எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, September 24, 2007

சிதம்பர ரகசியம் - ஆடிக் கொண்டானடி பல வேடிக்கைகள் செய்தே!
உமா தாண்டவம் என்பது அன்னை பார்வதி உடனிருக்கும் கோலத்தில் அமைந்தது. ஒரு கால் அபஸ்மார புருஷனின் மேல் இருக்கும்போது மற்றொரு காலைத் திரும்பி இருக்கும் நிலையில் கஜ ஹஸ்தம் என்னும் முத்திரையைக் காட்டிய வண்ணம் அமைந்திருக்கும் இந்தத் தாண்டவம்.


ஆனந்த தாண்டவம் என்பது சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி என்றும், தன்னுடைய பக்தர்களான பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் மற்ற பக்தர்களுக்காகவும் வேண்டி இறைவனால் ஆடப்பட்டது. இதைத் தேவாதி தேவர்களும் கண்டார்கள். இந்த நாட்டியத்தைக் காணத் தேவர்கள் மட்டுமில்லாமல் அந்த ஸ்ரீமந்நாராயணனே தன்னுடைய பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக் கொண்டு, கோவிந்த ராஜனாக இங்கே வந்து அமர்ந்து கொண்டு தினந்தோறும் கண்டு களிக்கிறான் என்றால் அந்த ஆட்டத்தை என்னவென்று சொல்லுவது?

சந்தியா தாண்டவம் என்பது மாலை ஆரம்பிக்கும் நேரத்தில் ஆடப் பட்டது. பொதுவாக சிவனின் தாண்டவங்கள் அனைத்துமே மாலை நேரத்தில் அமைந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் இது கைலை மலையில் ஆல மரத்தின் அடியில் ஆடப் பட்டதாய்க் கூறப் படுகிறது. ஆனந்தத் தாண்டவத்தில் இருக்கும் "அபஸ்மார புருஷம்" என்பது இதில் இருக்காது. மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடும் ஆட்டம் "சந்தியா தாண்டவம்" என்று சொல்லப் படுகிறது.


டிஸ்கி: அந்த அந்த நாட்டியக் கோலத்துக்கு ஏற்ற படங்கள் சரியாகக் கிடைக்கவில்லை. படம் போட ஆரம்பிச்ச பின்னர் நிறுத்தவும் முடியலை. தவறான நாட்டிய முத்திரைகளுடன் கூடிய படங்களுக்கு மன்னிக்கவும்.

Friday, September 21, 2007

சிதம்பர ரகசியம் - ஆடுகிற ஆட்டம் என்ன சொல்வேன்?

தீட்சிதர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்ததும் பார்க்கலாம். இப்போது நடராஜரின் நாட்டியத்தைப் பற்றிச் சற்று பார்ப்போம். இந்த உலகம் இயங்குவதற்கே காரணம் நடராஜர் தான். ஒவ்வொரு அணுவின் இயக்கத்திலும், புல், பூண்டு, செடி, கொடிகள், மரங்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள்,குன்றுகள், தடாகங்கள்,மிருகங்கள், மனிதர்கள், பூக்கள், காய்கள், பழங்கள், பறவைகள், பறக்கின்றன, ஊர்கின்றன இவற்றின் அசைவுகள், வண்ணச் சேர்க்கை எல்லாவற்றையுமே இயற்கை என்று சொல்லிவிட்டுப் போகலாம்தான். ஆனால் இயற்கை இந்த வண்ணக்கலவையைக் கொண்டு வந்தது எப்படி? பூவில் மகரந்தச் சேர்க்கை எந்த நியதிப்படி ஏற்படுகிறது? அனைத்துக்கும் காரணம் இந்த இடைவிடாத, நிற்கவே நிற்காத பரம்பொருளின் ஆட்டம் தான். ஆனந்த நடராஜன், ஆனந்த தாண்டவம் ஆடும் வேளையில், வசந்தம் வந்து மெல்லக் கதவைத் தட்டுகிறது, பூக்கள் மலர்கின்றன, வண்டுகள் ரீங்காரமிடுகின்றன. புள்ளினங்கள் ஆர்க்கின்றன, மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. அவனின் தாண்டவம் ருத்ர தாண்டவம் என்றால் அதற்குத் தகுந்தாற்போல் புயல் அடிக்கிறது, பெருமழை பொழிகிறது, இடி இடிக்கின்றது, மின்னல் கண்ணைப் பறிக்கிறது, கோபம் எல்லை மீறினால் சுனாமியும் வந்து விடுகிறது. விஞ்ஞான பூர்வமாக பூகம்பம் ஏற்படுவதால் நிகழும் நிகழ்வுகள் இவை என்று சொன்னாலும், இந்த நிகழ்வுகள் ஏற்பட்க் காரணம் என்ன?

எல்லை அற்றப் பரம்பொருளின் இடைவிடாத ஆட்டத்தை"சதாதாண்டவம்" என்று சொல்கின்றனர். அதனாலேயே அந்த ஆடுபவனுக்கும் "சபாபதி" "சபாநாயகன்" "நடராஜராஜா" என்றெல்லாம பெயர்கள் உண்டு. இதை "நடாந்த தாண்டவம்" எனவும் சொல்கின்றனர். முடிவில்லாமல் ஆடிக் கொண்டே இருக்கும் ஆட்டம் என அர்த்தம் இதற்கு. சிவனின் நாட்டியக் கோலங்கள் பலவகைப் பட்டது. அதில் இந்த ஆனந்தத் தாண்டவம் முதல் வகையாக்வும், சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சியாகவும் உள்ளது.

பரத முனிவர் எழுதிய பரத நாட்டிய சாஸ்திரத்தின் படி சிவனின் நாட்டிய வகைகள் 7 முக்கியமான பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டுள்லது. அவை :

1.ஆனந்த தாண்டவம் - சிதம்பரம் , பொன்னம்பலம்
2.சந்தியா தாண்டவம் - மதுரை, வெள்ளி அம்பலம்
3.உமா தாண்டவம் -
4.கெளரி தாண்டவம் - மயூர நாதர் கோவில், மாயூரம், திருப்பத்தூர்,
5.காளிகா தாண்டவம் - ரத்தின சபை - திருவாலங்காடு
6.திரிபுர தாண்டவம் - சித்திர சபை - திருக்குற்றாலம்
7.ஊர்த்துவ தாண்டவம்- சிதம்பரம், திருவாலங்காடு, காஞ்சி, திருசெங்காட்டாங்குடி, தென்காசி, தாராமங்கலம்.

இது தவிர, பிரளய காலத்தில் ஆடப் படும் சம்ஹார தாண்டவமும் சொல்லப் படுகிறது.

தாமதத்துக்கு மன்னிக்கவும்.

பல நாட்கள் ஆகிவிட்டது எழுதி. முக்கியக் காரணம் தீட்சிதர்கள் பற்றியும் அவர்கள் வழிபாட்டு முறை பற்றியும் எழுத வேண்டும் என்பதால், வைதீக வழிபாட்டு முறைக்கும், மற்றக் கோயில்களின் சைவ ஆகம வழிபாட்டு முறைக்கும் உள்ள வித்தியாசம் சரியாய்ப் புரியாததால் தேடுதல் படலம் தினமும் நேரத்தை எடுத்துக் கொண்டு விடுகிறது. பலரிடம் கேட்டுள்ளேன். சென்னை திரும்பியதும் எங்கள் தீட்சிதரிடமே நேரில் போயும் கேட்க எண்ணம். அதற்கு முன்னர் எங்கிருந்து தகவல் கிடைத்தாலும் பெற்றுக் கொள்ளவும் ஆசைதான். இன்னும் மாலிக்காஃபூர் படை எடுப்பைப் பற்றியும், அப்போது சிதம்பரம் தீட்சிதர்கள் செய்த உயிர்த் தியாகம் பற்றியும் சரியாய்க் குறிப்புக்களுக்கும் படிக்க வேண்டி இருக்கிறது. நேற்றுத் தற்செயலாய் இது பற்றி ஒரு பதிவு கிடைத்தும் கூட அவர் ஸ்ரீரங்கம் கோயிலின் ரங்கநாதர் திருப்பதியில் ஒளிந்து இருந்தது பற்றித் தான் அதிகம் எழுதி உள்ளார். சிதம்பரம் கோவில் பத்திக் குறிப்புக் கிடைக்கவில்லை.

சிதம்பரம் கோவிலில் கம்பரின் "ராமாயணம்" அரங்கேற்றம் நடந்தது என எனக்குக் கிடைத்துள்ள தீட்சிதரின் குறிப்புக்களில் இருந்து எழுதி உள்ளேன். ஆனால் அதை மறுத்தும் ஒருவர் எழுதி உள்ளார். அவர் ஸ்ரீரங்கம் தான் "கம்ப ராமாயணம்" அரங்கேற்றம் நடந்த இடம் என எழுதி உள்ளார். பள்ளி நாட்களில் நான் படித்ததும் அவ்வாறுதான், என்றாலும் இது பற்றியும் தேடிக் கொண்டு போகக் கிடைத்தது ஒரு சுவையான சர்ச்சைக்கு உரிய கட்டுரை! ரசிகமணி திரு டி.கே.சி. அவர்கள், பழைய மணிக்கொடி இதழ்களில் எழுதிய ஒரு கட்டுரை! "கம்பனின் மாண்பு" என்ற தலைப்பில் வந்துள்ளது. அதில் அவர் இந்தக் கம்ப ராமாயணம் "திருவெண்ணெய்நல்லூரில்" அரங்கேறியதாய்க் குறிப்பிடுவதோடு கம்பனின் காலமும் கி.பி. 8-ம் நூற்றாண்டு எனக் கூறுகிறார். சரித்திர ஆசிரியர்கள் கூறும் 11 அல்லது 12-ம் நூற்றாண்டில் கம்பன் பிறந்திருக்க முடியாது எனக் கூறுகிறார். முழுக் கட்டுரையையும் ஒளியேற்ற முடியாட்டியும் கட்டுரையின் அந்தப் பகுதியை மட்டுமாவது எடுத்துப் போட ஒரு ஆசை! ஆனால் அதற்கு இந்தப் பக்கம் சரி இல்லை. "எண்ணங்கள்" பகுதியில் முடிந்தால் போடுகிறேன். இது இந்தப் பகுதியில் ஆன்மீகம் மட்டுமே. இப்போ இது எழுதுவது கூடத் தாமதம் ஆவதால் காரணம் சொல்லத் தான்.

Monday, September 10, 2007

குண்டலினின்னா இது தாங்க! எங்கேயோ போயிட்டேன்!

சம்மந்தம் இருக்கிறது என்பதாலேயே போட்டேன். மன்னிக்கவும். ஏனெனில் உடலே கோயிலாக எவ்விதம் உருவகப் படுத்தப் படுகிறது என ஒரு பார்வை பார்த்துக் கொள்ளலாமே!

சிதம்பர ரகசியம் - இன்னுமா புரியலை?

"சித்சபை"யின் தோற்றமும், அங்கே உள்ள மூர்த்திகள் பற்றியும் விரிவாக ஏற்கெனவே பார்த்தோம். அந்த சித்சபையில் நடராஜரின் வலது பக்கமாய் ஒரு நீலத் திரை தொங்க விடப் பட்டிருக்கும். அதற்குத் தரிசனம் செய்யவும் தனியான சாளரம் போன்ற அமைப்பு உண்டு. அதன் வழியாகத் தான் தரிசனம் செய்ய முடியும். அந்தத் திரையைத் திறந்து கற்பூர ஆரத்தி காட்டும்போது தங்கத்தால் ஆன வில்வ மாலை மட்டும் எந்த உருவத்தின் மேலும் சாத்தப் படாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்.

அருவமான இறைவன் எங்கும் நிறைந்து உள்ளான். எல்லா உயிர்களிடமும், காணப் படுகிறான். அனைத்தும் அவனே! என்றாலும் பாமர மக்களுக்குச் செளகரியத்திற்காக அவன் உருவம் எடுத்து வருவதே நடராஜர். உருவமாக "ரூப" தத்துவத்தை நிரூபிக்கிறார் இவர். இங்கே உள்ள ஸ்படிக லிங்கமோ "அருவுரு"வாகக் காட்சி அளிக்கிறது. இது படிப் படியாக இறைவனின் வழிபாட்டுக்கு உதவி செய்கிறது. முதலில் உருவத்தை வழிபடும் மனிதன், பின்னர் தெளிந்து அருவுருவத்தை வழிபட ஆரம்பித்து மெய்ஞானம் பிறக்க, இறைவன் எங்கும் நிறைந்தவன் என உணருகிறான். இந்த அரிய தத்துவம் தான் சிதம்பர ரகசியம் எனச் சொல்லப் படுகிறது. தங்கள் ஞானக் கண்ணால் அனைவராலும் நம்முள்ளே உறையும் இறைவனைக் காண முடியாது என்பதற்காகவும், இறைவனின் மனோசக்தி இந்த இடத்தில் உறைந்திருப்பதாலும் தான் இங்கே அவனுக்கு உகந்த வில்வ தளங்களால் மாலையிட்டு அந்த உருவம் அற்றப் பரம்பொருளை வணங்கச் செய்கின்றனர்.

சிவனும், சக்தியும் ஐக்கியம் ஆகிய மந்திர சொரூபமான திருவம்பலம் எனவும் இதைச் சொல்லலாம். ஆனால் நாம் காண்பது என்னமோ ஒரு வில்வ மாலை தான். குறிப்பால் தான் உணர்த்துவார்கள். இந்த உலகை அதைப் படைத்த இறைவனாக, அதாவது விராட புருஷனாக வைத்துக் கொண்டால் அதன் நடுப்பாகம் ஆன இதயம் தான் இந்தச் சன்னதி. எல்லாக் கோவில்களையும் போல் இங்கே இறைவனின் மூலஸ்தானம் ஆன நடராஜர் சன்னதி நடுவிலும் இருக்காது. சற்றே இடப் புறம் ஒதுங்கியே இருக்கும். நம் இதயம் எவ்வாறு இடப்புறம் ஒதுங்கி இருக்கிறதோ அப்படி இருக்கிறது. நம் இதயத்தை ஒரு தாமரை மலராக உருவகப் படுத்தினால் அதனுள் உறையும் ஜோதி தான் இறைவன். இங்கே தான் இதயத்தின் உள்ளே உள்ள தாமரை மலரில் ஜோதி ரூபமாக இறைவன் உறைகிறார் என்பது ஐதீகம். நம்முள்ளே உள்ள இறைவனை நாம் கண்டு உணர்ந்து ஞானம் அடைய வேண்டியே இத்தனை ரகசியாமாக இதைப் பாதுகாக்கிறார்கள்.

நம் உடலையே ஒரு கோயிலாக எடுத்துக் கொண்டால், நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஆட்சி செய்யும் இடம் ஆன ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு தேவதைக்கு உரியது. அப்படிப் பார்த்தால் ஆகாயத்துக்கு உரியது இதயம். இதயம் துடிக்கவில்லை என்றால் நாம் இல்லை. அந்த இதயம் துடிப்பதை இந்த இறைவனால் தான். ஆகவே தான் "சிந்தையில் சிவனை நிறுத்திக் கொள்ள"ச் சொன்னார்கள் நம் பெரியோர்கள். நிறுத்தி அவனுக்குக் கோயிலும் கட்டினார். பூசலார் நாயனார். யோகக் கலை வல்லுனர்கள் தங்கள் இதயத்தில் இறையை நிறுத்தி தியான முறையில் வழிபடும் திறமை பெற்றவர்கள். அந்த யோக முறைப் படியும் இது "அனாஹதம்" எனப் படுகிறது.அனாஹதம் தான் சரியான வார்த்தை. ஒரு முறைக்குப் பலமுறையாகச் சரி பார்த்து விட்டேன். சாதாரண மனிதர்களால் முடியாத ஒன்றை மறைமுகவாகவேனும் அவனுக்கு உணர்த்தும் வண்ணம் ஏற்பட்டது தான் இந்தச் சிதம்பர ரகசியம்.

இன்னும் எளிமையாகச் சொன்னால் "ஜீவாத்மா"வும் "பரமாத்மா"வும் ஐக்கியம் ஆகும் இடம் எனவும் சொல்லலாம். ஆகாயத்தின் தன்மை இருப்பதால்,இந்த இடத்தில் உருவம் ஏதும் இல்லாமல் நிர்மலமாக இருப்பதால் தான் சிதம்பரம் நகரை பஞ்ச பூதத் தலங்களில் "ஆகாயத் தலம்" என்றும் சொல்லுவார்கள்.

Sunday, September 09, 2007

சிதம்பர ரகசியம் - விளக்கம் கொடுப்பது என் கடமை!

கொஞ்சம் வெட்கமாவே இருக்கு. ஏற்கெனவே மோகன் தாஸ் கேட்டிருந்தார். சிதம்பர ரகசியம் பத்தி என்ன எழுதி இருக்கீங்கனு. அப்புறம் இப்போ நந்திதா அவர்கள். மற்றப் பேருக்கும் இந்த சந்தேகம் இருக்கலாம். கேட்கத் தயங்குகிறார்கள்னு நினைக்கிறேன். அப்புறம் போன பதிவில் எழுதியிருக்கும் விஷயம் ஆன அனாகதவுக்கும் அனஹதாவுக்கும் உச்சரிப்பு மட்டுமில்லாமல் அர்த்தமும் மாறுபடும். தவறுக்கும் வருந்துகிறேன். அது பற்றியும் விளக்கம் அளிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். இன்று வேறு வேலைகள் வந்துவிட்டதால் இன்று இரவுக்குள்ளோ அல்லது நாளையோ கட்டாயமாய் தெளிவான விளக்கம் கொடுக்கிறேன். படிப்பதோடு மட்டுமில்லாமல் தவறுகளைச் சுட்டியும் காட்டி என்னைத் திருத்திக் கொள்ள உதவும் நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, September 08, 2007

சிதம்பர ரகசியம் - சிதம்பரத்தின் பெருமை!மோகன் தாஸ் கம்ப ராமாயணம் அரங்கேறியது பற்றிய சந்தேகம் எழுப்பி இருக்கிறார். நானும் ஸ்ரீரங்கத்தில் அரங்கேறியதாய்த் தான் படித்திருக்கிறேன். என்றாலும் என்னிடம் உள்ள குறிப்புக்களில் இங்கே சிதம்பரம் தீட்சிதர்களிடம் அங்கீகாரம் பெறவும் கம்பர் இங்கே தன்னுடைய ராமாயணத்தைப் பாடியதாயும் கூறுகிறது. ஆகவே தான் அதை எழுதினேன். அடுத்து கோபுரங்களுக்குச் செய்த பணிகளைப் பற்றியும், தீட்சிதர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் முன்னர், சிதம்பரம் நகரின் முக்கியத்துவம் பற்றி ஒரு விளக்கம்.
***************************************************************************************
வைஷ்ணவர்களுக்குக் கோயில் என்றால் அது ஸ்ரீரங்கத்தையே குறிக்கும். அங்கே ரங்கராஜனாக அருள் பாலிக்கிறார் விஷ்ணு. சைவர்களுக்கோ கோயில் என்றால் அது சிதம்பரம் மட்டுமே. இந்தப் பிரபஞ்சத்தின் ஐந்து ஆதார சக்திகளில் "ஆகாயம்" சிதம்பரம் தான். இந்தப் பிரபஞ்சமே "விராட புருஷன்" எனக் கூறப்படும் அந்த மகா சக்தியிடம் அடக்கம் என்றால் அந்த விராட புருஷனின் இருதயத்தின் மத்தியப் பகுதி சிதம்பரம் ஆகும் எனக் கூறப்படுகிறது. குன்டலினி யோக சாஸ்திர ஆதாரங்களில் இது "அனஹதா" எனக் கூறப்படுகிறது. சிவன் கோவில்களின் தலைமைப் பீடமாகக் கருதப் படுகிறது. மற்றச் சிவன் கோவில்களில் சிவனின் மற்ற சக்திகள் வியாபித்திருப்பதாயும், இங்கே தான் ஆத்ம சக்தி இருப்பதாயும், தினம் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்ததும், எல்லா சக்திகளும் இங்கே வந்து ஒடுங்குவதாயும் கூறுகிறார்கள்.

ஐந்து சபைகளில் இது "கனக சபை" . மற்றதில் திருவாலங்காட்டில் "ரத்ன சபை" மதுரையில் "வெள்ளி சபை", திருநெல்வேலியில் "தாமிர சபை", திருக்குற்றாலத்தில் "சித்திர சபை". இந்தத் திருக்குற்றாலத்தில் சித்திர சபை பரமரிப்புக் குறைவால் சித்திரங்கள் அழியும் நிலையில் உள்ளது. நடராஜரும் அங்கங்கே கொஞ்சம் தழும்புகளோடவே காணப் படுகிறார். சிவனின் முழு சக்தியும், நடராஜ ஸ்வரூபத்தில் இங்கே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது.

மனித உடலில் இதயம் எவ்வளவு முக்கியமோ அப்படி சிதம்பரம் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் நடராஜர் முழு உருவத்துடன் இங்கே ஜீவனுடன் விளங்கிக் கொண்டிருப்பதாயும், இந்த ஸ்வரூபத்தை "அம்சி" எனச் சொல்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களின் லிங்க ஸ்வரூபம், அவ்வாறு இல்லை எனவும் அவை "அம்சரூபா" எனவும் அழைக்கப் படுவதாயும் சொல்கின்றனர்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, அருணாசலம் நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி எனச் சொல்லப்படும் வரிசையில் சிதம்பரம் நடராஜ தரிசனமே முக்தி எனச் சொல்லப் படுகிறது.

மாலிக்காஃபூர் படை எடுப்பைப் பற்றியும், அப்போது நடந்த சம்பவங்கள் பற்றியும் நண்பர் ஒருவரும் தகவல்கள் திரட்டுகிறார். எனக்குக் கிடைத்தால் வெளியிடுகிறேன்.

Saturday, September 01, 2007

சிதம்பர ரகசியம் - தெரிந்து கொண்டு சொல்லறேன்!அபி அப்பா கேட்டதற்குப் பதில் சொல்ல முடியலை. ஏனெனில் நான் அந்தப் பக்கம் போய்த் தரிசனம் செய்யலை. ரொம்பவே வெட்கமாய் இருக்கிறது. என் கணவரிடம் கேட்டதில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த, பூஜை செய்த சக்கரமும், சன்னதியும் இருப்பதாய்க் கூறினார். ஆனால் நாங்க போனப்போ அந்தப் பக்கம் போகவே இல்லை. போய்ப் பார்க்காமல் எழுத முடியாதுனு நான் அதைப் பத்தி எழுதலை. சிவகங்கைக் குளத்தின் வட கரையில் நவலிங்கத்துக்கு அருகே இருப்பதாய் அபி அப்பா கூறினார். உண்மையில் அவர்தான் இதை எழுதத் டகுதி படைத்தவர்னு சிலசமயம் தோணும்.

அடுத்து வேந்தர் கேட்ட தீட்சிதர்கள் பத்தின கேள்வி. சிலர் இதற்குப் பதில் சொல்லவேண்டாம்னு சொன்னாலும் எனக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறதாய் நினைத்துக் கொண்டு நானாகத் தான் சொல்கிறேன். தீட்சிதர்கள் முகலாயர் படை எடுப்பின் போது உயிர்த் தியாகம் செய்ததும், நடராஜரைத் தூக்கிக்கொண்டு போய் ஒளித்து வைத்ததும் பற்றிக் குறிப்புக்களைத் தேடி ஆராய்ந்தபோது "திண்ணை"யில் அரவ்ந்தன் நீலகண்டன், எழுதி இருப்பதைப் படித்தேன். மாலிக்காஃபூர் படை எடுப்பு நேர்ந்த சமயத்தில் இது நடந்ததாயும், இது பற்றி "அமீர் குஸ்ரூ தாரிக்-இ-அலை" விவரமாக எழுதி இருப்பதாயும் அவர் சொல்லி இருக்கிறார். மேலும் சிதம்பரம் தீட்சிதர்கள் பத்தி ஒரு தனிப்பதிவும் வர இருப்பதால் இந்த விஷயத்தை இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அடுத்து நாம் காண இருப்பது "ரஜ சபை" என அழைக்கப் படும் ஆயிரக்கால் மண்டபம். இன்று பூரா படத்துக்குத் தேடியும் படம் கிடைக்கலை. போட்ட படமே சரியா வரலை. தெரிய மாட்டேங்குது. :(((

சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப் பட்டதாய்ச் சொல்லப்படுவதற்கான சரித்திரக் குறிப்புக்கள் இருந்தாலும், இந்த ரஜ சபை மிகவும் பழமை வாய்ந்தது என்றும் சொல்கிறார்கள். இந்த ஆயிரக் கால் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு தான், ஆதி சேஷனின் அவதாரம் ஆன பதஞ்சலி முனிவர், தன்னுடைய சிஷ்யர்களுக்குப் பாடம் கற்பித்தார் எனவும், இங்கே தான் மகாபாஷ்யம் எழுதினார் எனவும் சொல்லப் படுகிறது. இதைத் தவிர, கம்பர் தன்னுடைய ராமாயாணத்தை அரங்கேற்றியதும், தில்லை தீட்சிதர்களுக்கு முன்னிலையில் இந்த ஆயிரக் கால் மண்டபத்தில் தான். சேக்கிழார் பெரிய புராணம் அரங்கேற்றம் நடத்தியதும் இங்கே தான். மேலும் மாணிக்க வாசகர், பெளத்தர்களை வாதில் வென்றதும் நடராஜர் அருள் பெற்றதும் இங்கே தான் எனக் கூறப் படுகிறது.