எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, August 29, 2012

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 8


மன்னனால் ஆசீர்வதிக்கப்பட்ட வீரபாண்டியன் அரியணை ஏறியதை சுந்தர பாண்டியனால் சகிக்க முடியவில்லை.  இருவருக்கும் சண்டை மூண்டது.  வீர பாண்டியனுக்கோ படைபலம் இருந்தது.  சுந்தரபாண்டியன் செய்வது என்னவெனத் தெரியாமல் தவித்தான்.  அப்போது அவன் செய்த மாபெரும் தவறு தான் தென்னாட்டுக் கோயில்களுக்குப் பல வருடங்கள் பிரச்னைகள் ஏற்படக் காரணம் ஆயிற்று.  ஆம்; நாடாளும் ஆசையில் தன் பிரதிநிதிகளை டில்லிக்கு அனுப்பி சுல்தானின் உதவியைக் கோரினான் சுந்தரபாண்டியன்.  வயதில் சுந்தரபாண்டியன் இளையவன் ஆனால் அவனே பட்டமகிஷிக்குப் பிறந்த பட்டத்து இளவரசன்.  வீர பாண்டியனோ வயதில் முதிர்ந்தவன் ஆனால் அவன் ஆசைநாயகியின் மகன்.  குலசேகரோ வீரபாண்டியனை ஆட்சி செய்ய வைத்துவிட்டுச் சென்று விட்டான்.  பாண்டிய நாடு இரண்டு பட்டது.  உள்நாட்டுச் சண்டைகள் ஏற்பட்டன.  இந்தச் சண்டைகள் குறித்த மேலதிகத் தகவல்கள் தேடினேன்.  மீண்டும் பார்க்க வேண்டும்.

அப்போது டில்லி சுல்தானாக அலாவுதீன் கில்ஜி ஆண்டு வந்தான்.  அவனால் சிறைப்பிடிக்கப்பட்ட,  சந்த்ராம் என்னும் அலி, முஸ்லீமாக மதமாற்றம் செய்யப் பட்டு மாலிக்காபூர் என்னும் பெயருடன் சுல்தானின் படையின் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தான்.  பாண்டியன் உதவி தேடி வந்ததும், ஏற்கெனவே தெற்கு நோக்கி வந்து வாரங்கல் வரையிலும் தன் பலத்தைக் காட்டிச் சென்றிருந்த மாலிக்காபூர் உடனடியாக சுந்தர பாண்டியன் உதவிக்கு வந்தான்.  மாலிக்காபூரின் பெரும்படைக்கு முன்னர் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதைப் புரிந்து கொண்டிருந்த வீரபாண்டியனோ காடுகளுக்குள் ஒளிந்து கொண்டு மறைந்து இருந்து தாக்குதல் செய்தான்.  வீர பாண்டியன் போசளரின் கண்ணனூர்க் கொப்பம் செல்ல அங்கிருந்த படை வீரர்களில் பாதிப் பேர் முஸ்லீமாக இருக்கவே அவர்களும் மாலிக்காபூருடன் சேர்ந்து கொண்டு வீரபாண்டியனை எதிர்க்கவே அவன் தில்லைச் சிதம்பரம் சென்று அங்கே ஒளிந்து கொண்டான்.   அவனைப் பின் தொடர்ந்து வந்த மாலிக்காபூர் தில்லைப் பொன்னம்பலத்தை அடியோடு பெயர்த்து எடுத்து எரியூட்டி மகிழ்ந்தான்.  ஆனாலும் வீரபாண்டியன் அவன் கைகளில் சிக்காமல் போகவே மீண்டும் மதுரை நோக்கித் திரும்பினான்.  திரும்பும் வழியில் கண்களில் பட்ட கோயில்களை எல்லாம் ஆத்திரம் கொண்டு தாக்கினான்.  அவன் தாக்கிய கோயில்களில் ஸ்ரீரங்கம் கோயிலும் ஒன்று.

கோயிலினுள் நுழைய அவனால் இயலவில்லை என ஒரு சாராரும், நுழைந்துவிட்டான் என இன்னொரு சாராரும் கூறுகின்றனர்.  ஆனால் கோயிலின் விக்ரஹங்கள் கொள்ளை அடிக்கப் பட்டன.  அவற்றில் ஸ்ரீரங்கம் கோயில் உற்சவர் ஆன அழகிய மணவாளரும், உபய நாச்சியார்களோடு கொள்ளை அடிக்கப் பட்டு டில்லி நோக்கிச் சென்றன.  ஸ்ரீரங்கம் கோயிலை இடித்துப் பாழாக்கினான்.  இத்துடன் தன் வெறி அடங்காத மாலிக்காபூர் மதுரை நோக்கிச் சென்றான்.  பாண்டிய நாடு பெரும் செல்வ வளத்தோடு இருந்து வந்ததால் பாண்டிய நாட்டுக் கருவூலத்தைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்றான்.  தான் அழைத்த சுல்தான் படையினால் தனக்கு மட்டுமல்லாமல் மொத்தப் பாண்டிய நாட்டுக்கே தீங்கு ஏற்பட்டதைக் கண்ட சுந்தர பாண்டியனோ  மாலிக்காபூர் திரும்பவும் மதுரைக்கு வருவதைத் தெரிந்து கொண்டதும், பாண்டிய நாடுப் பெரும் பொக்கிஷங்களோடு மதுரையை விட்டுச் சேர நாட்டுக்கு ஓடி விட்டான்.  (அப்போது பத்மநாப சுவாமி கோயிலில் அவன் ஒளித்து வைத்த பாண்டி நாட்டுப் பொக்கிஷங்களே இப்போது கிடைத்திருப்பதாக ஒரு கூற்று. அதற்கான ஆதாரங்களையும் சொல்கின்றனர்.  ஆனால் நமக்கு இந்தக் கதை இப்போது தேவை இல்லை.)   பாண்டியனும் கிடைக்காமல், பொக்கிஷமும் கிடைக்காமல் ஏமாந்த மாலிக்காபூர் மதுரையைத் தீக்கிரையாக்கியதோடு மீனாக்ஷி கோயிலுக்கும் எரியூட்டினான்.   சுந்தரபாண்டியனின் சிற்றப்பன் மாறவர்மன் விக்கிரமபாண்டியனால் எதிர்ப்பு நேரிடவே  அவனைச் சமாளிக்க முடியாமல் மாலிக்காபூர் அங்கிருந்து ராமேசுவரம் ஓடி அங்கும் கோயிலைச் சூறையாடி எரித்து மக்களைக் கொன்று, அவர்கள் பொருட்களைக் கவர்ந்து சேதம் விளைவித்துப்பின்னர் தென்னாட்டில் கவர்ந்த பொருட்களுடன் 512 யானைகள், 5,000க்கும் மேற்பட்ட குதிரைகள், 500 மணங்கு எடையுள்ள தங்க ஆபரணங்கள், விலைமதிக்க முடியா வைரங்கள், முத்துக்கள், மாணிக்கங்கள், மரகதச் சிலைகள் போன்றவற்றைச் சுல்தானுக்குக் காணிக்கையாக எடுத்துச் சென்றான்.  கூடவே நம் அழகிய மணவாளரும் சென்றார்.

இங்கே ஸ்ரீரங்கத்திலோ கலவரம், வேதனை, கோயிலை எப்படியாவது திருப்பணிகள் செய்து புதுப்பித்துவிடலாம்.  ஆனால் அழகிய மணவாளர் இல்லாமல் உற்சவங்கள் நடப்பது எங்கே?  என்ன செய்வது?  ஶ்ரீரங்கம் அருகே உள்ள உத்தமர் கோயிலில் எம்பெருமானுக்காகத் தினம் தினம் ஆடிப் பாடி மகிழ்விக்கும் பெண்ணொருத்தி இருந்தாள்.  அவளோ அரங்கனைப் பார்க்காமல் சாப்பிடுவதில்லை.  அரங்கனைக் காணாமல், அவன் முன்னே ஆடிப் பாடாமல் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.  அரங்கன் போன வழியைத் தேடிக் கொண்டு அவளும் கிளம்பினாள்.  வழியெங்கும் விசாரித்துக் கொண்டு டில்லிப்படை சென்ற திசை நோக்கி அவளும் சென்றாள்.   விக்ரஹமும் டில்லி போய்ச் சேர்ந்தது.  தனக்கு மாலிக்காபூர் கொண்டு வந்த விலை மதிக்க முடியாப்பொருட்களைப் பார்த்து மகிழ்ந்த சுல்தான் அனைத்தையும் வீரர்களுக்குப் பிரித்து கொடுத்தான். சுல்தானின் மகள் சுரதானி என்பவள் அப்போது அங்கே வந்து அழகிய மணவாளரைப் பார்த்தாள். அந்த விக்ரஹம் அவளுடன் பேசுவது போல் தோன்றியது அவளுக்கு.  அந்த விக்ரஹத்தைத் தனக்கு வேண்டுமெனக் கேட்டு வாங்கிக் கொண்டு அந்தப்புரத்துக்கு எடுத்துச் சென்றாள்.நன்றி: தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகம்.

Monday, August 27, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 7


சளுக்கிய சோழ வம்சத்தினர் ஹொய்சளர்களின் துணை கொண்டு கோயிலை மீண்டும் அவர்கள் வசம் கொண்டு வர நினைத்தாலும் அவர்களால் இயலவில்லை.  அப்போது தான் பாண்டியர்கள் வேறு தலை எடுத்துச் சோழர்களை நிமிர முடியாமல் செய்து வந்தனர்.  பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அரசனான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அதாவது கி.பி. 1216---1238 ஆம் ஆண்டுக் கால கட்டத்தில் அவன் கர்நாடகம் என இப்போது அழைக்கப் படும் பிரதேசங்களைக் கைப்பற்றினான்.  அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டுக் காலத்தில் அவனுடைய படைகள் திருவரங்கம் கோயிலை கங்கர்களிடமிருந்து விடுவித்தது.  ஆனாலும் கோயிலின் திருப்பணிகளில் ஹொய்சளர்களின் ஈடுபாடு குறையவில்லை.  அவர்கள் பல திருப்பணிகளைச் செய்ததாகக் கலவெட்டுக்கள் பல குறிப்பிடுகின்றன.  கி.பி. 1240ஆம் ஆண்டுக் காலத்தில் ஹொய்சள மன்னன் சோமேசுவரன் என்பான் அவனது 16-ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் இக்கோயிலுக்கு ஒரு நந்தவனம் ஏற்படுத்தி மூன்றாம் பிரகாரத்தில் ஒரு சாலையையும் ஏற்படுத்தியுள்ளான்.  கி.பி.1262 வரை ஆட்சி புரிந்த சோமேசுவரனுக்குப் பின்னர் வந்த ஹொய்சள மன்னன் இராமநாதர் என்பார்(கி.பி.1263—1297) வரை ஆட்சி புரிந்தார்.  இவர் படைத்தலைவர்களாகிய இரு சகோதரர்கள் கோயிலுக்குப் பல வகையான தானங்கள் வழங்கியுள்ளனர் என்பதைக் கோயில் வரலாற்று நூல் கூறுவதாக அறிகிறோம்.  இந்தச் சமயம் தான் மிகவும் அழகு வாய்ந்த வேணுகோபால கிருஷ்ணரின் சந்நிதியும் கட்டப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

தங்களின் எழுச்சியால் பெருமையும், கர்வமும் கொண்ட பாண்டிய மன்னர்களோ, தங்கள் பக்தியிலும் அந்த ஆடம்பரத்தைக் காட்டினார்கள் எனக் கூறுகின்றனர்.  அதன் மூலம் இந்தக் கோயிலுக்குப் பலவகையான நன்மைகளே கிட்டின.  முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1251—1268) வரை ஆண்டு வந்தான்.  இவன் பல கட்டிடங்களை இந்தக் கோயிலில் எழுப்பியுள்ளான் என்பதோடு பல்வகையான அலங்காரங்களையும் செய்ததோடு தாராளமாக நன்கொடைகளையும் வழங்கினான்.  இதனால் அவன் புகழ் மிகவும் பெரிய அளவில் பேசப்படுகின்றது என்பதோடு அவன் காலத்துக் கல்வெட்டுக்களும் அவன் ஸ்ரீரங்கம் கோயிலைப் பொன்மயமாகச் செய்தான் என்று பாராட்டுகிறது.  திருவரங்கநாதர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, விஷ்ணு நரசிம்மன் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவை இவனால் கட்டப்பட்டதாக அறிகிறோம்.  இந்தக் கட்டிடங்களும், இரண்டாம் பிரகாரமும் பொன்னால் வேயப்பட்டதாகவும் அறிகிறோம்.  இத்தோடு நில்லாமல் ஆதிசேடன் திருவுருவம், பொன்னாலாகிய பிரபை, பொன்னாலான பீடம், பொன் மகர தோரணம், பொன் கருட வாகனம் ஆகியனவும் பொன்னாலேயே அவனால் வழங்கப் பட்டிருக்கிறது.  ஒரிசா எனப்படும் கலிங்க நாட்டரசனைப் போரில் எதிர்கொண்டு வெற்றி பெற்று அவனுடைய கருவூலத்தில் இருந்து கைப்பற்றிய பல பொருள்களைக் கொண்டு ஸ்ரீரங்கநாதருக்கு மரகத மாலை, பொன் கிரீடம், முத்தாரம், முத்து விதானம், பொன் பட்டாடை, பொன் தேர், பொன்னால் நிவேதனப் பாத்திரங்கள், குவளைகள் போன்றவற்றை வழங்கியுள்ளான்.  விலையுயர்ந்த பட்டாடைகளாலும், ஆபரணங்களாலும் திருவரங்கத் திருமேனியை அலங்கரித்து மகிழ்ந்திருக்கிறான்.

இவை அனைத்தையும் தூக்கி அடிக்கும்படி செய்த இன்னொரு நிகழ்வு தெப்போற்சவம் தான்.  அரங்கன் தெப்போற்சவம் காண வேண்டித் தங்கத்தினாலேயே படகு அமைத்தான்.  தனக்கும் சேர்த்து அப்படி ஒரு படகை அமைத்துக் கொண்டிருக்கிறான்.  காவிரியில்  இரு படகுகளையும் விட்டான்.  தனது பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி அதன் முதுகில் மன்னன் அமர்ந்தான்.  மற்றொரு படகில் ஏராளமான ஆபரணங்களும், அணிமணிகளும், பொற்காசுகளும் அவனால் நிரப்பப்பட்டுக் குவிந்து கிடந்தன.  தன்னுடைய படகினது நீர்மட்டத்திற்கு மற்றொரு படகும் வரும் வரையில் அந்தப் படகில் பொன்னைச் சொரிந்து கொண்டே இருந்தான்.  பின்னர் அப்பொன்னையும், அணிமணிகளையும் இக்கோயில் கருவூலத்திற்குத் தானமாக வழங்கினான்.  தன்னுடைய எடை அளவிற்குத் தங்கத்தினாலே திருவரங்கநாதரின் விக்ரஹம் செய்து அதையும் தன் பெயரால் வழங்க வைத்துக் கோயிலுக்கு அளித்தான்.  இவ்வாறு அவன் செய்த பல திருப்பணிகளை இக்கோயில் வரலாற்று நூல் கூறுகின்றது.

இவனை அடுத்து 25 ஆண்டுகள் வரை எந்தவிதக் குழப்பமும், தொந்திரவும் இன்றி அரங்கநாதர் நிம்மதியாக இருந்து வந்தார்.  ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் அதாவது கி.பி. 1268—1308 ஆம் ஆண்டுக் காலத்தில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டுக்கும், முக்கியமாய்த் தென்னகத்துக் கோயில்களுக்கும்  மாபெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.  முதன்முதல் வெளிநாட்டிலிருந்து, போர்ச்சுக்கீசிய யாத்திரீகனான மார்க்கோபோலோ வந்து இப்பகுதியின் சிறப்பையும் செல்வச் செழிப்பையும் வியந்து எழுதியுள்ளது நாம் அனைவரும் அறிவோம்.  பாண்டிய நாட்டு மக்க்களையும், மன்னனையும் பற்றி அவர் எழுதியுள்ளவை அக்காலத்தில் நாட்டின் பெரும் செல்வத்தை மட்டும் குறிப்பிடாமல் மக்களின் உயர்ந்த பண்பையும் குறிப்பிடுகின்றது அல்லவா!  தமிழ்நாட்டின் பெரும் செல்வ வளத்தையும் முத்துக்குளித்துறையின் வளத்தையும் பற்றிப் பெருமையாகப் பேசிய மார்க்கோபோலோ தமிழகத்து மக்கள் அனைவரும் இருமுறை குளித்துச் சுத்தமாக இருந்ததாகவும், குளிக்காதவர்களைத் தூய்மைக்குறைவுள்ளவர்களாகக் கருதியதையும், நீர் அருந்துகையில் உதட்டுக்கு மேல் வைத்துத் தூக்கிக் குடித்ததையும், மன்னனாகவே இருந்தாலும் தரையில் அமர்வதைக் கெளரவக் குறைவாய்க் கருதாததையும் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்.  அதான் திருஷ்டிப் பட்டதோ என்னமோ!  குலசேகர பாண்டியன் காலத்திலேயே பாண்டிய நாட்டில் பிரச்னைகள் ஆரம்பித்தன.  இவனுக்குப் பட்டமஹிஷி மூலம் ஒரு மகனும், ஆசை நாயகி மூலம் இன்னொரு மகனும் இருந்தனர்.  பட்டத்து இளவரசன்  சுந்தரபாண்டியன் என்னும் பெயருள்ளவன்.  நியாயமாய் இவனே பட்டத்திற்கு வந்திருக்க வேண்டும்.  ஆனால்  “எம்மண்டலமும் கொண்டருளிய”  என்னும் பட்டம் பெற்ற குலசேகரனோ, தன் ஆசை நாயகியின் மகனான வீரபாண்டியனுக்கே அரசு உரிமையை அளித்தான்.  இது இரு சகோதரர்களுக்குள் பகைமையை உண்டாக்கியது என்பதோடு அந்நியரைத் தென்னகத்தில் வரவும் வழி வகுத்தது.  இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஸ்ரீரங்கம் கோயிலும், சிதம்பரம் கோயிலும், மதுரை மீனாக்ஷி கோயிலும்.  ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் இதன் அரசியல் பின்னணியையும் வரும் நாட்களில் பார்ப்போம்.

பின் குறிப்பு:  மேற்கண்ட தகவல்கள் ஆதாரம்:  அறநிலையத் துறையால் வெளியிடப் பட்ட
திருவரங்கம் திருக்கோயில் புத்தகம், வைணவஸ்ரீ, மற்றும் பேராசிரியர்
நாகசாமி அவர்களின் ராமாநுஜர் பற்றிய புத்தகத்தின் விசேஷக் குறிப்புகள்
கொண்ட வலைத்தளம்.
http://adhipiran.com/ramanujar-tamil.html


Sunday, August 19, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 6


ஸ்ரீரங்கம் கோயிலின் சரித்திரத்தை ஆராயப் புகுந்தோமானால் இந்திய சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற முக்கியக் கோயில்களில் ஒன்றாகும் என்பது புலனாகும்.   வைணவர்களுக்கு முக்கியக் கோயிலான இது எப்போது கட்டப்பட்டது என்ற சரியான தகவல்கள் கிடைக்காவிட்டாலும் கி.பி. ஏழாம்  நூற்றாண்டிலிருந்து இதன் மகிமை பேசப்படுகிறது.  வேத வேதாந்தக் கருத்துக்களைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளியாகவும் இருந்து வந்திருக்கிறது.  பல மஹான்கள், பல ஆசாரியர்கள் உருவாகி இந்தக் கோயிலின் தொண்டாற்றி வந்திருக்கிறார்கள்.   என்றாலும் இதன் பூர்வ சரித்திரம் குறித்த ஆதாரபூர்வத் தகவல்கள் கிட்டாதது நம் துரதிர்ஷ்டமே எனக் கூற வேண்டும்.  இங்கே ஏராளமான கல்வெட்டுகள் கிடைக்கின்றன.  அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.  ஆகவே கொஞ்சம் வெளிச்சம் கிட்டலாம்.  எனினும் நமக்கு இந்தக் கோயிலின் ஒவ்வொரு பிரகாரங்கள் குறித்தும், மதில்கள் குறித்தும் கிடைக்கும் விபரங்களில் இருந்து அவ்வப்போது சோழ, பாண்டிய மன்னர்களால் இந்தக் கோயில் பல திருப்பணிகளைக் கண்டிருப்பது தெரிய வருகிறது.

நான்காம் திருமதிலைக் கட்டியவர் திருமங்கை ஆழ்வார் என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.  ஏழாம் திருமதில் பிரகாரத்திலும், நான்காம் திருமதில் பிரகாரத்திலும் ஆண்டாளுக்கு எனத் தனிப்பட சந்நிதிகள் தென்மேற்கு மூலையில் ஏற்படுத்தி இருக்கின்றனர்.  இதில்  ஏழாம் திருமதில் பிரகாரத்தில் உள்ள ஆண்டாளின் திருச்சந்நிதி பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது.  கி.பி. பனிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதிநான்காம் நூற்றாண்டிற்கு அது கட்டப்பட்டிருக்கும் என அந்தச் சந்நிதி பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டிருப்பதில் இருந்து தெரிய வருகிறது.  இதைத் தவிர நான்காம் திருமதில் பிரகாரத்தில் இருக்கும் ஆண்டாள் சந்நிதி கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் என்கின்றனர்.  கல்வெட்டுகள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்து கிடைப்பதாகச் சொல்கின்றனர்.  கோயிலின் முக்கியத்துவம் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் இந்தக் கோயில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.  சோழ மன்னர்களின் குல தெய்வமாக ஸ்ரீரங்கநாதப் பெருமானும், அவர்கள் முடி சூடிக்கொள்ளும் பரம்பரைக் கோயிலாக சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலும் இருந்து வந்திருக்கிறது.  ஆகவே ரங்கராஜனும், நடராஜனும் சோழர்கள் வாழ்வில் இரு கண்களைப் போலவே இருந்து வந்திருக்கின்றனர்.

சோழமன்னர்கள் கல்வெட்டுக்களில் பழமையானதாகச் சொல்லப்படுவது முதலாம் பராந்தகனின் கல்வெட்டு ஆகும்.   இம்மன்னன் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெள்ளிக் குத்துவிளக்கு ஒன்று அளித்ததோடு அல்லாமல் கற்பூரம், பருத்தித் திரிநூல் வாங்க, குத்துவிளக்குப் பராமரிப்பு, விளக்கு ஏற்றும் செலவு என 51 பொற்காசுகளையும் வழங்கி இருந்திருக்கிறான்.  அதோடு கோயிலில் மூன்று இரவுகள் வேதம் ஓதப் படுவதற்காகவும் தானம் வழங்கி இருக்கிறான்.  இவனுக்கு அடுத்துச் சிறப்பாகச் சொல்லும்படி தானம் வழங்கிய மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் மகன்களில் ஒருவனான ராஜமஹேந்திர சோழனின் தானம் ஆகும்.  கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது கி.பி. 1060---1063 ஆம் ஆண்டில் இங்குள்ள முதல் பிரகாரத்தின் திருமதிலைக் கட்டியதால் இது ராஜமஹேந்திரன் திருவீதி என வழங்கப் படுகிறது.  கிட்டத்தட்ட இந்தச் சமயம் தான் ஸ்ரீபெரும்புதூரில் உடையவர் என அழைக்கப்படும் ஸ்ரீராமாநுஜர் தோன்றிப் பல்லாண்டுகள் வாழ்ந்து வைணவத்தையும், ஸ்ரீரங்கநாதர் கோயிலையும் நெறிப்படுத்தியதாகச் சொல்லப் படுகிறது. இதற்குத் தனியாக வருவோம்.  இப்போது கோயிலின் சரித்திரங்களை முதலில் பார்ப்போம்.

ஸ்ரீராமாநுஜர் காலத்தில் சோழ மரபின் வம்சாவளியில் நேரடி வாரிசு இல்லாமல் போக, சாளுக்கிய—சோழ மரபில் வந்த இரண்டாம் ராஜேந்திரன் என்பவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்க நேரிட்டது.  சோழ குலத்தின் நேரடி வாரிசு ஆன அதி ராஜேந்திரன் சந்ததி இல்லாமல் இறந்து போனான்.  முதலாம் ராஜேந்திரனின் மகளைத் திருமணம் செய்து கொண்ட  ராஜராஜ நரேந்திரனின் மகனான இவன் சிறு வயதிலிருந்தே சோழ நாட்டிலேயே வளர்ந்து வந்தவன்.  தன் மாமன் இறந்ததும் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் இவனுக்கு மக்கள் ஆதரவு பெருமளவு இருந்து வந்ததால் அமைச்சர்கள் இவனைத் தேர்ந்தெடுத்துக் குலோத்துங்கன் என்ற பட்டப் பெயர் சூட்டி முடிசூட்டினார்கள்.  இவனை முதலாய்க் கொண்டு தான் தமிழ்நாட்டில் கீழைச்சாளுக்கிய—சோழப் பரம்பரையின் ஆட்சி தொடங்கியது.  முதன்முதல் வேற்று நாட்டு இளவரசன் தமிழ்நாட்டு அரசனாக முடி சூடியதும் இவன் காலத்தில் தான்.  இவனுக்கும் ஸ்ரீராமாநுஜருக்கும் பகைமை இருந்து வந்ததாய்க் கோயில் ஒழுகு சொல்கிறது.  இது குறித்துப் பின்னர் பார்க்கப் போகிறோம்.

ஆனால் இந்தச் சளுக்கிய சோழகுல மரபில் முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டும், ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம்  சோழர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்து வந்ததைச் சொல்கிறது.  தமிழ்நாட்டின் அப்போதைய காலநிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.  திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் அடிக்கடி சச்சரவுகள்;  வாதப் பிரதிவாதங்கள்.  மூன்றாம் குலோத்துங்கனின் இருபதாண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டு ஒன்றின் மூலம் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாக அலுவலர்கள், ஜம்புகேஸ்வரக் கோயில் ஆட்சியாளர்களோடு சமரமாகப் பூசல்களைத் தீர்த்துக்கொள்ளும்படிக் கட்டளை இட்டிருக்கிறான்.  இத்தனைக்கும் ஒரிசா வரை சோழ ஆட்சி பரவி இருந்தாலும் தெற்கே இருந்து இலங்கையின் துணையோடு பாண்டியர்களும், கீழ்த்திசையில் ஆட்சி புரிந்த கங்கர்களும், அடிக்கடி சோழர்களைத் தாக்கி வந்தனர்.  இதில் கி.பி. 1223 முதல் 1225 வரையிலும் ஸ்ரீரங்கம் கோயில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டுக் கோயிலின் நிர்வாகம் முற்றிலும் சிதைந்து பாழ்பட்டுப் போனது என்பதை அறிகிறோம்.

பின் குறிப்பு:  மேற்கண்ட தகவல்கள் ஆதாரம்:  அறநிலையத் துறையால் வெளியிடப் பட்ட
திருவரங்கம் திருக்கோயில் புத்தகம், வைணவஸ்ரீ, மற்றும் பேராசிரியர்
நாகசாமி அவர்களின் ராமாநுஜர் பற்றிய புத்தகத்தின் விசேஷக் குறிப்புகள்
கொண்ட வலைத்தளம்.
http://adhipiran.com/ramanujar-tamil.html

Tuesday, August 07, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!பாண்டியன் கொண்டையானு சந்தேகமா இருக்குனு ஆடிப் பெருக்குப் பதிவிலே எழுதி இருந்தேன்.  இது பாண்டியன் முத்துக் கொண்டையே தான்.


ஸ்ரீரங்கம் கோயிலைச்  சுற்றிலும் பாதுகாவலாக திக்தேவதைகளை ஆகம சாஸ்திரப் படி ஏற்படுத்தி இருந்தார்கள் எனத் தெரிய வருகிறது.  அவர்கள் தெற்கில் உலகளந்த பெருமாள் ஆயனார் என்ற பெயரில் அழைக்கப் படுபவரும், தென்மேற்கு மூலையில் யோக அழகிய சிங்கரும், இருந்திருக்கின்றனர்.  அழகிய சிங்கர் கோயில் பழுதுபட்டதால் விக்ரஹங்கள் மூலவரும், உற்சவரும் கூரத்தாழ்வான் சந்நிதியில் வைக்கப்பட்டிருப்பதாய்க் கூறப்படுகிறது.  மேற்கில் துர்கை அல்லது பிடாரி கோயில் இன்றும் இருக்கிறது.  வடமேற்கில் வாதநாராயணர் பழுதடைந்து விட்டது எனக் கேள்விப்படுகிறோம்.  வடக்கில் தசாவதார சந்நிதி இன்றும் காணலாம்.  


வடகிழக்கில் ஆதிகேசவப் பெருமாள் சந்நிதி முழுதும் ஜீர்ணமாக பெருமாளும் நாச்சிமார்களும் பக்கத்துத் தோப்பில் எழுந்தருளி இருந்திருக்கிறார்கள்.  இப்போது எங்கே எனத் தெரியவில்லை.  விசாரிக்கிறேன்.  அடுத்து கிழக்கே லக்ஷ்மி நரசிம்மர் சந்நிதி. காட்டழகிய சிங்கர்.  நாம் ஏற்கெனவே இருமுறை பார்த்தோம்.  தென்கிழக்கு மூலையில் கோதண்டராமர் சந்நிதி. நவாபு காலத்தில் மந்திரியாக இருந்த ஒரு ராயரால் கட்டப்பட்டது.  சந்திர புஷ்கரணிக்கரையில் இருக்கும் இவரையும் நாம் பார்த்தோம்.  இவரே பிரதான ராமர்.  இவரைத் தவிரவும் பிராகாரத்தில் மேல பட்டாபி ராமர், கீழப் பட்டாபி ராமர் சந்நிதிகள் உண்டு.  இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் எட்டு திக்தேவதைகளை எழுந்தருளப் பண்ணி இருக்கும் திவ்யஸ்தலமான இதன் சரித்திரச் சான்றுகளை நாம் பத்தாம் நூற்றாண்டில் இருந்தே காண முடிகிறது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் இந்தக் கோயிலில் நான்காம் திருமதிலைக் கட்டியதாகத் தெரிய வருகிறது.  ஆனால் இதற்கான சரித்திரச் சான்றுகள் இல்லை.  திருமங்கை ஆழ்வாரே அதிகமான பாசுரங்கள் பாடி இருப்பதாகவும் தெரிகிறது.  அவற்றில் இரண்டு பாசுரங்களைப் பார்ப்போம்.  

நன்றி: மதுரைத் திட்டம்.


உந்தி மேல்நான் முகனைப் படைத்தான் உல குண்டவன்
எந்தை பெம்மான், இமையோர்கள் தாதைக்கிட மென்பரால்,
சந்தி னோடு மணியும்  கொழிக்கும்புனல்காவிரி,
அந்தி போலும் நிறத்தார் வயல்சூழ்தென் னரங்கமே (5.4.1)

1379
வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி,
பைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால்,
தையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை,
செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே (5.4.2)

இதைத் தவிரவும், பெரியாழ்வார் பாடல்களும், ஆண்டாள் அழகிய மணவாளரான உற்சவர் மேல் மாளாக் காதல் கொண்டு அவரையே மனைவியாக அடைவேன் எனக் காத்திருந்து மனைவியாக ஐக்கியமடைந்ததுமான வரலாறுகள் சொல்லப் படுகின்றன.  ஆண்டாளுக்கு என இங்கே மூன்று தனிச் சந்நிதிகள் இருக்கின்றன.  அவற்றில் வெளி ஆண்டாள் சந்நிதியை இன்னும் பார்க்கவில்லை.  ஆனால் அங்கே தான் ஆடிப்பூர உற்சவ நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.  ஆண்டாளுக்கு அன்று திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது.  ஆடிப் பதினெட்டு அன்று காவிரிக்குச் சீர் கொடுக்க வரும் நம்பெருமாள் திரும்புகையில் வெளி ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றிக் கொண்டு பின்னரே உள்ளே திரும்புகிறார்.  அழகிய மணவாளர் மேல் காதல் கொண்ட ஆண்டாள், நம்பெருமாளோடு ஏன் மாலை மாத்திக்கணும்னு தோணுதா?   இருவரும் ஒருவரே. அழகிய மணவாளராக இருந்தவர் தான் நம்பெருமாள் என அழைக்கப்படுகிறார்.   அந்தக் கதைக்குத் தான் இப்போ வரேன்.  அதை முதலில் பார்த்துவிடுவோம்.


முதலிலே அழகிய மணவாளன் என்ற பெயர் வந்த கதையைத் தெரிந்து கொள்வோம்.  தர்ம வர்ம சோழனின் வம்சத்தில் வந்த சோழ மன்னன் ஒருவன் நந்த சோழன் என்ற பெயரில் ஆண்டு வந்தான்.  அவன் அரங்கனிடம் மிகவும் பக்தி பூண்டு வந்தான்.  அவனுக்குப் பிள்ளைப் பேறில்லை.  அரங்கனே கதி என்றிருந்த மன்னன் இதற்கும் அரங்கனே பதில் சொல்லுவான் என நம்பிக்கையுடன் காத்திருந்தான்.  ஒருநாள் மன்னன் வேட்டைக்குச் சென்ற போது அங்கிருந்த ஒரு ஓடையில் கமலப்பூக்களின் நடுவே ஒரு அழகான பெண் குழந்தை இருப்பதைக் கண்ணுற்றான்.  அரங்கன் அளித்த செல்வம் என எண்ணி மகிழ்ந்து அக்குழந்தையை அரண்மனைக்கு எடுத்து வந்து சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தான்.  கமலவல்லி என்ற பெயருள்ள அந்தப் பெண் சிறு வயதில் இருந்தே அரங்கனிடம் பக்தி பூண்டிருந்தாள்.  ஒருநாள் அவள் உத்தியான வனத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அரங்கன் அவ்வழியே குதிரையில் சென்றதைக் கண்டாள்.  அரங்கன் மேல் மாளாக் காதல் கொண்டாள்.

மணந்தால் அரங்கனையே மணப்பது என முடிவு செய்துவிட்டாள்.  மகளின் நிலை கண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் கலங்கிய மன்னன் கனவில் அரங்கன் தோன்றி, “ நீ குழந்தை இல்லாமல் கவலைப் பட்டதற்காகவே நாம் திருமகளை அனுப்பினோம்;  அவள் நம்மைச் சார்ந்தவள்.  என் சந்நிதிக்கு அவளை அழைத்து வா;  நாம் அவளை ஏற்போம்.” எனச் சொல்லி மறைய, திகைப்புற்ற மன்னன் தன் மகள் திருமகள் எனத் தெரிந்து மகிழ்ந்தான்.  அவளை சர்வ அலங்கார பூஷிதையாக அலங்கரித்து ஊர்வலமாகச் சுற்றமும், உற்றமும் சூழ அழைத்து வந்தான்.  அரங்கன் சந்நிதியை அடைந்தான்.  கோவிலினுள் நுழைந்து அரங்கன் சந்நிதிக்கு வந்ததுமே கமலவல்லி மறைந்தாள்.  தன் பரிவாரங்களோடு வந்திருந்த மன்னன் இதைக் கண்டு அதிசயம் அடைந்தான்.   

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்ததோடு அல்லாமல் தான் இருக்கும் உறையூரிலும் அரங்கனுக்கு ஒரு கோயில் எழுப்பினான்.  அரங்கனே அழகிய மணவாளனாக வந்து தன் மகளைத் திருமணம் செய்து கொண்டதால் அந்தப் பெருமாளுக்கு அழகிய மணவாளர் என்ற பெயரையும் சூட்டினான்.  தன் மகள் நினைவாகத் தாயாருக்குக் கமலவல்லி என்ற பெயரையும் சூட்டினான்.  இந்த அழகிய மணவாளர் தான் ஸ்ரீரங்கம் கோயிலின் உற்சவர்.  உற்சவருக்குக் கிட்டத்தட்ட அறுநூறு, எழுநூறு வருடங்கள் முன்பு அழகிய மணவாளர் என்ற பெயரே இருந்தது.  அந்தப் பெயர் தான் பின்னர் நம்பெருமாள் என மாறியது.  மாற்றியது ஒரு வண்ணான்.  ஏன்,எப்படி? வரும் நாட்களில் விபரமாய்ப் பார்க்கலாம்.  அதற்கு முன்னர் கொஞ்சம் சரித்திரப் பாடம் படிப்போம்.Wednesday, August 01, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!4


இவற்றுக்கெல்லாம் ஆதாரங்கள் இல்லை எனினும் மரபு சார்ந்ததாகவே கொள்ள வேண்டி இருக்கிறது.  கோயிலைக் குறித்துப் பழங்காலத்து சங்கப்பாடல்கள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றில் குறிப்பிடப் பட்டிருக்கும் இலக்கிய ஆதாரங்களையே கிட்டத்தட்ட கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையிலும் கொள்ள வேண்டி இருக்கிறது.  ஏனெனில் கி.பி. ஏழாம் நூற்ற்றாண்டில் திருமங்கை மன்னனால் நான்காம் திருமதில் கட்டப்பட்டதாகக் கோயிலொழுகு சொல்வதாகக் கேள்விப் படுகிறோம்.  ஆனால் அதற்கு முன்பே முதலாழ்வார்கள் பாடிய பாடல்களையும் முன்னரே பார்த்தோம்.  தற்போது செய்துவரும் சில ஆய்வுகளின் மூலம் பழைய கோயிலின் மேலேயே இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. கோயிலொழுகு குறித்து நான் பார்க்க வேண்டும் என நினைத்த பெரியவர் உபந்நியாசங்களாகச் செய்து வைத்திருப்பதால் அதைப் போட்டுக் கேட்டுக் கொள்கிறேன். 

நம் பாரத நாட்டிலேயே ஸ்ரீரங்கம் கோயில் தான் ஏழு பிரகாரங்களைக் கொண்டது.  ஏழு என்ற எண் புனிதமானதாய்க் கருதப்படுகிறது.  மனித உடலுக்குக் காரணமான ஏழு தாதுக்களையும், உடலில் உள்ள ஏழு ஆதாரங்களையுமே இவை சுட்டுவதாக ஐதீகம்.  கருவறையில் தொடங்கிப் பிரகாரங்கள் வெளிப்பக்கமாக எண்ணப்படுகின்றன.  நம் உடலின் உள்ளே எவ்வாறு ஆன்மா குடி கொண்டிருக்கிறதோ அவ்வாறே கருவறையின் நடுவேஇவ்வுலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாகிய  பெருமாள் எழுந்தருளி உள்ளார்.  கருவறை விமானம் நான்கு கலசங்களோடு கூடிய வட்டவடிவில் பொன்மயமாக அமைந்துள்ளது.   விமானத்தின் வெளியில் விக்னேஸ்வரர் காவல் காக்க, கீழ்ப்பக்கம் யோக மாயை ஆன ஸ்ரீதுர்கை இருக்கிறாள்.   விமானத்தின் மீது பரவாசுதேவர் கையில் கிண்ணத்தோடு இருப்பதையும் கிண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் அவர் வாய்க்கருகே சென்று கொண்டிருப்பதாகவும் ஏற்கெனவே பார்த்தோம்.  விமானத்தின் கலசங்கள்காயத்ரீ தேவியின் தலைப் பகுதியாகக் கூறப் படுகிறது.  ஸ்ரீரங்க மண்டபம் காயத்ரீ மண்டபம் என்றும் அழைக்கப் படுகிறது.  அங்குள்ள 24 தூண்களும் காயத்ரீயின் 24 அக்ஷரங்கள் எனவும், கோபுரங்கள் வேத தேவதைகளாகவும்,  சாஸ்திரங்கள் அங்குள்ள பொருட்கள், செயல்களாகவும் கூறப் படும்.

இதே போல் கோயிலின் ஏழு பிரகாரங்களும் ஏழு உலகங்களைக் குறிக்கும்.  அவை யாவன:

பூலோகம்=  மாடங்கள் சூழ்ந்துள்ள சுற்று

புவர்லோகம்= திரிவிக்கிரம சோழன் சுற்று

ஸுவர்லோகம்= அகளங்கன் என்னும் கிளிச் சோழன் சுற்று

மஹர்லோகம்= திருமங்கை மன்னன் சுற்று

ஜநோலோகம்=  குலசேகரன் சுற்று

தபோலோகம்=  ராஜ மகேந்திர சோழன் சுற்று

ஸத்யலோகம்(கர்பகிருஹம் உள்ள சுற்று) = தர்மவர்ம சோழன் சுற்று

மேற்கண்டவர்கள் அந்த அந்தப் பிரகாரங்களைச் செப்பனிட்டதால் அவரவர் பெயரை வைத்து அழைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் அறிகிறோம்.  இதைத் தவிர இந்த ஏழுவிதச் சுற்றுக்களையும் அடைத்தபடி வளைந்து வரும் நெடுஞ்சுற்று ஒன்று உள்ளது.  இதற்கு அடைய வளைந்தான் எனப் பெயர்.  இந்தச் சுற்றிலிருந்து மாடங்கள் உள்ள சுற்றுக்கு வருவதற்கு ஏற்றவகையில் நான்கு திசைகளிலும் திட்டி மூலை என்று வாசலைத் திறந்து வைத்திருக்கிறார்கள்.  ஏழாவது சுற்று, அடையவளைந்தான் சுற்று மற்றும் ஆறாவது சுற்றில் ஆகிய மூன்றிலும் மக்கள் பெருமளவு  அந்நாட்களிலும், இந்நாட்களிலும் வாழ்ந்து வருகின்றனர். 

கருவறை மேற்கு, கிழக்கு, வடக்குத் திசைகளில் சதுரமான திருவுண்ணாழியால் சூழப்பட்டுள்ளது.  அதிலே எம்பெருமானார் சயனித்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.  குழைகாரை எனப்படும் சுதை வேலைப்பாட்டில் வலப்பக்கமாய்ச் சாய்ந்த வண்ணம் கிட்டத்தட்ட 21 அடி நீளத்துக்குப் புனுகுச் சட்டம் எனப்படும் தனிச் சிறப்பான தைலக்காப்புச் சார்த்தப் பட்டுத் தனியானதொரு ஒளியோடும், மெருகோடும் விளங்குகிறார்.   தன் வலக்கையைத் தலையைத் தாங்கிய வண்ணம் வைத்தும், இடக்கையால் திருவடியைச் சுட்டிக் காட்டிய வண்ணமும், தெற்கு முகமாக இலங்கையை நோக்கியபடி அருள் பாலிக்கிறார் மூலவர் பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதர்.  இவருக்குப் பெரிய பெருமாள் என்ற திருநாமம் மட்டுமே உண்டு.    ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் பஞ்ச இந்திரியங்கள் எனவும், அந்த பஞ்ச இந்திரியங்களையும் அடக்கியே  எம்பெருமானார் யோகநித்திரை கண்டருளுவதாகக் கூறுவர்.  அவர் அருகே உற்சவரான நம்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி அளிக்கிறார்.  உற்சவர் முதலில் அழகிய மணவாளர் என்று அழைக்கப் பட்டுப் பின்னர் நம்பெருமாள் என இப்போது அழைக்கப் படுகிறார்.  அது பின்னர் நம்பெருமாள் என மாறியது ஒரு பெரிய வரலாற்றை உள்ளடக்கிய கதை ஆகும்.  அதையும் விரைவில் பார்ப்போம்.

சுதையினால் ஆன எம்பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்விக்க இயலாது என்பதால் வருடம் ஒரு முறை ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் காவிரியில் இருந்து யானை மீது தங்கக் குடங்களில் நீர் எடுத்து வந்து உற்சவருக்கு அபிஷேஹம்  செய்யப்படும்.   அந்தச் சமயம் மூலவருக்கு எண்ணெய்க் காப்புச் சார்த்தித் திருவடி வரை ஒரு மெல்லிய வேஷ்டியால் மூடி விடுவார்கள்.  இது நாற்பத்தைந்து நாட்கள் அல்லது நாற்பத்தெட்டு நாட்கள் வரை இருக்கும்.  அடுத்த நாள் பெரிய திருப்பாவாடைத் தளிகை என்னும் நிவேதனம் பெரிய பெருமாள் சந்நிதி முன் சேர்ப்பிக்கப் படும்.  அந்தப் பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், நெய், தேன், வாழைப்பழம் போன்றவை சேர்த்து உப்பும் சேர்த்திருப்பார்கள்.  பெருமாளுக்கு அமுது செய்த பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.  இந்த ஜேஷ்டாபிஷேஹம் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலைத் தவிரவும் அதைச் சுற்றி உள்ள மற்ற திவ்ய தேசங்களிலும் ஸ்ரீரங்கத்தில் நடந்த பின்னர் நடைபெறும்.  அவை குறித்துத் தனியாகப் பார்ப்போம்.   ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் ஆரம்பிக்கும் இது ஆடிப் பதினெட்டு அன்று நாற்பத்தெட்டு நாட்கள் பூர்த்தி ஆனால் அல்லது ஆடி மாதம் இருபத்தெட்டு வரையில் என்ற கணக்கில் இருந்து வரும்.  பின்னர் ஆடிப் பதினெட்டு விழாவில் காவிரி அம்மனுக்குச் சீர் கொடுப்பார் பெருமாள்.  ஒரு பட்டுப்புடவையில் மாலை, தாலிப்பொட்டு போன்ற மங்கலப் பொருட்களைப் போட்டுக் கட்டி யானையின் மேல் ஏற்றிக் காவிரியில் விடுவார்கள். 

இங்கு காவிரியைத் தவிரவும் ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள் உண்டு.  தற்போது நல்ல நிலைமையில் இருப்பது சந்திர புஷ்கரிணி மட்டுமே.  மற்றவை சரியான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து போயிற்று என்பது வருத்தத்துக்கு உரியதாகும்.  மற்றத் தீர்த்தங்களின் பெயர்கள் வருமாறு:

சந்திர புஷ்கரிணி, வில்வ தீர்த்தம், நாவல் தீர்த்தம், அரசு தீர்த்தம், புன்னை தீர்த்தம், மகிழ தீர்த்தம்,  புரசு தீர்த்தம்,  கடம்ப தீர்த்தம், மாதீர்த்தம் எனக் கூறுவார்கள்.  சந்திர புஷ்கரிணியைச் சுற்றி எட்டுத் திசைகளில் இவை அமைந்திருந்ததாய்க் கேள்விப் படுகிறோம்.