எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, July 24, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! படை துரத்தியது!

மெல்ல மெல்ல முன்னேறிவிட்டோம் என நினைத்த குலசேகரனும்  மற்றப் பயணிகளும் ஆசுவாசப்பெருமூச்சு விடும் முன்னரே நான்காவது நாழிகையிலேயே மூன்றாவது தில்லி வீரர்கள் அடங்கிய பாதுகாப்புப் படை ஒன்று எதிரே ரோந்து சுற்றுக் கொண்டிருந்தது. பல்லக்கு ஊர்வலத்தைப் பார்வை இட்ட அவர்கள் கொஞ்சம் சந்தேகத்துடனேயே அவர்களை நிறுத்தினார்கள். தில்லி வீரர்கள் மொத்தம் ஐம்பது பேருக்குள் இருக்கலாம். கொஞ்சம் கலக்கத்துடனேயே பல்லக்குகள் நிறுத்தப்பட்டு இலச்சினைகளும், முத்திரைகளும் காட்டப்பட்டு தலைவன் அனுமதியும் கொடுத்துவிட்டான். அவசரம் அவசரமாகப் பல்லக்குத் தூக்கிகள் பல்லக்குகளைத் தூக்கிக் கொண்டு நடக்க யத்தனிக்கையில் ஒரு பல்லக்குத் தூக்கியின் கால் முன்னால் சென்ற பல்லக்குத் தூக்கியின் கால்களில் பட்டு இடறிவிடப் பல்லக்குத் தூக்கிகளால் சமாளிக்க முடியாமல் பல்லக்குகீழே விழுந்தது.

உள்ளிருந்த பெண் ஒருத்தியும் அதனோடு சேர்ந்து விழுந்தாள். வெளிறிப் போய் மிக ஒல்லியாகக் காட்சி அளித்த அவளைக் கண்ட தில்லி வீரர்கள் இவள் ஹொய்சளப் பரிசனங்களுடன் வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் இதில் ஏதோ சூது இருக்கிறது என்றும் கண்டு கொண்டனர். ஒருவருக்கொருவர் கண் ஜாடை காட்டிக் கொண்டனர். எல்லாவற்றையும் மோசமாக்குவது போல் அந்தப் பெண்ணுடன் உள்ளே இருந்த மூட்டை ஒன்றும் கீழே விழுந்து வைக்க அதிலிருந்த இருவாள்கள் கீழே விழுந்து, "ஜணஜண" என்ற ஒலியை எழுப்பின. அந்தக் காலை வேளையில் அந்தச் சப்தம் ஏதோ இடி இடித்தாற்போல் இருந்தது பல்லக்கு ஊர்வலத்தாருக்கு! என்ன செய்வது, என்ன சொல்வது எனப் புரியாமல் விழித்தார்கள். ஆனால் தலைவனுக்குச் சந்தேகம் மேலிட்டது.

ஆகவே ஒவ்வொரு பல்லக்கின் அருகிலும் போய்ப் பல்லக்குத் திரையைத் தன் வாளால் விலக்கிப் பார்த்தான். ஒவ்வொரு பல்லக்கிலும் இம்மாதிரி வெளிறிப் போய் ஒல்லியாகக் காட்சி அளிக்கும் பெண்களும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஓர் மூட்டையும் அதன் நிறையப் போர் ஆயுதங்களையும் கண்டனர். ஆனாலும் அந்தத் தலைவன், குலசேகரனிடம்,
"உங்கள் ஹொய்சள நாட்டில் பெண்களுக்கு முக்கியமாய்ச் சேடிகளுக்கு உணவு அளிக்கும் பழக்கமே இல்லையா?" என்று கேட்டான். குலசேகரன் பதில் சொல்லும் முன்னர் அவனுடன் வந்த துணைத் தலைவன் இதில் ஏதோ சூது இருப்பதாய்த் தான் நம்புவதாய்க் கூறினான். தலைவன் மேலும் யோசிக்கையில் அந்தப் பல்லக்குகளில் இருந்த மூட்டைகளை துணைத் தலைவன் மெல்லத் தட்டவே ஆயுதங்களின் பேரொலியோடு அது கீழே சரிந்து விழுந்தது.  தலைவன் உடனே குலசேகரனைப் பார்த்து இது என்னவெனக் கோபமாய் வினவ குலசேகரனும் வழியில் கள்ளர்களால் ஆபத்து நேரிடும் என்பதற்காகத் தற்காப்புக்கு வைத்திருப்பதாய்ச் சொன்னான்.

ஆனால் தலைவனோ தற்காப்பு ஆயுதம் எனில் கைகளில் ஏந்தி வரலாமே, ஏன் மூட்டையில் வைத்திருக்க வேண்டும் எனத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு மற்றப் பல்லக்குகளையும் சோதனை செய்ய வேண்டும் என அவற்றைக் கீழே இறக்கச் சொன்னான். மற்றச் சில பல்லக்குகளிலும் காணப்பட்ட ஆயுதப் பொதிகளைக் கண்ட தலைவன் அனைத்துப் பல்லக்குகளையும் நிறுத்தி அனைவரையும் கீழே இறங்கும்படி கட்டளை இட்டான். குலசேகரனும் அவ்வாறே செய்யும்படி வாயால் கட்டளை இட்டுக் கொண்டே கண்ணால் ஜாடை காட்ட, உடனடியா அந்தச் செய்தி பல்லக்கு ஊர்வலத்தோடு சென்ற அனைவருக்கும் போய்ச் சேர்ந்தது. குலசேகரன் தன் வாளை உருவிக் கொண்டு, "அரங்கன் புகழ் வாழ்க!" என்று கத்திக் கொண்டு தலைவன் மேல் பாய்ந்தான். அதைத் தொடர்ந்து அனைவரும் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தில்லி வீரர்கள் மேல் பாய்ந்தனர். அந்த இடமே போர்க்களம் ஆயிற்று!

ஆரம்பத்திலேயே குலசேகரன் தலைவனின் தலையைத் துண்டித்துவிட்டான்.மற்ற ஹொய்சள வீரர்களும் ஆத்திரத்துடன் தில்லி வீரர்களைத் தாக்கினார்கள். அரை நாழிகையில் ஒரே ஒருவனைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டார்கள்.ஓடினவனையும் கொல்லத் துரத்திச் சென்றாலும் அவன் எப்படியோ தப்பி விட்டான். அவன் மூலம் செய்தி சென்று ஒரு பெரும் கூட்டமே தங்களைத் தாக்க எந்நேரமும் வரலாம் எனக் குலசேகரன் எதிர்பார்த்தான்.  என்றாலும் செய்தி போய்ச் சேருவதற்குள்ளாகக் கணிசமான தூரம் சென்றுவிட வேண்டும் என நினைத்து அனைவரையும் அவசரப் படுத்திக் கிளம்ப வைத்தான்.  மிஞ்சி மிஞ்சி இருநாழிகை தான் ஆகி இருந்தது. ஓடிய ஓட்டத்தில் அனைவரும் களைத்துச் சோர்ந்து போய்விட்டார்கள். இனி முடியாது என எண்ணும் தருணம் ஓர் சின்னக் குன்று போன்ற மேடு ஒன்று வந்தது. அதில் ஏறிக் கீழே இறங்கும் சமயம் தற்செயலாகப் பின்னால் பார்த்தால் மாபெரும் படை ஒன்று புழுதி பறக்க அவர்களைத் துரத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தது. குலசேகரன் ஒரு கணம் திகைத்து நின்றான்.

Monday, July 23, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! மதுரையில் அரங்கன்!

பல்லக்குகளின் ஊர்வலம் அரங்கனோடு கிளம்பியது. அனைவரின் மனதிலும் திக் திக் எனக் கவலையும் உளைச்சலும் தான். நல்லபடியாக மதுரை எல்லையை முக்கியமாய்ப் பாண்டிய நாட்டைத் தாண்டி நாஞ்சில் நாட்டை அடைந்து விட்டால் போதும்! அதற்குள் எத்தனை விபத்துகள் நேரிடுமோ எனக் கலங்கினார்கள். இப்போது இவர்களின் அடுத்த வேலை மதுரை நகருக்குள் வீட்டுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் பாதாள அறைகளில் அடைபட்டுக் கிடக்கும் பெண்களை எப்படியேனும் வெளியேற்றுவது. அதற்கு மதுரைக்குள் புகுந்து செல்ல வேண்டும். அங்கிருக்கும் தளபதியை எதிர்கொள்ள வேண்டும். என்ன செய்வது என யோசித்துப் பேசிக் கொண்டே சென்றார்கள். பலபலவெனப் பொழுது புலரும் நேரம் வைகை ஆற்றங்கரையை அடைந்தனர். அனைவரும் வைகையில் குளித்து உடை மாற்றிக்கொள்ள ராணி வேஷத்தில் வந்திருந்த சஞ்சலவதி நினைவாக ஒரு ராணிக்குரிய அரச ஆபரணங்களைத் தரித்துக் கொண்டாள். இதற்குள்ளாகக் குலசேகரன் மற்றவர்களுடன் பேசி ஓர் முடிவுக்கு வந்திருந்தான். எப்படியானாலும்  ஹொய்சள ராணியாக வந்திருக்கும் சஞ்சலவதி நகருக்குள் போய் தளபதியின் மனைவிமார்களுக்குப் பரிசில்கள் வழங்குவதாக ஏற்பாடு ஒன்று இருந்தது. ஆனால் அவள் பல்லக்கில் தான் அரங்கனை ஒளித்து வைத்திருக்கிறார்கள். அப்படியே போவதா வேண்டாமா என யோசித்தனர். அந்தக் குறிப்பிட்ட பல்லக்கை மட்டும் மதுரைக்கு வெளியே நிறுத்தலாமா என யோசித்துப் பின்னர் அந்த முடிவைக் கைவிட்டார்கள். ஏனெனில் அது சந்தேகப்படும்படி இருக்குமோ என நினைத்தார்கள்.

ஆகவே எதையும் காட்டிக் கொள்ளாமல் மதுரை நகருக்குள்ளாக அரங்கன் இருக்கும் பல்லக்கையும் எடுத்துச் செல்வது என்று முடிவாயிற்று. அரங்கனுக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற கலக்கமும் இல்லாமல் இல்லை. அப்படி ஏதேனும் நேர்ந்து அரங்கனைத் தங்களால் மீட்க முடியாவிட்டால் உயிர்த் தியாககம் செய்ய வேண்டியது தான் என அழகிய நம்பி, குலசேகரன், குறளன் மூவரும் முடிவெடுத்தனர். வேறு வழியே இல்லை. நகருக்குள் போக வேண்டியது தான் ஒரே வழி! அப்போது தான் சந்தேகமும் வராது. மதுரைக்கோட்டையை வெயில் ஏறும் சமயம் அடைந்த பல்லக்கு ஊர்வலம் கோட்டை வாசலில் சிறிது நேரம் நிற்க வேண்டியதாய் ஆகிவிட்டது. பல்லக்குகள் அணி வகுத்து நிற்க எதிர்த்தரப்பு வீரர்களும் வந்திருப்பது ஹொய்சள ராணி என்பதால் மரியாதை செய்யும் பொருட்டு அணி வகுத்து நின்றார்கள். கோட்டையின் மூத்த காவல் அதிகாரி இரு வீரர்களுடன் ராணியின் பல்லக்கை நோக்கி வந்தார். மதுரையை நெருங்கும் முன்னரே அரங்கனைப் பல்லக்கின் அடியில் போட்டு மேலே பஞ்சணைகள், துணி மூட்டைகளைப் போட்டுச் சஞ்சலவதி மறைத்து வைத்திருந்தாள். அவற்றின் மேலேயே தலையணைகளை அடுக்கித் தான் அதன் மேல் சாய்ந்து கொண்டும் இருந்தாள். ஆகவே அதிகாரி வந்ததும், அவள் தன் பல்லக்கின் திரையை விலக்கி ஒரே கணம் தன் முகத்தைக் காட்டிவிட்டுப் பின்னர் திரையை விட்டுக் கொண்டு விட்டாள். அதிகாரியின் வந்தனங்களை ஏற்றுக் கொள்ளும் விதமாகத் தன்  முத்திரை மோதிரங்களைக் காட்டினாள். அவரும் எந்த சந்தேகமும் இல்லாமல் போக அனுமதித்துவிட்டுப் பின்னர் மற்றப் பல்லக்குகளையும் பார்த்து அதில் உள்ள மூட்டைகள் பற்றிக் கேட்டார். அவை எல்லாம் தில்லித் தளபதிகளுக்கு அளிக்கும் கப்பங்கள் மூலம் வரும் பரிசுப் பணம், பொருட்கள் எனச் சொன்னதும் சமாதானம் ஆனார்.

ஒருவிதமாக இந்தச் சோதனையில் இருந்து தப்பிய பல்லக்கு ஊர்வலம் நகருக்குள் மேலும் முன்னேறியது. அரண்மனை வாயிலை நெருங்க நெருங்க இடைவெளி விடாமல் பல்லக்குகள் நெருங்கிச் சென்றன. அரண்மனை வாயிலில் ராணியின் பல்லக்கு நிறுத்தப்பட சஞ்சலவதி ஒரு ராணியின் கம்பீரத்தோடு இறங்கி அரண்மனையில் அனைவரும் வரவேற்க உள்ளே சென்றாள். கொலு மண்டபத்தில் இரண்டு பக்கமும்  மொழி தெரிந்தவர்கள் துணையுடன் உரையாடினார்கள். பின்னர் ராணியாக வந்த சஞ்சலவதி தான் கொண்டு போன பரிசுப் பொருட்களைக் கொடுத்தாள். பின்னர் அனைவரையும் தனி மாளிகை ஒதுக்கி இருப்பதாகவும் அங்கே போய்த் தங்கலாம் எனச் சொல்லவும் அங்கே போனார்கள். பல்லக்குகள் எல்லாமும் நகரத் தெருக்களின் நெருக்கடியிலிருந்து தப்பிக்கும் முகமாக நகரைச் சுற்றியுள்ள தெருக்களில் வியாபித்து விட்டன. குலசேகரனும் அவன் நண்பர்களும் சிறிதும் ஓய்வில்லாமல் அதே சமயம் எவ்விதச் சந்தேகமும் வராமல் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அன்று இரவு மதுரையே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த போது எல்லா வீடுகளிலும் நடந்து வந்த ரகசியமான விஷயம் வெளியே கசியாதபடி பாதுகாக்கப்பட்டது. பொழுது விடியும் முன்னர் பல்லக்குகள் அனைத்தும் கிளம்பி விட்டன. கோட்டை வாசலில் அந்த அதிகாலையில் யாருக்கும் எவ்விதச் சந்தேகமும் எழவில்லை. பல்லக்குத் தூக்கிகளால் வந்தபோது பல்லக்குகளைத் தூக்கச் சிரமம் இல்லாமல் இருந்ததையும் அவர்கள் கவனித்துக் கொள்ளவில்லை. ஆகவே இப்போது பல்லக்குத் தூக்கிகள் அதிக எடையால் சிரமத்துடன் பல்லக்குகளைத் தூக்குவதையும் அவர்களால் கண்டு கொள்ள முடியவில்லை! பார்க்கப் போனால் மூட்டைகளை அங்கேயே விநியோகம் செய்ததால் பல்லக்குகள் காலியாகத் தானே இருக்க வேண்டும். ஆனால் அவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பல்லக்கு ஊர்வலம் கோட்டை வாசலைக் கடக்கவும் நேரம் அதிகம் ஆனது. பல்லக்குகள் முடிந்தவரை வேகமாய்ச் சென்றன. தெற்கே வேகமாக மூன்று நாழிகை நேரம் சென்றார்கள். வழியில் இரு முறை தில்லிப்படைகளை அவர்கள் சந்திக்க வேண்டி இருந்தது. மதுரையில் துருக்கியத் தளபதி பயணம் செய்ய அனுமதியுடன் கூடிய முத்திரை கொடுத்திருந்ததாலும் ஹொய்சள ராஜாவின் ராஜ முத்திரையைக் காட்டியதாலும் அவர்களால் சுலபமாகச் செல்ல முடிந்தது. தில்லி வீரர்களுக்கோ எங்கோ ஒரு சமுத்திரத்தில் போய்க் குளித்தால் குழந்தை பிறக்கும் என இந்த ராணிக்கு என்ன மூட நம்பிக்கை எனக் கேலி செய்து சிரித்துக் கொண்டார்கள்.

Friday, July 06, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தேடி! 1

மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊர்வலம் ஒவ்வொரு இடத்திலும் தங்கித் தங்கியே சென்றது. பெரும்பாலும் ராஜபாட்டையில் செல்லாமல் கிராமங்களின் வழியாகவே சென்றனர். எதிரில் சில இடங்களில் தில்லி வீரர்கள் எதிர்ப்பட ராணியாக வேடம் போட்டிருக்கும் சஞ்சலவதி என்னும் பணிப்பெண்  தன் முத்திரை மோதிரத்தைக் காட்டி ராணிக்கு உரிய மரியாதையைப் பெற்றுக் கொண்டு மேலே செல்ல அனுமதிக்கப்பட்டாள். மதுரையை நெருங்க சுமார் 20 நாட்கள் ஆகிவிட்டன. நெருங்க, நெருங்க அவர்களுக்குத் தயக்கங்களும், பயமும் தோன்றியது. குலசேகரன் பல வகைகளிலும் அவர்களை உற்சாகப்படுத்தினான்.

அந்தப்புரப் பெண்களும் உள்ளூரக் கவலையும் பயமும் கொண்டிருந்தனர். மெல்ல மெல்ல மதுரையை நெருங்கிய அந்த ஊர்வலம் அழகர் மலைக்குச் செல்லும் பாதை பிரியும் இடத்தில் ஒரு நாள் நண்பகல் நேரத்தில் வந்து தண்டு இறங்கியது. மாலை வரை காத்திருந்து விட்டுக் குலசேகரனும், அழகிய நம்பியும் மலை ஏறத் துவங்கினார்கள். குறளனை முன் கூட்டியே அனுப்பி வைத்துத் தகவல் கொடுக்கச் செய்திருந்தார்கள். ஆகவே அரங்கனுடன் இருந்த அனைவரும் எந்நேரமும் அரங்கனை எடுத்துக் கொண்டு கிளம்ப ஆயத்தமாகவே இருந்தார்கள். கிட்டத்தட்ட இரவு அங்கு போய்ச் சேர்ந்த குலசேகரனும், அழகிய நம்பியும் அரங்கனுக்காக வெட்டப்பட்டிருந்த கிணற்றில் குளித்தனர். வேறு ஆடை புனைந்து மிகவும் பக்தியுடனும் கவனத்துடனும் அரங்கனைத் தானே அணைத்தவாறு கையில் எடுத்துக் கொண்டான் குலசேகரன்.

மனதிற்குள்ளாக எத்தனையோ கட்டுப்பாடுகளும், சட்ட, திட்டங்களும் பூண்டு மிகவும் ஆசாரமான பட்டாசாரியார்களால் கூட உடனடியாகத் தீண்ட முடியாத அரங்கனைத் தான் எடுத்து வருவதற்கு மானசிகமாக அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டான் குலசேகரன்.  பின்னர் அனைவரையும் கீழே இறங்கப் பணித்துவிட்டு எல்லோரும் ஒட்டு மொத்தமாகக் கீழே ஒன்றாக இறங்க வேண்டாம் எனவும், அவரவர் விரும்பிய வழியில் கீழே இறங்கித் தெரிந்த திசையில் செல்லும்படியும் எல்லோரும் குறிப்பிட்ட  தூரம் சென்றபிறகு வேண்டுமானால் சந்தித்துக் கொள்ளலாம் என்றும் ஆனாலும் அனைவரும் நாகர்கோயிலில் சந்திப்பதே மிகவும் நன்மை தருவது என்றும் எடுத்துச் சொல்லப்பட்டது. ஆகவே குலசேகரன் மட்டும் அரங்கனுடன் ஊர்வலம் இருக்கும் திசை நோக்கி இறங்க மற்றவர்கள் ஆளுக்கொரு திசையாக இறங்கினார்கள். குலசேகரன் பல்லக்குக் கூட்டத்தை நெருங்குகையில் இரவு நடு ஜாமம் ஆகி விட்டது. ஆனால் அந்நேரத்திலும் விழித்திருந்த ராணி வேடம் போட்டிருக்கும் சஞ்சலவதியும் அவளது பல்லக்குத் தூக்கிகளும் சுத்தமாக நின்று அரங்கனை வரவேற்று நமஸ்கரித்து வணங்கினார்கள்.

ஒரு பிச்சைக்காரனைப் போல் எவ்விதமான அலங்காரமோ, ஆபரணங்களோ இல்லாமல் அரங்கனைப் பார்க்கையில் சஞ்சலவதி கண்ணீர் பெருக்கினாள். அந்த விக்கிரஹம் ஓர் விக்கிரஹமாகவே அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ ஓர் பெரிய மஹா சாம்ராஜ்யத்தின் ராஜா கதியில்லாமல் நிர்க்கதியாக அங்கே நிற்பது போலவே உணர்ந்தாள். தன்னிடம் உதவி கேட்டு வந்திருப்பதாகவும் நினைத்துக் கொண்டாள்.  கூட்டத்தினர் அனைவருமே தகவல் தெரிந்ததும் எழுந்து வந்து அரங்கனை ஒவ்வொருவராக வணங்கிச் சென்றார்கள். பின்னர் சஞ்சலவதியில் பல்லக்கிலே அரங்கன் ஏற்றப்பட்டார். பஞ்சணைகளுக்கு நடுவே அவரை அமர்த்தினார்கள். சஞ்சலவதியும் ஏறிக் கொண்டாள். புனிதமான அரங்கனோடு தானும் அமரத் தயங்கிய சஞ்சலவதி வேறு வழியில்லாமல் ஏறி அரங்கன் முன்னால் மிகவும் பணிவோடு அமர்ந்து கொண்டாள். 

Thursday, July 05, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!ஹேமலேகாவின் துயரம்!

ஹேமலேகா அங்கே வரவில்லை என்றும் அவளுக்கு அந்தப்புரத்தை விட்டு, ராணி வாசத்தை விட்டு வெளியேற அனுமதி இல்லை எனவும் அபிலாஷிணி தெரிவித்தாள். குலசேகரன் வேதனையுடன் அவளிடம் விடைபெற்று அங்கிருந்து நகர்ந்தான். கூட்டத்திலிருந்து தட்டுத்தடுமாறிய வண்ணம் வெளியே வந்து தனக்கென ஒதுக்கி இருந்த குதிரை மீது தாவி ஏறினான். அரண்மனைப் பக்கம்குதிரையைத் திருப்பினான். அரண்மனையை நெருங்கினாலும் உள்ளே செல்ல அவனுக்குத் தயக்கம்.  வெளிப் புறச் சுற்றுச்சுவர் வழியாகச் சுற்றிக் கொண்டு உத்தேசமாய் அந்தப்புரச் சுவர் இருக்கும் இடம் சென்றான். அங்கே ஓர் முற்றம் போல் சதுரமான வெட்டவெளி இருந்தது. அங்கே சென்று குதிரையை நிறுத்திக் கொண்டு "ஹேமலேகா! ஹேமலேகா!" எனக் கூவி அழைத்தான்.  பதிலே வரவில்லை. நீண்ட நேரம் கூவினான்.

பின்னர் அலுத்துக் களைத்துப் போய்த் திரும்ப யத்தனிக்கையில் ஓர் சாளரக் கதவு மெல்லத் திறக்கும்சப்தமும், அதைத் தொடர்ந்து ஹேமலேகா, "சுவாமி!" என மெல்லிய குரலில் அழைத்த சப்தமும் கேட்டது. சாளரத்தினருகே அவள் உருவமும் மங்கலாகத் தெரிந்தது. குலசேகரனுக்கு உடம்பெலலம் சிலிர்த்தது. இது வரை அவளைப் பெயர் சொல்லி அவன் அழைத்ததே இல்லை. ஆனால் இப்போது வேறே வழியே இல்லை. அவளை அழைத்தே ஆக வேண்டும். அவன் கண்களிலிருந்து கண்ணீரும் பெருகியது. அவன் தழதழத்த குரலில் இருந்தே அவன் முகபாவமும் அவளுக்கும் புலப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அவளாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை. முற்றிலும் உடைந்தே போனாள் ஹேமலேகா! சாளரத்தின் வெளியே கைகளை வீசி நீட்டி அவனைத் தொட முயல்வது போல் செய்தாள். அதைக் கண்ட குலசேகரன் மனம் பொங்கி எழுந்தது.  அவனும் அவளைத் தொட முயல்வது போல் அவளை அழைத்த வண்ணமே கைகளைத் தூக்கினான். குதிரையும் அவன் உணர்ச்சியைப் புரிந்து கொண்டது போல் பல முறை தன்னைத் தானே சுற்றி வந்தது.

இருவரும் கைகளை மாத்திரமே ஒருவருக்கொருவர் எட்டாத உயரத்தில் இருந்து வீசிக் கொண்டு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர். நல்லவேளையாக நெருங்கி நிற்கவில்லை என நினைத்தான் குலசேகரன். இப்படி ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் பல நிமிடங்கள் சென்றன. குலசேகரனைப் பார்த்து ஹேமலேகா, "சுவாமி! நீங்கள் அரங்கன் சேவையில் இருக்கிறீர்கள். அரங்கனை எப்படியானும் காப்பாற்றி விடுங்கள். அது உங்கள் கடமை!அவரை விடுதலை செய்து  எங்காவது தூரத்தில் கொண்டு ஒளித்து வையுங்கள். அப்படிச் செல்லும்போது இங்கே திருவண்ணாமலையில் ஓர் அபலை இங்கே அல்லல் படுவதை நினைத்துக்கொள்ளுங்கள். இந்த அபலைக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்!" என்று வேண்டிக் கொண்டாள்.

குலசேகரன் அவளுக்காக ஒவ்வொரு கணமும் தான் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பதாகத் தெரிவித்தான். என்றாவது ஒரு நாள் எப்படியேனும் வந்து ஹேமலேகாவை இந்தச் சிறையில் இருந்து விடுவிப்பதாகவும் சொன்னான். ஹேமலேகா உடலெல்லாம் சிலிர்த்தது. தன்னிடமும் அபிமானம் கொண்ட ஓர் அன்பான மனிதன் இருப்பதை நினைத்துக் கொண்டு கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்த அவள் அதைத் தெரிவிக்கும் விதமாகத் தன் கையில் இருந்த ஓர் பாரிஜாத மலரை அவன் இருக்கும் பக்கம் நோக்கி வீசினாள். அதைக் கையில் ஏந்திக் கொண்ட குலசேகரன் தன் கணையாழியைக் கழற்றி அம்பில் கட்டி வில்லில் இட்டு மேலே அவள் பக்கம் அந்த அம்பை எய்தான். கணையாழியைக் கண்ட ஹேமலேகா, அம்பின் கழுத்திலிருந்து அதை எடுத்துக் கொண்டாள். உடனே அவளிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டான் குலசேகரன். அடுத்த அரை நாழிகையில் அவனோடு சேர்ந்து இருநூறு மூடுபல்லக்குகளும் திருவண்ணாமலையை விட்டுக் கிளம்ப மன்னரும், ராணியும் எல்லோரையும் வழி அனுப்பி வைத்தார்கள்.

Monday, July 02, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! கிருஷ்ணாயியின் சாமர்த்தியம்!

ராணி தான் போகப் போவதில்லை எனவும் அதற்குப் பதிலாக ஒரு பணிப்பெண்ணை ராணியாக்கி அனுப்பலாம் எனவும் யோசனை தெரிவித்தாள். தில்லி வீரர்கள் அவளைப் பார்த்ததில்லை என்பதால் ராணி என்றே நம்புவார்கள் என்றும் சொன்னாள். அரசர் அதற்கு இவ்விதம் செய்தால் அரங்கனை எவ்வாறு தப்புவிக்க முடியும் என்று கேட்டார். ராணி அதற்குப் பல்லக்கு கோஷ்டியை மதுரையைக் கடக்கும்போது அழகர் மலைப் பக்கம் செல்லுமாறு சொல்ல வேண்டும் எனவும் அப்போது அரங்கனின் பரிவாரத்தார் அரங்கனை ரகசியமாகக் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் சொன்னாள். மூடு பல்லக்கு ஒன்றில் அரங்கனை ஏற்றிவிட்டுப் பல்லக்குகள் எல்லாம் சந்தேகம் வராமல் இருக்க மதுரைக்கே போக வேண்டும் எனவும் சொன்னாள். மன்னரோ அது சரியாக வருமா, பல்லக்குகளைத் திறந்து பார்த்தால் என்ன செய்யறது எனக் கேட்டார்.

ராணி அதெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றவள் தில்லித் தளபதியின் மனைவிகளுக்கு ஹொய்சள ராணி பரிசுகள் அளிக்க விரும்புவதாக அறிவிக்க வேண்டும். அதைக் காரணம் காட்டியே மதுரையும் செல்ல வேண்டும். எல்லாப் பல்லக்குகளும் போக வேண்டும். அப்போது தான் சந்தேகம் வராது என்றவள் மதுரை வீதிகளில் இந்தப் பல்லக்குகளை நிறுத்தி அங்கே நிலவறையில் உள்ள பெண்களை எல்லாம் இரவோடு இரவாக ரகசியமாக  ஏற்றிக் கொள்ளவேண்டும். மறுநாள் காலையில் பல்லக்குகள் கிளம்பி மதுரையை விட்டே வெளியேறிவிட வேண்டும். மதுரையை விட்டுப் பல காதம் போன பின்னர் அந்தப் பெண்களை விடுவித்து அவரவர் விரும்பும் இடத்துக்குப் போகச் சொல்லலாம்." இதைக் கேட்ட மன்னர் யோசனையில் ஆழ்ந்தார். இதில் தவறு நடந்து விடுமோ என பயந்தார். வீரர்களை அனுப்புவதால் தவறு நடக்க வாய்ப்பில்லை என்ற ராணியிடம் தந்திரம் அம்பலமாகி விட்டால் பிரச்னை என்றார் மன்னர். ராணி வருவதை எதிர்கொள்ள வேண்டியது தான் ஒரே வழி, இப்போது தென்னாடு இருக்கும் நிலையில் நம் சௌகரியத்தையும் சுகத்தையும் பார்க்கக் கூடாது என்று வற்புறுத்தினாள். 

மன்னர் உள்ளூர யோசனையில் ஆழ்ந்தாலும் கவலைகள் பட்டாலும் ராணியின் விருப்பப்படி தான் நடந்தது. அடுத்த வாரமே 200 மூடு பல்லக்குகள் திருவண்ணாமலையை விட்டுக் கிளம்பின.  ஹொய்சளரின் சிங்கக் கொடியை ஏற்றிக் கொண்டு ஊழியர்களும், வீரர்களும் முன்னும் பின்னுமாகத் தொடர்ந்தனர். 20 வீரர்கள் பல்லக்குகளின் முன்னும் பின்னும் அணி வகுத்துச் சென்றனர். ராணி வேடத்தில் ஒரு பணிப்பெண்ணைப் பல்லக்கில் ஏற்றி இருந்தார்கள். அந்தப் பல்லக்கு நடுவில் இருந்தது. கிளம்புகையில் ராணி கிருஷ்ணாயி அந்தப் பல்லக்கின் அருகே வந்து தயங்கி நின்றாள். பின்னர் அந்தப் பெண்ணிடம், திறமையாக ராணியைப்போலவே நடிக்க வேண்டும் என்றாள். முத்திரை மோதிரங்களையும் ராஜ இலச்சினைகளையும் பத்திரமாக வைத்துக் கொண்டு தேவையான சமயங்களில் மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்திவிட்டு எந்நிலையிலும் உண்மையைச் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டாள்.

அந்தப் பல்லக்கின் அருகே குலசேகரனும் ஓர் யாத்ரீகன் வேடத்தில் இருந்தான். அவனைப் பார்த்து மெல்லிய குரலில் அரங்கன் தெற்கே போனதும் குலசேகரன் கொடுத்த வாக்குறுதியின்படி அவன் திருவண்ணாமலை திரும்பியாக வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக வற்புறுத்தினாள். குலசேகரனும் தலையை ஆட்டினான். பின்னர் அரசி வேறு பக்கம் சென்றதும் குலசேகரன் அந்தப் பெண்கள் கூட்டத்திடையே எப்படிச் செல்லப் போகிறோம் எனக் கவலையில் ஆழ்ந்த வண்ணம் சென்றான். அந்தக் கூட்டத்தில் புகுந்து எப்படியோ அபிலாஷினி இருப்பதையும் கண்டு பிடித்து விட்டான். அவளை அழைத்தான். அவளோ அவன் அபி எனக் கூப்பிட்டதை ரசிக்காமல் கோபம் கொண்டாள். குலசேகரனோ அவள் கோபத்தை லட்சியம் செய்யாமல் ஹேமலேகா வந்திருக்கிறாளா என்று கேட்டான். அவள் வரவில்லை என்றாள் அபிலாஷினி.