எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 25, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! பவித்ரோத்ஸவம், பூச்சாண்டி சேவை!

ஜ்யேஷ்டாபிஷேஹம்பூச்சாண்டி சேவை பத்தி நெல்லைத் தமிழன் வாட்சப்பில் கேட்டிருந்தார். இரண்டு நாட்களாகவே கொஞ்சம் அலைச்சல், வேலை மும்முரம். ஆகவே தகவல் சேகரிக்க முடியலை. இன்று தான் தகவல் சேகரித்தேன். ஆண்டு தோறும் ஜேய்ஷ்டாபிஷேஹம், பவித்ரோத்சவம் போன்றவை நடைபெறும். இதிலே ஜ்யேஷ்டாபிஷேஹம் ஆனி மாதம் கேட்டை நக்ஷத்திரத்தன்று நடைபெறும் அப்போது பெரிய பெருமாளுக்கு நடைபெறும் எண்ணைக்காப்பின் போது மூலவரை மெல்லிய வஸ்திரத்தால் போர்த்தி இருப்பார்கள். சுமார் 48 நாட்கள் மூலவரின் முக தரிசனம் மட்டுமே கிடைக்கும். ஆடி மாதம்பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி மாதம் இருபத்தெட்டாம் நாள் இரண்டில் என்று 48 நாட்கள் முடிகிறதோ அதன் மறுநாள் எண்ணைக்காப்புக் களையப்பட்டு எம்பெருமாளின் பாத தரிசனம் சேவார்த்திகளுக்குக் கிட்டும். இதன் பின்னர் ஆவணி மாதம் வருவதே பவித்ரோத்ஸவம்.  எம்பெருமானுக்குச் செய்யும் அமுதுபடிகள், வஸ்திரங்கள், திருவாராதனங்கள், மந்திர உச்சாடனம் ஆகியவற்றில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.  அப்போது சாந்நித்தியம் குறையலாம்.
பூச்சாண்டி சேவை க்கான பட முடிவு!


ஆகவே மூலவர், உற்சவர் இருவரின் சாந்நித்தியம் குறையாமல் இருக்க வேண்டி அவற்றுக்குப் பிராயச்சித்தமாகப் பல உத்சவங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. மூலவரின் மேனிப் பாதுகாப்புக்காக ஜ்யேஷ்டாபிஷேஹம் எனில் மற்றவற்றுக்காகப் பவித்ரோத்ஸவம்.  ஜ்யேஷ்டாபிஷேஹத்துக்கு மறு நாள் பெரிய திருப்பாவாடை என்னும் நிகழ்வு நடைபெறும் அது போலவே  திருவாராதனம் மற்றும் மந்திர உச்சாடனங்களின் குறைவைச் சரி செய்யும் முகமாகப் பவித்ரோத்சவம் நடைபெறுகிறது.  இந்தப் பவித்ரோத்சவம் நீண்ட நேரம் நடைபெறும் ஒன்றாகும். உள்ளே ஒவ்வொரு மூர்த்திக்கும் 360 ஆவ்ருத்தி தீபாராதனம் நடைபெறும். அப்போது ஒவ்வொரு திருவாராதனம் முடிந்ததும் மூலவரான பெரிய ரங்குவுக்குத் திருமுடி முதல் திருவடி வரை பவித்ரம் சாற்றுவார்கள். வேத பாராயணத்தில் காடக பாராயணம் என்பது இடம் பெறும்.

இப்படியே மற்ற மூர்த்திகளுக்கும் பவித்ரம் சாற்றப்படும். பின்னர் மேள, தாளத்தோடு தாயார் சந்நிதிக்குப் பவித்ரம் கொண்டு செல்லப்பட்டு அங்கே உள்ள மூன்று தாயார்களுக்கும் பவித்ரம் சாற்றப்படும். அதுவரையிலும் பெரிய ரங்குவும் நம்பெருமாளும் பல பவித்திரங்களோடு சேவார்த்திகளுக்கு சேவை சாதிப்பார்கள்.  பெரிய பெருமாளுக்கு வனமாலை, அங்கோபாங்கம் முதலிய பவித்திரங்கள் சாற்றப்பட்டு சேவை சாதிப்பார். பெரிய பெருமாளின் திருமேனி முழுதும் புனிதத்தன்மையை ஏற்படுத்தும் பவித்திரம் சாற்றப்படும். இந்தப் பவித்ரத்தில் ஆங்காங்கே முடிச்சுகள் காணப்படும்.  இவை முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள் ஆகும். இந்தக் கோலத்தில் பெருமாளைப் பார்க்கையில் சிறு குழந்தைகள் விசித்திரமான உடை அணிந்தவரைப் பூச்சாண்டி என்று சொல்வதைப் போல் இருப்பதால் இதைப் பூச்சாண்டி சேவை என அழைக்கின்றனர். பெரிய பெருமாளின் திருமுடி தொடங்கி திருப்பாதம் வரையிலும் நூற்றுக்கணக்கான பவித்ரங்கள் சாற்றப்பட்டிருப்பதோடு அல்லாமல் பெரிய பெருமாளும் நம்பெருமாளும் பல வண்ணங்கள் நிறைந்த பட்டினால் ஆன பவித்ர மாலையும் சாற்றிக் கொண்டிருப்பார்கள்.

பின்னர் கும்ப ஹாரத்தி செய்வதற்கான தீபம் திருமடப்பள்ளியிலிருந்து வரும். இதைத் "தட்டி" என்பார்கள். இரண்டு தீபங்கள் கொண்டு வருவார்கள். ஒன்று அணைந்து விட்டால் என்ன செய்வது என்பதற்காக இன்னொன்று என்றாலும் அணைவதில்லை. ஒரு தீபமே பயன்பாட்டில் இருந்து வருகிறது.  பின்னர் பெரிய அவசரத் தளிகை எழுந்தருளப்படும். அதன் பின்னர் பெருமாளின் அங்கோபாங்கப் பவித்ரங்கள்  களையப்பட்டு ஆழ்வாராதிகள் சந்நிதிகளுக்குக்கொடுக்கப்பட்டு அங்கும் திருவமுது செய்யப்படும்.  அதன் பின்னர் நம்பெருமாள் பட்டுப் பவித்திரம் சாற்றிக் கொண்டு தோளுக்கினியான் பல்லக்கில் புறப்பாடு கண்டருளிப் பவித்ரோத்சவ மண்டபம் எழுந்தருளுவார். பின்னர் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருச்சிவிகையிலே எழுந்தருளி சூர்ணாபிஷேஹம் கண்டருளித் திருக்கொட்டாரத்தில் நெல் அளவை கண்டருளுவார்.  பின்னர் ரங்கநாயகி நாச்சியார் சந்நிதியில்  திருவந்திக்காப்பு முடிந்து பிரதக்ஷிணமாய் வந்தருளுவார்.  நம்பெருமாள் மண்டபம் எழுந்தருள மாட்டார். பவித்ரோத்ஸவ  மண்டபத்திலிருந்து எட்டாம் நாள் நம்பெருமாள் உள்ளே எழுந்தருளுவார். பவித்ரங்களைக் களைந்து சயன மூர்த்திக்கு சயன உபசாரம் நடைபெறும்.

ஒன்பதாம் நாள் தீர்த்தவாரி மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி நம்பெருமாள் உள்ளே எழுந்தருளுவார். அதன் பின்னர் யாகசாலையிலிருந்து திருவரங்க மாளிகையார் எனப்படும் யாகபேரர் உள்ளே எழுந்தருளுவார். இவர் நம்பெருமாள் அரங்கத்திலிருந்து இரண்டாம்முறையாக வெளியேறிய காலத்தின் பின்னாட்களில் அவருக்குப் பதிலாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இப்போதும் இவரைப் பெரிய பெருமாளின் திருவடிக்கு அருகே பார்க்கலாம்.  இத்தனையும் நடந்த பின்னர் வாதூல தேசிகரை மஹா வைபவத்தோடு திருமாளிகையிலிருந்து எழுந்தருளப் பண்ணிக் கொண்டு மூலஸ்தான வாசலில் அவருக்குப் பவித்திரம் விநியோகம் ஆகும். அதன் பின்னர் கோஷ்டி ஜனங்களுக்கும் பவித்திரம் விநியோகம் செய்யப்பட்டு வாதூல தேசிகர் பெரிய பெருமாளின் அனைத்துக் கொத்து ஜனங்களாலும் விமரிசையாக அவர்கள் துணையுடன் வழி அனுப்பி வைக்கப்படுவார்.  திருமாளிகையில் சந்தன தாம்பூல மரியாதை முடிந்ததும் புஷ்கரிணிக்கரையில் குலசேகர ஆழ்வாரால் சொல்லப்பட்ட மங்களாசாசனம் ஓதப்படும். சக்கரவர்த்திக்குப் பெரிய பெருமாள் தம்முடைய பிரஸாதமாகப் பவித்திரத்தை மேள, தாளத்துடன் அனுப்பி வைப்பார். இத்துடன் பவித்ரோத்சவம் முடிவுக்கு வரும். 

Sunday, August 19, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! பாண்டியரின் தோல்வி!

மிக அதிகமான எதிர்பார்ப்புகளோடு ஆறு மாசங்கள் படை திரட்டி அவற்றுக்கான குதிரைகளுக்காகக் காயல் துறைமுகத்தில் வந்து இறங்கும் குதிரைகளுக்காகக்காத்திருந்த பாண்டிய இளவரசர்கள் குதிரைகளைக் கொள்ளை அடித்துப் பறித்துக் கொண்டனர். அவர்கள் ஆட்சியில் இருந்தவரை வருடா வருடம் பத்தாயிரம் குதிரைகள் பண்டமாற்று முறையில் இறக்குமதி ஆகும். ஆனால் இப்போதோ மறைந்து ஒளிந்து வாழும் சூழ்நிலையில் என்ன செய்வது! கிடைத்தவரை லாபம் என ஐயாயிரம் குதிரைகளைப் பறித்துக் கொண்டனர். அப்படியும் படை கிளம்ப மேலும் நான்கு மாதம் ஆகி ஒரு நல்ல நாள் பார்த்துக் கிளம்பிய படை ரகசியமாக மதுரை நோக்கிச் சென்றாலும் வழியில் இரு உதவிப்படைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. அவற்றை எளிதாக முறியடித்து விட்டு அந்த உற்சாகத்தோடு மதுரை நோக்கிச் சென்றார்கள். மதுரைக்கு எப்படியோ தகவல் முன்கூட்டிச் சென்றுவிட்டது. ஆகையால் தில்லித் தளபதி நகருக்கு வெளியே ஓர் பெரிய படையுடன் வந்து காத்திருந்தான். முதல்நாள் போர் வெற்றி, தோல்வியின்றி முடிந்தாலும் மறுநாள் பாண்டியப் படை வீரர்களுக்கு தில்லிப்படைகள் தங்களைச் சுற்றி வளைத்துக் கொண்டிருப்பதாய்ச் செய்தி கிட்டவே வீரர்கள் பீதி அடைந்து ஓர் ஒழுங்கில்லாமல் தாறுமாறாக ஓட ஆரம்பித்தனர்.

அவர்களை அடக்க வேண்டிய தலைவர்களோ அவர்களே பயந்து ஓட ஆரம்பித்திருந்தார்கள். இப்படி அவர்கள் கோழை போல் உயிருக்குப் பயந்து ஓட ஆரம்பித்ததைக் கண்ட குலசேகரன் மனம் புழுங்கியது. தைரியத்தோடு பாண்டிய இளவரசர்களோ, வீரர்களோ போரிடவில்லை என்பதைக் கண்டான். முதல் தாக்குதல் இப்படிப் பயனின்றிப் போய்விட்டதைக் கண்டு மனம் நொந்தும் போனான். ஆனால் அவன் ஒருவனால் ஆகக்கூடியது என்ன?  தென்காசிக்குச் சென்று இளவரசர்களைச் சந்தித்தான். அங்கே அவர்கள் அவனை அங்கேயே தங்கும்படியும் மீண்டும் ஓர் தாக்குதல் நடத்தலாம் எனவும் சொன்னார்கள். ஆனால் குலசேகரனுக்கு அங்கே தங்க இஷ்டம் இல்லை. அரங்கனைப் பார்க்கும் ஆவல் மீதூறியது. ஆகவே அங்கிருந்து விடைபெற்று மலையாள தேசம் நோக்கிப் பயணித்துக் கோழிக்கூட்டையும் அடைந்தான். அங்கே அரங்கன் திருக்கூட்டத்தாரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவர்களும் உற்சாகத்துடன் குலசேகரனை வரவேற்றார்கள்.

குலசேகரன் மூலம் பாண்டியப்படைகள் எதிர்கொண்டு நிற்கத் தெம்பில்லாமல் பின் வாங்கி ஓடி வந்தது குறித்து விளக்கமாய்க் கூறினான். அவர்கள் மனமும் துக்கத்தில் ஆழ்ந்தது. எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. வெற்றி கிட்டி இருந்தால் இங்கிருந்து பாண்டிய நாடு வழியாக மீண்டும் அரங்கமாநகர் போயிருக்கலாம். ஆனால் இப்போது அதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது! இனி என்ன செய்வது? யோசனையில் ஆழ்ந்தனர். இனியும் பாண்டியர்களை நம்பி இங்கே காத்திருப்பதில் பிரயோசனம் இல்லை என ஓர் முடிவுக்கு வந்தார்கள். ஒருவருக்கொருவர் கலந்து பேசிக் கொண்டார்கள். அரங்கனை எங்கே கொண்டு போனால் பாதுகாப்பாக இருக்கும் என யோசித்தார்கள். பல இடங்களையும் குறித்து ஆலோசித்த பின்னர் கன்னட தேசத்தில் உள்ள திருநாராயணபுரம் என்னும் ஊருக்குப் போய்விடலாம் என முடிவு செய்தார்கள். அங்கே போய்த் தங்குவது என்றும் பின்னர் தமிழ்நாடு சீரான பின்னர் திரும்பி வரலாம் எனவும் முடிவு செய்து கொண்டார்கள். அதன்படி அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு நம்மாழ்வாருடன் வந்திருந்த அடியார்களிடமும் பிரியாவிடை பெற்றுக் கோழிக்கூட்டை விட்டுக் கிளம்பினார்கள்.

நம்மாழ்வார் ஊர்வலத்தாருக்கு அரங்கன் ஊர்வலத்தாரைப் பிரிய மனமில்லாமல் அவர்களுடனேயே சென்றார்கள். அரங்கனும், ஆழ்வாரும் ஒன்றாகவே கோழிக்குட்டை விட்டுச் சென்றார்கள். 

Wednesday, August 15, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரன் தூது!

இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்பிச் சென்றதும் செய்த ஒரு வேலையால் நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தது. ஆம், தன் தந்தையான சுல்தான் கியாசுதீனைத் தான் கட்டிய ஓர் மாளிகைக்கு வரவேற்றான் உல்லுக்கான். மகனை நம்பி அங்கே வந்த கியாசுதீன் உல்லுக்கானின் ரகசியப் படைகளால் சுற்றி வளைத்துக் கொல்லப்பட்டான். தன் தந்தையையே இப்படிக் கொன்றுவிட்டு தில்லி சிம்மாதனத்தில் உல்லுக்கான் முகமது-பின் -துக்ளக் என்னும் பெயரோடு பட்டம் ஏற்றான். என்னதான் தைரியமாகத் தந்தையையே கொன்றிருந்தாலும் உல்லுக்கானுக்கு மனதுக்குள்ளாகக் கவலையும் பயமும் இருக்கத் தான் செய்தது. தில்லிப் படை வீரர்கள் அனைவரும் மற்றும் அரசவைப் பிரபுக்களும் அமீர்களும் தனக்கு விசுவாசமாக இருக்கவேண்டுமே என்னும் கவலை அவனை வாட்டி வதைத்தது. ஆகவே தென்னாட்டில் இருந்து கொண்டு வந்திருந்த அனைத்துப் பொருட்களையும் தாராளமாக அனைவருக்கும் வாரி வழங்கிக் கொண்டிருந்தான். அவன் கவனம் முழுவதும் இப்போது தன் அரியணையைக் காப்பாற்றிக் கொள்வதிலே இருந்தது. ஆகவே தென்னாட்டின் பக்கம் அவன் பார்வை திரும்பவில்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் சிங்கப் பிரான்.

அதற்குக் குலசேகரன் உதவியை நாடினார். சடையவர்ம பாண்டியனுக்கு இப்போதைய ஶ்ரீரங்கத்து நிலவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் மதுரையைத் தாக்குவதற்கு இதுவே சரியான சமயம் எனவும் அவரிடம் எடுத்துச் சொல்ல வேண் டும் என்றும் சொன்னார் சிங்கப் பிரான். கண்ணனூரில் இருக்கும் படைகள் காவிரி வெள்ளம் பெருக்கெடுத்தால் அதைத் தாண்டிச் செல்ல முடியாது என்பதால் அந்தச் சமயம் பார்த்து மதுரையின் மேல் தாக்குதல் நடத்தலாம் எனவும் யோசனை சொன்னார். ஆனால் குலசேகரன் மதுரையைத் தாக்கினால் தில்லியில் இருக்கும் சுல்தானுக்குத் தகவல் போனால் அவன் கோபத்தை நம்மால் தாங்க முடியுமா எனக் கவலைப்பட்டான். அதற்கு சிங்கப்பிரான் ஹொய்சளர்கள் அரங்கனைத் தென்னாட்டின் பக்கம் எடுத்துச் செல்லும் சமயம் மதுரைப் படைகளை எதிர்த்ததற்கு அவ்வீரர்கள் இன்று வரை எதிர்த்தாக்குதல் ஏதும் நடத்தாததால் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றார். மேலும் தில்லியில் இருந்து உதவி வந்தாலும் வந்து சேர ஆறு மாதங்களாவது பிடிக்கும். ஆகவே தனக்கு உடனடி உதவி ஏதும் கிட்டாது என்பதைப் புரிந்து கொண்டே மதுரைக்காரர்கள் சும்மா இருக்கிறார்கள் என்றார் சிங்கப்பிரான்.

குலசேகரன் ஓரளவுக்கு மனச் சாந்தி அடைந்தான். எல்லாவற்றையும் விபரமாகச் சடையவர்மரிடம் தான் சொல்லுவதாக உறுதியும் அளித்தான். அன்றிரவு அங்கே கழித்த குலசேகரன் மறுநாள் காலையிலேயே சடையவர்ம பாண்டியரைக் காணத் தென்காசிக்குக் கிளம்பினான். புறப்படும் சமயம் அவனுக்குப் பஞ்சுகொண்டான் அவர்கள் செய்த உயிர்த்தியாகம் நினைவில் வந்தது. கண்ணீர் பெருக்கெடுத்தது. சிங்கப்பிரானை வணங்கிச் செல்ல நினைத்த அவன் தான் அதற்குத் தகுதியானவன் அல்ல என்னும் நினைப்போடு கண்ணீருடன் அவரிடம் விடை பெற்றுச் சென்றான். சுமார் ஒரு மாதம் பயணம் செய்து குலசேகரன் தென்காசியை அடைந்தான்.

அங்கே அப்போது பாண்டிய நாட்டு வாரிசுகள் பலரும் சரண் அடைந்திருந்தனர். பாண்டிய குலத்தின் அப்போதைய நேரடி வாரிசான சடைய வர்ம பாண்டியர் அனைவரையும் வழி நடத்தி வந்தார். குலசேகரன் சிங்கப் பிரான் கூறியவற்றைக் கூறியதும் உடனே அவர் தன்னுடன் இருந்த மற்ற இளவரசர்களையும் மற்றவர்களையும் அழைத்து இந்த விஷயத்தைக் குறித்து ஆலோசனை செய்தார். பின்னர் அனைவரும் சேர்ந்து ஓரு கூட்டுப் படை தயார் செய்து மதுரையைத் தாக்குவது என முடிவாயிற்று. குலசேகரன் படை திரட்டுவதில் மிகப் பெருமளவில் உதவினான். இந்த முயற்சி வெற்றி பெற்று விடும் என்றே அவன் நம்பினான். கோழிக்கூட்டில் உள்ள அரங்கன் ஊர்வலத்தாருக்குப் படை திரட்டும் செய்தியைத் தெரிவித்து இந்தப் போரின் முடிவு தெரியும் வரை எங்கும் செல்ல வேண்டாம் என்றும் கூறினான். கட்டாயம் இந்தத் தாக்குதலில் வெற்றி கிடைக்கும். பின்னர் அரங்கனை ஶ்ரீரங்கத்துக்கே கொண்டு வந்து விடலாம் என அவன் எண்ணம். படை திரட்டுவதற்கே ஆறு மாதங்களுக்கும் மேல் பிடித்தது.

Sunday, August 12, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஶ்ரீரங்கத்தில் நடந்தது என்ன?

மதில்களில் இருந்து கற்கள் பெயர்க்கப்பட்டது மனவருத்தத்தைத் தந்தாலும் இந்த மட்டும் அரங்கமாநகரை விட்டு வெளியேறினானே என உள்ளூர சந்தோஷப்பட்டார் சிங்கப்பிரான். அரங்கன் கோயிலுக்குள் சென்று கல்லால் சுவர் எழுப்பப்பட்டிருந்த மூலஸ்தானத்தின் முன்னர் நின்று கண்ணீர் வடித்துக் கதறினார்.  அரங்கனைப் பார்க்க முடியாமல் படுபாவிகள் செய்துவிட்டார்களே எனப் புலம்பினார். இத்தனை நாட்களாக எவ்விதமான வழிபாடுகளும் இல்லாமல் நிவேதனங்கள் இல்லாமல், அலங்காரங்கள் இல்லாமல் அரங்கன் தனிமையை அனுபவித்துக் கொண்டு படுத்திருக்கிறானே என வேதனைப் பட்டார். இனியாவது யாருக்கும் தெரியாமல் வழிபாடுகள் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டு நம்பிக்கையான சிலர் மூலம் உள்ளே சென்று அரங்கனுக்கு வழிபாடுகள் செய்யவேண்டிய வழிமுறைகளைச் செய்து வைத்தார்.  இந்த அரங்கமாநகரை விட்டு வெளியேற்றினாற்போல் அவர்களை, அந்த தில்லி வீரர்களை இந்தத் தமிழ்நாட்டு மண்ணை விட்டும் அகற்றவேண்டும் என நினைத்துக் கொண்டார்.

சில நாட்களில் மழைக்காலம் வந்து விட்டது. அப்போது ஓர் மழைநாளின் காலை நேரம். அழகிய மணவாளபுரத்தை நோக்கி மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தான் ஓர் இளைஞன். யார் அவன்? பார்த்தால் நம் குலசேகரனைப் போல் தோற்றுகிறதே! அவனா இவன்? இப்படி வாடிப் போய்ச் சோர்ந்து காணப்படுகிறானே! முகத்தில் எப்போதும் தெரியும் வீரக்களை எங்கே போயிற்று? வந்தவன் நேரே சிங்கப்பிரானின் வீடு நோக்கிச் சென்று வீட்டை அடைந்து அவரை அழைக்கவும் செய்தான். அங்கே வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த ஓர் வயதான மூதாட்டி அவனைக் கண்டதுமோ ஆர்வத்துடன் ஓடோடி வந்து அவனை உற்றுப் பார்த்தாள். தன் சந்தேகம் தீர்ந்தது என்னும் பாவனையில் தலையை ஆட்டிக் கொண்டாள். அவனிடம் தன்னைத் தெரிகிறதா என்றும் கேட்டாள். அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் தான் வாசந்திகாவின் தாயார் என அறிமுகம் செய்து கொண்டாள். வாசந்திகா அரங்கன் ஊர்வலத்தோடு குலசேகரன் சென்றபோது அவளும் வந்தாளே! இப்போது அவள் எங்கே இருக்கிறாள், என்ன ஆனாள் என்றெல்லாம் குலசேகரனைக் கேட்டாள். "என் பெண் சௌக்கியமாய் இருக்கிறாளா? அவளுக்கு ஆபத்து ஒன்றும் நேரவில்லையே?" என வாசந்திகாவின் தாய் மேலும் மேலும் விசாரித்தாள்.

சற்று உற்றுப் பார்த்தே அந்த அம்மையாரை அடையாளம் கண்டு கொண்டான் குலசேகரன். ஆம், அவன் நம் குலசேகரன் தான். ஆனால் புத்துணர்ச்சியுடனும் எப்போதும் இருக்கும் துடிப்புடனும் காணப்படவில்லை. வாசந்திகாவின் தாயை ஆழ்ந்து பார்த்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான் குலசேகரன். பின்னர் அவளிடம், "அம்மா, உங்கள் பெண் எங்களோடு தான் வந்தாள். அழகர் கோயில் வரை எங்களுடன் தான் இருந்தாள்!" என்று சொல்லி நிறுத்தினான்.

"பின்னர்? பின்னர் என்ன ஆனாள் தம்பி? என் பெண் இப்போது எங்கே?" என அந்த அம்மாள் துடிப்புடன் கேட்டாள். அதற்குக் குலசேகரன், "அம்மா, அழகர் கோயிலை நெருங்கும் சமயம் திடீரென ஒரு கூட்டம் தில்லி வீரர்கள் எங்களைத் தாக்கினார்கள். அரங்கன் ஊர்வலத்தார் அனைவரும் சிதறுண்டு பல்வேறு திசைகளில் பிரிந்து விட்டோம். நான் மட்டும் அரங்கனைத் தூக்கிக் கொண்டு அழகர் மலைக்காட்டுக்குள் ஓடிவிட்டேன். மற்றவர்கள் வெவ்வேறு திசைகளில் ஓடினார்கள். உங்கள் மகள் வாசந்திகா எந்தத் திசையில் ஓடினாள் என்பது எனக்குத் தெரியாது! ஆனால் அவள் பத்திரமாக எங்கேயானும் வாழ்ந்து கொண்டிருப்பாள்! கவலைப்படாதீர்கள்!" என்றான்.

அந்த அம்மாள் வாய் விட்டு அழுதாள். "அரங்கநகர் முற்றுகையின் போதே நான் அவளைப் பிரிந்திருக்கக் கூடாது தம்பி! இன்று வரை அவளைப் பற்றிய எந்தச் செய்தியும் கிட்டவே இல்லையே! அந்தப் பாவிப் பெண் நான் சொன்னது எதையும் கேட்கவே இல்லை. என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாள். இப்போது அவள் எங்கே இருக்கிறாள் என்பதே எனக்குத் தெரியவில்லையே!தம்பி, தம்பி, அவள் விபரீதமான இடத்தில் அதாவது,,,,,, நான் சொல்வது,,,,,,, அவள் தில்லி வீரர்களிடம் மாட்டிக் கொண்டிருக்க மாட்டாள் அல்லவா?" வாசந்திகாவின் அம்மா மிகவும் கவலையுடன் கேட்டாள்.  குலசேகரன் அதற்கு நிச்சயமாக அவள் தில்லிப்படைகளிடம் மாட்டிக் கொண்டிருக்க மாட்டாள் என்றும் எங்காவது பத்திரமாக வாழ்வாள் என்றும் உறுதி கூறினான். அப்போது வெளியே பேச்சுக்குரல் கேட்டு உள்ளே இருந்து வந்த சிங்கப்பிரான் குலசேகரனைப் பார்த்து வரவேற்கத் தான் உள்ளே வரத் தகுதியற்றவன் என்பதால் உள்ளே வர முடியாது என்றான் குலசேகரன்.

சிங்கப்பிரான், ஏதேனும் தீட்டோ என வினவ, இல்லை இது ஓர் விரதம் என பதிலளித்தான் குலசேகரன். அவ்வளவில் அவனை விடாமல் மீண்டும் மீண்டும் சிங்கப் பிரான் கேட்டதற்குக் குலசேகரன் இது ஒரு விரதம் என்றும் புனிதமான இடங்களை மிதிக்கும் அருகதை அவனிடம் தற்போது இல்லை என்றும் இனி எப்போதுமே புனிதமான இடங்களை அவன் மிதிக்கப் போவதில்லை என்றும் கூறினான். பின்னர் அத்தனை காலம் நடந்த விஷயங்களை இருபக்கமும் பரிமாறிக் கொண்டனர் இருவரும்.பின்னர் குலசேகரன் ஹொய்சளர்கள் வடதிசை பற்றியே அதிகம் கவலைப்படுவதாகவும் தென்னகம் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை எனவும் சொன்னான்.  ஆகவே அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பதையும் கவலையோடு கூறினான்.

அதற்கு சிங்கப்பிரான் வடதிசை பற்றி அவர்கள் கவலைப்படுவதிலும் ஓர் அர்த்தம் இருப்பதாய்க் கூறினார். ஆகவே அவர்களைக்கேட்டுக் கொண்டு இருக்காமல் நாமாக ஏதேனும் தொந்திரவை மதுரையில் உள்ள தளபதிக்குக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார் சிங்கப்பிரான்.  இந்த தில்லிக்காரர்கள் ஆட்சியை அங்கே நிலைக்க விடக் கூடாது. விட்டால் ஆபத்து என்பதையும் சொன்னார். பின்னர் மெதுவான குரலில் தென்காசியிலிருந்து சடையவர்ம பாண்டியன் ஓலை அனுப்பி இருந்ததாய்ச் சொன்னார். அதில் பாண்டிய வம்சத்து வாரிசுகள் அனைவரும் தென்காசியில் கூடி இருப்பதாய்ச் சொன்னதோடு மதுரை மீது படை எடுக்கப் போவதால் தமிழ்நாட்டின் மற்ற அரசர்கள், வீரர்கள் அதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று கேட்டிருப்பதாகவும் சொன்னார். கண்ணனூரில் தங்கி இருக்கும் தில்லிப் படையின் நிலவரம் பற்றியும் சடையவர்மர் கேட்டிருப்பதால் இப்போது குலசேகரன் மூலம் அந்தத் தகவல்களைச் சடையவர்மனுக்கு அனுப்ப நினைப்பதாகவும் சொன்னார்.

Saturday, August 11, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருவரங்கத்தில் நடந்தது!

மேற்சொன்ன சம்பவங்கள் அனைத்தும் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஶ்ரீரங்கம் தில்லிப் படைகளால் திணறிக் கொண்டிருந்தது. அங்கிருந்து சென்றுவிட்டால் அரங்கனைக் கொண்டு வந்துவிடுவார்கள் என்று படைகள் அங்கிருந்து அகலவே இல்லை. அரங்கன் திரும்ப ஶ்ரீரங்கம் வருவதற்கு முன்னரே அவனைக் கைப்பற்றி தில்லிக்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். ஆனால் ஶ்ரீரங்கத்தில் இருந்த சிங்கப்பிரான் என்பவர் எப்படியேனும் அரங்கனையும் கோயிலையும் காப்பாற்ற வேண்டும் என்பதோடு படைகளையும் அங்கிருந்து அகற்றிவிட வேண்டும் என உறுதி பூண்டிருந்தார். கோயிலோடு சம்பந்தப்பட்ட தேவதாசிகளில் ஒரு சிலர் இன்னமும் ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் மிகவும் அழகும், அரங்கனிடம் மாறா பக்தியும் கொண்ட தாசி ஒருத்தியைத் தேர்ந்தெடுத்தார். ஶ்ரீரங்கம் பக்கத்தில் உள்ள அழகிய மணவாளபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை அழகிய மணவாளபுரத்தின் ராணி என தில்லிப்படைகளின் உப தளபதிக்கு அறிமுகம் செய்து வைத்தார் சிங்கப்பிரான்.

அந்த தாசிப்பெண்ணின் அழகிலும் அவள் நாட்டியம் ஆடும் அழகிலும் மயங்கினான் தில்லித் தளபதி. அவளை நெருங்கி உறவாட ஆசைப்பட்டான். ஆனாலும் அந்தப் பெண் பலவிதமான சாகசங்களைச் செய்து அவனிடம் இருந்து தப்பித்து வந்தாள். ஆனால் தளபதிக்குக் கோபமும் அவள் மேல் மையலும் மேன்மேலும் அதிகம் ஆனது. அப்போது சிங்கப்பிரானின் யோசனைப்படி அவள் அவனுக்கு இணங்குவது போல் நடித்தவண்ணம் அவன் அந்தப்புரம் வரை வந்துவிட்டாள். ஆனாலும் அவள் முற்றிலும் இணங்கவில்லை. எனினும் தன் அந்தப்புரத்தை விட்டு அவளை வெளியேற்றினால் மனம் மாறிவிடப் போகிறாள் என அந்த உபதளபதி அவளை அங்கேயே சந்தோஷமாக வைத்திருக்க முடிவு செய்தான். ஆகவே அவள் சொல்படி எல்லாம் கேட்டு நடக்க ஆரம்பித்தான். சில நாட்களிலேயே அவன் நம்பிக்கையைப் பெற்ற அந்த தாசி அவனுக்கு உணவு பரிமாறும் உரிமையைத் தான் எடுத்துக் கொண்டு அவன் உணவுகளில் சிங்கப்பிரான் கொடுத்து அனுப்பிய சில மருந்துவகைகளை அவனுக்குத் தொடர்ந்து கொடுத்து வர ஆரம்பித்தாள். உணவோடு திறமையாகக் கலக்கப்பட்ட மருந்தை எடுத்துக் கொண்ட உபதளபதிக்குப் பலவிதமான ரோகங்கள் வர ஆரம்பித்தன. அவன் உடல் தோலும் நிறம் மாறிப் பொலிவிழந்தது.

யதேச்சையாக வந்தது போல் வந்து அவனைப் பார்த்த சிங்கப்பிரான் அவனைக் கண்டு மிகவும் வருந்தியவர் போல் நடித்தார். அப்போது அந்தத் தளபதி, சிங்கப்பிரானிடமே இந்த வியாதி தனக்கு எப்படி வந்தது என்பது குறித்தும் அதைக் குணமாக்கும் விதம் குறித்தும் அறிந்த மருத்துவர்கள் இருந்தால் தனக்குச் சொல்லும்படியும் கேட்டுக் கொண்டான்.  உடனே சிங்கப்பிரான் அவன் நலனே தன் நலன் எனச் சொல்லி உபதளபதியை சமாதானம் செய்து தான் உடனே சென்று கேட்டு வருவதாய்ச் சொல்லிவிட்டுத் தன் ஊரிலேயே சில நாட்கள் தங்கிக் காலத்தைக் கழித்தார். பின்னர் ஓர் நாள் அந்தத் தளபதிக்கு முன் போய் நின்றார்.

தளபதியிடம் தான் மருத்துவர்கள் பலரைக் கண்டு விசாரித்ததாகவும் இரு புறமும் நதிகளுக்கிடையே இருக்கும் இந்த ஊரில் இருப்பது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது என்றும் அதனால் தளபதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவதாகவும் சொன்னார். அப்போது தான் எங்கே போவது, அதற்கு அனுமதியும் வாங்க வேண்டுமே எனக் கவலைப்பட்ட தளபதியிடம் பக்கத்தில் உள்ள கண்ணனூருக்குச் செல்லலாமே என்ற யோசனையைத் தெரிவித்தார். மேலும் அங்கே ஹொய்சள நாட்டுக் கோட்டை ஒன்று பாழடைந்து கொண்டிருப்பதாகவும் அதைச் சரி செய்து விட்டு அங்கே போய் இருக்கலாம் எனவும், உள்ளே அழகான அரண்மனையும், அந்தப்புரமும் தோட்டங்களோடு மனதை மகிழ்விக்கும் வண்ணக் கட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

உபதளபதியும் அதற்குச் சம்மதித்து எதற்கும் தான் அதை முதலில் பார்த்தாகவேண்டும் என்று சொன்னான். பின்னர் ஒரு நாள் காலை தன் மனைவியுடனும் மெய்க்காப்பாளர்களுடனும் அங்கே போய்ச் சேர்ந்தான்.  அங்குள்ள அரண்மனையும் தோட்டமும் கண்கவரும் விதத்தில் இருப்பதைக் கண்டு அதிசயித்த உப தளபதி இத்தனை அழகிய அரண்மனையிலும் தோட்டத்திலும் நாம் வசிக்க வேண்டி இருக்கப் பாழடைந்து கொண்டிருக்கும் ஶ்ரீரங்கத்தில் ஏன் இருக்க வேண்டும் என்று நினைத்தான். உடனே தனது இருப்பிடத்தை ஶ்ரீரங்கத்தில் இருந்து கண்ணனூருக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தான்.  கோட்டையின் இடிந்த மதில்களைச் செப்பனிடத் திருவரங்கத்து மதில்களை உடைத்து  அதன் கற்களைக் கொண்டு கண்ணனூர்க் கோட்டை மதிலைச் செப்பனிட்டான் உபதளபதி.


பி.கு. பிற்காலங்களில் கர்நாடகம் வசம் ஶ்ரீரங்கம் இருந்தபோது கர்நாடக நவாப் காலத்தில் இந்தக் கற்களைக் கொண்டு காவிரி, கொள்ளிடம் பாலங்கள் கட்டப்பட்டதாகக் குறிப்பு ஒன்று கூறுகிறது. 

Thursday, August 09, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நம்மாழ்வார் வைபவம்!

அரங்கனும் கோழிக்கூட்டில் தஞ்சம் புகுந்திருப்பதை அறிந்த நம்மாழ்வாருடன் வந்தவர்கள் அனைவரும் ஆழ்வாரைப் பல்லக்கில் அமர்த்தி அவரைத் தூக்கிக் கொண்டு சந்தோஷம் பொங்க அரங்கன் இருக்கும் இடம் நோக்கி விரைந்தார்கள். ஏற்கெனவே அரங்கன் கூட்டத்தாருக்குத் தகவல் அனுப்பி விட்டபடியால் அவர்களும் அரங்கனை மிக நன்றாக அலங்கரித்துப் புதுசாய் அரங்கனுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முத்துச் சட்டையையும் பொன் அங்கியையும் அணிவித்து எல்லாவித சம்பிரதாயங்களுடனும் நம்மாழ்வாரின் வரவுக்குக் காத்திருந்தார்கள். வேகமாய் வந்த ஆழ்வார் திருநகரி ஊர்வலத்தார் அரங்கன் இருக்கும் இடம் அருகே நெருங்கியதும் பல்லக்கின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு ஊஞ்சலில் ஆடுவது போல் நம்மாழ்வார் பல்லக்கை ஆட விட்டுக் கொண்டு கூடவே அவரின் பாசுரங்களைப் பாடிக் கொண்டும் வந்தார்கள். முக்கியமாக, "முனியே !நான்முகனே! முக்கண்ணப்பா!" என்னும் பாடலை அவர்கள் பாடுகையில் அனைவர் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகியது. நெடுநாட்கள் பிரிந்திருந்த தலைவனை மீண்டும் காணும் குலமகள் போல நம்மாழ்வாருடன் வந்தவர்கள் தங்கள் முகத்தில் ஏக்கத்தையும் விரகத்தையும் ஒருங்கே பிரதிபலித்த வண்ணம் பல்லக்கோடு அலை ஆடுவது போல் ஆடி ஆடி வந்தார்கள்.

அரங்கன் கூட்டத்தாரும் அதைக் கண்டு பக்திப் பரவசத்தில் மெய் சிலிர்க்க அரங்கனைத் தூக்கிக் கொண்டு முன்னேறி நம்மாழ்வாரை வரவேற்கும் முகமாகச் சென்றார்கள். ஒரு கட்டத்தில் இரு பல்லக்குகளும் எதிர் எதிரே வர அரங்கனும் நம்மாழ்வாரும் சந்தித்துக் கொண்ட அந்த அற்புதக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. வைணவ சரித்திரத்தில் அந்நாள் இன்றும் ஓர் பொன்னாளாகச் சொல்லப்படுகிறது. ஏனெனில் பல  நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நம்மாழ்வாரும் அரங்கனும் மறுபடி சந்திக்கின்றனர். இந்தக் கதை நடந்த காலகட்டத்துக்குச் சில நூற்றாண்டுகள் முன்னர் வரை நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் இருந்து பல்லக்கில் ஏகி அரங்கனைக் காண வருவார். அந்தப் பல்லக்கு இப்போதும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பல்லக்கில் அத்தனை தூரம் கடந்து தன்னைப் பார்க்க வரும் ஆழ்வாரோடு அரங்கன் சில நாட்களைக் கழிப்பான். அதன் பின்னர் ஆழ்வார் பிரியாவிடை பெற்று ஆழ்வார் திருநகரி திரும்புவார். இது ஒரு பெரிய விழாவாக நடந்து கொண்டிருந்தது ஶ்ரீரங்கத்தில். ஆனால் ஒரு வருடம் ஏதோ ஒரு காரணத்தால் நம்மாழ்வாரால் வர முடியாமல் போக அரங்கன் கோயிலின் ஊழியர்கள் அனைவரும் நம்மாழ்வாருக்காகக் காத்திருப்பதை விட இங்கேயே புதிதாக ஒரு நம்மாழ்வாரைப் பிரதிஷ்டை செய்து விடலாம் என எண்ணிக் கொண்டு அவ்வாறே செய்தும் விட்டார்கள். ஆழ்வார் திருநகரிக்காரர்களுக்கு ஏமாற்றமும் கோபமும் வர அதன் பின்னர் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் இருந்து அரங்கத்துக்கு எழுந்தருளவே இல்லை. காலப்போக்கில் இந்த வழக்கம் முற்றிலும் நின்றும் போய் விட்டது.


பல்லாண்டுகளுக்குப் பின்னர் நடந்த இந்தச் சந்திப்பு இரு தரப்பாருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அரங்கனோடு நம்மாழ்வாரையும் சம ஆசனத்தில் அமர்த்தினார்கள். அரங்கனின் பரிசாக அவனது முத்துச் சட்டை நம்மாழ்வாருக்கு அளிக்கப்பட்டது. இப்படிப் பலவிதமான உபசரிப்புகளுடன் அந்நியோன்னியமாக அரங்கனும் நம்மாழ்வாரும் பல நாட்களைக் கோழிக்கூட்டில் கழித்தனர். 

Wednesday, August 08, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனின் பயணம்!

நாகர்கோயிலில் சில நாட்கள் கழிந்த பின்னர் அரங்கனின் ஊர்வலத்தார் அரங்கனை எடுத்துக் கொண்டு திருவனந்தபுரத்தை நோக்கிச் சென்றனர். அங்கே கரமனை ஆற்றைக் கடந்ததும், எதிரே "விளாஞ்சோலைப் பிள்ளை" என்பவர் ஓடோடி வந்து அரங்கனைக் கீழே விழுந்து வணங்கி கண்ணீர் பெருக்கி நமஸ்கரித்தார். இந்த விளாஞ்சோலைப் பிள்ளை என்பவர் "பிள்ளை உலகாரியரின்" ஆத்மார்த்தமான சீடர் ஆவார். உலகாரியர்  திருநாடு ஏகின பின்னர் (பூத உடல் மறைவு) அவர் சீடர் ஆன விளாஞ்சோலைப் பிள்ளை அவர்கள்  திருவனந்தபுரம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கு ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார் எனவும் சொல்லப்படுகிறது, இவர் விளாஞ்சோலையில் வாழ்ந்ததால் விளாஞ்சோலைப் பிள்ளை என அழைக்கப்பட்டார் என்றும் சொல்கின்றனர். இவர் தீவிர வைணவராக இருந்தாலும் தாழ்ந்த குலம் என்பதால் திருவனந்தபுரம் கோயிலுக்குள் இவரை அனுமதிக்கவில்லை எனவும் கேள்விப் படுகிறோம். என்றாலும் தென்கலை வைணவர்கள் நாள் தோறும்  இவரால் இயற்றப்பட்ட கீழ்க்கண்ட பாடலைப் பாடி வழிபட்டனர் என்கின்றனர்.

அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடைகாட்டி – உம்பர்
திவம்என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறிகாட்டும்
அவனன்றோ ஆசா ரியன்.

ஏற்கெனவே மலைநாடு என அழைக்கப்படும் கேரளம் அப்போது நதிகள், நீர்க்காடுகள் அடர்த்தியாக இருந்த ஒரு தேசமாக இருந்து வந்தது. நாட்டின் உள்ளே செல்வதற்கு முறையான சாலைகள் இல்லை. சில அடி தூரம் சென்றால் ஏதேனும் நீர்நிலைகள் குறுக்கிடும். ஆகவே தோணிகளின் உதவியோ, தெப்பங்களின் உதவியோ இல்லாமல் அங்கே கடந்து செல்லுதல் இயலாது. காடுகள் அடர்த்தியாக இருந்தமையால் கள்வர்கள் தொந்திரவு வேறே அதிகமாக இருந்தது. அதோடு இல்லாமல் திருவனந்தபுரம் மட்டும் இல்லாமல் மலையாள தேசத்தின் முக்கியமான பகுதிகள் கடலோரமாக இருந்ததால் கடல்மார்க்கமாக வந்து பல துருக்கியர்கள் குடியேறி இருந்தனர். அவர்கள் திட்டுத் திட்டான இடங்களில் கூட்டமாக வாழ்ந்து வந்தனர்.  ஆகவே ஊர்வலத்தார் அவர்கள் கண்களில் படாமல் சுற்றிக் கொண்டு சென்று கடைசியில் பல்வேறு தடங்கல்களுக்குப் பின்னர் கோழிக்கோடு வந்து சேர்ந்தனர். அந்த நாட்களில் அந்த ஊர் "கோழிக்கூடு" என்றே அழைக்கப்பட்டது.

அப்போது மலையாளத்தை ஆண்டு கொண்டிருந்தவர்கள் அங்கே பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த  ரவிவர்மன் என்னும் பெயர் பெற்ற மன்னனின் சந்ததியர்ஆகும். இந்த ரவி வர்மன் மிகப் பலம் பொருந்திய மன்னனாக இருந்தார். மிக வீரதீர பராக்கிரமங்கள் செய்த இவர் ஒருமுறை பாண்டிய நாடு வழியாகக் காஞ்சீபுரம் வரை சென்று வெற்றி கண்டு மலையாளம் திரும்பி இருக்கிறார். அத்தகைய புகழ் பெற்ற மன்னனின் சந்ததியர் தான் தற்போது மலையாளத்தை ஆண்டு வந்தார்கள். ரவிவர்மன் அளவுக்குப் பெயர் பெறவில்லை என்றாலும் யாருக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். தென்னாட்டின் குழப்பங்கள் முக்கியமாய்த் தமிழ்நாட்டின் குழப்பங்கள் அங்கே இல்லை. ஆகவே தமிழகத்தில் இருந்து தப்பிச் சென்ற பலரும் அங்கே சரண் அடைந்து தங்கள் வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பித்திருந்தார்கள்.

இந்தச் சம்பவங்கள் இந்தக் கதையில் நடந்த சமயம் கோழிக்கூட்டில் பல தமிழ்நாட்டு தெய்வங்கள் தஞ்சம் புகுந்திருந்தனர்.  பல வைணவத் தலங்களின் பெருமாள்களும், தங்கள் தங்கள் நாச்சியார்களோடு அங்கே தஞ்சம் புகுந்திருந்தனர். திருவரங்க அரங்க நாதர் அவர்களோடு அங்கே தஞ்சம் புகுந்தாலும் அவர்களுக்கெல்லாம் நடுநாயகமாக விளங்கினார்.  மேலும் வழியெங்கும் பல பாண்டிய நாட்டுச் சிற்றரசர்கள் அரங்கனை வரவேற்றுத் தங்கள் காணிக்கைகளைக் கொடுத்து அரங்கன் அருளுக்குப் பாத்திரமானார்கள். அனைவரும் அரங்கன் மேல் மாளாத அன்பு கொண்டு தங்கள் அன்பின் காரணமாக பல்வேறு ஆபரணங்களையும், திரவியங்களையும் தாராளமாக மனமுவந்து அளித்தனர். இதன் காரணமாக அரங்கனும் தன்னுடைய பழைய பொலிவைப் பெற்றான். பல்வேறு விதமான ஆபரணங்களைப் பூண்டு அங்கிருந்த பெருமாள் விக்ரஹங்கள் அனைவருக்கும் இடையே  இவரே பெரிய மாமன்னர் என்று தோன்றும்படியான அழகுடனும் கம்பீரத்துடனும் விளங்கினார்.

அப்போது கோழிக்கூட்டில் அரங்கன் ஊர்வலத்தார் மறக்க முடியா சம்பவம் ஒன்று நடந்தது. பல்வேறு நகரங்களிலிருந்தும் வந்திருந்த தெய்வ விக்ரஹங்களுக்குள்ளே ஆழ்வார்திருநகரியில் இருந்து வந்திருந்த சடகோபர் எனப்படும் நம்மாழ்வார் விக்ரஹமும் இருந்தது. நம்மாழ்வாரும் அங்கே எழுந்தருளி இருந்தார்.  ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த பல மக்கள் அவரோடு சேர்ந்து அங்கே வந்திருந்தனர்.  அப்போது தான் அவர்களுக்கு ஶ்ரீரங்கம் அரங்கனும் அங்கே வந்து சேர்ந்திருக்கும் செய்தி கிட்டியது. 

Saturday, August 04, 2018

ஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! கிருஷ்ணாயி கொடுத்த தண்டனை!

ராணி எவரையோ அழைத்து வரச் சொன்னதுமே அது ஹேமலேகாவாக இருக்கக் கூடாதே எனக் குலசேகரன் பயந்தான். அவன் பயந்தாற்போலவே அங்கே இரு சேடிகளுக்கு நடுவே சிறைப்பட்ட நிலையில் பரிதாபகரமான தோற்றத்தில் வித்வாம்சினியான ஹேமலேகா! அவள் நிலையைக் கண்ட குலசேகரன் பதறித் துடித்தான். எப்படிப் பட்ட பெண்!  அவளிடம் ஏதேதோ பேசவும், கேட்கவும் மனமும் உடலும் தவித்தன.  ஆனால் அவனுள் துக்கமே மேலோங்கியது! ஹேமலேகாவுக்கும் அவனைப் பார்த்ததும் அதே எண்ணங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். அவள் கண்கள் ஓராயிரம் கதைகளைக் கூறாமல் கூறின. அவர்கள் இருவர் பார்வையையும் கண்களாலேயே இருவரும் பேசிக் கொள்வதையும் கவனித்த கிருஷ்ணாயி உடனே ஹேமலேகாவை அப்புறப்படுத்தும்படி ஜாடை காட்டச் சேடிகள் அவளை இழுத்துச் சென்றார்கள். குலசேகரனைப் பார்த்து, "ஏன் மௌனம்?" என ஏளனமாக வினவினாள்.

குலசேகரன் துக்கத்துடன் அவளைப் பார்த்து, "ராணி, அவள் ஓர் பண்டிதை! வித்வாம்சினி! அவள் என்ன பாவம் செய்தாள்! பாவம் அந்தப் பெண்! அவளை விட்டு விடுங்கள்! இவள் ஏன் ராணி வாசத்தில் வாழ வேண்டும்? அவளைச் சுதந்திரமாக விடுங்கள்!" என்று கெஞ்சினான்.

"அவளுக்கு என்ன குறை! ராணி வாசத்தில் சௌக்கியமாகத் தான் இருக்கிறாள். வேண்டிய கவிதைகளைப் புனையட்டுமே!" என்றாள் கிருஷ்ணாயி அலட்சியமாக.

"அதெப்படி  ராணி!அவளைச் சிறைப்பிடித்து வைத்துவிட்டுக் கவிதை புனைந்து வா என்றால் அவளால் புனைய முடியுமா? அவளை விட்டு விடுங்கள்! வெளியே உள்ள பரந்த இந்த பூமியில் அவள் முன்னைப் போல் தன்னிச்சையாகச் சஞ்சரிக்க விடுங்கள்!" என்றான் குலசேகரன்.

அதற்கு ராணி கிருஷ்ணாயி குலசேகரனுக்கு அவள் மேல் இத்தனை அன்பு எனில் அவன் அவளுக்காக ஓர் காரியம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை போட்டாள். என்ன நிபந்தனை என்று கேட்ட குலசேகரனிடம் அவன் தன்னுடன் இன்று முதல் ஓர் கணவனைப் போல் வாழ வேண்டும் எனவும் அவன் மூலம் தான் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் கூறினாள். ஆகவே இன்றிரவு மட்டுமின்றி தொடர்ந்து வரும் பல இரவுகளிலும் அவன் அங்கே தான் அவளுடன் இரவைக் கழிக்க வேண்டும் என்றும் கூறினாள்.  ஓரளவுக்கு அவள் எண்ணம் புரிந்திருந்தாலும் குலசேகரனால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. அவனால் எதுவும் பேசமுடியவில்லை. ராணியும் பேசவில்லை. வெகுநேரம் அமைதியில் சென்ற பின்னர் ராணி மெல்ல எழுந்தாள். அவனிடம் பிச்சை கேட்பது போல் இருகைகளையும் நீட்டி யாசித்தாள்.

"எனக்கு ஒரு குழந்தை வேண்டும்!"

பின்னர் அவள் தன்னையும் அறியாமல் மஞ்சத்தில் படுத்து முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதாள். குலசேகரனால் பேசவும் முடியவில்லை. அவள் சொன்னதை ஏற்கவும் முடியவில்லை.  பின்னர் அவளைச் சமாதானம் செய்யும் நோக்கில், "ராணி!" என அழைத்துப் பேச முயன்றான். ஆனால் அவளோ கோபத்துடன் அவனை அங்கிருந்து வெளியேறும்படி கூறினாள். ஆனால் அவன் வெளியேறும் முன்னர் இரு வீரர்கள் அவனைப் பிடித்துக் கொட்டடியில் அடைத்தனர். அங்கே அவனுக்குச் சரிவர உணவு வழங்கவில்லை. என்றாலும் தாக்குப் பிடித்த குலசேகரனை ஒரு நாள் வரவழைத்த ராணி பல்சுவை விருந்துகளை அவனுக்கு அளித்து உபசரித்தாள். எனினும் மன்னருக்கு துரோகம் செய்யக் குலசேகரன் இணங்கவில்லை. ஆகவே இம்முறை ராணி ஹேமலேகாவையும்  குலசேகரன் அடைபட்டிருந்த கொட்டடியில் தனிக் கிடங்கில் போட்டு அடைத்து அவளுக்கும் உணவு கொடுக்காமல் தண்டனை கொடுத்தாள்.

இது குலசேகரன் காதுக்கு எட்டவே அவன் தன்னால் ஓர் அப்பாவிப் பெண் பசியும், பட்டினியுமாக இருந்து உயிரை விட்டால் பெண்பாவம் தன்னைச் சும்மா விடாது என மனம் குமுறிக்கொண்டு அரை மனதாக ஆட்களிடம் ராணியைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல அவர்களும் உடனே அவனை ராணியிடம் அழைத்துச் சென்றார்கள். அங்கே ராணியிடம் அவன் தான் ஏற்கெனவே நடைப்பிணமாகவே வாழ்வதாகவும் இனிமேலும் இந்த உடலின் புனிதத்தைக் காப்பாற்ற வேண்டியதில்லை என நினைப்பதால் தன்னை எடுத்துக்கொள்ளுமாறும் கூறிவிட்டு அங்கேயே விழுந்தான். ராணியின் முகத்தில் ஆனந்தம் தோன்றியது!

Friday, August 03, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! கிருஷ்ணாயியின் சாகசம்!

கிருஷ்ணாயி தன் மேல் சாய்ந்ததைக் கண்ட குலசேகரன் திடுக்கிட்டான். ஆனால் கிருஷ்ணாயிக்கு எவ்விதமான குற்ற உணர்ச்சியும் இல்லை. அவள் வளர்ந்த சூழ்நிலை அப்படி. அவள் வளர்ந்த துளு வம்சத்தில் பெண்களுக்கே முன்னுரிமை. கணவன் மூலம் பிள்ளைகள் இல்லை எனில் வேறு திருமணமே செய்து கொள்ளலாம். மலைநாட்டைச் சேர்ந்த அவர்கள் நம்மைப் போன்ற திருமண பந்தங்களை ஏற்றதில்லை. அளிய சந்தானக் கட்டு என்னும் முறையே அவர்கள் பின்பற்றும் முறை. அம்முறைப்படி பெண்ணுக்குத் திருமணம் ஆனாலும் பிறந்த வீட்டிலேயே இருந்து வருவாள். கணவன் தான் அவளைக் காணச் சென்று வர வேண்டும், அதே சமயம் அவள் இரண்டு கணவர்களையும் வைத்துக் கொண்டு வாழலாம். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. இப்படிப் பட்ட துளுவ வம்சத்தில் பிறந்த கிருஷ்ணாயி வீர வல்லாளரைத் திருமணம் செய்து கொண்டு திருவண்ணாமலை வந்ததே ஓர் ஆச்சரியம். அவர் மூலம் அவளுக்குக் குழந்தை இல்லை என்பது அவள் மனதில் ஓர் உறுத்தலாகவே இருந்து வந்தது.

துளுவ நாட்டைத் தன் ஹொய்சள நாட்டுடன் இணைக்க விரும்பியே வல்லாளர் அவளை மணந்து கொண்டார். அவளும் ராஜ பரம்பரையில் தனக்கு ஓர் மகன் பிறந்தால் தான் பிறந்த துளுவ நாட்டுக்கு நன்மை எனக் கருதியே வயதானவர் என்றாலும் துணிந்து அவரை மணந்தாள், ஆனால் அவர் மூலம் குழந்தை பிறக்கவில்லை என்றதுமே தன் நாட்டுப் பழக்கப்படி வேறொரு ஆடவன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தாள் கிருஷ்ணாயி. அதற்குக் குலசேகரன் தகுந்த ஆள் என நினைத்தாள். அதனாலேயே அவன் மேல் கண்ணை வைத்தாள். ஆனால் குலசேகரனோ அவள் நோக்கம் புரிந்தும் இந்தக் கேடு கெட்ட செயலுக்குத் தான் துணை போகக் கூடாது என உறுதியுடனே இருந்தான். ஆகவே அவள் குலசேகரனை நாடினாள். ஆனால் குலசேகரன் அவள் விருப்பத்துக்கு இணங்கவே இல்லை.  மறுத்தான். தன் அழகை முழுவதும் காட்டி அவனைத் தன் பால் ஈர்க்க முனைந்த கிருஷ்ணாயியைக் குலசேகரன் முழு மனதோடு வெறுத்தான்.

ஆனால் அவளோ அவனை மிகவும் நெருங்கினாள். ஓர் அங்குலம் கூட இடைவெளியில்லாமல் அவள் தன்னருகே அமர்ந்திருந்தது குலசேகரனுக்குப் பொறுக்கவில்லை. அவளை விலகிப் போகச் சொன்னான். அவள் தன்னருகே அமர்ந்திருக்கும் முறை அவள் பேசும் முறை அவள் போக்கு எதுவும் அவனுக்குப் புரியவில்லை என்றான். கிருஷ்ணாயியோ மேலும் மேலும் அவனிடம் இன்பமான பேச்சுக்களைப் பேசிக் கொண்டு இப்படி ஓர் அழகிய இளம்பெண் தன்னருகே அமர்ந்திருந்தால் அந்த இளைஞன் என்ன செய்யவேண்டும் என்பது தெரியாதா எனக் குலசேகரனிடம் கேட்டாள்.  ஆனால் குலசேகரனோ அங்கிருந்து எழுந்திருந்து வெளியேற நினைத்தான். உடனே அவனைத் தன் கைகளால் தடுத்தாள் ராணி.

தன்னை அவனுக்குப் பிடிக்கவில்லையா எனக் கேட்டு மேலும் கெஞ்சினாள் ராணி. அவன் கைகளைப் பற்றித் தன்னருகே அமர்த்திக் கொண்டு மீண்டும் கேட்டாள். "வீரரே, என்னைப் பாருங்கள்! என் அழகைப் பாருங்கள்! இதை அனுபவிக்க வெண்டும் என உங்களுக்குத் தோன்றவில்லையா? என்னைப் பிடிக்கவில்லையா உங்களுக்கு?" என்று வினவினாள். குலசேகரன் வெறுப்புடன் அவளைப் பார்த்து, "ஆம், உங்களை எனக்குப் பிடிக்கவில்லை." என்று வெறுப்புடனும், கசப்புடனும் வார்த்தைகளை உமிழ்ந்தான். ராணியின் அழகிய முகம் கோபத்தில் விகாரமாக மாறியது. அவள் கண்கள் தீக்கங்குகளைப் போல் காட்சி அளித்தன. அவனைப் பார்த்துக் கோபமாகச் சிரித்த வண்ணம் தன் கைகளைத் தட்டினாள் ராணி. இரு சேடிகள் அங்கே தோன்றினார்கள். அவர்களிடம், "அவளை இழுத்து வாருங்கள்!" என்று கட்டளை இட்டாள் ராணி. 

Thursday, August 02, 2018

ஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கன் எங்கே போகிறான்?

கிருஷ்ணாயி என்ன சொல்ல வருகிறாள் என்பதை மன்னர் புரிந்து கொண்டார். மதுரைத் தளபதி தன்னிடம் வாலாட்டினால் தான் நேரடியாக தில்லி சுல்தானுக்குத் தகவல் தெரிவித்துவிடுவதாகச் சொல்லி அவனை மிரட்ட வழி இருப்பதை ராணி சுட்டிக் காட்டினாள். அதை மன்னரும் புரிந்து கொண்டார். மதுரைத் தளபதிக்குத் தற்போது ஓலை அனுப்ப வேண்டாம் எனவும், அப்படி அவன் ஏதேனும் தொந்திரவு கொடுத்தால் தில்லி சுல்தானிடம் அவனைப் பற்றிய செய்திகளைத் திரித்துச் சொல்லி சுல்தானுக்கு அவன் மேல் கோபம் வரும்படி செய்துவிடலாம் எனவும் இருவரும் பேசி முடிவு எடுத்துக் கொண்டனர்.
****************************
இங்கே அரங்கன் ஊர்வலம் மதுரையைக் கடந்து மேலும் ஒரு மாதம் அங்குமிங்குமாகப் பயணம் செய்து திருநெல்வேலியையும் கடந்து ஒருவழியாக நாஞ்சில் நாட்டின் நாகர்கோயிலை அடைந்தது. சேர நாட்டோடு அப்போது நாஞ்சில் நாடும் சேர்ந்து இருந்ததால் அதுவரைக்கும் தில்லி வீரர்களும் வராததால் அனைவரும் பல மாதங்கள் கழித்துக் கொஞ்சம் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தனர். அதனாலேயே அனைவருக்கும் தைரியமும் வந்தது போல் இருந்தது. ஒரு மாதம் போல் அங்கே தங்கினார்கள். வெவ்வேறு திசைகளுக்குத் தப்பிப் போயிருந்த மற்றவர்களும் அங்கே வந்து சேர வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த வருஷம் நாகர்கோயிலிலும்  அரங்கன் மட்டுமின்றித் தமிழ்நாட்டின் பிற ஊர்களிலிருந்தும் மூல விக்ரஹங்களும், அர்ச்சாவதார விக்ரஹங்களும் வந்து சேர்ந்திருந்தன. ஊரே கோலாஹலமாகக் காட்சி அளித்தது. நாகர்கோயிலுக்குக் கொண்டு வரப்படாத விக்ரஹங்கள் சம்பந்தப்பட்ட ஊர்களின் குளங்களிலோ, கோயில்களுக்குள்ளே நந்தவனத்திலோ ஆழமாய்க் குழி தோண்டிப் புதைக்கப்பட்டன.

இங்கே வந்திருந்த விக்ரஹங்களோடு அவற்றைச் சேர்ந்த பரிவாரங்களும், விக்ரஹங்களுக்கு தினப்படி ஆராதனை செய்யும் அர்ச்சகர்களும் வந்திருந்தனர். அவரவர் கோயில் வழக்கப்படி அவரவர் விக்ரஹங்களுக்கு ஆராதனைகளை நடத்தினார்கள். அங்கே அரங்கனைத் தவிர்த்து மதுரை மீனாக்ஷியும் அடைக்கலம் தேடி வந்திருந்தாள். ஆனாலும் அந்தக் கூட்டத்தார் அவரவர் விக்ரஹங்களுடன் வந்த மனிதர்களுடனேயே கலந்து பழகினார்கள். அனைவரும் சேர்ந்து பழகவில்லை. என்றாலும் பிரச்னைகள் ஏதுமில்லாமல் மேலும் இரண்டு மாதங்கள் கழிந்தன. இனி இங்கே தங்கினால் அரங்கனுக்கு ஆபத்து நேரிடும் என நினைத்த ஊர்வலத்தார் அக்கம்பக்கம் நிலைமையை விசாரித்ததில் அரங்கன் விக்ரஹத்தைக் குறி வைத்தே வேட்டை நடத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு அஞ்சினார்கள். இங்கேயே மேலும் தங்கினால் எப்படியும் தெரிந்து கொண்டு வந்துவிடுவார்களே எனக் கவலை கொண்டார்கள். ஆகவே அங்கிருந்து கிளம்புவதற்கான நாளை நிச்சயித்துக் கொண்டு சேர நாட்டுக்குள்ளேயாவது கொங்கு நாடு வழியாவது போக முடிவு செய்தனர்.

அவர்கள் கிளம்புகையில் குலசேகரன் அவர்களுடன் கிளம்பிப் போகவில்லை. அரங்கனைப் பத்திரமாக நாடு கடத்தி ஆகிவிட்டது. இனி அவன் கிருஷ்ணாயிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும். குலசேகரன் மனம் சஞ்சலம் அடைந்தது. எனினும் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என நினைத்த அவன் திருவண்ணாமலையை நோக்கித் தன் குதிரையைச் செலுத்தினான். பல ஊர்களையும் ஆறுகளையும் கடந்து வந்தான் அவன். அவன் மனம் ஹொய்சள மன்னரையே நினைத்து வருந்திக் கொண்டிருந்தது. சுமார் ஒரு மாதப் பயணத்துக்குப் பின்னர் அவன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தான்.  அங்கே வந்ததும் ஏதேதோ நினைத்துக் கவலையுடன் வந்த குலசேகரனுக்கு ஊரின் அமைதியும் எந்தவிதமான மாறுதலும் இல்லாமல் ஹொய்சள மன்னரின் கீழ் பத்திரமாக இருந்த ஆட்சியையும் பார்த்து வியந்தான். அதே சமயம் ஹொய்சள மன்னர் அங்கே இருந்த காரணத்தால் தான் மற்ற ஊர்க் கோயில் விக்ரஹங்களுக்கு ஏற்பட்ட கதி திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு ஏற்படவில்லை என்பதையும் புரிந்து கொண்டான்.

வழக்கமான சத்திரத்தில் தங்கிக் கொண்டுக் கிருஷ்ணாயிக்குத் தகவல் அனுப்பி ஒரு மாதத்தை விரைவில் முடித்துக் கொண்டு தான் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என நினைத்தான். அன்று மாலை காற்றாட வெளியே சென்று கடைவீதிகளில் உலாவியபோது, அவனை "வீரரே!" என ஒரு குரல் அழைத்தது. திரும்பிப் பார்த்த குலசேகரன் அங்கே அபிலாஷிணியைக் கண்டான். அவனைப் பார்த்ததுமே அபிலாஷிணி அவன் எப்போது திரும்பினான் என்று கேட்டுவிட்டு விரைவில் அரண்மனைக்கு வரும்படி சொல்லி விட்டு ஓடி விட்டாள். ஓடும்போது அவள் வெட்கத்தால் தன் முகத்தை மூடிக் கொண்டு சென்றதைக் கண்ட குலசேகரன் மனம் நொந்து போனான். ஆனாலும் அவன் உடனே கிளம்பவில்லை. ஒரு நாழிகைக்கும் மேலாகக் கடைவீதிகளில் உலாத்திவிட்டு மெதுவாகவே சத்திரத்துக்குத் திரும்பினான். அங்கே அவனை எதிர்பார்த்து இரு வீரர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் அரண்மனைக்குச் சென்ற அவன் முதலில் மன்னரைக் காணவே விரும்பினான். ஆனால் மன்னர் வடக்கே சென்றிருக்கிறார் என்னும் தகவல் கிடைக்கவே அவன் மனம் ஏமாற்றத்தில் ஆழ்ந்தது.

இரு வீரர்களும் அவனை மிக வற்புறுத்தி அரண்மனை அந்தப்புரம் அழைத்துச் சென்றனர். அங்கே அவனைக் கண்ட கிருஷ்ணாயி முகம் மலர்ந்து வரவேற்றாள். சேடிகளை அழைத்து அவன் மேல் பன்னீர் தெளித்து மலர்மாரி பொழியும்படி செய்தாள். பின்னர் அவனை ஆசனத்தில் அமரச் செய்து சேடிகளில் நடனம் தெரிந்தவர்களைக் கொண்டு நடனங்கள் ஆடி அவனைச் சிறிது நேரம் மகிழ்வித்தனர்.  பின்னர் அனைவருக்கும் கிருஷ்ணாயி ஜாடை காட்ட அங்கிருந்து அனைவரும் வெளியேறினர். கிருஷ்ணாயியுடன் தனித்து விடப்பட்ட குலசேகரன் ராணிக்கு நன்றி தெரிவித்தான். ராணி அது தன் கடமை எனச் சொல்லிக் கொண்டே அவன் அருகே நெருக்கமாக அமர்ந்தாள்.  அவள் கண்களிலிருந்து எழுந்த பார்வையும் அவள் உடலில் இருந்து எழுந்த சுகந்தமான வாசமும் அவன் மனதை மயக்கியது.  அவனுக்கு உதவுவது அவள் உள்மன வேட்கை என்றும் சொல்லிக் கொண்டாள். குலசேகரன் அது தன் பாக்கியம் எனச் சொல்ல பாக்கியம் எனச் சொன்னால் போதாது என்று சொல்லிச் சிரித்தாள் ராணி.

"வீரரே, நான் ஓர் இளம்பெண்! நீர் ஓர் இளைஞர்! தனிமையான இடம்! மஹாராணியின் அந்தப்புரம். இப்போது நேரமோ இரவு! இந்த நேரத்தில் தனித்திருக்கும் இருவரும் என்ன செய்வார்கள்?" என்று கேட்டவண்ணம் அவள் மேலும் மேலும் நகர்ந்து அவன் மேல் சாய்ந்தாள். குலசேகரன் மனம் திடுக்குற்றது.

Wednesday, August 01, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கன் தப்பினான்! ஹொய்சளருக்கு ஆபத்து!

குலசேகரன் பின்னால் வந்தவர்கள் தில்லித் துருக்கர்கள் தான் என்பதைக் கண்டு கொண்டான்.  தப்பி ஓடிய ஒரு வீரன் மூலம் செய்தி கிடைத்து அதற்குள்ளாக ஆயிரம் வீரர்களைத் திரட்டிக் கொண்டு தில்லிப் படை அவர்களைத் துரத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தது. எப்படியும் இன்னும் இரு நாழிகையில் இங்கே இந்த மேட்டுக்கு வந்துவிடும். அதற்குள்ளாக அரங்கனைத் தப்புவிக்க வேண்டும்.குலசேகரன் யோசித்தான். யோசித்த வண்ணமே சுற்றும் முற்றும் பார்த்தபோது எதிர்த்திசையில் மீண்டும் மேலே ஏறும் மேடு இரு குன்றுகளுக்கு இடையே காணப்பட்டது. அது ஒரு கணவாய் போலத் தோற்றமளித்தது, அங்கே போய் எதிரிகளுடன் சண்டையிட வசதியான இடமாகத் தெரிந்தது. அங்கே விரைவில் போய்விட வேண்டும்.

பல்லக்குகளை விரட்டி அடித்துக் கொண்டு போகச் சொன்னான். அனைவரும் பல்லக்குகளைத் தூக்கிக் கொண்டு முடிந்தவரை வேகமாய் ஓடினார்கள். அனைவர் மனதிலும் தங்கள் உயிருக்கும் மேலான அரங்கன் காப்பாற்றப்பட வேண்டும் என்னும் எண்ணமே மிகுந்திருந்தது. விரைவில் கணவாயை அடைந்தனர். மூச்சிரைக்க இரைக்கக் கணவாய் மேல் ஏறினார்கள். உள்ளே நுழைந்ததும் குலசேகரன் வேறு ஓர் உத்தி செய்ய நினைத்து, சுமார் ஐம்பது பல்லக்குகளைக் காலி செய்யச் சொன்னான். பல்லக்குகளைக் காலியாக வைத்து அவற்றைக் கணவாய் வாயிலில் குவித்து வைக்கும்படி கட்டளை இட்டான். எல்லாவற்றையும் தூக்கி எறிய அவை உடைந்து விழுந்து அந்த இடமே ஒரு குப்பைக் கூளமாக ஆகிவிட்டது. மிச்சம் இருந்த ஐம்பது பல்லக்குகளில் கீழே இறங்கிய பெண்களையும் சாமான்களையும் வைத்து விரைந்து அவர்களைத் தெற்கு நோக்கிப் போகச் சொன்னான். தானும் தன் கூட்டாளிகளும் விரைந்து வரும் படையை எதிர்கொள்வதாகவும் அவர்கள் முன்னேற்றத்துக்குத் தடை விழாமல் பாதுகாப்பதாகவும் கூறி அவர்களை விரையச் சொன்னான்.

பின்னர் அனைவரிடமும் இரவானதும் பெண்கள் அனைவரும் பல்லக்குகளில் இருந்து இறங்கி வெவ்வேறு பகுதிகளுக்குப் பிரிந்து வெவ்வேறு திசைகளில் சென்று மறைந்து விட வேண்டும்.  இவர்களுக்குப் பாண்டிய நாட்டில் திரட்டிய கொற்றவைப் படையின் ஒற்றர்கள் ஆங்காங்கே காத்திருந்து உதவிகள் செய்வார்கள். பெண்கள் அவர்கள் விரும்பும் இடத்துக்குச் செல்லவும் உதவுவார்கள். என்று சொல்லி அவர்களைப் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தான். பின்னர் தன் தோழர்களுடனும், கூட வந்திருந்த 200ஹொய்சள வீரர்களுடனும் மலைப்பகுதிகளின் மேலே ஏறி எதிரே வருபவர்கள் கண்களில் படாமல் மறைந்து கொண்டனர். வீரர்கள் கணவாயை நெருங்கும் வேளையில் திடீரென எதிரே பெரிய அளவில் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. ஆம், குலசேகரன் ஏற்பாடு அது தான். அவர்கள் விரைவாகக் கணவாயின் உள்ளே வரும் தருணம் பார்த்துக் குவிந்திருந்த பல்லக்குகளில் தீயை வைக்க அது நன்கு பிடித்துக் கொண்டு எரிந்தது.

வீரர்கள் தயங்கி நின்றனர். கணவாயைக் கடக்க வேறு வழியும் புலப்படவில்லை. மலைப்பகுதியில் மேலே ஏறித் தான் கடக்க வேண்டும். ஆகவே அவர்கள் மேலே ஏறுகையில் அம்புகள் சரமாரியாக அவர்களைத் தாக்கின. குலசேகரனும் வீரர்களும் ஏறி வருபவர்களைக் கண்காணித்து அம்புகளை எய்து அவர்களைத் திணற அடிக்க வந்தவர்களுக்கோ எதிர்த்துப் போரிட முடியவில்லை. எதிரிகள் மறைந்திருக்கும் இடமே தெரியவில்லை . என்றாலும் சிறிது நேரம் சண்டை போட்டவர்கள் பின்னர் மெல்ல மெல்லப் பின் வாங்கினார்கள். அவர்கள் முற்றிலும் பின் வாங்கிச் சென்றதும் குலசேகரன் அவசரம் அவசரமாகத் தன் படையை நடத்திக் கொண்டு தானும் தெற்கு நோக்கிச் சென்றான்.

அழகர்மலையிலிருந்து அரங்கன் தப்பித் தெற்கே சென்ற தகவல் ஒரு வாரத்திற்கெல்லாம் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தது. மன்னர் உள்ளூர சந்தோஷப் பட்டாலும் தில்லிப் படைகளை நினைத்துக் கலங்கவும் செய்தார். ராணிக்கும் மிகவும் சந்தோஷம். ஆனால் மன்னரின் கலக்கத்தை உறுதி செய்வது போலவே மறுநாள் மதுரையிலிருந்து தில்லித் தளபதியின் எச்சரிக்கை ஓலை வந்து சேர்ந்தது. ஹொய்சள மன்னர் செய்த நம்பிக்கைத் துரோகத்தைக் குறிப்பிட்டு அவர் உதவியினால் மதுரையிலிருந்து பல பெண்களும், பொருட்களும்,, மற்ற செல்வங்களும் கடத்தப்பட்டிருப்பதை தளபதி அறிந்து கொண்டு விட்டதாகவும், இதற்காக ஹொய்சள நாட்டைத் தான் பழி வாங்கப் போவதாகவும் மன்னர் எதற்கும் தயாராக இருக்கும்படியும் அதில் கண்டிருந்தது. வல்லாளர் கவலையுடன் ராணி கிருஷ்ணாயியிடம் அந்த ஓலையைக் காட்டித் தான் பயந்தாற்போல் நடந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

ஆனால் கிருஷ்ணாயி கலங்கவில்லை. இதற்கெல்லாம் ஏன் கலங்க வேண்டும் என்று அவள் கேட்டாள். அதற்குக் கிருஷ்ணாயி நமக்கு தில்லியுடன் தான் நேரடித் தொடர்பு. மதுரைத் தளபதிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்! ஒரு தொடர்பும் இல்லை. நாம் கப்பம் கட்டுவதும் தில்லிக்குத் தான் ஆகவே கவலைப்பட ஒன்றுமில்லை என்றாள். ஆனால் மதுரையில் இருப்பது தில்லிப் படைதானே என மன்னர் சொன்னார். அதற்குக் கிருஷ்ணாயி, தில்லியிலிருந்து மதுரை எவ்வளவு தொலைவில் உள்ளது! தில்லி அரசர் ஒரு பெரிய படையையும் தளபதியையும் மதுரையில் விட்டு வைத்தால் என்ன ஆகும்? அது ஒரு தனி நாடாக ஆகிவிடும் அல்லவா என்று எடுத்துக் காட்டினாள். இதனால் நமக்கு என்ன லாபம் என மன்னர் கேட்கக் கிருஷ்ணாயி அதற்கு பதில் சொன்னாள்.