எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, December 24, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருவண்ணாமலையில் தாக்குதல்!

அழகிய மணவாளம் ஒரு பக்கம் எரிந்து கொண்டிருக்க அங்கே மதுரையில் ஹொய்சளத்தின் நிலையை மாற்றி அமைக்கும் ஓர் சம்பவம் நடந்தது. சுல்தானாக இருந்த ஜலாலுதீனுக்கும் தளபதியாக இருந்த அலாவுதீனுக்கும் கருத்து வேறுபாடு பெருமளவில் இருந்தது. திருவண்ணாமலை மீது தாக்குதல் நடத்தி ஹொய்சளரை அழித்தால் தான் தமிழகத்தில் நிலைபெற்று ஆட்சி புரிய முடியும் என அலாவுதீன் வற்புறுத்த சுல்தான் ஜலாலுதீன் அதை ஏற்க மறுத்தான். இது சில நாட்கள் இப்படியே இருக்க திடீரென ஓர் நாள் ஜலாலுதீனைத் தளபதி அலாவுதீன் கொன்று விட்டான். ஆட்சியை அவன் கைப்பற்றினான். அவன் கொடூரத்தை அறிந்திருந்த ஏனையோர் அவன் ஆட்சிக்கும் அவன் கட்டளைக்கும் உடனே அடி பணிந்தார்கள்.  ஆட்சிக்கு வந்த இரண்டாம் நாளே அலாவுதீன் திருவண்ணாமலை மீது போர் தொடுக்கும் அறிவிப்பைச் செய்தான். தாமதிக்காமல் உடனடியாக ஓர் பெரும்படையை ஏற்பாடு செய்து அழைத்துக் கொண்டு முதலில் கண்ணனூர் நோக்கிப் பிரயாணத்தைத் தொடர்ந்தான்.

மூன்று இரவுகளும், பகல்களும் போனபின்னர் நான்காம் நாளில் கண்ணனூரை அடைந்தனர். கண்ணனூர்க் கோட்டை ஹொய்சளர்களுக்குச் சொந்தமானது. அவர்களால் கட்டப்பட்டது. அங்கே ஓர் கோயிலும் இருந்தது. ஹொய்சளேஸ்வரர் என்னும் பெயரில் விளங்கி வந்தார் அவர். இப்போதும் பொய்ச்சலேஸ்வரர் என்னும் பெயரில் ஓர் கோயில் கண்ணனூரில் (இப்போதைய சமயபுரம்) இருந்து வருவதாய்ச் சொல்கின்றனர்.  ஆரம்பத்தில் திருவரங்கத்தைத் தாக்கிய சுல்தானியப் படைகள் அங்கேயே சில காலம் இருந்து வந்தன. பின்னர் சிங்கப்பிரானின் ஆலோசனையின் பேரில் கண்ணனூருக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்தப் படை தான் இப்போது மதுரை சுல்தானிய ராஜாவின் வட எல்லைப்படையாக விளங்கி வந்தது.  இப்போது அங்கே ஏற்கெனவே ஓர் பெரும்படை திரட்டப்பட்டு சுல்தானின் வருகைக்குக் காத்திருந்தது. அலாவுதீன் வந்து சேரவும் அனைத்துப்படைகளும் ஒன்று சேர்ந்து ஓர் பெரும்படையாகத் திருவண்ணாமலை நோக்கி நகர்ந்தது. இது மிக ரகசியமாக வைக்கப்பட்டது.

ஆகவே தூதுவர்கள் மூலம் கூட ஹொய்சள அரசருக்குத் திருவண்ணாமலையை நோக்கிப் படைகள் திரண்டு வரும் விஷயம் தெரியவில்லை. திருவண்ணாமலைக்கு 2,3 காத தூரம் இருக்கையிலே தான் வழிப்போக்கர்களும், ஆங்காங்கே கிராமங்களில் குடி இருந்த மக்களும் படை திரண்டு வரும் செய்தியைத் தெரிவித்தனர். மன்னருக்கும் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. மன்னர் திகைத்துத் தான் போனார். எனினும் உடனடியாகக் கோட்டைக் கதவுகளை மூட உத்தரவிட்டார்.  இருக்கும் அனைத்துப் படைகளையும் ஒரே இடத்தில் திரட்டிக் கோட்டைக்கும் நகருக்கும் காவலாக இருக்கும்படி செய்தார். ஆனால் ஓர்  விபரீதமான செய்தி மன்னருக்கு அப்போது கிடைத்தது. அதுதான் ராணி கிருஷ்ணாயி திருக்கோயிலூர் நகரின் கோயிலுக்குச் சென்றிருக்கிறாள் என்பதே! அவள் வந்தால் கோட்டை வாயில் வழியாகத் தான் உள்ளே வந்தாக வேண்டும்! என்ன செய்வது? மன்னர் அதிர்ந்து தான் போனார்.  யாருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை.

இது இப்படி இருக்கத் திருவண்ணாமலைக்குச் செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டிய குலசேகரன் சம்புவராயரின் ராஜ்யத்துக்குள் ஹேமலேகா இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு திரிந்தான். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இவற்றில் மிகவும் மோசமான பெண்ணாசையினால் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த குலசேகரன் ஒருவழியாக ஹேமலேகா இருக்கும் ஊருக்கு வந்து சேர்ந்தான். அந்தக் கிராமத்தின் பெயர் கிளியார் சோலை. அங்குள்ள ஓர் சத்திரத்தில் தான் கணவனாக வரித்துக் கொண்ட கண் தெரியாத முதியவரோடு ஹேமலேகா தங்கி இருக்கும் செய்தியும் குலசேகரனுக்குக் கிட்டியது. இரவு நேரங்களில் ஹேமலேகா சத்திரத்தின் கதவுகளைச் சார்த்தி விட்டு உள்ளே இருந்த சிறு கூட்டத்திற்கு வடமொழிக் காவியங்களையும் தத்துவங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் அங்கே இருப்பது தெரிந்து அங்கே வந்து சேர்ந்த குலசேகரன் எடுத்த எடுப்பில் அவள் முன் போய் நிற்க விரும்பவில்லை. ஆகவே சத்திரத்தில் இருந்த தொழுவத்துக்குப் போனான். உள்ளிருந்து வரும் ஹேமலேகாவின் குரலை அங்கேயே அமர்ந்த வண்ணம் கேட்டு ஆனந்தம் அடைந்தான்.

சில சமயங்களில் தெளிவாகவும் பல சமயங்களில் தெளிவில்லாமலும் இருந்தது ஹேமலேகாவின் குரல். ஆனாலும் குலசேகரனுக்கு அதுவே இன்பத்தைக் கொடுத்தது. இரு நாட்கள் இப்படிப் போனபின்னர் மூன்றாம் நாள் ஹேமலேகா நம்மாழ்வாரின் பாசுரமான, "புவியும் இரு விசும்பும்" என்னும் பாசுரத்திற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கையில் தன்னை மறந்து குலசேகரன், "ஆஹா! ஆஹா!" எனக் கூவி விட்டான்.  ஹேமலேகாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.  அவசரமாகத் தன் சொற்பொழிவை நிறுத்திவிட்டுக் கையில் ஓர் விளக்குடன் தொழுவத்துக்கு வந்தாள். அங்கே குலசேகரன் ஓர் கழுநீர்த் தவலையின் மேல் அமர்ந்த வண்ணம் அவள் பேச்சை ரசித்துக் கொண்டிருந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாள். "ஸ்வாமி!" என அவனை அழைத்தாள்.  அவள் தன்னை அழைப்பதைக் கண்ட குலசேகரன் கள்ளச் சிரிப்புடன், "ஹேமூ!" என்ற வண்ணம் எழுந்தான். "இங்கே எப்படி நீங்கள்" என்று கேட்டாள் ஹேமலேகா!

Sunday, December 23, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரனின் தடுமாற்றம்!

சிங்கப்பிரானின் வார்த்தைகளைக் கேட்ட குலசேகரன் உடனடியாகத் திருவண்ணாமலை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தான். இம்முறை துருக்கப்படைகள் தன்னை அடையாளம் காணாமல் இருப்பதற்காக மாறு வேஷம் தரித்துக் கொண்டான். ஓர் பைராகி போல வேடம் தரித்துக் கொண்ட அவன் நடந்தே தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஆரம்பத்தில் சிறிது தூரம் இவ்வாறு சென்றவன் வீதியில் ஆங்காங்கே சுதந்திரமாகவும், சுறுசுறுப்புடனும், கலகலப்புடனும் இளம்பெண்களும் நடுத்தர வயதுப் பெண்களும் நீர் சுமந்து கொண்டு செல்வதைக் கண்டு இம்மாதிரி நிலைமை யைத் திருவரங்கம் காண்பது எப்போது என ஏங்கினான். சற்று நேரம் அவர்களையே தொடர்ந்த அவன் பார்வை பின்னர் கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டுப் போகலாம் என அருகில் நீர் குடிக்கக் குளம் இருக்கா எனத் தேடியது. குளம் ஒன்றைக் கண்டதும் அங்கே சென்று தாகசாந்தி செய்து கொண்டான்.

குளத்தில் கீழே இறங்க நிறையப் படிகள் இருப்பதையும் பெண்கள் படியிலே நின்று கொண்டே குடத்தை நீரில் முக்கி நீரைக் குனிந்து எடுத்ததையும் கண்டான். அதில் ஓர் பெண் குலசேகரன் வருவதைக் கண்டதும் வெட்கத்துடன் ஒதுங்குகையில் கையிலிருந்து குடம் கீழே விழுந்து படிகளில் டமடமவென சப்தம் செய்து கொண்டு போனது. அதைக் கேட்டுக் கொண்டு நின்ற குலசேகரனிடம் அங்கிருந்த ஒருவர் இது மாதிரிக் குளத்துப் படிகளில் குடம் விழுந்த "டம்டம்" சப்தத்தை வைத்துக் காளிதாசன் எழுதிய கவிதையை நினைவு கூர்ந்தார். அவர் பேச்சைக் கேட்டக் குலசேகரன் வியந்து நின்றான். இங்கே நாம் பார்த்த காட்சி இது தானே! காளிதாசன் போஜராஜன் கூறிய டம்டம் என்னும் சப்தத்தை வைத்தே இந்த நிகழ்ச்சியைக் கண்கள் முன்னால் கவிதையாகக் கொண்டு வந்துவிட்டானே! என ரசனையுடன் கூறினார்.

மேலும் அவர் தொடர்ந்து குளத்துக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தார். அவருடைய வர்ணனையைக் கேட்ட குலசேகரன் இந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து கொண்டே அவருக்கு இவ்வளவு வடமொழி ஞானம் இருப்பதை வியந்து கூறினான். அதற்கு அவர் தான் ஹேமலேகா என்னும் வித்வாம்சினியிடம் இதை எல்லாம் கற்றதாகவும், தான் ஒரு சாதாரணச் சின்னக் கவி எனவும் ஹேமலேகாவைப் போல் புலமை வாய்ந்தவன் இல்லை எனவும் கூறினார்.  அவளிடம் கல்வி கற்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார். குலசேகரன் மேலும் சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டுத் தன் வழியே கிளம்பினான். ஆனாலும் அந்தக் கவிஞரின் வார்த்தைகளிலேயே அவன் மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது. ஹேமலேகாவைப் பற்றி நினைக்கையிலேயே அவன் மனம் நெகிழ்ச்சியுற்றது. எப்பேர்ப்பட்ட பெண் அவள்! அவள் புலமை தான் எம்மாத்திரம்! நானும் இந்தச் சண்டை, பூசல் எதுவும் இல்லாமல் அவளிடம் பாடம் கேட்டுக் கொண்டும்  கவிதைகளைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்திருக்க வேண்டும். என நினைத்துக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டான்.

அப்போது அவன் மனம் திடீரென அவனை ஹேமலேகாவைக் காண உடனே செல் என உத்தரவிட்டது. நேற்று சம்புவராயர் எல்லையில் பிரியும்போது கூட அவளிடம் சரியாக விடைபெறவில்லை. இப்போது உடனே அவளைத் தேடிப் போ என்றது அவன் மனம். செய்வதறியாது திகைத்த குலசேகரன் கடைசியில் தன் மனம்  தன்னை வெல்ல ஹேமலேகா எங்கே இருக்கிறாள் எனக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினான். ஹேமலேகாவின் கவிதைகளைக் கேட்பதிலும் அவளுடன் உரையாடுவதிலும் உள்ள சுகத்தை நினைத்து அவன் மனம் உடனே அவளைக் காண விழைய இங்கே ஒரு முக்கியமான அவசரமான ராஜாங்கக் காரியம் தாமதமும் ஆனதோடு அல்லாமல் பாழாகவும் போகும் போல் இருந்தது. ஆனால் உணர்ச்சி வசப்பட்ட குலசேகரன் அறிவுக்கு இதெல்லாம் எட்டவில்லை. அவன் ஹேமலேகாவைத் தேடித் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

அதற்குள்ளாக அங்கே அழகிய மணவாளம் கிராமத்தை சுல்தான்களின் வீரர்கள் சூழ்ந்து கொண்டு குலசேகரனைத் தேடினார்கள். ஊரே வெறிச்சென இருக்கக் கண்டார்கள். அங்கே யாருமே இல்லை என்பது அவர்களுக்கு ஆத்திரத்தை அதிகம் ஆக்க அவர்கள் ஊரையே எரித்தனர். அனைத்து வீடுகளும், விளை நிலங்களும் பாழாகிப் போயின. குளங்கள் வெட்டப்பட்டு நீரெல்லாம் வெளியேறியது. மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. ஊரே பற்றி எரிந்தது.

Wednesday, December 19, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அழகிய மணவாளத்தில்!

ஊரில் உள்ள அனைவர் வீடுகளுக்கும் சென்று கதவைத் தட்டி உடனே காலி செய்து கொண்டு போகும்படி அறிவுறுத்தினார்கள் சிங்கப்பிரானின் ஆட்கள். எல்லோரும் காரணம் புரியாமல் திகைத்ததற்கு சுல்தானியப் படைகள் அழகிய மணவாளத்தை நோக்கி வருவதைத் தெரிவித்தார்கள். ஊரில் ஒரு சின்னக் குழந்தை கூட இருக்கக் கூடாது எனச் சொல்லப்பட்டது. ஊர் மக்கள் முதலில் திகைத்துச் செய்வதறியாமல் நின்றாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு தங்களுக்கு வேண்டிய முக்கியமான சாமான்களை மட்டும் எடுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக வெளியேற ஆரம்பித்தனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமவாசிகள் தங்கள் குடும்பங்களோடு வெளியேறினார்கள். வயோதிகர்கள் தட்டுத் தடுமாறிக்கொண்டும் குழந்தைகள் அரைத்தூக்கத்திலும் அழைத்துச் செல்லப்பட்டனர். பெண்கள் அவரவர் குடும்பத்து ஆண் மக்களோடு ஒட்டிக் கொண்டு திகிலுடனும் பயத்துடனும் சென்றனர். சில முகத்தையும் மறைத்துக் கொண்டார்கள்.

வழியில் எங்காவது எதிரிகள் எதிர்ப்பட்டால் என்ன செய்வது என்னும் பயமும் அதிகரித்தது. அவர்கள் எந்தத் திக்கில் இருந்து வருகின்றார்களோ அதற்கு எதிர்த் திக்கில் அனைவரும் சென்றனர்.  சிங்கப்பிரான் தலைமை தாங்கி நடத்திச் சென்றார். கூடியவரை வடகிழக்குத் திசையில் சென்றார்கள். நடுவில் வந்த மணவாள ஓடையை மார்பளவு தண்ணீரில் அனைவரும் கடந்தனர். குழந்தைகளைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டனர். சாமான்கள் பலவும் வீணாகிப் போயின! உயிர் பிழைத்தால் போதும் என்னும் எண்ணமே மேலோங்கி இருந்தது. உடைகள் ஈரமாக ஆனதால் அனைவருக்கும் நடப்பதும் சிரமத்தைக் கொடுத்தது. நடை தடுக்கியது. ஆனால் குலசேகரனும், சிஙக்ப்பிரானும் அனைவரையும் அவசரப்படுத்தினார்கள். கிழக்கே சில காத தூரத்தில் சம்புவராயரின் சீமையை சகலலோகச் சக்கரவர்த்தி ராஜநாராயண சம்புவராயன் என்பவன் ஆண்டு கொண்டிருந்தான். அங்கே சென்று விட்டால் ஆபத்து இல்லை என்பது அவர்கள் எண்ணம். ஆனால் அவனும் சுல்தானியருக்குக் கப்பம் கட்டி வந்தான். எனினும் ஆபத்து அதிகம் இருக்காது என்பது சிங்கப்பிரானின் கருத்து.

சம்புவராயரின் ராஜ்ஜிய எல்லைக்குள் போனதும் அனைவரும் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு கிராமங்களுக்குச் செல்லுமாறு சிங்கப்பிரான் உத்தரவிட்டார். விடிய விடிய அனைவரும் அங்கே சென்று சேர்ந்தார்கள். முன் சொன்னபடி சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு கிராமங்களை நோக்கிச் சென்றனர். அதுவரை அவர்களுடன் வந்த ஹேமலேகாவும் இப்போது பிரிந்து சென்றாள். ஹேமலேகாவைப் பிரிகிறோம் என்னும் எண்ணம் குலசேகரனை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. ஆனால் வேறு வழி தான் என்ன! இப்போது சிங்கப்பிரானும் குலசேகரனைப் பிரிந்து செல்ல ஆயத்தமானார். குலசேகரனை திருவண்ணாமலைக்குச் செய்தி சொல்ல அனுப்பிவிட்டுத் தான்  அங்கேயே இருந்து கண்ணனூரில் நடைபெறுவதை வேவு பார்த்து அறிந்து அதற்கேற்றாற்போல் ஶ்ரீரங்கத்தை மீட்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பது அவர் எண்ணம். ஆகவே குலசேகரனிடம் விடை பெற்றார். ஆனால் குலசேகரனோ என்னதான் சம்புவராயரின் எல்லைக்குள் சிங்கப்பிரான் இருந்தாலும் எதிரிகளுக்கு அவர் இங்கே இருப்பது தெரிந்தால் அவர் உயிருக்கே ஆபத்து என அஞ்சினான். அதை அவரிடம் சொல்லவும் செய்தான்.

ஆனால் அவரோ வேறெங்கும் செல்ல ஒத்துக் கொள்ளவில்லை. இந்தக் காவிரி நதி தீரத்திலேயே தான் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும் திருவரங்கத்தைத் தொட்டுக்கொண்டு கிழக்கே ஓடிவரும் காவிரியைப் பார்த்துத் தன் மனதை ஆற்றிக்கொள்ளப் போவதாகவும் அப்படியே கண்ணனூரில் நடக்கும் விஷயங்களையும் அவ்வப்போது அறிந்து கொள்ள இங்கே தங்குவதே வசதி எனவும் சொன்னார். நல்லகாலம் ஒன்று பிறக்காமலா போய்விடும்! அப்போது ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் அழகிய மணவாள மக்களைத் திரட்டி ஒன்று சேர்த்து மீண்டும் அங்கே கொண்டு செல்லவேண்டும் என்னும் ஆசையும் இருப்பதாய்ச் சொன்னார்.  நம்பிக்கையின் அடிப்படையிலேயே தான் இதை எல்லாம் செய்வதாகவும் சொன்னார். குலசேகரன் இதற்கெல்லாம் தயங்காமல் நாட்டின் விடுதலையை மட்டுமே நினைத்துக் கொண்டு ஹொய்சள மன்னரைக் கண்டு மதுரைப்படைகள் படை எடுத்து வரும் விபரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கண்ணனூருக்கு வந்து படைகள் தங்கி இருப்பது கிளம்பிச் செல்லும் முன்னர் அவன் அங்கே சென்று சேர்ந்து செய்தியை ஹொய்சள மன்னரிடம் சொல்லவேண்டும் என்பது அவர் எண்ணம். ஆகவே விரைவில் திருவண்ணாமலையை நோக்கிச் செல்லுமாறு குலசேகரனைப் பணித்தார்.

Sunday, December 16, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அழகிய மணவாளத்தின் கதி என்ன?

சுல்தானின் வீரர்கள் தலைவன் தன்னைப் பார்த்து விட்டதை அறிந்த குலசேகரன் முதலில் கலங்கினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு விட்டான்.  நல்லவேளையாக அந்த வீரர் தலைவனுக்குக் குலசேகரனை அவ்வளவு விரைவில் அடையாளம் புரியாததால் யோசித்துக் கொண்டு நின்றான். அதைப் புரிந்து கொண்ட குலசேகரன் ஓர் பைத்தியக்காரனைப் போல, ஓஓஓ, ஹோஹோ என்றெல்லாம் கத்தியவண்ணம் ஓட்டமாக ஓடினான். ஆனால் அவன் சிறிது தூரம் ஓடுவதற்குள்ளாக அவன் யார் எனப் புரிந்து கொண்ட வீரர் தலைவன், "ஏய், நில்!" என அதிகாரமாகக் கூறியவண்ணம் அவன் அருகே குதிரையை விரட்டினான்.  குதிரைக்குளம்பொலிகள் தன்னை நோக்கி வருவதை அறிந்த குலசேகரன் அப்போது அந்தி மயங்கத் தொடங்கி இருந்தால் கிடைத்த இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு அருகிலிருந்த தோப்புக்குள் புகுந்து ஒளிந்து கொண்டான்.

ஆனாலும் அந்த வீரர் தலைவன் விடாமல் அவனைத் துரத்தினான். தன்னை யாரெனக் கண்டு பிடித்திருப்பான் என்பதைப் புரிந்து கொண்ட குலசேகரன் தான் இப்போது செய்யவேண்டியது விரைவில் சிங்கப்பிரானைப் பார்த்து இவர்கள் வருகையைத் தெரிவிக்க வேண்டும் என்பதே என நினைத்தவண்ணம் சிங்கப்பிரானின் மாளிகை இருக்கும் திசை நோக்கி ஓட ஆரம்பித்தான்.  அந்த வீரன் சுல்தானிய ராணியின் கோஷ்டிக்குத் தலைவனாக வந்திருந்தான் என்பதோடு மதுரையில் இருந்து மேலும் ஒரு சுல்தானியப் படை வரும் தகவலைத் தெரிந்து கொண்டதால் அவர்களை வரவேற்று வழிகாட்டவென அங்கே வந்து காத்திருந்தான். வந்த இடத்தில் தான் குலசேகரனைப் பார்த்து விட்டான். சாட்டை அடிகளால் குற்றுயிரும் குலை உயிருமாக இருந்தவன் இவன் தான் என்றும் அறிந்து கொண்டு விட்டான்.  குலசேகரனை எப்படியேனும் பிடித்துவிட வேண்டும் என ஓடோடி வந்தவனுக்கு அவன் ஓடி மறைந்தது தெரியவரவே கோபத்துடனும் யோசனையுடனும் என்ன செய்வது எனத் தெரியாமல் மீண்டும் காவிரிக்கரைக்கே வந்தான்.

இங்கே குலசேகரன் சிங்கப்பிரானின் மாளிகைக்குள் சென்றபோது அவர் எங்கேயோ அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தார். குலசேகரனைப் பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டவராக அவனைக் காணத்தான் புறப்பட்டதாகவும் சொன்னார். படை வீரர்கள் வந்திருப்பது தெரிந்து தான் கிளம்பினாரோ என நினைத்தான் குலசேகரன். ஆனால் அவருக்கோ அவன் சொல்லும் செய்தி புதிதாகத் தெரிந்தது. ஆகவே உடனே காவிரிக்கரைக்குச் சென்று பார்க்க விரும்பினார். அவன் தான் அமர்ந்திருந்த கரைப்பக்கத்திலிருந்து இன்னும் சற்று மேற்கே சில தோப்புகளைக் கடந்து காணப்பட்ட காவிரிக்கரைக்கு அவரை அழைத்துச் சென்றான். காவிரியில் நதியின் நடுவிலும் எதிர்க்கரையிலும் பல தீவர்த்திகள் அசைந்து கொண்டிருந்தன.அதைப் பார்த்ததுமே கவலை கொண்ட சிங்கப்பிரான் குலசேகரனிடம் சுல்தானியப் படைகள் நதியைத் தாண்டிக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார். அதற்குக் குலசேகரன் இங்கே வருகிறதோ அல்லது கண்ணனூர் சென்று கொண்டிருக்கிறதோ என்பதை அறியாமல் அவசரப்பட வேண்டாம் எனக் கூறினான்.

அதற்கு சிங்கப்பிரான் மதுரையிலிருந்து ஒரு பெரிய படை கண்ணனூருக்கு வருவதாய்த் தான் கேள்விப் பட்டதாயும் இது அந்தப் படையாக இருக்கலாம் என நினைப்பதையும் கூறினார். படை எதற்காக வருகிறது எனக் கேட்ட குலசேகரனிடம் அவர்," ஹொய்சளத்தைத் தாக்க நினைக்கிறார்கள் சுல்தானிய வீரர்கள். ஹொய்சளர்களின் உதவியோடு நீ சுல்தானிய வீரர்களிடையே செய்தியைச் சுமப்போர்களைக் கொன்றது அவர்களுக்குத் தெரிந்து விட்டது. உன்னோடு கைதான வீரர்கள் சொல்லி விட்டனர். ஆகவே அவர்கள் திட்டம் இப்போது திருவண்ணாமலையைத் தாக்குவது என்பதே! மேலும் மதுரை சுல்தான் வீர வல்லாள அரசருக்கு அவர் வீரர்களும் குலசேகரனும் இப்படிச் செய்ததன் காரணத்தைக் கேட்டு தூது அனுப்பியதற்கு இன்று வரை வல்லாளர் பதில் கொடுக்கவில்லை! அதனாலும் மதுரை சுல்தான் ஆத்திரத்தில் இருக்கிறான். என்றாலும் இப்போது படையெடுப்பு தேவை இல்லை என அவன் நினைத்திருக்கிறான். என்றாலும் அவன் தளபதியின் கையே இப்போது மதுரையில் ஓங்கி இருக்கிறது. அவன் தன் சொந்தப்படையையும் சுல்தானின் படையையும் திருவண்ணாமலையைத் தாக்குவதற்காகத் தயார் செய்து அனுப்பி இருக்கிறான் என நினைக்கிறேன்!" என்றார்.

மேலும் இந்த விஷயத்தை உடனே வீர வல்லாளருக்குத் தெரியப்படுத்தி அவரைக் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கவேண்டும் எனவும் அதற்குக் குலசேகரன் தான் தகுதி வாய்ந்தவன் என்பதாலேயே அவனைத் தேடியதாகவும் கூறினார் சிங்கப்பிரான். மேலும் தொடர்ந்து," சுல்தானிய வீரர் தலைவன் குலசேகரனைப் பார்த்து அடையாளம் புரிந்து கொண்டதால் இந்த ஊரில் தான் அவன் ஒளிந்திருக்கலாம் என வீரர்களை இங்கே அனுப்பி அவனைத் தேடச் சொல்லுவான். வீரர்கள் சாதாரணமாகத் தேட மாட்டார்கள். ஊரையே நாசம் செய்து விடுவார்கள். ஏதுமறியா அப்பாவி ஜனங்களைக் கொன்று குவிப்பார்கள். ஆகவே இரவோடு இரவாக அனைவரும் ஊரை விட்டுக் காலி செய்து கொண்டு கிளம்பியாக வேண்டும்!" என்றும் கவலையுடன் கூறினார். குலசேகரன் திகைத்தான். யோசனையில் ஆழ்ந்தான். ஆனால் சிங்கப்பிரானோ அவசரப்படுத்தினார். ஊரிலுள்ள அப்பாவி மக்களுக்கு வீடு வீடாகச் செய்தியைச் சொல்லி அனைவரையும் வெளியேறச் சொல்ல வேண்டும் எனப் பரபரத்தார்! 

Friday, December 14, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! பொன்னாச்சியின் மனம்!

குலசேகரன் நடக்கும் நிலையிலோ குதிரையில் அமர்ந்தவண்ணம் பயணம் செய்யும் நிலையிலோ இல்லாததால் அவனை எப்படி அழைத்துச் செல்வது எனக் கலந்து ஆலோசித்தார்கள். அவன் காயங்கள் பூரணமாக ஆறவில்லை. சீழ்க்கோர்த்துக் கொண்ட புண்களுக்கு இன்னமும் சிகிச்சை தேவைப்பட்டது. ஆகவே அவனை ஓர் படகில் அமர்த்திக் கரையோரமாகவே ஓட்டிக் கொண்டு ஒரு சிலர் துணையோடு அவனை அழகிய மணவாளம் கிராமத்துக்கு அழைத்துச் செல்ல முடிவானது. புறப்படும் நேரம் குலசேகரன் பொன்னாச்சியிடம் விடைபெறச் சென்றான். அவளிடம் நன்றி தெரிவித்துவிட்டு விடைபெற்றவன் வாசந்திகா தனக்கு அளித்திருந்த பொன் ஆபரணத்தை வைத்துக்கொள்ளும்படி அவளிடம் நீட்டினான். அவள் அதைப் பெற்றுக் கொள்ளாமல் கண்ணீர் சிந்தினாள்.

குலசேகரனுக்கு ஏதும் புரியாமல் வெளியே வந்து ஹேமலேகாவிடம் விஷயத்தைச் சொல்லி அவளை உள்ளே அனுப்பி வைத்தான். அப்போது அவள் ஹேமலேகாவிடம் தான் செய்த கைம்மாறுக்குப் பிரதிபலனைத் தான் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தாள். குலசேகரன் போன்றோருக்குத் தொண்டு செய்ததன் மூலம் தான் மகிழ்ச்சியை அனுபவித்ததாகவும் அதற்காகப் பணமோ பொருளோ வாங்கிக்கொள்ள மாட்டேன் எனவும் சொன்னாள். மேலும் அவள் தன் கணவன் வியாபாரம் செய்ய வேண்டித் தன்னை விட்டுப் பிரிந்து சென்று பதினைந்து வருஷம் ஆகிவிட்டதாயும் இன்னமும் அவன் திரும்பவில்லை என்பதையும் எங்கே இருக்கிறானோ என்பதே தெரியாமல் தான் வாழ்ந்து வருவதையும் கூறினாள்.  தான் இன்னொரு ஆண்பிள்ளையைப் பார்த்து நேருக்கு நேர் பேசியது கூட இல்லை எனவும் கணவன் இல்லாமல் இத்தனை வருஷங்களைக் கழித்தவளுக்குக்குலசேகரன் வருகை பெரிதாக சந்தோஷத்தைக் கொடுத்ததும் அவனைக் கவனித்துக் கொண்டதன் மூலம் தானும் தன் தாய்நாட்டிற்கும் அதற்குச் சேவை புரியும் ஒரு வீரனுக்கும் தொண்டாற்றி அதன் மூலம் தனக்குச் சிறிது நிம்மதியும் ஆறுதலும் கிடைத்தது எனவும் சொன்னாள்.

குலசேகரனுக்குப் பணிவிடைகள் செய்ததன் மூலம் தான் அனுபவித்த ஆனந்தத்திற்குப் பொருளோ, பணமோ வாங்கினால் தான் செய்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்றாள். இது தன் கடமை எனவும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள். வாழ்க்கையில் தான் அனுபவித்த வறட்சிக்கு நடுவே பாலைவனச் சோலை போலக் கிடைத்த இந்த இனிமையான தினங்களைத் தான் போற்றிப் பாதுகாத்து வைக்கப் போவதாகவும் சொன்னாள்.  இந்த நினைவுகளையும் தான் செய்த தொண்டையும் குறித்து இன்னும் அதிகம் பேசினால் அதற்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்றும் அது பற்றி அதிகம் பேசவிரும்பவில்லை என்றும் சொல்லி விட்டுக் கண்ணீர் விட ஆரம்பித்தாள். ஹேமலேகாவும் அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தாள்.  குலசேகரனிடம் அந்தப் பொன்னாச்சி என்னும் தயிர்க்காரியின் உயர்ந்த உள்ளத்தைக் குறித்து எடுத்துக் கூறினாள். குலசேகரன் உண்மையிலேயே மெய் சிலிர்த்துக் கண் கலங்கி மானசிகமாக அவளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.

குலசேகரனை ஓர் படகில் ஏற்றிப் படுத்த வண்ணமாக அமரவைத்தனர். சாய்வாகப் படுத்துக் கொண்ட குலசேகரன் கண்களுக்குக் கரையில் தோப்பு மரங்களுக்கு இடையே நின்று கொண்டு அவனுக்குப் பிரியாவிடை கொடுக்கும் பொன்னாச்சியின் உருவம் தெரிந்தது. இனி இவளை நாம் எங்கே பார்க்கப் போகிறோம் என நினைத்தவண்ணம் குலசேகரன் அவளிடமிருந்து விடை பெற்றான். அழகிய மணவாளம் கிராமம் போய்ச் சேர்ந்ததும் குலசேகரனைக் கரையேற்றி ஓர் வீட்டில் ரகசியமாகத் தங்க வைத்தார்கள். அவனுக்கு வேண்டிய வைத்திய சிகிச்சைகளும் செய்யப்பட்டன. மற்றப் பணிவிடைகளும் செய்யப்பட்டன. குலசேகரன் மெல்ல மெல்ல உடல் தேறி வந்தான். பின்னர் அவனால் நடக்கும் நிலைமைக்கு வந்த பின்னர் வடகாவிரி எனப்படும் கொள்ளிடக் கரைக்கு அடிக்கடி சென்று உலாத்தி வந்தான்.

ஒரு நாள் மாலை நேரம்! கொள்ளிடக்கரையில் அமர்ந்த வண்ணம் எதிர்க்கரையையே பார்த்த குலசேகரன் கண்களுக்கு மறுகரையில் திடீரெனக் கறுப்பான நிழல்கள் தெரிவது கண்களில் பட்டன. கூர்ந்து கவனித்தபோது அவை யாவும் நிழல்கள் அல்ல நிஜம் என்பதும் குதிரைகளில் அமர்ந்த வீரர்கள் என்பதும் புரிந்தது. அதுவும் அவை யாரும் ஒரு மாபெரும் படையின் ஒரு பகுதி எனவும் புரிந்து கொண்டான். விஷயத்தை சிங்கப்பிரானிடம் உடனே சொல்ல வேண்டும் என்னும் எண்ணம் கிளர்ந்தெழ ஓட ஆரம்பித்தான் குலசேகரன். அப்படிக் கண்மண் தெரியாமல் ஓடியவன் யார் மேலோ முட்டிக் கொண்டான். யார் எனப் பார்த்தவனுக்கு அவன் ஓர் சுல்தானிய வீரன் என்பதும் வேறு யாரும் இல்லை, தன்னைச் சிறைப்பிடித்த வீரர்களின் தலைவனாக இருந்தவனே என்பதும் தெரியவரக் குலசேகரனுக்கு சப்த நாடியும் ஒடுங்கலாயிற்று  . 

Wednesday, December 12, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஹேமலேகாவின் கதை!

ஹேமலேகா மேலும் தொடர்ந்து பேசினாள். "ஸ்வாமி! உலகிலுள்ளோர் பலரும் புலன்களில் வாழ்கின்றனர். ஆனால் சிலரோ மனதில் வாழ்கின்றனர்.  இன்னும் சிலரோ ஆன்மாவிலேயே வாழ்கின்றனர். (இது எப்படி சாத்தியம் என்பது எனக்குப் புரியவில்லை. இது என் தனிப்பட்ட கருத்து.) புலன்களால் அனுபவிக்கப்படும் சுகங்களை அனுபவித்து வாழ்பவர்கள் வாழ்க்கை ஒரு மாதிரி எனில் என்னைப் போல் மனதில்வாழ்பவர்கள் காவியங்களிலும் இதிஹாசங்களிலும் மனதைப் பறி கொடுத்து அதிலேயே மூழ்கிப் போகிறோம். ஆன்மாவில் வாழ்பவர்களோ பிரம்மத்தைப் பற்றிய விசாரங்களிலே மூழ்கிப் போகின்றனர்.  அவரவர் மனோபாவத்துக்கு ஏற்ப அவரவர் சுகத்தையும் இம்மாதிரி அனுபவங்களையும் பெற்று இன்புறுகின்றனர். "

"ஆர்ய! நான் மனதாலேயே வாழ்கிறேன். கிட்டத்தட்ட நீங்களும் அப்படித்தான். என்னை மனதால் நினைந்து வாழ்கிறீர்கள். நமக்கு இந்தப் போலியான சடங்குகளான திருமணம், இல்வாழ்க்கை போன்றவை தேவையே இல்லை. நாம் மனதில் ஒருவரை ஒருவர் நினைப்பதாலேயே அந்த இனிமையிலேயே வாழ்ந்து வருகிறோம். நாம் ஒருவரை ஒருவர் நினைக்கும் இன்பம் தான் நம் வாழ்க்கை! அத்தகைய வாழ்க்கையைத் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்." என்று சொன்னாள் ஹேமலேகா. குலசேகரன் வாயே திறக்காமல் அவள் பேசும் அழகை ரசித்தான்.  அவள் அளவுக்கு அவன் ஏதும் படித்தது இல்லை. ஆகவே அவனுக்கு அவள் பேச்சு ஓர் சுகமான கானமாகத் தெரிந்தது. அவன் மனமும் திறந்து கொண்டது போல் உணர்ந்தான்.  மனதுக்கு அவள் பேச்சு நிறைவாக அமைந்தது. சிறிது நேரம் இந்த உணர்வுகளில் மயங்கி நின்ற குலசேகரன் மெல்ல மெல்ல சுய நினைவுக்கு வந்தான்.

"அதெல்லாம் சரி! ஹேமூ! நீ எப்படி என்னைத் தேடினாய்? உனக்கு எப்படித் தெரியும் என்னைப் பற்றி? யார் சொன்னார்கள்?" என்று கேட்டான். அப்போது ஹேமலேகா, வாசந்திகாவைப் பற்றி அவனுக்கு நினைவூட்டினாள். குலசேகரனுக்கும் வாசந்திகாவைப் பற்றிய நினைவு வந்தது. அவள் இப்போது சுல்தானின் ராணியின் அந்தப்புரச் சேடியாக வாழ்க்கை நடத்துவதை ஹேமலேகா தெரிவித்தாள்.  இதைக் கேட்ட குலசேகரன் திகைப்புடன் வாசந்திகாவுக்கு இத்தகைய நிலைமை ஏற்பட என்ன காரணம் என்று கேட்டான். அதற்கு ஹேமலேகா, அதைப் பற்றித் தனக்குத் தெரியாது என்றாள். மேலும் சுல்தானிய ராணியின் கோஷ்டி அழகிய மணவாளம் கிராமம் வந்ததும். அப்போது ராணியை மகிழ்விக்க வேண்டி நடந்த நாட்டிய நிகழ்ச்சி பற்றியும் கூறினாள். அப்போது ஹேமலேகாவின் தாயாரைத் தான் அங்கே அழைத்துச் சென்றதையும் வாசந்திகா தாயை அடையாளம் கண்டுகொண்டு வந்து பேசியதையும் கூறினாள்.

கூடவே வாசந்திகா அவளைத் தனியாக அழைத்துக் குலசேகரன் தாழியில் இடப்பட்டுக் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடப்பதையும் தாழி காவிரியில் மிதந்து கொண்டு செல்வதையும் அவனைக் காப்பாற்றுமாறும் கேட்டுக்கொண்டதைத் தெரிவித்தான். தான் பின்னர் அதை சிங்கப்பிரானிடம் அதைத் தெரிவித்ததாகவும் அவர் படகுக்காரர்களையும் வீரர்களையும் ஏவி விட்டு அவனைத் தேடச் சொன்னதாகவும் கூறினாள். கிழக்கே சென்ற வீரர்கள் பல காதம் தேடிவிட்டு அவன் கிடைக்காமல் திரும்பியதையும் சொன்னாள். பின்னர் அதனால் கவலை அடைந்த சிங்கப்பிரான் தானே ஒரு குழுவைச் சேர்த்துக் கொண்டு தேட முற்பட்டதும், அவர்களோடு தானும் சேர்ந்து கொண்டதாகவும் சொன்னாள். குழுவினர் கரையில் இறங்கி அங்குள்ள கிராமத்து மக்களையும் மற்றவர்களையும் விசாரித்துக் கொண்டு வர தான் மட்டும் தயிர்க்காரி பொன்னாச்சியின் குடிசையைப் பார்த்துவிட்டு இங்கே வந்ததாய்ச் சொன்னாள்.

இதை எல்லாம் கேட்ட குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். தான் தப்புவதற்கு வாசந்திகா செய்திருக்கும் பெரிய உதவியை நினைத்துக் கொண்டு வியந்ததோடு அல்லாமல் அவன் வைத்தியத்திற்கும், வழிச்செலவுக்கும் பணம் தேவைப்படும் என்பதாலே பொன்னாரத்தைத் தன் கழுத்தில் போட்டிருக்கிறாள் என்றும் புரிந்து கொண்டான். இத்தகைய மாசு மருவற்ற எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத தூய அன்புக்குத் தான் செய்யப் போகும் கைம்மாறு தான் என்ன? குலசேகான் கண்கள் கலங்கின. அதற்குள் சிங்கப்பிரானின் குழுவினர் ஹேமலேகா அவர்களை விட்டுப் போய் இவ்வளவு நேரம் ஆகியும் இன்னமும் காணவில்லையே எனத் தேடிக் கொண்டு வந்தார்கள். குலசேகரனோடு பேசிக் கொண்டிருந்த ஹேமலேகாவைக் கண்டதும் மனம் மகிழ்ந்தனர். அவனைத் தேடிக் கொண்டு போன மற்றக் குழுக்களுக்கு அவன் கிடைத்துவிட்ட செய்தியை அனுப்பி விட்டு மற்றவர்கள் அனைவரும் அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசிப்பதற்காக அன்று மாலை ஒன்று கூடினார்கள். 

Tuesday, December 11, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஹேமலேகா வந்தாள்!

பொன்னாச்சியால் அந்த ஆபரணம் வந்த விதம் சொல்ல முடியவில்லை. அவனுக்குச் சிகிச்சை செய்ய ஆரம்பித்தாள் பொன்னாச்சி. அவன் உடலில் உள்ள ரணங்களால் பல இடங்களிலும் சீழ் கோர்த்துக் கொண்டு வலியும், வீக்கமும் அதிகம் இருந்ததால் குலசேகரன் உடல் வேதனையில் மிகவும் நொந்து போனான். பொன்னாச்சி அவனுக்குப் பச்சிலைகளை அரைத்துத் தடவி பல மூலிகைச்சாறுகளைக் கஷாயம் செய்து குடிக்கச் செய்து அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டாள்.அவள் கவனிப்புக்குக் கொஞ்சம் பலன் இருந்தது.  ஆனால் குலசேகரன் அங்கே வந்து சேர்ந்து பல நாட்கள் ஆகிவிட்டன. ஓர் காலைவேளையில் குலசேகரன் தன் நிலைமையை நினைத்து வருந்திய வண்ணம் மெள்ள எழுந்து நடந்து ஆற்றங்கரையை நோக்கிச் சென்றான்.

ரணங்கள் ஆறி இருந்தாலும் தழும்புகள் பெரிதாகத் தெரிந்தன. ஆற்றங்கரையில் நிழல் பரப்பிக் கொண்டிருந்த ஓர் மரத்தின் அடியில் அமர்ந்த வண்ணம் ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தான் குலசேகரன். அப்படியே உட்கார்ந்திருந்தவன் காதுகளில் திடீரென, "ஆர்ய!" என ஒரு தீங்குரல் கேட்டது. ஹேமலேகாவையே நினைத்துக் கொண்டிருப்பதால் இதுவும் பிரமை என நினைத்த குலசேகரன் அவ்வளவாய் கவனம் செலுத்தவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அந்தக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. நிஜமாகவே ஹேமலேகா தான் கூப்பிடுகிறாளோ என்ற சந்தேகத்துடன் திரும்பிய குலசேகரன் கண்ணெதிரில் கனிவு ததும்பிய கண்களுடன் ஹேமலேகாவே நின்று கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் குலசேகரனுக்கு ஆனந்தம் பீறிட்டது. ஆர்வமுடன் "ஹேமலேகா! ஹேமூ!" என்ற வண்ணம் எழுந்தான். "எப்படி இருக்கிறீர்கள் ஐயா?" என ஹேமலேகா அவனைக் கேட்டாள்.

"இருக்கிறேன். நீ தான் பார்க்கிறாயே!" என்றான் குலசேகரன் தழுதழுத்த குரலில். தான் கனவு காண்கிறோமோ என சந்தேகம் கொண்ட ஹேமலேகா அதை அவனிடம் கேட்கவும் கேட்டாள். இல்லை அவள் கனவு காணவில்லை; இது நனவே எனக் குலசேகரன் கூறினான். அவன் உடலில் உள்ள தழும்புகளைக் கண்ட ஹேமலேகா அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டவளாக அவனை அமரச் சொன்னாள். பலஹீனமான உடல்நிலையில் வெகு நேரம் அவன் நிற்க வேண்டாம் என்பதே அவள் எண்ணம். ஹேமலேகாவை அங்கே எப்படி வந்தாள் என அறிவதற்காகக் குலசேகரன்,"ஹேமூ, நீ எப்படி இங்கே?" என்று வினவினான். ஹேமலேகா அவன் இதயத்தில் தானும் தன் இதயத்தில் அவனும் இருப்பதால் அவனைக் கண்டு பிடிப்பது அவளுக்கு எளிதாயிற்று என்றாள்.  அவனையே நினைத்துக் கொண்டிருந்ததாகவும் கூறினாள். பின்னர் அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கேட்டறிந்தாள். குலசேகரனும் தான் அடிபட்டு விழுந்தவரையில் கூறினான். பின்னர் தாழியில் கிடந்ததையும் பொன்னாச்சி எடுத்துக் காப்பாற்றியதையும் சொன்னான்.

அவன் தான் வாங்கிய சாட்டை அடிகளால் ஏற்பட்ட தழும்புகளைக் காட்டினான். அவனிடம் அவள் அவன் ரணங்களுக்குத்தான் ஓர் அருமருந்தாக விளங்க விரும்புவதாயும் ஆனால் அவனை ஸ்பரிசித்து சிகிச்சை செய்யும் பாக்கியம் அவளுக்கு இல்லை எனவும் கூறினாள். ஆனாலும் அவன் மேல் அவள் கொண்ட பிரேமை காலத்துக்கும் அழியாது எனவும் இந்தப் பிரேமை வெறும் உடல் ஸ்பரிசத்தால் மட்டுமே ஆனந்தம் அடையாது எனவும் மனங்களிலேயே தாங்கள் வாழ்வதாகவும், அது தொடரும் எனவும் கூறினாள்.

Sunday, December 09, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரன் காப்பாற்றப்பட்டான்!

இப்படி யோசனையில் சுமார் ஒரு நாழிகை நேரம் சென்றுவிட்டது. குலசேகரன் சுற்றும் முற்றும் பார்த்தவண்ணம் இருந்தான். அப்போது தூரத்துக்கரையில் யாரோ இருப்பது போல் தெரியவே மெல்ல எழுந்து அமர்ந்த நிலையில் உற்றுக் கவனித்தான். யாரோ ஓர் பெண் குளிக்கக் காவிரிக்கு வந்திருக்கிறாள்.  உடனே குலசேகரன் மெதுவாக எழுந்து நின்றான். கால்கள் தள்ளாடின! எனினும் விடாமல் எழுந்து நின்று கைகளை ஆட்டினான். வேகமாகத் தான் ஆட்ட நினைத்தான். ஆனால் அவனால் முடியவில்லை. அவன் முயற்சிகள் பலமுறை தோல்வி கண்ட பின்னர் ஒருவழியாக அந்தப் பெண்மணி அவன் நடு நதிப் பிரவாகத்தில் தத்தளிப்பதைக் கண்டாள். உடனே தன் குடத்தையும் நீரில் அமிழ்த்தித் தானும் குதித்தாள். குடத்தின் வாயைக் கீழே திருப்பி அதை ஓர் தெப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு குலசேகரனை நோக்கி நீந்தி வர ஆரம்பித்தாள். அவள் நீச்சலில் தேர்ந்தவள் என்பதைக் குலசேகரன் சில விநாடிகளிலேயே புரிந்து கொண்டான். மூச்சு இரைய இரையக் களைத்துப் போனவள் ஒரு வழியாக அவன் அருகே வந்தாள்.

அங்கே ஓர் தாழி இருப்பதையும் அதில் சோர்ந்து வாடிய நிலையில் உடல் முழுவதும் காயங்களுடன் ஓர் வாலிபன் நிற்க முடியாமல் நிற்பதைக் கண்டாள். சற்றுத் தயங்கினாள். அவள் தயக்கத்தைக் கண்டதும் குலசேகரன், "அம்மா! ஆபத்து எனக்குத் தலைக்கு மேல் காத்திருக்கிறது! என்னைச் சாட்டையால் அடித்துக் குற்றுயிராக்கி விட்டார்கள். என்னைக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். இந்தத் தாழிக்குள் எப்படி வந்தேன் எனத் தெரியவில்லை. நிற்கக் கூட முடியாதவனாக இருக்கிறேன். என்னை எப்படியேனும் காப்பாற்றுங்கள்!" என்றான்.  இதைக் கேட்ட அந்தப் பெண் மெல்லத் தாழியின் அருகே வந்து அதை அசைத்துப் பார்த்தாள். தாழி மெல்ல நகர்ந்து கொடுத்தது.  மகிழ்ச்சியுற்ற அவள் ஒரு கையால் குடத்தைப் பிடித்துக் கொண்டு நீந்திக்கொண்டே மறுகையால் தாழியைக் கரையை நோக்கித் தள்ளி விட ஆரம்பித்தாள்.  சிறிதும் சலிக்காமல் எப்படியேனும் தாழியைக் கரைக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் முயற்சியில்கடைசியில் அவள் வெற்றி பெற்றாள்.

கரைக்கு அருகே வந்துவிட்டோம் என்பதை உணர்ந்தவளாக வேகமாகத் தாழியைத் தள்ளிவிட்டதும் அது சற்று தூரம் மிதந்து போய் தரை தட்டி நின்றது. அப்படியே குலசேகரனைக் கரைக்கு அருகே விட்டுவிட்டு அவள் நீந்திக்கொண்டே இன்னும் சற்று தூரம் கிழக்கே சென்று ஓர் புதர் மறைவில் கரை ஏறினாள். அவள் அரை உடையில் குளிக்க வந்தவள் தன் துணிகளைப் பிழிந்து மாற்றிக்கொள்ளவே சென்றிருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட குலசேகரன் அந்தப் பக்கம் திரும்பாமல் அவனும் கண்ணியம் காத்தவனாக மெதுவாகத் தாழியில் இருந்து இறங்க முயன்றான். ஒருவழியாக அதில் வெற்றியும் கண்டான். ஆனால் அவன் காயங்களின் ஆழமும் கடுமையும் அவனை நிற்கவிடவில்லை. நிற்க முடியாமலும் மேல்கொண்டு நடக்க முடியாமலும் நடுங்கியவன் கீழே அப்படியே சாய்ந்து விட்டான். அதற்குள்ளாக அந்தப் பெண் தன் உடையை நன்கு பிழிந்து கட்டிக் கொண்டு ஓடி வந்து விட்டாள்.

குலசேகரன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, "ஐயா, ஐயா!" என அழைத்த வண்ணம் அவனை எழுப்ப முயன்றாள். அவனால் கண்களையும் திறக்க முடியவில்லை. எழுந்தும் நிற்க முடியவில்லை என்பதைக் கண்டு அவனை மெல்ல எடுத்துத் தன் தோளில் நிறுத்திய நிலையில் சாய்த்துக் கொண்டு நடந்தாள். ஓர் அடர்த்தியான தோப்பைக் கடந்து பின்னர் அவள் குடிசை வந்தது. அவனை ஓர் நல்ல படுக்கை தயாரித்துப் படுக்க வைத்துவிட்டு அவன் காயங்களைக் கவனிக்க ஆரம்பித்தாள். அந்தக் குடிசைக்காரியின் உதவியினாலும் பணிவிடைகளிலும் குலசேகரன் நன்றியும் மகிழ்ச்சியும் கொண்டான். அவனுக்கு ஓரளவு நினைவும் திரும்பவே அவளை யாரென்று கேட்டான். பொன்னாச்சி என்னும் பெயர் கொண்ட அந்தப் பெண்மணியின் கணவன் கப்பலில் ஏறி வெளிநாடுகளுக்கு வணிகம் செய்யச் சென்றதாகவும்  இன்னமும் திரும்பவில்லை என்றும் கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்டுக் கொண்டே குலசேகரன் தன் உடலைத்தடவிப் பார்த்தபோது கழுத்தில் பொன்னாலான ஓர் ஆபரணம் இருந்ததைக் கண்டான்.இது ஏது எனப் பொன்னாச்சியைக் கேட்க அந்த ஆபரணம் தான் அவனை மீட்கும்போதே அவன் கழுத்தில் இருந்ததாகப் பொன்னாச்சி கூறினாள். குலசேகரன் குழப்பம் அடைந்தான். தாழியில் தள்ளித் தன்னைக் கொல்லப்பார்த்திருக்கிறார்கள் எனத் தான் நினைத்தது தவறு எனப் புரிந்து கொண்டான். யாரோ அவனைக் காப்பாற்றப் பெரும் முயற்சி எடுத்திருக்கின்றனர்! யாராக இருக்கும்!

Friday, December 07, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரன் நிலைமை!

ராணி தன்னை அழைப்பதைக் கண்ட வாசந்திகா பதைப்புடன், ஹேமலேகாவின் கைகளைப் பிடித்து அழுத்தினாள். பின்னர் மெல்லிய குரலில் குலசேகரன் ஓர் தாழியில் மிதந்தவண்ணம் காவிரிப் பிரவாகத்தில் போய்க் கொண்டிருப்பதைத் தெரியப்படுத்தினாள். எப்படியேனும் அவனைக்காப்பாற்றும்படியும் மிகவும் ஆபத்தான நிலையில் அவன் இருப்பதையும் தெரியப்படுத்தினாள். ஹேமலேகா ஏதும் புரியாமல் நிற்கையிலேயே அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டாள். எல்லாம் இரு நாழிகைகளில் முடிய அனைவரும் படுக்கச் சென்றனர். வாசந்திகாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை. தன் மனம் கவர்ந்த குலசேகரன் நிலைமையும், தன்னைப் பெற்ற தாய்க்கு தன்னையே அடையாளம் தெரியாமல் இருப்பதையும் நினைத்து நினைத்து அவள் வருந்தினாள். இங்கே குலசேகரன் சென்ற தாழியின் நிலைமை என்ன ஆனது எனப் பார்ப்போம்.

தாழி ஓடையோடு மிதந்து கொண்டு காவிரியில் கலக்கும் இடத்துக்கு அருகே வந்திருந்தது.  நதி பூரணப்பிரவாகத்தில் போய்க் கொண்டிருந்தபடியால் அந்த இடத்தில் ஓடை நீர் தேங்கி இருந்ததால் தாழியின் பயணம் தடைப்பட்டது. தாழி அங்கேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. மறுநாள் காலைவரை அப்படிச் சுற்றிய தாழிக்கு ஓடைநீரோடு காவிரியில் பயணிக்கும் நேரமும் வந்தது. நதி கொஞ்சம் இடம்கொடுக்க ஓடை நீர் காவிரியில் வேகமாகப் பாய்ந்தது. ஓடை நீர் தன்னோடு கொண்டு வந்திருந்த சருகுகள், இலைகள், தழைகள் ஆகியவற்றோடு தாழியும் அடித்துக் கொண்டு போய்க் காவிரியில் இறங்கி வேகமாய் ஒரு சுற்றுச் சுற்றிப் பின்னர் நதியின் வெள்ளத்தோடு பயணப்படலாயிற்று.  அது காலை வேளை. இளம் சூரியன் வானில் பிரகாசித்துக் கொண்டிருந்தான். அந்தச் சூரிய ஒளி தாழியிலும் பட்டது.  நதிக்கரை ஓரம் இருந்த கிராமத்துவாசிகள் எல்லோரும் ஆங்காங்கே நதியில் குளித்துத் தங்கள் நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்தனர். தாழி ஒன்று நீரில் மிதந்து செல்வதைக் கண்டாலும் அதற்குள் ஓர் மனிதன் இருப்பான் என்பதை அவர்களால் யூகிக்க முடியவில்லை. நதிப் பிரவாகத்தில் வெள்ளத்தோடு எத்தனையோ அடித்துக் கொண்டு வருவதைப் போல இதுவும் ஒன்று என நினைத்தார்கள்.

அன்று பகல் முழுவதும் தாழி பயணித்துக் கொண்டிருந்தது. மாலையில் அதன் திசை மாற ஆரம்பித்தது. கிழக்கே போகப் போகத் தெரிந்த உயரமான நாணல் புதர்களில் நதியே ஓர் ஏரி போல் சில இடங்களில் காட்சி அளித்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அத்தகைய நாணல் புதர்களில் ஒன்றில் குலசேகரன் இருந்த தாழியும் அகப்பட்டுக் கொண்டு நின்றது. அப்போது இருட்டும் சமயமாக இருந்தது. குலசேகரனுக்கு நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. அப்போது சற்றே நினைவு வந்தது. உடம்பில் பட்டிருந்த சாட்டை அடிகளால் ஏற்பட்ட காயங்கள் அந்த நீர் பட்டதும் நெருப்பாய்க் காந்தத் தொடங்கியது. எங்கே இருக்கிறோம் என்பதே அவனுக்குப் புலப்படவில்லை. ஏதோ ஓர் இடுக்கான அறைக்குள் தன்னைத் தள்ளி இருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டான். ஆனால் நதியின் மீன்கள் எல்லாம் அவன் மேல் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. அவனுக்கு ஏதும் புரியவில்லை.

மெல்ல மெல்ல தன்னை ஓர் நிலைக்குக் கொண்டு வந்து நடந்தவைகளை நினைவு கூர முயற்சித்தான். இது இரவா, பகலா என்றே தெரியவில்லை. ஒருவேளை என் கண் பார்வை பறி போய் விட்டதோ?  இப்படி எல்லாம் நினைத்தவண்ணம் கண்களைத் திறந்து மெல்ல மேலே பார்த்தவனுக்கு மேலே ஆயிரம் ஆயிரம் விளக்குகள் கண் சிமிட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. அம்மாடி! இத்தனை விளக்குகளா? ஒரே நேரத்தில் இத்தனை விளக்குகளை யார் ஏற்றி இருப்பார்கள்? இல்லை, இல்லை, இவை விளக்குகள் இல்லை. நக்ஷத்திரங்களைப் போல் அல்லவா இருக்கிறது. சுற்றும் முற்றும் மீண்டும் பார்த்த குலசேகரன் மேலே தெரிவது ஆகாயம் என்றும் விண்ணில் ஒளிரும் நக்ஷத்திரக் கூட்டங்களைத் தான் தான் பார்ப்பதையும் அறிந்து கொண்டான். மெல்ல எழுந்து உட்கார முயன்றான். அவனால் முடியவில்லை.

ஏதோ ஓர் அறையில் கூரை இல்லா இடத்தில் தன்னைப் போட்டிருப்பதாக நினைத்தான். ஆனால் இதென்ன? அவன் படுத்திருக்கும் அந்த அறை நகர்கிறதே! இது என்ன மாயா ஜாலம்! ஏதோ ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து தப்புவது எப்படி? கவலையும், பீதியும் அவனைச் சூழ்ந்து கொள்ள மறுபடியும் நினைவிழந்தான். அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை.  இரவு முழுவதும் அப்படியே கிடந்த குலசேகரன் மறுநாள் காலை கொஞ்சம் சுய உணர்வைப் பெற்றான். அவனால் உடம்பைத் தான் நகர்த்த முடியவில்லை. ஆனால் நினைவு பூரணமாக வந்து விட்டது. தன்னைத் துருக்கிய வீரர்கள் அடித்தது எல்லாம் நினைவில் வந்தது. ஆனால் தான் இருப்பது எதில்? கொஞ்சம் கொஞ்சமாகத் தன் நினைவுக்கு வந்து அவன் சுற்றிலும் ஆராய்ந்து தான் ஓர் தாழிக்குள் இருப்பதை உணர்ந்து கொண்டான். தன்னை இந்தத் தாழிக்குள் போட்டவர்கள் யார்? எப்படி இங்கே வந்தோம்? இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

மெள்ள மெள்ள மறுபடியும் பார்த்தபோது ஓர் நதியின் பிரவாகத்தில் தான் இருந்த தாழி இருப்பதையும் நதிப் பிரவாகத்தோடு அது நகர்வதையும் உணர்ந்து கொண்டான். தான் நதியின் நடுவில் இருப்பதையும் வெகு தூரத்தில் நதிக்கரை தென்படுவதையும் கண்டு கொண்டான். இந்தத் தாழியைக் கரை நோக்கி இயக்கத் தன்னால் இயலாதே! என்ன செய்ய முடியும்? கலங்கினான் குலசேகரன். 

Thursday, December 06, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வாசந்திகாவும் அவள் தாயும்!

தன் நிலையை நினைத்து நொந்துகொண்ட வாசந்திகா, "அம்மா! அம்மா! இங்கே வா!" என அழைக்க ஹேமலேகாவுடன் சில பெண்கள் அந்த மூதாட்டியைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வாசந்திகா முன்னால் நிறுத்தினார்கள். தன் தாயின் நிலையைப்பார்த்த வாசந்திகா கண்ணீர் பெருக்கினாள். பிச்சைக்காரி போல ஓர் பித்தாகக் காட்சி அளித்தாள் அவள் தாய்! திருக்கரம்பனூர் அம்மங்கிவல்லி என்னும் பெயர் கொண்ட தன் தாய் இன்று தன்னிலை இழந்து தன்னைப் பற்றிய அனைத்தையும் மறந்து தான் பெற்ற மகளான வாசந்திகாவைப் பற்றிய நினைவு ஒன்றில் மட்டும் வாழ்வதைக் கண்டு அவள் மனம் புண்ணானது.  கூடு போல் காட்சி அளித்த அந்த உடலில் உயிர் இருப்பது அவள் கண்களின் அசைவினால் மட்டுமே தெரிந்தது.

அவளிடம் வாசந்திகா, "அம்மா, அம்மா, இதோ நான் வாசந்திகா! என்னைப் பார் அம்மா! உன் வாசந்திகா நான் தான்!" என்று சொல்லியவண்ணம் தாயின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு கேவினாள். ஆனால் அவளோ வாசந்திகாவையே கூர்ந்து பார்த்துத் தலையை  ஆட்டினாள். "இல்லை! இல்லை! நீ என் வாசந்திகா இல்லை! அவள் இப்படி இருக்க மாட்டாள். நீ வேறு யாரோ! எவரோ! என் மனச்சாந்திக்காகப் பொய் கூறாதே!" என்ற வண்ணம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். "வாசந்திகா! மகளே! வாசந்திகா!" என்று கூச்சலிட்டாள். வாசந்திகா அழுத வண்ணம், " அம்மா, அம்மா! நான் வாசந்திகா தான் அம்மா! என்னை நன்றாகப் பாரம்மா!" என்று மீண்டும் மீண்டும் கூறினாள்.

"நீயா வாசந்திகா! இல்லவே இல்லை! எனக்குத் தெரியும். அதோ, அங்கே ஆடுகிறாள் என் வாசந்திகா!" என்று தொலைவில் மேடையில் ஆடிக்கொண்டிருந்தவர்களைக் காட்டினாள் அம்மங்கிவல்லி.  வாசந்திகாவின் இதயமே வெடித்து விடும்போல் இருந்தது. தன் தாய்க்குப் பைத்தியம் முற்றிவிட்டது என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு இனி தன்னை அவளுக்கு அடையாளமும் தெரியாது என்பது புரியவர மனம் உடைந்து அழ ஆரம்பித்தாள். அப்போது அந்த மூதாட்டி அனைவரின் பிடியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.  ஹேமலேகா அவளைப் பார்த்து, "நீங்கள் தான் வாசந்திகாவா? அது உங்கள் தாய்தானா? " என்று கேட்க வாசந்திகா ஆமோதித்தாள். பின்னர் மெல்லிய குரலில் தான் தில்லிப் படைவீரர்களிடம் சிக்கிக் கொண்டு நாசமானது குறித்துச் சொன்னாள்.

ஹேமலேகா அவளிடம் வாசந்திகாவின் தாயாரைத் தான் தான் பார்த்துக் கொள்வதாகவும், தாயார் இல்லாத தான் அவளைத் தன் சொந்தத் தாயாக நினைத்துக் கொண்டு அவளைக்கவனித்துக்கொள்வதாகவும் எடுத்துச் சொன்னாள்.  வாசந்திகா உடனே தன்னிடம் இருந்த பொன்னாபரணங்களில் சிறந்த பெறுமானம் பெறும் ஒன்றை எடுத்து ஹேமலேகாவிடம் கொடுத்தாள். தன் தாயை நன்கு கவனித்துக் கொள்ளுமாறும் கடவுள் அருள் இருந்தால் தனக்கு விடுதலை கிடைக்கும் எனவும், அப்படி விடுதலை கிடைத்தால் தான் அவளை வந்து கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள்.  பின்னர் திரும்பியவளுக்குக் குலசேகரன் புலம்பல் நினைவில் வரவே அவளிடம் மீண்டும் சென்று, "உன் பெயர் ஹேமலேகா தானே?" எனக் கேட்டாள். ஹேமலேகா ஆமோதித்தாள்.

"ஓஹோ! அப்போது நீ குலசேகரனை அறிவாயோ?" என்று வாசந்திகா வினவ ஹேமலேகா திடுக்கிட்டாள்.  ஆனாலும் அவன் பெயரைக் கேட்டதும் அவள் முகத்தில் தெரிந்த பிரகாசத்தைக் கண்டுகொண்ட வாசந்திகா இவளைக் குறித்துத் தான் குலசேகரன் புலம்பி இருக்கவேண்டும் என நினைத்துக் கொண்டாள். ஹேமலேகா வாசந்திகா கேட்பதன் காரணத்தைக் கேட்க, வாசந்திகா அவளை அருகே அழைத்து, மிகவும் ரகசியமாக, "அவர் இந்தத் துருக்க வீரர்களால் குற்றுயிராக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்!" என்றாள். ஹேமலேகா திகைக்க சுல்தானிய ராணி வாசந்திகாவைக் கைதட்டித் தன்னிடம் அழைத்தாள். 

Wednesday, December 05, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! மாயமா, மர்மமா?

மறுநாள் காலை சுல்தானிய ராணியுடன் வந்தவர்களும் ராணியும் எழுந்து பார்த்தபோது தாங்கள் சிறைப்பிடித்து வைத்தவர்களில் முக்கியமான ஒருவனைக் காணோம் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். இது எப்படி சாத்தியம் என நினைத்தார்கள்.  அந்தக் காலகட்டங்களில் மாயாவித்தைகள், யோக வித்தைகள் தெரிந்தவர்கள் நிறைய இருந்ததால் அப்படி ஏதோ நடந்திருக்கும் எனச் சந்தேகித்தார்கள். எதற்கும் இந்த மண்டபத்தில் இருந்து உடனடியாகக் கிளம்பாவிட்டால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து சம்பவிக்குமோ எனக் கவலைப்பட்டார்கள். ஆகவே அனைவரும் குதிரைகளைக் கிளப்பி விட்டுப் பல்லக்குத் தூக்கிகளைப் பல்லக்குகளைச் சுமக்கச் செய்து பயணத்தை வடக்கு நோக்கித்தொடர்ந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்களுக்குக் காவிரியின் தென் கரை கண்ணில் பட்டது. நதியில் அப்போது நீர் சுழித்துக் கொண்டு ஓடியது. ஆகவே அவர்கள் படகுகளை அமர்த்திக் கொண்டு அதன் மூலம் நதியைக் கடக்க ஆரம்பித்தார்கள்.

அந்தப் படகுகளில் ஒன்று அமர்ந்தவண்ணம் அவர்களுடன் கூடப் பயணித்த வாசந்திகாவுக்கு நதியில் நீர்ப்பிரவாகம் சுழித்துக் கொண்டு ஓடுவதைக் கண்டதும் உள்ளூரத் திகிலே ஏற்பட்டது! தான் செய்தது சரியா என்னும் எண்ணமும் தோன்றியது! தாழியில் தான் இறக்கி வைத்த குலசேகரன் இது நேரம் எங்கே பயணித்திருப்பானோ! இந்த வேகத்தில் வெள்ளத்தின் நடுவே தாழி சென்றால் சமுத்திரத்தில் போய்ச் சேருமே! என்ன செய்வது?  குலை உயிரும் குற்றுயிருமாகக் கிடக்கும் அவர் சரியான மருத்துவ உதவி கிட்டாமல் என்ன ஆவாரோ தெரியவில்லையே! நேற்றிரவு இத்தனை வெள்ளம் போவது தெரிந்திருக்கவில்லை! அவள் மனம் பதைபதைத்தது. அதை அவள் முகமும் வெளிக்காட்டியது. தான் செய்தது தவறானதோ என்னும் எண்ணம் மேலும் மேலும் தோன்றக் குலசேகரனைத் தான் பெரியதொரு ஆபத்தில் சிக்க வைத்துவிட்டோம் என அவள் நினைத்தாள்.

அவர்கள் படகு திருச்சிராப்பள்ளியை அடையாமல் அதற்குக் கிழக்கே சிறிது தூரத்தில் தென்காவிரியைக் கடந்தது. அப்போது வாசந்திகாவுக்குத் திருவரங்கக் கரை கண்ணில் படம் உள்ளமும், உடலும் சிலிர்த்தது. எத்தனை வருடங்கள்! இதை மீண்டும் பார்க்க மாட்டோம் என்றே நினைத்திருக்க இன்று பார்க்க நேர்ந்ததே! அரங்கன் கதி என்னவாயிற்றோ! அவள் கண்கள் குளமாகின.  காவிரிக்கரையில் அவர்கள் அமர்ந்து சிறிது இளைப்பாறினார்கள். பின்னர் மேற்கே பயணித்து அழகிய மணவாளம் கிராமத்தை அடைந்தனர்.  அங்கே ஏற்கெனவே சிங்கப்பிரானுக்கு சுல்தானிய ராணி வரப்போது தெரிந்திருந்தமையால் அவளை முறைப்படி வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தார்.  ஊரில் உள்ள முக்கியமான விருந்தினர்கள் வந்தால் தங்கும் சத்திரத்தில் தங்க வைத்து அவர்களுக்கு மது மற்றும் சிறப்பான விருந்து அளித்து மனம் குளிர வைத்தார். பின்னர் அவர்களை அன்றிரவு அங்கேயே கழிக்கும்படி சொல்லி வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.

இரவில் அவர்கள் பொழுதைக் கழிக்கப் பாட்டும், கூத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அதற்கெனத் தயாராக இருந்த தேவதாசிகள் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு வந்து நின்றனர். சிறிது நேரத்தில் ராணி தன் பரிவாரங்களுடன் அங்கே வந்து சேர்ந்தாள். வந்தவர்கள் அனைவரும் அவர்களையே பார்க்க ஆட வந்த தேவதாசிகள் வாசந்திகாவைப் பார்த்துத் திகைத்தனர். ஒருவருக்கொருவர் சுட்டிப் பேசிக் கொண்டார்கள். திருக்கரம்பனூர் வாசந்திகாவைப் போலவே இவள் இருக்கிறாளே! அவள் தானோ அல்லது வேறு யாருமோ என ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டார்கள். பின்னர் பாட்டும், கூத்தும் தொடங்கின.  சிங்கப்பிரானுக்கு வாசந்திகாவை அடையாளம் தெரிந்து விட்டது. வாசந்திகாவும் அவரைத் தெரிந்து கொண்டாள் என்பது அவள் பார்வையில் இருந்து அவர் அறிந்தார். வாசந்திகா எங்கேயோ போய்விட்டாள் அல்லது இறந்திருக்கலாம் என நாம் நினைக்க இந்தக் கொடுமைக்காரர்களிடமா மாட்டிக்கொண்டாள் என சிங்கப்பிரான் பரிதாபம் அடைந்தார்.

கூத்து நடக்கும்போது ஓர் வயதான அம்மா, வாசந்திகாவின் பெயரைச் சொல்லிக் கொண்டே ஆடுபவர்கள் நடுவில் வந்து நின்று கொண்டு, "வாசந்திகா! ஆடு! ஆடு! ஆடு அம்மா!" என்று கூறினாள்.  அந்த மூதாட்டியைத் தொடர்ந்து ஹேமலேகா ஓடி வந்தாள். "அம்மா, அம்மா, அங்கெல்லாம் போகாதீர்கள்! வாசந்திகா அங்கே இல்லை! இங்கே வாருங்கள்!" என்று அழைத்தவண்ணம் அந்த மூதாட்டியை ஓடிப் போய்ப் பிடித்தாள். ஆனால் அந்த மூதாட்டியோ நேராக தேவதாசிகளுக்கிடையே வந்து, "வாசந்திகா! வாசந்திகா!" என்று கூவிக்கொண்டு "ஆடு! ஆடு" எனச் சொல்லிக் கொண்டு இருந்தாள். அவளை இழுத்துச் செல்லுமாறு அனைவரும் கூவ வாசந்திகா தன் தாயைப் புரிந்து கொண்டாள். ஆஹா, அம்மா உயிருடன் இருக்கிறாளா?உடனே அங்கே செல்லக் கால்கள் எழும்பினாலும் அவள் நிலை அவளைத் தயங்க வைத்தது. ராணியைப் பார்த்து, "ராணி! அது என்னைப் பெற்ற தாய்! நான் அவளிடம் பேசவேண்டும். உங்கள் அனுமதி அதற்கு வேண்டும்." என்று கூட ராணி சற்று யோசித்து விட்டு அரைமனதோடு அனுமதி தந்தாள். ஆனால் அவளை இங்கே அழைத்து வந்து தனக்கு எதிரே பேசவேண்டும் என்று சொன்னாள். 

Sunday, December 02, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வாசந்திகாவின் கலக்கம்!

குலசேகரனைத்தாழிக்குள் வைத்து ஓடையில் மிதக்க விட்ட வாசந்திகா மறுபடியும் தாங்கள் தங்கிய இடத்துக்கு வந்தாள். அவள் நிலையை எண்ணி எண்ணி மனம் வருந்தினாள். சுல்தானிய ராணிகளுள் ஒருத்திக்கு அவள் சேடிப்பெண்ணாகப் பணி புரிந்து வந்தாள். அவள் வலுக்கட்டாயமாக மதுரை கொண்டு செல்லப்பட்டதும் அங்கே அவள் போற்றிப்பாதுகாத்த பெண்மையைப் பறி கொடுத்துப் பின்னர் மதுரை அரண்மனையிலேயே நடைப்பிணமாக உயிர் வாழ ஆரம்பித்தது எல்லாவற்றையும் நினைவு கூர்ந்து கண் கலங்கினாள்.  இப்போது அவள் வந்திருப்பதும் சுல்தானிய ராணி ஒருத்தியுடன் தான். அந்த ராணியின் தந்தை கண்ணனூரில் நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவரைப் பார்க்க மதுரையில் இருந்து கிளம்பிக் கண்ணனூர் சென்று கொண்டிருந்தாள் அவள். அவளுக்குத் துணையாகவே மற்ற வீரர்களும் சேடிப் பெண்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். சேடிப் பெண்களில் ஒருத்தியாகக் கிட்டத்தட்டப் பதினைந்து வருஷங்களுக்குப் பின்னர் வாசந்திகா தான் வாழ்ந்த ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறாள்.

இந்தப் பதினைந்து வருஷங்களில் தமிழகம் அதுவரை முற்றிலும் காணாத அளவுக்கு அந்நியர் ஆட்சியில் மாட்டிக் கொண்டிருந்தது. தில்லியிலிருந்து கோயில் சொத்துக்களையும் நகைகளையும் கொள்ளை அடிக்க வந்த சுல்தானிய வீரர்களில் சிலர் அங்கேயே தங்க வைக்கப்பட்டு இருந்ததில் அவர்களில் பலருக்கும் கண்ணனூரிலும் மதுரையிலும் குடும்பங்கள் கிளைவிட்டுப் பரவி விட்டன. அவர்கள் தமிழகத்தை மதுரையிலிருந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தும் 15 வருடங்கள் ஆகி இருந்தன. ஆட்சிப் பொறுப்பை அவர்களே ஏற்று நடத்தி வந்தார்கள்.வீரர்கள் படையில் சேர்ந்தாலும் அவர்கள் மதம்மாற்றப்பட்டே சேர்க்கப்பட்டனர்.  இந்த ஆட்சியில் அவர்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிவ, வைணவக் கோயில்களில் வழிபாடுகள் முற்றிலும் நின்று விட்டன. கோயில் உற்சவங்களை நடத்தியே பத்து வருடங்களுக்கும் மேலாக ஆகிவிட்டன. கோயிலில் உள்ள உற்சவ விக்ரஹங்கள் பலவும் அந்த அந்தக் கோயிலில் இருந்து எடுக்கப்பட்டு அருகேஇருந்த மலையாள நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டன. அல்லது பூமிக்குக் கீழ் வெகு ஆழத்தில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டன.

தங்கள் சமய வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படுமோ என அஞ்சிய பலரும் அங்கிருந்து மலையாள நாட்டிற்கும் ஹொய்சள நாட்டிற்கும் சென்று வாழ ஆரம்பித்து விட்டனர்.  வழிபாடுகள் மட்டுமின்றித் தமிழரால் கொண்டாடப்பட்டு வந்த திருவிழாக்கள், பண்டிகைகள், சமூக விழாக்கள் போன்றவையும் நிறுத்தப்பட்டு மீறிக்கொண்டாடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். மக்கள் யாரால் தங்களுக்கு விடிவு காலம் வருமோ என ஆவலுடன் காத்திருந்தார்கள். வாசந்திகாவும் அப்படி விடிவு காலத்தை எதிர்நோக்கி இருந்தவர்களில் ஒருத்தி. ஆனாலும் அவள் வாழ்வில் மீண்டும் குலசேகரன் குறுக்கிடுவான் என எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் இந்தச் சிறையிலிருந்து தான் விடுவிக்கப்படுவோம் எனக்காத்திருந்தாள். அவள் அழகர்மலையில் அரங்கனைக்காப்பாற்றியது நினைவில் வந்தது.  அரங்கனைக் காப்பாற்றி ஒளித்து வைக்க உதவிபுரிந்த தன்னால்யாருக்கேனும் ஏதேனும் நன்மை விளையும், அதனால் தான் தான் இன்னமும் உயிர் தரித்திருக்கிறோம் எனத் தீவிரமாக நம்பினாள்.

இப்போது அந்த நம்பிக்கை வீண் போகாமல் குலசேகரனைக் காப்பாற்ற நேர்ந்தது குறித்து அவள் மகிழ்ச்சியே அடைந்தாள்.  அவன் உயிரைக் காப்பாற்றியதன் மூலம் வாழ்க்கையையும் காப்பாற்றி இருக்கிறாள் வாசந்திகா. அவன் வாழ்க்கை எவ்வளவு முக்கியமானது. நாட்டு விடுதலைக்காகப்பாடு படும் ஓர் வீரன் அவன். அதுவும் இப்போது ஹொய்சள வீரர்களுடன் வந்து சிறைப்பட்டிருப்பதா ஹொய்சள அரசருடன் சேர்ந்து ஏதோதிட்டம் போட்டு அதை நிறைவேற்றக் காத்திருக்கிறான் என்றே அவள் நினைத்தாள். ஆகவே அவன் விடுதலை மிக முக்கியம். இப்படி எல்லாம் நினைத்தவளுக்கு அவன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் தோன்றின. அவருக்குத் திருமணம் ஆகி இருக்குமோ என எண்ணினாள். ஆம் ஆகி இருக்கும்! அது தான் மனைவி பெயரைச் சொல்லிப் புலம்பினாரோ!  ஹேமலேகா அவர் மனைவி போல் தெரிகிறது. அல்லது அல்லது அவரால் விரும்பப்பட்ட பெண்ணாக இருக்கலாம். எதுவானால் என்ன! வாசந்திகாவின் கண்கள் கலங்கிக் கண்ணீர் பெருகியது.