று அருகில் பார்த்து மயங்கி நின்றனர். இது தான் சமயம் என வந்த பிச்சைக்காரன் அங்கிருந்து நகர முற்பட, ரிஷிபத்தினிகளும் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு தம் ஆடைகள் குலைவதையும் நினையாமல் அவர் பின்னே செல்கின்றனர். அதே சமயம் முனிவர்கள் தவம் செய்யும் இடத்தில் அவர்கள் கண் முன்னே தோன்றினாள் அதிரூப சுந்தரியான பெண்ணொருத்தி. காண்போர் கவரும் வண்ணம் அழகுப் பெட்டகமாய் விளங்கிய அவள் தன் இனிமையான குரலினால் அந்த முனிவர்களைக் கவர்ந்திழுத்தாள். மேனியோ மென்மை, குரலோ இனிமை, அழகோ சொல்ல முடியவில்லை. யார் இந்தப் பெண்ணரசி?? எங்கே இருந்து வந்தாள்? ஒன்றும் புரியவில்லை ரிஷிகளுக்கு. தங்கள் தவத்தை மறந்தனர். தங்கள் நிலையை மறந்தனர். தங்கள் செருக்கையும் மறந்தனர். அந்தப் பெண்ணைக் கண்டு மயங்கி நின்றனர்.

திடீரென அந்தப் பெண் அங்கிருந்து செல்ல ஆரம்பிக்க ரிஷிகளும் பின் தொடர, அவர்களுக்கு முன்னால் ரிஷிபத்தினிகள் ஓடுவதையும், ரிஷி பத்தினிகளுக்கு முன்னால் ஒரு பிச்சைக்காரன் அதிரூப லாவண்யத்துடன் செல்லுவதையும் கண்டதுமே அவர்களுக்குத் தங்கள் தவறு புரிந்தது. உடனேயே தங்கள் தவற்றை உணர்ந்த அவர்கள் அந்தப் பிச்சைக்காரனை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் ஆபிசார வேள்வி ஒன்றைத் துவங்குகின்றனர். அந்த வேள்வியில் இருந்து சிங்கம், புலி, யானை, பாம்பு, முயலகன் என்னும் அசுரன் போன்றவர்கள் வர ஒவ்வொருவராய் பிட்சாடனர் மேல் ஏவினார்கள் தாருகாவனத்து ரிஷிகள். பாம்புகளை அணிகலனாய் அணிந்து கொண்டார் எம்பெருமான். விலங்குகளைக் கொன்று அவற்றின் தோலை ஆடையாக அணிந்து கொள்கின்றார். இனி மிச்சம் இருப்பது முயலகன் ஒருவனே. அவனையும் தம் திருவடியின் கீழ் போட்டு மிதிக்கின்றார். அவன் ஆணவம் அழிய, ரிஷிகளின் ஆணவமும் அழிந்து உண்மையை உணர்ந்து வந்தவர் சர்வேசன் என்பதை அறிந்து கொள்ளுகின்றனர்.

இந்தப் பிட்சாடனத் திருக்கோலம் காலம் செல்லச் செல்லக் கொஞ்சம், கொஞ்சம் மாறுபட்ட நிலைகளில் காண முடிகின்றது. வலக்காலை முன்னே எடுத்து வைத்து நடக்கும் கோலத்தில், இடக்கையில் உள்ள பிச்சைப் பாத்திரத்துடனும், காட்சி அளிக்கும் இவரின் வலக்கையில் உள்ள புல்லை ஒரு மான் தின்னும் கோலத்திலும் பார்க்கலாம். இடக்கரங்களில் திரிசூலம், உடுக்கை , பாம்பு ஏந்தியும் ஆடையாகப் பாம்பையே அரையில் அணிந்த வண்ணமும் தலையில் ஜடாமுடியுடனும், வலக்காலில் வீரக் கழல்களுடனும் காட்சி அளிக்கின்றார். வேதங்களைப் பாதுகையாக அணிந்த வண்ணமும், பாதச் சிலம்புகள் ஆகமங்களாகவும், பாம்புகள் யோகசாதனையின் குறியீடுகளாகவும் உள்ளன. இந்த பிட்சாடனரின் மற்றொரு கோலம் கஜசம்ஹார மூர்த்தியாகக் காண முடியும்.

Tuesday, July 06, 2010

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சந்திரசேகரர்!

ஆடும் கூத்தனின் ஆட்டமும், அவனோடு போட்டியிட்ட உக்ரகாளியின் ஆட்டமும் பிரபலமானவை. காளிக்கும், ஈசனுக்கும் யார் பெரியவர்கள் என்பதில் போட்டி! அந்தப் போட்டியை நாட்டியம் ஆடி அதில் தோற்றவர் தாம் சிறியவர் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். காளியோ அம்பிகையின் அம்சமே ஆவாள். அவள் ஆடுவதற்குக் கேட்கவா வேண்டும்? அதிலும் கோபம் வேறே அவளுக்கு! இன்னும் ஆவேசமாக ஆட ஆரம்பித்தாள்! ஆனால் ஈசனோ இவளை வெல்லவேண்டும் என்ற குறிக்கோளுடனே இருந்ததால் ஆட்டம் சாந்தமாகவே இருந்தது. பார்க்க ஆநந்தமாயும் இருந்தது. ஆநந்த நடனம் ஆடி அதிலே லலாட திலகா என்னும் அம்சத்தைக் கொண்டு வந்தார். தன் காதுக்குழையைக் கீழே தவறவிட்டுத் தன் கால்களாலேயே அதை எடுத்துத் தன் காலை மேலே உயர்த்திக் காதில் மாட்டிக்கொள்கிறார். காளியால் அவ்வாறு காலை மேலே தூக்கமுடியுமா? நாணிப் போய்விடுகிறாள். தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறாள்.
காளியை சாந்தப் படுத்த ஈசன் ஆடிய ஆட்டமே சாந்திக்கூத்து எனப்படுவதாய்த் தெரிய வருகிறது. மனதைச் சாந்தப் படுத்தும் கூத்துக்கு சாந்திக்கூத்து என்று பெயர். இப்படி நம் கலைகளை நம் கடவுளர் மூலமே நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. சிதம்பரம் கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் 108 கரணங்களையும் ஆடும் கோலத்தைக் காணமுடியும். இது வரையில் நடராஜரின் தாண்டவங்களையும் அவற்றின் விதங்களையும் பார்த்தோம். அடுத்து நாம் காண இருப்பவர் சந்திரசேகரர்.

சந்திரன் தக்ஷ குமாரிகள் இருபத்து ஏழு பேரை மணந்ததும், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் பிரியமாய் இருந்ததும், அதனால் தக்ஷன் அவனை அழகு குறைந்து மங்கிப் போகச் சாபம் கொடுத்த கதையும் தெரிந்திருக்கும். அப்போது தன் சாபம் நீங்க ஈசனை வழிபட்டான் சந்திரன். அவனின் கலை முழுதும் தேய ஆரம்பித்து இன்னும் இரண்டு நாட்களில் முற்றிலும் காணாமல் போய்விடும் என்ற நிலைமை. அப்போது ஈசன் வந்து அவனைக் காப்பாற்றுகிறார். மூன்றாம் பிறையன்று தேய்ந்திருந்த சந்திரனைச் சேகரம் செய்து தன் முடியில் சூடியதால், சந்திரசேகரர் என்ற பெயர் பெற்றார் ஈசன். சேகரன் என்பதற்குக் காப்பவன் என்ற பொருளும் வருகின்றது. முழுதுமாய்த் தேய்ந்துவிடாமல் சந்திரனைக் காத்து அருளியதாலும் இந்தப் பெயர் எனக்கொள்ளலாம். சந்திரசேகரத் திருமேனி மூன்று வகை என்று கேள்விப் படுகின்றோம். கேவல சந்திரசேகரர், உமா சந்திரசேகரர், ஆலிங்கன சந்திரசேகரர் ஆகியவை அவை ஆகும். கேவல என்ற சொல்லுக்கு இங்கே அது மட்டும், அல்லது தனித்த என்ற பொருள் தான் வரும். நாம் பொருள் கொள்ளும் கேவலம்=மட்டம் என்ற பொருளில் வரும். அது இல்லை. கேவல என்பது வடமொழிச் சொல். வடமொழியை எடுத்துக் கொண்டே இந்த இடத்தில் அர்த்தத்தைப் பார்க்க வேண்டும். அடுத்து சந்திரசேகரரின் திருமேனி வகைகளைக் காண்போம்.

தன்னந்தனியாக அம்பிகை இல்லாமல் ஈசன் மட்டும் பிறை சூடியவனாய்க் காட்சி அளிக்கும் கோலத்திற்கே “கேவல சந்திரசேகரர்” என்ற பொருள் வரும். “பித்தா, பிறைசூடி, பெருமானே! அருளாளா!” என்று பக்தர்கள் அனைவரும் போற்றித் துதித்து மெய்ம்மறந்து போகும் இந்தச் சந்திரசேகர மூர்த்தம், கையில் மான், மழுவுடனும், அபய ஹஸ்தங்களுடனும், ஊரு ஹஸ்த முத்திரைகளுடனும் காணப் படுவார். ஊரு என்ற வடமொழிச் சொல்லுக்குத் தொடை என்ற பொருள் வரும். கையைத் தொடையில் பதிந்த வண்ணம் காட்சி தருவார் இந்தச் சந்திரசேகரர். மிகச் சிலக் கோயில்களிலேயே இந்த மூர்த்தம் காணப் படுவதாயும், மாமல்லபுரம் திருமூர்த்தி குகையிலும், பட்டீஸ்வரம் கோயிலிலும் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. இரண்டு இடங்களுமே பார்த்திருந்தாலும் பல வருடங்கள் ஆனபடியால் நினைவில் இல்லை.

அடுத்து உமா சந்திரசேகரர். அன்னை உமையுடன் காட்சி தருவார் இவர். அநேகமாய் எல்லாச் சிவாலயங்களிலும் உற்சவ மூர்த்தியாய்ப் பஞ்சலோகத்தில் வடிவமைக்கப் பட்ட இந்தத் திருமேனி பக்கத்தில் அன்னை உமை, கையில் மலர் ஏந்தும் பாவனையுடனும், இடக்கரத்தைத் தொங்கப் போட்ட வண்ணமும் காண முடியும். சந்திரசேகரர் பின்னிரு கைகளில் மான், மழுவும் முன்னிரு கரங்களில் அபய முத்திரையோடும் காணப் படுவார். முக்கியமாய்ப் பிரதோஷத்தன்று உலா வரும் மூர்த்தம் இது தான் என்றும் சொல்லப் படுகின்றது. சில கோயில்களில் கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பின்னால் இவ்வடிவம் அமைந்திருப்பதாயும் அவற்றில் திருவீழிமிழலை கோயிலும் ஒன்று எனவும் தெரியவருகின்றது. வட நாட்டுச் சிவத் திருத்தலங்கள் பலவற்றிலும் கருவறையில் உள்ள மூலவரான லிங்க ரூபத் திருமேனிக்குப் பின்னால் உள்ள சுவரில் இந்தச் சந்திரசேகர மூர்த்தம் உமை அம்மையோடு காணப்படும். தென்னாட்டிலும் சில கோயில்களில் மிக மிக அரிதாய்க் காண முடிகிறது. முக்கியமாய்க் கர்நாடகாவின் சில கோயில்களில் காணமுடியும்.

அடுத்து ஆலிங்கன சந்திரசேகரர்: பக்கத்தில் உள்ள உமை அம்மையை அணைத்த வண்ணம் காணப் படுவார் இவர். அதிலும் சென்னைக்கு அருகே மண்ணிவாக்கம் என்னும் ஊரில் உள்ள ஸ்ரீமிருத்யுஞ்சேஸ்வரர் ஆலயத்தில் அன்னை, ஈசனையும், ஈசன் அன்னையையும் அணைத்த கோலத்தில் பரஸ்பர ஆலிங்கன மூர்த்தமாய்க் காண முடியும் எனத் தெரிய வருகின்றது. (இன்னும் போகலை, எங்கே இருக்குனு கேட்டுட்டுப் போய்ப் பார்த்துட்டு வரணும்.) இந்த எல்லா வடிவங்களிலும் ஈசன் பிறை சூடிய எம்பெருமானாய்க் காட்சி அளிப்பார். கொடியேற்றத்தோடு நடக்கும் விழாக்கள் தவிர, மற்ற நாட்கள் ஆன பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி, போன்ற தினங்களில் வரும் வீதி உலாவுக்குப் பெரும்பாலும் சந்திரசேகர மூர்த்தமே வீதி உலாவில் வருவார். திருமங்கலக்குடி என்னும் ஊரில் அம்மை ஈசனை அணைத்தவண்ணம் காணப்படுகிறாள். ஆனால் ஈசன் லிங்க ரூபத்தில் இருப்பதாய் நினைவு. பல வருஷங்கள் ஆகிவிட்டதால் சரியாய் நினைவில் இல்லை.