எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, March 27, 2014

பெருமாளும், வடையும் :)


இன்னைக்குக் கோயிலுக்குப் போயிருந்தோம். எப்போவுமே நாங்க தேர்ந்தெடுக்கும் நேரம் மதியம் மூன்று மணிக்குத் தான்.  அப்போத் தான் தாயார் சந்நிதி திறக்கும்.  பெருமாள் சந்நிதி மதியம் பனிரண்டரைக்கு மூடிட்டுப் பின்னர் ஒன்றரைக்குத் திறந்துடுவாங்க.  ஆனால் அப்போப் போனால் கொஞ்சம் கூட்டம் இருக்கும் என்பதோடு தாயாரைப் பார்க்க முடியாது.  ஆகவே மூன்று மணிக்குக் கிளம்பினால் தாயாரை முதலில் பார்த்துக் கொண்டு அப்படியே மேட்டழகிய சிங்கர், தன்வந்திரிக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு பாட்டரி காருக்குக் காத்திருந்தால் சில நிமிடங்களில் அது வரும்.  பெருமாள் சந்நிதியின் நுழைவாயிலில் (ஆர்யபடாள் வாசல்) கொண்டு விடுவாங்க.

எப்போவும் கூட்டம் இருக்கும்.  இப்போ இரண்டு, மூன்று தரமாகக் கூட்டம் இருக்கிறதில்லை.  பெருமாள் ஹாயாகக் காத்தாடிக் கொண்டு இருக்கார். நாங்களும் அதை விசாரித்துத் தெரிந்து கொண்டு திங்கள், செவ்வாய், புதன், வியாழனுக்குள்ளாகப் போயிட்டு வந்துடுவோம்.  சில சமயம் வியாழனன்று கூடப் பெருமாள் பிசியாயிடுவார்.  அப்படித் தான் இன்னிக்கு ஏகாதசிப் புறப்பாடுனு பெருமாள் சந்நிதி வாசலில் போட்டிருந்ததா, அடடா, நம்பெருமாளைப் பார்க்க முடியாதோனு கவலையாப் போச்சு.  ஏற்கெனவே தாயார் சந்நிதியில் நாங்க பாட்டரி காருக்குள்ளே உட்கார்ந்து டிரைவருக்குக் காத்துட்டு இருக்கிறதைப் பார்த்து எல்லாரும் சீக்கிரமாப் போய்ப் பெருமாளைப் பாருங்க, நடந்து போனால் சீக்கிரமாப் பார்க்கலாம்னு அவசரப் படுத்தினாங்களா, நம்பெருமாளைப் பார்க்க முடியாதோ, அந்தக் குறும்புச் சிரிப்பைக் காண முடியாதோனு ஒரே கவலையாப் போச்சு.  ஒரு மாமி எங்களிடம், நம்பெருமாள் உள்ளே தான் இருக்கார், போங்கனு சொன்னாங்க.  இருந்தாலும் கவலை தான். இலவச வழிக்குக் கூட்டம் கொஞ்சம் இருந்தது.

ஒரு மணி நேரமாவது ஆகும்போல இருந்தது.  ஆகையால் 50 ரூ டிக்கெட்டே வாங்கினோம். நாங்க மட்டும் தான்.  சீக்கிரமா ஜய, விஜயர்கள் காவலிருக்கும் வாசல்(குலசேகரன் படி) கிட்டே போயாச்சு. அங்கேருந்தே எட்டி எட்டிப் பார்த்தேன்.  உள்ளே போனதும், கொஞ்சம் நிற்கவும் அனுமதிச்சாங்க. நம்பெருமாளைப் பார்த்து அதே சிரிப்புத் தான் சிரிக்கிறார்னு உறுதி செய்து கொண்டேன். அதே சிரிப்பு. மோவாய்க்கட்டைக் குறுகிக் கொண்டு உதடுகள் வரும் அட்டகாசச் சிரிப்பை அடக்கிக் கொண்டு, கண்கள் குறும்பில் கூத்தாடப் பார்த்தார் ஒரு பார்வை.  அப்பாடானு இருந்தது. அதுக்கப்புறமாத் தான் பெரிய பெருமாளையே பார்த்தேன். தலையோட கால், காலோட தலைனு பார்க்க முடிஞ்சது. ஜாஸ்தி விரட்டலை. துளசிப் பிரசாதம் வேறே கிடைச்சது. ரங்க்ஸ் கேட்டு வாங்கிக் கொண்டார். மூணேகாலுக்கு வீட்டை விட்டுக் கிளம்பி இரண்டு பேரையும் பார்த்துக் கொண்டு நாலரைக்கு வீட்டுக்கு வந்தாச்சு. அங்கே பிரசாதம் பெருமாள் வடை கிளி மண்டபத்தில் வித்துட்டு இருந்தாங்க. ஸ்டாலிலேனால் வாங்கறதுக்குக் கொஞ்சம் இல்லை நிறையவே யோசிக்கணும்.  இங்கே யோசிக்க வேண்டாம். சமயத்தில் இலவசமாகவே கொடுப்பாங்க.  இன்னிக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை.  இரண்டு வடை வாங்கிக் கொண்டோம்.  வீட்டுக்கு வந்து சாப்பிட்டால் ஆஹா, பெருமாள் வடைனா இதான் வடை.  சுத்தமான நல்லெண்ணெயில் செய்திருக்காங்க. ருசியும், வாசனையும் இன்னமும் நாக்கிலே.

இவரைப் பத்தி எழுத ஆரம்பிச்சது பாதியிலே நிற்கிறது. இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல்கள் கிடைத்ததும் தொகுக்கணும். :))))