எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, June 27, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, கிராத மூர்த்தி!


அடுத்து நாம் காணப் போவது கிராத மூர்த்தியை. கிராதன் என்ற சொல்லிற்கு வேடன் எனப் பொருள். ஈசன் வேடனாகக் காட்சி அளித்த கோலத்தையே கிராத மூர்த்தி அல்லது திருவேடீசர் என்கின்றனர். இது மஹாபாரதக் கதையுடன் தொடர்பு கொண்டது. பாண்டவர்களின் வனவாசம் முடிந்து, அக்ஞாத வாசமும் முடிந்தாலும் கெளரவர்களுக்குப் பாண்டவர்களின் உரிமையைத் திரும்பக் கொடுக்க மனம் வரவில்லை. கண்டிப்பாய் மறுத்தனர். துரியோதனனின் இந்தப் பிடிவாதத்தால் தவிர்க்க இயலாது போர் உருவாகும் என்பதைப் பாண்டவர்களுக்குக் கிருஷ்ண பரமாத்மா எடுத்துச் சொன்னார். ஆகவே போருக்குத் தயாராகும்படி அறிவுறுத்தினார். முக்கியமாய் வில்லில் சிறந்த அர்ஜுனனை சர்வ வல்லமை பெற்ற சர்வேசுவரனிடமிருந்து இன்னும் அதிக வல்லமை பெற்று வர அறிவுறுத்தினார். ஈசனின் பாசுபத அஸ்திரத்தைத் தவம் இருந்து பெற்று வர வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்.

பாசுபத அஸ்திரத்தை ஈசனிடமிருந்து பெற்று வரும் வழிகளையும் விளக்கிக் கூறினார். அதன்படி திருக்கைலையில் இந்திரநீல பர்வதத்தின் சாரலில் அர்ஜுனன் நான்கு பக்கமும் அக்னியை மூட்டி ஆகாயத்தின் சூரியனை ஐந்தாவது அக்னியாக மனதில் வரித்துக் கொண்டு, கடும் தவம் செய்தான். பஞ்ச அக்னியின் நடுவே அவன் செய்த தவத்தால் ஏற்பட்ட உக்கிரம் அதிகமாக, அதிகமாக அர்ஜுனனிடமிருந்து ஜ்வாலைகள் வெளிப்பட்டன. ரிஷி, முனிவர்களால் அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. ஈசனிடம் சென்று அர்ஜுனனின் தவத்தைப் பற்றிக் கூறினார்கள். ஈசனுக்குத் தெரியாதா? எனினும் அர்ஜுனனுக்கு அவ்வளவு எளிதில் பாசுபத அஸ்திரத்தைக் கொடுக்க முடியுமா? அவனைச் சோதனை செய்ய எண்ணினார் சர்வேசன். ஆகவே வில்லையும், அம்புகளையும் ஏந்தி ஒரு வேடனாக மாறினார். கூடவே வேட்டுவச்சியாக அம்பிகையும் உடன் வர இந்திர நீல பர்வதச் சாரலில் அர்ஜுனன் தவம் செய்யும் இடத்திற்கு அருகே வந்து சேர்ந்தனர். அப்போது அங்கே ஒரு காட்டுப் பன்றி ஒன்று அர்ஜுனன் மேல் பாயத் தயாராக ஓடோடி வந்தது.

பன்றி வேறு யாருமல்ல; மூகாசுரன் என்னும் அசுரன். அர்ஜுனனை எவ்வாறேனும் கொன்றுவிட்டால் பாண்டவர்களின் பலத்தை ஒடுக்கலாம் என எண்ணிப் பன்றி வடிவெடுத்துக் கொல்ல வந்தான். காட்டுப் பன்றியின் ஹூங்காரத்தால் தவம் கலைந்த அர்ஜுனன் கண் விழித்தான்; பன்றியின் மீது ஓர் அம்பைத் தொடுத்தான். அதே கணம் அங்கே வந்த ஈசனும் தன் வில்லில் இருந்து ஒரு பாணத்தைத் தொடுக்க, பன்றி இறந்து விழுந்தது. அதன் உடலில் இரு அம்புகள் இருப்பதைக் கண்ட அர்ஜுனனுக்கு வியப்பு. நிமிர்ந்து பார்த்தபோது வேட்டுவச்சி ஒருவளோடு ஒரு வேடன் நிற்பதைக் கண்டான்.

“நீ யாரப்பா வேடா? நான் அம்பெய்து வீழ்த்திய பன்றியை நீயும் ஏன் மீண்டும் இரண்டாம் முறையாக அம்பெய்து வீழ்த்தினாய்?” அர்ஜுனன் கேட்டான் வேடுவனாகிய ஈசனிடம்.

ஈசன், “ஆஹா, இது என்ன புதுக் கதை! நான் யாராய் இருந்தால் உனக்கென்னப்பா? நீ இங்கே இந்த நடுக்காட்டில் என்ன செய்கிறாய்? தவம் செய்கிறாயா?? தவம் செய்பவனுக்கு வேட்டை எதற்கு? இந்தப் பன்றி என் அம்பால் விழுந்தது. இது எனக்கே சொந்தம்; உனக்கல்ல. நீ பாட்டுக்குத் தவம் செய்ய மீண்டும் செல்வாய்!” என்றார் ஈசன்.


படம் சரியாக் கிடைக்கவில்லை. :(

Saturday, June 25, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அர்த்தநாரீசுவரர்


இறைவன் படைத்த அனைத்து உயிர்களிலும் இருமைத் தத்துவம் நீக்கமற நிறைந்துள்ளது. எல்லா உயிர்களிலும் ஆண், பெண் என இரு பாலினமும் உண்டு. இவை தனித்தனியே பிரிந்திருந்தால் உலகு வளர்ச்சியுறாது என்பதாலேயே இரண்டு ஒன்றுபட்டு வாழ்கின்றன. பஞ்ச பூதங்களிலும் இந்த இருமை உண்டு. இருள்-ஒளி, தோற்றம்-அழிவு, ஆண்-பெண் எனப் படைப்பின் மொத்த வடிவாய்த் திகழ்வதுவே அர்த்தநாரீசுவர வடிவம். இவ்வுலகின் அனைத்துப் பொருட்களையும் இயக்கும் சக்தியே அன்னை என்றால் அதன் அமைதியான வடிவே சிவம் ஆகும். சிவம் அமைதி, சும்மா இருத்தல் என்று கொண்டால், சக்தி ஆற்றலையும் இயக்கத்தையும் குறிக்கும். அந்த சக்தி தனியே எவ்வாறு இயங்கும்? சிவத்தோடு சேர்ந்தால் அல்லவோ இயக்கம் வரும்? ஆகவே அர்த்தநாரீசுவரராக இணைந்து சிவமும், சக்தியும் ஒன்றாகக் காண்பதையே சிவசக்தி ஐக்கியம் என்கிறோம்.

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்

சங்க இலக்கியமான புறநானூற்றில் மேற்கண்டவாறு ஈசனின் அர்த்தநாரீசுவர வடிவைச் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. ஐங்குறு நூற்றிலும் கூறப்பட்டிருப்பதாய்த் தெரிய வருகிறது. இளங்கோவடிகளும் அர்த்தநாரீசுவர வடிவைப் பற்றிக் கூறியுள்ளார். முற்காலச் சோழர்களால் கட்டப் பட்ட சிவன் கோயில்களின் கருவறையின் மேற்குக் கோஷ்டத்தில் அர்த்தநாரீசுவர வடிவே இருந்து வந்ததாயும் இதுவே பின்னர் மாறி விட்டதாயும் தெரிய வருகிறது. இந்த அர்த்தநாரீசுவர வடிவை உற்சவக் கோலத்தில் திருவண்ணாமலையில் கர்ப்பகிரஹத்தை ஒட்டிய பிரஹாரத்தில் தனி சந்நிதியில் தரிசிக்க முடியும். இவரே திருக்கார்த்திகைத் தீபத்திருநாளன்று பக்தர்களுக்கு ஆடிக்கொண்டே வந்து தரிசனம் கொடுப்பார்.

பல்வேறு சிற்பசாஸ்திர நூல்களிலே குறிப்பிடப் படும் இந்த அர்த்தநாரீசுவர வடிவின் வலப்பக்கம் ஈசனும், இடப்பக்கம் அன்னையும் காணப்படுவாள். அதற்கேற்ப ஆடை அலங்காரமும் காண முடியும். வலப்பக்கம் ஜடாமுடி, மகுடம் மற்றும் பிறைச்சந்திரனும், இடப்பக்கம் அம்பிகையின் தலையில் முடிந்த அழகிய கூந்தல் அல்லது மகுடம் காணப்படும். ஈசனாய்த் தோற்றமளிக்கும் வடிவின் வலக்காதில் மகர குண்டலம், அல்லது சர்ப்ப குண்டலம், வலது நெற்றியில் ஈசனின் நெற்றிக்கண்ணின் பாதியும் காண முடியும். இடப்பக்கம் அம்பிகையின் காதில் குண்டலமும், மை எழுதிய நீண்ட கண்களும், நெற்றியில் குங்குமப் பொட்டின் பாதி பாகமும் காண முடியும். வலப்பக்கம் புலித்தோல் ஆடையணிந்து வலக்கரங்களில் ஒன்று அபய ஹஸ்தம் காட்டிய வண்ணமும் மற்றொன்று மழுவை ஏந்தியும் காணப்படும். சில கோலங்களில் வரத ஹஸ்தமும் சூலமும் ஏந்தியும் காணலாம். இடக்கரத்தில் அம்பிகையானவள் நீலோத்பல மலரை ஏந்தியோ அல்லது கிளியை ஏந்தியோ காணப்படுவாள். இடப்பக்கம் மாலைகள், நவரத்ன அணிகலன்கள் எனப் பெண்களுக்கே உரித்தான ஆபரணங்களுடன் காட்சி அளிக்க, வலப்பக்கமோ சர்ப்பத்தை இடையில் அணிந்து காணப்படுவார்.

ஒன்றான இறைவனே இரு வேறுபட்ட தன்மைகளோடு காட்சி அளிக்கிறான். ஏனெனில் உலக உயிர்கள் அனைத்தும் தம்முள் கூடிக் களித்து மகிழ்ந்து நல்வாழ்வு வாழவேண்டுமானால் சிவமும், சக்தியும் இணைய வேண்டும். தன்னந்தனியே இருந்தால் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை; நிறைவும் கிடைக்காது. ஒன்றுபட்டாலே நிறைவும் ஏற்படும்; வாழ்வின் அர்த்தமும் இருக்கும். ஆனால் இருவரில் எவர் உயர்வு? எவர் தாழ்வு? அந்தப் பேதங்கள் இருக்கலாகாது என்பதன் பொருளே இந்த அர்த்தநாரீசுவரக் கோலம். இருவருமே ஒருவருக்கொருவர் சரிசமமாகவும், துணையாகவும், தங்களுக்குள் உள்ள பாலின பேதத்தையும் மற்ற பேதங்களையும் மறந்து இயங்கச் செய்ய வைப்பதே அர்த்தநாரீசுவரக் கோலத்தின் உண்மையான தத்துவம். கணவன், மனைவிக்குள் ஏற்படும் பேதங்களைப் போக்க அர்த்தநாரீசுவர வழிபாடு சிறந்தது என ஆன்றோர் கருத்து.

திருச்செங்கோட்டில் அர்த்தநாரீசுவரரை அர்ச்சிக்கையில் ஒரு நாமம் அம்பிகையின் நாமமாகவும், மற்றொரு நாமம் ஈசனின் திருநாமமாகவும் அர்ச்சிக்கப் படுவதாய்க் கேள்விப் படுகிறோம்.அங்கு மூலவரான அர்த்தநாரீசுவரர் சிற்பம் கற்சிலையோ, சுயம்புவாய்த் தோன்றியதோ அல்ல என்றும், சித்தர்களால் வெண்பாஷாணம் என்னும் மருந்துகளைக் கூட்டிச் செய்யப் பட்டது என்றும் தெரியவருகிறது. இந்தத் திருமேனியின் அபிஷேஹ நீர்ப் பிரசாதம் தோல் வியாதிகளுக்குச் சிறந்ததொன்று எனவும் கூறப் படுகிறது. ஈசனின் பாதத்தில் இருந்தும் சுனைநீர் தீர்த்தமாகக் கொடுக்கப் படுவதாயும் அறிகின்றோம்.

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்,
தான் பாதி உமை பாதி என்றானவன்.
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்.

இனி அடுத்துக் காணப் போவது கிராத மூர்த்தி.

Friday, June 24, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, அர்த்தநாரி


சிறந்த சிவபக்தர்களில் ஒருவரான பிருங்கி முனிவர் தினந்தோறும் ஈசனை வலம் வந்து வணங்கியபின்னரே உணவு உண்ணும் வழக்கமுள்ளவர். ஆனால் ஈசனை மட்டுமே வலம் வந்து வணங்குவாரே தவிர, அருகேயே இருக்கும் அன்னையை வணங்கவே மாட்டார். ஒருநாள் இரண்டு நாள் எனப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அன்னைக்கு ஒருநாளும் அவர் தன்னை வணங்கவே மாட்டார் என்பதைப் புரிந்து கொண்டதும், வருத்தமும் கோபமும் வந்ததாம். ஆஹா, வெறும் சிவம் மட்டுமே அவன் இயக்கத்திற்குப் போதுமா? சக்தி தேவையில்லையா? அன்னை பிருங்கி முனிவரின் உடலின் உள்ள சக்தியின் கூறான, ரத்தம், தசை போன்றவற்றை நீக்கி வெறும் எலும்புக்கூடாய் மாற்றினாள். ஆனால் பிருங்கி முனிவரோ அப்போதும் ஈசன் ஒருவனே தன் இறைவன். இதில் எந்த மாற்றமும் இல்லை; சிவன் ஒருவனே பரம்பொருள், என்றே வாழ்ந்து வந்தார். உடலின் இயக்கத்திற்குத் தேவையான சக்தியெல்லாம் போய்விட்டதும் அவரால் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. ஈசனை வலம் வராமல் எப்படி உணவு உண்ணுவது? தவித்துப் போனார். ஆனால் அந்த நிலையிலும் ஈசனை வணங்கினார் அவர். ஈசனோ அவருடைய பக்தியைக் கண்டு மனம் இரங்கி அவருக்கு ஊன்றுகோல் ஒன்றைக் கொடுத்து உதவினான்.

அப்படியும் பிருங்கி முனிவர் அன்னையை வணங்கவே இல்லை. அன்னை மனம் வருந்தித் தானும் ஈசனுடன் அவர் உடலிலேயே இடம்பெறவேண்டும் என்னும் ஆசையைத் தெரிவித்தாள். ஈசனும் அதற்கு அவளைத் தவமிருக்கச் சொன்னார். அவ்விதமே அன்னையான பார்வதி தேவி கடுமையாகத் தவம் இருந்தாள். அவர் உடலின் இடப்பாகத்தைப் பெற்றாள். அம்மையும், அப்பனும் சேர்ந்திருக்கும் அந்தக் கோலமே அர்த்தநாரீசுரக் கோலம் ஆகும். கொங்கு நாட்டின் புகழ்பெற்ற தலமான திருச்செங்கோடு அர்த்தநாரீசுரத் திருமேனியை மூலவராய்க் கொண்ட தலங்களுள்முதன்மையான தலம் ஆகும். கொடிமாடச் செங்கன்னூர் என்னும் பெயர் கொண்ட இந்தத் தலம் அழகிய மலைக்கோயிலாக அமைந்துள்ளது. ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் ஏற்பட்ட சண்டையில் மேருமலையானது தூக்கி எறியப் பட்டு இங்கே விழுந்த துண்டு சிவந்த நிறத்தில் காணப்பட்டதால் செங்கோடு எனப் பெயர் பெற்றதாய்க் கூறுவார்கள். இங்கே மலையே லிங்கம் என்பதால் மலைக்கு எதிரே நந்தி காணப்படும். இந்தத் தலத்தின் மலையில் ஏறப் படிகள் 1200 இருப்பதாய்த் தெரிய வருகிறது. இங்கே இன்னமும் சென்று தரிசனம் செய்ய இயலவில்லை. மலையின் உயரம் சுமார் இரண்டாயிரம் அடிகள் எனத் தெரிய வருகிறது. அன்னையின் பெயர் பாகம்பிரியாள் எனப்படும். ஈசனின் இடப்பாகத்தை எந்நாளும் பிரியாமல் இருப்பதை இது குறிக்கும். கணவனின் இதயத்தில் இருக்க வேண்டியவள் மனைவியே என்பதற்கேற்ப இதயம் இருக்கும் இடப்பகுதியில் அன்னை இடம் பெற்றாள். இதைத் தவிரவும் திருவண்ணாமலையிலும் அன்னை இடப்பாகம் பெற்றதையே திருக்கார்த்திகைப் பெருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது.
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே//

அபிராமி பட்டர் அம்பிகை இடம் கொண்டு சிறந்ததை மேற்கண்ட வண்ணம் பாடித் துதிக்கிறார்.

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே//

அன்னையவள் இடப்பாகம் கொண்டு சிறந்து இருப்பதோடல்லாமல் அண்டமெல்லாம் பழிக்கும்படி பரத்திற்கும் மேல் பரதெய்வமாகச் சிறந்து விளங்குவதையும் இந்தப் பாடல் குறிக்கும். அர்த்த நாரீசுவரரை மேலும் பார்ப்போம்.