எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, December 24, 2012

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி!


வைகுண்ட ஏகாதசி குறித்து அனைவரும் அறிவோம். என்றாலும் தெரியாதவர்களுக்காக ஒரு சின்னக் குறிப்பு. நமக்கு ஒரு வருஷம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த நாளின் துவக்கம் தான் மார்கழி மாதம். அந்த மாதம் தேவர்களின் பிரம்ம முஹூர்த்த நேரம் ஆகும். ஆகவே மார்கழி மாதம் அதிகாலையில் நாம் இறைவனைத் துதிக்கிறோம். அது போலவே தென்பாகத்திலுள்ள பாற்கடலில் யோக நித்திரையில் இருக்கும் மஹாவிஷ்ணுவைத் தேவர்களும் துதிக்கின்றனர். அவர்கள் துதித்த நாளே வைகுண்ட ஏகாதசி நாள் எனச் சொல்லப் படுகிறது. அவர்களின் துதியால் மகிழ்ந்த மஹாவிஷ்ணு தம் யோக நித்திரையிலிருந்து எழுந்து வந்து அவர்களுக்குத் தரிசனம் கொடுத்தாராம். அந்த வாசல் வடக்கே அமைந்திருக்கும். அதுவே வைகுண்ட வாசல் திறந்து மஹாவிஷ்ணு வெளிவந்ததைக் குறிப்பிடும் வண்ணமே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் அன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்கிறது. இந்த ஏகாதசி வந்த விதத்தை அறிவோமா?

முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கு மிகவும் தொந்திரவு கொடுக்க யோக நித்திரையில் இருந்த மஹாவிஷ்ணுவின் மஹாசக்தியான ஏகாதசி என்பாள் வெளிவந்து அந்த முரனைக் கொன்றாள். கண் விழித்துப் பார்த்து அதிசயித்த மஹாவிஷ்ணு, தன் சக்தியான ஏகாதசியைக் கெளரவிக்கும் விதத்தில் இந்நாளில் விரதம் இருந்து ஏகாதசியைப் போற்றுவோருக்குச் சகல நன்மைகளும் கிடைக்கும் என வரமளித்தார். சக்தி விழிப்புடன் இருந்து சரியான நேரத்தில் செயலாற்றியதால் நாமும் நம் சக்தியைப் பயன்படுத்தி விழிப்புடன் (உடல் மட்டுமில்லாமல் ஆன்மிக விழிப்புடனும்) இருந்து விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஏகாதசிகள் ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும் வரும், தேய்பிறையிலும் வரும். வளர்பிறை ஏகாதசி 12, தேய்பிறை ஏகாதசி 12 மொத்தம் 24 என்றாலும் நாழிகைக்கணக்குகளினால் கூடுதலாக ஒரு ஏகாதசி நாள் வரும். ஆக வருஷத்துக்கு 25 ஏகாதசிகள்.

எட்டு வயதில் இருந்து எண்பது வயது வரஇ கடைப்பிடிக்கலாம் எனச்ச் சொல்லப் படும் இந்த ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்றே ஒரே வேளை உணவு உட்கொண்டு, அன்றிரவு பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். நாம் இருக்கும் விரதம் வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படும் மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதசி எனில் அன்று காலை சீக்கிரம் எழுந்து குளித்துக் கோயிலுக்குச் சென்று சொர்க்கவாசல் திறப்பையும், மஹாவிஷ்ணு சொர்க்க வாசல் வழியாக வெளிவருவதையும் பார்த்து வரலாம். அன்று முழுதும் பழங்கள், இளநீர் என்றே சாப்பிட வேண்டும். அரிசி, கோதுமை போன்றவற்றினால் ஆன உணவுகளை உட்கொள்ளக் கூடாது. இரவு முழுதும் கண் விழித்து ஹரி நாமம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று காலை சீக்கிரமாய் எழுந்து குளித்து, ஹரி நாமத்தைச் சொல்லிக் கொண்டே, சுண்டைக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றைப் பல்லில் படாமல் உட்கொண்டு பாரணை பண்ணி விரதத்தை முடிக்க வேண்டும். துவாதசி அன்று சீக்கிரம் உணவு உட்கொள்ள வேண்டும். இந்த உணவில் சுண்டைக்காய், அகத்திக்கீரை, நெல்லிக்காய் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும். விரதம் இருந்ததால் சூடான வயிறும் உடலும் குளுமை பெறுவதற்கும் ஜீரண சக்தியைச் சரியாக்குவதற்கும் இவை உதவும்.

மது, கைடபர்களை அழிக்கப் போரிட்ட விஷ்ணுவிடம் அவர்கள் பணிந்து வணங்கித் தங்களை வைகுண்டத்திலேயே இருக்கும் பாக்கியத்தைக் கேட்டதாகவும், அவ்வண்ணமே அவர்களுக்கு விஷ்ணு அருள் செய்ததாகவும், அப்போது அவர்கள் தங்களுக்குக் கிடைத்த இம்மாதிரியான கருணையை பூலோக வாசிகளுக்கும் காட்டுமாறும், வைகுண்டத்தில் எப்படி வடக்கு வாசல் வழியாக விஷ்ணு வெளி வந்து தேவர்களுக்குக் காட்சி கொடுத்தாரோ, அவ்வண்ணம் பூலோகத்தின் பெருமாள் கோயில்களில் அர்ச்சாவதாரமாக விஷ்ணு வெளி வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தர வேண்டும் என்றும், அவரை வடக்கு வாசல் வழியே வெளி வருகையில் தரிசிக்கும் பக்தர்களுக்கும், அவரோடு தொடர்ந்து வரும் பக்தர்களுக்கும், தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை நீக்கி அவர்களுக்கு முக்தியை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும் பூலோகத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்புக்கான காரணத்தைத் தெரிந்து கொள்கிறோம்.  இனி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி குறித்துப் பார்ப்போம். 

Tuesday, December 18, 2012

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வைகுண்ட ஏகாதசியும், அரையர் சேவையும்!


ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித்திருவிழா மிகவும் பிரபலம் ஆனதாகும்.   சிதம்பரத்தில் இதே மார்கழியில் எப்படி திருவாதிரைத் திருவிழா பிரபலமோ அதே போல் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா.  மார்கழி மாதத்தில் அமாவாசை கழிந்து வரும் சுக்லபக்ஷ ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி ஆகும்.  இவ்வருடம் கார்த்திகை மாதக் கடைசியில் அமாவாசை வந்ததால், மார்கழி மாதம் ஒன்பதாம் தேதியே வைகுண்ட ஏகாதசித் திருநாள் வருகிறது.  ஆகவே கார்த்திகை 28-ஆம் தேதியன்று இரவில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்னோட்டமாக கர்பகிரஹத்தில் திருநெடுந்தாண்டகம் ஆரம்பித்து நடைபெறும்.  பின்னர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சந்தனு மண்டபத்துக்கு எழுந்தருளுவார்.  அங்கேயும் திருநெடுந்தாண்டகம் அபிநயமும் வியாக்யானமும் நடைபெறும்.  இதை அரையர் சேவை என்பார்கள். 


இரு பகுதிகளாக நடைபெறும் திருநாளில் முதல் பத்து நாட்கள் பகல் பத்து என்றும், அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து என்றும் அழைக்கப்படும்.  முதல் திருநாளன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் கிளம்பி அர்ச்சுன மண்டபம் வந்தடைவார்.  இந்த மண்டபம் கிளி மண்டபத்தை ஒட்டி மேலே ஏறிச் சென்றால் வந்தடையும்.  துலுக்க நாச்சியார் சந்நிதி இங்கே தான் இருக்கிறது.  இங்கே நம்பெருமாள் சர்வாபரண பூஷிதராகக்  காட்சி கொடுப்பார்.  இவருக்கு முன்னே அரையர்கள் முதலில் நம்பெருமாளைப் பிரதக்ஷிணம் வந்து வணங்கி உத்தரவு பெற்றுக் கொண்டு பின்னர் அவர் எதிரே நின்று கொண்டு பாசுரங்கள் பாடி வியாக்யானமும் செய்வார்கள்.  முதலாயிரத்தில் பல்லாண்டு முதல் இரு பாசுரங்களும், அதற்கேற்ற அபிநயமும், வியாக்யானமும், பெரியாழ்வார் திருமொழியின் 212 பாசுரங்களும் பாடப்படும்.

இதைத் தவிரவும் மூலஸ்தானத்தில் மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து பெரிய பெருமாள் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கநாதர் முன்னிலையில் அரையர் சேவை திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவைப் பாசுரங்கள்  பாடுதலும் நடைபெறும்.  மூலஸ்தானத்தில்  பெரிய பெருமாளுக்கு முத்தங்கி அணிவித்து சேவை நடைபெறும்.  கூட்டம் இப்போவே தாங்கலை. L இன்னிக்கு அரையர் சேவை பார்க்கலாம்னு கிளம்பிப் போனோம்.  உள்ளே நுழையவே பெரிய வரிசையாக மக்கள் கூட்டம்.  அப்புறமா அங்கிருந்த காவல்துறைப் பெண்மணியிடம் வரிசையில் நிற்க முடியாது எனக் கேட்டு வேண்டிக் கொண்டு ஒரு சிலரைத் தனியாக விட்டுக் கொண்டிருந்த வாயில் வழியே உள்ளே சென்றோம்.  மூலஸ்தானத்தில் பெரிய பெருமாளைச் சேவிக்க ஐம்பது ரூபாய்க் கட்டணத்திலேயே ஐநூறு பேருக்கும் மேல் நின்றிருந்தனர்.  ஆகவே பெரிய பெருமாளுக்கு இங்கிருந்தே வணக்கம் சொல்லிட்டு நேரேக் கிளி மண்டபம் நோக்கி நடையைக் கட்டினோம்.  அங்கிருந்து விமான தரிசனம் செய்யும் அர்ஜுன மண்டபத்துக்கு ஏறினோம்.  சிறிது தூரத்தில் நம்பெருமாள் சாய்ந்த கொண்டையோடு அழகாய் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்.  அரையர்கள் அப்போது தான் நம்பெருமாளைப் பிரதக்ஷிணமாக வந்து உத்தரவு வாங்கிக் கொண்டு சேவையை ஆரம்பித்துக் கொண்டிருந்தார்கள்.  படம் எடுக்கலாமா எனத் தெரியவில்லை.  அங்கிருந்த கோயில் பணியாளரைக் கேட்டதுக்குச் சில பத்திரிகைக் காரர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்றார்.  செல்லில் எடுக்கலாமா என யோசித்தேன்.  அங்கிருந்து காவல் துறைப் பணியாளர் வேண்டாம்னு எச்சரித்தார்.  செல்லைப் பிடுங்கிடுவாங்கனு சொன்னார்.  ஆகவே அந்த யோசனையைக் கைவிட்டோம். L

ஆனால் சுற்றிச் சுற்றி வந்து நம்பெருமாளை நன்கு சேவித்துக் கொண்டோம்.  பின்னர் சிறிது நேரம் அரையர் சேவையைப் பார்த்துவிட்டுப் பின்னர் வீடு வந்தோம்.  பலத்த போலீஸ் பாதுகாப்பு, சோதனைகள், கெடுபிடி,  ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம்னு ஊரே விழாக்கோலத்தில் இருக்கிறது.  சிதம்பரத்திலும் ஆருத்ரா தரிசனம் சமயத்தில் கூட்டம் வெள்ளமாக இருந்தாலும் அங்கே தரிசனம் செய்ய ஏற்பாடுகள் நன்றாக இருந்தன.  மேலும் நடராஜர் வெளியே வரும் பாதையில் எல்லாம் மக்கள் ஒதுங்கி நின்று எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தரிசனம் செய்யும் வண்ணம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  இங்கே கோயிலுக்குள்ளேயே நடப்பதால் கூட்டம் தாங்கவில்லை.   ஆனாலும் சமாளிக்கின்றனர்.   கோபுர வாசலைக் கடந்து உள்ளே நுழையும் வழி சிறிதாக இருப்பதால் அங்கே எப்போதும் நெரிசலாகவே இருக்கிறது.  

ஆழ்வார்கள் அனைவரும் பெருமாளுக்கு எதிரே பெருமாளை தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.  “கண்ணிநுண் சிறுத்தாம்பு” பாசுரத்திற்கான வியாக்யானம் அரையர் சேவையுடன் நாளை  பாடப் படும் எனத் தெரிகிறது.





Thursday, December 13, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 15

ஶ்ரீரங்கம், ரங்கநாதர் கோயிலின் விமானம் இருட்டில் காட்சி அளிக்கும் கோலம் இது. தீபாவளிக்குப் போனப்போ பெரிய பெருமாளைப் பார்க்க முடியலை.  அதனாலும் இங்கே இப்போது வைகுண்ட ஏகாதசிக்காக விழாக் கோலம் பூண்டிருப்பதாலும், அப்புறமாப் பெரிய பெருமாளைப் பார்ப்பதே ரொம்பக் கஷ்டம்னு எல்லாரும் சொன்னதாலும் நேத்திக்கு மத்தியானம் ஒன்றரை மணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம்.  ஶ்ரீரங்கம் கோயில் சேவை நேரங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை.  அது குறித்துத் தனியாக அட்டவணை தருகிறேன். புதுசா வரவங்களுக்குப் பயன்படும்.  ஆனால் மத்தியானம் ஒன்றரை மணியில் இருந்து மாலை ஆறு வரை பெரிய பெருமாள் சேவை சாதிக்கிறார்.  வெயில், கூட்டமும் உள்ளே போனது அங்கேயே காத்திருக்கும்.  ஆகவே கூட்டமும் இருக்கும் தான்.  ஆனால் இந்தச் சமயம் போனாலேயே எல்லா சந்நிதியும் பார்க்க முடியும் என்பதோடு தாயாரையும் சேர்த்துத் தரிசிக்கலாம்.  தாயார் சந்நிதி மூன்று மணிக்குத் தான் திறக்கிறார்கள்.  ஆனாலும் பெரிய பெருமாளைப் பார்த்துக் கொண்டு, சக்கரத்தாழ்வார், மேலப் பட்டாபிராமர்,  போன்றோரையும் தரிசித்துக் கொண்டு போனோமானால் மூன்று மணி ஆகித் தாயார் சந்நிதி திறந்து தாயார் இலவச சேவையே தருவாள்.

நேத்திக்கு நாங்க பெரிய பெருமாளைப் பார்க்கப்போனப்போ ஐம்பது ரூபாய்ச் சீட்டு எடுத்துத் தான் போனோம்.  சுமார் நூறு, நூற்றைம்பது பேர் இருந்தனர்.  ஆனால்  இலவச சேவைக்குக் கூட்டம் நெரிசல் தாங்கலை.  அதிலே ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகம்.  உள்ளே  சந்தனு மண்டபம் தாண்டி குலசேகரன் படி அருகே எல்லாரும் ஒன்றாகவே உள்ளே செல்ல வேண்டி இருப்பதால் அவங்க முண்டி அடித்துக் கொண்டு போயிடறாங்க.  இருந்தாலும் சுமார் முப்பது முதல் நாற்பது நிமிஷம் காத்திருந்திருப்போம்.  நேற்றுப் பெருமாளின் அடியிலிருந்து முடி வரை நல்ல தரிசனம் என்றாலும் திருப்பதியிலே ஜரகண்டி என்பது போல் இங்கே சொல்லாமல் பிடித்துத் தள்ளவென்றே ஒரு பட்டரை நிறுத்தி இருக்காங்க.  எல்லாரையும் பிடிச்சுத் தள்ளிட்டு இருக்கார். :(  இதுவே கேரளா என்றாலோ, கர்நாடகா என்றாலோ மக்கள் இப்படிக் கஷ்டப் பட வேண்டாம் என்பதும் மனதில் உறைத்தது.  என்ன செய்ய!  செந்தமிழ் நாட்டில் பிறந்துட்டு இதுக்கெல்லாம் ஆசைப் படலாமா?  சரி, சரி வைகுண்ட ஏகாதசி பத்திச் சொல்ல வந்துட்டு, என் சொந்த, சோகக் கதையைச் சொல்றேனே!

சுமார் 21 நாட்கள், நடைபெறும் இந்த விழா பகல் பத்து, இராப்பத்து என இரு பிரிவாக நடைபெறும்.  டிசம்பர்-ஜனவரி மாதங்களுக்கு இடையில் அதாவது மார்கழி-தை மாதங்களுக்கு இடையில் நடைபெறும்.  தீபாவளி கழித்து ஒரு நல்ல நாளில் தென்னை மரத்தின் அடித்தண்டினை இந்த விழாவிற்கான முதற்கம்பமாக நடுவார்கள்.  இந்தப் பந்தல் முழுதும் அமைத்து முடியும் போது 47 கம்பங்கள் இருக்கும்.  மூன்றாம் பிராகாரத்தின் வடகிழக்கு வாசலில், ஆயிரக்கால் மண்டபத்தின் முன்னே அமைக்கப்படும்.  இவற்றோடு சேர்த்தே ஆயிரக்கால் மண்டபத்திற்கு ஆயிரம் கால்கள் என்கிறார்கள்.  இது குறித்து தகவல் விசாரித்துச் சொல்கிறேன்.  அம்மன் சந்நிதிக்கு அருகே இருக்கும் இரண்டாம் பிராகாரத்தின் வடக்கு வாயில் தான் பரமபத வாசல் என அழைக்கப் படுகிறது.  ஆண்டு முழுதும் மூடி இருக்கும் இது வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே திறக்கப் படும். இந்த வடக்கு வாயில் வழியாகவே நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்படுகிறார்.

தொடர்ந்து அதிகாலை நாலே முக்கால் மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டு நம்பெருமாள் ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ளிருக்கும் திருமாமணி மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.  அதற்கு முன்னோடியாக பகல் பத்துத் திருநாள் நாளை டிசம்பர் பதினான்காம் தேதி இந்த வருடம் துவங்குகிறது.  இன்றிரவு பூர்வாங்கமாக ஸ்ரீரங்கநாதரின் மூலஸ்தானத்தில் திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம் பாடப்படும்.  பின்னர் பகல்பத்து உற்சவம் ஆரம்பிக்கும்.  14-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடக்கும் பகல் பத்து உற்சவங்களில் தினமும் நம்பெருமாள் அதிகாலை மூலஸ்தானத்தை விட்டுக் கிளம்பிக் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் சர்வாலங்கார பூஷிதராக சிறப்பு அலங்காரத்தில் அமர்ந்து சேவை சாதிப்பார்.

அரையர்கள் நம்பெருமாள் முன்னிலையில் திருமொழிப் பாசுரங்களைப் பாடி, ஆடி அபிநயித்துக் காட்டுவார்கள்.


தொடரும்.

Tuesday, December 11, 2012

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 14




அரங்கனைத் தேடிச் செல்பவர்கள் தொடர வசதியாகத் துளசிச் செடிகளைக் கொத்துக் கொத்தாகப் பிய்த்து வழி நெடுகப் போட்டுக்கொண்டே சென்றனர் அரங்கனோடு திருவரங்கத்திலிருந்து கிளம்பியவர்கள் அனைவரும்.  அதோடு மட்டுமில்லாமல் அரங்கனுக்குப் பூசப்பட்ட பரிமள கஸ்தூரியின் வாசனையும் சேர்ந்தே அரங்கன் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்தது.  இந்த விஷயம் தான் அவர்களுக்குக் கவலை அளித்து வந்தது.  இந்த அதிசயமான நறுமணத்தின் மூலம் அரங்கன் இருக்குமிடத்தைக் கண்டு எதிரிகள் பின் தொடர்ந்தால் என்ன செய்வது எனக் கவலைப் பட்டனர்.  எனவே காடுகளுக்குள்ளும், சோலைகளுக்குள்ளுமே புகுந்து சென்றனர்.  அந்நாட்களில் இயற்கை அன்னையின் வளத்தைக் களவாடும் அளவுக்கு மனிதர் துணிய ஆரம்பிக்கவில்லை.  ஆகவே பூமித்தாய் தன் அனைத்து வளங்களோடும் பரிபூர்ண சர்வாலங்கார பூஷிதையாகவே காட்சி அளித்தாள். விரைவில் திருச்சினாப்பள்ளி நகரின் கரையைக் கடந்து அருகிலுள்ள தொண்டைமான் காட்டில் புகுந்தனர்.  அந்நாட்களில் திருச்சிராப்பள்ளி சிறியதொரு நகரம்.  கோட்டையும், அகழியும் இருந்தன.  நகரை அடுத்துக் கழனிகளும் சோலைகளும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணப்பட்டன.
தொண்டைமான் காட்டில் ஒரு இரவு முழுதும் தங்கிச் செல்லலாம் என பிள்ளை உலகாசிரியர் முடிவு செய்தார்.


 ஏனெனில் திருவரங்கத்திலிருந்து வேதாந்த தேசிகரும் மற்றப் பெரியவர்களும் வந்து சேர்ந்து கொள்வதாய்ச் சொல்லி இருந்தனர்.  இன்றிரவு இங்கே தங்கினால் அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள்.  பின்னர் நாளை பயணத்தைத் தொடங்கலாம் என நினைத்தனர்.  ஆனால் மறுநாள் பொழுது விடிந்தும் எவரும் வரவில்லை.  எனவே அரங்கனோடு இருப்பவர்களுக்குக் கவலை அதிகரித்தது.  ஆனாலும் இங்கே தங்குவது ஆபத்து என்று புரிந்து கொண்டிருந்தார்கள்.  ஆகவே அங்கிருந்து கிளம்பினார்கள்.  காட்டிலேயே பெரும்பாலும் சென்றனர்.  பிரதான சாலைகளைத் தவிர்த்தனர்.  சுற்று வழியாகவே சென்றனர்.  கூடச் சென்ற மக்களில் வசதி படைத்தோர் பல்லக்குகள், குதிரைகளில் பிரயாணம் செய்தனர்.  கால்நடையாகச் சென்றவர்களே அதிகம். பரிசனங்கள் எனப்படும் கோயில் ஊழியர்கள் முன்சென்று வழிகாட்டுகையிலேயே துளசிக் கொத்துக்களை அவர்கள் பறித்துக் கீழே போட்டுக் கொண்டு சென்றனர்.  பின்னால் பிள்ளை உலகாசிரியரும் அவர் சீடர்களும் மற்ற மக்களும் செல்ல அரங்க்கன் பல்லக்கு அவர்களைத் தொடர்ந்தது.  இரு தினங்கள் இவ்விதம் யாத்திரை செய்தவர்கள் களைப்புத்தாங்காமல் ஓர் இடத்தில் தங்கினார்கள்.

அப்போது வேதாந்த தேசிகரின் சீடர்களில் ஒருவரான “பிரம்ம தந்திர சுதந்திர ஜீயர்” என்பார் கவலையுடன் பிள்ளை உலகாசிரியரை அணுகி வேதாந்த தேசிகர் இன்னமும் வந்து சேரவில்லை என்பதைக் குறித்த தம் கவலையைப் பகிர்ந்து கொண்டார்.  துளசிக் கொத்துக்களைப் பார்த்துக்கொண்டு வந்து சேர்வார்கள் எனத் தாம் நம்புவதாப்  பிள்ளை உலகாசிரியர் கூறி அவரைச் சமாதானம் செய்ய எச்சரிக்கை முரசு அடித்தது.  திடுக்கிட்ட அனைவரும் அரங்கனைப் பல்லக்கோடு மறைத்துவிட்டுப் பார்க்க, வந்தவ்வர்கள் ஸ்ரீரங்கத்து வாசிகளான சில நண்பர்களே. அவர்கள் போர் மூண்டு ஸ்ரீரங்கம் எதிரிகள் கைகளில் சிக்கிக் கோயிலிலும் 12,000-க்கும் மேற்பட்ட அந்தணர்கள் உயிர் விட்டதையும், பல பெண்கள் அரங்கன் சேவையைத் தவிர வேறொன்றும் அறியாப் பெண்கள் எதிரிப்படைகளால் பிடித்துச் செல்லப்பட்டதாகவும், அரங்கனுக்குத் தவிர மற்றவருக்கு ஆடியோ, பாடியோ காட்டாத பெண்களைத் துன்புறுத்தி தங்களுக்காக ஆடும்படியும், பாடும்படியும் செய்வதையும் கூறிவிட்டு, அழுது கொண்டே தாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டதாகக் கூறி வருந்தினார்கள். 


அவர்களில் சொந்த சொத்துக்கள் பறிபோனதால் கவலைப்படுவதாக நினைத்த மற்றவர்கள் அவர்களைச் சமாதானம் செய்ய அவர்களோ, அரங்கமே எரிந்து போனதை நினைத்துத் தாங்கள் வருந்துவதாய்க் கூறிவிட்டு, பேரழகு வாய்ந்த திருவரங்க நகரம் இன்று விதவைக் கோலம் பூண்டு கழுகுகளும், ஓநாய்களும் திரிந்து கொண்டிருக்கக் காணப்படுவதாய்க் கூறினார்கள்.  இவற்றைக் கேட்ட பிரம்மதந்திர ஜீயர் தம் ஆசானுக்கு என்ன நேர்ந்ததோ என்ற கவலையில் திருவரங்கத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்.  இங்கே இருந்தவர்களுக்கு அவரைத் திரும்ப அழைத்து வருவது பெரும் பிரம்மப் பிரயத்தனமாகி விட்டது. ஆனாலும் அதையும் மீறிக்கொண்டு ஓட ஆரம்பித்த அவர் கண்களில் இருந்து தாரையாய்க் கண்ணீர் மழை பொழிந்தது.  இதைக் கண்ட பிள்ளை உலகாசிரியர், திகைத்துப் போய் அரங்கா, இதுவும் உன் சோதனையோ எனக் கலங்கி நின்றுவிட்டார்.


மனம் தளர்ந்த உலகாசிரியரைத் தேற்றிய கூரகுலோத்தமதாச நாயனார் என்பவர் அவர் நம்பிக்கையும், தைரியமும் கொண்டு விளங்கினாலேயே மற்றவர்களும் அந்த நம்பிக்கையும் தைரியமும் இழக்காமல் இருப்பார்கள் என்பதை எடுத்துச் சொல்லி அவரை மேற்கொண்ட பயணத்துக்குத் தயாராக்கினார்.  தில்லிப் படைகள் காட்டுக்குள்ளேயும் அரங்கனைத் தேடி வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் மேலோங்க அந்த ஊர்வலம் அந்த இடத்தை விட்டு அகன்றது.  மாலை மயங்கும் நேரம்.  காட்டினிலே தங்குமிடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள் அரங்கனோடு பயணித்தவர்கள்.  பிள்ளை உலகாசிரியர் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது திடீரெனக் காட்டிலிருந்து திடு திடு வென சப்தங்கள்.  சுற்றிலும் சூழ்ந்திருந்த காட்டுச் செடிகளும், மரங்களும் அசைந்தன.  மனிதர்கள் காலடி சப்தங்கள்.  தங்களுடன் வந்தவரல்லாது வேறு யார் இங்கே வந்திருப்பார்கள்?  திகைத்த கூட்டம் சுற்றிச் சுற்றிப் பார்க்கக் கைகளில் தூக்கிப் பிடித்த ஈட்டிகளோடும், வாள்களோடும் ஒரு சிறு கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.  நீண்ட கொடிய மீசைகளோடும், ஆஜாநுபாகுவாகவும், திரண்ட புஜங்களோடும் காணப்பட்ட  அவர்கள் கள்ளக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.  சில கணங்களிலேயே அனைவருக்கும் புரிந்து விட்டது.  அந்த நாட்களில் தொண்டைமான் காடும், அதன் சுற்றுப்புறங்களும் கள்ளர் கூட்டங்களுக்குப்பெயர் பெற்றிருந்தது.  அத்தகையதொரு கூட்டத்திலேயே அவர்கள் மாட்டிக் கொண்டார்கள். 

என்ன செய்யப் போகிறார்கள்?

Wednesday, November 14, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கனின் தீபாவளிக் கொண்டாட்டம்.



அரங்கன் தீபாவளி கொண்டாடுவது அமர்க்களமாக இருக்கும் என ஸ்ரீரங்கம் வரும் முன்னரே கேள்விப் பட்டிருக்கேன்.  நேற்றுக் காலையிலேயே கோயிலுக்குப் போக எண்ணம்.  ஆனால் முடியவில்லை.  மாலை அரங்கன் சந்தனு மண்டபத்தில் எட்டு மணி வரை சேவை சாதிப்பான் என்பதைத் தெரிந்து கொண்டு சென்றோம்.  அரங்கன் சேவை அதி அற்புதம்.  எதிரே கிளி மண்டபத்தில் ஆழ்வாராதிகளையும், அப்படியே ஆசாரியர்களையும் சேவித்துக் கொண்டோம்.  அப்படியே விமான தரிசனமும், பர வாசுதேவர் தரிசனமும் செய்து கொண்டோம்.  பெரிய பெருமாள் ஏழு மணிக்கப்புறமாய்த் தான் தரிசனம் தருவார். அதுக்குக் கூட்டம் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டிருந்தது.  ஆகவே வந்துவிட்டோம்.  இன்னொரு நாள் தான் போகணும்.  போகப் போகக் கவர்ந்து இழுக்கும் கோயிலாக இருக்கிறது. பார்க்கப் பார்க்கத் திருப்தியும் அடையவில்லை. இனி நம்பெருமாளின் தீபாவளிக் கொண்டாட்டங்கள் குறித்து:


ஆண்டாள் கவலையுடன் அமர்ந்திருக்க, ரங்க மன்னார் வருகிறார்.  இதழ்க்கடையில் சிரிப்பு.  குறும்புச் சிரிப்பு.  "என்ன ஆண்டாள், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! என்ன விஷயம்? "



"ஒன்றுமில்லை;  தீபாவளி வருகிறது.  அப்பா வருவாரா, மாட்டாரா எனத் தெரியவில்லை."

"ஏன், இங்கே உனக்குப் பட்டுப் பட்டாடைகளுக்கு என்ன குறைவு? இவை போதவில்லையா? இந்தப் பெண்களே...............

"போதும் நிறுத்துங்க!  உங்களை விடவும் அலங்காரப் பிரியர் வேறு யார் இருக்கிறார்கள்?  என் கவலையெல்லாம் உங்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் அப்பாவுக்குச் சீர் தர இயல வேண்டுமே என்பது தான். "



அரங்கன் இளமுறுவலோடு ஆண்டாள் அருகே அமர்ந்தான்.  ஆயிற்று; நாளை தீபாவளி.  மாமனார் வந்து சீர் கொடுக்க வேண்டும், என மாப்பிள்ளை சும்மா இருக்க முடியுமா!  அவனுடைய அடியார்களை எல்லாம் அவன் தானே கவனிக்க வேண்டும். அதோடு அவன் வேறு எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டுமே.  எண்ணெயில் தானே ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மி இருக்கிறாள்.  முதல் நாள் இரவே அரங்கன் எண்ணெய்க் கோலம் காண்கின்றான்.  மற்றவங்க எண்ணெய் தேய்த்துக்கிறதுக்கும் அரங்கன் தேய்ச்சுக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கே.  இங்கே அரங்கன் கோயிலின் பட்டத்து யானையான ஆண்டாள், ரங்கா, ரங்கா எனப் பிளிற, மேள, தாளங்கள் முழங்க அரங்கன் எண்ணெய்க் காப்பு நடக்கிறது.

அப்பாடா! அரங்கனுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் ஒரு நிம்மதி.  இனிமேலே நம்முடைய அடியார்களைக் கவனிப்போம்.  யாரங்கே, ஆழ்வார்களுக்கெல்லாம் எண்ணெய், சீயக்காய், கொண்டு கொடுங்கள்.  அவங்க வீட்டுப் பெண்களை மறக்காதீங்க.  ஆகவே மஞ்சளும் கொடுக்கணும்.

ஆழ்வார்களுக்கு மட்டும் கொடுத்தால் போதுமா!  ஆசாரியர்கள், வைணவத்தைப் பரப்பியவர்கள், அவங்களுக்கு?

இதோ, அவங்களுக்கும் தான்.  அதோடு நாளைக்கு அவங்களுக்கெல்லாம் தீபாவளிப் பரிசும் உண்டு. " அரங்கன் அறிவிக்கிறான். இப்போது அரங்கன் ரகசியமாக, மிக ரகசியமாகத் தன் அடியார் ஒருத்தரை அழைத்து, "ரங்க நாயகிக்கு எண்ணெய் அனுப்பியாச்சா?  அவள் படிதாண்டாப் பத்தினி.  அப்புறமாக் கோவிச்சுக்குவா. சேர்த்தித் திருவிழா  அன்னிக்கு முகத்தைத் திருப்பிக் கொள்ளப் போகிறாள். நான் மறந்துட்டேன்னு நினைக்கப் போகிறாள்." என்று கிசுகிசுக்க, ஆண்டாள், "என்ன விஷயம்?" எனக் கேட்க, அரங்கன் மெளனமாகப் புன்னகைக்கிறான்.

மறுநாள் தீபாவளி அன்று தாயார் ரங்கநாயகி, ஆழ்வார்கள், ஆசாரியர்கள் அனைவரும் எண்ணெய் அலங்காரம் செய்து கொண்டு திருமஞ்சனமும் செய்து கொள்கிறார்கள்.  அரங்கன் மட்டும் தன்னுடைய அர்ச்சா மூர்த்தியான நம்பெருமாளை உசுப்பி விடுகிறான்.  பெரிய பெருமாளுக்கு எண்ணெய் அலங்காரம் நடந்து புதுசாக ஆடை, அலங்காரம், மாலைகள் முடிந்ததும், நம்பெருமாளுக்கும் நடக்கின்றது.  நம்பெருமாள் உலாக்கிளம்புகிறார்.  ஆனால் கோயிலுக்குள்ளேயே தான்.

"ஆஹா, அப்பா வந்துவிட்டாராமே, அங்கே இப்போது போக முடியுமா? அனைத்துப் பெரியவர்களும் கூடி இருக்கின்றனரே." ஆண்டாளுக்குக் கவலை.


ஆம்,  பெரியாழ்வார் உட்பட அனைத்து ஆழ்வார்களும், ஆசாரியர்களும் அரங்கனின் சேவையைக் காண மூலஸ்தானத்துக்கு நேர் எதிரே இருக்கும் சந்தனு மண்டபத்துக்கு எதிரே தனியாகப் பிரிந்து காணப்படும் கிளிமண்டபத்தில் எழுந்தருளுகிறார்கள்.  அனைவரும் அரங்கன் வருகைக்குக் காத்திருக்கப் பெரியாழ்வார் நாணய மூட்டைகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.  மாப்பிள்ளையான அரங்கனுக்குச் சீராகக் கொடுக்க வேண்டியவை அவை.  அரங்கனோ சாவகாசமாக மூலஸ்தானத்துக்கு எதிரே இருக்கும் சந்தனு மண்டபத்திற்கு வந்து மீண்டும் ஒரு அலங்காரத் திருமஞ்சனம் கண்டருளுகிறான்.

பின்னர் தீபாவளிச் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறான்.  பின்னர் பகல் நான்கு மணிக்குப் பெரியாழ்வார் சீராகக் கொடுத்த நாணய மூட்டைகள் அரங்கனைச் சுற்றிப் பெரியாழ்வார் சார்பில் கோயில் அரையர்களால் வைக்கப் படுகிறது.  இந்த நாணய மூட்டையை "ஜாலி" அல்லது "சாளி" என்கிறார்கள்.  இவற்றை ஏற்றுக் கொள்ளும் அரங்கன் தம் மாமனார் பெருமையை உலகறியக் காட்ட வேண்டி இரண்டாம் பிராகாரத்தில் நாணய மூட்டைகளோடு வலம் வருகிறான்.  பின்னர் மீண்டும் கர்பகிருஹத்துக்கு எதிரிலுள்ள சந்தனு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறான்.

மெல்ல மெல்ல இரவு எட்டு மணி ஆகிறது.  தனக்காகக் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆசாரியர்களைக் கிளி மண்டபத்திற்கு வந்து அரங்கன் ஒவ்வொருவராகப்பெயரைச் சொல்லி அழைக்க, ஒவ்வொருவருக்கும் அரங்கன் சார்பில் தனியாக மரியாதை செய்யப் படுகிறது.  அரங்கனின் மரியாதையைப் பெற்றுக்கொண்ட ஆழ்வார்களும், பதில் மரியாதையைப் பெற்றுக் கொண்ட பெரியாழ்வாரும் அரங்கனிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு தத்தம் சந்நிதிக்குச் செல்கிறார்கள்.  ஆனாலும் கூடி இருக்கும் மக்களுக்காக அரங்கன் இன்னும் சிறிது நேரம் அங்கே சேவை சாதிக்கிறான்.  நேரம் ஆவதைக் குறித்துக் கவலை இல்லாமல் பக்தர்களுக்கு சேவை சாதித்துவிட்டுப் பின்னர் அரங்கன் தன் தீபாவளிக் கொண்டாட்டத்தை முடித்துக் கொள்கிறான்.

ஆண்டாளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கேட்கிறான் அரங்கன். "என்ன சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! சீர் வரிசை வந்ததா?"

"சுவாமி, தங்கள் கருணையே கருணை!" ஆண்டாள் அரங்கனோடு ஐக்கியம் அடைகிறாள்.

படங்களுக்கு நன்றி: கூகிளாண்டவர்.  தகவல் உதவி: தினமலர்

Friday, November 09, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 13


கோயிலில் இருந்தவர்களை வெளியேற்ற நினைத்தால் எவரும் வெளியேற மறுத்தனர்.  கோயிலிலேயே தங்குவதாய்க் கூறினார்கள்.  அரங்கன் முன்னிலையில் அவனுக்காக நாட்டியம் ஆடும் பெண்மணிகளும் கோயிலுக்குள்ளேயே தங்கினார்கள்.   சற்றும் பயமே இல்லாமல் அனைத்தையும் அரங்கனிடம் ஒப்படைத்துவிட்ட அந்தப் பெண்கள் போரிடச் செல்லும் ஆண்களுக்காக உணவு தயாரிப்பதில் முனைந்தனர்.  கோயிலின் அந்தணர்கள் அனைவரும் வாளும், கத்தியும், கதையும் ஏந்தி யுத்தத்துக்குத் தயாரானார்கள்.  உல்லுகான் அனுப்பிய செய்தியில் அனைத்துச் சொத்துக்களையும் சுல்தானிடம் ஒப்படைக்கச் சொல்லி இருந்ததை மறுத்த அவர்கள், தாங்கள் அனைவரும், இந்த ஸ்ரீரங்கமும், கோயிலும் அதன் சொத்துக்களும் ரங்கநாதனுக்கே அடிமை எனவும், அவர்களுக்கு ராஜா ரங்கராஜாதான் எனவும் கூறி அடிபணிய மறுத்தனர்.  இன்னொரு பக்கம் ஒரு அரசனுக்கு ஐந்து அரசனாகப் பாண்டியர்கள் பிரிந்து நிற்பதையும் அவர்கள் ஒற்றுமையின்மையால் நேரிட்ட இந்தத் துன்பத்தை எண்ணியும் மனம் கலங்கினார்.   தாங்கள் அனுப்பி வைத்த அழகிய மணவாளர் எங்கே இருக்கிறாரோ என நினைத்து வருந்தினார்கள்.

  கோயிலின் தலைமை அதிகாரியான  ஸ்ரீரங்கராஜநாத வாதூல தேசிகர் தலைமையில் 12,000 வைணவர்கள்  அந்நியப் படையெடுப்பை எதிர்க்கத் திரண்டனர்.  ஒரு பக்கம் போர்த் தந்திரங்களும், பயங்கர ஆயுதங்களையும் ஏந்திய வலுவான படை. இங்கேயோ எந்தவிதமான உதவிகளும் இல்லாமல் தங்கள் மனோபலத்தையும் அரங்கனையுமே நம்பிய மக்கள்.  எனினும் மிகவும் உத்வேகமாக எதிர்த்து நின்றனர்.  எதிரிகள் வடக்கு வாசலில் காவல் நின்ற பஞ்சு கொண்டான் என்பவரை எதிர்த்து உள்ளே புகுந்தனர்.  இந்த வடக்கு வாசல் ஆர்ய படாள் வாசல் எனப் படுகிறது.  வட மாநிலங்களிலிருந்து வந்த “கெளட” தேசத்து அரசர் கொடுத்த பொருளைக் கோயில் நிர்வாகம் வாங்க மறுக்கவே தம் தேசத்து ஆர்ய அந்தணர்களை நியமித்து அந்தப்பொருட்களை அங்கே பாதுகாத்து வைத்திருந்த காரணத்தால் இந்தப்பெயர் என்கிறார்கள். 

வடக்கு வாசலில் காவல் இருந்த வில்லிதாசரின் மகன் குலசேகரனையும், பஞ்சு கொண்டானையும் எதிர்த்து உள்ளே புகுந்த வீரர்கள் 12,000 அந்தணர்களையும் கொன்று குவித்தனர்.   பஞ்சு கொண்டானும் உயிர் நீத்தார்.  குலசேகரன் எவ்வாறோ தப்பி விட்டான்.  அரங்கனைத் தேடி அவனும் அவனுடன் இன்னும் சிலரும் சென்றனர். உயிர் நீத்த அந்தணர்களில்  சுதர்சன பட்டர் என்னும் பெரியாரும் ஒருவர்.   இவர் நடாதூர் அம்மாள் அவர்களின் சீடர் ஆவார். அவரிடம் அமர்ந்து பாடம் கேட்டு “சுதபிரகாசிகை” என்னும் பிரம்மசூத்திர வியாக்யானம் ஆன ஸ்ரீ பாஷ்யத்துக்கு விளக்கவுரை எழுதியவர். அந்த சுதபிரகாசிகையையும், தம்மிரு மகன்களையும் அங்கே பிணங்களுக்கு நடுவே மறைந்திருந்த வேதாந்த தேசிகரிடம் பராசர பட்டர் என அழைக்கப்பட்ட சுதர்சன பட்டர் ஒப்படைத்தார். 

மூலவரான ரங்கநாதரைக் கல்சுவரால் மறைக்க ஏற்பாடு செய்த வேதாந்த தேசிகர், ரங்கநாயகித் தாயாரையும்ம் அங்கிருந்த வில்வ மரத்தடியில் ஒளித்து வைக்க ஏற்பாடு செய்தார்.  அவரை அழகிய மணவாளரின் ஊர்வலத்தோடு சேர்ந்து செல்லும்படிக் ஓயில் அதிகாரிகள் வேண்டியும் அவர் போக மறுத்தார்.  அவர் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு அழகிய மணவாளரைத் தூக்கிச் சென்றவர்கள் தேசிகர் பின் தொடர்வதற்கு ஏதுவாக உலர்ந்த இலைகளையும், துளசிக் கொத்துக்களையும் போட்டுக்கொண்டு சென்றிருந்தார்கள். ஆனால் இங்கே கோயிலில் தங்கிய வேதாந்த தேசிகருக்கு இப்போது ஒரு மாபெரும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.  சுதர்சன பட்டரின் குழந்தைகளையும், சுதபிராகாசிகையையும் மறைத்துக் கொண்டு ஒளிந்திருந்த வேதாந்த தேசிகர் அங்கிருந்து  கிளம்பினார்.  கிரஹண காலத்துச் சூரியன் போல மறைந்திருக்கும் அரங்கனை மீண்டும் எவ்விதமான இடர்ப்பாடுகளும் இல்லாமல் தாம் தரிசிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு கிளம்பினார் தேசிகர்.


அரங்கன் சென்ற வழிதெரியாமல் விழித்துக்கொண்டு இருந்த தேசிகருக்குத் துளசிக் கொத்துகளை வைத்து அடையாளம் கண்டு செல்லும்படி கூறப்பட்டது.  ஆனால் திடீரென அடித்த காற்றில் அவை பறந்து வேறு திசைகளில் வியாபித்து இருக்க தேசிகரோ நிலைமை தெரியாமல் அவற்றைத் தொடர்ந்தே சென்றார்.  ஆனால்  அவருக்குச் சற்றே முன்னால் சென்ற வில்லிதாசரின் மகன் குலசேகரனும் இவ்விதம் தவித்தபோது ஒய்சள ராஜகுமாரியுடன் இருந்த ஒரு பெண் தொண்டைமான் காட்டுக்குள் அரங்கன் ஊர்வலம் புகுந்து செல்வதாகக் கூறி அடையாளமும் காட்ட குலசேகரன் அரங்கனைத் தொடர்ந்து சென்றான்.  ஸ்ரீதேசிகருக்காகக் காத்திருந்த பிள்ளை லோகாச்சாரியார் ஊர்வலத்தைக் கிளப்பிக் கொண்டு மேலும் தெற்கே சென்றார்.  தேசிகரோ வழி தப்பிப் போய் உறையூரை அடைந்தார்.  அரங்கன் ஊர்வலத்தைத் தொடர்ந்து செல்ல எண்ணிய மக்களைத் தடுத்து நிறுத்தினார். பாண்டிய அரசர்கள் போன இடம் தெரியாமல் மறைந்துவிட்டனர்.  ஆகவே இங்கே ஸ்ரீரங்கத்தில் அவர்களை எதிர்ப்பார் இல்லாத டில்லிப் படை கோயிலுக்குள் புகுந்து அனைவரையும் வெட்டி வீழ்த்தித் தோண்டித் துருவிப் பார்த்துவிட்டு எதுவும் கிடைக்காமல் கோபம் கொண்டு மதுரை நோக்கிச்  சென்றனர்.

Tuesday, October 30, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 12

நவராத்திரி ஆரம்பத்தன்று  கோயிலுக்குப் போனோம்.  தாயாரைப் பார்க்க முடியலைனு ஏற்கெனவே சொன்னேன்.  அது என்னமோ தெரியலை;  தாயாரைப் பார்த்தா பெருமாளைப் பார்க்க முடியலை;  பெருமாளைப் பார்த்தாத் தாயாரைப் பார்க்க முடியலை.  இது எங்களுக்கு மட்டும் தான் நடக்குதுனு நினைக்கிறேன்.  சரி, இப்போ அரங்கனும், அரங்க நாயகியும் என்ன ஆனாங்கனு பார்ப்போமா?  அரங்கனை அனுப்பிட்டோம் ஊரை விட்டே.  ஆனால் அரங்க நாயகி என்ன ஆனாள்னு தெரிய வேண்டாமா?  நம்ம கதையைத் தொடர்வோம். 


  அரங்கன் சந்நிதி மூடப் பட்ட உடனேயே அனைவரும் தாயாரின் கதி என்னமோ என நினைத்தார்கள்.  ஆனால் தாயாரையும் மூலவரை வெளியேற்றி சந்நிதிக்கு அருகேயுள்ள வில்வ மரத்தடியில் மண்ணுக்குள் புதைத்து வைத்தனர்.  தாயார் படிதாண்டாப் பத்தினி எனப் பெயர் வாங்கியவள்.  ஆனால் இது தான் முதல்முறையாக வள் சந்நிதியை விட்டு வெளியே வந்திருப்பாள் என எண்ணுகிறேன்.  இந்தத் தாயார் பின்னால் சில காலம் கழித்துக் கோயிலில் வழிபாடுகள் ஆரம்பித்த சமயம் மீண்டும் பிரதிஷ்டை செய்யத் தேடியபோது கிடைக்கவே இல்லை.  எங்கே தேடினாலும் கிடைக்கவில்லை.  பின்னர் எப்போது கிடைத்தாள் என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.  அரங்கநாயகியையும் மறைத்த பின்னர் கோயிலில் இருந்த அதிகாரிகள், வேதாந்த தேசிகரை அரங்கனோடு செல்லும்படி வேண்டிக் கொண்டனர்.  ஆனால் தேசிகர் மறுத்தார்.  இங்கே ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரிய பெருமாளைக் காக்க வேண்டி இத்தனை மக்கள் இருக்கத் தான் மட்டும் தப்பிப்பிழைப்பதில் அவருக்குச் சம்மதம் இல்லை.  ஆனால் வைணவத்தை  நிலை நிறுத்த வந்த உந்நதமான ஆசாரியர்களில் ஒருவரான தேசிகரைக் காப்பாற்றியே தீர வேண்டும் என அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்துவிட்டனர். 

இவர்களுக்குள் வாக்குவாதம் நடக்க அதற்குள்ளாக தில்லிப் படைகள் ஆற்றில் இறங்கித் தாக்க முன்னேறும் தகவல் கிடைத்தது.  ஹொய்சளப் படை வீரர்கள் வழிகாட்ட தில்லிப் படை முன்னேறியது.  அனைவரும் தாக்குதலுக்கான முன்னேற்பாடுகளோடு வந்து கொண்டிருந்தனர்.  அவர்களுக்குத் தலைமை வகித்து நடத்தி வந்தவன் உல்லு கான் என்னும் தளபதி.  தில்லி சுல்தானாக இருந்த கியாசுதீன் துக்ளக்கின் மூத்தகுமாரன் ஆன இவனே முகமது-பின் – துக்ளக் என்ற பெயரில் பிரபலமடைந்தவன்.   அங்கே கோயிலையே கோட்டையாக மாற்றிய வண்ணம் ஊர்க்காரர்கள் அனைவரும் போருக்குத் தயாரானார்கள்.  பட்சிராஜன் தோப்பு என அந்நாட்களில் அழைக்கப் பட்ட கருடன் சந்நிதியைச் சுற்றி இருந்த தோப்புக்கள் எல்லாம் ஆட்கள் நடக்க முடியாதபடிக்கு முட்கள் பரப்பப்பட்டு, முட்களால் ஆன பந்துகள் தூவப்பட்டுக் காணப்பட்டன.  இவற்றில் மனிதரோ, குதிரைகளோ செல்ல முடியாது.  எதிரிப் படைகள் முன்னேறி தெற்கு வாயிலுக்கு வராமல் இருக்கச் செய்த இந்த முன்னேற்பாடுகள் எல்லாமும் வீணாகத் தான் போயின.

அவற்றின் இடையே கால்களை வைத்து எதிரிப்படைகள் முன்னேறினார்கள்.  ஆனால் வடக்கு வாயிலுக்கு வந்த படைகள் உடனடித் தாக்குதலில் ஈடுபடாமல் சற்றே பின்னோக்கிச் சென்று ஸ்ரீரங்கத்தின் மக்களைச் சரணடையும்படியும், கோயிலில் உள்ள சகலவிதமான ஆபரணங்கள், நகைகள், பொருட்கள், தானியங்கள் அனைத்தையும் சுல்தானுக்குச் சமர்ப்பிக்கும்படியும் ஆணையிட்டனர்.  ஆனால் ஊர் மக்களோ தங்களுக்கு அரசன் அந்த ரங்கராஜன் ஒருவனே எனவும், அவன் யாருக்கும் கப்பம் கட்டும் நிலையில் இல்லை என்றும் ஈரேழு பதினான்கு உலகுக்கும் அதிபதியானவனைக் கப்பம் கட்டச் சொல்லும் உரிமையும் எவருக்கும் இல்லை எனவும் அறிவித்தனர்.  போர் ஆரம்பித்தது.  அரங்கன் தென்காவிரிக்கரையில் தேசிகருக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.  அரங்கன் அடுத்து எங்கே சென்றான், தேசிகர் அரங்கனைச் சேர்ந்தாரா என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்.

Monday, October 15, 2012

ஸ்ரீரங்கம் குறித்த சில அபூர்வப் படங்கள்

நேத்திக்கு எங்கள் குடியிருப்பில் நடைபெற்ற நலச் சங்க மாதாந்திரக் கூட்டத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திரு விஜயராகவன் என்னும் ஆய்வாளர் (ஸ்ரீரங்கம் குறித்தே ஆய்வுகள்) ஸ்ரீரங்கம், திருச்சி குறித்த சில அபூர்வமான பழைய படங்களைப் பவர் பாயிண்ட் ஷோவாகக் காட்டினார்.  அவருக்கு இதைப் பகிர்ந்து கொள்ள அனுமதி கேட்டு மடல் அனுப்பியுள்ளேன்.  ஆனாலும், அவரைக் கேட்காமலேயே இங்கே பகிர்ந்து கொண்டுவிட்டேன். தப்போ, சரியோ தெரியலை.  பல விஷயங்களும் மிகப் புதியவை. பல படங்களும் அபூர்வமானவை.  நிகழ்ச்சி முழுதும் என்னால் உட்கார்ந்து கேட்க முடியவில்லை.  ஸ்ரீரங்கம் குறித்த படப் பகிர்வுகள் முடிந்ததும் கிளம்பிவிட்டேன்.  அவர் ஸ்ரீரங்கம் குறித்த வலைப்பதிவு ஒன்றும் வைத்துள்ளார்.  அதில் இந்தப் படங்களோடு மேலதிகத் தகவல்களும் கொடுத்திருக்கிறார். இங்கேபார்க்கவும். இனி படங்கள்.







காவிரி அந்த நாட்களில் ஓடிய அழகு




அந்த நாளைய ஓவியம்

மற்றப் படங்களும் அடுத்துப் பகிர்ந்து கொள்கிறேன்.

படங்கள் நன்றி:  திரு விஜயராகவன்



ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! பவித்ரோத்சவம்! 12

ஸ்ரீரங்கம் கோயிலில் பவித்ரோத்சவம் எனச் சொல்லி இருக்கேன்.  பார்க்கப் போனால் இது எல்லாக் கோயில்களிலும் உண்டு.   ஆகம முறைப்படியான அனைத்துக் கோயில்களிலும் பவித்ரோத்ஸவம் கட்டாயம் உண்டு.  இது சிராவண மாதத்திலேயே செய்யப்படும். சில சமயங்களில் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும் செய்யப்படும்.  பவித்ரோத்ஸவம் என்பது புனிதப் படுத்துதல் என்ற பொருளில் வரும்  பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள்.  கோயிலுக்குப் பலதரப்பட்ட மக்களும் வருவார்கள்.  தடுக்க இயலாது.  அதே போல் பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம்  மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம். இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்ஸவம் ஆகும்.  ஆலயங்கள் தொடர்பான பிராயச்சித்தம் என்றும் சொல்லலாம்.  இந்த உற்சவத்தில் உற்சவ விக்கிரகங்கள் மட்டுமில்லாமல் மூலவருக்கும் சேர்த்தே விசேஷமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும்.

மேலே சொல்லப்பட்ட மாதங்கள் ஏதேனும் ஒன்றில் சுக்லபக்ஷத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து இந்த உற்சவத்தின் முக்கிய அம்சம் ஆன பவித்ரம் சமர்ப்பித்தல் நடைபெறும்.  இது அநேகமாகப் பெரிய கோயில்களில் ஏழு தினங்கள் நடைபெறும்.  கோயிலுக்கு வரும் மகான்கள் துதிக்கும் துதிகளால் இறை சக்தி, புனிதம் ஆகியவை பெருகும். அதே சமயம் அங்கே வரும் பக்தர்களின் குணங்கள், மாறுபட்ட நடத்தைகள், அவர்களால் ஏற்படும் தீட்டுக்கள் போன்றவைகளால் மூர்த்திகளின் இறை அம்சங்களில் மாறுபாடு ஏற்படும். ஆகவே பவித்ரோத்சவம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

பொதுவாக கோயில்களில் நடைபெறும் உற்சவங்களில் ரக்ஷாபந்தனம் என்பது உற்சவருக்கு மட்டுமே இருக்கும்.  உற்சவ மூர்த்திகளுக்கு மட்டுமே கங்கணம் கட்டுவார்கள்.  ஆனால் பவித்ரோத்சவத்தில் மூல விக்கிரகங்களுக்கும் ரக்ஷாபந்தனம் நடைபெறும்.  இதைக் கடவுளே மேற்கொள்ளும் யக்ஞமாகப் பாவிப்பவர்களும் உண்டு.  கோயில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களில் ஒருவர் இந்த உற்சவத்தை ஏற்று நடத்தும் தலைமப் பதவியை மேற்கொள்ளுவார்.  அவர் பெருமாளின் பிரதிநிதியாகக் கருதப் படுவார்.  உற்சவம் முடியும்வரை ஆசாரியர் எனவும் அழைக்கப்படுவார்.

 மற்றவர்களை ரித்விக்குகள் என அழைப்பார்கள்.  நல்ல முகூர்த்தம் பார்த்து உற்சவம் நடத்தக் கடவுளின் அனுமதி கோரப்படும். பின்னர் ரக்ஷாபந்தனம் என்ற காப்பு மூலவருக்கும், உற்சவருக்கும் அணிவிக்கப்படும்.  ஆசாரியரும் கட்டிக்கொள்ளுவார்.  மூலவரின் இறை சக்தியை உற்சவரிடம் மாற்றுவார்கள்.  பின்னர் யாகசாலைக்கு உற்சவரை எழுந்தருளப்பண்ணுவார்கள். அங்கே உற்சவருக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும்.  இந்த ஆராதனைகள் கடந்த வருஷத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒன்று என்ற மாதிரி கணக்கிடப்படும்.  வருடத்தின் 365 நாளுக்கும் ஒவ்வொரு நாளுக்கு ஒன்று என்ற கணக்கில் 365 முறை நிகழ்த்தப்படும்.  இது பெரிய கோயில்களுக்கும் பழைமை வாய்ந்த கோயில்களுக்கும் பொருந்தலாம்.  சில கோயில்கள் ஆகம முறைப்படி நடந்தாலும் அங்கே 90 நாட்கள், 180 நாட்கள் எனக் கணக்கிட்டிக் கொண்டு அபிஷேகங்கள் செய்கின்றனர். என்றாலும் குறைந்த பக்ஷமாக 12 முறை வழிபாடுகள் நடத்த வேண்டும்.

 பின்னர் கும்பஸ்தாபனம், மண்டபஸ்தாபனம் நடத்துவார்கள்.  பிரதானமான குண்டத்திலே அக்னி பிரதிஷ்டை செய்யப்படும். வேட ஆரம்பங்கள் செய்யப்பட்டு, பராயணங்களும் நடைபெறும்.  கோமம் முடிந்தபின்னர் பவித்ரம் சமர்ப்பிக்கப்படும்.  பெருமாள் கோயில்களில், முக்கியமாக ஸ்ரீரஙத்தில் அதிவாஸ பவித்ரம் என்ற ஒரு பவித்திரம் முதல் நாள் மந்திர புரஸ்ஸரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பெருமாளுக்குச் சாற்றுவார்கள். பின்னர் மறுநாள் காலையில் முதலில் மேற்கே இருக்கும் குண்டத்தில் அக்னிப் பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பின்னர் மற்ற குண்டங்களுக்கும் சேர்க்கப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்படும்.  நான்கு குண்டங்களிலும் பின்னர் பெருமாளை ஆவாகனம் செய்வார்கள். பின்னர் மீண்டும் முறைப்படியான கோமம் நடக்கும்.  ஏழாம் நாளில் யாகம் முடிவடையும் நாளன்று பூர்ணாகூதி செய்வார்கள்.  அதில் பட்டு வஸ்திரம், புஷ்பங்கள், மாலைகள், தேங்காய்கள், நெய் சேர்க்கப்பட்டு ஆகூதி செய்வார்கள்.  பின்னர் த்வார தேவதைகளுக்கு விசற்ஜனங்கள். மண்டல விஸர்ஜனம் நடக்கும்.  மண்டலம் கலைக்கப்பெற்று நடுவில் உள்ள சூர்ணத்தை உற்சவரின் திருவடிகளில் சமர்ப்பிப்பார்கள்.

 பின்னர் பவித்திரங்கள் களையப்பட்டு சகல புண்ணிய ஸ்தலங்களில் இருந்தும் மானசீகமாய்க் கொண்டுவந்ததாயக் கருதப்படும் புண்ணிய தீர்த்தங்களினால் உற்சவருக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.  பரிவட்டங்கள் சாத்தப்பட்டு, புஷ்பமாலைகள் சாத்தப்பட்டு சர்வ அலங்காரங்களோடு உற்சவர் மீண்டும் கர்பகிரகத்துக்குள் எழுந்தருளுவார்.  பின்னர் மகா கும்பத்தை சகல மரியாதைகளோடும் எடுத்துச் சென்று எல்லா மூர்த்திகளுக்கும் அந்தக் கும்ப ஜலத்தால் புரோக்ஷணம் செய்வார்கள்.  பின்னர் விசேஷ ஆராதனைகள் செய்யப்பட்டு நிவேதனங்கள் சாற்றி உற்சவம் நிறைவு பெறும்.  இது உலக க்ஷேமத்துக்காகவே நடத்தப்படும் ஒரு உற்சவம்.

Wednesday, September 12, 2012

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 11


இந்த கோபுரம் தாக்குதல் நடந்த காலத்தில் இல்லை; இது குறித்துப் பின்னர் வரும்.  கோயில் அடையாளத்துக்காகச் சேர்த்துள்ளேன்.


அரங்கனின் பல்லக்கும், பரிவாரங்களும் அக்கரையை அடையும்வரை பொறுத்திருந்து பார்த்த சிலர் மீண்டும் திருவரங்கம் நகருக்குள் திரும்பினார்கள்.  கணுக்கால் ஆழத்துக்கும் மேல், முட்டளவு ஆழத்துக்கும் மேல் இடுப்பளவு ஆழமாக இருந்த இடங்களையும் தாண்டி அரங்கன் சென்று கொண்டிருந்தான் ஒரே ஒரு தீவர்த்தியின் உதவியோடு ஒளிந்து மறைந்து திருடனைப் போல் சென்று கொண்டிருந்தான்.கோலாகலமாகச் செல்ல வேண்டியவன், அரசனைப் போல் செல்ல வேண்டியவன்.  இக்கரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மக்கள் குவித்த கரங்களைப் பிரிக்கவில்லை.  கண்ணீர் தாரை தாரையாக வழியப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.   அரங்கன் பத்திரமாய் மறுகரையை அடைய வேண்டுமே என்பதே அவர்கள் கவலையாக இருந்தது.  அரங்கன் அக்கரையை அடைந்துவிட்டான்.  இவர்களும் திரும்பினார்கள்.  இதில் அரங்கனோடு அரங்கன் சென்ற பாதையிலேயே செல்ல விரும்பினவர்களும் அப்பாதையிலேயே செல்ல ஆரம்பிக்க, திருவரங்கத்தின் மூலவரைக் காக்கும் எண்ணத்தோடு மற்றவர்கள் நகருக்குள் திரும்பினார்கள்.

விரைவில் ஒரு போர் இருக்கிறது என்ற எண்ணமும் அவர்களிடையே எழுந்தது.  கோயிலில் அரங்கன் கிடைக்கவில்லை என்றதும், கோயிலின் சொத்துக்கள், நகைகள், ரத்தினங்கள் கிடைக்கவில்லை என்றதும் வரப் போகும் கொடியவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள்.  சென்ற முறைத் தாக்குதலின் போது அருகிலுள்ள ஆதிநாயகன் கோயிலின் மூலவரான ரங்கநாதரைக் கைகளை உடைத்துச் சேதப் படுத்தி, சேஷன் மடியிலிருந்து கீழே இறக்கிப் போட்டு என்ன என்ன என்னமோ செய்து விட்டனர்.  அப்போது எப்படியோ இங்கே ரங்கநாதரைக் காப்பாற்றி விட்டார்கள்.  ஆனால் இம்முறை அவர்கள் முக்கியக் குறியே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தான்.  ஆகவே மூலவர் காக்கப்பட வேண்டும்.

கோயிலின் ஆர்யபடாள் வாயில் கதவைத் திறந்தால் உள்ளே நிலைவாயில் அருகே கற்சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்கள் சிலர்.  அவர்களோடு நின்று வேலையை மேற்பார்வை மட்டுமில்லாமல் கூட நின்று தானும் வேலை செய்து கொண்டிருந்தார் பெரியவர்  அவர் பெயர் வேதாந்த தேசிகர்.  முக்கியமான ஜனங்கள் ஊரை விட்டு வெளியே போய்விட்டாலும் கோயிலைச் சார்ந்த முக்கியமான பணியாளர்களில் பலருக்கும் மூலவரான பெரிய பெருமாளை விட்டுப் பிரிய மனமில்லை.  அவர்களைப் பொறுத்தவரை மூலவர் பெரிய பெருமாள் வெறும் சுதையால் ஆன விக்ரஹம் இல்லை.  சாந்நித்தியம் நிரம்பிய உயிர்ச் சக்தி ததும்பிய சொரூபமே அவர் தான்.  அவர்களை எல்லாம் அவர் தான் இத்தனை நாட்களாகக் காத்து வந்திருக்கிறார் என்பது உண்மை தான்.  ஆனால் இப்போது அவர்களை எல்லாம் வெட்டிக் கொன்றுவிட்டு அவரையும் துண்டு துண்டாக உடைக்க ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறது.  அந்தக் கூட்டத்தினின்று பெரிய பெருமாளை எப்பாடு பட்டேனும் காக்க வேண்டும். அதற்கு நம் உயிர் போனாலும் லட்சியம் இல்லை.

அப்படிப்பட்ட மக்கள் அனைவரும் அன்று கோயிலுக்குள் கூடி அரங்கனை மறைக்கும் திருப்பணியைச் செய்து வந்தனர்.  முதலில் ஆர்யபடாள் வாயிலுக்கருகே கல்சுவர் எழுப்பிக் கோயிலைக் கோட்டை போல் மாற்றிவிட்டால் உள்ளே இருப்பவர்களுக்கு ஆபத்து வராது எனப் பூரணமாக நம்பினார்கள்.  அதே போல் எம்பெருமான் அடியார்களான பல பெண்களும் அங்கேயே தங்கி இருந்தனர்.  அவர்கள் அரங்கனுக்கு முன்னால் மட்டுமே ஆடிப் பாடுவார்கள்.  அரங்கனைத் தவிர மற்றவர்களுக்கு அவர்களின் இனிமையான சங்கீதமோ, ஒயிலான நாட்டியமோ காணக் கிடைக்காது.  அரங்கன் இங்கே இருக்க நாங்கள் வெளியே செல்வதா?  பின் வேறு யார் முன்னிலையில் எங்கள் கலையை நாங்கள் காட்டி ஆனந்திப்பது?  திட்டவட்டமாக மறுத்தனர் அந்தப் பெண்களும்.  இதைத் தவிர வயது முதிர்ந்த பல பெரியவர்களும் கோயிலையே கதி என நம்பி வந்தவர்களும் அங்கே இருந்தனர்.  அனைவரையும் காக்கவேண்டி நகரப்  படையினர் அனைவரும் மும்முரமாக இருந்தனர்.

அழகிய மணவாளர் காவிரியைக் கடந்து தெற்கே சென்று கொண்டிருக்கிறார் என்ற செய்தி கிடைத்ததும், திருவரங்க நாச்சியாரின் உற்சவ விக்ரஹத்தையும் ஒரு பல்லக்கில் வைத்து அணிமணி ஆபரணங்களைப் பெட்டியில் வைத்து சில ஆட்கள் காவிரிக்கரை வழியாக மேற்கு நோக்கிப் பயணப்பட்டனர்.  அரங்கன் தெற்கே சென்று கொண்டிருக்க, நாச்சியாரோ, மேற்கே.  இனி இருவரும் சேர்வது எப்போது?  யாருக்குத் தெரியும்! :(  அடுத்ததாக அவர்கள் செய்த முக்கியக் காரியம் கோயிலின் தானியக் களஞ்சியத்தைக் காப்பது.  அதையும் செய்து முடித்தார்கள்.  ஆயுதங்களைத் தயார் செய்து வரப் போகும் எதிரியைத் தாக்குவதற்கு ஆயத்தம் செய்து கொண்டார்கள்.  எல்லாம் சரி,  பெரிய பெருமாள்??  ஆஹா, இதோ, அவரையும் பாதுகாக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.  ஆனால்.........ஆனால்........ இது என்ன, சந்நிதியை மறைத்துச் சுவர் ஒன்று!  ஆம், அரங்கன் சந்நிதியை மறைத்துக் குலசேகரன் படியின் மேலேயே கல்சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கொத்து வேலையில் முக்கியமாக வேதாந்த தேசிகரும் ஈடுபட்டு முழு முனைப்போடு செய்து கொண்டிருந்தார்.  ஒவ்வொரு கல்லாக வைக்க, வைக்க பாம்பணையில் துயிலும் அரங்கன் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்தான்.

இதோ அவன் திருவடி, அனைவரும் நன்றாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள், பின்னால் எப்போது பார்ப்போமோ!   பார்க்கையில் எத்தனை பேர் உயிரோடு இருப்போமோ, தெரியாது!  இதோ அவன் திருமுகம்.  தெற்கே நோக்கிய வண்ணம் இருக்கும் அந்த  அருள் விழிகளை இதோ இந்தக் கல்சுவர் மறைக்கப் போகிறது.  அனைவரும் பாருங்கள்;  நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.  அரங்கனின் அருளை உங்கள் மனதில் நிரப்பிக் கொள்ளுங்கள்.  இந்த அருளின் பலத்திலேயே வரக்கூடிய கடுமையான சோதனை நாட்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.  அத்தகைய சக்தியை இதோ அரங்கன்  நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறான்.  ஆகவே உங்கள் கண் நிறைய, மனம் நிறைய அரங்கனை நிரப்பிக் கொள்ளுங்கள்.  அவன் அருள் பிரவாகத்தில் மூழ்குங்கள்.

அனைவரும் கண்ணீர்  வடிய வடிய வேலை செய்தார்கள்.  ஒரு சமயம் அரங்கனைப் பாரத்த வண்ணம்.  மறு சமயம் முகத்தைத் திருப்பிக் கொண்டு அழுத வண்ணம்.  அவர்கள் பார்வையிலிருந்து மெல்ல மெல்ல அரங்கன் மறைந்தான்.  தினம் தினம் வழிபாட்டில் சிறிது நேரம் போடப்படும் திரையையே எப்போது தூக்குவார்கள், எப்போது அவனைக் காணுவோம் எனத் துடிக்கும் அந்த மக்கள் இப்போது போடப்பட்டிருக்கும் இந்தக் கல்திரையைக் கண்டு உடலும், மனமும் பதறத் துடிதுடித்து அழுதார்கள்.


உதவி செய்த நூல்கள்:  ஸ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா, மற்றும் வைணவஸ்ரீ, Ulugh Khan’s expedition and the sack of Srirangam temple.

படங்கள் உதவி:  தற்சமயம் கூகிளார் தான்.  படங்கள் எடுக்கணும்.  கொஞ்சம் வெயில் கடுமை.  போகமுடியலை.  மாலை வேளைகளில் கூட்டம். :)))))

Saturday, September 08, 2012

ஸ்ரீராமுக்கு ஒரு சின்ன(:D) பதில்


ஸ்ரீராம் முக்கியமான கேள்வி ஒன்றைக்கேட்டிருக்கிறார். அரங்கன் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள சக்தியற்றவனா என அப்போது யாருமே கேள்வி எழுப்பவில்லையா எனக் கேட்டுள்ளார்.  அனைவருக்கும் தோன்றும் கேள்வி இது.  ஏன் நம் நாட்டு நாத்திகவாதிகள் கூட தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள வக்கில்லாத உங்கள் கடவுள் உங்களைக் காப்பாற்றுவார் என எப்படி நம்புகிறீர்கள் எனக் கேட்டது உண்டு தான்.  இங்கே அரங்கனுக்கு அந்த சக்தி இருந்தாலும், இப்போது அவனை நம் மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.  மேலும் படை எடுத்து வந்திருப்பது யார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

படை எடுத்து வந்திருப்பதோ மாற்று மதத்தினர்.  விக்ரஹ ஆராதனையே கூடாது என்பவர்கள்.  விக்ரஹங்களை நொறுக்கித் தள்ளுபவர்கள்.  அப்படிப்பட்டவர்கள் கைகளில் இந்த அரிய பொக்கிஷங்கள் கிடைத்தால் என்ன ஆகும்னு சொல்ல வேண்டியதில்லை.  கை, வேறு கால் வேறாக இப்போதும் பல சிற்பங்களைக் காண்கின்றோம்.  பல சிற்பங்கள், விக்ரஹங்கள் பூமிக்கடியிலிருந்து தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கின்றன.  இவை எல்லாம் புதைக்கப்பட்ட காலம் எப்போது எனச் சொல்ல வேண்டியதில்லை.  நம் நாட்டுச் செல்வங்களைக் காக்க வேண்டியே மக்கள் இம்மாதிரியான ஒரு நடவடிக்கையை எடுத்தனர்.  மேலும் இது இயற்கைச் சீற்றங்களினால் விளைந்த ஆபத்து இல்லை.  மனிதரால் நேர்வது.  மனித மன வக்கிரங்கள் எப்படி நடந்து கொள்ளும் என்பதைச் சொல்ல முடியாது.  விக்ரஹத்தைப் பாதுகாக்கவில்லை எனில் கோயில் சொத்துக்களுக்கும் ஆபத்து நேரிடும் என்பதோடு, மூலவருக்கும் ஆபத்து நேரிடலாம்.  கோயிலும் பாதுகாக்கப்பட வேண்டும், அரங்கனின் சொத்துக்களும் பாதுகாக்கப் படவேண்டும், அரங்கனும் பத்திரமாக இருக்க வேண்டும்.  அதற்கு அரங்கனை அங்கிருந்து அகற்றுவதே சரி.  அழகிய மணவாளர் இல்லை எனில் அவர்கள் கோபம் வேறு விதத்தில் திரும்பும் என்பதை அறிந்திருந்தார்கள்.  எனினும் அப்போது இந்த முடிவே சரியெனப் பட்டது.  தொலைதூரம் கொண்டு போய்விட்டால் நல்லது என நினைத்தனர்.  விக்ரஹங்களில் இறைவனைக் காணும் அவர்கள் இப்போது தங்கள் சொந்தக் குழந்தையை எப்படிப் பாதுகாத்து ஒளித்து மறைத்து வைப்பார்களோ அவ்வாறே வேற்றிடம் தேடிச் சென்று மறைத்தும் வைத்தனர்.  இது ஒரு காரணம்.

இன்னொன்று ஸ்ரீரங்கத்து மக்கள் இயல்பாகவே ரங்கனிடம் பாசம் மிகுந்தவர்கள்.  அரங்கன் அவர்களின் உயிர்; நம்பிக்கை.  அவனை நினையாமல், அவனைப் பாராமல் அவர்களுக்கு அன்றாட வேலைகள் நடவாது.  நெல் படியளக்கையில் கூட முதல் அளவை ரங்கனுக்குத் தான்.  ரங்கா எனச் சொல்லி அளந்து போட்ட பின்னரே கணக்குத் தொடரும். இன்றும் இது நடக்கிறது. எனில் இந்த நிகழ்வு நடந்த கால கட்டத்தில் கேட்கவே வேண்டாம்.  அவர்களின் உயிரே அந்த அரங்கனிடம் தான் இருந்தது.  உயிருக்கு உயிரான அரங்கனைத் தன்னந்தனியே அந்நியர் கைகளில் மாட்ட விட்டு விட்டு அவர்கள் மட்டும் பாதுகாப்பான இடம் தேடிச் செல்வார்களா?  அப்படி விட்டு விட்டுப் போனால் மீண்டும் அரங்கனைக் காண முடியுமோ, முடியாதோ!  அதோடு தினம் தினம் அரங்கனைக் காணாமல் அவன் ஆராதனைகளைப் பாராமல் அவர்கள் ஒரு கவளம் அன்னம் கூட உண்ண மாட்டார்கள்.  அரங்கன் எங்கே இருப்பானோ அங்கே அவர்கள் இருப்பார்கள்.  அப்படிப் பட்ட மக்களிடமிருந்து அரங்கனைப் பிரிக்க முடியவில்லை.  தப்பிச் செல்லுங்கள்;  ஆபத்து காத்திருக்கிறது என்றாலும் கேளாமல் அரங்கனே இருக்கையில் நாங்கள் எப்படிச் செல்வோம் என அரங்கனைப் பாதுகாக்க நினைக்கும் மக்கள்.  இம்மக்களையும் காக்க வேண்டும்.  இவை எல்லாவற்றையும் யோசித்து  கோயில் நிர்வாகத்தினர் அரங்கனை நகரை விட்டு வெளியே கொண்டு போகத் தீர்மானித்தனர். அப்போது அரங்கனுக்காக அங்கிருந்த மக்கள் அவனோடு சென்று விடுவார்கள் என நம்பினார்கள்.  ஓரளவு அப்படியே நடந்தது.

மூலவரையும் கோயிலையும் பாதுகாக்கவேண்டியும் இருந்தவர்களும் மற்றும்  திருவரங்கத்தை விட்டுச் செல்ல மனமில்லாத மக்களையும் தவிரப் பெரும்பாலோர் அரங்கனின் உலாவைப் பின் தொடர்ந்து சென்று விட்டனர்.  இதன் மூலம் அரங்கன் ஏதேனும் செய்தி சொல்கிறான் எனில் அது மக்களிடம் ஒற்றுமையை வலியுறுத்துவதும், அதற்கு ஏற்ற மன உறுதியைப் பெறுவதும் தான்.  மக்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டதால் தானே இந்நிலைமை.  ஒரு வேளை அன்னை பரமேஸ்வரி சநாதன தர்மத்துக்கு இப்போது கஷ்டகாலம் என வித்யாரண்யரிடம் சொன்னதை உண்மையாக்கவும் நடந்திருக்கலாம்.     வித்யாரண்யரின் சீடர்களின் அவசரத்தினால் வெறும் 200 ஆண்டுகளோடு இந்து சாம்ராஜ்யம் முடிவடைந்தது. :((( அதெல்லாம் இங்கே வராது.  என்றாலும் ஒன்றைத் தொட்டு மற்றவை நினைவில் வந்தன.  வித்யாரண்யர் இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்தவர் இல்லையா! அதான்.


Wednesday, September 05, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 10


மாலிக்காபூரின் படையெடுப்புக்குப் பின்னர் பத்துப் பனிரண்டு வருடங்கள்வரையிலும் ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகங்களில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் நடைபெற்று வந்தது.   நடுவில் ஒரு சிறிய முஸ்லீம் படையெடுப்பு இருந்தாலும் அதில் இருந்து ஸ்ரீரங்கமும், மக்களும் தப்பினார்கள்.  திருவிழாக்கள் கொண்டாடப் பட்டன.  மக்கள் அரங்கன் திருவுரு முன்னர் ஆடிப் பாடிக் களித்தனர்.  அழகிய மணவாளன் வீதி உலா வந்தான்.  எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.  அப்போது ஓர் நாள் அந்த மோசமான செய்தி வந்தடைந்தது.   ஸ்ரீரங்கம் கோயிலில் பவித்ரோத்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அழகிய மணவாளர் அருகிலுள்ள ஆதிநாயகன் கோயிலுக்கு எழுந்தருளி இருந்தார்.  அடியார்கள் பலரும் அழகிய மணவாளரோடு சென்றிருந்தனர்.  இங்கே ஸ்ரீரங்கத்தில் சிலர் மட்டுமே இருந்தனர்.  இன்னும் சிறிது நேரத்தில் அழகிய மணவாளர் திரும்ப வரப் போகிறார் என்பதால்  பவித்ரோத்சவ மண்டபத்தில் அவரை எழுந்தருளப் பண்ண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.  ஊர் தனக்கு நேரிடப் போகும் கலவரத்தை உணராமல் கோலாகலத்திலும், கொண்டாட்டத்திலும் ஆழ்ந்து போயிருந்தது.  பாண்டியர்களின் நிலை இன்னதெனப் புரிபடாமல் சிறந்ததொரு தலைவன் இன்றித் தான் நாடுஇருந்தது.  என்றாலும் கோயிலின் அன்றாட நிர்வாகம் ஸ்தம்பிக்கவில்லை. 

அப்போது தான் வடநாட்டுப் படையெடுப்பைக் குறித்த தகவல்கள் வந்து சேர்ந்தன.  ஹொய்சள மன்னன் எதிர்த்து நின்றதாகவும், அவனை மதம் மாறக் கட்டாயப் படுத்தியதாகவும், அவன் தன் நாடு, குடிபடைகள், கஜானா என அனைத்தையும் சமர்ப்பித்துவிட்டுத் தன் மதத்தைக் காப்பாற்றிக் கொண்டதாகவும் செய்தி வந்தது. எதிரிகள் சமயபுரத்தை நெருங்கி விட்டதாகவும் கேள்விப் பட்டனர்.  கோயிலில் அப்போது நிர்வாகியாக இருந்தவர் ஸ்ரீரங்கராஜநாத வாதூல தேசிகர் என்பார், யோசிக்க நேரமில்லை, உடனடியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார்.  ஊர்ப் பெரியோர் சிலரோடு  அப்போது அங்கிருந்த வேதாந்த தேசிகரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.  அவர்களைக் காக்கவேண்டிய பாண்டியர்களோ ஐந்து கூறுகளாகப் பிரிந்து தனித்தனியே சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.  ஹொய்சள மன்னர் வீர வல்லாளருக்கோ எதிர்த்து நிற்க முடியவில்லை.  என்ன செய்வது!  நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார்கள்.   அங்கேயே இருந்து மூலவரைக் காக்க வேண்டிய ஏற்பாடுகளையும் அரங்கனோடு செல்ல வேண்டியவர்களையும் அவர்கள் முடிவு செய்தனர்.  அதன்படி பிள்ளை லோகாசார்யர் தலைமையில் அரங்கனை ஸ்ரீரங்கத்தை விட்டுத் தென் திசைக்குக் கொண்டு செல்வது என முடிவு செய்யப் பட்டது. 

அங்கிருந்த பலருக்கும் அரங்கனைப் பார்க்காமல், அவன் ஆராதனைகளைக் காணாமல் அன்றைய நாள் கழியாது.  அரங்கனைப் பார்த்துவிட்டே அன்றாட உணவை அருந்தும் வழக்கம் உள்ளவர்கள்.  இப்படிப் பட்டவர்களிடம் தாங்கள் எடுத்திருக்கும் முடிவை எப்படிச் சொல்வது?  ஆனாலும் வேறு வழியில்லை.  மக்கள் கூட்டத்தினரிடம் முகலாயப் படையெடுப்பைக் குறித்தும், கண்ணனூர் அருகே நெருங்கி விட்டதாகவும் இப்போது செய்ய வேண்டியது அரங்கனை எவ்வாறேனும் காப்பது தான் என்றும் விவரிக்கப் பட்டது.  விழாக் காணச் சென்றிருந்த அரங்கனை அவசரம் அவசரமாகக் கோயிலில் உள்ள அணிமா மண்டபத்துக்கு எடுத்து வந்தார்கள்.  அரங்கனின் அலங்காரங்கள் களையப்பட்டன.  ஒரே ஒரு பூமாலையுடன் தோளுக்கு இனியானில் மீண்டும் அமர்த்தப்பட்டார் அழகிய மணவாளர்.  அரங்கனை ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்லும் ஏற்பாடுகள் துவங்கின. 

மக்கள் கூட்டம் கூடி இருந்தாலும் யாரும் அரங்கனை விட்டுப் பிரிய மறுத்தனர்.  அனைவரின் உயிருக்கு உயிரான அரங்கனை விட்டுப் பிரிந்து நம் உயிரைக் காத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்றே நினைத்தனர்.  அவர்களிடம் அரங்கனை ஊரை விட்டு வெளியே எடுத்துச் செல்லப் போகும் செய்தியைத் தெரிவிக்கவும், அவசரம் அவசரமாக அரங்கனோடு செல்லத் தயாரானார்கள்.  அவர்களின் லக்ஷியம், வாழ்க்கையின் நம்பிக்கை, உயிர் அந்த அரங்கனிடம் தான் உள்ளது.  தோளுக்கு இனியான் என்னும் பல்லக்கில் அமர்ந்து கொண்டு நடப்பவை அனைத்தையும் வேடிக்கை பார்க்கிறார் அவர்.  சிறிது நேரத்துக்குள்ளாக அழகிய மணவாளரும், உபய நாச்சிமார்களும் பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிய கோயில் நிர்வாக அதிகாரிகள்வேத்திர பாணிகள் என்னும் கூட்டத்தை ஒழுங்கு செய்வோர் மூலம் கூட்டத்தைக் கட்டுப் படுத்திய வண்ணம் அரங்கன் பல்லக்கைக் கோயிலை விட்டு நகர்த்தினார்கள்.  பல்லக்கு மெல்ல நகர்ந்தது.

“ஓ”வென்ற இரைச்சல்.  மக்கள் விசும்பி விசும்பி அழுதனர்.  திருச்சின்னங்கள் ஊத, வேதியர்கள் மறை ஓத, பிரபந்தங்கள் பாடப்பட, மங்கள வாத்தியங்கள் முழங்க, அதிர்வேட்டு சப்திக்க, யானை முன்னால் அசைந்து சென்று அரங்கன் வரவைத் தெரிவிக்க, ஊர்வலம் எழுந்தருளும் அரங்கன் இன்று எந்தவிதமான சப்தமும் இல்லாமல், அணிமணிகள் பூணாமல், பட்டாடைகள் தரியாமல், வண்ண மலர்மாலைகள் பூணாமல், எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல் ஓர் ஏழை, எளியவனைப் போல் மறைந்து, ஒளிந்து இரவோடிரவாகத் திருட்டுத் தனமாகக் காவிரியைக் கடந்து தெற்கே செல்லப் போகிறார்.  அதைக் காணச் சகியாமல் கூடி இருந்த கூட்டம் ஓவென அழுது ஆர்ப்பரிக்க, அரங்கனைத் தொடர்ந்து சென்றார் பலர்;  அங்கேயே மயங்கி விழுந்தார் சிலர்.  மார்பில் அடித்துக் கொண்டு அழுதார் பலர்.  அரசனைக் காண வந்தோமே, இப்படி ஆண்டியைப் போலச் செல்கிறீரே எனக் கதறிய வண்ணம் மக்கள் கூட்டம் அரங்கன் பல்லக்கைப் பின் தொடர்ந்தது.  (இதை எழுதும்போது எனக்கும் கண்ணீர்)

அன்று ஸ்ரீராமன் நாடு விட்டுக் காடு ஏகியபோது அயோத்தியில் நிகழ்ந்த அனைத்தும் இன்று ஸ்ரீரங்கத்தில் நடந்தது.  அரங்கன் உலாக் கிளம்பியது.

அரங்கனோடு நம் உலாவும் தொடரும்.



Sunday, September 02, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 9


சுரதானிக்கு அந்த அழகிய விக்ரஹம் மிகவும் பிடித்துப்போய்விடவே, அதனுடனேயே தூங்கி, விளையாடி, உணவு உண்டு என ஒரு நிமிடமும் அதை விட்டு அகலாமலே இருந்து வந்தாள்.  இங்கே கரம்பனூரில் இருந்த நம் நாட்டியப் பெண்மணிக்கோ அரங்கனைத் தொடர்ந்து சென்றதில் அவன் எங்கே போயிருக்கிறான் என்பதைக்கண்டு பிடிக்க முடிந்தது.   கடும் முயற்சிகள் எடுத்து அந்தப் புரத்துக்குள் நுழைந்து அரங்கனைச் சீராட்டிப் பாராட்டும் சுரதானியையும் பார்த்துவிட்டாள்.  அவளிடமிருந்து அரங்கனை எப்படி மீட்பது?  ஆனால் அவன் திரும்ப அரங்கம் வரும் வழியென்ன?? எதுவும் புரியவில்லை அவளுக்கு.  திரும்ப ஸ்ரீரங்கம் சென்றால் தவிர எதுவும் இயலாது எனப் புரிந்தது அவளுக்கு.  ஆகவே மீண்டும் எப்படியோ அந்தப்புரத்திலிருந்து வெளி வந்து ஸ்ரீரங்கத்தை அடைந்து விட்டாள்.  “பின் சென்ற வல்லி”  என்னும் பெயரால் அழைக்கப்படும் அவள், கோயிலில் சம்பந்தப் பட்டவர்களுக்கு அரங்கனின் இருப்பிடத்தைத் தெரிவித்தாள்.

அனைவரும் கலந்து ஆலோசித்தனர்.  அரங்கனை எவ்வாறேனும் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.  சும்மாப் போய்க் கேட்டால் சுல்தான் கொடுக்க மாட்டான்.  ஆகவே அவனை எவ்வாறேனும் கவர்ந்து அவன் மனதை மாற்ற வேண்டும்.  அதனால்  நன்றாய் ஆடிப் பாடக் கூடியவர்களாக சுமார் அறுபது பேரைத் தேர்ந்தெடுத்தனர்.  அவர்களுக்குப் “பின் சென்ற வல்லி “வழிகாட்ட அனைவரும் தில்லி போய்ச் சேர்ந்தனர்.  பெரிய கோஷ்டியாக வாத்திய முழக்கங்களுடன் தெற்கே இருந்து ஒரு நடனகோஷ்டி வந்திருப்பதை அறிந்த சுல்தான் தன் அவைக்கு அவர்களை வரவழைத்தான்.  அவர்கள் எதிர்பார்த்ததும் இது தானே!  மன்னன் சபையில் ஆடிப் பாடி அவன் மனம் மகிழும் வண்ணம் அவன் கண்களுக்கும், மனதுக்கும் விருந்து படைத்தனர்.  மன்னன் உண்மையாகவே அவர்கள் திறமையில் மனம் மகிழ்ந்தான்.  ஆகவே அவர்களுக்கு வேண்டிய பரிசில்களைக் கொடுப்பதாக மனப்பூர்வமாக அறிவித்தான்.  ஆஹா, இது, இது தானே அவர்கள் எதிர்பார்த்ததும்.  அவர்கள் தங்களுக்கு வேறெதுவும் வேண்டாம் எனவும், அழகிய மணவாளரைத் திரும்பக் கொடுத்தால் போதும் எனவும் தெரிவித்தனர்.  சுல்தான் அவர் இங்கிருந்தால் தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள் எனக் கூற, அவர்களோ அந்தப்புரத்தில் இளவரசியோடு இருப்பதைக் கூறினார்கள்.

அனைவரையும் விசாரித்த சுல்தான், தன் மகளிடமிருந்து அந்த விக்ரஹத்தைப் பிரிப்பது கஷ்டம் என உணர்ந்தவனாக அவளைத் தூங்க வைத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு கூறிவிட்டான்.  அவளோ விஷயம் ஒரு மாதிரியாகப் புரிந்து கொண்டு தூங்க மறுத்தாள்.  இந்த நடன கோஷ்டியே பல்வேறுவிதமான தாலாட்டுக்களையும் பாடி அவளைத் தூங்க வைத்தது.  அவள் நன்றாய்த் தூங்கியதும் அழகிய மணவாளரைத் தூக்கிக் கொண்டு ஸ்ரீரங்கம் நோக்கிப் பறந்தனர்.  ஆனால் சுரதானியோ!  மிகவும் மோசமான நிலையில் ஆழ்ந்தாள்.  மறுநாள் காலை எழுந்து பார்த்தால் அவள் நேசித்த அழகிய மணவாளரைக் காணவில்லை.  மனம் வருந்தி எழுந்து குளிக்காமல், உணவு உண்ணாமல், உடைமாற்றாமல் அழுது கொண்டே இருந்தாள்.  சுல்தானுக்கு மகளின் மோசமான நிலை தெரிவிக்கப் பட்டது.  தன் மகளைப் பல விதங்களிலும் தேற்றிப் பார்த்தான்.  அவளோ மனம் மாறுவதாக இல்லை.  அந்த அழகிய மணவாளரையே தான் மணந்து கொள்ளப் போவதாக வேறு சொல்லிவிட்டாள்.  தன்னையும் அவரோடு அனுப்பி வைக்குமாறு வேண்டினாள்.  அவளின் அவல நிலையைப் பொறுக்க முடியாத சுல்தான், சில வீரர்களின் பாதுகாப்போடு தன் மகளையும் அழகிய மணவாளரைப்பின் தொடர்ந்து செல்லும்படி ஆணையிட்டான்.  முன்னால் சென்று கொண்டிருந்தவர்களுக்குத் தங்களை சுல்தானின் ஆட்கள் பின் தொடர்வது தெரிந்து போய்விட்டது.  ஒரு சிலர் விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு வழியிலேயே மறைந்தனர்.  மற்றவர் ஸ்ரீரங்கம் அடைந்தனர்.  சுரதானியும் பின் தொடர்ந்தாள்.

ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்த சுரதானியோ அங்கே கோயில் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்ணுற்றாள்.  அவளுடன் வந்த வீரர்கள் தாங்கள் சென்று விசாரித்து வருவதாகக் கூறிச் செல்லக் கோயில் வாசலிலேயே காத்திருந்தாள் சுரதானி.  அங்கே அழகிய மணவாளர் இல்லை என்னும் செய்தியைக் கொண்டு வந்தனர் வீரர்கள்.  அவ்வளவு தான்.  அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்த சுரதானியின் உயிரும் அக்கணமே பிரிந்தது.  அவளுடைய உடல் மட்டும் அங்கே கிடந்ததே தவிர உயிர் அரங்கனுடன் இரண்டறக்கலந்தது.  அவளையும் ஒரு நாச்சியாராக அன்று முதல் மக்கள் வழிபட ஆரம்பித்தனர்.  முஸ்லீம்கள் உருவ வழிபாடு செய்வதில்லை என்பதால் துலுக்க நாச்சியார் சந்நிதியில் விக்ரஹங்கள் எதுவும் இருக்காது.  ஒரு ஓவியம் மட்டுமே இருக்கும்.  தினம் காலை துலுக்க நாச்சியாருக்காக அரங்கன் லுங்கி கட்டிக் கொண்டு ரொட்டி சாப்பிடுகிறார்.  இப்போ அரங்கன் கதி என்னனு பார்ப்போம்.

வழியிலே மறைந்தவர்கள் அரங்கன் விக்ரஹத்தைத் திருப்பதியிலே மறைத்து வைத்ததாகவும், பின்னால் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியில் திரும்ப ஸ்ரீரங்கம் வந்ததாகவும் பாரதீய வித்யாபவன் வெளியீடான புத்தகங்கள் இரண்டிலும் காணப் படுகிறது.  இந்தச் சமயத்திலே தான் அரங்கனைத் திருப்பதியில் மறைத்து வைத்ததாகச் சிலர் சொல்கின்றனர்.  அப்படி மறைத்து வைக்கப்பட்ட அரங்கனைத் தான் அறுபது ஆண்டுகள் கழித்து மீட்டதாகவும் சொல்கின்றனர்.  ஆனால் ஆதாரபூர்வமான தகவல்களோ மாலிக்காபூருடன் சென்ற அரங்கன் திரும்பி  வந்து விட்டதாகவும், அதன் பின்னர் வந்த உல்லூகான் படையெடுப்புச் சமயத்திலே தான் அரங்கன் பல ஊர்களுக்கும் சென்று  ஒளிந்திருந்ததாகவும், அதன் பின்னர் கடைசியில் திருப்பதியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றனர்.  வேதாந்த தேசிகர் ஆலோசனையின் பேரில் பிள்ளை உலகாரியர் தென்னாட்டுக்கு எடுத்துச் சென்றதாய்க் கூறுகின்றனர்.  இதற்கான கல்வெட்டுக்கள் ஸ்ரீரங்கம் கோயிலில் இருப்பதாகவும், அவை மறைக்கப்பட்டு வேறு சில அறிவிப்புப் பலகைகள் வைக்கப் பட்டிருப்பதாகவும் அறிகிறோம்.  இது கோயிலொழுகிலும் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறது.  நாம் இப்போதைக்கு மாலிக்காபூரைப் பார்த்துக் கொண்டோம்.  மற்ற விஷயங்களுக்கு ஒவ்வொன்றாய் வரப் போகிறோம்.  அதுக்கு முதலில் நாம் ஆதிநாயகப் பெருமான் கோயிலுக்குப் போகவேண்டும். 

மேற்கண்ட தகவல்கள் உதவி:  திரு ஹரிகி ஸ்கான் செய்து அளித்த பாரதீய வித்யாபவன் வெளியீடான ஸ்ரீரங்கம் கோயில் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகம் திரு தாஸ் அவர்களால் எழுதப் பட்டது   மற்றும் திரு தவே அவர்களால் எழுதப் பட்ட புத்தகத்தின் ஸ்கான் செய்யப் பட்ட பக்கங்கள். 

Wednesday, August 29, 2012

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 8


மன்னனால் ஆசீர்வதிக்கப்பட்ட வீரபாண்டியன் அரியணை ஏறியதை சுந்தர பாண்டியனால் சகிக்க முடியவில்லை.  இருவருக்கும் சண்டை மூண்டது.  வீர பாண்டியனுக்கோ படைபலம் இருந்தது.  சுந்தரபாண்டியன் செய்வது என்னவெனத் தெரியாமல் தவித்தான்.  அப்போது அவன் செய்த மாபெரும் தவறு தான் தென்னாட்டுக் கோயில்களுக்குப் பல வருடங்கள் பிரச்னைகள் ஏற்படக் காரணம் ஆயிற்று.  ஆம்; நாடாளும் ஆசையில் தன் பிரதிநிதிகளை டில்லிக்கு அனுப்பி சுல்தானின் உதவியைக் கோரினான் சுந்தரபாண்டியன்.  வயதில் சுந்தரபாண்டியன் இளையவன் ஆனால் அவனே பட்டமகிஷிக்குப் பிறந்த பட்டத்து இளவரசன்.  வீர பாண்டியனோ வயதில் முதிர்ந்தவன் ஆனால் அவன் ஆசைநாயகியின் மகன்.  குலசேகரோ வீரபாண்டியனை ஆட்சி செய்ய வைத்துவிட்டுச் சென்று விட்டான்.  பாண்டிய நாடு இரண்டு பட்டது.  உள்நாட்டுச் சண்டைகள் ஏற்பட்டன.  இந்தச் சண்டைகள் குறித்த மேலதிகத் தகவல்கள் தேடினேன்.  மீண்டும் பார்க்க வேண்டும்.

அப்போது டில்லி சுல்தானாக அலாவுதீன் கில்ஜி ஆண்டு வந்தான்.  அவனால் சிறைப்பிடிக்கப்பட்ட,  சந்த்ராம் என்னும் அலி, முஸ்லீமாக மதமாற்றம் செய்யப் பட்டு மாலிக்காபூர் என்னும் பெயருடன் சுல்தானின் படையின் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தான்.  பாண்டியன் உதவி தேடி வந்ததும், ஏற்கெனவே தெற்கு நோக்கி வந்து வாரங்கல் வரையிலும் தன் பலத்தைக் காட்டிச் சென்றிருந்த மாலிக்காபூர் உடனடியாக சுந்தர பாண்டியன் உதவிக்கு வந்தான்.  மாலிக்காபூரின் பெரும்படைக்கு முன்னர் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதைப் புரிந்து கொண்டிருந்த வீரபாண்டியனோ காடுகளுக்குள் ஒளிந்து கொண்டு மறைந்து இருந்து தாக்குதல் செய்தான்.  வீர பாண்டியன் போசளரின் கண்ணனூர்க் கொப்பம் செல்ல அங்கிருந்த படை வீரர்களில் பாதிப் பேர் முஸ்லீமாக இருக்கவே அவர்களும் மாலிக்காபூருடன் சேர்ந்து கொண்டு வீரபாண்டியனை எதிர்க்கவே அவன் தில்லைச் சிதம்பரம் சென்று அங்கே ஒளிந்து கொண்டான்.   அவனைப் பின் தொடர்ந்து வந்த மாலிக்காபூர் தில்லைப் பொன்னம்பலத்தை அடியோடு பெயர்த்து எடுத்து எரியூட்டி மகிழ்ந்தான்.  ஆனாலும் வீரபாண்டியன் அவன் கைகளில் சிக்காமல் போகவே மீண்டும் மதுரை நோக்கித் திரும்பினான்.  திரும்பும் வழியில் கண்களில் பட்ட கோயில்களை எல்லாம் ஆத்திரம் கொண்டு தாக்கினான்.  அவன் தாக்கிய கோயில்களில் ஸ்ரீரங்கம் கோயிலும் ஒன்று.

கோயிலினுள் நுழைய அவனால் இயலவில்லை என ஒரு சாராரும், நுழைந்துவிட்டான் என இன்னொரு சாராரும் கூறுகின்றனர்.  ஆனால் கோயிலின் விக்ரஹங்கள் கொள்ளை அடிக்கப் பட்டன.  அவற்றில் ஸ்ரீரங்கம் கோயில் உற்சவர் ஆன அழகிய மணவாளரும், உபய நாச்சியார்களோடு கொள்ளை அடிக்கப் பட்டு டில்லி நோக்கிச் சென்றன.  ஸ்ரீரங்கம் கோயிலை இடித்துப் பாழாக்கினான்.  இத்துடன் தன் வெறி அடங்காத மாலிக்காபூர் மதுரை நோக்கிச் சென்றான்.  பாண்டிய நாடு பெரும் செல்வ வளத்தோடு இருந்து வந்ததால் பாண்டிய நாட்டுக் கருவூலத்தைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்றான்.  தான் அழைத்த சுல்தான் படையினால் தனக்கு மட்டுமல்லாமல் மொத்தப் பாண்டிய நாட்டுக்கே தீங்கு ஏற்பட்டதைக் கண்ட சுந்தர பாண்டியனோ  மாலிக்காபூர் திரும்பவும் மதுரைக்கு வருவதைத் தெரிந்து கொண்டதும், பாண்டிய நாடுப் பெரும் பொக்கிஷங்களோடு மதுரையை விட்டுச் சேர நாட்டுக்கு ஓடி விட்டான்.  (அப்போது பத்மநாப சுவாமி கோயிலில் அவன் ஒளித்து வைத்த பாண்டி நாட்டுப் பொக்கிஷங்களே இப்போது கிடைத்திருப்பதாக ஒரு கூற்று. அதற்கான ஆதாரங்களையும் சொல்கின்றனர்.  ஆனால் நமக்கு இந்தக் கதை இப்போது தேவை இல்லை.)   பாண்டியனும் கிடைக்காமல், பொக்கிஷமும் கிடைக்காமல் ஏமாந்த மாலிக்காபூர் மதுரையைத் தீக்கிரையாக்கியதோடு மீனாக்ஷி கோயிலுக்கும் எரியூட்டினான்.   சுந்தரபாண்டியனின் சிற்றப்பன் மாறவர்மன் விக்கிரமபாண்டியனால் எதிர்ப்பு நேரிடவே  அவனைச் சமாளிக்க முடியாமல் மாலிக்காபூர் அங்கிருந்து ராமேசுவரம் ஓடி அங்கும் கோயிலைச் சூறையாடி எரித்து மக்களைக் கொன்று, அவர்கள் பொருட்களைக் கவர்ந்து சேதம் விளைவித்துப்பின்னர் தென்னாட்டில் கவர்ந்த பொருட்களுடன் 512 யானைகள், 5,000க்கும் மேற்பட்ட குதிரைகள், 500 மணங்கு எடையுள்ள தங்க ஆபரணங்கள், விலைமதிக்க முடியா வைரங்கள், முத்துக்கள், மாணிக்கங்கள், மரகதச் சிலைகள் போன்றவற்றைச் சுல்தானுக்குக் காணிக்கையாக எடுத்துச் சென்றான்.  கூடவே நம் அழகிய மணவாளரும் சென்றார்.

இங்கே ஸ்ரீரங்கத்திலோ கலவரம், வேதனை, கோயிலை எப்படியாவது திருப்பணிகள் செய்து புதுப்பித்துவிடலாம்.  ஆனால் அழகிய மணவாளர் இல்லாமல் உற்சவங்கள் நடப்பது எங்கே?  என்ன செய்வது?  ஶ்ரீரங்கம் அருகே உள்ள உத்தமர் கோயிலில் எம்பெருமானுக்காகத் தினம் தினம் ஆடிப் பாடி மகிழ்விக்கும் பெண்ணொருத்தி இருந்தாள்.  அவளோ அரங்கனைப் பார்க்காமல் சாப்பிடுவதில்லை.  அரங்கனைக் காணாமல், அவன் முன்னே ஆடிப் பாடாமல் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.  அரங்கன் போன வழியைத் தேடிக் கொண்டு அவளும் கிளம்பினாள்.  வழியெங்கும் விசாரித்துக் கொண்டு டில்லிப்படை சென்ற திசை நோக்கி அவளும் சென்றாள்.   விக்ரஹமும் டில்லி போய்ச் சேர்ந்தது.  தனக்கு மாலிக்காபூர் கொண்டு வந்த விலை மதிக்க முடியாப்பொருட்களைப் பார்த்து மகிழ்ந்த சுல்தான் அனைத்தையும் வீரர்களுக்குப் பிரித்து கொடுத்தான். சுல்தானின் மகள் சுரதானி என்பவள் அப்போது அங்கே வந்து அழகிய மணவாளரைப் பார்த்தாள். அந்த விக்ரஹம் அவளுடன் பேசுவது போல் தோன்றியது அவளுக்கு.  அந்த விக்ரஹத்தைத் தனக்கு வேண்டுமெனக் கேட்டு வாங்கிக் கொண்டு அந்தப்புரத்துக்கு எடுத்துச் சென்றாள்.



நன்றி: தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகம்.

Monday, August 27, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 7


சளுக்கிய சோழ வம்சத்தினர் ஹொய்சளர்களின் துணை கொண்டு கோயிலை மீண்டும் அவர்கள் வசம் கொண்டு வர நினைத்தாலும் அவர்களால் இயலவில்லை.  அப்போது தான் பாண்டியர்கள் வேறு தலை எடுத்துச் சோழர்களை நிமிர முடியாமல் செய்து வந்தனர்.  பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அரசனான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அதாவது கி.பி. 1216---1238 ஆம் ஆண்டுக் கால கட்டத்தில் அவன் கர்நாடகம் என இப்போது அழைக்கப் படும் பிரதேசங்களைக் கைப்பற்றினான்.  அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டுக் காலத்தில் அவனுடைய படைகள் திருவரங்கம் கோயிலை கங்கர்களிடமிருந்து விடுவித்தது.  ஆனாலும் கோயிலின் திருப்பணிகளில் ஹொய்சளர்களின் ஈடுபாடு குறையவில்லை.  அவர்கள் பல திருப்பணிகளைச் செய்ததாகக் கலவெட்டுக்கள் பல குறிப்பிடுகின்றன.  கி.பி. 1240ஆம் ஆண்டுக் காலத்தில் ஹொய்சள மன்னன் சோமேசுவரன் என்பான் அவனது 16-ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் இக்கோயிலுக்கு ஒரு நந்தவனம் ஏற்படுத்தி மூன்றாம் பிரகாரத்தில் ஒரு சாலையையும் ஏற்படுத்தியுள்ளான்.  கி.பி.1262 வரை ஆட்சி புரிந்த சோமேசுவரனுக்குப் பின்னர் வந்த ஹொய்சள மன்னன் இராமநாதர் என்பார்(கி.பி.1263—1297) வரை ஆட்சி புரிந்தார்.  இவர் படைத்தலைவர்களாகிய இரு சகோதரர்கள் கோயிலுக்குப் பல வகையான தானங்கள் வழங்கியுள்ளனர் என்பதைக் கோயில் வரலாற்று நூல் கூறுவதாக அறிகிறோம்.  இந்தச் சமயம் தான் மிகவும் அழகு வாய்ந்த வேணுகோபால கிருஷ்ணரின் சந்நிதியும் கட்டப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

தங்களின் எழுச்சியால் பெருமையும், கர்வமும் கொண்ட பாண்டிய மன்னர்களோ, தங்கள் பக்தியிலும் அந்த ஆடம்பரத்தைக் காட்டினார்கள் எனக் கூறுகின்றனர்.  அதன் மூலம் இந்தக் கோயிலுக்குப் பலவகையான நன்மைகளே கிட்டின.  முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1251—1268) வரை ஆண்டு வந்தான்.  இவன் பல கட்டிடங்களை இந்தக் கோயிலில் எழுப்பியுள்ளான் என்பதோடு பல்வகையான அலங்காரங்களையும் செய்ததோடு தாராளமாக நன்கொடைகளையும் வழங்கினான்.  இதனால் அவன் புகழ் மிகவும் பெரிய அளவில் பேசப்படுகின்றது என்பதோடு அவன் காலத்துக் கல்வெட்டுக்களும் அவன் ஸ்ரீரங்கம் கோயிலைப் பொன்மயமாகச் செய்தான் என்று பாராட்டுகிறது.  திருவரங்கநாதர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, விஷ்ணு நரசிம்மன் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவை இவனால் கட்டப்பட்டதாக அறிகிறோம்.  இந்தக் கட்டிடங்களும், இரண்டாம் பிரகாரமும் பொன்னால் வேயப்பட்டதாகவும் அறிகிறோம்.  இத்தோடு நில்லாமல் ஆதிசேடன் திருவுருவம், பொன்னாலாகிய பிரபை, பொன்னாலான பீடம், பொன் மகர தோரணம், பொன் கருட வாகனம் ஆகியனவும் பொன்னாலேயே அவனால் வழங்கப் பட்டிருக்கிறது.  ஒரிசா எனப்படும் கலிங்க நாட்டரசனைப் போரில் எதிர்கொண்டு வெற்றி பெற்று அவனுடைய கருவூலத்தில் இருந்து கைப்பற்றிய பல பொருள்களைக் கொண்டு ஸ்ரீரங்கநாதருக்கு மரகத மாலை, பொன் கிரீடம், முத்தாரம், முத்து விதானம், பொன் பட்டாடை, பொன் தேர், பொன்னால் நிவேதனப் பாத்திரங்கள், குவளைகள் போன்றவற்றை வழங்கியுள்ளான்.  விலையுயர்ந்த பட்டாடைகளாலும், ஆபரணங்களாலும் திருவரங்கத் திருமேனியை அலங்கரித்து மகிழ்ந்திருக்கிறான்.

இவை அனைத்தையும் தூக்கி அடிக்கும்படி செய்த இன்னொரு நிகழ்வு தெப்போற்சவம் தான்.  அரங்கன் தெப்போற்சவம் காண வேண்டித் தங்கத்தினாலேயே படகு அமைத்தான்.  தனக்கும் சேர்த்து அப்படி ஒரு படகை அமைத்துக் கொண்டிருக்கிறான்.  காவிரியில்  இரு படகுகளையும் விட்டான்.  தனது பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி அதன் முதுகில் மன்னன் அமர்ந்தான்.  மற்றொரு படகில் ஏராளமான ஆபரணங்களும், அணிமணிகளும், பொற்காசுகளும் அவனால் நிரப்பப்பட்டுக் குவிந்து கிடந்தன.  தன்னுடைய படகினது நீர்மட்டத்திற்கு மற்றொரு படகும் வரும் வரையில் அந்தப் படகில் பொன்னைச் சொரிந்து கொண்டே இருந்தான்.  பின்னர் அப்பொன்னையும், அணிமணிகளையும் இக்கோயில் கருவூலத்திற்குத் தானமாக வழங்கினான்.  தன்னுடைய எடை அளவிற்குத் தங்கத்தினாலே திருவரங்கநாதரின் விக்ரஹம் செய்து அதையும் தன் பெயரால் வழங்க வைத்துக் கோயிலுக்கு அளித்தான்.  இவ்வாறு அவன் செய்த பல திருப்பணிகளை இக்கோயில் வரலாற்று நூல் கூறுகின்றது.

இவனை அடுத்து 25 ஆண்டுகள் வரை எந்தவிதக் குழப்பமும், தொந்திரவும் இன்றி அரங்கநாதர் நிம்மதியாக இருந்து வந்தார்.  ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் அதாவது கி.பி. 1268—1308 ஆம் ஆண்டுக் காலத்தில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டுக்கும், முக்கியமாய்த் தென்னகத்துக் கோயில்களுக்கும்  மாபெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.  முதன்முதல் வெளிநாட்டிலிருந்து, போர்ச்சுக்கீசிய யாத்திரீகனான மார்க்கோபோலோ வந்து இப்பகுதியின் சிறப்பையும் செல்வச் செழிப்பையும் வியந்து எழுதியுள்ளது நாம் அனைவரும் அறிவோம்.  பாண்டிய நாட்டு மக்க்களையும், மன்னனையும் பற்றி அவர் எழுதியுள்ளவை அக்காலத்தில் நாட்டின் பெரும் செல்வத்தை மட்டும் குறிப்பிடாமல் மக்களின் உயர்ந்த பண்பையும் குறிப்பிடுகின்றது அல்லவா!  தமிழ்நாட்டின் பெரும் செல்வ வளத்தையும் முத்துக்குளித்துறையின் வளத்தையும் பற்றிப் பெருமையாகப் பேசிய மார்க்கோபோலோ தமிழகத்து மக்கள் அனைவரும் இருமுறை குளித்துச் சுத்தமாக இருந்ததாகவும், குளிக்காதவர்களைத் தூய்மைக்குறைவுள்ளவர்களாகக் கருதியதையும், நீர் அருந்துகையில் உதட்டுக்கு மேல் வைத்துத் தூக்கிக் குடித்ததையும், மன்னனாகவே இருந்தாலும் தரையில் அமர்வதைக் கெளரவக் குறைவாய்க் கருதாததையும் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்.  அதான் திருஷ்டிப் பட்டதோ என்னமோ!  குலசேகர பாண்டியன் காலத்திலேயே பாண்டிய நாட்டில் பிரச்னைகள் ஆரம்பித்தன.  இவனுக்குப் பட்டமஹிஷி மூலம் ஒரு மகனும், ஆசை நாயகி மூலம் இன்னொரு மகனும் இருந்தனர்.  பட்டத்து இளவரசன்  சுந்தரபாண்டியன் என்னும் பெயருள்ளவன்.  நியாயமாய் இவனே பட்டத்திற்கு வந்திருக்க வேண்டும்.  ஆனால்  “எம்மண்டலமும் கொண்டருளிய”  என்னும் பட்டம் பெற்ற குலசேகரனோ, தன் ஆசை நாயகியின் மகனான வீரபாண்டியனுக்கே அரசு உரிமையை அளித்தான்.  இது இரு சகோதரர்களுக்குள் பகைமையை உண்டாக்கியது என்பதோடு அந்நியரைத் தென்னகத்தில் வரவும் வழி வகுத்தது.  இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஸ்ரீரங்கம் கோயிலும், சிதம்பரம் கோயிலும், மதுரை மீனாக்ஷி கோயிலும்.  ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் இதன் அரசியல் பின்னணியையும் வரும் நாட்களில் பார்ப்போம்.

பின் குறிப்பு:  மேற்கண்ட தகவல்கள் ஆதாரம்:  அறநிலையத் துறையால் வெளியிடப் பட்ட
திருவரங்கம் திருக்கோயில் புத்தகம், வைணவஸ்ரீ, மற்றும் பேராசிரியர்
நாகசாமி அவர்களின் ராமாநுஜர் பற்றிய புத்தகத்தின் விசேஷக் குறிப்புகள்
கொண்ட வலைத்தளம்.
http://adhipiran.com/ramanujar-tamil.html


Sunday, August 19, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 6


ஸ்ரீரங்கம் கோயிலின் சரித்திரத்தை ஆராயப் புகுந்தோமானால் இந்திய சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற முக்கியக் கோயில்களில் ஒன்றாகும் என்பது புலனாகும்.   வைணவர்களுக்கு முக்கியக் கோயிலான இது எப்போது கட்டப்பட்டது என்ற சரியான தகவல்கள் கிடைக்காவிட்டாலும் கி.பி. ஏழாம்  நூற்றாண்டிலிருந்து இதன் மகிமை பேசப்படுகிறது.  வேத வேதாந்தக் கருத்துக்களைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளியாகவும் இருந்து வந்திருக்கிறது.  பல மஹான்கள், பல ஆசாரியர்கள் உருவாகி இந்தக் கோயிலின் தொண்டாற்றி வந்திருக்கிறார்கள்.   என்றாலும் இதன் பூர்வ சரித்திரம் குறித்த ஆதாரபூர்வத் தகவல்கள் கிட்டாதது நம் துரதிர்ஷ்டமே எனக் கூற வேண்டும்.  இங்கே ஏராளமான கல்வெட்டுகள் கிடைக்கின்றன.  அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.  ஆகவே கொஞ்சம் வெளிச்சம் கிட்டலாம்.  எனினும் நமக்கு இந்தக் கோயிலின் ஒவ்வொரு பிரகாரங்கள் குறித்தும், மதில்கள் குறித்தும் கிடைக்கும் விபரங்களில் இருந்து அவ்வப்போது சோழ, பாண்டிய மன்னர்களால் இந்தக் கோயில் பல திருப்பணிகளைக் கண்டிருப்பது தெரிய வருகிறது.

நான்காம் திருமதிலைக் கட்டியவர் திருமங்கை ஆழ்வார் என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.  ஏழாம் திருமதில் பிரகாரத்திலும், நான்காம் திருமதில் பிரகாரத்திலும் ஆண்டாளுக்கு எனத் தனிப்பட சந்நிதிகள் தென்மேற்கு மூலையில் ஏற்படுத்தி இருக்கின்றனர்.  இதில்  ஏழாம் திருமதில் பிரகாரத்தில் உள்ள ஆண்டாளின் திருச்சந்நிதி பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது.  கி.பி. பனிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதிநான்காம் நூற்றாண்டிற்கு அது கட்டப்பட்டிருக்கும் என அந்தச் சந்நிதி பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டிருப்பதில் இருந்து தெரிய வருகிறது.  இதைத் தவிர நான்காம் திருமதில் பிரகாரத்தில் இருக்கும் ஆண்டாள் சந்நிதி கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் என்கின்றனர்.  கல்வெட்டுகள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்து கிடைப்பதாகச் சொல்கின்றனர்.  கோயிலின் முக்கியத்துவம் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் இந்தக் கோயில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.  சோழ மன்னர்களின் குல தெய்வமாக ஸ்ரீரங்கநாதப் பெருமானும், அவர்கள் முடி சூடிக்கொள்ளும் பரம்பரைக் கோயிலாக சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலும் இருந்து வந்திருக்கிறது.  ஆகவே ரங்கராஜனும், நடராஜனும் சோழர்கள் வாழ்வில் இரு கண்களைப் போலவே இருந்து வந்திருக்கின்றனர்.

சோழமன்னர்கள் கல்வெட்டுக்களில் பழமையானதாகச் சொல்லப்படுவது முதலாம் பராந்தகனின் கல்வெட்டு ஆகும்.   இம்மன்னன் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெள்ளிக் குத்துவிளக்கு ஒன்று அளித்ததோடு அல்லாமல் கற்பூரம், பருத்தித் திரிநூல் வாங்க, குத்துவிளக்குப் பராமரிப்பு, விளக்கு ஏற்றும் செலவு என 51 பொற்காசுகளையும் வழங்கி இருந்திருக்கிறான்.  அதோடு கோயிலில் மூன்று இரவுகள் வேதம் ஓதப் படுவதற்காகவும் தானம் வழங்கி இருக்கிறான்.  இவனுக்கு அடுத்துச் சிறப்பாகச் சொல்லும்படி தானம் வழங்கிய மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் மகன்களில் ஒருவனான ராஜமஹேந்திர சோழனின் தானம் ஆகும்.  கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது கி.பி. 1060---1063 ஆம் ஆண்டில் இங்குள்ள முதல் பிரகாரத்தின் திருமதிலைக் கட்டியதால் இது ராஜமஹேந்திரன் திருவீதி என வழங்கப் படுகிறது.  கிட்டத்தட்ட இந்தச் சமயம் தான் ஸ்ரீபெரும்புதூரில் உடையவர் என அழைக்கப்படும் ஸ்ரீராமாநுஜர் தோன்றிப் பல்லாண்டுகள் வாழ்ந்து வைணவத்தையும், ஸ்ரீரங்கநாதர் கோயிலையும் நெறிப்படுத்தியதாகச் சொல்லப் படுகிறது. இதற்குத் தனியாக வருவோம்.  இப்போது கோயிலின் சரித்திரங்களை முதலில் பார்ப்போம்.

ஸ்ரீராமாநுஜர் காலத்தில் சோழ மரபின் வம்சாவளியில் நேரடி வாரிசு இல்லாமல் போக, சாளுக்கிய—சோழ மரபில் வந்த இரண்டாம் ராஜேந்திரன் என்பவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்க நேரிட்டது.  சோழ குலத்தின் நேரடி வாரிசு ஆன அதி ராஜேந்திரன் சந்ததி இல்லாமல் இறந்து போனான்.  முதலாம் ராஜேந்திரனின் மகளைத் திருமணம் செய்து கொண்ட  ராஜராஜ நரேந்திரனின் மகனான இவன் சிறு வயதிலிருந்தே சோழ நாட்டிலேயே வளர்ந்து வந்தவன்.  தன் மாமன் இறந்ததும் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் இவனுக்கு மக்கள் ஆதரவு பெருமளவு இருந்து வந்ததால் அமைச்சர்கள் இவனைத் தேர்ந்தெடுத்துக் குலோத்துங்கன் என்ற பட்டப் பெயர் சூட்டி முடிசூட்டினார்கள்.  இவனை முதலாய்க் கொண்டு தான் தமிழ்நாட்டில் கீழைச்சாளுக்கிய—சோழப் பரம்பரையின் ஆட்சி தொடங்கியது.  முதன்முதல் வேற்று நாட்டு இளவரசன் தமிழ்நாட்டு அரசனாக முடி சூடியதும் இவன் காலத்தில் தான்.  இவனுக்கும் ஸ்ரீராமாநுஜருக்கும் பகைமை இருந்து வந்ததாய்க் கோயில் ஒழுகு சொல்கிறது.  இது குறித்துப் பின்னர் பார்க்கப் போகிறோம்.

ஆனால் இந்தச் சளுக்கிய சோழகுல மரபில் முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டும், ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம்  சோழர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்து வந்ததைச் சொல்கிறது.  தமிழ்நாட்டின் அப்போதைய காலநிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.  திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் அடிக்கடி சச்சரவுகள்;  வாதப் பிரதிவாதங்கள்.  மூன்றாம் குலோத்துங்கனின் இருபதாண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டு ஒன்றின் மூலம் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாக அலுவலர்கள், ஜம்புகேஸ்வரக் கோயில் ஆட்சியாளர்களோடு சமரமாகப் பூசல்களைத் தீர்த்துக்கொள்ளும்படிக் கட்டளை இட்டிருக்கிறான்.  இத்தனைக்கும் ஒரிசா வரை சோழ ஆட்சி பரவி இருந்தாலும் தெற்கே இருந்து இலங்கையின் துணையோடு பாண்டியர்களும், கீழ்த்திசையில் ஆட்சி புரிந்த கங்கர்களும், அடிக்கடி சோழர்களைத் தாக்கி வந்தனர்.  இதில் கி.பி. 1223 முதல் 1225 வரையிலும் ஸ்ரீரங்கம் கோயில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டுக் கோயிலின் நிர்வாகம் முற்றிலும் சிதைந்து பாழ்பட்டுப் போனது என்பதை அறிகிறோம்.

பின் குறிப்பு:  மேற்கண்ட தகவல்கள் ஆதாரம்:  அறநிலையத் துறையால் வெளியிடப் பட்ட
திருவரங்கம் திருக்கோயில் புத்தகம், வைணவஸ்ரீ, மற்றும் பேராசிரியர்
நாகசாமி அவர்களின் ராமாநுஜர் பற்றிய புத்தகத்தின் விசேஷக் குறிப்புகள்
கொண்ட வலைத்தளம்.
http://adhipiran.com/ramanujar-tamil.html