எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, July 27, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பைரவர்!

சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தோடு சித்தானான்”

என்று ஸ்வர்ணாகர்ண பைரவாஷ்டகம் கூறுகிறது. பைரவரின் அவதாரத்தின் காரணமும் சதுர்முகனின் தலையைக் கொய்வது தான். ஈசனைப் போலவே ஐந்து முகங்களுடனே இருந்தான் பிரம்மாவும். சதுர்முகனின் ஐந்து முகங்களையும் ஒரு சமயம் ஒரு சேரப்பார்த்த தேவியே ஈசனுக்கும், சதுர்முகனுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு கண நேரம் மயங்க சதுர்முகனின் ஆணவம் தலைக்கு ஏறியது. மதிமயங்கிய சதுர்முகன் சிவநிந்தனை செய்யத் துவங்க, அவனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டி ஈசன் அந்த ஐந்தாவது சிரத்தைத் துண்டிக்க எண்ணி பைரவரைத் தோற்றுவித்தார். வடுகனாக, (சின்னஞ்சிறு பிரம்மசாரியை வடு என்பார்கள்) சிவந்த நிறத்துடனும், ஜூவாலை வீசும் ஜடாமுடிகளுடனும், அந்த சிவந்த ஜடாமுடியில் குளிர் நிலவான சந்திரப் பிறையுடனும், கைகளில் உடுக்கை, சூலம், ஏந்தியவண்ணம், பாசக்கயிற்றையும் ஏந்திய வண்ணம் தோன்றிய பைரவர் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்து எடுக்க அதுவும் அவர் கரங்களில் தங்கலாயிற்று. நான்கு வேதங்களும் நான்கு நாய்களாக மாறி வாகனமாக மாற, மூன்று கண்களோடும், இவ்வுலகையும், மற்றும் அனைவரையும் காப்பாற்றும் க்ஷேத்திர பாலகராய், பூத, பிசாசுக்கூட்டங்களுக்கும் தலைவனாய்த் தோன்றினார் பைரவர். இவரை வடுக பைரவர் என்பார்கள்.

இந்தக் கதையை பிரம்மாவும், விஷ்ணுவும் அடிமுடி தேடிய கதையோடும் சம்பந்தப்படுத்தி, அதிலே பிரம்மா பொய்யுரைத்ததால் பிரம்மாவின் சிரத்தை அறுக்குமாறு கட்டளையிட்டதாயும் ஒரு கூற்று உண்டு. எப்படி இருந்தாலும் பிரம்மாவின் ஆணவத்தை அடக்கி ஒடுக்கத் தோன்றியவரே பைரவர். இந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கண்டியூர் என்பார்கள். ஈசனின் அட்ட வீரட்டானத் தலங்களில் முதன்மையான வீரமும் இதுவே. முதன்மையான வீரட்டானத் தலமும் இதுவே. பிரம்மாவின் சிரத்தைக் கொய்த பைரவருக்கு இங்கே தனிச் சந்நிதி இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம். பிரம்மாவின் சிரத்தைக் கொய்தவண்ணம் காணப்படும் சிற்ப அதிசயம் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ளதாயும் கேள்விப் படுகிறோம். இதிலே பிரம்மா தன் ஐந்தாவது தலையை இழந்துவிட்டு அந்த பயத்துடனேயே நிற்பது போல் காட்சி அளிக்கிறார் என்றும் தெரிய வருகிறது. கொஞ்சம் கோபத்துடன் பைரவர் காணப்படுவார். இவ்வுலகைக்காக்கும் பொறுப்பை ஈசன் பைரவருக்கு அளித்திருப்பதாயும், இரவெல்லாம் தன் வாகனமும், தோழனுமான நாயுடன் பைரவர் சுற்றி வந்து காவல் புரிவதாயும் ஐதீகம்.

பைரவர் என்றாலே பயங்கரமான ஆள் என்றே அர்த்தம். பாதுகாவலர் என்பதால் பெண்கள் இவரை வழிபட்டால் பெண்களுக்குப் பாதுகாவலாக இருந்து காத்துவருவார். வைரம் எப்படி உறுதியாக இருக்கிறதோ அவ்வாறே இவரும் உறுதியாகத் தன் காவல் வேலையைச் செய்து வருவதால் சில இடங்களில் இவர் வைரவர் எனவும் அழைக்கப் படுகிறார். வைரவன் பட்டி என்ற பெயரில் ஒரு தலம் செட்டிநாட்டுப் பகுதியில் காண முடியும். சில இடங்களில் ஒரே ஒரு நாயுடனேயே காணப்படுவார். சிவன் கோயில்களின் வெளிபிரஹாரத்திலேயே குடி கொண்டிருக்கும் வைரவர் என்னும் பைரவரின் சந்நிதியில் கோயிலைப் பூட்டிச் சாவியை வைத்துவிடுவார் என்றும் மறுநாள் காலை வரை சாவி அந்த இடத்திலெயே இருக்கும் என்று செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.


இந்தியாவில் பைரவ வழிபாடு பிரபலமான ஒன்று என்றாலும் ராஜஸ்தானிலும், நேபாளத்திலும், காசியிலும் மிகச் சிறப்பாக வழிபடுகின்றனர். பெளத்தர்களுக்கும் பைரவ வழிபாடு உண்டு என்றும் ஒரு செய்தி தெரிவிக்கிறது. இது குறித்த உறுதியான தகவல் இல்லை. பைரவரை எட்டு விதமாக வழிபடுகின்றனர்.

கால பைரவர்
அஸிதாங்க பைரவர்
சம்ஹார பைரவர்
ருரு பைரவர்
க்ரோத பைரவர்
கபால பைரவர்
ருத்ர பைரவர்
உன்மத்த பைரவர்
கால பைரவர் தான் சனி பகவானின் குரு என்றும் கருதப்படுகிறார். சிங்களத்திலும் பைரவ வழிபாடு உண்டு. சொத்துக்களைப்பாதுகாப்பவராய்க் கருதப் படுகிறார். தமிழ்நாட்டிலோ வைரவர் என்ற பெயரில் எட்டுத் திக்கையும் காக்கும் கிராம தேவதையின் உருவிலோ, அல்லது வைரவர் என்ற பெயரிலோ வணங்கப் படுகிறார். சிவ வழிபாட்டின் அகோர வழிபாடு என்னும் பிரிவில் பைரவர் முக்கியமான அங்கம் வகிக்கிறார்.

Tuesday, July 19, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!

அஞ்சையும் அடக்கி ஆற்றலுடையனாய் அநேக காலம்
வஞ்ச மிள் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்களாகி விசையொரு பாயுங்கங்கை
செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே!

திருநாவுக்கரசரின் இந்தப் பாடல் ஐம்புலன்களையும் அடக்கித் தவம் புரிந்து கங்கையை விண்ணிலிருந்து மண்ணுக்குக் கொண்டு வந்த பகீரதனின் எல்லையற்ற ஆற்றலையும் பகீரதனுக்காகப் பன்முகங்களுடன் விரைந்து வந்த கங்கையையும் திருச்சேறை என்னும் ஊரில் உள்ள ஈசன் தன் செஞ்சடையில் ஏற்று அருள் புரிந்ததாகப் பாடி இருக்கிறார். இந்தத் திருச்சேறையில் தான் ஸ்ரீருணவிமோசன லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறதை அறிந்து பார்க்க வேண்டிச் சென்றோம். சென்ற சமயம் கோயிலில் குருக்கள் இல்லை. வரக் கொஞ்சம் நேரம் ஆகும் என்றதால் அரை மணி போல் காத்திருந்துவிட்டுத் திரும்பிவிட்டோம். கருவறையை லேசாய் மூடி இருந்தனர். அதில் உள்ள இடைவெளி மூலம் தரிசனம் செய்து கொண்டோம். சுயம்புலிங்கம் என்று சொன்னார்கள். மேலும் இந்தக் கோயிலில் துர்க்கைக்கு மூன்று சந்நிதிகள் காணப்பட்டன. இங்குள்ள பைரவரும் அப்பரால் பாடப்பட்டவர் என்றார்கள். பைரவரைக்குறித்த பாடல்,

“விரித்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடுதமருங்கை
தரித்ததோர் கோலே கால பைரவனாகி வேழம்
உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே!”

இவ்வண்ணம் பூமிக்கு வந்தாள் கங்கை. இமவானின் மூத்தமகளாகக் கருதப் படும் கங்கையைத் தன் சடையில் ஈசன் தாங்கிக்கொண்ட கோலமே ஸ்ரீகங்காதரர் ஆகும். கங்காதரரின் திருவுருவம் யோகபட்டத்தோடு, ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் விரிசடையில் ஆமை, மீன், முதலை போன்ற உயிரினங்களோடு கங்கையின் திருமுகம் காணப்படும் என்றும் ஈசனின் கரங்கள் மான், மழுவைத் தாங்கி, சின் முத்திரை காட்டிய வண்ணம் இன்னொரு கீழ்க் கை வரத முத்திரையும் காட்டிக்கொண்டு காட்சி அளிக்கும் என்று வர்ணிக்கப் படுகிறது. இந்தப் படம் கிடைக்கவில்லை. மீன்களோடு ஒரு படம் இருந்தது. அதையும் கூகிளில் தேடினேன். வரவில்லை. 

ஈசன் தன் செஞ்சடையில் இருந்து கங்கையை எடுத்து வெளியே விடும் வண்ணம் காட்சி அளிக்கும் திருவடிவங்களே பல ஆலயங்களிலும் காண முடியும். அருகே சற்றே முகத்தைத் திருப்பிய வண்ணம் எழிலார்ந்த கோலத்தில் அன்னையும், வணங்கிய நிலையில் பகீரதனும் காணப்படுவார்கள். நந்தி ஈசன் விடும் கங்கை நீரை வாங்கி உமிழும் கோலத்தில் காணப்படுவார். மிக அரிய சிற்பம் இது. இன்னும் காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயில், புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களிலும் காணமுடியும். இதிலே காஞ்சி கைலாசநாதர் கோயிலைப் பலமுறை தரிசித்தும் சரியாய் நினைவில் இல்லை. அதேபோல் மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாளையும் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகின்றன.  ஆனால் கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலிலும், தாராசுரத்திலும், திருவிடைமருதூரிலும் இருப்பதாய்க்கேள்விப்படுகிறோம். அடுத்த முறை அங்கே செல்லுகையில் கட்டாயமாய்ப் பார்த்துப் படங்கள் எடுத்து வரவேண்டும். சிதம்பரத்தில் கங்கைக்குத் தனியே சந்நிதி உண்டு.


அடுத்து நாம் காணப் போவது நெடுநாளாகக் காண வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீகாலபைரவர். பைரவர் ஈசனின் பல்வேறு வடிவங்களில் மிக முக்கியமானவர். இவரே கோயில்களின் பாதுகாப்புக்கும் உரிய கடவுள் ஆவார். ஈசன் கோயில்களை பைரவரே காத்து வருவதாக ஐதீகம். முன்காலங்களில் கோயில்களைப் பூட்டிச் சாவியை வெளிப் பிராஹாரத்தில் காணப்படும் பைரவர் சந்நிதியில் வைத்துவிடுவார்களாம். பைரவர் தன் வாகனம் ஆன நாயுடன் கோயிலைச் சுற்றி உலா வந்து கொண்டிருப்பார் என்றும் பலர் கண்களிலும் பட்டிருக்கிறார் என்றும் கூறுவார்கள். சிதம்பரத்தில் பைரவர் தனம் தருபவராக இருந்திருக்கிறார். தில்லை வாழ் அந்தணர்கள் தங்கள் பிழைப்புக்குப் பணமோ, பொருளோ இல்லாமல் வருந்த ஈசன் பைரவருக்கு ஆணை யிட ஒவ்வொரு நாளும் இரவில் பைரவர் பொற்காசுகளை நடராஜர் சந்நிதியில் வைத்து விடுவார் என்றும் அதைக் காலையில் அன்றாட வழிபாட்டுக்கு வரும் தீக்ஷிதர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வார்கள் என்றும் சிதம்பரம் வாழ் தீக்ஷிதர்கள் கூறுவார்கள். சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதிக்கு அருகேயே கீழ்ப்பக்கமாக பைரவருக்கும் தனி இடம் உண்டு. அவருக்கு அபிஷேஹமும் உண்டு. இங்கே பைரவருக்கு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர். இனி பைரவர் குறித்த செய்திகளை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம்.

Sunday, July 10, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!


பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடையவேண்டி, கங்கை பூமிக்கு வந்து பாதாளத்துக்கும் பாய்ந்து அவர்களை மோக்ஷம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக் கொண்டான். கங்கை, “அப்பா, பகீரதா! உன் நோக்கம் மிகவும் பெருமைக்குரிய ஒன்றே! நானும் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்குவாளா? அவளால் இயலாது. நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்ய முடியுமா உன்னால்? அப்படி எனில் நான் வருகிறேன்.” என்று கூறினாள். பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும், பூமியின் மகா பராக்கிரம சாலிகளையும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்தனர். பின்னர் மஹாவிஷ்ணுவை பகீரதன் வேண்ட, அவரோ, “இது ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெற்று அவர் மூலம் கங்கையை வரவழை.” என்று கூறிவிட்டார்.

பகீரதனும் ஈசனைக் குறித்துத் தவம் இருந்து வேண்ட, மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்குக் காட்சி அளித்தார். “பகீரதா, உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம்; உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும், உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கையை பூமிக்கும், பின்னர் பாதாளத்துக்கும் அழைத்து வர நான் உதவுகிறேன். எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன்.” என்றார். பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க, அவளும் மகிழ்வோடு வரச் சம்மதித்தாள். “ஹோ” வென்ற ஆரவாரமான சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்தாள் கங்கை. ஈசன் தன் சடையை விரித்துப் பிடிக்க, கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. ஆஹா, நம் வேகம் என்ன? இந்த சடாபாரத்தின் பலம் என்ன?? இதனால் நம்மைத் தாங்க இயலுமா என்ன? என் ஆற்றலையும், வேகத்தையும் இந்தப் பிக்ஷாடனனால் தாங்க இயலுமா?” என யோசித்தாள்.

எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டம் புரிந்து கொண்டவராய், நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார் சுருட்டி. திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவிக்க, பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைய, ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றைக்காலில் தவமிருந்தான். அவன் முன் தோன்றிய ஈசன், கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு, கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட, கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான். வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் தன் நீர்க்கரங்களால் அந்த ஆசிரமத்தை முற்றிலும் உருட்டித் தள்ளிக்கொண்டு முனிவரையும் நீர்ப்பெருக்கோடு உருட்டித் தள்ள ஆயத்தமானாள்.

கோபம் கொண்ட முனிவர், கங்கையை அப்படியே தன் கைகளால் எடுத்து அள்ளிக் குடித்து ஆசமனம் செய்துவிட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும், கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் எலும்புகள் மற்றும் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான். சகரபுத்திரர்களுக்கு நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்ததாக ஐதீகம். இந்தக் கங்கையைத் தலையில் தாங்கிய ஈசனே கங்காதரர் எனப்பட்டார்.

Sunday, July 03, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!

அடுத்து நாம் காணப் போவது கங்காதரரை. கங்கையை ஈசன் தலையில் சுமந்த காரணத்தையே இப்போது நாம் அறியப்போகிறோம். இக்ஷ்வாகு குலத்து அரசன் ஆன சகரனுக்கு முதல் மனைவி மூலம் இரு மகன்களும், இரண்டாம் மனைவி மூலம் அறுபதினாயிரம் புதல்வர்களும் இருந்தனராம். சகரன் அஸ்வமேத யாகம் செய்ய உத்தேசித்து, அஸ்வமேதக் குதிரையை நன்கு அலங்கரித்து மூவுலகையும் சுற்றிவர அனுப்பி வைத்தான். அந்தக் குதிரையை தேவேந்திரன் கவர்ந்து கொண்டு சென்று பாதாளத்தில் ஒளித்து வைக்கிறான். ஒளித்து வைத்த இடம் கபில முனிவரது ஆசிரமம். இந்த விஷயம் சகரனுக்குத் தெரியாது. குதிரையைக் காணோமே என்று தேடுகிறான். யாகத்திற்கு எனக் காப்புக் கட்டிக் கொண்டுவிட்டான். ஆகவே யாகசாலை எல்லையைத் தாண்டி அவன் செல்ல முடியாது. ஆகவே தன் அறுபதினாயிரம் புதல்வர்களையும் குதிரையைத் தேடி வரும்படி அனுப்பி வைக்கிறான்.

தேவலோகத்திலும், பூலோகத்திலும் குதிரையைத் தேடிக் காணாமல் ஏமாற்றம் அடைந்த சகரனின் புதல்வர்கள், கடைசியில் பாதாளத்திற்கு வருகின்றனர். அங்கே கபில முனிவரது ஆசிரமத்திற்கு அருகே குதிரை இருப்பதைக் கண்டு அங்கே சென்றனர். குதிரையைக் கபிலர் தான் பிடித்து வைத்திருப்பாரோ எனச் சந்தேகமும் கொண்டனர். இவர்களின் தேடுதலாலும் அத்து மீறி நுழைந்ததாலும் கோபம் கொண்ட கபிலர் அவர்களைச் சாம்பலாகும்படி சபிக்க, அவர்களும் அப்படியே எரிந்து சாம்பலாயினர். தன் புதல்வர்கள் திரும்பி வராததைக் கண்ட சகரன், அடுத்துத் தன் பேரன் ஆன அம்சுமான் என்பவனை அனுப்பி வைக்கிறான். அனைவரையும் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வரும்படி சொல்லி அனுப்பி வைத்தான். அம்சுமானும் கிளம்பி விண்ணிலும், மண்ணிலும் குதிரையைத் தேடிவிட்டுப் பின்னர் பூமிக்கு அடியில் பாதாளத்தில் செல்ல வேண்டி அஷ்ட நாகங்களையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு அவற்றின் உதவியோடு பாதாளத்தை அடைந்தான். அங்கே கபிலரின் ஆசிரமத்தையும் அடைந்தான். அங்கே சென்று கபிலரை வணங்கிப் பணிந்து தான் வந்த காரியத்தைக் கூற மனம் வருந்திய கபிலர் தாம் அவர்களை எரிந்து சாம்பலாகும்படி சபித்ததைக் கூறி வருந்தினார். யாகக் குதிரையையும் அம்சுமானிடம் திரும்பக் கொடுத்தார். முனிவரின் செய்தியோடு ஆசிகளையும் பெற்றுக்கொண்ட அம்சுமான் குதிரையை ஓட்டிக்கொண்டு வந்து தன் பாட்டன் சகரனிடம் ஒப்படைத்தான். மனம் வருந்திய சகரன் தன் பிள்ளைகளின் நிலையைக் குறித்தும் அவர்களின் கதியை நினைத்தும் மனம் வருந்தினாலும் யாகத்தை நிறுத்தாமல் முடித்துவிட்டுப் பின்னர் பிள்ளைகளின் நற்கதிக்குத் தவம் இருந்தான், அவன் கோரிக்கை நிறைவேறாமலேயே இறந்தும் போனான்.

அதன் பின்னர் பேரன் அம்சுமான் பல காலம் ஆண்டு விட்டுத் தன் குமாரன் திலீபனுக்கு அரசாட்சியை அளித்தான். இறந்த முன்னோர்களுக்கு நற்கதி கிடைக்கத் தவம் மேற்கொண்டும் இருவராலும் அது நிறைவேறவே இல்லை. திலீபன் தன் மகன் பகீரதனுக்கு அரசுரிமையை அளித்துவிட்டு இறந்தான். பகீரதன் வழிவழியாகச் சொல்லி வந்த தன் குலத்து முன்னோர்களின் கதையைக் கேட்டிருந்தான். ஆகவே அவன் தன் முன்னோர்களுக்காகத் திருக்கோகர்ணத்தில் தவமிருந்து பிரம்மனை வேண்டினா. அவன் தவம் மிகக் கடுமையாக இருக்கக் கடைசியில் பிரம்மா தோன்றி அவனை வாழ்த்தினார். பின்னர் அவனிடம் அவன் குலத்து முன்னோர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் விண்ணில் ஓடும் கங்கையை பாதாளத்திற்குக் கொண்டு வந்து அந்தப் புனித நீரால் சாம்பலைக் கரைத்து எலும்புகளை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும் என்று ஆலோசனையும் கூறுகிறார்.

Saturday, July 02, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கிராத மூர்த்தி!

கோபம் கொண்ட அர்ஜுனன், வேடனாகிய ஈசனைப் பார்த்து, இந்தப் பன்றியைத் தன்னுடைய வில்லில் இருந்து கிளம்பிய அம்பே கொன்றதாகவும், ஆகவே பன்றி தனக்குத் தான் சொந்தம் எனவும் கூறிவிட்டுக் குனிந்து செத்த பன்றியைத் தூக்க முனைந்தான். வேடுவன் அவனைத் தன் காலால் தடுத்தான். அதைக் கண்டு திகைப்புற்ற அர்ஜுனன் நிமிர்ந்து பார்க்க வேடன், “வா, நாம் இருவரும் போர் புரிவோம். உன்னால் இயன்றால் உன் பாணங்களால் என்னை அடித்துப் போட்டுவிட்டுப் பின்னர் அந்தப் பன்றியை எடுத்துச் செல்வாய்!” என்று கூறிய வண்ணம் போருக்கு ஆயத்தமானார். கோபம் கொண்ட அர்ஜுனனும் போருக்குத் தயாரானான். அந்த வேடன் மீது அம்பு மழை பொழிந்தான். ஆனால் என்ன ஆச்சரியம்! அர்ஜுனனின் அம்உகளோ, அஸ்திரங்களோ அந்த வேடனைப்பாதிக்கவே இல்லை. வேறு வழியில்லாமல் தனது காண்டீபத்தையே தூக்கி அதனால் வேடனை அடிக்க முனைந்தான் அர்ஜுனன். ஆனால் அந்த வேடனோ காண்டீபத்தைப் பறித்துக் கொன்டு அர்ஜுனனோடு மல்யுத்தம் செய்து அவனை அப்படியே மேலே தூக்கிக் கீழே அடிக்க, அர்ஜுனன் மூர்ச்சை அடைந்து விழுந்தான்.

சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்த அர்ஜுனன் தன்னருகே ஒரு சிவலிங்கத்தைக் கண்டான். உடனே பக்தியுடன் எழுந்து அதை வணங்கிக் காட்டுப் பூக்களைக் கொண்டு ஒரு மாலை கட்டி சிவலிங்கத்திற்குச் சாற்றி வழிபட்டான். பின்னர் அவனுக்குத் தான் கீழே விழுமுன்னர் நடந்தவை நினைவில் வர வேடனைத் தேடிக் கண்டு பிடித்தான். வேடன் போகும்போது காண்டீபத்தை வேறு கொண்டு போய்விட்டான். ஆகவே வேடனைக் கண்டதும் மீண்டும் போருக்கு ஆயத்தமான அர்ஜுனனுக்கு என்ன ஆச்சரியம்! சிவலிங்கத்தின் தலையில் தான் சாற்றிய மாலையை இந்த வேடன் தன் தலையில் அணிந்து கொண்டிருக்கிறானே. பதறிய அர்ஜுனன் ஓடோடியும் வந்து லிங்கம் இருந்த இடத்தைப் பார்த்தான். லிங்கத்தின் தலையில் அவன் சாற்றி வழிபட்ட மாலை அப்படியே இருந்தது. மீண்டும் ஓடிப் போய்ப் பார்த்தால் வேடன் தலையிலும் அதே. உண்மை விளங்க வேடன் காலடியில் விழுந்து வணங்கினான் அர்ஜுனன். மல்யுத்தம் செய்கையில் தழுவிக் கொண்டு சண்டை போட்ட அர்ஜுனனை இப்போது ஈசன் பாசத்தோடும், பரிவோடும் ஆரத் தழுவினார். அவனை மனமார ஆசீர்வதித்து, அவன் வீரத்தைப் பாராட்டி, சக்தி வாய்ந்த, ‘பிரம்ம சிரஸ்’ எனப்படும் பாசுபத அஸ்திரத்தையும் அவனுக்கு அளித்து, அதைப் பயன்படுத்தும் முறைகளையும் கற்றுக் கொடுத்தார். காண்டீபத்தையும் திரும்ப அளித்தார். விண்ணிலிருந்து தேவர்கள் பூமாரி பொழிய அவர்கள் பங்கிற்கு இந்திரன், அக்னி, எமன் போன்றவர்களும் அர்ஜுனனுக்கு ஆயுதங்களை அளித்து வாழ்த்த அர்ஜுனன் பெரும்பேறு பெற்றான்.

இது மஹாபாரதக் கதை, ஆரண்ய பர்வத்தில் வரும். இந்த பாசுபதம் பெற்ற திருத்தலமாகத் தமிழ்நாட்டின் திருவேட்களம் சொல்லப் படுகிறது. சிதம்பரத்திற்கு அருகேயே அமைந்துள்ளது. (இன்னும் பார்க்காத கோயில்களில் இதுவும்), ஈசனின் பெயரே பாசுபத நாதர் என்பதாகும். அம்பிகை சகல நற்குணங்களையும் கொண்டு சற்குணாம்பிகை என அழைக்கப் படுகிறாள். இந்தக் கோயிலில் இந்தத் தல புராணத்தை விளக்கும் சிற்பங்களைக் காணலாம் எனத் தெரிய வருகிறது. பாசுபத நாதர் இடக்கையில் வில்லை ஏந்தியும், வலக்கையில் அம்பை ஏந்தியும், ஜடாமகுடம் தரித்து, கழுத்தில் வேடுவர்களுக்கே உரிய கொம்பு மாலையுடனும், காலில் வீரக் கழலுடனும் காட்சி அளிப்பதாய் அறிகிறோம். இதைத் தவிர பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள திருவேட்டக்குடி என்னும் ஊரிலும் அர்ஜுனனுக்கு அருள் புரிந்த தலமாய்க் கருதப் படுகிறது.

இதைத் தவிரக் கிராதமூர்த்தியை நாம் காண்பது கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோயிலில் தான். ஆனால் அர்ஜுனனுக்கும் இங்கே காண்பவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மஹாபிரளயத்தின்போது படைப்பதற்குரிய மஹாவித்துக்களை வைத்த குடத்தை அமுதத்தால் நிறைத்து மிதக்க விட அது மிதந்து ,மிதந்து கும்பகோணம் இருக்குமிடத்தை அடைகிறது. மீண்டும் சிருஷ்டியைத் தொடங்க வேண்டி ஈசன் கிராதமூர்த்தியாக வந்து தன் அம்பால் அமுதக்குடத்தை உடைக்கிறார். உடைந்த குடத்து அமுதம் மணலில் கலக்க, அங்கே சிவலிங்கம் தோன்ற அதைப் பூஜிக்கிறார் பிரம்மா. சிருஷ்டி ஆரம்பம் ஆனது. கும்பகோணத்தில் குடம் வந்து சேர்ந்ததாலேயே இந்த ஊருக்குக் குடமூக்கு என்று பெயர் ஏற்பட்டதாகவும், குடம் வைக்கப் பட்டிருந்த இடம் குடவாயில் என அழைக்கப் படுவதாயும் தெரிந்து கொள்கிறோம். வேடுவனாகிய ஈசன் பாணங்களைத் தொடுத்த இடம் பாணாதுறை என இப்போதும் அழைக்கப் படுகிறது. இந்தத் தலத்தின் ஆதிமூர்த்தியாகக் கிராத மூர்த்தியே சொல்லப் படுகிறார்.