எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, July 05, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! திருச்செந்தூர்! 2

இந்தக் கோயிலின் அமைப்பு ஓம் வடிவத்தினால் ஆனது என்று சொல்லுவார்கள். பிள்ளையார் சந்நதி, வள்ளி, தேவசேனா சந்நதி, திருமால் சந்நதி எல்லாம் சேர்ந்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்ற எழுத்தைப் போல் வரும் என்று சொல்கின்றனர்.

சூரனை சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூர் எனப் படுகிறது. அதிக தெய்வபக்தி உள்ளவனே சூரபத்மன். பொதுவாக அரக்கர்கள் என இவர்களைக் குறிப்பிடுவதின் காரணமே, தம் தெய்வபக்தியையும், படித்திருக்கும் விசாலமான படிப்பையும், செய்திருக்கும் தவங்களையும், அதனால் அடைந்திருக்கும் அதி விசேஷமான வரங்களையும் ஆக்கபூர்வமாய்ப் பயன்படுத்தாமல், மக்களுக்குத் துன்பம் இழைக்கும் வழியிலேயே செலவிடுவதே காரணம். அதீதமான தெய்வசக்தியைப் பெற்ற சூரபத்மன் அந்தச் சக்தியின் உதவியால் மூன்று உலகையும் ஆண்டு வந்தான். ஆனால் ஆணவம் மிகக் கொண்டு அழிவுச் செயல்களைச் செய்ய ஆரம்பித்து மக்களைத் துன்புறுத்தினான். இந்தச் செயல்களை அழித்து சூரனை நல்வழிப்படுத்தவே கந்தன் திருஅவதாரம்.

சூரனின் சகோதரர்களை ஒழித்த முருகக் கடவுள் சூரனுடன் போர் செய்தார். முருகன் = அருள் என்றால் சூரன்= இருள், முருகன்= கருணை என்றால் சூரன்= கொடுமை, முருகன்= அறிவு என்றால் சூரன் = அறியாமை என்னும் மருள். சூரனின் ஒரு பாதி "நான்" மறுபாதி "எனது" இந்த இரண்டையும் கொண்ட சூரன் மாமரமாக மாறிக் கடலடியில் தலைகீழாக நின்று முருகனை ஏமாற்ற நினைத்தான். ஆனால் அவனால் முடியலை. கந்தனின் வெற்றிவேல், சொன்னதைச் செய்யும் தீரவேல் அந்த மரத்தை இருபகுதியாகப் பிளந்தது. ஒரு பாகம் ஆண்மயிலாகவும், மற்றொரு பாகம் சேவலாகவும் மாற்றி முருகன் ஆண்மயிலைத் தனக்கு வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் வைத்துக் கொண்டார்.

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கடலில் நீராடிவிட்டுப் பின்னர் அங்கே இருக்கும் நாழிக்கிணறு என்றழைக்கப் படும் ஒரு புண்ணிய தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். இந்த நாழிக்கிணறு ஏழு அடி ஆழமே உள்ளது எனவும், எப்போதும் இதில் நீர் ஊறிக் கொண்டே இருக்கும் எனவும் சொல்கின்றனர். சூரனோடு போரிட சுப்ரமணியர் வந்தபோது அவருடன் போரிட்ட படைவீரர்கள் தாகம் தணிப்பதற்காக முருகன் கடலோரத்தில் இந்தக் கிணற்றைத் தோற்றுவித்தார் என்றும் அதனாலே இந்தத் தண்ணீர் சுவையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருப்பதாகச் சொல்கின்றனர். இந்தக் கிணற்றுக்கு ஸ்கந்த புஷ்கரணி என்ற பெயரும் உண்டு.வள்ளி ஒளிந்திருந்ததாகச் சொல்லப் படும் வள்ளி குகையும் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. அதுக்குத் தனியாக் கட்டணம் செலுத்தணும். உள்ளே செல்லுவது கொஞ்சம் கஷ்டம் தான். மெதுவா உட்கார்ந்து உடலை வளைத்து நெளித்தே போகணும். கழுத்து பிரச்னை என் கணவருக்கு அதிகமா இருந்ததால் கொஞ்சம் யோசிச்சுட்டுப் போகவேண்டாம்னு முடிவெடுத்தோம். ஏற்கெனவே பார்த்தாலும் திரும்பிப் பார்க்க ஆசைதான். ஆனால் அந்தச் சமயம் அவருக்குப் பிரச்னை அதிகமா இருந்தது. நாழிக்கிணற்றின் அருகே நெருங்கவே முடியலை. கூட வந்தவர் கிட்டே சொல்லிக் கொஞ்சம் நீர் கொண்டுவரச் செய்து மேலே தெளித்துக் கொண்டோம். அவ்வளவே முடிந்தது. கோயிலுக்குள் நுழைய ஷண்முகவிலாசம் மண்டபத்தைக் கடந்தே செல்லவேண்டும். அங்கே வெகு தூரத்தில் இருந்தும் வந்த பயணிகள் இளைப்பாறிக் கொள்ள வசதியாக இருக்கும்.


படங்கள் உதவி: திகழ்மிளிர். கேட்காமல் எடுத்ததுக்கு மன்னிக்கவும்.

Saturday, July 04, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! திருச்செந்தூர்!

திருக்குளந்தை தரிசனம் செய்யணும். பெருமாளைக் கொஞ்சம் நிற்கச் சொல்லிட்டு அவர் மருமகன் ஆன முருகனைப் பார்ப்போமா?? இப்போத் தானே முருகன் கோயில் கும்பாபிஷேஹம் ஆச்சு?? அதாங்க திருச்செந்தூரிலே! எங்க நவ திருப்பதிப் பயணத்தில் முதல்நாள் பயணத்தில் திருச்செந்தூர் போனோம்னு சொன்னேன் இல்லை. இப்போ திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேஹம் சென்ற வாரம் நடைபெற்றதை அனைவரும் அறிவார்கள். கும்பாபிஷேஹத்தை ஒட்டியே பதிவு எழுத நினைச்சும் பல்வேறு காரணங்களால் எழுத முடியவில்லை. தாமதமாகி விட்டது. அறுபடைவீடு என்று சொல்லப்படும் முருகனுக்குரிய படைவீடுகளில் இரண்டாம்படைவீடு திருச்செந்தூர் ஆகும். உண்மையில் இது ஆற்றுப்படை வீடு. ஆற்றுப் படுத்துதலே ஆற்றுப்படை என வழங்கப் பட்டு, நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் முருகனை நாயகனாய் வைத்து எழுதினார் என்பதையும் நாம் அறிவோம். இந்த இடத்தில் மனித மனத்தை ஆற்றுப்படுத்தி நல்வழியில் திருப்பி வீடு பேறு அடையச் செய்வதே ஆற்றுப்படையைக் குறிக்கும். யோக முறையில் நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களையும் முருகன் குடி கொண்டிருக்கும் ஆறு வீடுகளாய் எடுத்துக் கொண்டால், அவை நம்மை யோக முறையிலேயே ஆற்றுப்படுத்தி வீடுபேறு அடையச் செய்கின்றது. இவ்வகையில் அமைந்துள்ள இரண்டாம் ஆதாரமான சுவாதிஷ்டானத்துக்கு உரிய இரண்டாம் ஆற்றுப்படையான திருச்செந்தூரிலே சூரனை முருகன் சம்ஹாரம் செய்ததாகச் சொல்லப் படுகிறது. இந்தத் தலம் திருநெல்வேலியில் இருந்து 54 கிமீ தொலைவில் உள்ளது. கோபுரம் ஒன்பது தளங்களோடு 130 அடியில் அமைந்துள்ளது.

நக்கீரரின் திருமுருகாற்றுப்படை பற்றிய குறிப்புகளைக் கீழே காணலாம்.


2. திருச்சீர் அலைவாய்


வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையடு துயல்வரப்
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக் . . . .80

கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழில் மடிமார்
மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே . . . .90

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;ஒருமுகம்,
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே;ஒருமுகம்,
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே;ஒருமுகம்,
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே;ஒருமுகம் . .100

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியடு நகையமர்ந் தன்றே.
ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின்
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்

பன்னிரு கைகள்:

விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை;
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை;
அங்குசங் கடாவ ஒருகை, இருகை . . . .110

ஐயிரு வட்டமொடு எ·குவலந் திரிப்ப,
ஒருகை மார்பொடு விளங்க ஒருகை
ஒருகை தாரொடு பொலிய, ஒருகை
கீழ்வீழ் தொடியடு மீமிசைக்கொட்ப, ஒருகை
பாடின் படுமணி இரட்ட, ஒருகை
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட,
ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்ற,
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந் திசைப்ப, வால்வளை ஞரல, . . . .120

உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ,
விசும்பஆ றாக விரைசெலல் முன்னி,
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பேஅதான்று.



இந்தத் தலம் மற்ற முருகன் தலங்களைப் போலல்லாமல் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். திருச்சீரலைவாய் எனவும் அழைக்கப் பட்டது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் இந்தக் கோயிலைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஆகவே சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட கோயில் எனலாம். புறநானூற்றில் இந்தக் கோயிலை வெண்டலைப் புனரி அலைக்குடம், செந்தில் நெடுவேள் துறை என அழைக்கப் பட்டுள்ளது. முருகன் இங்கே ஆற்றுப் படுத்தப் பட்டு, சிவனையும் வழிபட்டதாகக் கந்தபுராணம் சொல்லுகின்றது. முருகன் வழிபட்ட சிவலிங்கம் மூலஸ்தானத்திற்குப் பின்னால் ஐந்து லிங்கங்களாக இருப்பதாகச் சொல்லுகின்றார்கள். எங்கே பார்க்கிறது?? கூட்டமோ கூட்டம்! சாதாரண நாட்களிலே வழிகிற கூட்டம். தரிசனம் கிடைச்சாலே அதிர்ஷ்டம்னு சொல்லணும். நாங்க போனது தைப்பூசம் சமயம் வேறே. முதல்முறை திருச்செந்தூர் போனது எண்பதுகளின் கடைசியில்.அப்போ எல்லாம் நான் பெரிய எழுத்தாளி ஆகப் போறது தெரியாததாலே பல விஷயங்களைத் தோண்டித் துருவிப் பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சுப் பார்த்தும் ,குறிச்செல்லாம் வச்சுக்கலை. இரண்டாம் முறையாகச் சென்றது தான் 2007-ம் வருஷம் இந்த நவ திருப்பதி, நவ கைலாயம் பயணத்தோடு சேர்ந்து. முதல்முறை முருகனை நன்கு பார்த்ததோடு இலை விபூதியும் தாராளமாய்க் கிடைச்சது. இப்போ இலை விபூதி கொடுப்பதை அரசு வாரம் ஒருநாளோ, இரண்டு நாளோ எனக் கட்டுப்பாடு செய்திருப்பதாகவும், அதுவும் அறநிலையத் துறை அலுவலகம் மூலமே வாங்க முடியும் எனவும் சொன்னார்கள். ரொம்ப ஏமாற்றம் மட்டுமில்லாமல் வருத்தமாகவும் இருந்தது. விபூதிக்குக் கூட அரசு அனுமதி கொடுக்கவேண்டி இருக்கேனு நினைச்சா வேதனை. எங்க வண்டி ஓட்டுநர் சிறப்புச் சீட்டு எடுத்தாலும் கூட்டத்திலே உள்ளே போகிறது கஷ்டம்னும், அங்கே உள்ள போத்திமார்கள் யாரையாவது பிடிச்சு, பணம் தரதாகச் சொல்லிப் பார்த்துட்டு வருமாறும் சொல்லவே, சரினு யாரையோ பிடிச்சோம். முகம் நினைவில் இல்லை. ஆனால் அவர் எங்களைத் திரும்பி வரும் கூட்டத்தில் எதிரிட்டு அழைத்துச் சென்றார். சரிதான், இன்னிக்கு அதோகதி தான் நம்ம பாடுனு நினைச்சேன். ஆனால் அந்தச் சுருக்கு வழியில் சீக்கிரம் மூலஸ்தானம் வந்துடுச்சு. போய் ஸ்வாமி தரிசனம் அவசரம் அவசரமா, மனசிலேயே நிக்காமல் பண்ணினோம்.