எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, September 08, 2015

ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கன் பட்டினி கிடக்கிறான்!

அரங்கனோடு சேர்ந்து கொள்ள மேலும் அரங்கமாநகரிலிருந்து வந்தவர்களில் சில நாட்டியப் பெண்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் துருக்க வீரர்களிடம் மாட்டிக்கொள்ள ஒருத்தி மட்டும் எப்படியோ தப்பி அரங்கனைத் தேடிச் செல்லும் இருவருடன் சேர்ந்து கொண்டாள். இருவருமே இளைஞர்கள். தங்களுடன் ஓர் இளம்பெண் சேர்ந்து கொண்டது உள்ளூரப் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அவளையும் அழைத்துக் கொண்டு நடந்தனர். வழியில் சத்திரம் ஒன்றில் தங்கியபோது அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டு வந்த துருக்க வீரர்களிடமிருந்து அவளைக் காக்கவேண்டி நெற்குதிருக்குள் அவளை மறைத்தனர். பின்னர் துருக்க வீரர்கள் திரும்பியதும் அங்கிருந்து தப்பியவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஆண் வேடம் போட்டு அழைத்துச் சென்றனர். இருந்தும்  மீண்டும் டில்லி சுல்தானின் வீரர்களின் தலைவன் ஒருவனிடம் மாட்டிக் கொள்ள விரர் தலைவன் அவளைப் பெண் என அடையாளம் கண்டு பிடித்தாலும் என்ன காரணத்தாலோ விட்டு விடுகிறான். 

மூவரும் உள்ளூரக்கலக்கத்துடன் மேலே நடக்க பாண்டியனுக்கு உட்பட்ட வாணாதிராயர் பரம்பரையார் அவர்கள் திருவரங்கத்திலிருந்து வருவதைக் கேள்விப் பட்டு எதிர்கொண்டு அழைத்தனர். இரு இளைஞர்களையும் ஓர் இளம்பெண்ணையும் பார்த்துத் திகைக்க இளம்பெண் தன்னுடைய மனைவி என அவர்களில் தலைவன் ஆன இளைஞன் கூற விட்டு விடுகின்றனர். ஒரு வாரம் அங்குமிங்கும் அலைந்தவர்கள் ஒரு வழியாக அரங்கன் போன பாதையைக் கண்டுபிடித்தனர். விரைவில் அரங்கன் ஊர்வலத்தையும் கண்டனர். பல்லக்கில் எவ்வித நகைகளும் இல்லாமல் தன் பரிமள கஸ்தூரி மணம் மட்டும் சுற்று வட்டாரம் முழுதும் மணக்கக் காட்சி அளித்த அரங்கனைப் பார்த்துக் கண்ணீர் விட்டனர். அதோடு ஆரம்பத்தில் அரங்கனோடு சேர்ந்து வந்திருந்த கூட்டமும் குறைந்து போயிருந்தது. பெட்டகங்கள் கொள்ளை அடிக்கப்பட்ட விபரமும் அதிலிருந்து உடல் நலம் சரியில்லாமல் மனம் கலங்கிப் படுத்திருந்த பிள்ளை உலகாரியரையும் கண்டு விசனப்பட்டார்கள். 

அவர்கள் திருவரங்கத்திலிருந்து வருவதைக் கேள்விப் பட்ட பிள்ளை உலகாரியர் டில்லி வீரர்கள் அரங்கமாநகரை விட்டுச் சென்றுவிட்டனரா என விசாரித்தார். அவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி இருப்பதை இளைஞன் கூறக் கேட்ட பிள்ளை உலகாரியர் அரங்கனுக்கு இப்படி ஒரு சோதனையா என மனம் வேதனைப்பட்டார்.  வந்தவர்கள் பல்லக்கின் அருகே சென்று பார்க்க, பல்லக்கு இருந்த கோலம் அவர்கள் மனதைப் பதற அடித்தது. ராஜகிளி, "அரங்கா! அரங்கா!" என்று சோகமாகக் கூறித் தன் இறக்கைகளைப் படபடவென அடித்துக் கொண்டது. பல்லக்கைச் சுற்றி இருந்த சித்திரத் துணிகள் கிழிந்து போய் இருந்தன. விதானங்கள் உடைபட்டு ஆங்காங்கே தூசியும் மண்ணும் கலந்து பல்லக்கின் ஒளியே குறைந்து காணப்பட்டது. அப்போது வந்தவர்கள், பெருமாளுக்கு விளக்காவது வைக்கக் கூடாதா எனக் கேட்க, எண்ணெய் இல்லாக் கொடுமையைச் சொல்லி அரற்றினார்கள் அரங்கனின் பரிசனங்கள். அதற்குள்ளாக இன்னொருவர் பல்லக்கின் திரையைத் திறந்து அழகிய மணவாளரின் தரிசனத்தைக் காட்ட அதைக் கண்ட மூவரும் திகைத்து உறைந்து போனார்கள்.

தங்கக்கீரீடம் தாங்கி, அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கிரீடமாக இருக்கும். நெற்றியில் நீலக்கல், வைரக்கல்லினால் ஆன திருநாமம், காதுகளில் கர்ணப்பூக்கள், மார்பில் பொன்னாபரணங்களும், ரத்தின ஆபரணங்களும் புரள, தங்கப்பூணூல் ஒளி வீச, கை,கால் இடைகளிலும் பொன் ஆபரணங்களைப் பூண்டு சர்வாபரண பூஷிதராய்க் காட்சி அளிக்கும் அரங்கன் இன்று படு ஏழையாகக் காட்சி அளித்தார். அரையில் சின்னப் பருத்தி வேட்டி. கையால் நெய்யப்பட்ட நூலினால் ஆன பூணூல், தலையில் கிரீடம் இல்லை! காதுகளில் ஆபரணங்களோ, திருமார்பில் ஆபரணங்களோ கிடையாது! கைகள், கால்கள், இடை எங்கும் ஆபரணம் எதுவும் இல்லாமல் வெறுமையாகக் காட்சி அளித்தார். அரங்கனின் நிலைமை பரிதாபகரமாக இருந்ததோடு அல்லாமல் மேலும் வருத்தத்தை அளிக்கும் சொல்லைக் கூறினார் அங்கிருந்த ஒருவர். காலையிலிருந்து பெருமாளுக்கு அமுது செய்யவே இல்லை என்றும் அமுது செய்ய வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை என்றும் கூற வந்தவர்கள் கண்களில் கண்ணீர் மழையெனப் பெயதது. 

அனைவரையும் காத்து ரக்ஷிக்கும் அரங்கனுக்கா இந்நிலைமை? இது என்ன கொடுமை! அரங்கனின் பொருட்களைக் கூடக் களவாடும் மனிதர்கள் இருக்கிறார்களா? மனிதர்கள் செய்யும் இந்தக் கொடுமையை அரங்கன் ஏன் கண்டிக்கவில்லை? தண்டிக்கவில்லை? ஏனெனில் இது அவன் செயல் அன்று! மனிதர்கள் செய்யும் கொடுமை! அவர்களின் விதியால் விளைந்த இந்தக் கர்ம பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். அரங்கனுக்கு அதனால் எவ்விதக் குறையும் இல்லை. அவன் இதற்கு எதுவும் செய்ய இயலாது. அவர்களாகத் திருந்தி வந்தால் தான் உண்டு. அதற்கும் காலம் கனிய வேண்டும். அவன் விதியை மீறி எதுவும் செய்யும் அதிகாரமோ, எண்ணமோ அரங்கனுக்குக் கிடையாது. ஆகையால் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருக்கிறான்.  

திருவரங்க ஊரை மட்டுமின்றிச் சுற்று வட்டாரம் முழுதையும் அரங்கன் தான்பரிபாலிப்பாதாக அங்குள்ள மக்கள் நம்பிக்கை. அவருக்கில்லாத சொத்தா? ஆனால் அனைத்தையும் துறந்து இதோ ஒரு துறவி போல் ஒரு காலம் அமுது செய்விக்கக் கூட வழியில்லாமல் அரங்கன் நிற்கையில் மனிதர்களான நாமெல்லாம் எம்மாத்திரம்!

Friday, September 04, 2015

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

இனி மேலே நடந்தால் தான் விழுந்துவிடுவோம் என்பதால் தேசிகர் அங்கேயே நின்று விட்டார்.  இரவு முழுவதும் அங்கேயே காத்திருந்தார்.  மறுநாள் காலை எழுந்து பார்த்ததும் தான் இரண்டே அடி தூரத்தில் இருந்த பள்ளத்தாக்கைப் பார்த்து விட்டு தேசிகர் தாம் தெய்வாதீனமாகத் தப்பித்ததை நினைத்து வியந்தார். பின்னர் சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு தம் சீடரைக் கூப்பிட்ட வண்ணம் பள்ளத்தாக்கின் கரையோரமாகவே நடந்து சென்றார். சற்று நேரத்தில் அவர் குரலுக்குப் பதில் குரல் வந்தது. தூரத்தில் அக்கரையிலிருந்து வந்த குரலைக் கேட்ட வண்ணம் மேலும் நடந்தார். அதே போல் எதிர்க்கரையிலிருந்த பிரமதந்திரரும் குரல் கொடுத்துக் கொண்டே வர இருவரும் ஒரு நாழிகை நடந்து பள்ளத்தாக்கு முடிவடையும் இடத்தில் மேற்குக் கரை ஓரமாக ஒன்று சேர்ந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவிக் கொண்டு தங்கள் விருத்தாந்தஙகளையும் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் பிரமதந்திரர்  டில்லித் துலுக்க வீரர்கள் அரங்கன் ஊர்வலத்தைத் தேடிச் சென்று கொண்டிருப்பதாயும் ஆகவே தாங்கள் இருவரும் அந்த ஊர்வலத்தைத் தொடர்ந்தால் அவர்களிடம் மாட்டிக்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்தார். பின்னர் இருவரும் ஆலோசித்து மேற்குத் திசை நோக்கிப் பயணப்பட்டனர். இப்படி அரங்கனைத் தேடிச் சென்றவர்களும், அரங்கனோடு சென்றவர்களும் விதி வசத்தாலும், பிராண பயத்தாலும் பிரிந்து ஒவ்வொரு திசை நோக்கிப் பயணப்பட்டனர். கள்வர் பற்றில் விட்டுப் பிரிந்த அரங்கனைத் தேடிப் போவோமா?

முதலாவது கள்வர் பற்றை விட்டுச் சென்ற திருவரங்கன் ஊர்வலத்திற்கு இரண்டு, மூன்று நாட்கள் வரை எவ்விதத் தொந்திரவும் எங்கிருந்தும் வரவில்லை. பிள்ளை உலகாரியரும் பெருமாளின் பல்லக்கிற்குச் சிறிது தூரம் முன்னாலேயே தமது சீடர்களோடு சென்றார். அப்போது மூன்றாம் நாள் மாலையில் அனைவரின் தலைக்கு மேலும், 'கீ, கீ" எனக் கிளி கத்தும் சப்தம் கேட்கவும் அனைவரும் மேலே அண்ணாந்து பார்த்தனர். அப்போது கூரக் குலோத்தமதாச நாயனார் என்பவர் உலகாரியரைப் பார்த்து, :சுவாமி இது அரங்கனுடனேயே வரும் ராஜகிளியைப் போல் தெரிகிறது. நம்மை இனங்கண்டு அழைக்கிறது போலும்!" என்றார். மீண்டும் கிளி என்ன செய்கிறது என்று பார்த்தால், கிளி, "கீ, கீ" என்று கத்தியவண்ணம் பின்னோக்கிப் பறந்தது. அதைப் பார்த்த பிள்ளை உலகாரியர் அரங்கனுக்கு ஏதோ நிகழ்ந்திருப்பதால் கிளி தங்களை அழைக்கிறது எனப் புரிந்து கொண்டார். ஆகவே அவரும் திரும்பி விரைந்து பின்னோக்கிச் சென்றார்.

அரங்கன் பல்லக்கோடு வரும் ஊர்வலத்தை அடைந்த பிள்ளை உலகாரியர் திகைத்து நின்றார். மாபெரும் கள்வர் கூட்டம் அரங்கனையும், அரங்கனோடு வந்தவர்களையும் சூழ்ந்து கொண்டிருந்தது. பரிசனங்களில் மூவர் கள்வரால் அடிபட்டுக் கீழே விழுந்து கிடந்தனர். கள்வர் தலைவன் கைகளில் ஆயுதபாணியாய் நின்றிருந்தான். வலக்கையில் வேலாயுதம் தூக்கிய வண்ணம் இருக்க தன் ஆட்களைப் பெட்டகங்களைத் தூக்கி எடுக்கச் சொல்லி ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தான். அவர்களும் பெட்டகங்களைத் தூக்க முயன்று கொண்டிருந்தனர். உலகாரியர் அவனைப் பார்த்து இது அரங்கனின் சொத்துக்கள் என்றும் இவற்றைக் கொள்ளையடித்துச் செல்வது மகா பாபம் என்றும் கூறக் கள்வர் தலைவனும் பாபம் தான் என்றாலும் அதைப் பார்த்தால் நாங்கள் பிழைக்க வழி என்ன என்றும் கேட்டான்.

மேலும் இது தன் எல்லைக்குள் வந்த சொத்துக்கள் என்றும் இவற்றை அபகரிப்பது தன் உரிமை என்றும் சொன்னான். கள்வர்களான அவர்கள் இந்தக் காட்டைப் பங்கு போட்டுக் கொண்டு ஆட்சி செய்வதாகவும், இது அவன் எல்லைக்குள் வந்த சொத்தென்பதால் அவற்றைப் பறித்துக் கொள்வதாயும் திட்டவட்டமாய்க் கூறினான். உலகாரியரும் தம்மால் இயன்ற அளவு நியாயங்களை எல்லாம் எடுத்துச் சொல்லிப் பார்த்தார். கள்வர் தலைவன் கேட்பதாக இல்லை. மனம் வேதனை அடைந்து பொறுமை இழந்த உலகாரியர் தம்மிடம் இருந்த ஒன்றிரண்டு ஆபரணங்களான காதுக்கடுக்கன்கள், கைத் தோடாக்கள், மோதிரங்கள் ஆகியவற்றையும் கழற்றி வீசினார். சற்றும் கவலை கொள்ளாமல் அவற்றையும் எடுத்துக் கொண்டான் கள்வர் தலைவன். அனைத்தையும் பறித்துக் கொண்ட பின்னரும் அவ்விடம் விட்டுப் போகாமல் பல்லக்கின் திரையை விலக்கி அரங்கனைப் பார்த்தான் கள்வர் தலைவன்.

உலகாரியர் மன வருத்தத்துடன் அதான் எல்லா ஆபரணங்களையும் பறித்துக் கொண்டு விட்டாயே! இன்னும் என்ன என்று கோபமாய்க் கேட்க அரங்கன் மேல் சாத்தி இருந்த நகைகளையும் கேட்டான் அவன். அவற்றையும் கழற்றிக் கொடுக்கச் சொல்லி உலகாரியர் சொல்ல பட்டாசாரியர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டே கழற்றிக் கொடுத்தனர். பின்னரும் போகாமல் நின்றுகொண்டிருந்த கள்வர் தலைவனைப் பார்த்து,இன்னும் என்ன வேண்டும் எனக் கோபமாய்க் கேட்க, நாச்சிமார்களின் தாலிகளும், பெருமாளின் தங்கப்பூணூலும் இருக்கின்றனவே. ஒன்றுவிடாமல் கொடுத்துவிடுங்கள் என்று கள்வர் தலைவன் நெஞ்சில் ஈரமே இன்றிக் கூறினான். அழுது கொண்டே அனைத்தையும் கழற்றிக் கொடுத்தனர். கள்வர்களில் சிலருக்கு உலகாரியர் மேல் தனி மரியாதை இருந்தது. அவர்கள் மட்டும் ஒன்றுகூடி இவர் ஒரு மகான் இவருக்குத் தக்க மரியாதை செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டு ஒரு தட்டில் தங்கக் காசுகள், கனி வர்க்கங்கள் என்று குவித்து எடுத்து வந்து அவருக்குக் காணிக்கை செலுத்த உலகாரியர் வெறுப்புடன் அவற்றை மறுத்துவிட்டு மேலே நடந்தார்.  அனைத்தையும் கள்வர்களிடம் இழந்த அரங்கனும் தன் மக்களைத் தொடர்ந்தான்.

Sunday, August 30, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

அரங்கனுக்கு அன்றைய நிவேதனப் பொருட்களைத் தேடிக் கொண்டு வந்து கொடுத்தான் கள்வர் தலைவன். ஊர்வலம் மேலே செல்ல வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தான். அந்தக் காட்டின் எல்லை வரை கூடவே வந்து செல்லும் வழியில் உள்ள பல்வேறு கள்வர் பற்றுக்களிலிருந்தும் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொண்டு செல்லும்படியாக அறிவுரை கூறினான். 
*********************************************************************************

இங்கே ஶ்ரீரங்கத்தில்  உயிரற்ற சடலங்களுக்கு அடியில் மறைந்திருந்த வேதாந்த தேசிகர் வெகு நேரம் அப்படியே கிடந்தார். இரவு வந்து வெகுநேரம் ஆனபின்னர் மெல்ல மெல்ல எழுந்து அமர்ந்தார். இதைக் குறித்த பதிவு 

சுதர்சன ஆசிரியரின் குழந்தைகளையும் எழுப்பினார்.  மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்திருந்த சுருதப்பிரகாசிகையையும் எடுத்துக் கொண்டார்.  மெல்ல மெல்ல சப்தம் செய்யாமல் கோபுர வாயிலுக்கு வந்தார். யாரும் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்டு வெளியேறித் தென் காவேரிக்குச் சென்றார். காவேரிக்கரையில் மேற்குப் பார்த்து மறைந்து மறைந்து நடந்தார். வெகுதூரம் போய் உறையூருக்கு அப்பால் கரையேறினார். ஒரு வயலில் இரு குழந்தைகளோடு படுத்து இரவைக் கழித்தார். காலையில் அருகிலிருந்த கிராமத்தை அடைந்தபோது அங்கிருந்த கிராமவாசிகள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஶ்ரீரங்கத்திலிருந்து தப்பி வந்தவர்களும் இருந்தனர். அரங்கத்தில் நடந்ததை எல்லாம் அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அனைவரும் கண்ணீர் பெருக்கினார்கள். அரங்கனோடு தாங்களும் போக தேசிகர் தங்களை அனுமதித்திருக்கலாம் என அவர்களில் சிலர் கூற, கூட்டமாக அரங்கனோடு  செல்வது ஆபத்து என்றார் தேசிகர். 

அரங்கமாநகரே பாழாகிவிட்டதாகவும், தமிழ் பேசும் மக்கள் வாழும் இந்த நாடே இருள் சூழ்ந்து இருப்பதாகவும் அனைவரும் க்ஷேமமாக இருக்க அரங்கனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார். அனைவரும் ஓவென்று அலறித்துடித்து அழுதனர் அந்த சோகத்தைக் கண்ட தேசிகர் வாயிலிருந்து அப்போது ஒரு ஸ்லோகம் வந்தது. "அபீதிஸ்தவம்" எனும் பெயரில் தற்போது வழங்கப்படும் அந்த ஸ்லோகம் 28 பாக்களால் ஆனது என்றும், இப்போதும் கிடைப்பதாகவும், கஷ்டங்கள் நீங்கவும் மனோபயம் அகலவும் மக்கள் இதைப் பாராயணம் செய்வார்கள் என்றும் தெரியவருகிறது. இந்தப் பாடலிலேயே யவனர்கள் என வெள்ளையரையும் தேசிகர் குறிப்பிட்டிருப்பதால் பின்னாட்களில் ஆங்கிலேய ஆட்சி ஏற்படப் போவதை தீர்க்கதரிசனமாகச் சொல்லிவிட்டார் என்பவர்கள் உண்டு.

அன்று முழுதும் அங்கே பிரார்த்தனைகள் செய்த வண்ணம் உபவாசமாக இருந்த தேசிகர் மறுநாள் அந்த இரு இளம்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கிழக்கே தொண்டைமான் காட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கே வழி நெடுகக்காணக்கிடைத்த துளசிதளங்களை வைத்து வழி கண்டு பிடித்து மேலே நடந்தார். சிறிது தூரம் வரை காணப்பட்ட துளசிதளங்கள் அதன் பின்னர் அங்குமிங்கும்  சிதறிக் காணப்பட்டது. அதற்கப்புறம் சிறிது தூரத்தில் துளசி தளங்களையே காணமுடியவில்லை. தேசிகர் தாமாக ஒரு வழியைக் குறி வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார். நேரம் ஆக ஆக காட்டின் அடர்த்தி அதிகம் ஆகி வந்தது. இருட்டு அப்பிக் கொண்டது. போகும் வழி புரியவில்லை. காட்டையே சுற்றிச் சுற்றி வருவது போல் இருந்தது அவருக்கு. வந்த வழி கூடத் தெரியவில்லை. அதனால் திரும்பிப் போகவும் முடியவில்லை. மேலும் சற்றுத் தூரம் நட்ந்தவர் ஒரு மரத்தடியில் கிடந்த  முழு மனித எலும்புக்கூடுகளைக் கண்டு திகைத்தார்.

அதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள மரங்களின் தாழ்ந்த கிளைகளில் புடலங்காய் காய்த்துத் தொங்குவதைப் போல் பாம்புகள் தொங்கிக் கொண்டிருந்தன. பின்னர் செய்வதறியாமல் வேறு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். செல்லும்போதே ஜீயரை அழைத்துக் கொண்டு சென்றார். அவரது சீடரான பிரம்மதந்திர சுதந்திர ஜீயரை அழைத்தால் குரலை அடையாளம் கண்டு கொண்டு பதில் கொடுப்பார் என நம்பினார். அவரது குரல் தான் எதிரொலித்ததே தவிர பதில் ஏதும் கிட்டவில்லை. அந்த மாபெரும் பள்ளத்தாக்கில் விழுந்து விடுவோமோ எனப் பயந்து அங்கேயே நின்றார். இருள் சுற்றுவட்டாரத்தை விழுங்கிக் கொண்டு வந்து அவர் இருக்கும் இடத்தையும் விழுங்கியது.

Saturday, August 29, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

இங்கே

அரங்கனைக் கள்வர்கள் நடுவே விட்டு விட்டு வந்து மாதங்கள் மூன்று ஆகிவிட்டன. அரங்கன் என்ன ஆனான் என்பதைப் பார்ப்போமா?

சுற்றி வளைத்துக்கொண்ட கள்வர்களின் தலைவன் அவர்கள் சொல்வதை நம்பாமல் பெட்டகங்களைத் திறந்து காட்டச் சொன்னான். முதல் பெட்டகத்தில் அரங்கனின் நகைகள், அணிமணிகள், ஆபரணங்கள், வைரங்கள், பதக்கங்கள், ரத்தின ஹாரங்கள், முத்து நகைகள், பவள மாலைகள் வெள்ளியிலும், பொன்னாலும் செய்யப்பட்ட கங்கணங்கள் எனக் காணப்பட்டன. அவற்றைக் கண்ட கள்வர் தலைவன் கண்களில் வெறியே மிகுந்தது. மிகவும் ஆசையுடன் அவற்றைத் தன் கைகளால் துளாவிப் பார்த்தான். அப்போது அவன் பின்னே பிள்ளை உலகாசிரியர் வந்து அவனை "அப்பா!" என அழைத்தார்.  அவனையே பார்த்துக்கொண்டு வந்த அவர் மேல் சந்தேகம் கொண்ட கள்வர் தலைவன் தன் இடையிலிருந்து வாளை உருவினான். கைகளில் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டான்.

அதைக் கண்டு பயப்படாமல் பிள்ளை உலகாரியர், "அப்பா, உன் வாளைக் கண்டு நான் பயப்படவில்லை. எதிர்வாளைக் கொண்டு வரவும் மாட்டேன். வீரனான நீ வாயால் பேசாமல் வாளை உருவி வாளால் பேசப்பார்க்கிறாயே!" என்று சொன்னார். அவர் மேல் கோபம் வந்தாலும் கள்வர் தலைவனுக்கு ஒரு மரியாதையும் இருந்தது. அது அவர் கண்களில் தெரிந்த ஒளியாலா அல்லது முகத்தின் தேஜஸாலா என்று விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அவரை விடக் கூடாது எனத் தீர்மானித்து, "யார் நீங்கள்? எந்த அரசனுக்கு இந்தக் கப்பம் கொண்டு செல்கிறீர்கள்?" என்று வினவினான்.  பிள்ளை உலகாரியர் அவனுக்கு பூலோக வைகுண்டமாம் ஶ்ரீரங்கத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். அங்கே உறையும் ரங்கநாதனைக் குறித்து வர்ணித்தார். அத்தகைய ரங்கராஜனின் பக்தர்கள் தாங்கள் எனவும் இந்தச் சொத்தெல்லாம் அரங்கனின் சொத்துக்கள் என்றும் எடுத்துச் சொன்னார்.

நல்லவேளையாகக் கள்வர் தலைவன் அரங்கனைக் குறித்துக் கேள்விப் பட்டிருந்தான். ஆனால் அவருடைய சொத்துக்கள் ஏன் காட்டுக்கு வரவேண்டும் என அவனுக்குப் புரியவில்லை. அதோடு இவர்கள் அவனை ஏமாற்றுவதாகவும் நினைத்தான். அரங்கன் சொத்துக்களை இவர்கள் திருடிக் கொண்டு ஓடுவதால் தான் நேர்வழியில் செல்லாமல் குறுக்கு வழியில் இந்தக்காட்டுக்குள் வந்திருக்கின்றனர் என்றே நினைத்தான். அப்படியே அவர்களிடம் கேட்கவும் செய்தான். அதற்குப் பிள்ளை உலகாரியர் ஶ்ரீரங்கத்துக்குள் அந்நியர்கள் புகுந்ததை அவன் அறியவில்லை என்று புரிந்து கொண்டார்.

அந்நியப் படையெடுப்பையும் அரங்க நகரையே அவர்கள் பாழாக்கியதையும் எடுத்துச் சொன்னார். அரங்கனின் சொத்துக்களுக்காக அவர்கள் சுற்றி அலைவதையும் அரங்கனையே ஒரு முறை எடுத்துச் சென்றதையும் மறுமுறையும் எடுத்துச் செல்லாமல் இருக்கும்பொருட்டே அரங்கனையே அவர்கள் எடுத்துக் கொண்டு அவன் சொத்துக்களோடு தென்னாட்டை நோக்கிப் போவதையும் கூறினார். அரங்கன் இப்போது இந்தக் காட்டுக்குள் தான் இருக்கிறான் என்றும் கூறினார். அரங்கன் காட்டுக்குள்ளே இருப்பது தெரிந்ததும் கள்வர் தலைவன் ஆச்சரியம் அடைந்தான். பதட்டத்துடன், "எங்கே அரங்கன்? எங்கே அரங்கன்?" என்று கேட்டான். பரிசனங்களுக்குப் பிள்ளை உலகாரியர் சமிக்ஞை செய்ய அவர்களும் திருச்சின்னங்களை ஊதிக்கொண்டும், பிரபந்தங்களைப் பாடிக் கொண்டும் திருப்பல்லக்கில் அரங்கனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்தனர்.

அரங்கனை நேரில் கண்ட கள்வர் தலைவன் திகைத்து நின்றான். அரங்கன் இருக்கும் இடம் தேடிக் கொண்டு அனைவரும் செல்வார்கள். ஆனால் அவன் இருக்கும் இடம் தேடிக் கொண்டு அந்த அரங்கனே வந்திருக்கிறானே!  இது நம் பூர்வ புண்ணியம் தான் என மகிழ்ச்சியுற்றான். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் அரங்கனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டினார்.  அதி மோகனமாகப் புன்முறுவலுடன் காணப்பட்ட அழகிய மணவாளரைக் கண்டு வியந்தான் கள்வர் தலைவன்.  அவன் கண்களில் கண்ணீர்  சுரக்கத் தன் வாளைக் கீழே போட்டுவிட்டு சாஷ்டாங்கமாகக்  கீழே விழுந்து நமஸ்கரித்தான். ரங்கா, ரங்கா என்று கூவினான். பாபம் செய்ய இருந்தேனே! எனப் புலம்பினான். தங்கள் எல்லை வரை அரங்கனுக்கு எவ்விதத் தீங்கும் நேராமல் காப்பதாக வாக்களித்தான்.

Friday, May 15, 2015

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனின் தெப்போத்சவம்! சில தகவல்கள்!

அரங்கனின் தெப்போற்சவம் குறித்துக் கிடைத்த சில தகவல்களை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.  பாண்டியர்களின் காலத்தில் இது ஆரம்பித்திருக்கிறது. திருப்பள்ளியோடத் திருநாள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வந்தது. "பொன் வேய்ந்த பெருமாள்" என்னும் பட்டப்பெயர் கொண்ட சுந்தரபாண்டியன் காலத்தில் சித்திரை மாதம் தான் நடைபெற்று வந்திருக்கிறது. அப்போது காவிரியில் இப்போது போல் இல்லாமல் நீர் நிறைய ஓடிக் கொண்டிருந்த காலம். ஆகவே திருக்காவிரியில் பெரியதாக ஊருணி ஒன்று எடுப்பித்து அதிலே காவிரி நீரைப் பாய்ச்சி முத்துக்கள், பவளங்கள் பதித்த திருக்காவணம் (இங்கே காவணம் என்னும் சொல் பந்தலைக் குறிக்கும். முன்னாட்களில் பந்தல் என்னும் சொல் யாரேனும் இறந்தால் அந்த வீடுகளில் போடுவதை மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கிறது.  திருமணம், விழாக்கள் போன்ற சுபகாரியங்களுக்குப் போடுவதைக் காவணம் என்றோ கொட்டகை என்றோ அழைத்து வந்திருக்கிறார்கள். இங்கே இறைவனுக்காகப் போடப் பட்டதால் திருக்காவணம் என்றாகி விட்டது.) கட்டி இருக்கின்றனர். பின்னர் திருப்பள்ளி ஓடம் பொன்னாலே பண்ணுவித்து அதிலே உபய நாச்சிமார்களுடன் அரங்கன் (அப்போதைய பெயர் அழகிய மணவாளர்) எழுந்தருளி தெப்போத்சவம் கண்டிருக்கிறான்.

பின்னர் மெல்ல மெல்ல ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று நடைபெற்று வந்திருக்கிறது. அப்படி ஒரு சமயம் திருப்பள்ளி ஓடத்திலே தெப்பத்திருநாள் கண்டருளும் சமயம் ஒரு சில மாந்திரீகர்களுடைய துர்மந்திரப் பிரயோகங்களால் தெப்பம் காவிரியின் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்த கூரநாராயண ஜீயர் சுவாமிகள் தம்முடைய வலக்கரத்தில் அணிந்திருந்த திருப்பவித்திரத்தை வலமாகத் திருப்பத் திருப்பள்ளி ஓடம் வெள்ளத்தை எதிர்த்து நிலை கொண்டது. சுதர்சன சதகம் இயற்றி ஶ்ரீசுதர்சனரையும் வேண்டினார். (இங்கே திருக்காவிரி என்று சொல்வது வட திருக்காவிரி அதாவது கொள்ளிடம் ஆகும்). அதன் பின்னர் அழகிய மணவாளப் பெருமாள் பிரச்னைகள் ஏதுமின்றி ஆஸ்தானம் கண்டருளினார்கள். இதன் பின்னர் அழகிய மணவாளரை அவ்வளவு தொலைவு அழைத்துச் சென்று தெப்போத்சவம் காண்பதில் உள்ள சிரமங்களை நினைத்துக் கூர நாராயண ஜீயர் அவர்கள் கோயிலுக்கு மேற்கே பெரியதாக ஓர் குளத்தை வெட்டச் செய்தார். அதிலே திருப்பள்ளி ஓடத்திருநாளை நடத்த ஆரம்பித்தனர். அதிலிருந்து தெப்பத்திருநாள் நடைபெறும்போதெல்லாம் விட்டவன் விழுக்காடு என்னும் பெயரில் பிரசாதம் ஶ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கூரநாராயண ஜீயருக்குப் பின்னர் கி.பி.1489 ஆம் ஆண்டில் கந்தாடை ராமாநுஜ முனி காலத்தில் அடையவளைந்தான் தெருவுக்கு மேற்கே அமைந்துள்ள குளத்தைச் சீரமைத்து மைய மண்டபமும் கட்டுவிக்கப் பட்டது. இந்தக் கந்தாடை ராமாநுஜ முனி என்பவர் விஜயநகர சாளுவர்கள் வீர நரசிம்மன் என்பவனுடைய தமையன் ஆவார். இவர் திருக்கோயிலின் கந்தாடை அண்ணனைத் தம் குருவாக ஏற்றதால் கந்தாடை ராமாநுஜ முனி என அழைக்கப்பட்டார். இவரும் இவருடைய சீடர்களும் திருவரங்கக் கோயில் வரலாற்றில் தனி இடம் பெற்றவர்கள். தற்காலத்தில் கந்தாடை மடத்தின் பட்டத்தை யாரும் அலங்கரிப்பதில்லை. முன்னர் கந்தாடை ராமாநுஜருக்கு மரியாதை செய்யும் பொருட்டு அவருக்கு அழகிய மணவாளர் சேவை சாதித்துக் கொண்டிருந்தார். தற்சமயம் இந்த மரியாதை நடைபெறுவதில்லை.

முதலில் சித்திரை மாதத்திலும் பின்னர் ஆடி மாதத்திலும் நடைபெற்று வந்த தெப்போற்சவம் விஜயநகரச் சக்கரவர்த்தியான கிருஷ்ணதேவராயர் காலத்தில் மாசி மாதம் நடைபெற்ற பிரம்மோத்ஸவத்தின் ஒரு வகை என்று சொல்கின்றனர். இத்திருநாள் இப்போது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.  பின்னர் கி.பி. 1535 ஆம் ஆண்டிலும், 1536 ஆம் ஆண்டிலும், 1539 ஆம் ஆண்டிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன. கல்வெட்டுக்களைப் பொறித்தது துளுவ வம்சத்து அரசன் ஆன அச்சுததேவ ராயர் காலத்தில் ஆகும். இதில் திருநாளின் இரண்டாம் நாளன்று விடாய் ஆற்றிக்கு அழகிய மணவாளப்  பெருமாள் அக்கச்சி அம்மன் தோப்புக்கு எழுந்தருளி இருந்திருக்கிறார். ஆறாம் திருநாளன்று தெப்போத்சவம் கண்டருளி இருக்கிறார். இந்தக் கல்வெட்டுக்கள் இப்போதும் ஶ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் மேற்குப் பக்கச் சுவரில் உள்ள நாயக்கர் சிலைகளுக்கு முன்பு உள்ளதாகத் தெரிய வருகிறது.

பிரம்மோத்சவம் போலவே இந்தத் தெப்போத்சவத் திருநாளும் நடைபெறுவதால் ஒன்பது நாட்களிலும் அழகிய மணவாளப் பெருமாள் திரு வீதி உலா வருகிறார். இப்போது எட்டாம் நாளன்று தெப்போத்சவமும் ஒன்பதாம் நாளன்று ஶ்ரீசடாரிக்குத் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்று அன்றிரவு பந்தக்காட்சியும் நடக்கும். தெப்போத்சவம் திதிகளின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இதற்குக் கொடியேற்றுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் நம்பெருமாளாகிய அழகிய மணவாளர் காலை வீதி உலாவில் பல்லக்கில் மட்டுமே எழுந்தருளுவார். வாகனங்கள் கிடையாது.  இதுவும் கிட்டத்தட்ட ஒரு வசந்தோத்சவம் போலவே கொண்டாடப் படுகிறது.  திருவிழாவின் நான்காம் நாள் மாலை வெள்ளி கருடனின் நம்பெருமாள் சேவை சாதிக்கிறார். மாசி மாத கருட சேவையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர்.

தகவல்கள் உதவி: ஶ்ரீரங்க பங்கஜம்

Monday, May 04, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

திருவரங்கத்திலிருந்து கிளம்பிய அரங்கன் ஊர்வலம் பின்னால் வருபவர்களுக்காகத் துளசிச் செடியின் இலைகளையும், சின்னச் சின்னக் கிளைகளையும் ஒடித்துப் போட்டுக் கொண்டே சென்றாலும் பலருக்கும் திசை மாறித்தான் போயிற்று. ஆகவே மேற்கே ஒரு குழுவும், கிழக்கே ஒரு குழுவுமாகச் சென்றனர். அரங்கனோடு சேர்ந்து போனவர்களோ திருச்சிராப்பள்ளி நகரைக் கடந்து தொண்டைமானின் பிரதேசத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த இடத்தைத் தொண்டைமான் காடு என அந்நாட்களில் அழைத்தனர்.  வேதாந்ததேசிகர் இன்னமும் வந்து சேர்ந்து கொள்ளாதது குறித்து அனைவரும் கவலையிலும் ஆழ்ந்திருந்தனர்.

ஆனால் அந்தப் பகுதியில் வெகுநேரம் தங்க முடியாது. ஏனெனில் கள்வர் பயம் அதிகம். ஆனாலும் பிரதான சாலைகளின் வழி சென்றால் தாங்கள் கண்டுபிடிக்கப்படுவோம் என்னும் அச்சம் காரணமாகச் சுற்று வழியாகவே சென்றனர். வசதி படைத்தவர்கள் பல்லக்குகள், குதிரைகள் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள அதிகமான பயணிகள் கால்நடையாகவே சென்றனர். அவர்களில் சிலர் குழுக்குழுவாகப் பிரிந்து சென்றவர்கள் ஆங்காங்கே இடையில் தென்பட்ட தலங்களில் தங்கினார்கள். ஆனால் அரங்கனும், அவனுடன் சென்றவர்களும் மட்டும் எங்கும் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தனர். இரு தினங்கள் சென்றும் ஶ்ரீரங்கத்திலிருந்து தகவல் ஏதும் இல்லை. ஆகவே சற்றுத் தங்கிச் செல்லலாம் என ஒரு இடத்தில் தங்கி விட்டார்கள்.

தங்கிய இடத்தில் இரவைக் கழித்த மறுநாள் ஶ்ரீரங்கத்திலிருந்து இரு ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டனர். ஶ்ரீரங்கத்தில் நடந்த கோர யுத்தம் பற்றியும் நகரமே பற்றி எரிந்ததையும், எல்லோரையும் கொன்று அழித்துவிட்டார்கள் என்பதையும் அவர்கள் விபரமாகச் சொல்லவே அனைவர் மனமும் துக்கத்தில் ஆழ்ந்து போயிற்று. திகைத்துப் போன உலகாரியரை அவர் சீடரான கூர குலோத்தமதாசர் தேற்றிச் சமாதானம் செய்து அனைவரும் விரைவில் அவ்விடத்திலிருந்து அகல வேண்டும் எனவும், இல்லை எனில் டில்லிப் படைகள் விரைவில் வந்து பிடித்துக் கொள்வதோடு அரங்கனையும் கைப்பற்றி விடுவார்கள் எனவும் சொல்ல உடனே அந்த இடத்திலிருந்து அந்த ஊர்வலம் அகன்றது.

மாலை மங்கும் நேரத்தில் தங்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கையில் ஈட்டிகளைத் தாங்கிய வண்ணம் வலுவான தேகத்துடனும் கொடிய மீசைகளுடனும் முப்பது கள்வர்கள் சூழ்ந்து கொண்டுவிட்டனர். தொண்டைமான் காட்டுப்பகுதியே கள்வர்களுக்குப் பிரசித்தம். வழிப்பறி செய்வதில் நிபுணர்கள் அவர்கள். ஊர்வலத்தில் வந்தவர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர்.  கள்வர்கள் அனைவரும் அவர்களை நோட்டம் விட்டுப் பெட்டகங்கள் வைத்திருப்பதையும் கண்டுகொண்டனர். அந்தப் பெட்டகங்களில் என்ன இருக்கிறது என்று விசாரணையும் செய்ய ஆரம்பித்தனர்.

அரங்கனின் பொருட்கள், அவன் நகை நட்டுக்கள் என்று சொல்ல, என்ன அரங்கனா? அவன் எந்த ஊர்க்காரன்? எந்த நாட்டுக்கு ராஜா? என்றெல்லாம் கேலி பேசினார்கள். அரங்கம் என்ன, இந்த உலகுக்கே அவன் தான் ராஜா! திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கிறான், ரங்கராஜன் எனப் பரிசனங்கள் சொல்ல, உலகையே காப்பவன் இங்கே இந்தக் காட்டுக்குள் நாங்கள் வசிக்கும் இடம் ஏன் வந்தான்? பெட்டகங்களைத் திறவுங்கள் எனக் கள்வர் தலைவன் கட்டளை இட்டான். பயந்து கொண்டே பெட்டகங்களைப் பரிசனங்கள் திறந்து காட்டினார்கள்.  பொன்னும், மணியும், முத்தும், பவளமும், வைர வைடூரியங்களும், தங்கத்தினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட ஆபரணங்களும் கண்களைக் கவர்ந்தன அவற்றை ஆசையுடன் தன் கைகளால் எடுத்துப் பார்த்தான் கள்வர் தலைவன்.

Saturday, May 02, 2015

ஶ்ரீரங்கரஙகநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கமாநகருள்!

அங்கிருந்த அனைவரும் அதிசயித்து நிற்க அந்தப் பெண் மேலே பேசினாள். ஶ்ரீரங்கத்து மனிதர்களிடம் கருணை வைக்குமாறு உல்லூக்கானை வேண்டினாள். ஆனால் உல்லூக்கானோ இங்கிருப்பவர்களைத் தான் கொல்லாமல் விட வேண்டுமானால் ஶ்ரீரங்கத்துச் செல்வம் அனைத்தும் தன் காலடியில் வந்து விழ வேண்டும் என்றான். அதற்கு அந்தப் பெண் அனைத்தையும் பாண்டிய நாட்டு வீரர்கள் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாய்க் கூறினாள். மிச்சம், மீதி இல்லை என்னும் அவளைப் பார்த்து இத்தனையையும் பார்த்துக் கொண்டு உன் தெய்வங்கள் எல்லாம் கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தனவா? அவை எல்லாம் கல்லாலும், உலோகங்களாலும் ஆன சிலைகள் தானே எனக் கேலி செய்தான் உல்லூக்கான். அதற்கு அந்தப் பெண் அந்த அணிமணிகளை விக்ரஹங்களுக்கு அளித்து அழகு பார்த்ததே இந்த மானுடர்கள் தானே! தெய்வங்கள் அவற்றைக் கேட்கவில்லையே! ஆகவே அவர்களுக்கு இந்த அணிமணிகள் இருந்தாலும் ஒன்று தான்; இல்லை என்றாலும் ஒன்று தான் என்று சொன்னாள்.

ஆனாலும் அரங்கத்து ஆட்கள் இன்னமும் ஏன் தன்னோடு போரிடத் தயாராக இருக்க வேண்டும்? மிச்சம், மீதி இருப்பதைப் பாதுகாக்கவே அவர்கள் போரிடுகின்றனர் என்றூ உல்லூக்கான் சந்தேகத்துடன் அவளிடம் சொன்னான். உள்ளே வேறேதும் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் தங்களைக் காத்துக் கொள்ளவே தயாராக இருக்கிறார்கள் எனவும், அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் அந்தப் பெண் வேண்ட, உல்லூக்கான் தான் உள்ளே போய்ப் பார்க்க விரும்புவதாகச் சொல்கிறான். அந்தப் பெண்ணும் அந்த ஆட்களை ஏதும் செய்யக் கூடாது; இனி யாரையும் கொல்லக் கூடாது என்றெல்லாம் உல்லூக்கானிடம் வாக்குக் கேட்கிறாள்.  அப்படியே அங்கே காவலுக்கு இருந்த வீரர்களை எல்லாம் அப்பால் போகச் சொல்லி உல்லூக்கான் கட்டளையிட இத்தனை நேரம் வீரர்களுக்காகப் பேசிய அந்தப் பெண் மயங்கி விழ அவளை மருத்துவரிடம் தூக்கிச் சென்றனர். பிழைப்பாளோ அல்லது அரங்கனுக்காக அவள் உயிரையும் கொடுக்க நேருமோ தெரியாது!

காவலிருந்து வீரர்கள் அமைதியாக வெளியேற டில்லி படைகள் உள்ளே சென்று ஒவ்வொரு தூணையும், சிற்பத்தையும் கல்சுவரையும், மண்டபத்தையும் உடைத்துத் தோண்டிப் பார்க்கின்றனர். எதுவும் கிடைக்கவில்லை. உல்லூக்கானுக்குத் தக்வல் போகிறது. அவனுக்கு அப்படியும் சந்தேகம். இங்கிருக்கும் பொருட்கள் அவ்வளவு எளிதில் வெளியே சென்றிருக்க முடியாது. எப்படிக் கண்டு பிடிக்கலாம் என யோசிக்கிறான்  பின்னர் அரங்க நகரிலே சிறு படை ஒன்றை நிறுத்திவிட்டு மற்ற வீரர்களை அழைத்துக் கொண்டு காவிரியைக் கடந்து மதுரை போகக் கிளம்புகிறான். அலங்கோலமாய்க் கிடந்தது அரங்கமாநகரம். ஆங்காங்கே உயிரற்ற உடல்கள் கிடக்க, வீடுகள் சிதிலமடைந்து விழுந்து கிடக்க, கோயிலின் மண்டபங்கள், தூண்கள், சிற்பங்கள்  உடைந்து கிடக்கப் பெரும் சூறாவளி அடித்து ஓய்ந்த்து போல் காணப்பட்டது அரங்கமாநகரம்.


Tuesday, April 28, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கமாநகருள்!

டில்லிப் பரிவாரங்களின் அட்டகாசம் அதிகமாகிக் கொண்டு வரவே வேதாந்த தேசிகர் அங்கே கிடந்த உடல்களுக்கு அடியில் தாமும் படுத்துக் கொண்டு அந்தக் குழந்தைகளையும் படுக்க வைத்து சப்தம் போடாமல் இருக்கச் சொன்னார். வீரர்களுடன் உல்லூக்கானும் ஆவேசத்துடன் வந்து கொண்டிருந்தான். கண்ணில் பட்ட ஶ்ரீரங்கத்து மனிதர்கள் எல்லாம் அவன் வீரர்களால் கொல்லப்பட்டும், அவன் திருப்தி அடைந்ததாய்த் தெரியவில்லை. கோயில் சிற்பங்களை  உடைக்கவும், பிராகாரங்களின் தளங்களைத் தோண்டிப் பார்க்கவும் கட்டளை இட்டான். பதுங்கி இருப்பவர்களை எல்லாம் வெட்டிச் சாய்க்க உத்தரவிட்டான். கோயிலின் அனைத்துப் பொன்னும், மணியும், ரத்தினங்களும் மற்றப் பொருட்களும் உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் பேராசை அவனுக்கு.

அப்போது கோயீலின் அடியார் கூட்டத்தில் ஒரு கூட்டமாக இருந்து வந்த நாட்டியம் ஆடும் காரிகைகள் இவர்களை எப்படியேனும் திசை திருப்ப வேண்டும் என்னும் எண்ணத்தோடு தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு ஆடல், பாடல்கள் எனப் பல்வேறு விதமான காரியங்களைச் செய்து கொண்டு அங்கே கூட்டமாக வந்தனர். அவர்கள் முகத்தின் காந்தியும், அவர்கள் வரும்போது முன்னே எழுந்த சந்தன மணமும், ஆடை , ஆபரணங்களின் நேர்த்தியும், பாடல்களுக்கும், தாளங்களுக்கும் ஏற்ப அனைவரும் தாமரை போன்ற தங்கள் பாதங்களைத் தரையில் வைத்துக் கைகளால் அபிநயம் பிடித்தவாறு வந்த நேர்த்தியும் அனைவர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது அவர்களின் வளையல்களிலிருந்து எழுந்த கிண்கிணிச் சப்தமும், காலின் சலங்கைகள் எழுப்பிய கலீர் கலீர் என்னும் ஒலியும் அந்தப் பிராந்தியத்தில் அதுவரை நிலவியிருந்த பேரமைதியைக் கலைத்தது.

அவர்களில் எவரும் இந்த முகமதியப் படைவீரர்களைக் கண்டு பயந்ததாகத் தெரியவில்லை மாறாக உல்லூக்கானுக்கு நேர் எதிரே அனைவரும் நின்று கொண்டு பாடல்கள் பாடுவோர் தேனினும் இனிய குரலில் பாடல்களைப் பாட ஆடத் தெரிந்தவர்கள் மிகவும் தைரியமாக ஆடவும் தொடங்கினார்கள். எப்படியேனும் இவர்களை மயக்கியே ஆகவேண்டும் என்னும் எண்ணத்தோடு ஒரு நாட்டிய நங்கை உல்லூக்கானைப் பார்த்துச் சிரித்த வண்ணம் தன் கைகளை நீட்டி அழைக்க உல்லூக்கானோ அந்தக் கரங்களை வெட்டும் நோக்கோடு வாளைப் பாய்ச்சினான். ஆனால் அந்தப் பெண் நல்லவேளையாக நகர்ந்து விட்டாள். இல்லை எனில் அவள் கரங்கள்  துண்டாடப்பட்டிருக்கும். என்றாலும் வாளின் நுனி பட்டு ஒரு கரத்தில் ஆழமான காயமும், வலியும் ஏற்பட்டு விட்டது அந்தப் பெண்ணுக்கு.  ரத்தம் கொட்டத் தொடங்கியது.

ஆனாலும் பாடுபவர்கள் பாடலை நிறுத்தவில்லை. ஆடிக் கொண்டிருந்த மற்றவர்களும் ஆட்டத்தை நிறுத்தவில்லை. வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களை துரித கதியில் வாசிக்கத் தொடங்க ஆடுபவர்களும் அந்த வேகத்துக்கு ஏற்ப ஆடத் தொடங்க. ரத்தம் கொட்டும் கையுடன்  அந்தப் பெண்ணும் ஆடத் தொடங்கினாள்.  அதைப் பார்த்த உல்லூக்கான் கோபத்துடன் ஆட்டத்தை நிறுத்தச் சொல்லிக் கட்டளை இட்டான். ஆட்டமும் நிற்க, காயம்பட்ட பெண்ணை மட்டும் உல்லூக்கான் தனியாக அழைத்தான். அந்தப் பெண் சிறிதும் கலங்காமல் உல்லூக்கானை நோக்கி வந்தாள். அருகில் வந்த அந்தப் பெண்ணை உல்லூக்கான் கடுமையாகக் கடிந்து கொள்ள, அதை ஹொய்சள வீரன் ஒருவன் அவளுக்கு மொழி பெயர்த்துச் சொன்னான். ஆனால் அந்தப் பெண் சிறிதும் கலங்காமல் உல்லூக்கானைப் புகழ்மாரி பொழிந்து பேசினாள்.


தகவல் உதவி: திருவரங்கன் உலா, ஶ்ரீவேணுகோபாலன், மற்றும் ஶ்ரீரங்க பங்கஜம்.

Sunday, April 26, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனின் பயணம்!

இங்கே வடக்கு வாயிலில் இறந்தவர்களில் அவர்களை வழி நடத்திய பஞ்சு கொண்டான் என்பவரைப் பாராட்டும் விதமாகப் பின்னாட்களில் கோயில் திறந்து வழிபாடுகள் நடைமுறைக்கு வந்ததும், பஞ்சுகொண்டான் என்பவரின் பெயரை அருளிப்பாடி மரியாதை செலுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. அது நாளடைவில் மறைந்ததாய்த் தெரிய வருகிறது. வடக்கு வாயில் விழுந்து சுல்தானின் வீரர்கள் கோயிலுக்குள்ளே எளிதாக நுழையவும் விரைவில் அரங்க நகர்க் கோட்டை விழுந்தது. பிராகாரங்கள் அல்லோலகல்லோலப் பட, பரிசனங்கள் அங்குமிங்கும் செய்வதறியாது ஓட, கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினார்கள் சுல்தானின் வீரர்கள். பிரகாரங்கள் அனைத்தும் உடல்களால் மூடப்பட்டுக் கிடந்ததைப் பார்க்கையில் அரங்கனைக் காக்கும் பணியில் எத்தனை எத்தனை இன்னுயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பது புரிந்திருக்கும்.  இந்தக் குழுவில் தான் ஶ்ரீமத் வேதாந்த தேசிகப் பெருமானும் இருந்தார். அவரும் சுல்தான்களின் வீரர்களிடமிருந்து தப்பிக்க அங்குமிங்கும் ஓடினார்.

வேதாந்த தேசிகர் க்கான பட முடிவு


படத்துக்கு நன்றி தினமலர் கூகிள் வாயிலாக

கொத்துக் கொத்தாக உடல்களையும், தலைகளையும் பார்த்த தேசிகர் செய்வதறியாது மயங்கினார். அப்போது அங்கே சுதர்சன ஆசிரியர் என்பார் மார்பில் காயத்துடன் விழுந்து கிடந்தார். இவர் நடாதூர் அம்மாள் என்பவரின் சீடர். இந்த நடாதூர் அம்மாள் அரங்கனுக்கு வேண்டியவற்றை எல்லாம் ஒரு தாயின் பரிவோடு செய்வாராம். அரங்கனுக்கு நிவேதனமாக வேண்டிய பாலில் கூட சூடு அதிகம் இல்லாமல் விரல் பொறுக்கும் சூடு இருக்கும்படி பார்த்துக் கொண்டு வாயால் ஊதி ஊதிக் கொடுப்பாராம்.  ஆகையால் அவருக்கு நடாதூர் அம்மாள் என்னும் பெயர் ஏற்பட்டது. அத்தகையவரின் சீடரான சுதர்சன ஆசிரியர் தான் அப்போது இறக்கும் தருவாயில் இருந்தார். தன்னிரு மகன்களையும் சுல்தானின் வீரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டி அங்கிருந்த ஒரு தூணுக்கு அப்பால் உள்ள படிக்கட்டில் கல்லோடு கல்லாகப் படுக்க வைத்திருந்தார்.

இப்போது வேதாந்த தேசிகரைக் கண்டதும் கண்களில் ஒளி பெற்றவராகத் தன் மகன்கள் இருவரையும் அழைத்தார். தம் மகன்கள் கைகளைப் பிடித்து தேசிகர் கைகளில் ஒப்படைத்தார். கூடவே தனக்கு அடியில் ஒளித்து வைத்துக் கொண்டிருந்த ஒரு ஓலைச்சுவடிக்கட்டை எடுத்துத் தம் இரு கரங்களாலும் அதை தேசிகரிடம் கொடுத்து, "ஐயா, உம்மைக் கண்டது அரங்கனையே கண்டது போல் இருக்கிறது. நான் பெற்ற செல்வங்கள் மூன்று. மூன்றையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். இதோ என் மகன்கள் இருவர் மற்றும் நடாதூர் அம்மாள் பக்கத்திலே இருந்து உபந்நியாசம் கேட்டுக் கேட்டு மனதில் தரித்துக் கொண்டு எழுத்தில் வடித்த சுருதப் பிரகாசிகை என்னும் நூல். இதனைப் பின் வரும் சந்ததிகள் படித்து உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் விருப்பம் எனக்கு இருக்கிறது. ஆகவே இதையும் தாங்கள் காப்பாற்றி வைத்துப் பின் வரும் சந்ததிகளுக்குக் கொடுக்க வேண்டும்." என்று சொல்லிச் சுவடிக்கட்டையும் தேசிகர் கரங்களில் ஒப்படைத்தார்.  தன் இரு குமாரர்களையும் தேசிகர் சொல்படி நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவ்வளவில் அவர் உயிர் பிரிந்தது. அப்போது அங்கே முகலாய வீரர்களின் ஆவேச முழக்கம் கேட்கவே தேசிகர் செய்வதறியாது திகைத்தார்.

பி.கு. இந்த சுருதப் பிரகாசிகை, ஶ்ரீமத் ராமானுஜர் அருளிச் செய்த ஶ்ரீ பாஷ்யத்தின் விளக்கவுரை எனவும் இன்றளவும் அது கிடைத்து வருவதாகவும் தெரிய வருகிறது.  மேற்படி சுருதப் பிரகாசிகை அந்நியர் கைகளில் சிக்காமல் காப்பாற்றப்பட்டதே இன்றளவும் அது கிடைப்பதன் காரணம் ஆகும். ஶ்ரீபாஷ்யம் என்பது பிரம்ம சூத்திரத்துக்கு ஶ்ரீமத் ராமானுஜர் எழுதிய  வடமொழி விளக்கவுரை. இந்த ஶ்ரீ பாஷ்யத்துக்கே விளக்கவுரையாக அமைந்தது தான் சுருதப் பிரகாசிகை(கேட்டபடியே எழுதப்பட்டது என்கிறார்கள் இதை.)

Friday, April 24, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனின் பயணம் தொடர்கிறது!

முன் கதை
ஆர்யபடாள் வாசல் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

 யானைகளின் ஆவேசத்திற்கு இலக்கானது வாயிற்கதவுகள். அரங்க வாசிகளில் டெல்லியிலிருந்து வந்திருக்கும் இத்தனை வீரர்களையும் எதிர்க்கும் அளவுக்குக் கட்டுக்கோப்பான படையோ, படை வீரர்களோ, படைத் தலைமையோ இல்லை. கதவு பிளந்து உள்நோக்கிச் சாய, அனைவரும் ரங்கா, ரங்கா, எனக் கூக்குரல் இட்டனர். ஆர்ய படாள் வடக்கு வாயில் கதவுகள் பிளக்கப்பட்டன. டெல்லி சுல்தான் படைகள் வெற்றி முழக்கம் இட்டனர். கோபுர நிலையில் இருந்தவர் வீரரே ஆனாலும் முறையான பயிற்சி இல்லாதவர். அவரும் அவருடன் மேலும் இரு வீரர்களும் தீரத்துடன் போராடினார்கள்.  வைக்கோலில் தீமுட்டிக் கதவின் மேல் போட்டு சுல்தான் படைகளுக்கும் தங்களுக்கும் இடையில் தீயினால் ஆன சுவர் ஒன்றை எழுப்பினார்கள்.

ஆர்யபடாள் வாயில் கதவு விழுந்தாலும் உள்ளே இருந்த கல்சுவர் நின்று கொண்டு இருந்தது. கோபுர வாயிலில் தீ வானுயரக் கொழுந்து விட்டு எரிய அந்தக் கல்சுவர் மேலே இருந்த பரண் ஒன்றின் மீது ஏறி மறாஇந்த வண்ணம் தாக்குதலைத் தொடர்ந்தனர் அரங்கத்து வீரர்கள். தீயின் வெம்மையினால் கோபுரமும், அதில் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களும் கருமை அடைந்தன. வெம்மை தாங்க முடியாமல் சுல்தானின் படைகளும் கொஞ்சம் தாமதமாய் அங்கே நெருங்க நேர்ந்தது. தாமதம் கண்டு கோபம் வந்த உல்லூக்கான் தானே நேரில் அங்கே வந்தான்.  பல்லக்கில் வந்த உல்லூக்கான் அகளங்க வீதியில் இறங்கிக் கொண்டான். அவனுடன் வந்திருந்த மெய்க்காவல் படையினர் சூழ்ந்து கொள்ள போர் புரிந்து கொண்டிருந்த உப தளபதிகள் என்னவோ, ஏதோ என பயந்து கொண்டு ஓடோடி வந்தனர்.

அவர்களைப் பார்த்து உல்லூக்கான் கோபத்துடன் பிதாரையும் வாரங்கல்லையும் ப்டித்து வந்த வீராதி வீரர்களான உங்களுக்கு இந்த அற்பக் கோயிலைப் பிடிக்க முடியவில்லையா, வெட்கம், வெட்கம்! என்று கத்தினான். உப தளபதிகள் அதற்குப் போர்முறையில் மட்டும் மாறுதல் இல்லாமல் கோட்டை அமைப்பு முறையும் மாறி இருப்பதாயும் குறுகலான இடத்தில் போர் புரிய வேண்டி இருப்பதால் சிரமம் ஏற்படுவதாகவும் சொல்ல உல்லூக்கான் கோபம் அதிகம் ஆகிறது. உல்லூக்கான் அடைந்த கோபத்தால் அந்தப் பிரதேசமே நடுங்கியது.  பின்னர் உல்லூக்கான் டெல்லியின் சுல்தானிடமிருந்து தனக்குக் கடிதம் வந்திருப்பதாயும் கிளம்பி ஒரு வருஷம் ஆகியும் இன்னமுமா மாபாரைப் பிடிக்க முடியவில்லை உன்னால் என்று கேட்பதாகவும், தனக்கு அவமானமாக இருப்பதாகவும் சொல்கிறான். நடுப்பகலுக்குள் இந்த ஊரைப் பிடித்தாக வேண்டும் என்று திட்டவட்டமாகக் கட்டளை இட்டான்.

கோயில் வாசலில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் கூடை கூடையாக மணலைப் போட்டு அணைத்துவிட்டு சுல்தானின் வீரர்கள் அனைவரும் உள்ளே புகுந்து விட்டனர். கல்சுவரை உக்கிரத்துடன் தாக்க அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக அசைந்து கொடுக்க ஆரம்பித்து விட்டது.  லேசாகத் தெரிய ஆரம்பித்த இடைவெளியில்  பத்து வீரர்கள் யார் சொல்வதையும் மதிக்காமல் உள்ளே புகுந்தனர். உள்ளே புகுந்தவர்கள் அங்கே பரணில் ஒளிந்து கொண்டிருந்த வீரர்களைத் தாக்கிக் கொன்றனர். கோபுரத்தின் இடிபாடுகளுக்கும் இடிந்து விழ ஆரம்பித்திருந்த சுவரின் இடிபாடுகளுக்கும் இடையில் அவ்வீரர்களின் உயிரற்ற உடல்கள்  கிடந்தன. அதில் ஒருவர் இறக்கும்போதும், ரங்கா, ரங்கா, ரங்கா, உன்னைக் காப்பாற்ற வேண்டும். அரங்கனைக் காப்பாற்றுங்கள்! எனப் புலம்பிக் கொண்டே உயிரை விட்டார்.

Monday, April 06, 2015

(அழகிய மணவாளப் பெருமாள், அழகிய மணவாளம் ஊருக்கு வந்த கதை! ) ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!












உல்லுக்கான் படையெடுப்பின் போது ஶ்ரீரங்கத்தில் இருந்த மூலவரை கல் சுவர் ஒன்றைக் கட்டி மறைத்துவிட்டு உற்சவர் அழகிய மணவாளப் பெருமாளை உபய நாச்சியார்கள் சகிதம் ஊரை விட்டு வெளியே தென்னாட்டை நோக்கி எடுத்துச் சென்றனர். பிள்ளை லோகாரியருடன் கிளம்பிய அழகிய மணவாளர் அங்கிருந்து மதுரை ஆனைமலை யோகநரசிம்மர் கோயிலுக்கு அருகிலுள்ள ஜ்யோதிஷ்குடி குகையில் சில காலம் தங்கினார். பின்னர் திருமாலிருஞ்சோலையில் கிணற்றில் ஒளித்து வைக்கப்பட்டார். அதன் பின்னர்  பழனி, பாலக்காடு, கோழிக்கோடு என்னும் திருக்கண்ணனூரில் நம்மாழ்வாரோடு சில காலம் தங்கி விட்டு அங்கிருந்தும் கிளம்பி  முந்திரிக்காடு, திருக்கணாம்பி, திருநாராயணபுரம், திருமலைக்காடுகள் வழியாக திருமலை  திருக்கோயிலைச் சென்றடைந்தார். திருமலையிலேயே பல்லாண்டுகள் தங்கி இருந்து தம் அடியார்களில் ஒருவரால் விடாமல் வழிபாடுகள் கண்டருளிய அழகிய மணவாளரை செஞ்சியை ஆண்ட கோபண்ண ஆரியன் என்பான் செஞ்சிக்கு எடுத்துச் சென்றான்.

அப்போது விஜயநகர மன்னனான  வீர கம்பண்ண உடையாருக்குச் செய்தி தெரிய வந்து மீண்டும் அரங்கனை  திருவரங்கத்திலேயே கொண்டு சேர்க்கும் எண்ணத்தோடு மறுபடியும் தன் பிரயாணத்தைத் தொடர்ந்தான் அழகிய மணவாளன். அந்த ஶ்ரீராமன் பூஜித்த விக்ரஹம் என்பதாலோ என்னவோ அவன் காடு, மேடெல்லாம் சுற்றி அலைந்தாற்போல் இக்ஷ்வாகு குலதனமான இந்த அரங்கனும் காடு, மேடெல்லாம் சுற்றித் திரிந்தான்.  அரங்கம் வரும் வழியில் அப்போது கண்ணனூர் என அழைக்கப்ப்ட்ட சமயபுரத்தில் கடும்போர் நிகழ்ந்தது.  அப்போது அழகிய மணவாளப் பெருமாள் கோபுரப்பட்டி என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமத்தில் அங்கிருந்த ஆதிநாயகப் பெருமாள் கோயிலில் எழுந்தருளி இருந்தார். அதன் பின்னர் முகமதியர்களை வென்ற பின்னர் பரிதாபி வருடம் வைகாசி மாதம் 17 ஆம் நாள் ( கி.பி.1371 ஆம் வருடம்) அழகிய மணவாளம் கிராமத்திலிருந்து கிளம்பி உபய நாச்சியார்களுடன், ஶ்ரீரங்கம் திருக்கோயிலில் மூன்றாம் திருச்சுற்றில் பவித்ரோத்ஸவ மண்டபம் என்னும் சேரனை வென்றான் மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணினார்கள்.

அழகிய மணவாளர் ஶ்ரீரங்கத்தை விட்டுக் கிளம்பியதும் ஶ்ரீரங்கம் கோயிலில் வழிபாடுகள் நின்றுபோய்க் கருவறை திறக்கப்படாமல் சுமார் 60 ஆண்டுகள் இருந்ததாகத் தெரிகிறது.  ஆனால் கோயிலொழுகின்படி இது சுமார் 48 ஆண்டுகள் எனத் தெரிய வருகிறது.  இடைப்பட்ட காலத்தில் வழிபாட்டு முறைகள் மாற்றப்பட்டதோடு அல்லாமல், புதிதாக ஒரு அரங்கனையும் செய்வித்து அவரையும் எழுந்தருளப் பண்ணி இருந்தார்கள்.  ஏற்கெனவே இருந்த அழகிய மணவாளர் ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்ததும், ஒரு சில ஶ்ரீரங்கவாசிகளால் புதிய அரங்கனை விட்டு விட்டு இந்தப் பழைய அரங்கனை ஏற்கும் மனம் வரவில்லை.  அவர்கள் எங்களுக்கு இந்தப் புதிய ரங்கன் பழகி விட்டார்.  இவரே இருக்கட்டும் என்றனர்.  ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டுப் பல உயிர்த்தியாகங்கள் செய்து கொண்டு வரப்பட்ட அரங்கனைத் திருக்கோயிலில் சேர்க்கும் எண்ணமே முதியவர்கள் பலருக்கும் இருந்தது.

ஆகவே அவர்கள் எல்லோரும் சேர்ந்து இவர் தான் பழைய அரங்கர் என்பதை வயது முதிர்ந்தவர்களாலேயே, அதுவும் இவர் எடுத்துச் செல்லப்பட்ட சமயம் இவரை அருகில் இருந்து நெருங்கிப் பார்த்தவர்களாலேயே கண்டுபிடிக்க முடியும் என முடிவு கட்டி அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள், பழைய அரங்கனைப் பார்த்தவர்கள் முன் வந்து இரண்டு அரங்கனின் யார் கோயிலில் இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஶ்ரீராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதுக்கு ஒப்பாக இதை ஶ்ரீரங்க வாசிகள் பேசுகின்றனர்.

இந்தச் செய்தியை நகரெங்கும் முரசறைந்து தெரிவித்தும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரும் அகப்படவில்லை. கடைசியில் 90 வயது நிரம்பிய ஒரு வண்ணார் அகப்பட்டார். அவருக்கும் கண் பார்வை இல்லாமையால் அரங்கனைப் பார்க்க முடியவில்லை.  அனைவரும் திகைக்கையில் அந்த வண்ணாரே ஒரு முடிவைச் சொன்னார்.  அது தான் இரண்டு அரங்கர்களுக்கும் திருமஞ்சனம் செய்வித்து அந்த ஈர வஸ்திரத்தை அந்த வண்ணாரிடம் கொடுத்தால் அதைப் பிழிந்து கிடைக்கும் அபிஷேக நீரை உட்கொண்டால் பழைய அரங்கனின் பரிமள கஸ்தூரி வாசனையை வைத்துத் தான் கண்டு பிடிக்க முடியும் என்று சொல்கிறார். அப்படியே செய்யப்பட்டது. வண்ணாரும் அழகிய மணவாளத்திலிருந்து வந்த பழைய அழகிய மணவாளரையே நம்பெருமாள் என அடையாளம் காட்டுகிறார். அப்போது தொடங்கி இன்று வரை அழகிய மணவாளர் "நம்பெருமாள்" என்னும் பெயராலேயே அழைக்கப்படுகிறார்.

புதிதாகச் செய்த விக்ரஹத்தையும் ஒதுக்காமல் கருவறையிலேயே "யாக பேரர்" என்னும் பெயரில் பிரதிஷ்டை செய்தார்கள். இப்போதும் யாகங்களில் அவரையே எழுந்தருளச் செய்கின்றனர். அழகிய மணவாள கிராமத்து ஶ்ரீவைணவர்கள் பலரும் அரங்கனுக்காக உயிர்த்தியாகம் செய்தார்கள். ஆகவே கோபுரப்பட்டி என்னும் இந்தக் கிராமம் அழகிய மணவாளம் என்னும் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

தகவல் உதவி: இந்து அறநிலையத் துறை, ஶ்ரீரங்க பங்கஜம்
தொகுத்தது கீதா சாம்பசிவம்


ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

இம்முறை ஒரு மாறுதலுக்காக அரங்கன் ஊர் சுற்றிவிட்டுத் திரும்பி வந்த காலத்தில் தங்கிய ஊரைக் குறித்து நண்பர் திரு ஒரு அரிசோனன் என்பவர் எழுதியதும், அவர் எடுத்த படங்களும். இந்த ஊரைக் குறித்த மேல் அதிக விளக்கம் அடுத்த பதிவில் நான் எழுதி இருக்கிறேன்.  அதையும் சேர்த்து வெளியிடுகிறேன். படங்கள் இரண்டு பதிவுகளிலுமாக வருகின்றன. படங்கள் தெரியவில்லை எனில் சொல்லவும்.


















நான்  சில ஆண்டுகள் முன்பு திருவெள்ளறை சென்றிருந்தேன்.  அப்பொழுது சிறப்புக்கட்டணம் எதுவும் கேட்கவில்லை.  பட்டாச்சாரியார் தான் ஆண்டுமுழுவதும் மாதமாதம் அருச்சனை செய்கிறேன் என்று நன்கொடை கேட்டார்.  கொடுத்துவிட்டு வந்தேன்.  அதைச் சிறப்புக்கட்டணம் என்று சொல்லிவிட முடியாது.

திருச்சி துறையூர் அருகில் "அழகிய மணவாளம்" என்ற ஒரு சிற்றூர் உள்ளது.  அங்கு உயர்ந்து ஓங்கி எட்டடி உயர உருவமாக அழகிய மணவாளப் பெருமாள் (சுந்தரராஜன்)  திருமலைகள் நிலமகளுடன் நின்றகோலத்தில் தரிசனம் தருகிறார்.  கொள்ளை அழகு.  வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கட்டணம் எதுவே இல்லை.

கோவில் கருவறை பத்தடிக்குப் பத்தடி மட்டுமே உள்ளது.  அர்த்த மண்டபம் பத்தடிக்குப் பதினைந்தடி இருக்கலாம்.  கூட்டம் அதிகமானால் [?!] நிழல்தரும் கொட்டகை உண்டு.  என் மாமியாரின் பாட்டனார் என்பது தொண்ணூறு ஆண்டுகளுக்குமுன் எழுப்பிய கொட்டகை அது.  இன்னும் அவர் பெயர்கொண்ட கொடை அறிவிப்பு தொங்குகிறது.

கோவில் வாசலில் கைகள் உடைக்கப்பட்ட நரசிம்மர் சிலை ஒன்று இருக்கிறது.  அமைதியான் சூழ்நிலை.  அங்கிருந்து பார்த்தால் திருவரங்க ராஜகோபுரம், திருச்சி மலைக்கோட்டை தெரிகின்றன.  அருகில் ஒரு பழமையான பாழடைந்த, கருவரைமட்டு உள்ள செங்கல் கோவில் தென்படுகிறது.  அருகில் செல்ல இயலாதவாறு முட்புதர்கள் வளர்ந்து கிடக்கின்றன.

கோவில் எப்பொழுதுமே பூட்டித்தான் இருக்கும்.  கோவில் முன்பு இருக்கும் தெருவில் குடியிருக்கும் பட்டாச்சாரியாரின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினால், அவர் கோவிலைத் திறந்து தரிசனம் செய்விக்கிறார்.  வயதில் முதியவரான அவர் பாதுகாப்புக் கருதியே கோவிலைப் பூட்டி வைத்திருப்பதாகச் சொல்கிறார்.  அவர்க்கு என் மனைவியாரின் மூதாதையாரைத் தெரிந்திருக்கிறது.  என் மாமியாரின் பெயரையும் அறிந்துவைத்திருப்பது வியப்பையே அளித்தது.

மின்தமிழ் உடன்பிறப்புகள் விரும்பினால் நான் எடுத்த படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

நான்

சிரமத்தைப் பாராது சென்று அழகிய மணவாளரின் அருமையான கோலத்தை நின்று நிதானமாகக் தரிசிக்க வேண்டிய கோவில் அது.

ஒரு அரிசோனன்


படங்களும், எழுத்தும்: திரு அரிசோனன் அவர்கள்

படங்கள் அடுத்த பதிவிலும் தொடர்கின்றன.

Tuesday, February 10, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்

இவனின் காலத்தில் தான் ஶ்ரீரங்க விமானத்தின் உட்சுவர்களுக்குத் தங்கத் தகடுகள் வேயப்பட்டன. கோயிலின் மடைப்பள்ளியும் சீரமைக்கப்பட்டு பிரசாதங்கள் செய்யவும், எடுத்து வைக்கவும் தங்கப் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.  சித்திரைத் திருவிழாவும் ஜடாவர்மன் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாகவும், இவனால் ஒரு தங்கப் பல்லக்குப் பெருமாளுக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. சுந்தர பாண்டியனால் கோயில் விமானத்துக்கு மூன்று தங்கக் கலசங்கள் செய்து அளிக்கப்பட்டன.  இதைத் தவிரவும் அவனால் அளிக்கப்பட்ட பல பரிசுகளி, ரத்தின மாலை, கற்கள் பதிக்கப்பட்ட கிரீடங்கள், தங்கத்தினால் செய்யப்பட்ட ஆதிசேஷன், கருடன், நல் முத்துக்களால் ஆன மாலை, பல்வேறு விதமான ஆபரணங்கள், முத்து விதானம், தங்கத்தினால் செய்யப்பட்ட விதவிதமான பழங்கள், தங்க ரதம், சிம்மாதனம், ஆயுதங்கள், பாத்திரங்கள் தங்கத்தினால் ஆடைகள், தங்கக் கவசங்கள் போன்றவையும் வழங்கப்பட்டன.

இவை பாண்டியனுக்கு எல்லாத் தரப்பு மக்களிடமிருந்தும் பெரு மதிப்பைப் பெற்றுத் தந்தது. தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் இரு கவிதைகள் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனின் போர் வெற்றிகள் குறித்தும் அதன் மூலம் ஶ்ரீரங்கநாதருக்கு அவன் செய்த சேவைகள் குறித்தும் காணப்படுகின்றன. அவன் தான் அதிக அளவில் தங்கத்தைக் கோயிலுக்கு அளித்துக் கோயிலின் முக்கிய இடங்கள் தங்கத்தால் ஒளிரும்படி செய்தான் என்றும், அவன் காலத்திலேயே கோயில் தனிப் பெரும் புகழ் பெற்று விளங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இப்படித் திடீரென கணக்கில்லாச் சொத்துக்கள் வந்து சேர்ந்ததில் கோயிலின் நிர்வாகத்துக்கு மூச்சுத் திணறியது.

தங்கத்தினால் செய்த கோயில் விமானங்கள், கலசங்கள், சந்நிதிகள் ஆகியவற்றிற்குப் பாதுகாப்புப் போட வேண்டி இருந்தது.  கோயிலுக்கு என அளிக்கப்பட்ட ஆபரணங்களையும் கவனத்துடன் பாதுகாத்து ஒவ்வொரு திருவிழாக் காலங்களிலும் பெருமாளுக்கு அணிவித்துப் பாதுகாப்பாக எடுத்து வைக்கத் தனியாக ஒரு குழுவை நியமித்தனர்.  அதோடு இல்லாமல் மன்னன் நிர்வாகக் கமிட்டியை மாற்றியமைக்கும்படியும் கட்டளையிட்டிருந்தான்.  அது வரையிலும் கோயிலின் நிர்வாகம் குறிப்பிட்ட ஒரு குழுவினரிடமே இருந்து வந்தது.  இப்போது அது மற்றக் குழுவினரிடமும் பகிரும் வகையில் மாற்றியமைக்கச் சொல்லி மன்னனின் கட்டளை கிடைத்தது. இதன் மூலம் பொறுப்புகள் பகிரப் பட்டதோடு இல்லாமல் ஒருவர் மற்றவரைக் கண்காணிப்பதன் மூலம் பொருட்கள் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கிடைத்தது. நிர்வாகக் கமிட்டியினரின் நடவடிக்கையும் அனைவராலும் கண்காணிக்கப்பட்டது.

ஆரியர்கள் எனப்படும் குழுவினர் மட்டுமில்லாமல் உள்ளூர் மக்களையும் கோயிலின் பொருட்கள் பாதுகாக்கப் படுவதில் ஈடுபடுத்த வேண்டும் என்பது மன்னன்கட்டளை.  மன்னனின் கட்டளையை அந்த சர்வேசனின் கட்டளையாகவே ஏற்கப்பட்டது.  எல்லாத் தரப்பு குழுவினரிடமிருந்தும் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலரைப் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்தனர். கோயிலின் நிர்வாகக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. கோவனாவர், ஶ்ரீரங்கம் அரையர், தலையிடுவார், ஆராட்டமுகி அணுக்கர், போன்றவர்களிலிருந்து இருவரும், துமரையர்கள், வாசல் ஆர்யர் ஆகியோரிலிருந்து ஒருவருமாக மொத்தம் பத்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதை அரங்கனே அப்போது இருந்த அவனுடைய அழகிய மணவாளப் பெருமாள் என்னும் பெயரில் கட்டளை பிறப்பித்ததாகவும், அந்தக் கட்டளை பிறப்பிக்கும்போது அழகிய மணவாளப் பெருமாள் (இவரே இப்போது நம்பெருமாள் என அழைக்கப்படுபவர்) பூபாலராயன் சிம்மாதனத்தில் தன் புனிதமான பள்ளியறையில் தேவியருடன்  வீற்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. கடவுளையே அரசனாக நினைத்து ஆணைகள் அவன் பெயராலேயே பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன எனத் தெரிய வருகிறது. இதை ஜீயர்களும், ஶ்ரீகார்யக் காரர்களும் கூட ஆமோதித்திருக்கின்றனர்.



தகவல் உதவி: திரு கலைக்கோவன் "தி ஹிந்து" ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை, Srirangam's Golden Era.


Saturday, January 31, 2015

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஶ்ரீரங்கத்திற்கு ஒரு பொற்காலம் எனில் அது பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யம் ஏற்பட்ட போது என்று சொல்லலாம். பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் ஶ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டதோடு கோயிலும் பலமுறை சீரமைக்கப்பட்டது. இங்கே காணப்படும் சுமார் 70 கல்வெட்டுக்களில் பல கி.பி. 1225க்கும் கி.பி. 1344க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற கோயில் புனரமைப்பு வேலைகள் குறித்தும், பாண்டிய மன்னர்களால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட எண்ணற்ற விலை மதிக்க இயலாப் பரிசுகள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கின்றன. சோழநாட்டு அரசனாக இருந்த மூன்றாம் ராஜராஜனைத் தோற்கடித்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் தான் பாண்டியர்கள் சாம்ராஜ்யம் புத்துணர்வு பெற்று எழுந்தது. அப்போது தான் ஶ்ரீரங்கம் கோயிலிலும் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டன.

பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையில் அடிக்கடி நடந்த மோதல்களினால் கோயில் வளாகத்துக்குள்  நடைபெற்ற மோசமான நடத்தைகளை விசாரிக்க வேண்டி ஒரு பெரிய கூட்டம் அப்போது தான் கோயிலின் வரலாற்றிலேயே முதல் முதலில் நடைபெற்றது. இவர்களில் ஜீயர்கள், ஶ்ரீகார்யக்காரர்கள், பாகவதர்கள், பல்வேறு விதமான தொண்டுகளைச் செய்து வரும் நம்பிமார்கள், வாயில் காப்போர்கள், பட்டாசாரியார்கள், ஶ்ரீரங்கம் கோயிலின் அலுவலகத்தைச் சேர்ந்த பல்வேறு ஊழியர்கள், பதினெட்டு மண்டலங்களைச் சேர்ந்த ஶ்ரீவைணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ராஜமஹேந்திரன் தெருவின் மேற்குப் பகுதியில் கூடினார்கள். பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இறந்த காலத்தில் கோயிலுக்குப் பாதகம் செய்தவர்கள் நீக்கப்பட்டுப் புதியவர்கள் நியமிக்கப்பட்டனர்.  கோயிலின் நிர்வாகத்தைச் செம்மை செய்து முழு அர்ப்பணிப்பு உணர்வோடு தொண்டாற்றக் கூடியவர்கள் நிர்வாகத்தில் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் நிர்வாகச் சீரமைப்புச் செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் மாறவர்மனுக்குப் பின்னர் வந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியனும்  திருக்கோயிலில் பொன்னால் திருப்பணி செய்ததால் "பொன்வேய்ந்த பெருமாள்" என அழைக்கப்பட்டான். இவன் காலத்தில் பொன்னாபரணங்கள் மட்டுமின்றி, பொற்கலசங்கள், விமானங்கள், மற்றும் விலைமதிக்க முடியாப் பல ரத்தினங்களால் ஆன ஆபரணங்கள் கோயிலுக்கு வழங்கப்பட்டது. பாண்டியனே துலாபாரம் மேற்கொண்டு தன்னுடைய எடைக்கு எடை பொன்னைக் கொடுத்ததாகவும் ஒரு கல்வெட்டு கூறுவதாகத் தெரிய வருகிறது.

பல்வேறு போர்களில் ஈடுபட்டு வென்று கிடைத்த பொருட்களை எல்லாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஶ்ரீரங்கம் கோயிலுக்குக் கொடுத்ததாகக் கேள்விப் படுகிறோம். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலே தான் நரசிம்மருக்கும், விஷ்வக்சேனருக்கும் தனித்தனி சந்நிதிகள் கட்டப்பட்டதாகவும் அறிகிறோம். சந்நிதிகள், விமானங்கள்  தங்கத் தகடுகள் வேயப்பட்டு கோபுரம் தங்கமுலாம் பூசப்பட்டன. மஹாவிஷ்ணுவின் அர்ச்சாவதாரம் ஒன்றும் தங்கத்தில் வைக்கப்பட்டது.


தகவல் உதவி: திரு கலைக்கோவன் "தி ஹிந்து" ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை, Srirangam's Golden Era.

Tuesday, January 13, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

சப்த லோகங்களையும் உள்ளடக்கியது என்னும் பொருளில் ஏழு பிரகாரங்கள் கொண்டுள்ள ஶ்ரீரங்கம் கோயிலில் மூன்று பிரகாரங்களின் இரு பக்கங்களிலும் குடியிருப்புகளும் நான்கு பிரகாரங்களில் பிரம்மாண்டமான மண்டபங்களும் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம் மிகப் பெரியது ஆகும்.  பல்வேறு விதமான சேனைகளுடன் ஓர் ஊரே தங்குமளவுக்குப் பெரிதான ஆயிரங்கால் மண்டபத்தில் தற்சமயம் பாதுகாப்புக்காரணங்களுக்காக யாரையும் தங்க அனுமதிப்பதில்லை. ஏழு பிரகாரங்களைத் தவிர ஊரை உள்ளடக்கிய அடையவளைஞ்சான் திருச்சுற்றில் தான் ராஜகோபுரம் அமைந்துள்ளது.

மார்கழி மாதம் நடைபெறும் வகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வைபவம் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்திலிருந்து நான்காம் பிரகாரம் செல்லும் வழியில் பெரிய சந்நிதிக்கு வடபுறம் உள்ளது.  இது கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபத்துக்கு அருகாமையில் உள்ளது. வருடாவருடம் வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை திறக்கப்படும் பரமபத வாசல் அடுத்த ஒன்பது நாட்களும் இராப்பத்து உற்சவம் முடியும் வரை திறந்திருக்கும்.  இந்தப் பரமபத வாசல் வழியாகவே தினம் தினம் நம்பெருமாள் இராப்பத்து உற்சவம் முடியும் வரை சென்று வருவார்.  அவருடன் அடியார் திருக்கூட்டமும் செல்லும்.  இந்த வாசல் வழி சென்றால் வைகுந்த பிராப்தி நிச்சயம் என்னும் ஐதீகம் உள்ளதால் இது திறந்திருக்கும் ஒன்பது நாட்களும் பெருமளவில் பக்தர் கூட்டம் கோயிலுக்கு வருவார்கள்.

இந்த நான்காம் பிரகாரத்தின் கிழக்குப் பக்கம் மணல்வெளியாகக் காணப்படும்.  இங்கே தான் வைகுண்ட ஏகாதசியின் இராப்பத்து உற்சவத்தின் போது வேடுபறி நடக்கும். வையாளி சேவை இங்கே நடைபெறும் என்பதால் மணல் வெளியாக அமைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு கூற்று இருந்தாலும் பாதங்களுக்கு நல்ல பயிற்சி என்பதாலும் இங்கே மணலாக அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுவார்கள்.  இந்த மணல் வருடா வருடம் மாற்றப்படும்.  இந்த நான்காம் பிரகாரத்தில் காணப்படும் சந்திர புஷ்கரணிக்கரையில் கோதண்டராமர் சந்நிதியைக் காணலாம்.  ஶ்ரீரங்கத்தில் பிரகாரங்களில் மேலப் பட்டாபிராமர் சந்நிதி, கீழப் பட்டாபி ராமர் சந்நிதி, கோதண்டராமர் சந்நிதி ஆகியவை மிகவும் பிரபலம்.

கோதண்டராமர் சந்நிதியிலிருந்து சற்று உள்ளே பரமபதநாதர் சந்நிதியில் ஶ்ரீபரமபதநாதர் ஶ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேதராக அருள் பாலிக்கிறார்.  நித்யசூரிகள் புடைசூழ ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஒருசேரக் காட்சி அளிக்கக் காட்சி தரும் பரமபத நாதர் சந்நிதியில்  தான் கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதியும் இருக்கிறது. இந்தப் பரமபத நாதர் ஶ்ரீரங்கம் பெரிய பெருமாள் இங்கே குடிவரும் முன்னரே இருந்தவர் என்றும், சந்திர புஷ்கரணியும் அப்போது இருந்ததாகவும், இவற்றைப் பார்த்துவிட்டே விபீஷனண் ஶ்ரீரங்க விமானத்தோடு இங்கே இறங்கியதாகவும் சொல்கின்றனர்.  இப்போது நடைபெறும் திருவத்யயன உற்சவம் எனப்படும் பகல் பத்து, இராப்பத்து உற்சவம் ஆதிகாலங்களில் திருமங்கையாழ்வார் இருந்தபோது  இந்த சந்நிதியில் தான் நடத்தப் பட்டிருக்கிறது.  பின்னர் நாதமுனிகள் காலத்தில் 20 நாள் விழாவாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.





கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதியில் மார்கழி அலங்காரம்;

படம் கூகிளார் வாயிலாக தினமலருக்கு நன்றி.

Sunday, January 11, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஶ்ரீரங்கத்திலிருந்து உற்சவர் அழகிய மணவாளர் (இவர் தான் பின்னால் நம்பெருமாள் எனப் பெயர் மாற்றம் பெற்றவர்) ஊர் ஊராக அலைய ஆரம்பித்ததும், சில வருடங்கள் அவர் இருக்குமிடம் தெரியாமலேயே இருந்து வந்தது.  அப்போது உள்ளூர்க்காரர்கள் புதியதொரு விக்ரஹத்தைச் செய்து உற்சவர் இடத்தில் அமர்த்தினார்கள்.  பின்னால் திருமலையில் நம்பெருமாள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு அவரும் ஶ்ரீரங்கம் திரும்பி வந்ததும், அனைவருக்கும் இத்தனை நாட்களாக அவர் இடத்தில் இருந்தவரை என்ன செய்வது எனத் தோன்றியது!


இவரும் திருவரங்கத்தைச் சேர்ந்தவர் தானே என்னும் எண்ணம் தோன்றிய கோவில் ஊழியர்கள் அவரை நம்பெருமாள் அருகிலேயே வைத்தனர்.  திருவரங்க மாளிகையார் என்னும் புதுப் பெயரைச் சூட்டினார்கள்.  யாகசாலை நாட்களில் இவரே அங்கு எழுந்தருளுவார் எனவும் அப்போது ,"யாகபேரர்" என அழைக்கப்படுவார் என்றும் தெரிய வருகிறது.  ஆனால் இப்போது அவர் நம்பெருமாளுடன் கருவறையில் காணப்படவில்லை.  எங்கே இருக்கிறார் என விசாரிக்க வேண்டும்.  இங்கிருக்கும் சிலரை விசாரித்ததில் அவர்களில் பலருக்கு இந்த விஷயமே தெரியவில்லை.  தெரிந்தவர்களைக் கேட்டுச் சொல்கிறேன்.

இந்தக் கோயிலின் மொத்த சந்நிதிகள் 54 ஆகும்.  ஒவ்வொரு சந்நிதிக்கும் தனித்தனியான நிவேதனங்களும் உண்டு.  இவை அனைத்தும் இங்குள்ள திருக்கொட்டாரம் எனப்படும் இடத்தில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது.  ஒவ்வொரு சந்நிதியையும் சேர்ந்த அர்ச்சகர் அல்லது மடைப்பள்ளி ஊழியர் அங்கு வந்து அன்றைய நிவேதனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். உபயதாரர்கள் அளிக்கும் காணிக்கைப் பொருட்களில் இருந்து அனைத்தும் இங்கேயே சேமிக்கப்படுகின்றன.

இந்த நிவேதனங்கள் பெரும்பாலும் பாலிலும், நெய்யிலுமே செய்யப்படுகின்றன.  விளக்குகள் கூடச் சுத்தமானப் பசு நெய்யிலேயே எரிக்கப்படுகின்றன. ஆதிசேஷனுக்கு மிகவும் பிடித்தது பால் தான் என்பதால் தினமும் இரவு நேரம் அரவணை வழிபாட்டின் போது ஆதிசேஷனுக்குப் பால் அமுது செய்விக்கப்படும்.  பெருமாளுக்கு அரவணை நிவேதனம் செய்யப்படும். இவற்றைப் பிரசாதமாக வழங்குவார்கள்.  இதைத் தவிர மாலையிலும் க்ஷீரான்ன வழிபாட்டின் போது பாலமுது தான் ஶ்ரீரங்கநாதருக்கு நிவேதனம் செய்யப்படும்.



படத்துக்கு நன்றி: கூகிளார் வாயிலாக தினகரன் தினசரியில் வந்தது. 


"ரங்கனே தெய்வம், பொங்கலே பிரசாதம், கம்பமே காவிரி" என்பது இங்குள்ள பிரபலமான சொல்வழக்கு.  ஶ்ரீரங்கம் கோயிலில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் எனப்படும் அரவணை, புளியோதரை, அப்பம், அதிரசம், தேன்குழல், திருமால்வடை, தோசை போன்றவற்றோடு தினம் காலை வழிபாட்டில் கோதுமை ரொட்டியும், வெண்ணெயும் நிவேதனம் செய்யப்படுகிறது.  தாயாருக்கு மாலை வேளைகளில் புட்டு அமுது செய்யப்படும்.  வைகுண்ட ஏகாதசியன்று சிறப்பு நிவேதனமாக சம்பார தோசை, செல்வரப்பம்,ஆகியவையும் கடைசி நாளான நம்மாழ்வார் மோக்ஷத்தன்று "கேலிச் சீடை"யும் நிவேதனம் செய்யப்படும்.