எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, April 28, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணீந்தோம்!

உள்ளே நுழைந்தது ஒரு சேடிப்பெண். அவள் புன்னகையோடு வந்தவள் குல சேகரனை நேருக்கு நேர் பார்த்ததால் நாணம் அடைந்தாள். வெட்கத்துடன் தலை குனிந்த வண்ணம் ஒரு பேழையை எடுத்து அவனிடம் நீட்டினாள். அது என்ன எனக் கேட்ட குலசேகரனிடம் உள்ளே லேகியம் இருப்பதாகவும் அதை வேளா வேளைக்கு விழுங்குமாறூ கொடுத்தனுப்பியதாகவும் சொன்னாள். யார் கொடுத்தது எனக் கேட்ட குலசேகரனிடம் வித்வாம்சினி ஹேமலேகா தான் கொடுத்து அனுப்பியதாகவும் சொன்னாள்.  அந்தப் பெண்ணீற்குப் பதினைந்து வயதுக்குள் தான் இருக்கும். கூச்சம் நிரம்பியவளாக இருந்தாள்.  அவளீடம் தன் நன்றீயைத் தெரிவித்துக் கொண்ட குலசேகரனைப் பார்த்து அவள் உடம்பு எப்படி இருக்கிறது என வித்வாம்சினி விசாரித்து வரச் சொன்னதாகக் கூறீனாள்.

குலசேகரன் தான் இப்போது உடல் நலத்தோடு இருப்பதாய்ச் சொன்னான். அவளூக்கும் ஹேமலேகாவுக்கும் தன் நன்றீயையும் தெரிவித்துக் கொண்டான். அவள் திரும்பத் தயாரானபோது குலசேகரன் அவளாஇ மீண்டும் அழைத்துத் தான் ஹேமலேகாவுக்கு ஒரு செய்தி கொடுப்பதாகவும் அதை அவளீடம் தெரிவிக்க வேண்டும் என்றூம் கேட்டுக் கொண்டான். செய்தியைக் கேட்ட அவளீடம் அவன், "படிதும் மே தேஹி கஞ்சித் காவ்ய க்ரந்தம்" எனச் சொல்லும்படி கூறீனான். அவள் திகைப்புடன் மீண்டும் கேட்டாள். அதை அவள் தெலுங்கு என நினைத்தாள். ஆனால் குலசேகரன் அது தெலுங்கு இல்லை வடமொழி எனச் சொன்னான். அவள் உச்சரிப்பு வேறுபட்டிருக்கக் குலசேகரன் அதைத் திருத்தி ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லச் சொல்லி மறூபடி திருத்தினான்.

இரண்டு மூன்றூ முறாஇ அதைச் சொல்லிப் பார்த்த அந்தப் பணீப்பெண் அவனிடம் இதன் பொருள் என்ன எனக் கேட்டாள். குலசேகரன் அதற்கு ஹேமலேகா அதனைப் புரிந்து கொள்வாள் எனச் சொன்னான். அவள் பெயரைக் கேட்டுத்தெரிந்து கொண்டான் குலசேகரன். அபிலாஷிணீ எனத் தன் பெயரைச் சொல்லிவிட்டு ஓட்டமாகச் சென்றாள் அந்தப் பெண்.   அன்றீரவு குலசேகரன் பிரதிமா என்னும் நாடகத்தை ஓலைச்சுவடிகள் வழியாகப் படிக்கையில் கட்டியம் கூறூம் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தான். ராணீ கிருஷ்ணாயி வந்து கொண்டிருந்தாள். குலசேகரன் அவளாஇ உபசரித்து அமரச் செய்தான். அவன் உடல் நலம் குறீத்துக் கேட்டறீந்தாள் கிருஷ்ணாயி!

பிறகு அவன் படிப்பதை அறீந்து கொண்டவள் வாள் பிடித்துப் போர் செய்ய வேண்டியவன் இப்போது நூல் பிடிக்கிறான் எனக் கேலியும் கோபமும் கலந்து சொல்ல, குலசேகரன் தான் ஆரம்பத்தில் படித்துக் கொண்டு இருந்ததையும் ஶ்ரீரங்கத்தின் நிலைமையாலேயே வாள் பிடிக்க வேண்டி வந்ததையும் சொன்னான். ஆனால் தனக்குப் போரை விட இம்மாதிரிப் புத்தகங்கள் படித்து மன அமைதியுடனே இருக்கவே பெரும் விருப்பம் என்றூம் சொன்னான்.  ஆனால் கிருஷ்ணாயியோ காவியங்கள், புராணங்கள் படிக்க ஏற்ற சூழ்நிலை நாட்டில் இப்போது இல்லையே என்றாள்.  குலசேகரன் போன்ற வீரர்கள் அத்தகைய சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்றாள். மேலும் தொடர்ந்து இப்போதைய சூழ்நிலையில் இதை எல்லாம் படிப்பதற்குத் தடை போடவேண்டும் என்றூ சொன்னபடியே குலசேகரன் கையிலிருந்த ஓலைச்சுவடிகளை அவன் எதிர்பாரா வண்ணம் பிடுங்கி அங்கிருந்த விளக்கில் காட்டி எரிக்க ஆரம்பித்தாள்.

பதட்டத்துடன் குலசேகரன் அதைத் தடுக்க முயன்றான். ஆனால் அது முழுதும் எரிந்து முடிந்து விட்டது. குலசேகரன் கண்கள் கண்ணீரால் நிறாஇந்தது. மஹாராணீயோ அவனைப் பார்த்து ஹாஹாஹா எனச் சிரித்தாள். இந்த ஓலைச் சுவடியின் மீது இவ்வளவு வாஞ்சையா உனக்கு எனவும் கேட்டாள். குலசேகரன் அதற்கு அந்த ஓலைச் சுவடிகள் இன்னொருவர் சொத்து எனச் சோகமாகச் சொன்னான். அப்போது கிருஷ்ணாயி அந்த ஓலைச் சுவடிகள் யார் சொத்து எனச் சொல்லட்டுமா என்றூ கேட்டு விட்டு "படிதும் மே தேஹி......" என ஆரம்பித்தாள்.

குலசேகரனுக்கு அவளீடம் ஆத்திரமும் வெறூப்பும் ஏற்பட்டாலும் வெளீக்காட்டிக் கொள்ளவில்லை. தான் சேடியிடம் சொன்னது இவளூக்கு எப்படித் தெரியும்? ஒரு கால் இவள் வேலை தானா அது என்றேல்லாம் யோசித்தான். ராணீயோ குலசேகரனிடம் , " நீ வந்த வேலை என்ன என்பது தெரியுமல்லவா உனக்கு? எங்கள் பாதுகாப்புக்காகவே நீ வந்திருக்கிறாய்! அதை மறந்து வேறே வேலையில் ஈடுபடாதே!" என எச்சரித்தாள்.

Tuesday, April 24, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

வாசந்திகா கண்ணீருடன் மேலே நடந்தாள். உயிரை அவள் விட இருந்த அந்தத் தருணத்தில் அரங்கன் கூவி அழைத்தது போல் குரல் அவள் காதில் கேட்க, கொடவர்களின் "ரங்கா! ரங்கா" என்னும் கூக்குரலாலோ என்னமோ அவள் மனம் மாறித் திரும்பினாள். அதனால் அரங்கனை இன்னும் நன்றாக ஒளித்தும் வைக்க முடிந்தது. நான் மட்டும் உயிரை விட்டிருந்தால் இத்தகைய பாக்கியம் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவள் எண்ணிக் கொண்டாள். இந்த வாழ்க்கையை இத்தனை சிரமங்களுக்கிடையேயும் நான் வாழ்ந்தாக வேண்டும் என்பது அரங்கன் கட்டளை போலும்! ஏனெனில் யாருக்காவது எப்போதாவது என் உதவி தேவைப்படும். என்னால் அவர்களுக்குப் பயன் ஏற்படும்! அரங்கா! இனி என் வாழ்வில் பிறர்க்கு உதவி செய்வதையே லக்ஷியமாகக் கொள்வேன்! என்று நினைத்துக் கொண்டே வாசந்திகா நடந்தாள்.  அவள் மனம் அத்தனை நாள் அனுபவித்த வேதனைகளையும் கசப்பான நிகழ்வுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க முயன்றது.

**************

அங்கே! ஹொய்சள ராணியுடன் ராமேஸ்வரத் தீர்த்த யாத்திரைக்குச் சென்ற அனைவரும் அடுத்த இரு தினங்களில் ராமேஸ்வரம் சென்று தீர்த்தங்களில் நீராடினார்கள். பின்னர் திரும்புவதற்கான ஆயத்தங்களைச் செய்தார்கள். திரும்பும் வழியில் ஒரு நாள் மாலை ஓர் பெரிய ஊருணிக்கரையில் இறங்கி இரவு தங்க ஏற்பாடு செய்தார்கள். அடுத்தடுத்த அலைச்சல்களாலும் தூக்கமின்மையாலும் உடல்நலம் கெட்டுப் போய்க் காய்ச்சல் வந்து குலசேகரன் படுத்திருந்தான். குளிரினால் உடல் வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தது. பணியாட்கள் கஞ்சி கொண்டு வந்து கொடுத்திருந்தனர். அதைக் குடித்துவிட்டுத் தூங்கலாம் என நினைத்தால் அவனை எழுப்பினாள் ராணி கிருஷ்ணாயி. "வீரனே!" என்னும் அவள் குரல் கேட்டுக் கண் விழித்த குலசேகரன் எழுந்திருக்க முனைந்தான். கிருஷ்ணாயி வேண்டாம் எனத் தடுத்தாள். பின்னர் அவன் பக்கம் அமர்ந்து கொண்டு, கடுமையான வேலைகளில் ஈடுபட்டதால் உனக்கு உடல்நலம் கெட்டு விட்டது அல்லவா? இது என்னால் தானே? என்று கேட்டாள்.

குலசேகரன் மறுத்தான். அப்போது கிருஷ்ணாயி, குதிரையில் ஏறிப் பிரயாணம் செய்ததுக்கே உனக்குக் காய்ச்சல் வந்து படுத்துவிட்டாயே எனக் கிண்டலாகப் பேசினாள். குலசேகரனுக்கு உள்ளுக்குள் கோபம் வந்தாலும் வெளிக்காட்டாமல், "ராணி, தாங்கள் இந்த எளியவனை எவ்வளவு வேண்டுமானாலும் எள்ளி நகையாடுங்கள்! ஆனால் ஒன்று! நான் இந்த ஒரு யாத்திரையில் கலந்து கொண்டதால் மட்டும் உடல்நலம் கெட்டுப் போய்ப் படுக்க வில்லை. கடந்த மூன்று மாதங்களாக நான் அலைந்த அலைச்சலையும், சந்தித்த போர்களையும், சென்ற யாத்திரைகளையும் தாங்கள் அறிய மாட்டீர்கள். கொஞ்ச நேரம் ஓய்வு கூட எடுக்காமல் தொடர்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறேன். என் உடலும் மனித உடல் தானே மஹாராணி! அதனால் தான் உடல் நலம் கெட்டுவிட்டது!" என்று கோபமாகக் கூறிவிட்டுத் தன் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டு படுத்தான்.

ஆனால் கிருஷ்ணாயி போர்வையை விலக்கி அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு அதீதமான ஜூரம் அடிப்பதைத் தெரிந்து கொண்டு அவனிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு உடனடியாக மருத்துவரை அனுப்புவதாகக் கூறிவிட்டுச் சென்றாள். அதன் பிறகு வைத்தியர் வந்து குலசேகரனைச் சோதித்துப் பார்த்து மருந்து கொடுத்தார். மறுநாள் காய்ச்சல் கொஞ்சம் குறைந்தது. குறளன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டுத் தன் வேலையான முன் காவலுக்குச் சென்றான். காய்ச்சல் விட்டதால் உடல் வியர்த்துவிடப் போர்வையை விலக்கிவிட்டுக் கண்களை மூடித் தூங்க யத்தனிக்க திடீரெனக் குளிர்காற்று அவன் மேல் வீசக் கண்களைத் திறந்து பார்த்தான். கிருஷ்ணாயி ஓர் மயில் தோகையால் ஆனவிசிறியை வைத்துக் கொண்டு அவனுக்கு விசிறிக் கொண்டிருந்தாள்.

அவளைக்குலசேகரன் தடுக்க முயல அவளோ தடுக்காதே! என்று சொன்னாள். மேலும் வீரர்களுக்குப் பணிவிடை செய்வது அரசகுல மாண்பு என்றும் சொன்னாள். போரில் அடிபட்டு வீழ்ந்த பல வீரர்களுக்கு அவள் தந்தை பணிவிடை செய்திருப்பதாகவும் இறந்தவர்களுக்கு அவள் தாத்தா, தந்தை போன்றோர் சடங்குகள் செய்திருப்பதாகவும் சொன்னாள். தான் ஓர் தார்மிக அரச பரம்பரையில் உதித்தவள் என்றும் கூறினாள். இத்தகைய பணிவிடைகளினால் அவள் மகிழ்ச்சி அடைவதாகவும் சொன்னாள். குலசேகரனால் அவளைப் புரிந்து கொள்ள முடியாமல் அவளிடம் நேற்று என்னைக் கோழை என்று சொல்லிவிட்டு இன்று வீரன் என்று சொல்வதின் காரணம் என்ன என்று கேட்டான். அதற்குக் கிருஷ்ணாயி தான் அவனைச் சும்மாச் சீண்டி விளையாடியதாகச் சொன்னாள். இதெல்லாமா ஒரு வேடிக்கை என எண்ணினான் குலசேகரன்.

கிருஷ்ணாயி அவன் மனதைப் புரிந்து கொண்டவள் போல, அவனைச் சீண்டி விளையாடுவதில் அவள் மனம் மகிழ்ச்சி அடைவதாகச் சொன்னாள். கோபத்தில் குலசேகரன் முகம் சிவப்பதைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருப்பதாகவும் சொன்னாள். திருவண்ணாமலை வீதியில் கோபத்தில் அவன் துள்ளிக் குதித்ததைச் சொன்னாள்.  அவன் சண்டை இட்டதைப் பல்லக்கில் இருந்து எட்டிப் பார்த்ததும் தான் தான் என்று கூறினாள். அதன் பிறகே ஹொய்சள வீரர்களை அனுப்பிக் குலசேகரனைத் தடுத்ததாகவும் சொன்னாள். கோட்டைக் கிடங்கில் அவனைத் தள்ளியதும் அவள் தான் என்றாள். குலசேகரன் அவளிடம் அவள் ஏன் இத்தகைய கொடுமைகளை அவனுக்குச் செய்ய வேண்டும் என்றும் அதன் காரணம் என்ன என்றும் கேட்டான்.

கிருஷ்ணாயி சிரித்தாள். விளையாட்டுக்கு அவனைக் கிடங்கில் தள்ளி ஒரு மணி நேரம் கழிந்த பின்னர் விடுவிக்கலாம் என நினைத்த போதும் மன்னர் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் ஒரு வாரம் கடத்திவிட்டார் என்றாள். குலசேகரன் அதற்கு அவன் கிடங்கில் இருந்த சமயம் அவனுக்கு நல்லுபதேசங்கள் செய்த பெண்மணி யார் என்று கேட்டான்.  கிருஷ்ணாயி அதற்கு அவனிடம், "நீ தான் அவள் கண்களைப் பார்த்திருப்பாயே! அதிலிருந்து கண்டுபிடி!" என்றாள். குலசேகரன் தான் அதில் தேர்ச்சி பெற்றவன் இல்லை என்றும் எல்லாப் பெண்களின் கண்களும் தனக்கு ஒரே மாதிரி இருப்பதாகவும் சொன்னான். கிருஷ்ணாயி சிரித்தாள். ஆனாலும் உடனே அவனிடம், "வீரனே, நான் உன்னிடம் கொஞ்சம் நெருங்கிப் பேசவும் நீ என்னிடம் உரிமை கொண்டாடலாம் என நினைக்கிறாய் போலும்! எச்சரிக்கையோடு இரு!" என்று கூறிவிட்டு வெளியேறினாள். திகைத்தான் குலசேகரன். அப்போது கூடாரத்தின் திரையை வேறொரு பெண்ணின் வாளிப்பான கை மெல்ல மெல்ல விலக்கியது.  குலசேகரன் மேலும் திகைப்படைந்து அந்தப்பக்கம் பார்த்தான். 

Monday, April 23, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஒரே ஓட்டம் தான். தேர் இப்போத் தான் நிலைக்கு வந்திருக்கு என்றாலும் தேர் ஓடிய ஓட்டத்தில் ஆங்காங்கே சிற்சில பிரச்னைகள். சுகக்கேடுகள்! மெல்ல மெல்ல ஓய்வு அதிகம் எடுத்துக் கொண்டு இணையத்தைக் குறைத்துக் கொண்டு இருக்கிறேன். என்றாலும் எடுத்த காரியத்தை முடிக்கணும்; பாதியில் நிற்கிறதே என்னும் மன உறுத்தல் இருக்கத் தான் செய்கிறது. முக்கியமான பதிவுப் பக்கத்திலேயே தொடர்ந்து ஏதும் போட முடியாமல் இருக்கிறச்சே, இங்கே எல்லாம் யோசிச்சு எழுத வேண்டிய இடம்! கிட்டத்தட்ட மறுபடி 2 மாசம் போல் ஏதும் எழுதாமல் இருந்துட்டு இன்னிக்கு வந்திருக்கேன்.

சென்ற பதிவில் அழகர்கோயிலில் அரங்கனைப் பாதுகாத்து வந்த கொடவர்களை அரண்மனையில் சேவகம் செய்யும் அலிகள் வந்து பிடித்துக் கொண்டதைப் பார்த்தோம். அலிகள் பிடித்துக் கொண்டதும், "ரங்கா! ரங்கா!" என்று கொடவர்கள் அலற அலிகளோ கேலியாகச் சிரித்தனர். அந்த அலிகளின் பாதுகாப்பில் வந்த அரண்மனைப் பெண்களில் ஒருத்தி அந்த மலையின் விளிம்பு ஒன்றை நோக்கி மெல்ல நடந்தாள். அந்தப் பெண்கள் அனைவருமே உல்லாசமாய்க் கூடி இருந்து பொழுது போக்குவதற்காகவே அங்கே வந்திருந்தபடியால் கண்காணிப்பு இல்லை. ஆகவே அந்தப் பெண்ணிற்கு இது வசதியாக இருந்தது. முகத்திரையிட்டுத் தன்னை மூடிக் கொண்டிருந்த அந்தப் பெண் வேறு யாரும் இல்லை. வாசந்திகா தான்! அவள் இங்கே மதுரைக்குக் கொண்டுவரப் பட்டிருந்தாள். அங்கே வந்ததில் இருந்து தனக்கு நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளால் உடலும், மனமும் தளர்ந்து போயிருந்தாள் வாசந்திகா. முகம் இளைத்து உடல் கருத்துப் பொலிவின்றிக் காணப்பட்டது. கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.

பழையனவற்றை எல்லாம் நினைத்த அவள் மனது சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு நேர்ந்த அவலங்களையும் சேர்த்து அசை போட்டது. அங்கே பலவந்தமாகக் கொண்டுவரப்பட்டவர்களில் அவளைப் போன்ற அழகான தேவதாசிகள் மட்டுமில்லை; ஒரு சில இளவரசிகள், சிற்றரசர்களின் மனைவிகள், பெண்கள் எனப் பலரும் பலவந்தமாகக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருந்தார்கள். அடிமைகளாக ஆக்கப்பட்டிருந்தார்கள். ஒரு சிலர் தங்களுக்கு நிகழ்ந்ததை விதியின் பலன் என நினைத்து ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பிக்கப் பலரும் செய்வதறியாது புலம்பித் தவித்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் அங்கே நிகழ்ந்த கொடூரங்களுக்குத் தங்களை ஒப்புக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்கு மறைமுகமாகப் போதையில் ஆழ்த்தித் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள் அந்த தில்லி வீரர்கள். நினைவுகளை மழுங்க அடித்தனர். வாசந்திகாவுக்கும் அது நிகழ்ந்தது.

அவள் நினைவுகளும் மழுங்கடிக்கப்பட்டு அவள் போதையிலே இருந்த தருணம் அவள் சூறையாடப் பட்டாள். வெகு நாட்கள் வரை தனக்கு நிகழ்ந்ததை அறியாமல் இருந்தாள் வாசந்திகா. ஆனால் போதையிலிருந்து விடுபட்டுச் சுயநினைவுக்கு வரும்போதெல்லாம் தன் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் அவளைச் சிந்திக்க வைத்தது. பின்னர் அவளுக்குத் தான் சீரழிக்கப்பட்டது புரிய வந்தது. நெருப்பில் விழுந்து விட்டது போல் தவித்தாள். அவள் சீரழிக்கப் பட்ட விஷயம் தெரிந்ததும் முதலில் நினைவு வந்தது குலசேகரன் தான். அவனுக்காகவென்று வாழ்ந்து வந்த தனக்கு நேர்ந்த இந்த அவலம் அவனுக்கு மட்டும் தெரியவந்தால்! தன் பெண்மையை முற்றிலும் இழந்த பின்னர் அவனை நினைப்பதோ, அவனை அடைய முற்படுவதோ எங்கனம் சாத்தியம்? இனி அவள் வாழ்வதற்கும் என்ன பொருள்? இருந்தாலும் ஒன்று! இறந்தாலும் ஒன்றே!

ஆகவே இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வது என்னும் முடிவுக்கு வந்திருந்தாள் வாசந்திகா! அவள் வெகுநாட்கள் ஆவலோடு காத்திருந்தது இந்த நாளுக்காகத் தான். அன்றைய தினம் காலையிலேயே தளபதி மாலிக் தனது அந்தப்புரப் பரிவாரங்களுடன் அழகர்மலைக்கு உல்லாசச் சுற்றுப் பயணம் செய்வதாக முடிவு செய்திருந்தான்.  ஆகவே அனைவரும் பயணமாக வந்திருந்தனர். பரிவாரங்களிடமிருந்து விலகித் தனியேயும் வந்துவிட்டாள்.  மலை முகட்டில் நின்றவண்ணம் அரங்கனை நினைத்துப் பிரார்த்தித்தாள்.அரங்கனுக்கு அடிமையாக இருந்து அவனுக்கே சேவை செய்ய வேண்டிய தான் இங்கே ஓர் இழிவான இடத்தில் மாட்டிக் கொண்டு மீள வழி தெரியாமல் தவிப்பதை நினைவு கூர்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும், அடுத்த பிறவியிலாவது அரங்கனின் சேவைக்காகப் பிறந்து குலசேகரனையே மணாளனாக அடையப் பிரார்த்திப்பதாகவும் கூறிவிட்டுக் குதிக்க ஆயத்தமானாள்.

அடுத்த கணம் திடீரென "ரங்கா!ரங்கா!" என்று ஒரு குரல் கேட்கத் திடுக்கிட்டாள். மீண்டும் மீண்டும் அந்தக் குரல் கேட்டது. அரங்கன் முகம் அவள் முன் தோன்றிப் புன்முறுவல் செய்வது போல் தெரிந்தது. உடனே ஏதோ ஒரு முக்கியக் காரணத்தால் தான் தன்னை அரங்கன் இறக்கவிடாமல் தடுக்கிறான் என்பதைப் புரிந்தவளாக அங்கிருந்து நகர்ந்தாள். திரும்பப் பரிவாரங்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டிச் சென்றாள். செல்லும் வழியில் கொடவர்களை அலிகள் துன்புறுத்துவதைக் காண நேர்ந்தது. அலிகளிடம் போய் விசாரிக்க, அவர்கள் அரங்கனைப் பற்றியும் அவன் பொக்கிஷமும் இருக்குமிடம் இவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும் என்பதால் இவர்களைப் பிடித்து விசாரிப்பதாகக் கூறினார்கள்.

அவர்களை விடச் சொல்லித் துருக்க மொழியில் ஆணையிட்ட வாசந்திகா சுற்றும் முற்றும் பார்த்தாள். அதற்குள் கொடவர்கள் தப்பி ஓடினார்கள். வாசந்திகாவை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த வாசந்திகாவிற்கு அங்கே இருந்த பெரும் தழைகளோடு கூடிய புதரில் ஓர் வெளிச்சம் தெரியவே உற்றுப் பார்த்தாள். ஆஹா! அது ஐம்பொன்னால் ஆன ஒரு விக்ரஹத்தின் கை! அபய ஹஸ்தம்! அப்படியானால்! ஆஹா! இது அரங்கனின் அபய ஹஸ்தம் தான்! அரங்கன் தான் ஒளிந்திருக்கிறான். இல்லை! அந்தக் கொடவர்கள் ஒளித்து வைத்திருக்கின்றனர். உடனே நாட்டிய பாவனையில் ஆடிக்கொண்டு அந்தப் புதருக்கு அருகே சென்று தழைகளை விலக்கி அரங்கனைப் பார்த்தவள் தன் கழுத்து நகையைக் கழட்டி அரங்கனுக்கு அருகே போட்டு விட்டு அரங்கனைச் சரியாக மூடினாள். பின்னர் மீண்டும் அலிகளிடம் வந்து அவர்களோடு பரிவாரங்களுடன் கலந்து கொண்டு பேசிக் கொண்டே அப்பால் நகர்ந்தாள்.