எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, December 29, 2011

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சண்டேச அனுகிரஹமூர்த்தி!


சோழநாட்டில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஊர் திருச்சேய்ஞலூர் ஆகும். சூரனை வதம் செய்யச் சென்ற முருகப் பெருமான் இந்தத்தலத்தில் ஈசனை வணங்கி உருத்திர பாசுபதப் படையைப் பெற்றார். சர்வசங்காரப் படை என்றும் கூறுவர். சேய் வழிபட்ட ஊராகையால் சேய் நல் ஊர் என்பது மருவி திருச்சேய்ஞலூர் என்றாகித் தற்காலத்தில் சேங்கலூர் என வழங்கப் படுகிறது. காவிரியின் கிளைநதியாகிய மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ள இந்தத் தலத்திற்கு மண்ணியாறே தீர்த்தமாகவும் அமைந்துள்ளது. இவ்வூரில் யக்ஞதத்தன் என்னும் பெயர் கொண்ட அந்தணன் ஒருவனுக்கும் பத்திரை என்னும் அவன் மனைவிக்கும் ஒரு ஆண்மகவு பிறந்தது. அந்தக் குழந்தைக்கு விசாரசருமன் என்னும் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள். பிறக்கையிலேயே தெளிந்த அறிவோடு பிறந்த அந்தக் குழந்தைக்கு யாரிடமும் பயிலாமலேயே தானே அனைத்தையும் உணரும் அறிவு இருந்தது. வேதங்களை நன்கு உணர்ந்திருந்தான். உரிய வயதிலே தகப்பனால் உபநயனமும் செய்விக்கப்பட்டான்.

வேத ஆகமங்களின் வழி நடந்த அந்த இளைஞன் ஈசன் ஒருவனே நம்மை வழிநடத்த வல்லான் என்ற பேரறிவை மிகச் சிறு வயதிலேயே பெற்றிருந்தான். அன்றாடம் சிவ வழிபாடு செய்து வந்தான். அவனுடைய நண்பன் ஒருவன் பசுக்களை மேய்க்கையில் ஒரு பசு கூட்டத்தை விட்டு விலகிச் சென்றது கண்டு அதை அடித்தான். இதைக் கண்ட விசாரசருமனுக்கு மனம் துடித்தது. வாயில்லாப் பிராணியான பசுவை அடிக்கக் கூடாது என நினைத்துத் தானே அன்று முதல் பசுக்களை மேய்க்கும் பணியை வலிந்து ஏற்றான். பசுக்களை தெய்வமாய்க் கண்டதால் அவற்றைச் சிறப்பான முறையில் பராமரித்து வந்ததோடு, வழிபாடுகளும் செய்து வந்தான். பசுக்களை மேய்க்கையிலேயே நேரத்தை வீணாக்காமல் அந்த மண்ணியாற்றங்கரையிலேயே அங்குள்ள அத்திமரத்தின் கீழே மணலால் சிவலிங்கம் அமைத்து, கருவறை, மண்டபம், சுற்றுச்சுவர்கள், கருவறை விமானம், கோபுரங்கள் போன்றவை அமைத்துக் கோயில் போலக் கட்டி வழிபாடுசெய்தான். பசுக்கள் விசாரசருமனின் பராமரிப்பில் செழித்துக் காணப்பட்டதோடு பாலையும் தாராளமாய்ச் சொரிந்தது.

பசுக்களின் பாலைக் கறந்து தான் கட்டிய மண்ணாலான கோயிலின் வழிபாட்டிற்கும், அபிஷேஹத்துக்கும் அந்தப் பாலைப் பயன்படுத்திக்கொண்டான் விசாரசருமன். நாளாவட்டத்தில் இது அன்றாட நடவடிக்கையானது. பசுக்களின் சொந்தக்காரர் பொறுத்துப் பார்த்தும் முடியாமல் விசாரசருமனின் தந்தையிடம் புகார் செய்தார். அவர் அனைத்தையும் கேட்டுவிட்டுத் தன் மகனைத் தாம் கண்டிப்பதாய்க் கூறினார். அதன் பேரில் மறுநாள் பசுக்களை மேய்ச்சலுக்கு விசாரசருமன் அழைத்துச் சென்றதும் தந்தையார் பின் தொடர்ந்தார். என்ன நடக்கிறது என்று பார்க்கையில் மணலால் கோயில் கட்டி மகன் வழிபாடுகள் செய்வதையும், கறக்கும் பாலெல்லாம் அதற்கே செலவாவதையும் கண்டார். மகனைக் கண்டித்தார். ஆனால் தன் வழிபாட்டில் ஆழமாக ஒருமித்த நினைப்போடு மூழ்கி இருந்த விசார சருமனுக்குத் தந்தையின் குரல் காதில் விழவில்லை. தந்தை அவர் முதுகில் ஓங்கி அடித்தார். அப்போதும் விசாரசருமனின் ஒருமித்த வழிபாடு கலையவில்லை. தந்தையார் கோபத்துடன் பால்குடங்களை எட்டி உதைத்தார். எல்லாப் பாலும் மணலில் கொட்டிக் கவிழ்ந்தது.

திரும்பிப் பார்த்த விசார சருமர் கோபத்துடன் கீழே கிடந்த ஒரு கம்பை எடுத்துத் தந்தையை ஓங்கி அடித்தார். என்ன ஆச்சரியம்! அவர் கையில் எடுத்த கம்பு மழுவாக மாறி விசாரசருமரின் தந்தையாரின் காலை வெட்டிவிட்டது. துடித்துப் போனார்கள் இருவரும். தந்தை அப்போதே இறந்தார் என்றும் கூறுவார்கள். அப்போது அங்கே அன்னையோடு காட்சி கொடுத்த ஐயன் தன் சடாமுடியில் சூடிக்கொண்டிருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு அணிவித்து, தம் அமுதம், மலர்கள், பரிவட்டம் என அனைத்தையும் அவருக்குக் கொடுத்து, “விசாரசருமா! உம் தொண்டை நாம் மெச்சினோம். இன்று முதல் உன் தந்தை நாமே! எம் அடியார்களுக்கெல்லாம் இன்று முதல் நீ தலைவனாக இருப்பாய். எம்மைத் தரிசிக்க எவர் வந்தாலும் உன்னையும் தரிசித்து உன்னிடம் தாங்கள் எம்மைத் தரிசித்ததைச் சொல்லிவிட்டுப் போவார்கள். இன்று முதல் நீ சண்டேசன் என்ற பதவியைப் பெறுவாய்!” எனக் கூறித் தம் திருக்கரங்களால் சண்டேசருக்கு அனுகிரஹம் செய்தார். தம் திருக்கரங்களால் பரிவட்டத்தையும் சூட்டிக் கொன்றை மாலையையும் சூட்டினார்.


படம் நன்றி விஜய்

இவரே சண்டேச அனுகிரஹ மூர்த்தி என்பார்கள். சண்டேசருக்குப் பரிவட்டத்தைச் சூட்டும் கோலத்தில் காணப்படுவார். சேங்கனூர் என்னும் திருச்சேய்ஞலூரில் சண்டேசர் பிறை, சடை, குண்டலம் போன்றவற்றோடு காணப்படுவார் என்கிறார்கள். திருஞானசம்பந்த ஸ்வாமிகளின் திருச்சேய்ஞலூர் தேவாரத்தில் கீழ்க்கண்ட பாடல் ஈசனின் இந்தத் திருவிளையாடலைப் பாடுகிறது

பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே. 521

கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயிலான இது கட்டுமலை மேல் உள்ளது. கர்பகிரஹத்தைச் சுற்றிக் கட்டுமலை மேல் ஒரு பிராகாரமும், கீழே ஒரு பிராஹாரமும் உள்ளன. இறைவன் இஙே சத்யகிரீஸ்வரர் என்ற பெயரோடும், அன்னை சகிதேவியம்மை என்ற பெயரோடும் அருள் பாலிக்கின்றனர். சண்டேசர் அன்று முதல் இறைவனின் மகனாக ஆனதால் இறைவனது நிர்மாலியத் தொட்டிக்கும் சண்டேசரின் கோயிலுக்கும் குறுக்கே எவரும் செல்லமாட்டார்கள். தஞ்சைப் பெரிய கோயில் சண்டேச சிற்பம், கங்கை கொண்ட சோழபுரம் சண்டேச சிற்பம் ஆகியன அவற்றின் எழில் அமைப்பால் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.


என்னோட குறிப்புகள் அனைத்தும் சென்னையில் இருப்பதால் இணையத்தில் இருந்தும், விக்கிபீடியா, சைவம் ஆர்க் தளங்களில் இருந்தும் தகவல்கள் திரட்டி எழுதி உள்ளேன்.

Monday, December 12, 2011

பெரிய பாளையம் பவானி அம்மன் ! வேப்பிலை ஆடை அணியும் பக்தர்கள்!

சென்னையில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பெரியபாளையம். அங்கே உள்ள பவானி அம்மன் கோயில் மிகவும் பிரபலம் ஆனது. அந்த அம்மனுக்குச் சிறப்பு வழிபாடாக வேப்பிலையால் ஆடை அணிந்து கொண்டு நிறைவேற்றுவார்கள். ஆகவே நாங்கள் சுருட்டப்பள்ளி சென்ற போது அங்கேயும் செல்ல நினைத்துச் சென்றோம். நாங்கள் போனபோது சாயங்காலம் தீப ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. ஆகவே தரிசனத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள். தர்ம தரிசனம் கூட்டம் ஜாஸ்தி இருந்த காரணத்தால் நாங்கள் 5ரூ டிக்கெட் வாங்கிக் கொண்டோம். அதற்கு மேல் இல்லை. 5ரூக்கும் கூட்டம் தான். சற்று நேரத்திற்கு எல்லாம் திரை விலகித் தீப ஆராதனை நடந்தது. நாங்கள் நின்று இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடியவில்லை. சற்றுக் கூட்டம் குறைந்ததும் நாங்கள் பார்க்க வழி கிடைத்தது. பூசாரிகள் விரட்டுகிறார்கள். அதற்குள் அம்மனைப் பார்க்க வேண்டும். அம்மன் மார்பளவு தான் இருக்கிறாள். கீழே உற்சவ அம்மனும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவளும் மார்பளவுதான். எனக்குத் தெரிந்து ரேணுகா தேவிதான் மார்பளவு இருப்பாள். பரசுராமரின் தாய். தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேண்டும் வரம் கேட்கச் சொல்கிறார். அவர் கேட்பது தன் தாய் உயிர் பெற்று எழ வேண்டும் என்ற வரம் தான். அப்படியே ஆகட்டும் என்று அவர் தந்தை கூற பரசு ராமர் அவசரத்தில் வேறு ஒரு பெண்ணின் தலையைப் பொருத்தி விடுகிறார். தலையுடன் உள்ள ரேணுகா தேவியோ அதனுடன் காட்டில் வாழும் வேடர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் உடலில்லாமல் இருக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு வேண்டிய பணிவிடை செய்ததாகவும் அதுமுதல் ரேணுகா தேவி காவல் தெய்வமாக ஆனதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலர் வெட்டுப்பட்டுக் கிடந்த தன் தலையைக் கைகளில் தாங்கி ரேணுகா தேவிக் காயங்களுடன் வேட்டுவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் காப்பாற்றிக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். பரசுராமர் தன் தாயின் தலையைச் சேர்க்கையில் அவசரத்தில் பொருத்திய பெண்ணின் உடல்தான் மாரியம்மன் எனவும் ஒரு கூற்று உண்டு. அம்மன் கையில் சக்கரமும் உள்ளது; கபாலமும் உள்ளது. அந்தக் கபாலத்தில் முப்பெரும் தேவியர் அடக்கம் எனப் படுகிறது. அம்மன் அவ்வளவு சக்தி வாய்ந்தவள் என்கின்றனர்.


இங்கே கோயில் கொண்டிருப்பது பவானி அம்மனா? ரேணுகா தேவியா?? சந்தேகம் துளைத்தது. ஆகவே கோயில் தல வரலாற்றைக் கேட்டோம். தல வரலாற்றின் மூலம் ரேணுகா தேவியே இங்கே பவானி அம்மன் என்ற பெயரில் வீற்றிருப்பதாய்த் தெரிய வந்தது. தலவரலாறு வருமாறு: ஆந்திராவில் இருந்து குறிப்பிட்ட நாயுடு வம்சத்தினர் வளையல் வியாபாரம் செய்வார்கள். அவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வளையல் மூட்டைகளைத் தூக்கி வந்தும் வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர். தற்காலங்களில் காண முடியாவிட்டாலும் முப்பது வருடங்கள் முன்னர் வரையிலும் வளையல் செட்டி என்று மதுரைப்பக்கம் எல்லாம் உண்டு. வளையல் செட்டிதான் வளைகாப்பு, கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வளையல் அடுக்குவார். அவங்க வளையல் அடுக்க வந்ததும், அடுக்கி விட்டு உடனே குங்குமம், மஞ்சள் கொடுப்பார்கள். தாங்கள் வளையல் அடுக்கிய பெண்ணும், அவள் குலமும் சீரோடும், சிறப்போடும் வாழவேண்டி வாழ்த்தி அளிப்பார்கள். அத்தகைய வளையல் செட்டி ஒருவர் சுமார் முந்நூறு ஆண்டுகள் முன்னர் வளையல் விற்கத் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு வியாபாரம் முடித்துக்கொண்டு ஆந்திரா திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆரணி ஆற்றங்கரையில் பெரியபாளையம் பகுதி வந்ததும் மதிய உணவு உண்டதும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டார்.

பின்னர் எழுந்து அங்கிருந்து கிளம்ப யத்தனித்தபோது அருகிலிருந்த வளையல் மூட்டையைக் காணோம். அதிர்ச்சி அடைந்த அவர் சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கிருந்த ஒரு பெரிய பாம்புப் புற்று அவர் கண்களில் பட்டது. கொஞ்சம் சந்தேகத்தோடு அந்தப் புற்றை எட்டிப் பார்த்தால் வளையல் மூட்டை அதற்குள் கிடந்தது. ஒரு கம்பை எடுத்து அதை எடுக்க முயற்சித்தார். முடியாமல் போகவே அங்கேயே அதை விட்டுவிட்டு ஊர் திரும்பினார். இரவில் அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் அம்மன் தோன்றி, “நான் ரேணுகா தேவி. நீ பார்த்த அந்தப்புற்றில் பவானி அம்மனாக வந்து குடி கொண்டிருக்கிறேன். சுயம்புவாக அங்கே நான் கோயில் கொண்டுள்ளேன். நீ உடனே அங்கே வந்து எனக்குக் கோயில் எழுப்பி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்.” என்றாள். வளையல்காரர் மறுநாளே தன் வளையல் மூட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு புறப்பட்டார். பெரியபாளையம் வந்ததும், புற்றை அதே இடத்தில் கண்டார். ஊர்மக்களிடம் தன் கனவைக் குறித்துக் கூறினார். உடனே அனைவரும் அந்தப்புற்றைத் தோண்ட ஆரம்பித்தனர். ஒரு இடத்தில் புற்றுமண்ணாக இல்லாமல் கல்லில் மோதுவது போல் சப்தம் கேட்டதோடு அல்லாமல் ரத்தமும் பீறிடத் தொடங்கியது. மண்வெட்டியால் தோண்டுவதை நிறுத்திவிட்டுக் கைகளால் பார்த்தபோது சுயம்புவான அம்மன் விக்கிரஹம் அகப்பட்டது. அதன் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு இருந்தது. செய்வதறியாது மக்கள் திகைக்க வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சள், குங்குமத்தை நீர் விட்டுக் குழைத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து அழுத்த ரத்தம் நின்று போனது. அம்மனை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டது. சுயம்புவான அம்மனுக்கு வெள்ளியில் கவசம் செய்து சார்த்தி இருக்கிறார்கள். அந்தக் கவசத்தின் தலைப்பகுதியை அகற்றிவிட்டுப் பார்த்தால் கடப்பாரையால் போட்ட வெட்டு தெரியும் என்று சொல்கின்றனர்.

ஆக ரேணுகா தேவியே இங்கே பவானி என்ற பெயரில் பவனின் சக்தியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாள் என்று சொல்கின்றனர். கோயில் பல வருடங்கள் வரையிலும் மூலஸ்தானமும், ஒரே ஒரு மண்டபத்துடனும் தான் இருந்திருக்கிறது. நாளாவட்டத்தில் அம்மனின் சக்தி பரவப் பரவ கோயிலும் வளர்ச்சி அடைந்து இன்று பெரிய அளவில் காணப்படுகிறது. கோயிலின் இருபுறமும் இருக்கும் கடைகளைக் கடந்து உள்ளே நுழைந்தால் விநாயகரை வழிபட்டுப் பின்னால் சென்றால் மாதங்கி அம்மன் தரிசனம் கிடைக்கும். அங்கிருந்து நேரே அம்மன் வீற்றிருக்கும் பிராஹார மண்டபத்தை அடையலாம். அம்மனின் தரிசனம் முடித்ததும், வெளிச்சுற்றில் வைத்திருக்கும் உற்சவரைக் காணலாம். வெளிப் பிரஹாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், மற்றும் பரசுராமருக்கு ஒரு சந்நிதியும் காணப்படுகிறது. பரசுராமர் இங்கே வந்திருப்பதன் காரணம் இவள் ரேணுகா தேவி என்பதால் இருக்கலாம். நீருக்கான மூர்த்தியாக வழிபடப்படும் பவர் என்ற ஜலமூர்த்தியின் தேவியாகவும் வணங்கப்படுகிறாள். மழை பொழியவும், கோடைக்காலங்களில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கவும் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர். இங்குள்ள முக்கியமான பிரார்த்தனை வேப்பிலைகளால் செய்யப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்வது தான்.

Sunday, December 11, 2011

ஆகாச மாரியம்மனைத் தெரியுமா?


கும்பகோணத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் வழியில் உள்ள நாச்சியார் கோயிலில் உள்ள ஆகாச மாரியம்மன் கோயில் இது. இங்கே எந்நாளும் இப்படி தீபம் மட்டுமே எரியும் கருவறை இருக்கிறது. இங்கே அம்மனுக்கெனத் தனியாக சுதைச் சிற்பமோ, விக்கிரஹமோ, பஞ்சலோகச் சிலையோ கிடையாது. ஏனெனில் வளையல் வியாபாரியான ஒரு மாரியம்மன் பக்தன் வருடா வருடம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். ஒரு சமயம் அவனால் சமயபுரம் வரை செல்ல முடியவில்லை. மனம் வருந்திய அவன் அம்மனைப் பார்க்க முடியவில்லையே என வருந்த அவனுக்காக ஆகாய மார்க்கமாய் அம்பிகை சமயபுரத்தில் இருந்து கிளம்பி இங்கே வந்து காட்சி கொடுத்ததாயும், அது முதல் அவன் வேண்டுகோளின்படி ஒவ்வொரு வருடமும் சமயபுரத்தில் இருந்து ஆகாய மார்க்கமாய் இங்கே வந்து காட்சி கொடுக்கச் சம்மதித்ததாகவும் கோயிலின் தல வரலாறு கூறுகிறது. இது அறுநூறு ஆண்டுகள் முன்னர் நடந்ததாகவும் சொல்லப் படுகிறது.

இந்நிகழ்வு நடந்தது வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை என்று சொல்லப் படுகிறது. ஆகவே ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல்வெள்ளிக்கிழமை அம்மன் வருகையை ஒட்டி உற்சவம் ஆரம்பித்துப் பத்து நாட்கள் நடக்கின்றது. ஊரே கூடி நடத்தும் விழா கடைசிநாளன்று அம்மனுக்கு விடையாற்றிக் கண்ணீரோடு வழி அனுப்புவதோடு முடிகின்றது. அம்மனை தர்ப்பையால் ஒவ்வொரு வருடமும் உருவாக்குகின்றனர். பத்து நாட்களும் செப்புக்குடத்தில் கலசம் வைக்கப்பட்டு விழா எடுக்கப்படுகின்றது. கலச நீரும் அம்மனுக்குச் சார்த்தப்படும் எலுமிச்சை மாலையின் எலுமிச்சம்பழமும் பிரசாதமாய் பக்தர்களுக்குத் தரப்படும். தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காண முடியும்.

ஆதி அந்தமில்லாப் பெரும் ஜோதியான அம்பிகை சிறிய உருவத்துடன் உருவாக்கப்பட்டுக் கடைசியில் பத்தாம் நாளன்று வளர்ந்து இராஜராஜேஸ்வரியாய்க் காட்சி அளிப்பாள். அதன் பின்னர் அம்பாளுக்குப்பிரார்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு பக்தர்களால் காவடிகள் எடுக்கப் பட்டு சமயபுரத்துக்கு அம்பாளை எழுந்தருளச் செய்கின்றனர். நாச்சியார் கோயிலில் வேறு கிராமத் தெய்வங்களோ, காவல் தெய்வங்களோ கிடையாது. இந்தக்கோயில் ஒன்று தான் உள்ளது. இந்த வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர மற்ற நாட்களில் இங்கு ஜோதி வடிவில் அம்பாள் காட்சி கொடுத்து அருள் பாலிக்கிறாள். திருவிழா சமயத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன் என்றாலும் தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனின் புனிதத் தன்மை கருதிப் படம் எடுக்க அனுமதி கிட்டவில்லை. இப்போது சமீபத்தில் சென்ற போது ஜோதி வடிவில் காட்சி அளித்த அம்பிகையைப் படம் எடுத்துக் கொண்டேன்.

Wednesday, November 30, 2011

பேச்சியம்மா! பேச்சியம்மா!


பேச்சி அம்மன் வரலாறு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி சொல்லப்படுகிறது. இங்கே பேச்சி அம்மன் மன்னனையும், ராணியையும் காப்பாற்றிவிடுகிறாள் என்கின்றனர். எங்க ஊர் மாரியம்மன் கோயிலின் நுழை வாசலில் பல வருடங்களாய் மாரியம்மனுக்குத் துணை இருக்கும் பேச்சி அம்மன் இவள். இவளைப் பற்றிய கதை பல விதங்களில் சொல்லப் படுகிறது. அதில் ஒன்று பெரியாச்சியும், பேச்சியும் ஒருவரே என்பது. இதைப் பலரும் நிரூபித்திருக்கின்றனர். முக்கியமாய்த் தஞ்சை மாவட்டத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூரில் குடியேறிய பலருக்கும் பெரியாச்சி என்ற பேச்சியம்மனே குலதெய்வமாக இருந்து வருவதை திரு நா. கணேசன் சுட்டுகிறார்.

அவர் கொடுத்த சுட்டியின்படி வல்லாளன் என்ற பாண்டிய அரசன் கொடுங்கோலனாக இருந்ததாயும், அவன் மனைவி கர்ப்பவதியாய் இருந்த சமயம், அந்தக் குழந்தை பிறந்தால் கொடுங்கோலனின் குழந்தையும் தன் கொடூரத்தால் இவ்வுலகையே அழிக்கும் என மக்கள் பயந்ததாகவும் கூறப் பட்டுள்ளது. ராணிக்குப் பிரசவ வலி எடுக்க, தக்க மருத்துவம் செய்யவேண்டி அரசன் மருத்துவச்சியின் உதவியை நாடுகிறான். மன்னன் தன் வீரர்களை அனுப்புகின்றான் மருத்துவச்சியைக் கூட்டி வரச் சொல்லி. ஆனால் எல்லாருமே பயப்படுகின்றனர் என்பதோடு வரவும் மறுக்கின்றனர். கோபம் கொண்ட மன்னன் தானே தக்க மருத்துவச்சியை அழைத்துவரச் செல்லுகையில் அவன் எதிரே கடுமையான முகத்தோற்றத்தோடு கூடிய ஓரு பெண்மணி தென்பட்டாள். அவள் தன் பெயரைப் பெரியாச்சி என்று கூறினாள். மன்னன் தேடும் மருத்துவச்சி அவள் தான் என்றாள். ஆனால் உண்மையில் அவள் அசுரர்களுக்கும், துர்தேவதைகளுக்குமான தலைமைக் கடவுள். ஆனால் மன்னனுக்கு இந்த உண்மை தெரியாது. பிரம்மா அசுரர்களையும், தேவர்களையும், மனிதர்களையும் படைத்தபோது தேவர்களும், மனிதர்களும் ஒரே கடவுளரை வணங்கி வர, அசுரர்களும், துர் தேவதைகளும் தங்களுக்கெனத் தனியான கடவுளை வணங்கினார்கள். அத்தகையதொரு பெண் தேவதையே பெரியாச்சி அம்மன் ஆவாள். இதை அறியாத மன்னனும் தன் மனைவியின் பிரசவத்திற்காக அவளை அரண்மனைக்கு அழைத்து வருகிறான்.

பிரசவம் நல்லபடியாக நடக்கிறது. ராணியின் வேதனையைப் பெருமளவு குறைக்கிறாள் பெரியாச்சி. அதோடு குழந்தையைப் பூமியில் பிறக்கும்படியாகவும் விடவில்லை அவள். அதற்குப் பதிலாகக் குழந்தையைத் தன் கரங்களில் ஏந்துகிறாள். பிரசவம் ஆனதும் மன்னனிடம் பிரசவம் பார்த்ததற்குத் தனக்குப் பரிசுகள் தருமாறு கேட்கிறாள் பெரியாச்சி. ஆனால் மன்னனோ, ஒரு சாதாரண மருத்துவச்சியான அவள் ஒரு பேரரசனிடம் பணமும், பரிசும் கேட்டதற்குப் பெரியாச்சியை இகழ்ந்து பேசுகிறான். தர மறுக்கிறான். வைத்தியத்திற்கான செலவையும் கொடுக்க மறுக்கிறான். பெரியாச்சியைத் தன்னுடைய அடிமை என்றும், தான் சொல்வதைக் கேட்டு நடப்பது அவள் கடமை என்றும் உறுதியாகக் கூறுகிறான். கோபம் கொண்ட பெரியாச்சி தன் சுய உருவைக் காட்டுகிறாள். எண்ணற்ற கரங்களோடும், நீண்ட நாக்குடனும், பயங்கரத் தோற்றத்தோடு காட்சி அளித்த பெரியாச்சி மன்னனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் மிதித்துக்கொண்டு ராணியைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் குடல்களைத் தன் கரங்களால் வெளியே எடுக்கிறாள்.

குடலைத் தன் கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொள்கிறாள். அதைக் கண்ட மன்னன் தன் அன்பு மனைவி பெரியாச்சியின் கரங்களில் சின்னாபின்னமானதைக் கண்டு வருந்துகிறான். ஆனால் பெரியாச்சியோ மன்னனையும் கொன்று விடுகிறாள். அவன் குழந்தையும் இந்த பூமியில் காலை வைக்கா வண்ணம் தன் கரங்களிலேயே ஏந்திக்கொண்டு தடுத்துவிடுகிறாள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த மன்னனுக்கும், அவனுக்குப் பல விதங்களிலும் துணை போன அவன் மனைவிக்கும், பிறக்கையிலேயே அசுரனாகப் பிறக்கவிருந்த அவன் குழந்தைக்கும் இவ்விதம் பெரியாச்சியின் மூலம் முடிவு கிடைக்க, மக்களுக்கு நன்மை விளைகிறது. இந்தப் பெரியாச்சி வேறு யாரும் இல்லை என்றும் மஹாகாளியின் இன்னொரு அவதாரமே என்றும் கூறுகின்றனர். ஏனெனில் அசுரர்களின் தேவதை என்று கூறப்பட்ட இவள் நாட்டு மக்களுக்காக வேண்டி நன்மையை விளைவித்ததாலும், தன்னுடைய சக்தியை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்தியதாலும், இவள் அனைவராலும் அன்றிலிருந்து குலதெய்வமாக வணங்கப்பட்டாள் என்றும், குழந்தைப் பேறு அடையவும், குழந்தைப் பேறு அடைந்தவர்களின் குழந்தையைக் காக்கவும், சுகப் பிரசவம் நடக்கவும் இவளைப் பிரார்த்தித்துக்கொள்வது மக்களின் வழக்கமாயிற்று என்கின்றனர்.

ஆனால் தஞ்சையில், கும்பகோணத்தில் வழங்கும் கதை சற்றே மாறுபட்டது. அதை நாளைக் கேட்போம்.

காப்புரிமை: ரமேஷ்குமார்

படத்தில் காணப்படுவது எங்கள் குலதெய்வமான மாரியம்மன் கோயிலில் மாரியம்மனுக்குத் துணையாக வீற்றிருக்கும் பேச்சி அம்மன் சிலை.

Wednesday, November 16, 2011

மாரியம்மா, மாரியம்மா!


மேலே காண்பது எங்கள் பூர்வீக ஊரான பரவாக்கரையில் உள்ள எங்கள் குலதெய்வமான மாரியம்மன். இவளுக்குத் துணையாகப் பேச்சியம்மன் இருக்கிறாள். அவளைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம்.


மஹாமாரியம்மனைப் பற்றி இப்போது பார்க்கலாமா?? கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன்
கோயிலில் அம்மன் வரலாற்றைப் பற்றிக் கேட்டேன். யாருக்கும் சரியாய்த்
தெரியவில்லை. படங்கள் எடுக்கவும் அநுமதி கொடுக்கவில்லை. திருவிழா வேறு நடந்து
கொண்டிருந்தது. அங்கே தான் பச்சைக்காளி, பவளக்காளியாக படைவெட்டி மாரியம்மனின்
தோழிகளாக இருவரும் வீற்றிருக்கின்றனர். பச்சைக்காளிக்கும், பவளக்காளிக்கும்
காளியாட்டத்தின் போது போட்டியும் வருமாம். கூட்டம் தாங்காது என்றார்கள். அங்கே
தெரிந்தவர்கள் எவரும் இல்லை. மேலும் மறுநாள் எங்க ஊர்க் கோயிலில்
கும்பாபிஷேஹத்தின் யாகம் ஆரம்பம். ஆகவே அதற்குப்போயாக வேண்டும். மாரியம்மன்
வரலாற்றைத் தேட ஆரம்பித்தேன். கடைசியில் இரு விதங்களில் கிடைத்தன.


ஒன்று மஹாமாறன் என்னும் அசுரன் தான் பெற்ற தவங்களால் உலகத்து மக்களை எல்லாம்
பல வகையிலும் துன்புறுத்தி வந்தான். பல்வேறு விதமான நோய்களையும்
உண்டாக்கினான். அதில் ஒன்றே வைசூரி என்னும் அம்மை நோய். இந்த நோய் வந்தவர்களை
எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியவில்லை. உடல் முழுதும் கொப்புளங்கள்
உண்டாகிக் கண்பார்வையும் மறைக்கப் பட்டுத் துடிதுடித்த மக்களைக் காக்கவேண்டி
அம்பிகை தன்னிலிருந்து உருவாக்கியவளே மஹாமாரி ஆவாள். இந்த மஹாமாரி
அவதரித்ததுமே மஹாமாறனைக் கொன்றாள். அவனால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை
எல்லாம் தன்னருகில் அம்பிகை அனுப்பி வைத்த கண்டா கர்ணன் என்னும் தேவதையின்
உதவியோடு தீர்த்து வைத்தாள். அன்று முதல் மக்களின் ஆரோக்கியத்திற்கு அன்னையாக
விளங்கி வருகிறாள்.


இன்னொரு விதத்தில் கூறுவது என்ன வெனில் தேவாசுர யுத்தத்தில் ஜெயித்த
தேவர்களைப் பழிவாங்க எண்ணிய அசுரர்கள் குல குருவான சுக்கிராசாரியார் மூலம்
அவர்கள் உடலில் அம்மைக் கொப்புளங்களை உருவாக்கினார்கள். தாங்க முடியாத
வலியாலும், துன்பத்தாலும் துடித்த தேவர்கள் ஈசனை நாடி அவன் பாதங்களைப் பணிந்து
வேண்ட, ஈசன் தன் ஜடாமுடியிலிருந்து அன்னை மாரியைத் தோற்றுவித்தார். தலையின்
கங்கை இருக்கும் இடத்திலிருந்து தோன்றிய இவளை சீதளா என அழைத்தனர். அல்லல்
பட்டுத் துன்புற்ற மக்களைத் தன் தண்மையான பார்வையாலும், கருணையாலும் காப்பாற்றி
நோயை நீக்கிப் பூரண ஆரோக்கியத்தை அளித்தாள் மஹாமாரி. உடனே தேவர்கள் அனைவரும் தங்களைக் கடுந்துயரிலிருந்து காத்த அன்னை இதே கோலத்தில் அனைத்து எல்லைகளிலும் குடி கொண்டு மக்களைக் கொடும் நோயிலிருந்து காத்தருள வேண்டும் என வேண்ட அவ்விதமே ஆகட்டும் என ஆசியளித்த அன்னை அவ்விதமே இன்றளவும் காத்து வருகிறாள்.


மூன்று கண்களுடனும், நான்கு கைகளுடனும், தீ ஜ்வாலை போல் மேல் நோக்கிய
கூந்தலுடனும், காட்சி அளிக்கும் அன்னை, கறுப்பு ஆடையில் தோளில் கால சர்ப்பங்களை
ஆபரணமாகப் பூண்டு, வலக்காதில் ஸ்ரீசக்ர வடிவான தாடங்கமும், இடக்காதில் தோடும்
அணிந்து திருமேனியிலும் ஆபரணங்களைத் தரித்துக்கொண்டு, ஒரு காலை
மடித்துக்கொண்டும், மறுகாலைத் தொங்க விட்டுக்கொண்டும், வட்ட வடிவான ஜோதியின்
நடுவே தோன்றினாள். இந்தக் கோலத்திலேயே இவள் எல்லாக் கோயில்களிலும் பிரதிஷ்டை
செய்யப் படுகிறாள்.

Wednesday, November 09, 2011

பச்சைக்காளியும், பவளக்காளியும்

அடுத்துப் பார்க்கப் போவது பச்சைக்காளி, பவளக்காளி பற்றி. அநேகமாய் எல்லாப் பெண் தெய்வங்களுமே அம்பிகையின் அம்சம் என்றாலும் காளி அம்பிகையின் முக்கியமானதொரு அம்சம் ஆவாள். இங்கேயும் அசுரன் வருகிறான். காளி அழிக்கிறாள். ஆனால் ஒரே காளியே வெவ்வேறு உருவில் வருகிறாள். தஞ்சை நகருக்கு அப்போது அழகாபுரி எனப் பெயர் என்கின்றனர். அந்த அழகாபுரியில் ஆண்டு வந்தவன் தஞ்சன் என்பவன். இந்தத் தஞ்சன் நல்லரசனாக இல்லாமல் மக்களைத் துன்புறுத்திக் கொடுமை செய்யும் கொடுங்கோலனாக இருந்தான். ஆனாலும் சிவபக்தனாக இருந்தமையால் அவனை அழிக்க எவராலும் இயலவில்லை. ஆகவே ஈசனையே தஞ்சம் அடைந்தனர் அனைவரும். அவரும் தன்னில் ஒரு பாகமான அம்பிகையிடம் பொறுப்பை ஒப்படைக்க ஆனந்தவல்லியான அவளும் தஞ்சனை அழிக்க வேண்டி பச்சைக்காளியாக மாறினாள். அவள் எவ்வளவு முயன்றும் மீண்டும் மீண்டும் தஞ்சன் தோன்றிக்கொண்டிருந்தான். கோபம் கொண்ட பச்சைக்காளியின் முகம் சிவந்து போய்க் காணப்பட்டது. பவளத்தைப் போன்ற சிவந்த அந்த நிறத்தைக்கண்டு அனைவரும் அன்னையைப் பவளக்காளி என்றழைத்தனர்.

பவளக்காளியாக விஸ்வரூபமெடுத்து அன்னை தஞ்சனைக் கொன்றாள். அவன் ரத்தம் ஆறாக ஓட அந்த ரத்தச் சிவப்பில் அன்னையின் நிறமே சிவந்து காணப்பட, பவளக்காளி என்ற பெயரும் நிலைத்தது அவளுக்கு. தஞ்சன் கோடி முறை அவதாரம் எடுத்தமையால் அவனைக் கொன்ற அன்னைக்கு கோடியம்மன் என்ற பெயரும் ஏற்பட்டது. ஈசனின் பிரதிநிதியாக வந்து இங்கே அசுரனை அழித்ததால் அன்னை தன் தலையில் ஈசனையே சூடி இருப்பதாய் ஐதீகம். ஆகவே அம்மனுக்குப் பச்சைக்காளி, பவளக்காளியாக இருக்கையில் நந்தியே வாகனம் என்கின்றனர். தஞ்சையில் கோடியம்மன் கோயில் என்ற பெயரிலேயே கோயில் உள்ளது. மூலவர் கோடியம்மன் ஆவாள். உற்சவர் பச்சைக்காளி, பவளக்காளி இருவருமே.

மாசி அல்லது பங்குனி மாதம் பச்சைக்காளி, பவளக்காளி உற்சவம் நடக்கையில் பச்சைக்காளி, பவளக்காளியின் உருவச் சிலைகளைச் செய்து வீடு வீடாக எடுத்துச் செல்வார்கள். காளியாட்டமும் நடக்கும், சிலர் பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டம் ஆடுவதாய் நேர்த்திக்கடனும் செய்து கொள்கின்றனர். அப்படி நேர்ந்து கொள்பவர்கள் விரதம் இருத்தல் வேண்டும். காளியின் முகம் மட்டும் செய்யப் பட்டு அவர்கள் முகத்தின் மேலே பொருத்தப்படும். அப்படிப் பொருத்தப்பட்ட அறுவரைக் கும்பகோணத்தில் பார்த்தோம். ஆறுபேரும் பெண்கள். ஆனால் படம் எடுக்க அநுமதிக்கவில்லை. ஆறுபேரும் உணர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருந்தனர். ஆகவே படம் எடுத்தால் விபரீதமாய் முடியும் என எச்சரிக்கப் பட்டோம். அநேகமாய் ஆண்களே காளியாட்டம் ஆடுவார்கள் எனவும் , இங்கே இந்தப்பெண்கள் நேர்த்திக்கடனுக்காகக் காளியாட்டம் மேற்கொண்டிருப்பதாயும் கூறினார்கள்.


சிலருக்குக் காளிக்குக் கோரைப்பற்கள் இருப்பது போன்ற பற்கள் தானாகவே தோன்றும் என்றும் சொல்கின்றனர். இது குறித்த உண்மை நிலவரம் தெரியவில்லை.
ஆனால் கோயிலின் பூசாரியோ அல்லது பரம்பரையாகக் காளிவேடம் புனைந்து காளியாட்டம் ஆடுபவரோதான் காளியாக வேஷம் தரிக்கின்றனர் என்றாலும் நேர்த்திக்கடனுக்காக வேஷம் தரிப்பவர்களும் இருக்கின்றனர். காளியாட்டம் ஆடும் முன்னர் திருவிழாவுக்காகக் காப்புக் கட்டியதுமே காளியின் முகம் தயாராகி அதை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் செல்லுகின்றனர். காளியே நேரில் வந்திருப்பதாக மக்கள் ஐதீகம். எனவே அனைத்து மரியாதைகளூம் செய்யப் படுகின்றன. அதன் பின்னரே திருவிழா முடிந்து காளியாட்டம் நடக்கிறது. இதிலே பச்சைக்காளிக்கும், பவளக்காளிக்கும் போட்டியும் உண்டு என்கின்றனர். இது குறித்துச் சரியான தகவல் யாருக்கும் சொல்லத் தெரியலை. மேற்கொண்டு விசாரிக்கவேண்டும்.

Saturday, November 05, 2011

பாவாடை ராயனைத் தான் பத்தினியே தானழையும்!

பாவாடை ராயனைப் பற்றி மாரியம்மன் தாலாட்டில் நாலைந்து இடங்களில் வருகின்றது.

"பாவாடைராயனைத் தான் பத்தினியே தானழையும்" என இரு இடங்களிலும், பாவாடைராயனும் தான் பக்கத்திலே கொலுவிருந்தார் என்றொரு இடத்திலும் பாவாடை ராயனும் பல தேவரும் வாழி என்றொரு இடத்திலும் வருகிறது. இந்தப் பாவாடை ராயன் யாருனு புரியாமல் யோசனையிலே இருந்தேன். அப்புறமாத் தான் காவல் தெய்வமாய் இருக்குமோ என ஒரு சந்தேகம். காவல் தெய்வங்கள் பற்றிய ஒரு புத்தகத்தில் தேடினப்போ கிடைச்சது பாவாடை ராயனும், அவரோட எஜமான் ஆன பருதேசியப்பரும்.

பருதேசினு ஊர் ஊராச் சுத்தறவங்களைச் சொல்றது உண்டு. இங்கேயும் அப்படிச் சுத்தின ஒருத்தரைத் தான் சொல்றாங்க. அவர் வேறே யாரும் இல்லை. நம்ம சிவனார் தான். அதுவும் சனி படுத்தின பாடாம் அது. எல்லாரையும் பிடிக்கவேண்டிய சனிஸ்வரனுக்கு அப்போ சிவனிடம் போகவேண்டிய நேரம். ஆனால் அவர் கிட்டே போனால் நெற்றிக்கண்ணைத் திறந்துடுவாரே? என்ன செய்யறது? நாரதர் இன்னும் கொஞ்ச நாட்களில் சிவனுக்கும், பார்வதிக்கும் கல்யாணம் நடக்கப் போறது. அப்போப் பிடிச்சுக்கலாம்னு சொல்லி வழி காட்டறார். சரினு எல்லாருமா கல்யாணத்துக்குப் போறாங்க. அங்கே பிரம்மாதான் கல்யாணம் நடத்தி வச்சுண்டு இருந்தார். கல்யாணம் முடிஞ்சதும் வழக்கப்படி புரோகிதம் பண்ணின பிரம்மாவுக்கு மரியாதை செய்யறாங்க சிவனும், பார்வதியும். அப்போ பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் ஈசன் மாதிரியே.

ஐந்து தலைகளுக்கும் தீபம் காட்டணும், நாலுக்குக் காட்டியாச்சு. ஐந்தாவது தலைக்கு எந்தத் திசையிலே காட்டறதுனு யோசிக்கும்போது, அந்தச் சமயம் நாரதர் சைகை காட்ட சனி ஈசனின் கையில் புகுந்து கொள்ள, அவர் கோபத்தோடு அந்த ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிய, பிரம்மாவுக்கும் கோபம் வந்து என்னோட இந்தத் தலை திருவோடாக உம் கையில் மாறி நீர் ஊர் ஊராகப் பித்தனைப் போல் பிச்சை எடுக்கவேண்டும்னு சாபம் கொடுக்கிறார். முன்னைப்பழம்பொருளுக்கும் முன்னைப்பழம்பொருள் ஒரு ஆண்டியைப் போல, பித்தனைப் போல பிச்சை எடுக்கிறார். பிக்ஷாடனராக ஒவ்வொரு ஊராக வந்து பிச்சை கேட்கிறார். எங்கேயும் பிரம்ம கபாலத்தில் அவர் வாங்கும் பிச்சையால் கபாலம் கையை விட்டுப் போகவில்லை. அப்போது....


தாம் செல்லும் இடங்களிலெல்லாம் அற்புதங்களை நடத்திய பருதேசியப்பரால் தன் கைக் கபாலத்தைக் கைகளிலிருந்து எடுக்க முடியாதா?? இறைவனுக்குத் தெரியாதா? எல்லாம் வல்லவனுக்கு இது ஒரு கஷ்டமான காரியமா? எனினும் எடுத்துக்கொண்ட விளையாடலை பூரணமாக விளையாடி முடிக்கவேண்டுமே. ஆகவே கடைசியாகக் கொள்ளிடக் கரையில் இருக்கும் வல்லம்படுகை வந்து சேர்கிறார் ஈசனாகிய பரதேசி. நமக்கெல்லாம் ஞானப் பிச்சை அளிக்கும் அவன் நம்மிடமிருந்து பிச்சையாக வாங்குவது நம்முடைய வினைப்பயன்களையும், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அன்றோ. அவற்றை வாங்கிக்கொண்டு அவன் நமக்குத் திரும்பத் தருவதோ மாபெரும் செல்வம் அல்லவோ! ஆனால் இதை எத்தனை பேர் அறிவார்கள்? அப்படியே பாவாடை ராயனும் அறியவில்லை.

ஊர் அடங்கியவேளையிலே பரதேசிக் கோலத்தில் வந்து சேர்ந்த பருதேசியப்பரைக் கண்ட ஊர்க்காவல்காரனான பாவாடைராயன் இவ்வுலகத்து மாந்தருக்கெல்லாம் வேண்டியது தருபவர் ஆன அவர் மேல் சந்தேகம் கொண்டு அந்தப் பொன்னான அருள் தரும் அபயக்கரங்களுக்கு விலங்கிட்டுச் சிறையில் அடைக்கிறான். காலையில் விசாரணை செய்து கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பிச் சென்று இரவு முழுதும் ஓய்வு எடுத்துக்கொண்டு காலை திரும்பினான் பாவாடை ராயன். வந்து பார்த்தால்??

ஆஹா, இது என்ன அற்புதக் காக்ஷி, இந்தக் கண்கள் காண்பது கனவா? நனவா? தன் சுய உருவோடு நின்றிருந்த ஈசனைக் கண்ட பாவாடைராயன் நடுநடுங்கிப் போனான். "என் ஐயனே, உன்னையா சிறையிலடைத்தேன்!" என்று கதறி அழுதவண்ணம் ஈசன் காலடிகளில் விழுந்தான். தன்னை மன்னிக்கும்படியும், தான் அடியவனாய் இருந்து பணிவிடைகள் ஆற்ற விரும்புவதாயும், சாபம் தீரும்வரையிலும் ஈசன் அங்கே குடிகொள்ளவேண்டும் எனவும் வேண்ட, ஈசனும் சம்மதித்து அங்கே குடியேறுகிறார்.

இந்தப் பருதேசியப்பருக்குக் கையில் பிக்ஷாபாத்திரமாகக் கபாலத்தை மட்டுமே ஏந்திய இவருக்குக் காவல்காரனாம் பாவாடைராயன். இவர்கள் கோயில் கொண்டிருக்கும் இடம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள அழகிய கிராமம் ஆன வல்லம்படுகையில் உள்ளது. மூலவர் பருதேசியப்பர். இவருக்குக் காவலாக விநாயகர், முருகன், முத்தாலம்மன், பேச்சியம்மன், முனீஸ்வரர் ஆகியோர் பிராகாரங்களில் இடம் பெற்றிருக்க ஆலயத்தின் பின்னால் உள்ள கொட்டகையில் தன் இரு மனைவிமாரான முத்துநாச்சி, அரியநாச்சி ஆகியோருடன் பாவாடைராயன் காணப்படுகிறார்.

இந்தப் பருதேசியப்பர் கோயிலின் எதிரே சற்றுத் தள்ளி காணப்படும் ரயில் தண்டவாளத்தை 300 ஆண்டுகள் முன்னர் முதல்முதல் அமைக்கும்போது ஆங்கிலேயர்கள் கருவறையைத் தகர்த்துவிட்டு ரயில் பாதையை அமைக்கத் திட்டம் போட்டுக் கோயிலை இடிக்க முயன்றிருக்கிறார்கள். அதன் முன்னர் வரும் கோயிலின் அருகே உள்ள இடங்களில் தண்டவாளம் பதிக்கப்பட்டுவிட்டது. கோயிலை இடிக்க உத்தரவு கொடுத்துவிட்டுப் போனால் மறுநாள் ஏற்கெனவே பதிக்கப்பட்ட தண்டவாளங்கள் வேறு திசையில் தூக்கி வீசப்பட்டிருந்தன. அதிர்ந்த ஆங்கிலேய அதிகாரி மீண்டும் அதே இடத்தில் பதிக்க மீண்டும் தண்டவாளங்கள் தூக்கி வீசி எறியப்பட, மூன்றாம் முறை முயன்றபோது இஞ்சினியரின் கண்பார்வையே பறிபோனதாம். பின்னர் உள்ளூர் மக்கள், பெரியதனக்காரர்களின் வேண்டுகோளையும், பருதேசியப்பரின் சக்தியையும் கண்டு வியந்த ஆங்கிலேயர் கோயிலில் இருந்து சற்றுத் தள்ளி தண்டவாளங்களை அமைத்தனராம். அவர்களுக்குப் பரிகாரமாக மண்குதிரை செய்து வைக்கச் சொல்ல அப்படியே செய்தும் வைத்திருக்கின்றனர். இந்தப் பாவாடைராயன் கதையைப் படித்ததும், மாரியம்மன் தாலாட்டின் பொருள் நன்கு புரிய ஆரம்பித்துள்ளது.


பாவாடைராயனின் படம் கிடைக்கவில்லை. அந்தப் பக்கம் பயணம் போகையில் எடுக்க முயல்கிறேன்.

டிஸ்கி: மீள் பதிவு.

Tuesday, November 01, 2011

பச்சை வாழி அம்மன்!


அடுத்து நாம் பார்க்கப் போவது பச்சை அம்மன், பச்சை வாழி அம்மன் என்று அனைவராலும் கொன்டாடப் படும் தேவி குறித்து. இவளும் அன்னையின் அம்சமே ஆவாள். இதற்கான வரலாறு நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

திருக்கைலையில் அன்னையும், ஈசனும் ஏகாந்தமாக உரையாடிக் கொண்டிருக்கும் ஓர் வேளையில் அன்னைக்கு ஒரு சந்தேகம். ”சுவாமி, சூரிய சந்திரர்கள் உங்கள் கண்கள் என்கின்றனரே, அது உண்மையா”, என வினவினாள் அன்னை. அனைத்தும் அறிந்தவளுக்கு அனைவரையும் தன் சக்தியால் பரிமளிக்கச் செய்பவளுக்குத் தெரியாத ஒன்றா? புரியாத ஒன்றா? இல்லை; இதன் மூலம் அன்னை ஏதோ மனதில் திருவிளையாடல் செய்ய எண்ணி இருப்பதைப் புரிந்து கொண்டார் ஐயன். “ஆம் இருவரும் என் கண்களே” என்றார். உடனே அன்னை தன்னிரு தளிர்க்கைகளாலும் ஐயனின் கண்களைப் பொத்த அன்டசராசரங்களிலும் காரிருள் சூழ்ந்தது. அத்தனை ஜீவராசிகளும் திடீரென ஏற்பட்ட இந்தக் காரிருளைக் கண்டு நடுங்கித் தவித்தன. தேவாதிதேவர்கள் மஹாபிரளயமோ என அலறிக்கொண்டு ஈசனிடம் ஓடி வந்தனர். வந்ததும் தான் புரிந்தது அன்னையின் விளையாட்டு என்பது. அதற்குள் ஐயன் தன் நெற்றிக்கண்ணைச் சிறிதே திறக்க அனைத்து உலகும் ஒளியால் மீண்டும் பிரகாசிக்க ஆரம்பித்தது.

தன் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டால் நடுங்கிப் போன அண்டசராசரத்து மக்களையும் நினைத்து வருந்திய அன்னையவள், தான் மாபெரும் பாவம் செய்துவிட்டதை உணர்ந்தாள். ஐயனை விட்டுப் பிரிந்து சென்று கடும் தவம் செய்து இந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்ள விரும்பினாள். ஐயனிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அன்னையின் நோக்கம் புரிந்த ஈசனும் காஞ்சிமாநகரில் கம்பா நதிக்கரையில் தவம் செய்யச் சொல்லிக் கட்டளை இட்டார். ஐயனின் கட்டளையைச் சிரமேற்றாங்கி அன்னையவளும் கம்பாநதிக்கரையில் சுற்றிலும் அக்னியை வளர்த்து பஞ்சாக்னிக்கும் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். அவள் கடுந்தவத்தைப் பார்த்த ஈசன் சற்றே சோதிக்க எண்ணிக் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். வெள்ளம் தான் பிரதிஷ்டை செய்திருக்கும் லிங்கத் திருமேனியை அடித்துச் சென்றுவிட்டால் என்ன செய்வது எனக் கலங்கிய அன்னை தன்னிரு கைகளாலும் லிங்கத்தைக் கட்டி அணைத்துக்கொண்டாள். அப்போது ரிஷபவாஹனராய்க் காட்சி தந்தார் ஈசன். அன்னை அவரை வணங்கி அவரில் தான் பாதியாக விரும்புவதைக் கூறினாள். அதற்கு அருளுமாறு கேட்டுக்கொள்ள, ஈசனோ அது அவ்வளவு சுலபம் இல்லை எனவும், இங்கே இருந்து தெற்கே ஜோதியே மலையாக மாறி இருக்கும் திருவண்ணாமலைக்குச் சென்று தவம் செய்ய வேண்டும் என்றும் அங்கே ஊசி முனையில் தவம் இருக்குமாறும் கூறி மறைந்தார்.

அதன்படியே திருவண்ணாமலைக்குப் பயணமானாள் அன்னை. செல்லும் வழியில் அவளால் இயன்ற வரையில் சிவ வழிபாடு செய்து கொண்டே சென்றாள். அதற்கு நீரும் வேண்டுமே என நினைத்த அன்னைக்கு, அவள் குமாரன் ஆன சிவகுமாரன் ஓரிடத்தில் மலையைக் குடைந்து நதி ஒன்றைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தான். (இன்று சேயாறு என அழைக்கப் படும் ஆறு அதுவே என்கின்றனர்.) அதே போல் கடும் தவம் செய்யும் அன்னைக்குக் குளிர்ச்சியாக இருக்க வேண்டி நதிக்கரையில் வாழைமரங்களால் ஆன பந்தல் ஒன்றையும் அமைத்தாராம் சிவகுமாரன். அன்னை அந்தச் சேயாற்றில் நீராடிவிட்டு வாழைப்பந்தலின் கீழ் அமர்ந்து தன் வழிபாட்டை முடித்துக்கொன்டு பயணத்தைத் தொடர்ந்தாள். வாழைப்பந்தல் அமைந்த இடம் இன்றும் வாழைப்பந்தல் என்னும் பெயரிலேயே விளங்குகிறது.இந்த வாழைப்பந்தலில் அமர்ந்து தன் வழிபாட்டை முடித்துவிட்டுத் திருவண்ணாமலையை அடைந்தாள் தேவி. தேவியின் வருகையை எதிர்நோக்கி அங்கே கெளதம மஹரிஷி, சதாநந்தர், பிருகு போன்றோர் காத்திருந்தனர். அம்பிகையை வரவேற்று அவள் தவத்திற்கான சகல ஏற்பாடுகளையும் மனமுவந்து செய்து கொடுத்தனர். காலின் ஒற்றை விரலால் அதாவது கட்டைவிரல் நுனியில் நின்று கொண்டு கடுந்தவம் செய்ய ஆரம்பித்தாள் அன்னை. இந்தச் சமயம் தான் மஹிஷாசுரனின் அராஜகமும் அதிகம் ஆனது. தேவி ஒருத்தியால் தான் அவனை அடக்க முடியும். ஆனால் தேவியோ கடுந்தவத்தில் இருக்கிறாளே! என்ன செய்வது எனப் புரியாமல் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷி முனிவர்களும் திருவண்ணாமலையில் தவமிருந்த மற்றவரிடம் முறையிட அவர்களும் தவமிருந்த அன்னையைப் பிரார்த்தித்தனர். தவத்தில் இருந்த அன்னைக்குப் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் தெரியவர, தன் தவ வலிமையால் துர்காபரமேஸ்வரியை உருவாக்கினாள் அன்னை. மஹிஷனை அழிக்க அவளை அனுப்பி வைத்தாள். அன்னையின் அம்சமான துர்கா படை, பரிவாரங்களோடு சென்றாள்.

மஹிஷாசுரன் பல்வேறு வடிவங்களும் எடுத்து அன்னையைத் தடுமாற வைக்கத் திட்டம் போட்டான். அன்னையின் அம்சமான துர்கையோ சற்று நேரம் பொறுமை காத்தாள். பின்னர் அவன் உண்மை உருவான மஹிஷ உருவில் அவன் வரும்போது அந்த மஹிஷத்தின் தலையை வெட்டி வீழ்த்தினாள் துர்கை. அப்போது அவன் கழுத்திலிருந்து ஒரு லிங்கம் கீழே விழுந்தது. ஆஹா, இது என்ன??

மஹிஷாசுரன் மன்னத முனிவர் என்பவர் சிவபூஜை செய்கையில் அவரையும் அவர் வழிபட்ட சிவலிங்கத்தையும் ஒரே விழுங்கில் விழுங்க, சிவலிங்கம் அவன் கண்டத்திலேயே தங்கி விட்டது. அந்த லிங்கம் தான் எருமைத் தலையை துர்கை வெட்டியதும் கீழே விழுந்ததாம். சிவலிங்கம் கீழே விழுந்துவிட்டால் அபசாரம் என நினைத்த துர்கை தன்னிரு கைகளால் அந்த லிங்கத்தை ஏந்தினாளாம். அவள் கையை விட்டு அந்த லிங்கம் அகலாமல் உள்ளங்கையிலேயே ஒட்டிக்கொண்டது. பதறிய துர்கை அன்னையை நாடி ஓடினாள். அன்னை பார்த்துவிட்டுச் சிரித்தாள். சிவபக்தனான மஹிஷனைக் கொன்றதால் அவனைக் கொன்ற பாவத்தினால் உன் கைகளை விட்டு இந்த லிங்கம் அகலவில்லை. உன் கையில் இருக்கும் கட்கம் என்னும் வாளால் தரையைக் கீறிக் கிளம்பும் தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டால் உனக்குக் கையிலிருக்கும் லிங்கம் அகன்று பாவ விமோசனமும் கிடைக்கும் என்று சொல்ல அப்படியே தனது கட்கம் என்னும் வாளால் துர்கை கீற அங்கே ஓர் தீர்த்தம் தோன்றியது. அதை இன்றும் கட்க தீர்த்தம் என்னும் பெயரிலேயே அழைக்கின்றனர். துர்கையின் கைகளில் இருந்த லிங்கமும் கீழே விழுந்தது.

அன்னை அதன் பிறகு ஈசனோடு இரண்டறக் கலந்து அர்த்த நாரீச்வரராக ஆனாள். ஆனால் அன்னை அடியெடுத்து வைத்த நாளில் இருந்து அந்தப் பிரதேசமே ஜோதி மயமாகவும், பசுமையாகவும் மாறியதால், மக்கள் அனைவரும் இந்த இடம் என்றும் இப்படியே ஜோதி வடிவாகவும், பசுமையாகவும் காட்சி அளிக்க வேண்டும் என வேண்டிக்கொள்ள அன்னையும் அவ்விதமே ஆகட்டும் என அருளிச் செய்தாள். அன்னையை அவர்கள் அன்று முதல் பச்சையம்மனாக வழிபட்டனர். பயிர், பச்சையை வாழச் செய்தமையால் பச்சை வாழி அம்மன் எனவும் அழைக்கப் பட்டாள்.

இன்னொரு வரலாற்றில் வாழைப்பந்தலில் பந்தலை அன்னையே அமைத்ததாகவும், மணலால் லிங்கம் பிடிக்க நீர் வேண்டி விநாயகனையும், குமரனையும் கேட்டதாயும், அவர்கள் வர நேரமானதால் அன்னையே நீரைத் தன் கைப்பிரம்பால் தட்டி உற்பத்தி செய்ததாகவும் பின்னர் விநாயகனும், முருகனும் கொண்டு வந்த நீரும் சேர்ந்து மூன்று நதிகளாக மாறியதாகவும் அதுதான் முக்கூட்டு என்னும் இடம் எனவும் கூறுகின்றனர். அப்போது அருகே இருந்த கதலிவனத்தில் அசுரன் ஒருவன் அன்னையின் தவத்துக்கும், வழிபாட்டுக்கும் இடையூறு செய்யும் நோக்கில் வந்ததாயும் அவனை ஈசனும், விஷ்ணுவும் சேர்ந்து வாழ்முனி, செம்முனி என்னும் உருவில் வதம் செய்து அன்னைக்கு உதவியதாகவும் கூறுகிறது. இவர்களோடு சேர்ந்து இன்னும் ஐவரும் அன்னைக்கு உதவியதாகவும் கூறுகின்றனர். அவர்கள் முறையே வாழ்முனி, செம்முனி, சடாமுனி, கருமுனி, வீர முனி, முத்து முனி, வேதமுனி ஆகியோர். செம்முனி கோபக்காரன் என்பதால் இவரைக் கட்டுப் படுத்தக் காலில் விலங்கு இருக்கும் என்கின்றனர். பச்சையம்மன் கோயில்களில் வெட்ட வெளியில் பிரம்மாண்டமாக இந்த ஏழு முனிவர்கள் சிலைகளையும் காணலாம். இவர்களைத் தவிர, கெளதமர் உள்ளிட்ட சப்தரிஷிகளின் உருவங்களும் சிறியதாய்ப் பின்னால் காணப்படும்.

பச்சையம்மன் கோயில்களில் கணபதிக்கும், முருகனுக்கும் இடம் உண்டு. பச்சை நிற ஆடையிலேயே காட்சி அளிக்கும் பச்சையம்மனுக்கு உகந்த நாட்களாய்த் திங்கட்கிழமைகளே சொல்லப் படுகின்றன. அம்மனுக்குப் படையலும் சைவப் படையல் தான். அம்மனுக்காக நேர்ந்து கொண்டு பெரிய யானை, குதிரைச் சிலைகள் வைக்கின்றனர். இரவில் குதிரையில் ஏறி அம்மன் நகர்வலம் வருவதாக ஐதீகம். ஆகவே குதிரைகள் அம்மன் குதிரை என்றே அழைக்கப் படுகின்றன. ஈசனும் இங்கே மன்னாதீஸ்வரர் என்ற பெயரில் தெற்குப் பார்த்து வீற்றிருப்பார். வட ஆற்காடு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல குடும்பங்களுக்கும் பச்சை அம்மன் எனப்படும் பச்சைவாழி அம்மனே குலதெய்வம் ஆவாள். எனினும் வாழைப்பந்தலில் முதல் முதல் அம்மன் குடிகொண்ட இடமே பச்சையம்மன் குடி கொண்ட முதல் இடமாகக் கருதப் படுகிறது.

Sunday, October 30, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நீலகண்டர்!


வாசுகி கக்கிய விஷத்தோடு சேர்ந்து பாற்கடலில் இருந்து வந்த ஹாலாஹாலமும் சேர்ந்து எங்கும் விஷப்புகை. தேவர்களும், அசுரர்களும் மயங்கி விழுந்தனர். என்ன செய்வதெனத் தவித்த தேவர்தலைவன், ஈசனை நாட, அவர் தம்முடைய அவதார ரூபியான ஆலாலசுந்தரரை அவ்விடத்தை இவ்விடம் கொண்டு வா எனப் பணிக்க ஆலாலசுந்தரரும் சென்று அந்த விடத்தை எடுத்துச் சென்று நாவல்பழம்போல் உருட்டி ஈசனிடம் கொடுக்க அவரும் அதை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு விட்டார். ஆஹா! இது என்ன! அனைத்துக்கும் ஆதிப்பரம்பொருளான ஈசன் உள்ளே விஷம் போனால் அனைத்து உயிர்களுக்கும் அது தாக்காதோ? அருகே இருந்த அன்னைக்குக் கவலை பிறக்கத் தன் செந்தளிர்க்கரங்களால் ஈசனின் தொண்டையை மென்மையாகத் தடவிக் கொடுக்க விஷம் உள்ளே செல்லாமல் அங்கேயே நின்றது. இதனால் ஈசனின் கண்டம் என்றென்றைக்கும் நீலமாகிவிட நீலகண்டர் என்னும் திருநாமத்தைப் பெற்றார் ஈசன்.

இந்த விடமுண்ட கண்டரைத் தரிசிக்கவேண்டுமானால் சென்னைக்கருகே உள்ள அரக்கோணம் பக்கத்தில் சுருட்டப்பள்ளி என்னும் ஊரில் பள்ளி கொண்ட கோலத்தில் காணலாம். விஷமுண்ட கண்டரைத் தன் மடியில் போட்டுக்கொண்டு விஷத்தைத் தொண்டையிலேயே நிறுத்திவிட்டு அமுதத்தை தேவர்களுக்குக் கிடைக்கச் செய்த அமுதாம்பிகையாக அன்னை இங்கே காட்சி அளிப்பாள். இதைத் தவிரவும், நேபாளத்தில் காட்மாண்டுவில் பூடா நீல்கண்ட் என்னும் கோயிலிலும் கைலை செல்லும் வழியில் விஷம் உண்ட மயக்கத்தில் ஈசன் படுத்து இருப்பதைக் காணலாம். இவரை ஒரு கோணத்தில் பார்த்தால் விஷ்ணுவாகவும் காட்சி அளிப்பார். ஈசன் விஷத்தை உண்டுவிட்டுக் கைலை சென்றதாகவும் வழியில் மயக்கம் வரவே படுத்து இளைப்பாறியதாகவும் அங்கே கோயிலின் பூசாரிகள் கூறுவார்கள்.


அபிராமி அந்தாதியில் "பொருந்திய முப்புரை செப்புரைசெய்யும் புணர்முலையால் வருத்திய மருங்குல் மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே" என்று அபிராமி பட்டர் இதைத் தான் கூறுகிறார்.

Friday, September 23, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நீல கண்டர்

அடுத்து நாம் காணப் போவது நீலகண்டர். விடமுண்ட கண்டன். விஷத்தை உண்பது என்பது எளிதல்ல. ஆனால் மகேச்வரன் அதையும் உண்டான். உலக மக்கள் உய்யுமாறு அவர்கள் நலனுக்கெனத் தான் விஷத்தை உண்டான். நம்மிடம் எப்போதுமே மரண பயம் உண்டு. அதைத் தவிர மற்ற சில பயங்களும், கவலைகளும் உண்டு. எதற்கேனும் கவலைப்படுவோம். இது இல்லையே அது இல்லையே என ஏங்குவோம். இவை அனைத்தையும் வென்றாலேயே நாம் சுகித்திருக்க முடியும். ஆனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை நம்மால். சாதாரணமான பயங்களையும், கவலைகளையும், ஏக்கங்களையும், விருப்பங்களையும் விட நம் அனைவரையும் ஆட்டிப்படைப்பது மரணபயமே. பிறந்த குழந்தை கூடப்பாதுகாப்பை நாடும். உயிரின் இயல்பு அதுவே. இந்த மரணத்தை வெல்லவே யோகியர்களும், சித்தர்களும், ஞானிகளும் சாதனைகள் செய்து வருகின்றனர். பலதரப்பட்ட தெய்வீக மூலிகைகளின் மூலம் சித்தர்கள் தங்கள் உடலை வஜ்ரம் போல் செய்துகொண்டால், யோகியர்களோ யோக சாதனைகள் மூலம் அவற்றை அடைகின்றனர்.

ஆனால் தேவர்களோ அமுதம் உண்டதன் மூலம் அமரத்துவம் பெற்றனர் என்பதைப் படித்திருக்கிறோம். தேவர்களுக்கும் ஆசாபாசங்கள் உண்டு. நம்மைப்போலவே அவர்களும் என்றாலும் அமரத்துவம் அவர்களை நம்மிலிருந்து வேறுபடுத்திக்காட்டும். இத்தகைய நிலையை அவர்கள் எவ்வாறு அடைந்தார்கள் என்பதைப்பார்ப்போமா! பிரஜாபதியான காச்யபரின் குழந்தைகளே தேவர்களும், அசுரர்களும். இவ்வுலக நியதிக்கேற்ப சகோதரச் சண்டை எப்போதும், எந்நேரமும். தேவர்கள் அசுரர்களுடனான சண்டையில் ஒரு சமயம் ஜெயித்தாலும் தோல்வியும் வாட்டியது. மேலும் எப்படிப்பட்ட ஆயுதங்களைப் பிரயோகித்தாலும் சிதையாத உறுதியான தேகம், இறவாப் பெருநிலை அடையவேண்டும் என யோசித்தனர்.

பிரஜாபதிக்கெல்லாம் மூலகர்த்தாவான பிரம்மனிடம் சென்று தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர். அவரோ மஹாவிஷ்ணுவைப்பிரார்த்திக்கச் சொன்னார். அவரது திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க வேண்டும் என்றார். அதற்கு மஹாவிஷ்ணுவின் உதவி இல்லாமல் இயலாது என்றார். அமிர்தம் கிடைத்ததோ அளவற்ற வலிமையும், இறவா நிலையும் பெறலாம் என ஆலோசனை கூறினார். தேவர்கள் அனைவரும் மஹாவிஷ்ணுவிடம் சென்று பாற்கடலைக்கடைய வேண்டும் என உதவி கேட்டு நின்றனர். மஹாவிஷ்ணுவோ பாற்கடலைத் தேவர்களால் மட்டும் தனியாய்க் கடையமுடியாது என்றும், அசுரர்களையும் உதவிக்கு அழைக்குமாறு கூறினார். அசுரர்களும் தேவர்களுக்குக் கிடைக்கப்போகும் அமிர்தத்தில் பங்கு கொடுக்குமாறு ஆகிவிடுமே என தேவர்கள் பயந்தனர். மஹாவிஷ்ணுவோ தைரியமாய் அழைக்குமாறும், அசுரர்கள் அமிர்தம் உண்ணாமல் இருப்பது தம் பொறுப்பு எனவும் உறுதி கொடுத்தார்.

அதன் மேல் அசுரர்களையும் அழைத்தனர். இருவரும் சேர்ந்து பாற்கடலைக் கடைய முடிவு செய்தனர். மத்து வேண்டுமே. மந்திரமலை மத்தானது. ஆனால் மந்திரமலையைப் பெயர்க்க முடியவில்லை. மீண்டும் மஹாவிஷ்ணு உதவிக்கு வந்தார். கருடன் மூலம் மந்திரமலை பாற்கடலுக்கு வந்து சேர்ந்தது. மத்தைச் சுற்றக் கயிற்றுக்கு எங்கே போவது?? இவ்வளவு பெரிய மலைக்குச் சாதாரணக் கயிறு போதாதே? யோசித்துவிட்டு தங்கள் சகோதர முறையாகும் அஷ்டமா நாகங்களின் ஒன்றான வாசுகியைப் போய்க் கேட்டனர். வாசுகியும் கயிறாக இருக்கச் சம்மதம் கொடுத்தது. வாசுகியை மந்தரமலையைச் சுற்றிக் கட்டித் தலைப்பக்கம் தேவர்களும், வால் பக்கம் அசுரர்களும் நிற்க அசுரர்களோ பெரும் வீரர்களும் தேவர்களை வென்றவர்களும் ஆன தாங்கள் வால்பக்கம் நிற்பது தங்கள் வீரத்துக்கு இழுக்கு எனக் கருத, மாற்றி நின்று கொண்டனர். கடைய ஆரம்பித்தனர். ஆனால் என்ன இது??

மந்தரமலை உள்ளே அழுந்தியது. அசையவே இல்லை. சுற்றிச் சுற்றி வரவேண்டாமோ? மாறாக தேவர்களுக்கும், அசுரர்களுக்குமே தலை சுற்ற ஆரம்பித்தது. யோசித்தனர். அடியில் ஏதேனும் வைத்து மலையைத் தாங்கிப் பிடித்தால் மலை உள்ளே அழுந்திக்கொள்ளாது என்ற யோசனை உருவாக என்ன செய்யலாம் என மீண்டும் யோசனை! இவ்வளவு பெரிய மலையை யார் தாங்குவார்கள்?? மஹாவிஷ்ணுவே சரணம்! பலத்த யோசனைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் பின்னர் ஆமை உருவில் மந்தரமலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு மஹாவிஷ்ணு பாற்கடலுக்கு அடியே செல்ல மீண்டும் கடைய ஆரம்பித்தனர். நாட்கள் சென்றன.

ஆனால் பாற்கடலில் இருந்து எதுவும் வரவில்லை. பாற்கடலோ பொங்கித் ததும்ப ஆரம்பித்தது. வாசுகிக்கோ வலி பொறுக்க முடியவில்லை. தனது ஆயிரம் வாய்களாலும் விஷத்தைக் கக்கப் பாற்கடலில் இருந்தும் விஷம் பொங்கிப் பிரவாஹித்தது.

Saturday, August 20, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள்வாழ்க! ஸ்ரீசரப மூர்த்தி


சரபர் நரசிம்ம மூர்த்தியோடு சம்பந்தப்பட்டவர். ஹிரண்யாக்ஷன் இறந்ததும், ஹிரண்யகசிபுவுக்கு விஷ்ணுவின் மீதும் அவர் பக்தர்கள் மேலும் அடங்காத கோபம் வந்தது. அந்தக் கோபம் நாளாவட்டத்தில் வன்மமாக மாறுகிறது. ஆகவே விஷ்ணுவின் பெயரையே குடிமக்கள் சொல்லக் கூடாது; ஆசிரியர்கள் கற்றுத்தரக் கூடாது; என்றெல்லாம் அவன் போட்ட சட்டங்களும், அதை மீறிய அவன் குமாரன் பிரஹலாதன் பற்றியும் நாம் நன்கறிவோம். பிரஹலாதனைக் கொல்ல முயற்சி செய்த ஹிரண்யகசிபுவிடமிருந்து அவனைக்காக்க வேண்டி தோன்றிய நரசிம்மம் ஆனது ஹிரண்யகசிபுவைக் கொன்று அவன் ரத்தத்தைக் குடித்த பின்னரும் கோபம் தணியாமல் இருக்கவே ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி சாந்தப் படுத்தச் சென்றாள். ஆனால் அவளாலும் இயலாமல் போகவே தேவர்கள் கவலை கொண்டனர். இதற்குச் சரியான ஆலோசனையை ஈசனாலேயே தர இயலும் என்பதால் ஈசனை நாடுகின்றனர். தன்னால் தான் நரசிம்மத்தின் கோபத்தை அடக்க இயலும் என்று ஈசன் எடுத்த வடிவமே ஸ்ரீசரபமூர்த்தி என்பார்கள். ஒரு சிலர் ஈசன் வீரபத்திரரைப்பணித்ததாகவும், வீரபத்திரரே ஸ்ரீசரபராக மாறினார் எனவும் கூறுகின்றனர். லிங்க புராணத்தில் வீரபத்திரர் சரபராக வந்ததாய்க் குறிக்கப் பட்டிருக்கும் என்றும் தெரிய வருகிறது.

எட்டுக் கால்களோடும், இரண்டு முகங்களோடும், (இரண்டும் சிங்க முகங்கள்) ஆனால் மனித உடலில் பொன்னிறமான இரு இறக்கைகள் பறவைகளைப் போலவும், சிங்கத்தைப் போன்ற கூரிய நகங்களுடன் கூடிய நான்கு கால்கள், வால் நீண்டு விலங்கைப் போலவும் காட்சி கொடுத்த இந்த அதிசய வடிவம் ஸ்ரீசரப மூர்த்தி ஆவார். இவர் பகைவர்களுக்கெல்லாம் பகைவர். நரசிம்மரையே அடக்கியதால் நரசிம்ம சம்ஹாரி என அழைக்கப் படுகிறர். ஸ்ரீ சரபரை வழிபட்டால் இவரின் அளவற்ற சக்தியால் இயற்கைச் சீற்றங்கள், பேராபத்துக்களிலிருந்து தப்பலாம் எனவும், வைத்தியர்களாலும் தீர்க்க முடியாத நோய் அகலும் எனவும் கூறுகின்றனர். மேலும் பரிகாரம் செய்ய முடியாத எந்தக் கஷ்டமானாலும் சரியாகிவிடும் எனவும், மரண பயம் ஏற்படாது எனவும் கூறுகின்றனர்.

இந்த அதி உக்ரமூர்த்தியை ஆகாச பைரவர் எனவும் கூறுகின்றனர். இவருக்கும் ஈசனைப் போல் மூன்று கண்கள் உண்டு. சூரியன், சந்திரன் ஆகிய இருகண்களைத் தவிர அக்னி நெற்றிக்கண்ணாக விளங்குகிறது. இரண்டு இறக்கைகளையும் முறையே காளியாகவும், துர்க்கையாகவும் கூறுவார்கள். நாக்கை பூமியின் பாத வலையம் எனவும், கால் நகங்களில் இந்திரன் இருப்பதாகவும், வயிற்றில் காலாக்னியும், இரு தொடைகளும் முறையே காலன், ம்ருத்யுவாகவும் திகழ்கின்றதாய்ச் சொல்வார்கள். வலிமை வாய்ந்த சரபரைத் துதிப்பதால் கொடிய பகைவனையும் வெல்ல முடியும் என்றும், போர்களில் வெற்றி கிடைக்கும் எனவும் சொல்லப் படுகிறது. பெரும்பாலும் தெலுங்கு பேசும் ஆந்திர மாநிலத்தை ஆண்ட சாளுக்கிய மன்னர்களாலேயே ஸ்ரீ சரபர் வழிபடப் பட்டதாய்த் தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் பிற்காலச் சோழர் காலத்திலேயே சரபர் வழிபாடு பிரபலம் அடைந்ததாயும் தெரிய வருகிறது. சிதம்பரம் கோயிலில் சரபருக்கு எனத் தனி சந்நிதி இருப்பதை ஏற்கெனவே சிதம்பர ரகசியம் தொடரில் பார்த்தோம்.

இதைத் தவிர மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்ட கும்பகோணத்தை அடுத்த திரிபுவனத்தில் சரபருக்குத் தனி சந்நிதி உண்டு. ஆனால் முதன் முதல் கும்பகோணத்தை அடுத்த வீர சோழீச்சுரம் கோயிலில் தான் சரபருக்கு முதல் சிற்பம் அமைக்கப்பட்டதாய் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கோயிலில் ஐராவதேஸ்வரர் கோயிலின் ராஜகம்பீர மண்டபம் எனப்படும் வெளி மண்டபத்தில் ஸ்ரீ சரபரை வணங்கிய வண்ணம் நரசிம்மர் காட்சி கொடுப்பதைக் காணலாம். புகைப்படம் எடுக்க முடியவில்லை. ப்ரத்யங்கிரா எனப்படும் காளியும், சூலினி எனப்படும் துர்கையும் இவரின் சக்திகளாய்ச் சொல்லப் படுகிறது.


Wednesday, August 10, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பைரவர்!


பைரவர்களின் எட்டு வடிவங்களும், அவருக்கு ஏற்ற பெண் தெய்வங்களும்.

அஷ்டாங்க பைரவர்- பிராம்மி
ருரு பைரவர்- மாஹேஸ்வரி
சந்த பைரவர்- கெளமாரி
க்ரோத பைரவர்- வைஷ்ணவி
உன்மத்த பைரவர்- வாராஹி
கபால பைரவர்-நாரசிம்ஹி
பீஷண பைரவர்- சாமுண்டி
சம்ஹார பைரவர்- சண்டிகா

எட்டு பைரவர்களையும் இயற்கையின் எட்டு சக்திகளாய்க் குறிப்பிடப் படுவது உண்டு. அவை மண், விண், காற்று, நீர், நெருப்பு, சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா. இவர்களில் காசியில் இருப்பவரைக் காலபைரவர் என்று அழைப்பார்கள். ஆனாலும் காசியில் அஷ்ட பைரவர்களுக்கும் எட்டு இடங்களில் சந்நிதி இருப்பதாகவும், தீவிர சிவ பக்தர்கள் இந்த இடங்களுக்கு “அஷ்ட பைரவ யாத்திரை” செல்வதாகவும் அறிகிறோம். சீர்காழியிலும் தோணியப்பர் சந்நிதியின் வெளிப் பிரகாரத்தின் தென்பகுதியில் அஷ்ட பைரவர்களைக் காண முடியும். தமிழ் நாட்டிலும் அஷ்ட பைரவத் தலங்கள் உள்ளன. அவை செட்டிநாடு என அழைக்கப் படும் காரைக்குடிப் பக்கம் திருப்பத்தூர், அழகாபுரி, வைரவன்பட்டி, பெருஞ்சிக்கோயில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி ஆகிய இடங்கள் அஷ்ட பைரவத் தலமாகப் போற்றப் படுகிறது. ஆந்திராவின் தேவார வைப்புத்தலமான ராமகிரியில் விஜய பைரவர் என்ற பெயரில் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய பைரவர் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும் அறிகிறோம். அங்கே பைரவரின் பீடத்தின் கீழே பைரவ சக்கரமும் ஸ்தாபித்திருப்பதாய் அறிகிறோம்.

தமிழ்நாட்டில் பைரவ வழிபாடு மிகவும் பிரசித்தியாக இருந்தது என்பதற்கு அடையாளமாக, நாயன்மார்களில் முக்கியமானவரான சிறுத்தொண்ட நாயனார், பைரவ சமயத்தைச் சார்ந்திருப்பதை வைத்து அறிகிறோம். மேலும் இயற்பகை நாயனாரும் பைரவ சமயம் என்றும் ஈசன் இவர்களை எல்லாம் பைரவ வடிவிலேயே காட்சி கொடுத்து அருளியதாகவும் அறிகிறோம். வடுகர், க்ஷேத்திரபாலகர் போன்ற பெயர்களும் பைரவருக்கு உரியது. பழைய தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே க்ஷேத்திரபாலபுரம் என்ற பெயரில் பைரவருக்குத் தனியாகக் கோயில் உள்ளது. சீர்காழிக் கோயிலில் கட்டுமலையில் தோணியப்பர் சந்நிதிக்கு மேலே உள்ள தென்கோடி விமானத்தின் தேவர் வடுகநாதர், சட்டைநாதர் என்றெல்லாம் வழங்கப் படும் பைரவரே ஆவார். ஆண் மகன் தன் குழந்தைப் பருவத்தைக்கடந்து வாலிபப் பருவத்தை எய்தும் முன்னர் இருக்கும் நிலையே வடுகன் எனப்படும். அந்தக் கோலத்திலேயே இருப்பதால் இவருக்கு வடுகநாதர் என்று பெயர்.

இந்த வடுகநாதர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால் அவருக்கு அபிஷேஹம் கிடையாது. புனுகு சார்த்துவார்கள். இவருக்குப் பூஜையும் இரவு நேரத்திலேயே நடைபெறும். பெண்கள் தலையில் மலர் சூடிக்கொண்டு இவரைத் தரிசிப்பதைத் தவிர்க்கச் சொல்லுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் நள்ளிரவு நேரத்தில் வடுக நாதருக்குப் புனுகு சார்த்தி, நெய்யில் வடைமாலை சாற்றி, முழுத்தேங்காயை நிவேதனம் செய்தல் சிறப்பாகச் சொல்லப் படும். மேற்கண்ட எட்டு பைரவர்களைத் தவிர ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அனைவரிலும் சிறப்பாக வழிபடுபவர். சிதம்பரம் கோயிலில் நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் இடப்பக்கம் இருக்கும் விக்கிரஹங்களில் சந்திரசேகரருக்கு அடுத்து ஸ்வர்ணாகர்ஷண பைரவர் இடம் பெற்றிருப்பார். ஒரு காலத்தில் இவரே தில்லை வாழ் அந்தணர்களின் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்ததாகச் சொல்கின்றனர். தினசரி காலை சந்நிதி திறக்கையில் அங்கே ஓர் ஓலைச்சுவடியில் பொற்காசுகள் வைக்கப் பட்டிருக்கும் எனவும், அதை தீக்ஷிதர்கள் தங்களுக்குள் குடும்பத் தேவைக்கு ஏற்பப் பிரித்துக்கொள்வார்கள் எனவும் கூறுகின்றனர். இன்றும் பணக் கஷ்டம் ஏற்பட்டால் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு அபிஷேஹ, ஆராதனைகள் செய்தல் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமணம் நிறைவேற வேண்டியும் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமியில் அர்ச்சனை, அபிஷேஹம் செய்யலாம். எல்லாச் சிவன் கோயில்களிலும் தினசரி வழிபாடுகள் சூரியனில் ஆரம்பித்து இரவு பைரவரில் முடியும். என்னதான் ஈசனின் அம்சம் என்றாலும் இவரையும் ஈசனாகவே கருதுவார்கள். பைரவர் சந்நிதி கிழக்குப் பார்த்து இருப்பது நல்லதில்லை என்றும் ஐதீகம். பொதுவாக பைரவர் கோயில்களில் வடக்குப்பார்த்தே இருப்பார். தெற்குத் திசையில் சந்நிதி அமைந்திருக்கும்.

அடுத்துப் பார்க்கப் போவது சரபர், ஏனெனில் இவரும் பைரவரின் ஒரு வடிவமே எனக் கருதப்படுகிறார்.

Wednesday, July 27, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பைரவர்!

சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தோடு சித்தானான்”

என்று ஸ்வர்ணாகர்ண பைரவாஷ்டகம் கூறுகிறது. பைரவரின் அவதாரத்தின் காரணமும் சதுர்முகனின் தலையைக் கொய்வது தான். ஈசனைப் போலவே ஐந்து முகங்களுடனே இருந்தான் பிரம்மாவும். சதுர்முகனின் ஐந்து முகங்களையும் ஒரு சமயம் ஒரு சேரப்பார்த்த தேவியே ஈசனுக்கும், சதுர்முகனுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு கண நேரம் மயங்க சதுர்முகனின் ஆணவம் தலைக்கு ஏறியது. மதிமயங்கிய சதுர்முகன் சிவநிந்தனை செய்யத் துவங்க, அவனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டி ஈசன் அந்த ஐந்தாவது சிரத்தைத் துண்டிக்க எண்ணி பைரவரைத் தோற்றுவித்தார். வடுகனாக, (சின்னஞ்சிறு பிரம்மசாரியை வடு என்பார்கள்) சிவந்த நிறத்துடனும், ஜூவாலை வீசும் ஜடாமுடிகளுடனும், அந்த சிவந்த ஜடாமுடியில் குளிர் நிலவான சந்திரப் பிறையுடனும், கைகளில் உடுக்கை, சூலம், ஏந்தியவண்ணம், பாசக்கயிற்றையும் ஏந்திய வண்ணம் தோன்றிய பைரவர் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்து எடுக்க அதுவும் அவர் கரங்களில் தங்கலாயிற்று. நான்கு வேதங்களும் நான்கு நாய்களாக மாறி வாகனமாக மாற, மூன்று கண்களோடும், இவ்வுலகையும், மற்றும் அனைவரையும் காப்பாற்றும் க்ஷேத்திர பாலகராய், பூத, பிசாசுக்கூட்டங்களுக்கும் தலைவனாய்த் தோன்றினார் பைரவர். இவரை வடுக பைரவர் என்பார்கள்.

இந்தக் கதையை பிரம்மாவும், விஷ்ணுவும் அடிமுடி தேடிய கதையோடும் சம்பந்தப்படுத்தி, அதிலே பிரம்மா பொய்யுரைத்ததால் பிரம்மாவின் சிரத்தை அறுக்குமாறு கட்டளையிட்டதாயும் ஒரு கூற்று உண்டு. எப்படி இருந்தாலும் பிரம்மாவின் ஆணவத்தை அடக்கி ஒடுக்கத் தோன்றியவரே பைரவர். இந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கண்டியூர் என்பார்கள். ஈசனின் அட்ட வீரட்டானத் தலங்களில் முதன்மையான வீரமும் இதுவே. முதன்மையான வீரட்டானத் தலமும் இதுவே. பிரம்மாவின் சிரத்தைக் கொய்த பைரவருக்கு இங்கே தனிச் சந்நிதி இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம். பிரம்மாவின் சிரத்தைக் கொய்தவண்ணம் காணப்படும் சிற்ப அதிசயம் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ளதாயும் கேள்விப் படுகிறோம். இதிலே பிரம்மா தன் ஐந்தாவது தலையை இழந்துவிட்டு அந்த பயத்துடனேயே நிற்பது போல் காட்சி அளிக்கிறார் என்றும் தெரிய வருகிறது. கொஞ்சம் கோபத்துடன் பைரவர் காணப்படுவார். இவ்வுலகைக்காக்கும் பொறுப்பை ஈசன் பைரவருக்கு அளித்திருப்பதாயும், இரவெல்லாம் தன் வாகனமும், தோழனுமான நாயுடன் பைரவர் சுற்றி வந்து காவல் புரிவதாயும் ஐதீகம்.

பைரவர் என்றாலே பயங்கரமான ஆள் என்றே அர்த்தம். பாதுகாவலர் என்பதால் பெண்கள் இவரை வழிபட்டால் பெண்களுக்குப் பாதுகாவலாக இருந்து காத்துவருவார். வைரம் எப்படி உறுதியாக இருக்கிறதோ அவ்வாறே இவரும் உறுதியாகத் தன் காவல் வேலையைச் செய்து வருவதால் சில இடங்களில் இவர் வைரவர் எனவும் அழைக்கப் படுகிறார். வைரவன் பட்டி என்ற பெயரில் ஒரு தலம் செட்டிநாட்டுப் பகுதியில் காண முடியும். சில இடங்களில் ஒரே ஒரு நாயுடனேயே காணப்படுவார். சிவன் கோயில்களின் வெளிபிரஹாரத்திலேயே குடி கொண்டிருக்கும் வைரவர் என்னும் பைரவரின் சந்நிதியில் கோயிலைப் பூட்டிச் சாவியை வைத்துவிடுவார் என்றும் மறுநாள் காலை வரை சாவி அந்த இடத்திலெயே இருக்கும் என்று செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.


இந்தியாவில் பைரவ வழிபாடு பிரபலமான ஒன்று என்றாலும் ராஜஸ்தானிலும், நேபாளத்திலும், காசியிலும் மிகச் சிறப்பாக வழிபடுகின்றனர். பெளத்தர்களுக்கும் பைரவ வழிபாடு உண்டு என்றும் ஒரு செய்தி தெரிவிக்கிறது. இது குறித்த உறுதியான தகவல் இல்லை. பைரவரை எட்டு விதமாக வழிபடுகின்றனர்.

கால பைரவர்
அஸிதாங்க பைரவர்
சம்ஹார பைரவர்
ருரு பைரவர்
க்ரோத பைரவர்
கபால பைரவர்
ருத்ர பைரவர்
உன்மத்த பைரவர்
கால பைரவர் தான் சனி பகவானின் குரு என்றும் கருதப்படுகிறார். சிங்களத்திலும் பைரவ வழிபாடு உண்டு. சொத்துக்களைப்பாதுகாப்பவராய்க் கருதப் படுகிறார். தமிழ்நாட்டிலோ வைரவர் என்ற பெயரில் எட்டுத் திக்கையும் காக்கும் கிராம தேவதையின் உருவிலோ, அல்லது வைரவர் என்ற பெயரிலோ வணங்கப் படுகிறார். சிவ வழிபாட்டின் அகோர வழிபாடு என்னும் பிரிவில் பைரவர் முக்கியமான அங்கம் வகிக்கிறார்.

Tuesday, July 19, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!

அஞ்சையும் அடக்கி ஆற்றலுடையனாய் அநேக காலம்
வஞ்ச மிள் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்களாகி விசையொரு பாயுங்கங்கை
செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே!

திருநாவுக்கரசரின் இந்தப் பாடல் ஐம்புலன்களையும் அடக்கித் தவம் புரிந்து கங்கையை விண்ணிலிருந்து மண்ணுக்குக் கொண்டு வந்த பகீரதனின் எல்லையற்ற ஆற்றலையும் பகீரதனுக்காகப் பன்முகங்களுடன் விரைந்து வந்த கங்கையையும் திருச்சேறை என்னும் ஊரில் உள்ள ஈசன் தன் செஞ்சடையில் ஏற்று அருள் புரிந்ததாகப் பாடி இருக்கிறார். இந்தத் திருச்சேறையில் தான் ஸ்ரீருணவிமோசன லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறதை அறிந்து பார்க்க வேண்டிச் சென்றோம். சென்ற சமயம் கோயிலில் குருக்கள் இல்லை. வரக் கொஞ்சம் நேரம் ஆகும் என்றதால் அரை மணி போல் காத்திருந்துவிட்டுத் திரும்பிவிட்டோம். கருவறையை லேசாய் மூடி இருந்தனர். அதில் உள்ள இடைவெளி மூலம் தரிசனம் செய்து கொண்டோம். சுயம்புலிங்கம் என்று சொன்னார்கள். மேலும் இந்தக் கோயிலில் துர்க்கைக்கு மூன்று சந்நிதிகள் காணப்பட்டன. இங்குள்ள பைரவரும் அப்பரால் பாடப்பட்டவர் என்றார்கள். பைரவரைக்குறித்த பாடல்,

“விரித்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடுதமருங்கை
தரித்ததோர் கோலே கால பைரவனாகி வேழம்
உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே!”

இவ்வண்ணம் பூமிக்கு வந்தாள் கங்கை. இமவானின் மூத்தமகளாகக் கருதப் படும் கங்கையைத் தன் சடையில் ஈசன் தாங்கிக்கொண்ட கோலமே ஸ்ரீகங்காதரர் ஆகும். கங்காதரரின் திருவுருவம் யோகபட்டத்தோடு, ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் விரிசடையில் ஆமை, மீன், முதலை போன்ற உயிரினங்களோடு கங்கையின் திருமுகம் காணப்படும் என்றும் ஈசனின் கரங்கள் மான், மழுவைத் தாங்கி, சின் முத்திரை காட்டிய வண்ணம் இன்னொரு கீழ்க் கை வரத முத்திரையும் காட்டிக்கொண்டு காட்சி அளிக்கும் என்று வர்ணிக்கப் படுகிறது. இந்தப் படம் கிடைக்கவில்லை. மீன்களோடு ஒரு படம் இருந்தது. அதையும் கூகிளில் தேடினேன். வரவில்லை. 

ஈசன் தன் செஞ்சடையில் இருந்து கங்கையை எடுத்து வெளியே விடும் வண்ணம் காட்சி அளிக்கும் திருவடிவங்களே பல ஆலயங்களிலும் காண முடியும். அருகே சற்றே முகத்தைத் திருப்பிய வண்ணம் எழிலார்ந்த கோலத்தில் அன்னையும், வணங்கிய நிலையில் பகீரதனும் காணப்படுவார்கள். நந்தி ஈசன் விடும் கங்கை நீரை வாங்கி உமிழும் கோலத்தில் காணப்படுவார். மிக அரிய சிற்பம் இது. இன்னும் காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயில், புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களிலும் காணமுடியும். இதிலே காஞ்சி கைலாசநாதர் கோயிலைப் பலமுறை தரிசித்தும் சரியாய் நினைவில் இல்லை. அதேபோல் மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாளையும் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகின்றன.  ஆனால் கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலிலும், தாராசுரத்திலும், திருவிடைமருதூரிலும் இருப்பதாய்க்கேள்விப்படுகிறோம். அடுத்த முறை அங்கே செல்லுகையில் கட்டாயமாய்ப் பார்த்துப் படங்கள் எடுத்து வரவேண்டும். சிதம்பரத்தில் கங்கைக்குத் தனியே சந்நிதி உண்டு.


அடுத்து நாம் காணப் போவது நெடுநாளாகக் காண வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீகாலபைரவர். பைரவர் ஈசனின் பல்வேறு வடிவங்களில் மிக முக்கியமானவர். இவரே கோயில்களின் பாதுகாப்புக்கும் உரிய கடவுள் ஆவார். ஈசன் கோயில்களை பைரவரே காத்து வருவதாக ஐதீகம். முன்காலங்களில் கோயில்களைப் பூட்டிச் சாவியை வெளிப் பிராஹாரத்தில் காணப்படும் பைரவர் சந்நிதியில் வைத்துவிடுவார்களாம். பைரவர் தன் வாகனம் ஆன நாயுடன் கோயிலைச் சுற்றி உலா வந்து கொண்டிருப்பார் என்றும் பலர் கண்களிலும் பட்டிருக்கிறார் என்றும் கூறுவார்கள். சிதம்பரத்தில் பைரவர் தனம் தருபவராக இருந்திருக்கிறார். தில்லை வாழ் அந்தணர்கள் தங்கள் பிழைப்புக்குப் பணமோ, பொருளோ இல்லாமல் வருந்த ஈசன் பைரவருக்கு ஆணை யிட ஒவ்வொரு நாளும் இரவில் பைரவர் பொற்காசுகளை நடராஜர் சந்நிதியில் வைத்து விடுவார் என்றும் அதைக் காலையில் அன்றாட வழிபாட்டுக்கு வரும் தீக்ஷிதர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வார்கள் என்றும் சிதம்பரம் வாழ் தீக்ஷிதர்கள் கூறுவார்கள். சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதிக்கு அருகேயே கீழ்ப்பக்கமாக பைரவருக்கும் தனி இடம் உண்டு. அவருக்கு அபிஷேஹமும் உண்டு. இங்கே பைரவருக்கு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர். இனி பைரவர் குறித்த செய்திகளை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம்.

Sunday, July 10, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!


பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடையவேண்டி, கங்கை பூமிக்கு வந்து பாதாளத்துக்கும் பாய்ந்து அவர்களை மோக்ஷம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக் கொண்டான். கங்கை, “அப்பா, பகீரதா! உன் நோக்கம் மிகவும் பெருமைக்குரிய ஒன்றே! நானும் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்குவாளா? அவளால் இயலாது. நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்ய முடியுமா உன்னால்? அப்படி எனில் நான் வருகிறேன்.” என்று கூறினாள். பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும், பூமியின் மகா பராக்கிரம சாலிகளையும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்தனர். பின்னர் மஹாவிஷ்ணுவை பகீரதன் வேண்ட, அவரோ, “இது ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெற்று அவர் மூலம் கங்கையை வரவழை.” என்று கூறிவிட்டார்.

பகீரதனும் ஈசனைக் குறித்துத் தவம் இருந்து வேண்ட, மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்குக் காட்சி அளித்தார். “பகீரதா, உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம்; உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும், உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கையை பூமிக்கும், பின்னர் பாதாளத்துக்கும் அழைத்து வர நான் உதவுகிறேன். எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன்.” என்றார். பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க, அவளும் மகிழ்வோடு வரச் சம்மதித்தாள். “ஹோ” வென்ற ஆரவாரமான சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்தாள் கங்கை. ஈசன் தன் சடையை விரித்துப் பிடிக்க, கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. ஆஹா, நம் வேகம் என்ன? இந்த சடாபாரத்தின் பலம் என்ன?? இதனால் நம்மைத் தாங்க இயலுமா என்ன? என் ஆற்றலையும், வேகத்தையும் இந்தப் பிக்ஷாடனனால் தாங்க இயலுமா?” என யோசித்தாள்.

எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டம் புரிந்து கொண்டவராய், நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார் சுருட்டி. திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவிக்க, பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைய, ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றைக்காலில் தவமிருந்தான். அவன் முன் தோன்றிய ஈசன், கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு, கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட, கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான். வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் தன் நீர்க்கரங்களால் அந்த ஆசிரமத்தை முற்றிலும் உருட்டித் தள்ளிக்கொண்டு முனிவரையும் நீர்ப்பெருக்கோடு உருட்டித் தள்ள ஆயத்தமானாள்.

கோபம் கொண்ட முனிவர், கங்கையை அப்படியே தன் கைகளால் எடுத்து அள்ளிக் குடித்து ஆசமனம் செய்துவிட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும், கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் எலும்புகள் மற்றும் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான். சகரபுத்திரர்களுக்கு நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்ததாக ஐதீகம். இந்தக் கங்கையைத் தலையில் தாங்கிய ஈசனே கங்காதரர் எனப்பட்டார்.

Sunday, July 03, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!

அடுத்து நாம் காணப் போவது கங்காதரரை. கங்கையை ஈசன் தலையில் சுமந்த காரணத்தையே இப்போது நாம் அறியப்போகிறோம். இக்ஷ்வாகு குலத்து அரசன் ஆன சகரனுக்கு முதல் மனைவி மூலம் இரு மகன்களும், இரண்டாம் மனைவி மூலம் அறுபதினாயிரம் புதல்வர்களும் இருந்தனராம். சகரன் அஸ்வமேத யாகம் செய்ய உத்தேசித்து, அஸ்வமேதக் குதிரையை நன்கு அலங்கரித்து மூவுலகையும் சுற்றிவர அனுப்பி வைத்தான். அந்தக் குதிரையை தேவேந்திரன் கவர்ந்து கொண்டு சென்று பாதாளத்தில் ஒளித்து வைக்கிறான். ஒளித்து வைத்த இடம் கபில முனிவரது ஆசிரமம். இந்த விஷயம் சகரனுக்குத் தெரியாது. குதிரையைக் காணோமே என்று தேடுகிறான். யாகத்திற்கு எனக் காப்புக் கட்டிக் கொண்டுவிட்டான். ஆகவே யாகசாலை எல்லையைத் தாண்டி அவன் செல்ல முடியாது. ஆகவே தன் அறுபதினாயிரம் புதல்வர்களையும் குதிரையைத் தேடி வரும்படி அனுப்பி வைக்கிறான்.

தேவலோகத்திலும், பூலோகத்திலும் குதிரையைத் தேடிக் காணாமல் ஏமாற்றம் அடைந்த சகரனின் புதல்வர்கள், கடைசியில் பாதாளத்திற்கு வருகின்றனர். அங்கே கபில முனிவரது ஆசிரமத்திற்கு அருகே குதிரை இருப்பதைக் கண்டு அங்கே சென்றனர். குதிரையைக் கபிலர் தான் பிடித்து வைத்திருப்பாரோ எனச் சந்தேகமும் கொண்டனர். இவர்களின் தேடுதலாலும் அத்து மீறி நுழைந்ததாலும் கோபம் கொண்ட கபிலர் அவர்களைச் சாம்பலாகும்படி சபிக்க, அவர்களும் அப்படியே எரிந்து சாம்பலாயினர். தன் புதல்வர்கள் திரும்பி வராததைக் கண்ட சகரன், அடுத்துத் தன் பேரன் ஆன அம்சுமான் என்பவனை அனுப்பி வைக்கிறான். அனைவரையும் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வரும்படி சொல்லி அனுப்பி வைத்தான். அம்சுமானும் கிளம்பி விண்ணிலும், மண்ணிலும் குதிரையைத் தேடிவிட்டுப் பின்னர் பூமிக்கு அடியில் பாதாளத்தில் செல்ல வேண்டி அஷ்ட நாகங்களையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு அவற்றின் உதவியோடு பாதாளத்தை அடைந்தான். அங்கே கபிலரின் ஆசிரமத்தையும் அடைந்தான். அங்கே சென்று கபிலரை வணங்கிப் பணிந்து தான் வந்த காரியத்தைக் கூற மனம் வருந்திய கபிலர் தாம் அவர்களை எரிந்து சாம்பலாகும்படி சபித்ததைக் கூறி வருந்தினார். யாகக் குதிரையையும் அம்சுமானிடம் திரும்பக் கொடுத்தார். முனிவரின் செய்தியோடு ஆசிகளையும் பெற்றுக்கொண்ட அம்சுமான் குதிரையை ஓட்டிக்கொண்டு வந்து தன் பாட்டன் சகரனிடம் ஒப்படைத்தான். மனம் வருந்திய சகரன் தன் பிள்ளைகளின் நிலையைக் குறித்தும் அவர்களின் கதியை நினைத்தும் மனம் வருந்தினாலும் யாகத்தை நிறுத்தாமல் முடித்துவிட்டுப் பின்னர் பிள்ளைகளின் நற்கதிக்குத் தவம் இருந்தான், அவன் கோரிக்கை நிறைவேறாமலேயே இறந்தும் போனான்.

அதன் பின்னர் பேரன் அம்சுமான் பல காலம் ஆண்டு விட்டுத் தன் குமாரன் திலீபனுக்கு அரசாட்சியை அளித்தான். இறந்த முன்னோர்களுக்கு நற்கதி கிடைக்கத் தவம் மேற்கொண்டும் இருவராலும் அது நிறைவேறவே இல்லை. திலீபன் தன் மகன் பகீரதனுக்கு அரசுரிமையை அளித்துவிட்டு இறந்தான். பகீரதன் வழிவழியாகச் சொல்லி வந்த தன் குலத்து முன்னோர்களின் கதையைக் கேட்டிருந்தான். ஆகவே அவன் தன் முன்னோர்களுக்காகத் திருக்கோகர்ணத்தில் தவமிருந்து பிரம்மனை வேண்டினா. அவன் தவம் மிகக் கடுமையாக இருக்கக் கடைசியில் பிரம்மா தோன்றி அவனை வாழ்த்தினார். பின்னர் அவனிடம் அவன் குலத்து முன்னோர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் விண்ணில் ஓடும் கங்கையை பாதாளத்திற்குக் கொண்டு வந்து அந்தப் புனித நீரால் சாம்பலைக் கரைத்து எலும்புகளை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும் என்று ஆலோசனையும் கூறுகிறார்.

Saturday, July 02, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கிராத மூர்த்தி!

கோபம் கொண்ட அர்ஜுனன், வேடனாகிய ஈசனைப் பார்த்து, இந்தப் பன்றியைத் தன்னுடைய வில்லில் இருந்து கிளம்பிய அம்பே கொன்றதாகவும், ஆகவே பன்றி தனக்குத் தான் சொந்தம் எனவும் கூறிவிட்டுக் குனிந்து செத்த பன்றியைத் தூக்க முனைந்தான். வேடுவன் அவனைத் தன் காலால் தடுத்தான். அதைக் கண்டு திகைப்புற்ற அர்ஜுனன் நிமிர்ந்து பார்க்க வேடன், “வா, நாம் இருவரும் போர் புரிவோம். உன்னால் இயன்றால் உன் பாணங்களால் என்னை அடித்துப் போட்டுவிட்டுப் பின்னர் அந்தப் பன்றியை எடுத்துச் செல்வாய்!” என்று கூறிய வண்ணம் போருக்கு ஆயத்தமானார். கோபம் கொண்ட அர்ஜுனனும் போருக்குத் தயாரானான். அந்த வேடன் மீது அம்பு மழை பொழிந்தான். ஆனால் என்ன ஆச்சரியம்! அர்ஜுனனின் அம்உகளோ, அஸ்திரங்களோ அந்த வேடனைப்பாதிக்கவே இல்லை. வேறு வழியில்லாமல் தனது காண்டீபத்தையே தூக்கி அதனால் வேடனை அடிக்க முனைந்தான் அர்ஜுனன். ஆனால் அந்த வேடனோ காண்டீபத்தைப் பறித்துக் கொன்டு அர்ஜுனனோடு மல்யுத்தம் செய்து அவனை அப்படியே மேலே தூக்கிக் கீழே அடிக்க, அர்ஜுனன் மூர்ச்சை அடைந்து விழுந்தான்.

சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்த அர்ஜுனன் தன்னருகே ஒரு சிவலிங்கத்தைக் கண்டான். உடனே பக்தியுடன் எழுந்து அதை வணங்கிக் காட்டுப் பூக்களைக் கொண்டு ஒரு மாலை கட்டி சிவலிங்கத்திற்குச் சாற்றி வழிபட்டான். பின்னர் அவனுக்குத் தான் கீழே விழுமுன்னர் நடந்தவை நினைவில் வர வேடனைத் தேடிக் கண்டு பிடித்தான். வேடன் போகும்போது காண்டீபத்தை வேறு கொண்டு போய்விட்டான். ஆகவே வேடனைக் கண்டதும் மீண்டும் போருக்கு ஆயத்தமான அர்ஜுனனுக்கு என்ன ஆச்சரியம்! சிவலிங்கத்தின் தலையில் தான் சாற்றிய மாலையை இந்த வேடன் தன் தலையில் அணிந்து கொண்டிருக்கிறானே. பதறிய அர்ஜுனன் ஓடோடியும் வந்து லிங்கம் இருந்த இடத்தைப் பார்த்தான். லிங்கத்தின் தலையில் அவன் சாற்றி வழிபட்ட மாலை அப்படியே இருந்தது. மீண்டும் ஓடிப் போய்ப் பார்த்தால் வேடன் தலையிலும் அதே. உண்மை விளங்க வேடன் காலடியில் விழுந்து வணங்கினான் அர்ஜுனன். மல்யுத்தம் செய்கையில் தழுவிக் கொண்டு சண்டை போட்ட அர்ஜுனனை இப்போது ஈசன் பாசத்தோடும், பரிவோடும் ஆரத் தழுவினார். அவனை மனமார ஆசீர்வதித்து, அவன் வீரத்தைப் பாராட்டி, சக்தி வாய்ந்த, ‘பிரம்ம சிரஸ்’ எனப்படும் பாசுபத அஸ்திரத்தையும் அவனுக்கு அளித்து, அதைப் பயன்படுத்தும் முறைகளையும் கற்றுக் கொடுத்தார். காண்டீபத்தையும் திரும்ப அளித்தார். விண்ணிலிருந்து தேவர்கள் பூமாரி பொழிய அவர்கள் பங்கிற்கு இந்திரன், அக்னி, எமன் போன்றவர்களும் அர்ஜுனனுக்கு ஆயுதங்களை அளித்து வாழ்த்த அர்ஜுனன் பெரும்பேறு பெற்றான்.

இது மஹாபாரதக் கதை, ஆரண்ய பர்வத்தில் வரும். இந்த பாசுபதம் பெற்ற திருத்தலமாகத் தமிழ்நாட்டின் திருவேட்களம் சொல்லப் படுகிறது. சிதம்பரத்திற்கு அருகேயே அமைந்துள்ளது. (இன்னும் பார்க்காத கோயில்களில் இதுவும்), ஈசனின் பெயரே பாசுபத நாதர் என்பதாகும். அம்பிகை சகல நற்குணங்களையும் கொண்டு சற்குணாம்பிகை என அழைக்கப் படுகிறாள். இந்தக் கோயிலில் இந்தத் தல புராணத்தை விளக்கும் சிற்பங்களைக் காணலாம் எனத் தெரிய வருகிறது. பாசுபத நாதர் இடக்கையில் வில்லை ஏந்தியும், வலக்கையில் அம்பை ஏந்தியும், ஜடாமகுடம் தரித்து, கழுத்தில் வேடுவர்களுக்கே உரிய கொம்பு மாலையுடனும், காலில் வீரக் கழலுடனும் காட்சி அளிப்பதாய் அறிகிறோம். இதைத் தவிர பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள திருவேட்டக்குடி என்னும் ஊரிலும் அர்ஜுனனுக்கு அருள் புரிந்த தலமாய்க் கருதப் படுகிறது.

இதைத் தவிரக் கிராதமூர்த்தியை நாம் காண்பது கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோயிலில் தான். ஆனால் அர்ஜுனனுக்கும் இங்கே காண்பவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மஹாபிரளயத்தின்போது படைப்பதற்குரிய மஹாவித்துக்களை வைத்த குடத்தை அமுதத்தால் நிறைத்து மிதக்க விட அது மிதந்து ,மிதந்து கும்பகோணம் இருக்குமிடத்தை அடைகிறது. மீண்டும் சிருஷ்டியைத் தொடங்க வேண்டி ஈசன் கிராதமூர்த்தியாக வந்து தன் அம்பால் அமுதக்குடத்தை உடைக்கிறார். உடைந்த குடத்து அமுதம் மணலில் கலக்க, அங்கே சிவலிங்கம் தோன்ற அதைப் பூஜிக்கிறார் பிரம்மா. சிருஷ்டி ஆரம்பம் ஆனது. கும்பகோணத்தில் குடம் வந்து சேர்ந்ததாலேயே இந்த ஊருக்குக் குடமூக்கு என்று பெயர் ஏற்பட்டதாகவும், குடம் வைக்கப் பட்டிருந்த இடம் குடவாயில் என அழைக்கப் படுவதாயும் தெரிந்து கொள்கிறோம். வேடுவனாகிய ஈசன் பாணங்களைத் தொடுத்த இடம் பாணாதுறை என இப்போதும் அழைக்கப் படுகிறது. இந்தத் தலத்தின் ஆதிமூர்த்தியாகக் கிராத மூர்த்தியே சொல்லப் படுகிறார்.

Monday, June 27, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, கிராத மூர்த்தி!


அடுத்து நாம் காணப் போவது கிராத மூர்த்தியை. கிராதன் என்ற சொல்லிற்கு வேடன் எனப் பொருள். ஈசன் வேடனாகக் காட்சி அளித்த கோலத்தையே கிராத மூர்த்தி அல்லது திருவேடீசர் என்கின்றனர். இது மஹாபாரதக் கதையுடன் தொடர்பு கொண்டது. பாண்டவர்களின் வனவாசம் முடிந்து, அக்ஞாத வாசமும் முடிந்தாலும் கெளரவர்களுக்குப் பாண்டவர்களின் உரிமையைத் திரும்பக் கொடுக்க மனம் வரவில்லை. கண்டிப்பாய் மறுத்தனர். துரியோதனனின் இந்தப் பிடிவாதத்தால் தவிர்க்க இயலாது போர் உருவாகும் என்பதைப் பாண்டவர்களுக்குக் கிருஷ்ண பரமாத்மா எடுத்துச் சொன்னார். ஆகவே போருக்குத் தயாராகும்படி அறிவுறுத்தினார். முக்கியமாய் வில்லில் சிறந்த அர்ஜுனனை சர்வ வல்லமை பெற்ற சர்வேசுவரனிடமிருந்து இன்னும் அதிக வல்லமை பெற்று வர அறிவுறுத்தினார். ஈசனின் பாசுபத அஸ்திரத்தைத் தவம் இருந்து பெற்று வர வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்.

பாசுபத அஸ்திரத்தை ஈசனிடமிருந்து பெற்று வரும் வழிகளையும் விளக்கிக் கூறினார். அதன்படி திருக்கைலையில் இந்திரநீல பர்வதத்தின் சாரலில் அர்ஜுனன் நான்கு பக்கமும் அக்னியை மூட்டி ஆகாயத்தின் சூரியனை ஐந்தாவது அக்னியாக மனதில் வரித்துக் கொண்டு, கடும் தவம் செய்தான். பஞ்ச அக்னியின் நடுவே அவன் செய்த தவத்தால் ஏற்பட்ட உக்கிரம் அதிகமாக, அதிகமாக அர்ஜுனனிடமிருந்து ஜ்வாலைகள் வெளிப்பட்டன. ரிஷி, முனிவர்களால் அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. ஈசனிடம் சென்று அர்ஜுனனின் தவத்தைப் பற்றிக் கூறினார்கள். ஈசனுக்குத் தெரியாதா? எனினும் அர்ஜுனனுக்கு அவ்வளவு எளிதில் பாசுபத அஸ்திரத்தைக் கொடுக்க முடியுமா? அவனைச் சோதனை செய்ய எண்ணினார் சர்வேசன். ஆகவே வில்லையும், அம்புகளையும் ஏந்தி ஒரு வேடனாக மாறினார். கூடவே வேட்டுவச்சியாக அம்பிகையும் உடன் வர இந்திர நீல பர்வதச் சாரலில் அர்ஜுனன் தவம் செய்யும் இடத்திற்கு அருகே வந்து சேர்ந்தனர். அப்போது அங்கே ஒரு காட்டுப் பன்றி ஒன்று அர்ஜுனன் மேல் பாயத் தயாராக ஓடோடி வந்தது.

பன்றி வேறு யாருமல்ல; மூகாசுரன் என்னும் அசுரன். அர்ஜுனனை எவ்வாறேனும் கொன்றுவிட்டால் பாண்டவர்களின் பலத்தை ஒடுக்கலாம் என எண்ணிப் பன்றி வடிவெடுத்துக் கொல்ல வந்தான். காட்டுப் பன்றியின் ஹூங்காரத்தால் தவம் கலைந்த அர்ஜுனன் கண் விழித்தான்; பன்றியின் மீது ஓர் அம்பைத் தொடுத்தான். அதே கணம் அங்கே வந்த ஈசனும் தன் வில்லில் இருந்து ஒரு பாணத்தைத் தொடுக்க, பன்றி இறந்து விழுந்தது. அதன் உடலில் இரு அம்புகள் இருப்பதைக் கண்ட அர்ஜுனனுக்கு வியப்பு. நிமிர்ந்து பார்த்தபோது வேட்டுவச்சி ஒருவளோடு ஒரு வேடன் நிற்பதைக் கண்டான்.

“நீ யாரப்பா வேடா? நான் அம்பெய்து வீழ்த்திய பன்றியை நீயும் ஏன் மீண்டும் இரண்டாம் முறையாக அம்பெய்து வீழ்த்தினாய்?” அர்ஜுனன் கேட்டான் வேடுவனாகிய ஈசனிடம்.

ஈசன், “ஆஹா, இது என்ன புதுக் கதை! நான் யாராய் இருந்தால் உனக்கென்னப்பா? நீ இங்கே இந்த நடுக்காட்டில் என்ன செய்கிறாய்? தவம் செய்கிறாயா?? தவம் செய்பவனுக்கு வேட்டை எதற்கு? இந்தப் பன்றி என் அம்பால் விழுந்தது. இது எனக்கே சொந்தம்; உனக்கல்ல. நீ பாட்டுக்குத் தவம் செய்ய மீண்டும் செல்வாய்!” என்றார் ஈசன்.


படம் சரியாக் கிடைக்கவில்லை. :(

Saturday, June 25, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அர்த்தநாரீசுவரர்


இறைவன் படைத்த அனைத்து உயிர்களிலும் இருமைத் தத்துவம் நீக்கமற நிறைந்துள்ளது. எல்லா உயிர்களிலும் ஆண், பெண் என இரு பாலினமும் உண்டு. இவை தனித்தனியே பிரிந்திருந்தால் உலகு வளர்ச்சியுறாது என்பதாலேயே இரண்டு ஒன்றுபட்டு வாழ்கின்றன. பஞ்ச பூதங்களிலும் இந்த இருமை உண்டு. இருள்-ஒளி, தோற்றம்-அழிவு, ஆண்-பெண் எனப் படைப்பின் மொத்த வடிவாய்த் திகழ்வதுவே அர்த்தநாரீசுவர வடிவம். இவ்வுலகின் அனைத்துப் பொருட்களையும் இயக்கும் சக்தியே அன்னை என்றால் அதன் அமைதியான வடிவே சிவம் ஆகும். சிவம் அமைதி, சும்மா இருத்தல் என்று கொண்டால், சக்தி ஆற்றலையும் இயக்கத்தையும் குறிக்கும். அந்த சக்தி தனியே எவ்வாறு இயங்கும்? சிவத்தோடு சேர்ந்தால் அல்லவோ இயக்கம் வரும்? ஆகவே அர்த்தநாரீசுவரராக இணைந்து சிவமும், சக்தியும் ஒன்றாகக் காண்பதையே சிவசக்தி ஐக்கியம் என்கிறோம்.

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்

சங்க இலக்கியமான புறநானூற்றில் மேற்கண்டவாறு ஈசனின் அர்த்தநாரீசுவர வடிவைச் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. ஐங்குறு நூற்றிலும் கூறப்பட்டிருப்பதாய்த் தெரிய வருகிறது. இளங்கோவடிகளும் அர்த்தநாரீசுவர வடிவைப் பற்றிக் கூறியுள்ளார். முற்காலச் சோழர்களால் கட்டப் பட்ட சிவன் கோயில்களின் கருவறையின் மேற்குக் கோஷ்டத்தில் அர்த்தநாரீசுவர வடிவே இருந்து வந்ததாயும் இதுவே பின்னர் மாறி விட்டதாயும் தெரிய வருகிறது. இந்த அர்த்தநாரீசுவர வடிவை உற்சவக் கோலத்தில் திருவண்ணாமலையில் கர்ப்பகிரஹத்தை ஒட்டிய பிரஹாரத்தில் தனி சந்நிதியில் தரிசிக்க முடியும். இவரே திருக்கார்த்திகைத் தீபத்திருநாளன்று பக்தர்களுக்கு ஆடிக்கொண்டே வந்து தரிசனம் கொடுப்பார்.

பல்வேறு சிற்பசாஸ்திர நூல்களிலே குறிப்பிடப் படும் இந்த அர்த்தநாரீசுவர வடிவின் வலப்பக்கம் ஈசனும், இடப்பக்கம் அன்னையும் காணப்படுவாள். அதற்கேற்ப ஆடை அலங்காரமும் காண முடியும். வலப்பக்கம் ஜடாமுடி, மகுடம் மற்றும் பிறைச்சந்திரனும், இடப்பக்கம் அம்பிகையின் தலையில் முடிந்த அழகிய கூந்தல் அல்லது மகுடம் காணப்படும். ஈசனாய்த் தோற்றமளிக்கும் வடிவின் வலக்காதில் மகர குண்டலம், அல்லது சர்ப்ப குண்டலம், வலது நெற்றியில் ஈசனின் நெற்றிக்கண்ணின் பாதியும் காண முடியும். இடப்பக்கம் அம்பிகையின் காதில் குண்டலமும், மை எழுதிய நீண்ட கண்களும், நெற்றியில் குங்குமப் பொட்டின் பாதி பாகமும் காண முடியும். வலப்பக்கம் புலித்தோல் ஆடையணிந்து வலக்கரங்களில் ஒன்று அபய ஹஸ்தம் காட்டிய வண்ணமும் மற்றொன்று மழுவை ஏந்தியும் காணப்படும். சில கோலங்களில் வரத ஹஸ்தமும் சூலமும் ஏந்தியும் காணலாம். இடக்கரத்தில் அம்பிகையானவள் நீலோத்பல மலரை ஏந்தியோ அல்லது கிளியை ஏந்தியோ காணப்படுவாள். இடப்பக்கம் மாலைகள், நவரத்ன அணிகலன்கள் எனப் பெண்களுக்கே உரித்தான ஆபரணங்களுடன் காட்சி அளிக்க, வலப்பக்கமோ சர்ப்பத்தை இடையில் அணிந்து காணப்படுவார்.

ஒன்றான இறைவனே இரு வேறுபட்ட தன்மைகளோடு காட்சி அளிக்கிறான். ஏனெனில் உலக உயிர்கள் அனைத்தும் தம்முள் கூடிக் களித்து மகிழ்ந்து நல்வாழ்வு வாழவேண்டுமானால் சிவமும், சக்தியும் இணைய வேண்டும். தன்னந்தனியே இருந்தால் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை; நிறைவும் கிடைக்காது. ஒன்றுபட்டாலே நிறைவும் ஏற்படும்; வாழ்வின் அர்த்தமும் இருக்கும். ஆனால் இருவரில் எவர் உயர்வு? எவர் தாழ்வு? அந்தப் பேதங்கள் இருக்கலாகாது என்பதன் பொருளே இந்த அர்த்தநாரீசுவரக் கோலம். இருவருமே ஒருவருக்கொருவர் சரிசமமாகவும், துணையாகவும், தங்களுக்குள் உள்ள பாலின பேதத்தையும் மற்ற பேதங்களையும் மறந்து இயங்கச் செய்ய வைப்பதே அர்த்தநாரீசுவரக் கோலத்தின் உண்மையான தத்துவம். கணவன், மனைவிக்குள் ஏற்படும் பேதங்களைப் போக்க அர்த்தநாரீசுவர வழிபாடு சிறந்தது என ஆன்றோர் கருத்து.

திருச்செங்கோட்டில் அர்த்தநாரீசுவரரை அர்ச்சிக்கையில் ஒரு நாமம் அம்பிகையின் நாமமாகவும், மற்றொரு நாமம் ஈசனின் திருநாமமாகவும் அர்ச்சிக்கப் படுவதாய்க் கேள்விப் படுகிறோம்.அங்கு மூலவரான அர்த்தநாரீசுவரர் சிற்பம் கற்சிலையோ, சுயம்புவாய்த் தோன்றியதோ அல்ல என்றும், சித்தர்களால் வெண்பாஷாணம் என்னும் மருந்துகளைக் கூட்டிச் செய்யப் பட்டது என்றும் தெரியவருகிறது. இந்தத் திருமேனியின் அபிஷேஹ நீர்ப் பிரசாதம் தோல் வியாதிகளுக்குச் சிறந்ததொன்று எனவும் கூறப் படுகிறது. ஈசனின் பாதத்தில் இருந்தும் சுனைநீர் தீர்த்தமாகக் கொடுக்கப் படுவதாயும் அறிகின்றோம்.

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்,
தான் பாதி உமை பாதி என்றானவன்.
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்.

இனி அடுத்துக் காணப் போவது கிராத மூர்த்தி.

Friday, June 24, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, அர்த்தநாரி


சிறந்த சிவபக்தர்களில் ஒருவரான பிருங்கி முனிவர் தினந்தோறும் ஈசனை வலம் வந்து வணங்கியபின்னரே உணவு உண்ணும் வழக்கமுள்ளவர். ஆனால் ஈசனை மட்டுமே வலம் வந்து வணங்குவாரே தவிர, அருகேயே இருக்கும் அன்னையை வணங்கவே மாட்டார். ஒருநாள் இரண்டு நாள் எனப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அன்னைக்கு ஒருநாளும் அவர் தன்னை வணங்கவே மாட்டார் என்பதைப் புரிந்து கொண்டதும், வருத்தமும் கோபமும் வந்ததாம். ஆஹா, வெறும் சிவம் மட்டுமே அவன் இயக்கத்திற்குப் போதுமா? சக்தி தேவையில்லையா? அன்னை பிருங்கி முனிவரின் உடலின் உள்ள சக்தியின் கூறான, ரத்தம், தசை போன்றவற்றை நீக்கி வெறும் எலும்புக்கூடாய் மாற்றினாள். ஆனால் பிருங்கி முனிவரோ அப்போதும் ஈசன் ஒருவனே தன் இறைவன். இதில் எந்த மாற்றமும் இல்லை; சிவன் ஒருவனே பரம்பொருள், என்றே வாழ்ந்து வந்தார். உடலின் இயக்கத்திற்குத் தேவையான சக்தியெல்லாம் போய்விட்டதும் அவரால் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. ஈசனை வலம் வராமல் எப்படி உணவு உண்ணுவது? தவித்துப் போனார். ஆனால் அந்த நிலையிலும் ஈசனை வணங்கினார் அவர். ஈசனோ அவருடைய பக்தியைக் கண்டு மனம் இரங்கி அவருக்கு ஊன்றுகோல் ஒன்றைக் கொடுத்து உதவினான்.

அப்படியும் பிருங்கி முனிவர் அன்னையை வணங்கவே இல்லை. அன்னை மனம் வருந்தித் தானும் ஈசனுடன் அவர் உடலிலேயே இடம்பெறவேண்டும் என்னும் ஆசையைத் தெரிவித்தாள். ஈசனும் அதற்கு அவளைத் தவமிருக்கச் சொன்னார். அவ்விதமே அன்னையான பார்வதி தேவி கடுமையாகத் தவம் இருந்தாள். அவர் உடலின் இடப்பாகத்தைப் பெற்றாள். அம்மையும், அப்பனும் சேர்ந்திருக்கும் அந்தக் கோலமே அர்த்தநாரீசுரக் கோலம் ஆகும். கொங்கு நாட்டின் புகழ்பெற்ற தலமான திருச்செங்கோடு அர்த்தநாரீசுரத் திருமேனியை மூலவராய்க் கொண்ட தலங்களுள்முதன்மையான தலம் ஆகும். கொடிமாடச் செங்கன்னூர் என்னும் பெயர் கொண்ட இந்தத் தலம் அழகிய மலைக்கோயிலாக அமைந்துள்ளது. ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் ஏற்பட்ட சண்டையில் மேருமலையானது தூக்கி எறியப் பட்டு இங்கே விழுந்த துண்டு சிவந்த நிறத்தில் காணப்பட்டதால் செங்கோடு எனப் பெயர் பெற்றதாய்க் கூறுவார்கள். இங்கே மலையே லிங்கம் என்பதால் மலைக்கு எதிரே நந்தி காணப்படும். இந்தத் தலத்தின் மலையில் ஏறப் படிகள் 1200 இருப்பதாய்த் தெரிய வருகிறது. இங்கே இன்னமும் சென்று தரிசனம் செய்ய இயலவில்லை. மலையின் உயரம் சுமார் இரண்டாயிரம் அடிகள் எனத் தெரிய வருகிறது. அன்னையின் பெயர் பாகம்பிரியாள் எனப்படும். ஈசனின் இடப்பாகத்தை எந்நாளும் பிரியாமல் இருப்பதை இது குறிக்கும். கணவனின் இதயத்தில் இருக்க வேண்டியவள் மனைவியே என்பதற்கேற்ப இதயம் இருக்கும் இடப்பகுதியில் அன்னை இடம் பெற்றாள். இதைத் தவிரவும் திருவண்ணாமலையிலும் அன்னை இடப்பாகம் பெற்றதையே திருக்கார்த்திகைப் பெருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது.
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே//

அபிராமி பட்டர் அம்பிகை இடம் கொண்டு சிறந்ததை மேற்கண்ட வண்ணம் பாடித் துதிக்கிறார்.

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே//

அன்னையவள் இடப்பாகம் கொண்டு சிறந்து இருப்பதோடல்லாமல் அண்டமெல்லாம் பழிக்கும்படி பரத்திற்கும் மேல் பரதெய்வமாகச் சிறந்து விளங்குவதையும் இந்தப் பாடல் குறிக்கும். அர்த்த நாரீசுவரரை மேலும் பார்ப்போம்.

Sunday, May 29, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! சங்கர நாராயணர்!

தமிழ்நாட்டின் சங்கரன் கோயிலைத் தவிர கர்நாடகாவிலும் ஸ்ரீசங்கரநாராயணர் கோயில் ஒன்று உண்டு. கர்நாடகா மாநிலம் தாவன்கெரே மாவட்டத்தில் ஹோஸ்பெட் அருகே துங்கபத்ரா நதிக்கரையில் உள்ளது ஹரிஹர் என்னும் ஸ்தலம். பெங்களூரில் இருந்து சுமார் 300கி.மீட்டர் தூரத்திலுள்ள இத்தலத்தில் மூலவர் ஸ்ரீசங்கரநாராயணராய்க் காட்சி அளிக்கிறார். சிவன் காட்சி தரும் வலப்பக்கம் உமை அன்னையும், திருமால் காட்சி அளிக்கும் இடப்பக்கம் ஸ்ரீலக்ஷ்மி தேவியும் இடம் பெற்றுள்ளனர். இந்தக் கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னர்களால் கட்டப்பட்டது. இதைக் கூஹாரண்யம் என அழைத்ததாய்க் கேள்விப் படுகிறோம். இதைக் குறித்த ஒரு தலபுராணக் கதை கீழே.


கூஹாசுரன் கடும் தவத்தால் எவராலும் வெல்ல முடியாத வரங்களைப் பெற்று அனைவரையும் துன்புறுத்த ஆரம்பித்தான். இவனை சம்ஹாரம் செய்ய வேண்டி விஷ்ணுவோடு இணைந்த வடிவாக தோன்றி அசுரனை அழித்தாராம் ஈசன். ஆகவே இந்த ஊருக்கே ஹரிஹர் என்ற பெயர் ஏற்பட்டதாய்ச் சொல்கின்றனர். தக்ஷிண கைலாயம் எனப் பெயர் பெற்றிருக்கிறது இந்த ஊர். அதோடு சிவமோகா எனப்படும்ஷிமோகாவுக்கு அருகிலுள்ள கூடலி என்னும் ஊரில் துங்காவும் பத்ராவும் சங்கமம் ஆவதையும் துங்கை திருமாலின் அம்சம் எனவும் பத்ரா ஈசனின் அம்சம் எனவும் கூறுகின்றனர். சங்கரநாராயண அம்சமாகத் தோன்றும் திருமேனியில் வலப்பக்கம் சிவனாய்க் காட்சி அளிக்கும் பாகத்தில் முகம் நெற்றிக்கண்ணில் பாதியைக் கொண்டு உக்கிரமாயும், இடப்பக்கம் உள்ள திருமாலின் முகம் அதிசுந்தரமாக சாந்தமாகவும் காட்சி அளிக்கும். வலக்கரமோ மழுவைத் தாங்கியும், இடக்கரம் சங்கு, சக்கரத்தோடும் திகழும், அதே நேரம் சிவ பாகம் புலித்தோலை உடுத்து வெண்ணிறமாகவும், விஷ்ணு பாகம் கருநீல நிறத்தோடு மஞ்சள் பட்டாடை உடுத்தியும் காணப்படும்.

முன்னைப் பழம்பொருளுக்கும், மூத்த பழம்பொருளான பரம்பொருளுக்கு ஒரே திருமேனியில் இரண்டு உருவம் இருக்கின்றன. ஈசனிடமிருந்து அவரது அருளாய் வெளிப்படும் சக்தியின் புருஷாகார வடிவையே திருமால் என்கிறோம். ஆகவே சங்கரநாராயணர் உருவின் சிறப்பே ஹரியும், சிவனும் ஒன்று என்பதைக் குறிப்பது தான். இந்தத் திருவடிவின் வலப்பக்கம் வாகனமாய் ரிஷபமும், இடப்பக்கம் கருடனும் காணப்படும். இந்தச் சங்கரநாராயணர் திருக்கோலத்தைத் திருஞான சம்பந்தர் , “பாதியா உடல் கொண்டது மாலையே! மாலும் ஓர் பாகம் உடையார்” என்றெல்லாம் போற்றிப்பாட, அப்பரோ, “திருமாலும் ஓர் பாகத்தின் குடமாடி இடமாகக் கொண்டார்” எனப் போற்றுகிறார். ஆழ்வார்களின் திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார் போன்றோர் இந்த அரிய திருக்கோலத்தைப் போற்றிப் பாடி மகிழ்ந்திருக்கின்றனர்.


திருமங்கையாழ்வார், “பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து”, என ஆரம்பித்தும், மலைமங்கை தன் பங்கனை பங்கில் வைத்துகந்தான்”, என்றும் பாட, பேயாழ்வாரோ, திருவேங்கடத்தின் பெருமானைச் சங்கரநாராயணராய்க் கண்டு மகிழ்ந்திருக்கிறார்.

“தாழ் சடையும் நீள்முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால்-சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து.”

என்று கூறுகிறார் பேயாழ்வார்.

Wednesday, May 11, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! சங்கரநாராயணர்!

உமா மகேசருக்கு அடுத்து சங்கரநாராயணரைப் பார்க்கலாம். அரியும், சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு என்பது ஒரு வழக்கு. அது போல் சிவன், விஷ்ணு என்பதெல்லாம் நம் செளகரியத்திற்காகத் தான். ஒரே அம்மாவே எத்தனை அவதாரங்கள் எடுக்கிறாள்? அவள் தாய், தந்தையருக்கு மகள், சகோதர, சகோதரிகளுக்கு சகோதரி, மாமியார், மாமனாருக்கு மருமகள், கணவனுக்கு மனைவி, குழந்தைகளுக்குத் தாய் என எத்தனை பெயர் அவளுக்கு? அப்படி எல்லாம் வல்ல பரம்பொருளும் ஒவ்வொரு சமயங்களில் ஒவ்வொரு பெயருடன் காணப்படுகிறது. என்றாலும் இதிலும் பேதங்கள் பார்க்கிறவர்கள், கற்பிக்கின்றவர்கள் உண்டே! அப்படித் தான் சங்கனுக்கும், பதுமனுக்கும் தோன்றியதாம். இவ்வுலகத்துப் பிரஜைகளுக்கெல்லாம் பிரஜாபதியான காச்யபரின் நாக வம்சத்துப் பிள்ளைகளான வாசுகி, ஆதிசேஷன் இருவரும் முறையே சிவனின் ஆபரணமாகவும், விஷ்ணுவின் படுக்கையாகவும் ஆகும் பேறைப் பெற்றனர். இவர்களின் வழியே வந்த அஷ்டமாநாகங்களில் இருவரான சங்கனுக்கும், பதுமனுக்கும் சகல சாஸ்திரங்களிலும் பாண்டித்தியமும், பரிச்சயமும் இருந்தாலும், சங்கனுக்கு சிவனிடமும், பதுமனுக்கு விஷ்ணுவிடமும் ஈடுபாடு அதிகம் இருந்தது. அதற்கேற்ப வாசுகி மூலம் சிவதீக்ஷை பெற்றான் சங்கன், ஆதிசேஷன் மூலம், நாராயண மந்திர உபதேசம் பெற்றான் பதுமன்.

ஆனாலும் இருவரும் தங்கள் தெய்வம் தான் உயர்ந்தது என்ற எண்ணத்திலேயே இருந்து வந்தார்கள். இது குறித்துப் பலரிடமும் கருத்துக் கேட்டனர். யாராலும் தெள்ளத் தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை. ஒருவர் சிவனைப் பரம்பொருள் என்றால் அதை பதுமன் ஒத்துக்கொள்ள மாட்டான், ஒருவர் விஷ்ணுவைப் பரம்பொருள் என்றால் அதை சங்கன் ஏற்க மறுத்தான். ஆகவே இருவரும் தேவர்கள் தலைவன் ஆன இந்திரனிடம் போய்த் தங்கள் வழக்கை முன் வைத்தனர். இந்திரனுக்கும் இந்த வழக்கைத் தீர்க்க முடியாமல் தங்கள் குருவை நாட, அவர் கூறினார்: இருவரும் ஒருவரே. ஈசன் தன் மேனியின் இடப்பாகத்தில் விஷ்ணுவுக்கும் இடம் அளித்துள்ளார்; இந்த வடிவைக் குறித்த விளக்கத்தை உமாதேவிக்கும் கூறி அருளினார். இது ஞானம், செல்வம் இரண்டையும் தரும் வடிவம் எனக் கூறி உள்ளார். அன்னையானவள் அந்த வடிவைக் காண விரும்ப, கடும் தவம் இருந்தாலொழிய இத்தகையதொரு அற்புதக் காட்சியைக் காண முடியாது என ஈசன் கூறினார். அன்னையும் பூலோகத்தின் தென்பாகத்தில் பொதியமலைச்சாரலில் உள்ள புன்னை வனம் ஒன்றுக்குச் சென்று தவம் இருக்கலானாள். அங்கே தேவர்கள் அனைவரும் மரங்களாக மாறி வந்து அன்னையின் வழிபாட்டுக்கும், தவத்துக்கும் தேவையான பூக்கள், பழங்கள், தேன் போன்றவற்றைக் கொடுக்க தேவலோகத்து மாந்தர்களோ பசுக்களாக மாறிப் பாலைச் சொரிந்தனர். அக்னி விளக்காக மாற, வாயு தன் இனிமையான காற்றினால் அந்த இடத்தைச் சுத்தம் செய்து கொடுத்தான்.

கடும் தவத்தின் பின்னர் அன்னைக்கு ஒரு ஆடிமாதப் பெளர்ணமி நன்னாளில் ஈசன் சங்கரநாராயணராகக் காட்சி அளித்தார். நீங்களும் அத்தகைய தவம் இருந்தால் அந்தக் காட்சியைக் காணலாம். என்று தேவகுரு சங்கனுக்கும், பதுமனுக்கும் எடுத்துக் கூறினார். இருவரும் புன்னைவனம் வந்து தவம் இருந்தனர். தவம் இருந்த அவர்களுக்கு ஈசன் சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார். வலப்பாகம் முழுதும் சிவவடிவிலே தலையிலே கங்கையும் சந்திரனும் காட்சி அளிக்க, காதில் நாகாபரணத்தோடும், நெற்றியின் ஒரு பாதியில் திருநீறும், கையில் மழுவை ஏந்திய வண்ணம், கொன்றைமலர் சூடிக்கொண்டு, பொன்னாலாகிய பூணூல் தரித்துக்கொண்டு, அரையில் புலிக்கச்சையுடன், காலில் நாகாபரணமான வீரக் கழலோடும்

இடப்பாகத்தில் நெற்றியில் நீலமணிக் கஸ்தூரிப் பொட்டும், சிரசில் ரத்தினக் கிரீடத்துடனும், காதில் அழகின மீன்வடிவ மகரகுண்டலத்தோடும், கையில் சங்கை ஏந்திக்கொண்டும், துளசிதளங்களால் ஆன மாலை தரித்துக்கொண்டும், இடுப்பில் அழகிய மஞ்சள் வண்ணப் பட்டுப் பீதாம்பரத்தோடும், காலின் பொன்னால் ஆன வீரக் கழலோடும் அழகிய கோலத்தில் இளமுறுவல் ததும்பக் காட்சி அளிக்கிறார்.